கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 2,665 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11 – 15 | அத்தியாயம் 16 – 20 | அத்தியாயம் 21 – 26

16. கிடைத்துவிட்டான்! 

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே-இன்று
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே-இந்த
ஆனந்த னுக்குநல் ஆனந்தமே! 
அப்பாவோ இல்லை; அம்மாவோ நம்கட்சி
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே! 

இப்படிப் பாடிக்கொண்டே குண்டுமணியின் வீட் டுக்கு வந்தான் ஆனந்தன். “என்னடா ஆனந்தா! ஒரே குஷியா யிருக்கிறாயே!” என்று கேட்டான் குண்டுமணி. 

 “குஷியாயில்லாமல், மூலையிலே குந்திக்கொண்டு அழவா சொல்லுகிறாய்? கேளுடா, இன்றைக்கு அதி காலையிலே என் அப்பா தஞ்சாவூருக்குப் புறப்படுப் போய் விட்டார். ஏதோ வியாபார விஷயமாம். நாளை இரவுதான் திரும்பி வருவார். இது நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்திலே ரமணியைக் கண்டு பிடிக்க நான் திட்டம் போட்டிருக்கிறேன்…” 

“என்னடா இது! ‘திட்டம் போட்டிருக்கிறேன்’ என்றா சொல்லுவது? ‘திட்டம் தீட்டியிருக்கிறேன்’ என்று சொல்லுடா. அது சரி, உன் அப்பா ஊரில் இல்லாததற்கும், ரமணியைக் கண்டுபிடிப்பதற்கும் என்னடா சம்பந்தம்? உன்னை சி. ஐ. டி. வேலை பார்க்க வேண்டாமென்று உன் அப்பா சொன்னாரா? அல்லது குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டாரா?’ 

“அட, அவசரப்படாமல் கேளுடா. என் அப்பா ஊரில் இருந்தால் இரவிலே வெகு நேரம் ஊர் சுற்ற முடியுமா? இன்று இரவு நாம் எப்படியாவது ரமணி யைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும். அவன் எங்கேயாவது வேலையிலே சேர்ந்திருப்பான் போலத் தோன்றுகிறது. அதனால்தான் பகலிலே அவனைக் கண்டிபிடிக்க முடியவில்லை. இரவிலேதான் தேடிப் பார்க்கவேண்டும்.” 

“அப்படியானால் இரவு முழுவதும் அவனைத் தேட வேண்டும் என்கிறாயா?” 

“இரவு முழுவதும் தேட வேண்டாம். அவனுடைய வேலை முடிய ஒன்பது மணியாகலாம். பத்து மணி ஆகலாம். பன்னிரண்டும் ஆகலாம். அதனாலே, பன்னிரண்டு மணிக்கு மேலே தேடினால் கட்டாயம் அகப்பட்டுவிடுவான். எங்கேயாவது ஒரு கடை வாச லில் படுத்திருப்பான். அல்லது, ஒரு வீட்டுத் திண்ணையில் தூங்குவான்.” 

“அப்படியானால், பன்னிரண்டு மணிக்கு மேலே தான் புறப்பட வேண்டுமென்கிறாய். அதுவரையில் தூங்காமல் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருக்க வேண்டுமா?” 

“சும்மா விழித்துக் கொண்டிருக்க வேண்டாம்.சுகமாக மெத்தை போட்ட நாற்காலியில் உட்கார்ந்து, எதிரேயிருக்கும் வெள்ளித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.” 

“ஆ! அப்படிச் சொல்! நீயும் நானும் சினிமாவுக் குப் போய் எத்தனை நாட்கள் ஓடிவிட்டன!” என்றான் குண்டுமணி. 


திட்டம் போட்டபடி, குண்டுமணியும் ஆனந்தனும் அன்று இரவு சினிமா பார்த்துவிட்டு பன்னிரண்டு மணிக்கு வெளியே வந்தார்கள். வெளியே வந்ததும், வராததுமாகத் துப்பறியும் வேலையில் இறங்கிவிட்டார்கள். 

ஆனந்தன் கையிலே ஒரு டார்ச் விளக்கு இருந் தது. குண்டுமணி கையிலும் ஒரு டார்ச் விளக்கு இருந்தது. இருவரும் ஆளுக்கொரு பக்கமாக விளக்கை அடித்துப் பார்த்துக் கொண்டே போனார்கள். வது படுத்திருப்பது தெரிந்தால், உடனே உற்றுப் பார்ப்பார்கள். சந்தேகம் ஏற்பட்டால், எழுப்பி விசாரிக் கலாம் என்று நினைத்தார்கள். ஆனால்,படுத்துக் கிடந்தவர்கள் யாரா எல்லோருமே பெரியவர்கள் தான் ! ஒரு பைய னாவது தென்பட வேண்டுமே! ஊஹூம். 

சுமார் நான்கு மணி நேரம் சுற்றிவிட்டார்கள். டாண், டாண், டாண், டாண்’ என்று நான்கு முறை மணியடிக்கும் சத்தம் கேட்டது. உடனே குண்டு மணி, அப்பா ஆனந்தா! நம்மாலே இனிமேல் நடக் கவே முடியாது. கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து களைப்பாற வேண்டும். இல்லாத போனால், மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன்” என்று எச்சரித்தான். 

உடனே ஆனந்தன், “டேய்,டேய், அப்படியெல் லாம் செய்துவிடாதே! நீ தூங்க ஆரம்பித்தாலே என் னால் எழுப்ப முடியாது. மயக்கம்போட்டு விட்டாலோ அப்புறம் கேட்கவே வேண்டாம். சரி, அதோ பார். அந்த வீட்டுத் திண்ணையிலே போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இளைப்பாறலாம். ஆனால் ஒரு நிபந்தனை. அங்கே நீ படுத்துவிடக் கூடாது!” 

“இல்லை.படுக்கமாட்டேன். வா, போய் உட்காரு வோம்” என்றான் குண்டுமணி. 

ஒரு வீட்டின் முன்னால், எதிர் எதிராக இரண்டு நீளமான திண்ணைகள் இருந்தன. சாய்ந்து கொள்ள வும் அவை வசதியாக இருந்தன. குண்டுமணி ஒரு திண்ணையில் உட்கார்ந்தான். ஆனந்தன் எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான். 

சிறிது நேரம் சென்றது. ஆனந்தன், “குண்டு மணி, ஒரேயடியாக உட்கார்ந்து விடாதே! புறப்படு. சீக்கிரம் ரமணியைக் கண்டுபிடிக்க வேண்டும் மாமா தந்தியை எதிர்பார்த்துக் கொண்டே யிருப்பார்” என்றான். 

உடனே குண்டுமணி, ‘“ஏண்டா ஆனந்தா, உன் மாமாவுக்கு இந்த ரமணி ஒரே ஒரு பிள்ளை தானா? வேறு பிள்ளையே கிடையாதா?” என்று கேட் டான். 

இதைக் கேட்டதும் ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஆனாலும் அடக்கிக்கொண்டு, “ அட மண்டு சிகாமணி, விடிய விடியக் கதை கேட்டு சீதைக்கு ராமர் சித்தப்பாவா?” என்று கேட்ட கதையாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடும் போதே எல்லாம் விவரமாகச் சொன்னேன். நீ சாப்பிடும் போது சொன்னேனே, அது என் தப்புத்தான்…சரி, கொஞ்சம் காதைத் தீட்டிக்கொண்டு கேள். என் மாமா மதுரநாயகம் பட்டணத்திலே ஸ்ரீ முருகன் பால நாடக சபாவிலே மானேஜராயிருக்கிறார். அந்த சபாவிலே ரமணி என்று ஒரு பையன் வேலைக்கு இருந்தானாம். அவன் மிகவும் நல்லவனாம். ஆனாலும், அவன் சபாவில் பட்டுத் துணியைத் திருடிவிட்டதாக அவன் மேல் சில வேலைக்காரர்கள் பழிபோட்டுவிட்டார்களாம். அவர்கள் பேச்சைக் கேட்டு நாடக சபா முதலாளி பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்பு ரமணியை விரட்டி விட்டாராம். ஆனால், இப்போது அவன்மீது குற்றம் எதுவும் இல்லை என்பது ருசுவாகிவிட்டதாம். அவன் திருச்சியிலிருந்து மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக் கிறானாம். அதனால் அவனை இந்த ஊரில் தேடிக் கண்டு பிடிக்கும்படி மாமா எழுதியிருக்கிறார். மாமா விருப்பப் படி நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக் குத் துணையாக என் அருமை நண்பன் அசகாயசூரன் குண்டுமணியாகிய நீயும் வந்திருக்கிறாய். அவ்வளவு தான்! விவரம் போதுமா? இன்னும் வேணுமா?” என்று கேட்டான் ஆனந்தன் 

“அடடே! புரியுது, புரியது…ஆமாம், அப்போது நீ சொன்னதெல்லாம் இப்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. சரி, இன்னும் எங்கெல்லாம் தேட வேண்டும்?” 

“பின் தெரு ஒன்றுதான் பாக்கி. அங்கேயும் தேடிப் பார்த்துவிடலாம்” 

“சரி, இப்போது எனக்கு ஒரே தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும்.!” 

“அதோ நாம் வந்த வழியிலே, இதே தெரு முனை யிலே ஒரு குழாயிருக்கிறது. வா, போய்த் தண்ணீர் குடித்துவிட்டு வேலையைப் பார்ப்போம்” 

இருவரும் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டுப் பின் தெருவுக்குப் போய்த் தேட ஆரம்பித் தார்கள். அப்போது ஒரு வீட்டின் எதிரேயிருந்த ஒரு அகலமான கல்லின்மேல் யாரோ படுத்திருப்பது தெரிந் தது. உடனே ஆனந்தன் விளக்கை முகத்திலே அடித் துப் பார்த்தான். பார்த்ததும், “டேய், டேய், குண்டு மணி! இதோ பார். ஒரு பையன்!” என்றான். 

குண்டுமணியும் அருகே வந்து பார்த்தான். ஆமாண்டா, முகத்திலே மீசையில்லை. பையனாகத் தான் இருக்கும்” என்று கூறினான். 

“போடா,மடையா! மீசை இருந்தாலும், இல்லாத போனாலும் முகத்தைப் பார்த்தாலே தெரியாதா? இவ னுக்கும் என் வயதுதான் இருக்கும். நிறம்கூட என் நிறம்தான்! எழுப்பிக் கேட்கலாமா ?” என்றான். 

“டேய், கன்னம் பத்திரம்! மலைக்கோட்டையில் விழுந்த மாதிரி அறை விழுந்துவிடப் போகிறது!” 

“சரி, இவன் உயரமும் என் உயரம்தான் இருக்கிறதா என்று பார்த்துவிடலாம். குண்டுமணி, நான் இவன் பக்கத்திலே படுத்துக்க கொள்கிறேன். என் உயரமும் இவன் உயரமும் சரியாக நீ பார்த்துச் சொல். சரிதானா?” என்று கூறிவிட்டு அந்தப் பையனின் அருகே தரையில் படுத்தான் ஆனந்தன். 

குண்டுமணி தலைப் பக்கமும் கால் பக்கமும் பார்த்து விட்டு, “அச்சா ! வித்தியாசமே இல்லை. உன் உயரமே தான் ! சரி, இவனைச் சீக்கிரம் எழுப்பு, உம்!” என்று அவசரப்படுத்தினான். உடனே ஆனந்தன் அந்தப் பையனை எழுப்பினான். அவன் பலமுறை தட்டி எழுப் பிய பிறகே எழுந்தான். 

அவன் எழுந்து உட்கார்ந்ததும், “தம்பி, உன் பெயர் என்ன ?” என்று குழைவாகக் கேட்டான் ஆனந்தன். 

“என் பெயரா ?… என் பெயர்…ரமணி!” என்றான் அவன். 

உடனே, “என்ன, ரமணியா ! உனக்கு மதுரநாய கத்தைத் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஆனந்தன். 

“ஓ! நாடக சபா மானேஜர் மதுரநாயகத்தையா எனக்குத் தெரியாது ! அவர் தங்கமானவர்” என்றான் பையன். 

இதைக் கேட்டதும் ஆனந்தனுக்கும், குண்டுமணிக் கும் அவன் ரமணிதான் என்பது உறுதியாகிவிட்டது. உடனே அவனை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு இருவரும் குதித்தார்கள். 

பிறகு ஆனந்தன் அவனிடம், “நீ இங்கே வந்து எத்தனை நாளாகிறது?” என்று கேட்டான். 

“பத்து நாளாகிறது…சாப்பிட்டு ஒரு வாரமா கிறது. என் கஷ்ட காலம் பட்டுத் துணியை நான் திருடிவிட்டதாக என்மேல் பழி சுமத்தினார்கள்…” 

ரமணி! கவலைப்படாதே! நீ திருடவில்லை என்பது ருசுவாகிவிட்டது. மாமா உன்னைக் காணாமல் ஏங்கிக்கொண்டிருக்கிறார். வா, வா, சீக்கிரம் வீட்டுக் குப் போகலாம். பசி தீரச் சாப்பிட்ட பிறகு மிச்சத் தைப் பேசிக்கொள்ளலாம் ” என்றான் ஆனந்தன். 

மறுநாள் பொழுது விடிந்ததுமே, ரமணி கிடைத்து விட்டதாக மாமாவுக்குத் தந்தி கொடுத்துவிட்டான் ஆனந்தன். 

அந்தத் தந்தியைப் பார்த்ததும்தான், கமலா கமலா ” என்று கத்திக்கொண்டே அடுக்களைக்கு வேக மாக ஓடினார் மதுரநாயகம் 

“என்ன விஷயம்? இப்படிச் சிறு குழந்தை மாதிரி ஓடி வருகிறீர்களே !” என்று கேட்டாள் கமலா தேவி. “இதோ பார் தந்தி ! திருச்சியிலிருந்து வந்திருக்கிறது. படித்துப் பார். எல்லாம் தெரியும் ” என்று -றிவிட்டுத் தந்தியை அவளிடம் காட்டினார் மதுரநாயகம். 

“என்ன இது ! என்னைப் படித்துப் பார்க்கச்சொல்லுகிறீர்களே ! விளையாடுகிறீர்களா? தந்தி தமிழிலா இருக்கிறது? எனக்குத்தான் இங்கிலீஷ் தெரியாதே!” என்றாள் கமலாதேவி. 

“அடடே! எனக்கு இருந்த ஆனந்தத்தில் உனக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதைக்கூட மறந்துவிட்டேன்! சரி, இப்போது இந்தத் தந்தியிலுள்ள செய்தி யைக் கேட்டால், நீயும் என்னோடு சேர்ந்து ஆனந்தப் படப் போகிறாய்…” 

“அப்படியா! சரி, விஷயம் என்ன என்பதைச் சொல்லாமல் ஏதேதோ சொல்லுகிறீர்களே ! சீக்கிரம் சொல்லுங்கள்” என்றாள் கமலாதேவி. 

“இது யார் கொடுத்த தந்தி தெரியுமா? என் அக்காள் மகன் ஆனந்தன் கொடுத்தது! அவன் என்ன சாமானியப்பட்டவனா? பலே கெட்டிக்காரன்!’ என்று கூறினார். பிறகு, இதோ படிக்கிறேன்; கேள் : ரமணி கிடைத்துவிட்டான். புறப்பட்டு வரவும்’-ஆனந்தன். பார்த்தாயா? இனிக் கவலையே இல்லை. ரமணி கிடைத்து விட்டான் !” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார். 

“என்ன! ரமணி கிடைத்துவிட்டானா? அப்பா! நல்லவேளை. இப்போதாவது கிடைத்தானே! இனி, அவனை நான் ஒன்றுமே சொல்லமாட்டேன். சொந்தத் தம்பி போலப் பார்த்துக் கொள்வேன்” என்றாள் கமலா தேவி. 

“நானும் அப்படித்தான். என் சொந்தத் தம்பி போலவே பார்த்துக்கொள்வேன். ஆமாம், அவன் எனக்கும் தம்பி, உனக்கும் தம்பியாக எப்படி இருக்க முடியும்? முறை சரியாக வராதே!” என்று கேட்டு விட்டுச் சிரித்தார் மதுரநாயகம். கமலா தேவியும் கூடச் சேர்ந்து சிரித்தாள். 

அன்று ஆபீசுக்கு வந்ததும், முதல் வேலையாக முதலாளியிடம் ரமணி கிடைத்துவிட்ட செய்தியைத் தான் மதுரநாயகம் கூறினார். முதலாளிக்கும் பரம சந்தோஷம். “நமக்கு அதிக சிரமம் வைக்காமல் கிடைத்துவிட்டான். உடனே அவனை அழைத்துவரச் சொல்லி இப்போதே பதில் தந்தி கொடுத்துவிடு வோமா?” என்று கேட்டார் முதலாளி. 

“ஆனந்தன் என்னையல்லவா புறப்பட்டு வரச் சொல்லித் தந்தி கொடுத்திருக்கிறான்? காரணத்தோடு தான் அவன் அப்படிக் கொடுத்திருக்க வேண்டும்” என்றார் மதுரநாயகம். 

“என்ன காரணமாக இருக்கும்?” 

“ஒன்றுமில்லை. ரமணியை ஆனந்தன் கண்டு பிடித்ததும், இங்கே அழைத்து வருவதாகத்தான் சொல்லியிருப்பான். ஆனால், ரமணிக்குத் திரும்பவும் இங்கே வர யோசனையாக இருந்திருக்கும். தயக்கத் தோடு ஏதாவது சொல்லியிருப்பான். நானே நேரில் போனால், எப்படியும் சமாதானப்படுத்தி அழைத்து வந்துவிடுவேன். இல்லையா? அதனால்தான் என்னைப் புறப்பட்டு வரச்சொல்லி ஆனந்தன் தந்தி கொடுத்திருக்கிறான்.” 

“ஆமாம் மதுரநாயகம், அப்படித்தான் இருக்கும். சரி, இன்று இரவே நீங்கள் புறப்படுங்கள். ரமணியைக் கையோடு அழைத்துக்கொண்டு நாளை இரவே திரும்பி வந்துவிடுங்கள். இன்னும் நாலு நாட்கள்தானே நடுவே இருக்கின்றன, சீனத் தூதுகோஷ்டி வருவதற்கு?” 

எனக்கு வேறு என்ன வேலை ? நாளை இரவே ரமணியுடன் திரும்பிவிடுகிறேன்” என்று கூறிவிட்டு மதுரநாயகம் உற்சாகமாகத் தமது வேலைகளை யெல் லாம் முடித்தார். 


17.காரியம் கெட்டது! 

இரவு மதுரநாயகம் ரயில்வே ஸ்டேஷனுக் குச் சென் றார். ‘டிக்கெட்’ வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறி உட் கார்ந்தார். ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிஷங் களே இருந்தன. அப்போது ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டே ஒரு பையன் ஓடிவந்தான். அவன் மதுரநாயகம் இருந்த வண்டிக்குப் பக்கத்திலே வந்ததும், மதுரநாயகம் தற்செயலாக அவனைப்பார்த்து விட்டார். உடனே, “ ஏ சிங்காரம், சிங்காரம் !” என்று கூவினார். 

அந்தப் பையன், சத்தத்தைக் கேட்டதும் நின்றான். “என்னப்பா விஷயம்? ஏன் இப்படி வியர்க்க விறு விறுக்க ஓடி வருகிறாய்?” என்று கேட்டார் மதுர நாயகம். 

“உங்களைத் தேடித்தான் சார் வந்தேன். உடனே கீழே இறங்குங்கள் சார்.உம், நேரமாகிறது. வண்டி புறப்படப் போகிறது. இறங்குங்கள் சார்! இதோ உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது சார். முதலாளி பிரித்துப் படித்துப் பார்த்தார். உடனே என்னை அவ சரமாக இங்கே அனுப்பி வைத்தார்” என்று கூறித் தந்தியை அவரிடம் கொடுத்தான் சிங்காரம். 

மதுரநாயகம் படித்துப் பார்த்தார். “புறப்பட வேண்டாம். கடிதம் வருகிறது” என்று திருச்சியிலிருந்து தந்தி வந்திருந்தது ஆனால், அந்தத் தந் தியை ஆனந்தன் அனுப்பவில்லை. அவன் அப்பா வேதநாயகம்தான் அனுப்பியிருந்தார்! மதுரநாயகம் அந்தத் தந்தியைப் படித்ததும் திடுக்கிட்டார். 

“என்ன இது ! நம் அத்தான் அல்லவா தந்தி அனுப்பியிருக்கிறார்! அன்று நான் எழுதிய கடிதத் துக்கு இதுவரை அவர் பதிலே எழுதவில்லை! ஆனந்தன் தான் இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தான். காலை யில் வந்த தந்தியும் அவன் அனுப்பியதுதான். இப் போது, அத்தான் இப்படித் தந்தி அனுப்பியிருக்கிறாரே! ஒன்றும் தெரியவில்லையே ! சரி, கடிதம் எழுதுவதாகத் தான் தந்தியில் சொல்லியிருக்கிறாரே, பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே ரயில் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். 


ரமணியைக் கண்டு பிடித்துவிட்டதாக ஆனந்தன் சொன்னதும் அவன் அம்மாவுக்கு ஒரே ஆனந்தம். வீட்டிலிருந்த பட்சணங்களை யெல்லாம் கொண்டுவந்து “ரமணி,இதோ சாப்பிடு. நன்றாகச் சாப்பிடு” என்று கொடுத்தாள். அப்போது ஆனந்தன், “குண்டுமணி, நாம் எவ்வளவு சிரமப்பட்டு ரமணியைக் கண்டுபிடித் தோம். இந்த வெற்றியை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டாமா?” என்றான். 

“கட்டாயம் கொண்டாட வேண்டும். இன்றைக்கு மத்தியானமே நம் நண்பர்களுக்கெல்லாம் ஒரு பலமான விருந்து வைத்துவிட்டால் போகிறது!” என்று பதிலளித்தான் குண்டுமணி. அம்மாவும் சரி” என்று கூறிவிட்டாள். 

அன்று மத்தியானம் எல்லா நண்பர்களும் ஆனந் தன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள், அவர்கள் ஒவ் வொருவருக்கும். இவன்தான் ரமணி” என்று புதுப் பையனை அறிமுகப்படுத்தி வைத்தான் ஆனந்தன். எல்லோரும் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தார்கள். 

சாப்பிடும்போது, ஒரே குதூகலமாகப் பேசிக் கொண்டே அவர்கள் சாப்பிட்டார்கள். 

சேகர் என்ற பையன், “என்ன இருந்தாலும், நமது ஆனந்தன் சாமர்த்தியசாலிதான்! எவ்வளவு பாடுபட்டு இந்த ரமணியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறான் !” என்றான். 

உடனே கோபு என்பவன், “ ஆனந்தன் பரீட்சை யில் தேறியிருந்தால் அப்போதே விருந்து கிடைத்திருக் கும். ஆனாலும், இப்போதாவது கிடைத்ததே ! அதற்கு இந்த ரமணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றான். 

அப்போது ஆனந்தன், “ரமணி, கூச்சப்படாதே நன்றாகச் சாப்பிடு. உன்னை உத்தேசித்துத்தான் இந்த விருந்தெல்லாம்” என்றான். 

ஆனந்தன் சொல்வதைக்கூட அவன் காதில் வாங் கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இலையில் இருந்ததை யெல்லாம் வளைத்து வளைத்து உள்ளே தள்ளிக் கொண்டே யிருந்தான். 

சாப்பாட்டை முடித்துக் கொண்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தஞ்சாவூர் போயிருந்த ஆனந்தனின் அப்பா வேத நாயகம் வந்துவிட்டார். இரவு வருவதாகக் கூறி விட்டுப் போனவர், சீக்கிரம் வேலை முடிந்துவிட்டதால் பகலிலேயே திரும்பிவிட்டார். அவரைக் கண்டதும், ஆனந்தன் துள்ளிக் குதித்துக் கொண்டே அவர் அருகே ஓடினான். “அப்பா! அப்பா ! ரமணியை என்னால் கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னாயே! இதோ பார். இவன்தான் ரமணி!” என்று பெருமையாகக் காட்டினான். 

“ஓ, இவன்தான் அந்த ரமணியா? நல்ல காலம்!” என்றார் அப்பா. 

“அப்பா, மாமாவுக்குத் தந்திகூடக் கொடுத்து விட்டேன். இரவே புறப்பட்டு நாளைக் காலையில் வந்து விடுவார்.” 

“மதுரநாயகத்துக்கு வேலை அதிகமாயிருக்கும். ஏன் அவனை இங்கே வரச் சொன்னாய்? நாமே இவனை அழைத்துக்கொண்டு போயிருக்கலாமே !” 

“இல்லையப்பா. மாமா இங்கே வந்து வெகுநாளாகி விட்டதாம். அம்மாதான் மாமாவைப் புறப்பட்டு வரும் படி தந்தி கொடுக்கச் சொன்னாள்”. 

“சரி, வரட்டும்” என்று கூறிவிட்டு வேதநாயகம் சாப்பிடச் சென்றார். அவர் சாப்பிட்டுவிட்டு வருவதற் குள் விருந்துக்கு வந்த நண்பர்கள் எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். 

வேதநாயகம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஆனந்தனின் அம்மா அவரைப் பார்த்து “ஆனந்தனைப் பரிகாசம் பண்ணினீர்களே ! பார்த்தீர்களா அவன் சாமர்த்தியத்தை! தந்தியைப் பார்த்ததும் என் தம்பிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!” என்று பெருமை யோடு சொன்னாள். 

வேதநாயகம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு முகப்புக்கு வந்தார். வெற்றிலை போட்டுக்கொண்டே ரமணி, உன்னைக் காணாமல் மதுரநாயகம் ஏங்கிப் போய்விட்டான். ஆமாம், அந்த நாடக சபாவில் நீ சேர்ந்து எவ்வளவு காலமாகிறது ?” என்று கேட்டார். 

“நானா?.. நாடக சபாவிலே சேர்ந்து எத்தனை வருஷ மாகிறது என்றுதானே கேட்கிறீர்கள்? நாலு வருஷத் துக்கு மேலே யிருக்கும்.” 

இதைக் கேட்டதும் வேதநாயகம் திடுக்கிட்டார். ‘என்ன இது! நாடக சபா ஆரம்பித்து ஒன்றரை வருஷங்கூட ஆகவில்லையே ! ஒரேயடியாக நாலு வருஷம் என்று சொல்லுகிறானே!’ என்று சந்தேகப்பட்டார். 

உடனே மேலும் கேள்விகள் கேட்டார். “ஓகோ! நாலு வருஷத்துக்கு மேலே இருக்குமா? அதுதான் மதுரநாயகம் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்! சரி, அந்த நாடக சபா முதலாளி…அவர் பெயர் ஏதோ சொன்னாரே! மறந்தே போய்விட்டது…அவர் பெயர் என்ன தம்பி ?” என்று கேட்டார். 

“முதலாளி பெயரா ?……அவா பெயர்……அவர் பெயர்… ராமசாமி…ஆமாம், ராமசாமிதான்.” 

முதலாளியின் பெயர் மோகனரங்கம் என்பது வேதநாயகத்துக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக் கும்போது, ராமசாமி என்று அவன் சொன்னதும், அவ ரது சந்தேகம் வலுத்துவிட்டது. ஆனாலும்,வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ஆமாம், ஆமாம். ராமசாமியே தான்! அவர் தங்கமான மனிதர். மதுரநாயகம் சம் சாரம் கோதைநாயகிகூட மிகவும் நல்லவள். ரமணி, நீ கோதைநாயகியை எப்போதாவது பார்த்திருக் கிறாயா?” என்று கேட்டார். 

“என்ன அப்படிக் கேட்கிறீர்களே ? கோதைநாயகி அம்மாளை எனக்கு நன்றாகத் தெரியும். சில சமயம் சாப்பாடு எடுக்க வீட்டுக்குப் போவேன். அப்போது பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி அந்த அம்மாள் மிகவும் நல்ல அம்மாள்.” 

இப்படி அவன் கூறியதும் வேதநாயகத்தின் சந்தேகம் உறுதிப்பட்டது. மதுரநாயகத்தின் மனைவி கமலாதேவியைக் கோதைநாயகி என்று நான் மாற்றிச் சொன்னேன். அதை இவன் மறுத்துச் சொல்லவே இல்லை. அத்துடன், மதுரநாயகம் எழுதிய கடிதத்தில் அவன் வீட்டிலேயே ரமணி சாப்பிட்டு வந்ததாக அல்லவா எழுதியிருக்கிறான்? இவன் சொல்லுவது எல்லாமே பொய். இவன் ரமணியே அல்ல. ஆனந்தனை நன்றாக ஏமாற்றிவிட்டான்’ என்று தீர்மானித்துக் கொண்டு, அவனைப் பார்த்துக் கண்டிப்பான குரலில், “டேய், உள்ளதைச் சொல். உன் பெயர் என்ன ?”” என்று மிரட்டினார். 

அவன் பேந்தப் பேந்த விழித்தான். 

“டேய். உள்ளதைச் சொன்னால் தப்பினாய்! இல் லாத போனால், போலீஸில் ஒப்படைத்து விடுவேன். உம், சொல்லு” என்று கத்தினார். 

உடனே அவன் நடுநடுங்கினான். “சார், போலீஸ் வேண்டாம், சார். உள்ளதைச் சொல்லிவிடுகிறேன், சார். என் பெயர் ரமணி இல்லை. முனியாண்டி” 

-இதை அவன் சொன்னதும், “என்ன! முனியாண்டியா!” என்று ஆனந்தனும் குண்டுமணியும் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. 

அவன் மேலும் சொன்னான்: “நான் ஓர் ஏழை* பிச்சை எடுத்துக் காலம் தள்ளி வருகிறேன். நேற்று முழுதும் எனக்கு ஒரு வாய் சோறுகூடக் கிடைக்கவில்லை. பட்டினி கிடந்தேன். இரவிலே ஒரு தெருத் திண்ணையிலே படுத்திருந்தேன். தூக்கமே வரவில்லை. அப்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. நான் படுத்திருந்த திண்ணைக்குப் பின்புறம் சாய்மான முள்ள ஒரு திண்ணை இருந்தது. அதற்கு எதிர்ப்புறத்திலேயும் அதே மாதிரி ஒரு திண்ணையிருந்தது. ஆளுக்கு ஒரு திண்ணையில் உட்கார்ந்து, இவர்கள் ரமணி என்பவனைப் பற்றிப் பேசியது என் காதில் விழுந்தது.” 

இதை அவன் சொல்லும்போதே, “அட படுபாவி! நாங்கள் பேசியதை யெல்லாம் கேட்டுக் கொண்டா இருந்தாய்?” என்றான் ஆனந்தன். 

“ஆமாம், இவர்கள் பேச்சிலிருந்து பின் தெருவுக்குப் போகப் போகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன் இவர்கள் தண்ணீர் குடிக்கப் போன சமயம் பார்த்து, நான் பின் தெருவுக்கு ஓடி, ஒரு வீட்டுக்கு முன்னால் படுத்துக் கொண்டேன். நான் நினைத்தபடியே இவர்கள் அந்தத் தெருவுக்கு வந்தார் கள். என்னைப் பார்த்ததும் எழுப்பினார்கள். என்னை விசாரித்தார்கள். நான்தான் ரமணி என்று சொன்னால் வயிறாரச் சாப்பாடு கிடைக்குமே என்று நினைத்துத் தான் இப்படிச் செய்துவிட்டேன். உங்களுக்குக் கோடிப் புண்ணியம். என்னை விட்டுவிடுங்கள்” என்று கூறி வேதநாயகம் காலிலே விழுந்து கெஞ்சினான் அந்த முனியாண்டி! 

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்த னுக்கும், குண்டுமணிக்கும், என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. முனியாண்டியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனையே முறைத்துப் பார்த்தார்கள். 

அப்போது வேதநாயகம், “அப்பா, துப்பறியும் சிங்கங்களா! உங்கள் திறமை இப்போதாவது தெரிகிறதா? வேலையற்ற வெட்டிப் பயல்கள்! விருந்து வைக்கிறார்களாம் விருந்து!” என்று அவர்களைத் திட்டினார். 

முனியாண்டியைப் பார்த்து, “டேய்; எழுந்திரு. இனி, ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கக் கூடாது. உடனே எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விடு.உம், நிற்காதே! ஓடு,ஓடு!” என்று அவனை விரட்டி அனுப்பினார். 

பிறகு நேராகத் தபால் ஆபீசுக்குச் சென்றார். புறப்பட வேண்டாம். கடிதம் வருகிறது’ என்று மதுர நாயகத்துக்கு ஒரு தந்தியை அனுப்பி வைத்தார். இல்லாவிட்டால், மதுரநாயகம் அன்றிரவே புறப்பட்டுக் காலையில் வந்து விடுவாரே! 

அன்றே நடந்ததை விவரமாக மதுரநாயகத் துக்கு எழுதி அனுப்பினார். அத்துடன், கடிதத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார். “நானும் ஒரு வாரத்துக்கு முன்பு இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் ரமணியின் அங்க அடையாளங்களைக் கொடுத்து, அவனை எப்படியாவது தேடிக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். தந்தி கொடுத்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று, ஏதாவது தகவல் கிடைத்ததா?’ என்று கேட்டுப் பார்த்தேன். அவர்கள் இந்த வட்டாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டார்களாம். ரமணி கிடைக்க வில்லையாம். ஆகையால், அவன் இந்தப் பகுதியில் இல்லை என்றே தெரிகிறது” என்று எழுதி யிருந்தார். 

வேதநாயகம் விவரமாக எழுதியிருந்த கடிதத்தைப் படித்ததும் மதுரநாயகத்திற்குப் பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. ‘எல்லாம் இப்படியா ஆகவேண்டும்! ஐயோ, ரமணி இப்போது எங்கு இருக்கிறானோ!’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். 

ஆனால், ரமணி மதுரை நகரிலே பத்திரமாக இருக் கிறான் என்பதும், அங்கிருந்து பர்மாவுக்குப் போகப் போகிறான் என்பதும் அவருக்கு எப்படித் தெரியும் ? 


18. அவன் யார்?

அன்று காலை நேரம். மணி பத்து இருக்கும். காஞ்சிபுரத்துத் தெருவிலே ஒரு பையன் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு பொட் டணம் இருந்தது. ஓடும் வேகத்தில் கையில் இருந்த பொட்டணம் அவிழ்ந்து, உள்ளே யிருந்த நாலு பட்டுப் புடவைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெருவிலே விழுந் தன. கீழே புடவைகள் விழுவதைக் கண்டதும், அவன் ஓட்டத்தை நிறுத்தினான். கீழே குனிந்து அந் தப் புடவைகளை எடுத்தான். அப்போது, “டேய், திருட் டுப் பயலே!” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார் ஒரு போலீஸ் காரர். 

போலீஸ்காரர் அவன் அருகே வந்து, அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். டேய், இதையெல்லாம் எங்கே திருடினாய்?” என்று அவனை மிரட்டினார். 

“என்ன! திருட்டா! ஐயோ, என்னையா திருடன் என்கிறீர்கள்! அந்தப் பழக்கமே என்னிடத்தில் இல்லையே!” 

“டேய் என்னடா நடிக்கிறாய்? வா, போலீஸ் ஸ்டேஷனுக்கு. அங்கு வந்து சப்-இன்ஸ்பெக்டரிடத் திலேஉன் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடு.”இப்படிக் கூறிக்கொண்டே புடவைகளைப் பறித்து ஒரு கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் அந்தப் பைய னைப் பிடித்து இழுத்தார் போலீஸ்காரர். 

“ஐயோ! நான் திருடவில்லையே! சத்தியமாக நான் திருடனில்லை. நடந்ததைக் கேளுங்கள்; தயவுசெய்து கேளுங்கள்” என்று கதறினான் அந்தப் பையன். போலீஸ்காரர் அவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. அவனைப் பிடித்துப் பலவந்தமாக இழுத்தார். இதற்குள் அவர்கள் இருவரையும் சுற்றிப் பெரிய கும்பல் கூடிவிட்டது. 

அந்தச் சமயம் எதிரிலிருந்து ஒரு மோட்டார் கார் வந்தது. கூட்டம் வழியை மறைத்துக் கொண்டிருந்த தால், அந்தக் கார் அங்கேயே நின்றுவிட்டது. கார் நின்றதும், உள்ளேயிருந்து ஒரு மனிதர் இறங்கி வந்தார். வேடிக்கை பார்ப்பதற்காக அவர் கும்பலுக்குள் புகுந்து சென்றார். கும்பல் நடுவிலே போலீஸ்காரர் பட்டுப் புடவைகளுடன் நிற்பதைக் கண்டதும் அவர் திடுக்கிட்டார். உடனே அவர், முண்டியடித்துக் கொண்டு போலீஸ்காரரின் அருகிலே சென்றார். “ஏனய்யா, இந்தப் புடவைகளெல்லாம் எப்படி இங்கே வந்தன?” என்று கேட்டார். 

“எப்படி வந்தனவா! இதோ இந்தத் திருட்டுப் பயல் அமுக்கப் பார்த்தான். நானா விடுவேன்? உடும்புப் பிடியாய்ப் பிடித்துவிட்டேன்” என்று பெருமையோடு கூறினார் போலீஸ்காரர். 

உடனே அந்தப் பையன் அந்த மனிதரைப் பார்த்து, “ஐயா, ஐயா, நல்ல சமயத்திலே நீங்கள் வந் தீர்கள். உங்களுக்குத்தான் உண்மை புரியும். அந்த மண்டபத்திலே நீங்கள் இந்தப் பொட்டணத்தை மறந்து வைத்துவிட்டு மோட்டாரிலே ஏறி விட்டீர்கள் அப் போது தற்செயலாக நான் இதைப்பார்த்தேன். உடனே ‘சார்,சார்’ என்று று கூவிக்கொண்டே உங்களிடம் பொட்டணத்தைப் பற்றிச் சொல்லவந்தேன். ஆனால் நீங்கள் என் பேச்சைக் கேட்க விரும்பாமல் போய்விட் டீர்கள். ஆனாலும் நான் விடாமல், பொட்டணத்தை எடுத்துக்கொண்டு காரைப் பின்தொடர்ந்து ஓடி வந் தேன். எப்படியாவது உங்களிடம் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் வேகமாக வந்தேன். வழியி லே முடிச்சு அவிழ்ந்து புடவைகளெல்லாம் விழுந்துவிட் டன. நல்லது செய்யப்போக இப்படிப் பொல்லாப்பு வந்துவிட்டதே!” என்று கண் கலங்கக் கூறினான். 

இதைக் கேட்ட தும், அந்த மனிதர் சிறிது நேரத் துக்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தார். அவர், அவருடைய மனைவி, ஐந்து வயதுப் பெண் மூவரும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயிலுக்கு எதிரே யுள்ள மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர் கள் ஒரு மோட்டார் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த கார் வந்துவிட்டது.உடனே அவர்கள் மூவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். கார் புறப்படப் போகும்போதுதான் அந்தப் பையன் ‘சார், சார்’ என்று கூவிக்கொண்டே அருகிலே ஓடி வந்தான். அவன் பிச்சைதான் கேட் கிறான் என்று நினைத்து, போடா வேலையற்றவனே! என்று ஏசிவிட்டு, டிரைவரைப் பார்த்து ம்… நீ போ, என் று அவர் உத்தரவிட்டார். கார் வேகமாகப் பறந்து சென்றது. ஆனாலும், ‘சார் சார்’ என்ற குரல் மட்டும் சிறிது நேரம் பின்னால் கேட்டுக்கொண்டே யிருந்தது. காருக்குள் இருந்த எவருமே திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பையன் பொட்டணத்தைக் கொடுக்கத்தான் ‘சார், சார்’ என்று கூவினான் என்பது இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. 

உடனே அவர், அட்டா! ஆமாம் தம்பி. உன் மேல் தவறே இல்லை” என்று கூறிவிட்டுப் போலீஸ்காரரைப் பார்த்து, “ஐயா போலீஸ்காரரே, பையன் சொல்வதெல் லாம் உண்மைதான். என் சம்சாரம் மண்டபத்திலே ஒரு தூணுக்குப் பக்கத்திலே இந்தப் பொட்டணத்தை வைத்திருந்தாள். கார் வந்ததும், அவசரத்தில் அதை அவள் மறந்து பே ய்விட்டாள். எனக்கும் ஞாபகம் இல்லை. சற்று முன்புதான் ஞாபகம் வந்தது. உடனே காரைத் திருப்பிக்கொண்டு வந்தோம். இந்தப் பையன் மேல் குற்றமே இல்லை. குற்றமெல்லாம் எங்கள் மேல்தான்” என்றார். 

பெரிய கேஸ்’ ஒன்றைக் கண்டு பிடித்துவிட்ட தாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர் முகத்திலே அசடு வழிந்தது பேசாமல் புடவைகளை அந்த மனிதரிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து நழுவிவிட்டார். உடனே கூட்டமும் கலைய ஆரம்பித்தது 

அந்த மனிதர், பையனைப் பார்த்து, “தம்பி, நீ இதற்காக எவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிறாய்! பாவம், உன்னைப் போய்த் திருடனென்று சொன்னாரே அந்தப் போலீஸ்காரர்! நல்ல காலம், உன் கையில் கிடைக்கா திருந்தால் இதன் கதி என்ன ஆகியிருக்குமோ! நாலு புடவையும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாயாகிறது! நான் உன்னைப் பிச்சைக்காரன் என்று நினைத்து விரட்டி னேன். அப்படியிருந்தும் நீ எங்களுக்கு நல்லது செய்ய முன்வந்தாய். உண்மையிலேயே நீ நல்ல பையனப்பா. சரி,வா. காரிலே நீயும் ஏறிக்கொள். எங்கள் உறவினர் வீடு நாலாவது தெருவிலே இருக்கிறது. அங்கே போய்ப் பேசிக் கொள்ளலாம்” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தார். காரில் உட்கார்ந்து கொண் டிருந்த தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் சுருக்கமாக எடுத்துச் சொன்னார். 

அதைக் கேட்டதும், “பாவம், நல்ல பையன்” என்றாள் அவரது மனைவி. 

“அடே, இந்த அண்ணா நல்ல அண்ணாதான் !” என்று கூறினாள் அவரது அருமைப் பெண். 

அந்த மனிதர் யாரென்பது தெரிய வேண்டாமா? அவரது பெயர் சிற்சபேசன். அவரது மனைவி பெயர் காமாட்சி அம்மாள். பெண் பெயர் மாலதி. அவர்களது சொந்த ஊர் மதுரை. சிற்சபேசனுக்குப் பர்மாவிலே ஏராளமான சொத்து இருக்கிறது இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு அங்கிருந்து நிறையப் பணம் வந்து கொண்டிருந்தது. ஆனால், யுத்தம் நடந்தபோது பணம் வர வழியில்லை. யுத்தம் முடிந்த பிறகும் பர்மா நாடு சுதந்திர நாடாகி விட்டதால், இந்தியர்கள் அங்கிருந்து முன்போல் பணம் கொண்டு வராதபடி பர்மா சர்க்கார் செய்துவிட்டார்கள். ‘மாதா மாதம் நாற்பது ரூபாய் அனுப்பலாம். அதற்கு மேல் அங்கிருந்து அனுப்ப முடியாது’ என்று உத்தரவிட்டனர். 

பர்மாவில் ஏராளமான வீடுகள், நிலங்கள், நிறையப் பணம் எல்லாம் இருந்தும் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று சிற்சபேசன் எண்ணினார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். குடும்பத்துடன் பர்மாவுக்குப் புறப்பட்டுப் போய், செய் அங்கேயே கொஞ்ச காலம் இருப்பது என்று முடிவு தார். அயல் நாட்டுக்குப் போவ தென்றால் பாஸ் போர்ட்’ வேண்டுமல்லவா? ஆதலால் போர்ட்’டுக்கு ஏற்பாடு செய்யச் சென்னைக்கு எல்லோரு மாக வந்தார்கள். சென்னையிலிருந்து திரும்பும்போது காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். அங்கே அவர்களது நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் பார்த்துவிட்டு, பெயர் பெற்ற காஞ்சிபுரம் பட்டுச் சேலை களையும் வாங்கிக் கொண்டு மதுரைக்குப் போகத் தீர்மானித்தார்கள். 

அன்று காலையில் உறவினருடைய காரிலே புறப் பட்டு வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சற்றுமுன்னா லுள்ள ஒரு பட்டு வியாபாரி வீட்டுக்கு வந்தார்கள். அங்கே இறங்கிக்கொண்டு ஏதோ ஒரு வேலையாகக் காரை அனுப்பி வைத்தார்கள். புடவைகளை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து டு,எதிரேயுள்ள மண்டபத்தில் காத்திருப்பதாகவும், பத்து மணி சுமாருக்குக் காரைக் கொண்டுவரும்படியும்  டிரைவரிடம் சொல்லி அனுப்பினார் சிற்சபேசன். அப்படியே பத்து மணிக்கு கார் திரும்பி வந்தது. சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்த சிற்சபேசன் குடும்பத்தார் காரிலே ஏறிச் சென்றார்கள். 

அப்போது அவசரத்தில் மறந்து வைத்துவிட்டுப் போன புடவைப் பொட்டணம்தான் அந்தப் பையன் மூலமாக இப்போது கிடைத்தது! 

பட்டுப் புடவைகளைக் காப்பாற்றிக் கொடுத்த பையனை மோட்டாரில் ஏற்றிக்கொண்டு உறவினர் வீட்டுக்குப் போனார் சிற்சபேசன். அங்கே போனதும், அவனைப் பற்றிய முழு விவரங்களையும் அவனிட மிருந்து அவர் தெரிந்துகொண்டார். 

அந்தப் பையன் யார்? வேறு யாருமல்ல ; ரமணி தான்! ஆம்; ரமணியேதான் ! ரமணி எப்படிக் காஞ்சி புரத்துக்கு வந்தான்? 

நாடக 5பா முதலாளி அவன் பட்டுத் துணியைத் திருடிவிட்டதாகக் கூறி வெளியே பிடித்துத் தள்ளி னாரே, அன்றே சென்னையை விட்டு அவன் புறப்பட்டு விட்டான். கால் போனபடி நடந்தான்; நடந்தான்; நடந்துகொண்டே யிருந்தான். நன்றாக இருட்டி விட்டது. அதறகாக அவன் நிற்கவில்லை நல்ல பசி எடுத்தது; எதுவும் சாப்பிடவில்லை ஏதாவது வாங்கிச் சாப்பிடுவதற்குப் பணமும் இல்லை. இரவு முழுவதும் சாப்பிடாமல், நிற்காமல் நடந்தான். விடியும் சமயம், ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என்று நிமிர்ந்து பார்த்தான். எதிரே பெரிய பெரிய கோபுரங்கள் தெரிந்தன. ‘இது எந்த ஊராக இருக்கும் ?’ என்று யோசித்தான். சிறிது நேரத்தில் அது காஞ்சிபுரம் என்பது தெரிந்துவிட்டது. 

‘சரிதான். நாம் ஒரு புண்ணிய ஸ்தலத்துக்குத் தான் வந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஆறுதல் அடைந்தான். அப்போது அவனுக்கு நல்ல பசி. கையிலே காசிருந்தால் ஏதேனும்வாங்கிச் சாப்பிடலாம். 

‘என்ன செய்வது?’ என்று யோசித்தான். அப்போது ஒரு ஹோட்டல் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. உடனே அந்த ஹோட்டலை நோக்கிச் சென்றான். தயக்கத்துடன் ஹோட்டல் முதலாளியின் அருகே போய், “ஐயா, நேற்று மத்தியானம் சாப்பிட்டது. எனக்கு ஒரே பசியாயிருக்கிறது. ஏதாவது வேலை கொடுங்கள். செய்து முடித்த பிறகு, பசி தீரக் கொஞ் சம் பலகாரம் கொடுங்கள்” என்று கெஞ்சிக் கேட் டான். 

ரமணியின் பேச்சைக் கேட்டதும், ஹோட்டல் முதலாளிக்கு ஆச்சரியமாயிருந்தது. எத்தனையோ பேர் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமலே கழுவப் பார்ப்பார்கள். வேறு சிலா கையிலே காசில் லாமல் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு அவரிடம் வந்து, “ஐயா, கையிலே தம்படி இல்லை பசி அபாரமா யிருந்தது. சாப்பிட்டு விட்டேன். ஏவ்…!” என்று ஏப்பம் விடுவார்கள். அவர்களைப்போல் செய்யாமல், வேலை கொடுங்கள், செய்து முடிக்கிறேன். பிறகு ஆகாரம் தாருங்கள்” என்று ரமணி கேட்டது அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது. 

உடனே அவர் ரமணியைப் பாய்த்து, “தம்பி, உன்னைப் பார்த்தால் மிகவும் களைத்திருப்பதாகத் தெரிகிறது. முதலில் சாப்பிடு. வேலையைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, ஒரு சிப்பந்தியிடம் ரமணிக்குப் பசி தீரப் பலகாரம் கொடுக்கச் சொன்னார். நாலு இட்டலிகள் சாப்பிட்ட துமே போதும் என்று கூறி, ஒரு ‘கப்’ காப்பியைக் குடித்துவிட்டு ரமணி எழுந்திருந்தான். நேராக ஹோட்டல் முதலாளியிடம் போய், “ஐயா, சாப்பிட்டு விட்டேன். வேலை கொடுங்கள். செய்து முடித்து விட்டுப் போகிறேன்” என்றான். 

ஹோட்டல் முதலாளிக்கு ரமணியிடம் வேலைவாங்க மனமில்லை. “இப்போது வேலை ஒன்றும் இல்லை. வேலைக்காக நான் ஆகாரம் தரவில்லை. உன் நல்ல குணத்துக்காகத்தான் தந்தேன். போய் வா!” என்று கூறினார். ரமணி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். 

சிறிது தூரம் சென்றதும் அவன் கண்களில் வரதராஜப் பெருமாள் கோயில் தென்பட்டது. கோயி லுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசைப் பட்டான். ஆனாலும், இரவெல்லாம் நடந்துவந்ததால் களைப்பாக இருந்தது. அதனால், கோயிலுக்கு எதிரே யுள்ள மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்து கொண் டான். சிறிது நேரத்தில் நன்றாகத் தூங்கிப் போய் விட்டான். 

தூங்கிக் கொண்டிருந்த ரமணி கண் திறந்து பார்த்தபோது தான் சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி மூவரும் மண்டபத்தில் நிற்பது தெரிந்தது. மண்டபத்தில் விற்ற பொம்மைகளை வாங்கி மாலதி கை நிறைய வைத்துக் கொண்டிருந்தாள். சிற்சபேசன் இன்னும் கார் வரவில்லையே!’ என்று கூறிக்கொண் டிருந்தார். 

சிறிது நேரத்தில் கார் வந்துவிட்டது. உடனே அவர்கள் வேகமாகப் போய்க் காரிலே ஏறினார்கள். ஏறும்போது அவர் மண்டபத்திலே மறந்துவைத்து விட்டுப் போன புடவைப் பொட்டணத்தைத்தான் ரமணி எடுத்துக்கொண்டு காரைப் பின்தொடர்ந்து ஓடினான்; வழியில் போலீஸ்காரரிடம் அகப்பட்டுக் கொண்டான்; கடைசியில், சிற்சபேசனால் காப்பாற்றப் பட்டான். 

ரமணி தனது வரலாறு முழுவதையும் சிற்சபேச னிடமும் காமாட்சி அம்மாளிடமும் கூறிவிட்டு, “நான் நாடக சபாவில் பட்டுத் துணியைத் திருடியதாக முத லாளி குற்றம் சாட்டினார். இங்கே, நான் பட்டுப் புடவை யைத் திருடியதாகப் போலீஸ்காரர் குற்றம் சாட்டினார். அதனால் ‘பட்டு’ என்றாலே எனக்கு மிகவும் பயமாகத் தான் இருக்கிறது” என்றான். 

“பயப்படாதே! நாங்கள் இங்கு நாலைந்து நாட் கள் இருப்போம். அதுவரை நீயும் இங்கேயே இருக்க லாம்” என்று கூறி அங்கிருந்த உறவினர்களிடமும் ரமணியைப் பற்றிக் கூறினார் சிற்சபேசன். அவர்களும் அவன்மேல் இரக்கப்பட்டார்கள். 

ஒன்றிரண்டு நாட்களிலே அவன் எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்து விட்டான். மாலதியிடத்திலே அவன் மிகவும் அன்பாக இருந்தான். மாலதியும் ‘அண்ணா அண்ணா’ என்று அவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடவே இருந்தாள். ரமணியுடைய அன் பையும், நல்ல குணத்தையும் கண்ட சிற்சபேசனும், காமாட்சி அம்மாளும் மூன்றாவது நாளே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். 

சிற்சபேசன் காமாட்சி அம்மாளிடம், “இந்த ரமணி எவ்வளவு அன்பாயிருக்கிறான்! மாலதியிடத் திலே எவ்வளவு அன்பாயிருக்கிறான்! இவனைப்போல் ஒரு நல்ல பையன் கிடைப்பதே அபூர்வம். ஆகையால் இவனையும் நாம் பர்மாவுக்கு அழைத்துக்கொண்டு போனால் நமக்கும் உதவியாயிருக்கும்; இவனுக்கும் அனாதை என்ற எண்ணமில்லாமல் இருக்கும்; நமது ஊர்போலப் பர்மாவிலே இருக்கமுடியுமா? உதவி ஒத்தா சைக்கு யாராவது வேண்டும். ரமணி சிறுவனாயிருப்ப தால் பர்மா பாஷையைச் சுலபமாகக் கற்றுக் கொள் வான். வெளியிலே தெருவிலே போய்வர உதவியா யிருப்பான். மாலதிக்கும் இவன் இருந்தால் சந்தோஷ மாய்ப் பொழுது போகும். ஆகையாலே ரமணிக்கும் ஒரு பாஸ் போர்ட்’டுக்கு ஏற்பாடு செய்து விடலாம்” என்றார். 

காமாட்சி அம்மாளுக்கும் அது நல்ல மோசனை யாகத் தோன்றியது “ஆமாம், அதுதான் சரி. அப் படியே செய்யுங்கள். ரமணியுடைய தங்கமான குண மும், மரியாதையான நடத்தையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன” என்றாள். ரமணியிடம் இந்த விஷயத்தைச் சொன்ன தும், அவனுக்கு ஒரே ஆனந்த மாயிருந்தது. ‘சரி’ என்று தலையை ஆட்டினான். 

நாலாம் நாள் அவர்கள் ரமணியை அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டார்கள். அங்கே சிற் சபேசனின் சித்தப்பா இருக்கிறார். அவரைப் பார்த்து விட்டு மறுநாள் காலையில் மதுரைக்குத் திரும்பினார்கள். திருச்சியில் ஒரு நாள் தங்கியிருந்தபோதுதான் ரமணி மதுரநாயகத்துக்கு ஒரு கடிதம் எழுதினான். ஆனால், அதில் அவன் விலாசம் எழுதவில்லை. அந்தக் கடிதத்தி லிருந்த தபால் முத்திரையைப் பார்த்துவிட்டுத்தான் ரமணி திருச்சியில் இருப்பதாக மதுரநாயகம் தீர்மானித்துவிட்டார்! 

19. மதுரநாயகம் எங்கே ? 

மதுரைக்கு வந்த பிறகு, ரமணிக்கு நல்ல நல்ல உடைகளை யெல்லாம் வாங்கிக் கொடுத்தார் சிற்ச பேசன். அத்துடன் ரமணிக்கு வேண்டிய கதைப் புத்த கங்களை யெல்லாம் தாராளமாக வாங்கிக் கொள்ளச் சொன்னார். ரமணி கதைப் புத்தகங்களைக் கருத்தோடு படித்து மாலதிக்கு எடுத்துச் சொல்லுவான். சில சமயம் அவன் கதை சொல்வதை மறைந்திருந்து சிற்ச பேசனும் காமாட்சியம்மாளும்கூடக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதெல்லாம் காமாட்சி அம்மாள், ‘ கேட்டீர்களா ரமணி கதை சொல்வதை ! மாலதிக்குப் பாட்டியிருந்தால் கதை சொல்லுவாள். அவள்தான் இல்லையே! ஆனாலும், அந்தக் குறை தெரியாதபடி ரமணி எவ்வளவு அன்பாய், அழகாய்க் கதை சொல்லுகிறான் !” என்பாள். 

ஆமாம்! மாலதிக்கு அண்ணனைப் போல ரமணி இருக்கிறான் என்பாயே, இப்போது பார்த்தாயா? பாட்டி யாகவும் இருக்கிறான் !” என்று சொல்லிச் சிரிப்பார் சிற்சபேசன். 

இதற்கிடையில் ரமணியை பர்மாவுக்கு அழைத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் சிற்சபே சன் செய்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங் களில் பர்மாவுக்குப் புறப்படப் போவதாக ரமணி தெரிந்து கொண்டான். உடனே மதுரநாயகத்துக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். சிற்சபேசனிடம் ஒரு கார்டு வாங்கி அதில் சுருக்கமாக எழுதினான். பர்மா போவதைப் பற்றி எழுதினால், அவர் தடுத்து விடுவாரோ என்ற பயம்! அதனால் “நான் மதுரையில் சுகமாக இருக்கிறேன். தங்களைப் போலவே சிற்சபேசன் என்பவர் என்னை அன்பாக ஆதரித்து வருகிறார். தங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதினால் எனக்கு ஆறுதலாக இருக்கும். அம்மாளுக்கும் சபா முதலாளிக்கும் எனது வணக்கம்’ என்று எழுதி, தன் மதுரை விலாசத்தையும் அதில் கொடுத்திருந் தான். 

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும், மதுரநாயகம் மகிழ்ச்சி அடைவார்; உடனே பதில் போடுவார் என் று ரமணி எதிர்பார்த்தான், ஆனால், ஒரு வாரமாகியும் பதில் வரவில்லை; திரும்பவும் ஒரு கார்டு போட்டான்; அதற்கும் பதில் இல்லை, பிறகு இரண்டு மூன்று கார்டு கள் எழுதியும் பதிலே இல்லை. ரமணிக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. ‘சரிதான், அவரும் நம்மைத் திருடன் என்றே நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அதனால் தான் பதில் போடவில்லை. ஐயோ! மதுரநாயகம் கூடவா என்னை அப்படி நினைக்க வேண்டும் !” என்று நினைத்து மனம் கலங்கினான். 

ஆனால், மதுரநாயகமா, அப்படி நினைப்பார்? அவன் எழுதிய கடிதங்கள் அவரிடம் போய்ச் சேர்ந் திருந்தால்தானே அவர் பதில் எழுதுவார் ? ஒரு கடிதம்கூடப் போய்ச் சேரவில்லையே, ஏன்? அவன் சரி யான விலாசம் எழுதவில்லையா? சரியாகத்தான் விலா சம் எழுதியிருந்தான். அப்படி யிருந்தும், அவரது கைக்குக் கிடைக்க வில்லை ! 

ரமணி போன பின்பு அவனுக்குப் பதிலாக நாடக சபாவிலே வேறொரு பையனைச் சேர்த்திருந்தார்கள். அவன் பெயர் சிங்காரம். சிங்காரம் சுத்த சோம்பேறி. பெரிய தூங்குமூஞ்சி. ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாக மணி அடித்தால்தான் அவன் ஆடி அசைந்து வருவான். வந்து, “ஏன் சார். என்னையா கூப்பிட் டீர்கள் ?” என்று சாவதானமாகக் கேட்பான். 

மதுரநாயகத்துக்கு சிங்காரத்தைப் பிடிப்பதே இல்லை 

“உனக்கு முன்னால் இருந்தானே ரமணி, அவன் எவ்வளவு சுறுசுறுப் பாயிருப்பான் ! எப்படி நடந்து கொள்வான்! அவன் இருந்த இடத்திலே நீயும் இருக் கிறாயே? அவன் கால் தூசுக்குக்கூட நீ சமானமா வாயா ?” என்று அவர் அடிக்கடி கூறுவார். 

சிங்காரம் ரமணியைப் பார்த்ததே இல்லை. அப் படியிருந்தும், மதுரநாயகம் கூறுவதைக் கேட்டுக் கேட்டு ரமணி மேல் அவனுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அத்துடன், “.ரமணி திரும்பவும் வந்துவிட்டால் நம்மை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி விடுவார் இந்த மதுரநாயகம். ஆகையால், கடவுளே ! ரமணி கிடைக்கவேகூடாது என்று தினந்தோறும் வேண்டிக்கொள்வான். 

ஒருநாள் சிங்காரம் வழக்கம்போல் தபால் ஆபீ சுக்குப் போனான். கடிதங்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான். வரும்போது, தற்செயலாக அவன் மதுரநாயகத்துக்கு வந்திருந்த ஒரு கார்டைப் பார்த் தான். அதில் ‘ரமணி’ என்ற கையெழுத்தைக் கண்ட தும் அவன் திடுக்கிட்டான். ‘உடனே, கார்டில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்துப் பார்த்தான். பிறகு, “அடடே! இந்த ரமணிப் பயல் மதுரையில் அல்லவா இருக்கிறான் ! இந்தக் கார்டை மதுரநாயகம் பார்த்தால் ஆபத்துத்தான்! உடனே அவனுக்குத் தந்தி கொடுத்து இங்கே வரவழைத்துவிடுவார்! அவன் வந்துவிட்டால், நமக்கு நிச்சயம் சீட்டுக் கொடுத்து விடுவார். ஆதலால், இந்தக் கார்டை மதுரநாயகத்திடம் காட்டவேகூடாது” என்று தீர்மானித்தான். மறுநிமிஷமே அதை வழியிலே கிழித்தெறிந்து விட்டான் ! 

அதற்குப் பிறகு, மதுரையிலிருந்து எந்தக் கடிதம் வந்தாலும், சிங்காரம் கிழித்துப் போட்டுவிடுவான் இந்த விஷயம் மதுரநாயகத்துக்குத் தெரியாதல்லவா? அதனால் அவர், ‘ரமணி இப்போது எங்கே இருக் கிறானோ! எப்படி இருக்கிறானோ!’ என்று கவலைப்பட்டுக் கொண்டே யிருந்தார். 


மதுரநாயகம் பதில் எழுதவில்லையே என்ற குறை யைத் தவிர, ரமணிக்கு வேறு குறையே இல்லை. சிற் சபேசனும், காமாட்சி அம்மாளும் சொந்தப் பிள்ளை யைப் போலவே நினைத்து, ரமணியிடம் அன்பாக இருந்தார்கள். மாலதியும் சொந்த அண்ணனைப் போலவே அவனைக் கருதி வந்தாள். 

சிற்சபேசனும் காமாட்சி அம்மாளும், தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவார்கள். போகும் போது ரமணியையும் மாலதியையும் கூடவே அழைத் துச் செல்வார்கள், ரமணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவதென்றாலே ஆனந்தம்தான்! அங்கே ஒவ்வொரு தூணிலும் உள்ள அழகிய சிலை களைப் பார்த்துப் பார்த்து அவன் பரவசப்படுவான். மேலும், அங்குள்ள திருவிளையாடல் சிற்பங்களைக் காட்டிக்காட்டி மாலதிக்கு அவன் பல கதைகளைச் சொல்லுவான். ரமணியும் மாலதியும் கைகோத்துக் கொண்டு அந்தப் பெரிய கோயிலை ஆனந்தமாகச் சுற்றிவருவதே அழகாகத்தானிருக்கும். மதுரைக்குத் தெற்கே ஐந்து மைல் தூரத்திலுள்ள திருப்பரங்குன் றத்துக்குச் சிற்சபேசன் வெள்ளிக்கிழமை தோறும் போய் வருவார். அப்போது ரமணி அவர்கூடச் செல்வான். வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்தி லுள்ள அழகர் கோயிலுக்குக்கூட ஒரு தடவை எல் லோருமாகப் போய் வந்தார்கள். ரமணியின் அப்பா இறந்த பிறகு மதுரையில் ஒரு பணக்காரர் வீட்டிலே அவன் கொஞ்ச நாள் வேலைக்கு இருந்திருக்கிறான். அப்போது அவன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக் கூடச் சரியாகப் பார்த்ததில்லை. ஆனால், இப்போதோ அவன் சிற்சபேசன் செல்லும் இடத்துக்கெல்லாம் செல்கிறான். 

ரமணி மதுரைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் ஒரு வாரத்தில் பர்மாவுக்குப் புறப் படவேண்டும். சென்னைக்குப் போய், அங்கிருந்து கப்பல் ஏறி, பர்மாவுக்குப் போகவேண்டும் என்பதை ரமணி தெரிந்துகொண்டான். உடனே, அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது. ‘சென்னைக்குப் போனதும், மதுரநாயகத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும். அவரைப் பார்க்காமல் போனால் என் மனம் நிம்மதி அடையவே அடையாது’ என்று நினைத்தான். 

அன்று, சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி, ரமணி நால்வரும் சென்னைக்கு ரயிலில் புறப்பட் டார்கள். 

சென்னையை அடைந்ததும் அங்கிருந்த ஒரு பெரிய ஹோட்டலில் தங்கினார்கள். அன்று புதன் கிழமை. வெள்ளிக்கிழமை கப்பல் புறப்பட்டுவிடும். ஆகையால், அன்றே மதுரநாயகத்தைச் சந்தித்துவிட வேண்டும் என்று ரமணி ஆசைப்பட்டான். உடனே சிற்சபேசனிடம் தன் ஆசையைக் கூறினான். அவனைத் தனியாக அனுப்ப சிற்சபேசனுக்கு மனமில்லை. “சரி வா, நானும் வருகிறேன். அந்த நல்ல மனிதரை நானும் பார்க்கவேண்டாமா?” என்றுகூறி அவனுடன் அவரும் கிளம்பினார். 

இருவரும் ஒரு “டாக்ஸி எடுத்துக்கொண்டு நாடகக் கொட்டகை இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்கள் வந்தபோது, நாடகக் கொட்டகையின் முன் னால் எந்தவிதமான அலங்காரமும் இல்லை. வழக்கமாக வெளியில் வைத்திருக்கும் வர்ண விளம்பரங்களையும் காணோம்.எந்நேரமும் திறந்து கிடக்கும் வெளிக் கதவும் நன்றாகப் பூட்டப்பட்டிருந்தது! 

இந்த காட்சியைக் கண்டதும் ரமணி திடுக்கிட் டான். “இப்படி ஒரு நாளும் இருக்காதே! கதவுகூடப் பூட்டப்பட்டிருக்கிறதே!” என்றான். 

“ஒருவேளை இப்போது நாடகம் நடத்தவில்லையோ என்னவோ! என்றார் சிற்சபேசன். அத்துடன், “எதற்கும் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமே! அதோ அந்தக் கடையில் விசாரிப்போம்” என்றார். 

அதற்குள் ரமணி, “வேண்டாம், மானேஜர் வீட் டுக்கே நேராகப் போவோம் இங்கே பூட்டப்பட்டிருப்ப தால் நிச்சயம் அவர் வீட்டில்தான் இருப்பார்” என்றான். உடனே மதுரநாயகம் இருக்கும் வீட்டை நோக்கி “டாக்ஸி’யைப் போகச் சொன்னான் ரமணி. 

சற்று நேரத்தில் மதுரநாயகத்தின் வீட்டின் முன் னால் டாக்ஸி வந்து நின்றது. ஆனால், அங்கும் அதே நிலைதான்! அந்த வீட்டின் வெளிக் கதவும் பூட்டப்பட் டிருந்தது! ரமணிக்கு ஒன்றுமே புரியவில்லை! 

மதுரநாபகத்தின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்ட ரமணி, “என்ன இது! நாடகக் கொட்டகையும் பூட்டப்பட்டிருக்கிறது. மானேஜர் வீடும் பூட்டப்பட்டிருக்கிறதே!” என்றான். 

உடனே சிற்சபேசன் “எதற்கும் பக்கத்து வீட் டிலே கேட்டுப் பார்க்கச் சொல்லலாம்” என் சொல்லி விட்டு, டாக்ஸி டிரைவரிடம், “டிரைவர், இந்த வீட் டிலே குடியிருந்த நாடக சபா மானேஜரும், அவர் சம்சாரமும் எங்கே போயிருக்கிறார்கள் என்று அதோ அந்த வீட்டிலே கேட்டுப் பார்” என்றார். 

அவர் சொன்னபடி டாக்ஸி டிரைவர், பக்கத்து வீட்டுக்குச் சென்றார். விசாரித்துப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, “அடடே, பக்கத்து வீட்டு அம்மா சொன்ன பிறகுதான் எனக்குக்கூட ஞாபகம் வருகிறது. இந்த நாடக சபா டில்லிக்குப் போயிருக்கிறது,சார். மானேஜர், அவர் சம்சாரத்தையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக்கிறாராம். வரப் பத்துப் பதினைந்து நாட்களாகுமாம்” என்றார் 

“என்ன! டில்லிக்குப் போயிருக்கிறார்களா ! திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாட்கள் ஆகுமா?” என்று வியப்புடன் கேட்டான் ரமணி. 

“ஆமாம், தம்பி! டில்லியிலே இப்போது நடக் கிறதே தேசீய நாடகவிழா, அதிலே கலந்து கொள்ளத் தான் இந்த சபாவும் போயிருக்கிறது. போய் நாலைந்து நாளாகிறது.” 

டிரைவர் பேச்சைக் கேட்டதும், ரமணிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட் டான். உடனே சிற்சபேசன், “ரமணி, என்ன பண்ணு வது? சந்தர்ப்பம் சரியில்லை. நாம் எப்படியும் நாளை மறுநாள் கப்பல் ஏறியாக வேண்டுமே!” என்றார். மதுரநாயகத்தைப் பார்க்க முடியாமல் போனது ரமணிக்கு வருத்த மாகத்தான் இருந்தது. ஆனாலும், என்ன செய்வது? 


20. ரமணிக்கு ஆபத்து!

மறுநாள் காலையில் சிற்சபேசனின் குடும்பத்தாரு உன் பர்மாவுக்குக் கப்பல் ஏறி விட்டான் ரமணி. 

முதல் வகுப்பில் அவர்கள் பிரயாணம் செய்ததால் வேண்டிய வசதிகளெல்லாம் இருந்தன. டேபிள் டென் னிஸ், கேரம், செஸ், பில்லியார்ட்ஸ்-இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்கும் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. மற்றவர்கள் விளையாடும்போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் ரமணியும் மாலதியும். ரமணிக்குத் தெரிந்த விளையாட்டு கேரம் ஒன்றுதான். அதைத் தினமும் கொஞ்ச நேரம் மாலதி யுடன் விளையாடுவான். மாலை நேரங்களில் கப்பலின் மேல் தளத்துக்கு மாலதியும் ரமணியும் போவார்கள். அங்கு நின்றுகொண்டு சுற்றி நாலுபுறமும் பார்ப் பார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீராக இருக்கும். தண்ணீரின் நீல நிறத்தையும், அதில் குதித்து விளை யாடும் மீன்களையும் பார்ப்பதிலே அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம். இப்படியே நான்கு நாட்கள் ஓடிவிட்டன். ஐந்தாவது நாள் காலை கப்பல் ரங்கூன் துறைமுகத்தை அடைந்தது. பர்மாவின் தலை நகரம் ரங்கூன். அங்கு தெரிந்தவர்கள் வீட்டிலே இரண்டு நாட்கள் தங்கியிருந் தார்கள். மூன்றாம் நாள் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு மாந்தலே என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 

ரயிலை விட்டு இறங்கியதும் சிற்சபேசன் எல்லோ ரையும் அழைத்துக் கொண்டு அங்குள்ள தமது பங்க ளாவுக்குச் சென்றார். அங்கு சென்றதும் சிற்சபேசன் ரமணியிடம், “ரமணி, இன்று முதல் நீ என்னை எப்ப டித் தெரியுமா அழைக்க வேண்டும்? ‘அப்பா’ என்று தான் அழைக்க வேண்டும். காமாட்சிதான் இனி உன் அம்மா. மாலதி உன் தங்கை. யார் கேட்டாலும் அப் படியே சொல்லிவிடு. நாங்களும் அப்படித்தான் சொல் லுவோம். இனி உன்னை அனாதை யென்று யாரிடமும் சொல்ல வேண்டாம்!” என்றார். 

அவர் சொன்னதைக் கேட்டதும், ரமணிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. “அடடா! அனாதை யாகிய என்னிடம் இவர்கள் எவ்வளவு அன்பு வைத் திருக்கிறார்கள்! இவர்களுக்கு நம்மால் பதிலுக்கு என்ன செய்ய முடியும்? இவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும். நல்லவன்’ என்று பெயரெடுக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டான். 

மாந்தலே சென்ற சில நாட்களுக்குள், அந்த நக ரைப் பற்றி ரமணி பல விஷயங்களைத் தெரிந்து கொண் டான். மாந்தலே மிகவும் பழமையான ஒரு நகரம். பர்மாவின் தலைநகராக அது ஒரு காலத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டையும் அங்கே இருக்கிறது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியர் குண்டு போட்டதில் அங்கிருந்த பல வீடுகள் அழிந்து சாம்பலாகி விட்டன. இப்படிப்பட்ட விஷயங்களுடன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் ரமணிக்குச் சிற்சபேசன் கூறியிருந்தார். 

ஒருநாள் அவர் அவனுடன் பேசிக்கொண்டிருந்த போது, “ரமணி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்த ஊரில் இரண்டு இரண்டரை வருஷத்துக்கு மேல் இருந்திருக் கிறார்” என்றார். 

நமது நேதாஜியா? எந்தத் தெருவில் குடியிருந் தார்?” என்றான் ரமணி. 

“இங்கே நம்மைப் போல் குடியிருக்கவில்லை. சிறை யில் இருந்தார்!” 

”சிறையிலா! என்ன காரணம்?” 

“காரணமென்ன, இந்தியா சுதந்திரம் அடைவதற் குப் பாடுபட்டாரே, அதுதான் காரணம். ஆங்கிலேயர் அவரை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து சிறையில் வைத்திருந்தார்கள்.” 

“அடடே, அப்படியா!” 

“ஆமாம். நேதாஜி மட்டும்தான் இங்கு இருந்தார் என்று நினைத்துவிடாதே! சுதந்திரம் எமது பிறப் புரிமை’ என்று வீர முழக்கம் செய்தாரே திலகர், அவர் கூட இந்த ஊர் ஜெயிலில் ஆறு வருஷம் இருந்திருக் கிறார். இங்கே இருந்தபோதுதான் அவர் ‘கீதா ரகசியம்’ என்ற புத்தகத்தை எழுதினார்.” 

“திலகர்கூட இங்கே இருந்திருக்கிறாரா!” என்று கேட்டான். 

“ஆமாம், அவர்களெல்லாரும் நம் தேச விடுதலைக் காகத் தவம் கிடந்த இடம்தான் மாந்தலே!” 

சிற்சபேசன் கூறியதைக் கேட்டதும், ரமணி அத் தலைவர்களை நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டான். 

ரமணி அந்த நகரைப் பற்றித் தெரிந்துகொண்ட தோடு, அங்கு பேசப்படும் பர்மிய பாஷையையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்கும், மாலதிக்கும் பர்மிய பாஷையைக் கற்றுக் கொடுக்க ஓர் ஆசிரியரை ஏற்படுத்தினார் சிற்சபேசன். 

ரமணி ஆறு மாதங்களில் பர்மிய பாஷையைக் கூடுமானவரை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டான்; அழகாகப் பேசுவான்; தடங்கல் இல்லாமல் படிப்பான். மாலை நேரங்களில் மாலதியையும், அக்கம்பக்கத்தி லுள்ள குழந்தைகளையும் கூட்டி வைத்துக்கொண்டு, ரமணி பர்மிய பாஷையில் கதைகளெல்லாம் சொல்லு வான். நாடக சபாவிலே இருந்ததால், அங்கே பார்த்த நாடகங்களைக் கதைகளாகக் கூறுவான். 

நாள் ஆக ஆக, அந்த வட்டாரத்திலுள்ள இந்தி யக் குழந்தைகள், பர்மியக் குழந்தைகள் எல்லோருமே ரமணியின் கதையைக் கேட்கத் திரண்டு வந்துவிட்டார் கள். எத்தனை நாட்களுக்குத்தான் படித்த கதைகளை யும் கேட்ட கதைகளையுமே சொல்லிக் கொண்டிருப்பது? நாளடைவில் அவனே கற்பனைசெய்து பல நல்ல கதை களையெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டான். இதனால் ரமணியின் பெயர் அந்த வட்டாரத்திலே மிகவும் பிரபல மாகி விட்டது! 

சிற்சபேசனும் காமாட்சி அம்மாளும், இப்படிப் பட்ட ஒரு பையன் நமக்குக் கிடைத்ததே நம் அதிர்ஷ் டம்தான்’ என்று நினைத்து ஆனந்தமடைவார்கள். 

மாலதியோ, “ரமணி அண்ணாவின் கதையைக் கேட்க நம் வீடு தேடி எத்தனை பேர் வருகிறார்கள்!” என்று எண்ணிப் பெருமைப்படுவாள். ஆனால், ரமணி விரைவிலேயே இவர்களை விட்டுப் பிரியப் போகிறான் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அது ரமணிக்கே தெரியாதே! 

அன்று அக்டோபர் இரண்டாம் தேதி. உலகமெங் கும் காந்தி ஜயந்தி கொண்டாடும் முக்கியமான தினம். பர்மாவிலும் பல இடங்களில் விசேஷமாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்கள் வீட்டில் குழந்தை களுடன் சேர்ந்து குதூகலமாகக் கொண்டாட ரமணி விரும்பினான். 

முதல்நாளே காமாட்சி அம்மாளிடம், “அம்மா நாளைக்குச் சாயங்காலம் நான் குழந்தைகளுக்கெல்லாம் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த அநேக சம்பவங்களை எடுத்துச் சொல்லப் போகிறேன்” என்றான். 

அதற்குக் காமாட்சி அம்மாள், ஆமாம் அப்படியே செய். நானும் கதை கேட்க வரும் குழந்தைகளுக்கு நல்ல நல்ல பட்சணங்களெல்லாம் செய்து கொடுக்கி றேன்” என்று சொல்லியிருந்தாள். 

காந்தி ஜயந்தியன்று மாலை குழந்தைகள் கூட்டம் கூட்டமாகக் கதை கேட்க வந்தார்கள். சில சிறு குழந் தைகள் தங்கள் பெற்றோர்களையும் துணைக்காக அழைத்து வந்திருந்தார்கள். மாலதியும் ரமணியும் முத லில் பட்சணங்களை வந்திருந்தவர்களுக்குக் கொடுத் தார்கள். பிறகு ரமணி, காந்தி கதையைக் கூற ஆரம் பித்தான். குழந்தைகள் அந்தக் கதைகளைக் கேட்டுப் பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள். பெரியவர்கள், “அடடா, எவ்வளவு அற்புதமாக இந்தப் பையன் கதை சொல்லுகிறான்!” என்று ஆச்சரியப்பட் டார்கள். 

காந்தி கதை முடிந்ததும், கோமாளிக் குப்பன்’ என்ற கதையைக் கடைசியாக ரமணி சொன்னான். அது அவனாகவே கற்பனை செய்த கதை. மிகவும் வேடிக்கையாக இருக்கும். அதைக் கேட்டு எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். 

கதை முடிந்ததும் ஒரு பெரியவர், சிற்சபேசனைப் பார்த்து, “சார், உங்கள் பையன் அற்புதமாகக் கதை சொல்லுகிறான். ‘கோமாளிக் குப்பன்’ கதை அபாரம்! அதை எழுதி ஏதாவது ஒருபத்திரிகைக்கு அனுப்பினால், நிச்சயம் வெளியிடுவார்கள். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் படித்து ஆனந்தமடைவார்கள்” என்று கூறிவிட்டு,ரமணியிடம், “என்ன தம்பி, எழுதி அனுப்புகிறாயா?” என்று கேட்டார். 

“ஏதோ எழுதிப் பார்க்கிறேன்” என்று அடக்கமாகப் பதிலளித்தான் ரமணி. 

அன்று இரவு சாப்பாட்டிற்குப் பிறகு ரமணியுடன் காமாட்சி அம்மாள் பேசிக்கொண்டிருந்தாள். அப் போது, “ரமணி, நீ சொல்லுகிற கதை ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறதென்று எல்லோருமே சொல்லுகி றார்கள்” என்றாள் காமாட்சி அம்மாள். அதற்கு ரமணி, “என் கதையைக் காட்டிலும் நீங்கள் செய்து கொடுத்த பட்சணங்கள்தான் பிரமாதமாம்! எல்லோருமே அப்ப டித்தான் சொல்லுகிறார்கள்” என்றான். 

“இல்லை, இல்லை. பட்சணத்தைக்காட்டிலும் கதை தான் சுவையாயிருந்திருக்கும்” என்றாள் காமாட்சி அம்மாள். 

“இருக்கவே இருக்காது. பட்சணம்தான் மிகவும் சுவையா யிருந்திருக்கும்” என்றான் ரமணி. 

இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று காமாட்சி அம்மாளின் முகத்தில் ஏதோ மாறுதல் தெரிந்தது. அப்படியே ‘தொப்’ பென்று தரையில் சாய்ந்துவிட்டாள். முகம் வெளுத்து விட்டது; கண்கள் மூடிக்கொண்டன. பற்கள் கிட்டித்து விட்டன! இதைப் பக்கத்திலிருந்த ரமணி பார்த்ததும் திடுக்கிட்டான்; “ஆ, அம்மா!” என்று கதறினான். சத்தத்தைக் கேட்டு மாடியிலிருந்த சிற்ச பேசனும்,மாலதியும் கீழே ஓடி வந்தார்கள். 

“ஐயோ! இது என்ன! அம்மா இப்படி விழுந்து விட்டார்களே!” என்று ரமணி கையைக் கசக்கினான். அவன் கண்களும் கலங்கின. 

மாலதி, அம்மா பக்கத்திலே ஓடிவந்து பார்த்ததும், “அம்மா! அம்மா!” என்று கலக்கத்தோடு கூவினாள். உடனே சிற்சபேசன், “ரமணி, மாலதி, கொஞ்சம் தள்ளி யிருங்கள். காற்று நன்றாக வரட்டும்” என்றார். 

உடனே ரமணி விலகி நின்றுகொண்டு, “நான் ஓடிப்போய்டாக்டரை அழைத்துக்கொண்டுவரட்டுமா?” என்றான். 

“வேண்டாம். இரண்டொரு நிமிஷத்துக்கு இப் படித்தான் இருக்கும். அப்புறம், தானாக எழுந்துவிடு வாள். நீ விசிறி சுவிட்’சைப் போட்டுவிட்டு, செம்பிலே தண்ணீர் கொண்டுவா” என்றார். 

உடனே ரமணி சுவிட்சைப் போட்டுவிட்டு, ஒரு நொடியில் செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தான். தண்ணீரைக் காமாட்சி அம்மாள் முகத் திலே தெளித்தார் சிற்சபேசன். ஒரு நிமிஷம் ஆகி, இரண்டு நிமிஷங்களும் ஆகிவிட்டன. அதற்கு மேலும் ஒரு நிமிஷம் ஆகிவிட்டது. ஆனாலும், காமாட்சி யம்மாள் எழுந்திருக்கவில்லை. அதுவரை கவலைப் படாமல் இருந்த சிற்சபேசன் முகத்திலும் கவலை ஏற்பட்டது. ரமணிக்குத் திகில் மிகவும் அதிகமாகி விட்டது. 

காமாட்சி அம்மாளுக்கு முன்பு இரண்டு மூன்று தடவைகள் பலவீனத்தால் இப்படி மயக்கம் வந்த துண்டு. இது ரமணிக்குத் தெரியாது. 

சற்று நேரத்தில் காமாட்சி அம்மாள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். உடனே சிற்சபேசனின் முகம் மலர்ந்துவிட்ட து, “அம்மா !” என்று மாலதி ஆசையா கக் கூப்பிட்டாள். சிறிது நேரத்தில் காமாட்சி அம்மாள் எழுந்து உட்கார்ந்தாள். மறுநிமிஷம்,ரமணி எங்கே?” என்று கேட்டாள். 

உடனே மாலதி, “ரமணி அண்ணா! ரமணி அண்ணா! அம்மா எழுந்துவிட்டாள்!” என்று ஆனந்த மாகக் கூறிக்கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள். ரமணி அங்கே இல்லை! வாசல் பக்கத்திலும் காணோம் மாடியிலும் அவன் இல்லை! 

ரமணியைக் காணாத மாலதி, “ஐயோ! ரமணி அண்ணாவைக் காணோமே !” என்றாள். உடனே சிற் சபேசனும், “ரமணி! ரமணி!” என்று பலமாகக் கூவினார். ரமணி வரவில்லை. 

“எங்கே போயிருப்பான்? சொல்லாமல் போக மாட்டானே! ஒருவேளை டாக்டர் ஆனந்தராவ் வீட்டுக் குப் போயிருப்பானோ!” என்று நினைத்து வேலைக் காரர்களை டாக்டர் வீட்டுக்கு அனுப்பினார். அங்கேயும் ரமணி இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடிப் பார்க்கச் சொன்னார். அந்த வட்டாரம் முழுதும் அலசிப் பார்த்தும் ரமணியைக் காணோம் ! எல்லோருக்கும் ஒரே திகிலாயிருந்தது!

– தொடரும்

– பர்மா ரமணி (நாவல்),1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *