பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 2,885 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

61 -70 | 71-80 | 81-84

71. “பைத்தியக்காரன்”

கடம்பூரிலிருந்து தஞ்சைப் பிரயாணத்தின் முதற்பகுதியில் வந்தியதேவன் பெரும்பாலும் நினைவிழந்த நிலையில் இருந்தான். கட்டை வண்டி ஒன்றில் அவனைக் கட்டிப் போட்டிருந்தார்கள். பிரயாணத்தின் போது சிறிது நினைவு தோன்றிய போதெல்லாம் கண்களின் எரிச்சலும், உடம்பின் நோவும் அவனுக்கு அளவில்லாத வேதனையை உண்டாக்கின. அரை நினைவாக இருந்தபோது ஏதேதோ பயங்கரமான தோற்றங்கள் அவன் முன்னே தோன்றி அவனை வாட்டி எடுத்தன.

இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களுக்கு பிறகு திடீரென்று ஏழு கடலும் கொந்தளித்துப் பொங்குவது போன்ற சத்தம் கேட்கிறது. அவன் மேலே ஒரு பெரிய அலை வந்து மோதி அவனை மூழ்க அடிக்கிறது. இப்போது வந்தியத்தேவன் பூரணப் பிரக்ஞை வந்தவனாகக் கண் விழித்துப் பார்க்கிறான். எதிரே சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை வாசல் தெரிகிறது. அவன் கட்டுண்டு கிடந்த கட்டை வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் நாலா புறங்களிலும் ஜனசமுத்திரமாகக் காட்சி அளிப்பதைக் காண்கிறான். அத்தனை பேரும் சேர்ந்து ஓலமிடும் ஓசைதான் ஏழு கடலும் பொங்குவது போன்ற சத்தமாகத் தனக்குக் கேட்டது என்று அறிகிறான். ஆதித்த கரிகாலரின் கடைசி ஊர்வலம் தஞ்சைக் கோட்டையை நெருங்கி விட்டபடியால் தான் அவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொள்கிறான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அவனும், சம்புவரையரும் மட்டும் காவலர்கள் சிலர் புடைசூழத் தஞ்சைக் கோட்டைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகா! அந்த மகா வீரரின் இறுதிக் கிரியைகள் நடக்கும் போது, அவருடைய அந்தரங்கத்துக்குரிய தோழனாக இருந்த தனக்கு அருகில் இருக்கவும் இயலாமற் போயிற்று. அவனுடைய துரதிர்ஷ்டம் இது மட்டுமா? கடைசி வரையில் அவருடைய உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி எடுத்துத் தோல்வியடைந்ததன் பேரில் அவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்! இப்போது கொலைக்காரர்களையும், சதிகாரர்களையும் அடைக்கும் பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள்.

தெய்வமே! முதன்முதலில் தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தபோது அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உற்சாகம் என்ன? என்னவெல்லாம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தான்? அப்போது சின்னப் பழுவேட்டரையர் தன்னை ஒற்றன் என்று சந்தேகித்துப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவாரோ என்று அவன் அஞ்சியதுண்டு. அது இப்போது வேறொரு விதத்தில் உண்மையாகி விட்டதே! வானவெளியில் உல்லாசமாகத் திரிந்து பறக்கும் பறவையைப் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னை இந்த இருளடைந்த அறையில் பூட்டி விட்டார்களே! இதில் தன்னால் எத்தனை காலம் இருக்க முடியும்? முடியாது! முடியாது! உயிரை விடுவதற்கு ஏதேனும் விரைவில் வழி தேட வேண்டியதுதான்… இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கமடைந்து செயலற்று உட்கார்ந்திருந்தான் வந்தியத்தேவன்.

அந்தச் சமயத்தில் பக்கத்து அறையில் யாரோ தொண்டையைக் கனைப்பது கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் கர்ணகடூரமான குரலில்,

“பொன்னார் மேனியனே….!” என்ற தேவாரப் பாடலும் கேட்டது.

சிவ, சிவா! காதால் கேட்க முடியவில்லை. பாதாளச் சிறையில் அடைப்பட்டிருப்பது போதாது என்ற இந்த அபூர்வமான சங்கீதத்தைக் கேட்கும் தண்டனை வேறேயா?

“யார், அப்பா அங்கே?” என்றான் வந்தியத்தேவன்.

“நான்தான் பைத்தியக்காரன்!” என்று பதில் வந்தது.

“உன்னை எதற்காகப் பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறாய்?”

“இங்கே வந்தவர்கள் எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுவதினாலேதான்.”

“ஏன் அப்படி அவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள்?”

“ஈழத்தில் பாண்டிய வம்சத்து மணி மகுடமும், தேவேந்திரன் அளித்த இரத்தின ஹாரமும் இருக்குமிடம் எனக்குத் தெரியும். என்னை விடுதலை செய்தால் அவை இருக்குமிடம் சொல்வேன் என்று இங்கே வருகிறவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு. அதற்காக என்னைப் பைத்தியம் என்கிறார்கள்!”

“உன்னைப் பைத்தியம் என்கிறவர்கள் தான் உண்மைப் பைத்தியக்காரர்கள்.”

“நீ என் வார்த்தையை நம்புகிறாயா?”

“பரிபூரணமாக நம்புகிறேன்; ஆனால் நான் நம்பி என்ன பயன்? உனக்கு என்னால் ஒரு உதவியும் செய்ய முடியாதே?”

“அப்படி சொல்லாதே! நீ இப்போது இருக்கும் அறையில் அடைக்கப்படுகிறவர்கள் எல்லாரும் சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படுவது வழக்கமாயிருந்து வருகிறது” என்று சொன்னான்.

வந்தியத்தேவன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டுவிட்டு, “அந்த மாதிரி என்னை விடுதலை செய்ய வரமாட்டார்கள்!” என்றான்.

“அப்படியானால் நானே உன்னை விடுதலை செய்கிறேன்” என்றான் அடுத்த அறையில் இருந்தவன்.

“இப்போதுதான் நீ பைத்தியக்காரன் போலப் பேசுகிறாய்!” என்றான் வந்தியத்தேவன்.

“இல்லை, என் வார்த்தையை நம்பு?”

“வேறு வழியில்லை, உன்னை நம்பித்தான் தீரவேண்டும்.”

“அப்படியானால், இன்றிரவு காவலர்கள் வந்து நமக்கு உணவு அளித்துவிட்டுப் போகும் வரையில் பொறுமையுடன் இரு!” என்றான் பைத்தியக்காரன் என்று பெயர் வாங்கியவன்.

அன்றிரவு கடைசிக் காவலன் வந்துவிட்டுப் போனதும் வந்தியத்தேவன் அடுத்த அறையிலிருந்த பைத்தியக்காரன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தான். அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் எலி பிறாண்டுவது போல் ஏதோ சத்தம் கேட்டது. இரவெல்லாம் அந்த இருளடர்ந்த அறையில் எலிகளுடன் காலங்கழிக்க வேண்டுமோ என்று கவலைப்பட்டவனாக, “பைத்தியக்காரா! தூங்கிப் போய்விட்டாயா?” என்று கேட்டான்.

அதற்கு பதில் ஒன்றும் வரவில்லை. எலி பிறாண்டும் சத்தம் மட்டும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் சுவரிலிருந்து சில கற்கள் பெயர்ந்து விழுந்து துவாரம் ஒன்று உண்டாயிற்று. அதன் வழியாகப் பைத்தியக்காரன் குரல், “அப்பனே தூங்கிவிட்டாயா?” என்று கேட்டது.

“இல்லை; தூங்கவில்லை உனக்காகத்தான் காத்திருக்கிறேன் இது என்ன வேலை?” என்றான் வந்தியத்தேவன்.

“இது ஆறு மாதத்து வேலை” என்றான் பைத்தியக்காரன். சற்று நேரத்துக்கெல்லாம் துவாரத்தை இன்னும் பெரிதாகச் செய்து கொண்டு வந்தியத்தேவனுடைய அறைக்குள்ளே அவன் புகுந்தான்.

வந்தியத்தேவன் அவனுடைய கரங்களைப் பிடித்து இறக்கிவிட்ட பிறகு, “இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் சுவரில் துவாரம் செய்தாயே? இதில் என்ன பயன்? வெளிச் சுவரில் துவாரம் போட்டாலும் பயன் உண்டு!” என்றான்.

“இங்கிருந்து வெளிச் சுவர் என்பதே கிடையாது. புலிக் கூண்டு அறையின் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த அறை சில சமயம் காலியாக இருப்பதுண்டு அப்போது பூட்டப்படாமலுமிருக்கும். ஆகையால் என் அறையிலிருந்து தப்பிச் செல்வதைவிட இங்கிருந்து தப்புவது சுலபம். மேலும் தப்பிச் செல்ல சரியான சந்தர்ப்பம் இதுதான்! காவற்காரர்கள் மாறியிருக்கிறார்கள். புதிய காவற்காரர்களாதலால் திடீரென்று பாய்ந்து சென்று தப்பித்துக் கொள்ளலாம் என்று என் எண்ணம். எப்படியிருந்தாலும், இங்கேயே கிடந்து சாவதைக் காட்டிலும் விடுதலைக்கு ஒரு முயற்சி செய்து பார்ப்பது நல்லதல்லவா?”

“உண்மைதான்!”

“ஒருவனாக முயற்சி செய்வதைக் காட்டிலும், இரண்டு பேராக முயற்சி செய்வது எளிது. நீ என்னைப் போல் இல்லை; புதிதாக வந்தவன், நல்ல திடகாத்திரனாயிருக்கிறாய். இரண்டு காவலர்களை நாம் இருவரும் கட்டிப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து சாவிகளைப் பிடுங்கிக் கொண்டு வெளியேறலாம் அல்லவா?”

“உன் பெயர் என்ன?”

“பைத்தியக்காரன்!”

“உண்மையான பெயர்! உன் பெற்றோர்கள் வைத்த பெயர்?”

“ஆ அதுவா? பெற்றோர்கள் எனக்குக் ‘கரிய திருமால்’ என்று பெயரிட்டனர். சுற்றத்தாரும் ஊராரும் ‘கருத்திருமன்’ என்று அழைத்தார்கள்!”

“இனி இருட்டிய பிறகுதான் நம் பிரயாணத்தைத் தொடங்க வேண்டும். அதுவரையில் உன்னுடைய கதையைச் சொல்லு கேட்கலாம்!”

“நான் உண்மையைச் சொல்லாமல், ஏதாவது கற்பனை செய்து கூறினால் என்ன பண்ணுவாய்?”

“கதை – கற்பனை எதுவாயிருந்தாலும் சொல்லு! கொஞ்ச நேரம் பொழுது போக வேண்டும் அல்லவா?”

கருத்திருமன் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அது அபூர்வமான பல சம்பவங்கள் நிறைந்த கற்பனைக் கதை போலவே இருந்தது.


72. கருத்திருமன் கதை

கருத்திருமன் கோடிக்கரைக்குச் சிறிது வடக்கே கடற்கரை ஓரத்தில் உள்ள தோப்புத்துறை என்னும் ஊரினன். அங்கிருந்து ஈழத் தீவுக்குப் படகு செலுத்திப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவன் ஒரு முறை ஈழத்திலிருந்து தோப்புத்துறைக்கு வந்துகொண்டிருந்த போது புயல் அடித்துக் கடல் கொந்தளித்தது. படகு கவிழாமல் கரையில் கொண்டு வருவதற்கு மிகவும் பிரயாசைப்பட்டான். கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் அருகில் வந்து அவன் கரையை நெருங்கிய போது ஒரு பெண் அக்கொந்தளித்த கடலில் மிதப்பதைக் கண்டான். அவள் பேரில் இரக்கம் கொண்டு படகில் ஏற்றிப் போட்டுக் கொண்டான். அவள் அப்பொழுது உணர்வற்ற நிலையில் இருந்தாள். உயிர் இருக்கிறதா, இல்லையா என்று கூடக் கண்டுபிடிக்க இயலவில்லை. அங்கேயே படகைக் கரையேற்றப் பார்த்தும் முடியவில்லை. காற்று அடித்த திசையில் படகைச் செலுத்திக் கொண்டு போய்க் கடைசியில் திருமறைக்காடு என்னும் ஊர் அருகில் கரையை அடைந்தான். உணர்வற்ற அந்தப் பெண்ணைக் கரையில் தூக்கிக் கொண்டு வந்து போட்டுக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தபோது குதிரைகள் மேலேறிச் சில பெரிய மனிதர்கள் அப்பக்கம் வந்தார்கள். ஆனால் அவள் பேசவும் இல்லை. மற்றவர்கள் பேசுவது அவள் காதில் விழுந்ததாகவும் தெரியவில்லை. “இவள் பிறவி ஊமைச் செவிடு” என்று அவர்களில் ஒருவர் கூறினார். அவர்களின் தலைவராகத் தோன்றியவர் கருத்திருமனைத் தனியே அழைத்து ஒரு விந்தையான செய்தியைக் கூறினார். புயல் அடங்கியதும் அந்தப் பெண்ணை ஈழ நாட்டுக்கு அழைத்துச் சென்று அந்த நாட்டிலோ அல்லது அருகில் உள்ள தீவு ஒன்றிலோ விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்றும், அதற்காகப் பெரும் பணம் தருவதாகவும் அவர் சொன்னார். அதன்படியே கருத்திருமன் ஒப்புக்கொண்டு பணமும் பெற்றுக் கொண்டான். கடலில் கொந்தளிப்பு அடங்கியதும் அவளைப் படகில் ஏற்றி அழைத்துச் சென்றான். கடல் நடுவில் கட்டை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒருவன் மிதப்பதைக் கண்டான். மிகவும் களைத்துப் போயிருந்த அவனையும் படகில் ஏற்றிக் கொண்டான். முதலில் அந்தப் பெண் புதிய மனிதனைக் கண்டு மிரண்டாள். பிறகு, அவனைக் கவனியாமலிருந்தாள். இருவரையும் அழைத்துக் கொண்டுபோய் அவன் ஈழ நாட்டுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் இறக்கிவிட்டான்.

அந்தத் தீவில் ஒரு பெரியவர் இருந்தார்; அவர் இந்தப் பெண்ணைத் தமது மகள் என்று கூறினார். முன்னமே அவள் ஊமை என்றும், இப்போது தம்மைக்கூட அவள் அறிந்து கொள்ளவில்லையென்றும் கூறினார். பிறகு, அவளைக் கடலிலிருந்து காப்பாற்றியதைக் கருத்திருமன் சொன்னான்.

நடுக்கடலில் படகில் ஏறிய மனிதர் கருத்திருமனிடம் ஓர் ஓலை கொடுத்து அதை இலங்கை அரசனிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அனுப்பினார். அதிலிருந்து அவர் ரொம்பப் பெரிய மனிதராயிருக்க வேண்டுமென்று கருத்திருமன் தீர்மானித்துக் கொண்டான். இலங்கை மன்னனிடம் ஓலையைக் கொடுத்த பிறகு அவனுடைய பேச்சிலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர் பாண்டிய நாட்டு அரசர் என்பதைத் தெரிந்து கொண்டான். பாண்டிய மன்னரை அழைத்து வருவதற்கு இலங்கை அரசர் பரிவாரங்களை அனுப்பினார். கருத்திருமன் மிக்க களைத்திருந்தபடியால் அவர்களுடன் போகவில்லை. பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள் சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள் தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர் அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில் அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன் வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம் முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

பிறகு, பாண்டிய அரசர் கருத்திருமனிடம் அவன் எடுத்துப் போகக் கூடிய அளவு பொற்காசுகளைக் கொடுத்து, அந்த ஊமைப் பெண்ணைப் பத்திரமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பப் பாண்டிய நாட்டில் வந்து தம்முடன் சேர்ந்துகொள்ளும்படி அனுப்பி வைத்தார்.

கருத்திருமன் பூதத்தீவுக்குச் சென்றபோது அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அவளுடைய தகப்பனையும் காணவில்லை. இருவரையும் தேடிக் கொண்டு கோடிக்கரைக்குப் போனான். அங்கே அந்த ஊமைப் பெண்ணைக் கண்டான். ஆனால் அவள் அவனைத் தெரிந்துகொள்ளவில்லை. அவளுடைய வீட்டாரிடமிருந்து சில விவரங்களைத் தெரிந்து கொண்டான். அவளுடைய தகப்பனார் உடல் நலிவுற்றபடியால் அவளை அழைத்துக் கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டு உயிர் நீத்தார். கலங்கரை விளக்கின் காவலன் அவளுடைய சகோதரர் என்று தெரிந்தது. முதலில் அவளுக்குச் சகோதரன் – சகோதரி யாரையும் நினைவிருக்கவில்லை. மறுபடியும் ஒருதடவை கால் தவறிக் கடலில் விழுந்து காப்பாற்றப்பட்ட பிறகு அவர்களையெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது. அவள் கர்ப்பவதியாயிருக்கிறாள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். அதை அவளும் உணர்ந்து பெரும் பீதியில் ஆழ்ந்தாள். கோடிக்கரைக் குழகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று அங்கே கைங்கரியம் செய்து கொண்டிருந்தாள். கருத்திருமன் எவ்வளவுதான் முயன்றும் அவனை அவள் இப்போது கண்டு கொள்ளவில்லை.

கோடிக்கரையில் இருந்தபோது, அந்த ஊமைப் பெண்ணின் தங்கையை அவன் சந்தித்தான். அவளும் ஊமை என்று அறிந்து அவள் பேரில் பரிதாபம் கொண்டான். அவளை மணந்து கொண்டு வாழவும் எண்ணினான். அதற்கு முன்னால் பாண்டிய மன்னரிடம் போய்த் தகவல் தெரிவித்துவிட்டு வர விரும்பினான். இச்சமயத்தில் சோழ சக்கரவர்த்தி கண்டராதித்தரின் பட்டத்து அரசியும், சிவ பக்தியில் சிறந்தவருமான செம்பியன் மாதேவி கோடிக்கரைக் குழகர் கோவிலுக்குச் சுவாமி தரிசனத்துக்கு வந்தார். அங்கே அந்த ஊமைப் பெண் மந்தாகினியைக் கண்டு அவளைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவளுடன் அவள் தங்கை வாணியும் போய்விட்டாள்.

கருத்திருமன் பாண்டிய நாடு சென்றான். அங்கே பாண்டிய மன்னர் போர்க்களம் சென்றிருப்பதாக அறிந்தான். போர்க்களத்தில் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்தபோது, அவர் அவனை இலங்கைக்கு மீண்டும் போய் இலங்கை அரசனிடம் ஓலை கொடுத்து விட்டு வரும்படி கூறினார். திரும்பி வரும்போது மறுபடியும் அந்த ஊமைப் பெண்ணை அழைத்து வருவதற்கு ஒரு முயற்சி செய்யும்படியும் தெரிவித்தார்.

கருத்திருமன் இலங்கையிலிருந்து திரும்பிப் பழையாறைக்குச் சென்றான். வாணியின் நினைவு அவன் மனத்தை விட்டு அகலவில்லை. முக்கியமாக அவளைச் சந்திக்கும் ஆசையினால் அவன் பழையாறைக்குப் போனான். ஆனால் அங்கே அவளைக் கண்டபோது அவன் திடுக்கிட்டுத் திகைத்துப் பிரமித்துப் பயங்கரமடையும்படி நேர்ந்தது. அருணோதய நேரத்தில் அவன் அரசலாற்றங்கரை வழியாகப் பழையாறையை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஆற்றங்கரை ஓரத்தில் பெண் ஒருத்தி குனிந்து குழி தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். அது கூட அவனுக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. அவளுக்குப் பக்கத்தில் துணி மூட்டை ஒன்று கிடந்தது. அதற்குள்ளேயிருந்து ஒரு மிக மெல்லிய குரல், சின்னஞ் சிறு குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது.

எந்தச் சண்டாளப் பாதகி உயிரோடு குழந்தையைப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்கிறாள் என்ற ஆத்திர அருவருப்புடன் அவன் அருகில் நெருங்கியபோது, குழி தோண்டிய பெண் நிமிர்ந்தாள். அவள்தான் வாணி என்று கருத்திருமன் அறிந்து கொண்டான்.

“தம்பி எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்? நீயே ஊகித்துக் கொள்!” என்றான் கரிய திருமால்.

“அதை ஊகித்துக் கொள்கிறேன். அப்புறம் கதையைச் சொல்!” என்றான் வந்தியத்தேவன்.

“அப்புறம் நடந்ததைச் சொல்ல இயலாது. அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் காதிலேதான் சொல்லலாம்! நான் மட்டும் அப்போது பழையாறைக்குப் போயிராவிட்டால் எனக்குப் பின்னால் நேர்ந்த கஷ்டங்கள் ஒன்றும் நேராமற் போயிருக்கும்!” என்றான் கருத்திருமன்.

“அப்படியானால், கிளம்பு! நேரே அரச குலத்தைச் சேர்ந்தவர்களிடம் போய்ச் சொல்லலாம்!” என்று கூறி நகைத்துக் கொண்டே வந்தியத்தேவன் அங்கிருந்து எழுந்தான்.


73. நிச்சயதார்த்தம்

நந்தவனத்து நடுவில் இருந்த குடிலில் சேந்தன் அமுதன் நோய்ப்பட்டுப் படுத்திருந்தான். பூங்குழலி அவனுக்கு அன்புடன் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். வாணி அம்மை பாகம் செய்து கொடுத்த கஞ்சியைக் கொண்டு வந்து அவனை அருந்தும்படிச் செய்தாள்.

சற்று முன்னாலேதான் வைத்தியர் வந்து சேந்தன் அமுதனைப் பார்த்துவிட்டுப் போயிருந்தார். போகும்போது அவரிடம் பூங்குழலி தனியாக விசாரித்தாள்.

“அமுதனுக்கு எப்படியிருக்கிறது, பிழைத்து எழுந்து விடுவானா?” என்று கேட்டாள்.

“அவன் மனத்தில் ஏதோ கவலை வைத்துக் கொண்டிருக்கிறான். அதனாலேதான் உடம்பு குணமடைவது தடைப்படுகிறது!” என்றார் வைத்தியர்.

இதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு பூங்குழலி, “அமுதா, உன் மனத்தில் என்ன கவலை? ஏன் உற்சாகமே இல்லாமலிருக்கிறாய்? உன் மனக் கவலையினால்தான் உன் உடம்பு குணப்படுவது தாமதமாகிறது என்று வைத்தியர் சொல்கிறாரே?” என்றாள்.

“என்னுடைய கவலையெல்லாம் என் உடம்பு சீக்கிரமாகக் குணமாகிவிடப் போகிறதே என்றுதான். என் உடம்பு குணமாகிவிட்டால் நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாய் அல்லவா? அதை எண்ணித்தான் கவலைப்படுகிறேன், பூங்குழலி!”

பூங்குழலியின் முகம் காலைப் பனித்துளிகளுடன் ஒளிர்ந்த மலர்ந்த செந்தாமரை போல் விளங்கியது. அவள் இதழ்களில் புன்னகை விரிந்தது. கண்களில் கண்ணீர் துளித்தது.

“அமுதா! நான் தீர்மானம் செய்து விட்டேன். உன்னுடைய அன்பு கோடி மடங்கு எனக்குப் பெரிது. உன்னையே நான் மணந்து கொள்வேன்…”

சேந்தன் அமுதன் பரவச நிலையை அடைந்தான். “பூங்குழலி! பூங்குழலி! எனக்கு இப்போது சுரம் அடிக்கவில்லையே? நான் கனவு காணவில்லையே? இப்போது நீ சொன்ன வார்த்தைகள் என் காதில் தவறாக விழவில்லையே?” என்றான்.

“அமுதா! உனக்கு உடம்பு சரியானதும் இருவரும் கோடிக்கரை செல்வோம். கோடிக்கரைக் குழகருக்குப் புஷ்பத் திருப்பணி செய்வோம். சில சமயம் படகில் ஏறிக் கடலில் செல்வோம். அமுதா! இதற்கெல்லாம் உனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லையே?”

வாசற் கதவை யாரோ இலேசாகத் தட்டும் சத்தம் கேட்டது. “அம்மா கதவைத் தட்டுகிறாள் திறந்து விடு! அம்மாவிடம் இந்தச் சந்தோஷ சமாசாரத்தைச் சொல்வோம்” என்றான் அமுதன்.

பூங்குழலி போய்க் கதவைத் திறந்தாள், வாசலில் கண்ட காட்சி அவளைச் சிறிது வியப்புறச் செய்தது.

அவள் எதிர்பார்த்தபடி கதவைத் தட்டியவள் வாணி அம்மை அல்ல. அரண்மனைச் சேவகன் ஒருவன் கதவைத் தட்டியிருக்க வேண்டுமென்று தோன்றியது. கதவு திறந்ததும், சேவகன் ஒதுங்கி நின்றான்.

அப்பால், செம்பியன் மாதேவியும், இளவரசர் மதுராந்தகரும் நின்றார்கள். இன்னும் சிறிது தூரத்துக்கு அப்பால், பல்லக்குகள் இரண்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தன. சிவிகை தூக்கிகளும், காவலர்களும் மரத்தடியில் நின்றார்கள். அவர்களில் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் இவ்வளவு காட்சியையும் கண்ட பூங்குழலி செம்பியன் மாதேவியின் முன்னால் தலை வணங்கிக் கும்பிட்டு, “தாயே வரவேண்டும்!” என்றாள்.

“உன் அத்தை மகனுக்கு உடம்பு எப்படியிருக்கிறது. பூங்குழலி! வாணி அம்மை எங்கே?” என்று கேட்டுக் கொண்டே மழவரையன் மாமகளாகிய முதிய எம்பெருமாட்டி அந்தக் குடிசைக்குள்ளே பிரவேசித்தாள்.

மதுராந்தகன் வெளியிலேயே நின்றான். ஆனால் அவனுடைய குரோதம் ததும்பிய கண்கள் ஆர்வத்துடன் குடிசைக்கு உள்ளே நோக்கின. வருகிறவர் சிவபக்த சிரோமணியும், தங்களுக்கு மானியம் அளித்துக் காப்பாற்றி வருகிறவருமான செம்பியன் மாதேவி என்று அறிந்ததும் சேந்தன் அமுதனும் எழுந்தான்.

“தாயே! நல்ல சமயத்தில் வந்தீர்கள். முதன் முதல் சந்தோஷமான செய்தியைத் தங்களிடம் தெரிவித்து ஆசிபெறும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியிருக்கின்றது. சிவபெருமானுடைய திருவருளாலேயே இது நடந்திருக்க வேண்டும். இன்னும் என் அன்னையிடம் கூடச் சொல்லவில்லை. அன்னையே! இத்தனை காலம் கழித்துப் பூங்குழலி மனமிரங்கி என்னை மணம் புரிந்து கொள்ள இசைந்திருக்கிறாள் . தாங்கள்தான் கூட இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு கோடிக்கரைக் குழகர் கோயிலுக்குப் போய் அங்கே பூமாலைக் கைங்கரியம் செய்ய எண்ணியிருக்கிறோம்!” என்றான்.

செம்பியன் மாதேவியின் இதழ்களில் மகிழ்ச்சிப் புன்னகை தோன்றியது. ஆனால் கண்களிலோ கண்ணீர் ததும்பி நின்றது.

அமுதனும் பூங்குழலியும் அவர் முன்னால் வணங்கிய போது, மாதரசி தழுதழுத்த குரலில், “குழந்தைகளே! இறைவன் அருளால் உங்கள் இல்வாழ்க்கை இன்பமயமாக இருக்கட்டும்!” என்று ஆசி கூறினார்.

அந்தச் சமயம் வாணி அம்மை அங்கே வந்து சேர்ந்தாள். அவளிடம் செம்பியன் மாதேவி சமிக்ஞையினால் அமுதனுடைய உடம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வந்ததாகக் கூறினார். வந்த இடத்தில் அவர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். அச்சமயம் வாணி அம்மையின் முகபாவமும் கலக்கத்தையும், களிப்பையும் ஒருங்கே காட்டுவதாயிருந்தது.

மேலும் சிறிது நேரம் சேந்தன் அமுதனுடனும், பூங்குழலியுடனும் பேசிக்கொண்டிருந்த பிறகு செம்பியன் மாதேவி வெளிக் கிளம்பினார்.

அவரும், மதுராந்தகனும் பல்லக்குகள் இரண்டும் இறக்கி வைத்திருந்த இடம் நோக்கிச் சென்றார்கள்.

வழியில் ஒரு மரத்தடியில் முதிய பிராட்டியார் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவரும் இல்லை என்பதைக் கண்ட பிறகு, மதுராந்தகனை நோக்கி, “பார்த்தாயா, மதுராந்தகா! என் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் அதோ அக்குடிசையில் வாழும் சேந்தன் அமுதன். அவனுக்கு ஐந்து வயதானபோதே எனக்கு இச்செய்தி தெரிந்துவிட்டது. அவன் எட்டு நாள் குழந்தையாயிருந்தபோது மூச்சுப் பேச்சற்றுக் கிடந்ததைப் பார்த்து இறந்து விட்டதாக எண்ணினேன். பிள்ளைப் பாசத்தினால் உன்னை என் குழந்தையாக ஏற்றுக் கொண்டு இவனைக் கொண்டுபோய்ப் புதைத்து விடச் சொன்னேன். இவனை எடுத்துப் போன வாணி வெகுகாலம் திரும்பி வரவே இல்லை. ஐந்து ஆண்டு கழிந்த பிறகு இவளையும், இப்பிள்ளையையும் பார்த்ததும் உண்மை தெரிந்து கொண்டேன். ஆயினும், உன்னை நான் கைவிடவில்லை. அவன் என் வயிற்றில் பிறந்த மகன் என்பதற்காக அவனை அரண்மனைக்கு வரவழைத்துக் கொள்ளவுமில்லை. எல்லாம் இறைவன் திருவிளையாடல் என்று எண்ணி உன்னை என் வயிற்றில் பிறந்த மகனைக் காட்டிலும் பதின் மடங்கு அருமையாக வளர்த்து வந்தேன். அதற்காகவெல்லாம் எனக்கு இப்போது இந்த வரத்தை நீ கொடு! சோழ சிங்காதனம் வேண்டாம் என்று சொல்லிவிடு! நீ சிங்காதனம் ஏறுவதற்குக்கூட நான் ஆட்சேபிக்க மாட்டேன். ஆனால் உன் வம்சத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஊமையாக இருந்துவிட்டால் என்ன செய்கிறது என்றுதான் அஞ்சுகிறேன்!” என்றார்.

இவ்விதம் செம்பியன் மாதேவி கூறி வந்தபோது மதுராந்தகனுடைய முகம் பேயடித்த முகமாகக் காணப்பட்டது. அவன் மணம் செய்துகொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரின் மகளுக்கு ஒரு பெண் மகவு பிறந்திருந்தது. அதற்கு இரண்டு பிராயம் ஆகியும் இன்னும் பேசத் தொடங்கவில்லை என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது.

பிரமை பிடித்து மரத்தோடு மரமாக நின்ற மதுராந்தகனைப் பார்த்து, அவனை வளர்த்த அன்னையாகிய மாதரசி, “குழந்தாய்! ஏன் இப்படியே நின்று விட்டாய்? வா போகலாம்!” என்றாள்.

மதுராந்தகன் தட்டுத்தடுமாறி, “தாயே! யோசிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. தாங்கள் போங்கள்! என்னுடைய இடத்தில் அரண்மனையில் வளர்ந்திருக்க வேண்டிய தங்கள் குமாரனிடம் சிறிது பேசிவிட்டுப் பிறகு வருகிறேன்!” என்றான்.

“அப்படியே செய்! வரும்போது பல்லக்கின் திரைகளை நன்றாக மூடிக்கொண்டு வா! கொடும்பாளூர் வீரர்கள் உன்னைப் பார்த்து விட்டால் ஏதேனும் கூச்சல் போட்டாலும் போடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு அம்மாதரசி மேலே பல்லக்கை நோக்கி நடந்தார்.

மதுராந்தகனுடைய முகம் முன்னைவிடக் குரோதமும், மாற்சரியமும் நிறைந்த பயங்கர மாறுதலை அடைந்ததை அப்பெருமாட்டி கவனியாமலே அங்கிருந்து சென்று விட்டார்.


74. ஈட்டி பாய்ந்தது!

சற்று நேரம் நின்ற இடத்திலேயே நின்றான் மதுராந்தகன். குடிசைக்குப் போகலாமா, கோட்டைக்குப் போகலாமா என்று அவன் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடந்தது போலத் தோன்றியது. பின்னர் அவன் தன்னைச் சுமந்து வந்த பல்லக்கின் அருகில் சென்று சிவிகை தூக்கிகளிடமும், காவலர்களிடமும் ஏதோ சொன்னான். சிவிகைக்கு உள்ளேயிருந்து ஏதோ ஒரு பொருளையும் எடுத்துக் கொண்டான்.

மதுராந்தகன் திரும்பக் குடிசையை நோக்கி வந்தபோது, அவனும் மாதேவடிகளும் எந்த மரத்தின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்த மரத்தின் பின்புறத்திலிருந்து திடீரென்று ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்ததைக் கண்டு மதுராந்தகன் ஒரு கணம் திடுக்கிட்டான்.

அவன் கருத்திருமன்தான். இன்னமும் அவன் பார்ப்பதற்குப் பைத்தியக்காரனைப் போலவே இருந்தான். அவனுடைய தோற்றமும் அவன் திடீரென்று அந்த இடத்தில் வெளிப்பட்டதும் மதுராந்தகனுக்குத் திகிலை உண்டாக்கியதில் வியப்பில்லைதானே?

அடுத்த கணம் மதுராந்தகன் சிவிகையிலிருந்து எடுத்து வந்த கூரிய குத்தீட்டியை ஓங்கினான். கருத்திருமன் அவனைக் கையமர்த்தி, “ஐயா! நில்லுங்கள்! நான் தங்கள் விரோதி அல்ல!” என்றான்.

“விரோதி அல்லவென்றால், பின்னே நீ யார்? என் நண்பனா?” என்று மதுராந்தகன் கேட்டான்.

“ஆம், ஐயா! நண்பன்தான்!”

மதுராந்தகன் குரோதமும், துயரமும் ததும்பிய குரலில் மெல்லிய சிரிப்புச் சிரித்துவிட்டு, “நல்ல நண்பன் கிடைத்தாய்! உலகமே என்னைவிட்டு நழுவிச் செல்லும்போது, நீயாவது கிடைத்தாயே!” என்றான்.

“ஆம், ஐயா! உலகத்தில் யாரும் தங்களுக்குச் செய்ய முடியாத உதவியைத் தங்களுக்கு நான் செய்ய முடியும்!” என்றான் கருத்திருமன்.

“அது என்ன, சொல்லு பார்க்கலாம்! நேரமாகிவிட்டது சொல்லுவதைச் சீக்கிரம் சொல்லு!”

“எதற்கு நேரம் ஆகிவிட்டது?” என்று கருத்திருமன் கேட்டு விட்டு, மதுராந்தகனை உற்று நோக்கினான்.

“அரண்மனைக்குப் போவதற்குத்தான், வேறு எதற்கு?”

“தங்களுக்கு உரிமை இல்லாத அரண்மனைக்குத் தாங்கள் திரும்பிப் போகப் போகிறீர்களா?”

மதுராந்தகன் மறுபடியும் அதிர்ச்சி அடைந்து, “அடே! என்ன சொல்லுகிறாய்? உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? விரைவிலே சொல்லு! இல்லாவிடில்…” என்று கையிலிருந்த குத்தீட்டியை ஓங்கினான்.

“ஐயா! குத்தீட்டியை ஓங்க வேண்டாம். தங்கள் பகைவர்கள் எதிர்ப்படும்போது உபயோகிப்பதற்குத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். சற்று முன் தாங்களும், தங்களை வளர்த்த பெரிய மகாராணியும் இந்த மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் மரத்தின் பின்னால் நின்றதை நீங்கள் இருவரும் கவனிக்கவில்லை…”

“ஆகா! ஒட்டுக்கேட்டு இரகசியத்தை அறிந்து கொண்டாயா? அந்தத் துணிச்சலுடனேதான் என்னை வழிமறித்து நிறுத்தினாயா?”

“இல்லை, இல்லை! மகாராணி தங்களிடம் சொன்ன செய்தி எனக்கு முன்பே தெரியும்; அதைவிட அதிகமாகவும் தெரியும். அந்த மாதரசி தங்களை வயிற்றில் வைத்து வளர்த்த அன்னை அல்லவென்று அவர் தங்களிடம் கூறினார். தங்களுடைய அன்னை யார் என்றும் சொல்லி இருப்பார். ஆனால் தங்கள் தந்தை யார் என்று சொல்லி இருக்கமாட்டார்.”

மதுராந்தகன் அவனை வெறித்து நோக்கி, “உனக்கு அது தெரியுமா?” என்றுகேட்டான்.

“ஆம், தெரியும்.”

மதுராந்தகன் அந்தப் பைத்தியக்காரத் தோற்றமுடையவன் தான் அவன் தந்தை என்று உரிமை கொண்டாடப் போகிறானோ என்று பீதி அடைந்தான். அருவருப்பும் ஆத்திரமும் நிறைந்த குரலில் “உனக்கு எப்படித் தெரியும்? நீ யார்?” என்று கேட்டான்.

“நான் தங்கள் தந்தையின் ஊழியன்!” என்று கருத்திருமன் கூறியதும், மதுராந்தகன் முகம் தெளிவு பெற்றது.

கருத்திருமன் சற்று அருகில் நகர்ந்து வந்து, “ஐயா! தங்கள் தந்தை…” என்று மெல்லிய குரலில் கூறினான்.

மதுராந்தகன் காதில் அவன் கூறியது விழுந்தது. மதுராந்தகனுடைய தலை சுற்றியது. கீழே விழப் பார்த்தவன் சமாளித்துக் கொண்டு கருத்திருமனுடைய புஜங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு, “நீ கூறியது உண்மைதானா? உண்மையாகவே நான் இராஜ குமாரன்தானா?” என்று கேட்டான்.

“ஆம், ஐயா! இதைத் தங்களிடம் சொல்வதற்காகவே பல வருஷங்களுக்கு முன்பு நான் இங்கு வந்தேன். தங்களை அந்தரங்கமாகப் பார்த்துப் போவதற்கு சமயம் நோக்கிக் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாகச் சின்னப் பழுவேட்டரையர் என்னை அரண்மனைத் தோட்டத்தில் பார்த்துவிட்டார். பிடித்துப் பாதாளச் சிறையில் போட்டுவிட்டார்.”

“எப்போது தப்பினாய்? எப்படி?”

“இன்றைக்குத்தான், வந்தியத்தேவன் என்னும் வாலிபன் ஒருவனுடைய உதவியினால் தப்பித்து வெளி வந்தேன். அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் வேலியின் மறைவில் இருக்கிறான். எனக்கும், அவனுக்கும் இரண்டு குதிரைகளுடன் காத்திருக்கிறான். நான் நேரம் செய்வது பற்றி அவன் இப்போது கோபம் அடைந்திருப்பான். அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. எதிர்பாராத விதத்தில் தங்களைச் சந்தித்து விட்டேன். நான் பல வருஷங்களுக்குப் பிறகு வாணியைப் பார்த்தேன். அவளுடைய ஊமைப் பாஷையில் பேசிக் கொண்டிருக்கும்போதே நீங்கள் இந்தக் குடிசைப் பக்கம் வந்தீர்கள். நீங்கள் இந்தக் குடிசைக்குத்தான் வருகிறீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும் வாணியும் இம்மரத்தின் பின்னால் சிறிது நேரம் நின்றோம். பிறகு அவளும் குடிசைக்குள் போய்விட்டாள். நான் மட்டும் இங்கு நின்று கொண்டிருந்தேன். அதன் பலனாகத் தங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.”

“சரி, இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய்?”

“தாங்கள் எவ்விதம் சொல்லுகிறீர்களோ, அவ்விதம் செய்கிறேன் ஐயா! தங்கள் பிறப்பைக் குறித்த உண்மையை அறிந்த பிறகும், தஞ்சை அரண்மனைக்குத் திரும்பிப் போகப் போகிறீர்களா? ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தாங்கள் சோழ குலத்து இளவரசர் அல்லவென்பது இன்னும் சிலருக்கும் தெரியும். முதன்மந்திரிக்கும், அவருடைய ஒற்றன் ஆழ்வார்க்கடியான் என்பவனுக்கும் தெரியும், என்றைக்காவது ஒருநாள்…”

“ஆமாம், ஆமாம்! தஞ்சை அரண்மனைக்குப் போக எனக்கும் விருப்பமில்லைதான், நீ என்ன யோசனை சொல்லுகிறாய்?”

“கோடிக்கரை சென்று இலங்கைக்குப் போவோம். இலங்கை அரசர், சோழ குலத்தின் பகைவர். பாண்டிய குலத்துக்குப் பரம்பரை சிநேகிதர். நான் இலங்கை மன்னரை நன்கு அறிவேன். பாண்டிய குலத்தின் மணி மகுடமும், இரத்தின ஹாரமும் இருக்குமிடமும் அறிவேன் என்ன சொல்லுகிறீர்கள்?”

மதுராந்தகன் சிறிது நேரம் யோசனை செய்தான். அவனுடைய உள்ளம் அந்தச் சில வினாடி நேரத்தில் எத்தனையோ கோட்டைகள் கட்டியது.

“ஐயா! நேரம் போகிறது தங்கள் முடிவு என்ன? வந்தியத்தேவன் இனி இங்கேயே வந்துவிடுவான்.”

“அவனைக் கொல்லவேண்டும் என்றா சொல்லுகிறாய்?”

“தங்களுக்குத் தயக்கமாயிருந்தால் தங்கள் கையிலுள்ள குத்தீட்டியை என்னிடம் கொடுங்கள்!”

“நீ போ! இந்தக் குடிசைக்காரனைப் பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டு விரைவில் வந்து விடுகிறேன்!”

கருத்திருமன், வந்தியத்தேவன் மறைந்து நின்ற வேலியைத் தேடிக் கொண்டு போனான். நல்ல இருட்டு. தூரத்தில் இராஜபாட்டையில் அவ்வப்போது சிலர் தீவர்த்தி பிடித்துக் கொண்டு போனபோது சிறிது வெளிச்சம் வந்தது. வெகு தூரத்திலிருந்து வந்த அந்த மங்கலான வெளிச்சத்தில் இரண்டு கம்பீரமான புரவிகள் வேலிகளில் கட்டப்பட்டு நிற்பது தெரிந்தது. ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை. மெல்லிய குரலில் கூப்பிட்டுப் பார்த்தான்; பதிலுக்குக் குரல் கேட்கவில்லை.

“சரி; அவனாகத் தொலைந்து போனால் நல்லதாய்ப் போயிற்று” என்று கருத்திருமன் எண்ணிக் கொண்டான்.

சிவிகைகள், பரிவாரங்கள், தீவர்த்திகள் எல்லாம் போன பிறகும் கருத்திருமன் வராதிருக்கவே, வந்தியத்தேவன் பொறுமை இழந்தான்.

மீண்டும் வேலியைத் தாண்டிக் குதித்து வந்தான். மரத்தடியில் மதுராந்தகனும், கருத்திருமனும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். மதுராந்தகன் கண்ணில் பட அவன் விரும்பவில்லை. கருத்திருமனுக்கும், மதுராந்தகனுக்கும் என்ன அந்தரங்கப் பேச்சு என்ற ஐயமும் அவன் உள்ளத்தில் உதித்தது.

மதுராந்தகன் குடிசையை நோக்கிப் போனபிறகு, அவனை அறியாமல் வந்தியத்தேவனும் பின் தொடர்ந்து அப்பாலிருந்த ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டான். அவன் கண்ணில் ஒரு விபரீதமான காட்சி தென்பட்டது.
குடிசையின் பலகணி வழியாக  ஒருஉருவம் உள்ளே உற்றுப் பார்த்தது. பின்னர் குத்தீட்டியைப் பலகணி வழியாக உள்ளே எறியும் நோக்குடன் குறி பார்க்கத் தொடங்கியது. ஆனால் உடனே எறிந்துவிடவில்லை. குறி பார்ப்பதும் மறுபடி தழைப்பதுமாக இருந்தது. வந்தியத்தேவன் கையில் குத்தீட்டியுடன் நின்ற உருவத்தை நோக்கி மெள்ளச் சென்றான்.

குடிசைக்குள்ளிலிருந்து ‘வீல்’ என்று ஒரு குரல், பீதி நிறைந்த பெண் குரல், தெளிவாகக் கேட்டது.

வந்தியத்தேவன் ஜாக்கிரதையை விட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். குத்தீட்டியை  உள்ளே எறிய இருந்தவன் வந்தியத்தேவன் ஓடி வரும் சத்தம் கேட்டுத் திரும்பினான். திரும்பிய வேகத்துடன் அவன் மீது குத்தீட்டியை எறிந்தான். ஈட்டி வந்தியத்தேவனுடைய விலாவில் பாய்ந்தது. அவன் கீழே விழுந்தான்.

அவன் என்ன ஆனான் என்றுகூடப் பாராமல் ஈட்டியை எறிந்தவன் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான்.

சில கண நேரத்துக்கெல்லாம் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் விளக்குடன் வெளியில் வந்தார்கள். வந்தியத்தேவன் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அவர்கள் அடைந்த பயங்கரத்தையும், துயரத்தையும் சொல்லி முடியாது. மிக்க பரிவுடன் அவனை இருவரும் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய்க் குடிசைக்குள் சேர்த்தார்கள். அவன் இறந்துவிடவில்லை என்று அறிந்து சிறிது ஆறுதல் பெற்றார்கள்.


75. “ஒரு நாள் இளவரசர்!”

ஆழ்வார்க்கடியான் தன் ஆட்களுடனே சேந்தன் அமுதனுடைய பூந்தோட்டத்தை நோக்கி நடந்தான். பூந்தோட்டத்துக்குச் சமீபத்தில் ஒரு மரத்தடியில் சற்று மறைவாக மதுராந்தகத் தேவரின் சிவிகையும், அதைத் தூக்கும் ஆட்களும் நின்றார்கள். அவர்களிடம் விசாரித்து இளவரசர் கட்டளைப்படி அவர் திரும்பி வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்ததை அறிந்துகொண்டான். பின்னர் மேலே சென்று பூந்தோட்டத்துக்குள் புகுந்தான். தன்னுடன் வந்தவர்களிடம் மெல்லிய குரலில் அத்தோட்டமெல்லாம் சுற்றித் தேடிப் பார்க்கும்படி கூறிவிட்டுத் தான் மட்டும் குடிசை வாசலில் போய் நின்று கொண்டான். உட்புறம் தாளிட்டிருந்த கதவண்டை காதை வைத்து ஒட்டுக் கேட்கலானான். சேந்தன் அமுதனும் பூங்குழலியும் கவலையுடன் பேசிக் கொள்ளும் குரல்கள் கேட்டன. இடையிடையே யாரோ ஒருவர் மரணாவஸ்தையில் முனகுவது போன்ற சத்தமும் கேட்டது.

தோட்டத்தைச் சுற்றித் தேடப் போனவர்களில் ஒருவன் விரைவில் திரும்பி வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களைத் திருமலை நம்பி கதவிடுக்கின் வழியாக வந்த விளக்கின் ஔதக்கிரணத்தில் உற்றுப் பார்த்தான். அவை இளவரசர் மதுராந்தகத் தேவர் வழக்கமாக அணியும் கிரீடம், இரத்தின ஹாரம், வாகுவலயம் முதலிய ஆபரணங்கள் என்று அறிந்து கொண்டான். அவற்றுடன் மதுராந்தகர் உத்தரீயமாகத் தரிக்கும் பீதாம்பரமும் இருந்தது. இவற்றைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் உண்டான திருப்தி அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது.

“சரி; தேடியது போதும்! மற்றவர்களையும் இங்கே கூப்பிடு. எல்லாரும் கையில் ஆயுதம் ஏந்தி எதற்கும் ஆயத்தமாக நில்லுங்கள்!” என்று கூறிவிட்டு, ஆழ்வார்க்கடியான் குடிசையின் கதவை இலேசாகத் தட்டினான்.

உள்ளிருந்து மறுமொழி வராமற் போகவே, மீண்டும் தடதடவென்று கதவை வலுவாகத் தட்டினான்.

“யார் அங்கே? இங்கு என்ன வேலை?” என்று பூங்குழலியின் குரல் கேட்டது.

“அம்மணி! நான்தான் ஆழ்வார்க்கடியான். தயவு செய்து கதவைத் திறந்து அருள வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

பூங்குழலி குடிசைக் கதவைத் தடால் என்று திறந்தாள். அவளுடைய கயல் விழிகளில் கோபக் கனல் பறந்தது. ஆழ்வார்க்கடியான் மீது தன் கோபத்தைக் காட்ட எண்ணியவள், அவனுக்கு அப்பால் வீரர்கள் சிலர் நிற்பது கண்டு திடுக்கிட்டாள். உடனே, கோபத்தைத் தணித்துக் கொண்டு, “ஐயா! இது என்ன? இவர்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்? உம்முடனேதான் வந்தார்களா?” என்றாள்.

“பாதாளச் சிறையிலிருந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு ஏன் உதவி செய்தீர்கள்?” என்று கேட்டான் திருமலை.

பூங்குழலி முகத்தில் வியப்பை வருவித்துக் கொண்டு, “இது என்ன? எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே? யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவே இல்லையே?” என்றாள்.

“கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டுப் பாதாளச் சிறையிலிருந்த வந்தியத்தேவனும், மற்றொரு பைத்தியக்காரனும் இன்று தப்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் இந்த நந்தவனம் வரையில் வந்ததாகத் தெரிகிறது. பிறகு, இங்கிருந்து இரண்டு குதிரைகளில் இருவர் ஓடிப் போயிருக்கிறார்கள். இந்தக் குடிசைக்குப் பக்கத்தில் ஓரிடத்தில் மண்ணில் இரத்தம் சிந்தியிருக்கிறது. பலர் இந்த இடத்துக்கு வந்துபோன அடையாளங்களும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள்தான் தப்பி ஓடியவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டுமென்று அனுமானிக்கப்படுகிறது. முதன்மந்திரி அநிருத்தருக்கு உங்கள் பேரில் உள்ள அபிமானத்தினால் என்னை அனுப்பி வைத்தார். கொடும்பாளூர் வேளாரின் ஆட்கள் வந்திருந்தால் உங்களை உடனே சிறைப்படுத்தி இருப்பார்கள்?” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“சத்தியமாகச் சொல்கிறேன். இங்கிருந்து யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவில்லை!”

“அப்படியானால், சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த வந்தியத்தேவன் இந்தக் குடிசையிலேதான் இப்போது இருக்க வேண்டும்!” என்றான் திருமலை.

அவன் இவ்விதம் சொல்லி வாய் மூடுவதற்குள் சேந்தன் அமுதன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலின் அடியிலிருந்து வேதனை நிறைந்த பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.

சேந்தன் அமுதனின் கட்டிலுக்கு அடியிலிருந்து வந்த முனகல் சத்தத்தைக் கேட்டதும், ஆழ்வார்க்கடியான், “ஆகா! அப்படியா சமாசாரம்? என்று சொல்லிக் கொண்டே மேலே போகத் தொடங்கினான்.

இச்சமயத்தில் சேந்தன் அமுதன் கட்டிலிலிருந்து எழுந்து வந்து, “பூங்குழலி! இந்த வைஷ்ணவனிடம் உண்மையைச் சொல்லி உதவி கேட்போம். இவனும் வந்தியதேவனுக்குச் சிநேகிதன்தானே!” என்றான்.

“வைஷ்ணவரே! இவர் சரியான சமயத்துக்கு இங்கே வந்து நான் கலியாணம் செய்து கொள்வதற்குள், கைம்பெண் ஆகாமல், காப்பாற்றினார்! வெளியே ஒருவன் நின்று ஈட்டியினால் அமுதனைக் குத்துவதற்குத்தான் குறி பார்த்தான். அப்போது இவர் வந்து குறுக்கிட்டு ஈட்டியைத் தான் ஏற்றுக் கொண்டுக் காப்பாற்றினார்!” என்றாள் பூங்குழலி.

“ஐயா! வைஷ்ணவரே! நீர் எவ்வளவோ கெட்டிக்காரர். முதன்மந்திரி அநிருத்தருக்கே யோசனை சொல்லக் கூடியவர். கொலைகாரனால் படுகாயம் பட்டிருக்கும் இந்த வாணர் குல வீரரைக் காப்பாற்ற ஒரு யோசனை சொன்னால் உமக்குப் புண்ணியம் உண்டு. நாங்கள் இருவரும் என்றென்றைக்கும் உமக்கு நன்றிக் கடன்பட்டிருப்போம்!”

“தேவி அது அவ்வளவு சுலபமன்று! முதலில் இதைப் பாருங்கள்!” என்று கூறிவிட்டு ஆழ்வார்க்கடியான் தன்னுடன் கொண்டு வந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவர்களுக்குக் காட்டினான்.

மதுராந்தகர் அணிந்திருந்த கிரீடமும், முத்து மாலைகளும், வாகுவலயங்களும் ஜாஜ்வல்யமாய் ஜொலித்தன. “ஆகா! இவை இளவரசர் மதுராந்தகர் தரித்திருந்தவை அல்லவா? சற்று முன்பு இங்கேயே நாங்கள் பார்த்தோமே?” என்றான் அமுதன்.

“இவை எங்கிருந்து கிடைத்தன?” என்றாள் பூங்குழலி.

“இந்த நந்தவனத்தின் வேலி ஓரத்தில் இருந்து கிடைத்தன. வடவாற்றங்கரையோடு நான் வந்து கொண்டிருந்தபோது இரண்டு குதிரைகளின் மீது இரண்டு பேர் விரைவாகப் போய்க் கொண்டிருந்ததைக் கண்டேன். அதிவேகமாகச் சென்ற குதிரைகளில் ஒன்றின் மீது அந்தப் பைத்தியக்காரன் இருந்தான். இன்னொரு குதிரை மேலிருந்தவர் இளவரசர் மதுராந்தகர் போலத் தோன்றியது. இங்கு வந்த பிறகு அது நிச்சயமாயிற்று.”

“இது என்ன விந்தை? மதுராந்தகர் எதற்காகத் தமது ஆபரணங்களைக் கழற்றி எறிந்து விட்டு ஓட வேண்டும்?”

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. முதன்மந்திரியிடம் சொல்லி ஓடியவர்களைத் தொடர்வதற்கு ஆள்கள் அனுப்பப் போகிறேன். ஆனால் அதற்குள்ளே இங்கு பெரிய விபரீதங்கள் நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன்.”

“என்ன விபரீதம் நடந்து விடும்?”

“பழுவேட்டரையர்களும் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த சிற்றரசர்களும் இதோ தஞ்சைக் கோட்டை வாசலை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். கொடும்பாளூர் வேளாரும், முதன்மந்திரியும், மலையமானும் அவர்களை வரவேற்கக் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜ்ய உரிமை பற்றிச் சமாதானமாகப் பேசி முடிவு செய்ய வேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம்; கட்டளை. ஆனால் பழுவேட்டரையர்கள் சமாதானப் பேச்சுத் தொடங்குவதற்கு முன்பு ‘மதுராந்தகர் எங்கே?’ என்று கேட்பார்கள். அவரைக் காணோம் என்றதும், கொடும்பாளூர் வேளார் மீது பாய்வார்கள்! சேநாதிபதிதான் பொன்னியின் செல்வருக்குப் பட்டத்தை நிச்சயம் செய்து கொள்வதற்காக மதுராந்தகரைக் கொன்று விட்டார் என்பார்கள். பெரிய வேளார் அதற்கு மறுப்புச் சொன்னாலும், அவரால் நிரூபிக்க முடியாது. உடனே பயங்கரமான உள்நாட்டு யுத்தம் ஏற்படும். சோழ நாடு விரைவில் சீர்குலையும்.”

“அதற்குள்ளே நாம் இங்கிருந்து புறப்பட்டுப் போய்விடுவோம்!”

“தேவி! அது முடியாத காரியம்! இந்த கிரீடத்தையும் ஆபரணங்களையும் சற்று நேரம் சேந்தன் அமுதன் அணிந்து கொள்ளட்டும். பொன்னியின் செல்வரை ஏற்றிக் கொண்டு வந்த யானையை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் அதில் இவர் ஏறிக் கொள்ளட்டும். என்னுடைய ஆட்களை ‘மதுராந்தகர் வாழ்க!’ என்று கோஷித்துக் கொண்டு யானைக்கு முன்னும் பின்னும் போகச் சொல்லுகிறேன். மதுராந்தகர் ஏறி வந்த பல்லக்கும் அருகில் இருக்கிறது. அதில் வந்தியத்தேவனைப் போட்டுத் திரையை விட்டு விடுவோம். தேவி! தாங்கள் பல்லக்கின் பக்கமாக நடந்து வாருங்கள். மற்றதையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“இது என்ன பைத்தியக்கார யோசனை?” என்றான் சேந்தன் அமுதன்.

“இவர் கிரீடத்தை வைத்துக் கொண்டால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா?” என்றாள் பூங்குழலி.

“இராத்திரி வேளையில் யானை மேல் உட்கார்ந்திருப்பவரை யார் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்? சந்தேகம் ஏற்பட்டால் அல்லவோ கூர்ந்து பார்க்கப் போகிறார்கள்! உங்களுடனேயே நானும் வரப்போகிறேன். உங்கள் எல்லாரையும் கோட்டைக்குள் முதன்மந்திரியின் வீட்டில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. இந்த வாணர் குலத்து வீரனைக் காப்பாற்றுவதற்கு வேறு வழி ஒன்றுமில்லை!”

இன்னும் சிறிது நேரம் விவாதம் செய்த பிறகு, சேந்தன் அமுதனும் பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானுடைய யோசனைக்கு இணங்கினார்கள்.

கோட்டை வாசலில் ஏதோ கலகலப்பு ஏற்பட்டது. எல்லாருடைய கவனமும் அங்கே சென்றது.

சற்று முன்னால் முதன்மந்திரி அநிருத்தர் தம்மைச் சமிக்ஞையினால் அழைத்த ஆழ்வார்க்கடியானிடம் சென்றிருந்தார். அவன் ஏதோ அவரிடம் இரகசியச் செய்தி கூறினான். அதைக் கேட்டுவிட்டு அவர் பழுவேட்டரையர்களும் பெரிய வேளாரும் நின்ற இடத்தை அணுகி வந்தார்.

“தளபதி! சற்று முன்னால் கூட மதுராந்தகத் தேவரும் அவருடைய அன்னை செம்பியன் மாதேவியும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். திருக்கோயிலுக்குப் புஷ்பகைங்கரியம் செய்யும் சேந்தன் அமுதனைப் பார்க்கப் போயிருந்தார்கள்..” என்று முதன்மந்திரி கூறுவதற்குள் காலாந்தககண்டர் குறுக்கிட்டார்.

“ஆமாம்; தாயும், மகனும் கோட்டைக்கு வெளியே வந்தார்கள். ஆனால் தாய் மட்டுந்தான் கோட்டைக்குள் திரும்பிச் சென்றார்!” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

“ஆகா! அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்றார் முதன்மந்திரி.

“முதன்மந்திரி! உங்களிடம் மட்டுந்தான் கெட்டிக்கார ஒற்றர்கள் உண்டு என்று நினைத்தார்களா? வெளியே வந்த மதுராந்தகத்தேவர் திரும்பக் கோட்டைக்குள்ளே போகவில்லை. அதன் காரணத்தை நான் அறிய வேண்டும்!” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

முதன்மந்திரியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதே சமயத்தில் கோட்டை வாசலில், “இளவரசர் மதுராந்தகத்தேவர் வாழ்க! வாழ்க!” என்ற கோஷங்கள் எழுந்தன. எல்லாரும் கோஷங்கள் வந்த அந்தத் திசையை ஆவலோடு நோக்கினார்கள். கோட்டை வாசலுக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த யானையின் மீது இளவரசுக் கிரீடமும் பிற ஆபரணங்களும் அணிந்த ‘மதுராந்தகர்’ வீற்றிருந்தார். யானைக்குப் பக்கத்தில் மூடுபல்லக்கு ஒன்று ஊர்ந்து சென்றது.

“தளபதி! மதுராந்தகத்தேவர் கோட்டைக்குள் திரும்பிப் போவதற்குச் சிறிது காலதாமதம் நேர்ந்தது. வாணி அம்மையின் மகன் சேந்தன் அமுதன் நோய்வாய்ப் பட்டிருந்தான். அவனைப் பல்லக்கில் ஏற்றிக் கோட்டைக்குள் அழைத்து வரும்படியாகச் செம்பியன்மாதேவி சொல்லிவிட்டு முன்னால் சென்றுவிட்டார். அன்னையின் விருப்பத்தை மகன் நிறைவேறி வைக்கிறார். அமுதனைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு தாம் யானை மீது செல்கிறார். விரைவிலே மகுடாபிஷேகம் நடக்கும்போது பட்டத்து யானை மீது ஊர்வலம் வரவேண்டியிருக்குமல்லவா? அதற்கு இப்போதே ஒத்திகை செய்து கொள்கிறார்!” என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

கோட்டைக்குள் பிரவேசித்த யானையையும் பல்லக்கையும் காலாந்தககண்டர் சிறிது நேரம் மிகக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதிசயமா இருக்கிறதே!” என்றார்.

“என்ன அதிசயம்? எது அதிசயம்?” என்று அநிருத்தர் வினவினார்.

“இளவரசர் மதுராந்தகர் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் கோட்டைக்குள்ளே போவதுதான்! இளவரசர் மிக்க கூச்சம் உள்ளவராயிற்றே? பல்லக்கின் திரையை விட்டுக் கொண்டு அல்லவா பிரயாணம் செய்வார்?”

“என்றைக்காவது ஒரு நாள் கூச்சம் தெளிந்துதானே ஆக வேண்டும்? சீக்கிரத்தில் முடிசூட்டிக் கொள்ளவேண்டியவராயிற்றே?”

“மதுராந்தகருக்கு முடிசூட்டுவது என்று முடிவு செய்தாகிவிட்டதா? யார் முடிவு செய்தார்கள்?”

“ஏன்? சக்கரவர்த்திதான்! நாம் எல்லாருமாகப் போய்ச் சக்கரவர்த்தியிடம் நம் சம்மதம் தெரிவித்ததும்…”

“சக்கரவர்த்தி முடிவு செய்து, நாம் சம்மதம் கொடுத்து என்ன பயன்? கொடும்பாளூர்ப் படைகள் அல்லவா சம்மதம் கொடுக்க வேண்டும்? அவர்கள் காவல் புரியும் கோட்டைக்குள் இளவரசர் மதுராந்தகர் இவ்வளவு குதூகலமாக யானை மேல் ஏறிப்போவது அதிசயந்தான்!” என்றார் காலாந்தககண்டர்.


76. ‘திருவயிறு உதித்த தேவர்’

செம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று காத்திருந்து வரவேற்று அழைத்துச் சென்றார். தம் பக்கத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

“அரசர்க்கரசே! அடுத்தடுத்துத் துயரமான செய்திகளை கேட்டு நொந்திருக்கும் என் உள்ளம் தாங்கள் உடல் நலம் பெற்றிருப்பதைப் பார்த்துத் திருப்தி அடைகிறது. இறைவன் அருளால் நெடுங்காலம் தாங்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து இந்த உலகத்தைப் பரிபாலித்து வர வேண்டும்” என்று முதிய பிராட்டியார் கூறினார்.

“அன்னையே! மேலே நடக்கவேண்டியது பற்றி எனக்கு யோசனை கூறி உதவ வேண்டும். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவு துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் கண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி! அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும்!” என்றார் சுந்தர சோழர்.

செம்பியன் மாதேவி தம் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அரசர்க்கரசே! தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனார் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும்? நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா? இராஜ்யத்தின் மக்கள் சம்மதிப்பார்களா? சக்கரவர்த்தி! உள்நாட்டுச் சண்டையினால் இராஜ்யம் அழிவதைத் தடுக்க விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீர்கள். ஆதித்த கரிகாலனைப் புறக்கணித்துவிட்டு என் புதல்வனுக்குப் பட்டம் கட்டியிருந்தால், அதே உள்நாட்டுச் சண்டை நேர்ந்திராதா? இராஜ்யம் அழிந்திராதா?” என்று கேட்டார்.

“ஆம், தாயே! அதனாலேதான் நானும் தயங்கிக் கொண்டிருந்தேன். எல்லாரையும் சமரசப்படுத்தி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஏற்பாடு செய்யப் பிரயத்தனப்பட்டேன். அது கைக்கூடுவதற்குள்ளே, விதி குறுக்கிட்டுவிட்டது. கரிகாலனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. தாயே! அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன? தாங்களே சொல்லுங்கள்! இந்த இராஜ்யத்தின் பொறுப்பை என்னால் இனித் தாங்க முடியாது. யாரிடமாவது ஒப்புவித்துவிட்டுக் கரிகாலனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். காஞ்சியில் எனக்காகவென்று கரிகாலன் கட்டியுள்ள பொன் மாளிகையில் தங்கி என் அந்தியக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இப்போது யாருக்குப் பட்டம் கட்டுவது என்று சொல்லுங்கள். அருள்மொழியைக் காட்டிலும் மதுராந்தகன் பிராயத்தில் மூத்தவன். என்னைவிட இளையவன் ஆனாலும், அவனுக்குச் சிறிய தந்தை முறையில் உள்ளவன். கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும் அருள்மொழிக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்கிறார்கள். தர்மத்துக்கும் நியாயத்துக்கும் குல முறைக்கும் விரோதமான இந்தக் காரியத்துக்கு நான் எப்படி உடன்பட முடியும்? அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும்? அன்னையே எனக்கு உதவி செய்யுங்கள்! மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன்! தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்!” என்றார் சுந்தர சோழ சக்கரவர்த்தி.

செம்பியன் மாதேவி, “ஐயா! என் சம்மதத்தைக் கேட்க வேண்டாம். சிவபதம் அடைந்த என் இறைவர் எனக்கு இட்ட கட்டளைக்கு மாறாக நான் நடக்க முடியாது. ஆனால், இராஜ்ய விவகாரங்களில் நான் இனிக் குறுக்கிடுவதில்லை. மதுராந்தகனை அழைத்து அவன் சம்மதத்தைக் கேட்டு எப்படி உசிதமோ அப்படிச் செய்யுங்கள்!” என்றார்.

“ஆம், ஆம்! மதுராந்தகனை அழைத்து அவனுடைய சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் எதுவும் தீர்மானிக்க வேண்டும். அதற்கும் தங்கள் உதவி வேண்டும், தேவி! மதுராந்தகன் எங்கே?” என்றார் சக்கரவர்த்தி.

செம்பியன் மாதேவி தம் தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, “மதுராந்தகன் எங்கே? சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே! என் புதல்வன் எங்கே? கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்!” என்றார்.

“சின்னப் பழுவேட்டரையர் தங்களை கேட்கவேண்டும் என்கிறார். தாங்களும், முதன்மந்திரி அநிருத்தரும் ஏதோ சூழ்ச்சி செய்து மதுராந்தகனை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அன்னையே! இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள்!” என்றார் சக்கரவர்த்தி.

“அப்படியே அழைத்துவரச் செய்யுங்கள். நானும் அவர்களைக் கேட்கிறேன்!” என்றார் செம்பியன் மாதேவி. குந்தவை உடனே வாசற்பக்கம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் சொல்லி அனுப்பினாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் முதன்மந்திரியும் சின்னப் பழுவேட்டரையரும் வந்தார்கள்.

சக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையர் நோக்கி, “தளபதி! சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். ‘மதுராந்தகன் எங்கே?’ என்று வினாவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்!” என்றார்.

சின்னப் பழுவேட்டரையர் கூறினார்: “தேவியாரின் சிவ பக்தியும் சீலமும் உலகம் அறிந்தவை. சோழ நாட்டு மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறது போல் நானும் போற்றுகிறேன். நான் இப்போது தெரிவித்துக் கொள்வதைக் குற்றம் கூறுவதாக எண்ணக் கூடாது. எந்தக் காரணத்தாலோ தேவியார் தமது குமாரர் சோழ சிங்காதனம் ஏறுவதை விரும்பவில்லை; இதுவும் எல்லாரும் அறிந்தது. மூத்த பிராட்டியாரைக் காட்டிலும், எனக்காவது மற்றவர்களுக்காவது அவருடைய புதல்வர் விஷயத்தில் அதிக அன்பு இருக்க முடியாது. ஆயினும் மர்மமாயிருக்கிற சில விஷயங்களை விளக்குதல் அவசியமாயிருக்கிறது. அதிலும் சக்கரவர்த்தி ‘மதுராந்தகரைக் கொண்டு வருக!’ என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங்களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று க்ஷேமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொடும்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். ‘மதுராந்தகத்தேவர் வாழ்க!’ என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை! கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார்? தேவியாரும் முதன்மந்திரியும் இப்பொழுதுதான் நான் சொல்லப் போவதற்காக மன்னிக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஏதோ சூழ்ச்சி செய்து, மதுராந்தகர் பீதி கொள்ளும்படியான செய்தி எதையோ அவரிடம் சொல்லி, இந்த நகரை விட்டும், நாட்டை விட்டுமே ஓடிப் போகும்படி செய்து விட்டார்கள் என்று ஐயுறுகிறேன். நான் சொல்வது தவறாயிருந்தால் மீண்டும் பெரிய பிராட்டியாரின் மன்னிப்பைக் கோருகிறேன்.”

செம்பியன் மாதேவி தழுதழுத்த குரலில், “தளபதி! தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்!” என்றார்.

“தேவியார் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன் அப்படியானால், முதன்மந்திரிதான் இந்த மர்மத்தை விடுவிக்க வேண்டும்!” என்றார் காலாந்தகர்.

“எந்த மர்மத்தை?” என்று முதன்மந்திரி அநிருத்தர் கேட்டார்.

“தேவியின் புதல்வர் காணாமற்போன மர்மத்தைப் பற்றித்தான்!”

“தளபதி! இந்தக் கோட்டை முழுவதும் தாங்கள் நன்றாகத் தேடிப் பார்த்ததாகக் கூறியது உண்மைதானா?”

“ஆம், தங்கள் அரண்மனையைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் தேடித் துருவிப் பார்த்தாகிவிட்டது.”

“என் அரண்மனையை மட்டும் விட்டு விட்ட காரணம் என்ன?”

“தாங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி என்கிற மரியாதை காரணமாகத்தான்!”

“ஆகா! அப்படியானால் தங்கள் கடமையைத் தாங்கள் சரியாகச் செய்யவில்லை என்று ஏற்படுகிறது. போனது போகட்டும். சக்கரவர்த்தி! தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார். அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன்!”

இவ்வாறு முதன்மந்திரி கூறியதும் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த வியப்பைச் சொல்லி முடியாது. சக்கரவர்த்தி, “முதன்மந்திரி! இது என்ன வேடிக்கை! தேவியின் புதல்வரை அழைத்து வருவதற்கு அனுமதி கேட்பானேன்! சீக்கிரமே வரவழையுங்கள்!” என்றார்.

முதன்மந்திரி அநிருத்தர் வாசற்படியண்டை சென்று கை தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே வந்தார். அடுத்த கணம் சேந்தன் அமுதனை முன்னால் விட்டுக்கொண்டு ஆழ்வார்க்கடியான் நம்பி வந்தான்.

சின்னப் பழுவேட்டரையர் மிக்க ஆத்திரத்துடன், “முதன்மந்திரியின் பரிகாசத்துக்கு ஓர் எல்லை வேண்டாமா?” என்று கேட்டார்.

ஆனால் செம்பியன்மாதேவி இருகரங்களையும் நீட்டித் தம் திருமுகத்தில் அன்பும் ஆர்வமும் ததும்ப “மகனே!” என்று அழைத்ததும், தளபதிக்கு மனக் குழப்பம் உண்டாகி விட்டது.

சேந்தன் அமுதன், “தாயே! என்னை அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ? அது நான் செய்த தவத்தின் பயன்தான்!” என்று கண்களில் நீர் ததும்பச் சொல்லிக்கொண்டு செம்பியன்மாதேவியை நெருங்கினான்.

மதுராந்தக உத்தமச் சோழன் என்று சரித்திரத்தில் புகழ்பெற்ற சிவ பக்திச் செல்வனைத் திருவயிறு வாய்த்த தேவி அன்புடன் அணைத்துக்கொண்டு மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.


77. தியாகப் போட்டி

உத்தம சோழர் ஐந்து பிராயத்துச் சிறுவனாயிருந்த போதே செம்பியன்மாதேவி அவனையும், வாணி அம்மையையும் பார்க்கும்படி நேர்ந்தது. பல ஆண்டுகள் கழித்து வாணி அம்மையைச் சந்தித்ததும், அவளுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிச் செம்பியன்மாதேவி அன்புடன் விசாரித்தார். வாணியின் குழந்தை என்று எண்ணிய சேந்தன் அமுதனிடம் இயற்கையாகவே அம்மூதாட்டிக்கு அன்பு சுரந்தது. குழந்தையைப் பற்றி விசாரித்த போது வாணி அம்மையின் முகத்தில் திகைப்பும், அச்சமும் உண்டானதைக் கண்டார். முதலில், அதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணினார். வாணி பேசத் தெரியாதவளாய் இருந்தபடியால் திட்டமாக அவளிடமிருந்து ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் வாணி அம்மை ஒரு காலத்தில் தமக்குச் செய்த உதவியைக் கருதியும், அவளுடைய குழந்தையிடம் ஏற்பட்ட பாசம் காரணமாகவும்; தாயும், பிள்ளையும் கவலையின்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். தஞ்சை நகருக்கு அருகில் குடியிருந்து, தளிக்குளத்தார் கோயிலுக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருவதற்காக மானியங்களும் அளித்தார்.

சேந்தன் அமுதன் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவ பக்தியிலும் சிறந்து வளர்ந்து வந்தான். அன்னைக்கு உதவியாகப் புஷ்பத் திருப்பணி செய்வதிலும் மிக்க ஊக்கம் காட்டி வந்தான். இதைக் காணக் காணச் செம்பியன்மாதேவிக்கு அவனிடம் இயற்கையாகச் சுரந்த அன்பு வளர்ந்து வந்தது. ஒருநாள் அவருடைய மனத்தில் விசித்திரமான ஐயம் ஒன்று தோன்றியது. அது அவருக்கு ஒரே சமயத்தில் இன்பத்தையும் வேதனையையும், இனந்தெரியாத பீதியையும் உண்டாக்கியது. எத்தனையோ விதமாக அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ள முயன்றும் இயலவில்லை. பிறந்து சில தினங்களில் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றிய நினைவு அடிக்கடி எழுந்த வண்ணமிருந்தபடியால் அவர் உள்ளம் அமைதி கொள்ளவில்லை.

கடைசியாக ஒருநாள் வாணி அம்மையிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தீர்மானித்தார். வாணியைத் தனியாக அழைத்து வரும்படி செய்தார். இறந்துபோன தம் குழந்தையை வாணியிடம் கொடுத்து ஒருவரும் அறியாமல் புதைத்துவிட்டு வரச்சொன்னார் அல்லவா? அவ்வாறு புதைத்த இடத்தில் அதன் ஞாபகார்த்தமாகப் பள்ளிப்படைக் கோயில் ஒன்று எழுப்ப வேண்டும் என்று சொல்லி, புதைத்த இடத்தைச் சொல்லும்படிக் கேட்டார். இந்தப் பழைய நிகழ்ச்சிகளைப் பற்றிய ஞாபகமே அவருக்குத் துன்பம் அளித்தது. செவிடும் ஊமையுமான வாணியிடம் இதையெல்லாம் சமிக்ஞை பாஷையினால் கேட்க வேண்டியதாக இருந்தது. அது அவருக்கு மேலும் சொல்ல முடியாத வேதனையை அளித்தது.

அவருடைய கேள்விகளுக்கு விடை கூற வாணி மிகவும் தயங்கினாள். கடைசியாக பேரரசியின் கட்டளையை மீற முடியாமல் உண்மையைச் சொல்லி விட்டாள். புதைப்பதற்காகத் தன்னிடம் கொடுக்கப்பட்ட குழந்தை உண்மையில் இறக்கவில்லை என்பதையும், அதைத் தனக்குக் கருத்திருமன் என்பவன் எடுத்துக்காட்டியதையும், பின்னர் அரசியிடம் திரும்பி வந்தால் என்ன நேரிடுமோ என்று அஞ்சிக் கருத்திருமனுடன் திருமறைக்காடு சென்றதையும், சில காலத்துக்கெல்லாம் கருத்திருமன் தன்னை விட்டுவிட்டுப் போய் விட்டபடியால், தான் திரும்பிப் பழையாறைக்கு வந்ததையும் விவரமாகக் கூறினாள்.

சேந்தன் அமுதன் உண்மையிலேயே தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைதான் என்பதை அறிந்ததும் செம்பியன்மாதேவி ஒரு புறத்தில் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார்.

அவர் உடம்பெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. “மகனே!” என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார். “உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே” என்று கருதக்கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக்கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது. “அரண்மனையில் வளர்ந்தால் என்ன? குடிசையில் வளர்ந்தால் என்ன? இந்த நிலையில்லா மனித வாழ்வின் சுக போகங்கள் எல்லாம் வெறும் மாயை அல்லவா? உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது? என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்குப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும்!” என்றெல்லாம் அடிக்கடி எண்ணி மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆயினும், சேந்தன் அமுதன் தமது வயிற்றில் பிறந்த மகன் என்று அறிந்ததினால், தாம் வளர்த்த குமாரனாகிய மதுராந்தகனைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கக்கூடாது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வலுப்பட்டது. முன்னமேயே கண்டராதித்தரிடம் தாம் செய்த குற்றதை அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பும் பெற்றிருந்தார். “உன் வயிற்றில் பிறந்த குழந்தையானால் என்ன? அனாதைப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையாய் இருந்தால் என்ன? இறைவனுடைய திருக்கண்ணோட்டத்தில் இருவரும் சமமானவர்கள்தான். ஆகையால் மதுராந்தகனை உன் மகனைப் போலவே வளர்த்து வா! ஆனால் சோழ சிங்காதனத்தில் அவன் ஏற வேண்டும் என்று ஆசைப்படாதே! அதற்கு இணங்கவும் இணங்காதே! அது நான் பிறந்த சோழ குலத்துக்குத் துரோகம் செய்ததாகும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவதாயிருந்தால் நீ உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் தயங்காதே!” என்று கண்டராதித்தர் தேவியிடம் சொல்லி அவ்வாறு வாக்குறுதியும் பெற்றிருந்தார். அந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றி வைக்கப் பெரிய பிராட்டி செம்பியன்மாதேவி நிச்சயித்திருந்தார்.

ஆனால் தங்களுடைய சொந்தக் குமாரன் வாணி அம்மையின் மகனாகக் குடிசையில் வளர்ந்து வருவதை அறியாமலேயே அந்த மகான் சிவபதம் அடைந்து விட்டார். இது தெரிந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? சேந்தன் அமுதன் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பார்? இதைக் குறித்து செம்பியன்மாதேவி எவ்வளவோ முறை சிந்தனை செய்தார். “இறைவனுடைய சித்தத்தினால் இவ்விதம் நேர்ந்து விட்டது. ஊமையின் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பதும் பேரரசரின் மகன் குடிசையில் வளரவேண்டும் என்பதும் இறைவனுடைய திருவுள்ளம், அதில் நாம் குறுக்கிடக்கூடாது. அதை மாற்ற முயல்வதால் பல குழப்பங்கள் விளையும். தம் வளர்ப்புக் குமாரனின் மனம் அதனால் பெரிதும் புண்படும்.

அத்தகைய பாவத்தைச் செய்யக்கூடாது!” என்று முடிவாகத் தீர்மானித்துக் கொண்டார்.

இறைவனுடைய திருவருளில் அவர் கொண்டிருந்த இணையில்லாத நம்பிக்கையின் துணையினாலேயேதான் மேற்கூறிய தீர்மானத்தை அவர் காரியத்தில் நிறைவேற்றுவதும் சாத்தியமாயிற்று. ஆயினும் அடிக்கடி சேந்தன் அமுதனைப்பற்றி அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடைய நினைவு வரும்போதெல்லாம் இயற்கையான தாய்ப் பாசம் அவருடைய உள்ளத்தில் பொங்கிப் பெருகாமலும் இருப்பதில்லை. இந்தப் போராட்டமானது அவருடைய இதய ஆழத்திலே பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

நெடுங்காலமாக அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளம் திடீரென்று ஒருநாள் அணையை உடைத்துக் கொண்டு கிளம்புவது உண்டு அல்லவா? அப்போது வெள்ளம் எவ்வளவு சக்தியுடனும், வேகத்துடனும் பாய்ந்து செல்லும் என்பதைப் பலர் பார்த்தும் அனுபவித்துமிருப்பார்கள். செம்பியன்மாதேவியின் உள்ளத்தில் அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப் பாசமாகிய உணர்ச்சி வெள்ளமும் இப்பொழுது கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.

முதன்மந்திரி அநிருத்தர் “தேவியின் திரு வயிற்றில் உதித்த தேவர்” என்று குறிப்பிட்டதுதான் அவ்வாறு செம்பியன்மாதேவி உள்ளத்தின் அணை உடைவதற்குக் காரணமாயிற்று. அந்த வார்த்தைகளை அநிருத்தர் கூறியவுடன் செம்பியன்மாதேவி பத்து மாத காலம் குழந்தையைத் தம் வயிற்றில் வைத்து வளர்த்த அனுபவம் அவ்வளவையும் ஒரு வினாடிப் பொழுதில் மறுபடியும் அனுபவித்தார். தம்மை மறந்து, தாம் செய்து கொண்டிருந்த சங்கல்பத்தை மறந்து, சேந்தன் அமுதனை “என் மகனே!” என்று அழைக்கவும், அவனைத் தழுவிக் கொண்டு கண்ணீர் பெருக்கவும் நேர்ந்தது.

இவ்விதம் செம்பியன்மாதேவி உணர்ச்சிப்பெருக்கினால் மெய்மறந்த நிலையில்

இருந்தபோதிலும், அமுதன் கூறிய வார்த்தைகள் அவருடைய மனத்தில் நன்கு பதிந்திருந்தன. “தாயே! என்னை ‘மகனே!’ என்று அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ?” என்று கூறினான் அல்லவா? அவ்வார்த்தைகளின் கருத்து என்ன? அமுதனுக்கு அவனைப் பெற்ற அன்னை யார் என்பது முன்னமேயே தெரியுமா? தெரிந்தும் இத்தனை காலம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தானா?

சற்று நேரம் வார்த்தை சொல்ல முடியாத பரவச நிலையில் இருந்த பிறகு, செம்பியன்மாதேவி தம் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, “மகனே! உனக்கு முன்னமே தெரியுமா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற பாவி என்று? தெரிந்து என் பேரில் கோபம் கொண்டிருந்தாயா? அதனால் என்னிடம் அதைப்பற்றிக் கேளாமல் இருந்தாயா?” என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது சேந்தன் அமுதன் கடல் மடை திறந்தது போல் பின்வருமாறு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினான்:

“தாயே! நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருந்தேன். உலகம் போற்றும் புண்ணியவதியாகிய தாங்கள் ஒருநாள் என்னை ‘மகனே!’ என்று அழைக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்காவிட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத்தானிருந்தேன். ஆனால் இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை ‘அன்னை’ என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன். தாங்கள் என்னை ‘மகனே’ என்று தங்கள் திருவாயினால் அழைத்தீர்கள் அல்லவா? இந்த நாளைக் காண நான் உயிரோடு இருந்தேன் அல்லவா? இதுவே போதும்! நான் பாக்கியசாலி ஆகிவிட்டேன். இனி ஒன்றும் எனக்கு வேண்டாம். இங்கு இப்போது நடந்தது இங்கு உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இராஜ்யத்தில் மேலும் குழப்பம் விளைய வேண்டாம்! கோடிக்கரைக்கு உடனே புறப்பட்டுப் போவதற்கு எனக்கும் பூங்குழலிக்கும் விடை கொடுத்து அனுப்புங்கள்!”

இந்த வார்த்தைகள் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உண்டாக்கிய உணர்ச்சிப் புயலைச் சொற்களினால் விவரிக்க முடியாது.

விம்மலும், கண்ணீரும் கலந்த மெல்லிய குரலில், “குழந்தாய் நீயே என் உத்தமப் புதல்வன்! நீயே தெய்வாம்சம் பொருந்திய, என் கணவரின் உத்தமக் குமாரன்!” என்று கூறினார்.

இவ்வளவு நேரமும் சுந்தர சோழர், சின்னப் பழுவேட்டரையர், இளையபிராட்டி குந்தவைதேவி ஆகியவர்கள் பிரமித்துப் போயிருந்தார்கள். அங்கே வெளியான இரகசியமும், அதனால் விளையக்கூடிய பலாபலன்களும் அவர்களுடைய உள்ளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கின.

அவர்களில் குந்தவைதான் முதலில் பேசும் சக்தி பெற்றாள். “தந்தையே! பெரிய பிராட்டியார் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று பிடிவாதம் பிடித்ததின் காரணம் இப்போது தான் தெரிகிறது!”

சுந்தர சோழரும், அப்போது பிரமிப்பும் திகைப்பும் நீங்கி, “ஆமாம், குமாரி! ஆனால் அந்தக் காரணம் இப்போது நீங்கி விட்டது. என் பெரிய அன்னையின் திருவயிற்றில் உதித்த உத்தமப் புதல்வனுக்கு முடிசூட்டுவதில் இனிமேல் அவருக்கு ஆட்சேபம் இருக்க முடியாது அல்லவா?” என்றார்.

செம்பியன்மாதேவி சிறிது பரபரப்புடன் சுந்தர சோழரைப் பார்த்து, “சக்கரவர்த்தி! என் குமாரன் சற்று முன் கூறிய வார்த்தைகளைக் கேட்கவில்லையா? இந்தச் செய்தி இங்கே உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவே வேண்டாம்! என் மகன் இராஜ்ய உரிமை கோரவில்லை. அதைத் தங்கள் முன்னால் அவன் வாயினாலேயே தெரிவித்துவிட்டானே!” என்றார்.

“ஆம் பிரபு! இந்தச் சோழ இராஜ்யத்தில் ஏற்கெனவே உள்ள சிக்கல்கள் போதும்! என்னால் வேறு புதிய சிக்கல் உண்டாக வேண்டாம். எனக்கு விடை கொடுங்கள்! என்னையும் என்னை மணந்துகொள்ள உவந்த பூங்குழலியையும் ஆசீர்வதித்து அனுப்புங்கள்!… பூங்குழலி! இங்கே வா!” என்றான் அமுதன்.

வாசற்படியின் அருகில் நின்று கொண்டிருந்த பூங்குழலி உள்ளே வந்தாள். சேந்தன் அமுதனும், பூங்குழலியும் முதலில் செம்பியன்மாதேவிக்கு நமஸ்காரம் செய்தார்கள். பின்னர், சக்கரவர்த்தியை வணங்கினார்கள். எழுந்து நின்றதும் சேந்தன் அமுதன், “பிரபு! நாங்கள் உடனே கோடிக்கரை போக விடை கொடுங்கள்! தாயே! விடை கொடுங்கள்!” என்றான்.

செம்பியன்மாதேவி சக்கரவர்த்தியைப் பார்த்து, “ஆம் ஐயா! இவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவோம். எனக்கு விருப்பமானபோது நான் கோடிக்கரை சென்று இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்!” என்றார்.

சுந்தர சோழர், “அது ஒருநாளும் இயலாத காரியம் நான் விடை கொடுக்கமாட்டேன்!” என்றார். முதன்மந்திரி குறுக்கிட்டு, “சக்கரவர்த்தி! எதுவும் இப்போது தீர்மானம் செய்ய வேண்டாம். இன்னும் சில தினங்கள் இவர்கள் என் இல்லத்திலேயே இருக்கட்டும். பெரிய பிராட்டியின் மகன் கிடைத்து விட்டார். ஆனால் சின்னப் பழுவேட்டரையரின் மருகர் கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய செய்தி வரும் வரையில் இவர்கள் இங்கு இருக்கட்டும். அதுவரை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரிய வேண்டாம்!” என்றார்.

“அருள்மொழியிடமாவது அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டும்!” என்றாள் இளைய பிராட்டி குந்தவை தேவி.

சுந்தர சோழர், “தேவி! எது எப்படியானாலும் ஆகட்டும். இத்தனை தினங்கள் கழித்து இன்றைக்குத் தங்கள் திருவயிற்றில் உதித்த மகன் உங்களிடம் வந்திருக்கிறான். உங்களை உடனே பிரிப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். சில தினங்களாவது இங்கே நீங்கள் சேர்ந்திருங்கள். என் அரண்மனையிலோ, முதன்மந்திரியின் மாளிகையிலோ தங்கியிருங்கள். இராஜ்ய உரிமையைப் பற்றி முடிவான தீர்மானம் ஆன பிறகு இவர்களைக் கோடிக்கரை அனுப்புவது பற்றி யோசிக்கலாம். அது வரையில் இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இச்செய்தி தெரியவேண்டாம்!” என்றார்.


78. அந்தபுரத்துச் சிறை

அருள்மொழிவர்மரின் மனம் பெரிதும் கலக்கம் அடைந்திருந்தது. இராஜ்ய உரிமை சம்பந்தமாகச் சோழ நாட்டில் எழுந்த கொந்தளிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்ததே அதற்கு முக்கிய காரணமாகும். அவர் மக்களை அமைதிப்படுத்துவதற்காகப் போன இடங்களிலெல்லாம் மக்களின் ஆவேசந்தான் அதிகமாயிற்று. “பொன்னியின் செல்வரே எங்கள் மன்னர்!” “அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்!” என்பவை போன்ற கோஷங்கள் எங்கெங்கும் எழுந்து நாலாபுறமும் முழங்கி எதிரொலி செய்தன.

இவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு, “பழுவேட்டரையர்கள் வாழ்க!” “கொடுங்கோலரான கொடும்பாளூர் வேளார் வீழ்க!” என்பவை போன்ற கோஷங்களும் சிற்சில இடங்களில் கேட்கும். அத்தகைய இடங்களில் அதிக பலம் தேடலாம் என்று இளவரசர் நெருங்கிச் சென்றால், உடனே அங்குள்ளவர்களும், “பொன்னியின் செல்வர் வாழ்க!” என்று முழங்கத் தொடங்கினார்கள். ஏன்? கோட்டைக் காவலுக்காக மாற்றி நியமிக்கப்பட்டிருந்த பழுவூர் வீரர்கள் கூடப் பொன்னியின் செல்வரைக் கண்டதும் தங்கள் பழைய கோஷங்களைக் கைவிட்டு, “அருள்மொழிவர்மரே திருமுடி புனையவேண்டும்! “ஈழங்கொண்ட வீராதி வீரர், பொன்னியின் செல்வர் நீடூழி வாழ வேண்டும்!” என்று முழங்கலானார்கள்.

இவ்வாறு தம்முடைய முயற்சி பொது மக்களிடையிலும் போர் வீரர்களிடத்திலும் வெற்றி பெறாமல் போனது மட்டுமன்றி, தம் கருத்துக்கு மாறான சூழ்நிலை பலப்பட்டு வருவதைக் கண்டு பொன்னியின் செல்வர் சங்கடம் அடைந்தார். சில தினங்களாக மதுராந்தகத்தேவர் காணப்படாமல் இருந்தது வேறு அவருடைய கவலையை அதிகமாக்கிற்று. இதன் பொருட்டுச் சின்னப் பழுவேட்டரையர் கொடும்பாளூர் வேளார் மீது குற்றம் கூறிக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்திருந்தது. அதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. அருள்மொழிவர்மருக்கே அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் இல்லாமற் போகவில்லை. தமக்குப் பட்டம் சூட்டிவிடவேண்டும் என்று கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் ஆகியவர்கள் உறுதி கொண்டிருந்தார்கள். அவர்களுடன் முதன்மந்திரி அநிருத்தரும் கலந்து சதி செய்வது போலத் தோன்றியது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் மதுராந்தகத்தேவரை எங்கேனும் மறைத்து வைத்து விட்டார்களோ, என்னமோ? அல்லது ஒருவேளை மதுராந்தகத்தேவரின் உயிருக்கே அபாயம் விளைத்து விட்டார்களோ?

இந்த நிலைமையில் யாரை நம்புவது, தம் அந்தரங்கத்தை யாரிடம் வெளியிட்டு ஆலோசனை கேட்பது என்று அவரால் நிர்ணயம் செய்யமுடியவில்லை. ஏன்? அவரிடம் இணையில்லா அன்பு கொண்டவரும் அவருடைய பக்திக்கு உரியவருமான தமக்கை குந்தவைப் பிராட்டியிடங்கூட அவருக்கு நம்பிக்கை குன்றிவிட்டது. அவரும் தனக்குத் தெரியாமல் ஏதோ காரியம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஏன்! அவருடைய உயிருக்கு உயிரான வானதிகூட அல்லவா அவருக்குத் தெரியாமல் எதையோ மறைத்து வைக்கப் பார்க்கிறாள்? திருட்டுத்தனமாக எங்கேயோ போய்விட்டு மர்மமான முகபாவத்துடன் திரும்பி வருகிறாள்?….

வேறு எதைப் பொறுத்தாலும் பொறுக்கலாம், வானதியின் மர்மமான நடத்தையை இனிப் பொறுக்க முடியாது என்று அருள்மொழிவர்மர் தீர்மானித்தார். வானதி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு எங்கேயோ தனியாகப் புறப்பட்டுப் போவதை அவர் கவனித்தார். உடனே அவளை அறியாமல் பின்தொடர்ந்து செல்லலானார். அரண்மனையின் மேல் மாடங்களின் தாழ்வாரங்களின் வழியாகச் சென்று, பின்னர்க் கீழ் மாடங்களில் இறங்கிச் சென்று, இருபுறமும் நெடிய சுவர்கள் அமைந்த இரகசியப் பாதை வழியாக வானதி மேலும் மேலும் சென்றாள். மதுராந்தகரை இரகசியமாகச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இடத்துக்குத்தான் அவள் போகிறாள் என்று கருதி அருள்மொழிவர்மர் மிக்க ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.

கடைசியாக, வானதி மற்றொரு பெரிய அரண்மனைப் பகுதியை அடைந்து அங்கு ஓர் அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்த முயன்றாள். அப்போது அருள்மொழிவர்மர் பாய்ந்து சென்று வானதியால் கதவைச் சாத்த முடியாமல் ஒரு காலை அறைக்குள்ளே வைத்தார்.

கதவைச் சாத்த முயன்ற அவளுடைய கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, “வானதி! உன் திருட்டுத்தனம் என்னிடம் பலிக்காது! இந்த அறையில் நீங்கள் ஒளித்து வைத்திருப்பது யார்?” என்று கோபமாக வினவினார்.

வானதியோ புன்னகை மலர்ந்த முகத்துடன், “ஐயா, உண்மையில் என் திருட்டுத்தனம் பலித்துவிட்டது! நான் அழைத்திருந்தால் தாங்கள் வந்திருக்க மாட்டீர்கள். உள்ளே வந்து இங்கு இருப்பது யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!” என்றாள்.

மதுராந்தகத்தேவரை எதிர்பார்த்துச் சென்ற அருள்மொழிவர்மர், அங்கே வல்லவரையன் வந்தியத்தேவன் கட்டிலில் படுத்திருப்பது கண்டு வியப்பும், உவப்பும் அடைந்தார்.

அவரைப் பார்த்த வந்தியத்தேவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து “ஐயா! வாருங்கள்! இரண்டு நாளாகத் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்களின் சிறையிலிருந்து என்னை எப்படியாவது விடுதலை செய்யுங்கள்!” என்றான்.

பொன்னியின் செல்வர் விரைந்து சென்று வந்தியத்தேவன் அருகில் அமர்ந்து, “நண்பா! இது என்ன? இங்கு எப்படி வந்தாய்? பாதாளச் சிறையிலிருந்து தப்பியவன் இந்தப் பெண்களின் சிறையில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? இத்தனை நேரம் நீ ஈழத்தில் இருப்பாய் என்று அல்லவோ நினைத்தேன்? இன்னும் சில நாளைக்கெல்லாம் நானும் அங்கு வந்து உன்னுடனே சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்?” என்றார்.

“ஆம் இளவரசே! இவ்வளவு நேரம் நான் ஈழ நாட்டில் இருக்கவேண்டியவன்தான்! அங்கே பாண்டிய வம்சத்தாரின் மணிமுடியையும், அவர்களுக்கு இந்திரன் தந்த இரத்தின ஹாரத்தையும் தேடிக் கொண்டிருக்க வேண்டியவன். சைவப் பைத்தியமான சேந்தன் அமுதனை கொல்லாமல் தடுக்க முயன்று இந்தத் துர்க்கதிக்கு உள்ளானேன். ஈட்டி என் மேல் பாய்ந்ததும் நினைவிழந்து விழுந்தேன். இந்தப் பெண்மணிகளின் சிறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பது தெரியாது. கருணைகூர்ந்து நான் இங்கிருந்து தப்பிச் செல்வதற்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் அருமைச் சகோதரரும், என் அருமைத் தலைவருமான ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என் பேரில் வீண் பழியைச் சுமத்திவிடுவார்கள்!” என்றான் வந்தியத்தேவன்.

வானதி குறுக்கிட்டு, “ஐயா! இவர் கூறுவது தவறு. இவர் தப்பி ஓடிப்போனால்தான் அத்தகைய பழி இவர் மீது ஏற்படும். உண்மை வெளியாகும் வரையில் இவர் இங்கேயே இரகசியமாக இருக்கவேண்டும் என்பது தங்கள் திருத்தமக்கையின் விருப்பம்” என்றாள்.

இதைக் கேட்டுக் கொண்டே அச்சமயம் அவ்வறையினுள் பிரவேசித்த குந்தவை, “தம்பி! ஒரு சந்தோஷமான சமாசாரம். அதைத் தெரிவிப்பதற்குத் தான் நான் விரைந்து ஓடி வந்தேன். மறைந்திருந்த மதுராந்தகத் தேவர் வெளிப்பட்டு விட்டார். சோழ குலத்து முன்னோர்கள் செய்த தவம் வீண் போகவில்லை! இராஜ்யம் என்ன ஆகுமோ என்று நீ கவலைப்பட வேண்டியதில்லை. அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நாம் பிடிவாதம் பிடித்து அவருக்கு மகுடாபிஷேகம் செய்து வைக்கவேண்டும்!” என்றார் இளையபிராட்டி.

அவருடைய உற்சாகம் மற்ற மூவருக்கும் சிறிது வியப்பை அளித்தது. பொன்னியின் செல்வர் அது சம்பந்தமான தம் வியப்பை அடக்கிக்கொண்டு, “தேவி! அவர் எங்கே மறைந்திருந்தார்? எதற்காக? எப்படி வெளிப்பட்டார்?” என்று கேட்டார்.

“நமக்கு அருகிலேயே அவர் இருந்து வந்தும் நம்மாலேதான் கண்டுகொள்ள முடியாமல் போயிற்று. தம்பி! செம்பியன்மாதேவியின் திருவயிற்றில் உதித்தவர்தான் சோழ சிங்காதனத்தில் ஏறத் தகுந்தவர். உன் சித்தப்பாவுக்குத்தான் இந்த ராஜ்யம் நியாயமாக உரியது. நீ மகுடம் புனையலாம் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிடு! ஓர் அதிசயத்தைக் கேள்! தம்பி! நாலு நாளைக்கு முன்னால் நம் சித்தப்பாவுக்கு ஒரு பெரிய கண்டம் வந்தது. கொலைகாரன் ஒருவன் அவர் மீது குத்தீட்டியை வீசி எறியக் குறி பார்த்தான். அதை அவன் எறிந்திருந்தால் மதுராந்தகத்தேவரின் உயிர் போயிருக்கும். சோழ குலத்தில் இன்னொரு அகால மரணம் ஏற்பட்டிருக்கும். அப்படி நேராமல் தடுத்த வீராதி வீரர் யார் தெரியுமா? தம் உயிரைக் கொடுக்கத் துணிந்து நம் சித்தப்பாவைக் காப்பாற்றியவர் யார் தெரியுமா?” என்று கூறிக் கொண்டே இளையபிராட்டி தம் விசாலமான கண்களை வந்தியத்தேவன் பேரில் திரும்பினார். அந்தக் கண்களில் ததும்பிய அன்பும் ஆர்வமும், நன்றியும் நன்மதிப்பும், ஆதரவும் அனுதாபமும் வந்தியத்தேவனது நெஞ்சின் அடிவாரம் வரையில் சென்று அவனைத் திக்குமுக்காடச் செய்தன. பொன்னியின் செல்வரோ வியப்புக் கடலில் ஆழ்ந்தவராக, “இது என்ன அக்கா! எனக்குப் புரியவில்லையே? என் தோழனும் இதுபற்றி எனக்குச் சொல்லவில்லையே?” என்றார்.

“அவர் சொல்லியிருக்க மாட்டார் ஏனெனில் அவர் செய்த காரியத்தின் பெருமையை அவரே உணர்ந்திருக்க மாட்டார். சோழ குலம் அவருக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறது என்று அவருக்கே தெரியாது!”

“அக்கா! புதிர்போடுவது போல் பேசுகிறீர்கள்? எல்லாம் ஒரே மர்மமாயிருக்கிறதே? எங்களை வீண் திகைப்புக்கு உள்ளாக்காமல் விளக்கமாகச் சொன்னால் நல்லது! இந்த வாணர் குல வீரர் மதுராந்தகரை எப்படி, எங்கே, எந்தவித அபாயத்திலிருந்து காப்பாற்றினார்? மதுராந்தகத்தேவர் இப்போது எங்கே?” என்று இளவரசர் கேட்டார்.

“பொன்னியின் செல்வ! இதோ இன்னும் சில வினாடிப் பொழுதில் அவரே இங்கு வந்து விடுவார்! நீ இங்கே வந்திருக்கிறாய் என்பது தெரிந்து, இவ்விடம் அழைத்து வரச் சொல்லியிருக்கிறேன். அவர் வாய்மொழியாகவே கேட்டுத் தெரிந்து கொள். அல்லது எல்லாவற்றையும் கண்ணால் பார்த்த பூங்குழலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்… இதோ அவர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது. ஆம்; அச்சமயம் அறைக்கு வெளியில் காலடிச் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் நாலு பேர் உள்ளே வந்தார்கள். முதன்மந்திரி அநிருத்தர், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன் ஆகியவர்கள் வந்தார்கள். சேந்தன் அமுதன் மட்டும் வழக்கத்துக்கு மாறாக விசித்திரமாக உடை அணிந்திருந்தான். தலையில் இளவரசுக் கிரீடம் அணிந்து, பட்டுப் பீதாம்பரமும், அரச குலத்துக்குரிய ஆபரணங்களும் புனைந்திருந்தான்.

அறைக்குள் வந்த கோஷ்டியினரை உள்ளே இருந்தவர்கள் சிறிது வியப்புடன் பார்த்தார்கள். “சகோதரி! மதுராந்தகர் வருவார் என்றல்லவோ சொன்னீர்கள்? அவரைக் காணோமே?” என்றார் அருள்மொழி.

“தம்பி! இதோ உன் முன்னால் இளவரசுக் கிரீடம் அணிந்து நிற்கிறாரே, இவர்தான் செம்பியன்மாதேவியின் திருவயிற்றில் உதித்த, சிவஞான கண்டராதித்தரின் புதல்வர். இவர்தான் நமக்கெல்லாம் சித்தப்பன் முறை பூண்ட சிவபக்திச் செல்வர். இத்தனை காலமும் சேந்தன் அமுதன் என்ற பெயருடன் அஞ்ஞாத வாசம் செய்து வந்தார். சோழர் குலம் செய்த பாக்கியத்தினால் இன்றைக்கு வெளிப்பட்டு வந்தார். இவரைத் தான் நாலு நாளைக்கு முன்னால் கொடியோன் ஒருவன் ஈட்டியினால் குத்திக் கொல்ல முயன்றான். அதைத் தடுத்து இந்த வாணர் குல வீரர் சோழ குலத்துக்கு இணையில்லாத உதவி புரிந்தார். நமது முதன்மந்திரியின் சீடரான இந்த வீர வைஷ்ணவர் இவர் சைவர் என்பதையும் பொருட்படுத்தாமல் இவரைக் கோட்டைக்குள் கொண்டு வந்து சேர்த்தார்!…”

இச்சமயத்தில் திருமலை குறுக்கிட்டு, “தேவி! இச்சைவருக்கு நான் எந்தவித உதவியும் செய்யவும் இல்லை. செய்ய விரும்பவும் இல்லை. வல்லத்து இளவரசரைப் பல்லக்கில் கொண்டு வருவது சாத்தியமாகும் பொருட்டு இவருக்கு மாறுவேடம் புனைந்து யானையில் ஏற்றி வந்தேன்” என்றான். குந்தவை, “ஆம், ஆம்! திருமலை நம்பி இரு வகையில் பேருதவி புரிந்திருக்கிறார். மதுராந்தகத் தேவருக்கு இளவரசுக் கிரீடம் அணிவித்து யானை மீது ஏற்றிக் கொண்டு வந்தபோது உண்மையிலேயே இந்த நாட்டின் சிங்காதனத்துக்குரியவரை அழைத்து வருகிறோம் என்று தெரிந்திராது. தம்பி! இத்தனை காலமும் மதுராந்தகத்தேவர் என்று நாம் எல்லோரும் எண்ணியிருந்தவர் உண்மையில் மதுராந்தகத்தேவர் அல்ல. இவர்தான் சோழ குலத்தின் தவப்பயனாக மூத்த எம்பிராட்டியின் வயிற்றில் உதித்தவர். நாம் அறிய முடியாத இறைவன் திருவிளையாடல் இவரை இத்தனை காலமும் குடிசையில் வாழ்ந்திருக்கச் செய்தது. ஆயினும் சோழர் தொல்குடியில் பிறந்ததனால் வந்த குணாதிசயங்கள் இவரிடம் குடிகொண்டிருந்ததை நாம் எல்லோரும் ஒவ்வொரு சமயம் பார்த்து வியந்திருக்கிறோம். முன்னொரு சமயம் உன்னை இவரும் பூங்குழலியும் கோடிக்கரையிலிருந்து நாகப்பட்டினம் வரையில் கொண்டு போய்ச் சேர்த்ததை மறக்க முடியுமா? இவர்தான் உண்மையில் நம் சித்தப்பா என்பதை இன்று செம்பியன் மாதேவியின் வாய்மொழியாகவும் அறிந்தோம். இவரும் ஒப்புக்கொண்டார். தம்பி! இந்தப் புண்ணிய தினத்தில் இவரை இவருடைய சொந்த அரண்மனைக்கு வரவேற்கிறேன். இத்தனை காலமும் நம்மைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தவரை இன்று நம் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்துவிடும்படி அழைக்கிறேன். இத்தனை நாளும் பிரிந்திருந்தவர் நம்மோடு வந்து சேர்ந்த வைபவத்தை எவ்வளவோ விமரிசையாகக் கொண்டாட வேண்டும். அதற்குத் தகுதியான காலம் இதுவன்று. இந்தச் செய்தியை எவ்வளவு தூரம் வெளியில் தெரியாமல் நமக்குள் வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஆகையால் நமக்குள்ளேயே இந்த வைபவத்தை நடத்திக் கொள்ளலாம். சித்தப்பா! இப்படி வாருங்கள்! நெடு நாளைய பிரிவுக்குப் பின்னர் இன்று சோழர் குலத்தில் வந்து சேர்ந்ததற்காக எங்கள் மகிழ்ச்சியை வேறு விதத்தில் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. என் அருமைச் சகோதரர்கள் வெளியூர்களுக்குப் போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி, அவர்கள் நெற்றியில் நான் திருநீறு பூசிக் குங்குமத் திலகம் இடுவது வழக்கம். அதுபோலவே இன்று திரும்பி வந்து சேர்ந்த தங்கள் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இடுகிறேன்!”

இவ்விதம் கூறிவிட்டு இளையபிராட்டி குந்தவை தேவி சேந்தன் அமுதன் என்று இத்தனை காலமும் பெயர் வழங்கிய மதுராந்தகன் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார்.

அப்போது முதன்மந்திரி அநிருத்தர் “சோழர் குலத் தோன்றல் இளங்கோ மதுராந்தகத்தேவர் நீடூழி வாழ்க!” என்று ஆசி கூறினார்.

“வாழ்க! வாழ்க!” என்று ஆழ்வார்க்கடியான் நம்பி எதிரொலி செய்தான்.


79. குற்ற விசாரணை

தஞ்சைபுரி அரண்மனையின் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சிங்காதனத்தில் வீற்றிருந்தார். அரண்மனைப் பெண்டிர்களில் முக்கியமானவர்கள் அவருக்கு இருமருங்கிலும் அமர்ந்திருந்தார்கள். சோழ நாட்டு அமைச்சர்களும், தளபதிகளும், அரசிளங்குமாரர்களும் சக்கரவர்த்தியின் முன்னிலையில் வணக்கமான பாவனையில் நின்று கொண்டிருந்தார்கள்.

சக்கரவர்த்தி சபையில் கூடியிருந்தவர்களைக் கண்ணோட்டமாகப் பார்த்துவிட்டு, “அழைத்தவர்கள் எல்லாரும் வந்திருக்கிறார்களா? கடம்பூர் மன்னரைக் காணோமே?” என்றார்.

“தந்தையும் மகனும் விரைவில் இங்கு வந்து சேருவார்கள்!” என்றான் பார்த்திபேந்திரன்.

சக்கரவர்த்தி, “முதல்மந்திரி! என் மனத்தில் உள்ள எண்ணங்களை நன்கு அறிந்திருக்கிறீர், எனக்கும் என் குலத்துக்கும் மிகவும் வேண்டியவர்களை இங்கே இப்போது அழைத்திருக்கிறேன். எதற்காக அழைத்தேன் என்பதையும், என் கருத்தையும் நீர்தான் இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். என்னைக் காட்டிலும் தெளிவாக உம்மால் சொல்ல முடியும் அல்லவா?” என்றார்.

“ஆக்ஞை, சக்கரவர்த்தி!” என்று முதல் அமைச்சர் கூறிவிட்டுச் சபையோரைப் பார்த்துச் சொன்னார்:

“பல காரணங்களினால் சக்கரவர்த்தியின் உள்ளம் புண்பட்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். வீராதி வீரனான மூத்த மகனைச் சமீபத்தில் நம் மன்னர் பறி கொடுக்க நேர்ந்தது. இளவரசர் இறந்த காரணமோ இன்னமும் மர்மமாக இருந்து வருகிறது. மூன்று ஆண்டுக் காலமாக அந்த வீரத் திருமகனை நம் அரசர் பார்க்கவில்லை. காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவிட்டுத் தந்தையை அங்கே வந்து தங்கியிருக்க வேண்டும் என்று கரிகாலர் செய்திக்கு மேல் செய்தி விடுத்தார் ஆயினும் சக்கரவர்த்தி போகவில்லை. அதன் காரணம் நீங்கள் எல்லாரும் அறிந்ததே. இந்தத் தஞ்சைமா நகரில் சக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருந்து வந்தார். நாடு நகரங்களில் பலவித வதந்திகள் உலாவி வந்தன. அத்தகைய சந்தர்ப்பங்களில் சக்கரவர்த்தி தஞ்சையை விட்டுச் சென்றால், பழுவேட்டரையர்களிடம் அவருக்கு நம்பிக்கை குன்றி விட்டதாக யாரேனும் எண்ணக்கூடும் அல்லவா? அத்தகைய எண்ணத்துக்கு இடம் கொடுக்க சக்கரவர்த்தி விரும்பவில்லை. நம் அரசர் சொல்வதற்கு தயங்கக்கூடிய ஒரு செய்தியை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதற்காக இங்கே கூடியுள்ள மன்னர் குலத் தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நம் அரசர் சில காலமாக உடல் நோயுற்றுக் கால்களின் சக்தியை இழந்திருந்தார். அதனால் அவர் உள்ளம் நலிவுற்றிருந்தது. ஆனால் அதைக் காட்டிலும் அதிகமாக அவர் உள்ளத்தைப் புண்படுத்திய மன நோய் ஒன்றும் இருந்தது. சோழர் பெருங்குலத்துக்கு உற்ற துணைவர்களாயும், பரம்பரையாக அக்குலத்துடன் உறவு பூண்டவர்களாயும், இந்தப் பெரிய சோழ சாம்ராஜ்யத்தைத் தாங்கும் வைரத் தூண்களாயும் இருந்த நீங்கள் ஒருவரோடொருவர் வேற்றுமைப்பட்டுப் பகைமை பூண்டிருந்தது நம் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் புண்படுத்தி உடல் நோயையும் வளர்த்து வந்தது. யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் அடைந்த இராஜாதித்தரின் தலைமையில் நீங்கள் அனைவரும் ஒருமுகமாகத் தக்கோலப் போர்க்களத்தில் சண்டையிட்டீர்கள். அந்தப் போர்க்களத்தில், இராஜாதித்தர் எதிர்பாராத வீர மரணம் அடைந்தபடியால் சோழ சைன்யம் தோல்வியுற்றது. ஆனால் உங்களுடைய வீரத்தினாலும், உறுதியினாலும் ஒற்றுமையினாலும் அத்தோல்வியையே வெற்றியாக மாற்றினீர்கள். இழந்த தொண்டை மண்டலத்தையும், கங்க மண்டலத்தையும் திரும்பக் கைப்பற்றினீர்கள். சேவூர்ப் போர்க்களத்தில் பாண்டியர்களை முறியடித்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி நமது நேர் ஆளுகைக்குள் கொண்டு வந்தீர்கள். ஈழ நாட்டில் மகிந்தனைப் புறங்கண்டு புலிக்கொடியை உயர்த்தினீர்கள். இவ்வளவு அரும் பெரும் காரியங்களை நீங்கள் அனைவரும் ஒருமைப்பட்டுச் சோழ சாம்ராஜ்யத்தின் நலமே உங்கள் நலம் என்று கருதி வந்ததினாலே சாதிக்க முடிந்தது.”

“அத்தகைய நன்னிலைமை சில ஆண்டுகளாக மாறிவிட்டது. எக்காரணத்தினாலோ உங்களுக்குள் மன வேற்றுமை ஏற்பட்டு விட்டது. இரண்டு கட்சியாகப் பிரிந்து விட்டீர்கள். இந்தப் பிளவை நீக்க வேண்டும் என்று நம் அரசர் பெருமான் எவ்வளவோ பாடுபட்டார். தமக்குப் பிறகு அரசுரிமை யாருக்கு என்பது பற்றித்தான் உங்களுக்கு வேற்றுமை என்பதை அறிந்தார். நீங்கள் யாரும் அதை நேர்முகமாகச் சக்கரவர்த்தியிடம் சொல்லவில்லை. ஆனாலும் இணையற்ற அறிவாளியான நம் பேரரசர் அதை ஊகித்து அறிந்தார். அரசுரிமை விஷயத்தை உங்கள் எல்லாருடனும் கலந்து மனம் விட்டுப் பேசி சமரசமாகத் தீர்த்து வைக்க விரும்பினார். அவ்விதம் அதைத் தீர்த்து வைத்த பின்னரே காஞ்சிக்குச் செல்வது என்று எண்ணியிருந்தார். சிவஞான கண்டராதித்த பெருமானின் திருக்குமாரருக்கே இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை உரிமையாக்க எண்ணியிருந்தார். இதை ஆதித்த கரிகாலரையும் ஒப்புக்கொள்ளச் செய்யலாம் என்று நம்பியிருந்தார். அதற்காகவே கரிகாலரை இங்கு வரும்படி சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார். அதற்கிடையில் எதிர்பாராத துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது. கரிகாலர் கடம்பூர் மன்னரின் மாளிகைக்கு வருகிறார் என்று அறிந்தபோது சக்கரவர்த்தி மனம் பூரித்தார். இதன் மூலம் உங்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமை நீங்கிவிடும் என்று எண்ணினார். கரிகாலர் சம்புவரையரின் திருக்குமாரியை மணந்து கொண்டால் முன் போல் நீங்கள் அனைவரும் ஒருமனப்படுவீர்கள் என்றும் இராஜ்ய உரிமை விஷயத்தையும் சுலபமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எண்ணினார். நானும் அவ்விதமே நினைத்தேன். உங்களில் பலரும் அவ்விதமே எண்ணியிருப்பீர்கள். நம் திருக்கோவலூர் மன்னர் கூட அதனாலேதான் ஆதித்த கரிகாலர் கடம்பூர் செல்வதற்குத் தடை சொல்லவில்லை. ஆனால் நம் எல்லாருடைய ஆசையும் பங்கம் உற்றது. கடம்பூர் அரண்மனையில் இளவரசர் கரிகாலர் அகால மரணம் அடைந்தார்…”

“அது எப்படி நேர்ந்தது என்பதைக் கண்டறிய போகிறோமா, இல்லையா? இதைத் தெரிந்துகொண்டு மேலே நீங்கள் பேசுவது உசிதமாயிருக்கும்” என்றார் திருக்கோவலூர் மலையமான்.

“ஆமாம்; அதைத் தெரிந்து கொள்ளாமல் மேலே எந்த யோசனையும் செய்வது சாத்தியமில்லை!” என்றார் சேனாதிபதி.

“வீரப் பெருமக்களே! நடந்தது நடந்துவிட்டது. போனதைப் பற்றிக் கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று சக்கரவர்த்தி கருதுகிறார்!” என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

“அது எப்படி முறையாகும்? சோழ குலத்தின் நீதி பரிபாலனம் உலகப் பிரசித்தியானது. இந்த ராஜ்யத்தில் ஒரு திக்கற்ற அனாதை உயிரிழந்தாலும், அது எப்படி நேர்ந்தது என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு யாராவது காரணம் என்று ஏற்பட்டபின் தக்க தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படியிருக்க பட்டத்து இளவரசர் என்று முடிசூடிய இளங்கோவின் அகால மரணத்தை எவ்வாறு விசாரிக்காமல் விடுவது?” என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

சுந்தர சோழர் பெருமூச்சு விட்டு, “கொடும்பாளூர் மாமா! கேளுங்கள்! என் அருமை மகன் அகால மரணம் அடைந்ததில் என்னைவிடத் துயரம் வேறு யாருக்காவது இருக்க முடியுமா? நானே விசாரணை வேண்டாம் என்கிறேன். ஏன்? இங்குள்ள யாரும் அதற்குப் பொறுப்பாளி அல்ல என்று நிச்சயமாக அறிந்துள்ளேன். நான் செய்த பாவத்தின் பயனாக என் மகனைப் பறி கொடுத்தேன். அதற்குப் பிராயச்சித்தம் என்ன உண்டோ சொல்லுங்கள்! செய்து விடுகிறேன் வேறு காரணம் தேட வேண்டாம்!” என்றார்.

“பிரபு! தாங்கள் இப்படிச் சொல்லுவதினால் குற்றத்துக்குப் பொறுப்பாளியான யாரையோ காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று ஏற்படும். நாட்டு மக்கள் ஏற்கெனவே இளவரசரது மரணத்தின் காரணம் பற்றிப் பலவாறு பேசிக் கொள்கிறார்கள். உண்மையைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கி விடுவதுதான் நல்லது. குற்றவாளி யாராயிருந்தாலும் உரிய தண்டனைக்கு ஆளாக வேண்டியதுதான்!” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

“நூற்றில் ஒரு வார்த்தை! அதுதான் நேர்மையான இராஜரீக முறை. இந்தப் பெருங்குற்றத்தை விசாரித்துத் தண்டிக்காவிட்டால், நாட்டு மக்களுக்கு நீதி பரிபாலனத்திலேயே நம்பிக்கை குன்றிப்போய் விடும்!” என்றான் பார்த்திபேந்திரன்.

“பெரியோர்களே! இதைப்பற்றி ஏன் இவ்வளவு யோசனையும், வாதப்பிரதிவாதமும்? இந்தச் சிறுவன் கூறுவது அதிகப் பிரசங்கமாக இருந்தால் மன்னித்து அருளுங்கள். இளவரசர் கரிகாலனைக் கொன்ற பாதகன் வந்தியத்தேவன். இன்னும் என்னத்திற்கு விசாரணை?” என்றான் கந்தமாறன்.

முதன்மந்திரி முதலில் பேசிக் கொண்டிருந்த போது கந்தமாறன் அங்கே வந்து விட்டான். அவன் வந்திருந்ததை அவன் குரலைக் கேட்ட பிறகுதான் மற்றவர்கள் கவனித்தார்கள்.

சுந்தர சோழர், “பிள்ளாய்! கந்தமாறா! பெரிய சம்புவரையர் எங்கே?” என்றார்.

“சக்கரவர்த்தி! என் தங்கை மணிமேகலையைச் சாந்தப்படுத்த என் தந்தை முயன்று கொண்டிருக்கிறார். விரைவில் வந்து விடுவார். இந்த மந்திராலோசனை சபையில் என்ன முடிவாகிறதோ, அதைத் தாமும் ஏற்றுக் கொள்வதாக என்னிடம் சொல்லி அனுப்பினார்!” என்றான் கந்தமாறன்.

“இளஞ் சம்புவரையரே! வந்தியத்தேவர் தான் இளவரசர் கரிகாலரைக் கொன்றதாக அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்கிறீர்? அது எப்படி? நீரே உம் கண்ணால் பார்த்தீரா? அல்லது பார்த்தவர்கள் யாரேனும் சொன்னார்களா?” என்று முதன்மந்திரி கேட்டார்.

“அமைச்சர் ஐயா! கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? இளவரசர் இறந்து கிடந்த இடத்தில் அந்த வாணர் குல வீரன்தான் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்தாலே குற்றவாளி என்று எழுதி ஒட்டியிருந்தது போல் தெரிந்தது. அதுவோ பழுவூர் இளைய ராணியின் அந்தப்புரம். அங்கே இவன் வேறு எதற்காகப் போனான்? குற்றவாளியில்லாவிட்டால், பாதாளச் சிறையிலிருந்து ஏன் தப்பித்து ஓடியிருக்க வேண்டும்?” என்றான் கந்தமாறன்.

“வந்தியத்தேவரும் பழமையான வாணர் குலத்தில் தோன்றியவர். அவருடைய மூதாதையர் ஒரு சமயம் பெரிய இராஜ்யத்தையே ஆண்டார்கள். சோழர் குலத்துக்குப் பெண் கொடுத்து உறவு பூண்டார்கள். குறுநில மன்னர் குலத்தில் வந்தவர்கள் மீது குற்றம் ஏற்பட்டால் சக்கரவர்த்தியே தர்மாசனத்தில் வீற்றிருந்து விசாரித்து முடிவு செய்வதுதான் மரபு!” என்றார் முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மராயர்.

அச்சமயத்தில் பெரிய சம்புவரையர் அந்த மந்திராலோசனை மண்டபத்தில் பிரவேசிக்கவே எல்லாருடைய கண்களும் அவர்பால் திரும்பின. அவர் முகத்தில் குடிகொண்டிருந்த வேதனையை அனைவரும் கவனித்தார்கள்.

கந்தமாறன் அவர் அருகில் சென்று மெல்லிய குரலில் “மணிமேகலை எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

சம்புவரையர் “அப்படியேதான் இருக்கிறாள். உன் அன்னையை அவளுக்குக் காவல் வைத்துவிட்டு வந்தேன்!” என்று உரத்த குரலில் கூறினார்.

சக்கரவர்த்தி சம்புவரையரைப் பார்த்து, “ஐயா! தாங்கள் தங்கள் செல்வக்குமாரியின் அருகில் இருப்பது அவசியமானால் அவ்வாறே செய்யலாம். நம்முடைய ஆலோசனையை நாளை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

“இல்லை, பிரபு! ஆதித்தர் மரணத்திற்குப் பிறகு அவள் மன நிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அவள் அருகில் நான் இருந்து பயன் ஒன்றுமில்லை” என்றார் சம்புவரையர்.

அவர் பேச்சில் தொனித்த வேதனை நிறைந்த துயரமும் மனக் கசப்பும் அந்தச் சபையில் சிறிது நேரம் மௌனம் குடிகொள்ளும்படி செய்தது.


80. யாருக்கு முடிசூட்டுவது?

முதன்மந்திரி அநிருத்தர், “ஐயா! தங்கள் மாளிகையில் நடந்த விபரீத சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இளவரசர் தங்கள் மாளிகையில் அகால மரணம் அடைய நேர்ந்ததினால் தங்கள் உள்ளம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் எல்லாரும் உணர்ந்திருக்கிறோம். அதற்குத் தங்களை எந்த விதத்திலும் பொறுப்பாக்கச் சக்கரவர்த்தி விரும்பவில்லை. ஆனாலும் நாடு நகரங்களில் நாளாவிதமான வதந்திகள் பரவாமலிருக்கும் பொருட்டு இளவரசரின் மரணம் எவ்விதம் நேர்ந்தது என்று நிச்சயமாகத் தெரிந்தால் நல்லது அல்லவா? இந்தச் சபையில் கூடியுள்ளவர்கள் அவ்வாறு கருதுகிறார்கள். அதைப்பற்றித் தாங்கள் ஏதாவது தெரியப்படுத்துவதற்கு இருக்கிறதா? வாணர் குலத்து வந்தியத்தேவனால்தான் இளவரசரின் மரணம் நேர்ந்தது என்று இளஞ் சம்புவரையர் சாதிக்கிறார் தங்களுடைய கருத்து என்ன?” என்று கேட்டார்.

சம்புவரையர் சிறிதுநேரம் திகைத்து நின்றார். பின்னர் நாலாபுறமும் பார்த்தார். அவருடைய பார்வை கந்தமாறன் பேரில் விழுந்ததும், “ஆம், ஆம்! இந்த மூடன் அவ்வாறு தான் அன்றைக்கும் சொன்னான் அதை நான் நம்பவில்லை; இன்றும் நம்பவில்லை. இவன் வார்த்தையைக் கேட்டு இளவரசர் கரிகாலரைக் கடம்பூர் மாளிகைக்கு வரும்படி அழைத்தேன். அதனால் இத்தனை விபரீத விளைவுகள் நேர்ந்துவிட்டன. எனக்கும் என் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்பட்டு விட்டது?” என்றார்.

கிழவர் மலையமான் இரங்கிய குரலில், “சம்புவரையரே! பதற வேண்டாம்! நடந்தது நடந்து விட்டது! நல்ல எண்ணத்துடனே தான் தாங்கள் என் பேரப் பிள்ளையைத் தங்கள் மாளிகைக்கு அழைத்தீர்கள். கரிகாலனுடைய மரணத்துக்குத் தங்களைப் பொறுப்பாக்க இங்கே யாரும் எண்ணவில்லை. ஆகையினால்தான் உண்மையை அறிய விரும்புகிறோம். அதற்குத் தாங்கள் உதவி செய்தால் நலமாயிருக்கலாம்!” என்றார்.

“நான் என்ன உதவி செய்ய முடியும்? என் மகன் ஒன்று சொல்லுகிறான், அதற்கு நேர்மாறாக என் மகள் இன்னொன்று சொல்லுகிறாள். இருவர் பேச்சையும் என்னால் நம்பமுடியவில்லை. எனக்கும் உண்மை தெரியவில்லை. கண்களைக் கட்டிக் காட்டிலே விட்டதுபோல் இருக்கிறது. உண்மையில் நடந்ததை அறிவதற்கு என்னைக் காட்டிலும் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் உதவி செய்யக்கூடும் அவரைக் கேளுங்கள். அவர்தான் எல்லாவற்றுக்கும் மூலகாரணம். அவர்தான் முதன் முதலில் மதுராந்தகத் தேவரை ரகசியமாகக் கடம்பூருக்கு அழைத்து வந்தார். என் மகளை அவருக்கு மணம் செய்து கொடுக்கும்படியும் சொன்னார். அதிலிருந்து என் குடும்பத்துக்குச் சனியன் பிடித்தது. பின்னர், பெரிய பழுவேட்டரையர் தமது இளையராணியை அழைத்துக் கொண்டு வந்தார். காஞ்சியிலிருந்து இளவரசரையும் வரப் பண்ணினார். இரண்டு பேரையும் என் மாளிகையில் விட்டு விட்டுப் போய்விட்டார். ஏன் போனார் என்று கேளுங்கள். அவருடைய இளையராணி இப்போது எங்கே போனார் என்று கேளுங்கள்…!”

இவ்விதம் சம்புவரையர் வெறி கொண்டவர் போல் எதையெல்லாமோ பேசிக் கொண்டே போனார்.

சக்கரவர்த்தி குறுக்கிட்டு, “போதும்! போதும்! நிறுத்துங்கள்! இதனாலேதான் நடந்துவிட்ட காரியத்தைப் பற்றி விசாரணை ஒன்றும் வேண்டாம் என்று நான் சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை. ஏற்கனவே உங்களுக்குள்ளே இருக்கும் வேற்றுமை போதாதா? புதிய பூசல்கள் வேறு வேண்டுமா? சம்புவரையரே! உங்கள் மாளிகையில் நடந்ததற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. அதனாலேதான் உங்களை உடனே பாதாளச் சிறையிலிருந்து விடுவிக்கச் சொன்னேன். என் வீரப் புதல்வன் அகால மரணம் அடைந்ததற்கு என்னுடைய பழைய பாவங்கள்தாம் காரணம். யார் பேரிலும் குற்றம் இல்லை. நீங்கள் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். பெரிய பழுவேட்டரையரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை!” என்றார்.

அப்போது பெரிய பழுவேட்டரையர் சிம்ம கர்ஜனையைப் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பெரும் குரலில் பேசினார்: “சோழர் குலக் கோமானே! கருணை கூர்ந்து மன்னிக்கவேண்டும். நான் பேசாமலிருக்கலாகாது! என் மனத்தில் உள்ளதைக் கூறியே ஆகவேண்டும். உண்மையை நான் அறிந்தபடி சொல்லியே ஆகவேண்டும். ஆம், பெருமானே! உண்மையை எதற்காகச் சொல்லவேண்டும் என்றும், சொல்லாமலே என் பிரதிக்ஞையை நிறைவேற்றி விடலாம் என்றும் எண்ணியதுண்டு. சோழர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து வருங்காலத்தில் காப்பாற்ற முடியாவிட்டால் என் தலையை நானே வெட்டிக்கொண்டு உயிர் விடுவேன் என பிரதிக்ஞை செய்திருந்தேன். ஆதித்த கரிகாலரைக் காப்பாற்ற என்னால் முடியவில்லை. ஆகையால் என் பிரதிக்ஞையை நிறைவேற்றியே தீரவேண்டும். அதற்கு முன்னால் எனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லிவிட விரும்புகிறேன். இல்லாவிட்டால் வீணான பலப் பல சந்தேகங்கள் ஏற்பட்டு வீண் பழிகள் சுமத்தப்பட ஏதுவாகும்!”

இவ்வாறு பெரிய பழுவேட்டரையர் கூறி நிறுத்தியபோது அந்தச் சபையில் பரிபூரண மௌனம் குடிகொண்டிருந்தது.

சக்கரவர்த்தி தழுதழுத்த குரலில், “மாமா! சற்று யோசியுங்கள்! எதற்காகத் தாங்கள் நடந்து போன காரியங்களைப் பற்றிப் பேச வேண்டும்? இறந்தவர்களின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. தாங்கள் மனமறிந்து சோழ குலத்துக்கு எந்தவிதத் துரோகமும் செய்திருக்க மாட்டீர்கள்! ஆகையால், நடந்து போனதை மறந்து விட்டு இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம்!” என்றார்.

“இல்லை ஐயா! நடந்து விட்டதைப் பற்றி நான் பேசியே ஆகவேண்டும். சோழர் குலத்துக்கு நான் எவ்வளவு பெரிய துரோகம் செய்வதற்கிருந்தேன் என்று கூறியே தீரவேண்டும். தங்களுக்கும் எனக்கும் குலதெய்வமான துர்க்கா தேவிதான் அவ்விதம் நேராமல் தடுத்தாள். அந்த அன்னை பரமேசுவரிக்கு என் காணிக்கையைச் செலுத்தியே தீரவேண்டும். கருணை கூர்ந்து நான் சொல்லப் போவதைச் செவிகொடுத்துக் கேளுங்கள்!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.

அவர் பேசுவதைத் தடை செய்ய முடியாது என்று கண்ட சக்கரவர்த்தியும் சும்மா இருந்தார்.

பின்னர், பெரிய பழுவேட்டரையர் தாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சாலையோரத்தில் நந்தினியைச் சந்தித்து அவள் பேரில் மோகம் கொண்டது முதல் நடந்ததையெல்லாம் ஒன்றையும் மறைக்காமல் எடுத்துச் சொன்னார். தம் சகோதரர் சின்னப் பழுவேட்டரையர் அடிக்கடி எச்சரிக்கை செய்தும் தாம் பொருட்படுத்தாததைக் கூறினார். நந்தினியின் தூண்டுதலினால் மதுராந்தகத்தேவருக்குச் சோழ சிங்காதனத்தை உரிமையாக்க எண்ணியதையும் அதற்காக மற்ற சிற்றரசர்களுடன் சேர்ந்து சதி செய்ததையும் கூறினார். நந்தினியின் மூடுபல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போனதைப் பற்றியும் சம்புவரையர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த கூட்டத்தைப் பற்றியும் கூறினார். கடைசியாக, கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதனால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களின் திட்டம் இன்னதென்று அறிந்து கொண்டதையும், விரைந்து திரும்பிக் கடம்பூர் சென்றதையும் கூறினார். இடும்பன்காரியின் உதவியினால் இரகசிய வழியில் சென்று அந்தப்புரத்தை அடைந்ததையும் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்திருந்து நந்தினிக்கும், இளவரசருக்கும் நடந்த சம்பாஷணையை ஒட்டுக் கேட்கும் ஆர்வத்தினால் ஒரு நிமிடம் தாமதித்ததையும், அதற்குள் இளவரசர் மாண்டு விழுந்ததையும் தெரிவித்தார். அவரைத் தாங்குவதற்காகத் தாம் பாய்ந்து சென்றபோது விளக்கு அணைந்ததையும் விவரித்தார்.

“சக்கரவர்த்தி! இவ்விதம் சோழர் குலத்துக்கு நான் பெருந்துரோகம் செய்தவனாவேன். பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுக்கு என்னுடைய அரண்மனையிலேயே இடம் கொடுத்தேன். நம்முடைய பொக்கிஷத்திலிருந்து அவர்கள் சதிச் செயலுக்கு வேண்டிய பொருள் கொண்டு போக அனுமதித்தேன். தங்களையும், தங்கள் புதல்வர்கள் இருவரையும் ஒரே சமயத்தில் கொன்று விடுவதற்கு அந்தச் சதிகாரர்கள் திட்டமிட்டார்கள். தங்களை செவிடும் ஊமையுமான ஒரு தெய்வப் பெண்மணி தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றினாள். பொன்னியின் செல்வரைக் கேவலம் அறிவற்ற மிருகமாகிய ஒரு யானை காப்பாற்றியது. நான் ஆதித்த கரிகாலரைக் காக்க முயன்று தோல்வியுற்றேன். அவருடைய அகால மரணத்துக்கு நானே ஆதியிலும், நடுவிலும் முடிவிலும் காரணமானேன். ஐயா! துர்க்கா பரமேசுவரியின் சந்நிதியில் நான் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையை இதோ நிறைவேற்றுவேன்!” என்று கூறிவிட்டுத் தம் நீண்ட கரத்தில் பிடித்திருந்த வாளை வீசினார். அவருடைய நோக்கத்தை அறிந்து கொண்ட அனைவரும் திடுக்கிட்டுப் பிரமித்து நின்றார்கள். சிறிது சிறிதாக அவர் அருகில் வந்திருந்த பொன்னியின் செல்வர் மட்டும் சட்டென்று பாய்ந்து பெரிய பழுவேட்டரையரின் வாள் ஓங்கிய கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.

“ஐயா! பொறுங்கள்! வழிவழியாகச் சோழர் குலத்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது பழுவேட்டரையர்கள் தான் கிரீடத்தை எடுத்துத் தலையில் வைப்பது வழக்கம். என் பட்டாபிஷேகத்தின் போதும் தங்கள் ஆகிவந்த கரத்தினால் தான் முடிசூட்ட வேண்டும். அதற்குப் பிறகு தங்கள் விருப்பம் போல் செய்துகொள்ளலாம் அதுவரையில் பொறுத்திருங்கள்!” என்றார்.

சுந்தர சோழர் உருக்கம் நிறைந்த குரலில் கூறினார். “மாமா! இது என்ன வார்த்தை? இது என்ன காரியம்? தாங்கள் சோழ குலத்துக்கு அப்படி என்ன துரோகம் செய்து விட்டீர்கள்? ஒன்றுமில்லையே? என்னுடைய குமாரர்களுக்குப் பதிலாக என் பெரியப்பாவின் குமாரரைச் சிங்காசனத்தில் அமர்த்த எண்ணினீர்கள். அது சோழ குலத்துக்கு எப்படித் துரோகம் செய்வதாகும்? என் புதல்வர்களைக் காட்டிலும் என் பெரிய தந்தையின் குமாரனுக்குச் சோழ குலத்து மணிமகுடம் புனைய அதிக உரிமை உண்டல்லவா? இப்போதுகூட, என் மனத்தில் உள்ளதைச் சொல்ல நீங்கள் அனுமதி கொடுத்தால்…”

முதன்மந்திரி அநிருத்தர் குறுகிட்டு, “பிரபு! இந்த நாடெங்கும் ‘அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்’ என்ற குரல்கள் ஒலிக்கின்றன. கண்டராதித்த தேவரின் திருக்குமாரரும் அதே உறுதி கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வரும் அதே முடிவுக்கு வந்து விட்டார். இனி, அதற்கு மாறாக யோசனை எதுவும் செய்வதில் பயன் ஒன்றுமில்லை!” என்றார்.

“நீங்கள் யாரேனும் அவ்வாறு யோசனை செய்தாலும் நான் ஒப்புக்கொள்ள முடியாது!” என்றார் சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத்தேவர்.

“என் மகன் கூறுவதுதான் சரி. இனி வேறு யோசனை செய்ய வேண்டியதில்லை!” என்றார் செம்பியன் மாதேவியார்.

“அன்னையே! தங்கள் வார்த்தைக்கு எதிர் வார்த்தை கூறக் கூடியவர் இங்கு யாரும் இல்லை. கடவுளின் விருப்பத்தின்படி நடக்கட்டும். ஆனாலும் பழுவூர் மாமா நம் குலத்துக்குத் துரோகம் செய்து விட்டதாகக் கூறித் தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவது சரியில்லைதானே? தங்கள் திருக்குமாரருக்கு முடிசூட்ட வேண்டும் என்று அவர் பிரயத்தனப்பட்டது சோழ குலத்துக்குத் துரோகம் செய்தது ஆகாது அல்லவா?” என்றார் சக்கரவர்த்தி.

பெரிய பழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கூறலுற்றார்: “ஐயா! கேளுங்கள்! என்னுடைய முயற்சி பலிதமாயிருந்தால் எவ்வளவு பயங்கரமான விபரீதம் நடந்திருக்கும் என்பதைக் கேளுங்கள்! இதை நான் சொல்லாமலே என் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினேன். ஆயினும் இப்போது என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு உண்மையைச் சொல்லிவிடத் தீர்மானித்து விட்டேன். சக்கரவர்த்தி! நாங்கள் மகான் கண்டராதித்தரின் குமாரர் என்று எண்ணிச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு இருந்தவன் சோழ குலத்துக்குப் பரம்பரைப் பகைவனான வீர பாண்டியனுடைய மகன்!…”

“ஐயையோ!” “இல்லை!” “அப்படி இருக்க முடியாது!” என்றெல்லாம் அச்சபையில் குரல்கள் எழுந்தன.

“உங்களுக்கு நம்புவது கஷ்டமாகத்தானிருக்கும். என் காதினாலேயே நான் கேட்டிராவிட்டால் நானும் நம்பியிருக்கமாட்டேன். அரசர்க்கரசே! என்னுடைய அவமானத்தை நான் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பாதகியும் அவளுடன் சதி செய்தவர்களும் கரிகாலரைக் கொன்று விட்டு வீரபாண்டியனுடைய குமாரனையே சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். நம் குலத்தெய்வமான துர்க்காதேவியின் அருளினால் அத்தகைய கொடிய விபரீதம் நேராமல் போயிற்று.”

அடுத்த கணத்தில் சொட்ட நனைந்திருந்த ஈரத் துணிகளிலிருந்து தண்ணீர்த் துளிகளைச் சிந்த விட்டுக் கொண்டு வந்தியத்தேவன் அந்த மந்திராலோசனை மண்டபத்தில் பிரவேசித்தான். அவனுடைய முகத்தின் மிரண்ட தோற்றமும் அவன் உள்ளே வந்த அலங்கோலமான நிலையும், வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனுடைய உடல் ஏதோ ஒரு ஜால வித்தையினால் எழுந்து நடமாடுவது போன்ற பிரமையைப் பார்த்தவர்களின் உள்ளத்தில் உண்டாக்கின.

– தொடரும்…

நன்றி: http://poniyinselvan.blogspot.com/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *