மீசை வைத்த கேயிஷா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 9,620 
 

ஒரு கணவன் மனைவி.

எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன் மனைவி. திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றன. இருவருக்கும் வேலை. வேலை முடிந்து வீடு. வந்ததும் ஆளாளுக்குக் கையில் ஒரு ஐபாட். யார் யாருடனோ சட்டிங். எதுவெதற்கோ சிரிப்பு. இருவருக்கும் பொதுவாக வரவேற்பறையில் ஓடிக்கொண்டிருக்கும் டிவி. இவர்கள் தமக்கிடையில் மனம்விட்டுச் சிரிப்பதும் பேசுவதும் அவ்வப்போதும் சிணுங்கும் தொலைபேசி அழைப்புகளோடுதான். மற்றும்படி டிவியின் விளம்பர இடைவேளைகளில் “மதியம் என்ன சாப்பிட்டாய்?”, “கரண்ட் பில் கட்டியாயிற்றா?”, “வருட இறுதியில் கம்போடியா போவோமா?”, “இரவு உணவுக்கு பிட்ஸா வாங்குவோமா?” என்கின்ற வழமையான அலுத்துப்போனக் கேள்விகள். இரண்டுவாரங்கள் தொடர்ச்சியாகக் கவனித்தால் பதில்கள்கூட மீளச்சுழற்சிக்குள்ளாவது புலப்படும். எப்போதாவது மழைநாள் இரவு, குளிர், டிவியில் ஒளிபரப்பாகும் பதின்மவயதில் ரசித்தப்பாடல், இணையத்தில் இக்கொக்னிட்டோ திரையில் பார்த்த கூசிழிவுப்படம் கொடுத்த எழுச்சி என்ற அற்ப காரணங்களுக்காகக் காமம் மேலிடலாம். காரணங்களைக்கூட சமயத்தில் காமம்தான் தானாகவேத் தேடுகிறதோ என்றுகூடத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் அன்றைய இரவில் வெறும் பல்லி கொட்டிய உச்சிலேயே எதற்காகச் சம்பவம் நிகழவேண்டும்?

அவர்களின் காமம் தானியங்கிகளாலான இயந்திரத் தொழிற்சாலைபோலவே இயங்குகிறது. எல்லாமே டியூன் செய்யப்பட்ட பொம்மைகள்போல வேலை பார்க்கின்றன. கிரமமாக இயங்கி, சிரித்து, கதைத்து, தழுவி, ஆடை அகற்றி, முத்தம்கொடுத்து என்று உற்பத்திப்பண்டம் ஈற்றில் பொதிசெய்யப்பட்டு சீல் அடிக்கப்படும். தொழிற்சாலை சைரன் ஒலித்ததும் அத்தனை தொழிலாளர்களும் தத்தமது உடை அணிந்தபடியே புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்றுவிடுவர். அப்புறம் தொழிற்சாலை வெறிச்சோடிவிடுகிறது.

இந்த உறவின் பட்டவர்த்தமான வெறுமை எப்போதுமே அயர்ச்சியையே கொடுக்கிறது. இயல்பு கொடுக்கும் வரட்சியில் தொண்டை காய்ந்துவிடுகிறது. ஒரு நீர்வீழ்ச்சியின் கீழே நின்று ஆவென்று வாயைத் திறந்துவைத்தபடி வாழ்நாள் முழுதும் தாகம் தீர்க்கவேண்டும். அல்லது வீட்டிற்குப்பின்னாலே எங்கேயாவது எலிப்பொந்து இருக்கிறதா என்று தேடவேண்டும். அலைஸ் இந்தவழியால் போனாளா என்று விசாரிக்கவேண்டும். இப்போது அலைசுக்கு இருபது வயதாகியிருக்குமா? அல்லது இருநூறா? ஆர்வம் மேலிடுகிறது. அலைஸ்மீதான ஈர்ப்பு அவளின் பருவத்தின்மீதா அல்லது அவளுடைய அதிசய உலகம்மீதா? பொந்துக்கு வெளியே அலைஸ் வந்துவிட்டாளானால் அவளுடைய சமூக இருப்புத்தான் என்ன? வேண்டாம். நமக்கு நீர்வீழ்ச்சியே போதும். அல்லது பேசாமல் போர்த்திப்படுத்துக்கொண்டு, தாமரையையோ, பிண்டியையோ, வஞ்சியையோ, வாழையையோ… குறிஞ்சிப்பாட்டில் மாத்திரம் தொன்னூற்றியொன்பது மலர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நசுக்கலாம். பூவிடைப்படுதல் என்று இதனைத்தான் சொல்லியிருப்பார்களோ. அழி மழை தென்புலம் படருகிறதல்லவா. பொழியட்டும்.

…அல்லது கனவோடையில் ஒரு காதல் கதை நிகழவேண்டும். நிகழாவிட்டால் நிகழ்த்தவேண்டும். அதற்கு ஒருவழி எழுதுவது. திகட்ட திகட்ட வர்ணிப்புகளுடன் உணர்வுகளைக் கிளறி கனவுலகில் ஒரு காதல்கதை. காற்று வெளியிடைக் கண்ணம்மா என்று அற்புதமான கவிதைகளால் உலகை நிரப்பி, அதன் ஒவ்வொரு மூலக்கூற்றையும் விளித்து எழுதி, நடுக்கூற்றாய் ஒரு தேவதையை, ஜேன் ஒஸ்டினின் மரியான்னேபோல ஒருத்தியை உலவவிட்டு,

என்னுடைய பல ரொமாண்டிசக் கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கின்றன.

குட்டிக்கண்கள். குட்டிக்காதுகள். குட்டி மூக்கு. குட்டி உதடு. குட்டி நாடி. குட்டிக் கழுத்து. குட்டி மார்பு. குட்டி இடை. குட்டிக்கைகள். குட்டிக்கமர்கட்டு. குட்டிக் கால்கள். குட்டி நகங்கள். குட்டிப்பற்கள். குட்டி இமைகள். குட்டிக் கருவிழி. குட்டி உதட்டுமேல் அரும்புமுடி. குட்டி விரல்கள். குட்டித்தொடைகள், குட்டி முழங்காற் சிரட்டை. குட்டிக் கணுக்கால். குட்டிக் கணுக்கால் மச்சம். குட்டித் தோள்கள். குட்டி எக்செட்ரா, குட்டி எக்செட்ரா, குட்டி எக்செட்ரா என அனடமியில் இருக்கும் அத்தனை பெயர்களுக்குமுன்னே ஒரு குட்டியைப்போட்டு விபரித்தால்;

கேயிஷா. என்னைப்பார்த்துக் குட்டியாய்ச் சிரித்தாள்.

சங்கடத்தோடு சிரித்துவைத்தேன். கேயிஷாவைப் பார்த்தவுடனேயே பட்டாம்பூச்சியோ அண்டங்காக்காவோ எதுவுமே பறக்கவில்லை. வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில் ஒரு புழு பூச்சிகூட உருளவில்லை. கோயில் மணி ஒலிக்கவில்லை. கேயிஷா என்றில்லை. எனக்கு எந்த ஜப்பானியப் பெண்களையும் பார்த்தவுடன் பிடித்ததில்லை. என்னுடைய தமிழ் டி.என்.ஏ, முறிந்துபோன கொக்கந்தடிபோன்ற பெண்களை ரசிக்கின்ற கூர்ப்புத்திறனை இன்னமும் அடையவில்லை. ஜப்பானியப் பெண்களைப்பார்த்தாலே எனக்கு நின்ஜா காமிக்ஸ் சித்திரங்களில் காட்சிதரும் வாள்வீசும் பெண்கள்தான் ஞாபகம் வரும். இத்தனைக்கும் நான் இதுகாலும் ஒரு நின்ஜா காமிக்ஸ் கதைகளையும் வாசித்ததில்லை. எல்லாமே அட்டைப்படம்தான். கேயிஷாவையும் பிடிக்கவில்லை. என்னுடைய மரியான்னேயின் கால்தூசிக்குக்கூட இவள் ஒப்பாகாள். ஆனால் இந்த கேயிஷாவைத்தான் காதலிக்கவேண்டும் என்று நினைக்கும்போது எரிச்சல் எரிச்சலாக வந்தது. தொழிற்சாலையில் தவறான மூலப்பொருளைக் கொண்டுவந்துகொட்டி “இந்தா தயாரி” என்று சொல்லுவதுபோல. எப்படி முடியும்? எல்லாமே குட்டியாக இருக்கும் ஒருத்தியை எப்படி அணுகுவது? செல்லமாக அவள் மூக்கைக்கூடக் கடிக்கமுடியாது. அவ்வளவு சின்னது. அகப்படாது. ஏதாவது செய்யவேண்டும்.

ஒரு பூதக்கண்ணாடியை கையிலெடுத்தேன்.

அவள் மூக்கினை பூதக்கண்ணாடியால் அளந்தேன். முட்டியது. கருவிழியைப் பார்த்தேன். தீக்கோழி முட்டையில் கருவட்டம் வரைந்ததுபோலத் தெரிந்தது. உதட்டைப் பார்த்தேன். பிருமாண்டமாகத் தெரிந்தது. இப்படி என் பூதக்கண்ணாடி அங்குமிங்கும் அலைய ஆரம்பித்தது. கேயிஷா எனக்குப் பூரணமாகத் தெரிய ஆரம்பித்தாள். விபரிப்பே மாறிவிட்டது. ஒரு பூதக்கண்ணாடியால் கேயிஷாவைச் செதுக்க ஆரம்பித்தேன்.

முட்டைக் கண்கள். யானைக்காதுகள். பெரிய மூக்கு. குட்டி உதடு. குட்டி நாடி. பெரிய கழுத்து. குட்டி மார்பு. பிருமாண்ட இடை. குட்டிக்கைகள். குட்டிக்கமர்கட்டு. குட்டிக் கால்கள். பெரிய நகங்கள். கோரைப் பற்கள். பெரிய இமைகள். பெரிய கருவிழி. குட்டி உதட்டுமேல் பிரமாண்ட மீசை. குட்டி விரல்கள். குட்டித் தொடைகள், குட்டி முழங்காற் சிரட்டை. குட்டிக் கணுக்கால். குட்டிக் கணுக்கால் மச்சம். குட்டித் தோள்கள். குட்டி எக்செட்ரா, பெரிய எக்செட்ரா, பிருமாண்ட எக்செட்ரா என இப்போது கேயிஷா தெரிந்தாள். இந்தப்பிம்பம் போதும். இப்போது இவள் ஜப்பானியச் சப்பை மூக்குக்காரி அல்ல. என்னுடைய கேயிஷா. எவருமே அறியாத கேயிஷா. மரியான்னேயின் நவீனத்துவ உருவம். என் தமிழ் டி.என்.ஏயின் ஈர்ப்பு முறுக்குகள் சிலிர்த்துக்கொண்டன. தொழிற்சாலை மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. ஒரு பூதக்கண்ணாடி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அடிவயிற்றில் இப்போது மலைப்பாம்பே துவண்டது. தூரத்தில் குண்டு வெடித்தது. பல்லி உச்சுக்கொட்டியது. என் உணர்தல். என் கற்பனை. என் அனுபவம். என் கொண்டாட்டம். இவளைக்காதலிக்க இனிமேல் நிலவொளி தேவையில்லை. அவித்துக்கொட்டும் மதியவெயிலிலும் ரீங்காரமிடும் இலையான்களுக்கு மத்தியிலும் புளிச்சல் நாற்றத்துக்கு நடுவிலும் கேயிஷா எனக்குத் தேவதையாகவே தெரிவாள். ஒரு பூதக்கண்ணாடி என் கனவினைச் சிருஷ்டித்துத் தந்துவிட்டது. அதுவும் இரண்டு நாட்களுக்குத்தான். பின்னர் அந்தப் பூதக்கண்ணாடியையும் தூக்கிப்போட்டுவிடலாம். என் கனவு யதார்த்தமாகிவிடும். என் கண்ணிலேயே பூதக்கண்ணாடி ஒட்டிவிடும். நான் வெறும் சிற்பிதான். இந்தக்கதைக்குப்பிறகு நான் அழிந்துபோவேன். உலக வரலாற்றில் சொல்லப்பட்ட கோடிக்கணக்கான நான்களுக்குள் காணாமல்போவேன். இந்தக்கதையிலேயே நான் வேறாகிவிடுவேன். ஆனால் கேயிஷா தனியே நிற்பாள். உதட்டுமேல் பிருமாண்ட மீசை, குட்டி மார்பு, யானைக்காதுகள், எவர் இவளை மறப்பார்? கேயிஷா உலாவுவாள். காதலிக்கப்படுவாள். படிக நிறமும், பவளச் செவ்வாயும், கடிகமழ் பூந்தாமரைபோற் கையும், துடியிடையும் என்றவகையில் யாரேனும் கவிதை எழுதிவைப்பார்கள். அம்மன் கோயிலில் அம்மாளாச்சி என்று அக்குச்சிக்கிழவி குந்தியிருந்து கும்பிடுமே. அப்படி பக்தர்கள் கும்பிடுவார்கள். அம்மனை யாரேனும் இண்டிமேட்டாக அணுகியிருக்கிறார்களா தெரியாது. கேயிஷாவை அப்படி நோக்கலாம் என்று தோன்றுகிறது. பார்த்தால் கையெடுத்துக்கும்பிடவும் தோன்றுகிறது. அதேசமயம் அவளுடைய குட்டி மார்பும் பெரிய மீசையும் தொந்தரவு செய்கிறது. மீசை இன்னமும் நீண்டால் என்ன? பெண்களுக்கு மீசை மட்டும் இருந்தால் எத்தனை கவர்ச்சியாக இருக்கும். என் ஆதர்ச பெண்களுக்கெல்லாம் மீசை வைக்க ஆரம்பித்தேன். சிறுவயதில் பின்வளவுக் குடிசையில் சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்த கவிதா, என் வகுப்பு ஆசிரியை மீனலோஜினி, ஸ்டெபி கிராப், ஐஸ்வர்யாராய், சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, ஜெயலலிதா, ஜோதிகா, அன்னை தெரசா, மேடம் கியூரி என்று எல்லோருக்கும் மீசை வைத்துப்பார்த்தேன். அழகாகத் தெரிந்தார்கள். மீசை மழித்த ஆண்களைவிட முறுக்கு மீசை வைத்த பெண்கள் மிக அழகாகத் தெரிந்தார்கள். பெண் மீசை கொடுக்கும் சௌகரியங்கள் அநேகம்.

“உன் உதடும் என் உதடும்

ஒட்டிக்கொள்ள,

மீசைகள் பேச ஆரம்பித்தன”

என்று கவிதை எழுதலாம். காட்சியை யோசித்துப்பாருங்கள். ம்ம்ம். சீக்கியப்பெண்கள் மீசை தாடி வைத்தால் சிக்கெடுப்பதிலே அரை வாழ்வு தீர்ந்துவிடும். எம்குலப் பெண்டிருக்கு அச்சிக்கல் இல்லை.

“மீசையில் முடிந்த பின்னல்,

தாடியாய் நீண்டு – உந்தன்

மாரினை மறைத்தநிலையை

யாரிடம் நொந்துகொள்வேன்?

அபிராமி.”

என்ன செய்துகொண்டிருக்கிறேன் நான்? என் முன்னைய காதல் கதைகளைப்போலவே இந்தக்கதையும் அபத்தமாகவே தொடர ஆரம்பிக்கிறது. யோசித்துப்பார்த்தால் ரொமாண்டிசிசம் எனக்கு என்றைக்குமே சரிவந்ததாகச் சரித்திரமில்லை. ஏனெனில் காதலோ காமமோ எனக்குப் புனிதமில்லை. கனவு இல்லை. அது ஏதோ ஒரு வாயுள் நுழையாத பெயரைக்கொண்ட ஹோர்மொனின் கைங்கரியம் என்பது காதலிக்க ஆரம்பித்ததுமே புரிந்துவிடுகிறது. காஞ்சோண்டி இலையைத் தேய்த்தால் தோல் சுனைக்கிறதல்லவா? அதுபோலத்தான் காதலும் காமமும். கடி. வெறுங் கடி. சுணை. அதற்காகத்தான் இத்தனை காவியங்களும் கவிதைகளும். அதனால் ஏதோ ஒரு புள்ளியில் அவற்றை நான் எள்ளி நகையாட ஆரம்பித்து விடுகிறேன். கட்டற்ற புனைவுகூட ஒரு கட்டத்தில் எனக்கு அலுத்துவிடுகிறது. கலவியின்போது பூதக்கண்ணாடி சிக்குப்பட்டு நொறுங்கிவிடுகிறது. தொழிற்சாலை ஹார்ன் அடித்தபிறகு தேவதை உருவம் மறைந்துவிடுகிறது. வெக்கையில் கமர்கட்டு வியர்த்து குப்பென நாறுகிறது. இலையான்கள் காதுகளுக்குள் ரீங்காரமிடும்போது கேயிஷாவுக்குச் செவிளைப்பொத்தி அறையவேண்டும்போலத் தோன்றுகிறது. கடைசியாக எப்போது குளித்தாய் கேயிஷா? ஏன் உன் அழகுக்குப்பின்னாலே வீசிய துர்நாற்றம் ஆரம்பத்தில் என் நாசியை அரிக்கவில்லை? என் பக்கத்திலேயே வராதே. தாங்கமுடியவில்லை. ஓடிப்போய்விடு.

கேயிஷா எதுவுமே பேசாமால் முழங்காலில் முகம்புதைத்து குலுங்கிக்குலுங்கி அழ ஆரம்பித்தாள். எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. தடுமாறினேன். ஆசையாய் வந்த பெண்ணை அழவைத்துவிட்டு என்ன எழவுக்கு ரொமாண்டிசம் எழுதிக்கொண்டிருக்கிறேன்?

என்னுடைய பல இம்பிரசனிசக் கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கின்றன.

அழுதுகொண்டிருந்த கேயிஷாவின் முகத்தை நிமிர்த்தி நிதானமாக வெற்றுக்கண்களால் உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன். வெற்றுக்கண்களால். இனிமேல் இவளை இவளாகவேப் பார்க்கப்போகிறேன். பூதக்கண்ணாடி இல்லாமல், கனவோடை இல்லாமல், புனைவு இல்லாமல், எனக்குப்பிடித்த கேயிஷாவாக இல்லாமல், என்னுடைய முன்னை நாள் காதலிகளின் முகத்தோடு ஒப்பிடாமல், மற்றவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அசூயை இல்லாமல் கலவிக்குப்பின்னர் ஒருவர் மற்றவரைப்பார்ப்பதுபோல இயல்பில் இவள் யாராகத் தெரிகிறாளோ அவளாகவே பார்க்க ஆரம்பித்தேன்.

கேயிஷாவின் முகம் முழுதும் மயிர் வியாபித்திருந்தது. மெல்லிதாக அரும்பியிருந்த அவளுடைய மீசை மயிர் தங்கத்தில் தக தகவென மின்னியது. உதட்டோரத்தில் மீசை அடர்த்தியாகிக்கிடந்தது. காதுச்சோணைக்குள்ளும் மயிர் இருந்தது. காதருகே தலைமயிரின் நீட்சியாகவும் மயிர் சுருண்டு கிடந்தது. கண் இமையின் மயிர்கள் தனித்தனியாக சிலிர்த்து நின்றன. புருவங்களும் மைபடாமல், கத்தரிபடாமல் அடர்த்தியாக இணைந்திருந்தன. இடது புருவத்துக்கு மேலே சின்னதாய் ஒரு மச்சம். மச்சத்துக்குமேலே அரை சென்டிமீட்டர் உயரத்துக்கு மயிர் ஒன்று குத்திக்கொண்டு நின்றது. மூக்கினுள்ளிருந்து இன்னொரு தங்கக்கம்பி எட்டிப்பார்த்தது. பெண்ணை யாரேனும் இப்படி நெருங்கி அவதானித்து இருக்கிறீர்களா? கையை உயர்த்துங்கள். கேயிஷாவுக்கு ஆச்சரியமான இடங்களிலெல்லாம் மயிர் இருந்தது. மூக்குத்தி செருகும் இடத்திற்கு அருகே இருந்த சிறிய பள்ளத்தாக்கினுள்கூட மயிர் அரும்பியிருந்தது. இவ்வளவும் வெறுமனே முகத்தில் மாத்திரம்தான். நம்ப முடிகிறதா? இனிக்கழுத்து, மார்பு, வயிறு என்று ஒவ்வொன்றாக கணுக்கால்வரைக்கும் இறங்குவதற்குள் விடிந்துவிடும். ஏன் நான் இதைச் செய்யவேண்டும்? என்ன சனியனுக்கு நான் இப்படி விபரித்துக்கொண்டிருக்கவேண்டும்? பேசாமல் அவளை அம்மணமாக்கிவிட்டு குளோசப்பில் ஒரு புகைப்படத்தைப் பிடித்துவிட்டால் அத்தனையும் தெரிந்துவிடப்போகிறது. மைக்ரோ லென்ஸ் என்றால் அத்தனையையும் பட்டவர்த்தனமாகக் காட்டிவிடும். எதற்காக இந்த அணுவணுவாக விளக்கங்கள். வெறுத்துப்போய் பின்வாங்கிவிட்டேன். கமராக்கள் வந்தபின்னர் இம்பிரசனிசத்துக்கு வேலை கம்மி. தொலைக்காட்சி வர்ணனை வந்தபின்னர் வானொலி எதற்கு?

விபரிப்புகளைத் தவிர்த்து அவளை புகைப்படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். முதன்முதலாக இந்தக்கதையில் நான் கேயிஷாவுடன் பேச்சுக்கொடுத்தேன். என்னுடைய பல எகஸ்பிரசனிச கதைகள் இப்படித்தான், சிறு அதிர்ச்சியுடனான வார்த்தைகளோடு ஆரம்பித்திருக்கின்றன.

“நீ எனக்கு நிர்வாணமாகக் காட்சிகொடுப்பாயா?”

நான் எதேச்சையாகத்தான் கேட்டேன். கேயிஷா மறுபேச்சில்லாமல் தன் உடைகளைக் களைந்துவிட்டு நின்றாள். நான் என்னுடைய அதி உணர்திறன் புகைப்படக்கருவியால் அவளைச் சுற்றிச் சுற்றிப்படமெடுத்தேன். அவள் சிரித்தபடியே போஸ் கொடுத்தாள். பின்னே வெள்ளைத்திரை, சுற்றிவர குடைகளின் செயற்கை வெளிச்சம், களைந்துபோட்ட உடைகள் சிதறிக்கிடக்க அதன் நடுவே கேயிஷா. அவளைவிட அவள் களைந்துபோட்ட உடைகள் கிளர்ச்சியை வரவழைக்கும்போலத் தெரிந்தது. உடைகளை மட்டுமே சுற்றிச் சுற்றிப்படமெடுத்தேன். வெறும் உடைகளே போதும். களைந்துபோட்ட உடைகளை அணிந்திருந்த பெண் எப்படியிருப்பாள் என்ற கற்பனையிலேயே ஏங்கிச்சாவார்கள். இலக்கியமென்பர். அதுபோதும். கேயிஷா இதெல்லாவற்றையும் நிர்வாணம் கலையாமல் அப்படியே உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பாவமாயிருந்தது. அவளையும் படம்பிடித்தேன். நெருங்கியும் விலகியும் முட்டுக்காலில் நின்றும் படுத்தும் பலவித கோணங்களில் படமெடுத்தேன். நான் எது சொன்னாலும் கேயிஷா கேட்டாள். இடதுகை நடுவிரல் நகத்தைக் கடிக்கிறாயா? கிளிக். என் காலில் விழுகிறாயா? கிளிக். தலையை விரித்துப்போட்டுவிட்டு வானத்தைப்பார்த்து கிருஷ்ணா என்று கைகூப்புகிறாயா? கிளிக். உடைகளை ஒவ்வொன்றாக அணிகிறாயா? கிளிக். கிளிக். கிளிக். சுத்து. சுத்து. சுத்து. கிளிக். கிளிக். கிளிக். இப்போது உடை கொடுத்த கிருஷ்ணனை நினைந்தே ஏங்கிச்சாவார்கள். மனிதர்கள் எப்போதுமே காட்சிப்படிமத்தில் இல்லாததை எண்ணியே ஏங்கிச் சாகிறார்கள்.

அவள் இன்னும் ஏதேனும் வேண்டுமா என்பதுபோல நின்றாள். எனக்குப் புரியவில்லை. எது கேயிஷாவை இயக்குகிறது? வந்தாள். நான் பார்வையால் அளவிடும்போதும் எதுவும் பேசவில்லை. சுற்றிச்சுற்றிப்படமெடுக்கும்போதும் எதுவும் பேசவில்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒருவனிடம் கேள்வியே கேளாமல் எப்படி இவளால் முற்றிலுமாக தன்னை அர்ப்பணிக்க முடிகிறது? ஹாய் கூடச் சொல்லவில்லை. நான் நல்லவனா கெட்டவனா, எதுவும் தெரியாது. நிர்வாணமாகக் கிருஷ்ணா என்கிறாள். அடிமையாகவே மாறிவிட்டாள். அடிமைகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. அடிமைக்கு எஜமானன் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை. எஜமானன் யார் என்றே சமயத்தில் தெரிவதில்லை. ஒரு செம்மறியாட்டுக்கு இடையனின் பெயர் அவசியமில்லை. யாரோ ஒரு இடையன். தண்ணீரும் புல்லும் கலவிக்கு சக செம்மறியும் கொடுத்தால் எவரும் அதற்கு மேய்ப்பர் ஆவர். எவரும் கடவுளர் ஆவர். ஒரு கட்டற்ற அடிமை காந்தம் போன்றது. அதற்கு எந்த இரும்பானாலும் போதும். ஆணியா, இரும்புத்தூணா என்றெல்லாம் அது வேறுபிரித்துப்பார்ப்பதில்லை. அடிமைகள் ஆபத்தானவர்கள். அவர்கள் எந்தக்கணத்திலும் தம் எஜமானர்களை மாற்றிக்கொள்ளத்தயங்கமாட்டார்கள். கேயிஷா என்கின்ற அடிமை எனக்கு ஆபத்தானவளாகவேத் தெரிந்தாள்.

எனக்கு கேயிஷாவை மேலும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும்போலத் தோன்றியது. நெருங்கிவரச்சொன்னேன். பளாரென்று அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். என்ன ஆச்சரியம். மறுபேச்சு இல்லாமல் அடுத்த கன்னத்தையும் காட்டியபடியே குனிந்து நின்றாள். நீ கடவுளா? மனிதனுக்குக் கிடைத்த மிகக் கீழ்த்தரமான அடிமை கடவுளாகத்தான் இருக்கமுடியும். என்ன சொன்னாலும் கடவுளால் சிரித்துக்கொண்டே கேட்கமுடிகிறது. என்ன தவறு செய்தாலும் பொருட்படுத்தாமல் நாம் கேட்பதைக் கடவுளால் சிரமேற்கொண்டு செய்யமுடிகிறது. அப்படி இருப்பதாலேயோ என்னவோ கடவுள்கள் என்ன தவறு செய்தாலும் அதைக் கர்மா என்றுவிட்டுக் கடந்துபோகிறோம். விளக்கங்கள் கொடுக்கிறோம். என்னவொன்று, ஒரு அடிமைக்குப்போய் அரண்மனைபோல கோயில்கள் அமைத்துக்கும்பிடுவதைத்தான் என்னால் சமயங்களில் சகிக்கமுடிவதில்லை.

எனக்கு இப்போது இரண்டு கண்களும் தெரிய ஆரம்பித்தன. இரண்டு காட்சிகள். இரண்டு கேயிஷாக்கள். ஒரு கண்ணில் அர்ப்பணிப்புள்ள அடிமை. இன்னொரு கண்ணில் ஒரு முட்டாள் கடவுள். அந்த நிலையில் எனக்கென்னவோ ஆண்டாளும் பெருமாளும் ஒன்றோ என்று தோன்றியது. திடீரென்று கடவுள் மறைந்து ஆண்டாளே பாதி பாதியாகத் தோன்றினாள். நிஜமாகவே இரண்டடி இடைவெளியில் ஒவ்வொரு பாதிகளும் ஒற்றைக்காலில் நின்றன. என்னாகத்திளங்கொங்கை தனியனாக நின்று பாரேன் பாரேன் என்றது. அவளுடைய பாதி உதடு ‘சீர்மாரானே செப்புமின்’ என்று உச்சரித்ததுபோற் தோன்றியது.

என்னுடைய பல சரயலிசக் கதைகள் இப்படித்தான், எங்கே எப்போது அவை ஆரம்பித்து எப்போது முடிகின்றன என்று எனக்கே தெரிவதில்லை. வெறுத்துவிட்டது. கதைகள் என்றால் இயல்பாக நீரோடைபோல இருக்கவேண்டாமா? ஊருலகம்பூராகப் பெண்ணைத்தேடிவிட்டு இறுதியில் உறவுப்பெண்ணை திருமணம் முடிப்பதுபோல இந்தக்கதையும் தடம்மாறுகிறது.

என்னுடைய பல விஞ்ஞானக்கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கின்றன.

எடுத்தவுடனேயே இசங்களுக்குள் மூழ்கிவிட்டதால் கேயிஷா யார்? அவள் எதற்கு இங்கே வந்தாள்? இங்கே என்ன நடக்கிறது என்ற லோகியல் விவரங்கள் எவற்றையும் தர மறந்துவிட்டேன். நான் யார் என்பதைக்கூடச் சரியாகச் சொல்லவில்லை. எடுப்புமின்றி தொடுப்புமின்றி எங்கேயோ போய்விட்டேன். மன்னிக்க.

மூன்று நாள்களுக்கு முன்னர்தான் அந்தச் செய்திவந்தது.

பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் டயொடுகளோடும் டிரான்சிஸ்டர்களோடும் சேர்க்கிட்போர்டுகளோடும் டபிள் ஸ்லிட் பரிசோதனைகளுடனும் மாரடித்துக்கொண்டிருந்தவனை தீடீரென்று காதலிக்கச்சொல்கிறார்கள். அதுவும் முன்பின் அறியாத, என் மொழியில் பரிச்சயமே இல்லாத பெண்ணைக் கொண்டுவந்துநிறுத்தி இவளைத்தான் நீ காதலிக்கவேண்டும் என்கிறார்கள். இருபத்தொராம் நூற்றாண்டு நிச்சயத்திருமணங்கள்போல. கேயிஷா என்கின்ற இந்தப்பெண்ணை நான் இப்பொழுது காதலித்துக் குழந்தை பெறவேண்டும் என்கிறது விஞ்ஞானம். அந்தக்காலத்தில் எட்டுப்பொருத்தத்தையும் சோதிடம் தீர்மானித்தது. இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் தீர்மானிக்கிறது.

முழுப்பெயர் கேயிஷா டக்கோட்டா. கியோட்டாவைச் சேர்ந்தவள். ஆள் உருவம் அழகு பற்றியெல்லாம் ஏலவே பிரித்து மேய்ந்தாயிற்று. வயது. யப்பானியப் பெண்களுக்கு வயதைச் சொன்னாலென்ன? சொல்லாவிட்டாலென்ன?

“ஹாய் சிவா”

அப்பாடி, முதன்முதலாக அவள் திருவாய் மலர்கிறாள். கேயிஷா டக்கோட்டாவின் தொண்டையும் குட்டிதான். குரல் மெதுவாகவேக் கேட்டது.

“சிவா, நீங்கள் ஒரு அறிவுஜீவி என்று சொன்னார்கள். பேர்மட்ஸின் கடைசி விதியினைத் தவறு என்று நிரூபித்தீர்கள் எனச் சொன்னார்கள். வாவ். ‘பை’ இலக்கத்துக்குத் தீர்மானமான தசமதானத்தை வரையறுத்தீர்களாமே, ஆராய்ச்சிக்கட்டுரையைப் பார்த்தேன். ஜீனியஸ். ட்ரூலி எ ஜீனியஸ்”

அவசரப்படுகிறாள். புரிகிறது. என் பின்னணி அறிந்து, விருப்பு வெறுப்புகளை ஆராய்ந்துவைத்து ஒவ்வொன்றாக இனி அடுக்குவாள். இவளின் ஐ.கியூ நூற்றியெழுபது. கணணி முன்னமேயே ஈமெயில் அனுப்பிவிட்டது. எழுநூற்றியெண்பத்தாறையும் தொள்ளாயிரத்து முந்நூற்றுமூன்றையும் பெருக்கிச்சொல் என்று கேட்கமுதலேயே விடையைச் சொல்லுவாள். ஆனால் இந்தக் காதல் விசயத்தில் அவசரப்படாதே கேயிஷா. அதுவும் ஜீனியசோடு காதல் செய்யும்போது கடுகேனும் அவசரப்படாதே. முதலில் ஒரு ஜீனியசைப் பார்த்து ஜீனியஸ் என்று சொல்லாதே. நான் ஜீனியஸ் என்பது எல்லோருக்கும் இப்போதுதான் தெரியும். எனக்கு சின்னவயதிலேயே தெரியும். அதுவும் ஒரு சப்பை மூக்குப்பெண்ணொருத்தி திடீரென்று வந்து ஜீனியஸ் என்று சொன்னால், முட்டாளே முகம் சுளிப்பான், எனக்கு எப்படியிருக்கும்? I fuck’in know I am a genius, this is not how you approach a genius. You stupid. ஒவ்வொருதடவையும் ஒருவரை ஜீனியஸ் என்னும்போது சொல்லுபவர் அடி முட்டாளாகிறார். ஒரு முட்டாளிடம் எதற்கு ஒரு ஜீனியஸ் அந்தப்பட்டத்தைப் பெறவேண்டும். அந்தத்தவற்றைச் செய்யாதே கேயிஷா.

குட்டிவாய் மீண்டும் தாள் திறந்தது.

“You know what Siva,

I will gather the thorns

You take the rose”

ஹ ஹ ஹ ஹ ஹ, நகுலன், ஹ ஹ ஹ ஹ, எனக்குச் சிரிக்கும்போது கொஞ்சம் சத்தமும் வந்துவிட்டது. அவசரம். அவசரம். பெண்ணைப் பேதை என்று இருபதாம் நூற்றாண்டுவரை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதன் டி.என்.ஏ எச்சமாக வந்து நிற்கிறாள். எந்த மெஷின் இவளை எனக்காகத் தீர்மானித்தது? முட்டாள் பெண்ணே. பூவுக்காகத்தானே வந்தாய்? பின் எதற்கு முள்ளை பொறுக்குகிறேன் என்கிறாய். என்னை இத்தனை சீக்கிரம் இம்ப்ரெஸ் பண்ணமுடியுமென்று எப்படி முடிவெடுத்தாய்? அதுவும் முட்டாள் கவிதைகளின் மூலம். கவிதை என்றால் எனக்கு அலர்ஜி என்று என் முன்னைய காதலிகளின் டயரிகளை நோட்டம் விட்டிருந்தாயேயானால் தெரிந்திருக்கும். இப்படியான மண்டை விறைக்கின்ற கவிதைகளை நான் சீண்டுவதேயில்லை தெரியுமா? “யார் நீ” என்பாய். பின் “நான் யார்?” என்பாய். கனவோடை என்று சொல்லி வார்த்தைகளால் கொலை செய்வாய். தூங்கு. சரயலிசம் வேண்டுமாயின் தூங்கு. கவிதை எழுதாதே. எதற்காக விழித்திருக்கிறாய்? இரவுதான் வாழ்வு என்றாகில் எதற்காக விழித்திருக்கிறாய்? ஒன்று தூங்கு. அல்லது தற்கொலை செய்துவிடு. நிரந்தரமாக இரவினுள் உலாவலாம். எதற்காக விழித்திருந்து இரவு இருளாயிருக்கிறது என்கின்ற ஒப்வியஸ் விடயங்களைக் கவிதையாக எழுதி என் தாலியை அறுக்கிறாய்? நீ உழன்றால் எனக்கென்ன? எனக்கு கோபமும் வந்துவிட்டது. நீ காதலிக்க வந்தாயா இல்லை துன்புறுத்தவந்தாயா? எதற்கு வந்தாய்?

கேட்டேவிட்டேன்.

“எதற்கிங்கே வந்தாய்? பூனையைத் தொலைத்துவிட்டாயா? என்ன நிறம்? வெள்ளையா? காது மடல் நாயிடம் கடிபட்டிருக்குமா? வீட்டுக்குப்பின்னே போய்ப்பார். சுவரில் ஏறி நிற்கிறது. பூனைகள் எப்போதுமே ஏன் சுவரிலேயே நிற்கிறது தெரியுமா? யோசித்துப்பார்த்தாயா?”

இது போதும். செத்துவிடுவாள் என்றே நினைத்தேன். ஆனால் கேயிஷா கொஞ்சம்கூட மிரளவில்லை.

“ஆர் யூ நட்ஸ் சிவா? பூனைகளை அடுப்படியில் பார்த்திருக்கிறேன். அவை வீதிகளின் குறுக்கே போவதையும் பார்த்திருக்கிறேன். சோபாக்களில் பாத்திருக்கிறேன். கிணற்றடியில் பார்த்திருக்கிறேன். மரக்கிளைகளில் இருந்து அலைசுக்கு வழி சொன்னதைப்பார்த்திருக்கிறேன். தோட்டத்தினுள்கூடப் பார்த்திருக்கிறேன். எதற்காக எல்லாப்பூனைகளும் சுவரிலேயே நிற்கின்றன என்று பொதுமைப்படுத்துகிறீர்கள்? நான் அறிந்தவரையில் மூடி வைத்த பெட்டிக்குள் மாத்திரம்தான் பூனைகளைக்கண்டதில்லை. மற்றும்படி எல்லாவிடங்களிலும் கண்டிருக்கிறேன்”

எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“அதெப்படி மூடிவைத்த பெட்டிக்குள் மாத்திரம் பூனைகள் இல்லாமற்போனது?”

“ஏனெனில் மூடிவைத்த பெட்டிக்குள் என்ன உள்ளது என்று கண்டறியமுடிவதில்லை. திறந்துவிட்டால் அப்புறம் அது மூடிவைத்த பெட்டியல்லவே. திறந்துகிடக்கும் பெட்டி.”

That’s the fuck’in IQ. இவளுக்குப் புத்திசாலித்தனமான விடயங்கள் எல்லாம் தெரிந்திருக்கின்றன. சனியனுக்குக் காதலிக்கத்தான் தெரியவில்லை. ஆனாலும் எங்கோ ஒரு கோடியில் இவளிடம் ஒரு ஈர்ப்பு ஒட்டிக்கிடக்கிறது. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கூடிய சீக்கிரமே இவளைக் காதலித்துத் தொலைத்துவிடுவேன். மூளையில் ஏதோ ஒரு கட்டளைப்பீடம் வாயுள் நுழையாத அந்த ஹோர்மோனை சுரப்பதற்கு ஆணை பிறப்பிக்குமாற்போல் தோன்றியது. Stay alert.

“ஓ அப்படியா சங்கதி? நான் எல்லாவிடங்களிலும் பூனைகளைக்கண்டதில்லை. மதில் சுவரில் மாத்திரமே கண்டிருக்கிறேன். அதெப்படி நான் பார்க்காதபோதுமாத்திரம் ஏன் எல்லாமே தெரிகிறது? நான் பூனைகள் சுவரில் இருப்பதாகத்தானே இதுகாலும் நினைத்துகொண்டேன். வருகிறாயா? தோட்டத்துக்குப்போவோம். எங்கேயாவது பூனைகள் இருக்கின்றனவா என்று தேடுவோம். சுவர்களை இடித்துவிட்டால் இன்னமும் நன்று”

“என்ன சிவா, விளையாடுகிறீர்களா? ஏன் இப்படி படுத்துகிறீர்கள்? எனக்குக்கவலையாக உள்ளது. ஒரு புத்திசாலிக்கும் லூசுக்கும் இம்மிதான் இடைவெளி. கரணம் தப்பிவிட்டதோ என்று கவலையாக உள்ளது. உங்களைக் காதலித்து குழந்தை பெற்று … ஏறத்தாள ஒரு வருடமேனும் கூடவிருக்கவேண்டுமே.. இரண்டு நிமிடங்களிலேயே மண்டை விறைக்கிறதே”

எனக்கு வென்றுவிட்ட பெருமிதம் உள்ளே தோன்றியது. கூடவே எதற்கு என்றும் தோன்றியது. கேயிஷாவை வென்று நான் எதனைச் சாதித்துவிடப்போகிறேன்? இந்த எண்ணம் வெல்லும்வரைக்கும் எனக்கு வந்ததேயில்லை. வென்றபின்னரேயே எனக்குத் தோற்றவர்மீது கழிவிரக்கம் உருவாகிறது. பாவம் கேயிஷா. நான் அதிகமாகவே கேயிஷாவை வதைத்துவிட்டேன். இதுவரை யாரையும் காதல் செய்திருக்கமாட்டாள்போலத் தெரிகிறது. முதன்முதலாக என்னைத்தான் அணுகியிருக்கிறாள். அதுதான் இந்தப்பதட்டம். என்னைக்கூட இவள் காதல் பண்ணப்போவதில்லை. இவளுக்குத்தேவை பணம். எனக்குத்தேவை பணம். அதற்குத்தேவை குழந்தை. குளோனிங் இல்லாமல், டெஸ்ட் டியூப் இல்லாமல், இயற்கையாக ஆணும் பெண்ணும் இணைந்து மனதாரக் காதல்செய்து இயற்கையாய்க் குழந்தை பெற வேண்டும். பிரீ ரேஞ் கோழிமுட்டைகளுக்கு உள்ள மவுசுபோல இது பிரீ ரேஞ் மனிதக்கருக்கள். இயற்கையாக ஈர்ப்படைந்து நிஜமாகவே காதல்செய்து, நீ வேறு நான் வேறு இல்லை என்று உணர்ந்து ஊடிக், கூடிப், புணர்ந்து சினை கட்டவேண்டும். நிறையப்பணம் கிடைக்கும். இந்தமாதிரி மகின்றில் உறவு எனக்கு ஏழாவது தடவை. அறிவுஜீவித்தனம் மிகுந்த, ஐகியூ கூடிய ஸ்டாலியன் குதிரை நான். அல்லது மட்டைக்கொலம்பன் காளை மாடு என்றும் சொல்லலாம். மனிதர்களிடம் அப்படி ஒரு பிரிவு இன்னமும் தோன்றவில்லை. என்னுடைய சந்ததிகளுக்கு அப்படி ஒரு பெயர் கிடைக்கலாம். சிவா பரம்பரை. என்னுடைய காதல்கள் எல்லாமே சுத்தமானவை. நேர்மையானவை. ஒவ்வொருமுறையும் முதன்முறையாகக் காதலிப்பதுபோன்றே என்னுடைய ஹோர்மோன்கள் எக்சைட்டட் ஆகிச் சுரக்கும். ஒவ்வொரு மகின்றிலோடு உறவாடும்போதும் இதுவே நிரந்தரம், சாசுவதம், இப்படியே இருந்துவிட்டால் என்ன என்று தோன்றும். குழந்தை பிறந்து கொன்றாக்ட் முடிந்து வங்கியில் பில்லியன்கள் விழுந்ததும், what the fuck என்ற எண்ணம் வந்துவிடும். எல்லா மகின்றில்களுக்கும் இறக்கை முளைத்துத்தானே இருக்கிறது? எல்லாமே சொண்டோடு சொண்டு முத்தம் கொடுக்கின்றன. எல்லாமே அழகாக இருக்கின்றன. அப்புறம் என்ன? ஐகியூ வேறு அதிகமா? விட்டுப்போயிடும். முதல்தடவை இன்னமும் ஞாபகம் இருக்கிறது. மகின்றிலின் பெயர் மறந்துவிட்டது. ஒரு மெக்சிக்கன் மூஞ்சி. அவளை நிஜமாகவே காதலித்தேன். அவள் அளவுக்கு நான் பின்னர் இரண்டாவது மகின்றிலைத்தான் காதலித்தேன். அந்தளவுக்கு அவள் மண்டைக்காய். அழகி. அன்பானவள், எக்செட்ரா, எக்செட்ரா, எக்செட்ரா. அவள் டாக்கோ செய்து சுருட்டித்தந்தாளேயானால் அவ்வளவு ருசியாக இருக்கும். சொத்தையே அடகு வைக்கலாம். அவளோடு எனக்குப்பிறந்த என் முதற் குழந்தை சொல்லிவைத்தாற்போலவே அதிமேதாவியாக வளர்ந்துநிற்கிறது. பன்னிரண்டாம் வகுப்பிலேயே புதிதாக ஒரு அணுக்கூறினைக் கண்டுபிடித்திருக்கிறது. பெயர் அகலிகை. பெரிதாக வளர்ந்து விஞ்ஞானியாகிவிட்டாள். என்னுடைய லிங்க்டின் புரபைலில் நீங்கள் அதனைக் கவனித்திருக்கலாம். மொத்தமாக ஆறு குழந்தைகள் என் மூலமாகப் பிறந்திருக்கின்றன. எல்லா விவரங்களும் லிங்க்டின்னில் இருக்கின்றன. அகலிகை, நிக்கோலி, மெலடி, குந்தவை, பாஜிட்டர், சூயங். எல்லோருமே பரிசுத்தமான குழந்தை மேதைகள். சைல்ட் ப்ரோடிஜிஸ். குந்தவைக்கு ஆறு வயதாகிறது. மொஸார்ட் ஒப் ஜாப்னா என்று ஏலவே பெயர் வாங்கிவிட்டது. ஒரு இசைக்கோர்வையை அவள் எழுதினால் அகிலமே மயங்குகிறது. ஏன்? எப்படி? எல்லாமே இந்த தர்மலிங்கம் சிவமயூரனின் ஐகியூ. அறிவு. ரசனை. கைங்கரியம். அதற்காகத்தானே பணத்தை இப்படி இறைக்கிறார்கள். உலகத்தின் மிக அபூர்வமான டி.என்.ஏ என்னது. சங்கீதம் முதல் சயன்ஸ்வரை நான் எது தொட்டாலும் துலங்கிவிடும். அதனாலேயே எனக்குக் கேள்வியும் அதிகம். இன்றைய தேதிக்கு என் மூலமாக ஒரு குழந்தை பெறுவது என்றால் மூன்று பில்லியன் ரூபாய்கள் வேண்டும். இதோ முன்னே நிற்கிறாளே கேயிஷா. அவளுக்குக் குறைந்தது ஒரு மில்லியனேனும் கொடுத்திருப்பார்கள். பெண்களுக்கு ஏன் இன்னமும் சம்பளம் குறைவு என்று எனக்குப் புரிவதில்லை. இவற்றையெல்லாம் யார் கொடுத்திருப்பார்கள்? யார் யாருக்கு அறிவுஜீவிக்குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்? இதெல்லாம் நமக்குத்தேவையற்றது. சமயங்களில் நாடுகள் கொடுப்பார்கள். பிரிவினை இயக்கங்கள் கொடுக்கும். மத அமைப்புகள் கொடுக்கும். பாஜிட்டர் இருக்கிறானே, அவன் வளர்ந்து சீக்கிரமே இறைதூதனாகிவிடுவான். அவ்வளவு அறிவு இருக்கு. “அப்பா, கடவுள் இருக்கிறார்” என்று சொல்லி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தான். நானே ஒருகணம் கடவுள் இருப்பதாக நம்பி அப்புசாமி என்றுவிட்டேன். அவ்வளவுக்கு அவன் ஒரு அறிவாளி. சமயத்தில் திவாலாகும் முதலாளித்துவக் கம்பனிகள்கூட குழந்தை சிஈஓக்களை உருவாக்கப்பணம் தரும். கம்யூனிச இயக்கங்கள் குழந்தைகளை ஏற்பாடு செய்கையில் சிறு பிரச்சனை ஒன்று வரும். அவர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பேமண்ட்தான் கொடுப்போம் என்று அடம் பிடிப்பார்கள். சரி ‘பெண்ணுக்கு மூன்று பில்லியன்களை கொடுங்கடா, எனக்கென்ன’ என்றால், ‘இல்லை உங்களுக்கும் ஒரு மில்லியன்தான்’ என்று பேரம் பேசுவார்கள். ஒருமுறை விடயம் தெரியாமல் சிக்கிவிட்டேன். ஆனால் எனக்கு அந்த கம்யூனிச மகின்றிலைப் பிடித்துக்கொண்டதால் ஒரு மில்லியனுக்குச் சம்மதித்துவிட்டேன். அப்படிப்பிறந்தவள்தான் நிக்கோலி. செனகலில் ஏதோ ஒரு காட்டுக்குள் புரட்சி செய்கிறாள் என்று கேள்வி. அவ்வப்போது ஈமெயில் அனுப்புவாள். கடைசியாக ஒரு மோட்டர்சைக்கிளில் ஊசித்துப்பாக்கியோடு போஸ் கொடுத்துக்கொண்டு நின்றாள். அப்படியே அம்மா மூஞ்சி. அவள் பேசும்போது மூச்சிரைக்கும். என்னை மாதிரி. புத்திசாலி. ஆனால் நல்லவள். காட்டுக்குள்ளேயே இருக்காதே நிக்கோலி. மோட்டர்சைக்கிளை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் வந்துவிடு, அல்லது கொன்றுவிடுவார்கள், பணமெல்லாம் வீணாகிவிடும். கடைசியில் நீ டீஷேர்ட் படமாகிவிடுவாய், பாவம் என்றேன். பதில் வரவில்லை.

யோசித்துக்கொண்டேபோனதில் கேயிஷாவை மறந்துவிட்டேன். அவளுக்கு விசனம் வந்திருக்கவேண்டும்.

“சிவா உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜீனியஸ். ஆனால் திமிர் பிடித்தவர். உங்களோடு சோடி கட்டவேணும் என்று சொன்னவுடனேயே எனக்கு எரிச்சல்தான் வந்தது. திமிர் பிடித்தவர்களோடு காதல் பண்ணமுடியாது. தே நோ எவ்ரிதிங் என்று நினைப்பவர்கள். காதல் என்பது இயல்பாக, சரயலா நடக்கவேண்டும். இந்த அளவுக்கு முத்தம், இந்த அளவுக்கு கனவு, இந்த அளவுக்கு நெருக்கம், இத்தனை மணிக்கு உறவு என்று என்று மேதொடிக்கலா ஒவ்வொரு அணுவையும் டிசைன் பண்ணி … ம்ஹூம்.. எனக்குப்பிடிக்காது….”

பேசிக்கொண்டே போனாள். ஒன்றைக் கவனித்தீர்களா? கேயிஷாவின் ஒவ்வொரு வசனங்களிலும் ஒவ்வொரு அணுகுமுறைகள். முதலில் என்னைப் புகழ்பாடிக் கவிழ்க்க முயன்றாள். நான் பதில் சொல்லவில்லை. கவிதை சொன்னாள். நான் தாலி அறுத்தேன். கெஞ்சிப்பார்த்தாள். நான் பதிலே சொல்லவில்லை. இப்போது என்னைத் திட்டிப்பார்க்கிறாள். என்னைச் சாலஞ் பண்ணினால் எனக்குப்பிடிக்கும் என்று இதற்குமுதல் என்னோடு காதல் செய்தவர்கள் அவளுக்குச் சொல்லியிருக்கலாம். Isn’t she desperate? இவள் கண்களுக்கு அந்த ஒரு மில்லியன் மாத்திரமே முன்னே தெரிகிறது. தர்மலிங்கம் சிவமயூரன் தெரியவில்லை. அவசரமாகக் காதல் செய்து உறவு கொண்டு கொன்சீவ் ஆகிப் பெற்றுக்கொடுத்துவிட்டால் கையில் காசு கிடைக்கும் என்கின்ற அவசரம். கொஞ்சம் அறிவும் இருப்பதால் என்னை பல்வேறு வழிகளில் ஹக் பண்ணப்பார்க்கிறாள். இயல்பாக இருக்கத்தெரியவில்லை. இவளை எப்படிப் புத்திசாலி என்று முடிவு செய்தார்கள்? எனக்கு கேயிஷா வேண்டாம். இவளோடு எனக்குப் பிறக்கும் குழந்தை உலகின் முட்டாள்கள் வரிசையில் பின்னிலிருந்து நான்காம் இடமே வரும். வெறுமனே ரப்பர் பந்துகளுக்காகவும், பிஸ்கட்டுகளுக்காகவும் முத்தம் கொடுக்கும். சாதாரண கிச்சு கிச்சுக்கு பெரிதாகச் சிரித்து போஸ் கொடுக்கும். எனக்குக் குழந்தைகள் சிரித்தாலே பிடிக்காது. ஏன் சிரிக்கிறாய்? எடுபடாதே. அப்பனோ, ஆத்தாளோ சிரிப்புக்காட்டினால் சிரிக்காதே. அவர்கள் உன்னைப் போக்குக்காட்டுவதற்காகவே சிரிப்பு மூட்டுகிறார்கள். சிரிக்காதே. நான் என்னுடைய எந்தக்குழந்தைக்கும் சிரிப்பு மூட்டியதில்லை. அவர்களாகச் சிரித்தாலும் நுள்ளிவிடுவேன். அழுகையின் அழகு சிரிப்பில் கிடைப்பதில்லை. சிரிக்கும் குழந்தைகளை நான் முட்டாள்களாகவே பார்க்கிறேன். எனக்கு முட்டாள் குழந்தைகள் வேண்டாம். இதோ முன்னாலே நிற்கிறாளே கேயிஷா. முட்டாள். பிறந்ததிலிருந்து விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்போல. கிணற்றுக்குள் தவறி விழுந்தாலும் அவள் சிரிப்பொலியின் எதிரொலி ஊரெங்கும் கேட்கலாம்.

கேயிஷா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“சிரிக்காதே முட்டாள்”

கேயிஷாவுக்குக் கோபம் வந்துவிட்டது. மேலும் மேலும் விழுந்து விழுந்து சிரித்தாள். மூச்சிறைக்கப் பேசினாள்.

“என்னை முட்டாள் என்றமைக்கு நன்றி. ஆஹ். ஆஹ். முட்டாள் பட்டம் அவ்வளவு இலகுவில் கிடைத்துவிடாது தெரியுமா? எந்த அறிவாளியாலும் அடைய முடியாத ஒரே தகுதி முட்டாள் தகுதி. அது தெரியுமா உனக்கு? சமயத்தில் முட்டாளுக்குக்கூட அந்தப்பட்டம் கிடைத்துவிடுவதில்லை. காரணம் பெரும்பான்மையான முட்டாள்கள் யாவரும் வாழ்நாள் முழுதும் தம்மை அறிவாளியாகக் காட்டிக்கொள்வதிலேயே காலத்தை வீணடித்துவிடுகிறார்கள். அப்படி இருக்கையில் ஒரு அறிவாளியிடமிருந்து முட்டாள் பட்டம் கிடைப்பதென்பது, ஆகா எவ்வளவு பெரிய தகுதி இது. பொறு, இப்போதே என் ரேட்டை ஏற்றவேண்டும்”

கேயிஷா சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் உணர்ந்தே சொன்னாளா அல்லது ஏளனமாகச் சொன்னாளா என்பதைக் கணிக்கமுடியாதிருந்தது. அவள் அறிவாளியா? முட்டாளா? என்ற குழப்பமும் எனக்கு வந்துவிட்டது. இவளோடு எப்போது நான் முரண்பட ஆரம்பித்தேன் என்பதும் தெரியவில்லை. என் மீதான பிரமிப்பு எப்போது இவளுக்கு ஏளனமாக மாறியது என்றும் தெரியவில்லை. நான்தான் அதிகமாக ஒன்றும் பேசவில்லையே. பூனை சுவரில் நிற்கிறது என்று சொல்வதெல்லாம் பெரும் குற்றமா என்ன? ஒவ்வொரு பெண்ணும், அவள் கிழவியோ, குமரியோ அறிவுஜீவித்தனமாகப் பேசும்போதும் எனக்கு அந்த வாயுள் நுழையாத பெயர்கொண்ட ஹோர்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. அதுவும் என்னை யாரும் இளக்காரமாகப் பேசும்போது என்ன சனியனோ தெரியாது, நான் காதலிக்கவே ஆரம்பித்துவிடுவேன். என் முன்னைய மகின்றில்களும் அப்படித்தான். ஒரு கட்டத்தில் என்னை ஏளனப்படுத்த ஆரம்பித்தார்கள். அதன்பின்னரேயே அவர்களைக் காதலிக்க ஆரம்பித்தேன். என்னால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று காரியமாற்றமுடியாது. வெறுமனே தொழில்தானே என்று நீங்கள் நினைக்கலாம். கையில காசு, வாயில தோசை என்று போய்க்கொண்டே இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் நான் ஒன்றும் தெருவோரம் பெட்டிக்கடைபோட்டு வியாபாரம் செய்பவனில்லை. எனக்கென்று ஒரு தொழில் நியதி இருக்கிறது. இந்தாப்பிடி என்று விந்துவங்கியில் எல்லாம் உறையவைத்து ஒரு அறிவாளியின் குரோமோசோம்களைக் அவ்வளவு இலகுவில் காவு கொடுத்துவிடமாட்டேன். டெஸ்ட்டியூப் எல்லாம் கிடையவே கிடையாது. அவசர அவசரமான உடலுறவில்கூட எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு அறிவாளியின் உருவாக்கத்துக்குப்பின்னாலே ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. சும்மா போகிறபோக்கிலே இடம்பெறும் காரியமல்ல அது. எனக்குக் காதலில் நிறைய நம்பிக்கை உண்டு. நான் கொடுக்கும் முத்தத்தின் சாரம் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ சங்கிலியில் எங்கோ ஒரு மூலையில் பதிகிறது என்ற நம்பிக்கை உள்ளவன் நான். காதல் பண்ணவேண்டும். குறைந்த பட்சம் ஆறுமாதங்களேனும் காதல் பண்ணவேண்டும். எல்லாமே இயல்பாக, சிரிப்பு, சிணுங்கள், ஊடல், அப்படியே தலைவி வந்து மார்பிலே விழும்போது சங்க இலக்கியத்த்து யானை மூங்கில்காடுகளை முறித்துக்கொண்டு பிளிறவேண்டும். கேயிஷா யப்பான்காரி. துதிக்கை சற்றுச் சப்பையாக இருக்கலாம். ஆனால் யப்பானிலே நிறைய மூங்கில்காடுகள் இருக்கின்றன. கலவி என்பது இயங்கியலின் ஆத்மார்த்தமான பிணைப்பு. டிவைன். குருஷேத்திரம்போல அதன் இயக்கம் வெளியிலிருந்து பார்க்கும்போது தோன்றலாம். உண்மைதான். குருஷேத்திரத்தின் உச்சம் அதன் முதன் அம்பு எய்யப்படுவதற்கு முன்னமேயே தொடங்கி முடிந்துவிட்டது. அர்ஜூனன் முட்டிக்காலில் வணங்கிக்கொண்டிருக்க பரமாத்மா சமஸ்கிருதத்தில் ஏதேதோ சொல்லுவாரே. மொத்த உலகமுமே உறைந்துபோய்க்கிடக்குமே. அதுதான் உச்சம். எக்ஸ்டசி. ஏகாந்தம். இயற்கைக் கடன்கள் எதுவாயினும் அக்கர்மாக்களை நிறைவேற்றும்போது உச்சம் கிடைக்கிறது. இதெல்லாம் வெறும் ரிட்சுவல் அல்ல. தவம். கொண்டாட்டம். கட்டுடைத்தல்.

நான் சொல்லும் விஞ்ஞானக் கதைகள் யாவும் சுவாரசியமற்றுப்போவதன் காரணம் இதுதான். சொல்லப்போனால் எனக்கு விஞ்ஞானத்திலேயே நம்பிக்கை இல்லை. விஞ்ஞானமும் அறிவியலும் கூட இயற்கையின் ஒரு அம்சமே. இயற்கை தானே ஏற்படுத்திக்கொண்ட தேடலே அது. அதனாலேயே என் விஞ்ஞானக்கதைகளிலும் இயங்கியலும் இருத்தலியமும் எப்படியோ எட்டிப்பார்த்துவிடுகிறது. சுயபுலம்பல்கள் அதிகமாகி விடுகின்றன. என்னைப்பற்றியே பேசிக்கொள்கிறேன். நான். நான். நான். நான். நான். மீதி எல்லாமே மற்றமை. அவ்வளவுதான். இந்தப்பிரபஞ்சமே பைனரிதான். நான். மற்றமை. நான் ஒன்று. மற்றமை எல்லாமே பூச்சியம். நான் true. மீதி எல்லாமே false. கேயிஷாவும் பூச்சியம். பூச்சியத்தோடு ஒன்றைப் பெருக்குங்கள். பூச்சியந்தான் கிடைக்கும். பூச்சியத்தோடு எனக்கென்ன வேலை? அதுவும் முட்டாள் பூச்சியங்களோடு எந்த சங்காத்தமும் வேண்டாம். எனக்கு கேயிஷா வேண்டாம். தொடக்கூட முடியாது. என் ரெப்புயூட்டேஷன் பாதிக்கப்பட்டுவிடும். கேயிஷாவை திருப்பி அனுப்பிவிடுவதே உசிதம்.

“கெட் லொஸ்ட்”

கேயிஷா போய்விட்டாள். Just like that, போய்விட்டாள். இதற்காகவே காத்திருந்ததுபோல கேயிஷா போய்விட்டாள். என் பல கதைகள் இப்பிடித்தான் முடிவடைந்திருக்கின்றன. என் பல மகின்றில்கள் இறக்கை முளைக்காமலேயே பறந்துவிடுகின்றன. ஆரம்பிக்கும்போது காதல்கதை என்றே தொடங்குவேன். பின்னர் அலுத்துவிடும். ஆரம்பத்தில் பெண்களை அழகாக வர்ணித்துக்கொண்டிருந்தேன். அலுத்தது. பின்னர் பெண்களை விகாரமாக வர்ணித்தேன். அதுவும் அலுத்தது. பின்னர் நானே பெண்ணாகி ஆணை வர்ணிக்கவும் இம்சிக்கவும் ஆரம்பித்தேன். It was fun. ஆனால் கூடிய விரைவிலேயே ஆண்கள் அலுப்படிக்க ஆரம்பித்தார்கள். ஆண்களை நீங்கள் யாரேனும் தீர அவதானித்திருக்கிறீர்களா? எந்த அகவுணர்ச்சியும் இல்லாத புறக்கிளர்ச்சியும் கொடுக்காத ஜடங்கள் ஆண்கள். உறவுக்குப்பின்னர் ஆண் வெறும் கழுவித்துடைத்துக் கவிழ்த்துவைக்கப்பட்ட பாத்திரம். பெண் அப்படியல்ல. அட்சய பாத்திரம். மீண்டும் பெண்ணுக்கே வந்தேன். பெண்ணாகியிருந்து பெண்ணைப்பற்றிப் பேசினேன். ஒரு கட்டத்தில் கனவு வந்தது. வாழ்க்கை மேகத்திலேயே ஆரம்பித்து மேகத்திலேயே முடிந்தது. மேகமில்லா தெளிந்த வானத்தில் நட்சத்திரங்களுக்குத் தாவியது. அங்கே ஆணும் பெண்ணும் ஆதாமும் ஏவாளும் ஆண்டாளும் கண்ணனும் சிவனும் காளியும். நட்சத்திரங்களின் வாழ்க்கையே ஒரு ஆச்சரியம் நிறைந்தது தெரியுமா? சிவனும் காளியும் காதல்கொள்ளும்போது கையெடுத்துக் கும்பிடத்தோன்றும் எனக்கு. யாரேனும் காதல் காட்சியைக் கண்டு கையெடுத்துக் கும்பிடுவார்களா? நான் செய்வேன். இவற்றையெல்லாம் தரிசித்துவிட்டு என் வாழ்க்கையை நினைக்கையில் என்ன தரித்திரமிது என்று அருவருப்பு வரும். வாந்தி பீறிடும். ச்சிக். என்ன அசிங்கம் பிடித்த வாழ்க்கை இது? விழித்துப்பார்த்தால் சுற்றிவர வாந்தி நிறைந்திருக்கும். வாந்தியைப் பார்த்தும் மீண்டும் வயிற்றைப் பிரட்டிக்கொண்டுவரும். உவாக். கேயிஷா எட்டத்தே தெருமுனையில் திரும்பிக்கொண்டிருப்பாள். விட்டால் பிடிக்கமுடியாது. அவளை எப்படியும் தடுத்து நிறுத்தவேண்டும். என்ன காரியம் செய்துவிட்டேன். முட்டாள்மாதிரி அவளைத்திட்டி அனுப்பிவிட்டேனே. பிடிக்கவேண்டும்.

இப்படித்தான் அவன். எழுந்து சென்றுவிடுவான். கலவிக்குப்பின்னரான எந்தக்கணங்களையும் நான் அவனோடு கழித்ததில்லை. ஓடிப்போய்விடுவான். ஒவ்வொருதடவையும் இதுதான் நடக்கிறது. காமத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து பெரும் பள்ளத்தாக்கினுள் கைகளிரண்டையும் வீசியபடி விழுகையில், இன்னுமொருகணத்தில் நான் வழுக்குப்பாறைகளில் சிதறி உயிர் துறந்துவிடுவேன் என்று நிஜமாகவே நம்பும்தருணத்தில், கயிறு என்னை மீள இழுத்துக்கொண்டு விடுகிறது. அந்தக்கயிற்றின் முடிச்சை அவிழ்க்கமுடிவதில்லை. யாரையோ முகந்தெரியாதவளைத்தேடித் போயேவிடுவான். மலையின் உச்சியில் என்னைத் தனியே விட்டுவிட்டு மூச்சுப்பேச்சு இல்லாமல் வெறுமனே எழுந்து சென்றுவிடுவான். தவறு செய்த அடிமையினை முதலாளி பார்ப்பதுபோல வெறித்துப்பார்த்துவிட்டே அவன் செல்வான். அப்படி அவன் பார்க்கின்ற ஒவ்வொரு தடவைகளிலும் அவனைக் குத்திக் கொன்றால் என்ன என்று தோன்றும். உறவுக்குப்பின்னரான படுக்கையறையில் தனியே விட்டத்தை வெறித்துக்கொண்டு கிடந்திருக்கிறீர்களா? நான் கிடந்திருக்கிறேன். யாரையோ தேடி அரக்கப்பறக்க அவன் ஓடியதை நினைத்தபடியே நாள் முழுதும் கிடந்திருக்கிறேன். அழி மழை தென்புலம் முழுதும் பொழிந்துமுடிந்து அடுத்த சீசனும் வந்துவிட்டது. அவனுக்கான காத்திருப்பில் இனியும் பலனில்லை. மழை பொய்த்தாலும் தான் பொய்க்காது மகாவலி ஆறு. மரியான்னேயுக்குக் கிடைக்காததா? மழைக்காலத்தில் முழங்கால் தடக்கி அவள் விழுந்து கிடைக்கையில் ஒரு வில்லபி வந்து அவளை மீட்கவில்லையா? அவளை அலேக்காகத் தூக்கி, மழைத்தூறல்களுக்கிடையே கவிதை சொல்லி, இசை வடித்து மரியான்னேயின் கனவுலகை அவன் சிருஷ்டிக்கவில்லையா? என் கனவு. என் நினைவு. என் மலை உச்சி. யாரும் என்னை தள்ளிவிட வேண்டியதில்லை. என் வல்லபியைத்தேடி நானே வீழ்வேன்.

என் வல்லபி. வாடா. வா.

நேரிய கண்கள். அடர்ந்த புருவம். பெரிய நெற்றி. நீட்டு மூக்கு. வளைந்த மீசை. கரிய உதடு. முன்நீளும் நாடி. உயர்ந்த கழுத்து. பரந்த மார்பு. அகன்ற தோள்கள்…………..

என்னுடைய பல பின்நவீனத்துவக் கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கின்றன.

– OCT 6, 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *