பாதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 53,345 
 

குடிவந்த போது சிவசங்கரன் மாமா தன்னை ஓர் ஓவியர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீடு எட்டுவருடமாகப் பூட்டிக் கிடந்தது. அதைக் கட்டியவர் சிங்கப்பூர்க்காரான டேனியல் வைத்தியர். அவ்வருடமே அவரது மகளும், மனைவியும் கார் விபத்தில் இறந்தார்கள். வைத்தியருக்கு ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை. அழுகையும் படுக்கையுமாக இருந்தார். ஊரார் போய் துக்கம் கேட்டார்கள். மூன்று மாதத்தில் எழுந்து நடமாடி ஆறுமாதத்தில் வழக்கம் போல புதுமாப்பிள்ளைக் கோலம் பூணுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். சில கல்யாணத்தரகர்கள் கூட போய் துக்கம் விசாரித்து வந்தார்கள். ஆனால் இரண்டுமாதம் கழித்து வைத்தியரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. உடைகளைக் கோணலாக அணிந்து கொண்டு தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டு நடமாட ஆரம்பித்தார். ஒருமாதத்தில் எல்லாம் உறுதியாகி விட்டது. பிடித்துக் கொண்டுபோய் ஊளன்பாறை பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு போன எவரும் திரும்ப வருவதில்லை.

வைத்தியரின் தம்பி சாமுவேல் உள்ளூரில் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவர் ஒரு நாள் புதுவீட்டில் பால்காய்ச்சி பாதிரியாரைக் கூப்பிட்டு ஜெபம் வைத்துக் குடியேறினார். அவர்தான் டேனியல் வைத்தியருக்கு செய்வினை வைத்தது என்று ஊரில் பேச்சிருந்தது. ஆறு மாதத்திற்குள் சாமுவேல் வீட்டைவிட்டு மாறி குலசேகரத்திற்குக் குடிபோனார். அவரது மகள் டெய்சிபாய்க்கு ஏதோ ஆகிவிட்டது என்றார்கள். சும்மா கெட்ட கனவுகள் தான் என்று அவர் சொன்னாலும் மறைக்க முடியவில்லை. டெய்சிபாய்க்கும் மனநிலை பிசகிவிட்டது. அவளைக் கேரளா பக்கமாக ஏதோ குருசடிக்குத்தான் கொண்டு போனார்கள்.

அதன் பிறகு அந்த வீட்டில் யாரும் குடியேறத் துணியவில்லை. இரவில் வேட்டியை நன்றாக ஏற்றிக் கட்டி தலையில் தலைப்பாகையும் தோளில் குற்றாலம் துண்டுமாக வைத்தியர் வீட்டைச் சுற்றி வருவதை அப்பு நாடார் கண்டதாகச் சொன்னார். துருப்பிடித்த பூட்டுத் தொங்கும் வீட்டுக்குள் இரவில் சில சமயம் விளக்குகள் எரிவதும் ஆட்கள் நடமாடுவதும் தெரிவதாக அம்மிணிப் பாட்டி சொன்னாள். பாட்டியின் வீட்டுக்கு இருநூறடி தொலைவில்தான் வைத்தியரின் வீடு. பெரிய தோட்டத்திலும் எவரும் நடமாடாமலாகி காடு அடர்ந்தது. வீடு அங்காங்கே காரை உதிர்ந்து ஜன்னல் பலகைகளில் பூசணம் பூத்துப் பாழடைந்தது.

அந்த வீட்டுக்குத்தான் சிவசங்கரன். மாமா திடீரென்று குடிவந்தார். அவர் வீட்டை கிரயம் செய்தது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் காலையில் மூன்று மாட்டு வண்டுகளில் வீட்டுச் சாமான்கள் வந்திறங்கின. வீட்டை வண்டிக்காரர்களே கூட்டிப் பெருக்கினார்கள். ஒருவன் முற்றத்தில் அடர்ந்திருந்த புற்களையும் தொட்டால் வாடிச் செடிகளையும் மண் வெட்டியால் செதுக்கினான். செடிகள், கதவுகளிலும், சன்னல் கம்பிகளிலும் படர்ந்திருந்தன. நான் வேலியருகே நின்று வேடிக்கை பார்த்தேன். வழுக்கைத் தலையும் சோடாப்புட்டிக் கண்ணாடியும் அணிந்த குள்ளமான மனிதர் சுறுசுறுப்பாகச் சுற்றி வந்து சாமான்களை இறக்கிக்கொண்டிருந்தார். என்னுடன் அச்சுதன் பணிக்கரும் வந்து நின்று கொண்டார். “வெளியேயிருந்து வந்தவனுகளாக்கும் இல்லாட்டி இப்பிடித் துணிஞ்சு கேறிக்கிடமாட்டானுக” என்றார் பணிக்கர்.

நான் “அந்த வழுக்கைத்தலை ஆளு ஆராக்கும்?” என்றேன்.

“அவன்தான் ஓணரு. படம் வரையுத ஆளுண்ணாக்கும் பேச்சு.”

“ஆரு கண்டா? சாவதுக்காக்கும் வந்திருக்கான். நீ பாரு மக்கா, இண்ணு இருட்டி நாளை வெளுக்கும்பம் அவன் சங்கதிகள் மனசிலாக்குவான் பாவம்…..”

நான் வெகுநேரம் கழித்து வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அதற்குள் நாணிப் பாட்டி ஊர் முழுக்க எல்லாவற்றையும் சொல்லிவிட்டிருந்தாள். வந்தவர் பெயர் சிவசங்கரன். திருவனந்தபுரத்தில் படம் வரைந்து கொண்டிருந்தவர். மனைவி செத்துப் போய்விட்டாள். பிள்ளைகள் இல்லை. “தனிக்கட்டை. துணிஞ்ச கட்டை. இல்லேன்னா இப்பிடிவருவானா. பாவம்…” என்றாள் பாட்டி.

ஆனால் ஒன்றும் நிகழவில்லை. நான் மறுநாள் காலையிலேயே விபரீதச் சேதிக்காக அடித்துப் புரண்டு போய் பூவரச வேலியில் நின்று பார்த்தபோது சிவசங்கரன் மாமா பிரஷ் வைத்துப் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். எங்களூரில் அப்போது டாக்டர் ஒருவர்தான் அப்படிப் பல் தேய்ப்பார். அவர் சோப்பு போட்டுப் பல் தேய்ப்பதாக நான் நீண்ட நாள் நம்பி வந்தேன். பிறகுதான் அது ஒரு பசை மருந்து என்று தெரிந்துகொண்டேன். என் எதிர்கால லட்சியங்களில் ஒன்றாக அப்படி பல்தேய்ப்பது இருந்தது. நான் பார்ப்பதைக் கவனித்தும் மாமா கையசைத்து என்னைக் கூப்பிட்டார். மறுகணம் நான் திரும்பி ஒரு கையில் அவிழும் காற்சட்டையை பற்றியபடி ஓடி மூச்சுத்தெறிக்க என் வீட்டுக்குள் பாய்ந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.

“என்னடா” என்றாள் அம்மா. நான் ஒன்றும் சொல்லவில்லை.

“அந்தத் தெருநாய்ட்ட விளையாடாதேன்னு ஆயிரம் மட்டம் சொன்னேம்பிலே?” என்றாள் அம்மா. முதுகில் ஒரு பொய்யடி வைத்தாள்.

எனக்கு அது சிவசங்கரன் மாமாதானா என்று சந்தேகம் வந்தது. பேய்கள் அப்படி வேடம் மாறி வந்து நிற்கலாமே. கை வீசி என்னை ஏன் அது கூப்பிட வேண்டும். யோசித்துப் பார்த்தபோது, அதன் கால்கள் தரையிலேயே படவில்லை என்றும் தோன்றியது. இரண்டு நாள் இரவு பகலும் அதைப்பற்றி யோசிக்காமலிருக்க முயற்சி செய்து உலவினேன். மூன்றாம் நாள் பயம் குறைந்து ஆவல் ஏறியது. மாலையில் மெல்ல நடந்து போய் வைத்தியர் வீட்டை பார்த்து நின்றேன். வீட்டு முன் யாருமில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா என்று நான் வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருக்கும்போது பின்பக்கம் மாமா வந்து நின்றார் நான் மூச்சு அவிந்து பேச்சிழந்து நின்றேன்.

அவர் கையிலிருந்த பையை கீழே வைத்து வேட்டியை நன்றாகத் தூக்கிக் கட்டினார். “உள்ளே வா. ஏன் இங்க நின்று பாக்கே?” என்றார்.

நான் “இல்லை” என்றேன். பின்னால் நகர்ந்தேன்.

“என்ன பயப்படுதே? ஆம்பிளை தானே? இந்த வயசில இப்பிடி பயப்பட்டா எப்பிடி? வா” என்ற படி உள்ளே போனார்.

ஆண்பிள்ளையா என்ற கேள்வி என்னை உசுப்பியது. மேலும் அவர் சிரிப்பும் நம்பிக்கை தரத்கூடியதாக இருந்தது. மாமா வீட்டின் புதிய பித்தளைப் பூட்டை திறந்து உள்ளே போய் பையை வைத்தார். எனக்கு அந்த வீட்டுக்குள் வெளிச்சம் அலையடிப்பது போல இருந்தது.

“கொஞ்சம் பலசரக்கு காய்கறி வாங்கிட்டு வந்தேன். சமையல் சொந்தமாத்தான். என்ன பாக்கே?”

“வெளிச்சமா இருக்கு.”

“வெள்ளையடிச்சேன்” என்றார்

சுவர்களின் பால் வண்ணம் அப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. இது வேற மாதிரி வெள்ளையா இருக்கு.”

“இது சுண்ணாம்பில்ல, பெயின்ட்.”

“நீங்களே அடிச்சீங்களா?”

“ஆமா சும்மா இல்லை, இது மேல படம் வரையப் போறேன்.”

“சுவரிலயா?” நான் கோயில்களில் அப்படிப்பட்ட படம் பாத்திருக்கிறேன். “சாமி படமா?”

“இது வேறமாதிரி படம்.”

அவர் எனக்குப் பாலில்லாத டீ தந்தார். நான் குடித்துவிட்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். மிகப் பெரிய வீடு. எங்கள் வீடே பெரிது. இது அதைவிட ஏழெட்டு மடங்கு பெரிது. நிறையக் கூடங்கள், அவற்றிலிருந்து திறக்கும் வாசல்கள். வழி தவறி பல அறைகளில் அலைந்த மீண்டும் கொல்லைக்கே வந்தேன். மாமா வேறு அரையிலிருந்து கூப்பிட்டார். அவருடன் மீண்டும் முகப்புக்கு வந்தேன்.

“உங்களுக்கு வீட்டில் யாருமே இல்லையே. எதுக்கு இவ்வளவு பெரிய வீடு” என்றேன்.

“படம் வரையத்தான்” என்றார் மாமா.

நான் அந்த வீட்டுக்குள் போன விஷயத்தை அம்மாவிடம் கூறவில்லை. அடுத்த நாள் எங்கள் வீட்டில் எல்லோரும் சுசீந்திரம் தேர் பார்க்கப் போனோம். கன்னியாகுமரிக்கும் போய்விட்டு நாராயணன் சித்தப்பா வீட்டில் தங்கி நான்கு நாள் கழித்து நள்ளிரவில் திரும்பி வந்தோம். மறு நாள் காலையில் எழுந்து கருப்பட்டிக் காப்பி குடித்ததுமே நான் கால்சட்டையை கையில் பிடித்துகொண்டு மாமா வீட்டுக்கு ஓடிப்போனேன். கதவு சாத்தியிருந்தது. “மாமா” என்றேன்

“வா வா” என்றார் அவர் உள்ளேயிருந்து.

நான் கூடத்துக்குள் நுழைந்ததும் பிரமிப்பும் குழப்பமுமாக நின்றேன். கூடம் முற்றிலும் மாற்றிக் கட்டப் பட்டிருந்தது. இரண்டு புதிய வாசல்கள் திறந்தன. ஒன்று சற்றே இருட்டின ஒர் அறை நோக்கித் திறந்தது. உள்ளே மங்கலான மின் விளக்கு மட்டும் எரிய, உள்ளே யாருமே இல்லை. மேஜை நாற்காலிகள் மீது சில புத்தகங்கள் ஒரு காலி டம்ளர். இன்னொரு கதவு முழுக்கத் திறந்து கிடந்தது. உள்ளே அதற்கடுத்த அறைக்கான வாசல். அப்பால் வெயில் சரிந்து விழுந்த கொல்லைப் புறத்தில் சில வாழையிலைகளும் ஒரு தென்னை ஓலையும் நான் மாமா என்று கூவியபடி அந்த வாசலில் நுழைய முயன்று முகத்திலறைபட்டு நின்றேன். ஒரு கணம் என் மூளை குழம்பிய பிறகே அது சுவரில் வரையப்பட்ட ஓவியம் என்று தெரிந்தது.

இன்னொரு வாசலை தொட்டுப் பார்த்தேன். அதுவும் ஓவியம். எனக்கு அறிமுகமான பழைய வாசலையும் மெதுவாக ஐயத்துடன் தொட்டுப் பார்த்தேன். அதுவும் ஓவியமே என்று தெரிந்தபோது என் மனம் முழுக்கப் பயம் பிடித்தது. திரும்பிவிட எண்ணிக் கதவை நோக்கிச் சென்றேன். வெயில் பரவிய தோற்றத்துடன் அவ்வாசலும் ஓவியம் போலத்தான் இருந்தது. அதை நோக்கிச் செல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. நான்கு பக்கமும் வாசல்கள். நான்கும் ஓவியவாசல்கள். பீதியுடன் நான் அழ ஆரம்பித்தபோது இருண்ட அறையின் சன்னல் பெயர்ந்து விலகி அங்கு ஒர கதவு திறந்து மாமா வந்தார். “பயந்திட்டியா?” என்றார்.

நான் உடனே விசும்பி அழுதேன். அவர் என்னைத் தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டார். “வா” என்று அழைத்துச் சென்றார்.

உள்ளே பல அறைகளில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. முடிவடையாத ஓவியகள் எதிலுமே வழக்கமான ஓவியங்கள் போல மனிதர்கள் விலங்குகள் ஏதும் இல்லை. எல்லாமே கதவுகள், சன்னல்கள், அறைத்திறப்புகள்.

மாமா எனக்குப் பால் விடாத டீ கொடுத்தார். நான் அதைக் குடித்தபடி “எதுக்கு இப்படி வரையறீங்க?” என்றேன்.

“சும்மாதான்” என்றார் கண்களைச் சிமிட்டியபடி “பேய்கள் நம்மளைப் பிடிக்க வந்தா வழி தெரியாம குழம்பிப் போய்டும் பாரு அதான்.”

நான் வயிறு குபீரிட எழுந்து பிட்டேன் மாமா என் கையைப் பிடித்தார். “எங்க ஓடறே?”

“இங்கப் பேய் இருக்கா?”

“சும்மா சொன்னேன். பேயும் பிசாசும் ஒரு மண்ணும் இல்லை. நீ படித்த பிள்ளைதானே? சிந்திச்சுப் பாக்க வேண்டாமா?”

“அப்ப ஏன் இப்பிடி வரையணும்?”

“சும்மா ஒரு ஜாலிக்காகத்தான். எனக்குச் சின்ன வீடுகளே பிடிக்காது. எப்பபுமே பெரிய வீட்டில தான் இருப்பேன். வீட்டுக்குள்ளேயே காலார நல்லா நடக்கணும் ஓடணும் எவ்வளவு பெரிய வீட்டுக்கு எங்க போறது? எவ்வளவு பெரிய விடுன்னாலும் அதுக்கு ஒரு அளவு இருக்கே, இது அந்த மாதிரி இல்லை. இஷ்டத்துக்கு விரிச்சுக்கிட்டே போலாம். இப்ப இந்த வீட்டுக்குள்ள எத்தனை ரூம் இருக்குன்னு எனக்கே எண்ணிச் சொல்ல முடியாது. நேத்தைக்கு ராத்திரி கரெண்டு போயிடுச்சு. லாந்தரை எடுத்துக்கிட்டு சமையலறைக்குப் போனேன். வழி தவறிவிட்டது. அலைஞ்சு ஒரு வழியா போய்ச் சேர ஒரு மணி நேரம் ஆச்சு தெரியுமா?”

எனக்கு நம்பவும் முடியவில்லை, நம்பாமலிருக்கவும் முடியவில்லை. அந்த வீட்டுக்குள் பார்ப்பவை இப்போது பயத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. அதைப்பற்றி அம்மாவிடம் சொல்லாமலிருக்க முடியவில்லை. அரைகுறையாக ஏதோ சொல்லப் போக அம்மா குத்திக் குடைந்து எல்லாவற்றையும் கேட்டாள். அவள் முகத்தில் பீதி வெளுத்துப் படர்ந்து “இனிமே நீ அங்கே போகப்பிடாது. போனா கைய கால முறிச்சிடுவேன்” என்று சொல்லிவிட்டாள்.

அவள் அப்படி ஒப்புக்கு எதும் சொல்வதில்லையாதலால் நான் அரண்டுபோனேன். நாலைந்து நாள் மாமா வீடுப்பக்கமே தலை காட்டவில்லை. ஐந்தாம் நாள் அப்பக்கமா ஓரக்கண்ணால் பார்த்தபடி போய் “மாமா!மாமா!” என்று கூப்பிட்டேன். “உள்ளே வா” என்று மாமாவின் குரல்கேட்டது. வாசலைத் திறந்து கூடத்தில சமைத்து பிரமித்து நின்றேன். திறந்து கிடந்த ஆறு கதவுகள் வழியாகவும் ஏராளமான கதவுகள் திறந்த நீண்ட பாதைதான் தெரிந்தது மனம் படபடக்க ஒரு கணம் நின்று விட்டுத் திரும்பி ஓடி வந்துவிட்டேன்.

மாமாவைப் பற்றிய செய்தி அதற்குள் ஊருக்குள் பலவாறாகப் பரவி விட்டது. அவர் ஒரு சூனியக்காரர் என்று நாணிப்பாட்டி சொன்னாள். அவருடைய வீட்டுக்குள் பலவிதமான ரகசிய வாசல்களும் பாதைகளும் திறந்திருப்பதாகவும் அதன் வழியாக டேனியல் வைத்தியரும் அவருடைய மகனும் மனைவியும் எல்லாம் சுற்றி அலைவதாகவும் சில சமயம் அவர்களுக்கும் சிவசங்கரன் மாமாவுக்கும் பெரிய சண்டை நடப்பதாகவும் சொன்னாள். தொடர்ந்து கேட்ட கதைகளால் கிலியடைந்து நான் மாமா வீட்டுப் பக்கமாகப் போவதையே தவிர்த்தேன்.

திருவனந்தபுரத்தில் ஓட்டலில் வேலைசெய்யும் சிவதாணு ஊருக்குப் புதிய செய்தியுடன் வந்தான் மாமாவிம் மனைவி இறக்கவில்லை. ஒரு ஆசாரியுடன் கோழிக் கோட்டுக்கு ஓடிப் போய்விட்டாள். அதன் பிறகு மாமா சிலகாலம் மனநிலை பிசகிச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். நெடுமங்காட்டுப் பக்கம் ஒரு வீட்டில் கொஞ்ச நாள் இருந்தார். ஊரார் கூடி அவரை அடித்துத் துரத்தி அந்த வீட்டுக்கும் தீ வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு பத்து வருடம் ஆளை யாரும் காணவில்லை வடக்கே சாமியாராகி அலைவதாகச் சொல்லப்பட்டது. போன வருடம் திரும்பி வந்து அவரது மனைவியைக் கோழிக்கோட்டில் சந்தித்து கட்டையால் தாக்கியிருக்கிறார். அவளுக்கும் ஆசாரியால் பிறந்த குழந்தைக்கும் அடி விழுந்திருக்கிறது அங்கிருந்து தப்பி ஓடி திருவனந்தபுரம் வந்து பூர்விக வீட்டை விற்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். கோழிக்கோடு போலிஸ் தேடி வந்தபோதுதான் எல்லாருக்கும் விஷயம் தெரியும். சிவதாணுவின் ஓட்டலுக்கு நேர் பின்னாலதான் அவரது வீடு.

“இப்பம் விளிச்சு ஒரு ஃபோனடிச்சா போரும் பிடிச்சு அமுக்கி எடுத்துப்போடுவா. அப்படிப்பட்ட பிடிகிட்டாப் புள்ளியாக்கும்” என்றான் சிவதாணு.

நான் மறுநாள் மாமாவின் வீட்டுமுன் பூவரச மரத்தடியில் நின்று வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெண்ணிறச் சுவர்களும் சிமென்ட் கூரையும் கொண்ட உயரம் குறைவான வீடு. வெளியேயிருந்து பார்க்கும் போது மிகவும் சாதாரணமாக மற்ற எல்லா வீடுகளையும் போலத்தான் இருக்கிறது. ஆனால் அதற்குள் எத்தனை ஊடு வாசல்கள். வராண்டாக்கள், கதவுகள், ஊடுவழிகள், ரகசியப் பொந்துகள். உள்ளே போகும் ஒருவர் மீண்டும் வரவே முடியாதபடி மாட்டிக் கொள்ள முடியும். நாட்கணக்கில் மாசக் கணக்கில் வருடக்கணக்கில் எனக்கு மூச்சுத் திணறியது. சிறுநீர் வந்து முட்டி ஒரே ஓட்டமாகத் திரும்பி ஓடி வந்துவிட்டேன். அன்றிரவும் பிறகும் என் கனவில் நான் விசித்திரமான வாசல்களைத் திறந்து திறந்து சுற்றியலைந்து வழி தவறி, பயந்து, சிறுநீர் கழித்து விழித்து கொண்டேன்.

மாமாவை வெளியே எவருமே பார்க்கவில்லை என்பதையும் எவரும் கவனிக்கவில்லை. ஒரு மாதம் வரை ஆனபோதுதான் அவர் அங்கே இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. சாமான்கள் வாங்குவதற்காவது அவர் வந்தாக வேண்டுமே. பஞ்சாயத்து மெம்பர் சாமிதாஸ் நாடார் என் அப்பாவை வந்து பார்த்து இருவரும் தனியாக வெகு நேரம் பேசிக் கொண்டார்கள். மறு நாள் மீன் சந்தையில் ஊர்ப் பெரியவர்கள் கூடி மாமாவைப் பற்றிப் பேசியதாக அப்பு அண்ணா சொன்னார். முக்கியமான ஏழெட்டுபேர் கூடி மாமாவின் வீட்டுக்குப் போய் பலமுறைக் கூப்பிட்டுப் பார்த்தனர். பதில் இல்லை. ஞானகுணத்தை உள்ளே அனுப்பிப் பார்க்கச் செய்தனர். உள்ளே யாருமில்லை என்று அவர் சொன்னார். வெளியே வீட்டைப் பூட்டி சாவியை மெம்பர் சாமிதாஸ் வைத்துக் கொண்டார். ஆனால் வீட்டுக்குள் இரவில் வெளிச்சம் தெரிவதாக நாணிப் பாட்டி சொன்னாள்.

“அவரை அந்த வைத்தியருக்குப் பேய் பிடிச்சு முழுங்கிப் போட்டு அதாக்கும்” என்றான் அப்புக்குட்டான். எனக்குப் பலநாட்கள் இடைவிடாது மூத்திரம் முட்டுவது போன்ற பதற்ற நிலையும் நிலை கொள்ளாமையும் இருந்தது. பிறகு மெல்ல எல்லாரும் மாமாவை மறந்தது போலத் தோன்றியது. சேலக்கரை வீட்டு ருக்மிணித் தங்கச்சியின் மகள் அம்பிகாமணித் தங்கச்சி அயலூர்க்காரன் ஒருவனுடன் ஊரைவிட்டு ஓடிப்போன தகவல் வந்து ஊரை பரபரப்பாக்கியது. அதன் பிறகு கோயில் திருவாதிரை விழாவில் பாறாசாலை பத்மத்தின் நடன நிகழ்ச்சி.

நான் வெகுநாள் யோசித்து தீர்மானித்து மாமாவின் வீட்டை அடைந்தேன். வீடு மேலும் பாழடைந்து மேலும் தனிமையும் மர்மமும் கொண்டு நின்றது. முற்றத்தை முட்செடிகள் பூவரச மரத்தடியில் நின்று வீட்டையே பார்த்தேன். மெதுவாகத் தைரியம் சேகரித்து வீட்டை நெருங்கி கதவருகே போய் “மாமா மாமா சிவசங்கரன் மாமா” என்று பலமுறை கூப்பிட்டேன். பதில் இல்லை பூட்டை இடித்துப் பார்த்தேன். கெட்டியான பூட்டு சற்று துரும்பேற ஆரம்பித்திருந்தது. கதவை தள்ளி பார்த்த போது ஒன்று தோன்றியது வீட்டில் வேறு வாசல்கள் இருக்கக்கூடும் கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தேன். உள்பக்கம் மூடியிருக்கிறதா என்று தள்ளினேன். கையில் சுவர் தட்டுப்பட்டது. இன்னொரு கொல்லைப்பக்கம் கதவு இலேசாகச் சாற்றப்பட்டிருந்தது. ஓவியம் போலத்தான் இருந்தது. ஆனால் கைவைத்ததும் திறந்து கொண்டது.

உள்ளே நான்கு வாசல்கள் திறந்தன. ஒவ்வொன்றாக மூடினேன். மூன்றாம் வாசல்கள் திறந்தது. மீண்டும் வாசல்கள். வாசல்கள் வழியாகத் திறக்கும் வராண்டாக்கள். பாதி மூடிய கதவுகளுக்கு அப்பால் ஒளி சரிந்திறங்கிய சன்னல்கள் கொண்ட அறைகள் செவ்வக வடிவமானவை. சதுரவடிவமானவை. எல்லா அறைகளிலும் பலவகையான வாசல்கள் திறந்து பல திசைகளுக்கு விரிந்த அறைவாசல் திறப்புகளைக்காட்டின. திசை தடுமாறி விட்டிருப்பதை உணர்ந்தேன். “மாமா மாமா” என்று கூப்பிட்டேன். என் குரல் வேறு எங்கோ எதிரொலித்தது.

சற்று நேரம் வரை எப்படியும் மீண்டு விடலாம் என்ற ஆழமான நம்பிக்கையும் அதிலிருந்து உருவான உற்சாகம் மிக்க ஆவலும் என்னிடம் இருந்தன. கால்கள் களைத்து சோர்ந்து உடல் எங்கும் வியர்வை வழிய ஆரம்பித்த போது உற்சாகம் வடிந்தது. இதே வாசல் என்று உறுதியாக நம்பித் திறந்த பல வாசல்கள் பொய் தெரியத்தெரிய பயம் மேலோங்கியது “மாமா!மாமா!” என்று நான் கூவியபோது என் குரல் நடுங்கியதையும் பிறகு தழுதழுத்ததையும் நானே கேட்டேன்.

யாரோ நடமாடும் காலடி ஓசை கேட்டது. அது என் காலடி ஒசை தானா என்று சோதிக்கச் சட்டென்று நின்று கேட்டேன் இல்லை வேறு யாரோ. வேறு யாரோ மிக நிதானமாக நடந்து செல்லும் ஓசை யாரது?” என்றேன் பதில் இல்லை “மாமா!” மீண்டும் நடந்தேன். இம்முறை என் நடை மெல்ல மெல்ல ஓட்டமாக மாறியது. ஒரு கட்டத்தில் துரத்தப்படுபவன் போல வாயால் மூச்சு விட்டபடி ஓடிக்கொண்டிருந்தேன்.

களைத்து திரும்பி தலையை கைகளால் பற்றிக்கொண்டு குனிந்து தரையில் அமர்ந்தேன். மூச்சும் தாகமும் தொண்டையை அறுத்தன. எச்சில் கூட்டி விழுங்கி விட்டு எழுந்தபோது எதிரே திறந்த வாசல்களுக்கு அப்பால் ஒரு மனிதர் வேட்டியை வயிற்றுமீது எற்றிக் கட்டி தலையில் தலைப்பாகையும் தோளில் சிவப்புக் குற்றாலம் துண்டுமாக மெல்ல நடந்து செல்வது தெரிந்தது. மித மிஞ்சிய பயத்துடன் உறைந்து நின்று அவரைப் பார்த்தேன். “வைத்தியர்” என்று என் மனம் சொன்னதுமே எல்லா உறுப்புகளும் பரபரப்படைந்தன ஓடி அவ்வாசலை முட்டியபோது அது நிலைக்கண்ணாடி என்று தெரிந்தது. அப்படியானால் அது பிரதிபலிக்கும் வாசல் எது? நேர் எதிரில் இருந்தது ஓர் ஓவியவாசல்தான். வாசல்கள் முட்டு முட்டி இறுதியில் திறந்த அது வேறு ஒரு வராண்டாவிற்குக் கொண்டு சென்றது. அங்கிருந்து இன்னொரு அறைக்கு மீண்டும் அதே வராண்டா. மீண்டும் அறைகள். மீண்டும் நான் வந்தது முதலில் இருந்த அதே அறைக்குத்தான், வேறு திசையிலிருந்து.

ஒரு முறை நின்று மூச்சுவாங்கிய போதுதான் நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதை உணர்ந்தேன். அழுதபடியே அறைகள் அறைகளாக ஓடினேன். ஓர் அறைக்குள் ஒரு அம்மாவும் பெண்ணும் இருப்பது சன்னல் இடைவெளி வழியாகத் தெரிந்தது. அம்மா கட்டிலில் படுத்திருக்க பெண் பைபிள் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் நான் அறைக்குள் நுழைந்ததும் காட்சிக் கோணம் மாறிவிட்டது. யாருமில்லை. மீண்டும் ஓட்டம். வெகுதொலைவில் மீண்டும் வைத்தியரைக் கண்டேன். அவ்வறைக்குள் நுழைய முயன்று அது ஓர் ஓவியம் என்று கண்டேன்.

கடைசியில் ஒரு பெரிய கூடத்தில் அப்படியே குப்புற விழுந்து விட்டேன். நான் சில கணங்களில் செத்துவிடுவேன் என்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்ட போது முதுகு கோடிக்கண்களினாலான ஒரு பரப்பாக மாறிக் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. யாரோ நெருங்கி வருகிறார்கள். கூடத்திற்குள் வந்து என்னைப் பார்க்கிறார்கள். சிலகணம் பார்த்தபடி நின்று பிறகு திரும்பி வேறு ஒரு அறைக்குள் நுழைத்தார்கள். நான் பாய்ந்து எழுந்து கூடத்தைப் பார்த்தேன். நான்கு பக்கமும் திறந்த அறைகளில் முடிவற்ற வரிசை. ஓர் அறைக்குள் நுழைய முயன்றேன். அது கண்ணாடிப்பிம்பம். உடனே அதுவரை அறுபட்டிருந்த கண்ணீர் பீறிட்டு வந்தது “அம்மா” என்று அழுதேன். அம்மா அம்மா என்று கூவியபடி கதவுகளை முட்டி ஒன்றில் நுழைந்து இன்னொன்றில் ஊடுருவிச் சென்று மீண்டும் களைத்து நின்றேன்.

அப்பால் திறந்த பிரகாசமான அறை ஒன்றில் மாமாவைக் கண்டேன். மேஜை மீது பேப்பர் வைத்து வரைந்து கொண்டிருந்தார். மேஜை மீது ஒரு மூன்று வயது பெண் குழந்தை உட்கார்ந்து சாயங்களால் விளையாடிக் கொண்டிருந்தது. மறு பக்கம் ஒரு பெண் ஏதோ படித்தாள். அது அவர் மனைவி என்று தெரிந்தது. நான் மாமா என்று கூப்பிட்டேன் மாமா மாமா என்று கத்தினேன் மாமா அருகே இன்னொருவன் அமர்ந்து டீயை ஸ்பூனால் கலக்கினான். அல்லது ஸ்பூனால் எதையோ அதிலிருந்து எடுத்தான். நான் அவர்களை ஒரு கணம் தான் கண்டேன். குரலெழுப்பியபடி சற்று முன்னகர்ந்த போது கோணம் மாறிவிட்டது அவர்களைத் தெரியவில்லை.

மீண்டும் கதவுகளைத் தட்டித் தட்டி திறந்து திறந்து ஓடிக்களைத்து நின்றேன். அப்போது அச்சம் முற்றிலும் விலகிவிட்டது. பிரமிப்பு மட்டும்தான். அவர்கள் என்னை வேறு எங்கிருந்தோ பார்க்கிறார்கள் என்று உணர்ந்தேன். அவர்களைப் போலத்தான் நானும். இனி இவ் வீட்டில் நுழைபவர்கள் என்னையும் ஓவியமாகக் காண்பார்கள். மறுகணம் பீடித்த பேரச்சம் என்னைத் தூக்கி வீசியதுபோல பாய வைத்தது. நான் வெளிவந்த கூடம் பலமுறை அதற்குள் வந்தது தான். சுவரில் ஒரு பெரிய பிம்பம் மாட்டப்பட்டிருந்தது. அது ஒரு புங்கமரம் அதற்க அப்பால் தெரு. வீடுகளில் விளிம்புகள். எனக்கு அறிமுகமான இடம். நான் ஓவியம் நோக்கிப் பாய்ந்தேன். ஆனால் அது ஒரு திறப்பு. தோட்டத்தில் அந்தப் புங்கமரத்தில் வந்து மோதி விழுந்தேன்.

எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஒடினேன். மாமா அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறார் என்று நான் சொன்னதை பல வருடங்கள் எல்லோருமே கிண்டல் செய்தனர். பிறகு அந்த வீடு இடிந்து விழுந்தது. நான் படிப்பிற்காக ஊரைவிட்டு வந்தேன். மேலும் பல வருடங்கள் கழித்து ஒரு நாள் அக்காட்சிகள் உக்கிரமான கனவாக வந்தன. விழித்துக்கொண்ட பின்பு நான் முதலில் அவ்வீட்டுக்குள் அனுபவித்ததும் கனவே என்று பட்டது. அல்லது கனவில் கண்டவை நனவுடன் கலந்து நினைவில் பதிந்து விட்டன.

அன்று மாமாவுடன் அவ்வறையில் இருந்தவன் அந்த ஆசாரிதான் என்று ஒரு நினைவுக் கணத்தில் என் மனம் அறிந்தது. மற்றது அவர் மன€வியும் அந்தக் குழந்தையும் தான். உலகத்தை அறிந்துவிட்டிருந்தமையால் எனக்கு அதில் ஆச்சரியம் ஏற்படவில்லை. ஆனால் உடனே அந்த வீட்டில் நான் சுற்றிசுற்றி அலைந்ததை மேலும் பல மடங்கு பீதியுடன் அனுபவித்தேன்.

நன்றி: உயிர்மை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *