கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 24,527 
 

காலம் மணி ஒன்பது. சூரியக் கதிர்கள் முருகன் வீட்டையும் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்னும் முருகன் எழுந்திருக்கவேயில்லை.

“முருகா, எழுந்திரு, எழுந்திரு’ என அவன் அப்பா சத்தம் போட்டபடியே வந்தார். ஒரு முறை தலையைத் தூக்கிப் பார்த்த முருகன் “கொஞ்சம் இருங்கப்பா’ என்று சொல்லி விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டான்.

“ஏங்க, குழந்தைக்கு இப்பதான் பரீட்சை முடிஞ்சிருக்கு… கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே.. விடுங்க…’ என்று அவன் அம்மா முருகனுக்காக பரிந்து பேசினார். அதைக் கேட்டதும் முருகன் இன்னும் இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டான்.

காலம் உன் கையில்அவனுக்கு பரிதியும், மதியும் ஒன்றுதான். இரவு,பகல் பாராமல் எப்போதும் சும்மா கிடப்பதே சுகம் என்று விடுமுறை நாட்களில் தூங்க ஆரம்பித்து விடுவான்.

“நீ இப்படி அவனுக்காகப் பரிந்து பேசினால் எப்படி அவன் முன்னேறுவான்? இப்படித் தூங்கித் தூங்கியே அவன் பொழுதைக் கழிக்கிறான். ஒண்ணு தூக்கம், இல்லைனா டி.வி.’ என்று அரற்றியபடியே வேலைக்குப் புறப்பட்டார் முருகனின் அப்பா.
அன்று மாலை முருகனின் தாத்தா ஊரிலிருந்து வந்தார். தன் பேரன் எப்போதும் போல தூங்கியே நேரத்தை வீணடிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அற்புதமான காலை, மாலை நேரத்தை அவன் படுக்கையிலேயே கழிப்பதை அவர் சுத்தமாக வெறுத்தார்.

அவர் தனது மகளிடம் “என்னமா உன் பையன் இன்னும் தூங்கிகிட்டேயிருக்கான், எழுப்பும்மா, படிக்கச் சொல்லு அல்லது உடற்பயிற்சி ஏதேனும் செய்யச் சொல்லு’ என்றார். “இல்லைப்பா… அவனுக்கு இப்பதான் பரீட்சை முடிஞ்சிருக்கு. கஷ்டப்பட்டு படிச்சிட்டுத் தூங்கிட்டிருக்கான்’ என்றார்.

“நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்லைம்மா. நேரம் என்பது நமக்குக் கிடைத்திருக்கிற அற்புதமான செல்வம். அது அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம். அதனை பயன்படுத்தாமல் விட்டால் நமக்கு நாமே அழிவைத் தேடிக்கிறோம்னு அர்த்தம். நேரம் போதவில்லை என்று பலரும் வேதனைப்படறாங்க. இளமையில் நேரத்தைப் பயன்படுத்தாமல் வீணே தூங்கிக் கழிப்பது குதிரை கீழேயும் தள்ளி குழி பறிப்பதற்குச் சமம்’ என்றார் தாத்தா.

அப்போது, உள்ளே வந்த முருகனின் அப்பா, “நல்லா சொன்னீங்க மாமா, முருகன் நேரத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. தேர்வுக்குக் கண் விழித்துப் படித்தான் என்பது உண்மைதான். அதுக்காக அதையே சாக்காக வச்சிக்கிட்டு இருக்கிற நேரத்தை வீணடிக்கலாமா? பக்கத்து வீட்டு செந்தில், காலையில் யோகா வகுப்பு, பள்ளியில் படிப்பு, மாலையில் டான்ஸ் கிளாஸ், பின்னர் டென்னிஸ் பயிற்சி என்று நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தறான். இதெல்லாம் அவனாகவே வலியச் சென்று சேர்ந்து கொண்டவை. அதனாலே, அவன் நேரத்தை வீணடிப்பதே இல்லை. சொல்லப் போனால் விரும்பி மாட்டிக் கொண்டவை. அது அவனுக்குத் தளைகள் அல்ல. பின்னால் அவனுக்கு கழுத்தில் விழப் போகிற வெற்றி மாலைகள். அதனால், அவன் பள்ளியில் முதல் மாணவனாக மட்டுமல்லாமல், இதர கலைகளிலும் தேர்ச்சி பெற்று மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கான்’ என்றார்.

அப்போது தாத்தா, “ஆமாங்க… விடுமுறை என்பது தூங்கியோ, வீணாக அரட்டை அடித்து பொழுது போக்கவோ அல்ல. ஓய்வெடுத்து இன்னும் நம் திறமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். லேட்டா எழுந்து, லேட்டா சாப்பிட்டு, வீணே பேசி அரட்டை அடித்து, வீணே போகும் நேரம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் அமையும். சீக்கிரம் எழுந்து, சுறுசுறுப்பாக இருக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லித் தரணும். நல்ல குணம், நல்ல எண்ணமாகும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களுக்கு வித்து. விடுமுறையில் நல்ல புத்தகங்களைப் படிப்பது அறிவு வளர்ச்சிக்கு உதவும்.

நல்ல பழக்கம், நல்ல வழக்கமாக மாறும், நல்ல வழக்கம் நல்ல ஒழுக்கத்தை வளர்க்கும். காலையில் உடற்பயிற்சி செய்தால் நோய்கள் நம்மை அண்டாது. அதனால், காலையில் சீக்கிரம் எழ வேண்டியிருக்கும். செய்வதற்கு ஒண்ணும் இல்லையே என்ற எண்ணமும் எழாது. பொழுதை என்ன செய்து போக்கலாம் என்ற குற்ற உணர்வும் வராது. சும்மா இருக்கிறோமே என்ற மன வருத்தமும் ஏற்படாது.

மாறாக வாழ்க்கைக்கு உபயோகமானவற்றை அறிந்திருக்கிறோமே என்ற மனநிறைவு, வாழ்க்கைக்கு பின்னால் பயன்படக்கூடிய திறன்களைக் கற்று இருக்கிறோமே என்ற மகிழ்ச்சி, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்ற திருப்தி முதலியவை ஏற்படும். தேனீயைப் போல உழைக்கணும், எறும்பைப் போல சுறுசுறுப்பாயிருக்கணும். ம்ம்ம்… நம்ம முருகன் எப்பதான் இதை உணரப் போறானோ தெரியலையே’ என்றார்.

அப்பாவும், தாத்தாவும் பேசிக் கொண்டிருந்ததை தூங்குவதைப் போல் பாவனை செய்து படுக்கையிலேயே படுத்து, கேட்டுக் கொண்டிருந்த முருகன் துள்ளி எழுந்து-

“தாத்தா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க. இனி நான் தூங்கி, டி.வி.யைப் பார்த்து சும்மா பொழுதைக் கழிக்க மாட்டேன். என் நண்பன் செந்திலைப் போல் நேரத்தை அர்த்தமுள்ளதாகக் கழிப்பேன். இன்றே நான் நம் வீட்டின் அருகிலுள்ள நூலகத்தில் உறுப்பினராகி ஓய்வு நேரங்களில் நல்ல புத்தகங்களைப் படிப்பேன்.

வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள அருகிலுள்ள ஓவியப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று என் ஓவியத் திறமையை வளர்த்துக் கொள்வேன்’ என்றான்.

இதைக் கேட்ட முருகனின் தாத்தா மிகவும் சந்தோஷத்துடன் “காலம் உன் கையில் இருந்தால் வெற்றிப் படிக்கட்டுகள் உன் காலடியில்’ என்று கூறி, அவனுக்கு ஒரு வாட்சைப் பரிசாக அளித்தார்.

“முருகா, விடுமுறை என்பது ஒரு வாய்ப்பு. கிடைக்கும் நேரம் பொன் துகள்கள் என்றால், விடுமுறை என்பது தங்கக் கட்டிகள். காலம் பொன் போன்றது. பொன்னையும் வாங்கிடலாம். ஆனால், கழிந்து போன காலத்தை வாங்க முடியாது. எனவே,காலம் உயிர் போன்றது. ஏன்னா, போன உயிர் திரும்பி வராது இல்லையா. நமக்கு நிறைய நேரம் இருக்கு. நாம்தான் அதை சரியா எடுத்து பயன்படுத்தனும்.

இளமையில் குனிந்து படித்தால், முதுமையில் தலை நிமிர்ந்து நிற்கலாம்’ என்றார் தாத்தா.

முருகன் இப்போதெல்லாம் லேட்டாக எழுந்திருப்பதே இல்லை. சீக்கிரமாக எழுந்திருப்பது, சுறுசுறுப்பாக இருப்பது, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் துணையாக ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டிருப்பது போன்ற செயல்களை அவன் தொடர்ந்து செய்ததால், அது அவனுக்கு பழக்கமாகி விட்டது.

இப்போது முருகன் அவன் பள்ளியில் எல்லாத் துறைகளிலும் முதல் மாணவனாக ஜொலிக்கிறான். அவனது பழக்கத்தையும், பல திறன்களையும் வளர்த்துக் கொண்டதைப் பார்த்து அவன் அம்மா பிரமித்துப் போனார்.

“எல்லாம் என்னால்தான்’ என்று சிரித்தபடியே சொன்னார் தாத்தா.

“இல்லை… இல்லை என்னால்தான்’ என்றார் முருகனின் அப்பா.
“இல்லை… எல்லாம் என்னுடைய விடாமுயற்சியால்தான்’ என்று சிரித்தபடி டென்னிஸ் மட்டையை சுழற்றியபடியே சென்ற முருகனை, தன் தடியால் செல்லமாகத் தட்ட பின்னாடியே ஓடினார் இளைமைத் துள்ளலுடன் அவனுடைய தாத்தா.

– பா.இராதாகிருஷ்ணன் (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *