கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 2,887 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6 – 10 | அத்தியாயம் 11 – 15 | அத்தியாயம் 16 – 20

11. கடிதம் வந்தது! 

அவர்கள் போன பிறகு மதுரநாயகம் தன்னுடைய அறையில் உட்கார்ந்தபடியே, “ரமணி குற்றமற்றவன்; மிகவும் யோக்கியமானவன் என்பது தெளிவாகி விட்டது. ஆனாலும், இப்போது அவன் எங்கே இருக்கிறானோ! கடவுளே! அவன் உயிரோடு இருக்கவேண்டும் சுகமாக இருக்கவேண்டும்” என்று கூறிக் கொண்டே வலது பக்கத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கிருஷ்ணன் படத்தைப் பார்த்துக் கும்பிட்டார். 

அப்போது, “சார், இதெல்லாம் உங்களுக்கு” என்று சொல்லி மேஜைமேல் மூன்று கடி தங்களை வைத்துச் சென்றான் ஒரு வேலைக்காரன். 

மதுரநாயகம் ஒவ்வொரு கடிதமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு கடிதம் அவரது நண்பர் ஒருவர் குற்றாலத்திலிருந்து எழுதியது. மற்றொன்று திருச்சியிலிருந்து அவருடைய அக்கா எழுதியது. மூன்றாவது கடிதத்தை எடுத்ததும் மேலேயிருந்த விலாசத்தைப் பார்த்தார். ‘உயர்திரு. டி. வி. மதுரநாயகம் அவர்கள்’ என்று மிகவும் மரியாதையாக எழுதப் பட்டிருந்தது. ‘யாரது இவ்வளவு மரியாதையாக எழுதியிருப்பது!’ என்று கேட்டுக்கொண்டே உறையைக் கிழித்தார்; உள்ளேயிருந்த கடிதத்தை எடுத்தார். படித்துப் பார்த்தார். படிக்கும்போதே அவருடைய முகத்தில் பிரகாசம் தோன்றியது. படித்து முடித்ததும், உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது. உடனே அவர் ‘விருட்’டென்று இடத்தைவிட்டு எழுந்தார். முதலாளி அறையை நோக்கி அந்தக் கடிதத்துடன் வேகமாகச் சென்றார். 

“சார்,சார்! இந்தக் கடிதத்தைப் பாருங்கள் சார்; படித்துப் பாருங்கள் சார்!” என்று குதூகலமாகக் கூறிக்கொண்டே முதலாளியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார். முதலாளியும் பரபரப்புடன் அக்கடிதத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்! 

முதல் இரண்டு வரிகளைப் படித்ததும், “அடடே, ரமணி எழுதியிருக்கிறானே! என்ன எழுதியிருக்கிறான்?” என்று கூறிக்கொண்டே மேலும் ஆவலோடு படிக்க ஆரம்பித்தார்: 

“அன்பே உருவான மானேஜர் ஸார் அவர்களுக்குப் பணிவான வணக்கம். 

அனாதையாகத் திரிந்த என்னை ஆபத்திலிருந்து காட்பாற்றினீர்கள். நாடக சபாவில் வேலைக்கு அமர்த்தினீர்கள். ஆறு மாதமாக வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டு அன்பாக, அருமையாக வளர்த்தீர்கள். இப்படிப்பட்ட உயர்ந்த குணம் படைத்த உங்களிடம் கடைசியாக நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வந்து விட்டேன். இதை நினைக்க நினைக்க என் நெஞ்சம் மிகவும் வேதனைப்படுகிறது. 

நான் பட்டுத் துணியைத் திருடி ஒளித்து வைத்ததை நேரில் பார்த்ததாகத் திரை இழுக்கும் துரைசாமி கூறினார். அவருக்கும் எனக்கும் எவ்வித விரோதமும் இல்லை. அவர் ஏன் அப்படிக் கூறினார் என்பதே எனக்குப் புரியவில்லை என் குணத்தை நீங்கள் நன்றாக அறிந்தவர்கள். அதனால், நான் திருடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்கு எப்படி நிரூபித்துக் காட்டுவது? அதற்கு வழியில்லாததால் நான் திருட்டுப் பட்டம் பெற வேண்டிய தாயிற்று! 

முதலாளி அவர்கள் என்னை வெளியே பிடித்துக் தள்ளினார்கள். அதற்காக நான் அவர்கள் மீது கோபப்படவில்லை; ஆத்திரப்படவும் இல்லை. நாடக சபாவில் பல விலை உயாந்த சாமான்கள் இருக்கின்றன. அதனால் ஒருவன் மேல் சந்தேகம் ஏற்பட்ட பிறகு,  அவனை வைத்துக்கொள்ள மனம் இடம் தராது. அதனால்தான் முதலாளியவர்கள் என்னை வெளியேற்றியிருக்கிறார்கள்.அவர்கள் மீது தவறில்லை சந்தர்ப்பம் என்னைத் திருடனாக்கி விட்டது. ஆனாலும்; உண்மையிலே நான் திருடன் அல்ல என்பதை எல்லாரும் அறியவேண்டும். அறியக்கூடிய காலம் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசைதான் இப்போது எனக்கு இருக்கிறது. 

நான் வேலையில் இருக்கும்போதாவது எனக்குக் கிடைத்த சிறு தொகையாகிய பத்து ரூபாயைத் தங்க ளிடம் கொடுத்துவிட்டு, வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இனி அந்தப் பத்து ரூபாய்க்கும் வழியில்லை! உங்களுக்குப் பாரமாகவே இருக்கவேண்டும். அதை நான் விரும்பவில்லை. அன்று இரவு நான் உங்களைப் பார்த்திருந்தால் நீங்கள் நிச்சயமாக என்னைப் போக விடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் தங்களிடம் சொல்லிக் கொள்ளாமலே வந்துவிட்டேன். நான் திருடன் அல்ல என்பது தெளிவாகும் வரை பட்டணத்தில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். கால் போனபடி நடந்தேன். சிறிது தூரம் சென்றதும், ‘இவ்வளவு நாட்களாக நமக்கு உணவு தந்த அம்மாளிடம் சொல்லாமல் வந்து விட்டோமே!’ என்று நினைத்து வீட்டுக்குச் சென்றேன். ஆனால், அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல ஆரம்பித்தால் நேரமாகும்; நீங்களும் வந்து விடுவீர்கள். அப்புறம், என்னைப் போக விடமாட்டீர்கள் என்று நான் நினைத்தேன். நீங்கள் தீபாவளிக்கு வாங்கித் தந்த புதுச் சட்டையை அன்று நான் அணிந்திருந்தேன். அதை அறையில் கழற்றிப் போட்டுவிட்டு, நான் முதன் முதலில் உங்களிடம் வந்தபோது அணிந்திருந்த பழைய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு உடனே திரும்பி விட்டேன். அனாதைக்குப் புதுச் சட்டை எதற்கு? 

இவ்வளவு நாட்களாக நான் நாணயமாகவே நடந்து வந்திருக்கிறேன். கடவுள் கிருபையால் இனியும் நாணயமாகவே நடக்க விரும்புகிறேன். என்னை இவ்வளவு காலமாக ஆதரித்து வந்த நாடக முதலாளி அவர்களுக்கும், உங்களுக்கும், அம்மாளுக்கும் என் பணிவான வணக்கங்கள். மனமார்ந்த நன்றி. 

தங்கள் அன்புள்ள, 
ரமணி 

கடிதத்தைப் படிக்கும்போதே மோகனரங்கத்தின் முகத்தில் பலவித உணர்ச்சிகள் மாறி மாறித் தோன்றின. படித்து முடித்ததும், கடிதத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். எதையோ அதில் தேடினார், பிறகு “என்ன இது! இக்கடிதத்தி லிருந்து ரமணி எங்கே இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது போலிருக்கிறதே! இதில் விலாசத்தையே காணோமே!” என்றார். 

“அடே! விலாசமே இல்லையா! எனக்கிருந்த ஆனந்தத்தில் அதைக்கூடக் கவனிக்கவில்லை” என்று கூறிவிட்டுக் கடிதத்தை வாங்கி மதுரநாயகமும் பார்த்தார். விலாசம் இல்லை. உடனே அவர் தம்முடைய அறைக்கு ஓடினார், கிழித்துப் போட்ட உறையைத் தரையிலிருந்து எடுத்தார். அதில் ரமணியின் விலாசம் இருக்கிறதா என்று இருபுறமும் பார்த்தார். காணோம்! உடனே, ‘எந்த ஊரிலிருந்து எழுதியிருக்கிறான்! அதையாவது தெரிந்துகொள்ளலாம்’ என்று நினைத்துக் கொண்டே தபால் முத்திரையைப் பார்த்தார். ‘தெப்பக்குளம்’ என்றிருந்தது. உடனே அதை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் ஓடினார். “திருச்சியிலிருந்து தான் அவன் இதை எழுதியிருக்கிறான். இதோ தெப்பக்குளம் தபால் முத்திரை இருக்கிறது” என்று கூறினார். 

“என்ன! அவன் திருச்சியிலா இருக்கிறான்! அங்கே அவனுக்கு யார் இருக்கிறார்கள்?” என்று- வியப்புடன் கேட்டார் மோகனரங்கம். 

“யாருமே இருப்பதாகத் தெரிவில்லை. உற்றார் உறவினர் ஒருவருமே இல்லை என்று அவன் அடிக்கடி சொல்லுவானே!” என்று கூறினார் நாடக சபா மானேஜர் மதுரநாயகம். 

“பின்னே எதற்காக அங்கே போனான்? எப்படிப் போயிருப்பான்? ரயிலில் காசு கொடுக்காமலே அவன் போயிருப்பானோ…?” 

”சேச்சே, அப்படி ரமணி ஒரு நாளும் செய்யமாட்டான். நடந்தே போனாலும் போவானே தவிர, பிறரை ஏமாற்ற நினைக்கமாட்டான்” என்று உறுதியாகச் சொன்னார் மதுரநாயகம். 

“சரி,சாப்பாட்டுக்கு இத்தனை நாள் வரை என்ன செய்திருப்பான்? அவனோ சிறு பையன். பட்டினி கிடக்க முடியுமா? ஒரு மணி நேரம் தாமதமானால்கூட என்னால் பசியை அடக்க முடியவில்லையே!” 

“பாவம், அவன் போய் ஒரு வாரம் ஆகிறதே, என்ன பாடு படுகிறானோ! எப்படித் துடிதுடிக்கிறானோ!” 

“ரமணி தங்கமான பையன். அப்போதே இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் பார்க்கலாம் என்று சொன்னீர்கள். மிகவும் அவசரப்பட்டு விட்டேன். அவன் இப்போது பட்டினி கிடந்தால் அந்தப் பாவம் என்னைத்தானே சேரும் ?… மதுரநாயகம், அவன் இப் போது திருச்சியில்தான் இருப்பான். இல்லையா?” என்று கேட்டார். 

“அங்கேதான் இருக்கவேண்டும். அதுவும் ஒரு பெரிய நகரம். அங்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனாலும் சுலபத்திலே வேலை கிடைத்துவிடுமா? அவனுடைய தங்கமான குணத்தைப் பற்றிப் பிறருக்கு எங்கே தெரியப் போகிறது?” 

“இவ்வளவு நாள் பழகிய நமக்கே தெரியாமல் போய்விட்டதே!… அவனைப் போல் ஒரு பையன் கிடைக்கவே மாட்டான். அவனை எப்படியாவது திரும் பவும் இங்கே கொண்டு வந்துவிடவேண்டும். ஆனால் ஆபீஸ் பையனாக வேண்டாம்; உங்களுக்கு உதவியாக இருக்கட்டும். சம்பளமும் அதிகமாகக் கொடுக்கலாம்.” 

“அது சரி, இப்போது அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? ம்… எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. அதன்படி செய்தால்…?” 

“அது என்ன யோசனை? சொல்லுங்கள், சொல் லுங்கள். சீக்கிரம் சொல்லுங்கள்” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் முதலாளி. 

“இன்று இரவு நாடகம் முடிந்தவுடனே நான் திருச்சிக்குப் புறப்பட்டுப் போகிறேன். எப்படியும் ரமணியை நாளைக்குள் கண்டுபிடித்துக் கையோடு அழைத்து வந்து விடுகிறேன்” என்ற ஆர்வத்தோடு சொன்னார் மானேஜர் மதுரநாயகம். 

“நீங்களே நேரில் போனால் நல்லதுதான். இருந்தாலும்…” என்று இழுத்தார் மோகனரங்கம். 

“ஏன்? நான் தான் நாளை இரவே திரும்பிவிடப் போகிறேனே!” 

“திருச்சியிலே அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பது நிச்சயமாகத் தெரிந்தால், அவனை அழைத்துக்கொண்டு மறு ரயிலிலே திரும்பி வந்து விடலாம். ஆனால், தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும்? நாளையே திரும்பி வந்துவிட முடியுமா? சந்தேகம்தான்.கூட இரண்டு நாட்கள் ஆனாலும் ஆகும். ஒரு வேளை, ஒரு வாரம் தங்க வேண்டியது வந்தாலும் வரலாம். நீங்கள் போய்விட்டால், நாடகம் எப்படி நடக்கும் என்பதுதான் எனக்குக் கவலையாயிருக்கிறது. மேலும், சீனாவிலிருந்து வருகிறார்களே ஒரு தூது கோஷ்டியார், அவர்கள் நமது குழந்தைகளின் நடிப்பைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது என் அசை. நீங்கள் இல்லாத போனால், இந்த ஆசை நிறைவேறுமா? அதுதான் யோசிக்கிறேன்!” 

இதைக் கேட்டதும் மதுரநாயகம் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, “சரி, அப்படியானால் எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. அதன் படி செய்தால்…?” என்றார். 

“அது என்ன யோசனை?” 

“என் அத்தான்தான் திருச்சியில் இருக்கிறாரே! அவருக்கு ரமணியின் அடையாளங்களை யெல்லாம் விவரமாக எழுதித் திருச்சி முழுவதும் அவனைத் தேடிப் பார்க்கச் சொன்னால்…?” 

“… கிடைத்துவிடுவான் என்கிறீர்கள். சபாஷ்! இப்போதே அவருக்கு ஒரு கடிதம் போடுங்கள். கையோடு எழுதி விடுங்கள். இதனால், அவருக்குக் கொஞ்சம் செலவு வரலாம் ; பரவாயில்லை. அதையும் நாம் கொடுத்து விடலாம்.” 

அன்று மத்தியானம் மதுரநாயகம் சாப்பிடுவதற் வீட்டுக்குச் சென்றார். வீட்டிற்குள் நுழையும் போதே, “கமலா! கமலா!” என்று ஆனந்தமாகக் கூப்பிட்டுக்கொண்டே சென்றார். 

“என்ன விஷயம்! நேற்றைக்கு ஒருவர் உங்கள் நாடகத்தைப் பார்க்க வந்தார். அவர் இன்றைக்கு நேரிலே வந்து உங்களை வானளாவப் புகழ ஆரம்பித்து விட்டார். அப்படித்தானே!” 

“அது கிடக்கட்டும். அதைவிட இது மிகவும் முக்கியமான விஷயம். ரமணியைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் இவ்வளவு நாளாகச சொல்லிக் கொண்டிருந்தாயே, அதெல்லாம் எவ்வளவு அநியாயம்! அவன் பட்டுத் துணியை எடுக்கவில்லை என்பது இப்போது நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது”

“என்ன! இதெல்லாம் உண்மைதானா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் கமலாதேவி. 

“சத்தியம்கூடப் பண்ணச் சொல்லுவாய் போலிருக்கிறதே! இதனால்தான் நேற்று ராத்திரியே இதைப்பற்றி உன்னிடத்திலே சொல்லவில்லை, இல்லாது போனால், அந்தக் கோவிந்தன் சொன்னதையெல்லாம் அப்படியே உன்னிடத்திலே சொல்லியிருக்க மாட்டேனா?” 

“கோவிந்தனா! அவன் யார்? என்ன சொன்னான்?”

“நாடகக் கொட்டகையிலே வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கிறாரே, அவருடைய மகன்தான் கோவிந்தன் அவன் நேற்று ராத்திரி நீ சாப்பிடுகிற போது வந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்து “என்ன விஷயம்?’ என்று கேட்டேன். அவன் ரமணியை விரட்ட ஸ்ரீகண்டனும் துரைசாமியும் செய்த சூழ்ச்சியை என்னிடம் ரகசியமாகச் சொன்னான்”. 

“அவன் வந்ததாக என்னிடத்திலே நீங்கள் சொல்லவே இல்லையே!” 

“சொல்லி என்ன பிரயோசனம்? நீதான் பெரிய சந்தேகப் பிராணியாயிற்றே!” என்றார் மதுரநாயகம்.

“அவன் என்ன சொன்னான்? விவரமாய்ச் சொல் லுங்களேன்.'” 

மதுரநாயகம் நடந்தது முழுவதையும் ஒன்றுவிடா மல் கமலாதேவியிடம் விரிவாக எடுத்துச் சொன்னார். அதோடு, “இப்போது ரமணியைப் பற்றி முதலாளி என்ன தெரியுமா சொல்லுகிறார்? அவன் எங்கிருந்தாலும் உடனே வரவழைக்க வேண்டுமாம். அவனுக்கு நிறையச் சம்பளம் கொடுத்து, உயர்ந்த உத்தியோகமும் கொடுக்க வேண்டுமாம். அப்போதுதான் அவருடைய மனம் ஆறுதல் அடையுமாம்” என்றார். 

முழுவதையும் கேட்ட கமலாதேவி, “அடடே, அப்படியா விஷயம்? நானும் அவசரப்பட்டுவிட்டேன். யோசித்துப் பார்க்கும்போது ரமணி மேல் எந்த விதமான குற்றமும் இல்லை என்றே தெரிகிறது. அன்று நீங்கள் எவ்வளவோ சொன்னீர்கள். கேட்காமல் போனேன்-ஆமாம், இப்போது ரமணி எங்கே இருக்கிறான்? அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?” என்றாள். 

“கடவுள் அருளால் ரமணி உயிரோடுதான் இருக்கிறான். இதோ பார். அவன் தன் கைப்படக் கடிதம் எழுதியிருக்கிறான். இது திருச்சியிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், விலாசம் தான் தெரியவில்லை !” என்று கூறிக் கடிதத்தைக் கமலாதேவியிடம் கொடுத்தார் மதுரநாயகம். 

கமலாதேவி அதை வாங்கி அவசரம் அவசரமாகப் பிரித்துப் படித்தாள். படித்து முடித்ததும், “அடே’ தீபாவளிக்கு நாம் தைத்துக் கொடுத்த சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, அவனுடைய பழைய சட்டையைப் போட்டுக்கொள்ளத்தான், அவன் அன்றைக்குச் சாயங்காலம் வந்திருக்கிறான். இது தெரியாமல் நான் வீணாகச் சந்தேகப்பட்டு விட்டேன். நான் இவ்வளவு கெடுதல் செய்தும் ரமணி என்னை மறக்கவில்லை. என்னைப் பற்றியும் கடிதத்தில் எழுதியிருக்கிறான். அவனுக்குத்தான் எவ்வளவு பரந்த எண்ணம்?” என்று கண் கலங்கக் கூறினாள் கமலாதேவி. 

“சரி கமலா, நடந்ததை நினைத்து வருந்துவதில் என்ன பயன்! இப்போது அவனைத் தேடிக் கண்டு பிடித்தால்தான் எனக்கு நிம்மதி 

“திருச்சியில் தானே இருப்பதாகச் சொல்லுகி றீர்கள ! நாமும் திருச்சிக்குப் போய் வெகு நாளாகிறது. உங்கள் அக்காளும்தான் அடிக்கடி வரச் சொல்லிக் கடிதம் போடுகிறார்களே! இன்றைக்கே புறப்பட்டுப் போவோம். ரமணியைக் கண்டுபிடித்து அழைத்து வருவோம்… என்ன, யோசிக்கிறீர்கள்?”

“எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் முதலிலே இருந்தது. ஆனாலும், இப்போது போக முடியாது போலிருக்கிறது. சீனாவிலிருந்து ஒரு தூதுகோஷ்டி டில்லிக்கு வந்திருக்கிறது. அடுத்த வாரம் இந்தப் பட்டணத்துக்கும் வருகிறது. அந்தக் கோஷ்டியில் நடிகர்கள், நாட்டியக்காரர்கள் எல்லோரும் இருக்கிறார்களாம். அவர்களை அழைத்துக் குழந்தைகளின் நடிப்பைக் காட்ட வேண்டும் என்பது முதலாளியின் ஆசை. எனக்கும் ஆசைதான். நாடகத்தைப்பார்க்க அவர்களுக்கு எப்போது சௌகரியப்படும் என்பதைக் இன்னும ஒன்றிரண்டு நாட்களுக்குள் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு அவர்களை வரவேற்க மிகப் பிரமாதமான ஏற்பாடுகளெல்லாம் செய்யவேண்டும். இந்தச் சமயம் நான் இல்லாது போனால் நன்றாயிருக்குமா? இது என் கடமை யல்லவா?” 

“அப்படியானால், அந்தத் தூது கோஷ்டி நாடகத்தைப் பார்த்துவிட்டுப் போன பிறகுதான், நாம் திருச்சிக்குப் போகவேண்டுமா?” 

“அதுவரை ரமணி திருச்சியிலே இருக்கிறானோ என்னவோ! இதை உத்தேசித்துத்தான் என் அத்தானுக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதி ரமணியைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறேன். அவர் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார். கடவுள் கிருபையால் அவன் கிடைத்து விடுவான்.” 

“ஓஹோ! உங்கள் அத்தானுக்கு எழுதிவிட்டீர்களா! சரி, ஒரு வாரம் பொறுத்துப் பார்ப்போம்” என்று கூறினாள் கமலாதேவி. 

12. துப்பறியும் சிங்கம் ! 

மதுரநாயகத்தின் அத்தான் வேதநாயகம் திருச்சியிலே ஒரு பெரிய மருந்துக் கடை வைத்திருக்கிறார். காவேரிக் கரையிலே அவருக்குக் கொஞ்சம் நில புலன் களும் இருக்கின்றன. அவரும், அவர் மனைவி கல்யாணி அம்மாளும், மகன் ஆனந்தனும் வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். 

அன்று வேதநாயகம் வீட்டுக்கு வந்ததும், “இதோ, உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. கனமாக இருக்கிறதே!” என்று கூறி அவர் மனைவி கொடுத்தாள். 

“கடிதமா? வீட்டு விலாசத்துக்கு யார் எழுதுகிறார்கள்?” என்று கேட்டுக் கொண்டே அவர் கடிதத்தைக் கையிலே வாங்கினார். அவருக்கு வரும் எல்லாக் கடிதங்களுமே மருந்துக் கடை விலாசத்துக்குத்தான் வரும் 

வீட்டு விலாசத்துக்கு மிகவும் அபூர்வமாகவே யாரும் எழுதுவார்கள். மருந்துக் கடையில் வேத நாயகம் மும்முரமாக வியாபாரம் செய்துகொண்டிருப்பார். தினசரி கடிதங்களும் ஏராளமாக வரும். அதனால் கடிதம் முழுவதையும் பொறுமையாகப் படிப்பாரோ, படிக்கமாட்டாரோ என்ற சந்தேகத்தில்தான் வீட்டு விலாசத்துக்கே மதுரநாயகம் எழுதினார். அத்துடன் வீட்டுவிலாசத்துக்குக்கடிதம் எழுதினால் அக்காளுக்கும் ஒருவாறு விஷயம் தெரியும்; அவளுடைய தூண்டு தலும் இருக்குமல்லவா? 

வேதநாயகம் உறைக்குள் இருந்த எட்டுப் பக்கங்களையும் மிகவும் பொறுமையுடன் படித்தார். படித்து முடித்ததும், “இந்த மதுரநாயகத்துக்கு வேறு வேலை இல்லை” என்று அலட்சியமாகக் கூறிக்கொண்டே கடிதத்தைத் தொப்பென்று கீழே போட்டார். 

அப்போது அங்கிருந்த கல்யாணி அம்மாள், “என்ன சொல்லுகிறீர்கள்? என் தம்பி அந்தக் கடிதத்தில் என்ன தான் எழுதியிருக்கிறான்?” என்று கேட்டாள். 

“எவனோ ஓர் அனாதைப் பையனாம். அவன் நாடக சபாவிலே வேலை செய்துகொண்டிருந்தானாம் அவனைத் திருடன் என்று நினைத்து வேலையிலிருந்து விலக்கி விட்டார்களாம். ஆனால், அவன் திருடன் இல்லை என்பது இப்போது நிச்சயமாகிவிட்டதாம். அவன் மிகவும் நல்லவனாம். அவன் இப்போது இந்தஊரில்தான் இருக்கிறானாம்.இங்கிருந்து உன் தம்பிக்குக் கடிதம் போட்டிருக்கிறானாம். ஆனால், கடிதத்திலே விலாசம் இல்லையாம்! எங்கேனும் வேலையில் சேர்ந்திருப்பதாகவும் தெரியவில்லையாம். கடைத் தெரு, மலைக்கோட்டை, ரயில்வே ஜங்ஷன், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, சந்து பொந்து து எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து, அவனை நான் கண்டுபிடிக்க வேண்டுமாம். இந்த வேலைக்கு ஆகும் செலவைத் தருவதாக நாடகசபா முதலாளியே சொல்லியிருக்கிறாராம். உன் தம்பிக்கும், அவன் முதலாளிக்கும்தான் வேறு வேலை இல்லை. எனக்குமா வேலை இலலை? அந்த அனாதையைத் தேடிக் கண்டுபிடிக்க நான்தான் அவனுக்கு அகப்பட்டேனாக்கும்!” என்று அலுப்புடன் கூறினார் வேதநாயகம். 

“ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்? இந்த ஊரில்தானே நாம் இருக்கிறோம் என்று நினைத்து அவன் உங்களுக்கு எழுதியிருக்கிறான்” என்றாள் கல்யாணி அம்மாள். 

“இந்த ஊரில் இருக்கிறதனாலே, அவன் சொல்லுகிறபடி யெல்லாம் கேட்கவேண்டுமா? நாளைக்கு, ‘என் சிநேகிதன் வீட்டு எருமைக் கன்றுக்குட்டி காணாமல் போய்விட்டது. உடனே தேடிக் கண்டுபிடியுங்கள்’ என்று எழுதுவான். உடனே நான் கயிறும் தடியுமாகப் புறப்பட்டு இந்த ஊரையெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும். அப்படித்தானே ?” 

“ஏன் இப்படித் தவறாக எடுத்துக்கொள்ளுகிறீர்கள்? மதுரநாயகத்துக்கு இளகிய மனசு.ஒரு நல்ல பையனுக்கு உதவி செய்த புண்ணியமாவது நமக்குக் கிடைக்குமே!” என்றாள் கல்யாணி அம்மாள். 

அப்போது அங்கே நடந்தையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தன், “அப்பா, நீங்கள் ஒன்றும் சிரமப்பட வேண்டாம். அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுங்கள். இன்னும் ஒரு வாரத்திலே அந்தப் பையன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறேன். இது என் பொறுப்பு…அப்பா ! மாமா மிக மிக நல்லவர். அவர் நல்ல சமயத்திலே வந்திருக்காத போனால், இந் நேரம் நான் இங்கேயா இருப்பேன்? பட்டணத்து ஜெயிலிலே பத்திரமாகவல்லவா இருப்பேன்! அவர் செய்த உதவிக்கு நான் இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா?” என்று கூறி அந்தக் கடிதத்தை எடுத்து ஒரு தடவைக்கு, இரண்டு தடவையாகப் படித்துப் பார்த்தான். பிறகு சட்டைப்பையில் இருந்த ஒருசிறு நோட்டுப்புத்தகத்தை எடுத்து அதில் சில அடையாளங்களைக் குறித்துக் கொண்டான். பிறகு, “அம்மா, கவலை வேண்டாம். அந்த ரமணி எங்கேயிருந்தாலும் நான் விடப்போவதில்லை. அவனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவேன்” என்று தன்னுடைய மார்பிலே அடித்துக் கூறினான். 

“அடேயப்பா! இவர் பெரிய துப்பறியும் சிங்கம்…! படிப்பைத் தவிர வேறு எது சொன்னாலும், தயார்! இப்படிப்பட்ட பிள்ளையாண்டன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை!” என்று கேலியாகக் கூறினார் வேதநாயகம். 

ஆனந்தன், அவனுடைய அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஆகையால், அவனை எப்படியாவது நன்றாகப் படிக்கவைத்து ஒரு டாக்டராக்கி விடவேண்டும் என்று அவன் அப்பா ஆசைப்பட்டார். ஆனால், ஆனந்தனுக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை. வேளா வேளைக்கு வீட்டிலே சாப்பிடவேண்டியது ; ஒரு சினிமா தவறாமல் பார்க்கவேண்டியது; நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டியது; ஓய்ந்த நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கும் போய்வர வேண்டியது! இப்படிப்பட்ட அழகான பிள்ளைக்கு எப்படிப் படிப்பு வரும்? 

ஆனந்தனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டவுடனே அவனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு வாத்தியாரை அவன் அப்பா ஏற்பாடு செய்து விட்டார்! ஆனால், அந்த வாத்தியார் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவன் மூளையில் ஏறுவதே இல்லை! அவனுக்குப் படிப்பில் கவனம் இருந்தால் தானே! அலமாரியில் இருக்கும் பட்சணத்தையும் பழத்தையும் நினைத்துக்கொண்டேயிருப்பான். 

சிறு பையனாக இருந்தபோது அவன் பாடம் படித்த அழகே ஒரு தனி அழகுதான். “ஆனந்தா, கிழமைகள் எத்தனை? வரிசையாகச் சொல்!” என்பார் வீட்டு வாத்தியார். 

ஆனந்தன் வாயைத் திறக்கமாட்டான். ஆனால், கண்களை மட்டும் அகலத் திறந்து விழித்துப் பார்ப்பான்! “என்ன ஆனந்தா, இது தெரியாதா! ஞாயிறு, திங்கள்…” என்று அடி எடுத்துக் கொடுப்பார் வாத்தியார். அப்போதுதான் ஆனந்தனுக்குக் கிழமைகள் என்றால் என்ன என்பது புரியும்.உடனே, “ஐ ! அதுவா சார். இதோ சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு, “ஞாயிறு, திங்கள், செவ்வாய்” என்பான். உடனே செவ்வாயிலிருந்து ஒரே தாவாக வெள்ளிக்குத் தாவி விடுவான் ! “வெள்ளி, சனி’ என்று கூறி அத்துடன் நிறுத்தமாட்டான். “ஆக ஒரு வாரத்துக்குக் கிழமைகள் ஏழு” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியே முடிப்பான். அவன் சொன்ன கிழமைகளோ ஐந்துதான்! 

ஆனந்தன் இரண்டாவது வகுப்பில் படிக்கும் போது, “எட்டும் நான்கும் எத்தனை?” என்று கேட் டால்,”ஒன்பது, பத்து-” என்று ஆரம்பித்து இருபது வரை கூடப் போய்விடுவான். சில சமயம் முப்பதையும் தாண்டி விடுவான். 

வீட்டு வாத்தியார் எப்படி எப்படி யெல்லாமோ கூட்டல் கணக்கைச் சொல்லிக்கொடுத்துப் பார்த்தார். ஆனந்தன் மூளையில் ஏறினால்தானே! ஆனாலும் பையன் மண்டு என்பதை அவன் அப்பா ஒப்புக்கொள்வாரா? வாத்தியாருக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை என்றுதானே சொல்லுவார்? ஆகையால், அந்த வாத்தியார் ஒரு தந்திரம் செய்தார். 

ஆனந்தனுடைய அப்பா அல்லது அம்மா அருகிலே இருக்கும்போது, “ஆனந்தா, எட்டும் நான்கும் எத்தனை ?” என்று உரத்த குரலில் கேட்பார் வாத்தியார். 

உடனே ஆனந்தன், “எட்டுக்கு அப்புறம்… ஒன்பது…” என்று இழுப்பான். 

“ம்…” என்பார் வாத்தியார். 

“பத்து…” 

“ம்…’ 

“பதினொன்று… “

“ம்…” 

“பன்னிரண்டு…” 

“ம்,ம், ம்”

சேர்ந்தாற்போல் வாத்தியார் மூன்று தடவை ‘ம்’ போட்டதும், ஆனந்தன் நிறுத்திவிடுவான்! மேலே போகமாட்டான். உடனே, “அடடே, நம் பிள்ளை சரியாகச் சொல்லுகிறானே !” என்று நினைத்து, அவன் அப்பா அம்மா ஆனந்தப் படுவார்கள். ஆனால், வாத்தியார் ‘பன்னிரண்டு’ என்றதும், ம், ம்,ம்’ என்று சொல்லாமல், ‘ம்’ என்று ஒரு தடவை மட்டும் சொல்லி யிருந்தால் ஆபத்துத்தான்! அவன் நிறுத்தியிருக்கவே மாட்டான். 13,14,15 என்று சொல்லிக் கொண்டே போயிருப்பான். எங்கு போய் நிறுத்துவானோ தெரியாது! 

இவ்வாறு மண்டுவாக இருந்தும், அவன் ஐந்து வகுப்புவரை ஒரு வகுப்பில் கூடத் தோல்வியடைந்த தில்லை. இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. அவன் படித்துவந்த ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியரே அவனுக்கு ஐந்து வருஷமும் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்படியிருக்கும்போது, பையன் தோல்வி அடையலாமா? தோல்வியடைந்தால் தலைமை ஆசிரியருக்கு அல்லவா கேவலம்? 

ஆனால், ஆறாவதுக்குச் சென்றதும், ஆனந்தனின் சாயம் வெளுத்துவிட்டது! அஸ்திவாரம் பலமில்லாத போனால் கட்டடம் நிலைத்து நிற்குமா? வகுப்பிலே கடைசி அவன்தான்! ஆறாவதில் இரண்டு வருஷங்கள் இருந்தான். அதற்கு மேலும் பல வருஷங்கள் அவன் அதே வகுப்பில் இருந்திருப்பான். ஆனாலும், அந்தப் பள்ளியிலே ஒரு வழக்கம் உண்டு. இரண்டு வருஷங் களுக்கு மேல் ஒரு பையனை ஒரு வகுப்பில் நிறுத்துவ தில்லை என்பதுதான் அந்த வழக்கம். அதனால்தான், மூன்றாவது வருஷமும் ஆனந்தன் அதே வகுப்பில் இருக்கவில்லை. ஏழாவதுக்குத் ‘தூக்கி’ப் போடப்பட் டன் ஏழாவதில் ஆண்டுப் பரீட்சை நடந்தது. முடிவு வெளிவந்தது.ஆறாவதிலிருந்து ஏழாவதுக்குப் புதிதாக வருகிறவர்களை வரவேற்க வேண்டுமே, அதற்காக ஆனந்தனை ஏழாவது வகுப்பிலேயே நிறுத்தி வைத்து விட்டார், அந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரி யர்! ஆனாலும், தான் தேறிவிட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவிடம் கடிகாரப் பரிசு வாங்கிவிட்டான் ஆனந் தன். அன்று விருந்துக்கு அப்பா ஏற்பாடு செய்வ தாகக் கூறியதைக் கேட்டதும், பயந்து சென்னைக்கு ரயிலேறிவிட்டான். சென்னையில் பேனாவை விற்கப் போய், போலீஸில் அகப்பட்டுக் கொண்டதும், மாமா மதுரநாயகம் அவனை விடுவித்ததும் தெரிந்த கதை .

மதுரநாயகத்தின் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து, ரமணியை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆனந்தன் ஆசைப்பட்டான். 

அன்றே மதுரநாயகத்துக்குப் பதில் கடிதமும் எழுதி விட்டான். “நீங்கள் கொஞ்சங்கூடக் கவலைப்பட வேண்டாம். எனக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கிறது. அதற்குள் ரமணி எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன்” என்று உறுதியாக எழுதினான்.

அந்தக் கடிதத்தை உடனேயே தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான். கையிலே ஓர் அரிவாளை எடுத்துக் கொண்டான். நேராகத் தோட்டத் திலுள்ள வேப்ப மரத்தின் அருகே சென்றான். ‘விறு விறு’ என்று அதன் மேல் ஏறினான். வளையாமல் இருந்த ஒரு நீண்ட கிளையை அரிவாளால் வெட்டிச் சாய்த்தான். பிறகு, கீழே இறங்கிவந்து அதை எடுத்து நன்றாகச் செதுக்கினான். அது ஒரு தடிபோல் ஆகிவிட்டது. உடனே, அவன் தன் அறைக்குள்ளே சென்றான். அங்கே இருந்த அரை அடி ‘ஸ்கேல்’ ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான். ஸ்கேலால் ஒன்பது தடவை அளந்தான். 9×1/2=4 1/2 அடி ஆகி விட்டதல்லவா? நாலரை அடியோடு அந்தத் தடியை வெட்டினான் வெட்டி முடியும் சமயம் அவன் அம்மா அங்கே வந்து சேர்ந்தாள். 

“என்னடா செய்கிறாய், ஆனந்தா ?” என்று கேட்டாள். 

“அளவுகோல் செய்கிறேன் அம்மா. அந்த ரமணி நாலரை அடி உயரம் இருப்பதாக மாமா எழுதியிருக்கிறாரே, ஞாபகம் இல்லையா? அவனைத் தேடிக் கண்டு பிடிக்க அளவுகோல் வேண்டாமா?” என்று கேட்டான் ஆனந்தன். 

அம்மாவுக்கு இதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும், அவள் சிரிக்கவில்லை. மாமா எழுதியது உண்மைதான். ஆனாலும்;’ நமது ஆனந்தனும், ரமணியும் ஒரே உயரம்தான் இருப்பார்கள்’ என்றுகூட அந்தக் கடிதத்தில் இருந்ததே, அதை நீ படிக்கவில்லையா? அவன் உன் உயரம்தான் இருப்பான் என்றால். இந்த அளவு கோலெல்லாம் எதற்கு?” என்று கேட்டாள் அம்மா. 

“அடடே, ஆமாம், அம்மா! அவனுடைய உயரம், நிறம், வயது எல்லாமே என்னைப் போலத்தானாம் ! அதனாலேதான் பட்டணத்துப் போலீஸ்காரர்கள் அவனுக்குப் பதிலாக என்னைப் பிடித்து ஜெயிலுக்குள்ளே தள்ளிவிட்டார்கள்! சரி, அப்படியானால், இந்த அளவு கோல் வேண்டாம். எவன் மேலேயாவது சந்தேகம் வந்தால், உடனே நான் என்ன தெரியுமா செய்வேன்? அவன் பக்கத்திலே போய் நின்று பார்ப்டேன். என் உயரமும், அவன் உயரமும் சரியாக இருந்தால், அவன் ரமணிதானா என்று விசாரிப்பேன். ரமணியாகவே இருந்தால் உடனேயே மாமாவுக்குத் தந்தி அடித்து விடமாட்டேனா!” என்று குதூகலமாகக் கூறினான் ஆனந்தன். 

“என்னவோ நாம் கண்டுபிடித்தால் நமக்கும் நல்லது; மாமாவுக்கும் நல்லது” என்றாள் அம்மா. 

“கண்டுபிடிக்காமல் விடுவேனா?” என்று வீறாப்புப் பேசினான் ஆனந்தன். 

சினிமாவில் துப்பறியும் ‘சிங்கங்’களையும், ‘புலி’ களையும் பார்த்துப் பார்த்து ஆனந்தனுக்கும், அவர்களைப்போல் துப்பறியும் ஒரு சிங்கமாகவோ அல்லது புலியாகவோ மாறவேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாகவே உண்டு. அதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே, அவன் விடுவானா? 

13. குண்டுமணி 

அன்று சாயங்காலமே ஆனந்தன் ஒரு ‘பைனா குலர்’ வாங்கிவிட்டான். வெகு தூரத்தில் ரமணி போனால் கண்டுபிடிக்க வேண்டாமா? அதற்குத்தான் அந்த பைனாகுலர்! மறுநாள் காலையில் பலகாரம் சாப்பிட்டதும், புஷ்கோட், முழுக்கால் சட்டை, பூட்ஸ், தலையில் மடக்குத் தொப்பி முதலியவற்றை அணிந்து கொண்டான். கழுத்திலே பைனாகுலரைத் தொங்க விட்டுக் கொண்டான். சட்டைப் பையில் ரமணியின் அடையாளங்கள் அடங்கிய சிறிய நோட்டுப் புத்த கத்தை வைத்துக்கொண்டான். உடனே வீட்டை விட்டுக் கிளம்பி நேராக அவனுடைய அருமை நண்பன் குண்டுமணி வீட்டுக்குச் சென்றான். 

குண்டு + மணி இரண்டும் சேர்ந்துதான் குண்டு மணியாகிவிட்டது. ஆமாம் ‘மணி’ 

ஆமாம் ‘மணி’ என்பது அவ னுடைய இயற் பெயர். அதாவது, அப்பா, அம்மா வைத்த பெயர். ‘குண்டு’ என்பது பள்ளிக்கூடப் பிள்ளைகள் அன்போடு கொடுத்த காரணப் பெயர்! நாலைந்து வருஷங்களுக்கு முன்பு புடலங்காய் போல் இருந்த மணிதான், இப்போது பறங்கிக்காய் போலப் பருத்து விட்டான். இன்னும் பருத்துக் கொண்டே யிருக்கிறான். ஒவ்வொரு வாரமும் அவனுடைய சுற்றளவு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. 

விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி-இப்படிப் பள்ளிக்கூடங்களில் என்ன என்னவோ போட்டிகள் வைக்கிறார்களே, சாப்பாட்டுப் போட்டி என்று ஒரு போட்டி வைக்கக் கூடாதோ? அப்படி ஒரு போட்டி வைப்பதா யிருந்தால், அதில் முதல் பரிசு யாருக்குத் தெரியுமா கிடைக்கும்? குண்டு மணிக்குத்தான்! 

ஆனந்தன் குண்டுமணி வீட்டுக்குச் சென்றபோது அவன் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். 

ஆனந்தன், ‘குண்டுமணி! குண்டு மணி!’ என்று பலமாகக் கூவிப் பார்த்தான். குண்டு மணி எழுந்திருக்கவில்லை. முதுகிலே பலமாகத் தட்டிப் பார்த்தான்; குத்திப் பார்த்தான். ஊஹூம்! பலனில்லை கடைசியில் நறுக்’ கென்று நன்றாக ஒரு கிள்ளுக் கிள்ளினான். உடனே குண்டுமணி, “சேச்சே, வரவர எறும்பு உபத்திரவம் அதிகமாய்விட்டது. விட்டேனா பார் இந்த எறும்பை!” என்று கூறிக்கொண்டே எழுந்தான். 

குண்டுமணி எழுந்ததும், “என்னடா குண்டு சிகாமணி, கும்பகர்ணன் சாகிறபோது அவன் தூக்கத்தை யெல்லாம் உன்னிடத்திலேதான் ஒப்படைத்துவிட்டுச் செத்தானோ!” என்று கேட்டான் ஆனந்தன். 

“யாரது?” என்று கண்களைத் திறக்காமலே கேட்டான் குண்டுமணி. 

“கொஞ்சம் கண்களைத் திறந்து பாரப்பா. நீ இருக்கிறது பூலோகம்தான் என்பதும், உன் எதிரே இருப்பது எறும்பல்ல; உன் ஆத்ம நண்பன் ஆனந்தன் தான் என்பதும் நன்றாகத் தெரிந்துவிடும்” என்றான் ஆனந்தன். 

உடனே குண்டுமணி கண்களைத் திறந்து நிமிர்ந்து பார்த்தான். பார்த்ததும் அவனுக்குச் சரி யாகத் தெரியவில்லை. கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு திரும்பவும் பார்த்தான். உடனே அவன் முகம் மலர்ந்தது. 

“அட்டே, ஆனந்தனா! இது என்னடா சூட்டும், ஹேட்டும்! பெரிய துரைமாதிரி இருக்கிறாயே! எந்தக் கப்பலிலே வந்து இறங்கி இருக்கிறார் இந்தத் துரை! கத்திக் கப்பலிலா, சண்டைக் கப்பலிலா, நீர் மூழ்கிக் கப்பலிலா? அல்லது…” 

“…அல்லது காகிதக் கப்பலிலா என்றுதானே கேட் கிறாய்? உனக்கு எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும்.” 

“ஆமாம், இதெல்லாம் என்னடா வேஷம்?” 

“எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். முதலில் நீ இப்போதே என்னோடு கிளம்பி வர வேண்டும். மிகவும் அவசரமான ஒரு வேலை!” என்று கூறினான் ஆனந்தன். 

“அப்படியென்றால், இதோ பல்லைத் துலக்கிவிட்டு வந்துவிடுகிறேன். முதல் வேலையாகச் சாப்பிட வேண்டும்.” என்றான் குண்டுமணி. 

சற்று நேரத்தில் இருவரும் கிளம்பினார்கள். நேராக அருகிலே இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றார்கள். அங்கே குண்டுமணி, வயிறு முட்ட பாதாம் அல்வா, மைசூர்பாகு, ஜாங்கிரி, லட்டு, இட்டலி, வடை, தோகை, போண்டா, பஜ்ஜி இன்னும் என்னென்னவோ சாப்பிட்டான். 

குண்டுமணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஆனந்தன் ரமணியைப் பற்றிக் கூறிவிட்டு, அவனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டு மென்றான். சாப்பிட்டானதும், “குண்டுமணி, இனி நாம் கிளம்பலாமா? இப்போது எந்தப் பக்கம் போய்த் தேடினால், அகப்படுவான் ?” என்று கேட்டான் ஆனந்தன். 

“தேடுவதா! யாரை! உங்கள் வீட்டில் வேலைக்கு இருந்தானே  சுப்புக்குட்டி, அவனைத்தானே? மேலப் புலிவார் ரோட்டுப் பக்கம் போனால்….” என்று பதில் சொல்ல ஆரம்பித்தான் குண்டுமணி. 

“அட ராமா! ஹோட்டலிலே எவ்வளவு விவரமாகச் சொன்னேன்! சாப்பாட்டிலே குறியாயிருந்து விட்டுச் சுப்புக்குட்டியா, அப்புக்குட்டியா என்று கேட்கிறாயே! சரி, போகட்டும். இப்போதாவது கவன மாகக் கேள். நாம் இருவரும் ரமணி என்ற பையனைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவன் என்னுடைய உயரம்தான் இருப்பான். நிறமும் என் நிறம்தான். இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறான். எப்படியா வது அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால், பட்டணத்திலே இருக்கிற என் மாமா மிகமிக சந்தோஷப் படுவார். நமக்கும் நிறையப் பரிசுகள் கொடுப்பார்” என்றான் ஆனந்தன். 

“அடடே! அப்படியானால், எனக்கும் நிறையப் பரிசு கிடைக்கும். சரி, உடனே கிளம்பு. அவனைக் கண்டு பிடிக்கும்வரை நான் உண்ணமாட்டேன்; உறங்க மாட்டேன். இது சத்…” 

”டேய்! டேய்! என்னடா உளறுகிறாய்? உன்னால் ஒரு வேளை பட்டினி கிடக்க முடியுமா? ஒருநாள் உன்னால் தூங்காமல் இருக்க முடியுமா?” 

“ஓஹோ! அந்த சினிமாவில் கேட்ட வசனத்தை அப்படியே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது! சரி, இனிமேல் சினிமா வசனம் வேண்டாம். இதோ என் சொந்த வசனத்திலே கூறுகிறேன். ஆனந்தா, எப்படியும் நாம் அவனை தேடிக்கண்டுபிடித்துவிடவேண்டும்” என்று ஆனந்தனிடம் உற்சாகமாகக் கூறினான் குண்டு மணி. 

ஆனந்தனும், குண்டுமணியும் எப்போதுமே ஊர் சுற்றிகள்தான் அதனால், அவர்களுக்குத் திருச்சியும் சுற்றுப் புறங்களும் நன்றாகத் தெரியும். அது மட்டுமா? திருச்சியிலுள்ள பையன்களையும் அநேகமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் புதுப் பையனான ரமணி யைக் கண்டு பிடிப்பது வெகு சுலபம்தான் என்று அவர்கள் நினைத்தார்கள். 

திருச்சியில் அவர்கள் சுற்றாத இடமில்லை; தேடாத தெருவில்லை; நுழையாத கோயில் இல்லை. தெருவிலே போவோர் வருவோரை யெல்லாம் பைனா குலர் வைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்! எதிரிலே-அருகில் நிற்பவர்களைப் பார்ப்பதற்குக்கூட பைனாகுலரை உப யோகித்தார்கள்! மாற்றி மாற்றி இருவரும் இப்படிச் செய்வதைச் சிலர் வேடிக்கையாகப் பார்த்தார்கள். சிலர் பையன்கள் இப்போதுதான் பைனாகுலர் வாங்கியிருக்கின்றாகள் போலிருக்கிறது!’ என்று கேலி செய்தார்கள். இன்னும் சிலர், ‘சுத்தப் பைத்தியங்கள்’ என்று கிண்டல் செய்தார்கள். 

இரண்டு நாட்களாகக் கால் வலிக்கத் தேடியும் ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை ! இதற்குள் ஆனந்தன் சேர்த்து வைத்திருந்த பணத்தில் பாதியைக் காலிசெய்துவிட்டான் குண்டுமணி! அடிக்கடி பலகாரமும், காப்பியும், ஷர்பத்தும், பழமும் வாங்கி வாங் கிச் சாப்பிட்டால்-அதுவும் குண்டுமணி சாப்பிட்டுக் கொண்டே யிருந்தால், பணம் காலியாகாமல் பெருகிக் கொண்டு இருக்குமா, என்ன? 

14. கன்னத்தில் அறை! 

மூன்றாவது நாள் காலை நேரம், ஆனந்தனும் குண்டுமணியும் திருச்சியிலுள்ள சைனா பஜார் வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலைக்கோட்டை வாச லின் அருகே வந்ததும், “டேய் குண்டுமணி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதன்படி செய்தால் என்ன?” என்று ஆரம்பித்தான் ஆனந்தன். 

”யோசனையா? உம்,உம். சொல்லு, சொல்லு” என்றான் குண்டுமணி. 

இந்த மலைக்கோட்டை வாசலில் இருக்கிறாரே பிள்ளையார், அவருக்கு ஒரு தேங்காய் வாங்கி உடைத் தால், நிச்சயம் ரமணி கிடைத்துவிடுவான். வா, அந்தக் கடையிலே தேங்காய் வாங்கலாம்” என்று கூறிக் கொண்டே மலைக்கோட்டை வாசலில் இருந்த ஒரு கடையை நோக்கிச் சென்றான் ஆனந்தன். குண்டுமணி யும் அவனைப் பின்தொடர்ந்தான். 

“இந்தத் தேங்காய் என்ன விலை?” என்று ஒரு தேங்காயை எடுத்துக் கடைக்காரனிடம் காட்டிக் கேட்டான் ஆனந்தன். 

அதே சமயம் குண்டுமணி, “ஆனந்தா, ஆனந்தா! அதோ பார் ! ஒரு பையன் பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். ஒருவேளை அவன்தான்….” என்று இழுத்தான். உடனே ஆனந்தன் திரும்பினான். மலைக்கோட்டைக்கு ஏறிச் செல்லும் வழியிலுள்ள மாணிக்க விநாயகர் கோயில் பக்கம் பார்த்தான். சும்மா பார்க்க வில்லை; பைனாகுலரைக் கண்களில் வைத்துப் பார்த்தான். உடனே, “குண்டுமணி ! உயரம், நிறம் எல்லாம் என்னைப் போலவேதான்! ஊருக்கும் புதிதாயிருக்கிறான். வா, அவன் ரமணியாகத்தான் இருக்கவேண்டும். உடனே போவோம். அவனைக் கேட்டுப் பார்ப்போம்” என்று பரபரப்போடு சொன்னான் ஆனந்தன். 

குண்டுமணியும் பைனாகுலரை வாங்கி அதன் உதவியால் அந்தப் பையனைக் கூர்ந்து பார்த்தான். பார்த்துவிட்டு, “இருக்கும், இருக்கும், ரமணியாகத்தான் இருக்கும். ஆனாலும், நாம் உடனே அவனிடம் போய்க் கேட்கக் கூடாது. அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று மெதுவாய்க் கவனிக்க வேண்டும்” என்றான். 

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பையன் படிகளில் ஏறி மேலே போக ஆரம்பித்து விட்டான். 

அந்தப் பையன் படிகளில் ஏறிச் செல்வதைப் பார்த் ததும், “டேய்,டேய்! அவன் மேலே போகிறானேடா! சீக்கிரம் வாடா நாமும் அவன் பின்னாலேயே போவோம்” என்று கூறினான் ஆனந்தன். இருவரும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். படிகளில் ஏறிச் செல்லும் போது,பாவம், குண்டுமணி வெகு சிரமப்பட்டான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. யானை கட்டும் மண்டபத்துக்குப் பக்கத்தில் வந்ததும், ‘அப்பாடா!’ என்று தொந்திக் கணபதி போல் ‘தொப்’பென்று உட்கார்ந்து விட்டான் குண்டுமணி! 

ஆனந்தனுக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. “என்னடா குண்டுமணி, சமயம் தெரியாமல் இப்படி உட்கார்ந்து விட்டாயே! அவனைப் பின் தொடர்ந்து போக வேண்டாமா?” என்றான். 

“ஆனந்தா, அவசரப்படாதே! அவன் எங்கே போய் விடுவான்? உச்சிப் பிள்ளையார் கோயில் வரைதானே போவான்? அப்புறம் அப்படியே பறந்துபோய் விடு வானா? அல்லது. உச்சிக்குப் போய் அங்கிருந்தபடியே உருண்டு வேறு பக்கமாக விழுந்து விடுவானா? எப்படி யும் நம் கண்ணில் படாமல் அவனால் போக முடியாது” என்று குண்டுமணி கூறிக்கொண்டிருக்கும்போதே, மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த யானை பயங்கரமாகப் பிளிற ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும், குண்டு மணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. பயத்தில் தானாக எழுந்து விட்டான். எழுந்து என்ன செய்தான்? அங்கேயே நின்றானா? இல்லை; இரண்டு இரண்டு படிகளாகத் தாவித் தாவி மேலே சென்றான். நூற்றுக்கால் மண்டபத்தை அடைந்த பிறகுதான் திரும்பிப் பார்த் தான். பின்னால் வந்த ஆனந்தன் சிரித்துக்கொண்டே, “குண்டுமணி, கட்டிக்கிடக்கும் யானைக்கே இந்தப் பயம் பயப்படுகிறாயே ! நீ பெரிய தைரியசாலிதான்! யானை சத்தம் போட்டிருக்காத போனால், நீ எங்கே எழுந்து வந் திருக்கப் போகிறாய்? சரி, வா. சீக்கிரம் போவோம்” என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு போனான். 

மேலே சென்ற அந்தப் பையன் தாயுமான சாமி யைத் தரிசித்துவிட்டு, மட்டுவார் குழலம்மையார் சந் நிதிக்கு வந்தான். அம்மனையும் தரிசித்த பிறகு பக்கத்திலே இருக்கும் வெளி மண்டபத்துக்குச் சென்றான் அங்கு சுவர்களில் தீட்டப்பட்டிருந்த அழகான ஓவியங் களைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப்பட்டான். 

நடராஜப் பெருமானின் பலவிதத் தோற்றங்களை யும், வேடிக்கையான பல சித்திரங்களையும் அவன் பார்த்தான். ஒரு யானைப் பாகன் யானையை ஓட்டிக் கொண்டு வருகிறான். எதிரே ஒரு காளை மீது ஒருவன் ஏறி முரசு அடித்துக்கொண்டு வருகிறான். யானையும் காளையும் ‘டங்’ என்று முட்டிக் கொள்கின்றன. என்ன ஆச்சரியம்! யானையின் தலையும், காளையின் தலையும் ஒன்றாகி விடுகின்றன! இரு வெவ்வேறு மிருகங்களுக்கு ஒரே தலை! யானையை மட்டும் பார்த்தால், யானையின் தலை தெரியும்! காளையை மட்டும் பார்த்தால் காளையின் தலை தெரியும்! இப்படி ஓர் அதிசய சித்திரம்! 

அவன் ஆச்சரியத்துடன் இன்னொருசித்திரத்தைப் பார்த்தான். அதில் எட்டுக் குரங்குகள் இருக்கின்றன. ஆனால், அந்த எட்டுக் குரங்குகளுக்கும் ஒரே தலைதான்! உடல்தான் எட்டு! இப்படிப் பல அற்புத ஓவியங்களை அந்தப் பையன் பார்த்துக்கொண்டே யிருந்தான். 

“அடேயப்பா! பார்ப்பதற்கே கழுத்து வலிக்கிறதே! எழுதும்போது அந்த ஓவியன் எவ்வளவு சிரமப்பட்டிருப் பான்!” என்று கூறியபடி ரசித்து நின்றான். அப்போது ஆனந்தனும் குண்டுமணியும் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். உடனே ஆனந்தன், “டேய் குண்டுமணி, நான் மெதுவாக அவன் பக்கத்திலே போய் நிற்கிறேன். என் உயரமும் அவன் உயரமும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல். பிறகு நான் பார்த்துக் கொள் கிறேன்” என்று கூறிவிட்டு, மெல்ல நடந்தான். அந்தப் பையனின் அருகிலே போய் நின்றான். உடனே குண்டு மணி, “வித்தியாசமே இல்லை! ஒரே உயரம்!” என்று கத்தினான். 

சத்தத்தைக் கேட்டதும் அந்தப் பையன் திரும்பிக் குண்டுமணியைப் பார்த்தான். குண்டுமணியின் உரு வத்தைப் பார்த்ததும், அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. 

உடனே ஆனந்தன் அந்தப் பையனைப் பார்த்து. “ஏனப்பா, உன் பெயர் என்ன ?” என்று கேட்டான். 

“என் பெயர் எதுவாயிருந்தால் உனக்கு என்ன?” என்றான் அந்தப் பையன். 

“இல்லை…என் மாமா கடிதம் எழுதியிருக்கிறார் பெயர் ரமணி தானே!” என்று கேட்டான் ஆனந்தன். 

அதற்குள் குண்டுமணி அருகில் வந்து, “தம்பி, உள்ளதை மட்டும் ஒளிக்கவே ஒளிக்காதே. உன் நன்மைக்காகத்தான் கேட்கிறோம். நீ மட்டும் ரமணியாயிருந்தால் எவ்வளவு குஷியாக இருக்கலாம், தெரியுமா? இப்போதே உன்னை அழைத்துப் போய், பெரிய கடை வீதியில் இருக்கிறதே ஒரு பெரிய ஹோட்டல், அதிலே பாதாம் அல்வா, பாசந்தி லட்டு, ஜிலேபி, மசால்தோசை பாதாம்கீர், புளியோதரை எல்லாம் வாங்கித் தருவோம். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான். 

உடனே அந்தப் பையன், ஒரு நிமிஷம் யோசித்தான். பிறகு சிரித்துக்கொண்டே, “அடடே, என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களே! ஆமாம், நான்தான் ரமணி என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டான். 

“யார் சொல்ல வேண்டும்? அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்க எங்களுக்குத் தெரியாதா, என்ன?” என்றான் குண்டுமணி பெருமையோடு. 

“ஆமாம் ரமணி, உன்னை நாங்கள் மூன்று நாட்களாக எங்கேயெல்லாம் தேடி அலைந்தோம் தெரியுமா? நல்ல காலம், பிள்ளையார் கருணை வைத்தார்; நீயும் கிடைத்தாய். இப்போதே நீ கிடைத்துவிட்டதாக மாமாவுக்குத் தந்தி அடிக்கப் போகிறேன்” என்றான் ஆனந்தன். 

“தந்தி அடிக்கிறதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலிலே போய், வயிறு நிறையச் சாப்பிடுவோம், வா” என்றான் குண்டுமணி. 

அப்போது அந்தப் பையன், “நீங்கள் பலே பையன்களாக இருக்கிறீர்களே! அடையாளத்தை வைத்தே கண்டுபிடித்து விட்டீர்களே! உன் மாமா கடிதம் எழுதியிருந்தாரா? எழுதியிருப்பார்; எழுதியிருப்பார்” என்றான். 

“தம்பி, எங்களை சாமானியமாக நினைத்துவிடாதே! அந்த ஆனந்தன் ஒரு துப்பறியும் புலி. இந்தக் குண்டுமணி ஒரு துப்பறியும் சிங்கம். நமது சினிமாக்களிலே வருகிறார்களே, துப்பறியும் சிங்கங்களும் புலிகளும், அவர்களெல்லாம் எங்களிடத்திலே பிச்சை வாங்க வேண்டும்!” என்று கூறினான் குண்டுமணி. 

அப்போது, ஆனந்தன் குண்டுமணியைப் பார்த்து, “டேய், இந்த ரமணியைப் பார்த்தாயா? என்னைப் போலவே உயரம்! நிறமும் என் நிறம்தான்! அதனால் தான் எனக்கும் இவனுக்கும் வித்தியாசம் தெரியாமல், பேனாவை நான் திருடியதாக என்னைப் பிடித்து ஜெயிலுக்குள்ளே தள்ளிவிட்டார்கள் அந்தப் பட்டணத்துப் போலீஸ்காரர்கள் ! சரி, அதைப் பற்றி இப்போது என்ன பேச்சு” என்றான். பிறகு அந்தப் பையனிடம், “ரமணி! நல்ல வேளையாக நீ அகப்பட்டுவிட்டாய். மூன்று நாட்களாக உன்னைத் தேடித் தேடி அலுத்துப் போனோம். பத்து நாட்களுக்கு முன்பு நாடகக் கொட்டகையிலே நீ பட்டுத் துணியைத் திருடிவிட்டாய் என்று தானே முதலாளி உன்னைப் பிடித்து வெளியே தள்ளினார்? அதற்குப் பிறகு…”

ஆனந்தன் முழுவதையும் கூறி முடிக்கவில்லை. அதற்குள் ‘பட்’டென்று பலமாக ஓர் அறை விழுந்தது அவன் கன்னத்திலே! ஆனந்தனுக்கு அறை கொடுத்தது வேறு யாருமல்ல; அந்தப் புதுப் பையனேதான்! 

ஆனந்தனுக்கு அறை விழுந்ததும், குண்டுமணி தனது கன்னங்கள் இரண்டையும் கைகளால் மறைத்துக்கொண்டு எடுத்தான் ஓட்டம்! ‘குடு குடு’ என்று கீழே ஓடி வந்துவிட்டான். திரும்பியே பார்க்கவில்லை! மலைக்கோட்டை வாசலில் உள்ள பூக்கடைகளுக்குப் பக்கத்திலே வந்து நின்ற பிறகுதான் அவன் திரும்பிப் பார்த்தான்! 

ஆனந்தனுக்கு அறை கொடுத்துவிட்டு, “டேய் அயோக்கியப் பயலே! என்னைத் திருடனென்றா சொல்கிறாய்? பட்டுத் துணியாம்; பேனாவாம். நான் திருடினேனாம்! என்னடா உளறுகிறாய் !” என்று சீறினான் அந்தப் பையன். 

“ஐயையோ! முழுவதையும் கேளேன். அதற்குள் அவசரப்படுகிறாயே!” என்று கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டே கூறினான் ஆனந்தன். 

”உன் பேச்சைக் கேட்கத் தேவை இல்லை. பாதாம் அல்வா, பாசந்தி எல்லாம் வாங்கித் தருவதாகச் சொன்னதைக் கேட்டதும், ‘நான்தான் ரமணி’ என்று கூறி உங்களை நான் ஏமாற்ற நினைத்தேன். ஆனால், என்னையே நீங்கள் ஏமாற்றிப் போலீஸில் பிடித் துக் கொடுக்கவல்லவா பார்க்கிறீர்கள்! நான் ரமணியுமில்லை; மண்ணாங்கட்டியும் இல்லை” என்றான் அந்தப் பையன், 

“நீ ரமணி இல்லையா!” என்று ஏமாற்றத்துடன் கேட்டான் ஆனந்தன். 

“இல்லை. என் பெயர் பழனியாண்டி. உறையூரில் என் மாமா சுருட்டு வியாபாரம் செய்கிறார். அவர் வீட்டுக்கு வந்தேன். மலைக்கோட்டையையும் பார்த்து விட்டுப்போக வந்தால், என்னைப் பிடித்துப் போலீஸில் கொடுக்கவா திட்டம் போடுகிறீர்கள், மடப் பயல்களா! டேய், இப்போதே இந்த இடத்தை விட்டு ஓடுகிறாயா, மண்டையைப் பிளக்கட்டுமா?” என்று வலது கையை ஓங்கிக்கொண்டே ஆனந்தனின் அருகிலே வந்தான் அந்தப் புதுப் பையன் பழனியாண்டி. 

பாவம், ஆனந்தன் பதில் எதுவும் கூறாமல், மெதுவாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். தன்னுடைய அருமை நண்பன் குண்டுமணி எங்கே என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் அங்கே இருந்தால் தானே! அடிவாரத்தில் அல்லவா இருக்கிறான் ? 

சோர்ந்து போய்க் கீழே இறங்கி வந்தான் ஆனந்தன். அவனைக் கண்டதும் குண்டுமணி அருகிலே ஓடிப் போய்த் துக்கம் விசாரித்தான். 

“போடா பயங்கொள்ளிப் பயலே! அவன் என்னை ஓர் அறை அறைந்ததற்கு, அவனுக்கு நீ ஒன்பது அறை திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமோ? ஆள் தான் யானைக்குட்டி மாதிரி இருக்கிறாய்” என்று கோபமாகக் கூறினான் ஆனந்தன். 

“பாவம், இந்த அறையை வாங்கவா இவ்வளவு தூரம் ஏறிப் போனோம்? சரி, வருத்தப்பட்டு என்ன செய்வது? பெரிய காரியங்களிலே ஈடுபட்டால், இப் படித்தான் பல கஷ்டங்கள் ஏற்படும். கவலைப்படாதே! எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் ரமணியைக் கண்டுபிடித்துவிடலாம்” என்று ஆறுதல் கூறினான் குண்டுமணி. 

உடனே ஆனந்தன், “குண்டுமணி, இனிமேல் என்னாலே இப்படி அறை வாங்கமுடியாது. இன்றைக்குத் தபாலிலே மாமாவுக்கு ஒரு கடிதம் போடப் போகி றேன்” என்றான். 

“கடிதத்திலே என்ன எழுதப் போகிறாய்? அறை வாங்குவதற்குப் பட்டணத்திலேயிருந்து ‘ஸ்பெஷ’லாக ஓர் ஆள் அனுப்பச் சொல்லி எழுதப் போகிறாயா?” 

“உனக்கு எல்லாம் வேடிக்கைதான். அடையா ளத்தை வைத்து ரமணியைக் கண்டுபிடிக்கப் போனதால்தானே இந்தக் கஷ்டமெல்லாம்? மாமாவுக்கு எழுதி ரமணியினுடைய, ‘போட்டோ’ இருந்தால், உடனே அனுப்பச் சொல்லப்போகிறேன். போட்டோ இருந்தால் சுலபமாக அவனைக் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா?” 

“ஆமாம்! இப்படி அலையவும் வேண்டாம், அறை வாங்கவும் வேண்டாம்” என்று சிரித்துக்கொண்டே கூறினான் குண்டுமணி. 

15. தந்தி வந்தது! 

மானேஜர் மதுரநாயகம் கன்னத்தில் கைவைத்த படி தமது அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது. 

அப்போது, “சார், நீங்கள் சொன்னபடி ‘போர்டு’ எழுதி முடித்துவிட்டோம். வந்து பார்க்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் வந்தார் சுதர்சன், 

ஸ்ரீமுருகன் பால நாடக சபாவிலே சுதர்சன் தலைமை ஓவியராக இருக்கிறார். மிகவும் அழகாகப் படங்கள் வரைவார். படங்களைப் பார்ப்பவர்கள், பார்த்தவுடன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடமாட்டார்கள்; சிறிது நேரம் அங்கேயே நின்று படம் முழுவதையும் ஆசை தீரப் பார்த்துவிட்டுப் பிறகுதான் போவார்கள். 

அன்று காலையில் விசேஷமாக ஒரு ‘போர்டு’ எழுத வேண்டுமென்று மதுரநாயகம் சுதர்சனிடம் கூறி யிருந்தார். 

அதன்படி, ‘சீனத் தூது கோஷ்டியினரே, வருக வருக!’ என்று ஆங்கிலத்தில் ஒரு போர்டு எழுதினார் சுதர்சன். போர்டின் வலது பக்கம் சீனா தேசத்தின் படத்தை வரைந்திருந்தார். இடது பக்கம் ஒரு சீனரும், ஓர் இந்தியரும் தோள் மேல் கைபோட்டு நிற்பது போல் வரைந்திருந்தார். அதை எழுதி முடிக்கும்போது மாலை நாலு மணி. எழுதி முடித்தவுடன்தான், சுதர்சன் மானேஜரிடம் வந்தார். ‘எழுதி முடித்தாய்விட்டது’ என்று கூறினார். ஆனால், அவர் கூறியது மதுரநாய கத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். 

‘ என்ன சார், கவலையாக இருக்கிறீர்களே !” என்று கேட்டார் சுதர்சன். 

“ஒன்றும் இல்லை. ரமணியைப் பற்றித்தான் கவலை…” 

“ஏன் சார், திருச்சியிலிருந்து ஒருவிதமான தகவலும் வரவில்லையா ?” 

“காலையிலே ஒரு கடிதம் வந்தது. மூன்று நாட்களாக என் அக்காள் மகன் ஆனந்தனும் அவன் சிநேகிதனும் திருச்சியிலும், சுற்றுப்புறத்திலும் தேடு தேடென்று தேடிப் பார்த்துவிட்டார்களாம். கிடைக்க வில்லையாம். ரமணியின் போட்டோ இருந்தால் உடனே அனுப்பி வையுங்கள். சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்” என்று 
எழுதியிருந்தான். ரமணியின் போட்டோ இங்கே இருந்தால்தானே அனுப்புவதற்கு? ரமணியின் போட்டோ எதுவும் இல்லை எப்படியாவது அடையாளத்தை வைத்துக் கண்டுபிடியுங்கள். ஒரு வாரத்தில் கிடைத்துவிட்டால் நல்லது. இல்லாத போனால், நானே நேரில் வருகிறேன் என்று சற்று முன்புதான் பதில் எழுதிப் போட்டேன்…ம். ஒரு போட்டோ இருந்தால் எவ்வளவு உதவியாயிருக்கும்?” என்று கூறிப் பெருமூச்சுவிட்டார் மதுரநாயகம். 

இதைக் கேட்டதும் சுதர்சன் சிறிதுநேரம் யோசனை செய்தார். பிறகு, “சார் சார்! எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது!” என்றார். 

இதைக் கேட்டதும், “யோசனையா! அது என்ன? சீக்கிரம் சொல்” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் நாடக சபா மானேஜர் மதுரநாயகம். 

உடனே சுதர்சன், “எனக்குத்தான் ரமணியை நன்றாகத் தெரியுமே! ஆகையால்…” என்று இழுத்தார். 

“ஆகையால், நீயே திருச்சிக்குப் புறப்பட்டுப் போகிறேன் என்கிறாயா?” 

“இல்லை சார்! ரமணியின் உருவத்தை அப்படியே அச்சாக எழுதிக் கொண்டு வந்துவிடுகிறேன். இன்று இரவு எந்நேரம் ஆனாலும் சரிதான்; எழுதி முடித்து விட்டுத்தான் படுப்பேன்” என்றார் சுதர்சன். 

இதைக் கேட்டதும் மதுரநாயகம் இருந்த இடத்தை விட்டுக் குதித்துக்கொண்டு எழுந்தார். 

“அடடே, நல்ல யோசனையாயிருக்கிறதே! அப்படியே செய், சுதர்சன். நாளைக்குக் காலையிலே நீ படம் எழுதிக்கொண்டு வந்தவுடனே நான் என்ன தெரியுமா செய்யப் போகிறேன்? நேராக ‘நவநீதம் ஸ்டுடியோ’ வுக்குப் போய் அந்தப் படத்தை போட்டோ எடுக்கச் சொல்லப் போகிறேன்.” 

“போட்டோவா! அது எதுக்கு சார்? நான் எழுதிக் கொண்டு வரப்போகும் படத்தையே நீங்கள் திருச்சிக்கு அனுப்பி விடலாமே!” 

“சேச்சே, அப்படிச் செய்யக் கூடாது சுதர்சன். தபாலில் அனுப்பும்போது வழியிலே தொலைந்துபோனால் இன்னொரு தடவையல்லவா எழுதவேண்டும்? போட்டோ எடுத்து அனுப்புவதுதான் நல்லது. நான் இன்னொரு யோசனையும் வைத்திருக்கிறேன். அந்தப் போட்டோவிலே பத்துப் பிரதிகள் எடுக்கச் சொல்லப் போகிறேன். ‘அவசரம்’ என்று சொன்னால் நாளைச் சாயங்காலமே தந்து விடுவார்கள். ஒரு பிரதியைத் திருச்சிக்கு அனுப்பிவிட்டு, மற்றபிரதிகளை முக்கியமான பத்திரிகைகளுக்கு அனுப்பி விளம்பரம் செய்யப் போகிறேன். ரமணி திருச்சியில் இல்லாத போனால் கூட வெகு சுலபத்தில் அகப்பட்டுவிடுவான் எப்படி என் யோசனை?” 

“சரியான யோசனை சார். நான் இன்றைக்கு இரவே ரமணியின் படத்தை எழுதி முடித்துவிடுகிறேன். அதி காலையில் உங்கள் வீட்டுக்குப் படத்துடன் வந்து சேருகிறேன். என்ன சார், சரிதானா?” 

“அப்படியே செய் சுதர்சன். நீ செய்யப் போகும் உதவியால், ரமணி சீக்கிரம் கிடைத்து விடுவான் என்றே நினைக்கிறேன்” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார் மதுரநாயகம். 

அன்று இரவு சாப்பிடும் போதெல்லாம் மதுரநாயகமும், கமலாதேவியும் ரமணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்குள்ளே சென்று மதுரநாயகம் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் யோசித்து யோசித்து ஏதோ எழுதினார். எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தார்: 

பையனைக் காணோம்! 

“மேலேயுள்ள பையனின் பெயர் ரமணி. வயது 13. மாநிறம். சுமார் நாலரை அடி உயரம். பத்து நாட்களாகக் காணவில்லை. அவன் மீது தவறு எதுவும் இல்லை. திரும்பி எப்போது வருவான் என்று ஆவலாக அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவனைக் கண்டு பிடித்துக் கீழ்க்கண்ட விலாசத்துக்குத் தகவல் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுக்கப்படும்! – மதுரநாயகம், மானேஜர், ஸ்ரீ முருகன் பால நாடக சபா, சென்னை-1. 

இதை இரண்டு தடவை படித்துப் பார்த்தார். பிறகு, “சரி இதே போல் ரமணியின் படத்துடன் விளம்பரப்படுத்தி விடலாம். சீக்கிரம் ரமணி கிடைத்து விடுவான். சந்தேகமே இல்லை” என்று மனத்திற்குள்ளே சொல்லிக் கொண்டார். 

பிறகு, படுக்கையில் போய்ப் படுத்தார். கண்களை மூடிக்கொண்டார். ஆனால், தூக்கம் வரவில்லை! ‘சுதர்சன் இப்போது ரமணியின் படத்தை எழுதிக் கொண்டிருப்பான். அங்கு நாமும் போனால் அவனுக்கு உதவியாயிருக்கும்’ என்று நினைத்தார் மதுர நாயகம். உடனே படுக்கையை விட்டு எழுந்தார். சட்டையை மாட்டிக்கொண்டார். விறு விறு என்று நடந்தார். 

இரண்டு மைல் தூரத்திலிருந்த ஒரு மாடி வீட்டை நோக்கிச் சென்றார். அந்த வீட்டை அடைந்ததும், மாடிப் படிகளில் ஏறி மெதுவாக மேலே சென்றார். அங்கிருந்த ஏழாம் எண்ணுள்ள அறையை நெருங்கினார். அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். வெளிச்சம் இல்லாமல் படம் எழுத முடியாதல்லவா? ஆனால், அந்த அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு திறந்திருக்கிறதா என்று பார்த்தார். இல்லை; அது சாத்தப்பட்டிருந்தது. ‘என்ன இது ! சுதர்சன் தூங்கி விட்டானோ!’ என்று நினைத்துக் கதவை மெதுவாகத் தட்டினார்; பதில் இல்லை! கொஞ்சம் பலமாகவே தட்டினார்; அதற்கும் பதில் இல்லை! 

கதவைத் தட்டும்போது அவர் கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதைத் தொட்டுப் பார்த்தார். உடனே திடுக்கிட்டார். ‘ஆ! பூட்டு! என்ன இது! கதவு போய் எங்கே சுதர்சன் பூட்டப்பட்டிருக்கிறதே! விட்டான்? அவன் பொய் சொல்லமாட்டானே! அவன் அறையில் இன்னொரு சிநேகிதனும் இருப்பதாகச் சொன்னானே! அவனையும் காணோமே! இருவரும் சினிமா பார்க்கப் போயிருப்பார்களோ!’ என்று எண்ணினார். 

யாரையாவது கேட்கலாமென்று சுற்று முற்றும் பார்த்தார். பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லாரும் தூங்கிவிட்டார்கள். கதவைத் தட்டி அவர்களை எழுப்பிக் கேட்க நினைத்தார். ஆனாலும், அவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயந்து பேசாமல் கீழே இறங்கி வந்துவிட்டார். அப்போது வாசலில் காவல்காரன் நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார். அவன் பக்கத்திலே சென்று, “ஏனப்பா, மாடியிலே ஏழாம் நம்பர் அறை பூட்டி யிருக்கிறதே! அதில் சுதர்சன் என்று ஒருவர் இருப்பாரே, அவர் எங்கே? எப்போது வருவார்?” என்று கேட்டார். 

”ஊரிலிருந்து எப்போது வருவார் என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி அவர் எதுவுமே சொல்ல வில்லையே! பாவம், அவருக்கு இருந்த துக்கத்திலே எப்படி சார் அதைச் சொல்லுவார்?” என்றான் காவல்காரன். 

“என்ன! துக்கமா! ஊருக்குப் போயிருக்கிறாரா!” என்று திகைப்புடன் கேட்டார் மதுரநாயகம். 

“ஆமாம் சார். ராத்திரி எட்டு மணி இருக்கும். ஊரிலேயிருந்து ஒரு அவசரத் தந்தி வந்தது. உடனே ரயிலுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கூடவே அவர் அறையிலிருக்கும் பரமசிவமும் போயிருக்கிறார் இன்னும் திரும்பி வரவில்லை. வெகு நேரமாகி விட்டது”. 

“தந்தி வந்ததா? என்ன விஷயமாம்? உனக்குத் தெரியுமா? ” என்று பரபரப்போடு கேட்டார் மதுர நாயகம். 

“சுதர்சன் இருக்கிறாரே, அவருக்கு ஒரே ஒரு ஆண் குழந்தையாம். அது இறந்து போய்விட்டதாம். தந்தியிலே அதுக்கு மேலே விவரம் இல்லை” என்று காவல்காரன் பதில் சொன்னான். 

இதைக் கேட்டதும், மதுரநாயகம் திடுக்கிட்டார். 

“ஐயோ பாவம், சுதர்சன் மிகவும் நல்லவன். அவனுக்கா இப்படிப்பட்ட துக்கச் செய்தி வர வேண்டும்?” என்று அநுதாபப்பட்டார். அத்துடன், “ரமணியின் படம் எழுதித் தருகிறேன் என்றான். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே! எல்லாம் நம்முடைய கெட்ட காலம்” என்று நொந்துகொண்டே அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். வழியனுப்பப் போன சுதர்சனின் சிநேகிதன் பரமசிவம் திரும்பி வந்தால் முழு விவரமும் தெரிந்துகொள்ளலாம் என்று தான் காத்திருந்தார். ஆனால், பரமசிவம் பன்னிரண்டு மணி வரை வரவில்லை ‘இனியும் காத்திருப்பதில் பயனில்லை. ஒரு வேளை ஸ்டேஷன் அருகிலே எங்கேனும் தெரிந்த இடத்தில் பரமசிவம் படுத்திருக்கலாம். எப்படியும் காலையில் விஷயம் தெரிந்து விடும்’ என்று நினைத்துக்கொண்டே மதுர நாயகம் வீடு திரும்பினார். திரும்பி வரும்போது, ‘சுதர்சனின் குழந்தை இப்படித் திடீரென்று இறந்துவிட்டதே!’ என்று வருந்தினார். அத்துடன், “ரமணியைக் கண்டுபிடிக்க நல்ல ஏற்பாடு செய்யப்போகும் சமயம் இப்படித் தடங்கல் வந்துவிட்டதே!” என்று எண்ணிப் பெரு மூச்சுவிட்டார். 

வழியனுப்பச் சென்ற பரமசிவம் இரவுதான் வரவில்லை.மறுநாள் காலையிலாவது வந்தாரா? ஊஹும், காலையிலும் வரவில்லை; மாலையிலும் வரவில்லை. 

மூன்றாம் நாள் காலை மணி ஏழு இருக்கும். சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி யோசனை செய்துகொண்டிருந்தார் மதுரநாயகம். 

அப்போது, “சார், மானேஜர் சார்!” என்று ஒரு குரல் கேட்டது. 

“யாரது?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து வந்தார் மதுரநாயகம். 

“நான்தான் சார், சுதர்சனின் சிநேகிதன் பரமசிவம்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார் பரமசிவம். 

பரமசிவத்தைப் பார்த்ததும், “என்ன பரமசிவம், சுதர்சனுக்கு ஏதோ அவசரத் தந்தி வந்ததாமே!” என்று மிகுந்த கவலையோடு பேச்சை ஆரம்பித்தார் மதுரநாயகம். 

“ஆமாம் சார்; சுதர்சனின் ஒரே குழந்தை- ஆண் குழந்தை திடீரென்று இறந்துவிட்டது. இரண்டு நாளாக ஜுரம் இருந்ததாம், அவ்வளவுதான்” 

“ஐயா, போவம். சுதர்சன் மிகவும் வருத்தப்படுவான்” என்று அநுதாபப்பட்டார் மதுரநாயகம். 

“வருத்தப்படுவதோடு இருந்தாலும் பரவாயில்லையே! மூளையே கலங்கிப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே! அதுதான் பயமாயிருக்கிறது!” 

“என்ன! பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதா?” 

“ஆமாம். அந்தக் குழந்தை மீது சுதர்சன் உயிரையே வைத்திருந்தான். அன்றைக்குத் தந்தி வந்தவுடனேயே அவன் மூளை குழம்பிவிட்டது! அவனை வழியனுப்பப் போயிருந்தபோது, அவன் நிலைமையைப் பார்த்தேன். தனியாக அனுப்ப மனமில்லை. கூடவே சென்றேன். இப்போதுதான் திரும்பி வருகிறேன். சரி, நான் வரட்டுமா? ஸ்டேஷனிலிருந்து நேராக இங்குதான் வருகிறேன். ரமணி என்கிற பையனுடைய படத்தைப் போடப் போவதாகச் சுதர்சன் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தந்தி வந்தது.உங்களுக்குத் தகவல் தெரியாதே என்றுதான் சொல்ல வந்தேன்.” 

“எல்லாம் என் துர் அதிர்ஷ்டம்” என்று வருத்தப் பட்டார் மதுரநாயகம். 

“நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பரமசிவம் போனதும், சுதர்சன் இனி எப்போது திரும்பி வருவானோ! ரமணியின் படம் எப்போது தயா ராகுமோ!’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். ஐந்து நிமிஷம் அப்படியே யோசனையில் இருந்தார். ஆறாவது நிமிஷம் நாடகக் கொட்டகையிலிருந்து ஓர் ஆள் அவசர அவசரமாக அங்கே ஓடி வந்தான். “சார் சார், தந்தி வந்திருக்கிறது சார்” என்று கூறிக் கொண்டே.. அவரிடம் தந்தியை நீட்டினான். அவர் தந்தியை வாங்கிப் பரபரப்புடன் பிரித்துப் படித்தார். உடனே, இருந்த இடத்தை விட்டு ஒரு குதி குதித்தார். பிறகு, “கமலா! கமலா!” என்று கத்திக்கொண்டே அடுக்களைக்கு ஓடினார்.

– தொடரும்

– பர்மா ரமணி (நாவல்),1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *