கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 1,782 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11 – 15 | அத்தியாயம் 16 – 20 | அத்தியாயம் 21 – 25

16. உபதேசம்

நாக சர்ப்பத்தைக் காணவில்லையென்றதும் ஒரே ஒரு விநாடி முகுந்தன் முகத்தில் கோபத்தின் சாயை படர்ந்த போதிலும் அது அடுத்த விநாடி மறைந்து அவன் இதழ்களில் புன்னகையே அரும்பிற்று. அந்த மெல்லிய நீண்ட கத்தியை எடுத்தவர் யாராயிருந்தாலும் அவர்கள் தனது மூட்டையிலிருந்த ஓலைச்சுவடிகளைவிட பல்லவராஜ சின்னத்தையும், புத்தபிரார்த்தனைக் கோஷத்தையும் கொண்ட மோதிரத்தைவிட, நாகசர்ப்பத்தைப் பெரிதாக மதிக்கிறார்கள் என்பதை அறிந்த சென்னியின் மகன் “அவர்கள் மதிப்பீட்டில் தவறவில்லை. அதன் சூட்சுமத்தை அறிந்துதான் அதை எடுத்திருக்கிறார்கள்.ஆனால் என் கையில் இயங்குவதைப் போல் அது மற்றவர்கள் கையில் இயங்க முடியாதே. அதை எடுத்தும் பயனில்லையே” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அடுத்த விநாடி அந்தச் சிந்தனையை அகற்றிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்து “யாரங்கே?” என்று குரல் கொடுத்தான். 

அந்தக் குரல் நாலைந்து பணிமக்களை அவன் முன்பாக வரவழைத்தாலும் அவர்கள் தனக்குப் பணிவிடை செய்வதில் காட்டிய அக்கறையாலும் தனக்கு அந்தச் சிறைச் சாலையில் ராஜபோகம் இருக்குமென்பதைப் புரிந்து கொண்ட முகுந்தன் பணிமக்களை ஏவி நீராடித் தன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டான். நீராட்டம் சென்னியின் மகனுக்கு வெகு கம்பீரமாக நடந்தது. இரு பணியாளர்கள் அவனுக்குத் தைலம் தேய்த்தார்கள். இன்னுமிருவர் நல்ல வெந்நீரில் வாசனைத்திரவியங்களைக் கலந்து நீராட்டினார்கள். பட்டாபிஷேகம் செய்து கொள்ளுபவனைப் போல் நீராடி முடித்த முகுந்தனுக்கு அவனது அறையில் காலை போஜனம் செய்விக்கப்பட்டது. இத்தகைய சைத்தியோப சாரங்களால் முந்திய இரவின் நித்திரை நீக்கமும் பயண அலுப்பும் தீர்ந்துவிடவே முகுந்தன் சிறைச்சாலையைப் பார்க்கக் கிளம்பினான். அவன் புறப்பட்டதும் அவனுக்கு முன்னால் இரண்டு வீரர்களும், பின்னால் இரண்டு வீரர் களும் தொடர்ந்து வந்து அவனுக்குச் சிறைச்சாலையைச் சுற்றிக் காட்டினார்கள். 

சிறைச்சாலையின் முக்கால்வாசி அறைகளில் யாருமில்லை. நாலைந்து அறைகளில் இருந்தவர்களும் சிறை வாசத்தைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. “ஏனிப்படி சிறைச்சாலையில் யாருமே இல்லை?” என்று வீரனொருவனை வினவினான் வாலிபத்துறவி. 

“காஞ்சியில் அனாவசியமாக யாரையும் தண்டிப்பதில்லை. அதுவும் நிர்வாகத்தை மஹாயனர் ஏற்றுக் கொண்ட பிறகு பெரும்பாலான குற்றவாளிகள் மன்னிக்கப் படுகிறார்கள்” என்று சமாதனம் கூறினான் வீரன். 

“குற்றவாளிகள் மன்னிக்கப் படுகிறார்களா!” என்று வியப்புடன் வினவினான் வாலிபத் துறவி. 

“ஆம். ஆனால் அவர்கள் படையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும், சேவையால் குற்றத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். இது மஹாயனர் கட்டளை. இதனால் பலர் திருந்தியிருக்கிறார்கள்” என்றான் வீரன். 

அதுவரை வீரனுடன் சென்றுகொண்டிருந்த முகுந்தன் சட்டென்று நின்றான். “இந்த நிர்வாக முறை எத்தனை நாளாக அமுலில் இருக்கிறது?” என்று வினவினான் சிறிது சிந்தனை வசப்பட்டு. 

“மௌரிய மன்னர் படையெடுத்து வந்த நாளாக” என்று வீரன் விளக்கினான். 

“அதாவது?” 

“ஆறு மாதங்களாக.”

“ஆறு மாதங்களாகப் படையில் சேர்க்கப்பட்ட குற்றவாளிகளின் தொகை எவ்வளவிருக்கும்?” 

“நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஐயாயிரம் பேருக்கு குறைவிருக்காது என்று கேள்வி.”

அத்துடன் நீதி நிர்வாகக் கேள்விகளை நிறுத்திக் கொண்ட முகுந்தன் அந்த வீரனை நோக்கி “உன் பெயர் என்ன?” என்று வினவினான். 

“மாரன்” என்றான், அந்த வீரன் பணிவுடன். 

”மாரனா?” முகுந்தன் கேள்வியில் ஆச்சரியம் பெரிதும் நிலவிக் கிடந்தது. 

“ஆம் பிரபு”. 

“தமிழனா?”

“ஆம்.” 

இதைக் கேட்டதும் மாரனை உற்று நோக்கிய முகுந்தன் “பெயருக்குத் தகுந்தபடி அழகாய்த்தானிருக்கிறான்”  என்று பாராட்டினான். 

வீரன் புன்முறுவல் கொண்டான். ”புற அழகில் என்ன இருக்கிறது பிரபு?” என்று அலுத்துக் கொண்டான். 

அந்த வீரனுக்கு வயது கிட்டத்தட்ட தன் வயது தானிருக்குமென்பதை ஊகித்துக் கொண்டான் முகுந்தன். அந்தச் சிறுவயதில் அவன் ஏன் விரக்தியாகப் பேசவேண்டும் என்பது மட்டும் புரியவில்லை சோழன் மகனுக்கு. ஆகவே கேட்டான். “வயதுக்கும் உன் பேச்சுக்கும் பொருத்தமில்லையே?” என்று. 

“தங்கள் வயதுக்கும் வேஷத்துக்கும்கூட பொருத்தமில்லைதான். எதை வைத்து எதை நிர்ணயிக்க முடியும்?” என்று கேட்ட மாரன் குரலில் ஏளனமிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாத முகுந்தன் “சரி வா” என்று மாரனுடன் சிறைச்சாலையின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டுத் தன் அறைக்குத் திரும்பினான். 

அவன் மஞ்சத்திலமர்ந்ததும் விடைபெற முயன்ற மாரனைத் தடுத்த துறவி “மாரா இந்த மூட்டையை யார் கொண்டு வந்தது? எப்பொழுது கொண்டு வந்தார்கள்?” என்று வினவினான். 

“நீங்கள் எழுந்திருக்க இருந்த சமயத்தில் கொண்டு வந்தார். அதை நான்தான் மஞ்சத்தின்மீது வைத்தேன். பத்ரவர்மர்தான் கொண்டு வந்தார்” என்று கூறினான் மாரன். 

அதற்குமேல் மாரனை அனுப்பிவிட்டு அறையிலிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டு மோட்டுவளையை நோக்கிக் கொண்டு சிந்தனையிலிறங்கினான் முகுந்தன். தன்னை தந்தை கல்வி கற்கக் காஞ்சிக்கு அனுப்பியது முதல் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்த முகுந்தன் சகலமும் விசித்திரமாயிருந்ததை நினைத்துச் சிறிது குழப்பங் கூட அடைந்தான். 

சோழ நாட்டிலிருந்து புறப்பட்டபோது அவன் தந்தை சொன்னார்: “முகுந்தா! நீ செல்லும் காஞ்சி பாரத நாட்டின் கலைக்களஞ்சியம். உலகத்திலுள்ள பலநாட்டவர்கள் அங்கு சாஸ்திரங்களைப் பயிலவும், பற்பல கலைகளை அறியவும் வருகிறார்கள். உனக்குப் பாடம் சொல்ல மஹாயனர் ஒப்புக் கொண்டு ஓலை அனுப்பி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. காஞ்சியிலுள்ள நிலைமை சரியில்லையே என்று யோசித்துக் கொண்டேயிருந்தால் பயனில்லை. காலா காலத்தில் நீ படிக்க வேண்டும். மஹாயனர் மஹாபுருஷர்களில் ஒருவர். சாஸ்திரம் சஸ்திரம் இரண்டும் கைவரப் பெற்றவர். அவர் உனக்குப் போதிக்க ஒப்புக்கொண்டது சோழர் குலம் செய்த பாக்கியம். மஹாயனர் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு செய். காரணம் கேட்காதே, மஹாயனர் உன்னை அங்கீகரிப்பதற்கு அடையாளமாக புத்தர் சரணம் பொறித்த முத்திரை மோதிரம் தருவார். அதை உன் உயிரைப் போல் பாதுகாத்துக் கொள்” என்று சொன்ன சென்னி, “மோதிரம் இதைப் போலிருக்கும்” என்று தன்னிடமிருந்த மோதிரத்தையும் காட்டினார். 

அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்த முகுந்தன் தந்தை சொன்னது போலவே மஹாயனர் மோதிரத்தை சத்திரத்திலேயே காட்டிவிட்டதையும் எண்ணி அதுவரை சரி. மஹாயனர் என்னை ஏற்றுக்கொண்டு விட்டார் சீடனாக, ஆனால் மாதவியிடம் அழைத்துக் கொண்டு ஏன் போனார்? சிறைச்சாலையில் ஏன் தள்ளினார்?” என்று தன்னைத்தானே வினவிக் கொண்டான். காஞ்சியில் நுழைந்தபின் ஏற்பட்ட அநுபவங்களுக்கும் காஞ்சியில் நுழையுமுன்பு இருந்த தனது எதிர்பார்ப்புக்குப் எந்தவித சம்பந்தமுமில்லாதிருந்த தையும் நினைத்துப் பார்த்ததில் பல விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்காததைப் புரிந்துகொண்டான். 

இத்தனையிலும் மாதவியின் அழகிய முகம் மனக்கண் முன்பு எழுந்து நின்றது. அவள் கண்களில் சதா ஒரு துயரம் தவழ்ந்து கொண்டிருந்ததை யோசித்துப் பார்த்து “சகல போகங்களிலும் புரளும் ஒரு தாசிக்கு துன்பம் என்ன இருக்க முடியும்?’ என்று வினவிக் கொண்டான். சகல போகங்கள் என்பது மாதவியிடம் சம்பந்தப்பட்டவரை ஐசுவரிய போகங்களே தவிர வேறு போகம் ஏதும் இருக்க முடியாது என்பது அவனுக்குத் தெள்ளனத் தெரிந்தது. அவள் ஒரு சிறு குழந்தை போலவே தெரிந்தாள், அவன் மனக்கண்ணுக்கு. அவள் முகத்தில் தூய்மை பரவிக் கிடந் ததை அந்தச் சமயத்திலும் அவன் உணர்ந்தான். ஆனால் தான் அவளைக்கட்டிலில் தூக்கிப் போட்டபோது அவள் ஏன் வாளாவிருந்தாள் என்பது புரியவில்லை அவனுக்கு. எது எப்படியிருந்தாலும் மாதவியைப் பற்றிய நினைப்பு அவ னுக்கு நிகரற்ற இன்பத்தை அளித்தது. 

அடுத்து அவன் மன்னனை நினைத்தான். அவன் வெறுப்பு அளவு மீறியது. ”இவனும் ஒரு மன்னனா?” என்று சற்று இரைந்தே சொன்னான். ”சமுத்திர குப்தன் படைகள் கோதாவரி தீரத்தை அடைந்துவிட்டன. இன்னும் பல்லவன் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந் திருக்கிறான். தேவகியைக் காண திருட்டுத்தனமாகக் காஞ்சிக்கு வருகிறான். என்ன மன்னன் இவன்?” என்று பெரிதும் அலுத்துக் கொண்டான். இத்தகைய நினைப்பு களாலும் அவற்றால் ஏற்பட்ட உணர்ச்சிக் குமுறலாலும் சலனமடைந்த உள்ளத்துடன் அன்றைய பகலைக் கழித்தான் முகுந்தன். 

வேளை தவறாமல் ஆகாரம் வந்துகொண்டிருந்தது. ஆகாரமும் அல்ப சொல்ப ஆகாரமல்ல. கனி வகையறாக்கள் ஏராளமாக அவன் மஞ்சத்தில் குவிக்கப்பட்டன. அவற்றை எதையும் தொடவில்லை துறவி. இரண்டொரு பழங்களை மாலையில் சாப்பிட்டுப் பாலும் அருந்தினான்.அதற்குப் பிறகு ஏதும் வேண்டாமென மறுத்துவிட்டான். இரவும் வந்தது காஞ்சி அந்தகாரத்தில் ஆழ்ந்தது. எங்கும் மௌனம் குடி. கொண்டது. சிறைச்சாலையில் அதிக விளக்குகள் ஏற்றப் படாவிட்டாலும் அவசியமான அளவுக்கு விளக்குகள் ஆங்காங்கு ஓரிரண்டு காட்சியளித்தன. அவற்றை தன் அறையின் முகப்புத் தாழ்வரையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த முகுந்தன் “காஞ்சியின் போர் எச்சரிக்கை சரியாகத்தானிருக்கிறது” என்று பாராட்டினான். 

கேளிக்கைகளும் விளையாட்டுகளும் நிரம்பிய காஞ்சி மௌனமாகக் கிடந்தது. போரின் பெரும் பீதி மக்களை அடக்கியிருந்தது முகுந்தனுக்குப் புரிந்தது. ஆனால் காஞ்சிக் குச் சரியான பாதுகாப்பு இருந்ததாகத் தோன்றவில்லை சோழன் மகனுக்கு. ‘மக்கள் அடக்கப் பட்டிருக்கிறார்கள், வாயிற் பெருங்கதவுகள் காலா காலத்தில் அடைக்கப்படு. கின்றன. ஆனால் தேவையான படைப்பாதுகாப்பு இல்லை. வீரர் நடமாட்டம் மிகக் குறைவாயிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டான். மும்முரமான போருக்கு காஞ்சி இன்னும் தயாராகவில்லை யென்பது அவனுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. ஆனால் அந்த அசிரத்தைக்கு யார் காரணம் என்பது மட்டும் புரியவில்லை அவனுக்கு. 

இரவும் மெள்ள மெள்ள ஏறியது. அறையின் முகப்புத் தாழ்வரையிலிருந்து அறைக்குள் சென்று படுக்கத் தீர் மானித்த முகுந்தன் அறையின் விளக்கு அணைந்து கிடந் ததைப் பார்த்து அதை ஏற்ற “யாரங்கே?” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். கதவின் அருகே அவன் சென்றதும் அவன் தோளை மெல்லிய கை யொன்று அழுத்தியது. ‘விளக்கை ஏற்ற வேண்டாம். அப்படியே விடுங்கள்’ என்று காதில் யாரோ முணுமுணுத்தார்கள். 

முகுந்தன் சட்டென்று நின்றான். “யாரது?” என்று கேட்டான். கேள்விக்குப் பதிலில்லை. அவன் கையில் நாகசர்ப்பம் அழுத்தப்பட்டது. ‘காஞ்சியை விட்டுச் சென்று விடுங்கள். உங்களை யாரும் தடை செய்யமாட்டார்கள்’ என்ற உபதேசமும் காதுக்கருகில் ஒலித்தது. 

17. அர்ஜுன சந்நியாசி 

இருளடர்ந்த அறையின் கதவின் மறைவிலிருந்து தனது தோளை அழுத்திய கை யாருடையதென்பதைப் புரிந்துகொள்ள விநாடி நேரம்கூடப் பிடிக்கவில்லை முகுந்தனுக்கு. ஆனால், அந்த நேரத்தில் மாதவி எப்படி வந்தாள் தன் அறைக்கு, ஏன் வந்தாள், தாழ்வரையில் உட்கார்ந்த தான் அறியாமல் உள்ளே எவ்வாறு நுழைந்தாள் என்ற பல விஷயங்கள் விளங்கவில்லை அவனுக்கு. ஒரு வேளை தான் தீவிர சிந்தனையிலிருந்ததால் மாதவி வந்ததைக் கவனிக்கவில்லையோ என்றுகூடச் சிந்தித்து, பிறகு அந்தச் சிந்தனையைக் கைவிட்டான். உறக்கத்தில் கூட விழித்துக் கொண்டிருக்கும் தனது உணர்ச்சிகள், விழித்துக் கொண்டு ஏதோ நினைப்பிலிருக்கும்போது அசந்திருக்க முடியாதென்ற நிச்சயத்துக்கு வந்தான். அதனால் கேட்டான், ”மாதவி! நீ எப்பொழுது வந்தாய்?” என்று. 

மாதவி அவன் காதுக்கருகில் இருந்த தனது முகத்தை அவன் தோளில் புதைத்துக்கொண்டு, “சிறிது நேரமாகிறது” என்று சொன்னாள். 

“என்னைத் தாழ்வரையிலிருக்கும்போதே அழைத்திருக்கலாமே?” என்றான் முகுந்தன். 

முகுந்தனின் அறிவுக் கூர்மையை மாதவி பெரிதும் வியந்தாள். “சோழநாட்டுச் சாமர்த்தியத்தை என்னிடமும் காட்டுகிறீர்கள்” என்று கூறி நகைத்தாள் வியப்பும் நகைப்பொலியில் கலக்க. 

“சோழநாட்டுச் சாமர்த்தியத்தைக் காட்டுகிறேனா? உன்னிடமா?” என்று மேலும் பேச்சுக் கொடுத்த வாலிபத் துறவி அவள் அழகிய இடையில் தனது இடது கையைச் செலுத்தினான், வலது கையில் நாகசர்ப்பமிருந்த காரணத்தால். 

மாதவி இடையில் தவழ்ந்த அவன் கையுடன் ஒத் துழைத்து அது இழுத்த இழுப்புக்கு இணங்கி அவன் பக்கத்தில் இழைந்தாள். “ஆம்….மிக சாமர்த்தியமாகப் பேசுகிறீர்கள். சாமர்த்தியம் சோழ நாட்டின் சொந்த சொத்து. நீங்கள் சுற்றி வளைத்துக் கேட்பதைவிட, இந்த அறைக்கு வர வேறு வழி இருக்கிறதா என்று கேட்டிருக்க லாமே” என்றாள் மாதவி. 

துறவியின் கை அவள் துடியிடையை நன்றாகவே இறுக்கியது. அப்படி இறுக்கியவண்ணம் அவளை அழைத்துக்கொண்டு பஞ்சணையை நோக்கிச் சென்றான். தனது பஞ்சணையை அடைந்ததும், “மாதவி! இப்படி உட்கார். நிதானமாகப் பேசலாம்” என்று கூறி வலுக்கட்டாயமாக அவளை அழுத்தி உட்கார வைத்துவிட்டு எதிரே நின்று கொண்டான். 

உடனடியாக அவன் கேள்வி எதுவும் கேட்கவில்லை. தீவிர சிந்தனையிலிருந்தான். பிறகு கேட்டான் “மாதவி! என்னை நீ நம்புகிறாயா?” என்று. 

மாதவி மெதுவாக நகைத்தாள் அந்த இருட்டில், “நம்பாமலா இந்தவேளையில் இங்கு வந்தேன்? நம்பாமலா விளக்கை ஊதிவிட்டு நீங்கள் உள்ளே வரட்டுமென்று காத்திருந்தேன்?’ என்று வினவவும் செய்தாள். 

அதுவரை அவள் எதிரில் பின்னால் கையைக் கட்டி நின்றிருந்த முகுந்தன் சட்டென்று கைகளை முன்புறம் கொண்டு வந்து அவள் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்தான். பிடித்த வண்ணம் வினவினான்: “நீ எந்த நாடு மாதவி!” என்று. 

“தொண்டை நாடு. இந்த ஊர்தான் என் சொந்த ஊர் எதற்காக கேட்கிறீர்கள்?” என்று மாதவி கேட்டாள். 

“சோழ நாட்டவனானதால் என்னைச் சாமர்த்தியக்கார னென்றாய். ஆனால் தொண்டை நாட்டுச் சாமர்த்தியம் சோழ நாட்டைவிடப் பன்மடங்கு அதிகமாயிருக்கிறது.” – இதைச் சொன்ன துறவி நகைத்தான். 

“அப்படி என்ன சாமர்த்தியத்தை நான் காட்டி விட்டேன்?” இதைக் கேட்ட மாதவியின் குரல் பலவீனமாயிருந்தது. 

“என்னை நம்புகிறாயா என்று கேட்டதற்குப் பதில் மிக சாமர்த்தியமாகச் சொல்கிறாய். நீ இரவில் இங்கு வருவாயா என்பதைக் கேட்கவில்லை நான். உன் மாளிகையில் எனக்கு அளித்த அறையில் என்னுடன் இருந்தாய். கட்டிலில் தூக்கிப் போட்டேன். ஆட்சேபிக்க வில்லை நீ. அதைப் பற்றித் தேவகியிடம் வேடிக்கையாகப் பேசினாய். ஆகையால் மாதவி! நீ இந்த வேளையில் இங்கு வந்ததும் என்னைச் சந்தித்ததும், இருட்டில் இருப்பதும் விசித்திரமல்ல. ஆனால் நீ எந்தக் காரியத்துக்காக உண்மையில் வந்தாயோ, எதற்காக நாகசர்ப்பத்தைத் திரும்ப என் கையில் திணித்தாயோ எதற்காக என்னைக் காஞ்சியைவிட்டு ஓடச் சொல்கிறாயோ அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல முடியுமா? அந்த விஷயத்தில் அந்த அரசியல் மர்மத்தை அவிழ்ப்பதில், உடைப்பதில், என்னை நம்புகிறாயா? இது தான்கேள்வி….” என்று நிதானமாகப் பேசி, பேச்சைச்சற்றே நிறுத்திய முகுந்தன் மேலும் விசாரித்தான். ”மாதவி இந்த அறையையும் வெளியே உள்ள ஏதோ ஓரிடத்தையும் பிணைக்கும் சுரங்க வழி இருக்கிறது. அதைப் பற்றி நான் கேட்கவில்லை. நான் காஞ்சியைவிட்டு ஓடஒப்புக்கொண்டால் நீ காட்டக் கூடிய வழி அந்தச் சுரங்க வழிதான். அதைப் பற்றி அறிய நான் இஷ்டப்படவில்லை. ஆனால் நீயும் மகாராஜாவும், ஏன் எல்லோருமே காஞ்சியைவிட்டு என்னை விரட்டப் பார்க்கிறீர்கள்? நான் இங்கிருப்பதால் யாருக்கு என்ன கஷ்டம்? என்ன நஷ்டம்? சமுத்திர குப்தன் போன்ற ஒரு மாமன்னன் படையெடுத்து வரும்போது காஞ்சி ஏன் மடுங்குகிறது? ஏன் போர் சன்னதத்திலில்லை? இந்தப் பெரிய குழப்பத்தில் காஞ்சியிருக்கும்போது படிக்க வந்திருக்கும் சாதாரண வீரனான என்னைப் பற்றி ஏன் எல்லோரும் அளவுக்கு மீறி அக்கறை கொள்கிறீர்கள்? அப்படி உங்களை அக்கறை கொள்ளச் செய்வது யார்? நீ என்னை நம்பினால் இந்த விஷயங்களைத் தெளிவு படுத்தலாம்.” 

இப்படிச் சிறிது உணர்ச்சியுடனேயே பேசிய சோழர்குல இளவல் மாதவியின் பதிலை எதிர்பார்த்து நின்றான். பதில் வரவில்லை. மாதவியிடமிருந்து பதிலுக்குப் பெருமூச்சு ஒன்று வெளிவந்து அந்த அறையின் நிசப்தத்தைச் சிறி தளவு கலைத்தது. விநாடிகள் பறந்தன. மாதவியின் மௌனம் உடையவில்லை. என்னவோ நினைத்து முகுந்தன் அவள் தோள்களிலிருந்த தனது கைகளை எடுத்து அவள் அழகிய கன்னங்களை பிடித்தான் இருபுறமும். இரு உள்ளங் கைகளும் நனைந்ததால் மாதவியின் கமல நயனங்களி லிருந்து நீர் வழிந்தோடுவதைப் புரிந்துகொண்டான். அதனால் அவளை நெருங்கி அவள் தலையைத் தனது மார்பில் அழுத்திப் பிடித்துக் கண்களையும் கன்னங்களையும் துடைத்தான். 

மாதவி என்னை நம்ப முடியாவிட்டால், நம்பினாலும் உண்மையைச் சொல்ல இஷ்டப்படாவிட்டால், இஷ்டமிருந்தும் சொல்லமுடியாத நிர்ப்பந்த நிலையில் நீ இருந்தால் என் கேள்விக்குப் பதில் சொல்லாதே!” என்று கூறி அவன் துன்பத்தைத் துடைக்க இறுக்கியே அணைத்தான் அவளை. 

மாதவியின் பூ உடல் இழைந்தது அவன் உடலுடன். கைகளிரண்டும் எழுந்து அவன் கழுத்தை வளைத்து இழுத்தன. இன்னும் ஒரே விநாடி, அவள் கமலக் கனிவாயிதழ்கள் துறவியின் வலிய உதடுகளுடன் இணைந்தன, வெறியுடன் இழைந்தன. அவள் திண்ணிய மார்பகம் அவன் மார்பில் வலுவாக அழுந்தி அவன் உணர்ச்சிகளைச் சுழல் வைத்தது. துறவி விசுவாமித்திரனானான். மேனகை எதற்காக பூலோகத்துக்கு வந்தாள் என்று நினைத்தான். அந்த நினைப்புடன் மாதவியை முதல் நாளிரவு போல் கைகளால் தூக்கிக் கொண்டான். பஞ்சணையில் தான் உட்கார்ந்து அவளை தனது மடியிலும் கைகளிலும் ஏந்திய வண்ணம் அவள் உதடுகளை மீண்டுமொருமுறை பருகினான்.அதற்குப் பிறகு தனது உதடுகளை நீக்கி, “மாதவி! நான் ஒரு சத்தியம் செய்யட்டுமா?” என்று வினவினான். 

“என்ன சத்தியம்?” மிக மெதுவாக வினவினாள் மாதவி. 

”உன்னைவிட்டு, இந்தக் காஞ்சியை விட்டுப் பிரிவதில்லை யென்று சத்தியம் செய்கிறேன்” என்று கூறினான் துறவி. 

மாதவி பெருமூச்செறிந்தாள். “வேண்டாம் அப்படி சத்தியம் செய்யாதீர்கள்” என்று மெதுவாக வேண்டினாள். துறவி அவள் கன்னத்துடன் தன் கன்னத்தை இழைத்தான். “ஏன் மாதவி” என்று கேட்டான், அவள் காதுக்கருகில் தனது உதடுகளைத் திருப்பி. 

இந்த முரட்டு உதடுகள் திரும்பியபோது கன்னத்தில் முரட்டு ரோமங்களும் அவளுக்கு இன்பத்தை அளித்தன. அதனால் அதிகமாக சுழன்ற உணர்ச்சிகளால் இன்ப வேதனைப்பட்ட மாதவி, “உங்கள் சத்தியம் உங்களை அழித்துவிடும்” என்று விம்மி விம்மி சொற்களை உதிர்த்தாள். 

“விம்மாதே மாதவி” என்றான் துறவி. 

“ஏன்?” மாதவி மீண்டும் விம்மினாள். 

”நீ வீரனுக்குடையவள். எந்த நேரத்திலும் மனதைத் தளரவிடக் கூடாது” என்றான் துறவி, “எந்த வீரனுக்குடையவள்?” என்றும் வேடிக்கையாக ஒரு கேள்வியைப் போட்டு வைத்தான். 

”உங்கள் கேள்வி விபரீதம்” என்று சீறினாள் மாதவி.

”எப்படி?”

“எந்த வீரனுக்கு?” என்றாள் மாதவி. “வருகிற வீரர்களுக்கெல்லாம் விருந்தென்று நினைக்கிறீர்களா?” 

துறவி உள்ளூர நினைத்தான் வேசியைப்பற்றி வேறெவ்விதம் நினைப்பதென்று. ஆனால் என்ன காரணத்தாலோ அப்படி மாதவியைப் பற்றி நினைக்க அவன் மனம் இடம் கொடுக்காததால் மெல்ல பதில் சொன்னான் துறவி. “மாதவி நேற்று முதல் நிகழ்ந்த விஷயங்கள் அப்படித்தான் நினைக்க இடம் கொடுக்கும். ஆனால் என்ன காரணத்தினாலோ உன்னைப்பற்றி இழிவாக நினைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. நீ செய்யும் விபரீதப் பணிகளெல்லாம் ஏதோ பெரிய நன்மையை முன்னிட்டு செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. அது என்னவென்பது எனக்குப் புரியவில்லை. எந்தக் காரணத்துக்காகவோ நீ உன்னை நீ அழித்துக்கொள்கிறாய். உன்னை யாரோ அழிக்க முயலுகிறார்கள். அதற்கு நீயும் இடந் தருகிறாய். உன் மனம் பெரிய தியாகத்துக்குத் தயாராகிவிட்டது. அது என்ன என்பதை அறிய விரும்புகிறேன். நம்பிச் சொல்லுகிறாயா?” 

மாதவியின் கரங்கள் எழுந்தன, மீண்டும் அவன் கழுத்தை வளைத்து அணைத்தன. “நான் சொல்ல முடியாது. உங்கள் நம்பிக்கைக்கும், மேலான எண்ணங்களுக்கும். எனது நன்றி. ஆனால் நான் வாயைத் திறக்க முடியாத நிலையில் இருக்கிறேன்” என்றாள் துன்பம் நிறைந்த குரலில். 

”மாதவி! உன்னுடைய இந்தப் பிடிவாதம் என்னை பயனற்றவனாகச் செய்கிறது. உன் மனத்தைச் சிறிது திறந்துவிடு. அநியாயமாக உன்னிடம் யாராவது உறுதி மொழி வாங்கியிருந்தால் அது செல்லாது. எதற்கும் விலக்கு உண்டு. ஆணைக்குக் கூடத்தான்” என்றான் துறவி. 

மாதவி மெதுவாக முணுமுணுத்தாள். “யாரும் என்னிடம் உறுதிமொழி வாங்கவில்லை. யாரிடமும் நான் ஆணையிடவில்லை” என்று. 

“அப்படியானால்….?” துறவி கேட்டான். 

”நானாகச் செய்துகொண்ட கட்டுப்பாடு” என்ற மாதவி “வீரரே! நாம் உதட்டளவில் செய்யும் ஆணையை விட நாமாகச் செய்துகொள்ளும் கட்டுப்பாடு பலமுள்ளதல்லவா?” என்று வினவினாள். 

”ஆம் மாதவி” என்ற துறவி அவளைத் தனது மடியி லிருந்து எடுத்துக் கீழே இறக்கினான். 

“ஏன்” என்று குழைந்தாள் மாதவி. 

“நான் சன்னியாசி” என்றான் முகுந்தன். மாதவி நகைத்தாள். “ஏன் மாதவி நகைக்கிறாய்?” என்று வினவினான் துறவி. 

“ஒன்றுமில்லை. சந்நியாசி என்கிறீர்களே!’ 

”ஏன் நான் சந்நியாசியல்லவா?” 

“சந்நியாசிதான். அர்ஜுன சந்நியாசி” என்று கூறிய மாதவி அவன் பக்கத்தில் வலிய உட்கார்ந்தாள். அடுத்த விநாடி பஞ்சணையில் புரண்டாள். 

18. மகிழினிது கந்தம் 

அதுவரை மாதவியின் எழிலாலும் அவளிடம் வேரூன்றிவிட்ட காதலாலும், அவள் சமீபத்தாலும் உணர்ச்சிகளுக்குப் பெரிதும் இடம் கொடுத்துவிட்ட வாலிபத் துறவி அவள் தன் பக்கத்தில் வலிய உட்கார்ந்து தன்னை ஒதுக்கிவிட்டுத் தன் பின்புறமாகப் பஞ்சணையில் விழுந்து புரண்டுவிட்ட சமயத்தில் தனது உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டான். தான் மட்டும் இஷ்டப்பட்டால் பஞ்சணையில் புரண்ட அந்தப் பைங்கிளியுடன் தானும் புரள முடியுமென்பதையும், அதனால் காம தாகமும் தணியுமென்பதையும் அவன் அறிந்திருந்தாலுங்கூட மாதவியின் நெருக்கத்துக்கும் அழைப்புக்கும் அவன் இடங் கொடுக்க மறுத்தான். “மாதவியை ஏதோ ஒரு பெரும் சக்தியை ஆட்கொண்டு தன்னிஷ்டப்படி அவளை பொம்மையாக்கி விட்டது. பொம்மலாட்டத்தில் சூத்திரக் கயிற்றை இயக்குபவன்போல் பின்னாலிருக்கும் யாரோ ஒருவன் அவளைப் பலவந்தமாக இயக்குகிறான். இவள் சிந்தனை அவனால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் யாராயிருந்தாலும் அவன் தன் தேவகியைக் கொண்டு மன்னனான விஷ்ணுகோபனை மடக்கியிருக்கவேண்டுமென்பதும், விஷ்ணுகோபனுக்கு அடுத்தபடி தன்னை வளைக்கவோ, வளைத்து ஒட்டவோ மாதவி பயன்படுத்தப்படுகிறாள் என்பதும் முகுந்தனுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அந்த மனிதன் யாராயிருந்தாலும் அவனைக் கண்டுபிடிக்கவும் அவன் வலையிலிருந்து இருபெண்களையும் மீட்கவும் அந்தச் சிறை அறையில், அறையின் இருட்டில் தீர்மானித்தான் சோழர்குல இளவல். இந்த எண்ணங்கள் மேலோங்கி நின்றதால் அவன் மாதவியை நோக்கித் திரும்பவும் இல்லை. இடித்த புளிபோல் கைகளிரண்டையும் ஒன்றுடன் ஒன்றைக் கோர்த்த வண்ணம் பஞ்சணை முகப்பிலேயே உட்கார்ந்திருந்தான். 

அவன் அடியோடு மௌனமாகி விட்டதையும், தன் பக்கம் திரும்பக்கூட இல்லாமல் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டதையும் பஞ்சணையில் கிடந்த மாதவி உணர்ந்துகொண்டாள். அவன் உறுதியையும், மௌனத்தையும் ஒருங்கே உடைக்க எண்ணி அவன் பின்புறத்தை நோக்கி உருண்டு ஒருக்களித்த நிலையில் தனது மலர்க் கரம் ஒன்றை அவன் இடுப்பைச் சுற்றி வளையவிட்டாள். “என்ன திடீரென்று மௌனமாகி விட்டீர்கள்? ஏதாவது யோக சித்தியா?” என்று கேட்டு மெதுவாகச் சிரித்தாள். 

துறவி நகைக்கவில்லை. “ஆம் மாதவி” என்று மட் டும் பதில் சொன்னான். 

“எதைப் பற்றி….?” என்று விசாரித்த மாதவி தன் கையால் அவனைச் சிறிது வலியவே அணைத்தாள். 

“யோக சித்தி எதைப் பற்றி என்பதில்லை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், மனத்தை ஒரு நிலையில் நிறுத்தவும் உபயோகப்படுகிறது” என்றான் முகுந்தன். 

“உணர்ச்சிகளை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? யார் அவற்றைத் தூண்டுகிறார்கள்?” மாதவி வினயத்துடன் கேட்டாள். 

முகுந்தன் சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னான்- “யோகத்துக்கும் தவத்துக்கும் இடையூறு பெண்கள்.. உணர்ச்சிகள் அவர்களால்தான் தூண்டப்படுகின்றன” என்று. 

“அப்படியா?” 

“ஆம்; விசுவாமித்திரன் தவத்தை முதவில் மேனகை உடைத்தாள். இரண்டாவது முறை ரம்பை உடைத்தாள்”. 

“நான் மேனகையா, ரம்பையா?” 

“இரண்டும் கலந்த மோகினி.” 

“அப்படியானால் நீங்கள் விசுவாமித்திரரா?”

“அப்படியிருப்பது தவறா?” 

“தவறில்லை. ஆனால் உங்களைப் பார்த்தால் விசுவாமித்திரராகத் தெரியவில்லை.”

“தெரியவில்லையா?” 

“இல்லை”. 

“ஏன் எனக்கு உறுதி போதாதா? மனவலு இல்லையா?”

“இரண்டுமிருக்கிறது. ஆனால் கோபமில்லை. ஆகை யால் நீங்கள் விசுவாமித்திரர் இல்லை”. இதைச் சொன்ன மாதவி மீண்டும் நகைத்தாள். 

முகுந்தன் தனது வலது கையை ஆதரவாக அவள் முதுகின்மீது வைத்தான். “உன்னிடம் எனக்குக் கோபம் எப்படி வரும் மாதவி?” என்று கேட்டான் பரிதாபம் நிறைந்த குரலில். 

முன்பு அவன் கை தன்மீது பட்டதற்கும் இப்பொழுது பட்டதற்கும் பெரும் வித்தியாச மிருந்ததை மாதவி ஸ்பரிச மாத்திரத்தில் உணர்ந்தாள். முன்பு வலிய கையொன்று காமத்தினால் உந்தப்பட்டு முரட்டுத்தனமாக இடையை வளைத்து இழுத்தது. இப்பொழுதோ பரிதாபத்துடன் முதுகை ஒரு தகப்பன் குழந்தையைத் தடவுவது போல் தடவுகிறது. அவளுக்கு நன்றாகப் புரிந்து விட்டது. அன்று இரவு அதற்கு மேல் எதற்கும் துறவி மசியமாட்டானென்பது. ஆகவே துன்பப் பெருமூச்செறிந்தாள் மாதவி. அதனால் எழுந்து தாழ்ந்த முதுகு அவள் இதயக் கதையைச் சொல்லவே முகுந்தன் வினவினான், “ஏமாற்றமா மாதவி ?” என்று. 

இதைக் கேட்ட மாதவியின் மனம் பொறுமையை இழந்தது. சித்தம் சீறியது. “எதில் ஏமாற்றம் என்கிறீர்கள்?” என்ற கேள்வியும் சீற்றத்துடன் வெளிவந்தது. 

“நான் ரிச்யசிருங்கன் ஆகாததால்” என்ற துறவி பெரிதாகவே நகைத்தான். 

“ரிச்யசிருங்கரா?” மாதவிக்கு அதன் கருத்துப் புரிந்தாலும் புரியாததுபோல் கேட்டாள். 

“ஆம். மகரிஷி ரிச்யசிருங்கர் காட்டிலிருந்தார். பெண்களை அறியாதவர். அவர்களைப் பார்த்ததும் அவர்களிடம் மயங்கிக் காட்டிலிருந்து நாட்டுக்குச் சென்று விட்டார்” என்றான் முகுந்தன். 

கதை அவளுக்குத் தெரிந்ததுதான். ராமாயணக்கதை பாரத நாட்டில் யாருக்குத்தான் தெரியாது? இருப்பினும் அவன் சொற்கள் அவளுக்குக் கோபத்தை ஊட்டவே, ”ஓகோ! நீங்கள் ஏற்கனவே பெண்களை அறிந்தவரோ?” என்று வினவினாள், உள்ளத்திலிருந்த சீற்றம் சொற்களிலும் விரிய. 

“அறிந்திருக்கிறேன்….” விஷமத்துடன் பதில் சொன்னான் முகுந்தன். 

“அப்படியா!” 

“ஆம். புத்தகங்கள் மூலம்”. 

“அது அனுபவத்தில் இல்லையா?” 

“இது வரையில் இல்லை. இப்பொழுது துவங்கியிருக்கிறது”. 

”எப்படி?” 

“சாஸ்திரம் படிக்க இவ்வூருக்கு வந்தேன்.மஹாயனர் உன்னிடம் தள்ளினார் என்னை. நீ கற்பழிக்க ஆரம்பித்து விட்டாய்.” 

மாதவியின் கோபம் மிதமிஞ்சவே அவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். ஆடையைச் சீர்படுத்திக் கொண்டாள் அவசர அவசரமாக. பிறகு பஞ்சணையிலிருந்து கீழே இறங்கினாள் வேகமாக. பிறகு வெளியே செல்ல இரண்டடி எடுத்துவைத்தவள் சட்டென்று நின்று விட்டாள். 

துறவி இருந்த இடத்தைவிட்டு அகலவுமில்லை; அவளைத் தடை செய்யவுமில்லை, மாதவியே உக்கிரத்துடன் திரும்பி. “நான் வெளியே போக முடியாது” என்று கூறினாள். 

துறவி புன்முறுவல் கொண்டான். அவன் உட்கார்ந்திருந்ததால் தாழ்வரை விளக்கின் சிறு வெளிச்சம் அவன் முகத்தில் லேசாக விழுந்ததால் மாதவியால் அவன் முகத்தைப் பார்க்க முடிந்தது நன்றாகவே. புன்முறுவல் தவழ்ந்த இதழ்களைத் திறந்து துறவி பதில் சொன்னான், 

“நான் போகச் சொல்லவில்லை” என்று. 

“நீங்கள் போகச் சொன்னாலும் நான் போகமுடியாது” என்று மாதவி கூறினாள். அவள் குரலில் சிறிது பயமும் ஒலித்தது. 

“அதுவும் எனக்குத் தெரியும்” என்றான் முகுந்தன் உணர்ச்சியற்ற குரலில். 

“என்ன தெரியும் உங்களுக்கு? என் வேதனை தெரியுமா?”

“முழுக்க முழுக்கத் தெரியும் மாதவி. நீ ரகசியமாக நிலவறையின் மூலம் வந்திருக்கிறாய். ஆகவே வெளியே பகிரங்கமாக மற்றவர்கள் போல் போக முடியாது. அதனால் திண்டாடுகிறாய்” என்று சிரித்தான் முகுந்தன். 

மாதவியை ஏதோ விவரிக்க இயலாத அச்சம் சூழ்ந்திருக்க வேண்டும். “ஆம்….ஆம்” என்று பதில் கூறிய அவள் உதடுகள் துடித்தன. 

“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான் துறவி. 

“புரியவில்லை” மாதவியின் உதடுகள் துடித்தன சற்று அதிகமாகவே. அதனால் சொற்களும் தடுமாறியே வெளி வந்தன. 

இதற்குப் பிறகு துறவி பேச்சுக் கொடுக்கவில்லை. எழுந்திருந்து அவளை நோக்கி வந்தான் பின்புறமாக. அவள் தோள்களில் தனது கைகளை வைத்தான் ஆதரவுடன். மெள்ளத் தன்மீது சார்த்தியும் கொண்டான் ஆறுதலளிக்க.”மாதவி அச்சத்தை விடு. அச்சந் தவிர் என்ற தமிழர் புதுமொழியை நினைத்துக்கொள். உன் நிலை எனக்கு புரிகிறது. எனக்குத் தெரியாமல் உள்ளே வந்து விட்டாய், நிலவறை மூலம். நான் உறங்கியிருந்தால் வெளியே சென்றிருப்பாய் அதேவழியில் நான் இப்பொழுது இந்த ராத்திரியை சிவராத்திரியாக்கி விட்டேன். அதனால் உன் திட்டம் தகர்ந்து விட்டது. உன்னை அனுப்பியவன் என்னை அதிகமாகப் புரிந்து கொள்ளவில்லை. மாதவியின் வலையில் சுலபமாகத் துறவி விழுந்துவிடுவான். ‘மாதவி அவனை காஞ்சியை விட்டு விரட்ட ஏற்பாடு செய்வாள். அவள் போவதாக ஆணையிட்டபின் அவன் உறங்கிய பின் திரும்பி விடுவாள்’ என்று நினைத்தான். அவன் திட்டம் நடக்கவில்லை. ஆனால் மாதவி அஞ்சாதே. உன் இக்கட்டான நிலை எனக்கு புரிகிறது. அதை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் வெளியே செல்கிறேன். தாழ்வரையில்கூட நிற்கவில்லை. நீளச் சிறையின் பெருங் கதவுகள்வரை நடந்து செல்கிறேன். நீ வந்த வழியே சென்றுவிடு. அப்பொழுது உன் மனச்சாட்சி உறுத்தாது. என்னிடம் நீ ரகசிய வழியைக் காட்டவில்லை. நானாகக் கண்டு பிடித்தால் அதற்கு நீ பொறுப்பாளியல்ல. நீ செல் மாதவி. நாம் மீண்டும் சந்திப்போம். ஏனென்றால் நான் இந்தக் காஞ்சியைவிட்டுச் செல்லப் போவதில்லை. இதைமட்டும் உன்னை அனுப்பியவரிடம் திட்டமாகச் சொல்லிவிடு” என்று கூறி விட்டு அறைக் கதவின் மூலம் வெளியே சென்றுவிட்டான் அவள் பதிலுக்குக்கூடக் காத்திராமல். 

கதவின் பக்கமே மாதவி நின்றாள் நீண்ட நேரம். துறவியின் நெடிய உருவம் கம்பீரமாகப் பெருங்கதவுகளை நோக்கிச் செல்வதைக் கண்டாள். அவன் நடை ஒரே சீராக இருப்பதையும் பார்த்தாள். அவன் நெஞ்சுரம் அவளுக்கு பெரும் வியப்பாயிருந்தது. ‘இவரிடம் உண்மையைச் சொல்ல இயலவில்லையே’ என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டாள். 

பிறகு கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றாள். 

நீண்ட நேரம் கழித்தே துறவி அந்த அறைக்குத் திரும்பினான். திரும்பியதும் விளக்கைக் கொளுத்தினான். அறையில் எந்தவித மாற்றமுமில்லை. ஆனால் அறையின் ஒரு மூலையில் மகிழ மலர்கள் நான்கு விழுந்து கிடந்தன. அதைக் கண்ட துறவியின் முகத்தில் மகிழ்ச்சி பெரிதும் நிலவியது. நேராகச் சென்று அந்த மலர்களைக் கையிலெ டுத்து முகர்ந்தான். “மடல் பெரிது தாழை, மகிழினிது கந்தம்” என்ற ஒளவை பாட்டியின் பாடல் வரிகளை முணு முணுத்தான். “மகிழ மலர்களே! உங்களை எனக்குப் பெரிதும் பிடிக்கும், உங்களுக்கும் என்னைப் பிடிக்குமென்பதைப்பொழுதுதான் உணர்ந்தேன்” என்று கூறிக்கொண்டே மீண்டும் மீண்டும் அவற்றை முகர்ந்தான். 

19. மகாராஜாவின் கலக்கம் 

அறையின் தெற்குக் கோடி மூலையில் சற்றே சிதறி விழுந்து கிடந்த மகிழ மலர்கள் நான்கையும் வலது கையில் வைத்து முகர்ந்து கொண்டே, நின்ற இடத்திலிருந்து சிறிதும் அசையாமல் தீவிர சிந்தனையில் இறங்கினான் வாலிபத் துறவி. அந்தச் சிந்தனையுடன் பக்கத்திலிருந்த பலகணி வழியாக சற்று எட்டத் தெரிந்த வேகவதி நதியையும் நோக் கினான். நதிக்கு அப்பால் வெள்ளை வெளெரென்ற மணலை அடுத்துத் தெரிந்த ஜெயின் விஹாரத்தின் மகுடங்களையும் தனது கூரிய கண்களால் ஆராய்ந்தான். “அதோ மகுடங்கள், இதோ என் கையில் மகிடங்கள்” என்று மகுடங்களுக்கும் மகிடங்களுக்கும் நல்ல செந்தமிழில் ஒரே எழுத்துத்தான் வித்தியாசமென்பதை உதடுகளால் முணுமுணுத்தான். அப்படி முணுமுணுத்தவன் அந்த இரண்டுக்கும் ஏதோ பெருத்த சம்பந்தம் இருக்கவேண்டு மென்பதையும் சந்தேகமற உணர்ந்து கொண்டான். அப்பொழுது மெள்ள உதயமாகிய கிருஷ்ணபட்சத்துச் சந்திரனையும் சாளரத்தின் மூலம் கவனித்த முகுந்தன் அது காஞ்சியின் நதிப்புறத்தையும், ஏன் சிறைச்சாலையை அடுத்த புல் தரையையுங்கூட எத்தனை மனோகரமாக அடிக்கிறது என்று எண்ணிப் பார்த்தான். அத்தனை மனோகரத்தையும் காஞ்சியைச் சூழ்ந்துள்ள ஆபத்தும் காஞ்சிக்குள்ளேயே நடக்கும் சதியும் சதியின் மர்மமும் எத்தனை விகாரப் படுத்துகின்றன என்பதை நினைத்துப் பெருமூச்செறிந்தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு கையிலிருந்த மகிட மலர்களை முகர்ந்த வண்ணம் சிறைச்சாலைக்கு வெளியே வந்த வாலிபத் துறவி சிறைச்சாலையின் மற்ற அறைகளை யும் வெளிக் கதவையும் ஆராய்ந்தான். நள்ளிரவு நெருங்கி விட்டதால் எங்கும் அமைதி நிலவிக் கிடந்தது. வெளி வாயில் கதவுக்கருகிலிருந்த காவலர் நடமாட்டம் தவிர வேறெவ்வித நடமாட்டமோ அரவமோ இல்லை. அந்த அமைதியைத் திருப்தியுடன் தலையை ஒரு முறை அசைத்து ஆமோதித்துவிட்டு அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டான். சாளரங்களையும் மூடி அவற்றின் மரத்தாழ்ப்பாள்களை இறுக்கினான் பிறகு விளக்கை எடுத்துக் கொண்டு மகிழ மலர்கள் விழுந்து கிடந்த அறையின் மூலைக்குச் சென்றான் அந்த இடத்தில் விளக்கைக் கீழேவைத்துவிட்டு விளக்கைச் சுற்றிச் சுற்றி இரண்டு மூன்று முறைகள் நடந்தான். நடந்தவன் சட்டென்று ஓரிடத்தில் நின்றான். நின்றதும் அவன் முகத்தில் குழப்பம் பெரிதும் தெரிந்தது. “மாதவி! உன் வித்தையை சோழ நாட்டானிடமே காட்டிவிட்டாய். ஆனால் சோழன் ஏமாறுகிறவனல்லன் என்பதை நீயும் புரிந்துகொள்ளவில்லை” என்று சற்று இரைந்தே பேசிக் கொண்ட வாலிபத்துறவி தான் நின்ற இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு கையால் மூன்று முழம் தரையில் அளந்தான். 

அந்த இடத்தை லேசாகத் தனது கையை முஷ்டியாகப் பிடித்துத் தட்டினான். அதன் விளைவாகக் கேட்ட ஒலியைக் காதில் வாங்கியதும் அவன் முகத்தில் பூர்ண திருப்தி நிலவியது. அந்தத் திருப்தியுடன் தரையில் அமைக்கப்பட்டிருந்த கற்களில் ஒன்றை லேசாக அசைத்தான். கல் மெல்ல அசைந்தது. அசைந்ததும் கீழே ‘கிர்’ ரென்று ஓர் ஒலி உண்டாக இன்னும் நான்கு கற்கள் அசைந்தன. தரை விரிந்து பெரும் நிலத்துவாரம்போல் அடியே பள்ளமென்று தெரியவே விளக்கை எடுத்துக் கீழே தெரிந்த பாதாளத்தைக் கவனித்தான். சுமார் அரை ஆள் ஆழத்தில் ஒரு கல் இருந்தது. வேறெதையம் காணோம். அந்த இடத்தில் இறங்கி நின்று அந்தப் பாறையை நோக்கினான். ‘நினைத்தபடிதான் இருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட வாலிபத் துறவி மேலிருந்த விளக்கை ஊதியணைத்துவிட்டுப் பக்க வாட்டில் கற்களை அசைக்க மேல்தரை பழையபடி மூடிக் கொண்டது. அடுத்தபடி தான் நின்றிருந்த பாறையின் ஒரு மூலைக்கு போய் சுற்றிலுமிருந்த சுவரைத் தடவினான், அதில் தெரிந்த ஒரு தாழ்ப்பாளை இழுக்க அவன் நின்றிருந்த பாறை மெல்ல அகன்று கீழே ஓடும் படிகளைப் புலப்படுத்தியது. படிக்கருகில் எங்கிருந்தோ வீசிய விளக்கின் வெளிச்சம் நன்றாகத் தெரிந்ததால் படிகளில் இறங்கி நடக்கு முன்பு அப்படிகளை நன்றாக ஆராய்ந்தான். படிகள் சுத்தமாயிருந்தன. அன்றாடம் படிகள் சுத்தம் செய்யப் பட்டிருந்தது மிக நன்றாகத் தெரிந்ததால் அந்தப் படிகளில் நடமாட்டம் அடிக்கடி இருப்பதைப் புரிந்துகொண்ட வாலிபத்துறவி அவற்றில் இறங்கி மெதுவாகப் படிகளில் காலை வைத்துப் பார்த்தான். அவை திடமாக இருக்கவே அவற்றில் இறங்கி நடந்தான். 

அவன் முதல் படியில் காலை வைத்தவுடன் மேலிருந்த பாறை மூடிக் கொள்ளவே அந்தப் படிக்கும் பாறைக்கும் இணைப்பு இருப்பதைப் புரிந்து கொண்டான். பிறகு படிகளில் இறங்கியவன் இருபது படிகளுக்குக் கீழே சமதரை இருப்பதைப் பார்த்து அதன் வழியே நடந்தான். இப்படி சுமார் ஒரு நாழிகை நேரம் நடந்த பின்பு திடீரென்று இரண்டு கதவுகள் அவன் முன்பு தோன்றவே இரண்டும் இரண்டு பக்கங்கள் செல்கின்றன என்பதைப் புரிந்து கொண்டான். எந்தக் கதவை திறந்து செல்வது என்பதைப் பற்றிச் சிறிது சிந்தித்து விட்டு வலப்புறக் கதவைத் திறந்தான். திறந்ததும் சில அடி தூரம் நடந்ததும் மேலே படிகள் ஓடின. அந்தப் படிகளின் உச்சிக்கு வந்ததும் இன்னொரு கதவு தென்பட்டது. ஆகவே இம்முறை நிலவறைப் படிகள் அறையின் தரையை அடையவில்லை யென்பதையும் பக்கச் சுவரில் முடிந்திருக்கின்றன வென் பதையும் ஊகித்துக்கொண்டு அந்தக் கதவை லேசாகத் தடவினான். சுவர் போலவே காட்சியளித்த அந்தக் கதவின் நடுவில் பெரிய சிமிழ் போன்ற ஒரு மரவை இருக்கவே அதை லேசாகத் திருகினான் துறவி. அது சுழன்று ஒரு துவாரம் தெரிய அதன் மூலம் சுள்ளென்று வெளிச்சம் முகத்திலடிக்க அதிலிருந்து தப்ப சிறிது விலகி நின்று பிறகு அந்தத் துவாரத்தின் மூலம் நோக்கினான் பக்கவாட்டில் மறைந்து நின்றபடி. 

அவன் கண்ணெதிரே விரிந்தது விசாலமான அறை. போகப் பொருள்கள் அந்த அறையில் நிறைந்திருந்தன. வென்றாலும் அவையெல்லாம் தாறுமாறாகக் கிடந்தன. இரண்டு ஹம்ஸ கூஜாக்கள் ஒரு சாளரத்தில் உருண்டு கிடந்தன. மேலிருந்து தொங்கியது ஒரு ஹம்ஸ விளக்கு. அது தூங்கா விளக்காதலால் எரிந்து கொண்டிருந்தாலும் அது துலக்கப்பட்டு நீண்ட நாளாகியிருக்க வேண்டும் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. அறையின் ஓரத்தி லிருந்த பஞ்சணையில் படுக்கையும் தலையணைகளும் தாறு மாறாகக் கிடந்தன. இன்னொரு மூலையிலிருந்த ஒரு பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இந்த நிலையில் அந்த அறை இருப்பதற்குக் காரணம் என்னவென்று புரியாததால் சிந்தனை வசப்பட்டான் துறவி. அப்படி அவன் சிந்தித் துக்கொண்டிருந்த சமயத்தில்தான் மகாராஜா விஷ்ணு கோபன் உள்ளே நுழைந்தார். 

உள்ளே நுழைந்த மகாராஜா சிலையென நின்றார் பல விநாடிகள். பிறகு சுற்றிலும் ஒருமுறை தமது கண்களை ஓட்டி முகத்தைச் சுளித்துக்கொண்டார். சற்று நிதானத்துக்கு வந்ததும் “மாதவி! மாதவி!” என்று கூவி அழைத்தார். 

அவர் அழைப்பை கேட்ட மாதவி சற்று எட்ட இருந்த ஒரு பெரிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து “ஏன், மகாராஜா” என்று தொடங்கியவள் அறையைப் பார்த்ததும் திடுக்கிட்டு நின்றாள். “இது யார் வேலையாயிருக்கும்?” என்று வினவினாள் மகாராஜாவைத் திரும்பி நோக்கி. 

”யார் வேலை? எல்லாம் உன் காதலன் வேலையாகத்தானிருக்கும்” என்று மகாராஜா எரிந்து விழுந்தார். என்றும் நிதானமிழக்காத மகாராஜா அன்று நிதானத்தை இழந்து விட்டதைத் துவாரத்தின் மூலம் பார்த்துக் கொண்டிருந்த துறவி கவனித்தான். தவிர அவர் காதலன் என்று குறிப்பிட்டது யாராக இருக்கும் என்று சிந்தித்தான். 

அந்தக் கேள்வியை மாதவியே கேட்டாள். “யார் மகாராஜா என் காதலர்?” என்று. 

“ஏன்? உன் காதலன் யாரென்று உனக்கே தெரியாதா?” என்று சுள்ளென்று விழுந்தார் மகாராஜா. 

மாதவியும் முகம் சுளித்தாள். “எனக்குத் தெரிந்தா லென்ன தெரியா விட்டாலென்ன? உங்களுக்குத்தான் தெரியுமே, சொல்லுங்களேன்” என்றாள் மாதவி சினத்தைக் குரலில் காட்டி. 

மகாராஜாவின் கோபம் சிறிது அடங்கியிருக்க வேண்டும். மாதவியின் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. எதிரே கவிழ்ந்துகிடந்த ஒரு ஆசனத்தைத் திருப்பிப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். “அவன்தான் அந்தப் போலி சந்நியாசி” என்று மகாராஜா கூறினார். கூறினார் என்பதைவிட எரிந்து விழுந்தார் என்று சொல்வது பொருந்தும். 

“அவர் இங்கு எப்படி வர முடியும்?” என்று மாதவி கேட்டாள். 

“நீ சொன்னபடி செய்தாயல்லவா?” என்று மகாராஜா வினவினார். 

“செய்தேன்” மாதவியின் பதில் சகஜமாக வந்தது. “மகிழ மலர்களை குறித்த இடத்தில் போட்டாயா?’ 

“போட்டேன்.” 

“அகஸ்மாத்தாகத் தலையிலிருந்து உதிர்ந்தது போலத் தானே போட்டாய்?” 

‘“ஆம்.” 

“அப்பொழுது அவன்தான் வந்திருப்பான்.” 

“வந்தால் எங்கு ஓடிப்போய் விடுவார்?” 

“திரும்பிப் போயிருந்தால்?” என்று மகாராஜா வினவினார்.  

“ஒருநாளும் திரும்பிப் போக மாட்டார். அவர் இங்கு வந்திருந்தாலும் இப்படி அறையை அலங்கோலப்படுத்தித் தான் வந்ததைப் பறைசாற்றியிருக்க மாட்டார்.” இதை வெகு திட்டமாகச் சொன்னாள் மாதவி. 

அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக விஷ்ணு கோபன் தலையை அசைத்தான். 

‘அப்படியானால் வேறு யார் வந்திருப்பார்கள்?’ என்று வினவினான் சிந்தனை மிகுந்த குரலில். 

மாதவி பதில் சொல்லத் திராணியற்று நின்றாள். அப்பொழுது மகாராஜா மீண்டும் குற்றஞ் சாட்டினார். ”மாதவி! நான் நினைத்த அளவுக்கு உன் அழகு பயனுடைய தல்ல” என்று. 

“ஏன் மகாராஜா?” தலைகுனிந்து வெட்கத்துடன் வினவினாள் மாதவி. 

“அந்தச் சனியன் பிடித்த துறவியை உன்னால் இழுக்க முடியவில்லையே?” என்று கூறினார் மகாராஜா அலுப்புடன்.

இதற்கு என்ன பதில் சொல்லுவாள் மாதவி? நாணம் பிடுங்கித் தின்ன, உணர்ச்சியால் மார்பு எழுந்துதாழ தலைகுனிந்து நின்றாள். நின்ற நிலையில் கேட்டாள். 

“மகாராஜா! பெண்களின் அழகை வைத்துத்தான் உங்களால் காரியத்தைச் சாதிக்கமுடியுமா?” என்று. 

 “மஹாயனரைக் கேள் இந்தக் கேள்வியை” என்றார் மகாராஜா. 

“அவரை எதற்குக் கேட்க வேண்டும்?” என்று கேட்டாள் மாதவி. 

“அவர்தானே என்னைத் தேவகியிடமும் உன்னைத் துறவியிடமும் சிக்கவைத்தார். நான் சிக்கினேன்; துறவி தப்பினான்” என்று மகாராஜா அலுத்துக்கொண்டார். 

“தவறு மகாராஜா. நானும் தப்பவில்லை” என்று கூறிய வண்ணம் நிலவறைக் கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான் துறவி. நுழைந்ததும் மகாராஜாவையும் மாதவியையும் பார்த்துப் புன்முறுவல் கொண்டான். ”மகாராஜா! உங்கள் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். என்ன செய்யவேண்டும்? ஆணையிடுங்கள்” என்றும் கேட்டான். 

அவன் கேள்வியில் உள்ளடங்கிய பொருளைக் கண்டு பிரமித்தார் மகாராஜா. 

20. மன்னனை வீழ்த்திய துறவி 

மகாராஜாவின் விழிகள் துறவியை ஏறெடுத்து நோக்கின ஒரு விநாடி. பிறகு நிலத்தில் தாழ்ந்தன.”உங்கள் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்” என்று துறவி சொன்ன சொற்களில் ஆழமான அர்த்தம் புதைந்து கிடப்பதை மகாராஜா சந்தேகமற உணர்ந்து கொண்டதால் நிலத்தில் தாழ்ந்த விழிகளைத் தூக்கியபோது, துறவியைக் கவனிக்காமல் மாதவியையே நோக்கினார்.மாதவி அவர் கண்களைத் தைரியத்துடன் சந்தித்தாள். அடுத்து துறவியையும் நோக்கினாள் துணிவுடன். “மகாராஜா அழைத்ததாகச் சொன்னீர்களே. எப்பொழுது அழைத்தார் உங்களை?’ என்று வினவினாள் ஏதுமறியாதவள் போல. 

வாலிபத் துறவியின் வதனத்தில் மந்தகாசம் பெரிதும் படர்ந்தது. “நேரிடையாக அழைக்கவில்லை. ஆனால் அழைப்பு அழைப்புதானே?” என்று வினவியதன்றி இதழ்களில் சிறிது புன்சிரிப்பையும் படரவிட்டுக்கொண்டான் துறவி. 

“நேரிடையாக அழைக்கவில்லையென்றால்?” மாதவி யின் கேள்வியில் பொய் வியப்பு ஒலித்தது. 

“நேரிழையை விட்டு அழைத்தார்” என்று துறவி லேசாக நகைக்கவும் செய்தான். 

“நான் உங்கள் அறைக்கு வந்ததைச் சொல்கிறீர்களா?” ஒன்றுமறியாத குழந்தைபோல் கேட்டாள் மாதவி. 

“ஆம்” துறவியின் பதில் சர்வ சாதாரணமாயிருந்தது.

“உங்களை மன்னர் அழைத்ததாகக் கூறவில்லையே நான்? 

“இல்லை”. 

‘நீங்களாக ஊகித்துக் கொண்டீர்களா?” 

“இல்லை.’’ 

“என்ன இல்லை?” 

“மகாராஜா மலர் தூவி அழைப்பார் என்பது எனக்குத் தெரியாது. காஞ்சியில் அதுவும் ஒரு வழக்கம் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்ற துறவியின் முகத்தில் மகிழ்ச்சி அதிகமாக விரிந்தது. 

துறவி தங்களைப் பார்த்து நகைக்கிறானென்பதை மகாராஜா, மாதவி இருவருமே புரிந்து கொண்டார்கள். இருப்பினும் மாதவி கேட்டாள் “என்ன புதிர் போடுகிறீர்கள்?” என்று. 

முகுந்தன் மாதவியை உற்று நோக்கினான் சில விநாடிகள். “மாதவி உனக்கோ மகாராஜாவுக்கோ சிந்திக்கும் சக்தி சிறிது குறைவாயிருக்கிறது” என்று கூறிய முகுந்தன் மாதவியின் முகத்தில் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு, “கோபிக்காதே மாதவி! நான் சொல்வதில் தவறில்லை. சரி ஒரு கேள்விக்குப் பதில் சொல்” என்றான். 

“கேளுங்கள்” என்றாள் மாதவி. 

“நீ தலையில் மகிழம்பூ சூடியிருக்கிறாய்?” 

“ஆம்”. 

”மகிழம்பூவைத் தொடுப்பதில்லை.” 

“இல்லை.” 

“கோத்துத்தான் வைத்துக் கொள்வார்கள்”. 

“ஆம்”. 

“கோத்த மாலையிலிருந்து உதிரிப் பூக்கள் விழாது… அதுவும் மகிழம் நான்கு நாட்களானாலும் வாடுமே தவிர பிரிந்து விழாது. ஆகவே மாதவி நீ போட்டு வந்த நான்கு மகிழம் பூக்களும் தற்செயலாக தலையிலிருந்து விழுந்தவையல்ல. வேண்டுமென்றே என்னை இங்கு இழுக்க நீ போட்டு வைத்த மலர்கள். இதில் அதிக புத்திசாலித்தனமில்லை” என்ற துறவி மேலும் சொன்னான்; “அந்த மலர்களைப் பார்த்ததுமே நீ முக்கியமாக வந்தது என்னை அழைக்கவே என்பதை உணர்ந்து கொண்டேன். நீ நாகசர்ப்பத்தை என் கையில் திணித்தது, காஞ்சியைவிட்டு ஓடும்படி கூறியது எல்லாம் நாடகம், என்னை இங்கு அழைக்க வந்ததற்குப் பூர்வாங்கமான நடிப்பு” என்றும் கூறினான். 

மாதவியின் கண்கள் நெருப்பைக் கக்கின. “உங்களை நேரில் அழைத்திருந்தால் வந்திருக்கமாட்டீர்களா?” என்று வினவினாள் துணிவுடனும் சினத்துடனும். 

“வந்திருப்பேன். ஆனால் அப்படி என்னை நேர்முகமாக அழைத்துவர இஷ்டப் படவில்லை. தவிர இந்தக் காஞ்சியில் நான் புகுந்தது முதல் நேர் வழியில் எதுவுமே நடக்கவில்லை, சர்வமும் மர்மம்” என்று வாலிபத் துறவி கூறினான். 

“நான் ஏன் உங்களை நேரில் அழைக்கக் கூடாது?” என்று வினவினாள் மாதவி. 

பதிலுக்கு அறையின் அலங்கோலத்தைச் சுட்டிக் காட்டினான் துறவி. “இந்த அறையில் வேறு யாராவது இருக்கலாம் என்ற பயம் உனக்கு இருந்தது. மகாராஜாவுக்கும் அந்த அச்சம் இருந்திருக்க வேண்டும். ஆகையால் முதலில் நீ வந்து இங்கு யாருமில்லையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள இஷ்டப்பட்டாய். நீங்கள் இருவரும் சற்று முன்பு பேசியதிலிருந்து என் ஊகம் சரியென்று தெரிந்து கொண்டேன்” என்றும் சொன்னான் முகுந்தன். 

மாதவியும் மகாராஜாவும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள் ஒருவிநாடி பிறகு பார்வையைத் துறவிமீது திருப்பினாள் மாதவி. “நாங்கள் பேசியதை ஒட்டுக் கேட்டீர்களா?” என்று வினவினாள் சினத்துடன். “ஆம்; அதனால் நான் கோபிக்கவில்லை” என்றான் துறவி. 

“கோபிக்கவில்லையா!'” வியப்பு இருந்தது மாதவியின் கேள்வியில். 

“ஆம்.”

“எதற்கு?” 

“மகாராஜா என்னைப் போலி சந்நியாசி என்றார் கோபிக்கவில்லை. நீயே எனக்கு அர்ஜுன சந்நியாசி பட்டத்தை ஏற்கனவே சூட்டிவிட்டாய். அதற்கும் கோபிக்க வில்லை.” இதைச் சொல்லிய துறவி நகைத்தான். “ஆனால் மாதவி,அறையை நான் இப்படி அலங்கோலம் செய்யமாட்டேன் என்று மகாராஜாவுக்கு உறுதி கூறியதற்கு நான் மிகவும் நன்றி செலுத்தவேண்டும்” என்றும் கூறி அதில் சிறிது சந்துஷ்டியைக் காட்டினான். 

இந்த உரையாடலை மகாராஜா கேட்டுக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தார் நீண்டநேரம். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்து, “முகுந்தா!” என்று அழைத்தார்.

“மகாராஜா!”-முகுந்தன் தலை வணங்கினான். 

“அதோ அந்த ஆசனத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்” என்று சற்று எட்ட குப்புறக்கிடந்த இன்னொரு மஞ்சத்தைச் சுட்டிக் காட்டினார் மகாராஜா. 

துறவி நான்கடி நடந்து மஞ்சத்தை எடுத்து வந்து மகாராஜாவுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டான். “சொல்லுங்கள் மகாராஜா” என்று வினவவும் செய்தான். 

மகாராஜா விஷ்ணுகோபன் முகத்தில் துயர் விரிந்து. கிடந்தது. “காஞ்சி பேராபத்திலிருக்கிறது” என்று கூறினார். 

தான் வந்த தினத்திலிருந்து ஒவ்வொருவரும் பாடிய அதே பல்லவியைக் கேட்டதுறவி உணர்ச்சி எதையும் காட்டாமல் தலையை அசைத்தான். 

“அந்த ஆபத்திலிருந்த இந்த மாநகரத்தை மீட்க உனது உதவி வேண்டும்” – மகாராஜா இதைத் தயக்கத்துடன் சொன்னார். 

“ஆணையிடுங்கள் மகாராஜா?” என்றான் துறவி. 

“உதவி கேட்பவன் ஆணையிட முடியாது” என்று மகாராஜா விளக்கினார். 

“சாதாரண மனிதர் கேட்டால் அது உதவி. மகாராஜா சொன்னால் அதுவே ஆணை” என்ற துறவி “இல்லையா மாதவி?” என்று, மாதவியையும் அபிப்பிராயம் கேட்டான். 

மாதவி பதில் சொல்லவில்லை. அவள் விழிகள் பதில் கூறின. புரிந்துகொண்ட துறவி, ”மகாராஜா! நான் உங்கள் ஆணைக்கு இணங்கு முன்பு இரண்டு மூன்று விஷயங்களை அறிய விரும்புகிறேன்” என்றான். 

“கேள் முகுந்தா,” – மகாராஜாவின் பதிலில் உறுதி இருந்தது. 

“மகாராஜா! காஞ்சிக்குள் சமுத்ரகுப்தன் கையாள் ஒருவன் இருக்கிறானென்பதை முன்னமே அறிவோம்” என்ற துறவி வாசகத்தை முடிக்கவில்லை. 

“ஆம்” என்றார் மகாராஜா. 

“அது யாரென்று உங்களுக்கு நிச்சயமாகத்தெரியாது”.

“தெரியாது”. 

“ஆனால் முற்றுகையையோ போரையோ எதிர்பார்க்கும் நிலையில் காஞ்சியின் பாதுகாப்பு கையாளப்பட வில்லை.” இதைத்துறவி வெகுதிட்டமாகச் சொன்னான். 

மகாராஜா சட்டென்று அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார். ”காஞ்சியின் பாதுகாப்புக்கு என்ன குறைவு? கோட்டை மதிள் கதவுகள் மாலையில் மூடப்படுகின்றன. மதிள்களில் வீரர்கள் உலாவுகிறார்கள். இது உனக்கே தெரியுமே” என்றார் மகாராஜா. 

துறவி தனது கால்களைச் சிறிது விரித்துத் தரையில் ஊன்றிக் கைகளைப் பின்னி மடியில் வைத்துக்கொண்டு, “தற்காப்புக்கு இது போதுமா மகாராஜா?” என்று கேட்டான். கேட்டபோது அவன் விழிகள் மகாராஜாவைக் கூர்ந்து நோக்கின. 

மகாராஜா அவன் விழிகளைச் சந்திக்கவில்லை. “ஏன் போதாது?” என்று அறைச் சாளரத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டார். 

“கோட்டைக் காவல் போதும் மகாராஜா. கோட்டைக்குள் எதிரிகள் புகுந்தால் சமாளிக்க என்ன ஏற்பாடு இருக்கிறது? அத்தகைய நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்குப் போதிக்கப் பட்டிருக்கிறதா? உள்ளே இருக்கும் சேனை நகரத்தின் உள்ளுக்குள் நடக்கும் போரைச் சமாளிக்க சித்தமாயிருக்கிறதா? படை திரட்டப் பட்டிருக்கிறதா? படையில் எத்தனைப்பேர் சேர்ந்திருக்கிறார்கள்? அவர்கள் தகுதியானவர்கள்தானா?” இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனான் துறவி. 

அவனை இடைமறித்த மகாராஜா, ”படை திரட்டியிருக்கிறோம்” என்றார். 

“அது படையா?” இகழ்ச்சி இருந்தது துறவியின் கேள்வியில். 

“ஏனில்லை?” மகாராஜாவின் பதில் கேள்வியில் சங்கடமிருந்தது. 

“அதில் அனேகமாகச் சிறைக் கைதிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஊரைச் சூரையாடுவதற்கு இந்தப் புதிய படை உபயோகப்படலாம், ஆனால் ஊரைக் காக்க முடியாது” என்று திட்டமாகச் சொன்ன துறவி, “மகாராஜா! உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா?’ என்று வினவினான். 

“கேள்” என்றார் மகாராஜா. அவன் என்ன கேட்கப் போகிறானோ என்று அவர் முகத்தில் கிலி தெரிந்தது. 

துறவி ஒரு பெரிய வெடியைத் தூக்கிப் போட்டான் மகாராஜா மீது. அதைக் கேட்ட மகாராஜா அதிர்ச்சி அடைந்தார். மாதவி எல்லை மீறிய திகில் கொண்டாள். மகாராஜா ஆசனத்தை விட்டு எழுந்து விட்டார். துறவி இரண்டாம் முறை அதே வெடியை வீசினான். 

“மகாராஜா! உங்களுக்கு இப்பொழுது காஞ்சியில் என்ன வேலை?” என்று. அவர் பதில் சொல்லுமுன்பு அவர்மீது பாய்ந்து அவரை நிலத்தில் உருட்டியும் விட்டான். மாதவி அலற வாயைத் திறந்தாள். சக்தியில்லாததால் வாயடைத்து நின்றாள். மயக்கமுற்று ஆடினாள் அப்படியும் இப்படியும். இந்த விபரீதத்தை மகாராஜாவோ மாதவியோ எதிர்பார்க்கவில்லை. துறவி மட்டும் சட்டென்று சாளரத்தை நோக்கி ஓடினான். 

– தொடரும்…

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *