ஊஞ்சலின் குறுக்கும் மறுக்கும் புனையப்பட்ட நிகழ்கால ஒப்பனைகள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 28,595 
 

அபூபக்கர் நின்றுகொண்டிருந்தான். ஊஞ்சலின் கிரீச் ஒலியில் அவன் உம்மும்மா கால்களை மடக்கி உறங்கிக்கிடந்தாள். அந்த ஊஞ்சலுக்குப் பின்னால் ஏதோவொரு மாய உலகம் நிகழ்கால ஒப்பனைகளைக் கடந்துபோய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். சிகப்புதான் அந்த உலகின் பிரதான நிறமாக இருந்தது. அபூபக்கர் ஊஞ்சலைக் கடந்து அங்கு நுழைந்தான். கும்மென்ற இரைச்சலுடன் மேகங்கள் விரைந்துகொண்டிருந்தன. உடைந்துபோன மேகத்துண்டுகளை வாரிச் சுருட்டியெடுத்தபடி முழு நிர்வாணத்துடன் ஒருவன் எதிர்ப்பட்டான். அவன் தலையில் சித்திர எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. அபூபக்கருக்குப் பயம் தொற்றிக்கொள்ளவே மேகத்துண்டு ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தபடி பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் மழையும் காற்றும் மழைத்துளியின் திண்ணமும் அபூபக்கரின் உடம்பை மிச்சமின்றி உதிர்த்துப்போட்டன.

ஊஞ்சலில் கிடந்த உம்மும்மா புரண்டு படுத்தாள். எல்லாம் மாறிவிட்டிருந்தன. நேற்றுத் தெருவழியாக நடந்துபோய்க்கொண்டிருந்த சலீமுல்லாவின் கடந்த காலங்களை நிகழ்காலமாக்கிக்கொண்டான். மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் பெண்கள் இருவரிருவராகப் போய்க்கொண்டிருந்தார்கள். குளிர்காற்றின் தீவிர மூச்சு அவர்களது மேலங்கிகளை உடலோடு ஒட்டவைத்திருந்தது. மழை வெள்ளம் மூடிய கால்களில் மைல்கற்களின் உயரம் கூடிக்கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் அபூபக்கருக்கு உண்டானது. ஆங்காங்கே கரையான்கள் அவிழ்த்துப்போட்ட சிறகுக் குவியல்களில் காற்று புதைந்து விளையாடியது.

எத்தனை நாள்கள் நடந்து முடித்திருந்தானோ… அவன் எண்ணிக்கையை மனத்தில் வைக்கவில்லை. இலேசான, வெதுவெதுப்பான காற்று அவன் உடலை நனைத்துச் சென்றது. அவன் மறப்பதைப் பற்றிய பயிற்சி இல்லாதவனாக அடிக்கடிக் காய்ந்து எரிந்து விழுந்தான். அவனது முழுமை பெறாத முடிவுகள் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு கேள்விகளை மறுத்தன. வளர்பிறையோடு பிரியும் அமாவாசை அவன் அழுகைத் தோள்பையில் நிதானமான கலந்துரையாடல்களைப் போட்டுவைத்தது. காலம் அவனை விடுவித்துக்கொண்டு வடிவமற்றுப்போன மொழிக்கூட்டத்தைத் தேடியபடி அலைந்தது.

ஊஞ்சலில் உறங்கிக்கிடந்த உம்மும்மா ஏதோவொரு வீட்டுத் திண்ணையில் பூரியான், மடக்ஸான், கொழலப்பம், முறுக்கு வகைகளையும் கருப்பட்டியில் செய்யப்பட்ட ‘தொதலை’யும் விற்றுக்கொண்டிருந்தாள். மழை வெள்ளம் ஒழுகிப் பெருமாள் குளத்தில் விழுந்துகொண்டிருந்தது. அபூபக்கரைச் சுற்றிக் கள்ளுக்கடை நெடி கலகலப்புடன் விளையாடிக்கொண்டிருந்தது. தூரத்தில் தெரிந்த சின்னச்சின்னப் புரைகளில் மாட்டிறைச்சித் துண்டுகள், அமைப்பு புலப்படாமல் இரும்புக் கொக்கிகளில் தொங்கிக்கிடந்தன. வாய்க்காலில் தண்ணீர் நிரம்பிச் செல்கிறது. ஆகாயத் தாமரையின் பூக்கள் பிறக்காத தெப்பம் நெடுஞ்சுவராய் அவனை ஊடுருவிக்கொண்டு மறைந்துபோனது.

சூரிய வெளிச்சம் படராத ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தான். அது ஒரு மந்திரவாதியின் வீடு. அவர் மந்திரவாதி என்பதற்கான எந்த அடையாளமும் அந்த வீட்டில் காணப்படவில்லை. தோட்டத்தில் ஒரு வசம்புச்செடி மட்டும் பாதுகாப்பாக வளர்க்கப்படுவதற்கான அனைத்துச் சம்பிரதாயங்களுடன் காணப்பட்டது. மந்திரவாதியின் மந்திர வேலைகள் ஊஞ்சலுக்கு வெளியே முஸ்லிம்களின் ஊர்ப்பகுதியை ஒட்டிய இடுகாட்டுக்குப் போகும் வழியிலிருந்தன. அபூபக்கர் எப்போதாவது அவரைக் கண்டால் சைகையால் வணக்கம் சொல்வான். அன்றொரு நாள் அவரை எதிர்கொண்டபோது சைகையால் வணக்கம் சொல்ல முயன்றான். மந்திரவாதி அரூபமாகிப்போவதுபோல் தெரிந்தது. தெருவெங்கும் இரத்தச் சிவப்பாய் வெயில் விழுந்து அந்தக் கணத்தை இறுக்கமடையச் செய்தது. மீண்டும் அபூபக்கர் மந்திரவாதியைப் பார்த்தான். முன்பு அவர் அரூபமாகிக்கொண்டிருந்த இடத்தில் வீடுகளில் புழக்கமில்லாத கருநிறப் பல்லி வேகமாக ஓடிக் கல்லிடுக்கில் ஒளிந்துகொண்டது. அசைவற்று நின்றுகொண்டிருந்த அபூபக்கர் திடீரென்று ஏதோ நினைத்தவனாய்க் கல்லை நகர்த்தினான். கதவின் கைப்பிடி வளையமொன்று கண்ணில்பட்டது. கைப் பிடியைப் பிடித்துக் கதவை வெளிநோக்கி இழுக்க எண்ணித் தொட முயன்றபோது கதவு உள்நோக்கிப் பலத்த சத்தத்துடன் திறந்துகொண்டது. விசாலமான கடற்கரைக் காற்று அபூபக்கர் முகத்தில் விசிறியடித்தது. அவன் குழந்தை உருவத்தில் கடற்கரை மணலை அளைந்து விளையாடிக்கொண்டிருந்தான். உம்மும்மாவின் ஊஞ்சல் கடலில் மிதந்தாடிக்கொண்டிருந்தது.

பாதை கடந்த ஆசையால், மனிதர்களைக் கண்டு பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட அபூபக்கரின் மௌனம் அசையாத கௌரவங்களின் அத்தாட்சியாக நின்றுகொண்டிருந்தது. தன் முடிவுகளில் தவறு வரும்போது அடிப்படைக் கருத்தைப் புருவங்கள் நிதானமாக வரைந்துகொள்ளத் தொடங்கும் என்று அவன் உம்மும்மா சொல்லியிருக்கிறாள். இருட்டறைக்குள் மந்திரவாதி சுவரில் குறுக்கிலும் நெடுக்கிலும் கோடுகள் வரைந்து, அந்தக் கட்டங்களுக்குள் எதையோ குறித்துக்கொண்டிருந்தார். மற்றொரு மூலையில் வாட்டசாட்டமான ஒருத்தன் திமிறிக்கொண்டிருக்கும் இன்னொருவனை இறுக்கிப்பிடிப்பதில் சிரத்தையாக இருந்தான். வேஷங்களை அம்பலப்படுத்தும் இழிவான வினாடிகள் அவை. மந்திரவாதியின் முகம் புகை மூட்டத்திற்குள் புதைந்திருந்ததைக் கண்ட அபூபக்கருக்குப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. மாட்டப்பட்டிருந்த காலண்டர் ஓவியங்களில் இருந்த கடவுள்கள் அபூபக்கரைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். நாகூர் தர்கா படத்தைப் பார்த்ததும் மனத்திலிருந்த பயம் கொஞ்சம் குறைவதுபோல் உணர்ந்தான். மந்திரவாதிக்கும் வாட்டசாட்டமான கையாளுக்குமிடையில் வார்த்தைகள் முறையற்று நகர்ந்தன. மந்திரவாதிகளுக்குப் புனிதத் தடயங்களை நெடுநாள்களாகத் திட்டமிட்டு விமர்சிப்பது சம்பிரதாயமாக இருந்ததால் நாகரிகக் கதவைத் தடம்பிடித்துத் திறந்துபார்த்த அவசியங்களை ஆராய்ந்தான் அவன்.

மந்திரவாதியின் நடவடிக்கைகளில் தொடர்ந்து தன்னை இணைத்துக்கொண்டால்தான் அவரது சேட்டைகள் பற்றிக் கொஞ்சமாவது அறிந்துகொள்ள இயலும் என்றும் அதையொட்டி அவர் சொல்லித்தராத விஷயங்களைக் குறிப்புணர்ந்து அறிந்துகொள்ளலாம் என்றும் எண்ணினான். அது நடக்கலாம். அவன் நம்பினான். அந்த நிகழ்வுகளின் தடைகளால் அவனுடைய தந்தையின் வாழ்த்துகளை நினைவில் பதிக்க இயலாமற்போனது. அப்படியானால் மகிழ்வுகள் தடயங்களைப் பதிக்குமா? மந்திரவாதியோடு ஒத்துப்போகுமா? மந்திரவாதியைப் பின்தொடர்ந்தான் அபூபக்கர். மந்திரவாதி மைதானத்தில் தனியாகக் கட்டப்பட்டிருந்த ஓட்டுக் கட்டடத்திற்குள் நுழைந்தார். அங்கே ஒரு சிலை இருந்தது. அதன் கைகளில் உள்ள விரல்கள் நீண்டிருந்தன. அந்த விரல்களைத் தொட்டுப்பார்த்தான் அபூபக்கர். தூவல் முளைக்காத, பிறந்து நாள்கூட ஆகியிருக்காத, குருவிக்குஞ்சின் தோல் போன்றிருந்தது. துணியால் செய்யப்பட்ட ஏராளமான பாவைகள் சுவரில் அறையப்பட்டிருந்தன. சிலையின் வாய் திறந்திருந்தது. மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களின் நெடி அவனைக் கலவரப்படுத்தியது. இரண்டு காக்கைகள் ஓட்டின்மேல் சிறகடித்துச் சண்டைபோட்டபடி கூரையிலிருந்து தரையில் வந்து விழுந்து பறந்துபோயின. அவை பறந்துபோன பின் அபூபக்கர் அந்த இடத்தைப் பார்த்தான். பூச்சிக்காரல் மீனின் உடல் கிடந்தது. அதே சிலையின் வாயை இன்னும் கொஞ்சம் பிளந்துவைக்க முடியுமா? மீன் கேட்டது. அபூபக்கர் வாயைப் பிளந்தான். அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தான். பூச்சிக்காரலைக் காணவில்லை. ‘இங்கே இருக்கிறேன் நான். என்னுடைய சித்து வேலைகள் இனிதான் ஆரம்பமாகும்’ என்றது சிலையின் கைப்பிடிக்குள் இருந்த மீன். அதன் சிறகுகள் படபடத்துக்கொண்டிருந்தன. அபூபக்கர் திகைத்து நின்றான். கையில் சில பூஜைப் பொருள்களோடு வந்த மந்திரவாதி அபூபக்கரிடம் ‘இது பூசை நடக்கும் இடம். இங்கே நீ எதற்காக மீன் எடுத்துவந்தாய். உடனே இவ்விடத்திலிருந்து வெளியேறு’ என்று சப்தமிட்டார். அபூபக்கர் குழப்பத்துடன் ‘எனக்குத் தெரிந்து நடந்த விஷயமல்ல இது’ என்று சொல்லிவிட்டுச் சிலையின் கையைப் பார்த்தான். மீன் காணாமல் போயிருந்தது. மந்திரவாதியின் கேள்வி தனக்குள் ஏதோவொரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்தான். கொஞ்சம்கூட யோசிக்காமல் மந்திரவாதியிடம் ‘அந்த மீன் எங்கே?’ என்று கேட்டான். அந்தக் கேள்வி அவசியமில்லாதது என்றும் எதிரில் நின்று சுவாசித்துக்கொண்டிருந்ததே தனக்குச் சொந்த மான காற்றைத்தான் என்றும் அவர் கூறினார். அதைக் கேட்ட அபூபக்கர் இனி மந்திரவாதியைப் பின்தொடர்ந்து செல்வது மேலும் குழப்பத்தைத்தான் உருவாக்கும் என்று எண்ணி வெளியேறத் திட்டமிட்டான். மந்திரவாதி சில சாமந்திப் பூக்களை விட்டுவிட்டு மீதமுள்ள அலங்காரப் பொருள்களையெல்லாம் சிலையிலிருந்து அப்புறப்படுத்தி எல்லாவற்றையும் வலிச்சல் கூடைக்குள் போட்டுத் தோளில் சுமந்தபடி மைதானத்தின் மறுகரைக்குச் சென்றார்.

இந்த வெளிக்குள் வந்ததும் ஒரேயொரு கதவுதான் இருந்தது. அந்தக் கதவைப் பற்றிய ரகசியம் உம்மும்மாக்குத்தான் தெரியும். நுழையும்போது கதவைப் பற்றிய விபரங்களைக் கேட்காமல் நுழைந்தது தவறு. இங்கேயே தொடர்ந்து இருப்பதும் இயலாது என்று அபூபக்கர் எண்ணிக்கொண்டு எதிரே யாராவது வருகிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தான். கடற்கரையின் கொப்பளிப்பு, காலையில் அவசரமாக வாழ்ந்து மாயாஜாலம் காட்டும் ஊஞ்சலின் உட்பகுதியை நிராகரிக்கும் வெளிப்பகுதி எப்படியும் கடந்து செல்லட்டும் என்று சொல்வது போலிருந்தது. கடல் அலையின் வேகம் அதிகரித்தது. கூட்டம் அதிகமில்லை. பெரும்பாலானோர் கடற்காற்றை எறிந்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களது வேகத்தால் மணல் துகள்கள் அவன் முகத்தை மூடியபடியிருந்தன.

மந்திரவாதியின் வித்தைகளால்தான், அவரை நோக்கி நகரும் திகைப்புகள் இன்னும் உயிரோடிருப்பதாக அபூபக்கர் நினைத்தான். மந்திரவாதியை நெருங்கி மாந்த்ரிகம் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை அவனுக்கு. உம்மும்மாவின் ஊஞ்சல் சத்தம் எத்தனையோ கதவுகளைத் திறந்துவைத்திருந்தன. அவற்றினருகில் உட்கார்ந்துகொண்டு தேவைகளை ஆவனப்படுத்தவும் மனப்பூர்வமாக அவன் தன் மதிப்பீடுகளை அனுபவிக்கவும் தெரியவில்லை என்று உம்மும்மா குறைபட்டுக்கொண்டாள். அவன் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிக்கொண்டிருந்ததாகவும் அவள் சொன்னாள். உம்மும்மாவின் ஊஞ்சல் முறையற்ற அலைவுகளில் ஆடுவதால், அவளது குற்றச்சாட்டுகள் நிறமற்றவை என்று திரும்பத் திரும்ப அபூபக்கர் சொல்லிக்கொண்டிருந்தான். மந்திரவாதியின் வீடு நடக்கும் தொலைவில் இருப்பதுகூட அவனுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது. வெளியேறும் முன் உம்மும்மாவின் ஊஞ்சலின் வெளிப்பகுதியில் ஏதோ மர்மங்கள் தனக்கு எதிர்வினையாற்றப் புகைந்துகொண்டிருந்ததை நிச்சயமாக நம்பினான். உள்பகுதியின் மிகைபோக்கு மந்திரவாதியின் வீட்டுக்கு அபூபக்கர் வந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கியதாக உம்மும்மா சொன்னாள். அது அவனுக்கு நினைவிருந்தது. வாட்டசாட்டமான கருத்தமாடு குன்றுகளில் மேய்ந்திருந்ததை மிகைப்படுத்திப்பார்த்தான். அவனது உணர்வு இணைந்து விரைந்து வேறுபட்ட ஆற்றலைக் குவிக்கிறது என்று உம்மும்மா சொன்னதன் அவசியம் மனத்துக்கு நிறைவான எல்லா நம்பிக்கைகளையும் சார்ந்ததாகவே இருக்குமோ என்ற சந்தேகத்தை வலுக்கச்செய்துகொண்டிருந்தது. அந்த மாட்டை மேய்த்துக்கொண்டிருந்தவன் வேலைப்பாடுகளுடன் கூடிய தொப்பி அணிந்திருந்தான். ‘இதை எதற்கு அணிந்திருக்கிறாய்’? ‘மாடு என்னை அடையாளம் காண்பதற்கு’ ‘உன்னுடைய பதில் எனக்குப் புரிந்துகொள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது’.

‘அந்தக் கருமத்தமாட்டை நேற்று வரைந்தெடுத்தேன். இதற்கு முன் வரைந்தவைகள் மேய்ச்சலுக்கு வந்தபோது திடீரென்று காணாமல் போய்விட்டன. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு’.

ஆக… உம்மும்மாவின் ஊஞ்சலின் பின்னே ஏதோ எக்குத்தப்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இங்கு நுழைவது வேறு யாருக்கும் முடியாத நிகழ்வு என்பது திண்ணமானது. அதனால் இவனிடமே முதலில் பார்த்த நிர்வாண மனிதனைப் பற்றிக் கேட்டுவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். பின் அதை ஏனோ மறந்தும் தொலைத்துவிட்டான். வந்த வழியே திரும்பிப் போய்விடு என்று அபூபக்கரை அவசரப்படுத்தினான் மாடு மேய்ப்பவன். அவன் பேச்சு அபூபக்கரைக் குழப்பமடையச் செய்தது. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் கருமத்தமாட்டைப் பார்த்தபடி நின்றிருந்தான். வௌவால் ஒன்று மாட்டின் முதுகில் வந்தமர்ந்து மெதுவாகக் கடித்தது. மாட்டின் முதுகிலிருந்து அடர்த்தி கூடிய இரத்தம் வழிந்திறங்கியது. இரத்தத்தை வௌவால் நக்கிச் சுவைத்துக்கொண்டிருந்தது. உம்மும்மாவின் ஊஞ்சலின் எந்தப் பகுதியாக இருந்தாலும் அது தனக்கு மட்டுமே சொந்தம். என்னை வெளியே போகச் சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று முணுமுணுத்தான். அவன் முன்னே வந்து நின்ற மந்திரவாதியுடைய கொட்டடியின் சிலை மெதுவாக நகர்ந்து அவனை நெருங்கியது. ‘நீ இங்கே இருப்பதைப் பற்றி உன் உம்மும்மாவைவிட மந்திரவாதிதான் முடிவெடுக்க முடியும். இவ்வாறாக மந்திரவாதியால் கடத்திவரப்பட்டவர்கள் அவர்களுக்கான தளத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்றது. தன் ஊமையான ஆசைகளை உயிரற்ற உணர்ச்சிகளாக ஆக்கிக்கொண்டு ஆரம்பம் முதலே அவனைச் சுற்றி நடப்பவை இயல்புக்கு மாறாகவே இருந்தன. சிலை அவனிடம் தன் கதையைச் சொன்னது.

ஒருநாள் நான் மசூதியிலிருந்து வந்துகொண்டிருக் கையில், வழியில் மந்திரவாதியைக் கண்டேன். ஒரு வலிச்சல் கூடையைச் சுமந்தபடி மந்திரவாதி நின்றுகொண்டிருந்தார். உம்மும்மாவின் ஊஞ்சலைத் தாண்டி இங்கு வந்ததும் நிர்வாண மனிதனிடம் கூடையை ஒப்படைத்தார் மந்திரவாதி. கூடை அங்கேயே கவிழ்த்துக் கொட்டப்பட்டது. கூடையிலிருந்து விழுந்த சிலர் ஆங்காங்கே சிதறி ஓடினர். மந்திரவாதி என்னை இறுகப்பிடித்து நெரித்தார். அவர் தன்னுடைய ஆண்குறியால் உடல் முழுவதும் தடவினார். அந்தக் கணம் முதல் உடல் மரத்து இறுகிக்கொண்டே வந்தது. கைகள் மட்டும் எந்த மாற்றமுமடையாமல் மிருதுவாகிப்போனது. அவர் ஒவ்வொருவரிடமும் அழைத்துச்சென்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்மீதுள்ள அச்சம் என்னுடைய பலவீனங்களில் உட்கார்ந்துகொண்டது. பூஜை முடிந்ததும் விடுவித்து விடுவதாகச் சொன்னார். இன்னும் முடிந்தபாடில்லை. காய்ந்துவிடாத அதிகாரம் நிறைந்த பொருந்துதல்கள் ஒவ்வொன்றாய்த் தப்பித்துக்கொண்டிருக்கின்றன.

மந்திரவாதி குணத்தில் மாற்றம் ஏதுமில்லை. அவரது முகத்தில் கோபம் அதிகரித்தது. அவர் ஊஞ்சலின் உள்பகுதியை நம்புவதுபோல் வெளிப்பகுதியை நம்ப மறுத்தான். அபூபக்கருக்குப் புரிந்துபோனது எல்லாம். தான் மட்டும்தான் மந்திரவாதியின் மாந்த்ரீகத்திற்கு ஆட்படாமல் தப்பிவிட்டதாக எண்ணினான். எப்படி மந்திரவாதிக்கு இந்தச் சக்தி வந்தது? யோசனையில் ஆழ்ந்தான். அவன் முகபாவத்தைப் பார்த்த சிலை ‘எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை, இருந்தாலும் . . .’ என்று இழுத்தது. அபூபக்கர் கழுத்தை நிமிர்த்திச் சுற்றும்முற்றும் பார்த்தான். நிர்வாண மனிதன் துணையோ மந்திரவாதியின் கட்டுப்பாடோ இன்றிச் சிலர் வெளியே செல்வதும் சிலர் உள்ளே வருவதுமாய் இருந்தனர். அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த நுழைவாயிலில் எந்தக் கட்டளைகளும் பெறப்படாமல் மருத்துவமனை நுழைவாயில் போலாகியிருந்ததை அவன் குறைத்து மதிப்பிடவில்லை. உடனே மொழியை நங்கூரமாக்கினான். ஊஞ்சலின் உள்பகுதியும் வெளிப்பகுதியும் இரண்டு துண்டுகளாகப் பிரிந்துபோயின. உள்பகுதியின் தலைமை மந்திரவாதியிடம் மாட்டிக்கொண்டது. உம்மும்மாவின் ஊஞ்சல் பலகையில்தான் இயக்கப் பொத்தான்கள் இருந்தன. ஊஞ்சலின் உள் பகுதியின் கரைகளைச் சுற்றிய சுற்றுச்சுவரில் சாவிகளும் வரைபடங்களும் மாதிரி வடிவங்களும் வண்ண விளக்குகளின் ஸ்விட்ச்களும் காணப்பட்டன. வெளிப் பகுதியைவிட வெப்பநிலை குறைந்து அபூபக்கரின் இரத்தச் சூட்டைக் குறைத்துவைத்திருந்தது ஊஞ்சலின் உட்பகுதி.

‘உமக்கு இந்தச் சக்தி யாரால் வந்தது?’ கேள்வி அபூபக்கரிடமிருந்து கூடவே உம்மும்மாவைச் சொல்லணும் எல்லாம் அவளால் வந்த பலாய்தானே. நிழல்களின் பார்வைகள் பரபரத்தன. மந்திரவாதி தன் மயிரடர்ந்த மார்புகளால் காற்றைக் கோபத்துடன் உறிஞ்சினார். இடுப்பில் கட்டியிருந்த குற்றாலத்துத் துண்டு அவிழ்ந்து விழுந்தது. நெடுநாள்கள் அவர் தூங்கியிருக்க மாட்டார்போலும், அபூபக்கரின் கேள்விக்கு மந்திரவாதி பதிலேதும் சொல்லவில்லையே தவிர அவரது செய்கைகள் கேள்விக்கான பதில்போல் தெரிந்தது.

‘இன்று ஆடி அமாவாசை. கோயில் நடை ராத்திரி ஏழு மணிக்குத் திறக்கும். வாகனம் தூக்க நாலுபேரை ஏற்பாடு செய்யணும். ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாள் பெறை ஒண்ணு. நீ வெளியே போகணும்னா இன்னைக்கே போகணும். நாளைக்கு மாறப்போகும் உன் உம்மும்மாவின் ஊஞ்சல், என் கட்டுப்பாட்டில் இயங்கத் தேவையான மந்திர உச்சாடனங்கள் அவளிடமிருந்தே தெரிந்துவைத்துள்ளேன்’. அபூபக்கர் மௌனித்து நின்றிருந்தான்; மந்திரவாதியின் கரகரத்த குரலைக் கேட்டு.

‘நல்லதை நீ நினைக்கமாட்டாயா?’

‘உன்னுடைய பாக்கியம் நீ இதுவரை என் முன்னே உயிரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்’, மந்திரவாதி நிலைதவறி உறுமினார். அபூபக்கருக்கு இனி வெளியே போகத்தான் வேண்டுமென்பதில் உறுதியிருந்தது. இருந்தாலும் வெளியேபோகும்போது மந்திரவாதி நிறுத்திவைத்திருக்கும் சிலையையும் உடனழைத்துச் செல்வதற்கான வழியை யோசித்தபடி இருந்தான். பெருமூச்சு அவனை நனைத்தபடி வளர்ந்துகொண்டிருந்தது. அவன் வெளிச்சங்களைச் சந்தேகித்தான்.

எங்கிருந்தோ ‘பக்கரே… வெளியே வா’ என்ற குரல் சன்னமாக ஒலித்தது. அவன் பலவீனமாக இருந்தான். அவன் அங்கேயிருப்பதால்தான் மனதளவில் சோர்வுற்றிருப்பதாக எண்ணினான். சிலை அவனை நெருங்கிவந்து நின்றது. அவன் அழத் தொடங்கினான். அவன் காதுகளில் உம்மும்மாவின் ஊஞ்சல் ஆடும் ஒலியும் தாலாட்டும் கேட்டுக் கொண்டிருந்தன. நேரம் செல்லச்செல்ல ஒலிகள் கனத்துக் கேட்டன. அந்த ஒலிகள், நேரம் செல்லச் செல்ல விரைந்து குறுகலான குகைக்குள் நுழைவதுபோல் பெருத்தச் சத்தத்துடன் கேட்டன. அவன் கண்களை மூடிக்கொண்டான்.

மந்திரவாதி சுருட்டு போன்ற தடிமனான ஒன்றைப் புகைத்தபடி நின்று கொண்டிருந்தார் எதைப் பற்றியும் கவலைப்படாதவராக. மந்திரவாதியின் சிரிப்பு சிலையை எரிச்சலூட்டியது. சிலை தான் விழுங்கிய மீனைக் கக்கி எடுத்து அபூபக்கர் கையில் கொடுத்தது. அபூபக்கர் மெதுவாகக் கல்லாகச் சமைந்துகொண்டிருந்தான். அவன் கைகள் மட்டும் மிருதுவாகிக்கொண்டிருந்தன. மந்திரவாதியின் சுருட்டுப் புகைந்து எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரைச் சாம்பலாக்கியது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஊஞ்சலின் குறுக்கும் மறுக்கும் புனையப்பட்ட நிகழ்கால ஒப்பனைகள்

  1. இதெல்லாம் ஒரு கதை என்று நீங்களும் பிரசுரித்திருக்கிறீர்களே.. கொடுமை தான்.. 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *