முத்து மீனாக்ஷி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 2,097 
 
 

(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

அதிகாரம் 1-5 | அதிகாரம் 6-10

ஆறாம் அதிகாரம்

என் அத்தையின் ஊர் ஒரு குக்கிராமம். அங்கிருக் கும் பொழுது நெய்யும் பாலும் தயிருமாய் நன்றாய்ச் சாப்பிட்டுக் கொண்டு அதிக வேலையின்றித் திரிந்தேன். என் தோழிமாருடன் விளையாடுவதே பொழுது போக்கா யிருந்தது. அவர்களிற் சிலர் தெருண்டபொழுது குடி யிருக்கப் போய்ப் பாடவேண்டிய பாட்டுக்களை யெல்லாம் மனனம் செய்துகொண்டேன். அவற்றின் அசங்கியமும் மானக்கேடும் எனக்கு அப்பொழுது தெரியவில்லை. கூச்ச மின்றி அவைகளைப் பாடிக் குதித்துக் கும்மி யடிப்ப துண்டு. என் அத்தை செத்துப்போனால் மாரடித்துக் கொள்வதற்கான அநேக ‘ஒப்பாரிகளும்’ ‘பலாக்கணங் களும் எனக்குக் குழந்தை பிறந்தால் சீராட்டுதற்கு வேண்டிய தாலாட்டுக்களும்’ சொல்லிக்கொண்டேன். ஊரில் எவன் எவளை ஜாடை செய்தழைத்தான், எவள் எவனைப் பார்த்துச் சிரித்தாள், எந்த எந்த வீட்டில் என்ன என்ன சண்டைகள் நடந்தன, இவைபோன்ற வம்புகளில் ஒன்றாவது எனக்குத் தெரியாமலிராது. முதலில், கொஞ்சம் மறுபடியும் வாசிக்கலாமென்ற ஆசையுடன், இரண்டு மூன்று நாள்களுக்குப் புஸ்தகமும் கையுமா யிருந்தேன். அதைக் கண்டவுடன், அவ்வூர்ப் புருஷர் பெண்கள் யாவரும், “வெகு லக்ஷணம் : ஆம்படையான் பில்லுப்பிடிச்சுப் பண்ணிவச்சு ஆமசிராத்தம் வாங்கறான்; பெண்டாட்டி பொஸ்தகமும் கையுமா இலங்கறாள். வெகு லக்ஷணம் ” என்று கேலி பண்ணத் தொடங்கி, என் சமா சாரமே ஊரிற் பெரிய வம்பாய்விட்டது. உடனே புஸ்த கக் கடையைக் கட்டிவிட்டு, வெகு சீக்கிரத்தில், மேற் கூறியபடி ஊர்வம்பை அளப்பதில் ஒருவரும் இணை யெதிரில்லை என்று சொல்லும்படி பேரெடுத்துவிட்டேன். 

ஆனால் இவ் வாழ்வெல்லாம் சிலமாதக் காலமே ; ஏனெ னின், நான் பெரியவளானவுடன், பதினாறு நாள்களுக் குள்ளேயே ஒரு சாந்தி முகூர்த்தத்தை வைக்க, நான் மறுபடியும் என் மாமியின் கீழ் வாழும்படி நேர்ந்தது. என் புக்ககத்தில் என்னைக் குறைகூறி ஏசக்கூடாதென்று, என் தமயன் அனுப்பிய இருநூறு ரூபாவுடன் என் அத்தையும் நூறு ரூபாவரை செலவழித்து, என்னைத் தக்க சீருடன் புருஷன் வீட்டுக் கனுப்பினாள். ஆனால் இவையெல்லாம் என் மாமிக்கு ஒரு திரணமாகவே தோன் றிற்று. அவள் பேசுவதைக் கேட்டவர்கள், அவள் மலையாளத்து மஹாராஜாவுடன் பிறந்தவ ளென்றே நினைப்பார்கள். “ஒரு கட்டிலா, வெங்கல உருளியா, கம்பிக் குத்துவிளக்கா,ஒன்றையும் காணோம். மனோகரங் கூடக் குறுணிக்கு மேலிராது. சிப்பிலுக்கும் சிப்பில், ஆப்பைக்கும் சிப்பில், கொப்பரைக்கும் சிப்பிலென்று நாட் டுப் பெண் ஆத்துக்கு வந்திட்டாள், நாட்டுப் பெண். குறைச்சலில்லை பாக்கியத்துக்கு. என் பிள்ளைக்கு ஒரு அரைநாளா, மோதிரமா, கடுக்கனா, ஒன்றையும் காணோம். நாங்கள் கொண்டு கொட்டின ரூபாவை யாவது திருப்பித் தந்தாலும், இன்னும் எவ்வளவோ விமரிசையா யிருக் கும். ஊர்க் கேலி, நாட்டுக் கேலியாச்சு’ என்று, என் மாமியார் திரட்சி முகூர்த்தத்தன்று முதலே ஏசத் தொடங் கினாள். எனக்கு இவற்றை யெல்லாம் கேட்கச் சில சமயங் களிற் கண்ணீர் பெருகிற்று. சில சமயங்களில் நானும் பதிலுக்குப் பதில் நன்றாய்க் கொடை கொடுத்தேன். இப்பொழுது நினைத்துப் பார்க்குங்கால், அக்காலத்து என் குணக் கேடும் நடவடிக்கைகளும் மிகவும் அருவருக்கத் தக்கனவாய்த் தோன்றுகின்றன. அவ்வா றொழுகியவள் நான்தானோ என்ற சந்தேகங் கூட உண்டாகிறது. 

என் புக்ககத்தில் நான் முன்பிருந்த பொழுது, உயிர் பிழைப்ப தரிதென்று நான் பாயும் கிடையுமாய்க் கிடந்த காலத்திலுங் கூட, என் கணவர் என்னுடன் பேசத் துணி கிறதில்லை. என்னைக் குரூரமாய் அவமானப் படுத்திய வன் று இரவுதான் அவர் என்னுடன் முதல் முதல் பேசி னார். இப்பொழுது மனையாட்டியும் மணவாளனுமாக வாழும்பொழுதும், படுக்கை அறையிலன்றி, அவரென் னுடன் பேசுகிறதில்லை. பகலில் அவர் முன் நான் இருக் கிறது மில்லை, நிற்கிறது மில்லை. சாதாரண மனிதருக்கு வருஷத்தில் இருபது நாள் விசேஷ தினங்கள் என்றால், வைதீகா நுஷ்டானம் உள்ளவருக்கு இருநூறு நாள் அப் படியாம்; மிகுந்த சிறு பாதியில், அநேக நாள்களில், ஜீவ னார்த்தமாய் வெளியூர் சென்றதனாலாவது, அல்லது சிராத்த வீடுகளில் நிமிந்திரணம் சாப்பிட்டதனா லாவது, என் கணவர் என்னுடனிருக்க முடியாமற் போய்விடும்; இவை நீங்கிய மிகவும் சில தினங்களில், வீட்டில் யாதா னும் அசௌகரியங்களினாலும், என் மாமியின் பொறாமை யினாலும் சில நாள்கள் கழிந்துபோம்; ஆகவே, என் கணவருடன் நான் சேர்ந்திருக்கும் தினங்கள் மாதத்தில் இரண்டு மூன்று நிகழ்ந்தால் அதிகம். என் சரித்திரத் தில் நான் உண்மையையே உரைப்பதாகச் சித்தாந்தம் செய்து கொண்டிருக்கிறேன். அப்படியே செய்கிறேன். இவ் விஷயத்தைப் பற்றி எனக்குச் சிறிதும் மனவருத்த மில்லை; உள்ளுக்குள் சந்தோஷமே. எனக்கு என் கணவர்மேல் ஆசையே யில்லை; அவர் நடவடிக்கைகளினால் கொண்டவன் என்ற மரியாதையும் நாளுக்குநாள் குறைந்து விட்டது. அவர்மேல் இஷ்டமா யிருப்பதாகப் பாசாங்கு செய்து அவரை என் கைவசப் படுத்த நான் எப்பொழு தாவது முயன்றால், அது, எனக்குப் பிரியமான காரியங் களைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டும், என் மாமியின் உபத்திரவத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுமே. ஆயின், இதுவும் உண்மையே: நான் வேறொரு புருஷனையும் இச்சிக்கவு மில்லை. காதல் இன்னதென்பதை நான் அப்பொழுது அறியவே வில்லை. 

இவ்வாறு ஒரு வருஷகாலமாய் நான் குடித்தனஞ் செய்து வருகையில், என் தமயன் சுப்பிரமணியனுக்குக் கலியாணம் நடந்தது. அவனுக்கு பி.ஏ. பரீக்ஷை தேறி திருவநந்தபுரத்திலேயே அவன் பி.எல். பரீக்ஷைக்கு வாசித்துக்கொண் டிருந்தான். அதையறிந்த எங்கள் குலத்தார் ஒருவர், பெரிய பணக்காரர், அவனுக்குத் தன் மகளை விவாகம் செய்து கொடுத்தார்.. என் புக்ககத்தா ருடன் நான் இக்கலியாணத்துக்குச் செல்லும்பொழுது, வீட்டுக்குக் காவலாக விடப்பட்டிருந்த என் (ஓர்ப்படி யைத் தவிர, மற்ற யாவரும் ஒரே வண்டியிற் சென்றோம். முதலில் நான் வண்டியிலேறிக் கொண்டு வண்டிக்காரன் பக்கத்திற்போ யுட்கார்ந்து கொண்டேன்.பின்பு, என்னை என் புருஷர் பாராத வண்ணம், ஒரு திரை வண்டியி னூடே கட்டப்பட்டது. மறுபுறத்தில் என் மாமியும் மைத்துனர்களும் குழந்தைகளும் எனக்கு மூத்தாள் குழந்தைகளும் ஏறிக் கொண்டார்கள். வழி யெல்லாம் அவர்கள் பக்ஷணங்கள் தின்றுக் கொண்டும், ஊர்வம்பளந் துக் கொண்டும், கதைபேசிக் கொண்டும்,சிரிப்பும் கும் மாளமுமா யிருந்தார்கள். நானோ, பெருமூச்சுக்கூட விடத் துணியாமல், வண்டிக்காரனே துணையாக, ஒற்றை மரத்துக் குரங்குபோல உட்கார்ந்திருந்தேன். வண்டி யாடுவதனாலும், அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தத னாலும், நான் சில வேளை வண்டிக்காரன் மேலே திடீ ரென்று சாய்ந்து விழும்படி கூட நேர்ந்தது. கலியா ணத்தில் என் மாமி செய்த கலகத்துக்குக் கணக்கு வழக் கில்லை. தன் பிள்ளைக்கு வாங்கிப் பரிசு கொடுத்த சோம னில் சரிகை அகலமா யில்லையென்றும், தங்களை மூன்று தரம் சாப்பிடக் கூப்பிடவில்லை யென்றும், சம்மந்தி மரியாதை தக்கபடி செய்யவில்லை யென்றும், தனக்கனுப் யிய இட்டலி தோசைகள் மிகக் குறையென்றும், தான் ஏழையானதால் தன்னை அவ்வாறு அவமானப் படுத்தினார்களென்றும்,தன் பிள்ளைகளுக்கு வை தீக தக்ஷிணை யோக்கியதைக்கு ஏற்றபடி கொடுக்கவில்லை யென்றும், வேண்டாத பெண்டாட்டி கால் பட்டால் குற்றம் கை பட் டால் குற்றம் என்றாற் போல, இன்னும் அநேக முகாந் தரங்களைக் கொண்டும், ஓயாமற் சச்சரவு செய்தாள். அவள் குணத்தையறிந்தபின் அவள் கோபத்தை ஒருவரும் மதியாமையைக் கண்டு, அவள் ஆவேசம் கொண்டு, மூன் றாவது நாள் கலியாணத்தன்றே ஊருக்குத் திரும்பிவிட் டாள். யார் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை; என்னை விட்டுப் போகும்படி என் தமயனும் அத்தையும் எவ் வளவோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கும் இணங்க வில்லை. ஆகவே, கண்ணீரைப் பெருக்கிக்கொண்டு நானும் அவளுடன் திரும்பிவிட்டேன். என் கணவரும் மூத்த மைத்துனரும் மட்டும், மிகுந்த தினங்களிற கிடைக்கக் கூடிய தக்ஷிணைக்காக அங்கே தங்கினார்கள். இச் சம்ப வத்துக்குப் பின், என் வாழ்க்கை முன்னிலும் அதிகத் துக்ககர மாயிற்று. என் தமயனோ, திருவனந்தபுரம் போய்விட்டான். 

அத்தை யம்மாள், தாயினும் அருமையாக என்னைச் சீராட்டி வளர்த்து வந்த புண்ணிய வதி, அனாதையான எனக்கு ஒரு கொள்கொம்பு போ லிருந்தவள், நான் கடைசியாக ஒரு முறை அவள் முகத் தில் விழிக்கவும் முடியாதபடி, அடுத்த மாதத்தில் திடீ ரென்று அனாயாச மரணத்தை அடைந்து விட்டாள். நான் கோவிழந்த குருடனைப்போ லாய்விட்டேன்; அடித் தாலும் அணைத்தாலும், அழுதாலும் சிரித்தாலும், இருந் தாலும் இறந்தாலும், என் கொடிய மாமியைத் தவிர வேறு கதி யில்லை. என் மாமியோ முன்னிலும் பதின் மடங்கு கொடுமையாய் என்னை நடத்தலானாள். நான் வீட்டுக்கு வந்த மூன்றாவது மாதம் முதலே, என்னை மலடி என்று திட்டத்தொடங்கி விட்டாள். இப் பொழுது ஒவ்வொரு பேச்சிலும் இவ் வேச்சும் கலக்கப் பட்டது. தன் விருத்தாப்பியத்தில் தன் அருமை மகனுக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்து தான் கண் குளிரப் பார்க்க முடியவில்லை யென்று என்னைப் பலவாறு திட்டி னாள். நாழி அரிசியும் மூன்று மிளகாய்ப் பழமும் தின சரிப் படியாக என்னை விலக்கி வைத்து விடுவதாகவும், வேறொரு பெண்ணை என் புருஷருக்குக் கலியாணம் செய்து வைப்பதாகவும், என்னை வெளியே துரத்திவிடுவ தாகவும், பாழுக்கிறைத்தது போல் தன் பணமெல்லாம் வீண் போயிற்றென்றும், மலடி முகத்தில் விழிக்கவும் ஆகாதென்றும் என்னை ஏகிப் பயமுறுத்தினாள். ஒருவேளை அவ்வண்ணம் செய்துவிடக் கூடுமென்று பயந்து, நான் பதிலே பேசுகிறதில்லை. எப்பொழுதும் கண்ணீரைப் பெ ருக்கிக் கொண்டு, வீட்டில் எவராயினும் காலால் இட்ட வேலையைத் தலையாற் செய்து கொண்டு, நடைப் பிணம் போல வாழ்ந்து வந்தேன். என் சரீரத்தின் சுபாவமான சதைப்பற்றை நோக்கி மலட்டூத்தம் என்று ஏசவே, அதைக் குறைக்குமாறு, அரை வயிறும் கால் வயிறும் உண்டு பட்டினியாய்க் கிடந்து வந்தேன். இம்மலட்டுப் பட்டத்தை நீக்குமாறு, அரசமரத்தையும் கோவில்களையும் சுற்றாத வண்ணம் சுற்றியும், வெளியூர்க் கோவில்களுக்கு மாசாந்தம் நடந்தும், என் கால்களும் ஓய்ந்தன. அந் தோ! ஒருவரும் அறியாமல் பானையிலிருந்த அரிசியைத் திருடிக் குறத்திக்குக் கொடுத்துக் குறி கேட்டேன். அந்த முண்டை என் இஷ்டப்படி யெல்லாம் சொன்னாளே யன்றி ஒன்றும் நடக்கவில்லை; மலட்டுப் பட்டத்துடன் திருட்டுப் பட்டமும் கிடைத்ததே பலனாயிற்று. ஏச்சும் திட்டும் மாத்திரமின்றி, என் மாமி எனக்கு அநேக மருந்துகள் தந்தாள். எவ்வளவு கசப்பா யிருப்பினும் மனத்தைப் பொறுத்துக்கொண்டு அவைகளை யெல்லாம் சாப்பிட்டேன். கடைசியில், ஒன்றும் பயன்படாமையைக் கண்டு, என் மாமி, என்னைப் பிள்ளைப் பூச்சியை விழுங்கச் சொன்னாள். அது சேற்றிற் கிடக்கும் பூச்சி யொன்று; மிகவும் அசங்கியமானது; பயங்கரமானது; அதைக் காணவே நான் பதறுவேன். அதை உயிரோடு விழுங்குவ தெப்படி? ஒரு கனிந்த வாழைப் பழத் துண்டத்துக்குள் ஒரு பூச்சியை வைத்து என்னை விழுங்கச் சொன்னாள். அதைக் கையில் வாங்கவும் நான் பதறியதால் அவளே அதை என் வாயிற் போட்டாள். நான்கு முறை மனங குமட்டி வாந்தி செய்துவிட்டேன். கண்விழி பிதுங்கி விட்டது.எப்படியானால் என்ன? என் மாமியோ விட்டுக் கொடுப்பவள்? கடைசியில் அவள் திட்டுக்கும் அதட்டுக் கும் அஞ்சி, எவ்வண்ணமோ ஒரு பூச்சியை விழுங்கி னேன். அன்று முழுவதும் மனங் குமட்டி ஒவ்வொரு நிமிஷமும் வாந்தியாகி விடும்போலிருந்தது; என் மாமி அதட்டிக் கொண்டே இருந்தாள். இதே மாதிரியாக நாலைந்து பூச்சிகள் விழுங்கியும் ஒன்றும் பயன்படவில்லை. இன்றைக்கும் அந்தப் பூச்சியைக் கண்டால் என் மனம் நடுங்குகின்றது; வாந்தி வருவதுபோல் குமட்டுகின்றது. இவ்வளவுமன்றி, அக்காலத்தில் நான் ஒரு கொடிய வயிற்றுவலி நோயால் பீடிக்கப்பட்டேன். மாதந்தப்பாது அந்நோயால் நான் பட்ட கஷ்டம் கடவுளுக்கே தெரியும். பெண்ணாகப் பிறந்ததினும் பேயாகப் பிறந்திருந்தால் நலமா யிருந்திருக்கு மென்று தோன்றிற்று. ‘பெண் ஜந்மமோ புண் ஐந்மமோ’ என்று என் அத்தையம்மாள் சொல்லுவது அடிக்கடி நினைப்புக்கு வந்தது. 

மருந்துகள் பயன்படாமையையும் என் நோயையும் கண்டு, என் மாமி, எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நிச்சயித்தாள். இதன்பின் ஒரு பேயோட்டும் மந்திரவாதி வந்து வீட்டிற் பூசை செய்யத் தொடங்கினான்.நான் தினமும் அதிகாலையிலெழுந்து ஸ்நாநம் செய்து, பூஜா பாத்திரங்களைச் சுத்தி செய்து, பூஜைக்குத் தயார் செய்வேன். அதற்குள் மந்திரவாதியும் நீராடிவந்து நான் போட்டிருந்த மாக் கோலங்களின்மேற் பல வர்ணப் பொடி களாற் கட்டங்கள் வரைந்து, அநேக தீபங்கள் வைத்து, அறை யெங்கும் சாம்பிராணிப் புகையால் மூச்சு முட்ட, ஜபம் செய்வான்; நான், ஸ்நாநம் செய்த ஈரப்புடவை யோடு, அவன்முன் உட்கார்ந்திருப்பேன். இவ்வித மாகப் பன்னிரண்டு மணிவரையும் பூஜை நடக்கும். அது வரையும் எனக்கு ஒருவித ஆகாரமும் கிடையாது, உலர்ந்த வஸ்திரமும் கிடையாது. பின்பு, முதலில் அவன் ஜபித்த வெண்ணெய்யை விழுங்குவேன்; அப்புறம் பகல் போஜனம். இம்மாதிரியாக இரவிலும், பகலிலும் பத்து மணி வரையும் பூஜை நடக்கும். முதலில் இரண்டு மூன்று நாள்களுக்கு ஒன்றும் பலிக்கவில்லை. நான்காவது நாள் எனக்கு ஒருவித மயக்கமும், சோர்வும் உண்டாயிற்று; மறுநாள் உணர்வழிந்து கட்டையாய்க் கிடந்தேனாம். இதைக் கண்டவுடன் மந்திரவாதி சந்தோஷங் கொண் டான்; என் மாமியும் ஒக்கலில் பேரனையே அடைந்து விட்டது போல் மனம் பூரித்தாள்.பின்பு, “நீ யார்? நீ யார்? சொல்லு; உனக்கென்ன வேண்டும்?” என்று என்னைக் கேட்டுப் பயமுறுத்தினார்கள். மறுநாள் முதல் நான் தலை சுற்றியாடவும், அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் பிதற்றவும், தொடங்கி விட்டேனாம்; உண்மை யாகவே, எனக்குப் பேய் பிடித்து விட்டது. சில நாள் களில் தன்னுணர்வழிந்து சாப்பாடே இன்றிக் கிடந்தேன். சில நாள்களில் தன்னுணர்வு வந்தபொழுது, பேயாட்டத் தாலும் பட்டினியாலும் உயிர்போவதுபோற் சோர்வுற்று, சகித்தற்கரிய தலை நோவினாலும், மந்திரவாதி தன் பிரம்பி னாலும் புளியின் மலார்களினாலும் அடித்த அடிகள் மேலெங்கும் தடித்து இரத்தம் குழம்பிக் கசிவெடுக்கும் நோவினாலும், வருந்தினேன். என்னாவியை எடுத்துப் போம்படித் தெய்வங்களை யெல்லாம் வேண்டி வேண்டிப் பரிதபித்தேன். இரண்டு மூன்று மாதங்களுக்கு இவ்வா றாகப் பேயும் நோயுமாக இருந்தபின், மந்திரவாதி, கிடைக்கக் கூடியதை யெல்லாம் பெற்றுக்கொண்டு, எனக்குப் பலிகழித்து ரக்ஷாபந்தனஞ் செய்துவிட்டுப் போய்விட்டான். அப்பொழுது என் சரீரம் ஒரு துரும்பு போலிருந்தது; தலையில் மயிரேயில்லை என்று சொல்லலாம்; 

நடப்பதே அருமையா யிருந்தது. ஆனால், உடம்பு தேறியவுடன் எல்லாம் குணமாகிக் கர்ப்ப உற்பத்தியுமாகு மென்று எல்லோரும் வீணே எதிர்பார்த்திருந்தார்கள். 

ஏழாம் அதிகாரம்

இவ்விவிதமாக நான் கஷ்டப்பட்டு வரும் காலத்திலே ஒரு நாள், பட்டகாலிலேபடும் என்ற பழமொழிக்கிணங்க, ஒரு பிராமணப் பெண்ணுக்கு நேரிடக் கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றிலும் இணை யெதிரின்றி மேலான கொடும் விபத்தாகிய வைதவ்வியமும் எனக்கு நேர்ந்தது. ஊரிலே பேதியுபத்திரவம் நடமாட்டமா யிருந்தது. ஒரு தன வான் வீட்டில் பிராமணார்த்தம் சாப்பிட்டிருந்த என் கணவருக்கு, மறுநாள் காலையில் இரண்டு மூன்று முறை பேதியாகி, மாலை மூன்று மணிக்குள் அவர் தேகவியோக மானார். அருமை மகனை யிழந்த சோகத்தில், என் துர் அதிர்ஷ்டத்தினாலேயே அவ்வாறு நேர்ந்ததென்று, என் மாமி, என் காலின்கீழ் அடித்துக் குதித்து அலங்கோலஞ் செய்தாள். எனக்கோ, துக்கத்திலும் பயமே அதிகமா யிருந்தது. எனக்கிரங்கி என்மேல் அன்பா யிருப்பவர் கள் ஒருவருமே அங்கில்லை. சவங்கழுவ நீர் கொணரப் போகும் பொழுதே, நாலைந்து கைம்பெண்டாட்டிகள், “நீயும் வந்தாயா எங்கள் கூட்டத்துக்குள்; வா; வா?” என்று மனமகிழ்ந்து வரவேற்பார்போல, என்னைக் கட்டி அணைத்து, நாற்புறமும் மெய்காவலா யிருந்து, என்னை இழுத்துச் சென்றார்கள். பத்து நாட் கழிந்தவுடன் என் தாலியை வாங்கித் தலையைச் சிரைத்து எனக்குக் கோடி போட்டு விட்டார்கள். பேயாடிப் பிழைத்தபின் சுருள் சுருளாய் வெகு அழகாய் வளர்ந்து வந்த என் தலை மயிரை யெல்லாம், அம்பட்டன் ஒரு நிமிஷத்தில் களைந்தெறிந்து விட்டான். நடைப் பிணமா யுலாவியதும் போய், விழு பிணம்போல, முக்காடு போட்டுக்கொண்டு ஒரு மூலையிற் கிடந்தேன். தட்டுத்தடை மட்டு மரியாதையின்றி, எல்லாத் துன்பத்துக்கும் நானே காரணம் என்றும், எனக்குப் போடும் சோறு வீண் சோறென்றும், என் மாமி யேசிய தெல்லாம் என்னை ஊடுருவிப் பாய்ந்தது. எனக்கு என் தமயனைத் தவிர வேறொருவரு மில்லை; அவனோ, தூர தேசத்தில் தனியே வாசித்துக் கொண்டிருந்தான். 

முதலிற் சில நாட்களுக்கு, என்னை வேலையேவாமல், தினம் ஒரு வேளை பகலில் இரண்டு மணிக்கு, ‘எனக்குச் சோறு போட்டுக்கொண்டு வந்தார்கள். பின்பு அந்த மரியாதையும் போய் வேலை செய்யவேண்டிய தாயிற்று. வெளியில் யார் கண்ணுக்கும் தென்படக் கூடாதாகையால், விடியற்காலம் மூன்று மணிக்கே எழுந்து வீட்டையும் பாத்திரங்களையும் சுத்தி செய்து, வீட்டிலுள்ள பெரும் பாத்திரங்களை யெல்லாம் கொல்லைப்புற வாய்க்கால் நீரால் நிரப்பிப், பின்பு, இரவு படுத்துக்கொள்ளும் வரையும் வீட்டிற்குள் உள்ள வேலைகளை யெல்லாம் செய்துவந்தேன். வீட்டு முன்வாசலைச் சுத்தஞ் செய்து கோலமிடுவதும், என் மைத்துனருக்கு அன்ன மிடுவதும் தவிர, மற்ற வேலைகளை யெல்லாம் பெரும்பாலும் நானே செய்யவேண் டிய தாயிற்று. பகலில், யாவரும் சாப்பிட்டானபின், மீந்ததைப் போட்டுக்கொண்டு இரண்டு மணிக்குச் சாப் பிடுவேன். இரவில், என் மாமியும் நாத்திமார் இருவரும் தோசை அடை கொழுக்கட்டை முதலிய பலகாரம் உண் பர்; அவர்கள் உண்டபின் ஏதாவது மீதியிருந்தால், “அடி யே! நீயும் தின்னறையோடி?” என்று கேட்பாள் ஒருத்தி. நான் வாய் திறக்குமுன்,”இப்போதானே சாப்பிட்டாள்: எப்படி வேண்டியிருக்கும், இழவு? ஆம்படையானைத் தின்னால் வயிறு கசமாய் விடுமா?” என்று மற்றொருத்தி கூறுவாள். இதைக் கேட்டவுடன், நான், “எனக்குப் பசியில்லை ” என்பேன். ஆனால், வைத்து மூடிவை; உதயத்திலே குழந்தைகள் தின்னும்” என்று சொல்லி விட்டுப் போய்விடுவார்கள். வீட்டில் யார் சாப்பிடினும், இலை யெடுத்து எச்சிலைச் சுத்தம் செய்வது என் சுதந்தரம்; சாணியினால் வீடு மெழுக்கிடுவதும், மாட்டுக் கொட்டிலைச் சுத்தம் செய்வதும் அப்படியே; தினமும் என் மாமிகளைந்த வஸ்திரத்தையும், குழந்தைகள் துணி களையும்,அநேக நாட்களில் யாதாயினும் ஒரு காரணம் பற்றி மற்றவர் வஸ்திரங்களையும்,தோய்த் துலர்த்துவ தும் என் சுதந்தரமே; தோசை, அடை, வடை, சுகியன் முதலியவற்றை நான் உட்கொள்வது மட்டும் தோஷமே யன்றி, எவ்வளவாயினும் அவற்றிற்கு மாவரைப்பதெல் லாம் நானே. வீட்டில் எவருக்கு எவ்வித நோய் வரினும், வயல் சரியானபடி விளையா விடினும், பசுமாடு கடாரியின் றிக் காளையை ஈனினாலும், புருஷர் வெளியே சென்ற காரி யம் எது விக்கினமானாலும், குடும்பத்துக்கு எவ்வளவு அற் பமான விபத்து நேர்ந்தாலும், என்னையே எல்லாவற்றிற்கும் காரணமாக்கி, “இந்தக் கரிமுண்டை வீட்டிற்குள் காலெடு த்து வைத்த நாள் முதல் இப்படித்தான்; இந்தச் சனியன் எப்பொழுது தொலைபுமோ? இது ஒழிந்தால்தான் க்ஷேமம் பிறக்கும்.பணத்தையும் கொடுத்துப் பிணத்தையும் சுமந்த கதையாக, சோற்றையும் போட்டு இந்தக் கரிக்காலியை வைத்திருக்க வேண்டியிருக்கிறது” என்று, என்னைத் திட்டினார்கள். துக்கத்தினாலும்,வாதாடி வழக்கிடுவதற்கு உடம்பில் சக்தி யில்லாமலும், ஏதாவது அதிகமாய்ப் பேசி னால் வெளியே அடித்துத் துரத்திவிடுவார்க ளென்று பயந்தும், ஒன்றுக்கும் வாய் திறவாமல், நாய்போல் உழைத்து வயிறு வளர்த்து வந்தேன். அம்மம் பஞ்ச தாரையாகிவிடும் அளவு நான் அனாதையாவே னென்று கனவிலும் நினைத்திருக்க வில்லை. இப்பொழுதோ அப்படி யாய் விட்டது. 

இதனிடையில், வீட்டுக்கு மாப்பிள்ளையும், என்னு டன் ஒரே பந்தரில் விவாகமான என் மூத்தாள் பெண்ணுடைய மணவாளனு மானவன், வேட்டகம் கொண்டாட வந்தான். அவன் தனவான் வீட்டுப் பிள்ளை; மூலைத் தாருக்கும் சாந்துப் பொட்டுக்கும் மாகாணி வட்டக் குடு மிக்கும் அர்த்தக்ஷவரத்துக்கும், ‘குசால்’ நடவடிக்கைகளுக்கும் வேண்டிய அளவு மட்டும், இங்கிலீஷ் படித்து நிறுத்தியவன். ‘ஸார், ‘ராஸ்கல்,”டாம் பெகர்’ என்ற வார்த்தைகள் எப்பொழுதும் அவன் பேச்சில் வந்து கொண்டே யிருக்கும். சாப்பிடும் வேளை தவிர மற்றவேளை மேலங்கி யின்றி இருக்கவே மாட்டான்; இவற்றை யெல் லாம் கண்டு வீட்டில் யாவருக்கும் அவன்மேல் மிக்க பக்ஷம். என் மாமி அவனுக்குச் செய்த உபசாரத்துக்கு அளவு சங்கை இல்லை. விருந்துகளும், படுக்கயறைப் பக்ஷணங்களும், சந்தனபுஷ்ப தாம்பூலங்களுமாய் வீடெங் கும் முழங்கிற்று. என் மூத்தாள் பெண் சுந்தரியோ, தேவலோகத்தி லிருந்து குதித்தவள் போல, ஒரு முழம் உயர்ந்து விட்டவள்போல, கால் வீச்சும் கை வீச்சுமாய்ப் பெருமை குலாவி உலாவி வந்தாள். அவர்கள் நீராடுவ தற்கு வெந்நீர் போடுவதும், எண்ணெய் காய்ச்சிச் சீயக் காய் அரைப்பதும், அவர்களுக்காக விருந்துகளும் பக்ஷ ணங்களும் செய்வதுமே என் வேலையாயிற்று. ஒரே பந்த லில் கலியாணமான இருவருக்குள், அவள் அதிர்ஷ்டம் அப்படியும் என்கதி இவ்வாறு மானதை நினைந்து வருந்தி னேன். பேர் மட்டும் ‘சுந்தரி ‘யே அன்றி, அவள் அவ லக்ஷணமான கறுப்பி. வெகு குசால்’ பேர்வழியும் அழகானவனுமான அவள் யௌவன புருஷனுக்கு அவள் மேல் அதிக ஆசை யிராதென்று நான் எண்ணினேன். என் சந்தேகம், நான் சிறிதும் எதிர்பாராத விதமாக, விரைவில் ருசுவாகியது. என் அழகைப் பற்றி நானே சொல்லிக்கொள்வது தகுதியல்ல; ஆயினும், என் அவ கோலத்திலும் கூட, நான் சுந்தரியைவிட எவ்வளவோ அழகுள்ளவள் என்பது கேவலம் உண்மையே. என்னைக் ‘கரிமுண்டை’ என்றால், அது நிறம்பற்றியன்று. அவ ளைக் கரிச்சுமங்கலி’தடிச்சுமங்கலி’ என்றால் முற்றும் பொருந்தும். வந்து இரண்டு மூன்று நாள் ஆகுமுன், சுந்தரி புருஷன் என்னை அடிக்கடி வெறித்து நோக்குவதை யும், புன்சிரிப்பாய்ச் சிரிப்பதையும், நான் செல்லும் இடங்களுக்கு அடிக்கடி வருவதையும், கண்களால் ஜாடை காட்டுவதையும் நான் கவனித்தேன். என் மனம் பதை பதைத்துத் தத்தளித்தது. கோபமும், வெறுப்பும், துக்கமும், நாளுக்குநாள் அதிகரித்தன. என் மனம சிறிதும் அவன்மேற் செல்லவில்லை. ஒரே ஒருநாள் மட் டும், அவனைக் கைவசப் படுத்திக் கொண்டு அவனுடன் எங்காயினும் ஓடிப்போய் விடலாமென் றெண்ணினேன். இவ்வெண்ணம், என் புக்ககத்துக்காரர்மேல் பழி வாங்க வேண்டுமென்ற ஆசையால் உதித்தது. ஆனால் அது உடனே அவிந்து போயிற்று. யாரிடத்தும் சொல்லப் பயந்தும், அவன் சீக்கிரம் ஊருக்குப் போய்விடுவான் என்றெண்ணியும், அவன் சேஷ்டைகளுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் நடந்துவந்தேன். என் நல்லதிர்ஷ்டத்தால், சுந்தரியை அழைத்துக் கொண்டு அவன், ஒரு வாரத்துக் குப் பின் தன்னூர் போய்விட்டான். 

இவ்வாறு பலவிதத் துன்பங்களுக்கு உள்ளாகி நான் அடிமை வேலை செய்து வரும்பொழுது, ஒரு நாள்,என் கையில் ஒரு தேள் கொட்டி விட்டது. சகிக்க முடியாத நோவுடன் நான் கஷ்டப்படுகையில், என் நாத்தனார் ஒருத்தி, மூன்றுபடி அரிசியை எடுத்து வைத்துத் தோ சைக்கு அரைக்கச் சொன்னாள். தேள் கொட்டிற்று என்று சோன்னதற்கு, என் மாமி,”நன்னாயிருக்கு! உதட்டிலே புண்ணாம் மாடு கறக்கப்படலையாம்! வேலைக் கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு. இடது கையிலே தேள் கொட்டினால் ஆலம் விழுதுபோல வலதுகை தொங்கறதே. அதுக்கென்ன வந்தது? அந்தக் கையிலே பாம்பா கடிச் சிருக்கு?” என்றாள்.”ஒரே போக்காய்ப் பாம்பு கடிச்சு நான் ஒழிஞ்சுட்டால் எல்லாருக்கும் தேவிலை” என்று நான் பதிற் சொன்னேன். “அப்புறம் காடெல்லாம் எலும்பாய்த்தான் போய்விடும்” என்றாள் என் நாத்தனார். அதுவுமன்றி, அரிசியை என் பக்கத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டாள். துக்கம் பொறுக்காமல் கண்ணீர் ஆறாகப் பெருக, மனம் நொந்து மயங்கி, பிராணனை விட்டுவிடுதலே நலமென்று ஒரு வெறியில் தீர்மானித்து,உடனே எழுந்து கொல்லைக்குப் போனேன். அக்கம்பக்கம் ஒருவருமில்லை. ஐந்தாறு கல்லுகளைப் பொறுக்கி மடியில் வைத்துக் கட்டிக் கொண்டு, இரண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டு, கிணற்றுக்குள் குதித்து விட்டேன். 

எனக்கு மறுபடியும் பிரக்ஞை வரும்பொழுது நான் வீட்டு நடையில் கிடந்தேன். நான் பிழைத்து விட்டதை அறிந்தவுடன், எல்லாரும், ‘நீலி ‘ என்றும் ‘சாகசக்காரி என்றும் என்னைச் சண்டைப் பிடித்தார்கள். போதாக் குறைக்கு, இதை எப்படியோ கேள்விப்பட்டு வந்த போலீஸ்காரன், ஒன்று மில்லை, தவறி விழுந்துவிட் டேன் என்று மறைப்பதற்காக, இருபது ரூபா கழற்றி விட்டான். இதை யறிந்தவுடன், என் மாமி,நாத்திமார், ஓர்ப்படி எல்லோருமாக என்னைத் திட்டி ஏசி, நான் ஒரு முண்டையினாலேயே குடும்பத்துக்கு எல்லாக் கேடும் வருகிறதென்று வைதார்கள். அடங்காத துக்கத்துட னும் கோபத்துடனும், “நீங்கள் என்னிலும் பெரிய முண்டைகள் மூன்று பேரில்லையோ ?” என்று கேட்டேன். உடனே அவர்கள் என்னை மேல் விழுந்து அடித்து அலங் கோலஞ் செய்து, “இனிமேல் ஒரு நிமிஷமும் நீ இந்த வீட்டி லிருக்கக்கூடாது; இறங்கு வெளியிலே” என்று, நடுத்தெருவில் தள்ளிவிட்டார்கள். உடுத்திருந்த புடவை யைத் தவிர வேறு இரண்டாம் புடவையுமின்றி, அண்டை வீடு ஒன்றிற்போய் அடைக்கலம் புகுந்தேன். 

எட்டாம் அதிகாரம் 

ஒரு வாரத்தில் என் தமயன் சுப்பிரமணியன் வந்து சேர்ந்து என்னைத் திருவநந்த புரத்துக்கு அழைத்துச் சென்றான். என் புக்ககத்தார் எனக்கு ‘அறுப்புக் கூலி’ ஒன்றுமே தரவில்லை. என் பிறந்த வீட்டிற் போட்ட சில நகைகளைக்கூட, முன்பே அழித்தாய் விட்டதென்று பொய்கூறி, வைத்துக்கொண்டு விட்டார்கள். அவர்களுடன் வழக்காட விருப்பமும் அவகாசமுமின்றி, சுப்பிரமணியன் என்னை அழைத்துச் சென்றான். திருவநந்த புரத்தில் நான் அவனுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந் தேன். அந்த வருஷத்தில் அவனுக்கு பி.எல். பரீக்ஷை தவறிப்போயிற்று. அவன் அகமுடையாள் பெரியவளாகி வீடுவந்து சேர்ந்தாள். அவன் மாமனார், தான் பணந் தருவதாகவும், பி.எல்.பரீக்ஷைக்கு மறுபடியும் வாசிக் கும்படியும் சொன்னதை அவன் மறுத்து, மாதம் முப்பது ரூபா சம்பளமுள்ள ஒரு சர்க்கார் வேலையில் அமர்ந்து, அதிலிருந்து கொண்டே, ஒருவர் கையையும் எதிர் பாரா மல், பரீக்ஷைக்கும் வாசித்து வந்தான். 

என் மதினி ஆனந்தவல்லி, அதிக அழகேனும் அதிக அவலக்ஷணமேனும் இன்றிச் சாதாரணப் பெண்களைப் போல் இருந்தாள். பணக்காரர் வீட்டிலே செல்வமாய் வளர்ந்து வந்தவ ளாதலினாலே, கொஞ்சம் பெருமையும் மினுக்குமா யிருந்தாள். விலை யுயர்ந்த புடவைகளும் ரவிக்கைகளும் நகைகளும் அவளிடத்திருந்தன. அவளை யார் பார்த்தாலும், முந்நூறு ரூபா உத்தியோகஸ்தன் மனைவி யென்று மதிப்பரே அல்லாமல், முப்பது ரூபா ராய்ச வேலைக்காரன் பெண்டாட்டி யென்று நினையார் கள். இதனால் என் தமயனுக்குக் கொஞ்சம் அசௌகரி யங்கள் ஏற்பட்டன. அவனோடொத்தவர் மனைவிமாரும், அவனுக்கு மேலான உத்தியோகஸ்தர் மனைவிமாரும், என் மதினியைக் கண்டு பொறாமை யுற்றுத் தங்கள் கணவ ரிடம் அவதூறாகக் கோள்கூற, அதைக் கேட்டு அவர்கள் மணியனை உபேக்ஷையோடும் பரிகாசமான மரியாதையோ டும் நடத்தத் தலைப்பட்டு, அவனுக்கு மனவருத்தத்தை உண்டு பண்ணினார்கள். 

ஊர் வர்த்தமானம் எவ்வாறாயினும், என் தமயனும் மதினியும் வீட்டில் அந்தரங்க நேசத்தோடும் அன்போடு மே வாழ்ந்து வந்தனர். எங்கள் வீட்டுக்கு வரும்பொழுது என் மதினிக்கு வாசிக்கத் தெரியாது. அவள் வந்தபின் நாங்கள் இருவரும் தமிழ் வாசிக்க ஆரம்பித்தோம். முதலில் நான் அவளுக்குக் குருவா யிருந்தேன். பின்பு இருவரும் மணியனிடத்தில் ஒழுங்காய் வாசித்து வந்தோம். 

இந்தக் காலத்திலே, மணியன் என் விஷயத்தில் காட்டிய அன்பும் அநுதாபமும் இரக்கமும், ஒரு நாளும் மறக்க முடியாது. வாய் தவறிக்கூட ஒரு சுடு சொல் சொல்லமாட்டான். என் மனோபீஷ்டங்களை யெல்லாம் நான் வெளியிடுமுன் நிறைவேற்றி வந்தான். பெற்ற தாயினும் அதிகப் பக்ஷமாயும் அன்பாயும் ஆதரவாயும் நடத்தி வந்தான். அவன் மனைவி வீட்டுக்கு வந்தபின், முன்னளவு கவனம் அவனால் என் விஷயத்தில் செலுத்த முடியவில்லை. ஆனால் அது கிரமமே; நான் சிறிதும் அதைப்பற்றி மனஸ்தாபப் படவில்லை. என் மதினி முதலில் உபேக்ஷையா யிருந்தாள். அவள் கர்வத்தினால், என்னை ஒரு மரியாதையான வேலைக்காரியைப் போலவே நடத்திவந்தாள். நான் பிறக்கும் பொழுதே பிறர் கையை நோக்கி வேலை செய்து பிழைக்கும் அனாதை விதவையாக வே பிறந்தேனென்று அவள் எண்ணி யிருக்கலாம். அவளுக்குக் காரியம் ஒன்றுமே தெரியாது. சமையலே நன்றாகத் தெரியாது. ஸ்நாநம் செய்யவும், தலை வாரிக் கொள்ளவும்,புடவையைக் கிள்ளுக்கிள்ளாகக் கொய்சகம் வைத்து அழகாய் உடுத்திக் கொள்ளவும், நகைகளைத் துலக்கித் துலக்கிப் பூட்டிக்கொள்ளவும், தன்னைப் பல விதமாய்ச் சிங்காரஞ் செய்து கொள்ளவுமே பொழுது சரியாயிருந்திருக்கும். இவற்றுடன், வாசிப்பதும்,அடிக் கடி அகமுடையானுடன் அந்தரங்கமாய்ப் போய்ப் பேசு வதும் சேரவே, அவளால் ஒரு காரியமுமே செய்யக்கூட வில்லை. ஆனால் குஞ்சும் கிழமுமான பெரும்பண்ணைக் குத் தனியே உழைத்திட்ட எனக்கு, மூன்று பேரே உள்ள எங்கள் வீட்டு வேலை பெரிதாகத் தோன்றவில்லை. ஆகவே, அவள் ஒன்றும் ஏவுதற்கிடமின்றி, எல்லா வேலைகளையும் நானே பொறுப்பாகச் செய்து வந்தேன். இதை முதலிற் கண்டவுடன், மணியன், ‘வேலை செய்யாவிட்டால் உடம்பு ஊதிவிடும்’ என்றும், இன்னும் சில தந்திர மொழிகளாலும், தன் மனைவியைச் சிறிது கண்டிக்கலா னான். அவள் குணத்தையும்,என் மன வமைதியையும் அறிந்த பின்பு, அதையும் வர வர நிறுத்தி விட்டான். வீட்டுக்குவந்த ஆறாவது மாதம், என் மதினி, வளைகாப் பணிந்து. கொள்ளத் தன் பிறந்தகத்துக்குப் போனாள். அங்கேயே சீமந்தம் நடந்தது. மறு வருஷத்திலே என் தமயனே குழந்தையாய்விட்டது போன்ற ஒரு பிள்ளைக் குழந்தையுடன் திரும்பிவந்து சேர்ந்தாள்.இதனிடை யிலே, முதலில் தொடங்கிய படிப்பைத் தாழ விடாமல், வெகு கவனமாயும் ஜாக்கிரதையாயும் நான் வாசித்து வந்தேன். வீட்டுவேலை வெகு சீக்கிரம் முடிந்துவிடும்; ஆகவே, படிப்பைத் தவிர வேறு பொழுது போக்க வழி கிடையாது. என் மதினியோ, தன் வீடு போனவுடன் படிப்பை நிறுத்திவிட்டாள். அவள் திரும்பி வந்தவுடன் நான் அவளுக்கு உபாத்திச்சி யாகிவிட்டேன். என் தமய னுக்குச் சமையல் செய்து போட்டுக்கொண்டு நான் காலந் தள்ளி வருகையிலே, அவ்வாறே என் வாழ்நாள் முழுதை யும் சுலபமாய்க் கழித்துவிடலா மென்று தோன்றிற்று. மங்கலியத்தை இழந்த தீரா மனக்குறை யொன்றைத் தவிர, வேறு மனக்குறை யொன்றுமே இல்லை. அப் பொழுதைய வாழ்க்கையைத் தவிர, வேறு ஜீவனோபாய மும் ஒன்றும் புலப்படவில்லை. 

என் மதினி திரும்பி வந்தபின், வரவர எல்லாம் மாறி விட்டது. ஒற்றைக் கட்டையா யிருந்தபொழுது வேலை செய்யாதவள், பிள்ளையுங் கையுமா யிருக்கும் பொழுது வேலை செய்வாளென்று நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. வேலைகளை யெல்லாம் நானே செய்து வந்தேன். ஆனால் நானும் சிறுபெண்ணா யிருந்தபடியால், என் மதினிக்கு வேண்டிய மருந்து முதலியவை கொடுத்து அவளைப் பேணும்பொருட்டு, அவள் சித்தி யொருத்தி, என்னைப் போன்ற ஒரு விதவை, சுமார் நாற்பது வயதுள்ள வள், அவள்கூட வந்திருந்தாள். இந்தப் புண்ணியவதி, என் பழைய மாமியாரை நல்லவளாக்கி விட்டாள். நான் கலத்தில் நெய் குத்திக் கொள்வதுங்கூட அவளைக் கேட் டே செய்ய வேண்டியதாய் விட்டது. இந்தச் சங்கதியொன் றும் மணியனுக்குத் தெரியாது. நானும் அவனிடத்திற் சொல்லி அவன் மனத்தைப் புண்படுத்தக் கூடாதென்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன். என் அருமை மரு மகனாகிய குழந்தை விஷயத்தில், என் மதினியும் அவள் சித்தியும் செய்த கொடுமையே, எல்லாவற்றினும் அதிகமாக என்னைத் துயரப்படுத்தியது: அவனை நான் எடுக்கவேகூடாது; தொடவே கூடாது; எப்பொழுதா வது மணியன் எடுத்து என் கையில் தந்தால் உடனே மதினிவந்து வாங்கிக்கொண்டு போய்விடுவாள். இதனா லுண்டான மனக்கிலேசம் சகிக்க முடியா யாம லிருந்தது. முதலில் இதன் காரணம் தெரியாமலிருந்தது; அதுவும் சீக்கிரம் துலங்கிவிட்டது: ” அந்த துர் அதிர்ஷ்ட முண் டை கைபட்டாலும் குழந்தைக்கு ஆகாது; தூங்கி யெழுந் தவுடன் அவள் முகத்திலே விழித்தால் அன்று முழுதும் குடி தண்ணீர்கூடக் கிடையாது என் று, என் மதினி யிடத்தில் அவள் சித்தியாகிய வெள்ளைப் புடவை சுமங்கலி சொன்னது என் காதில் விழுந்தது. அதற்குப் பதிலாக, “அது எனக்குத் தெரியாதா என்ன? முந்தாநாள் படுக் கையறையி லிருந்து வரும்பொழுது அவள் முகத்தில் விழித்தேன், காலில் இரத்தக் கோறை கண்டது. நேற்று முதல் படுக்கை யறையிலேயே ஒரு கண்ணாடியை வைத் துக்கொண்டு, தூங்கி யெழுந்தவுடன் அதில் முகத்தைப் பார்த்துவிட்ட பின்பே வெளியே வருகிறேன்” என்று என் மதினி சொன்னாள். இப் பேச்சுக் காதில் விழுந்த வுடன், எனக்குண்டான மன வருத்தத்தையும் கிலேசத் தையும் என்னென்று சொல்லுவேன்? தெய்வமே! என் புக்ககத்திலே நான் பட்ட கஷ்டமெல்லாம் போதாதா? 

தீராத் துயரத்தை ஒருவாறு மறந்துவந்த இவ்விடத்தி லும், இவ்வண்ணம் என்னைச் சதிக்கவா நீ திருவுளம் கொண்டாய்! பின்பு என் அற்பமனச் சமாதானமெல்லாம் மாறிப்போய் விட்டது. நானே என் செல்வ மருமகனை எடுக்க அஞ்சினேன்: ஒரு வேளை அவர்கள் கூறியது மெய்யா யிருந்தால் என்ன செய்கிறது? கொடும்பாவியாகிய என் ஸ்பரிசத்தால் எங்கள் கண்மணிக்கு ஏதாவது வந்து விட்டால்” என்ன செய்கிறது, என்று பயப்பட்டேன். இவ்விதம் சோற்றுக்கும் கேடாய், பூமிக்கும் பாரமாய் உயிர் வாழ்வதினும், எவ்விதமாயினும் பிராணனை விட்டு விடுவதே திறம் என்று எண்ணினேன். 

இவ்வாறு துயரக் கடலிலே தத்தளித்துக் கொண் டிருக்கும்பொழுது, ஒருநாள் மாலை, என் தமயன் கச்சேரி யிலிருந்து வரவில்லை; என் மதினியும் அவள் சித்தியும் கோவிலில் ஏதோ திருநாள் வேடிக்கை பார்க்கப்போ யிருந்தார்கள்; குழந்தை, தொட்டிலில் தூங்கிக்கொண் டிருந்தவன், விழித்துக்கொண்டு வீறிட்டு அழுதான். உடனே நான் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடிப்போய், அவனை எடுக்காமல், தொட்டிற் சங்கிலியைப் பிடித்துப் பின்வரும் தாலாட்டைப் பாடி ஆட்டிக் கொண்டிருந்தேன்: 

‘ஆராரோ ஆராரோ ஆரார் அடித்தாரோ? 
ஆரடித்து நீ அழறாய் அஞ்சனக்கண் மைகரைய?- என்
கண்ணான கண்ணே! என் கண்குழிந்த மாம்பழமே!
தின்னாப் பழமே! திகட்டாத செந்தேனே!- என் 
ஈச்சம் பழமே ! இனித்திருக்கும் தீங்கனியே!
வாழைப்பழமே! வரிக்கண் பலாச்சுளையே! என்
அடிக்கரும்பே! செந்நெல்லே ! ஆடையின்கீழ் நற்பாலே!
குடிக்கு நல்ல குஞ்சரமே! கோதண்ட பாணியனே!-என் 
கண்ணான கண்ணாற்குக் கண்ணூறு வாராதே
சுண்ணாம்பு மஞ்சளுமாய்ச் சுற்றியெறி கண்ணாற்கு!
விபூதி வேப்பிலையும் வீசியெறி கண்ணாற்கு — என் 
ண்ணை அடித்தவர் யார், கற்பகத்தைத் தொட்டவர் யார்? 
பொன்னை அடித்தவர் யார், பூங்கிளியைத் தொட்டவர் யார்?
ஆராரோ ஆராரோ ஆரார் அடித்தாரோ? 
ஆரடித்து நீ அழறாய், அடித்தாரைச் சொல்லியழு.’ 

நான் பாட்டுபாடித் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக் கும்பொழுது, திடீரென்று வீட்டு வாசலிலே ஒரு வண்டி வந்து நின்றது. அதி சுந்தரரூபனான ஒரு யௌவன புருஷர் அதிலிருந்து வெளியே குதித்து, விசைவாய், “சுப்பிரமணியம் ” என்று கூப்பிட்டுக் கொண்டே உள் ளே நுழைந்தார். அந்தக் குரலைக் கேட்ட மாத்திரத்தி லேயே எனக்கு மயிர்க் கூர்ச்சுண்டாயிற்று. ஒன்றுந் தெரியாமல் ஸ்தம்பித்து அங்கேயே நின்றுவிட்டேன். உள்ளே வந்தவர், என்னை ஒரு நிமிஷம் திகைத்து நோக்கி, “யார், என் பெண்டா,- முத்துமீனாக்ஷியா?” என்றார். தலை முக்காட்டை யிழுத்து முகத்தை மறைத்து, ‘ஐயோ’ என்றலறிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டேன். 

சுந்தரேசனுக்கும் மணியனுக்கும் நாலைந்து வருஷங் களாகக் கடிதப் போக்குவரவு கூட இல்லாததால், ஒருவர் சமாசாரம் மற்றவருக்குத் தெரியாமல் இருந்தது. நானா வது மணியனாவது அவரைப் பற்றி அடிக்கடி நினைப்பது மில்லை, பேசுவதுமில்லை. அவரை முற்றிலும் மறந்துவிட் டோம் என்றே சொல்லலாம். ஆகவே இப்பொழுது அவர் வானத்திலிருந்து குதித்தாற்போல், முன் தெரிவிக் காமல் திடீரென்று வந்து சேர்ந்தவுடன், மிக்க ஆச்சரிய மாயும் சந்தோஷமாயுமிருந்தது. என் தமயன் கச்சேரியி லிருந்து வந்தவுடன், அவர்களிருவரும் ஒருவரை யொரு வர் கட்டிக்கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும், முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டும், கூத்தாடிக் கொக்கரித்த தை நினைக்க, எனக்கிப்பொழுதும் சிரிப்பு வருகின்றது. சிநேகிதன் மேலுள்ள வாஞ்சையில் தன்னையும் தன் குழந் தையையும் கூடத் தன் புருஷன் மறந்துவிடக் கூடு மென்று என் மதினி பயப்பட்டிருக்கலா மென்று, நான் எண்ணுகிறேன். ஒன்றுக்குமே பதிற் சொல்ல இடங் கொடாமல் ஆயிரங் கேள்விகளைக் கேட்டபின், மணியன், என் மதினியைக் கையைப்பிடித்து இழுத்துச் சென்று, சுந்தரேசன் முன்னே நிறுத்தி, “அடே! சுந்து! பாரடா : இவள்தான் என் பெண்டாட்டி அதோ தொட்டிலில் தூங்குகிறானே, அந்தப்பயல்தான் எங்கள் சீமந்த புத்தி ரன். உனக்கெத்தனை குழந்தைகள்?” என்று கேட்டான். அதற்குச் சுந்தரேசன், ” இருபது வயசுக்கு மேலான ஒரு பையனிருக்கிறான்; அப்புறம் குழந்தைகளில்லை ” என்றார். என் தமயன், “என்ன,நீதானோ ? சீ ! சீ! சீ ! ஒரு காசுக்குப் பிரயோசனமில்லை” என்று சொன் னான். அதற்குப் பதிலாகச், சுந்தரேசன், “நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி 30) என்று பாட ஆரம் பித்தார். இதைக் கேட்டவுடன், “என்ன, இன்னும் காளைக்குக் கட்டையே கட்டவில்லையோ?” என்று கேட்ட தற்கு, “எல்லாம் சாவகாசமாய்ச் சொல்லுகிறேன். முதலிலே ஒரு டம்ளர் காப்பி ; தின்ன ஏதாவது இருந்தாலும் வாந்தி பண்ணிவிட மாட்டேன் ” என்று சொன்னார் சுந்தரேசன். 

சுந்தரேசனுக்கு அதுவரையும் கலியாணமே ஆக வில்லையாம். அவர் மதினியின் அம்மங்காராகிய பெண் ணுக்கு முந்தியிருந்த சொற்ப அழகும் வைசூரியினால் அழிந்துபோக, அவர் தமயனும் மதினியும் எவ்வள வோ சொல்லியும் கேளாமல், அந்தப்பெண்ணைத் தான் கலியாணஞ் செய்துக்கொள்வதில்லை’ என்று மறுத்து விட்டாராம். அதன்மேல் அவர்கள் கோபமும் வெறுப்பு முற்று, அவர் விவாக விஷயத்திலும் படிப்பு விஷயத்தி லுங்கூட, உபேக்ஷையா யிருந்து விட்டார்களாம். அவர் தமயனார், அவருக்குத் தக்கவயது வந்தவுடன், குடும் பச் சொத்தைப் பாகம் செய்து கொடுத்துவிட்டாராம். அதுவரையும் ஏக குடும்பமா யிருக்கும்பொழுது, தஈன் சம் பாதித்துச் சேர்த்ததிலும் அவர் ஒருவேளை.பங்குக்கு வரக்கூடுமென்று நினைந்து, குடும்பச் செலவுகளையெல் லாம் குடும்பச்சொத்தின் வருமானத்திலேயே போட்டு வந்ததுமன்றி, தான் திரட்டிய பணத்தில் சிறிதையும் நிலத்தில்போடாமல், எல்லாவற்றையும் தன் மனைவிக்கு நகைகளாகவும் அவள் பேரில் ‘பாங்கில்’ போட்டும், பிரத்தியேகமாய்க் காப்பாற்றி வந்திருந்தாராம். குடும்ப விபாக காலத்தில் இவர் வாய்திறக்கவே யில்லையாம். ஆகவே, இப்பொழுது சுமார் பதினாயிர ரூபா சொத்துக் குச் சுயாதிகாரியாகி,பி.எல்:பரிக்ஷை தவறிப்போன பின், பலவூர்களையும் கண்டு கண்களிக்க எண்ணிப் பிரயா ணம் புறப்பட்டுத், திருவநந்த புரத்துக்கு வந்து சேர்ந்தா ராம். ஏன் இன்னும் கலியாணஞ் செய்துக்கொள்ளவில்லை யென்று கேட்டதற்குத், தன்மனத்துக்கிசைந்தமனையாட்டி கிடைக்கவில்லை யென்றும், தாலி கட்டையிலே தொட்டு நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் கருமம் தானே ” என் றும் கூறி முடித்தார். 

முதலில் இரண்டேநா ளிருப்பதாகச் சொல்லிப், பின்பு, என் தமயன் நிர்ப்பந்தத்தின்மேல், கூட இரண்டு நாள் தங்க அரிதில் சம்மதித்தவர், கடைசிவரை, ஒரு மாதம் இருந்ததுமன்றி, கொச்சி திருச்சூர் முதலிய ஊர் கள் பார்த்துவிட்டு, மறுபடியும் வந்து ஒருவாரம் தங்கி னார். திருவனந்தபுரத்திலே யாரோ ஒரு அச்சிக்கு முண்டு கொடுத்து, அவர் அவளை வைப்பாய் வைத்துக்கொண்டி 孕 ருப்பதாயும், அதன் நிமித்தமே அவ்வாறு தங்குவதாயும், ஒருவேளை என் தமயனையும் அவர் கெடுத்துவிடக் கூடுமென்றும், என் மதினியும் அவள் சித்தியும் அவரை அவதூறு கூறிப் பழித்து, அவர்போனால் பிள்ளையாருக் குத் தேங்காய் உடைப்பதாக இரகசியமாய் வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அதெல்லாம் வீண்பழியே. அவர் அவ்வாறு தங்கியதற்குக் காரணம், என் மனத்துக்கும் அவர். மனத்துக்குமே நன்று தெரியும். என் தமயனுக் க்கூட அப்பொழுது உண்மை தெரியாது. அந்தோ! ஒருவரையொருவர் பார்த்தது முதல், எங்கள் இருவருக் கும் மெய்க்காதல் பிறந்துவிட்டது. நான் அவருடன் பேசுவதில்லை ; என் தமயன் எவ்வளவு சொல்லியும், பழையநாள் பரிகாசங்களையும் பழக்கத்தையும் நினைப் பூட்டியும், என் மொட்டைத் தலையுடன் அவர் எதிரே நிற்க என்மனம் இணங்க வில்லை. அவர்கள் உள்ளே சாப்பிடவரும் போதன்றி, அவர் என்னைப் பார்ப்பது மில்லை, நான் அவரைக் காண்பது மில்லை; அப்பொழுதும் கூட, அவருக்குப் பரிமாறும்பொழுது எனக்குக் கைகால் கள் நடுங்கும்; சிலநாள்களில், என் மதினியையேனும் அவள் சித்தியையேனும் பரிமாறச் சொல்லிவிட்டு, நான் உள்ளேயே இருந்து விடுவேன். ஆயினும் என்ன? எவ் விதமாயினும், தெரிந்தோ தெரியாமலோ, எங்கள் கண்கள் தினம் ஒருமுறையாவது ஒரு நொடிப்பொழுதாவது சந் திக்கும். அந்த வினாடியில், மனத்தில் நடக்கும் குழப்ப மெல்லாம் ஒருவருக்கொருவர் பகிரங்கமாய் விடும்; எவ் வளவு திடப்படுத்திக் கொண்டாலும், மறைக்கமுடியாமற் போய்விடும். 

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல”

என்றார், மனசின் இரகசியங்களை நன்கறிந்தமஹான். ஆகவே, ஒருவரோடொருவர் பேசாமலே, பழகாமலே, ஒருவரையொருவர் அதிகம் பாராமலே, எங்கள் காதல் நாளுக்குநாள் வளர்ந்தேறிவந்தது மன்றி, ஒரேவீட்டில் இருவரும் இருப்பதிலேயே ஒருவித ஆநந்தமும் திருப் தியும் மனத்துக்கு உண்டாயிற்று. இக்காலத்திலே, இரவு களில், தலையணையெல்லாம் கண்ணீரால் நனைந்துபோக, நான் பட்ட தாபத்தை எடுத்துரைப்பது தகுதியன் றென்று கூறவில்லை. அவர் திருச்சூர் முதலிய இடங் களுக்குச் சென்று திரும்பிய பின், கடைசியாகப் பிரிந்து போகும் நாளும் வந்துவிட்டது. என் துக்கம் எனக்குத் தெரியும்; அவர் மனத் துயரத்தை அவர் கண்கள் எனக் குத் தெளிவாகத் தெரிவித்தன. அவருக்கு நன்றாய்ப் பாடத் தெரியுமென்று முன்பே சொல்லி யிருக்கிறேன் அன்றோ? அவர் மனவேக்கத்துக்கும் முக வாட்டத்துக் கும் காரணம் இன்னதென்று அறியாத என் தமயன், எவ்வளவோ அவரைக் குதூகலப் படுத்த முயன்றும் பலிக்காமல், கடைசியாக, அவர் போகுமுன் எங்கள் வீட் டில் ஒரு பாட்டுக்கச்சேரி’ வைத்து, எங்களையும் அவன் சிநேகிதர் சிலரையும் சந்தோஷப்படுத்த வேண்டுமென்று, அவரை உபத்திரவப்படுத்தினான். பாட்டிலும் அழுகைக் கச்சேரிக்கே தக்கவரா யிருந்த அவர், தம்மை மன்னித் துக்கொள்ளும்படி பிரார்த்தித்த தொன்றும் பயன்படா மல், கடைசியில், அவர் புறப்படுவதற்கு முந்திய நாள், ஞாயிற்றுக்கிழமை யன்று, எங்கள் வீட்டில் சங்கீதக் கச் சேரி நடந்தது. வீட்டுக்காரரையும் மணியனுடைய முக் கிய இஷ்டர்களில் ஐந்தாறு பேரையும் தவிர, வேறொருவ ரும் கிடையாது. வீட்டு முன்கட்டில், மாலை நாலுமணி முதல் ஐந்து அல்லது ஐந்தரை மணி வரையுமே, பாட்டு நடந்தது; வீட்டுப் பெண்டிராகிய நாங்கள், பின்கட்டில் மறைவாயிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். நடந்த தெல்லாம் நன்றாய் எனக்கு ஞாபக மிருக்கிறது: அவர் மொத்தம் நாலு பதங்களே பாடினார் ; அந் நான்கும், ஒரு காதலன் தன் காதலியை நோக்கி விரகதாபம் பொறுக்க முடியாமல் கூறும் கருத்துக்களைக் கொண்டனவே. அவர் குரலையும் பாடும் மாதிரியையும் யாவரும் புகழ்ந்து கொண்டாடினார்கள். கடைசியில், ஒருவர், ” இதெல்லாம் சிற் றின்பமாகவே பேரச்சு. பேரின்ப ரசமாய் தாவது ஒன்று பாடவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அவர் சிறிது நேரம் யோசித்துப், பின்பு, 

“படமுடியா தினித்துயாப் படமுடியா தாசே! பட்டதெல்லாம் போதுமினிப் படவேண்டா மென்றன். உடலுயிரா தியவெல்லாம் நீ எடுத்துக் கொண்டுன் உடலுயிராதியவெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்.” 

என்ற அருட்பாவை, மண்ணும் மாமும் உருகி யிளகும் படியான குரலில், எடுத்துப் பாடினார். யாவர்க்கும். புளகாங்கிதமாகிக் கண்களில் நீர் தளும்பிவிட்டது. அவர் பாடி நிறுத்திய பின்னும் நிச்சப்தமாய்ச் சிறிது நேரம் ஆநந்தத்தில் ஆழ்ந்திருந்து, பின்பு காகோஷம் செய்து மெய்ச்சிப் புகழ்ந்தனர். அந்தப் பாட்டில் அவர்களெல் லோரும் பேரின்ப ரசத்தையே அநுபவித்தார்கள். அதைப் பாடியவர் அதற்குக் கற்பித்த அர்த்தம் என் மனத்துக்குமட்டுமே தெளிவாய்த் தெரிந்தது. பொறுக்க முடியாத துன்பத்தில் என்னை ஆழ்த்திவிட்டு, அவர் மறு நாள் புறப்பட்டுப் போய்விட்டார். 

ஒன்பதாவது அதிகாரம்

அடுத்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மூன்று மணி சுமாருக்கு, மணியன், தன்னறையி விருந்தபடியே என்னைக் கூப்பிட்டான். நான் போனேன். அவன் மட்டும் தனியே இருந்தான். ஒரு கடிதமும் அவன் கை யில் இருந்தது. முதலில் சிறிது திகைத்துத் தியங்கிப், பின்பு, என்னைப் பார்த்து, ” முத்து! எனக் கெப்பொழுது மே புத்தி அவ்வளவு கூர்மையில்லை என்று எனக்கே சங் தேக முண்டு; இவ் விஷயத்திலும் அது ருஜுவாச்சுது. இதோ, சுந்துவினிட மிருந்து உனக்கொரு கடிதம் வந் திருக்கிறது. எனக்கு வந்த கடிதத்துக்குள் அதிருந்தது எனக்குச் சம்மதமாயிருந்தால் உன்னிடம் அதைக்கொடுக் கும்படி அவன் எழுதியிருக்கிறான். எனக்கொரு வேளை சம்மதமிரா தென்று நினைத்து அவன் எடுத்துக் கூறியிருக் கும் நியாயங்களைப்பற்றிப் பேச வேண்டியதில்லை. ஏனெ னில், உனக்குப் பிரியமிருந்தால் எனக்கும் மனப்பூர்வ மாய் அது சம்மதமே. நீ எப்படியாவது சந்தோஷமாய் வாழவேண்டு மென்பதே என் கருத்து. இதோ மேஜை மேல் காகிதம், ‘கவர்’ எல்லாமிருக்கிறது. அதை வாசித் துப்பார்த்து உன் பதிலை எழுதிக்கொடுத்தால், அவனுக்கு அனுப்புகிறேன். ஆநந்தம், சித்தி, யாராவது வந்து உன்னை நடுவே தொந்திரவு செய்யாமல், நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்று சொல்லி, என் ஆச்சரியம் அடங்கு முன்னமே அறைக் கதவை மூடிவிட்டு, வீட்டுக்குட் போய்விட்டான். அவன் போனபின், ஒரு நாற்காலியில் இருந்து, அவன் தந்த கடிதத்தைப் பிரித்து வாசித்தேன். எனக்கு எளிதில் விளங்கும்படி அது தெளிவாய் எழுதப் பட்டிருந்தது. அதிற் சில பாகங்களை மட்டும் கீழே எடுத்தெழுதுகிறேன்.

“இனி என்னால் பொறுக்கமுடியாது. உன் பதிலை எதிர் பார்த்து என் உயிரை வைத்துக்கொண்டிருக்கி றேன். நீ மறுத்துவிட்டால் என் பிராணன் போய்விடு மென்பது என் தாத்பரியமல்ல. உன்னை உயிர்த்துணைவி யாய்ப் பெற்றாலன்றி என் வாழ்நாளெல்லாம் வெறும் பாழாகவே முடியும். அதி பாலியத்தில் உன்னைப் பெண்டாட்டி’ என்று விளையாட்டாக அழைத்து உன்னுடன் சல்லாபமாய்ப் பழகியபொழுது, இம்மாதிரி யான காதல் உன்மேல் எனக்குப் பின்னால் உண்டாகு மென்று நான் சொப்பனத்திலும் எண்ணவில்லை. வருக்கும் காதலின் மெய்த்தன்மை அப்பொழுது தெரி என்னோடொத்த வாலிபரில் சிலருக்கு இரண்டு மூன்று குழந்தைகள் கூட இருக்கின்றன. ஆனால்,நான் மட்டும் இதுவரையும் ஒரு ஸ்திரீ விஷயத்திலாவது உண்யைாய்க் காதல் கொள்ளவில்லை. இது கடவுளாக அருளிய பேரதிர்ஷ்டமென்று களிக்கின்றேன். நான் இப்பொழுது ஒருத்திக்குப் புருஷனாயிருந்திருந்து உன்னைக் கண்டிருந்தால், அவள் கதியும் என் கதியும் என்னமாய் முடிந்திருக்கும்? உன் விஷயத்திலும் கடவுள் கிருபையை யே நான் காண்கிறேன்: நாம் கேடுகளாக நினைப்பவை மறைவான நன்மைகளே,’ என்று கூறுவதற்கு உதாரண மாக, உனக்கு நேர்ந்த கொடியவிபத்து, உன்னை இப்பொ ழுது சுயாதிகாரியாய் விட்டிருக்கிறது. ஆகவே, ஒரு வருக்கொருவரென்றே பழவினைப்படி விதிக்கப்பட்டுப் பிறந்த நாமிருவரும், இடையில் சிறிது பிரிவுற்று, சுவாமி கிருபையால், இப்பொழுது மறுபடியும் சேரும்படியான நிலைமையில் இருக்கிறோம். இதினும் ஸ்பஷ்டமாக தெய் வாக்ஞை வெளிப்படாது. உலகத்தில் அவரவர் சுக துக்கங்கள் பொதுவாய் அவரவருக்கே உரியன. நாமெவ் வளவு முயன்றாலும், சுகதுக்கத்தை நேரில் அநுபவிப்ப வர் அளவு, நம்மால் பகிர்ந்தநுபவிக்க முடியாது. நாம் வேறு, அவர்கள் வேறு என்பது, எப்படியாவது வெளி யாகிவிடும். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்ற பழமொழி, ஆழ்ந்த கருத்தை உடையது. ஆகவே, உன் தமயன் உன்னை எவ்வளவு பக்ஷமாய் நடத்தி வந்தாலும், வீட்டிலுள்ள மற்றவர் உன்னை எவ்வளவு அன்பாய் நடத்தி வந்தாலும் — இதற்கு மாறாகவே உண் மையில் நடக்கிறதென்பதை நான் நன்கு அறிவேன். உன்மேற் காதலாகி உன்னைக்கொண்டு உன் காதலுக்கு உரியவனான ஒரு புருஷனோடு, உன் குழந்தைகளும் குடும்பமுமாய் நீ அநுபவிக்கக் கூடிய சுகத்தையும் ஆநந் தத்தையும், நீ ஒருபொழுதுமே வேறு விதமாய் அறியவும் முடியாது. அவ்விதச் சுகத்தை சுவாமி உன்முன் வைக் கும்பொழுது, அதை உதறித் தள்ளுதல் தோஷமேயாம். நீயுற்றிருக்கும் அவகோலத்தையும், துயரத்தி னாலும் வேலையினாலும் உன் திவ்ய சரீரம் மெலிந்து வாடி வதங்கி யிருப்பதையும், அன்பு இரக்கம் ஒன்று மில்லா ரோடு தினமும் பழகி அவர்களுக்காக உழைத்து வாயில் லாப் பிராணிபோல் நீ வயிறு வளர்த்துவரும் பரிதாபத் தையும் பார்த்தவுடன், நான் இரத்தக் கண்ணீர் வடித் தேன். என் மனம் பட்ட துயரம் கடவுளுக்கே தெரியும். அந்தோ! எவ்வளவு கொடுமையானதாக இவ்வுலக வாழ்க் கை தோன்றுகிறது! நல்லார் தாழ்வதும் பொல்லார் வாழ்வதும் எவ்வளவு சகசமா யிருக்கின் றன ! புருஷனை இழந்த பெண்கள் மறுபடியும் கலியாணம் செய்து கொள்ளலா மென்பதற்கு சாஸ்திரங்களில் அத் தாட்சி யிருக்கின்றது. அம் மாதிரியான விவாகங்கள் வழக்கத்தில் இப்பொழுது நடக்கவும் செய்கின்றன. * இந்தக் கடிதம் உனக்கு ஞாயிற்றுக்கிழமை யன்று கிடைக்கும். நீ மறுநாள் பதிலெழுதினாலும், வியாழக் கிழமையன்று எனக்குக் கிடைக்கவேண்டும். நான் அது வரையும் இவ்வூரிலேயே இருப்பேன். அன்று உன் சம்ம தத்தைக் குறிக்கும் உன் பதில் கிடையாவிடின், பின்பு நான் என்ன செய்வேனோ இப்பொழுது சொல்ல முடி யாது. என்மேல் காதலிருந்தாலும் இல்லாவிடினும்,என் நிலைமைக்கு இரங்கி, பழைய பழக்கத்தை நினைந்தேனும் உடனே நல்ல பதிலனுப்பும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். 

இந்தக் கடிதத்தை வாசித்தவுடன் எனக்குக் கண் ணீர் ஆறாகப் பெருகிற்று. அடக்கமுடியாத ஆநந்தமும் துக்கமும் மனத்தில் கொந்தளித்தன. ஒருவாறு தாபத்தை அடக்கிக்கொண்டு, பதிலெழுதுவது தகுதியல்ல வென் றும், நன்றாலோசித்துப் பொறுத்து எழுதலா மென்றும், மணியனுடன் இதைப்பற்றிப் பேசலா மென்றும், பலவாறு யோசித்து, பின்பு உடனே பதிலெழுதுவதே தகுதி யென்று தீர்மானித்து, ஐந்தாறு கடிதங்கள் எழுதியெழு திக் கிழித்துக், கடைசியில் ஒரு கடிதத்தை எழுதி முடித்து ஒரு கவரு க்குள் போட்டு ஒட்டி மேஜை மேல் வைத்துவிட்டு, வீட்டுக்குட் சென்றேன்.அங்கே மணியன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் அவன் ஒன்றும் கேட்க வில்லை. சற்றுப் பொறுத்துத் தன்னறைக்குட் போய்விட்டான். அன்றிரவு, மற்றவருக்குத் தெரியாமல், கடிதத்தை அனுப்பி விட்டதாக ஒரு வார்த்தைமட்டும் சொன்னான். பிற்பாடு அந்தப்பேச்சை எடுக்கவே யில்லை. 

ஒருவாரங் கழித்து வந்த பதிற் கடிதத்தை, முன்போலவே, என்னைக் கூப்பிட்டு மணியன் கொடுத்தான். 

அதை முழுதும் வெளிப்படுத்த எனக்கு வெட்கமா யிருக்கிறது: என் குணங்களும், அழகும் அவ்வளவு ஸ்தோத்திரஞ் செய் யப்பட்டிருக்கின்றன. சாதாரணமானவர் அதை வாசித் தால், எழுதின வருக்குப் பித்தக்கிறுக்குண்டென்று சொல் வார்கள். ஆயினும், அதினின்றும், சில பாகங்களைக் கீழேவரைகிறேன் :-*** ஓ! என் ஆநந்தத்தை என் னென்று சொல்வேன்! ரதியைப்பெற்ற மதனும் சசியைப் பெற்ற இந்திரனும் எனக்கு நிகரல்ல. இவ்வுலகங்களுக்கு கெல்லாம் ஆதிபத்தியம் கிடைத்திருப்பினும் எனக்கு இவ்வளவு சந்தோஷம் உண்டாயிராது.நானே பாக்கிய வான். ஆம், சுந்தரேசா! நீ பாக்கியவானே. உன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! உலகம் ஒப்பவேண்டுமா? இவ்வளவே உன் ஆக்ஷேபனை? இப்பாழான பைத்தி யக்கார உலகம் ஒப்பினா லென்ன, ஒப்பாவிடி லென்ன? ஆறுவயதுக் குழந்தையை அறுபதுவயதுக் கிழவன் கலி யாணம் செய்துகொள்வதையும்; மூன்றுவயதுப் பெண் சிசுவை நாலுவயது ஆண்சிசுவுக்கு அக்கினி சாக்ஷியாய் விவாகஞ் செய்வித்து, இருவரையும் கிரகஸ்தாசிரமத்தில் புகுத்துவதையும்; முதல் பெண்டாட்டி உயிரோடிருக் கையிலேயே இன்னும் வேறொரு பெண்ணோ இரண்டு பெண்ணோ மனோபீஷ்டப்படி புருஷர் மணம்புரிந்து கொள்வதையும்; தன் தர்மபத்தினி சாக்ஷியாக, வேசி வீட்டுக்கும் தாசிவீட்டுக்கும் தன்னிஷ்டப்படி சென்றும், அவர்களைத் தன்வீட்டுக்கே அழைத்து விருந்திட்டு அவர்களோடு சுகித்தும், மானம் மரியாதையின்றி ஒழு கும் தூர்த்தனான புருஷன் ஒருவன், அவன் மனைவி யாரையேனும் களங்கமின்றித் தலைநிமிர்த்துப் பார்ப்ப தைக்கண்டு சந்தேகமுறினும், அவளை அடித்தும் மிதித் தும் சித்திரவதை செய்தும் வீட்டைவிட்டு விலக்கி. அவ மானப்படுத்தியும் குரூர இமிசை செய்வதையும்; வெட்க மின்றி, ஆடுமாடுமிருகங்களைப்போல், பெற்றபெண்களையே விலைபேசி விற்பதைபும்; அக்கினி சாக்ஷியாக அருந்ததி யைக்காட்டி ஒரு கன்னிகையை ஒருவன் உயிர்த்துணைவி யாகக் கொள்ளும் புனிதமான புண்ணிய கருமத்தின் நடுவே, விலைமாதரை ஆடவும் பாடவும் விட்டு வேடிக் கை பார்ப்பதையும்; ஆடுமாடுகளைப்போலப் பெண்களை மதித்து நடத்துவதையும்; கடவுள் திருச்சந்நிதியிலே யே கற்பிழந்த கணிகையரின் ஆடல்பாடல்களைக் கண்டு களித்து அவர்களைக் காமுறுதலையும்; இன்னும் இவை போன்ற பலவிதத் தீங்குகளையும், ஆதிகாலத்து ஆசாரங்க ளாக மதித்துப் புகழ்ந்து, ஒப்புக்கொள்ளும் உலகம் தானே இது? பொய்ச்சாக்ஷி கூறுவோரையும், வியபிசா ரஞ்செய்யும் புருஷரையும், இலஞ்சம்வாங்கும் உத்தியோ கஸ்தரையும், பிறப்பொழுக்கம்குன்ற மதுபானம்செய் தும் மாமிசம் அருந்தியும் வறிதே தீங்குசெய்யும் மக்கட் பதடிகளையும், அவர்களுக்குப் பணமும் பவுஷும் மட்டு மிருப்பின், யோக்கியர்களாகவும் கனவான்களாகவும் மதிக்கும் உலகம்தானே இது? சற்குணங்களும் நல் லொழுக்கமும் நிறைந்த ஒரு உத்தமசூத்திரனிலும், பஞ்ச மகா பாதகனான ஒரு பிராமண அதமனே மேலென்று நினைக்கும் உலகம்தானே இது? நாய்க்கேனும் பசுவுக்கே னும் இடும் உச்சிஷ்டத்தை, பசித்திருக்கும் பஞ்சம னொருவனுக்கு இடலாகா தென்றும்; நீரில் முழுகி இறக்கும் தருணத்திலிருக்கும் நீசன் ஒருவனை, ஒரு பிராமணன் தொட்டிழுத்துக் கரையேற்றிக் காப்பாற்றினால், பிராயச் சித்தஞ் செய்துகொள்ள வேண்டுமென்றும், நீதி கூறும் உலகம் தானே இது? இப்புண்ணிய பூமியையன்றி, வேறு எந்தத்தரையைக் கப்பலேறிச்சென்று மிதிக்கினும் குலா சாரம் அழிந்துபோமென்று எண்ணியொழுகும் உலகம் தானே இது? பூனர்விவாகம் செய்துகொண்டு கிரமமாய் வாழும் ஒரு விதவையை வெறுத்து விலக்கி, அவ்வா றின்றி இரகசியமாய் மனம்போனபடி வியபிசாரஞ் செய் யும் ஒரு விதவையை நன்குமதிக்கும் உலகம் தானே இது? வாக்குண்மையையும், மனச்சுத்தியையும், மெய் யறி வொழுக்கத்தையும் மதிக்காது, வெளிவேஷத்தை யும் பகட்டையும் பணத்தையுமே பெரிதாக மதித்தொழு கும் உலகம் தானே இது? சிச்சீ! இவ்வுலகத்தின் நன் மதிப்பிலும், புகழ்ச்சியிலும், அதன் அவமதிப்பும் இகழ்ச்சியுமே மேல். இதன் மதிப்புப்படி முற்றிலும் நல்லவனென்று பெயரெடுத்தவன் நரகத்துக்கே செல் வான். இப்பாழான உலகமதிப்பை நான் ஒரு திரணமாக வும் நினைக்கவில்லை. சாஸ்திரங்கள்? முதலில், சுகத்துக்கு ஏற்றதே சாஸ்திரம். நம்முன்னோர் மூட ரல்லர்; அவர்கள் தக்க காரணம்பற்றியே சில ஆசாரங் களை அநுசரித்து வந்திருக்கின்றனர்; ஆதலின் நாமும் இப்பொழுது அவ்வாறே ஒழுகவேண்டும்’ என்று கூறும் மொழி, இக்காலத்தில் உள்ள நமக்கும், பிரத்தியேகமான பகுத்தறிவையும் விவேகத்தையும் தந்திருக்கும் கடவுள் மூடரென்று கூறுவதுபோ லாகின்றது. இருபுறமும் சுவரைவைத்து, நடுவே இரண்டு சக்கரங்களுக்கும் ஏற்ற படி சுவட்டையும் ஆழமாய்ப் பதித்து விட்டால், பின்பு அப் பாதையில் வண்டிகளை இழுத்துச் செல்லும் எருது களுக்குக் கண்கள் அனாவசியமே. இதென்ன நியாயம்? இதென்ன வழக்கு? இப்பொழுதுள்ள பேதங்களும், நாகரிகங்களும், குழப்பங்களும், சில விஷயங்களில் அறிவீன மும், சிலவற்றில் அதிகமான அறிவும், நம் முன்னோர் காலத்தில் இருந்தனவோ? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அநுசரித்து வந்த நடை உடை பாவனை நாகரிகங்க ளோடேயே நாம் இப்பொழுது இருக்கின்றோ மோ? ஆறு வயதில் ஒரு குழந்தைக் கணிந்த உடுப்பு இருபது வயதில் சரியா யிருக்குமா? ஆறு வயதோ, இருபது வயதோ, எண்பது வயதோ தற்காலம் என்பது, இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய தன்று. ஒரே உடை மூன்று பருவங்களுக்கும் பொருந்தாது என்பதே நாம் அறியவேண்டியது. கோடைக் காலத்திலே வெந்நீரில் மூழ்குபவனையும், கூதிர்க் காலத்திலே தண்ணீரிற் குளிப்ப வனையும் எல்லோரும் நகைத் திகழ்கின்றார்கள். நம்முடைய ஆசார அனுஷ்டான விஷயங்களிலும் ஏன் சிறிது அப் புத்தியைச் செலுத்தக் கூடாது? இது நிற்க, நம்முடைய சாஸ்திரங்களையே எடுத்துக் கொள்வோம்: ஆதி வேத மாகிய ரிக்வேதத்திலேயே, நாதனை யிழந்து துன்புறும் பெண்ணொருத்தியை நோக்கி, வீண் துயரத்தை விட்டு விட்டு, வேறொருவனை மணம்புரிந்துக் கொண்டு சுகமாய் வாழும்படி, ஒரு ரிக்குக் கூறுகின்றது. மநு, பாராசரர், நாரதர் முதலிய முனி சிரேஷ்டர்களது ஸ்மிருதிகளினா லும் முற்காலத்தில் விதவா கலியாணங்கள் நடந்ததாகத் தெரியவருகின்றது. புராணங்களிலும் அப்படியே ஐந்தாம் வேதமாக மதிக்கப்படும் மகாபாரதத்திலே, ஸ்திரீ களின் புனர் விவாகத்துக்கு மூன்று உதாரணங்கள் காண்கின்றன. விசித்திர வீரியன் என்ற அரசன், சந்ததி யின்றி இறந்தவுடன், அவன் தாய், அஷ்டவசுக்களில் ஒருவரும் உத்தம புருஷருமாகிய பீஷ்மாசாரியரையே நோக்கி, அவ்வரசனது விதவைகள் இருவரையும் தன் மனைவிகளாகக் கொள்ளும்படி கூறுகிறாள். அன்றியும், புருஷனை யிழந்த விதவையாகிய உலூபியை அர்ச்சுனன் புனர் விவாகம் செய்து கொண்டதாயும், அவர்களுக்குப் பிறந்த புத்திரன் அர்ச்சுனலுக்குரிய மகனாகவே மதிக்கப் பட்டதாயும் தெரியவருகின்றது. இதுவுமன்றி, நள சரித்திரத்திலே, தன் புருஷனைப் பிரிந்த தமயந்தி, வேறொரு மணம் புரிந்துகொள்ளத், தன் தந்தை அநுமதி யோடு, இரண்டா முறை சுயம்வரத்தைக் கோருகிறாள். இதற்கு அழைக்கப்பட்ட அயோத்தி மன்னன், அச்செய் கையில் தவறொன்று மிருப்பதாகக் கருதாமல், சுயம்வரத் துக்கு வந்து சேர்ந்தது, அக்காலத்தில் அத்தகைய புனர் விவாகங்கள சகசமாய் நடந்துவந்தன என்பதைக் குறிக் கின்றது. பத்மபுராணத்திலே, ஒவ்வொரு முறையும் விவாகச் சடங்குகள் நிறைவேறியவுடன் மணவாளனை இழக்கும் துர்ப் பாக்கியவதியான காசி மன்னனது பெண், திரும்பவும் திரும்பவும் இருபது முறை கலியாணஞ் செய்து கொடுக்கப் படுகிறாள். ஆகவே, சுருதி, ஸ்மி ருதி, இதிகாசம் ஆகிய மூன்று அத்தாக்ஷிகளாலும்,புனர் விவாகம் ஸ்திரீகளுக்குத் தகுமென்று ஏற்படுகின்றது. இக்காலத்தில் வழக்கமும் முன்னரே ஏற்பட்டு விட்டது. இப்படி யிருக்க, உலகம் அதைப் பழிப்பது மூடத்தனமே யாகும். இவ்வளவுமே இல்லாவிடினும், இப்பொழுது நம்மவர் செய்கைகள் ஆசாரங்கள் எல்லாம் வேத சாஸ்தி ரோக்த மாகவே இருக்கின்றனவோ? இதெல்லாம் வீண் பேச்சு. 


இனிக் கதையை வளர்ப்பதில் என்ன பயன்? என் தமயன், தனக்குப் பரிபூரண சம்மத மென்றும், நான் அவ்வாறு மணஞ் செய்துகொண்டு வாழ்ந் தாலே தன் மனம் விசாரம் நீங்கித் திருப்தி அடையு மென்றும், வற்புறுத்திக் கூறினான். பின்பு நானும் மனமிசைந்து ஒருப்பட்டு அவருக்குக் கடிதம் அனுப்பினேன்.

பத்தாம் அதிகாரம் 

இவ்வாறு என் சம்மதத்தைப் பெற்றபின்பு தனது தமயனார் சம்மதத்தை விரும்ப, அவர் அதைக்கொடுக் காததுமன்றி, என்னைக் கலியாணம் செய்துக் கொண்டால், தன் தம்பி இறந்துவிட்டான் என்று, ஸ்நாநம்செய்து விடுவதாகப் பதிலனுப்பினாராம். அவர் தமக்கையார் இலக்ஷ்மியம்மாள் கூடத் தடுத்தாளாம். ஆனால் அதை யொன்றும் அவர் மதிக்கவில்லை. எங்கள் வீட்டில், மணி யன், என் மதினியுடனும் அவள் சித்தியுடனும் வேறு விதமாகப் பேச்சை விட்டு, எங்கேயோ ஒரு விதவா விவாகம் நடந்ததாகக் கூறி, அவர்கள் அபிப்பிராயத்தை நாடியதில், அது முற்றிலும் விரோதமாகவே தெரிய வந்தது. ஆதலின், அவர்களிடத்திலும் சமாசாரத்தைச் சொல்லாமல், என் பழைய புக்ககத்தூருக்குச் சென்று சில நகைகளை மீட்கப் போவதாக ஒரு பொய்யுரைத்து விட்டு, என்னை அழைத்துக் கொண்டு மணியன் சென்னப்பட்ட ணம் சென்றான். எனக்கும் சுந்தரேசனுக்கும் அங்கே விவாகம் நிறைவேறியது. அநேக கனவான்கள் வந் திருந்து நடத்தினார்கள்; சிலர் வெகுமதிகள் அனுப்பினார் கள். ஆனால் வந்தவரில் மிகச் சிலரே போஜனத்துக்குத் தங்கினார்கள். கலியாணம் முடிந்தவுடன், நானும் என் கணவரும் பம்பாய் கல்குத்தா முதலிய இடங்களுக்குப் புறப்பட்டுப் போய்விட்டோம். என் தமயன் திருவநந்த புரத்துக்குத் திரும்பிவிட்டான். 

என் தலைமயிர் மறுபடியும் சுருள் சுருளாய் வளர்ந்த தையும், என் பிராணேசர் அதற்காக மாதம் இருபது ரூபா வரை தைலங்களிற் செலவிட்டதையும்,என க்கு அவர் பட்டுப்புடவைகளும் நாகரிகமான நகைகளும் வாங்கித் தந்ததையும் பற்றி விவரிப்பதும்; எங்கள் இல்லறச் சுகத்தையும் காதலின்பத்தையும் பற்றிக் கூறுவதும் அனாவசிய மே. எங்கள் காதல் முத்திரையும் குலதீபமுமாக வந்து பிறந்த செல்வக் குழந்தைக்கு, இவற்றிற்கெல்லாம் பிரதம காரணனா யிருந்த என் தமயன் சுப்பிரமணியன் பெயரை யே இட்டிருக்கிறோம். அந்தக் குழந்தை, எங்களிருவர் நான்கு கண்களுக்கும் ஒரே மணியாக விளங்கி, வளர்ந்து வருகிறான். எங்கள் இணைபிரியாக் காதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால் எனக்குள்ள ஒரு மனக்குறை மட்டும், வெளியிட்டால் தான் சிறிது தீரும்: என்னை என் கணவர் பழையபடி பெண்டாட்டி’ என்றே கூப்பிடுகிறார். அது கிடக் கிறது. நானும் அவரை ‘சுந்து’ என்றே கூப்பிட வேண்டி யிருக்கிறது. ‘சூள்’ ‘இந்தாருங்கள்”உங் களைத்தானே’ ‘என்ன’ என்று எவ்விதமாக அழைத்தா லும், செவிடரைப்போல் இருந்து விடுகிறார். பேசும் பொழுது, நான் ஒரு முறை ‘நீங்கள்’ என்று சொன்னால், அவர் அன்று முழுதும் எனக்குத் தாங்கள்’ பட்டம் கொடுக்கிறார். இந்த நிர்ப்பந்தத்துக்காக அவரைச் ‘சுந்து’ என்றழைத்து, அவருடன் ஏக வசனத்திற் பேசுகிறேன். எங்கள் வீட்டுக்கு ஒருவருமே வருகிற வழக்கமில்லாமை யால், இதில் ஒரு அசௌகரியமும் நேரவில்லை. இதை நானெழுதும் பொழுதே அவர் வாசித்துப் பார்த்து, “சும்மா எழுது; இதற்கெல்லாம் பயந்த புள்ளி யில்லை” என்று கும்மாளம் போடுகிறார். 

உலகம் எங்களை நடத்தும் விதத்தைப் பற்றிச் சிறிது கூறி, என் வரலாற்றை நிறுத்துகிறேன். 

நாங்கள் ஒரு பட்டணத்திலே பிராமணர் குடியிருக் கும் வீதியிலே ஒரு வீட்டிலிருந்தோம். அந்தப் பட்ட ணத்துக்கு முதலிற் போனவுடன் சத்திரத்தில் இறங்கி யிருந்தோம். எங்கள் விருத்தாந்தம் தெரியவந்த வுடன், எங்களைச் சத்திரத்தினின்றும் வெளியாக்கச் சிலர் முயன்றார்கள். அது “லோகல் பண்டு ” சத்திரமானபடியால், அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை. பின்பு அவ்வூரிலே பிராமணர் தெருவில் வீடு கொடுக்கக் கூடாதென்று முயன் றார்கள். என் கணவரும் பிடிவாதக்காரர். அத்தெருவி லேயே குடியிருக்கிற தென்று நிச்சயித்தார். முன்பொரு வர் மாதம் மூன்று ரூபா குடிக்கூலி கொடுத்துவந்த வீட் டை, மாதம் ஏழு ரூபாவுக்குத் திட்டம் செய்து, பிராமணர் வீதிக்கே குடிப்போனோம். நம்மவர் வைதீகக் கொள்கை களும் அபிப்பிராயங்களும் ரூபாயைப் பொறுத்தவை களே. என் கணவர் இஷ்டப்படி, நான் அத்தெருவில் ஒவ்வொரு பெரிய மனுஷன் வீட்டுக்கும் சென்று, வீட்டு எஜமானிகளை ஒரு முறை பார்த்து வந்தேன். அவர்கள் ஒருவரும் என் வீட்டுக்கு என்னைப் பார்க்க வரவேயில்லை. அந்தத் தெருப் பிராமணர் வீடுகளில் பால் மோர் தயிர் விற்பதுண்டு. ஆனால் எங்களுக்குக் கொடுப்ப தில்லை என்று சொல்லிவிட்டார்கள். அடுப்பு நெருப்புக்கூட எங் களுக்குத் தருகிற தில்லை. அவ்வூருக்குப் போகும்பொ ழுது, மாதம் பதினைந்து ரூபா சம்பளமாகச் சென்னப் பட்டணத்திலிருந்து ஒரு பிராமண வேலைக்காரனை அழைத் துப் போயிருந்தோம். ஒரு மாதத்திற்குள் அத்தெரு வார் அவனை ஒட்டிவிட்டார்கள். நானே வீட்டு வேலை களை யெல்லாம் செய்யவேண்டிய தாயிற்று. இதைக்கண்ட என் கணவர், வீட்டைச் சுத்தம் செய்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வஸ்திரங்களைத் தோய்த்துப்போட வும், எனக்கு உடம்பு சரியாக இல்லாவிட்டால் ஜலம் கூட மொண்டு வரவும், ஒரு சூத்திர வேலைக்காரியைத் திட்டம் செய்துவிட்டார். ஆவணி மாதத்தில் உபாகர்மம் வந்தது. எங்கள் வீட்டுக்குப் புரோகிதர் வரவில்லை. என் கணவர் ஒன்றும் செய்யவு மில்லை. அமாவாசை சிராத்த தினங் களுக்குக் கூடப் புரோகிதர் வருகிறதுமில்லை; என் கணவர் ஒன்றும் செய்கிறது மில்லை. அதனால் ஏதாவது தோஷம் நேரிட்டால், அதெல்லாம் அவ்வூர்ப் பிராமணரைச் சேர்ந்த தே என்று சொல்லிவிட்டார். நான் ஒரு தடவை சுரத் தினால் சாகக் கிடந்தேன். சகல வேலைகளையும் விட்டு விட்டு, எனக்குத் தானே பத்தியம் செய்து போட்டு, வேண்டிய ஊழியங்களெல்லாம் செய்து, ஒரு நிமிஷமும் என் படுக்கையை விட்டசையாது, இராப் பகல் தூக்க மின்றி அவரே என்னைப் பேணிக் காப்பாற்றினார். அக்கம் பக்கம் வீட்டார் எட்டிப் பார்க்கவு மில்லை. என் பெண் குழந்தைகளில் ஒன்று, இரண்டாவது மாதத்தில் இறந்து போய்விட்டது. ஒருவருமே வரவில்லை. அவரே அதை எடுத்துக்கொண்டு போய்ப் புதைத்துவிட்டு வந்தார். இது நடந்தபின், அது கருமசண்டாளர் தெருவென்றும், அதி லிருந்தால் தமக்குள்ள பிரமணியமும் போய் விடுமென் றும், அடுத்த நாளே சூத்திரர் தெருவுக்குக் குடிப்போய் விட்டார். அவர் செய்யும் வியாபார விஷயத்திற்கூட அவரைக் கெடுக்க முயன்றார்கள். ஆனால் ஒன்றும் பலிக்க வில்லை. அவர் தமயனோ, தன் வீட்டு விசேஷங்கள் ஒன்றுக்கும் எங்களை அழைக்கிறதே யில்லை. எங்கள் வீட் டுக்கும் வருகிறதே யில்லை. அவர் பந்துக்கள் அனைவரும் எங்களை அவ்வண்ணமே விலக்கிவிட்டார்கள். நான் என் தமயன் வீட்டுக்குப் போக முடியவில்லை. அவன் மட்டும் எப்பொழுதாவது வந்து எங்களுடன் இரகசியமாய்த் தங்கிப் போவான். என் மதினியையேனும் அவர்கள் குழந்தைகளையேனும் நான் பின்பு பார்த்ததே யில்லை. இவை யெல்லாம் எனக்கு மிகவும் மனவருத்த மாகவே இருக்கின்றன.ஆனால்,என் மாமியின் கீழ் நான் வாழ்ந்த தையும், என் தமயன் வீட்டில் அவன் குழந்தையைத் தொட முடியாமல் நான் இருந்ததையும் நினைத்துப் பார்த் தால், இது சுவர்க்கமே அன்றோ? அன்றியும், என் பிராண நாதர் அன்பும் ஆதரவும் அளப்பரிய காதலும் என்னை எப்பொழுதும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக் கின்றன. அவரோ, இதற்கெல்லாம் விசாரப்படவே இல்லை. முந்தாநாள் எங்களுக்குள் நடந்த சம்பாஷணை யை மட்டும் கூறி, முடித்து விடுகிறேன். குண்டூரில் ஒரு வி தவா விவாகம் நடந்த தென்று பத்திரிகை மூலமாய்த் தெரியவந்த பொழுது, அவ் விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது, 

நான்:-“யார் என்ன சொன்னாலும், விதவா விவாகம் இரண்டாம் பக்ஷம்தான் ” என்றேன். 

என் கணவர்:- கேவலம் உண்மையே. பெண்கள் விதவைகளாகப் பிறக்கிறதில்லை. ஆனால் கர்ப்பத்திலிருக்கும் பொழுதே கலியாணம் செய்ய ஆரம்பித்து விட்டால், இப்பொழுது போன்ற விதவா விவாகம் மூன்றாம் பக்ஷமாகி விடக் கூடும். 

நான்:- இதென்ன கேலி? குதர்க்கமே பேசுகிறீர்களே.  

என் கணவர்:- தாங்கள் தமிழில் சொன்னதைத் தான் நான் தென் மொழியில் சொல்கிறேன். 

நான் :- இனிமே வில்லை. மன்னித்துக்கொள். ஒரு ஸ்திரீ ஒரு புருஷன்மேல் காதலா யிருந்தபின் வேறொருவனை மணம்புரிவதெப்படி? 

என் கணவர்:- புருஷன் எப்படிச் செய்கிறானோ அப் படியே. ஒரு புருஷன் ஏக காலத்தில் இரண்டு ஸ்திரீகளைப் பெண்டாகக் கொண்டிருக்கிறானே; அதெப்படி? அதில்லாவிட்டாலும், எல்லா விதவைகளும் கலியாணம் செய்துக் கொண்டே தீரவேண்டுமென்று சட்டத்தை ஒரு வரும் கோரவில்லையே. அவரவர் இஷ்டம்போல் நடக்க இடந் தரவேண்டுமென்று மாத்திரமே கேட்கிறோம். 

நான்:- அதெல்லாம் இருக்கட்டும்; நீ சொல்கிறதே சரியாக விருக்கட்டும், 

என் கணவர் :- என்ன தயவு! என்ன பொறுமை! 

நான்:- கேலி பண்ணாதே. குழந்தைகள் பெரியவர் களாய் விட்டால், பின் யோசனை யென்ன? எத்தனை நாளைக்கு இப்படி உலகத்தை எதிர்த்து நடக்கலாம்? 

என் கணவர் :- உலகம் – இவ்வாறு உபத்திரவப் படுத்துகிற வேறு சிலரைப்போல, நாமும் நடக்கிறது. உலகம் நம்மை விலக்கினால், உலகத்தை நாம் விலக்கி விடுகிறது. 

நான்:- நீ சொல்வது நன்றாகத் தெரியவில்லை. 

என் கணவர் :- இனிமேல் அரவத்திலே சொல்லுகிறேன்; கேள், பெண்டாட்டி:- 

இப்பொழுது, பள், பறை, சாணார், முதலிய கீழ் சாதிகள்’ இருக்கிறார்களே அவர்களை, உலகம், அதாவது மேல் சாதிக்காரர், அதாவது முக்கியமாய்ப் பிராமணரும் வேளாளரும், உபத்திரவப் படுத்துகிறார்கள். மலைமலை யாய்ப் பணமிருந்தாலும் வெள்ளிச் சோறும் தங்கச் சோறும் கிடையாது. கீழ்ச் சாதிக்காரர் உழுது பயிர் விளைத்தால்தான் மேல் சாதிக்காரர் உண்டுகொழுத்து வேதாந்தமும் சாஸ்திரமும் பேசலாம். இதைக் கூட அறியாமல் அவர்களை உபத்திரவப் படுத்துகிறார்கள். மேல்சாதிப் பிராமணர் முன்போல வேதமே ஓதிக்கொண் டிருந்தால், கீழ்ச்சாதிக்காரரும் பணிந்து உழுவார்கள். ‘நான் உத்தியோகம் பண்ணுகிறேன்; நீ முன்போலவே நீ யிரு’ என்றால் சரிப்படவில்லை. இவர்கள் உபத்திரவம் பொறுக்க முடியாமல், இவர்கள் சாதிக் கட்டில் மேற் கிளம்ப முடியாமல், அவர்கள் ஆயிரக் கணக்காய் கிறிஸ்து வேதத்திற் சேருகிறார்கள். ஹிந்துவான பறையன் தான் கிட்ட வரக்கூடாதே ஒழிய, கிறிஸ்தவன் ஆகி விட்டால் வரலாம். படிப்பிலும் நாகரிகத்திலும் மற் றெவ்விஷயத் திலும், சுதேச கிறிஸ்தவர் வெகு சீக்கிரத்தில் எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறார்க ளென்பதையும்; அதே சாதி களைச் சேர்ந்த ஹிந்துக்கள் எந்த நிலைமையில் இன்னும் இருக்கிறார்க ளென்பதையும் கவனித்துப் பார்த்தால், சாதிக் கட்டு எவ்வளவு தடை செய்கின்றதென்பது வெளி யாகிவிடும். உண்பதையும், உடுப்பதையும், உறங்குவதையும், சகல கிருத்தியங்களையும் மதத்தோடு கலந்தே நாம் பாழாகிறோம். கிறிஸ்தவர்களுக் குள்ளோ, அப்படி யில்லை. மதம் வேறு, மற்றவை வேறு. பின்னை என்ன? நம்மை இந்தப் பாழுலகம் எப்பொழுதுமே இப்படிச் சாதித்தால் கிறிஸ்தவர்களாகி விடுவதே உத்தமம். எந்த நாமத்தால் எந்த ரூபத்தால் கடவுளைத் தியானித்தாலும், எல்லாவற்றையும் சர்வேசுரனே ஏற்றுக் கொள்கிறாரென்று சந்தியாவந்தனத்திலேயே சொல்லியிருக்கிறது. ஹிந்துக்களது மூடத்தனமான பொறாமையால் கிறிஸ்தவ மதம் இலாபமடையட்டும். பிற்பாடு இவ்விதத் தொந்திரவுகள் ஒன்றுமே யிருக்கமாட்டாது. நம்முடைய குழந்தைகளேனும் சுகமாய் வாழ்வார்கள். 

நான் :- இது நிஜமாகத்தானா சொல்கிறாய்? 

என் கணவர்:- பின்னை யென்ன, பெண்டாட்டி! நீயே ஆலோசித்துப் பார். இவ்விதச் சாதிக் கட்டும் பழைய ஆசாரங்களும் இந்தக் காலத்தில் எத்தனை நாட் செல்லும்? இதை மட்டும் உறுதியாகக் கொள்: நம்முடைய பெரியவர்கள் கூடி மதத்தையும் மற்றவைகளையும் பிரித்தாலன்றி, அல்லது, காலத்துக்குத் தக்கபடி ஒழுக இட கொடுத்தாலன்றி, நாம் ஒருநாளும் முன்னுக்கு வரமாட்டோம். நமக்குள் இருப்பது போன்ற சாதிக்கட்டு வேறு எத்தேசத்திலுமில்லை. நம்மைப்போல் புருஷர் புத்திசாலிகளாயிருக்கும் எத்தேசத்திலும், பெண்கள் இவ்வளவு ஜடங்களாயில்லை. நமக்குள்ளும் இவையெல்லாம் மாறும் காலம் நெருங்கிவிட்டது. முன் ஆலோசனையோடு தக்கவாறு நடந்து கொண்டாலன்றி, பெரும் கேடுகள் விளைந்துவிடும். குளம் நிறைந்து தண்ணீர் எதிர்க்கும் பொழுது, மதகுகளைத் திறந்து தண்ணீருக்குப் போக்கு விடாவிட்டால் என்னாகும்? மதகு, கரை, எல்லாவற்றையும் வாரிக்கொண்டு போய்விடும்; அப்படியே காலவேற்றுமை விஷயத்திலும். 

நான் :- சரி ; எப்படியானாலும் சரி. என்னைக் கை விட்டுவிட மாட்டாயே? 

என் கணவர் :- பருப்பில்லாமல் கலியாணமா? பெண் டாட்டி இல்லாத வாழ்வா? உன்னைக் கைவிடுவதா யிருந் தால் இவ்வளவுக்கு வருவானேன்? நீதான் ஒரு வேளை எனக்குப் பைத்தியம் என்று நினைத்துப் பின்தங்கி விடுவ யோ, என்னவோ? 

நான்:- எனக்குத் தாயும் நீயே, தகப்பனும் நீயே, தெய்வமும் நீயே. உனக்கு நான் பட்டிருக்கும் கடன், என் தோலை யுரித்து உன் காலுக்குச் செருப்பாகத் தைத் துப் போட்டாலும் தீராது. இன்னொரு ஜந்மத்தில் நான் புருஷனாகவும் நீ என் பெண்டாட்டியாகவும் பிறந்து, என் கடனை ஒருவாறு தீர்க்க இடந்தர வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். 

என் கணவர் :- ஒரே ஒரு சிறிய சந்தேகம்: முதல் புருஷனா, இரண்டாம் புருஷனா? முதல் பெண்டாட்டியா, இரண்டாம் பெண்டாட்டியா? மாமியார் உண்டா. இல்லையா? 

நான்:-“போடா, எல்லாம் கேலிதான் உனக்கு. என் மனத்தி விருக்கிறதை நீ என்ன கண்டாய்? இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? நான் முன்னிருந்த கதி யென்ன, இப்பொழுது அநுபவிக்கும் ஆநந்தமென்ன? உலக மதிப்புப் பெரிதல்ல என்று, நீ எழுதினது இப் பொழுதுதான் தெரியவருகிறது” என்றேன். 

இதற்கு என் கணவர் சொன்னதாவது: “எல்லாம் எனையாளும் ஈசன் செயல். ஆனால் மனுஷப் பிரயத்தன மின்றி ஒன்றும் நடக்காது. மனிதனும் தெய்வத்தின் அம்சமே; ஆதலின், அவன் முயற்சிகளினாலும் செய்கைகளினாலுமே திருவுளக் கருத்து வெளியாகும். ஒன்றுஞ் செய்யாமல் சும்மா இருந்தால் ஒன்றுமே பலன் கிடையாது”

பின்னுரை 

மேலே கண்டபடி என் சரித்திரத்தை நான் எழுதி நிறுத்தி இருபதாண்டுகளுக்கு மேலாயின. இக்காலத்தின் முன்பாகத்தில் நாங்கள் பட்ட கஷ்ட நிஷ்டூரங்கரங்களையும், நாளடைவில் அவை குறைந்து வந்ததையும் விரித்தெழுத வேறொரு புஸ்தகம் வேண்டும். நவ நாகரிகமும் பெண் கல்வியும் நாட்டி ஒருவாறு தழைத்து வரும் இந்நாளிலுமே, பல இடங்களிலும் பல குடும்பங்களிலும் நான் பட்ட கஷ்டங்களை இன்னும் பலர் அநுபவித்து வருவது பிரத்தியக்ஷம். இவையாவும் ஒழிந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம சுதந்தரம் பெற்று, ஒவ்வொரு ஹிந்து குடும்பத்திலும் “காதலிருவர் கருத்தொக்க ஆதரவு பட்ட இன்பம்” தழைத் தோங்குமாறு கடவுள் அருள் புரிவாராக! 

– முத்து மீனாக்ஷி (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1924, அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை எட்வர்டு எலியட் ரோடு-மயிலாப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *