கனவுத் தீபாவளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 4,833 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1

ஐப்பசி மாதத்து அடைமழை பூமியனைத்தையும் தன்னுள் அமுக்க நினைத்தது போல் விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. அப்பெருவாரி மழையையும் லட்சியம் செய்யாமல் தன் கருமமே கண்ணாக, துணிந்து புறப்பட்டுச் செல்லும் ஓரிருவரைக் கோர முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் செய்யும் பேரிடியும் கண்ணைப் பறிக்கத் துணியும் மின்னலின் மின் வெட்டு ஒளியும் தம்மை மறந்து அச்சம் கொண்டு வீடு நோக்கித் திரும்பச் செய்தன. 

அவர்களில் ஒருவர் ராமநாதபிள்ளை. சே, இந்த மழையென்ன, மனுஷனை வெளியே போகவிடாது போலிருக்கே! என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார். 

நடுக்கும் உடலுடனும் நனைந்த உடையுடனும் உள்ளே நுழைந்த தந்தையைக் கண்டு உள்ளம் பதறிப்போனாள் செல்லம்மாள். 

‘தள்ளாத வயதில் உடம்பை உடம்பென்று பாராமல் அலைந்துகொண்டு படுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்வதைக் கேட்டால்தானே’ என்ற குறையுடன் வரவேற்றாள் மனைவி லக்ஷ்மி அம்மாள். 

“எதற்காக அப்பா, இந்த கொட்டுகிற மழையில் புறப்படவேண்டும்?” பரிவு, தோன்றும் தன் கேள்வியால் உபசரித்தாள் தந்தையை. 

“எல்லாம் உனக்காகத்தானம்மா’ என்று அவர் கூறியது சர்வசாதாரணம், ஆனாலும் செல்லாவின் மனதில் சுறுக் கெனத்தைத்தது. 

உனக்காகத்தான்…உன் ஹிம்ஸைக்காகத்தான்… ஏன் உன்னால் வரும் பேராபத்திலிருந்து மீளவேதான் என்றெல்லாம் சொல்வதற்கான அர்த்தத்தை அந்த ஒரே வார்த்தையில் அடக்கிச் சொன்னதாகக் கற்பித்துக்கொண்டாள். 

இத்தகைய கற்பனையினால் உள்ளம் புழுங்கிக்கொண்டிருந்த அவளுக்கு அடுத்துக் கூறிய ராமநாதபிள்ளையின் வார்த்தைகளைக் கேட்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 

எனது எல்லா முயற்சியும் உனது நன்மையின் பொருட்டே தானம்மா என்று அவர் கூறியபோது முன்பு கூறிய அதே வார்த்தையை மீண்டும் ஒருதரம் தன் மனதில் அழுத்திப் பதிவாக்கிக்கொண்டாள். 

அடக்கமுடியாத துக்கத்தினால் கண்ணீர் வெள்ளம் கரை புரண்டோடியது. 

மகளின் கண்ணீர் தந்தையின் மனதைச் சிதறடித்துவிட்டது. 

“எதற்காக அம்மா இப்பொழுது கண்ணீர் வடிக்கிறாய். எப்பாடுபட்டும் உனக்குச் செய்யவேண்டியதைச் செய்து போட்டு என் கடமையைத் தீர்த்துக் கொள்கிறேனம்மா.” 

அவர் கடமை என்றது அவளுக்கு கடன் என்பதாகப் பட்டது. அந்த வார்த்தை அவள் மனத்துக்கத்தைப் பெரிதும் கிளறிவிட்டது. மாறுபட்ட அந்த வார்த்தையினால் துக்கம் ரௌத்ரமாக மாறிய அதே கணம் தந்தையின் மீது பாயவும் தொடங்கியது. 

“என்று பெண்ணைப் பெற்றீர்களோ அன்றே அவளுக்குக் கடன் நிறையத் தொலைக்கவேண்டுமென்பது தெரிந்தது தானே புத்திசாலித்தனமாக முன் யோசனையுடன், பிறந்த அன்றே கழுத்தை நெறித்துப் போட்டிருந்தால்…” 

“செல்லா, இதெல்லாம் என்ன பேச்சென்று” இடைமறித்து அதட்டினாள் லக்ஷ்மி. 

“நான் என்ன சொல்லிவிட்டேன் லக்ஷ்மி. எதற்காக இந்தப் பெண் இப்படியெல்லாம் பேசுகிறது.” என்று தன் மனைவியிடம் அனுதாபம் நாடிச் சென்றார். 

“இன்னும் என்னத்தைச் சொல்ல வேண்டும்.சொல்வதெல்லாம் சொல்லித் தீர்த்துவிடீர்கள். நான் பெண்னாய்ப் பிறந்ததே உங்களுக்கெல்லாம் பெரும் சுமை தான்” என்று விக்கி விக்கி அழுதாள் மகள். 

“அப்படியெல்லாம் சொல்லாதே செல்லா. ஒரே பெண்ணான உனக்குச் செய்யாமல் அப்புறம் எந்தப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சீர் செய்யப் போகிறேன்” என்று மகளிடம் சமாதான முறையைக் கோரி வந்தார் தந்தை. 

“அப்படி நீங்கள் நினைத்திருந்தால்…”

“நினைக்காமலென்னம்மா நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன். அழகாய்க் குடியிருக்கிற வீட்டை விற்று நகையாய்ச் செய்து போடுவதில் பிரயோஜனமென்ன வென்றுதான் பார்க்கிறேன்.” 

“வீட்டைவிற்க மனமில்லாமல்தான் வீட்டோடு என்னையும் வைத்துச் சேர்த்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. உங்கள் மகள் ஊரைப்போல் வாழாமல், வாழா வெட்டி என்ற பட்டத்தைக் கட்டிக்கொண்டு வீட்டோடு அடங்கிக் கிடப்பது உங்கள் கண்ணுக்கு அழகாயிருக்கிறதல்லவா?” 

“அவர்கள் புத்திக்கெட்டினதிற்கு நாம் என்னம்மா செய்யமுடியும். என்றைக்கிருந்தாலும் அந்தச் சொத்து உன்னைச் சார்ந்தது தானே. இன்று அதைவிற்று செய்து போட்டுக்கொண்டாலென்ன? நாளை வீடாகவே எடுத்துக் கொண்டால்தானென்ன?”

“எல்லாம் எனக்கென்று பெயரளவில் சொல்லிக்கொண்டால் போதுமா? இன்று என் வாழ்வுக்கு உதவாத இந்தச் சொத்து. நாளை என் சொந்தமாகி நான் அனுபவிக்கப் போவதென்ன?” என்று விவாதித்தாள். 

“நீ சொல்வது ஒருவகையில் சரிதானம்மா. ஆனால் இருக்கிற ஒரே வீட்டையும் விற்றுவிட்டால் அப்புறம் எங்கள் கதி?” என்று விழித்தார். 

உங்கள் கதி என்னவானால் எனக்கென்ன என்பது போலிருந்தது குரோதம் நிறைந்த அவளது பார்வை. 

உங்கள் சுயநலனுக்காக உங்கள் வீட் டோடு கிடந்து மங்கி மடிய வேண்டியதுதானா என்கிற கேள்வியை வீசிவிட்டு, அறையினுள் புகுந்து கதவைத் தாளிட்டுக்கொண்டாள். 

2 

“லக்ஷ்மி சற்று வெளியே போய்விட்டு வருகிறேன்” என்று புறப்பட்டுவிட்டார் தந்தை. அவர் புறப்பட்ட வேகம் அவர் போகுமிடத்தைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. 

எப்படியும் அந்த வீட்டை அடமானமாகக் காட்டி யாரிடமாவது 5000 ரூபாய் வாங்கி வந்து வீட்டில் செல்லாவும் நாலுபேரைப் போல் குடித்தனம் நடத்தத் தொடங்கிவிடுவாள். 

செல்லாவின் கலியாணத்தின்போது வைர நெக்லஸ் வாங்கிப்போடுவதாக நகை ஜாபிதாவில் பதிந்திருந்தது. மாப்பிள்ளை பட்டம் பெற்றவர். உத்தியோகத்திலிருப்பவர் என்பதற்காகத் தம் சக்திக்கு மீறிய ஜாபிதாவே தயாரித்து விட்டார். ஜாபிதா எதிராளிக் கட்சி வசம் அகப்பட்டுவிட்ட பிறகு அவற்றில் கண்டதற்குச் சற்றேனும் குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிற நிலையிலிருந்தார்கள் பிள்ளை வீட்டார். ஜாபிதாவில் கண்டபடிசெய்து முடிப்பதானால் செல்லாவின் கலியாணத்தின் பிறகு ராமநாத பிள்ளையும் லக்ஷ்மியும் எங்காவது சத்திரம் சாவடி தேடிக்கொண்டு போயிருக்கவேண்டும். அந்நிலையில் காணச் சம்பந்திகள் மனம் சசிக்க மாட்டார்களென்பதற்காகத் தம்மை அந்நிலையினின்றும் முன் யோசனையுடன் காத்துக் கொண்டிருந்தார் ராமநாத பிள்ளை, 

அதன் பலனாக ஐந்நூறு ரூபாய் ரங்கூன் கமல நெக்லஸ் செல்லாவின் கழுத்தையலங்கரிக்க, ஐயாயிரம் ரூபாய் பெறுமான வீடு ராமநாத பிள்ளை குடும்பத்தார் வசிப்பதற்கென எஞ்சி நின்றது. 

உண்மையை எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்கமுடியும். மாட்டுப்பெண் கொண்டுவந்த சீர்களையெல்லாம் பெருமையுடன் மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டும் ஆர்வமுள்ள செல் லாவின் மாமியார் அன்றும் வந்திருந்த தன் சிநேகிதியிடம் மருமகளின் நகைகளைப்பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தாள், 

இவருக்கு இத்தனை செல்வாக்கில் பெண் கிடைத்து விட்டதே என்று பொருமலில் புழுங்கிக்கொண்டிருந்தாள் வந்தவள். ஏதாவது சொட்டை சொன்னால்தான் தன் மன திற்குச் சாந்தி கிடைக்கும் என்று ஆராய்ந்து கொண்டிருந்த அந்த அம்மாவுக்குப் போலி வைரம் கண்ணை உறுத்திற்று. 

“இந்த நெக்லஸ் அசல் வைரம் இல்லை போலிருக்கே” என்று இழுத்தாள் அந்த அம்மாள். 

”நன்றாய்ச் சொன்னே……!” என்று மேலே ஏதோ சொல்லத் தொடங்கினாள் மாமியார். 

“ஆமாம், அம்மா அது இமிடேஷன் கல்தான்” என்று உண்மையை ஒப்புக்கொண்டாள் செல்லா. 

அவ்வளவுதான், பிடி பிடி என்று பிடித்துக் கொண்டாள் செல்லாவை. அன்று அவளுக்கும் அவள் வமிசத்திற்கும் கிடைத்த புரட்டுக் காரப் பட்டம் இன்னும் எட்டு ஜன்மம் எடுத்தாலும் நெஞ்சைவிட்டு அகலாது. 

‘அத்தனை நெஞ்சத் துணிச்சலாடி உங்களுக்கு. எங்கள் தரம் தெரியாமல் போலியைக் கொடுத்து ஏமாற்றிய உன் அப்பன் காலடியிலேயே கிடந்து பிராணனை விடு. இனி அரைக் கணமும் என் வீட்டில் உனக்கிடமில்லை. ஆகையால் இப்பொழுதே இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுவிடு’, என்று வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தாள். 

கணவன் வந்துவிட்டால் தன்னைக் காப்பாற்றிவிடுவார் என்கிற நம்பிக்கையில் அப்படியும் இப்படியுமாகப் பொழுதைக் கடத்திப் பார்த்தாள் செல்லம்மா. 

கணவன் வந்தான். வந்தவன் செல்லாவுக்காகத் தாயாருடன் வாதாடுவதற்குப் பதிலாக, செல்லாவை ரயிலேற்றிவிட வந்தான். தாயார் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து தன்னை ரயிலேற்றத் துணிந்த தன் கணவனை இனி ஜன்மாதி ஜன்மத்திற்கும் ஏறெடுத்துப் பார்க்கக்கூடாதென்கிற வெறுப்புணர்ச்சி அவள் இதயமெங்கும் பரவிக் கிடந்தது. 

இதுவரை ஒன்றுமே பேசாமல் மௌன விரதத்தை அனுஷ்டித்துவந்த அவன் ரயில் புறப்படப்போகும் சமயம் ஏதோ கூறினான். 

‘உன் தந்தை வாக்களித்திருந்தபடி வைர நெக்லஸ் போட்டு அனுப்பினால் உனக்கு எந்த நிமிஷத்திலும் இங்கே வர உரிமை யுண்டு. எனது இதயத்தில் உனக்கென ஒதுக்கிவைத்திருந்த இடம் என்றும் உனக்காகவே காத்துக்கொண்டிருக்கும்’. 

இந்த மொழிகள் ரயிலில் மட்டுமல்ல. வீட்டோடு வந்து ஆறு மாதத்திற்குப் பின்னரும் இன்று நினைத்தாலும் அவள் மனதிற்கு இன்பமளிப்பதாயிருந்தது. அந்த இன்ப மொழிகளை நினைத்து நினைத்து உவகையில் மூழ்கி விடுவாள். துயரத்தால் நிரம்பியிருக்கும் தன் வாழ்வைச் சீர்படுத்தும் பொன்மொழியெனவே மனனம் செய்து வந்தாள் அன்று சொன்ன வார்த்தைகளை. அதைப் பலப்படுத்துவது போல் எப்பொழுதாவது அவள் கணவனிடமிருந்து வரும் கடிதங்களிலும் அதே கருத்தைக்கொண்ட எழுத்துக்களாகத்தானிருக்கும். 

அப்படித்தான் அன்று வந்த கடிதத்தையும் படித்துப் பார்த்துவிட்டு, தந்தையை வற்புறுத்தினாள். அவளுடைய நச்சரிப்புப் பொறுக்க மாட்டாமல்தான் மழையென்றும் பாராமல் வெளியே புறப்பட்டார். 

வெளியே கொட்டும் மழையைத் தாங்கச்சக்தியற்று உள்ளே நுழைந்தார் ராமநாதபிள்ளை. உள்ளே அவர் மகள் சொல்மாரியைத் தாங்க முடியாமல் மீண்டும் வெளியே புறப்பட்டுவிட்டார். 

3 

வீட்டை யாருக்கோ எழுதிக்கொடுத்து ஐயாயிரம் பெற்றுக்கொண்டு வந்துவிட் டார். பணத்துடன் வந்துசேர்ந்த தந்தையைக் கண்டு குழந்தைபோல் துள்ளிக் குதித்தாள் களிப்பினால். உள்ளத்தில் பொங்கும் உவகையை மெல்லிய இசையின் மூலம் வெளியே பரவவிட்டபடியே அன்றைய வேலைகளையெல்லாம் வெகு சுறு சுறுப்பாகச் செய்து முடித்தாள். 

நாலு மணிக்கு மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு நகைக்கடைக்குப் புறப்பட்டார் ராமநாதபிள்ளை. 

திரும்பும்போது தன் மகள் வதனத்தில் நிலவிய இன்ப நிலையைக் கண்டு மனம் மகிழ்ந்தவராய் அவள் கழுத்தை நோக்கினார். 

அழகே உருவாய்த் திகழும் தன் மகளையும் அந்த அழகைப் பன்மடங்கு சொபையுடன் எடுத்துக்காட்டிய அந்த மாலையையம் கூர்ந்து நோக்கினார். இந்த அழகுப் பொருள்கள் இரண்டுக்கும் நாமே சிருஷ்டி என்கிற பெருமிதம் அவர் நடையில் துள்ளல் போட்டது. 

செல்லாவோ இந்த உலகத்தையே மறந்து கனவு லோகத்தில் கஞ்சரித்துக்கொண்டிருந்தாள். மறுதினமே தன் கணவன் அழைத்துப் போக வந்துவிடுவாரென்றும் இந்த வருஷம் தீபாவளியில் கணவனுடனும் மாமன் மாமியுடனும் களிக்கலாமென்கிற இன்ப எண்ணமும் அவளை இவ்வுலக நினைவையே மறக்கச் செய்தது. 

அவள் கடிதத்தில் கண்டபடி மறுதினமே கணவன் வந்து அழைத்துப் போய்விட்டான். சொன்னதை வாங்கிப் போட்டுக்கொண்டு வந்ததற்காக மாமி தன்னைக் கண்ணில் வைத்து ஒற்றிக்கொள்வாள் என்று நினைத்தாள். அதற்குப் பதிலாக அவளைக் கண்ணில் வைத்துக் கரித்துக்கொட்ட மாமி எண்ணங் கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கு எப்படித் தெரியப்போகிறது. 

தன்னைப் பெற்றவர்களைப் பலவந்தப்படுத்தி பல ஹிம்சைக்கும் உள்ளாக்கி அந்நகையைப் பெற்றுக்கொண்டு வந்தாள் பிடிவாதமாக. அதன் பிறகாவது அவள் வாழ்வு வளம் பெற்ற தாயில்லை. 

அன்று சிநேகிதியின் முன், தான் பட்ட அவமானமே மாமியின் மனதை அரிந்து கொண்டிருந்தது. இன்று மருமகள் அதே நகையைக் கொண்டுவந்துவிட்டாள் ஆனாலும் தான் பட்ட அவமானம் அவமானம்தானே என்கிற எண்ணம் ஆழப்பதிந்துபோயிருந்த அந்த மாமியாரின் மனல், இதன் காரணமாகக் குடும்பத்தில் எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமே. குடும்பம் இரண்டு கட்சியாகப் பிளவு பட்டு நின்றது. கணவன் மாமன் மாமி மூவரும் ஒரு கட்சி. அவள் மட்டும் தனிக்கட்சி. 

தனியாகி நின்ற அவள் எத்தனையோ கஷ்டத்தையும் சகித்துக்கொண்டு பொறுமையுடன் எப்படியோ காலம் தள்ளிவந்தாள். 

இந்தச் சமயத்தில் அவள் பெற்றோர் வசிக்கும் ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். வீட்டை விற்ற பிறகு இராமநாதபிள்ளையின் சொற்பச் சம்பளத்தில் குடியிருக்கவும் செலவழித்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டாராம். அதுவும் சில நாளைக்கே. வயதாகிவிட்டபடியால் இப்பொழுது வேலையுமில்லாமல் அவர்கள் படுகிற அவதியைப்பற்றி ஊரிலிருந்து வந்திருந்தவர் கூறியதைக் கேட்டபோது செல்லாவின் மண்டையில் ஓங்கி அடித்தது போலிருந்தது. 

எந்த நகைக்காகப் பெற்றோர்களைத் துன்புறுத்தி, கஷ்டத்திற்குள்ளாக்கினாளோ இன்று அந்த நகையால் அவள் அடைந்த பலன்? மாமியார் அதைத் தன் பெண்ணுக்கு வாங்கிப் போட்டு, புருஷன் வீட்டிற்கு அனுப்பிவிட்டாள். 

நகைதான் தங்காமல் போனாலும் அன்பாவது உண்டா? அதுவுமில்லை. அநுதாபம்கூடக் கிடையாத அவர்களுக்காக இன்று தன் பெற்றோர்களைத் தெருவில் நிற்கவைத்தது நியாயம் தானா என்று இடித்துக்கூறியது அவள் மனம். 

“ஐயோ! அப்பா இந்த அற்ப நகைக்காக உங்களை என்னபாடு படுத்தினேன்” என்று கதறிவிட்டாள் வாய்விட்டு. 

4 

“ஏண்டி செல்லா! என்ன உளர்றே” கதவைத் திறந்துகொண்டு வந்தாள் லக்ஷ்மி அம்மாள். 

“அப்பா எங்கேம்மா. வீட்டை விற்பதற்காக வெளியே போய்விட்டார்களா அம்மா ” என்று பதறிக்கொண்டே கேட்டாள். 

“விற்றுவிட்டே வந்துவிட்டேனம்மா” என்று கதறிக்கொண்டே வந்து சேர்ந்தார் தந்தை. 

“வேண்டாம் அப்பா வீட்டை விற்று  எனக்கு நகை செய்துபோடவேண்டாமப்பா. பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று அவள் கூறியதைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டு நின்றனர். 

“ஏது ஏது, இத்தனை நேரம் என்னை விரட்டுவிரட்டு என்று விரட்டினாய். இப்பொழுது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொல்கிறாய். கெஞ்சினால் மிஞ்சுவது மிஞ்சினால் கெஞ்சுவது என்ற பழமொழி உன்வரையில் சரியாக இருக்கிறதே” என்று சிரித்தார் தந்தை. வீட்டை விற்றுவிட்ட துக்கம் ஒருபுறமிருந்தாலும் மகளின்போக்கு அவருக்குச் சிரிப்பை மூட்டியது. 

“அன்பினால் வாழமுடியாத நான் பணத்தினால் வாழவேண்டிய அவசிய மில்லையப்பா. இன்று வரை நெக்லஸு க்காக வீட்டை விற்றீர்கள். நாளை வைர ஒட்டியாணம் கேட்டால், விற்பதற்கு என்ன இருக்கிறது? இருக்கிற ஒன்றையும் என் பொருட்டு விற்றுவிட்டால் நாளை உங்கள் கதி?” மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத் துக்கொண்டது. 

“என்னைப்பற்றிய கவலை உனக்கெதற்கம்மா”

“அதையே தான் நானும் கேட்க விரும்பினேன். உங்களைப்பற்றிய கவலை எனக்கில்லையா?” என்று மடக்கினாள். 

வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டு மூவரும் திரும்பினர் வாசற் பக்கம். திரும்பிய அவர்கள் ஆச்சரியத்தினாலும் ஆனந்தத்தினாலும் அப்படியே கல்லாய்ச் சமைந்து நின்றனர். 

வண்டியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான் செல்லாவின் கணவன். 

‘மாப்பிள்ளை வாருங்கள்’ என்று நாக்குழற வரவேற்கும் மாமனாருக்கும் அப்பாலிருந்த அவன் மனைவியை நோக்கி வட்டமிட்டன அவன் கண்கள். 

இப்பொழுதாவது மனம் வந்ததா என்று கேட்பது போலிருந்தது அவள் பார்வையில் தோன்றிய கெஞ்சல் சுபாவம். 

“சாயந்திர வண்டியில் புறப்பட்டுவிடலாம், செல்லா தயாராயிரு” என்று கூறியபோது செல்லாவுக்குத் தான் கேட்டது கனவா நனவா என்றே பிரமையாக இருந்தது. 

பெற்றோரை நமஸ்கரித்துவிட்டு வண்டியில் ஏறியபிறகுதான் அவளுக்குத் தான் காண்பது கனவல்ல என்பது உறுதிப்பட்டது. வண்டி சிறிது தூரம் சென்றது. தன்னையே நோக்கிக்கொண்டிருக்கும் கணவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க நினைத்தவள். 

“நீங்கள் பொல்லாதவர்கள்” என்றாள். 

“இல்லை நீதான்” என்று அவன் திருப்பிச் சொல்லவே திடுக்கிட்டுவிட்டாள். 

“நானா? நான் என்ன செய்தேனாம் உங்களை” 

“அடேயப்பா இன்னும் என்ன செய்யவேண்டும். இரண்டு மூன்று நாட்களாக என்னைப் படுத்திவைத்த பாடு.” 

“நானா? கனவுகண்டீர்களா.” 

“கனவேதான் கனவில் தோன்றி என்னுடைய செய்கைகளை, அம்மாவுக்குப் பயந்து உன்னைப் புறக்கணித்துவிட்டு திருப்பி அழைக்கத் துணிவில்லாமல் கோழையாக நின்ற என்னை இடித்துக் காட்டி…”

“மேலே சொல்லுங்கள்.”

“சொல்வதற்கென்ன இருக்கிறது. மறு ரயிலில் புறப்பட்டு வந்து உன்னையும் கூடவே அழைத்துச் செல்லும் துணிவுக்கு வீரனாக்கி விட்ட உனக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டாமா” என்று கூறினான். 

ஆனால் அவளோ கணவனுக்கு மனம் மாறும் நிலையிலும், தந்தையை நச்சரித்துக் கொண்டிருந்த தன் மனம் மாறும் அளவுக்கும் தோன்றிய கனவுச் சிருஷ்டிக்குத் தன் மனமார்ந்த நன்றியைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

– காவேரி, விக்ருதி மலர் 10, கார்த்திகை இதழ் 4, நவம்பர் 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *