பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,684 
 
 

அன்றும் கௌரிக்கு ஏமாற்றம்தான்!

“ஒண்ணும் இல்லீங்க அம்மா!” என்று வார்த்தைகளால் சொல்லியதை விளக்குவதுபோல் இடது கையிலிருந்த கடித அடுக்கை நழுவவிட்டு விடாமல் ஜாக்கிரதையாக வலது கையை மேலே தூக்கி விரல்களை விரித்துக் கிடையாதென்று மறுப்பதற்கு அபிநயமாக ஒரு சுழற்றுச் சுழற்றி அதைச் சைகையாலும் நிரூபித்த பின், இருந்தால் கொடுக்க மாட்டானா?’ என்பதுபோல் தெரியத் தனக்குத்தானே சிரித்தபடி மேலே நடந்துவிட்டார் தபால்கார நாயுடு. நாள் தவறாமல் கடிதங்களை சார்ட்’ செய்யும் போது கௌரி நம்பர் 17, கனகம்மாள் ஸ்டிரீட் என்று விலாசமிட்ட, ஒரு கார்டையோ, கவரையோ, இண்லண்ட் கவரையோ ஆவலோடு எதிர்பார்த்துத் தேடுவது கடந்த சில மாதங்களாக நாயுடுவுக்கு ஒரு வழக்கமாகியிருந்தது. தபால்காரன் என்பவன் பலருடைய கடிதங்களைச் சுமந்து கொண்ட போய்ச் சேர்க்க வேண்டும். அப்படிச் சுமந்துகொண்டு போகிற கடிதங்களில் அவற்றை அடையப் போகிறவர் களின் சுகமும் இருக்கலாம், துக்கமும் இருக்கலாம். அதிர்ச்சியும் இருக்கலாம். ஆனந்தமும் இருக்கலாம். ஆனால் அவற்றைத் தபால்காரன் சுமப்பதில்லை என்றாலும் இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்ணுக்குப் பதில் கடிதம் ஒன்றும் கொடுக்காமலே போகிற சுமை நாயுடுவின் மனத்தில் நாளுக்கு நாள் கனத்துக்கொண்டே போயிற்று. ஒவ்வொரு நாளும் சுற்று முடிந்து கடிதங்களைப் பட்டு வாடா செய்தான பின் அவருடைய கைகளின் பாரம் குறைகிற சமயம் மனத்தின் பாரம் அதிகமாகும்படி செய்திருக்கிறாள் இந்தப்பதினேழாம் நம்பர்ப் பெண். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட சர்வீஸில் தபால்கார நாயுடு இப்படி யாருக்காகவும் மனமிரங்கி உருகியதும் தவித்ததுமில்லை .

“நாங்க குங்குமம் சொமக்கிற கழுதைம்பாங்களே, அது மாதிரிங்க கொண்டு போய்க் கொடுக்கிற கடுதாசிலே நல்லதோ கெட்டதோ, சுகமோ, துக்கமோ எது வேணுமானா இருக்கலாம். அதுனாலே நாங்க பாதிக்கப்படறதில்லே” என்று நாயுடு சில சமயங்களில் விலாசதாரர்களிடம் வேதாந்த பரமாகப் பேசுவதும் உண்டு. அப்படிப் பேசும்போது ஏதோ கை நிறையச் சுகதுக்கங்களை அல்லது இன்ப துன்பவங்களை அடுக்கிக் கொண்டு போய் அவரவர்களுக்குச் சேர வேண்டியதை அவர்களுடைய விலாசம் தவறாமல் உதறிவிட்டுப் பாரத்தைக் குறைத்துக் கொள்ளும் விதியின் நடுநிலைமை பிறழாததொரு நாயகனைப் போல் அவருடைய குரல் ஒலிக்கும். தபால்காரன் வருகின்ற நேரத்தை எதிர்பார்த்து அந்த நேரத்தை நம்பும் ஆவலிலேயே மற்ற நேரத்தையெல்லாம் போக்கிவிட்டு நிற்கும் அசடுகளை அவர் நிறையப் பார்த்திருக்கிறார். அப்படி அசடுகளில் ஒருத்தியாக இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்ணை அவரால் நினைக்க முடியாது. பதினேழாம் நம்பர் வீடு என்கிற எட்டு ஒண்டுக் குடித்தனங்களடங்கிய நீண்ட இருள் மாளிகையில் ஏதோ ஒரு சின்ன அறையில் அந்தப் பெண்ணும் அவளுடைய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள், தினந்தோறும் காலையில் அதே பத்து மணிக்குத் தபால்கார நாயுடு முதல் டெலிவரிக்கான கடிதங்களோடு கனகம்மாள் தெருமுனையில் திரும்பி உள்ளே நுழைவதற்கும் அந்தப் பெண் குழந்தைகள் பின் தொடர வாசலுக்கு வந்து ஏக்கத்தோடு நிற்பதற்கும் சரியாக இருக்கும்.

“கௌரீன்னு ஏதாவது இருக்கான்னு பாருங்க நாயுடு?” என்று அந்தப் பெண் பொறுமையையும் நம்பிக்கையையும் விட்டுவிடாமல் நான் தவறாமல் நிதானமாகக் கேட்கிறபோது, இவளுக்கு இல்லை என்று சொல்லியாக வேண்டியிருக்கிறதே’ என்ற ஏக்கத்தோடுதான் நாயுடுவும் பதில் சொல்லியிருக்கிறார். சில வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகி ஆறவிட்ட கூந்தல் முதுகிலே காடாய்ப் புரள நெற்றியில் குங்குமமும் கண்களில் தாபமுமாக சாட்சாத் மகாலட்சுமியே நேரில் வந்து நின்றுவிட்டது போல், எனக்கு ஏதாவது கடிதாசு இருக்கா பாருங்க?’ன்னு அந்தப் பெண் கேட்கிறபோது ஒண்ணும் இல்லீங்களே அம்மா’ என்று சொல்லிக் கையை விரிப்பதற்குள் அவர் மனம் இரகசியமாக உள்ளேயே அழுது ஓய்ந்திருக்கிறது. அந்தப் பெண் கௌரியின் கணவன் குருமூர்த்தி பக்கத்து பஜாரில் உள்ள கிருஷ்ணபவான் ஹோட்டலில் சர்வராக இருந்து படிப்படியாக முதலாளியின் அபிமானத்தைக் கவர்ந்து முடிவில் காஷியராக உயர்வு பெற்றுக் கல்லாவில் உட்கார்ந்திருந்தான். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஒருநாள் கிருஷ்ண பவான் கல்லாவில் நிறையப் பணம் திருட்டுப் போய்விட்டதாம். பில் போடுகிறவர்களின் ஒத்துழையாமையினாலோ பொறாமையினாலோ காஷில் பணம் குறைந்திருக்கலாம். அல்லது குருமூர்த்தியைத் தவிர கல்லாவில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடுகிற மற்றொரு நபரான முதலாளியின் சிறிய மகன் சுந்தரம் ஏதாவது மைனர் விளையாட்டுக்காகப் பணத்தைச் சொல்லாமலே கையாடியிருக்கலாம். பழி என்னவோ குருமூர்த்தியின் தலையில் தான் வந்து விழுந்தது. முதலாளி அவனைக் கன்னா பின்னாவென்று பேசி வேலையிலிருந்தும் துரத்திவிட்டார். செய்யாத குற்றத்தை மறுக்கவும் திராணியின்றித் தலை குனிந்தபடியே விலகி வெளியில் வரும் சமூகக்கோழைகளில் குருமூர்த்தியும் ஒருவன் செய்த குற்றத்தை மறைத்துத் தப்பித்துக் கொள்வது எப்படிச் சமூகத் துரோகமோ அப்படியே செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வதும் ஒரு வகையில் சமூகத் துரோகம்தான். ஏனென்றால் தான் செய்யாத குற்றத்தைத் தன் தலையில் போட்டுக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடியே வெளிவருகிற கோழை அந்தக் குற்றத்தை உண்மையில் செய்தவனைக் காப்பாற்றிக் கொடுக்கிற சமூகத் துரோகத்தையும் செய்ய உடந்தையாகிறான். குருமூர்த்தி என்றுமே அப்பாவி. வேலை போன மறுநாள் எங்கோ பக்கத்து நகரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டுக் கௌரியிடம் ஐந்து ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு போனவன் நாளது தேதி வரை என்ன ஆனான், எங்கே போனான் என்ற தகவலே தெரியாமல் கிணற்றில் கல் போட்ட மாதிரி இருக்கிறது. தபால்காரர் நாயுடுவுக்குக் குருமூர்த்தியை அதிகம் தெரியாதென்றாலும் ஓரளவுக்குத் தெரியும். வருகிற தபால்களிலிருந்து மனிதர்களை ஓரளவுக்குக் கணித்து வைத்திருந்தார் நாயுடு. இந்தக் குருமூர்த்திக்குச் சாமியார்கள், பண்டாரங்கள், சோதிடர்கள் ஆகியவர்கள் மேல் பித்தும், அபிமானமும் அளவுக்கதிகமாய் உண்டு. ஆண்டி மலை ஸ்வாமிகளிடமிருந்து அவனுக்கு வாரா வாரம் தபாலில் விபூதியோ ஏதேனும் ஓர் இரட்சைக் கயிறோ வரும். இருந்தாற் போலிருந்து திடீரென்று, குருமூர்த்தி இரண்டு மூன்று நாள் ஊரில் தென்படமாட்டான். மூன்றாம் நாள் திரும்பி வந்தபின் ‘ஆண்டிமலைக்குப் போய்ச் சுவாமியைத் தரிசனம் பண்ணிவிட்டு வந்தேன் அண்ணா ! அப்புறம்தான் மனசு நிம்மதியாச்சு! பேசிண்டே இருந்தப்ப சுவாமி ஒரு பிடி மண்ணை அள்ளி என் கையிலே போட்டார். அது சந்தனமா வந்து விழுந்தது’ என்று யாரிடமாவது பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். மனிதனை அவன் வாழ்ந்து கொண்டிருக்கிற அசல் சுகதுக்கங்கள் நிறைந்த மண்ணின் மேலும், சுற்றியிருப்பவர்கள் மேலும் நம்பிக்கையில்லாமல் பண்ணி விடுகிற எந்தச் சாமியாரையும் நாயுடுவுக்குப் பிடிக்காது. ஆனாலும் குருமூர்த்தியின் மேல் மட்டும் அவருக்கு ஏதோ ஓர் அபிமானம் உண்டு. ‘வம்பு தும்புக்குப் போகாதவன் – நாணயமான பையன்’ என்கிற அபிமானம் தான் அது. எனவே ஊரில் பலர் நம்பியது போல் கிருஷ்ணபவான் கல்லாப் பெட்டியிலிருந்து குருமூர்த்தி கால் காசுகூடத் திருடியிருக்க முடியாதென்றுதான் நாயுடுவும் நம்பினார்.

குருமூர்த்தி ஊரிலிருந்து காணாமல் போன ஆறாவது நாளோ, ஏழாவது நாளோ வழக்கமாக அவருக்குப் பிரசாதமோ, இரட்சைக் கயிறோ , அனுப்பும் சாமியார்கள் யாரையாவதுதான் தேடிக் கொண்டு போயிருப்பார் என்ற அனுமானத்தோடு, ஆர்.எம்.குருமூர்த்தி, கேர் ஆஃப் ஸ்ரீ ஆண்டிமலைச் சித்தர் சுவாமிகள் மடம் – ஆண்டி மலை – போஸ்ட் என்ற விலாசத்துக்கு ஒரு கவர் எழுதித் தபாலில் சோர்த்துவிடச் சொல்லி நாயுடுவிடம் கொடுத்திருந்தாள் கௌரி. அவள் அந்தக் கடித உறையை ஒட்ட வில்லை. நாயுடுவும் அதை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் அப்படியே ஒட்டித் தபாலில் சேர்த்துவிடத்தான் நினைத்தார். இருந்தாலும் ஏதோ ஓர் ஆவலால் தூண்டப்பட்டு அதைப் படித்துவிட முனைந்தார். மிக இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை அதிகமாகத் தாங்கிக் கொண்டு திணறும் ஓர் ஏழைக் கணவனின் ஏழை மனைவி படுகிற வேதனைகளையெல்லாம் கொட்டி அவள் அதைத் தன் புருஷனுக்கு எழுதியிருந்தாள். கடிதத்தைப் படிக்கத் தொடங்கிய நாயுடு கண் கலங்கினார்.

‘தேவரீர் திருவடிகளில் அடியாள் கௌரி அநேக நமஸ்காரம் செய்து எழுதிக் கொள்வது. இன்றுடன் நீங்கள் புறப்பட்டுப் போய் ஏழு நாட்கள் ஆகின்றன. எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்? ஒரு தகவலும் தெரியாமல் மனசுக்கு ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. குழந்தைகள் கமலியும், பாபுவும் அப்பா எங்கே போயிருக்கிறார் சொல்லும்மா’ன்னு சதா என்னைப் பிய்த்து எடுக்கிறார்கள். ஸ்டோர்க்காரக் கிழவர் வீட்டு வாடகைக்காக மூணுதரம் ஆளனுப்பிவிட்டார். எனக்கானால் ஒரே கவலையாயிருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. நீங்கள் போன இடத்திலிருந்து ஒரு வரி கடுதாசு எழுதக்கூடவா ஒழியலை? குழந்தைகளை வைத்துக் கொண்டு நான் தனியாகக் கஷ்டப்படறேன். இந்தக் கையிலே கமலி, அந்தக் கையிலே பாபு ; போறாததற்கு வயித்திலே ஒண்ணு … என்னை எல்லாரும் நச்செடுக்கறா. பால்காரன் பாக்கி, மளிகைக்கடை பாக்கி…. எல்லாம் பாக்கி நிற்கிறது. பொறுப்பில்லாதவர் மாதிரி இப்பிடிப் போயிட்டா என்ன பண்றது…”

… இப்படி ஒன்றா இரண்டா? கடந்த மூன்று மாதங்களுக்குள் குருமூர்த்தி போயிருக்க முடியுமென்று அவர்கள் நினைத்து அநுமானித்த மடங்கள், சோதிடர்கள், சித்தர்கள், சிநேகிதர்கள், உறவினர்கள் எல்லாருக்குமாகப் பத்துப் பதினைந்து கடிதங்களுக்கு மேல் எழுதியாயிற்று. ஒரு கடிதத்துக்கும் பதில் இல்லை . பதினேழாம் நம்பர் வீட்டுக்கு – கௌரிக்கு ஒரு பதில் கடிதத்தையாவது கொடுத்து விட்டுத் தம் உத்தியோகத்திலிருந்து ரிடையராக வேண்டுமென்பது தபால்கார நாயுடுவின் ஆசை

பாவம்! அவர் ரிடையராவதற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தன. கடந்த கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தம் கைப்படக் கொண்டு போய் வழங்கிய பல்லாயிரம் கடிதங்களுக்காக அவர் எவ்வளவோ பெருமைப்படலாம். அவரோ வழங்க வேண்டிய கடிதமொன்றை எதிர்பார்த்து இன்னும் கைக்கு வந்து சேராத கடிதமொன்றை இனி வரும் வரும் என்று கருதித் தவித்துக் கொண்டிருந்தார். வந்து சேராத அந்தக் கடிதமும் வந்து சேர்ந்து அதைக் கௌரியிடம் கொண்டு போய்க் கொடுத்தாலொழியத் தமது உத்தியோக வாழ்க்கை குறைவுடையதாகவே முடியும் என்பது போல் நாயுடுவுக்கு ஸென்டிமென்டலாக ஒரு தவிப்பு வந்துவிட்டது. கடைசி நாளில், கடைசி டெலிவரியிலாவது ‘ஒண்ணுமில்லிங்களே, அம்மா!’ என்ற வழக்கமான எதிர்மறை வார்த்தைகளை மாற்றி, அம்மா உங்களுக்கு ஒரு கடிதாசு வந்திருக்கு’ என்று முகம் மலர அகம் மலர எடுத்துக் கௌரியிடம் கொடுத்துவிட வேண்டுமெனத் தவித்தார் நாயுடு. கனகம்மாள் தெரு – பதினேழாம் நம்பர் – கௌரி என்ற விலாசம் ஒன்பதாவது பீட் போஸ்ட்மேன் நாயுடுவின் எத்தனையோ பல விலாசங்களில் சாதாரணமான ஒன்றல்ல. அந்த விலாசத்தின் கீழ்ப் பஞ்சடைந்த கண்களும், எண்ணெய் காணாத தலையும், கிழிந்த ஆடையுமாக மூன்று உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. வெளிப்படாத இன்னோர் உயிரும் அந்தத் தாயின் மடியில் இருந்தது. விலாசதாரர்கள் தங்களுக்கு வராத அல்லது வர வேண்டிய ஒரு கடிதத்துக்காகத் தவிக்கும் இயல்பை நாயுடு பலமுறை கண்டிருக்கிறார். இந்த ஒரு விலாசதாரரோ தனக்கு ஒரு பதில் கடிதம் கொடுக்க முடியாத தபால்காரரையே அதற்காகத் தவித்து ஏங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

“நாயுடு! என் ஜன்மம் விடியவே விடியாது போலிருக்கு. அவரும் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய்விட்டார். நல்லதங்காள் மாதிரிக் குழந்தைகளையும் தள்ளிப்பிட்டு நான் கிணத்திலே விழுந்துட வேண்டியதுதான்! வயிறும் பிள்ளையுமாத் தனியாகத் தவிக்கிறேன். ஏதோ வீட்டுலே ஒத்த ஓட்டைத் தையல் மிஷின் இருக்கு. அதுலேயும் எத்தனை பேருக்குத் தச்சுக்கொடுத்துச் சம்பாதிக்க முடியும்?” என்று ஒருநாள் முதல் டெலிவரி சுற்றுக்காகப் போன நாயுடுவிடம் கௌரி அழுதே விட்டாள்.

“அழாதீங்கம்மா! எப்படியும் நான் ரிடையராகறதுக்குள்ளார உங்களுக்கு ஒரு நல்ல பதில் கடிதாசு கொடுக்காம ரிடயராகமாட்டேன்” என்று நாயுடுவும் கௌரிக்கு நாள் தவறாமல் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

மார்ச் மாதம் இருபதாம் தேதிக்கு இன்னும் மூன்றே மூன்று நாட்கள் தான் மீதமிருந்தன. இன்றைக்குத் தேதி பதினேழு. பதினெட்டு, பத்தொன்பது, அப்புறம் இருபது. மூன்று நாட்களில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் தான் முழுமையாக இரண்டு டெலிவரிக்கும் நாயுடு கடிதங்களோடு போவார். இருபதாம் தேதியோ ஒன்பதாவது பீட்டில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு பின்பு ஆபீஸ் வந்து அங்கேயும் எல்லோரிடமும் விடைபெற்றபின் வீட்டுக்குப் போய்விடுவார். சாயங்காலம் தபால்காரர்கள் எல்லாருமாகச் சேர்ந்து போஸ்ட் மாஸ்டர் தலைமையில் அவருக்கு ஒரு பிரிவுபசார விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். மனைவி மக்களோடு அந்த விருந்துக்கு வந்து விட்டு வீடு திரும்பினால் அப்புறம் மறுநாளிலிருந்து காக்கி உடையில் அவரைக் காண முடியாது. எல்லாரையும் போல் வெள்ளை வேஷ்டியும் முழுக்கைச் சட்டையுமாக கார்டு கவர் வாங்கத் தபாலாபீசுக்கு வந்து போக வேண்டியதைத் தவிர, அவருக்கு வேறு உத்தியோகக் கடமையோ, காரியமோ இல்லை. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகப் பொறுமையோடும், நிதானமாகவும் எல்லோருக்கும் முகம் மலரப் பதில் சொல்லிய ஒரு பழைய தலைமுறை மனிதனை அல்லது கிழவனை – இருபத்தொன்றாம் தேதி காலையிலிருந்து இனி தபாலாபீசில் காண முடியாது.

நாட்கள்தான் என்ன வேகமாக ஓடுகின்றன! பதினெட்டாம் தேதியும் பதினேழாம் நம்பர் கௌரிக்குப் பதில் கடிதத்தைக் கொண்டு வராமலே ஓடிவிட்டது. இருபதாம் தேதி முதல் டெலிவரிக்கு லெட்டர்களை சார்ட் செய்து கொண்டிருந்தபோது அன்றும் பதினேழாம் நம்பர்ப் பெண்ணுக்கு ஒரு பதில் கடிதம் வராமலே போய்விடுமோ என்ற பயத்தில் நாயுடுவுக்குக் கைகள் நடுங்கின. அவள் எழுதிக் கொடுத்து அவர் வாங்கித் தபாலில் குருமூர்த்திக்குப் போட்ட கடிதங்களெல்லாம் ஒவ்வொன்றாக அட்ரஸி நாட் நோன்’ என்ற சிவப்பு மை அடிப்புடன் திரும்பி வந்ததைத் தவிர பதில் கடிதம் ஒன்று கூட இதுவரை அவளுக்கு வந்ததில்லை . வயிறும் பிள்ளையுமாகத் தவிக்கும் ஒரு சுமங்கலியை ஏமாற்றிவிட்டு ரிடையராகி நடப்பதைவிட அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்துவிட்டு ரிடயராகிவிடுகிற ஆத்மதிருப்திக்கு நாயுடு ஆசைப்பட்டார்.

தெய்வம் அவருடைய ஆசையைப் பாழாக்கவில்லை. கடிதங்களை சார்ட் செய்து கொண்டே வந்தவர் பின்புறமாகக் கார்டின் அட்ரஸ் இருக்கும் அஞ்சலட்டையின் முதுகுப் பக்கத்தில் ‘கௌரி அம்மாள் – 17, கனகம்மாள் தெரு’ என்ற விலாச எழுத்துக்களைப் படித்துவிட்டுத் துள்ளிக் குதித்துப் பரவசமானார் ! ‘கடைசி கடைசியாக இந்தப் பதினேழாம் நம்பருக்கு ஒரு பதில் வந்துவிட்டது. என்ன ஆனந்தம்!’

வெறும் கார்டுதான்! கார்டானாலும் அது ஒரு பதில்தானே? கார்டோ கவரோ கடிதம் என்பது செய்தியைத் தாங்கி வரும் ஒரு வாகனம். மதிப்பு என்னவோ எல்லாத்துக்கும் ஒண்ணுதான். ‘இப்போதே ‘பீட்’டின் மற்ற வீதிகளை யெல்லாம் விட்டு விட்டு நேரே போய் இதைப் பதினேழாம் நம்பர் வீட்டுப் பெண்ணின் கையில் கொடுத்து விட்டு உடனே ரிடையராகிவிட்டால் என்ன?’ என்று ஆனந்தமும் பரவசமும் மேலிடத் தனக்குள் நினைத்தார் நாயுடு. ஆனால் அப்படிச் செய்ய முடியுமா? முறை என்று ஒன்று இருக்கிறதே? ஒன்பதாம் நம்பர் பீட் நாயுடுவின் ஆறு தெருக்களில் நான்காவது சுற்றில் தான் கனகம்மாள் தெருவே வரும். அன்று அவருக்கிருந்த குதூகலத்தில் மற்ற மூன்று தெருக்களையும் முக்கால் மணி நேரத்தில் சுற்றிக் கடிதங்களைப் பட்டுவாடா செய்துவிட்டு விரைவாகக் கனகம்மாள் தெருவுக்குப் பறந்தார். கனகம்மாள் தெருவுக்குள் நுழைந்தாலும், பதினேழாம் நம்பருக்கு முன்னால் பதினாறு வீடுகள் இருக்கின்றனவே? அதில் சராசரி பத்து வீட்டுக்காவது நாள் தவறாமல் கடிதங்கள் இருக்கும். பொறுமையாக அவற்றையும் பட்டுவாடா செய்து முடித்து விட்டு மேலாக இருந்த ‘கௌரி அம்மாள் – பதினேழு – கனகம்மாள் தெரு’ என்ற கார்டின் முதுகுப்புறத்தைப் புரட்டி, என்னதான் பதில் வந்திருக்கிறது? இந்தக் குருமூர்த்தி எங்கேதான் போய்த் தொலைந்திருக்கிறான்? தெரிந்து கொள்ளலாமே! என்ற ஆவலோடு முன் பக்கமாகத் திருப்பி அந்தக் கார்டைப் படித்தவர் அப்படியே பேயறை பட்டவர் போல் திகைத்து நின்றார். கண்களிலிருந்து நீர் வடிய ஆரம்பித்தது. உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. அதுவரை அவர்கள் குருமூர்த்திக்குக் கடிதமே எழுதித் தேடாது விட்டிருந்த ஒரு புதுச்சாமியாரின் மடத்திலிருந்து அக்கடிதம் வந்திருந்தது.

“ஸ்ரீமதி கௌரி அம்மாளுக்குக் கடுவன் மலை சித்தானந்த சாமிகள் மடத்துக் காரியஸ்தர் எழுதுவது : இதில் எழுதப் போகிற செய்தியைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவத்தையும் கடவுள்தான் உங்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் கணவர் ஸ்ரீகுருமூர்த்தி அவர்கள் நம் சாமிகளைப் பார்க்க சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். வாழ்வில் தமக்கு மிகவும் போதாத காலமாகிவிட்டதென்றும் காரியசித்தி ஆக ஏதாவது பரிகாரத்தைக் கூற வேண்டும் என்றும் சாமிகளைக் கேட்டார். சாமிகள் சில மாதங்கள் இங்கே தங்கி மௌனவிரதம் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து மலையுச்சியில் உள்ள கோவிலை ஒன்பது தரம் சுற்றிப் பிரார்த்திக்க வேண்டும். நாளடைவில் தனியாக ஒரு ஓட்டலே நடத்துகிற உயர்நிலை கைகூடும்’ என்று உங்கள் கணவருக்குக் கூறியருளினார். சாமிகள் கூறியபடியே செய்து வருகையில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் அதிகாலை இருளில் மலையைச் சுற்றும்போது மழை பெய்து வழுக்கலாயிருந்த பாறையில் சறுக்கி மலையிலிருந்து ஸ்ரீ குருமூர்த்தி அவர்கள் மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்து துர்மரணம் அடைந்துவிட்டார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.”

“கடிதாசு ஒண்ணும் இல்லியா நாயுடு?”

நாயுடு அதைப் படித்து முடிப்பதற்குள் கௌரி தன் வழக்கமான கேள்வியுடன் குழந்தைகளோடு வாசலுக்கு வந்துவிட்டாள்.

இரண்டு நிமிஷங்கள் பதிலே சொல்லத் தோன்றாமல் கண்களில் நீர் பெருகிட அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த நாயுடு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “ஒண்ணுமில்லிங்களே அம்மா!” என்று உடைந்த குரலில் பதில் சொல்லிவிட்டுத் தயங்கித் தயங்கி மேலே நகர்ந்தார். இருபத்தைந்து வருட காலத்துக்கு மேலாக நாணயமாகப் பணிபுரிந்த அந்தத் தபால்காரர், ரிடையராவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் ஒரு விலாசதாரரின் கடிதத்தை அவரிடம் கொடுக்காமலே தனியாகவும் பத்திரமாகவும் எடுத்துப் போய்க் கிழித்தெறிகிற குற்றத்தைச் செய்யும்படி அன்று நேர்ந்துவிட்டது. அவர் அன்று மறைத்துவிட்டதனால் இந்த அவலம் வாழ்நாள் முழுவதுமே பதினேழாம் நம்பர் பெண்ணுக்கும் தெரியாமலிருந்துவிடப் போவதில்லை. ஆனால் அதை அவளிடம் கொடுத்து விட்டு அவள் படுகிற துயரைச் சகிக்கும் தைரியம் அல்லது கடுமை நாயுடுவிடம் இல்லை, என்றுதான் கூற வேண்டும். ‘தபால்காரன் என்பவன் பலருடைய கடிதங்களைச் சுமந்து கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அப்படிச் சுமந்து கொண்டு போகிற கடிதங்களில் அவற்றை அடையப் போகிறவர்களின் சுகமும் இருக்கலாம், துக்கமும் இருக்கலாம். அதிர்ச்சியும் இருக்கலாம், ஆனந்தமும் இருக்கலாம். இருப்பினும் அவற்றைத் தபால்காரன் சுமப்பதில்லை என்பதுதான் உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் நாயுடுவின் சித்தாந்தம். ஆனால் இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்ணுக்குக் கடைசி நாளில் ஒரு நல்ல பதில் கடிதத்தைக் கொடுக்க முடியாமல் போன ஏக்கம் அவருடைய மண்டை உள்ள வரையில் வேகாது.

அன்று சாயங்காலம் தபாலாபீசில் போஸ்ட் மாஸ்டர் தலைமையில் நடந்த விருந்தில் தபால்காரர் சங்க யூனியன் காரியதரிசியாகிய அரசு இளம்பாலன் என்ற இளைஞர் “நாயுடு மலர்ந்த முகத்தினர், அவருடைய கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட சேவை நமக்கு ஓர் இலட்சியப் பாடம்” என்று ஏதேதோ பாராட்டிப் பேசினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நாயுடுவோ தலைகுனிந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். அது ஆனந்தக் கண்ணீர் என்று மற்றவர்கள் நினைக்கலாம். உண்மையில் ஓர் அழகிய சுமங்கலிக்கு நேர்ந்துவிட்ட அவலத்தை மனத்தில் தாங்கி அவர் கண்கலங்கிக் கொண்டிருந்தார். பாற்கடலின் விஷத்தைத் தன் நெஞ்சில் வாங்கி வைத்துக் கொண்டு மற்றவர்களை எல்லாம் காப்பாற்றிய பரமசிவனைப் போல் பதினேழாம் நம்பருக்கு வந்த பதிலின் துக்கத்தை முழுவதும் தன் மனத்துக்குள் வாங்கி வைத்துக் கொண்டு நாயுடு அழுவது யாருக்குப் புரியும்?

– கல்கி, 9.8.1964, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *