பேயோட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 5,691 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால், சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் ‘பேயோட்டி’ … ஆங்கிலத்தில் Ghost Buster, Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னு ரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன்.

என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்வினை பேயாக தனது அறையில் சுத்திக் கொண்டு இருப்பதாகவும் தினமும் பகலில் புலம்புவார். இரவில் அலறுவார். நீடாமங்கலம் அருகில் இருக்கும் கோட்டையூர் கிராம மந்திரவாதி வந்தால் தான் இந்தப் பேய் வீட்டை விட்டுப் போகும் என தினம் தினம் கதறல். என் அப்பா அவரின் அலுவலகத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் ஐயர் ஒருவரை கோட்டையூர் மந்திரவாதியின் அசிஸ்டெண்ட் என பாட்டியிடம் சொல்லி, நடிக்கக் கூட்டிக் கொண்டு வந்தார்

“உன் அப்பாவிற்கு அறிவே இல்லை, மனுஷனை ஒட்டுறவங்களுக்கு, பேயை எப்படி ஓட்டத் தெரியும் … பூணுல் போட்ட ஐயர் கோட்டையூர் மந்திரவாதியாம்” என என் அம்மாவிற்கு ஒரே சிரிப்பு.

“ஆம் இந்த அறையில் பேய் இருக்கின்றது” என சொல்லியபடி பாட்டி காட்டிய திசையில் கங்கை நீர் என அவர் கொண்டு வந்து இருந்த காஸ்ட்லி மினரல் வாட்டரைத் தெளித்தார். பாட்டியும் தெளிந்தார்

“அவநம்பிக்கைகளை நிராகரிக்காமல், அவர்கள் போக்கிலேயேப் போய் அதை தெளிய வைக்க வேண்டும், அதற்கு நாமும் அந்த அவ நம்பிக்கையை நம்புவதாக சொல்ல வேண்டும்.” என ஐயர் அப்பாவிடம் சில நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டே சொன்னதைக் கேட்டேன்.இன்றைய பேயோட்டும் தொழிலில் ஐயர் சொன்னதே எனது தாரக மந்திரம்.

கடவுளைக் காண்பிப்பதை விட பேயோட்டுவது மிகவும் எளிது என நினைத்ததற்கு மாறாக . பேய் வீட்டில் வசிப்பவர்கள், வெறும் மதப் புத்தகங்களையோ மதச் சடங்குகளையோ நம்புவதில்லை. ஹைடெக் கருவிகள், புதுயுக மடிக் கணினி, காமா பீட்டா தீட்டா கதிர்களைப் பற்றிய புத்தகங்கள் இப்படி உடன் இருந்தால் தான் மரியாதையே கொடுக்கின்றனர். அதனால் வியாபர நுணுக்கமாக பேய்களைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் கூட ஆண்டிராய்ட் ஆப்பிள் கைபேசிகளுக்கும் தயாரித்து வெளியிட்டு இருக்கின்றேன்.

பெரும்பாலான பயந்தாங்குளிகள், இந்த அப்ளிகேஷன்களின் டெமோ வேர்சனைப் பார்த்துவிட்டுத்தான் வருகின்றார்கள். சாமியார்களுக்கு எப்படி கடவுள் இல்லை என்பது தெரியுமோ அது போல பேயோட்டிகளுக்கும் பேய் இல்லை என்பது தெரியும். சாமியார்கள் காணும் கடவுளை சமயங்களில் பக்தர்களும் தங்களுக்குத் தெரிகின்றது என சொல்கிறார்களோ அது போல, பேய் வீட்டில் இருப்பவர்கள் பார்க்கும் பேய்களை நானும் பார்த்ததாக சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் பொழுதே பாதிப் பேய் ஓடிவிடும்.

செய்வது ஏமாற்று வேலை என்றாலும் கடவுளையா ஏமாற்றுகின்றோம், இல்லாத பேயைத் தானே என்று, குற்ற உணர்ச்சி எதுவும் இல்லை. இப்படியாக நாளொரு பேயும் பொழுதொரு வீடும் என நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருக்கையில், சில நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்து அடிக்கடி அலறல் கேட்கின்றது . நீண்ட நாட்களாகப் பூட்டிக் கடந்த வீடு, சென்ற வாரம் தான் ஒரு குடும்பம் குடி வந்து இருக்கின்றது.

மறு நாள் அந்த வீட்டின் குடும்பத் தலைவன் என் வீட்டுக் கதவைத் தட்டி னான்.

“நீங்கள் வீடுகளில் இருந்து பேய்களை விரட்டுபவர் எனத் தெரிந்து கொண்டேன். என் மகளுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. இந்த வீட்டில் பேய் இருக்கின்றது என அடிக்கடி கத்திக் கொண்டு இருக்கின்றாள். இந்த வீட்டில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் குடி இருந்த வீடுகளிலும் அப்படித் தான் சொல்லி சொல்லி பயந்துப் போய்க் கிடக்கின்றாள், நீங்கள் வந்து கொஞ்சம் உதவ வேண்டும்”

“தொடர்ந்து வரும் பேய் ” சொல்லிப் பார்க்கையிலேயே எனக்கு திக் என்று இருந்தது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ… சேச்சே இருக்காது. நானே அந்த வீட்டில் ஒரு வருடம் குடி இருந்து இருக்கின்றேன். வழமையைப் போல என்னுடைய உபகரணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு மறு நாள் சென்றேன். அவர், அவரின் மனைவி, பதின்ம வயது பெண். .

வழக்கமான என்னுடைய டெக்னாலஜி போங்காட்டத்திற்கு பின்னர், அந்தப் பெண்ணுடன் தனியேப் பேச வேண்டும் எனச் சொன்னேன். அதற்கு காரணம் கழிவறையில் கிடந்த போதை ஊசி சிரிஞ்சைகளைப் பார்த்தது தான்.

“இந்த வீட்டில் மட்டுமல்ல இதற்கு முன்னர் நீங்கள் இருந்த எந்த வீட்டிலும் நீ பேயைப் பார்த்ததாக சொன்னது எல்லாம் பொய். ஏன் இப்படி செய்கிறாய்?”

“அப்படி சொன்னால் தான், உன்னிடம் நல்லவன் போல பேசும், என் அம்மாவின் கணவன் என்னைத் தொந்தரவு செய்ய என் அறைக்குள் வரமாட்டான்” என அழுதாள்.

எனக்குப் புரிந்து போனது. ஒளிக்கற்றைகளால் உருவங்களைக் கொண்டு வரும் ஒரு சிறிய கருவியை அவளிடம் கொடுத்து, “இனிமேல் நீ பேயைப் பார்க்க வேண்டியதில்லை, உன் அம்மாவின் கணவனைப் பார்க்க வை, இந்த பிடிப்பை அமுக்கினால், ஓர் உருவம் வரும், நீ தூங்கும் முன்னர் இயக்கிவிட்டுத் தூங்கி விடு, எவனுமே தவறான நோக்கத்தில் உன்னை நெருங்க முடியாது”

மகளிடம் பேசி முடித்தவுடன் குடும்பத் தலைவனிடம் வந்து “பேய் உங்கள் மகளைத் துரத்தவில்லை, நீங்கள் ஏதோ தவறு செய்து இருக்கின்றீர்கள் உங்களைத் தான் வீடு வீடாக துரத்துகின்றது, ஜாக்கிரதையாக இருங்கள்” அந்த ஆளுக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அந்த பதின்ம பெண்ணையும் அவளின் அம்மாவையும் கடைத் தெருவில் பார்த்தேன். குடும்பத் தலைவனைப் பற்றி விசாரித்தேன். அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாக அந்த அம்மா கவலையுடன் சொல்ல, அந்த பதின்மப் பெண் உதட்டின் ஓரமாகப் புன்னகைத்தாள்.

வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு பேயை விரட்டியடித்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *