அப்பாவின் மனைவி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 16,423 
 

கங்காவுக்கு தலை சுற்றியது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் கைகளை பிசைந்தவாறு சிவராமின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்வது போல் நின்றுகொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிவராமின் எழுபது வயதைத் தாண்டிய பெற்றோர். தும்பைப் பூவைப் போல் நரைத்திருந்த தலைமுடியும், வாழ்க்கையின் பல கோணங்களை சந்தித்துவிட்டதன் அறிகுறியாக முகத்தில் வீழ்ந்த சுருக்கங்களையும் தாண்டி, இப்போது தம் மகன் செய்து வந்திருக்கும் காரியத்தைக் குறித்து வேதனையும் கோபமும் போட்டியிட அவர்கள் பார்த்த பார்வை கங்காவின் உடலை குளிர் காற்றில் படபடக்கும் தளிர் இலையைப் போலாக்கியது.

சிவராமின் இருபத்து மூன்று வயது மகன் சங்கரின் கண்களில் ஏளனமும் அருவருப்பும் தாண்டவமாடியது. அவனுடைய இளம் மீசை துடித்தது. தன் தந்தையின் அருகில் நிற்கும் கங்காவை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தான். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த கங்கா, சிநேக பாவத்துடன் வாஞ்சை பொங்க புன்னகைத்தாள். அதைப் பார்த்த சங்கர், முகத்தை வெறுப்புடன் திருப்பிக்கொண்டு வெளியில் போய்விட்டான். சங்கரைத் தொடர்ந்து, சிவராமின் பெற் றோரும் வெறுப்புடன் அந்த ‘புது ஜோடி’யை பார்த்துக்கொண்டே தங்கள் அறைக்குப் போய்விட் டார்கள்.

அந்தப் பெரிய அறையில் சிவராம், கங்கா இருவரைத் தவிர ஒன்பது வயதான சிவராமின் மகள் யமுனா, தன் தந்தையுடன் வந்திருந்த அழகிய அந்தப் பெண்ணை மலங்க மலங்க விழித் துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டியுடன் தொடர்ந்து உள்ளே போவதா அல்லது அப்பாவும் அந்தப் புதுப் பெண்ணும் இருக்கு மிடத்திலேயே நிற்பதா என்று புரியாமல் தவித்தாள்.

மெதுவாக யமுனாவின் அருகில் சென்று, அவளுடைய கரங்களைப் பிடித்தாள் கங்கா. அவள் குண்டுக் கன்னங்களில் முத்தமிட்டாள். சங்கோஜத்துடன் விலக முயன்ற யமுனாவை இறுக அணைத்துக் கொண்டாள் கங்கா. அவள் கண்கள் பனித்தன. அவள் பிடியிலிருந்து திமிறி தன்னை விடுவித்துக்கொண்ட யமுனா, பாட்டியின் அறைக்குள் ஓடிப் போனாள்.

அவள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கங்காவை தன் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார் சிவராம். அவர் அறைக்குள், தெய்வ சந்நிதி யினுள் நுழையும் பக்தியுடன் நுழைந்தாள் கங்கா.

”கங்கா, என்னைத் திருமணம் செய்துகொண்டதில் இப்போ கூட உனக்குக் கஷ்டம் தோன்ற வில்லையா?” என்று கேட்ட சிவராமின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் கங்கா. அந்தச் சிரிப்பின் அர்த்தம் அவருக்குப் புரிந்தது – ‘நீங்கள் என் கூட இருந்தால், உலகமே எதிர்த்தாலும் கலங்க மாட்டேன்.’

விதவையான கங்காவைத் திருமணம் செய்ததன் பேரில் ஏற்பட்ட எதிர்ப்பைத் தாங்கக்கூடிய சக்தியை சிவராம் அவளுடைய அன்பிலிருந்துதான் பெற்றார். அந்தச் சக்தியைத் தாலாட்டி வளர்த்தவை அவளுடைய அழகும் இளமையும்.

மனைவியை இழந்த அவருக்கு அவள் துணை அவசியமாக இருந்தது. தன் மகனைவிட அவள் இரண்டே வயதுதான் மூத்தவள் என்பது ஆரம்பத்தில் அவருக்குப் பெரும் குறை. ஆனால், அவளுடன் நெருங்கிப் பழகிய பிறகுதான் தெரிந்தது, அறிவில் அவள் தன்னை யும் விட மூத்தவள் என்று. அவள் முன் அவர் குழந்தையானார்.

இரு கைகளையும் பின்புறமாக ஊன்றி கட்டிலில், கங்காவைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் சிவராம். அவள், அவரருகில் சென்று தரையில் அமர்ந்து அவர் முழங்காலின் மீது முகத்தைப் புதைத்தாள். அவர் அசையாமல் கல்லாக அமர்ந்திருந்தார். அவள் முதுகு குலுங்குவதிலிருந்து அவள் அழுகிறாள் என்பது அவருக்குப் புரிந்தது. என்ன செய்வது என்று புரியாமல், மொழுமொழுவென் றிருந்த அவளுடைய கழுத்தின் பின்புறத்தில் பரந்துகிடந்த கூந்தலை விலக்கி, குனிந்து இதழ் பதித்தார். அந்தக் குறுகுறுப்பில் அவள் நெளிந்தாள். தேகமெங்கும் மின்சாரம் பாய்வது போலிருந்த அந்த உணர்ச்சியைத் தாங்க முடி யாமல் கண்ணீர் கன்னங்களில் உருண்டோட, தலை உயர்த்தி அவரைப் பார்த்தாள்.

”நான் அழுதேன்னு கவலைப் படாதீங்க. இதுதான் நான் கடைசியாக அழறது. இனி எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் என் கண்ணுலே தண்ணி வராது. இப்போ நான் அழுதது, இந்தக் கோயிலுக்குள்ளே வர முடிந்த என் அதிர்ஷ்டத்தை நினைச்சுத் தான். தெய்வமான அந்த சிவ பெருமானே கங்கையை தலையில் ஒளிச்சுதான் வெச்சிருந்தார். ஆனா, சாதாரண மனுஷனான நீங்க இந்த கங்காவை பகிரங்கமா திருமணம் செய்து, ஒரு முறை பூத்து உதிர்ந்து போன எனக்குத் திரும்பவும் வாழ்வளிக்கிறீங்க!” – இது அவள் நெஞ்சைக் கீறிக் கொண்டு வெளிவந்த வார்த்தை கள்.

”சார்… சார்” என்ற அவர் ஆபீஸ் பியூன் ராகவனின் அழைப்பு, இருவரையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தது. மிகவும் அவசரமான காரியம் இருந்தால்தான் அவன் வீட்டுக்கு வருவான். அவன் அன்று கொண்டு வந்திருந்ததும், ஓர் அவசரச் செய்திதான். மிகவும் முக்கியமான விஷயம் குறித்து அவசரமாகத் தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதால், உடனே ஆபீஸ் காரிலேயே புறப்பட்டு வருமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருந்தது.

அந்த வீட்டில் கங்காவைச் சுற்றி வெறுப்பு உணர்ச்சி அலை மோதிக்கொண்டு இருக்கும் நிலை யில், கங்காவைத் தன் குடும்பத் துடன் தனியாக விட்டுவிட்டுப் போவது எப்படி என்று கலங்கி னார் சிவராம். பின்பு,

”கங்கா, நான் ஆபீஸ் விஷய மாக டெல்லிக்குப் போகிறேன். இவர்கள் மத்தியில் நீ இங்கு தனியாக இருக்க முடியாது. என் சிநேகிதன் ராஜன் வீட்டில் போய் இரு. அவன் மனைவி உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். உம், புறப்படு!” என்றார்.

கங்கா புன்னகையுடன், ”நான் இருப்பதுதான் என் கோயில். வேறு எங்கும் நான் போகத் தேவையில்லை. என்னைப் பற்றிக் கவலைப்படாமல் பத்திரமாக டெல்லிக்குப் போய் வாருங்கள்” என்றாள். அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கங்கா ஒப்புக் கொள்ளவில்லை.

ஜானகியம்மாளுக்குத் தன் மகனைப் பற்றி நினைக்கும்போது வேதனை நெஞ்சை அடைத்தது. அவன் செய்துகொண்டு வந்திருந்த காரியம் அவள் அடி வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டியது. நாற்பத்து மூன்று வயதான தன் மகன் சிவராமின் பிடிவாத குணம் அவளுக்குத் தெரியாமலில்லை. எவ்வளவோ தடுத்தும் விதவை யான ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வந்திருக்கிறான். பெற்றோரை மதிக்கவில்லை. அவனுடைய செயலை நினைத்துக் குமுறினாள் ஜானகி. கங்காவை தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பாவி தன் மகனைக் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டாளே என்று பொரு மினாள்.

விடியற்காலையில் கண் விழித்த ஜானகியம்மாள் வாசற் புறம் வந்தாள். அங்கு வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கங்கா. குளித்து உலராத தண்ணீர் சொட்டும் கூந்தலை நுனியில் முடிந்திருந்தாள். நெற்றியில் அகலமான குங்குமம் மங்களகரமாக திகழ்ந்தது. பதினைந்தாவது வயதில் திருமணம் செய்து கொண்டவள், ஆறே மாதங்களில் குங்குமத்தை அழித்துக் கொண்டு பிறந்தகம் வந்தாள். அதற்குப் பிறகு அவள் குங்குமம் இட்டுக்கொண்டது நேற்றுதான்.

முத்து முத்தாகப் புள்ளி வைத்து அவள் கோலம் போடும் அழகைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்று விட்டாள் ஜானகியம் மாள். பின்பு, தான் பார்த்து ரசிப்பதை கங்கா பார்த்துவிடுவாளோ என்று உள்ளே போனாள். காலை சாப்பாட்டிற்கு வேண்டிய காரியங்களைச் செய்வதில் மூழ்கினாள்.

எதையோ அரைப்பதற்கு அம்மிக்கல் பக்கம் போனவளைக் கங்காவின் குரல் நிறுத்தியது. ”அம்மா, நான் அரைத்துத் தரட்டுமா?” என்று சமையற்கட்டிற்கு வெளிப்புறமிருந்த கதவைப் பிடித்தவளாக பவ்யமாகக் கேட்டாள். அவளைப் பார்க்கவே பிடிக்காதவளாக, தானாகவே அரைத்துப் பிழிந்து எடுத்து, சமையலைப் பார்க்கப் போய்விட்டாள் ஜானகி.

அப்போது தூங்கி எழுந்து வந்த யமுனா, ”பாட்டி, காபி!” என்றாள் கொட்டாவி விட்டபடி. ”யமுனாவுக்கு நான் காபி போட்டுக் கொடுக்கட்டுமா?” என்றாள் கங்கா, வெளியில் நின்றபடியே.

அதைச் சிறிதும் பொருட்படுத்தாத ஜானகியம்மாள், தானே தட்டுத் தடுமாறி காபி கலந்து யமுனாவிடம் கொடுத்தாள். யாதொரு பாவ வித்யாசமுமில்லாமல் ஜானகியம்மாளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் கங்கா.

காபி குடித்துவிட்டு வெளியில் வந்த யமுனாவை அழைத்துக் கொண்டு போய் பல் விளக்கச் செய்து, குளிப்பாட்டி, தலை பின்னி அழகாகப் பொட்டு வைத்து பள்ளிக்கு அனுப்பினாள் கங்கா.

சங்கர் சாப்பிட்டு முடிந்தவுடன் காலே ஜுக்குப் போய்விட்டான். தன் ‘அப்பாவின் மனைவி’யை பார்க்கப் பிடிக்காதவனாக முன்னதாகவே புறப்பட்டுவிட்டான். கங்கா, திரும்பவும் சமையற்கட்டின் கதவைப் பிடித்தவாறு, சமையற்கட்டை ஒழித்து துடைத்துக்கொண்டிருந்த ஜானகி யம்மாளிடம், ”நான் கழுவித் துடைத்து விடட்டுமா அம்மா?” என்று கேட்டாள். கங்காவைப் பார்த்தாள் ஜானகியம்மாள். களங்கமில்லாத அந்த முகத்தையும், பரிதாபமான விழிகளையும் பார்த்தால் எங்கே தன் மனது இளகிவிடுமோ என்று பயந்தவளாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த கங்கா, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று அப்போதுதான் தோன்ற, கங்காவின் முகத்தைப் பாராமலே ”ஏதாவது போட்டு சாப்பிட்டுக்கோ” என்று கூறிவிட்டு, வெளியில் போனாள். தன்னை அறியாமலேயே தன் குரலில் கலந்தொலித்த பரிவை ஒப்புக் கொள்ள முடியாதவளாக பூஜைக்கான காரியங்களைப் பார்க்கப் போய்விட்டாள் ஜானகி.

ஹாலினுள் நுழைந்த சங்கர் திகைத்து நின்றுவிட்டான். வீடு மாறி வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது. மூலைக் கொன்றாய் கிடந்த சோபாக்களும் நாற்காலிகளும் அழகாக நவீன முறையில் வைக்கப்பட்டு, அவற் றுக்கு நடுவில் கேட்பாரற்றுக் கிடந்த ‘கார்ப்பெட்’ துப்புரவாக் கப்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. பூ ஜாடியில் பூக்கள் அழகாக வைக் கப்பட்டிருந்தன. இரண்டு நிஜ பூத்தொட்டிகள் மூலைக்கு ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன.

ஒன்றும் புரியாதவனாக தன் அறைக்குள் நுழைந்தான். அவனு டைய அறையும் உருமாறியிருந்தது. திகைப்புடன், தன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நேர்த்தியைப் பார்த்துக்கொண்டு வந்தவன், சட்டென்று நின்று விட்டான். அவன் சூவைக் கையில் பிடித்தவாறு, அதைப் பாலீஷ் செய்து கொண்டிருந்தாள் கங்கா.

அவன் வந்ததைப் பார்த்ததும், ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போல் நடுங்கி எழுந்து நின்றாள். அவள் முகத்தில் வியர்வை பொடிந்தது. தன்னைச் சமாளித் துக்கொண்டவளாக, ”செருப்பெல் லாம் ஒரே அழுக்காக இருந்தது. அதனால்தான் பாலீஷ் போட் டேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் வெளியில் கொண்டு போய் பாலீஷ் போட்டுக்கறேன்” என்ற வள், செருப்பும் கையுமாக வெளியில் போனாள்.

அவளால் பாலீஷ் செய்து வைக்கப்பட்டிருந்த செருப்புக்க ளெல்லாம் ‘பளீர்’ என்று பளபளத் தவாறு அவனைப் பார்த்துச் சிரித்தன. மனம் நெகிழ்ந்து கனிய, கட்டிலில் அமர்ந்துவிட்டான் சங்கர்.

பள்ளியிலிருந்து என்றுமில்லாத உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து ஒரு மான் குட்டியைப் போல் ஓடிவந்த யமுனா, கங்காவை ”அம்மா” என்று கட்டிக்கொண் டாள். பள்ளிக்குப் புறப்படும்போது அவள் கேள்விக்கு பதிலாக ”நான் வேறு யாருமில்லை; உன்னுடைய அம்மாதான்” என்று கூறியதை எவ்வளவு வேகத்தில் களங்கமில் லாத அந்த இளம் மனது ஏற்றுக் கொண்டது என்ற பரவசத்தால் அவளை கங்காவும் கட்டிக்கொண் டாள்.

இரவு என்ற மரத்தினடியில் நட்சந்திரப் பூக்கள் சிதறி வீழ்ந்து கொண்டிருந்தன. இயற்கையின் இராக் காலத்து சிங்காரக் களி யாட்டத்தில் தன்னை மறந்தவளாக அமர்ந்திருந்த கங்காவை உசுப்பி யது, அவள் மாமனாரின் இடைவிடாத இருமல் சப்தம். அவர் அறைக்குள் போனவள், கஷ்டப்பட்டு ஏதோ ஒரு மருந்தை அவர் எடுப்பதைப் பார்த்தாள். உடனே அவர் கையிலிருந்த மருந்தை வாங்கி, அவுன்ஸ் கிளாசில் ஊற்றி அவரிடம் கொடுத்தாள். இருமி இருமித் தளர்ந்து போயிருந்த அவர் கழுத்திலும் நெஞ்சிலும் தைலம் தடவினாள்.

ஜலதோஷம் என்று படுத்திருந்த ஜானகியம்மாளுக்குக் கஷாயம் வைத்துத் தம்ளரில் அவளிடம் கொடுத்தாள். ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவள்போல் ஜானகியம் மாள் அதை வாங்கி, வாயில் ஊற்றிக் கொண்டாள்.

பொழுது புலர்வதற்கு முன் ஐந்தாறு முறை ஜானகியம்மாளின் அறைக்கு வந்து, ஏதாவது வேண் டுமா என்று விசாரித்தாள் கங்கா. அவளுடைய அயராத பணிவிடை யும், உண்மையான அன்பும் ஜானகியம்மாளின் இதயத்தைத் தொட்டுவிட்டன.

ஒரு வாரத்திற்குப் பிறகு…

கங்காவின் நிலை என்னவா யிருக்குமோ என்ற கவலையுடனும் படபடப்புடனும் வீட்டுக்குள் நுழைந்த சிவராம், சமையற்கட் டினுள் கண்ட காட்சியை நம்ப முடியாதவராக திகைத்து நின்றார். தான் காண்பது கனவல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்ள அவ ருக்குச் சிறிது நேரமாகியது.

மகன் சங்கரும், மகள் யமுனா வும் அடுப்படியில் மும்முரமாக எதையோ கிளறிக்கொண்டிருக்க, ஜானகியம்மாளுக்கான காபியை ஆற்றி அவளிடம் கொடுத்தபடி, ”பாருங்கம்மா, இதுகள் பண்ற அட்டகாசத்தை! ஏதோ பலகாரம் செய்யப்போகிறோம் என்று கையைச் சுட்டுக்கப் போறதுகள்” என்றாள் கங்கா சிரித்தபடி.

அதைக் கேட்டபடி அங்கு நின்றிருந்த சிவராமின் தந்தை, ”எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்! சமையற்கட்டைப் பார்த்துக்கூட இருக்கமாட்டானே இந்த சங்கர், இப்போது பலகாரம் செய்கிறா னாம், பலகாரம்!” என்றார் கேலியாக, மகிழ்ச்சியுடன்.

”அம்மா! அம்மா!!” என்று கத்தியபடி, கங்காவிடம் ஓடி வந்தாள் யமுனா. அவள் கையில் மாவினால் செய்யப்பட்டிருந்த சிறிய பொம்மை இருந்தது. வயலில் திருஷ்டிக்கு வைப்பார் களே, அதைப் போல் தோற்றமளித் தது. ”இது நீ என்று சங்கரண்ணா சொல்கிறான்மா!” என்றாள் கண்கள் விரிய.

”அதற்குள் என்ன அவசரம்! அப்பாவை எண்ணெயில் போட்டு வேக வைத்திட்டிருக்கேன். இதோ, அப்பாவைக் கொண்டு வரு\கிறேன்” என்று கூவியவாறு, மற்றொரு மாவு பொம்மையை எடுத்துக் கொண்டு வந்தான் சங்கர். ஏதோ பலகாரத்திற்காகப் பிசைந்து வைக்கப்பட்டிருந்த மாவில்தான் இவ்வளவு விளையாட்டும்!

அந்தப் பொம்மைகளைப் பார்த்ததும், எல்லோரும் ‘கலகல’ வென்று கண்களில் கண்ணீர் முட்டச் சிரித்தார்கள் – சிவராம் உள்பட!

– 25-01-1970

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *