திவான் லொடபட சிங் பகதூர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 3,046 
 

(1921ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூலோக விந்தை 

நமது சென்னை இராஜதானிக்கு வடக்கில் சுதேச அரசரால் ஆளப்பட்டுவரும் பெரிய சமஸ்தானம் ஒன்று இருக்கிறது. ஊரைச் சொன்னாலும் சொல்லலாம், பெயரை மாத்திரம் சொல்லல் ஆகாது என்பது விவேகிகளால் அநுபவபூர்வமாகக் கண்டு பிடிக்கப் பட்ட முக்கியமான கொள்கை. ஆதலால், நாம் அந்த சமஸ்தானத்தின் உண்மையான பெயரைச் சொல்லாமல், அதை பூலோக விந்தை என்ற பெயரால் குறிப்போம். அந்த பூலோகவிந்தையை ஆண்டு வரும் அரசருடைய பெயர் பலவித விசேஷங்களோடு கூடி ஒன்றரைமயில் தூரம் நீண்டு, ஒரு பெரிய கூட்ஸ் வண்டியில் வைத்து இழுத்தாலும் மாளக்கூடாத அபார் மாட்சிமை வாய்க்கப் பெற்றிருப்பதால், அதை நாம் பூர்த்தியாக எடுத்துக் கூற இந்தச் சிறிய ஸ்தலபுராணம் இடந்தராது என்பது நிச்சயம். சூராதிசூர வீராதிவீர மன்னாதிமன்ன அதி வீர தீர புஜ பல பராக்கிரம கோலாகல உப்பில்லாமல் கலக்கஞ்சி குடித்து வானத்தை வில்லாய் வளைத்து ஆற்று மணலைக் கயிறாய்த் திரித்த ராஜாதிராஜ அதி ராஜா பகதூர் என்று முற்றுப்புள்ளி வைக்க இடமே கொடாமல் அது வெகுதூரம் போய்க் கொண்டே இருக்கும். அந்த அரசர் இங்கிலீஷ் கல்வியில் ஆழ்ந்த பரிச்சயம், விசேஷமான புத்திசாலித்தனம் முதலிய சிறப்புகள் உடையவர். தாம் தமது சமஸ்தானத்தைப் பழைய கர்னாடக முறைப்படி ஆடாமல், புது நாகரிக முறைமைப்படியும் இங்கிலீஷ் தேசங்க ளின் உதாரணங்களைப் பின் பற்றியும் ஆளவேண்டும் என்றும், குடி மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து நீதி வழுவாமல் ஒழுக வேண்டும் என்றும், அவர் மிகுந்த விருப்பங்கொண்டு, அந்தக் கோரிக்கை பரிபூர்ணமாக நிறைவேறுவதற்குத் தாம் எவ்விதமான உபாயம் தேடலாமென்று யோசித்து யோசித்துப் பார்த்து, முடிவில் அது விஷயமாக டில்லியிலுள்ள இராஜப் பிரதி நிதியுடன் கடிதப் போக்குவரத்து செய்தார். இராஜப் பிரதிநிதியின் கீழ் மாதா மாதம் 3000 ரூபாய் சம்பளம் வாங்குகிறவரும், சட்டங் களையும் இராஜாங்க நிர்வாக முறைகளையும் முற்றிலும் கரை கண்ட அதிமேதாவியுமான ஒருவர் இருக்கிறார் என்றும், அவருக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளமும் சர்வ அதிகாரமும் கொடுத்து அவரை திவானாக வைத்துக்கொண்டால், அவர் பழைய காலத்து ஊழல்களை எல்லாம் அடியோடு வேரறுத்து, நவீன முறைகளை எல்லாத் துறைகளிலும் ஸ்தாபித்து, அந்த சமஸ்தானத்திற்குப் புத்துயிர் கொடுத்து, அது இந்திய தேசத்திற்கே நடுநாயகமாய் விளங்கும்படி செய்து விடுவார் என்று இங்கிலீஷ் இராஜப் பிரதிநிதி யுக்தி கூற,சுதேச மன்னர் அதை ஏற்றுக்கொண்டு, உடனே அந்த உத்தியோகஸ்தரை திவானாக நியமித்து, அவரைத் தமது பட்டணத்திற்கு வருவித்துத் தமக் கிருந்த இரண்டு அரண்மனைகளுள் ஒன்றை ஒழித்து அவருடைய குடும்ப வாசத்திற்கு அதைக்கொடுத்து, அவருக்குரிய ஆள் மாகாணங்கள் எல்லோரையும் நியமித்துக் கொடுத்து, அவருக்குத் தேவையான சகல சௌகரியங்களையும் முஸ்தீபுகளையும் செய்து கொடுத்துத் தமது அதிகாரம் முழுதையும் அவர் சுயேச்சை யாகச் செலுத்தலாம் என்று அனுமதி அளித்துவிட்டார். 

புதிய திவான் வந்தபிறகு, சொற்ப காலத்திற்குள், அவர் தமது சட்ட ஞானத்தை எல்லாம் பூர்த்தியாகக் காட்டத் தொடங்கிய தோடு, தமக்குக் கீழ்ப்பட்ட எந்த அதிகாரியானாலும் சட்டத்திற்கு ஒர் இம்மியளவு தவறாக நடப்பானானால், அவனை உடனே வேலையிலிருந்து தகையர் செய்யலானார். அரசனது அரண்மனை யின் செலவைக் குறைக்க வேண்டுமென்ற கருத்தோடு அவர் அங்கிருந்த சிப்பந்திகளுள் பெரும்பாலோரை விலக்கினார்; பழைய காலத்துக் கட்டிடங்களை எல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கிப் புதிய கட்டிடங்களை எழுப்பி நகரத்தைப் புதுப்பித்தார். அநேகமாய் எல்லாத் துறைகளிலும், அவர் தமது கவனத்தைச் செலுத்தி பழைய விஷங்களையும் பழைய ஸ்தாபனங்களையும், பழைய மனிதர்களையும் நீக்குவதிலும் மாற்றுவதிலுமே கண்ணுங் கருத்துமாயிருந்து, தர்ம சத்திரங்கள், தேவாலயங்கள் முதலிய இடங்களில் அபரிமிதமாகச் செலவிடப் பட்டு வந்த பணத் தொகைகளை சிக்கனமாகச் செலவிடத் தக்க வழிகளையும் கண்டுபிடித்து அநுபவத்திற்குக் கொண்டுவந்தார். அவரால் நன்மையடைந்த சிலர் அவரைப் புகழத் தலைப் பட்டனர். அவரால் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பந்திகள் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் தவித்து அவரைப் பகைத்துத் தூற்றலாயினர். அவர்களுள் நூற்றுக் கணக்கானவர்கள் சோம்பேறி களாயும் முடுச்சுமாறிகளாகவும், திருடர்களாயும் மாறி, சமயம் பார்த்து ஊரில் கொள்ளை அடிக்கவும், திருடவும், சூதாடவும் ஆரம்பித்தனர். அதற்குமுன் தாசில்தார் ரெவினியூ இன்ஸ்பெக்டர் முதலிய உத்தியோகங்களை வகித்திருந்தவர்கள் பலரும் மேற்படி கோஷ்டியில் சேர்ந்து கொண்டனர். 

ஆனால், தாம் எத்தகைய எளிய நிலைமையில் இருந்தாலும், தமக்கு எவ்விதமான தாழ்மையும் சோதனையும் நேரிட்டாலும், தாம் தமது நற்குணத்தையும் ஒழுக்கத் தூய்மையையும் விட்டு, தீய வழியில் செல்லல் ஆகாது என்ற மனவுறுதியும் சன்மார்க்கப் பிரவர்த்தியுமுள்ள மனிதர்கள். ஆயிரத்தில் ஒருவராயினும், எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இருப்பது சகஜம் ஆதலால், மேலே கூறப்பட்டபடி வேலையிலிருந்து விலக்கப்பட்ட தாசில் தார் ஒருவரிடம் சமயற்காரனாக இருந்த ஒர் ஏழை மனிதன் அந்தத் தாசில்தாரை விட்டு விலக நேர்ந்தது. அவனுக்கு ஒரு நோயாளி மனைவியும் ஏழு குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் உண்பித்து சவரக்ஷிக்க வேண்டியதுதான விலக்க இயலாத பெருத்த பொறுப்பு அவனுக்கே வந்து சேர்ந்தது. ஆகையால், தனது அநாதரவான துர்ப்பாக்கிய நிலைமையில் தான் எவ்விதமான தொழிலைச் செய்து பொருள் தேடி அவ்வளவு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவது என்ற கவலையும் மலைப்பும் தோன்றி அவனை இரவுபகல் வதைக்கத் தொடங்கின. 

அவன் பல பெரிய மனிதர்களிடம் சென்று தனக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுப் பார்த்தான். எவ்விடத்திலும் வேலை கிடைக்கவில்லை. வீட்டிலோ குழந்தைகள் பசியோ பசியோவென்று பறக்கிறார்கள். நோயாளியாகப் படுத் திருந்த மனைவிக்கு மருந்து கொடுக்க வைத்தியர் முன் பணம் கேட்கிறார். மருந்திற்கும் கஞ்சிக்கும் வழி இல்லாமையால், அவளுடைய உயிர் நிமிஷத்திற்கு நிமிஷம் போய்க் கொண்டே இருக்கிறது. அவன் போஜனம் செய்து மூன்று நாட்களாயின. பிறரிடம் போய்த் தனது ஏழ்மைத் தனத்தை வெளியிட்டு யாசகம் கேட்பது அவனுக்கு ஆண்மைத்தனமாகத் தோன்றவில்லை. யாசகம் வாங்குவது, திருடுவது, பொய் சொல்வது முதலிய காரி யங்களைச் செய்து வயிற்றை வளர்ப்பதிலும், தானும் தன்து பெண்டு பிள்ளைகளும் கூண்டோடு மடிந்து அழிவதே அவனுக்கு சிலாக்கியமாகத் தோன்றியது. அத்தகைய கதியற்ற நிலைமையில், அந்த மனிதன், அந்த ஊரில் இருந்த வரப்பிரஸாதியான ஒரு பிள்ளையார் கோவிலை அடைந்து, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து “சுவாமி ஆண்டவனே! விக்ந விநாயகமூர்த்தி! உலகத்தாருடைய இடர்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய கோரிக்கைகள் நிர்விக்நமாகக் கைகூடும்படி செய்து வைக்கும் சர்வ ஜனரக்ஷக தயா பரனே! இந்த ஏழையின் விஷயத்தில் நீர் இப்படிப் பாரா முகமாய் இருப்பது நியாயமா? கோடாநுகோடி ஜனங்கள் உண்டு ஜீவிப்பதற்கு இடங்கொடுக்கும் இந்த மகா அகண்டமான உலகத் தில், நான் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் தவிக்கிறேனே! திருடர்களும், சூதாடிகளும், மோசக்காரர்களும் வெகு சுலபத்தில் ஏராளமான பொருளைச் சம்பாதிப்பதும், மகா அலட்சியமாக அதை விரயம் செய்வதுமாய் இருந்து சந்தோஷமாகக் காலந் தள்ளுகிறார்களே.மானமாகவும், நாணயமாகவும், ஒழுங்கான வழியிலும் உழைத்துப் பொருள் சம்பாதிக்க வேண்டுமென்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்திருப்பவனான எனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை! கடவுளே உம்முடைய நீதிபரி பாலனம் இப்படியும் இருக்குமா? இன்றைய தினம் அந்திப் பொழுதிற்குள் எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டாவிடில், நானும், என் குடும்பத்தாரும் மாண்டுபோவது நிச்சயத்திலும் நிச்சயம். 

சுவாமி! என்னுடைய அவஸ்தையைக் கண்டு நீர் இரங்கா விட்டாலும், ஒரு பாவத்தையும் அறியாத பகுத்தறிவற்ற என்னுடைய சிறு குழந்தைகள் படும்பாட்டைக் கண்டு கூடவா உமக்கு மனதிரங்கவில்லை. ஆ தெய்வமே! எங்கள் மேல் கருணா கடாக்ஷம் வையும் ஐயனே!” என்று கூறி நிரம்பவும் உருக்கமாகக் கடவுளை வேண்டி ஸ்தோத்திரம் செய்த பின் கோவிலை விட்டு வந்துகொண்டே இருந்தான். அதற்கு முன் அவனுடன் பழகிய மனிதர்கள் ஆங்காங்கு குறுக்கிட்டனர். ஆதலால், அவர்களைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் அவனுக்கு ஒருவித லஜ்ஜை தோன்றிப் போராடியது. ஆகையால் அவன் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடி நடந்துகொண்டே சென்றான். அவ்வாறு அவன் சென்றது எப்படி இருந்ததென்றால், உலகத்திலுள்ள சகல மான பொருள்களுக்கும் பூமிதேவியே உரிமை உடையவளன்றி, மனிதர்கள் வகித்துக்கொள்ளும் உரிமை பொய்யான உரிமை யாதலால், தான் போலிச் சொந்தக்காரரின் தயவை நாடுவதைவிட உண்மைச் சொந்தக்காரரின் தயவை நாடுவதே கண்ணியமான காரியம் என்று நினைப்பதுபோல இருந்தது. அவ்வாறு அவன் சிறிது தூரம் சென்றுகொண்டே இருக்க, தரையில் மணலின் மறைவில் கிடந்த ஏதோ ஒரு வஸ்து பளிச்சென்று மின்னி அவனது கவனத்தைக் கவர்ந்தது. அவன் அதை உற்று நோக்கிக் கீழே குனிந்து அந்த வஸ்துவைக் கையில் எடுக்க, அது ஒரு முழு ரூபாய் என்பது உடனே தெரிந்தது. இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் அவன் அதை உண்மையென்றே நம்பவில்லை. ஆனாலும், அது பட்டப் பகல் வேளையாதலாலும், தான் விழித்த விழியோடும், தெளிவான அறிவோடும் வழி நடந்து வந்துகொண்டிருந்த உணர்வு நன்றாக இருந்தமையாலும், அது உண்மையில் வெள்ளி ரூபாய்தான் என்கிற நிச்சயம் அவனது மனத்தில் ஏற்பட்டது. அந்த ரூபாயை அவன் எடுத்தவுடன், தான் அதை உடனே செலவிட்டுத் தன் குடும்பத்திற்கு ஆகவேண்டிய அவசர காரியங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனது மனத்தில் உண்டாக வில்லை. யாராவது அந்த வழியாய்ச் சென்றபோது, அந்த ரூபாய், அவரிடமிருந்து தவறிக் கீழே விழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், தான் அதை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றின. அந்தப் பணத்தை இழந்தவர், தன்னைப் போல ஒருவேளை ஏழையாக இருந்தால், அந்த எதிர்பாராத நஷ்டத்தால், அந்த மனிதர் எவ்வளவு தூரம் வருந்தித் தவிப்பார் என்றும், அந்தப்பணத்தை சம்பாதிக்க அதன் சொந்தக்காரர் எவ்வளவு தூரம் சிரமப்பட்டிருப்பாரோ என்றும் தான் எவ்விதமான பிரயாசையுமின்றி அன்னியருடைய பணத்தை அபகரித்துக் கொண்டால், அது செரிக்காமல் பலவித வியாதிகளையும் துன்பங் களையும் விசனத்தையும் உண்டாக்குமென்றும் சமயற்காரன் பலவாறு எண்ணமிட்டவனாய் நாற்புறங்களிலும் திரும்பி, யாரா கிலும் மனிதர் போகின்றனரோவென்று கவனித்துப் பார்த்தான். எவரும் காணப்படவில்லை. அவன் மேலும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்றபடி, அந்தப் பணத்தைத் தான் என்ன செய்கிறது என்பதைக் குறித்து யோசனை செய்தான். அவன் நல்ல கூர்மையான புத்தியும் வியவகார ஞானமும் உடையவன். எவருக் காவது புதையலோ அல்லது வேறு பொருளோ பாதை முதலிய பொது இடங்களிலிருந்து அகப்பட்டால், அதன் கிரயம் 10 ரூபாய்க்கு மேற்படுமானால், அதை அவர் போலீசாரிடம் ஒப்பு விக்க வேண்டுமென்றும், அதற்குக் குறைவான பெறுமான முடைய பொருளாக இருந்தால், அதைக் கண்டெடுத்தவரே எடுத்துக் கொள்ளலாமென்றும் அந்த சமஸ்தானத்தில் சட்டம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை அவன் அறிந்தவன். ஆதலால், தான் அதைப் போலீசாரிடம் கொடுத்தால், அவர்கள் சட்டப் பிரகாரம் அதை வாங்கிக் கொள்ளமாட்டார்கள் என்று அவன் உணர்ந்தான். தான் கண்டவர்களிடத்தில் எல்லாம் அதைப்பற்றிப் பிரஸ்தாபம் செய்தால், ஒவ்வொருவரும் அது தம்மால் போடப்பட்டதென்றே சொல்லுவார்கள். ஆதலால், அதன் உண்மையான சொந்தக் காரரிடம் அது போய்ச் சேராதென்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையால், தான் ஒரு யுக்தி செய்யவேண்டும் என்ற யோசனை அவனுக்குத் தோன்றியது. 

அந்த நகரத்தில் சுமார் ஆயிரம் வீடுகளே இருந்தமையால், தான் ஒவ்வொரு நாளிலும் சுமார் 50 வீடுகளுக்குச் சென்று, அவ் வீடுகளில் உள்ளவர்கள் இன்ன இடத்திற்கு அருகில் ஏதாவது பொருளை இழந்ததுண்டா என்று விசாரிக்கவேண்டும் என்றும், எவரொருவர் தாம் ஒரு ரூபாயைப் போட்டுவிட்டதாகச் சொல்லு கிறாரோ அவரிடம் அதைக் கொடுத்துவிட வேண்டுமென்றும் அந்த சமயற்காரன் தீர்மானித்துக் கொண்டான். ஒரு வேளை அந்த மனிதர் ஒரு ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை இழந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியதாகையால், அவன் அந்த ரூபாய் கிடந்த இடத்தைச் சுற்றிலும் சிறிது தூரம் வரையில் போய் நன்றாகத் தேடி ஆராய்ச்சி செய்து பார்த்தான். வேறு பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே அந்த மனிதர் இழந்தது ஒரு ரூபாய் தான் என்று அவன் தீர்மானித்துக்கொண்டு, உடனே அவ்விடத்தை விட்டு நடந்து பக்கத்திலிருந்து ஆரம்பமான தெருவிலுள்ள வீடுகள் ஒவ்வொன்றிலும் புகுந்து, தான் தீர்மானித்துக் கொண்டபடி விசாரணை செய்ய, சிலர் தாம் எந்த வஸ்துவையும் இழக்கவில்லை என்றும், சிலர் தாம் நகையை இழந்ததாகவும் கூறினார்களே யன்றி, எவரும் ஒரு ரூபாயை இழந்துவிட்டதாகக் கூறவில்லை. தான் சங்கற்பித்துக் கொண்டபடி, அவன் அன்றைய கணக்கிற்கு 50-வீடுகளில் சென்று விசாரணையைத் தீர்த்துக்கொண்டான். 

அவ்வாறு பிரயாசைப்பட்டதனாலும், நீண்ட பட்டினி யாலும், அவன் சோர்வடைந்து தத்தளித்தவனாய்த் தன் வீட்டை அடைந்தான். அவ்விடத்தில் அவனது மனைவியும், குழந்தை களும் பட்டினி கிடந்து, நெருப்பில் விழுந்த புழுக்கள்போலத் துடித்த வண்ணமிருந்த மகா சங்கடமான காட்சியைக் காணவே, அந்த சமயற்காரன் தனது சொந்தக் கஷ்டங்களை மறந்தவனாய், அவர்களது துன்பத்தைத் தான் எவ்விதம் விலக்குவது என்று மறு படியும் யோசனை செய்து பார்த்தான். தன்னிடமிருந்த ரூபாயை உபயோகித்து அவர்களைக் காப்பாற்றலாமா என்ற ஒரு நினைவு அவனது மனத்தில் தோன்றியது. ஆனாலும், அவன் ஒரே உறுதி யாக, “சே! இது எவனுடைய பணமோ! இதை நான் செலவிடக் கூடாது” என்று ஒரே முடிவாகத் தீர்மானித்துக் கொண்டவனாய் இருக்க, மற்றவர்களது அவஸ்தையும் கூக்குரலும் அதிகரித்து, அவன் சகிக்கக் கூடிய வரம்பிற்கு மிஞ்சிவிடவே, அவனது மனத்தில் இன்னொரு யுக்தி தோன்றியது. 

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்கு ஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான். அவ்விடத்தில் அந்த சமயற்காரனுக்கு மைசூர் மகாராஜ னுடைய அரண்மனையிலிருந்த ஒரு சமயற்காரனது சிநேகம் உண்டாயிற்று. அந்த அரண்மனைச் சமயற்காரன் புதிய புதிய மிட்டாய் தினுசுகள் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்ற மகா நிபுணன். 

இப்பொழுது இந்தியா தேசமெங்கும் பிரபலமடைந்து, எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் மைசூர் பாகு என்ற மிட்டாயியை அந்த சமயற்காரன்தான் புதியதாய்க் கண்டுபிடித்து, அப்போது மைசூர் மகாராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அதைக் கொடுத்து, அவர்களிடம் தங்கத்தோடுப் பரிசும் சர்வ மானியமும் பெற்று மிகுந்த கீர்த்தியோடு விளங்கிக் கொண்டிருந் தான். அவனுடைய சிநேகத்தையும் பிரியத்தையும் எப்படியோ சம்பாதித்துக் கொண்ட நமது பூலோக விந்தை சமயற்காரன் மைசூர்பாகு என்ற புதிய மிட்டாயி செய்யும் முறையை அவனிட மிருந்து கற்றுக்கொண்டு வந்து, அதைப் பல தடவைகளில் செய்து தனது எஜமானரான தாசில்தாருக்குக் கொடுத்து, அவரால் அபாரமாக மெய்ச்சப்பட்டிருந்தான். அந்த நினைவு அவனுக்கு உண்டாயிற்று. 

தான் வழியில் கண்டெடுத்த ஒரு ரூபாய் மறுநாள் வரையில் வீணில் தன்னிடம் தூங்கிக்கொண்டிருக்கும். ஆதலால், தான் அதன் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து அவரிடம் கொடுக்கிற வரையில், அதை அவரிடமிருந்து தான் வட்டிக்கடனாய் வாங்கினது போல பாவித்து உபயோகித்துக்கொள்வது தவறல்ல என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் உடனே கடைக்குப் போய் சர்க்கரை, கடலைமாவு, நெய் பிறகு, மண்பாத்திரங்கள் முதலியவற்றை வாங்கிக் கொணர்ந்தால், அரை நாழிகை சாவகாசத்தில், தான் மைசூர்பாகு தயாரிக்கலாம் என்றும், அதைத் தான் எடுத்துக் கொண்டுபோய் அதிக ஜன நடமாட்டமுள்ள கடைத்தெருவில் அதை வைத்துக்கொண்டு விற்றால், அது புதிய தினுசு மிட்டாய். ஆதலால், ஜனங்கள் ஆசையோடு அதை உடனே வாங்கிவிடு வார்கள் என்றும், அதனால் தனக்கு சுமார் மூன்று ரூபாயாவது கிடைக்கும் என்றும், தான் கண்டெடுத்த ரூபாய்க்கு இரண்டு அணா வட்டி சேர்த்து, அதைத் தனியாக வைத்துவிட்டு, பாக்கிப் பணத்தின் ஒரு பாகத்தை மறுநாளைய முதலாக வைத்துவிட்டு, மிச்சமுள்ளதைத் தான் தனது குடும்ப சவரக்ஷணைக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு யுக்தி நமது சமயற்காரனுக்குத் தோன்றியது. 

தனது குடும்பத்தினர் பட்டினி கிடந்து சாகும் தருணத்தில், தான் அவ்விதம் செய்வது தவறாகாது என்று நினைத்து அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்ட நம் சமயற்காரன் பணத்தோடு உடனே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்து ஒரு நாழிகை நேரத்தில் அவைகளை மைசூர்பாகாக மாற்றித் தனது குழந்தைகள் மனைவி ஆகிய எல்லோருக்கும் சில துண்டுகள் கொடுத்துவிட்டு, மிகுதி யிருந்த பெரும் பாகத்தையும் எடுத்துக் கொண்டு, கடைத்தெரு விற்குப் போய் அதிக ஜன நடமாட்டமாயிருந்த ஓரிடத்தில் தனது மிட்டாயியை வைத்துக்கொண்டு “மைசூர் மகாராஜா சாப்பிடும் புதிய மிட்டாய்!” என்று அதன் புகழைப் பலவாறு எடுத்துக் கூறி அதை விற்க எத்தனித்தான். 

அவ்விடத்திற்கு வந்த பெரியோரும் சிறியோருமான சில ஜனங்கள், அந்தப் புதிய தினுசு மிட்டாயினைப் பார்த்து அளவற்ற ஆச்சரியமும் குதூகலமும் அடைந்தவர்களாய் நெருங்கி இனா மாகக் கொஞ்சம் கொஞ்சம் வாங்கித் தின்னு மாதிரி பார்ப்போரும், அப்போதைக்கப்போது ஒரு காசு கொடுத்து வாங்குவோருமாய் அந்த மிட்டாயின் புதுமையான மணத்தையும் உருசியையும் கண்டு களிப்படைந்து அதைப்பற்றி அபாரமாகப் புகழ்ந்து கொண்டே செல்லலாயினர். மைசூர் பாகின் கீர்த்தி வெகு சீக்கிரத்தில் நாலா பக்கங்களிலும் பரவத் தொடங்கியது. அந்தக் காலத்தில் பணம் கிடைப்பது அரிதாதலால், அப்போது ஒரு பைசாவுக்கு வாங்கியது இப்போது ஒரு ரூபாய்க்கு வாங்கு வதற்குச் சமமாகக் கருதப்பட்டிருந்தது. 

ஆகவே, நமது சமயற்காரன் பைசா வியாபாரமாகவே செய்து கொண்டிருந்தான். ஆதலால், இரண்டொரு நாழிகை காலத்தில் அவன் எட்டணாவிற்கு விற்றான். அப்போது மாலை நேரம் வந்து விட்டது.எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. மற்ற கடைகளில் விளக்கெண்ணெய் விளக்குகள் முணுக் முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தன. ஆனாலும், நமது சமயற்காரனிடம் அந்த விளக்கும் இல்லை. ஆதலால், அவன் அருகிலிருந்த ஒரு கடையின் வெளிச்சத்தில் ரஸ்தாவின் ஓரத்தில் தனது மிட்டாயித் தட்டை வைத்து விற்கத் தொடங்கினான். அப்போது சுமார் இருபது முப்பது மனிதர்கள் ஒரே கும்பலாக அவ்விடத்திற்கு வந்து, நமது சமயற் காரனுடைய மிட்டாயி தட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் பார்வைக்குப் பணக்காரர்கள் போலவும், கண்ணியமான மனிதர்கள் போலவும் காணப்பட்டனர். ஆனாலும், அவர்கள் ஒருவரை யொருவர் தாறுமாறாக வைது கொள்வதும், பரிகாசம் செய்து கொள்வதுமாய் இருந்தனர். 

அவ்வாறு வந்து நமது சமயற்காரனை வளைத்துக் கொண்ட வர்களுள் மூன்று நான்கு மனிதர்கள் மிட்டாயித் தட்டண்டை வந்து “என்ன மிட்டாயிப்பா இது? பார்வைக்குப் புது மாதிரியாக இருக்கிறதே! வாய்க்கு எப்படி இருக்கும்?” என்றனர். உடனே சமயற்காரன் “இதற்கு மைசூர்பாகென்று பெயர்; நிரம்பவும் இனிப்பாகவும் மணமாகவும் இருக்கும். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான். அதைக் கேட்ட அவர்கள் நால்வரும் கொஞ்சம் சாப்பிட்டு மாதிரி பார்த்து தலைக்கு ஒவ்வொரு துண்டி எடுத்து சரேலென்று வாயில் போட்டுக்கொண்டு “ஆகா! அமிர்தம் போல இருக்கிறதே! பேஷ்! பேஷ்! அச்சா சஹ்பாஷ்! இந்த மாதிரி மிட்டாயியை நாங்கள் பிறந்தது முதல் இதுவரையில் சாப்பிட்டதே இல்லையப்பா! அடாடா! என்ன இன்பம்! என்ன ருசி!” என்று கூறிய வண்ணம், தங்களுக்குப் பின்னாலிருந்த மற்றவர்களைப் பார்த்து “நீங்களும் சாப்பிட்டு மாதிரி பாருங்கள் இந்தத் தட்டில் இருப்பதையெல்லாம் நாமே வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து விடுவோம்” என்று கூறிக்கொண்டே, தட்டிலிருந்து ஒவ்வொரு துண்டாய் எடுத்தெடுத்துப் பின்னாலிருந்த ஒவ்வொருவரிடமும் கொடுத்துக் கொடுத்து, “இந்தா, நீ சாப்பிட்டுப் பார், இந்தா, நீ சாப்பிட்டுப் பார்” என்று கூறி தானம் வழங்கினர். 

அங்கே வந்திருந்தோர் சுமார் இருபதின்மரே இருந்தனர். அந்தத் தட்டில் நூற்றுக் கணக்கில் மிட்டாயித் துண்டுகள் இருந்தன வானாலும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு, ஒரே விழுங்காய் விழுங்கிவிட்டு, சுற்றிக்கொண்டு இன்னொரு பக்கமாய் வந்து, “எனக்குக் கொடுங்கள். நான் சாப்பிட்டுப் பார்க்கவில்லை” என்று கூறியபடி பன்முறை வந்து வந்து வாங்கித் தின்று ஐந்து நிமிஷத்திற்குள் மிட்டாயித் தட்டைக் காலி செய்துவிட்டனர். அவர்களது விபரீத மான செய்கையைக்கண்டு அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்த நமது சமயற்காரன், ‘ஐயா எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறீர்களே” என்று கேட்க வாயைத் திறப்பதற்குள் அவர்கள் பெருத்த ஆரவாரம் செய்து, அத்தனை துண்டுகளையும் தின்று விட்டனர். 

அதைக் கண்ட சமயற்காரன் அவர்கள் எல்லோரும் அடக்கு வாரற்றுத் திரியும் துஷ்டர்கள் என்றும், தான் அவர்களிடம் கண்டிப்பாகப் பேசினால் அவர்கள் தனக்கு ஏதாகிலும் தீங்கு செய்வார்கள் என்றும் நினைத்து அஞ்சி நயமாகப் பேசத்தொடங்கி, ‘ஐயா! இங்கே இருந்த மிட்டாயிகளின் மொத்த விலை ரூபாய் மூன்று ஆகிறது. நான் பரம ஏழை. இதை விற்று இதனால் கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போனாலன்றி, என் வீட்டிலுள்ள என் பெண்சாதியும் பிள்ளைகளும் இறந்து போய் விடுவார்கள். தட்டிலிருந்த மிட்டாயி முழுவதையும் நீங்களே எடுத்துக் கொண்டீர்கள். ஆகையால் தயவு செய்து மூன்று ரூபாய் கொடுத்து விடுங்கள்” என்று பணிவாகக் கேட்க, அவனுக்குப் பக்கத்தில் நின்ற சில முக்கியஸ்தர்கள் புரளியாக நகைத்து, ‘ஆகா; மிட்டாயிக் கடைக்காரர் பலே கெட்டிக்காரராய் இருக் கிறாரே! மாதிரி பார்ப்பதற்காக நீர் எல்லோருக்கும் கொடுத்து வந்ததுபோல எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தீர்; அதற் குள்ளாகவே உம்முடைய தட்டு காலியாகிவிட்டது. மிட்டாயி நன்றாக இருக்கிறது என்பதைப்பற்றி ஆட்சேபனையே இல்லை. நீர் இப்போது எவ்வளவு மிட்டாயி கொடுப்பதானாலும், நாங்கள் அதற்குப் பணம் கொடுத்துவிட்டுப் போகிறோம். வேறே எங்கேயாவது இன்னும் மிட்டாயி வைத்திருந்தால், போய் அதை எடுத்துக்கொண்டு வாரும். நாங்கள் மாதிரிக்காக எடுத்துக் கொண்ட தற்குக் காசு கொடுக்க நியாயமில்லை. ஆகையால் நாங்கள் உமக்கு ஒரு பைசாகூடக் கொடுக்கவேண்டிய கடமை ஏற்படவில்லை” என்றனர். 

அதைக் கேட்ட சமயற்காரன் அடக்க இயலாத ஆத்திரமும், ஆச்சரியமும், ஏமாற்றமும், விசனமும் அடைந்து, ”ஐயா! நான் ஏழை. நான் இதை முதலாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். இதில் ரூ. 1-2-0 நான் நான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியவன். தயவு செய்து ஏழையக் காப் பாற்றுங்கள்” என்று கூறிக் கைகுவித்துக் குனிந்து அவர்களை வணங்கிக் கெஞ்ச, அவர்களுள் முரடாயிருந்த சிலர் நிரம்பவும் கோபங் கொண்டவர் போல நடித்து அவனைத் தாறுமாறாக வையவும் அதட்டவும் தொடங்கி, “அடேய் அயோக்கிய நாயே! மாதிரி கொடுப்பதற்கே போதாமலிருந்த சொற்ப மிட்டாயியை வைத்துக்கொண்டு நீ விற்றுப் பணம் பிடுங்கவா பார்த்தாய்! புது மாதிரியான மிட்டாயியைக் கொண்டுவந்து ருசிபார்க்கச் செய்து எங்களுடைய ஆசையைப் பிரமாதமாகக் கிளப்பிவிட்ட நீ அதற்கு மேல் காசுக்கு மிட்டாயி கேட்டால் இல்லையென்று சொல்லி, எங்களுக்கு அநாவசியமான தொந்தரவு கொடுக்கிறாயா? இப்போது நாங்கள் வேறே மிட்டாயி எதையாவது வாங்கித் தின்றாலன்றி, எங்கள் நாக்கின் தினவு அடங்காதுபோலிருக்கிறது. அதற்கு நீதான் உத்திரவாதி” என்று கூறி அவனை வையவும் அடிக்கவும் முயன்றனர். 

வேறொருவன் அவனுடைய தட்டின் மேலிருந்த காசுக் குவியலின்மீது கையைப் போட்டு ஒன்றுகூட பாக்கி விடாமல் எல்லாவற்றையும் அப்படியே அள்ளிக் கொண்டு கும்பலில் நுழைந்து அப்பால் நகர்ந்து ஓடிப்போய் விட்டான். அதற்குள் வேறு சிலர், “அடேய்! அடேய்! காசை எடுக்க வேண்டாம். அதைக் கொடுத்துவிடு” என்று கடைக்காரனுக்குப் பரிந்து பேசு கிறவர்கள் போலக் கூவிக்கொண்டே, ஓடிப்போனவனை பின் தொடர்ந்து, ‘அடேய்! நில் நில் ஓடாதே; காசைக் கொடுத்து விட்டுப் போ” என்று கூச்சலிட்ட வண்ணம் அப்பால் நழுவிப் போய்விட்டனர். 

மிஞ்சி நின்ற மற்றவர்கள் மிட்டாயிக்காரனிடம் நிரம்பவும் அநுதாபமாகவும், விசனகரமாகவும் இரக்கமாகவும் பேசத் தொடங்கி, “ஐயா! கடைக்காரரே! இன்று உம்மை விட்டு விடுகிறோம்; நாளைக்காவது நீர் தட்டு நிறைய மிட்டாயி கொண்டுவாரும். அதன் விலை எவ்வளவானாலும், உடனே கொடுத்து விட்டு நாங்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளு கிறோம். என்ன இருந்தாலும், அந்த அயோக்கியன் உம்முடைய காசை எடுத்துக்கொண்டு போனது தப்பிதம்தான். நீர் இவ்விடத் திலேயே இரும். நாங்கள் போய் அவனைப் பிடித்து, உம்முடைய காசை வாங்கிக்கொண்டு வந்து உம்மிடம் கொடுத்துவிட்டுப் போகிறோம்” என்று ஆறுதல் மொழி கூறிவிட்டு அப்பால் நழுவிப் போய் விட்டனர். 

அவ்வாறு போனவர்களுள், தன் பழைய எஜமானரான தாசில்தாருடைய அடையாளங்கள் கொண்ட ஒரு மனிதரும் இருந்ததாக நமது சமயற்காரன் உணர்ந்தான். அந்தத் தாசில்தார் தமது வேலையை இழந்த பிறகு கண்ணியமான தொழில் எதையும் செய்யமாட்டாமல், தம்மிடமிருந்த சொத்தை அபிவி ருத்தி செய்ய எத்தனித்து சூதாட்டத்தில் இறங்கினார். அப்படி இறங்கியதில், அவரிடமிருந்த சொத்து முழுவதும் அடியோடு போய்விட்டது. அவர் தமது கண்ணியத்தையும் நாணயத்தையும் விட்டு அந்த முடிச்சு மாறிக் கும்பலில் சேர்ந்து கொண்டார். உண்மையில் அவரே நமது சமயற்காரனுடைய பழைய எஜமான ராயினும், அவரே எவ்விதமான இழி தொழிலில் இறங்கமாட்டா ரென்று நமது சமயற்காரன் எண்ணி, அது வேறே யாரோ ஒருவர் என்று நினைத்துக் கொண்டான். 

அவர்கள் எல்லோரும் கடைத் தெருவில் ஜனங்கள் நட மாட்டமிருந்த காலத்தில் அவ்வாறு தனது பொருளைக் கொள்ளை அடித்துச் சென்றதை நினைக்க நினைக்க நமது சமயற்காரன், ”என்ன ஆச்சரியம் இது! இந்த ராஜ்யத்தில் கேள்விமுறை இல்லையா? புதிதாய் வந்த திவான் மகாராஜனுடைய அரண் மனையில் சிப்பந்திகள் கொள்ளையடிக்கிறார்களென்று அவர் களுள் பலரை வேலையிலிருந்து தகையர் செய்து விட்டு, நிரம்பவும் கண்டிப்பான முறைகளை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஊரில் பொது ஜனங்களுடைய சொத்தை இப்படிப் பட்ட திருடர்கள் கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்கு அவர் யாதொரு ஏற்பாடும் செய்யவில்லை! ஆகா! என்ன அக்கிரமம் இது! இனி நான் என்ன செய்கிறது! வழியில் கிடந்து அகப்பட்ட ரூபாயை நான் வட்டியும் முதலுமாக அதன் சொந்தக்காரரிடம் சேர்க்க வேண்டுமென்று நினைத்த நினைவும் பலியாமல் போய் விட்டதே! அதுவுமன்றி, என் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்கு நான் கடைசியான ஜீவாதாரமாக எண்ணிய இந்த முயற்சியும் இப்படிப் பலிதமடையாமல் போய்விட்டதே! இனி நான் என்ன செய்வேன்! எப்படி நான் வீட்டிற்குப் போய் என் குழந்தைகளின் முகத்தில் விழிப்பேன்! இன்றைக்காவது தாங்கள் சாதத்தைக் காணலாமென்று என் குழந்தைகள் ஆவலோடு வழி பார்த்திருப் பார்களே! நான் வெறுங்கையோடு போனால், அவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்து ஏங்கி அப்படியே விழுந்து விடுவார்கள்! ஐயோ! தெய்வமே! இன்னம் எவ்வளவு காலந்தான் நீ என்னையும் என் குடும்பத்தாரையும் சோதனை செய்ய எண்ணுகிறாயோ தெரியவில்லையே!” என்று பலவாறு பிரலாபித்துத் தனக்குத் தானே சிந்தனை செய்தவனாய்த் தான் உடனே அந்த ஊர்த் திவானிடம் சென்று அன்று நடந்த கொள்ளையைப் பற்றிப்பிராது செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்ட வனாய்க் கடைத் தெருவை விட்டு திவானுடைய ஜாகையின் வாசலுக்குப் போய்ச் சேர்ந்து அங்கிருந்த ஒரு சேவகனைக் கண்டு அவனிடம் தனது வரலாற்றையும், தனது குடும்பத்தின் இப்போதைய நிலைமையையும், தனது மிட்டாயியும் காசும் கொள்ளையிடப்பட்ட விவரத்தையும் கூறி, விஷயங்களை எல்லாம் திவானிடம் சொல்லும்படி அவனிடம் பணிவாக வேண்டிக்கொள்ள, அதைக் கேட்ட சேவகன் மிகுந்த இரக்கமும் பச்சாதாபமும் தோற்றுவித்தவனாய், உடனே திவானிடம் போய் விட்டுத் திரும்பிவந்து “அப்பா! நீ சொன்ன சங்கதிகளை எல் லாம் நான் திவானிடம் சொன்னேன். அவர் எல்லா விஷயங்க ளையும் சட்டப்படியே நடத்துகிற மகா கண்டிப்பான மனிதர். இது கச்சேரி செய்யும் நேரமல்லவாம். நீ எழுத்து மூலமாக உன் பிராதை எழுதி எடுத்துக்கொண்டு வந்து, நாளைய தினம் காலை 11- மணிக்குமேல் அவர் கச்சேரி செய்யும் போது கொடுக்க வேண்டுமாம். அப்படிக் கொடுத்தால் அவர் சட்டப்படி விசாரித்து, நீதி செலுத்தவதாகச் சொல்லுகிறார்” என்றான். 

அதைக் கேட்ட நமது சமயற்காரன் விசனத்தினாலும் ஏமாற்றத் தினாலும் அப்படியே குன்றி உட்கார்ந்துபோய், ”ஆகா! என்ன மனித ஜன்மம்! என்ன நீதி இது ! நாளைய தினம் 11-மணி வரையில் நானும் என் குடும்பத்தாரும் பிழைத்திருந்தால் அல்லவா? அதற்குமேல் இவரிடம் பிராது கொடுக்க நான் வர முடியும்; சட்டம் இப்படியும் இருக்குமா? மனிதர்கள் ஏழ்மைத் தனம், இல்லாமை பசி, தாகம் முதலிய துன்பங்களுக்கு இலக் கானவர்கள் என்பதை சட்டம் இலட்சியமே செய்கிறதில்லை போலிருக்கிறதே. அவர்களை கேவலம் உயிரற்ற ஒரு யந்திரம் என்றே சட்டம் மதிக்கிறது போலிருக்கிறதே. ஆனாலும், சட்டத்தை அநுபவத்தில் பிரயோகிக்கும் மனிதர்கள் கூடவா கொஞ்சமும் ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்கவேண்டும்!” என்று வாய் விட்டுக் கூற, அதைக் கேட்ட சேவகன் ”அப்பா! நான் என்ன செய்வேன். இந்த திவான் மகா கண்டிப்பான மனிதர். யாராவது தாம் ஏழை என்று இவரிடம் சொல்லிக் கொண்டால், அதை இவர் உண்மை என்று உடனே ஏற்றுக்கொள்ளுகிறதே இல்லை. ஏனென்றால், சிலர் சுலபமாகப் பணம் சம்பாதித்துப் பிழைப்பதற்கு அதை ஒரு தந்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனால் அவர்கள் சோம்பேரிகளாய் மாறி மற்ற மனிதருக்கு ஒரு பாரமாக இருந்து வருகிறார்கள் என்றும் எண்ணி, உண்மை யிலேயே பட்டினி கிடந்து இறப்பவர்களாக இருந்தாலும், அதையும் இலட்சியம் செய்கிறதில்லை. ஆகையால், இவரிடம் இப்போது காரியம் பலிதமாகாது. உன்னுடைய பரிதாபகரமான நிலைமையைக் கேட்டறிந்தது முதல், என் குடல் கலங்கிப்போய் மனம் தவிக்கிறது. என் கைவசத்தில் இப்போது எட்டணா பணம் இருக்கிறது. இதை நான் தருகிறேன். நீ கொண்டுபோய் உன் குழந்தைகளுக்குச் சாப்பாடு செய்துவை” என்று நிரம்புவும் அநுதாபத்தோடு கூறித் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தான். அந்த எளிய சேவகனது பெரும் போக்கான புத்தியையும் தயாள குணத்தையும் கண்டு, மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்த சமயற்காரன், “ஆகா! இந்த ராஜ்ஜியத்தில் இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்யமுள்ள மனிதரும் இருக்கிறார்களா! இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆனாலும் ஒரு விஷயம். நான் அன்னியருடைய பொருளின்மேல் ஆசை வைப்பதே கூடாது என்ற விரதத்தை உறுதியாக அநுஷ்டிப்பவன்; என்னுடைய சொந்த உழைப்பினால் எனக்குக் கிடைக்கும் பொருளே என்னுடைய பொருளன்றி மற்றது என்னுடைய பொருள் ஆகாது. அதைக்கொண்டு நான் என்னுடைய உடம்பை வளர்ப்பது நியாய மல்ல. ஆகையால், உங்கள் பொருள் உங்களுக்கே இருக்கட்டும்” என்றான். 

அதைக் கேட்ட சேவகன் மன இளக்க மடைந்து ஆநந்தக் கண்ணீர் விடுத்து, “ஆகா! பெண்டுபிள்ளைகள் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் மகா விபரீதமான நிலைமையில் இந்த உலகத்தில் வேறே யாராவது இப்படி நடந்து கொள்வார்களா! இது மகா அதிசயமான காரியமாக இருக்கிறது! இருக்கட்டும், நீர் இதை னாமாக வாங்கிக்கொள்ள வேண்டாம்; இதை ஒரு கடனாக வைத்துக் கொள்ளும். நீர் மறுபடியும் பணம் சம்பாதிக்கும்போது எனக்கு இந்த எட்டணாவைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்; வாங்கிக்கொள்ள மறுக்காதீர்” என்றான். 

சமயற்காரன், “ஐயா! உங்களுக்கு அநேககோடி வந்தனங்கள். உங்கள் தயாள புத்திக்கு உங்களையும் உங்களுடைய பிள்ளை குட்டிகளையும் கடவுள் எப்பொழுதும் மங்களகரமாக வைக்கட்டும். நான் இப்போது வேலை செய்ய வகையற்றுத் திண்டாடுகிறேன். நான் இனி நியாயமான வழியில் சம்பாத்தியம் செய்ய எனக்கு ஏதாவது ஒரு துறை ஏற்படுமென்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எனக்கு மறுபடி பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தால், நான் அதை வைத்துக்கொண்டு கடன் வாங்கலாம். ஆகையால், எவ்வித நம்பிக்கையுமற்று இறக்கும் தருணத்தில் இருக்கும் நான் உங்களிடம் கடன் வாங்குவது நியாயமாகாது. ஆகையால், எனக்கு உங்களுடைய பணமே வேண்டாம். நாளைய தினம் பகல் வரையில் எங்களுடைய உயிர் இருந்தால், நான் மறுபடி இந்த திவானிடம் வந்து எழுத்து மூலமாகப் பிராது கொடுத்துப் பார்க்கிறேன். இவரிடம் நியாயம் கிடைக்குமானால், என்னிடத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட மூன்று ரூபாய் எனக்கு வரும். அதைக் கொண்டே நான் இனி என் ஆயிசுகால பரியந்தம் பிறருக்கு பார மாயில்லாமல் ஜீவனம் செய்துகொள்வேன்” என்று கூறியவண்ணம் அவ்விடத்தை விட்டுச் சரேலென்று நடந்து மறைந்துபோனான். 

சன்மார்க்க முறையை எந்த சமயத்திலும் தான் கைவிடக் கூடாது என்கிற திடமான சித்தத்தோடு அவன் அவ்வாறு கூறி விட்டுச் சென்றானாயினும், அவனது மனநிலைமை அப்போது எவ்விதம் இருந்திருக்கும் என்பதை விவரிப்பதைவிட யூகித்துக் கொள்வதே எளிது. அவன் தனது கொள்கையைக் கடைப்பிடிப் பதில் மகா அபூர்வமான மனவுறுதி உடையவனாக இருந்தாலும், அவன் தனது பெண்சாதி குழந்தைகள் முதலியோரது விஷயத்தில் வாஞ்சையும் இரக்கமும் பச்சாதாபமும் அற்றவனாக இருக்க வில்லை. ஆகவே, தான் வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்பிப் போய் அவர்களது கோரமான அவஸ்தையைக் காண்பதை விட, மறுநாளைய பகலில் தனது வழக்கு முடிகிறவரையில் தான் தனது வீட்டிற்கே போகாமல் இருப்பது உசிதமான காரியமென்று அவன் நினைத்து, ஒரு தர்ம சத்திரத்தின் திண்ணையில் படுத்திருந்து இந்த இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து, தனது ஸ்நானம் முதலிய கடமைகளை முடித்துக்கொண்டு சரியாக II – மணிக்கு திவானுடைய கச்சேரியை அடைந்து, அவ்விடத்தி லிருந்த ஒரு குமாஸ்தாவிடம் சென்று ஒரு காகிதம், எழுதுகோல் முதலியவற்றை வாங்கித் தன் கைப்படவே ஒரு பிராது எழுதி அதை திவானிடம் கொடுத்தான். 

அவர் அதை வாங்கி நிதானமாகப் படித்துப் பார்த்தபின் அவனை நோக்கி, “ஏனையா! நீர் நேற்று மாலையில் மிட்டாய் விற்றபோது சிலர் வந்து உம்மைச் சூழ்ந்து கொண்டு உம்மிடம் இருந்த மிட்டாய்த் துண்டுகளை மாதிரி பார்ப்பதாகச் சொல்லி உம்முடைய அநுமதியில்லாமல் அவர்களே எடுத்துத் தின்று விட்டதாகவும், கடைசியாக, அவர்களுள் ஒருவர் உம்முடைய தட்டிலிருந்த காசுகளையெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிப் போனதாகவும், பிறகு மற்றவர்களும் போய்விட்டதாகவும் பிராதில் சொல்லி இருக்கிறீர். ஆனால், அப்படி நடந்தது நிஜந்தானா என்பதை ருஜுப்பிப்பதற்கு உம்மைத் தவிர வேறே சாட்சிகள் இன்னார் இன்னார் இருக்கிறார்கள் என்று நீர் எழுதவில்லையே!” என்றார்.

சமயற்காரன் ‘எஜமானே! அவர்கள் சுமார் இருபது மனிதர்கள் இருந்தார்கள். எல்லோரும் என்னைச் சுற்றிக்கொண்டு இருந் தார்கள். மற்ற கடைக்காரர்கள் எல்லோரும் பக்கத்தில் இல்லை; அவர்கள் என்னுடைய பொருளை அபகரித்துக்கொண்டு போன பிறகு நான் பக்கத்திலிருந்த சில கடைக்காரர்களிடம் போய் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் “அடடா! நாங்கள் கவனிக்க வில்லையே! யாரோ ஜனங்கள் வந்து பணம் கொடுத்து மிட்டாயி வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றல்லவா நாங்கள் நினைத் தோம். அவர்கள் யாரென்று கூட நாங்கள் கவனிக்கவில்லையே!” என்று சொல்லிவிட்டார்கள்; ஆகையால், என்னைத்தவிர இதற்கு வேறே சாட்சிகள் யாரும் இல்லை.” என்றான். 

அதைக்கேட்ட திவான் ‘என்ன ஐயா! உம்முடைய பிராது மகா விசித்திரமாக இருக்கிறதே! ஒருவர் தமக்கு மற்றவர் ஏதாவது கெடுதல் செய்துவிட்டதாகப் பிராது கொடுத்தால், எழுத்து மூலமான ஆதாரத்தைக் கொண்டோ, அல்லது, தக்க மனிதர்களின் சாட்சியத்தைக் கொண்டோ, அவர் தம்முடைய பிராது உண்மை யானது என்று ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அப்படி ஸ்தாபித்தால் நியாயாதிபதி அதற்குத் தக்க பரிகாரம் செய்து கொடுக்க வேண்டு மென்றும் சட்டம் பரிஷ்காரமாகச் சொல்லுகிறது. அவர் மாத்திரம் சொல்வது போதுமானதல்ல, நீர் சொல்வது ஒருவேளை உண்மை யாக இருக்கலாம். இருந்தாலும், அதை மாத்திரம் வைத்துக் கொண்டு நான் உமக்கு அநுகூலமாகத் தீர்ப்புச்செய்வது உசித மாகாது. ஏனென்றால் இதுபோலவே, வேறு பலர் தமக்கு விரோதிகளாயிருப்பவர் மீது பொய்ப்பிராது கொண்டுவரத் துணி வார்கள். அதற்கெல்லாம் இடம் கொடாமல் சட்டம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் நான் சட்டப்படி உம்முடைய பிராதைத் தள்ளுவதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கில்லை” என்றார். 

அதைக் கேட்ட சமயற்காரன் ‘ஐயா! தாங்கள் சொல்வது நியாயமே. ஆனாலும் இப்படி வலியவர்கள் பலர் கும்பலாக வந்து எளியவர்களிடமுள்ள சொத்துக்களை அபகரித்துக் கொண்டே போனால், எளியவர்களுக்கு சட்டத்தில் பாதுகாப்பு என்பதே கிடையாதா?” என்றான். திவான், “அது வேறே சங்கதி; நகரத்தில் போலீஸார் முதலிய உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இம்மாதிரி அக்கிரமம் நடக்காமல் தடுக்கக் கடமைப்பட்டிருக் கிறார்கள். அவர்களையும் மிஞ்சிக் குற்றம் செய்யாத ஒரு நிரபராதி அக்கிரமமாக தண்டனை அடைவதைக் காட்டிலும், குற்றம் செய்த நூறு மனிதர்கள் விடுதலை அடைவது உசிதமான விஷயம் என்பது சட்ட சம்மதமான கொள்கை; நீர் கொண்டுவந்திருப்பது உண்மையான பிராதுதான் என்பதை நான் இப்போது நிச்சயமாகக் கண்டு பிடிக்க ஏதுவில்லை. ஆகையால்; உண்மையில் குற்றம் செய்த அந்த இருபது மனிதரும் தப்பிப் போவது ஒரு பொருட் டல்ல. இன்று நான் உமக்கு இடம் கொடுத்து உம்முடைய பேச்சையே வேதவாக்கியமாக எடுத்துக்கொண்டால், நாளைக்கு, இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு மனிதர், எவ்வித குற்றமும் செய்யாத இன்னொருவர்மீது பிராது கொடுப்பார்; சாட்சியம் இல்லையென்பார். அந்த வழக்கில் நான் அந்த நிரபராதியைத் தண்டிக்க நேருமல்லவா. ஆகையால் நீர் போய் தக்க சாட்சிகள் அழைத்துக்கொண்டு வரவேண்டும், அதுவுமன்றி,குற்றம் செய்த வர்கள் இன்னின்னார் என்ற தகவல்களையும் அறிந்துகொண்டு வரவேண்டும். ஆகையால் நான் உம்முடைய பிராதைத் தள்ளி விட்டேன்.நீர் போகலாம்” என்று கூறி வேறொரு வழக்கை எடுத்துக்கொண்டார். அவரது தீர்மானத்தைக் கேட்டு அளவற்ற ஏமாற்றமும், துயரமும், பதைபதைப்பும் கொண்ட நமது சமயற் காரன் அதற்கு மேல் தான் அவ்விடத்தில் நிற்பதிலும் அந்த திவானிடம் மறுபடி தனது வேண்டுகோளை வற்புறுத்திக் கூறுவ திலும் தனக்கு எவ்வித அநுகூலமும் உண்டாகாதென்று உணர்ந்து அவ்விடத்தை விட்டு வெளியிற் சென்றான். சென்றவன் தான் அதற்குமேல் எங்கே போவது, என்ன செய்வது, தன்னுடைய பெண்டு பிள்ளைகளின் துன்பத்தை எவ்விதம் களைவது என்பதை அறியாதவனாய்த் தயங்கிக் கலங்கி வாடித் துவண்டு வெகு நேரம் வரையில் நின்றபின், அவ்விடத்தை விட்டு, எவ்வித நோக்கமின்றி பைத்தியங் கொண்டவன்போல தெருவோடு செல்லத் தொடங் கினான். அவன் அவ்வாறு இரண்டொரு தெருக்களின் வழியாகச் சென்ற காலத்தில் அந்த ஊர் மகாராஜனது அரண்மனை அவ்விடத்தில் எதிர்ப்பட்டது. அதை அவன் பார்க்கவே அவனது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. தனது விஷயத்தில் சில மனிதர்கள் பெருத்த அக்கிரமம் செய்துவிட்டது உண்மையாக இருந்தும், அதற்கு எவ்விதமான பரிகாரமும் இல்லாமல் போனதைக் குறித்துத் தான் அந்த ஊர் மகாராஜனிடமாகிலும் முறையிட்டுக்கொண்டு, தனது குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையைத் தெரிவித்துத் தனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவனது மனத்தில் தோன்றியது. உடனே அவன் அந்த அரண்மனை வாசலை அடைந்து, அவ்விடத்திலிருந்த பாராக்காரனைக் கண்டு, தான் ஓர் அவசர காரியமாக மகாராஜனைப் பார்க்கவேண்டுமென்று கூறி, தனக்கு அரசனது பேட்டி செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டான். பாராக்காரன், “அப்பா! நம்முடைய ஊர் மகாராஜனை நம்மைப்போன்ற ஏழை மனிதர்கள் எல்லோரும் பார்ப்பது சாத்தியமான காரியமா? தக்க பிரபுக்கள் மாத்திரம் ஏதாவது முக்கியமான காரியமிருந்தால், தன்னைப் பார்க்க மகாராஜன் இணங்குவார். மற்றவர்கள் அவரைக் பார்க்க வேண்டுமானால் திவானுடைய அநுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தாலன்றி, உள்ளே விடக்கூடாதென்று கண்டிப்பான ஆக்கினை பிறந்திருக்கிறது. ஆகையால், நீ மகாராஜனைப் பார்க்க ஆசைப் படுவது பலியாத எண்ணம். அவசியம் பார்க்கத்தான் வேண்டு மென்றால், நீ உடனே திவானிடம் போய் மனுக்கொடுத்து அவருடைய உத்தரவைப் பெற்றுக் கொண்டு வா” என்றான். 

அதைக் கேட்ட சமயற்காரன், தான் திவானிடம் போய், அநுமதி கேட்டால், அவர் கொடுக்க மறுத்துவிடுவார் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. ஆகையால், திவானிடம் தான் போவது. வீணான வேலையென்று தீர்மானித்ததன்றி, தான் சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒரு காகிதத்தில் எழுதி, அதை அந்தப் பாராக்காரனிடம் கொடுத்து அரசனிடம் கொடுக்கச் செய்தான். அதைப் படித்துப் பார்த்த அரசன், திவான் செய்த தீர்மானமே நியாயமான தென்று அதன்மேல் எழுதியனுப்பி விட்டான். 

அதைப் படித்துப் பார்த்த நமது சமயற்காரன் மிகுந்த வியப்பும், கோபமும் அடைந்து “ஆகா! என்ன ராஜ்யம் இது! என்ன அரசன்! என்ன நீதி! கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டைவிடக் கடும் புலி வாழும் காடு நன்று என்று சொல்வது சரியாய்ப் போய் விட்டதே; இந்த ராஜ்யத்தில் மனிதருக்கு எவ்விதமான பாது காப்பும் இல்லையே; இன்னம் என்னைப் போல் உள்ள எத்தனை ஏழை ஜனங்கள் இவ்விதமான துன்பங்களையும் துயரங்களையும் அநுபவித்துக் கண்ணீர் விடுத்துக் கலங்குகிறார்களோ தெரிய வில்லையே! சாட்சிகள் இல்லாவிடில் நீதி இல்லையென்றால், நூற்றில் தொண்ணூறு குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்துக் கொள்வது நிச்சயம். திவானுடைய வேலையும் சுலப மானதே. முன் காலங்களில் மகாராஜன் மந்திரி முதலியோர் மாறு வேஷந் தரித்து அடிக்கடி வெளியில் போய் நகரத்தில் ஏதாவது அக்கிரமம் நடக்கிறதாவென்று பார்த்து விட்டு வருவதுண்டு. இப்போது அதெல்லாம் அடியோடு போய் விட்டது. எல்லாம் சட்டப்படியும், சாட்சிகள் சொல்லுகிறபடியும்தான் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கென்று ஒருவருக்குக் கெடுதல் செய்ய எத்தனிக்கும் துஷ்டர்கள் சாட்சிகள் இல்லாத சமயம் பார்த்துத் தம் கருத்தை நிறை வேற்றிக்கொள்ள மாட்டார்களா? ஒவ்வொரு மனிதனும் எங்கே போனாலும், என்ன செய்தாலும், தன்னோடுகூட இரண்டு மூன்று மனிதர்கள் சாட்சிக்கு அழைத்துக்கொண்டே போக வேண்டும் போலிருக்கிறது. இந்த மகாராஜன் திவான் முதலியவர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட மேதாவிகள் என்று நினைத்துக்கொண்டு தம்முடைய புத்திப் போக்கின்படியே சகலமான காரியங்களையும் நடத்துகிறார்கள். என்னைப் போன்ற ஏழைகளின் சொல் அம்பலத்தில் ஏறுவ தில்லை. நான் போய் இந்த அக்கிரமத்தைச் சொல்லப்போனால், ஏதோ காக்கை குருவி கத்துகிறதாக பாவிப்பார்களே யன்றி, அவர் களைப் போன்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் பேசுகிறதாக எண்ணமாட்டார்கள். இனி நான் என்ன செய்கிறது? என்னுடைய துன்பங்கூட எனக்கு அவ்வளவாக உறைக்கவில்லை. இவ்வளவு பெரிய ராஜ்யத்தில் என்னைப் போல எத்தனை ஆயிரம் எளிய வர்கள் இவ்விதம் கலங்கிக் கேள்வி முறையின்றி வருந்தி உழல் கிறார்களோ தெரியவில்லையே! ஆகையால் நான் இதை இவ்வள வோடு விட்டு விடக்கூடாது. நான் ஏதாவது யுக்தி செய்து ஜனங் களின் குறைகளையும் இடர்களையும் களைய வேண்டும். இதனால் என்னுடைய உயிர் போவதனாலும் அது ஒரு பொருட் டல்ல” என்று பலவாறு எண்ணமிட்டுப் பலவித யுக்திகளையும் யோசனைகளையும் செய்து கொண்டவனாய்த் தனது வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். அவ்விடத்தில் தன் ஜனங்கள் யாராவது இரண்டொருவர் அநேகமாய் இறந்துபோயிருப்பார்கள் என்றும், மற்றவர்கள் மகா கோரமான நிலைமையில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்த்து மிகுந்த கவலையும் கலக்கமும் கொண்டவனாய் அவன் தயங்கித் தயங்கி தனது வீட்டிற்குள் சென்று பார்க்க அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவ்விடத்தில் அவனது குழந்தைகள் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுமார் 15-வயதுள்ள அவனது மூத்த பெண் ஏராளமான சாமான்களை வைத்து சமையல் செய்துகொண்டிருந்தாள். அவனது மனைவியும் கஞ்சி அருந்தித் தெளிவடைந்து சந்தோஷமாக இருந்தாள். அந்தக் காட்சி கனவுபோலத் தோன்றியது. தான் காண்பது மெய்யோ பொய்யோ என்று அவன் சிறிது நேரம் சந்தேகித்து ஸ்தம்பித்து நின்றான். குழந்தைகள் தகப்பனைக் கண்டவுடன் “அப்பா! அப்பா!” என்று சந்தோஷ ஆரவாரம் செய்து, ஆசையும் ஆவலும் தோன்ற ஓடிவந்து அவன்மீது பாய்ந்து கட்டிக்கொண்டன, பெரிய குழந்தை யொன்று “அப்பா! ஏன் நேற்று இராத்திரி முதல் நீங்கள் வீட்டிற்கு வரவில்லை? சமையல் செய்து வைத்துக்கொண்டு நாங்கள் உங்களுக்காக வெகு நேரம் காத்திருந்தோமே! அக்காள் மறுபடி இப்போது சமையல்செய்து வைத்திருக்கிறாள். வாருங்கள் சாப்பாட்டுக்கு” என்று மிகுந்த வாஞ்சையோடு கூறி அவனைப் பிடித்திழுத்தது. அந்த வார்த்தைகளைக் கேட்ட நமது சமயற்காரன் தனது செவிகளையே நம்பாமல் பிரமித்துப்போய்த் தன்னோடு பேசிய குழந்தையை நோக்கி “ஏனம்மா! நேற்று இரவிலும் இப் போதும் அக்காள் சமயல் செய்ததாகச் சொன்னாயே; சமயலுக்கு வேண்டிய சாமான்களெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றான். 

குழந்தை மிகுந்த வியப்போடு, “ஏன்! சாமான்களை நீங்கள் தானே அனுப்பினீர்கள்? வேறே யார் நமக்கு இவ்வளவு சாமான் களை அனுப்பப்போகிறார்கள்!” என்றது. 

அதைக் கேட்ட சமயற்காரன் சகிக்க இயலாத பிரமிப்பும் வியப்பும் அடைந்து “என்ன! என்ன! நானா சாமான்களை அனுப்பினேன்! அப்படி யார் சொன்னது? சாமான்களை எல்லாம் யார் கொண்டு கொடுத்தது? எப்போது சாமான்கள் வந்தன?” என்று ஆத்திரத்தோடு கேட்க, குழந்தை “என்ன அப்பா! நீங்களே சாமான்களை அனுப்பிவிட்டு, ஒன்றையும் அறியாதவர்களைப் போலப் பேசுகிறீர்களே! யாரோ ஒருவர் சேவகனைப்போல உடை தரித்திருந்தார். இவர் இந்த ஊர்த் திவானுடைய வீட்டு வாசலில் இருக்கும் பாராக்காரராம். அவரும் அவருடைய சம்சாரமும் நேற்று இரவு சுமார் எட்டுமணி சமயத்தில் வந்தார்கள்; வரும்போது சுமார் நான்கு படி அளவுள்ள அரிசி, அதற்குத் தகுந்த பருப்பு, உப்பு, புளி, மிளகாய், தயிர், நெய், எண்ணெய், இலை, விறகு முதலிய சகலமான சாமான்களையும் கொணர்ந்து அவைகளை நீங்கள் கொடுத்ததாகவும், சமயல் செய்து சாப்பிடும்படி நீங்கள் சொல்லச் சொன்னதாகவும், நீங்கள் எங்கேயோ அவசரக் காரியமாய்ப் போயிருப்பதாகவும், அதைப் பார்த்துக்கொண்டு வருவீர்களென்றும் சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அதை நாங்கள் உண்மை என்றல்லவா எண்ணிக்கொண்டிருக் கிறோம்” என்றது. அந்த வரலாற்றைக் கேட்ட நமது சமயற் காரனுக்கு உடனே உண்மை விளங்கிவிட்டது. முதல்நாள் இரவில் தனக்கு 8 அணா இனாம் கொடுக்க எத்தனித்த சேவகனே தன் குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையை உணர்ந்து அவ்வாறு தந்திரமாக உதவி செய்து காப்பாற்றி இருக்கிறான் என்று நினைத்து ‘ஆகா! மனிதர் இருந்தால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! ஜீவகாருண்யம் என்பது முக்கியமாய்க் கஷ்டங்களை அநுபவிப்ப வரிடமே காணப்படுகிறது. பசியாகவும் பட்டினியாகவும் இருந் தவரே அவற்றின் கொடுமையை எளதில் உணர்ந்து இரக்கங் கொள்கிறார்கள். தாம் எவ்வித கஷ்டமும் துன்பமும் அநுபவியாமல் எப்போதும் செல்வத்திலும் சுகத்திலும் செல்வாக்கிலும் இருப்பவர் மற்ற எல்லோரும் அதே நிலைமையில் இருப்பதாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். அதுவுமன்றி, ஏழைகளின் தீனக்குரல் அவர் களுடைய மனசில் உண்மை என்றே படுகிறதில்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருந்து, மற்றவர்களுடைய பொருளை அபகரித்துத் தின்னவே பலவிதமான வேஷம் போடுகிறார்கள் என்றே எண்ணுகிறார்கள். என்னுடைய குடும்ப நிலைமையை நான் திவானிடத்திலும் வெளியிட்டேன்; அரசனிடத்திலும் வெளி யிட்டேன்; அந்த எளிய பாராக்காரனிடத்திலும் வெளியிட்டேன். 

யாருடைய மனசில் அந்த வார்த்தை உறைத்து உடனே பலனைத் தந்தது! ஆகா! உண்மையில் இப்போது யாரைப் பெரிய மனித ரென்று சொல்வது? பணத்தினாலும் பதவியினாலும் செல்வாக் கினாலும் மற்ற இருவரும் பெரிய மனிதர்கள். இந்தப் பாராக்காரன் அன்றாடம் காய்ச்சும் பரம ஏழையாக இருந்தாலும், ஜீவகாருண்யம், அருள், பச்சாதாபம், சமயோசிதமான தானம், தருமம் முதலிய தெய்விகச் செல்வம் நிறைந்திருப்பதால், அவன் தெய்வாம்சம் நிரம்பப்பெற்ற மகா பெரிய மனிதன். ஆகா! இந்த மனிதனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! என்னுடைய மனசில் கொந்தளித்துப் பொங்கி எழும் நன்றி விசுவாசப் பெருக்கை நான் எப்படிக் காட்டப்போகிறேன்! நான் பிறருடைய பொருளை எவ்வித உழைப்புமின்றிப் பெறுவதில்லை என்ற உறுதியான வைராக்கியத்தை விரதமாகப் பூண்டிருக்கிறேன். ஆனாலும், எனக்குத் தெரியாமல், அந்த மனிதன் ஏராளமான சாமான்களைக் கொணர்ந்து கொடுத்து விட்டான். உண்மையை அறியாத குழந்தைகள் அவைகளை ஏற்றுக்கொண்டு சொற்ப பாகத்தையும் உபயோகப்படுத்திக் கொண்டன. மிகுதி இருப்பதை நான் எடுத்துக் கொண்டுபோய் அவனிடம் திருப்பிக் கொடுப்பது மரியாதை யாகாது. இருக்கட்டும். காலம் எப்படியும் வரும். அவன் கொடுத்த சாமான்களின் கிரயத்தைவிட நூறுமடங்கு அதிக தொகையை நான் அவனிடம் சேர்த்து விடுகிறேன்” என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவனாய், உள்ளே சென்று ஸ்நானம் சாப்பாடு முதலிய காரியங்களை முடித்துக்கொண்டபின், தான் ஒரு காரி யார்த்தமாக வெளியில் போய்விட்டு வருவதாகத் தன் மனைவி மக்கள் முதலியோரிடம் கூறியபின் வீட்டைவிட்டு வெளியில் சென்று பல இடங்களிற்குப் போய் அலைந்து திரிந்து கடைசியாக அரண்மனைக்குச் சென்றான். அந்த அரண்மனையிலும், திவானின் மாளிகையிலும் சுமார் இருநூறு பாராக்காரர்கள் வேலை பார்த்து வந்தனராதலால், அவர் அவர்கள் எல்லோரும் தம்முடைய உத்தி யோக உடுப்புகள், டாலி டவாலிகள், பட்டாக்கத்திகள் முதலி யவைகளை வைப்பதற்கு ஒரு பெருத்த விடுதி பிரத்யேகமாக ஏற் படுத்தப் பட்டிருந்தது. அந்த இடத்தில் சேவகர்கள் வருவதும் உடைகளைக் களைந்து வைப்பதும், அவைகளை அணிந்து கொள்வதுமாய் இருந்தனர். ஆதலால், அந்த இடத்தில் எப்போதும் ஜனக்கும்பல் அதிகமாகவே இருந்தது. நமது சமயற்காரன் மற்ற மனிதர்களோடு சேர்ந்து தானும் ஒரு பாராக்காரன் போல நடித்து அந்த உடுப்புச் சாலைக்குள் நுழைந்து, நிஜார் சட்டை, தலைப் பாகை இடுப்பு வார், பட்டாக்கத்தி, முதலியவற்றை எடுத்து அணிந்துகொண்டு, தத்ரூபம் பாராக்காரன் போல மாறி அங்கிருந்து புறப்பட்டு நேராக திவானுடைய கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்து, அவ்விடத்தில் காத்திருந்தான். அப்போது மாலை நேரமாகி விட்டது. ஆகையால் திவான் கச்சேரியைக் கலைத்துவிட்டுத் தனது சொந்த மாளிகைக்குப் போவதற்காக வெளியில் புறப்பட்டு வந்தார். அவருடைய பெட்டி வண்டி ஆயத்தமாக வந்து நின்று கொண்டிருந்தது. அந்த வண்டிக்குப் பக்கத்தில் நமது சமயற்காரன் போய்த் தயாராய் நின்றான். கச்சேரிக்குள்ளிருந்து திவான் வெளிப் பட்டு வண்டியண்டை வந்தவுடனே, சமயற்காரன் நிரம்பவும் பய பக்தி விநயத்தோடு வண்டியண்டை ஓடி, அதன் கதவைத் திறந்து அதைப் பிடித்துக்கொள்ள, திவான் வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார். உடனே நமது சமயற்காரன் மறுபடி கதவை மூடித் தாளிட்டுவிட்டு வண்டியின் பின் பக்கத்திலிருந்த பலகையின் மேல் உட்கார்ந்து கொள்ள, உடனே வண்டி புறப்பட்டுச் சென்று கால் நாழிகை நேரத்தில் திவானுடைய மாளிகையை அடைந்து அதன் வாசலில் நின்றது. உடனே நமது சமயற்காரன் கீழே இறங்கி ஓடிவந்து கதவைத் திறந்து பிடித்துக்கொள்ள, திவான் கீழே இறங்கித் தமது ஜாகைக்குள் போய்விட்டார். மறுநாளைய காலையில் திவான் கச்சேரிக்குப் புறப்படும் சமயத்திலும், அது போல நமது சமயற்காரன் பாராக்காரன் போல உடையணிந்து வந்து ஆஜராய் நின்று வண்டியின் கதவைத் திறந்து மூடிவிட்டு, வண்டியில் உட்கார்ந்து அவருடன் கச்சேரிக்குச் சென்று, மாலையில் அதுபோலவே, அவரைத் தமது மாளிகையில் கொண்டு வந்து விட்டுச் சென்றான். இவ்வாறு மூன்று தினங்கள் கழிந்தன. நமது சமயற்காரன் திவானுடைய பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மூடும் உத்தியோகத்தைத் தானே வகித்து ஒழுங்காகச் செய்து வந்தான்.திவானுடைய வண்டிக் கதவைத் திறந்து மூடுவதற்காக மகாராஜன் அந்தப் பாராக்காரனை நியமித்திருக்க வேண்டும் என்று வண்டிக்காரன் எண்ணிக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் மூன்று தினங்களுக்குள் சிநேகம் ஏற்பட்டு முற்றிப்போய் விட்டது. திவான் தமது மனத்தைப் பெரிய பெரிய விஷயங்களிலும், ராஜ்ய நிர்வாகத்திலும், நீதிபரிபாலனத்திலும் செலுத்தி இருந்தாராதலால்,” அவர் அந்த அற்ப விஷயத்தை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அந்தப் பாராக்காரனை மகாராஜனே தமது உபயோகத்திற்காக அனுப்பி இருக்க வேண்டுமென்று, திவானும், வண்டிக்காரன் நினைத்தது போலவே, நினைத்துக்கொண்டு அதைப்பற்றி விசாரிக்காமலே இருந்து விட்டார். 

அவன் ஒவ்வொரு நாளும் திவானினது வண்டியில் போவதும், வருவதுமாய் இருந்ததைக் கண்ட, அந்த நகரத்தின் ஜனங்கள் எல்லோரும், திவானிடம் நெருங்கிப் பழகும்படியான ஏதோ முக்கியமான உத்தியோகம் அந்த மனிதனுக்குக் கிடைத்திருக்கிற தென்றும், அவனுக்குச் செல்வாக்கு அகிதமாக இருக்குமென்றும், எண்ணிக் கொண்டனர். திவானினது வண்டி அவரது கச்சேரிக்குப் போகும் வழியில் ஏராளமான பலவகைப்பட்ட கச்சேரிகளும் பெரிய பெரிய வர்த்தக ஸ்தலங்களும் இருந்தன. அவரது வண்டி போகும்போது பின்பக்கத்தில் உட்கார்ந்திருந்த நமது சமயற்காரன் முக்கியமான பல உத்தியோகஸ்தர்களையும் வியாபாரிகளையும் பார்க்கும் போதெல்லாம் அவர்களை நோக்கிக் கோபமாக தனது கைவிரலை ஆட்டி, “இருக்கட்டும்; உனக்குத் தகுந்த வழி செய் கிறேன்” என்று சொல்லிக் கறுவுகிறவன் போலப் பல விதமான சைகைகளைச் செய்து கொண்டே போகத் தொடங்கினான். அதைக் கண்ட ஒவ்வொருவரும், ‘என்ன இது? ஒவ்வொரு வேளையிலும் இவன் நம்மைப் பார்த்து இப்படிக் கறுவிவிட்டுப் போகிறானே! நம் மீது திவானுக்கு ஏதாவது கோபம் பிறந்திருக்குமோ, இவன் திவானிடம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருப்பானோ நமக்கு என்ன கெடுதல் நேருமோ தெரியவில்லையே” என்று நினைத்துக் கவலைக்கொண்டு பயந்து, அவன் தனியாய்ப் பாதசாரியாக எப்போது வருவானென்று ஆவலோடு எதிர் பார்த்திருந்து, அவனுடன் தனிமையில் பேசி, அவன் தம்மைக் கண்டு கறுவ வேண்டிய காரணமென்ன என்று விசாரிக்க, நமது சமயற்காரன் அவரவருக்குத் தகுந்தபடி தந்திரமாக மறுமொழி சொல்லத் தொடங்கினான். தன்னைக் கேட்ட மனிதர் ஏதாவது உத்தியோகம் வகிப்பவராயிருந்தால் அவரை நோக்கி “ஐயா! நீர் வேலை பார்ப்பது நிரம்பவும் அதிருப்திகர மாக இருப்பதாய் திவானுக்கு சங்கதி எட்டி இருக்கிறது. அதைப்பற்றி நேற்று இரவில்தான் பிரஸ்தாபம் செய்தார். அதனால்தான் நான் உம்மைக் கண்டவுடன் அந்த அதிருப்தியை உமக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஜாடை காட்டினேன். திவான் வெளிப் பார்வைக்குக் கண்டிப்பான மனிதராக இருக்கிறாரே யன்றி உண்மையில் நிரம்பவும் இரக்கமுள்ள மனிதர்தான். எல்லாம் நாம் நடந்து கொள்ளும் மாதிரியிலிருக்கிறது. அவரை வெகு சீக்கிரத்தில் சரிப்படுத்திவிடலாம்” என்றான். 

அதைக் கேட்ட அந்த உத்தியோகஸ்தர் ஒரு பெருத்த பணத் தொகையை இரகசியமாக அவனிடம் கொடுத்து, அதை திவானிடம் சேர்ப்பித்து அவருடைய அதிருப்தியையும் கோபத்தையும் சமாதானப்படுத்தும்படி வேண்டிக்கொள்ள, சமயற்காரன் அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு போய்விட்டான். மறுநாள் அவன் அதே உத்தியோகஸ்தரைப் பார்க்கையில் சந்தோஷமாகப் புன்னகை செய்து தான் திவானை சரிப்படுத்திவிட்டதாகச் சைகை காட்டிவிட்டுச் சென்றான். மேலே குறிக்கப்பட்டபடி, அவனால் பயமுறுத்தப்பட்ட மனிதர் ஒரு வர்த்தகராக இருந்தால், அவரைப் பார்த்து ‘ஐயா! உமக்கு ஏராளமான இலாபம் வருகிறதென்றும், மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் வருமான வரி விதிக்க வேண்டும் என்றும் இரகசியமாய்க் கீழ் அதிகாரிகள் திவானுக்கு எழுதியிருக் கிறார்கள். அதைப்பற்றி திவான் நேற்றுதான் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார். திவான் வெளிப் பார்வைக்கு நெருப்புப் போன்ற மனிதரானாலும், உள்ளூற நல்ல இளக்கமான மனம் உடையவர். அதுவுமின்றி, அவருக்குப் பணச்செலவு அதிகம். ஏதாவது தக்க தொகையாகக் கிடைக்கும்பட்சத்தில், அவர் வாங்கிக்கொள்வார். என்னை அவர் தம்முடைய சொந்தக் குழந்தைபோல பாவிக் கிறார். என் சொல்லை அவர் தட்டுகிறதே இல்லை” என்பான். 

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம் நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது வண்டிக்காரனுக்கு அடிக்கடி கள் குடிக்கக் காசு கொடுத்து, அவனுடைய அந்தரங்கமான பிரியத்தை சம்பாதித்துக் கொண்டமையால், அவன் திவானுடைய வண்டியை ஏதோ ஒரு முகாந்திரத்தைச் சொல்லி, புதிய புதிய வீதிகளின் வழி யாகவும் கடைத்தெருவின் வழியாகவும் ஓட்டிக் கொண்டு செல்லத் தொடங்கினான். நமது சமயற்காரன் தினம் தினம் புதிய புதிய மனிதரைக் கண்டுபிடித்து எராளமான தொகையை வசூலிக்கத் தொடங்கினான். அவ்வாறு பணத்தொகைகள் எளிதில் சேரச்சேர, அவனுடைய மூளை அபாரமான யூகங்களையும் தந்திரங் களையும் செய்யத் தொடங்கியது. அவனுக்குப் புதிய புதிய யோசனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவன் அந்த ஊர் அரண் மனைக்குள் சேவகர்களோடு சேவகனாய் நுழைந்து பழைய இரும்பு சாமான்கள் கிடந்த ஒர் அறைக்குள் புகுந்து தேடிப் பார்த்து, துருப்பிடித்த பழைய காலத்து இரும்பு முத்திரை ஒன்று கிடந்ததைக் கண்டு, அதை எடுத்துக்கொண்டு வந்து அதற்கு எண்ணெய் போட்டுத் தேய்த்துப் பார்க்க, அதில் திவான் லொட படசிங் பகதூர் என்ற எழுத்துகள் காணப்பட்டன. அது அந்த சமஸ்தானத்தில் அதற்கு முன்னிருந்த ஒரு திவானினது முத்திரை என்று உணர்ந்து, அதைப் பளிச்சென்று சுத்திசெய்து அதற்கு ஒரு மரப்பிடி போட்டு எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அவனுக்கு இன்னொரு யோசனை தோன்றியது. தான் நேரில் ஒவ்வொரு மனிதரிடமும் போய்ப் பணம் வசூலிப்பது அபாயகரமான காரிய மாதலால், அப்படிச் செய்யாமல், அதற்கென்று பல குமாஸ்தாக் களை நியமித்து, அவர்களைக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சாசுவதமாகப் பண வசூல் செய்ய வேண்டு மென்றும், அப்படிச் செய்தால், தான் அதில் சம்பந்தப்பட்டிருப்பது திவான் முதலி யோருக்குத் தெரியாமலிருக்கும் என்றும், எவரும் விடுபட்டுப் போகாமல் எல்லோரிடத்திலும் பண வசூல் ஆகுமென்றும் அவன் நினைத்து, அதற்கிணங்க, பல குமாஸ்தாக்களை நியமித்து, ஒவ்வொர் இலாகாவுக்கு இரண்டு மூன்று குமாஸ்தாக்களாக அமர்த்தி திவான் லொடபட சிங் பகதூர் முத்திரைபோட்ட இரசீதுப் புஸ்தகங்களை இலட்சக்கணக்கில் தயாரித்து அவர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரிடமும் பண வசூல் ஒழுங்காக நடத்தும் படி திட்டம் செய்தான். அந்த நகரத்திலிருந்த ஜனங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், இலை முதலிய சகல மான வஸ்துக்களும் வெளியூர்களிலிருந்தே அவ்விடத்திற்கு வர வேண்டும். ஆதலால், அவ்வாறு சாமான்கள் கொண்டுவரும் ஒவ் வொரு வண்டிக்கும், ஒவ்வொரு தலைக் கூடைக்கும், ஒவ்வொரு மாட்டுப் பொதிக்கும் இவ்வளவு வரிஎன்று விதித்துத் தமது குமாஸ்தாக்களைக் கொண்டு வசூலிக்க ஆரம்பித்தான். அதுவு மன்றி, அந்த ஊரிலுள்ள சகலமான உத்தியோகஸ்தர்களுக்கும் வருமான வரியும், தச்சர், கொல்லர், தட்டார், குயவர் முதலிய தொழிலாளிகளுக்கு எல்லாம் தொழில் வரியும், நிலம் வைத்திருப் பவர்களுக்கு திவான் சாயப் வரி என்ற புதுவரி ஒன்றும் ஏற்படுத்தி, அவைகளை எல்லாம் தினம் தினம் ஒழுங்காகத் தனது குமாஸ் தாக்கள் வசூலித்துக் கணக்கு வைக்கும்படி ஏற்பாடு செய்தான். அந்த ஊரிலுள்ள ஜனங்கள் எல்லோரும் புதிய திவான் நிரம்பவும் கண்டிப்பான மனிதர் என்றும் பரம துஷ்டரென்றும் நினைத்து அவரைப்பற்றிக் கனவிலும் அஞ்சி நடுநடுங்கி இருந்தவர்களா தலால், அவரே அத்தகைய புதிய வரிகளை ஏற்படுத்தி இருக்கின்றா ரென்று நினைத்து அதைப்பற்றி எவ்வித ஆட்சேபனையும் கூறாமல் கொடுத்து வந்தார்கள். நமது சமயற்காரனை நாம் இனி திவான் லொடபட சிங் பகதூர் என்று குறிப்போம். அவருக்கு ஆயிரக் கணக்கிலும் இலக்ஷக்கணக்கிலும் பொருள் குவியத் தொடங்கிய தானாலும், அவர் தமது சேவக ஆடைகளை விலக்காமலும், திவானினது வண்டிக் கதவைத் திறந்து மூடும் உத்தியோகத்தை விடாமலும் வெளிப் பார்வைக்கு ஒன்றையும் அறியாத பரம ஸாது போலவே இருந்து, உள்ளூற மகா மகா ஆச்சரியகரமான பெரும் பெரும் காரியங்களையும் ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்து எல்லோரையும் ஏமாற்றி வந்தார். அதுவுமன்றி அவர் இன்னொரு முக்கியமான ஏற்பாட்டையும் செய்யத் தொடங்கினார். திவானுக்கும் மகாராஜனுக்கும் அனுப்பப்படும் தபால்கள், மனுக்கள் முதலிய சகலமான கடிதங்களையும், அவர் முதலில் வாங்கி அதில் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை குத்தி உள்ளே அனுப்பத் தொடங்கினார். அதனை முதன் முதலில் பார்த்த திவான், அது யாரால் வைக்கப்பட்டதென்று தமது குமாஸ்தா விடம் கேட்க, மகாராஜனால் நியமிக்கப்பட்ட ஒரு சேவகன் வாசலில் இருந்து அவ்வாறு முத்திரை போட்டு அனுப்புகிறா னென்று கூற, அதைக் கேட்ட திவான், அது அரசனது கட்டளையா யிருக்க வேண்டுமென்றும், ஏதோ முக்கியமான கருத்தை வைத்துக் கொண்டு அவர் அப்படி உத்தரவு செய்திருக்க வேண்டுமென்றும் யூகித்துக்கொண்டு அந்த முத்திரையை பெறாமல் தன்னிடம் யாரும் எந்தக் காகிதத்தையும் கொண்டுவரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அது போலவே, அரசனும், தன்னிடம் வரும் தபால்களில் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை இருந்ததைக் கண்டு, அது திவானினது உத்தரவினால் வைக்கப் படுகிறதென்றும், அவர் தமது இராஜாங்க நிர்வாகத்தை நிரம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கிறவர் என்றும் நினைத்து அந்த முத்திரை இல்லாத காகிதம் எதுவும் தன்னிடம் வரக்கூடாது என்று ஆக்ஞை செய்தார். ஆகவே, அரசனிடமும், திவானிடமும் ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கில் சென்ற விண்ணப்பங் களும், மற்ற காகிதங்களும் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை பெறுவதற்காக அவரது சுமுகத்தை எதிர்பார்க்கத் தொடங்கவே, தாம் வைக்கும் ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு காசு வரி என்று அவர் ஏற்படுத்தி, அதனால் ஒவ்வொரு நாளும் பொருள் திரட்ட ஆரம்பித்தார். பூலோக விந்தையென்ற அந்த ஊரிலுள்ள எல்லா மனிதரும் ஒருவர் பாக்கியில்லாமல் தமக்குப் பணம் செலுத்தும்படி தாம் செய்ய வேண்டுமென்பது அவரது கருத்தாத லாலும், தாம் அதுவரையில் செய்த ஏற்பாடுகளில் பலர் வரி கொடாமல் தப்பித்துக் கொண்டனராதலாலும், அவர் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த ஊரில் புதிதாகக் குழந்தை பிறந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வளவு வரி கொடுப்பது என்ற ஒரு புதிய உத்தரவு பிறப்பித்தார். அதை நிறைவேற்றி வைக்க ஏராளமான குமாஸ்தாக்களைக் கொண்ட ஒரு பெரிய இலாகாவை ஸ்தாபித்தார். அந்த இலாகாவும் திருப்திகரமாகவே வேலை செய்தது. ஆனால் அதிலும், அந்த ஊர் ஜனங்களில் சிலர் தப்பித்துக் கொண்டதாகத் தெரிந்தது. எப்படியெனில் சில மனிதர்கள் அந்த ஊரில் வந்து புதிதாகக் குடியேறினார்கள். அவர்கள் ஏற்கெனவே குழந்தைகளை வெளியூர்களில் பெற்றுக்கொண்டு வந்ததன்றி, அதற்குமேல், அந்த ஊரில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காத நிலைமையில் இருந்தமையால், அவர்களை அந்தக் குழந்தைவரி பாதிக்காது என்ற நினைவினால் நமது திவான் லொடபட சிங் பகதூர் இன்னொருவிதமான வரியை ஸ்தாபித்தார். பிறக்கும் மனிதரெல்லோரும் ஒருவர் தப்பாமல் இறப்பது நிச்சய மாதலால், ஒவ்வொரு பிணத்திற்கும் ஒவ்வொரு பணம் வரி யென்று நமது திவான் லொடபட சிங் பகதூர் திட்டம் செய்து, அதற்கென்று ஓர் இலாகாவையும் குமாஸ்தாக்களையும் ஏற்படுத்தி, சுடுகாட்டிற்குப் போகும் வழியில் ஒரு சுங்கன்சாவடி கட்டி வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த இலாகாவும் திருப்திகர மாகவே வேலைசெய்து ஏராளான பணம் குவிய ஒரு சாதனமாக இருந்தது. மறுபடியும் நமது திவான் லொடபட சிங் பகதூர் சிந்தனை செய்யலானார். தான் மற்றவர்களுக்கு வரி விதிப்பது ஒரு சாமர்த்தியமல்ல என்றும், அந்த ஊர் மகாராஜனுக்கும், திவானுக்கும், வரி விதிக்கவேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டார்.”அவர்களிருவருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை, அவர்கள் சீக்கரத்தில் இறப்பதாகவும் தோன்றவில்லை. அவர்கள் இறந்தபின் வரி விதிப்பது, அவர்களுக்குப் படிப்பினை கற்றுக் கொடுப்பதாகாது. ஆதலால் அதற்கு என்னசெய்யலாம்” என்று நமது திவான் லொடபட சிங் பகதூர் சில தினங்கள் வரையில் சிந்தனை செய்து ஒருவித முடிவிற்கு வந்தார். அந்த ஊரில் கங்கா தீர்த்தம் என்று பெயர் கொண்ட ஒரு குளமிருந்தது. அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்த்தான் அந்த ஊரிலுள்ள சகல மான ஜனங்களும் சமையல் செய்து தண்ணீர் பருக வேண்டுமாத லால், அந்தக் குளத்திலிருந்து எடுத்துப் போகப்படும் ஒவ்வொரு குடம் தண்ணீருக்கும் ஜனங்கள் ஒவ்வொரு பிடி அரிசி அல்லது வேறே ஏதாவது தானியம் கொடுக்க வேண்டுமென்று அவர் உத்தரவு செய்து, அதற்கு ஓர் இலாகாவையும், ஆள் மாகாணங் களையும் நியமித்தார்; அந்தக் குளத்தில் திவான் வீட்டார் தண்ணீர் எடுத்தால் அது மகாராஜனுடைய உத்தரவு என்றும், மகாராஜனுடைய அரண்மனை வேலைக்காரர்கள் தண்ணீர் எடுத்தால், அது திவானுடைய உத்தரவு என்றும் தெரிவித்து, அவர்களிடம் அந்த வரியைக் கண்டிப்பாய் வசூலிக்கும்படி ஏற்பாடு செய்து விட்டார். அரசன், திவான், மற்ற உத்தியோகஸ்தர்கள் முதலிய எல்லோ ருடைய ஜாகையிலிருந்தும் வரும் குடங்களுடன் ஒவ்வொரு பிடி தானியம் வந்து சேர ஆரம்பித்தது. அது ஒவ்வொரு மாதத்திலும் மலைபோலக் குவியத்தொடங்கியது. இந்த வரி விதிக்கப்பட் டிருந்த விஷயம் முறையே அரசனுக்கும், திவானுக்கும் எட்டிய தானாலும், அரசன், அது திவானுடைய உத்தரவென்றும், திவான், அது அரசனுடைய உத்தரவென்றும் நினைத்து, அதைப்பற்றி எவ் விதமான பிரஸ்தாபமும் செய்யாமல் இருந்து விட்டதன்றி, சர்க்கார் உத்தரவிற்கு எல்லோரும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதற்குத் தாமே உதாரணமாக நடந்து காட்டவேண்டுமென்று நினைத்து, அந்த உத்தரவின்படி ஒரு குடத்திற்கு ஒரு பிடி அரிசி கொடுத்துவிடும்படி தமது சமயல்காரருக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து விட்டார்கள். அந்த அரிசி மறுபடி அரண்மனைக்குத் தானே வரப்போகின்றதென்று நினைத்து, பரிசாரகர்கள் குடம் ஒன்றுக்கு இரண்டு பிடி அரிசி கொடுத்துவிட்டுப் போயினர். அதைக்கண்ட மற்ற ஜனங்களும் உற்சாகமும் குதூகலமும் அடைந்து தாங்களும் அது போலவே ஒன்றுக்கிரண்டு மடங்காய்த் தானிய வரி செலுத்தலாயினர். 

இவ்வாறு அந்த நகரத்தில் நமது திவான் லொடபட சிங் பகதூர் நூற்று முப்பது வகையான வரிகளும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இலாகாவும் ஸ்தாபித்து ஆயிரக்கணக்கில் குமாஸ்தாக் களையும் தாசில்தாரையும் நியமித்து வரி வசூல் செய்து கொண்டே போனார். அவ்வூரிலிருந்த மகாராஜன் திவான் முதல் தோட்டிவரையிலுள்ள சகலமான ஜனங்களையும் திவான் லொட பட சிங் பகதூரின் வரி ஒரு பின்னல் போல வளைத்துப் பின்னி அந்த வலைக்கு உட்படுத்தி விட்டது. எவரும் அதன் மூல காரணத்தை விசாரிக்காமலும், அதைப்பற்றி எவ்வித பிரஸ்தாபமும் செய்யாமலும் வரிகளைச் செலுத்தி வந்தனர். நமது திவான் லொடபட சிங் பகதூர் எப்போதும் போல பகல் வேளையில் திவானுடைய வண்டியில் உட்கார்ந்து போவதையும் கதவைத் திறந்து மூடுவதையும் விடாமல் செய்து கொண்டே இருந்தார். அவர் எத்தனை இலாகாக்களையும் ஆள் மாகாணங்களையும் எவ்விடத்தில் வைத்திருந்தார் என்பதும், எப்படி அவர்களை நிர்வகித்தார் என்பதும், அவர்களால் மாதம் ஒவ்வொன்றும் இலக்ஷம் இலக்ஷ்மாக வசூலிக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார் என்பதும் எவருக்கும் தெரியாதபடி அவர் நிரம்பவும் இரகஸிய மாகவும் தந்திரமாகவும் சகலமான காரியங்களையும் நடத்தி வந்தார். அவ்வாறு பத்து வருஷகாலம் கழிந்தது. உண்மை யிலேயே மகா மேதாவியான அந்த ஊர்த் திவான் தமது பகிரங்க இராஜாங்கத்திற்குள் இன்னொரு பெரிய இரகஸிய ராஜாங்கம் அந்த ஊரில் இருந்து நடந்தேறி வந்ததையும், அதன் உத்தியோ கஸ்தர்கள் தம்மிடத்தில்கூட வரி வசூல் செய்து வந்தார்கள் என் பதைப் பற்றியும் சொப்பனத்தில்கூட நினைக்காமல் இருந்து வந்தார். அந்த தேசத்து மகராஜன் அரண்மனைக்குள்ளேயே எப் போதும் அடைப்பட்டிருப்பதைப்பற்றி, ஒரு வாரத்திற்கு ஒரு முறையாகிலும் மாலை வேளையில் அரண்மனையை விட்டு வெளிப்பட்டு ஏதாகிலும் ஒரு திக்கில் நாலைந்து மயில் தூரம் நடந்துபோய் தேகத்திற்கு உழைப்புக் கொடுத்துத் திரும்பி வரு வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் போய் வருகையில் மகாராஜன் என்பதை எவரும் கண்டு கொள்ளக் கூடாதென்ற எண்ணத்தினால், அந்தச் சமயத்தில் தம்முடைய சம்கி உடைகளை எல்லாம் அணியாமல் ஓர் ஏழை மனிதர்போல சாதாரண உடைகள் தரித்துக்கொண்டு வெளியில் போய் உலாவி கிராம வாசிகளோடு பேசிவிட்டுத் திரும்பி வருவது வழக்கம்.அம்மாதிரி அவர் ஒரு நாள் மாலை வேளையில் தமது உடைகளை மாற்றிக்கொண்டு அரண்மனையை விட்டு வெளிப் பட்டு வயல்கள், தோட்டங்கள், காடுகள் முதலியவற்றிலுள்ள வேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டே வெகுதூரம் போய்த் திரும்பி வந்தார். வந்தவர் அவ்வூர்ச் சுடுகாட்டிற்குள் சமீபமாக இருந்த ஒரு பாதையை அடைந்தார். அவ்விடத்தில் ஒரு சுங்கன் சாவடி கட்டப்பட்டிருந்தது. அதில் இரண்டு சேவகர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில் இரசீதுப் புஸ்தகங்கள் காணப்பட்டன. அது அந்த ஊருக்குள் வரும் வண்டிகளுக்கு சுங்கம் வசூலிக்கும் இடமாக இருக்கலாமென்று அரசன் நினைத்துக் கொண்டு, யாரோ ஒரு சாதாரண வழிப்போக்கனைப் போல அந்தச் சேவகர்களிடத்தில் உலோகாபிராமமாய்ப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது அந்தப் பாதையின் வழியாகச் சில ஏழைக் குடியானவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோகும் பொருட்டு ஒரு பிரேதத்தைப் பாடையில் வைத்துத் தோளின்மீது தூக்கிக்கொண்டு, “ஜேராம்! ஜே ஜே ராம்! சீதாபதே ராம்! மாதா பிதாராம்!” என்று பலவாறு முறை வைத்துக் கூச்சலிட்டுக் கொண்டு வந்து சுங்கன் சாவடியைக் கடந்து அப்பால் செல்ல யத் தனிக்க, அங்கிருந்த சேவகர்கள் இருவரும், “அடேய்! நிறுத்துங்கள். எங்கே வரிப்பணம்? ஏது நீங்கள் ஒன்றையும் அறியாதவர்போல் மெதுவாய் நழுவுகிறீர்கள்?” என்று அதட்டிக்கொண்டு சாவடியை விட்டு எழுந்தோடி பிணத்தைக் தூக்கிக்கொண்டு போனவர் களுக்கு எதிரில் போய் நின்று, வழிமறித்து அவர்களை மிரட்ட ஆரம்பித்தனர். 

பிணத்தை எடுத்துச் சென்றவர்கள் நடு நடுங்கி அப்படியே நின்று விட்டார்கள். அவர்களுக்குள் முக்கியஸ்தனாக இருந்த ஒருவன் துணிவாகப் பேசத்தொடங்கி, “ஐயா! இது அநாதைப் பிணம். ஊரிலுள்ள திருக்குளத்தின் பக்கத்தில் ஒரு பாழும் சாவடி இருக்கிறது. அதில் இந்த பிச்சைக்காரன் செத்துக் கிடந்தான். இவனுக்குச் சொந்தக்காரர் யாருமில்லை. இந்தப் பிணம் குளத் திற்குப் பக்கத்தில் இருந்ததாகையால், பெண் பிள்ளைகள் குளிப்பதற்குப் போகப் பயந்தார்கள்: அதுவுமன்றி, இந்தப் பிணம் அழுகிப்போய் நாற்றத்தைப் பரப்பினால் அங்கு வரும் ஏராளமான ஜனங்களுக்கு அது துன்பகரமாக இருப்பதோடு, வியாதியை உண்டாக்கும் என்று நினைத்து நாங்கள் பொதுஜன நன்மையைக் கருதி மூங்கில், கயிறு முதலிய சாமான்களை யாசகம் வாங்கிப் பாடை கட்டி, இந்தப் பிணத்தைச் சுடுகாட்டிற்குக் கெண்டுபோய் புதைக்கப் போகிறோம். எங்களிடம் பணமும் கிடையாது. நாங்கள் இந்தப் பிணத்திற்காக வரிசெலுத்தவும் கடமைப்பட்டவர்களன்று” என்றான். 

அதைக்கேட்ட சேவகன் ஒருவன் “அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவது பிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு.கொடாவிட்டால், பிணத்தைவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று நீங்கள் மூங்கில் கயிறு முதலிய சாமான்களைச் சேகரித்தது போல, மகா ராஜனுக்குக் சேரவேண்டிய வரிக்கு ஒரு பணத்தையும் சேகரித்துக் கொண்டல்லவா பிணத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டும். நீங்கள் இப்போது சொல்வதைக் கேட்டு நாங்கள் உங்களை இன்று விட்டு விட்டால். இன்னும் மற்றவர்களும் இதுபோலவே பல சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டே வந்து வரிகொடாமல் ஏமாற்றப் பார்ப்பார்கள். அந்தத் தொந்தரவெல்லாம் எங்களுக்கு எதற்கு? நீங்கள் பணம் கொடுத்தால் விடுகிறோம்; இல்லா விட்டால் விடமாட்டோம்.” என்றான். 

பிணத்தைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களுள் ஒருவன்,”சரி, நமக்கேன் இந்தத் துன்பம். இந்தப் பிணம் புதைபட்டால் என்ன; நடுச்சந்தியில் கிடந்து நாறினால் நமக்கென்ன? நாம் மறுபடி இந்தப் பிணத்தை ஊருக்குள் கொண்டுபோனால், ஜனங்கள் நம்மை அடிக்க வருவார்கள். அதுவுமன்றி இதை இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வந்ததற்கு வட்டியாக நாம் மறுபடி இதைச் சுமந்து கொண்டு போகும் தொல்லை நமக்கேன்? பிணத்தை இப்படியே சுங்கன் சாவடிக்கெதிரில் போட்டுவிட்டுப் போய் விடுவோம். இவர்கள் எப்படியாவது செய்து கொள்ளட்டும்” என்று கூறிப் பிணத்தைக் கீழே வைக்க எத்தனித்தான். 

உடனே சேவர்களிருவரும் மிகுந்த கோபங்கொண்டு அவர் களை முன்னிலும் அதிக மூர்க்கமாக அதட்டி; ”அடே! இங்கே வைப்பீர்களானால், கண்ணைப் பிடுங்கிவிடுவோம். இங்கே நாற்றமெடுத்தால், நாங்கள் இருந்து சுங்கன் வசூலிக்க முடியா மல் போகிவிடும். மகாராஜனுக்கு அதனால் ஏராளமான வரி நஷ் டமாய் விடும். அதற்கு நீங்களே உத்தரவாதி யாவீர்கள். உங்கள் அடையாளம் எங்களுக்கு நன்றாய்த் தெரியும்; நாங்கள் உங்களை இலேசில் விடமோட்டோம். நீங்கள் திவானுடைய கொடிய ஆக் கினைக்கு ஆளாவீர்கள் ஜாக்கிரதை!” என்றார்கள். 

முதலில் பேசிய முக்கியஸ்தன், “சரி; நாங்கள் பிணத்தை இங்கே வைக்கவில்லை. இந்த ஊர் மகாராஜன் பிச்சைக்காரப் பிணத்தின் வாயிலிருக்கும் அரிசியைக் கூடத் தோண்டி எடுக் கிறவன் என்பது எங்களுக்குத் தெரியாது. அது தெரிந்திருந்தால், வரும்போது ஒரு பணம் கொண்டுவந்து உங்கள் இழவுக்கு அழுதிருப்போம். இருக்கட்டும். நாங்கள் பிணத்தை எடுத்துக் கொண்டு, இருளான பிறகு ஊருக்குள் போய், மகாராஜனுடைய அரண்மனை வாசலில் போட்டுவிட்டுப் போகிறோம். மனிதன் பிறப்பது முதல், தண்ணீர் குடிப்பது, சாதம் சப்பிடுவது, துணி கட்டுவது, உழைத்து ஜீவனம் செய்வது, கடைசியில் செத்து இந்த நகரத்தை விட்டு எமனுலகத்துக்கும் போவது முதலிய எல்லாவற் றிற்கும் வரி வாங்குகிறவனான அரசனுக்குத்தான் இந்த அநாதைப் பிணமும் சொந்தம். ஆகையால் இதை மகாராஜன் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஊருக்குள் இந்த அசுத்தம் இருக்கக்கூடாதுஎன்று நினைத்து நாங்கள் எங்கள் வேலையை எல்லாம் விட்டு மெனக்கட்டு இவ்வளவு தூரம் பிரயாசைப்பட்டு வந்ததற்கு இந்த ஊர் மகாராஜன் எங்களுக்குத்தான் ஏதாவது பணம் கொடுக்கவேண்டும். அதை விட்டு நாங்கள் இதற்கு வரிப்பணம் கொடுப்பது என்றால், அந்த நியாயம் எந்த உலகத்திலும் இல்லாத அதிசய நியாயமாகத்தான் இருக்கிறது. ஆகையால், நாங்கள் உங்களுடைய உத்தரவுப்படியே பிணத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு போகிறோம். நீங்கள் கவலைப்படவேண்டாம். ஐயா மார்களே!” என்று கூற, மற்ற எல்லோரும் அதைக் கேட்டவுடனே, வந்த வழியாக பிணப்பாடையைத் திருப்பினர். சேவகர்கள் திருப்தி அடைந்து, “சரி; நீங்கள் எப்படியானாலும் செய்து கொள்ளுங்கள். நாங்கள் அதிகாரத்தைச் செலுத்தியே தீர வேண்டும். நீங்கள் பிணத்தை அரண்மனை வாசலில் கொண்டுபோய்ப் போடுங்கள். வரிப்பணத்திற்குப் பதிலாக இந்தப் பிணத்தை மகாராஜன் தம்முடைய பொக்கிஷ சாலையில் அடமானமாக வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறிவிட்டுத் தங்கள் சாவடியை அடைந்தனர். 

அந்த ஊர் மகாராஜன் சகிக்க வொண்ணாத வியப்போடும் திகைப்போடும் அங்கு நடந்த விஷயங்களைக் கடைசி வரையில் கவனித்திருந்தும், பிணம் திருப்பிவிடப்பட்டதைக் கண்டு, உடனே சேவகர்களைப் பார்த்து, ”ஐயா சேவகர்களே! நீங்கள் இருதிறத்தாரும் பேசிக்கொண்டதை எல்லாம் நான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பேரிலும் தப்பிதமில்லை. அவர்கள் பேரிலும் தப்பிதமில்லை. திவான் ஏற்படுத்திய இந்த வரி உத்தரவு நியாயமானதோ அநியாயமானதோ என்பதை ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு அதிகாரமில்லை. ஆகையால், நீங்கள் தாட்சனியமின்றி உங்களுடைய கடமையைச் செலுத்தியது நியாமான காரியமே. அதுபோல, அவர்கள் சொல்வதும் நியாய மாகவே படுகிறது. அநாதையாக நாறிக் கிடந்த ஒரு பிணத்தைப் பொதுஜன நன்மையைக் கருதி அவர்கள் எடுத்து வந்ததைக் குறித்து அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து, அவர்களுக்குச் சன்மானம் செய்ய வேண்டுவது நியாயமாக இருக்க, அவர்களிடம் வரிப்பணம் கேட்பதும், பிணத்தை மறுபடி ஊருக்குள் தூக்கிக்கொண்டு போகச் சொல்வதும் தர்மமல்ல. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த ஊர் மகாராஜன் இம்மாதிரி பிணத்திற்கு வரிபோட வேண்டு மென்பது ஒரு நாளும் உத்தரவு செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும் இந்த ஊர் மகாராஜனுக்குச் சொந்தக் காரன்தான். அவருடைய மனப்போக்கு எனக்கு நன்றாகத் தெரியும். அநேகமாய் இந்த உத்தரவை திவான்தான் பிறப்பித்திருக்க வேண்டும். அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்த காலத்தில், இப்படி அநாதையாக இறப்பவர்களிடம் வரி விதிக்க வேண்டாம்என்று உத்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனசில் பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இந்த அநாதைப் பிணத்தை இவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோய்ப் புதைக்கும்படி நீங்கள் விட்டு விடுங்கள். நான் உடனே திவானிடம் போய் இதைப்பற்றி விசாரித்து, இப்போது இங்கே நடந்த விஷங்களைத் தெரிவித்து, இதற்குத் தக்க புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். இப்போது இந்தப் பிணத்தைப் புதைக்க நீங்கள் அநுமதி கொடுத்ததைப்பற்றி உங்கள்மேல் குற்றம் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்ளு கிறேன்” என்றார். 

அதைக் கேட்ட சேவகர்களுள் ஒருவன், “ஐயா! அந்த வம்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம். யாரோ வழியில் போகிற வராகிய உம்முடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு நாங்கள் பிணத்தை விட்டு, பிறகு துன்பத்தில் மாட்டிக்கொள்ள இஷ்ட மில்லை. நீர் இப்போது சொல்லுகிறபடி திவானிடம் போய் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லுவீர் என்பதை நாங்கள் எப்படி நிச்சயமாக நம்புகிறது? இவர்களுக்கு நாங்கள் அநுமதி கொடுத்த பிறகு நீர் உம்முடைய பாட்டில் உம்முடைய வீட்டுக்குப் போய் விட்டால், நாங்கள் என்ன செய்கிறது? அதெல்லாம் பலியாது. நீர் உம்முடைய பாட்டைப் பார்த்துக்கொண்டு போம். நீர் மகா ராஜனுடைய சொந்தக்காரரா இருந்தாலும் சரி, அல்லது, மகாராஜ னாகவே இருந்தாலும் சரி, உம்முடைய பேச்சை ஆதாரமாக வைத்துக்கொண்டு சர்க்கார் உத்தரவை மீறி நடக்க எங்களுக்கு இஷ்டமில்லை. உமக்கு அவ்வளவு அக்கரை இருந்தால் நீரே அந்த ஒரு பணத்தைக் கொடுத்துவிட்டு பிறகு அதை அரண்மனை கஜானாவிலிருந்து வசூலித்துக்கொள்ளும். அல்லது, உம்மிடம் இப்போது பணம் இல்லையானால் இவர்கள் இவ்விடத்திலேயே பிணத்தை வைத்துக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, உடனே நீர் ஊருக்குள் போய் திவானுடைய உத்தரவையோ, அல்லது, வரிப்பணத்தையோ கொண்டுவந்து சேரும். அதுதான் ஒழுங்கான காரியம். எங்களுக்கு அதனால் பாதகம் ஏற்படாது” என்றான். 

அதைக்கேட்ட மகாராஜன் அந்தச் சேவகர்களின் கண்டிப்பையும் ஒழுங்குதவறாத மனப்பான்மையையும் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தமது தேசத்தில் அத்தகைய அக்கிரமமான வரி ஏற்படுத்தப்பட்டிருந்த விஷயம் அவரது மனத்தை ஒரு புறத்தில் வதைத்ததானாலும், கீழ்ச்சிப்பந்திகள் அவ்வளவு திறமையாகவும் நிலை தவறாமலும் நடந்து கொண்டதைப்பற்றி இன்னொரு புறத்தில் பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாயிற்று. மகாராஜன் உடனே தமது சட்டைப்பையிலிருந்து ஒரு பணத்தை எடுத்து “நீங்கள் சொல்வது நியாயமான விஷயம். வரிப்பணத்தை நானே செலுத்துகிறேன். வாங்கிக்கொண்டு ரசீது கொடுங்கள். அதில் ஓர் அநாதைப் பிணத்திற்காக ஒரு தருமவானால் செலுத்தப்பட்ட வரிப்பணம் ஒன்று என்று எழுதிக்கொடுங்கள்” என்று கூறிப் பணத்தைக் கொடுத்தார். 

சேவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்விதமே இரசீது எழுதிக் கொடுத்தார்கள். அதன் அடியில் யார் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதை அரசன் கவனித்தான். ரெவினியு தாசில்தார் என்ற உத்தியோகப் பெயரின்மேல் யாரோ ஒருவர் கிறுக்கெழுத்தில் கையெழுத்துச் செய்திருந்தார். அதுவுமன்றி திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரையும் சுத்தமாக அந்த இரசீதில் குத்தப் பட்டிருந்தது. தமது புதிய திவான் அந்தப் பழைய காலத்து முத்திரையை எல்லா தஸ்தாவேஜிகளுக்கும் உபயோகித்து வருகிறார் என்று அரசன் அதற்குமுன் எண்ணிக் கொண்டிருந் தமையால், அந்த வரியும் தமது புதிய திவானாலேயே ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு “ஏன் அப்பா! இந்த வரி எப்போது முதல் அமுலில் இருந்து வருகிறது?” என்றான். 

முன் பேசிய சேவகன் “இது சுமார் ஏழெட்டு வருஷ காலமாக அமுலில் இருந்து வருகிறது” என்றான். அதைக் கேட்டுக்கொண்ட மகாராஜன் ”சரி; பிணத்தை இனி விடுங்கள்” என்று கூற, உடனே சேவகர்கள் அநாதைப் பிணத்தை மயானத் திற்குள் கொண்டுபோக அநுமதி கொடுத்தனர். குடியானவர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர். மகாராஜனும் உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தனது அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.தான் உடனே தனது திவானை வரவழைத்து, அந்த அபூர்வமான வரியைப்பற்றிய பூர்வோத்தரங்களைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும் பதைபதைப்பும் எழுந்தெழுந்து தூண்டினவானாலும், அப்போது இரவு காலம் வந்துவிட்ட தாகையால், ஒரு வேலைக்காரனை அழைத்து, காலையில் தான் திவானுடன் அவசரமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டு மாதலால், மறுநாட்காலை பத்து மணிக்கு அவர் வந்து தம்மைப் பார்க்க வேண்டும் என்று அந்த வேலைக்காரன் மூலமாக திவானுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனாலும் அரசனுக்கு அன்றைய இரவு முழுதும் தூக்கம் பிடிக்கவில்லை. உயிருடன் இருக்கும் மனிதருக்கு வரி ஏற்படுத்துவதே முறையன்றி, இறந்து போனவருக்கு வரி ஏற்படுத்துவது அரசனுக்குப் புதுமையாகவும் தான் அதற்கு முன் எவ்விடத்திலும் கேட்டறியாத விந்தையாக இருந்தது. அத்தகைய அக்கிரமமான வரியை விதிக்க மேதாவியும் சட்ட நிபுணருமான தனது திவானுடைய மனதும் இடங்கொடுத்ததா என்ற ஆச்சரியமும் மலைப்பும் தோன்றி வதைத்துக் கொண்டே இருந்தன. அதுவுமன்றி, அநாதைப் பிணத்தை எடுத்து வந்த மனிதர்கள் “இந்த ஊர் அரசன் பிச்சைக்காரப் பிணத்தின் வாயிலுள்ள அரிசியைக்கூடத் தோண்டி எடுப்பவன்” என்றதும், பிணத்தை அரண்மனை வாசலில் கொணர்ந்து போடுவதாகவும், பொக்கிஷ அறையில் அடமானம் வைப்பதாகவும் அவர்கள் சொன்னதும், கூர்மையான ஆயிரம் ஈட்டிகளைக் கொண்டு குத்துவதுபோல் மகாராஜனது மனத்தைப் புண்படுத்தி, அவமானத்தினால் அவனது தேகம் குன்றிப்போகும்படி செய்தது. அத்தகைய இழிவையும் தூஷணையையும் தனக்கு உண்டாக்கி வைத்த மூட திவானைத் தான் தக்கபடி சிட்சிக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தெழுந்து மேலாடி நின்றது. அவ்விதமான நிலைமையில் அரசன் இந்த இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, மறுநாட் காலையில் எழுந்து, தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தனது ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து திவானினது வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பாத்திருந்தான். 

அவனது திவானுக்கும் அந்த இரவு மிகவும் துன்பகரமான தாகவே முடிந்தது. அரசன் எந்த விஷயத்தைப்பற்றி அவசரமாகத் தம்மிடம் பேச எண்ணுகிறார் என்பதைப்பற்றி அளவற்ற ஆவல் கொண்டு எண்ணிக்கையற்ற யூகங்களும் யோசனைகளும் செய்து எதையும் குறிப்பாக நிச்சயிக்க மாட்டாதவராய் இரவு முழுதும் சலனப்பட்டவராகவே இருந்து, மறுநாட் காலையில் எழுந்து, தமது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அரசனுக்கு எதிரில் வந்து ஆஜராய் அவனை வணங்கினார். 

அதற்குமுன் அரசன் திவானுக்குக் காட்டிய மரியாதையையும் அன்பையும் காட்டாமல், ஆசனமும் கொடாமல் அப்படியே நிற்க வைத்துப் பேசவே, திவானுக்கு அது முற்றிலும் விபரித மாகத் தோன்றியதன்றி, அவரது மனத்தில் ஒருவிதமான கலக்கத் தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. தாம் ஏதேனும் தவறு செய்து விட்டதாக எவரேனும் அரசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டிருப்பதனால்தான் அரசன் தம்மை அவ்வாறு அருவருப் போடும் அவமரியாதையாகவும் நடத்துகிறார் என்று நிச்சயித்துக் கொண்டு, அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று அவனது சமூகத்தை எதிர்பார்த்தவராயிருக்க, மகாராஜன் திவானை நோக்கி, “ஐயா! திவானே! நம்முடைய ராஜ்ஜியத்தில் வரிகள் விதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எனக்கு முக்கியமான 

ரண்டு மூன்று சந்தேகங்கள் தோன்றி இருக்கின்றன. அவைகளை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று உங்களை வரவழைத்தேன். அதாவது, நம்முடைய நகரத்தில் இறந்து போகிறவர்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறதே, அது என்ன கருத்தோடு விதிக்கப்படுகிறது? ஒரு மனிதர் இந்த நகரத்தில் உயிரோடிருந்தால், அவருக்கு நம்மால் செய்து கொடுக்கப்படும் பாதுகாப்பு, பலவகைப்பட்ட சௌகரியங்கள் முதலியவைகளைக் கருதி அவரிடம் நாம் வரிகள் வசூலிப்பது நியாயமே. அவருடைய உயிர் இந்த நகரத்தை விட்டும், இந்த உலகத்தையே விட்டும் போன பிறகு, அவரிடம் எந்த உத்தேசத்தோடு வரி வசூலிக்கப் படுகிறது? வரி மனிதருடைய உயிரைப் பொருத்ததா? அல்லது, அவருடைய உடம்பைப் பொருத்தா? இதுதான் என்னுடைய முதல் சந்தேகம். இறந்து போனவர் அநாதையாகவும், சொத்து என்பதே இல்லாதவராகவும் இருந்தால், அந்த வரியை யார் செலுத்துகிறது என்பதைப் பற்றியாவது அல்லது, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட வரியைத் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்பதைப் பற்றி யாவது, உங்களால் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறா?” என்றான். 

அதைக் கேட்ட திவான் திடுக்கிட்டு மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து, “மகாராஜா! உயிரோடிருக்கும் மனிதருக்கு வரி விதிக்கிறதென்று நான் இது வரையில் தெரிந்துகொண்டிருக் கிறேனேயன்றி இறந்து போனவருக்கு யாரும் வரி விதித்ததாக நான் கேள்வியுற்றதே இல்லை. ஒரு வர்த்தகருக்கு நாம் வரி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். நம்முடைய உத்தரவு அவரிடம் போய்ச் சேருமுன் அவர் இறந்துபோகிறதாகவும், அந்த வர்த்த கத்தை அவருடைய பிள்ளை நடத்துகிறதாகவும் வைத்துக் கொள் வோம். அந்த உதாரணத்திலும், வரி விதிப்பது ஒரு தொடர்ச்சி யான வர்த்தகத்தைப் பொருத்ததேயன்றி, மனிதனைப் பொருத்த தல்ல. ஒரு மனிதன் இறந்தபின், இவன் இறந்ததற்காக இந்த உலகத்தில் எந்ததேசத்தாரும் வரி விதித்ததாகவோ, அல்லது, விதிக்கிறதாகவோ நான் கேள்வியுற்றதே இல்லை. நம்முடைய நகரத்தில் அப்படிப்பட்ட வரியே கிடையாது” என்றார். 

அதைக் கேட்ட மகாராஜன், “நீங்கள் சொல்வது நிச்சயந் தானா? உங்களுக்கு வேண்டுமானால், அவகாசம் கொடுக்கிறேன். நீங்கள் போய் உங்களுக்குக் கீழே இருக்கும் சிப்பந்திகள் என் னென்ன வரிகள் விதித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு நன்றாகத் தெரிந்து கொண்டு வந்து, அதன்பிறகு என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்” என்றான். 

திவான் “மகாராஜா! இந்த நகரத்தில் இன்னின்ன வரிகள் போடப்படுகின்றன என்பது எனக்கு மனப்பாடமாகத் தெரியும். வரி விதித்து வசூலிக்கும் இலாகாவை நானே நேரில் அதிக ஜாக்கிரதையோடு பார்த்து வருகிறேன். ஆகையால், நான் சொன்னதில் சந்தேகமே இல்லை. நம்முடைய ராஜ்ஜியத்தில் இறந்து போகிற மனிதர்களுக்கு, அதாவது பிணங்களுக்கு வரி விதிக்கப்படுவதே இல்லை. அப்படிப்பட்ட பரம அசம்பாவித மான காரியம் எதுவும் நான் இருக்கும் வரையில் தங்களுடைய நகரத்தில் நடக்காது என்பதைத் தாங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம்” என்று அழுத்தமாகக் கூறினார். 

அரசன்: புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழி யோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா? 

திவான் : நான் போனதில்லை. 

அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன் சாவடி கட்டப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு சேவகர்கள் இருக்கிறார்கள். சுடுகாட்டுக்குப் போகும் ஒவ்வொரு பிணத்திற்கும் ஒரு பணம் வரி கொடுக்காவிட்டால், பிணத்தை விடக்கூடாது என்று திவானுடைய உத்தரவு ஆயிருக்கிறதாம். அவர்கள் அதுபோலவே ஏழெட்டு வருஷகாலமாக வரி வசூலித்து வருகிறார்களாம். 

திவான்: (அடக்க இயலாத வியப்படைந்து) ஒரு நாளும் அப்படி இராது.நான் இங்கே திவானாக வந்து பத்து வருஷ கால மாகிறது. அப்படிப்பட்ட ஏற்பாடு செய்திருந்தால் நான்தானே அதைச் செய்திருக்க வேண்டும். நான் நிச்சயமாகத் துணிந்து சொல்லுவேன். அது தப்பான சங்கதி – என்றார். 

மகாராஜன் “இதோ இந்த ரசீதைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று தாம் வாங்கி வந்த இரசீதைக் கொடுக்க, அதை ஆவலோடு வாங்கிப் பார்த்த திவான் பிரமித்து அப்படியே ஸ்தம்பித்துப் போய் “என்ன ஆச்சரியம் இது? யாரோ மறைவிலிருந்து இவ்வித மான மோசத்தை நடத்துகிறார்கள் போலிருக்கிறது. நான் உறுதி யாகச் சொல்லுகிறேன். இது என்னால் அநுமதிக்கப்பட்ட காரியமே அல்ல. அதுவுமன்றி, இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இந்த ரசீதில் காணப்படும் திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரை தாங்கள் எப்போதும் எல்லா தஸ்தாவேஜிகளுக்கும் வைத்தனுப்பும் தங்களுடைய பிரியமான முத்திரையல்லவா? இதை அந்த மோசக்காரன் அப கரித்து இந்த ரசீதுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறானே” என்றார். 

மகாராஜன் வியப்பும், கோபமும் அடைந்து “என்ன திவானே! இந்த முத்திரையை நான் பிரியமாக வைத்துக்கொண்டு எல்லா தஸ்தாவேஜிகளுக்கு உபயோகிப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? என்னிடம் மகாராஜன் என்ற முத்திரை இல்லாமல் போய்விட்டதா? உங்களிடத்திலிருந்து வரும் தஸ்தாவேஜிகளில் இந்த முத்திரை இருந்ததைப் பார்த்து, நீங்கள் இந்தப் பழைய காலத்து முத்திரையைப் பிரியமாக வைத்து உபயோகிக்கிறீர்கள் என்றல்லவா நான் இதுவரையில் நினைத்திருந்தேன். நீங்கள் சொல்வது ஆச்சரியகரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறதே!” என்றான். 

திவான் “எனக்கும் அப்படியேதான் இருக்கிறது. இருக்கட்டும். யாரோ சேவகர்கள் சுடுகாட்டிற்குப் பக்கத்தில் இருந்து இந்த ரசீதைக் கொடுத்ததாகத் தங்களுக்குச் செய்தி வந்திருக்கிறதல்லவா. அந்தச் சேவகர்களை உடனே வரவழைத்து விசாரிப்போம். இவ்வித ரசீதுகள் அடங்கிய புஸ்தகங்களை அவர்களுக்கு யார் கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் வசூலிக்கும் பணத்தை யாரிடம் செலுத்துகிறார்கள் என்பதையும், அவர்களுடைய சம்பளத்தை அவர்களுக்கு யார் கொடுக்கிறார்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதிலிருந்து உண்மையைக் கண்டு பிடிக்கலாம்” என்று கூறி அருகிலிருந்த சேவகர்களுள் ஒருவனை அழைத்து சுடுகாட்டுச் சுங்கன் சாவடியிலிருக்கும் சேவகர்களை உடனே அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அந்தச் சேவகன் உடனே புறப்பட்டு நிரம்பவும் துரிதமாகச் சென்று கால்நாழிகை நேரத்தில் சுங்கன் சாவடிச் சேவகர்களை அழைத்துக் கொணர்ந்து மகாராஜனுக் கெதிரில் நிறுத்தினான். திவான் அவர்களுள் ஒருவனைப் பார்த்து ”நீ என்ன வேலை செய்கிறவன்?” என்றார். 

சேவகன்: எஜமானே! நானும் என்னோடு கூட இதோ இருக்கும் இன்னொருவனும் சுடுகாட்டுச் சங்கன் சாவடியில் வரி வசூல் செய்கிற சேவகர்கள். 

திவான்: நீங்கள் எவ்விதமான வரி வசூல் செய்கிறீர்கள்? சேவகன்: சுடுகாட்டுக்குள் போகும் ஒவ்வொரு பிணத்துக்கும் ஒவ்வொரு பணம் வசூல் செய்கிறோம். 

திவான்: உங்களை யார் நியமித்தது? 

சேவகன்: ரெவினியூ தாசில்தார். 

திவான்: அவருடைய கச்சேரி எங்கே இருக்கிறது? 

சேவகன்: மேலக் கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. 

திவான்: அவருடைய பெயர் என்ன வென்பது உனக்குத் தெரியுமா? 

சேவகன்: தெரியாது. 

திவான்: உங்களுக்கு வேண்டிய புஸ்தகங்களை யார் கொடுக்கிறது? 

சேவகன்: அந்தத் தாசில்தார்தான். 

திவான்: நீங்கள் வசூல் செய்யும் வரிப் பணங்களை அவரிடம்தான் செலுத்தி விடுகிறதா? 

சேவகன்: ஆம். 

திவான்: உங்களுடைய சம்பளத்தை மாதா மாதம் நீங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறது? 

சேவகன்: அந்தத் தாசில்தாரிடம்தான் பெற்றுக் கொள்ளுகிறது. 

திவான்: இந்த வரி எவ்வளவு காலமாய் வசூலிக்கப்படுகிறது? சேவகன்: சுமார் எட்டு வருஷ காலமாய் வசூலிக்கப்படுகிறது. திவான்: இந்த வரியை அந்தத் தாசில்தாரே ஏற்படுத்தினாரா? சேவகன்: அந்த விஷயத்தை நான் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த வரியை இந்த ஊர் திவான் சாகேப் ஏற்படுத்திய தாகச் சொல்லிக் கொண்டார்கள். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். மற்ற விவரம் எதுவும் தெரியாது. 

திவான்: அந்தத் தாசில்தாரையும் அவருடைய கச்சேரியையும் எங்களுக்கு நீங்கள் காட்ட முடியுமா? 

சேவகன்: ஓ! காட்டுகிறோம் – என்றான். 

அந்த வரலாற்றைக் கேட்ட திவான் மட்டற்ற வியப்பும் கலக்கமும் அடைந்து நடுக்கத்தோடு மகாராஜனைப் பார்த்து, “மகாராஜாவே! இவன் சொல்வது நிரம்பவும் விபரீதமான தகவலாய் இருக்கிறது. எனக்குக் கீழே இருந்து வேலை பார்க்கும் ரெவினியூ தாசில்தாருடைய கச்சேரி நம்முடைய அரண்மனையின் வட பாகத்திலுள்ள என் கச்சேரியிலேயே இருக்கிறது. இது மேலக்கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறதென்று இவன் சொல்லுகிறான். நான் உடனே புறப்பட்டு நேரில் அங்கே போய்ப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொண்டு வந்து சேரு கிறேன். தாங்கள் எனக்கு அநுமதி கொடுங்கள்” என்றார். 

அரசனும் அளவற்ற பிரமிப்பும், கலக்கமும், ஆவலும் கொண்டு “சரி; நானும் வருகிறேன். அந்த அதிசயத்தை நானும் நேரில் வந்து பார்க்கவேண்டும்” என்று கூறியவண்ணம் தமது ஆசனத்தை விட்டுத் துடியாக எழுந்தார். உடனே திவான் முதலிய மற்றவரும் புறப்பட, ஏராளமான சேவக பரிவாரங்களோடு மகாராஜன் முதலியோர் மேலக்கோட்டை வாசலுக்கு அருகில் போய்ச் சேர்ந்தனர். சுடுகாட்டுச் சுங்கன் சாவடிச் சேகர்கள் அவ் விடத்திலிருந்த ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தைக் காட்ட, அதற்குள் திவான் முதலிய எல்லோரும் நுழைந்தனர். அந்தக் கட்டிடம் வெளிப்பார்வைக்குச் சிறியதாகக் காணப்பட்டதானாலும், உள்பக்கத்தில் அது ஒரு பெருத்த அரண்மனைபோல அரைக்கால் மயில் நீள அகலம் பரவிய கெட்டியான கட்டிடமாக இருந்தது. அதன் உள்பக்கம் முழுதும் சிறிய சிறிய மண்டபங்களாகப் பிரித்துக் கட்டப்பட்டிருந்தது. அத்தகைய மண்டபங்கள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன. ஒவ்வொரு மண்டபத்தின் முன்புறத்திலும் ‘குடி தண்ணீர் இலாகா” “தொழில் வரி இலாகா” “உத்தியோக வரி இலாகா” “பிண வரி இலாகா” “திவான் லொடபட சிங் முத்திரை வரி இலாகா” என்ற விலாசங்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கே காணப்பட்ட மண்டபங்களில் அவ்வாறு நூற்றுக்கணக் கான வெவ்வேறு இலாகாக்கள் இருந்தன; ஒவ்வொரு மண்டபத் திலும் சுமார் இருநூறு குமாஸ்தாக்களும், அவர்களுக்குத் தலைவர் ஒருவரும் காணப்பட்டனர். எல்லா மண்டபங்களுக்கும் இடையில் நடுநாயகம் போல விளங்கிய பிரம்மாண்டமான ஒரு பெரிய மகாலில் திண்டு திவாசுகள் நிறைந்த உன்னதமான ஆசனத்தின் மீது ரெவினியூ தாசில்தார் ஆடம்பரமாக அமர்ந்திருந்தார். அவருக்கருகில் கை கட்டி வாய் புதைத்து எண்ணிக்கையற்ற குமாஸ்தாக்களும், சேவகர்களும் வணக்கமாக நின்று கொண் டிருந்தனர். அவருடைய ஆசனத்திற்கு மேல் காணப்பட்ட, முத்துக் குஞ்சங்கள் நிறைந்த பங்காவைப் பல சேவகர்கள் இழுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் விசிறி, வெண்சாமரை முதலிய வற்றை வைத்து வீசிக்கொண்டிருந்தனர். 

மகாராஜனும், திவானும், மற்றவர்களும் அந்த இடத்தை அடையவே அவர்கள் இன்னார் என்பதை அறிந்து கொண்ட தாசில்தார் முதலிய எல்லோரும் குபீரென்று எழுந்து நிரம்பவும் பணிவாகக் குனிந்து மகாராஜன் முதலியோருக்கு நமஸ்காரம் செய்து கைகட்டி மரியாதையாக நின்றனர். தாம் அந்த சமஸ் தானத்திற்கு வந்தபின் ஒரு நாளாகிலும் அந்த இடத்திற்கு வந்தே அறியாத திவான் பெரு வியப்பும் பிரமிப்பும் அடைந்து சொப்பனத்தில் நடப்பவர்போல் மாறிப்போனார். தாம் அதற்கு முன் இருந்த கவர்னர் ஜெனரலுடைய கச்சேரி கூட அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்ததாக அவருக்குத் தோன்றவில்லை. அந்தத் தாசில்தாரின் கச்சேரிக்கு முன், கவர்னர் ஜெனரலுடைய கச்சேரி, மவுண்டு ரோட்டிலுள்ள பெரிய வெள்ளைக்காரர்களின் கம்பெனிக்கு அருகில் காணப்படும் மொச்சைக்கொட்டைச் சுண்டல் விற்கும் அங்காடிக் கடைபோல இருந்தது என்றே கூற வேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த மகா ஆச்சரியகரமான இராஜாங்க நிர்வாக அமைப்பைக் கண்ட திவானும் மகாராஜனும் வாய்திறந்து பேசவும் இயலாதவர்களாய் ஸ்தம்பித்து சிறிது நேரம் அப்படியே நின்று விட்டனர். உடனே திவான் தமக்கெதிரில் நின்ற ரெவினியூ தாசில்தாரை நோக்கி “ஐயா! நீர் யார்?” என்றார். 

தாசில்தார்: நான் ரெவினியு தாசில்தார். 

திவான்: உம்முடைய பெயரென்ன? 

தாசில்தார்: என் பெயர் கரண்டிகர் தபரே. 

திவான்: உம்முடைய சொந்த ஊர் எது? தாசில்தார்: இதுதான். 

திவான்: உமக்கு என்ன சம்பளம்? 

தாசில்தார்: மாசம் ஒன்றுக்கு ரூ.100. 

திவான்: நீர் எவ்வளவு காலமாக இந்த வேலையைப் பார்த்து வருகிறீர்? 

தாசில்தார்: சுமார் பத்து வருஷ காலமாக நான் இந்த வேலை பார்த்து வருகிறேன். 

திவான்: உம்மை இந்த வேலைக்கு நியமித்தது யார்? தாசில்தார்: இந்த சமஸ்தானத்து திவான் சாயப் நியமித்தார்கள். திவான்: நீர் இந்த ஊர் திவானை நேரில் பார்த்திருக்கிறீரா? தாசில்தார்: நான் இதுவரையில் பார்த்ததில்லை. தாங்கள் தான் திவான் சாயப் என்று இப்போது சிலர் சொன்னதிலிருந்து தெரிந்துகொண்டேன். 

திவான்: இந்த வேலை உமக்குக் கிடைத்தபோது, உமக்கு யார் தாக்கீது கொடுத்தார்கள்? 

தாசில்தார்: நான் படித்து பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, திவான் சாயப் கச்சேரியில் உத்தியோகத்திற்காக முயற்சி செய்தேன். அங்கேயிருந்த யாரோ ஒரு சேவகர் புதிதாக ரெவினியூ தாசில்தார் உத்தியோகம் ஒன்றை உண்டாக்கப்போகிறார்கள் என்றும், நான் விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால், தான் அதைக் கொண்டுபோய் திவானிடம் கொடுப்பதாகவும் சொன்னார். நான் உடனே விண்ணப்பம் எழுதிக்கொடுத்தேன். அதற்கு சில தினங் களுக்குப் பிறகு தபால் மூலமாக எனக்கு நியமன உத்தரவு வந்தது. அது முதல் நான் இந்த இடத்தில் இருந்து வேலை பார்த்து வருகிறேன். 

திவான்: அந்த உத்தரவைக் காட்டமுடியுமா? 

தாசில்தார்: (தமது மேஜைக்குள்ளிருந்த உத்தரவைத் தேடி எடுத்துக்கொடுத்து) இதோ இருக்கிறது பாருங்கள் – என்றார். 

அந்த நியமன உத்தரவை திவான் வாங்கிப் பார்க்க, அதில் தமது கையெழுத்தைப்போலவே ஒரு கையெழுத்து காணப்பட்டது. 

திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரையும் வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த திவான் திடுக்கிட்டு நடுநடுங்கிப் பிரமித்து அதை அரசனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு வாய்பேசா ஊமைபோல் நின்றுவிட்டான். 

திவான்: (மறுபடியும் தாசில்தாரைப் பார்த்து) ஐயா! தாசில்தார் வேலைக்கு விண்ணப்பம் எழுதிக் கொடுக்கும்படி உம்மிடம் சொன்ன சேவகனுடைய அடையாளம் உமக்கு இப்போது தெரியுமா? 

தாசில்தார்: அதன் பிறகு இப்போது பத்துவருஷ காலம் ஆய் விட்டது. எத்தனையோ ஜெவான்கள் வருகிறார்கள், போகிறார்கள். எல்லோரும் ஒரேவிதமான உடைகள் அணிந்திருக்கிறார்கள். ஆகையால் அவர் இன்னார் என்று நான் இப்போது கண்டு பிடிப்பது சாத்தியமில்லை. 

திவான்: இத்தனை இலாகாக்களும் நீர் வந்தபோதே இருந்தனவா? 

தாசில்தார்: இல்லை; நான் வந்தபோது நாலைந்து இலாகாக்கள்தான் இருந்தன. இந்தக் கட்டிடமும் சிறியதாக இருந்தது. நான் வந்து வேலை ஒப்புக்கொண்ட பிறகு அடிக்கடி திவான் சாயப்பினிடத்திலிருந்து தபாலில் எனக்கு உத்தரவு வரும். ன்னின்ன புதிய வரிகள் ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கு வேண்டிய கட்டிடங்களைக் கட்டி சிப்பந்திகளை நியமித்து அதை நடத்தும்படி அந்த உத்தரவில் விவரமான விதிகளும் விவரிப்பு களும் இருக்கும். அதன்படி நான் நிறைவேற்றி வைப்பேன். அம் மாதிரி இந்தப் பத்து வருஷகாலத்தில் 175 இலாகாக்கள் என்னால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 

திவான்: எல்லா இலாகாக்களிலும் மொத்தத்தில் எத்தனை சிப்பந்திகள் இருக்கிறார்கள். 

தாசில்தார்: 3748 சிப்பந்திகள் இருக்கிறார்கள். 

திவான்: இந்த நிர்வாகத்தில், மொத்தத்தில் வருஷ வருமானம், செலவு, ஆதாயம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா? 

தாசில்தார்: ஓ! சொல்லமுடியும். வசூலாகும் ஒவ்வொரு பைசாவுக்கும், செலவாகும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கண்ணாடிபோல ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. வருஷத் திற்கு வருஷம் வருமானமும், செலவும், மிச்சமும் பெருகிக் கொண்டே போகின்றன. நான் வந்த முதல் வருஷத்தில் வருமானம் முக்கால் லக்ஷம் ரூபாய். செலவு எண்ணாயிரம் ரூபாய்; செலவு போக பாக்கி மிச்சம். போன வருஷத்தில் மொத்த வருமானம் முப்பத்தைந்து லக்ஷம். செலவு ஒரு லக்ஷம். செலவு போக பாக்கி மிச்சம். 

திவான்: வசூலாகும் பணத்தையெல்லாம். நீங்கள் எங்கே வைக்கிறது? ஆள் மாகாணங்களின் செலவை யார் செய்கிறது? மிச்சப்பணத்தை என்ன செய்கிறது? 

தாசில்தார்: இதோ எனக்குப் பக்கத்தில் ஒருகஜானா இருக்கிறது. ஒவ்வொரு இலாகாவிலும் அன்றன்று வசூலாகும் வருமானம் மாலைக்குள் இந்த கஜானாவுக்கு வந்து சேர்ந்துவிடும். சிப்பந்திகளின் சம்பளம், என்னுடைய சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் இவ்விடத்தில் என்னுடைய அநுமதியின்மேல் கொடுக்கப் படும். மிச்சப்படும் தொகை வருஷமெல்லாம் இங்கேயேருக்கும். ஒவ்வொரு வருஷ முடிவிலும், மிச்சப்படும் தொகையை திவான் சாயப்னுடைய சேவகர்கள் வந்து பாராவோடு எடுத்துக் கொண்டு போவார்கள். அந்தத் தொகையை திவான் சாயப் பெற்றுக்கொண்டதாக அவருடைய கையெழுத்து முகர் உள்பட ரசீது வந்து சேரும். 

திவான்: (முற்றிலும் கலங்கி பிரமித்துப்போய்) இந்த ஒன்பது வருஷகாலமாய் திவானுக்கு அனுப்பப்பட்டதொகைகளின் மொத்தம் எவ்வளவு? அவரால் அனுப்பட்ட ரசீதுகள் எங்கே? 

தாசில்தார்: (கணக்கைப்பார்த்து) இந்த ஒன்பது வருஷ காலத்தில் திவான் சாயப் கச்சேரிக்கு அனுப்பப்பட்ட மொத்த ஆதாயம் மூன்றுகோடியே முப்பத்தைந்து லட்சத்துப் பதினாயிரத்து அறுநூற்று முப்பத்தொண்பது ரூபாய் ஏழணா நான்கு பைசா ஆகிறது. இதோ பாருங்கள் ஒன்பது ரசீதுகள் – என்று ரசீதுகளை எடுத்துக் கொடுத்தார். திவான் அவைகளை வாங்கிப் பார்க்க, எல்லாவற்றிலும், தமது கையெழுத்துகளைப்போலவே கையெழுத்துகள் செய்யப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை குத்தப்பட்டிருந்து. அந்த ரசீது களை உடனே அரசன் வாங்கி வைத்துக்கொண்டார். 

அதன் பிறகு திவான் அவ்விடத்திலிருந்த கணக்குகளை எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்து, கஜானாவிலிருந்த பணங்களையும் சோதனை செய்தார். கணக்குகள் யாவும் பரிஷ் காரமாகவும் ஒழுங்காகவும் வைக்கப்பட்டிருந்தன. கணக்கில் காட்டப்பட்டபடி அந்த நிமிஷத்தில் எவ்வளவு தொகை கஜானாவில் இருக்க வேண்டுமோ, அந்தத்தொகை ஒரு காசு குறையாமல் கஜானாவில் அப்போது இருந்தது. 

உடனே திவான் தாசில்தாரைப் பார்த்து, ‘ஐயா! ஒவ்வொரு வருஷக் கடைசியிலும் மிச்சப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு போன பாராக்காரர்கள் இன்னார் இன்னார் என்ற அடையாளம் உமக்குத் தெரியுமா?” என்றார். 

தாசில்தார், “பத்துத் தாசில்தார்கள் செய்யத் தகுந்த வேலையை நான் ஒருவனே பார்த்து வருகிறேன். சேவகர்கள் யார் யார் வருகிறார்கள் என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசம் கிடையாது. எல்லாப் பணமும் திவான் சாயப் கச்சேரிக்கு ஒழுங் காய்ப் போய்ச் சேர்ந்தது என்பதற்கு நான் ரசீதுகள் கொடுத்து விட்டேன். தங்களுடைய கச்சேரிப் பாராக்காரர்களுடைய அடை யாளம் தங்களுக்குத்தான் தெரியவேண்டும்” என்றார். 

அதைக்கேட்ட திவான் கலங்கி அயர்ந்து இடிந்து அப்படியே உட்கார்ந்து போய்விட்டார். அவருக்குப் பக்கத்திலேயே இருந்து எல்லா வியவகாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த அரசன் திவானைப் பார்த்து, “என்ன திவானே! நீர் இப்போது இந்தத் தாசில்தாரிடம் கேட்ட கேள்விகளை எல்லாம் கவனித்தால், இந்தப் பத்து வருஷ காலமாய் இவ்விதமான கச்சேரி ஒன்று இங்கே ருக்கிறது என்பதையே நீர் தெரிந்து கொள்ளவில்லை என்பது பரிஷ்காரமாக விளங்குகிறது. அதுவுமன்றி, இவர்களால் இந்த ஒன்பது வருஷ காலமாக அனுப்பப்பட்ட மிச்சப்பண மெல்லாம் நம்முடைய கஜானாவிற்கு வந்து சேரவில்லை என்பதும் பரிஷ் காரமாகத் தெரிகிறது. அதுவுமின்றி உமக்குத் தெரியாமல் யாரோ உம்முடைய கையெழுத்தைப் பெற்று ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகவும் தெரிகிறது” என்றான். 

திவான் சிறிது நேரம் திகைத்துத் திருடனைப்போல் விழித்து, “நான் ஒவ்வொரு தாக்கீதையும் கவனித்துப் படித்தே கையெழுத்துச் செய்கிறேன். ஆகையால் இங்கே வந்திருக்கும் உத்தரவுகளில் காணப்படும் கையெழுத்துகளெல்லாம் என்னால் செய்யப் பட்டவையே அல்ல. யாரோ சிலர் மறைவாக இருந்துகொண்டு இந்த பிரம்மாண்டமான மோசத்தை நடத்திக்கொண்டு போகிற தாகத் தெரிகிறது. இவர்களால் விதிக்கப்படும் வரிகள் உலகத்தில் வேறே எவராலும் விதிக்கப்படாத அதிசயமான வரிகளாக இருப்பதொன்றே, நான் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை பரிஷ்காரமாக மெய்ப்பிக்கும். இவர்களால் அனுப்பப்பட்டிருக்கும் பணம் நம்முடைய கஜானாவிற்கு வந்து சேரவே இல்லை. எனக்குத் தாங்கள் எட்டு நாள்கள் வரையில் வாய்தா கொடுத்தால், நான் பிரயத்தனப் பட்டு, உண்மையைக் கண்டு பிடித்துவிடுகிறேன்” என்றார். 

அரசன், ”சரி; நீர் கேட்டுக் கொள்ளுகிறபடி உமக்கு வாய்தா கொடுத்திருக்கிறேன். அதற்குள் நான் இந்த வரலாற்றை எல்லாம் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி அவருடைய உத்தரவைப் பெறு கிறேன். இந்தப் புதிய கச்சேரியை மூடிப் பூட்டி அரக்கு முத்திரை வைத்து காவல் போடுங்கள். இங்கே இருக்கும் தாசில்தார், மற்ற சிப்பந்திகள் எல்லோரையும், விசாரணை முடிகிற வரையில் பந்தோபஸ்தான இடத்தில் வையுங்கள்” என்று கட்டளை பிறப் பித்துவிட்டுத் தமது அரண்மனைக்குப் போய்விட்டான். 

அங்கிருந்த தாசில்தார் முதலிய எல்லா உத்தியோகஸ்தர் களும் இதர சிப்பந்திகளும் உடனே சிறைப்படுத்தப் பட்டார்கள். அந்தக் கச்சேரியும் மூடிக்காவல் போடப்பெற்றது. அரசன் அந்த அதிசய மான விவரங்களையெல்லாம் கண்டு கவர்னர் ஜெனர லுக்கு ஓர் அவசரமான கடிதம் எழுதியனுப்பிவிட்டு அவரது முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். திவானோ இரவு பகல் தூங்காமலும், தண்ணீர் அருந்தாமலும் அதே விசாரமாகவும் கவலையாகவும் இருந்து துரும்பாய் மெலிந்து போனதன்றி, தம்மாலான வரை பிரயத்தனம் செய்து அதன் உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றதெல்லாம் எள்ளளவும் பலிக்காமலே போயிற்று. கவர்னர் ஜெனரலுடைய மறுமொழி கிடைத்தது. திவான் தம்முடைய கச்சேரியிலிருந்து அனுப்பப் பட்டாரானாலும், அவர் எப்போது முதல் அந்த சமஸ்தானத்தில் குடியேறினாரோ அது முதல் அந்த சமஸ்தானத்து ஜனங்களுள் ஒருவர் ஆகி விட்டமையால், அவர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவரை அந்த சமஸ்தானத்துச் சட்டங்களின்படி சுயேச்சையாய் தண்டிக்க மகாராஜனுக்கு அதிகாரம் உண்டென்றும், அவரை சட்டப்படி மகாராஜன் நடத்திக்கொள்ளலாம் என்றும் கவர்னர் ஜெனரல் எழுதிவிட்டார். திவான் கேட்டுக்கொண்டபடி எட்டாவதுநாள் முடிகிற வரையில் அரசன் பொறுத்திருந்து, ஒன்பதாவது நாள் தமது சபையைக் கூட்டித் தாமும் வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அந்த அற்புதமான வழக்கு எப்படி முடியுமோ என்பதை அறியும் பொருட்டு அந்த நகரத்து ஜனங்கள் எல்லோரும் இலக்ஷக்கணக்கில் வந்து சபா மண்டபத்திற்கு எதிரில் நெருங்கி நின்றனர். திவானும், ரெவினியூ தாசில்தார் முதலிய மற்ற கைதிகள் எல்லோரும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்தப்பட்டனர். உடனே அரசன் திவானை நோக்கி “என்ன திவானே! உண்மையைக் கண்டு பிடித்தீரா” என்றான். 

துரும்பிலும் கேவலமாக மெலிந்து நடைபிணம் போலக் காணப்பட்ட திவான், “மகாராஜாவே! நான் என்னாலான பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். உண்மை இன்னதென விளங்கவில்லை. இந்தத் தாசில்தார் முதலிய கைதி களும், எனக்குக் கீழ் வேலை செய்யும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு இம்மாதிரி தந்திரம் செய்து என் கையெழுத்தைப் போலப் பொய்க் கையெழுத்திட்டு ரசீதுகளும், உத்தரவுகளும் தயாரித்து வைத்துக்கொண்டு எல்லாப் பணத்தையும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளுகிறார்கள் என்பதே என்னுடைய அபிப்பிராயம். தாங்கள் என்னுடைய வீட்டைச் சோதனை போட்டுப் பார்க்கச் செய்தால், அவ்விடத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறது என்பதும், நான் இந்தப் பணத்தை அபகரித்திருக்கிறேனா என்பதும் தெரிந்து போம்” என்றார். 

உடனே அரசன் தாசில்தாரைப் பார்த்து “நீர் என்ன சொல்லு கிறீர்கள்?” என்றார். 

தாசில்தார் “நானாவது, எனக்குக் கீழுள்ள சிப்பந்திகளாவது எவ்விதமான குற்றமும் செய்ததாக யாரும் மெய்ப்பிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் கணக்குகளும், திவான் சாயப்பினுடைய தாக்கீதுகளும் இருக்கின்றன. நாங்கள் ஊருக்குள் சர்க்கார் கட்டிடத்தில் சர்க்கார் உத்தரவின்படி எங்கள் கடமைகளைச் செய்தோமேயன்றி எவ்வித குற்றமும் செய்யவில்லை. நாங்கள் ஒரு பாவத்தையும் அறியோம்” என்றார். அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, “இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து, இனி நம்முடைய ராஜ்ஜிய நிர்வாகம் ஒழுங்காகவும் நீதியாகவும் நடைபெறும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். முன்பு சிப்பந்திகள் சொற்ப சொற்பமாகத் திருடினார்கள். அவர்கள் இன்னின்னார் என்பதும் எளிதில் தெரிந்தது. இப்போது ஜனங் களுடைய பொருளை இவ்வளவு அபரிமிதமாகக் கொள்ளையடிக் கிறது இன்னார் என்பது தெரியவே இல்லை. அவர்கள் தாசில்தார் முதலிய உத்தியோகஸ்தர்களை நியமித்து, சொந்தக் கட்டிடம் கட்டி, பட்டப்பகலில் நாற்காலி மேஜைகள் போட்டுக்கொண்டு பங்கா விசிறி வெண்சாமரம் முதலிய விசேஷ மரியாதைகளுடன் கோடி கோடியாய் எல்லா ஜனங்களும் அறியக் கொள்ளையடிக் கிறார்கள்; ஆனால் எல்லா வரவு செலவு ஆதாயங்களுக்கும் ஓர் இம்மியளவும் பிசகாமல் கணக்கு வைத்திருக்கிறார்கள்; எல்லா வற்றிற்கும் தாக்கீதுகளும் சட்ட ஆதாரமும் காட்டுகிறார்கள். இவ் விதமான இந்திரஜாலக் கொள்ளை இந்த உலகத்தில் வேறே எந்த தேசத்திலும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய எதிலும் நடக்கத் தகுந்ததேயல்ல. ஆனால் இன்னார்தான் இதற்கு உத்தரவாதி என்பது இன்னம் தெரியவில்லை. தக்க சாட்சிகளைக் கொண்டு மெய்ப்பிக்காமல், எவர் மீதும் எந்தக் குற்றத்தையும் சுமத்துவது சட்ட விரோதமாகையால், தாசில்தார் முதலிய சிப்பந்திகள் எல்லோரையும் நாம் விடுதலை செய்திருக்கிறோம். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட வரிகளையெல்லாம் இன்று முதல் நீக்கிவிட்டோம். இவர்களுடைய சச்சேரிக் கட்டடத்தையும் அதற் குள்ளிருக்கும் பொருள்களையும் சர்க்காருக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறோம். இது சம்பந்தமாக இந்த திவானினால் பிறப்பிக் கப்பட்டுள்ள சகலமான தஸ்தாவேஜுகளும், ரசீதுகளும் உண்மை யிலேயே இவரால்தான் அனுப்பப்பட்டவை என்பதற்குப் போதுமான சாட்சியம் இல்லை. அதுவுமன்றி இந்தப் பத்து வருஷகாலமாக இவருடைய நடத்தையையும் நாணயத்தையும் நாம் ரகசியத்தில் கவனித்து வந்ததில், இவர் இத்தகைய பிரம் மாண்டமான கொள்ளையில் இறங்கி இருப்பாரென்று நினைப்ப தற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஆயினும், இந்த சமஸ் தானத்தின் சர்வ அதிகாரத்தையும் நான் இவரை நம்பி இவரிடம் ஒப்புவித்திருக்கையில் இவருடைய கண்ணிற்கெதிரில் இப்படிப் பட்ட அபாரமான பகல் கொள்ளை நடப்பதை இவர் கண்டு பிடிக்காமல் அஜாக்கிரதையாக இருந்தது இவர்மீது பெருத்த குற்றமாகிறது. இதனால் பொது ஜனங்கள் கோடிக்கணக்கில் பொருள் நஷ்டத்திற்கும் இதர துன்பங்களுக்கும் இலக்காகி இருக் கிறார்கள். இவர் சம்பந்தப்பட்டோ, அல்லது, இவருடைய அஜாக்கிரதையினாலோ நடந்துள்ள இவ்வளவு பெரிய அட்டூழி யத்திற்கு இவரை மன்னித்து விடுவது தவறு. ஆகையால் இந்த திவானுக்கு நாம் பத்துவருஷ காலத்திற்குக் கடுங்காவல் தண்டனை கொடுப்பதோடு, இவருடைய சொத்துகள் முழுதையும் பறிமுதல் செய்து சர்க்கார் வசப்படுத்தவும் உத்தரவு செய்கிறோம்” என்று கூறி முடித்தான். 

அந்தத் தீர்மானம் திவானுக்கு இடிவிழுந்தது போலாய் விட்டது. சகிக்க இயலாத வேதனையும் கலக்கமும் கலவரமும் தோன்றி அவரை வதைக்கலாயின. அவரது உடம்பு கை கால்கள் யாவும் வெட வெட வென்று நடுங்கிப் பதறுகின்றன. வெட்கமும் துக்கமும் ஒருபுறத்தில் பொங்கி எழுகின்றன. மூளை கிறுகிறு வென்று சுழலுகிறது. புத்தி தடுமாறுகிறது. நாக்கு குழறிப் போகிறது.உடம்பு குபீரென்று வியர்த்துவிடுகிறது. கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அவர் அப்படியே மயங்கிக் கீழே சாயப் போன சமயத்தில் அவருக்குப் பின்னால் நின்ற சேவகர்கள் இருவர் அவர் கீழே விழாதபடி அப்படியே பிடித்து நிறுத்திக் கொண்டனர். உடனே திவான் அரசனைப் பார்த்து, மெதுவான குரலில் பேசத்தொடங்கி, “மகாராஜனே! எனக்குத் தாங்கள் கொடுப்பது மகா கொடுமையான தண்டனை. தாங்கள் ஒரு குற்றத்தையும் செய்யாதவனான என்னைத் தண்டிப்பதோடு, என் வீட்டிலுள்ள என்னைச் சேர்ந்த நிரபராதிகளான என் ஜனங் களையும் தண்டிக்கிறீர்கள். எங்கள் வீட்டில் வயோதிகர்களான என் தாயும், தகப்பனாரும் இருக்கிறார்கள். மேலும் என் தம்பிமார், என் சம்சாராம், தங்கைகள் முதலிய சுமார் பத்து ஜனங்கள் இருக்கிறார்கள். என் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தால், அவர்கள் ஏழ்மை நிலைமையடைந்து பிச்சை எடுத் துத்தான் ஜீவனம் செய்ய நேரும். யாரோ மோசக்காரர்கள் செய்த குற்றத்திற்காக என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் தாங்கள் இவ்விதம் தண்டிப்பது கொஞ்சமும் தெய்வ சம்மத மாகாது” என்று நிரம்பவும் பரிதாபகரமாகவும் மன நைவோடும் பணிவாகவும் கூறினார். 

அதைக் கேட்ட மகாராஜன், “ஐயா! இது மன்னிக்கத்தக்க அற்ப சொற்பமான குற்றமென்று நீர் நினைக்கிறீரா? இந்த உலகத்தில் வேறே எந்த திவானுடைய தர்பாரிலும் இப்படிப் பட்ட ஜெகஜாலக்கொள்ளை நடந்திருக்காது என்பதும், இனி நடக்காது என்பதும் நிச்சயம். உம்முடைய அஜாக்கிரதையினால் இந்த சமஸ்தானத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட அவமானமும் பழிப்பும் இந்த உலகம் உள்ள வரையில் அழியாது என்பது நிச்சய மான சங்கதி. அப்பேர்ப்பட்ட தீராத மானக்கேட்டை உண்டாக்கி வைத்தவரான உம்மை நாம் மரண தண்டனைக்கே ஆளாக்க வேண்டும். அதற்கு சட்டம் இடந்தரவில்லை. ஆகையால், நாம் உம்மை இவ்வளவோடு விடுகிறோம். யாரடா ஜெவான்கள்! இவரைக் கொண்டுபோங்கள்” என்றான். அந்த முடிவான உத்தரவைக் கேட்டவுடன் திவான் கண்ணீர் விடுத்துக் கோவெனக் கதறி அழ ஆரம்பித்தார். அவரது உடம்பு காற்றிலசையும் நாணல் போலத் துவண்டு வளைந்து அங்குமிங்கும் சாய்கிறது. அங்கே கூடியிருந்த நகரத்து ஜனங்கள் எல்லோரையும் திவான் நிரம்பவும் பரிதாபகரமான பார்வையாகப் பார்க்கிறார்; வெட்கத்தினால் குன்றிப் போய்க் கீழே குனிகிறார். ஜனங்களோ தாங்கள் என்ன சொல்வது என்பதை அறியாதவர்களாய்த் தவித்துப் பதறி நிற்கிறார்கள். பாராக்காரர்கள் இருவர் திவானுக்கருகில் வந்து அவரைத் தொட்டு இழுக்க எத்தனிக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஜனக்கும்பலுக்குள்ளிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு அவசர மாக வழி செய்துகொண்டு பைத்தியம் பிடித்தவன்போல சபைக்குள் நுழைந்து மகாராஜனுக்கு எதிரில் தைரியமாகப் போய் நின்று இரண்டு கைகளையும் எடுத்துக் குவித்து நிரம்பவும் பணி வாகக் குனிந்து வணங்கி, “மகாராஜனே! நான் இந்த சமஸ்தானத் திலுள்ள பிரஜைகளுள் ஒருவன். இந்தப் பத்து வருஷகாலமாக நம்முடைய சமஸ்தானத்தில் நடந்து வந்த விநோதக் கொள்ளையின் விஷயத்தில் தாங்கள் இப்போது வெளியிட்ட தீர்மான சம்பந்த மாக நான் ஒரு விக்ஞாபனம் செய்துகொள்ளப் பிரியப்படுகிறேன். மகாராஜன் கருணை கூர்ந்து அதற்கு அநுமதி கொடுக்கவேண்டும்” என்றான். 

அதைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு வியப்பும் ஆவலும் அடைந்தவனாய் நிமிர்ந்து அந்த மனிதனைப் பார்த்தான். பக்கங் களிலும் எதிரிலும் இலக்ஷக்கணக்கில் கூடியிருந்த உத்தியோகஸ் தர்களும் குடிஜனங்களும் அந்த மனிதன் எதைப்பற்றிப் பிரஸ் தாபிப்பானோ என்ற ஆவலும், ஆச்சரியமும் அடைந்து, அவனது வாயையே கவனமாய்ப் பார்க்கலாயினார். சபா மண்டபம் முழுவதும் நிச்சப்தமே குடிகொண்டது. மகாராஜன் அவனைப் பார்த்து, என்ன விண்ணப்பம்? சொல், கேட்கலாம்” என்றார். 

அந்த மனிதன், “மகாராஜனே! இந்த சமஸ்தானத்தில் சென்ற ஒன்பது வருஷகாலத்தில் தங்களுடைய உத்தரவுப்படி ஒழுங்காக வசூலிக்கப்பட்ட வரிகளில், செலவுகள் போக, ஆதாயம் எவ்வளவு என்பதைத் தாங்கள் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?” என்றான். 

அரசன்: பார்த்தோம். இந்த ஒன்பது வருஷத்தில் மொத்த ஆதாயம் 50 ஆயிரம் ரூபாய். 

அந்த மனிதன்: திவானுடைய கச்சேரியில் எத்தனை சிப்பந்திகள் வேலை பார்க்கிறார்கள்? 

திவான்:என்னையும் சேர்த்து 753 சிப்பந்திகள் இருக்கிறார்கள். 

அந்த மனிதன்: மகாராஜனே! இந்த சமஸ்தானத்து அரசராகிய தங்களால் கிரமப்படி நியமிக்கப்பட்ட சிப்பந்திகள் 753 தான். அரூபியாக இருக்கும் திவான் லொடபட சிங் பகதூரினால் நியமிக்கப்பட்டிருக்கும் சிப்பந்திகளோ 3748 பேர்கள். 753 சிப்பந்தி களுக்கு ஆகும் செலவைவிட 3748 சிப்பந்திகளுக்குப் பல மடங்கு அதிகமாகவே செலவு பிடித்திருக்கும். அப்படி இருந்தும், அந்த, திவான் லொடபட சிங் பகதூர் மூன்று கோடியே முப்பத்தைந்து லக்ஷத்துப் பதினாயிரத்து அறுநூற்று முப்பத்தொன்பது ரூபாயும் சில்லரையும் மிச்சப்படுத்தி இருக்கிறார். தங்கள் திவானோ அரை லக்ஷம் ரூபாய்தான் மிச்சப்படுத்தி இருக்கிறார். தங்களுடைய திவான் நியாயமான துறைகளிலும், பயங்கரமான ஸ்தாபனங் களிலும் வரிகள் விதித்து சட்டப் பூர்வமாக வசூலித்திருக்கிறார். அரூபியான லொடபட சிங் பகதூரோ ரகஸியமாகவும், புதுமை யாகவும் கேவலம் அற்ப சொற்பமான விஷயங்களுக் கெல்லாம் வரிகள் விதித்து, இன்னாரால் இத்தனை ஏற்பாடுகளும் செய்யப் படுகின்றன என்ற குறிப்பே எவருக்கும் தெரியாதபடி மறைந் திருந்து, கடவுளின் திருஷ்டி எவ்வளவு பூடகமாக இருக்கிறதோ, அது போல, அவர் சகலமான காரியங்களையும் அத்யாச்சரிய கரமாக நடத்தி வந்திருக்கிறார். அவரது அபரிமிதமான செலவையும்,ஆதாயத்தையும் பார்த்தால், அவர் ஜனங்களிடம் அற்ப இலாகாக்களில் வசூலித்தது பிரம்மாண்டமான தொகையா யிருக்கும் என்பது பரிஷ்காரமாகத் தெரியும் விஷயம். தங்கள் திவானால் ஏற்படுத்தப்பட்டுள்ள வரிகளோ நிரம்பவும் பளுவாய் இருக்கிறதென்று ஜனங்கள் உணர்ந்து அதைப்பற்றிப் பலவிதமாகப் பிரஸ்தாபிக்கிறார்கள். திவான் லொடபட சிங் பகதூரின் வரி களையோ ஜனங்கள் அவ்வளவாய் உணர்ந்ததாகவே தெரிய வில்லை. தங்கள் திவான் சட்டத்தைக் கரைகடந்த மேதாவி என்றும், ராஜாங்க நிர்வாகத்தில் மகா நிபுணர் என்றும் கவர்னர் ஜெனரலால் புகழப்பட்டவர். அப்படி இருந்தும், அரூபியான நமது திவான் லொடபட சிங் பகதூர் இவரை வெகு சுலபத்தில் ஜெயித்து, இவர் காரியத்திற்கு ஆகாத ஏட்டுச்சுரைக்காய் என்று ருஜுப்படுத்தி விட்டார். இவர் எப்போதும் சட்டம், சாட்சியம் ஆகிய இரண்டையுமே முக்கியமாக எண்ணி, உயிரற்ற இயந்திரம் போல வேலை செய்கிறவரேயன்றி, தம்முடைய பகுத்தறிவை உபயோகப் படுத்தி, யுக்தா யுக்தமறிந்து, ஜீவகாருண்யம், பச்சாதாபம் முதலிய குணங்களைக் கலந்துகொண்டு சட்டங்களை உபயோகப்படுத்தத் தெரிந்து கொள்ளாதவர். இவருக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என்று நமது திவான் லொடபட சிங் பகதூர் அரூபியாக இருந்து இத்தனை காரியங்களையும் மகா அற்புதமாக இயற்றிக் காட்டி இருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரு மனிதன் சாட்சிகள் இல்லாமலும், அல்லது, பொய்ச் சாட்சிகளை உண்டாக்கிக் கொண்டும், சட்டத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல், எவ்வளவோ அபாரமான காரியங்களை எல்லாம் எத்தனை வருஷகாலம் வரையில் வேண்டுமானாலும் செய்வது சாத்தியமான விஷயம் என்பது இப்போது நன்றாக விளங்கிவிட்டது. ஒருவனுடைய சொத்தை இன்னொருவன் அக்கிரமமாக அபகரித்துக் கொள்ளு கிறான். ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை. ஆகவே, சட்டத்தின் படி பார்த்தால் அது குற்றமாகிறதில்லை. நியாயப்படி பார்த்தால் அது குற்றமே. ஆகையால் சட்டப்படி செய்யப்படும் காரிய மெல்லாம் நியாய சம்மதமானது என்று நாம் எண்ணிவிட முடியாது. இவ்வளவு பெரிய சமஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்த திவான் சட்டம் ஒன்றையே முற்றிலும் பின்பற்றி நடப்பது போதுமானதே யல்ல. இவர் தம்மாலேன்ற வரையில் ஜீவகாருண்யத்தையும் நீதியையும் அநுசரித்து சகலமான நடவடிக்கைகளையும் நடத்தி இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்தை மெய்ப்பிக்க சாட்சியில்லை என்ற காரணத்தினா லேயே, வாதியின் வழக்கை அலட்சியமாக மதித்துத் தள்ளி விடுவது அடாது. அப்படி இவர் அந்த வழக்கைத் தள்ளுவதால், அந்த வாதிக்கு, தன்னுடைய குடும்ப வாழ்க்கையே சீர்குலைந்து போகலாம். அவனைச் சார்ந்த மனிதர்கள் ஜீவனோ பாயத்திற்கு வகையின்றி இறந்து போகலாம். இன்னும் அதிலிருந்து கணக் கற்ற துன்பங்களும் துயரமும் நேரலாம். அப்படி இவர் இராஜ நிர்வாகம் செய்தால், இவர் எத்தனை வழக்குகளில் அநியாயமாக நடந்துகொள்ள நேர்ந்ததோ, அத்தனை வழக்குகளிலும் இவருக்கு ஏராளமான பகைவர்கள் ஏற்படுவதும் சகஜமே. அவர்களுள் நமது திவான் லொடபட சிங் பகதூரைப்போன்ற யுக்திமான்கள் பலர் இருப்பார்களானால், சட்டமொன்றையே ஆதாரமாகக் கொண்டு தெப்பம்போல மிதக்கும் இந்த உயிரற்ற இராஜாங்க நிர்வாகத்தை ஒரே நொடியில் தலைகீழாய்க் கவிழ்த்து விடுவார்கள் என்பதை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மகாரா ஜனே! இப்போது தாங்கள் வெளியிட்ட தீர்மானத்தில், முக்கிய மான இரண்டொரு விஷயங்கள் சொல்லப்படவில்லை. இந்த நக ரத்துக் குடிமக்களுள் நானும் ஒருவன். அரூபியாக இருந்து இந்தப் பத்துவருஷ காலமாய் எங்களிடத்திலிருந்து திவான் லொடபட சிங் பகதூர் சட்டத்திற்குப் புறம்பாக லக்ஷக்கணக்கில் பொருளை வசூலித்திருக்கிறார். அவரால் ஏற்படுத்தப்பட்ட கச்சேரியிலிருந்து அபகரிக்கப்பட்ட பொருளைத் தங்கள் கஜானாவில் சேர்க்கும்படி உத்தரவு செய்தீர்கள். எங்களிடமிருந்து வசூல் செய்யப்பட் டிருக்கும் பொருளெல்லாம் எங்களிடம் வந்து சேரும்படி தாங்கள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அதுவுமன்றி, இனியும் தாங்கள் இந்த ராஜ்யத்தை இப்படி சட்ட ஆதாரம் ஒன்றையே வைத்துக் கொண்டு நடத்திக்கொண்டுபோனால், மறுபடி இந்த நகரத்தில் இதுபோன்ற ஜெகஜாலக் கொள்ளைகள் நடக்காமல் எங்களைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் என்னவிதமான உபாயம் தேட உத்தேசிக்கிறீர்கள் என்பதும் சொல்லப்படவில்லை. இப்படிப் பட்ட அக்கிரமங்களுக்கு உள்படாமல் இந்த ஊரில் எப்படி இருந்து காலந்தள்ளப் போகிறோம் என்ற பயம் தோன்றி எங்கள் மனசை வதைப்பதால், நான் துணிந்து இந்த விண்ணப்பத்தைத் தங்களிடம் செய்து கொள்ளுகிறேன்” என்றான். 

எவரும் எதிர்பாராவிதம் அவன் நிரம்புவம் துணிவாகப் பேசியதைக் கேட்ட அரசனும், திவானும், மற்ற ஜனங்களும் முற்றிலும் திகைத்து பிரமித்து ஸ்தம்பித்துப் போயினார். திவான் தனது சிறுமையையும் அறியாமையையும் உணர்ந்து வெட்கிக் குன்றித் தலைகுனிந்து நின்றார். அதுபோலவே மகாராஜனும் ஒரு விதமான கிலேசத்தையும் இழிவையும் உணர்ந்து தனது மனத்தில் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அந்த மனிதனைப் பார்த்து, ‘ஐயா! நீர் பேசுவதைப் பார்த்தால், இந்த திவான் சில வழக்குகளில் நீதித் தவறாக நடந்துகொண்டதை நீர் அறிந்து கொண்டு பேசுகிறது போலத் தோன்றுகிறதே” என்றான். 

அந்த மனிதன், “ஆம்; சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நான் ஒரு தாசில்தாரிடம் சமயல்காரனாக இருந்தேன். இந்த திவான் வேலைக்கு வந்தவுடன் அந்தத் தாசில்தாரையும் வேறு பலரையும் உத்தியோகத்திலிருந்து விலக்கிவிட்டார். அதனால் என்னுடைய சமயல் உத்தியோகமும் போய்விட்டது. நான் நாணயமான வழியில் ஜீவனம் செய்யவேண்டுமென்று இவ்வளவு பெரிய பட்டணத்தில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. என் பெண்சாதி வியாதியால்பட்டு மருந்துக்கும் கஞ்சிக்கும் வகை யின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தாள். சிறிய குழந்தைகள் பசியால் துடித்துப் பறந்தன” என்றான். 

உடனே திவான் நமது சமயற்காரனை நோக்கி, ”ஓகோ! நீயா! உன்னுடைய வழக்கு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! நீ மைசூர்பாகு செய்து விற்றபோது யாரோ சூதாடிகள் வந்து எல்லா வற்றையும் அபகரித்துக்கொண்டு போனதாக நீ பிராது கொடுத்தாய். சாட்சிகள் இல்லை. ஆகையால், அந்த வழக்கை நான் தள்ளி விட்டேன்” என்றார். 

நமது சமயற்காரன் சிரித்துக்கொண்டு “ஆம். ஆம். அந்த மனிதன் நான்தான். தாங்கள் என் வழக்கைத் தள்ளிய பிறகு நான் மகாராஜனிடம் நேரில் வந்து என் நியாயத்தைச் சொல்லிக் கொள்ள எத்தனித்தேன். மகாராஜன் பெரிய மனிதர்களுக்குத் தான் பேட்டி கொடுப்பதென்றும், என்னைப்போன்ற அற்ப மனிதர்களை அருகில் வரவிடுவதில்லை என்றும் சேவகர்கள் சொல்லி விட்டார்கள். அதன் பிறகு என் வழக்கைக் காகிதத்தில் எழுதி நான் அதை மகாராஜனுக்கு அனுப்பினேன். திவான் செய்ததே சரியான தீர்மானமென்று சொல்லி நம் அரசர் என்னுடைய மனுவைத் தள்ளி விட்டார். என்னுடைய குடும்பத்தின் பரிதாபகர மான நிலைமையையும், அந்தக் கொள்ளையினால், எனக்கு நேரக்கூடிய பலாபலன்களையும் நான் திவானிடத்திலும், மகா ராஜனிடத்திலும் தெரிவித்தேனானாலும், அவர்களுடைய மனம் சட்டமொன்றையே கவனித்ததன்றி ஜீவகாருண்யம் என்பதை எள்ளளவும் கொள்ளவில்லை. ஒரு தகப்பன் செயலற்றவை யாயிருக்கும் தன் சொந்தக் குழந்தைகளை எப்படிக் காப்பாற்று வானோ அதுபோல, மகாராஜன் குடிகளைக் காப்பாற்ற வேண்டு மென்பது நம்முடைய முன்னோர் கடைப் பிடித்துவந்த கொள்கை. ஒரு குழந்தை, ‘பட்டினி கிடந்து சாகிறே”னென்றால், அதன் தகப்பனுடைய மனம் இரங்காமலிருக்குமா? என்னுடைய வரலாற்றைக் கேட்டுக் கல்லும் கரைந்துருகும். அப்படி இருந்தும், தங்கள் இருவருக்கும் மனம் கொஞ்சமும் இரங்கவில்லை. இந்த திவானுடைய வீட்டுவாசலில் இருந்த பாராக்காரனுடைய மனம் உடனே இளகித் தவித்தது. அவன் எனக்கு உடனே எட்டணா பணத்தைக் கொடுக்க வந்தான். நான் நியாயமான வழியில் சம் பாதிக்க வேண்டுமென்றும், பிறருடைய பொருளை உழைப்பின்றி அபகரிக்கக் கூடாதென்றும் சொல்லி அதை வாங்க மறுத்து விட்டேன். அவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஏராள மான சாமன்களை எடுத்துக்கொண்டு எனக்குத் தெரியாமல் போய் என் வீட்டிலிருந்த குழந்தைகளிடம், நான் கொடுக்கச் சொன்னதாக நடித்து அவைகளைக் கொடுத்து விட்டு வந்து விட்டான். அன்றையதினம் அந்த மனிதர் அப்படிச் செய்திரா விட்டால், என் குடும்பத்தார் எல்லோரும் மாண்டிருப்பார்கள். நம்முடைய தேசத்தில் அரசர் இருக்கிறார், திவான் இருக்கிறார்; நான் அவர்களிடம் என் குடும்ப நிலைமையைத் தெளிவாகத் தெரிவித்தேன்; கேள்வி முறையில்லாமல் போய்விட்டது. ஆகவே, இது கேள்வி முறையற்ற தர்பார் என்றும், சாட்சியம், சட்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடங்கொடாமல், தோட்டி முதல் மகாராஜன் வரையில் கொள்ளை அடிக்கலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டினால், அப்போதாவது இந்த நிர்வாகம் திருந்தாதா என்ற எண்ணத்தினாலேயே நமது திவான் லொடபட சிங் பகதூர் அரூபி யாக இருந்து இப்படிப்பட்ட அதிதீரச் செய்கைகளைச் செய்து. காட்டி இருக்கிறார் என்றே நாம் எண்ணிக்கொள்ள வேண்டு மென்று நினைக்கிறேன்” என்றான். 

அதைக் கேட்ட மகாராஜன் திடுக்கிட்டு திக்பிரமை கொண்டான். அவனது மனத்தில் அபாரமான கோபமும் பதை பதைப்பும் பொங்கி எழுந்தன. கண்கள் கோவைப் பழமாய் சிவந்தன. மீசைகள் துடிக்கின்றன. கை கால்கள் பதறுகின்றன. அது போலவே மற்ற ஜனங்களும், உத்தியோகஸ்தர்களும், நமது சமயற்காரன் மீது ஆத்திரமும் அருவருப்பும் கொண்டு அவனைக் கசக்கிச்சாறு பிழிந்துவிட நினைப்பவர்போல முறைத்து முறைத்துக் கோபத்தோடு அவனைப் பார்க்கின்றனர். 

உடனே அரசன் மிகுந்த கோபாவேசத்தோடு சமயற்காரனை நோக்கி, “அடேய்! என்ன சொன்னாய்? நானா பொருளை அபகரித்தவன்? இதுவரையில் நீ பேசியதைக் கேட்டு நீ மகா புத்திமானென்று நான் நினைத்தேன். கடைசியாக நீ சொன்னதி லிருந்து நீ பைத்தியக் காரனென்றே இப்போது நினைக்க வேண்டி யிருக்கிறது. யாரடா சேவகர்கள்? இந்தத் துடுக்கனை முதலில் வெளியில் கொண்டுபோய் விடுங்கள்” என்றார். உடனே நாலா பக்கங்களிலிருந்து சேவகர்கள் அம்புகள் போல அவன்மீது பாய்ந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டனர். 

அவன் ஓங்கிய குரலில் பேசத்தொடங்கி, “மகாராஜனே! நான் வெளியில் போய்விடுகிறேன். ஆனால், ஜனங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தஸ்தாவேஜாக மாறித் தங்கள் பெட்டியில் இருக்கிறது என்று மெய்ப்பிக்கவில்லை. தங்களுக்கு தைரியமிருந்தால் பெட்டியைத் திறந்து காட்டுங்கள்” என்று கூறினான். அதைக் கேட்ட அரசன் தாங்க வொண்ணாத பதைப்பும் ஆவேசமும் கொண்டவனாய், அவனைச் சிறிது நேரம் நிறுத்தும் படி கூறிவிட்டுத் தமது சிம்மாசனத்தின் அடியில் வைக்கப் பட்டிருந்த கைப் பெட்டியை எடுத்து எல்லா ஜனங்களுக்கும் எதிரில் காட்டியபடி திறந்து மூடியை விலக்கினான். அதற்கு தன்னால் வைக்கப்படாத பல புதிய தஸ்தாவேஜிகள் இருந்ததைக் கண்ட அரசன் ‘ஆ! என்ன ஆச்சரியம்!” என்று துள்ளிக் குதித்து, அவைகளை எடுத்துப் படித்துப் பார்த்தான். அதற்குள் ஒன்பது பத்திரங்கள் இருந்தன. ஒவ்வொரு வருஷத்திலும், மேலக் கோட்டை வாசல் ரெவினியூ தாசில்தாரால் சேர்த்தனுப்பப்பட்ட மிகுதிப் பணத்தை அரசனிடத்திலிருந்து வட்டிக் கடனுக்கு வாங்கிக் கொண்டிருப்பதாக அந்த நகரத்திலுள்ள ஒன்பது பெரிய மனிதர்கள் தனித் தனியாக எழுதிக் கொடுத்து பத்திரங்கள் பெட்டியில் இருக்கவே, அதை உணர்ந்த அரசன் ஸ்தம்பித்து ஊமை போலாய் அப்படியே மயங்கித் தமது சிம்மாதனத்தில் சாய்ந்து விட்டான். அதுபோலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வியப்பே வடிவமாக மாறிக் கற்சிலைகள்போல அப்படியப்படியே நின்று விட்டனர். சிறிது நேரத்தில் தெளிவடைந்த அரசன் அந்த ஒன்பது பத்திரங்களிலும் குறிக்கப்பட்டிருந்த பெரிய மனிதர்கள் அங்கே இருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்கள் இல்லை என்று உணர்ந்து, உடனே அவர்களது மாளிகைகளுக்கு ஆள்களை அனுப்பி அவர்களை வரவழைத்து விசாரிக்க, அவர்கள் தாங்கள் கடன் வாங்கிக்கொண்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர். யார் மூலமாய் அந்தக் கடன் வாங்கப்பட்டதென்ற கேள்விக்கு, அவர்கள், திவானுடைய சேவகர்கள் யாரோ சிலர் வந்து, அரசனிடம் வட்டிக்குக் கொடுக்கக்கூடிய பணம் இருப்ப தாகவும், அவர்களுக்குத் தேவையானால் தாங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதாகவும், அவர்கள் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு அதைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறிய தாகவும், அது போலவே தாங்கள் பத்திரம் எழுதி சேவகர்களிடம் கொடுத்துவிட்டுப் பணம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினர். அவ்வாறு பணம் கொடுத்துப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்ட சேவகர்கள் இன்னின்னார் என்ற அடையாளம் தங்களுக்கு அவ் வளவாகத் தெரியாதென்றும் அவர்கள் கூறினர். அந்த மகா அற்புதமும் ஆச்சரியகரமுமான வரலாற்றைக் கேட்ட அரசனும், உத்தியோகஸ்தர்கள், ஜனங்களும் முற்றிலும் திக்பிரமை கொண்டு ஒரே குழப்பமும், வியப்பும் உருகொண்டது போல நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அரசன் தமக்கெதிரில் இருந்த சேவகர்களைப் பார்த்து, ”அடேய்! திவானை விட்டு விடுங்கள்! எனக்குத் தெரியாமலே, நான் பணத்தை வட்டிக்குக் கொடுத்ததாக தஸ்தாவேஜிகள் எழுதப்பட்டு, அவைகள் என்னுடைய கைப்பெட்டிக்குள் வந்திருப்பது சாத்தியப்பட்டபோது, திவானுடைய கையெழுத்துடன் தாக்கீதுகள் தயாராவது ஒரு பெரிய காரியமல்ல” என்றார். உடனே சேவகர்கள் திவானை விட்டு விட்டார்கள். 

அதே காலத்தில் அரசன் எழுந்து தனது ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி விரைவாக நமது சமயற்காரனண்டை போய் மிகுந்த மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்துத் தனது கையால் அவரது கையைப் பிடித்து “ஐயா! உங்களை நான் இது வரையில் நிற்கவைத்துப் பேசியதைப்பற்றி நீங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். உங்களை நான் சாதாரணமான மனிதரென்று நினைத்தது தவறு. நீங்கள் அதிமாநுஷ சக்தியும், அபாரமான புத்தியும், எள்ளளவும் நீதிநெறியும் நடுநிலைமையும் தவறாத உத்தம குணமும் வாய்ந்த ஒரு பெரிய மகானென்றே நினைக்கிறேன். உங்களுக்கு எங்களால் நேரிட்ட தவறை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு, எங்களுக்கு நற்புத்தி கற்பித்து, இந்த ராஜ்ஜியத்தை செம்மைப்படுத்த வேண்டுமென்று, நீங்கள் எவராலும் செய்யமுடியாத இப்பேர்ப்பட்ட மகா அற்புதமான செய்கைகளைச் செய்து காட்டியதற்கு, நானும் என் பிரஜைகளும் ஏழேழு தலை முறையிலும் நன்றி விசுவாசத்தோடு உங்களை நினைக்கக் கடமைப்பட்டவர்களாகி விட்டோம். நீங்கள் இனி நிற்கக்கூடாது. வந்து என் பக்கத்திலுள்ள, திவானுடைய ஆசனத்தில் அமரவேண்டும்” என்று கூறி மனமார்ந்த பிரேமையோடு உபசரித்து அவனை அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்த பின் தானும் தனது சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு “புண்ணிய மூர்த்தியே என் மனசில் தோன்றும் முக்கியமான ஒரு சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும். இந்த ரெவினியு தாசில்தாரால் அனுப்பப்பட்ட பணம் முழுதும் கணக்குப்படி பத்திரத்தில் இருக்கின்றனவே. நீங்கள் உங்களுடைய சொந்தச் செலவுக்கு என்ன செய்தீர்கள்? ஏதாவது பணம் எடுத்துக் கொண்டீர்களா?” என்றான். 

சமயற்காரர், “மகாராஜனே அந்தப் பணத்தை நான் என் கையாலும் தொடுவேனா? தொட்டிருந்தால் சட்டப்படி அது குற்றமாய் விடாதா? பிறருடைய பொருளை எவனொருவன் சுய நலங்கருதி அபகரிக்கிறானோ அவன் சட்டப்படி குற்றவாளியா கிறான் அல்லவா? ஆகையால், நான் என் சுய நலத்தைக் கருதவே இல்லை. நான் அன்று முதல் இந்தப் பத்துவருஷ காலமாய் இந்த திவானுடைய பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மூடும் சேவக உத்தியோகத்தை விடாமல் வகித்து ஒரு சாதாரணச் சேவகனுக்குக் கிடைக்கும் எட்டு ரூபாய் சம்பளத்தைப் பெற்று வந்திருக்கிறேன், வேண்டுமானால் எல்லோரும் என்னுடைய வீட்டுக்குப் போய்ப் பாருங்கள். என் சம்சாரமும் குழந்தைகளும் மெலிந்து பிணம் போல இருக்கிறார்கள். அவர்களுடைய உடம்பில் கந்தைகளைத் தவிர முழு வஸ்திரத்தை நீங்கள் காணமுடியாது. நானும் அவர்களும் குடிப்பது கஞ்சிதான். எங்கள் வீட்டிலிருப்பது மண் பாத்திரங்களே. எனக்குக் கிடைக்கும் எட்டு ரூபாய்க்குச் சரியான காலக்ஷேபந்தானே நாங்கள் செய்யவேண்டும்” என்றார். 

அதைக் கேட்ட மகாராஜனும், மற்ற சகலமான ஜனங்களும் நெடுமூச்செறிந்து, ‘ஆகாகா! இவரே உண்மையான உத்தம புருஷர்! இவரே உண்மையான மகான்! இவரைப் போன்ற மகா சிரேஷ்டமான சீல புருஷர்கள் ஏதோ ஒரு கற்பகாலத்தில் ஒருவர் தான் தோன்றுகிறார்கள்” என்று ஒருவருக்கொருவர் கூறி ஆர்ப் பரித்து வெகுநேரம் வரையில் வாய் மூடாது அவரைப் பலவாறு புகழ்ந்தனர். 

உடனே நமது சமயற்காரர் முறையே அரசனையும் ஜனங் களையும் பார்த்து, “மகாராஜனே! என்னை நீங்களெல்லோரும் புகழ வேண்டுமென்ற கருத்தோடு நான் இவ்விதமான தந்திரங் களைச் செய்யவில்லை. முக்கியமாக நம்முடைய சமஸ்தானத்தில் ராஜாங்க நிர்வாகம் திருந்தி செம்மைப்பட வேண்டுமென்ற கருத்துடனேயே நான் இப்படிச் செய்தது. சட்டங்களின் ஆதிக்க மொன்றே போதுமானதன்று. சாட்சியமிருக்கும் வழக்கெல்லாம் உண்மையாகிவிடாது; அது இல்லாவிடில், வழக்கு பொய்யாகி விடாது. சட்டத்தோடு நீதி என்ற முக்கியமான அம்சத்தையும் தாங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாட்சியின் மூலமாகவும், போலீசார் மூலமாகவும் வெளிப்படாத குற்றங்கள் எத்தனையோ செய்யப்படுகின்றன. அவைகளை நிறுத்துவதும் இராஜாங்கத் தாரின் தலைமையான கடமையே. முக்கியமாய்த் திருட்டு, கொள்ளை, மோசம் முதலிய குற்றங்கள் இல்லாக் கொடுமை யினாலும், ஏழ்மைத் தனத்தினாலும் செய்யப்படுகின்றன. ஆதலால், நம் தேசத்தில ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வர்த்தகமோ, அல்லது, உத்தியோகமோ வகிக்கும்படி செய்ய வேண்டுவதும் துரைத்தனத்தாரின் அடிப்படையான கடமை. அதுவுமன்றி, ஒவ்வொருவனுக்குத் தத்தம் ஜாதிக்கேற்ற சமய நூல்களும், ஆசார வொழுக்கங்களைப் போதிக்கும் நூல்களும் போதிக்கப்பட வேண்டும். மனிதர் சிறு பிராயத்திலிருந்தே சன்மார்க்க நெறிகள் போதிக்கப்பட்டு, வயது காலத்தில், கண்ணியமான ஒரு துறையில் இறங்கி ஜீவனம் செய்யும்படியான வசதிகளை இராஜாங்கத்தார் கண்டு பிடித்து எல்லா ஜனங்களும் நல் வழியில் நடக்க ஒரு முக்கியமான தூண்டு கோலாக இருக்கவேண்டும். மனிதர்கள் அவரவர்களுடைய இச்சைப்படி நடக்கவிட்டு, அவர்கள் பல வகைப்பட்ட குற்றங்களைச் செய்யத்தக்க மனப்போக்கை உண்டாக்கி, அதன் பிறகு சட்டங்களைக் கொண்டு அவர்களைத் திருத்துவதென்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் சங்கதியே அன்றி வேறல்ல. ஆகையால் நம்முடைய இராஜ்யம் இனியாவது, வஸ்துவைவிட்டு அதன் நிழலைப் பிடிக்கிற முறைகளை விலக்கி, நல்வழிப்பட்டுச் செழித்தோங்க எல்லாம் வல்ல கடவுள் அநுக்கிரகிப்பாராக” என்றார். 

உடனே மகாராஜன் எழுந்து நின்று ஜனங்களை நோக்கி, ”மகா ஜனங்களே! இந்த மகான் இப்போது நமக்குக் காட்டிக் கொடுத்த புத்தி மதியை நாம் பொன்போலப் போற்றிப் பாராட்ட வேண்டும். ஆனால் அவ்வளவு மேலான கொள்கைகளும் தத்து வங்களும் நம்முடைய தேசத்தில் நிலைத்து வேரூன்றும்படி செய்யத்தகுந்த யோக்கியதை வாய்ந்த திவான் வேறே யாருமில்லை. ஆதலால், அந்த ஸ்தானத்திற்கு இந்த நிமிஷம் முதல் இந்த மகானையே நியமித்திருக்கிறேன். நமது வேண்டுகோளை உல்லங்கனம் செய்யாமல் அதை இவர்கள் ஏற்று நமக்கு நல்வழி காட்டி அருளுமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று கூறி முடித்தான்.உடனே ஜனங்களெல்லோரும் கரகோஷம் செய்து ஆரவாரித்து அந்த வேண்டுகோளை முழுமனதோடு ஆமோதித் தனர். முதலில் நமது சமயற்காரர் சில உபசார வார்த்தைகள் கூறி மறுத்து, பிறகு பூலோகவிந்தை என்ற சமஸ்தானத்தின் திவான் வேலையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் தாம் அந்தப் பத்து வருஷகாலத்தில் செய்த தந்திரங்கள் யாவற்றையும் சவிஸ் தாரமாக எடுத்துக் கூறினார். தாம் தாசில்தார் முதலியோரை நியமித்ததுபோலவே, வேறு பல சேவகர்களையும் நியமித்து, அவர்கள் தமக்குக்கீழ் வேலை செய்யவேண்டுமென்று திவான் உத்தரவு செய்ததுபோல, உத்தரவுகள் பிறப்பித்து, அவர்களைக் கொண்டு தந்திரமாய்ப் பல காரியங்களை முடித்ததாகவும், அவர் களும் அரண்மனைச் சேவகர்களுக்குள் கலந்து கொண்டிருந்து வந்ததாகவும் கூறினார். மகாராஜன்பேரில் வாங்கப்பட்டிருந்த பத்திரங்களைக் கடைசிவரையில் தாமே வைத்திருந்ததாகவும், விஷயங்கள் வெளியானபிறகு ஒருநாள் இரவில் தாம் மகாராஜனது கொலுமண்டபத்தில் எவருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து கைப் பெட்டிக்கு மறுதிறவுகோல் போட்டுத் திறந்து தஸ்தாவேஜிகளை அதற்குள் வைத்துப் பூட்டியதாயும் கூறினார். அவரது அதியாச் சரியகரமான செயல்களைக் கேட்டு அரசனும், மற்றவர்களும் அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் வியப்பும் அடைந்து, அவரது அற்புத சாமர்த்தியத்தை மெய்ச்சிப் புகழ்ந்து அவரைப் பெரிதும் கொண்டாடினர். அதுவரையில் வேலைபார்த்த திவான் உண்மையில் யோக்கியதா பக்ஷமும், வாய்ந்தவரென்றும், அவர் நிரபராதிஎன்றும் நமது சமயற்காரரே கூறி அவரையும் தமக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு பெருத்த உத்தியோகத்தில் அமர்த் தினார். மேலக்கோட்டை வாசலிற்கருகிலிருந்த தமது கச்சேரியில் வேலை பார்த்த எல்லோருக்கும் பற்பல அபிவிர்த்தித் துறைகளில் உத்தியோகங்கள் கொடுத்தார்; அதுவுமன்றி, அந்த நகரத்தில் உத்தியோகமோ, வார்த்தகமோ, வேறு எவ்விதமான தொழிலோ இல்லாத சோம்பேறி மனிதரே இல்லாதபடி ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவித அலுவலை ஏற்படுத்தினார். அவர் ஷை பத்து வருஷகாலத்தில் தேடிக் குவித்த கோடிக்கணக்கான திரவியங்கள் முழுதையும் ஜனங்களின் பொது நன்மைக்காவே செலவிட்டு ஏராளமான குளங்கள், கிணறுகள், ரஸ்தாக்கள், நந்தவனங்கள் முதலியவற்றை உண்டாக்கினார். அந்த ஊரில் பிறக்கும் ஆண் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் பத்துவயது வரையில் தருமக் கல்வி கற்பிக்க ஏராளமான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி, அவைகளில் சமய நூல்கள், சன்மார்க்க நூல்கள் முதலியவற்றைக் கட்டாய பாடங்களாக வைத்து, ஒவ்வொருவரது குணவொழுக்கங்களையும் சீர்திருத்துவதையே உபாத்தியாயர்கள் தமது பிரதமக் கடமையாக மதிக்கும்படி உத்தரவுகள் பிறப் பித்தார்; அவ்வூரிலுள்ள பெரியவர்கள் எல்லோரும் கண்ணியமான ஒவ்வொரு துறையிலும் இறங்கித் தமது ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ளுவதற்கான எண்ணிறந்த வசதிகளைத் தேடி வைத்தார். 

இவ்வாறு நமது சமயற்கார திவான் தமக்கு மிஞ்சிய திறமை சாலியும் புத்திசாலியும் நீதிமானும் இந்த உலகத்தில் இல்லை என்று எல்லோரும் எப்போதும் ஓயாமல் புகழ்ந்து தம்மைக் கொண்டாடும்படி செய்து இன்னமும் நமது பூலோக விந்தையை ஆண்டுவருகிறார். அவருடைய ஆட்சியில் ஜனங்கள் எல்லோரும் மங்களகராமாகவும் சந்தோஷமாகவும் சுபீக்ஷகரமாகவும் இருந்து அமோகமாய் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவருடைய மனத்தில் ஒரே ஒரு சிறிய குறை இருந்துவருகிறது. ஆதியில் அவர் விநாயகரைத் தரிசித்துவிட்டுவந்த காலத்தில் வழியில் கண்டெடுத்த ரூபாயின் சொந்தக்காரர் இன்னார் என்பதை மாத்திரம் எவ்வளவு அபார சாமத்தியசாலியான அவரால் கண்டுபிடிக்க இன்னமும் இயலவில்லை. அந்த ரூபாய் வட்டியும் முதலமாக வளர்ந்து வருகிறது. அதன் சொந்தக்காரர் வந்து அதைப் பெற்றுக் கொள்ளுகிற வரையில் அதை அவர் தர்மத்திற்கு உபயோகித்து வருகிறதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள். 

நமது சமயற்கார திவான் பத்து வருஷத்திற்குமுன் ஒருநாள் இரவில், அரிசி முதலிய சாமான்களைக் கொணர்ந்து கொடுத்து தமது குடும்பத்தினரின் உயிர்களைக் காத்து இரக்ஷித்த தயாளகுண புருஷரான பாராக்காரரையும், அவரது மனைவியையும் மறந்தவரே யன்று, குசேலர் எடுத்துச்சென்ற அவலை கிருஷ்ணபகவான் ஆசையோடு வாயில் போட்டுக்கொண்டவுடனே, முன்னவருது குடும்பத்தினர் இருந்த இடத்தில் எப்படி மாடமாளிகைகளும் குபேர சம்பத்தும மாயமாகத் தோன்றினவோ, அதுபோல, நமது சமயற்காரருக்கு திவான் உத்தியகோம் கிடைத்தவுடன் அவர் தமது மாதச்சம்பளமாகிய ஐயாயிரம் ரூபாயில் அந்தப் பாராக் காரருக்கு மாதா மாதம் இரண்டாயரம் ரூபாய் நிரந்தரமாகக் கொடுக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பித்து விட்டார். அதுவு மன்றி, அவர் அந்த நகரத்திலுள்ள சகலமான ஜனங்களிடத்திலும் அந்தப் பாராக்காரருடைய மேலான குணங்கள் இருக்கும்படி தமது நன்றி விசுவாசத்தைத் தக்கபடி காட்டியதாகுமென்று நினைத்து, ஒரு குடும்பத்தில் தகப்பன் தனது குழந்தைகள் எல்லோரையும் எப்படி சன்மார்க்கத்தில் பழக்க முயன்று, எல்லோருக்கும் சமமான செல்வமும் உரிமைகளும் அளிப்பானோ, அதுபோல், அரசன் தனதும் பிரஜைகள் எல்லோரையும் நடத்தவேண்டு என்பதை அநுஷ்டானத்தில் செய்து நிரூபித்துக்காட்டினார். 

“வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி.” 

சுபம்! சுபம்!! சுபம்!!!

– 1921, திவான் லொடபடசிங் பகதூர், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷ்ர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *