வள்ளியா?…தெய்வானையா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,724 
 

“அப்பா!…மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!…ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!…”

“ நாங்க நல்லா விசாரித்து விட்டோம் அம்மா!….படித்த மனுஷன் தொழில் விஷயமா நாலு பெண்களோட பேசினா தப்பாமா?…நீயும் படிச்சவ தானே?…உனக்கு இது தெரியாதா அம்மா?…ஐஸ்வரியா தங்க மாளிகை கோவையில் நெ.1 நகைக் கடை…ஏகப்பட்ட சொத்து…அவங்க ஒரே மகனை உனக்கு பேசி முடிச்சதிலே நம்ம நெருங்கிய சொந்தத்திலேயே கூட நிறையப் பேர் பொறாமைப் படறாங்க!….அதனால வரற பேச்சு அது!….”

“ அப்பா!…என்னைப் பற்றி உங்களுக்கு நல்லாத் தெரியும்!….எனக்கு பணம், காசு, கார், பங்களா எதுவும் தேவையில்லே!…எனக்கு வரக் கூடிய புருஷன் ஒழுக்கமுள்ளவனாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை!…”

“அதைப்பற்றி நாங்க நல்லா விசாரிச்சிட்டோம்!….உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா?… ரொம்ப உத்தமமான பையன்!…”

அதன் பிறகு தான் மனோகரி கனகவேலுவுக்கு கழுத்தை நீட்டினாள். திருமணம் முடிந்த மூன்றாம் நாள். புதுமணத் தம்பதிகள் சினிமாவுக்குப் போயிருந்தார்கள்.

இடைவேளை. கணவன் கனகவேலு எழுந்து வெளியே போயிருந்தான்.

இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தவர்கள் பேச்சின் நடுவில் ஐஸ்வரியா தங்க மாளிகை என்று யாரே குறிப்பிட்டதால், அந்தப் பேச்சை கவனித்தாள் மனோகரி.

“ஐஸ்வரியா தங்கமாளிகை அதிபர் சினிமாவுக்கு வந்திருக்கிறார் கவனித்தாயா?

அவர் பக்கதில்இருப்பது வள்ளியா?…தெய்வானையா?….”

“ நான் வள்ளியோட பல தியேட்டரில் அவரை பார்த்திருக்கிறேன்….இது புதுசா இருக்கு!…சமீபத்தில் தான் அவருக்கு கல்யாணம் வேறு ஆச்சு!…இது தெய்வானையா இருக்கலாம்!….”

கனகவேலு வந்தவுடன்,.“ தாங்க முடியாத தலைவலி.வீட்டிற்குப் போகலாம்!” என்று சொல்லி விட்டு அவன் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் எழுந்து முன்னால் நடந்து கொண்டிருந்தாள் மனோகரி!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *