வீஜா போர்ட்(Ouija board)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 13,608 
 

கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு என்பதால் அவன் சொன்னதை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“எல்லாம் ஹம்பக். இவரு கூப்டதும் ஆவிங்கலாம் வந்து க்யூல நிக்குமாம்” சொல்லிவிட்டு சப்தமாகச் சிரித்தாள் ஜாஸ்மின்.

“உங்களுக்குலாம் பயமா இருக்குனு சொல்லிட்டு போ. டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்”

மனிஷ் இப்படி சொன்னதும் தான் நகுலுக்கு கோபம் வந்தது. அவன் கோபப் பட்டதற்கு அவன் ஜாஸ்மினின் காதலன் என்பதை இரண்டாவது காரணமாகதான் சொல்ல முடியும். முதல் காரணம் அவனுடைய கர்வம். அவன் தன்னை மிகவும் தைரியசாலி என்று கருதுபவன்.

“ஹேய் யாருக்கு பயம். எனக்கா?” என்று அவன் மனிஷின் சட்டையை பிடிக்காத குறையாய் கேட்டான். அவர்கள் மூவரும் கல்லூரி ஹேங்கரில் நின்று கொண்டிருந்தனர்.

“பயம் இல்லனா வா. விளையாடுவோம்…”

நகுல் ஜாஸ்மினின் முகத்தை பார்த்தான். அவள், “எனிதிங் ஃபைன் பார் மீ” என்றவாறே தோள்களைக் குலுக்கினாள்.

“சரிடா. நாங்க ரெடி. இன்னைக்கு நைட் ஓ.கே?”

“உடனேலாம் ஒண்ணும் பண்ணமுடியாது. முதல போர்ட் ரெடி பண்ணனும். நிறைய ரூல்ஸ் இருக்கு. அதுக்கு முன்ன விளையாட ஒரு நல்ல இடம் வேணும்…”

“நல்ல இடம்னா?”

“பிரச்சனை இல்லாத இடம். ஸ்டார்ட் பண்ணுனா ஆவி எப்ப வரும்னு தெரியாது. அதுவரைக்கும் யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது. நிச்சயம் எங்க வீட்ல முடியாது”

“எங்க வீட்லயும் கஷ்டம் தான். எங்க அப்பாவோட போலிஸ் மூளைக்குத் தெரியாம எதுவும் பண்ணமுடியாது” நகுல் சொல்ல,

“அப்ப ஜாஸ்மின்…” என்று மனிஷ் இழுத்தான்.

“இம்பாஸிபிள். வீ ஆர் கேதோலிக்ஸ். யூ கய்ஸ் நோ தட்”

“என்ன தான்டி பண்றது?”

“என்னடா சீரியஸ் டிஸ்க்ஷன்? என்று கேட்டவாறே சுமித் உள்ளே நுழைய மூவரின் முகமும் மலர்ந்தது.

“நெட்வர்கிங் எக்ஸாம்க்கு குரூப் ஸ்டடீஸ் பண்ணலாம்னு இருக்கோம். யார் வீடும் கம்ஃபர்டபுளா இருக்காது. அதான்…” என்று நகுல் சொல்லும்போதே நகுலின் திட்டத்தை மற்ற இருவரும் புரிந்து கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சுமித்தும் பதில் சொன்னான்.

“ஏண்டா. எங்க வீட்ல படிக்கலாமே”

“படிக்கலாமே” மூன்று பேரும் கோரஸாக சொல்லிவிட்டு தங்களுக்குள்ளேயே சிரித்துக்கொண்டனர்.

ஜாஸ்மின், நகுல், மனிஷ் சுமித் நால்வரும் பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். ஒரே பகுதியில் வசிப்பவர்கள். சுமித்தின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தனர். அவனும் அவன் பாட்டி மட்டுமே வீட்டில். வீடும் மிகப் பெரிய வீடு. ஆனால் சுமித்திற்கு ‘ஆவி’ என்ற வார்த்தையே பயம் தரக் கூடியதாக இருந்தது. அதனால் அவனிடம் உண்மையைச் சொன்னால் அவன் சம்மதிக்க மாட்டான் என்பதால் மூவரும் அவனிடம் பொய் சொல்லி சம்மதிக்க வைத்து விட்டனர். மறுநாள் இரவு அவன் வீட்டில் வைத்து வீஜா போர்ட் விளையாடுவது என்று முடிவு செய்யப் பட்டது.

மனிஷ் வீஜா போர்டை தயார் செய்தான். ஒரு பெரிய அட்டையில் A முதல் Z வரை எழுதினான். அதன் கீழே 1 முதல் ஒன்பது வரை எழுதி, பக்கத்தில் 0 என்று எழுதினான். ஆங்கில எழுத்துக்களுக்கு மேலே இடது புறத்தில் ‘ஆம்’ என்று எழுதினான், வலது புறத்தில் ‘இல்லை’ என்று எழுதினான். போர்டை முழுவதும் தயார் செய்து சுமித் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அங்கே மேல் அறையில் ஜாஸ்மினும் நகுலும் காத்திருந்தனர்.

Ouija board for story

“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” நகுல் கடிந்து கொண்டான்

“போர்ட் ரெடி பண்றது ஈஸின்னு நினைச்சியா? தமிழ்ல எழுதுறதா இங்கிலீஷ்ல எழுதுறதானு வேற டவுட். தமிழ்ல ஒரு ரெஃபரன்சும் கிடைக்கல. அதான் இங்கிலீஷ்லயே எழுதிட்டேன்.”

“இங்கிலீஷ் தெரிஞ்ச ஆவிகிட்ட பேசுவோம்” சொல்லிவிட்டு ஜாஸ்மின் வழக்கம்போல் சிரித்தாள்.

“எனக்கு இன்னும் நம்பிக்கை இல்ல. ஏதோ இவன் சொன்னானேனுதான்… டேய் ஏதாவது காமெடி பண்ணுன!” நகுல் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் மனிஷ் போர்டை தன் லேப்டாப் பேகினுள்ளிருந்து எடுத்தான். மற்ற இருவரும் போர்டை ஆர்வமாகப் பார்த்தனர். போர்டில் கடைசி வரிசையில் ‘Goodbye’ என்று எழுதியிருந்தது. அதைக் காண்பித்து ஜாஸ்மின்.

“இதென்ன?” என்றாள்.

“குட்பை சொன்னாதான் ஆவிப் போகும்”

“இல்லனா இவர் கூட குடும்பம் நடத்தும்.” நகுல் சொல்ல ஜாஸ்மின் மீண்டும் சிரித்தாள்.

“எப்பப் பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இரு.

“சரி ஹீரோகிட்ட சொல்லிட்டீங்களா?”

ஜாஸ்மின், “இன்னும் தெரியாது. அவங்க பாட்டிக்கு டேப்ளட்ஸ் கொடுக்க போயிருக்கான். வந்ததும் நீயே சொல்லு”

அவர்கள் வீஜா போர்டை ஆராய்ந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் சுமித் அங்கே வந்தான். அவனுக்கு வீஜா போர்டை பார்த்ததும் விசித்திரமாக இருந்தது. அவனிடம் அவர்கள் தங்கள் திட்டத்தை விவரித்தனர். அவன் உறைந்து நின்றான்.

“நீ ஒத்துக்க மாட்டேன்னுதான் சொல்லல. ஒண்ணும் ஆகாது. உனக்கு அவ்ளோ பயமா இருந்தா நீ வெளிய வெயிட் பண்ணு. நாங்க மட்டும் விளையாடுறோம்” ஜாஸ்மின் சொன்னாள்.

அவனுக்கு வெளியே தனியாக பயந்து கிடப்பதைவிட, அவர்களுடன் இருப்பது மேல் என்று பட்டது.

“வேணாம். உங்க கூடவே இருக்கேன்”

***

அது மிகப் பெரிய அறை. அதற்கு இரண்டு வழிகள் இருந்தன. இரண்டின் கதவுகளையும் நகுல் முதலில் அடைத்தான். பின் ஜன்னல்களை சாத்தினான். வடக்கு திசையில் இருந்த கண்ணாடி ஜன்னலை திரையை இழுத்து மூடினான். போர்டை தரையில் வைத்து, மெழுகுவர்த்தியைக் கொளுத்தினான் மனிஷ். ஒரு பாட்டில் ஓபனரை எடுத்து போர்டின் மேலே வைத்தான். மூன்று பேர் மட்டும் வீஜா போர்டில் கை வைப்பது, சுமித் ஆவி கொடுக்கும் குறிப்புகளை எழுதிக் கொள்வது என்று முடிவுசெய்தனர். மனிஷ் பேசினான்.

“சரி நல்லா கவனிச்சுக்கோங்க. நான் சொன்னதும், எல்லாரும் இந்த ஓபனர் மேல ஆள்காட்டி ­­­­விரல வைக்கணும். நாம ஆவிய கூப்புடணும். ஆவி வந்துட்டா நம்ம கை இந்த ஓபனர ஆட்டோமடிக்கா நகர்த்தும். உண்மைய சொல்லனும்னா வந்த ஆவிதான் நம்ம விரல நகர்த்தும். நம்ம கேக்குற கேள்விக்குலாம் இந்த ஓபனர் எங்கலாம் நகருதோ அதான் பதில்.

“டேய் ஹீரோ, ஓபனர் எந்த ஆல்பபெட் மேல நகருதோ அத வேகமா நோட் பண்ணிக்கோ.”

சுமித் சரி என்று தலை அசைத்தான். ஜாஸ்மின் எழுந்து சென்று லைட்டை அணைத்தாள். அங்கே அந்த மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. வீஜா போர்டிற்கென்று நிறைய விதிமுறைகள் இருந்தன. அதை மனிஷ் தன்னிடம் இருந்த பிரிண்ட் அவுட்டில் இருந்து படித்துக் காட்டினான். அவன் சொன்னது போல் அனைவரும் செல் போனை அணைத்து விட்டிருந்தனர்.

“ரொம்ப அமைதியா இருக்கணும். தேவை இல்லாம பேசக் கூடாது. ஒவ்வொருத்தராதான் கேள்வி கேக்கணும்” மனிஷ் சொல்ல,

“சரி ஸ்டார்ட் பண்ணலாம்…” என்று நகுல் சொன்னான்.

சிறிது நேரம் போர்டையே உற்றுப் பார்த்து யோசித்த மனிஷ், “ஹான், ஏதோ குறையுதேன்னு பாத்தேன்… அட் லாஸ்ட் ஐ பௌண்ட் இட்” என்றான்.

மற்றவர்கள் என்ன என்பது போல் ஆச்சரியமாகப் பார்த்தனர். அவன் போர்டின் இடது பக்கத்தில் ‘ஓம்’ என்று எழுதினான். அதன் பக்கத்தில் ஒரு சிலுவையை வரைந்தான். அதன் பக்கத்தில் ஒரு பிறையை வரைந்து 786 என்று எழுதினான். வலது பக்கத்தில் ஒரு எலும்புக்கூட்டின் தலையை வரைந்தான்.

“என்னடா இது?” சுமித் பதற்றத்துடன் வினவினான்.

“வர ஆவி நல்ல ஆவியா கெட்ட ஆவியானு தெரிஞ்சுக்க… சில நேரத்துல கெட்ட ஆவி வரலாம். நாம கூப்புடாத ஆவிலாம் கூட வரலாம். நல்ல ஆவியா இருந்தா ஓபனர் லெப்ட் சைட் போகும். கெட்ட ஆவியா இருந்தா ஸ்கல் சைடு போகும்”

“டேய் இதெல்லாம் நீ சொல்லவே இல்ல” ஜாஸ்மினுக்கு இப்போதுதான் பயம் வர ஆரம்பித்தது.

“ஹே. ஹி இஸ் ப்ளேயிங் பிரான்க். இதுக்குலாம் போய் பயப்படுற. கிட்டோ” நகுல் கேலியாகச் சொன்னான்.

“யாரு கிட். எல்லார் உள்ளையும் பயம் இருக்கு. நாங்க வெளிய காட்டிக்கிறோம். நீ பயப்படாத மாதிரி நடிக்கிற. அவ்ளோதான்” ஜாஸ்மின் கோபமாகச் சொன்னாள்.

“கூல் யார். அது கெட்ட ஆவியா இருந்தா குட்பை சொன்னா போய்டும். அவ்ளோதான்… புடிக்கலனா எப்ப வேணும்னாலும் நிறுத்தி குட்பை சொல்லிடலாம்”

அனைவரும் ஆசுவாசமானார்கள். யாரை அழைப்பது என்று யோசித்தனர்.

சுமித், “எங்க தாத்தா” என்றான். எல்லோரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“அட ஹீரோக்கு பயம் போச்சு” மனிஷ் சொன்னான்.

“அப்டி இல்ல. எங்க தாத்தா ரொம்ப நல்லவர். அவர் வந்தாலும் பயம் இல்ல. அவரையே கூப்டுவோம்”

மனிஷ், “தாத்தா பேர்?”

“சபாபதி”

அனைவரும் தாத்தாவை வெகு நேரம் அழைத்தனர். தாத்தா வரவில்லை. மணி பதினொன்றரை ஆனது. மனிஷ் யோசித்தான். சுவற்றில் ஒரு விநாயகர் காலெண்டர் தொங்கிக் கொண்டிருந்ததை கவனித்தான்.

“அதான். சாமி படம் உள்ள இருந்தா ஆத்மா வராது” மனிஷ் சொல்லிமுடித்ததும், அந்த காலெண்டரை கழட்டி அறையின் வெளியே வைத்துவிட்டு வந்தான் நகுல். மீண்டும் தாத்தாவை அழைத்தனர். அவர் வரவில்லை.

“ஒருவேளை தாத்தா ஆத்மா சாந்தி அடஞ்சிருக்கலாம். அதான் அவர் பூமிக்கு வர விருப்பப் படல போல…” மனிஷை பேசி முடிக்க விடாமல் நகுல் கத்தினான்.

“டேய் ஏதோ தீசிஸ் பண்ண மாதிரி பேசாதா… இதெல்லாம் வெறும் டூப்னு எனக்குத் தெரியும். ஜாஸ், நான் கிளம்புறேன்” என்று நகுல் எழ எத்தனித்தான். ஜாஸ்மின் அவன் கையைப் பிடித்து அமரவைத்தாள்.

Advertisements
Report this ad

“வெயிட் பண்ணுடா. அவன் என்னதான் சொல்றான்னு கேப்போம்” ஜாஸ்மின் சொல்லிவிட்டு மனிஷைப் பார்த்தாள்.

“ஹே. ஜஸ்ட் ஒன் மோர் டைம்… ரீசன்ட்டா செத்துப் போன யாரையாவது கூப்புடுவோம். அதுவும் ஆக்சிடென்ட், சூசைட் கேசா இருந்தா அவங்க ஆத்மா பூமிலேயே சுத்திக்கிட்டு இருக்குமாம்.”

நகுல் தலையில் அடித்துக் கொண்டான். ஜாஸ்மின், “சுதா” என்றாள். நகுல் ‘யார் சுதா?’ என்பது போல் பார்த்தான்.

“CS பொண்ணுடா. ஹாஸ்டலர். நீ யூனிக்ஸ் லேப்ல பாத்திருப்ப. ரொம்ப நல்ல டைப்டா. லாஸ்ட் மந்த் ஹாஸ்டல்லயே சூசைட் பண்ணிக்கிட்டா. யாருக்கும் ரீசன் தெரில…”

சுதாவை அழைத்தனர். சுதா வரவில்லை. மீண்டும் அழைத்தனர். சுமித்தும் மனிஷும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். சுமித் எழுத்துக்களைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க, மனிஷிற்கு இடது புறத்தில் ஜாஸ்மினும் வலது புறத்தில் நகுலும் அமர்ந்திருந்தனர். சுமித் ஆவி கொடுக்கும் குறிப்புகளை எழுத போர்டை கூர்ந்து கவனித்தவாறே தயாராக இருந்தான். மற்ற மூவரும் தங்களின் விரல்களை போர்டில், ஒபனர் மீது வைத்திருந்தனர்.

மெழுகுவர்த்தி மெதுவாக அசையத் தொடங்கிற்று. அங்கே நிலவிய அமைதியைக் கலைக்கும் விதமாக யாரோ விசும்பும் குரல் கேட்டது. மெதுவாக அங்கே ஒரு அமானுஷ்யம் பரவுவதை அனைவரும் உணரத் தொடங்கினர். சுமித்தை விட நகுல் தான் அதிகம் பயந்தான். ஆனால் அவன் தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். விசும்பல் அதிகமாயிற்று. அங்கே அவர்களைத் தவிர யாரோ நடமாடும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.

ஜாஸ்மின், “நீங்க யாரு?”

ஓபனர் நிலையாக இருந்தது.

மனிஷ், “அப்டி கேட்காத” என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு,

“நீங்க சுதாவா?” என்று கேட்டான்.

அவர்களின் விரல் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதை போல் அசைந்து, அந்த ஓபனரை போர்டின் இடது பக்கமாக நகர்த்தியது. அங்கே எழுதப்பட்டிருந்த ‘ஆம்’ என்ற வார்த்தையின் மீது நின்றது. இப்போது விசும்பல் அதிகமாயிற்று. அது ஒரு பெண் குரல் போல் இல்லை என்பதை ஜாஸ்மின் உணர்ந்ததும்,

“நம்ம காலேஜ் சுதாவா?” வேகமாகக் கேட்டாள். ஓபனர் வலது புறமாக நகர்ந்து ‘இல்லை’ என்ற வார்த்தை மீது நின்றது. அவர்கள் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விசும்பல் அதிகமாக அதிகமாக அது ஒரு ஆண் குரல் என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு கடினமாக இல்லை.

“உங்க பேரு?” ஜாஸ்மின் வினவினாள்.

ஓபனர் சிறிது நேரம் அப்படியே இருந்தது.

“உங்க பேரு?” ஜாஸ்மின் மீண்டும் வினவினாள்.

ஓபனர் முதலில் ‘S’ என்ற வார்த்தையின் மீது நின்றது. பின் நகர்ந்து ‘U’ என்ற வார்த்தை மீது நின்றது. ஓபனரின் ஓட்டை வழியே ஒவ்வொரு வார்த்தையாகப் பார்த்து சுமித் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டே வந்தான்.

‘S-U-D-H-A’ என்று வந்ததும் ‘A’ மீது ஓபனர் நின்றது.

சுமித். “சுதா” என்று உச்சரித்தான். அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, ஓபனர் வேகமாக நகர்ந்து ‘K’ மீது நின்றது. பின்பு ‘A’, ‘R’ என நகர்ந்தது.

சுமித் “சுதாகர்” என்று உச்சரித்தான். அவர்கள் சுதாரிப்பதற்குள் அங்கே அழு குரல் கேட்டது. அது ஒரு சிறுவனின் குரல் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு, “உங்க வயசு?” என்று மனிஷ் வினவினான். ஓபனர் நகர்வதை வைத்து 12 வயது என்று கண்டு கொண்டனர்.

“ரொம்ப சின்னப் பையன்” ஜாஸ்மின் சொல்ல,

“அப்ப பயப்பட வேணாம்” என்று நகுல் கேலியான தொனியில் சொன்னான்.

மனிஷ், “ஆத்மாவ கிண்டல் பண்ணக் கூடாது” என்று எரிச்சலாகச் சொன்னான்.

ஜாஸ்மின், “குட் ஸ்பிரிட்டா பேட் ஸ்பிரிட்டானு கேக்கணும்னு சொன்ன இல்ல?” என்று மனிஷுக்கு நினைவு படுத்தினாள்.

அவன், “யா யா” என்றவாறே போர்டை பார்த்து, “நீங்க நல்ல ஆத்மாவா? இல்ல…” மேற்கொண்டு கேட்கமுடியாமல் நிறுத்தினான். ஓபனர் இடது புறத்தில் கடவுளின் சின்னங்களின் மீது போய் நின்றது. மறு நொடியில் வேகமாக நகர்ந்து மண்டை ஓட்டின் மீது நின்றது. பின் நடுவில் வந்து நின்றது.

“இது ரிஸ்க். குட் பை சொல்லிடலாம்” சுமித் பதறினான். ஜாஸ்மின் அதை ஆமோதித்தாள். ஆனால் அவர்களால் விரலை குட் பை நோக்கி நகர்த்த முடியவில்லை. விரல்களும் ஓபனரும் அப்படியே போர்டின் நடுவில் ஒட்டிக்கொண்டதைப் போல் அசையாமல் நின்றன.

“ஐ கான்ட் மூவ் மை ஹாண்ட்ஸ்” ஜாஸ்மின் சொல்ல, மனிஷ், “ஆமா. என் கையும் நகரல” என்று ஆமோதித்தான்.

“திஸ் இஸ் வியர்ட்” என்று கத்திய நகுல், தன் முழு பலத்தையும் திரட்டி கையை எடுக்க முயற்சி செய்தான். அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் புரிந்துக் கொண்ட மனிஷ், “குட்பை சொல்ற வரைக்கும் கைய எடுக்கக் கூடாதுடா…” என்று கத்தினான். அவன் சொல்லி முடிப்பதற்குள் நகுல் கையை எடுத்துவிட, மெழுகுவர்த்தி அணைந்தது. இருண்ட அந்த அறையில், யாரோ சப்தமாகச் சிரிக்கும் சப்தம் கேட்டது.

“லைட் ஸ்விட்ச் எங்க இருக்கு” என்றவாறே நகுல் எழுந்திருக்க முயல, மனிஷ் அவன் கையைப் பிடித்துத் தடுத்தான்.

“டேய் கைய எடுக்கக் கூடாதுன்னு சொல்லியும் நீ எடுத்த இல்ல. அதான். குட்பை சொல்ற வரைக்கும் இங்க இருந்து எழுந்திருக்கக் கூடாது” மனிஷ் சொன்னான்.

“லிசன் டு ஹிம் நகுல். ப்ளீஸ்”

ஜாஸ்மின் சொன்னதும் நகுல் எதுவும் சொல்லாமல் அங்கேயே அமர்ந்தான். மனிஷ் பக்கத்தில் இருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சி செய்தான். ஆனால் குச்சி பற்றவில்லை. பயந்துப்போன ஜாஸ்மின், மனிஷ் அருகே நகர்ந்து அமர்ந்தாள். மீண்டும் பயங்கரமான சிரிப்பு சத்தம். பதற்றத்தில் அந்தக் குரலை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மனிஷ் அடுத்த குச்சியை எடுத்து பெட்டியில் தேய்த்தான். பற்றவில்லை. மீண்டும் மீண்டும் தேய்த்தான். திடீரென்று தீக்குச்சி பற்றிக்கொள்ள, அந்த வெளிச்சத்தில் சப்தமாகச் சிரித்துக் கொண்டிருந்த சுமித்தின் முகம் பயங்கரமாகத் தெரிந்தது. பயத்தில் மனிஷ் குச்சியைக் கீழே போட, தரையில் இருந்த வீஜா போர்ட் பற்றிக் கொண்டது. அனைவரும் வேகமாக எழுந்தனர். நகுல் நெருப்பைக் காலால் மிதித்து அணைக்க முயன்றான். நெருப்பு படர்ந்து எரியாதபோதும், போர்டில் மெழுகு உருகி இருந்ததால் அவன் கால் சுட்டது. அவன் நெருப்பை மிதிப்பதை நிறுத்திவிட்டு, லைட் ஸ்விட்சை தேடினான். ஸ்விட்சை போட்டுவிட்டு, வேகமாக பாத்ரூம் நோக்கி ஓடினான். மனிஷும், ஜாஸ்மினும் செய்வதறியாது சுமித்தைப் பார்த்தவாறே திகைத்து நின்றனர். சுமித் சிரித்துக் கொண்டே இருந்தான். பக்கெட்டுடன் வந்த நகுல், தண்ணீரை எரியும் வீஜா போர்டின் மீது ஊற்றினான்.

***

சுமித்தின் அருகே பயந்து கொண்டே ஜாஸ்மின் சென்றாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. சுமித் தலையை குனிந்து அமர்ந்திருந்தான்.

ஜாஸ்மின், “சுமித். சுமித்” என்றாள். அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. மனிஷ் எதையோ புரிந்து கொண்டவனாய் அருகில் வந்து, “சுதாகர்” என்றான். சுமித் நிமிர்ந்து பார்த்து பேசினான்.

“சித்தி காசுக்காக என்ன சுருட்டு சாமிகிட்ட வித்திருச்சு. சுருட்டு சாமிய எனக்குப் புடிக்காது. வீடெல்லாம் சுருட்டு வாசனை அடிக்கும்…”

“என்னடா பேசுறான்?” ஜாஸ்மின் கலங்கினாள்.

“அவன் இப்ப சுமித் இல்ல. சும்மா இரு” மனிஷ் சொல்லிவிட்டு,

“தம்பி, தெரியாம உன்ன கூப்ட்டோம். ப்ளீஸ் போய்டு” என்று சுமித்துக்குள் இருக்கும் சுதாகரிடம் பேசினான். சுமித் அழுதான்.

“ப்ளீஸ் போய்டு”

“அப்பாவ தேடனும்”

“இவன் அப்பன நாம ஏன்டா தேடனும்?” நகுல் கோபமாக மனிஷிடம் கேட்டான்.

மனிஷ், “நீ மறுபடியும் ஆரம்பிக்காத, ப்ளீஸ்” என்று நகுலை அடக்கிவிட்டு.

“தம்பி. உன்ன தெரியாம கூப்டோம். உங்க அப்பாவ தேடுறதுலாம் கஷ்டம்,” என்றான்.

“சுருட்டு சாமி தலப் புள்ள தான் வேணும்னு கேட்டுச்சு. வீட்டுக்கு பெரிய புள்ளையா பொறந்தது என் தப்பா? என் கழுத்த வெட்டிக் கொன்னுச்சு. சித்திக்கு எல்லாம் தெரியும். சித்தி பணக்காரி ஆக பாத்துச்சு… அப்பாவ எனக்கு ரொம்ப புடிக்கும். அப்பா எங்கயோ…”

மேற்கொண்டு பேசாமல் சுமித் அழுதான்.

“அந்த சுருட்டு சாமிய போய் பழி வாங்க வேண்டியதுதான! எங்க உயிர ஏன்டா எடுக்குற?” நகுல் கோபமாகக் கத்தினான்.

சுமித் நகுலை முறைத்துப் பார்த்தான். “சுருட்டு சாமிய ஊரே அடிச்சு கொன்னுச்சு. சித்திய போலீஸ் புடிச்சிருச்சு. அப்பா எங்கேயோ போச்சு” என்றான். நகுலுக்கு அவன் அப்படி முறைப்பது என்னமோ போல் இருந்தது.

இப்போது ஜாஸ்மின் பேசினாள், “ப்ளீஸ் தம்பி போய்டு…” என்று சுமித்தைத் தொட்டாள்.

நகுல், “சுருட்டு சாமியார், குருட்டு சாமியார்னுட்டு. இது ஏதோ சைக்காலஜிகல் டிஸார்டர். டேய் சுமித்” என்றவாறே சுமித்தின் தோளைப் பிடித்துக் குலுக்கினான். அவனை சட்டை செய்யாது, அறையின் சுவரையே உற்றுப் பார்த்த சுமித்தின் உடம்பு நடுங்கிற்று. அவன் அப்படியே மயங்கி விழுந்தான்.

***

மணி விடியற்காலை இரண்டு. சுமித் அவன் பாட்டியின் அருகே உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கிவிட்டான் என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட நகுல், பக்கத்து அறைக்கு படுக்கச் சென்றான். போன் அடித்தது. ‘ஜாஸ் காலிங்’ என்று வந்தது.

“எவரிதிங் பைன் ரைட்?” ஜாஸ்மின் வினவினாள்.

“யா. தூங்கிட்டான். மனிஷ்?”

“என்ன டிராப் பண்ணிட்டு, இப்பதான் வீட்டுக்குப் போனான். யூ டேக் கேர். உன் வீட்டுக்கு போ சொன்னா நீ கேக்கல…”

“ஹே சும்மா பயப்படாத. சுமித்துக்கு துணையா இங்க யாராவது இருக்கணும் இல்ல. அவன் பாட்டிக்கிட்ட வேற எதையும் சொல்லல”

“எனக்கு என்னமோ எல்லாம் தப்பாவே படுது. வீ ஷுடின்ட் ஹாவ் டன் திஸ்”

“ஹே சும்மா இருடி. எனக்கு இதுலலாம் இன்னும் நம்பிக்கை வரல. நாளைக்கு சுமித் எழுந்ததும் வீ டேக் ஹிம் டு சைக்கியாட்ரிஸ்ட். இப்ப நீ ரிலாக்ஸ்டா தூங்கு”

நகுல் போனை துண்டித்தான். கதவை சாத்திவிட்டு, AC-யை ஆன் செய்தான். போனை பெட்டில் எறிந்துவிட்டு, கழிவறை நோக்கிச் சென்றான். அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கையில், யாரோ அறைக் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.

“சுமித்” என்று குரல் கொடுத்தான்.

பதில் வரவில்லை. வேகமாக வெளியே வந்து பார்த்தான். கதவு மூடி இருந்தது. நகுல் தன் உடம்பு வேர்ப்பதை உணர்ந்தான். AC ஓடிக்கொண்டிருந்தும் அறை சூடாக இருந்தது. அவன் அறைக் கதவையே பார்த்துக் கொண்டு நிற்க, திடீரென்று அவனுக்குப் பின்னே இருந்த பாத்ரூம் கதவு வேகமாகச் சாத்திக்கொண்டது.

“எல்லார் உள்ளையும் பயம் இருக்கு. நாங்க வெளிய காட்டிக்கிறோம். நீ பயப்படாத மாதிரி நடிக்கிற. அவ்ளோதான்” ஜாஸ்மினின் வார்த்தைகள் காரணமின்றி நினைவுக்கு வந்தன. பாத்ரூம் கதவைத் திறந்தான். உள்ளே யாரும் இல்லை.

“பயமா எனக்கா!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஆனாலும் தான் தன் வீட்டின் தலைப்பிள்ளை என்ற எண்ணம் மட்டும் வந்து வந்து போனது.

அப்படியே படுக்கையில் சாய்ந்தான். சிறிது நேரத்தில், சாய்ந்து உறங்கிப் போனான். நகுலின் மேல் யாரோ அமர்ந்து அவனை அழுத்துவது போல் இருந்தது. அவன் எழ முயற்சித்தான். முடியவில்லை. அவன் தன் கழுத்து நெறிக்கப் படுவதை உணர்ந்தான். மூச்சு விடமுடியவில்லை. அந்த அறை முழுக்க சுருட்டு நெடி பரவிக் கொண்டிருந்தது.

– May 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *