கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 15,446 
 

” டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்? ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் ..”

சித்தப்பா பெண்ணின் திருமணத்திற்காக துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சூர்யா, பிரவீனை கட்டிக்கொண்டு..” ம்ம் .. சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்பவே எத்தனை அசைன்மென்ட்..? யோசித்தவன் .. அப்பா ஊருக்கு போறேன் ல .. அங்க தாத்தா வீட்டுல நான் படிக்கிறப்ப நிறைய கலெக்ட் பண்ணி வைச்சிருக்கேன் . அதெல்லாம் பாட்டி அப்படியே பத்திரமா எடுத்து வைச்சிருகாங்க.. நான் வரும்போது எடுத்துட்டு வர்ரேன்.. சரியா..? கிளம்பினான்.

” சூர்யா .. நீ மட்டும்தான் வந்தியாப்பா .? பிரவீனை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு ..? கல்யாணம் .. காட்சி.. இந்த சாக்கிலாவது அவனை அழைச்சுட்டு வரலாம் இல்லே…?”

” அம்மா உனக்கு ரேவதி யை பத்தி தெரியாதா.. அவனை கூட விடமாட்டா .. விடு !.. நானா தேடிகிட்டது.. அதான் நான் அப்பப்ப…வந்து பார்க்கிறேன் இல்லே …நீ வீணா கவலைபடாதே ..”
அப்பா அதை கூட கேட்கவில்லை.. அமைதியாக ” வாப்பா ” என்றார்.

“எப்ப வந்திங்க ..? நல்லா இருக்கீங்களா …? காபி ட்ரே யை… நீட்டியவளை பார்த்து சூர்யா ஒரு நிமிஷம் திகைத்து பதில் சொல்லிவிட்டு காபி எடுத்துகொண்டான். மலரா இது ..? என்னமாய் மாறி விட்டிருக்கிறாள் ..? முகத்தில் பள பளப்பு .. கூடியிருந்தது .. தலை முடியை லூசாக விட்டுஇருந்தது.. அவளை அழகு தேவதையாய் காட்டியது. அவளை பார்த்து ஆறு.. வருடமிருக்கும் ..” வருபவர்களை ஓடி ஓடி உபசரித்து கொண்டிருந்தாள்.

அப்பாவிற்கு என்னமோ சொந்தம் விட்டு விடக்கூடாது என்று மலரை அவனுக்கு கட்டி வைக்கத்தான் விருப்பம் …. மலர் இவன் வீட்டிலேயே அத்தை.. அத்தை என்று சுத்தி வருவாள் . இவனுக்குத்தான் அவளை கண்டாலே பிடிக்காது ..மாநிறமாய் எண்ணெய் அப்பி கொண்டு தலை வாரி நாகரிகம் தெரியாத அவளை மனதுக்குள் கூட நினைக்க முடியவில்லை .. .. அவனுடன் வேலை பார்க்கும் ரேவதியை காதலித்து .. அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து .. சம்மதம் வாங்கி திருமணம் நடந்தது.. அப்பா அந்த கோபத்திலேயே மலருக்கு இவனை விட அதிகம் சம்பாதிக்கும் வரனை பார்த்து அடுத்த மாதத்திலேயே ஜாம் ஜாம் என்று அவளுக்கு திருமணம் செய்தார். நகரத்து வாழ்க்கை அவள் தோற்றமே மாறி இருந்தது..

அண்ணிகள் .. அக்கா.. தங்கைகள் என கும்பலை அரட்டை கச்சேரி நடந்து கொண்டு இருந்தது ..இதில் ரேவதி மட்டும் தான் மிஸ்ஸிங் .. எல்லா விசேஷதிர்க்கும் .. இவன் மட்டும் தனியாய் எதோ இழந்தது போல் இருக்கும் .. காதலிக்கும் போது கண்ணை மறைக்கும் விஷயங்கள் … திருமணதிற்கு பிறகுதான் விஸ்வரூபம் எடுக்கிறது.. ரேவதியிடம் அழகு உள்ளத்தில் இல்லை.. யாரையும் மதிப்பதில்லை.. ஈகோ பிடித்தவள் .. இவன் வீட்டு சொந்தங்களை ஓரம் கட்டி விட்டாள். ப்ரவீனுக்காக விட்டு கொடுத்து போகிறான் .

” தம்பி படிப்பு முடிச்சுட்டு நல்ல வேலைக்கு போய்ட்டான் .. இந்த வருஷம் கல்யாணம் முடிச்சிடலாம் பெரியப்பா.. நல்ல பொண்ணா பாருங்க.. ”

பொண்ணு எப்படி இருக்கணும்..? என்ன எதிர்பாற்கிரிங்க..?

” என்ன பெரிசா எதிர்பார்ப்பு… வேணும்கிறது நம்ம கிட்டேயே இருக்கிறது. பொண்ணு இப்படி இருக்கணும்னு பெரிசா ஒண்ணும் கண்டிஷன் கிடையாது .. இப்பதான் பியுட்டி பார்லர் போய் காசை கொட்டினா ஆளையே மாத்திடறாங்க.. ஆனா தங்கமாட்டம் மனசு தானாதான் வரும் .. பிறவி குணம் இயல்பா அழகா இருக்கணும் .. பொண்ணு நல்ல குணமா இருந்தா போதும்…!”

பந்தியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது .. யாரோ யாரிடமோ பேசி கொண்டிருந்தது சூர்யாவின் காதில் விழுந்து மனதை என்னமோ செய்தது.

அம்மா கல்யாண பலகாரங்களை ப்ரவீனுக்கு தரும்படி எடுத்து வைத்தாள். ” அப்போ நான் கிளம்பரேன்மா ..” என்றவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் உள்ளே சென்று அலமாரியை திறந்து பிரவீன் கேட்ட நாணயங்கள் .. செப்பு தகடுகளை எடுத்து சூட்கேசில் வைத்து கொண்டான் . ஏனோ ஒரு நிமிடம் மலர் மனதுக்குள் வந்து போனாள்.. வாழ்க்கையின் பொக்கிஷமாய் தன்னுடன் பயணிக்க வேண்டியவளை புறக்கணித்ததை நினைத்து வருத்தமாய் இருந்தது.. இப்போது சூர்யாவின் மனசில் அருக்காணியாய் இருந்த மலர் அமராவதியாய் மாறி வலிக்க செய்தாள்…!

( பாக்யா வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *