பணத்தின் மகிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 1,744 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹாஸனின் மனைவி பாத்திமா.

ஹாஸனும், பாத்திமாவும் எப்பொழுது பார்த்தாலும் பணம், பணம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார்கள். இந்த உலகத்திலுள்ள செல்வத்தை யெல்லாம் கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுத்தால்கூட அவர்களின் ஆசை தீராது. அவ்வளவு பேராசை !

ஹாஸனுக்கு அரண்மனையில் வேலை. அரண்மனை வேலை என்றால் என்ன? மந்திரி வேலையா? இல்லை; எடுபிடிவேலைதான் ஆனாலும், அவனுக்கு நல்ல சம்பளம் கிடைத்து வந்தது. எவ்வளவு சம்பளம் கிடைத்தால்தான் என்ன, அந்தப் பணத்தில் பைசா செலவிடுவதானாலும், ஹாஸனுக்கோ, பாத்திமாவுக்கோ மனம் வராது. எந்த எந்த வழிகளில் மிச்சம் பிடிக்கலாம்; எப்படி எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் பற்றியே அவர்கள் அடிக்கடி யோசனை செய்வார்கள். நல்ல சாப்பாடு சாப்பிடமாட்டார்கள்; நல்ல உடை உடுத்தமாட்டார்கள். எப்பொழுது பார்த்தாலும், பிச்சைக்காரர்கள் போலவே காட்சி அளிப்பார்கள்.

panam

இப்படியே அவர்கள் மிச்சம் பிடித்து ஒரு பானை நிறையப் பணம் சேர்த்துவிட்டார்கள். ஒரு பானை நிறையப் பணம் சேர்த்துவிட்டால் போதுமா? இன்னும் மூன்று பானைகள் வீட்டிலே

இருக்கின்றனவே! அவைகளையும் பணத்தால் நிரப்பிவிடவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள், ஹாஸனும் பாத்திமாவும். அதற்கு வழி என்ன? இருவரும் யோசனை செய்தார்கள்.

அன்று ஹாஸனுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே, “பாத்திமா! நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதுபோல் செய்கிறாயா?” என்று கேட்டான்.

பாத்திமா ‘மாட்டேன்’ என்றா சொல்லுவாள்? “என்ன யோசனை? சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று ஆவலோடு கேட்டாள்.

உடனே ஹாஸன் சொல்ல ஆரம்பித்தான்: “பாத்திமா நீ கடைத் தெருவுக்குப் போகவேண்டும். போகும்போதே தலையை விரித்துப் போட்டுக்கொள். கண்களிலே கண்ணிரை வர வழைத்துக்கொள். அங்குள்ள கடைக்காரர் ஒவ்வொருவரிடமும் சென்று, ஐயா, என்னுடைய தலைவிதி இப்படியா ஆகவேண்டும்? என் கணவனை அரசர் விசாரணை எதுவும் இல்லாமல் சிறையில் போட்டுவிட்டார். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் திண்டாடுகிறேன். நீங்கள்தான் ஏதாவது உதவி செய்யவேண்டும்’ என்று கெஞ்சிக் கேள். நிச்சயம் அவர்கள் உனக்கு ஆகாரமும் பணமும் தருவார்கள். ஆகாரத்தை இருவரும் சாப்பிடலாம். பணத்தைப் பானையில் போட்டு வைக்கலாம். எப்படி என் யோசனை?” என்று கேட்டான்.

“ஆஹா! அற்புதமான யோசனைதான்… ஆனால், அவர்கள் உங்களை நேரில் பார்த்து விட்டால்…?” “அதைப் பற்றிக் கவலைப்படாதே நான் கோழி கூவும் முன்பே அரண்மனைக்குப் போய் விடுவேன். கடைகளெல்லாம் மூடிய பிறகே வீடு திரும்புவேன். அரண்மனையில் இருப்பவர்களைத் தவிர மற்ற எவருடைய கண்களிலும் நான் தென்படமாட்டேன்.”

“சரி, அப்படியே செய்யலாம். நாளையிலிருந்தே நான் இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறேன்” என்றாள் பாத்திமா.

அப்படியே ஆரம்பித்து விட்டாள். தலைவிரி கோலத்துடனும், நீர் வழியும் கண்களுடனும் ஒவ்வொரு கடையாகச் சென்றாள். ஹாஸன் சொல்லிக் கொடுத்தது போலவே புளுகினாள். கடைக்காரர்கள் அவளுடைய புளுகை உண்மையென்றே நம்பிவிட்டார்கள்; இரக்கம் காட்டினார்கள்; உணவு, உடை, பணம் முதலியவற்றைக் கொடுத்து உதவினார்கள். அன்று வீடு திரும்பும் போது பாத்திமாவுக்கு அளவில்லாத ஆனந்தம்.

ஊர் அடங்கிய பிறகு வீடுவந்து சேர்ந்தான், ஹாஸன். பாத்திமா சம்பாதித்து வந்திருந்த உணவு, உடை, பணம் முதலியவற்றைக் கண்டதும், அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான்.

மறுநாளும் பாத்திமா கடைவீதிக்குச் சென்றாள். முதல்நாள் புளுகியது போலவே புளுகினாள். அன்றும் நல்ல வருமானம் கிடைத்தது. இப்படியே தினமும் செய்துவந்தாள்.

எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படிச் செய்யமுடியும் கடைக்காரர்கள் அலுத்துப்போய் விட்டார்கள். வெறுத்துத் துரத்த ஆரம்பித்தார்கள். “சேச்சே, போ, போ! உனக்கு வேறு வேலை இல்லை. இனிமேல் இந்தப் பக்கம் தலைகாட்டவே கூடாது. தினசரி உனக்கு அள்ளிக் கொடுக்க, இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது? உனக்கு உறவினர் ஒருவர் கூட இல்லையா? அவர்களிடத்திலே போய் உன் கஷ்டத்தைச் சொல்லேன்” என்று எரிந்து விழுந்தார்கள்.

பாத்திமாவுக்கு அன்று வரும்படி கிடையாது. தலை குனிந்தபடியே வீடு திரும்பினாள். அன்று இரவு ஹாஸனிடத்திலே நடந்ததைச் சொன்னாள்.

ஹாஸன் அவள் கூறியதைக் கவனமாகக் கேட்டான். பிறகு, “சரி, அதற்காக என்ன? அவர்கள் நம் உறவினர் வீட்டுக்குத்தானே போகச் சொன்னார்கள்? அதுவும் நல்ல யோசனைதான். நாளையிலிருந்து நீ என்ன செய்யவேண்டும், தெரியுமா? நம் உறவினர்கள் ஒவ்வொருவரையும் போய்ப் பார்த்து, நான் சிறையில் இருப்பதாகக் கூற வேண்டும். என்னை மீட்பதற்குப் பண உதவி வேண்டும் என்று கெஞ்ச வேண்டும். அவர்கள் பணம் தருவார்கள். அந்தப் பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து வீடு சேர்க்க வேண்டும். எப்படி என் யோசனை?” என்றான்.

உடனே, பாத்திமாவின் முகத்திலே மகிழ்ச்சி தாண்டவமாடியது. “சரி, நாளையே போகிறேன்.” என்றாள்.

மறு நாள் முதல், ஒவ்வொரு உறவினர் வீடாகச் சென்று ஹாஸன் சொல்லிக் கொடுத்தது போல் சொன்னாள். அவர்களும் அவளுடைய பேச்சை நம்பிவிட்டார்கள்! தங்களால் முடிந்த உதவியைச் செய்தார்கள்; உறவினர்களில் ஒரு வரைக் கூட அவள் விடவில்லை. எல்லோரிடமும் ‘வசூல்’ செய்து விட்டாள்! இப்படியே சில நாட்கள் செய்து வந்தாள். எவ்வளவு நாட்கள்தான் இப்படியும் செய்ய முடியும்? உறவினர்களுக்கு அவள் பேரில் சந்தேகம் ஏற்பட்டது. வரவர சந்தேகம் வலுத்தது. “ஹாஸன் சிறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இவள் பொய் சொல்லுகிறாள்” என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.

இந்தச் செய்தி பாத்திமாவுக்கு எப்படியோ எட்டிவிட்டது. “சரி, இனி இவர்களிடம் சென்றால் ஆபத்து! உள்ளதையும் பிடுங்கிக்கொண்டு விரட்டி விடுவார்கள்” என்று எண்ணினாள். உடனே, நேராக வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ஹாஸனிடம் நடந்தவற்றைக் கூறினாள். ஹாஸன் மிகுந்த வருத்தம் அடைந்தான். “சரி, வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்” என்று பெருமூச்சுடன் கூறினான்.

மறுநாள் இரவு அரண்மனையிலிருந்து ஹாஸன் வீட்டுக்கு வந்ததும், வாய்க்குள்ளிருந்து எதையோ எடுத்தான். பாத்திமா அதைப் பார்த்தாள்.

“ஆ இது என்ன! வைர மோதிரம்!” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“உஸ்… சப்தம் போடாதே! இதை நான் அரண்மனையிலிருந்து கிளப்பிக் கொண்டுவந்து விட்டேன்” என்று மெதுவாகக் கூறினான் ஹாஸன். “ராஜாவுக்குத் தெரிந்தால்…?”

“ஆமாம், இந்த மோதிரத்தைத்தான் அவர் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கப் போகிறாராக்கும். அவருக்கு எத்தனையோ மோதிரங்கள்! இதைப் பற்றி அவர் நினைக்கக்கூட மாட்டார்” என்று கூறிவிட்டான் ஹாஸன்.

அன்று முதல், தினசரி வீட்டுக்கு வரும் போது அரண்மனையிலிருந்து ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை அவன் எடுக்காமல் வரமாட்டான். பாத்திமாவும், “இன்று என்ன கொண்டு வரப்போகிறாரோ!” என்று ஆவலுடன் எதிர்பார்ப்பாள்.

இப்படியே இந்தத் திருட்டு வேலை பல நாள் நடந்து வந்தது. ஹாஸனும் தந்திரமாக இதைச் செய்துவந்தான்.

ஒரு நாள் ஹாஸன் தன் மனைவியிடம், “பாத்திமா, இந்த நகைகளை நாம் விற்றுப் பணமாக்கிவிடவேண்டும். ஆகையால், நான் இவைகளை ஒரு முட்டை கட்டி எடுத்துக்கொண்டு வெகு தூரத்திலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போகிறேன்” என்றான். வேண்டாம். வெளியூர் போனால் பணச்செலவு உள்ளுரிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விடுகிறேன். யாராவது கேட்டால் உறவினர் கொடுத்ததாகக் கூறிவிடலாம்” என்றாள் பாத்திமா.

”ஆமாம். நீ சொல்வது சரி” என்றான் ஹாஸன். மறுநாள் காலை நேரம். பாத்திமா தங்கக் காப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றாள். அங்கு அவள் அதை விற்கப் போகும் சமயத்தில், அரண்மனைச் சேவகன் ஒருவன் பார்த்துவிட்டான்! உடனே, அவள் அருகிலே வந்து காப்பை வாங்கிப் பார்த்தான். அதில் அரண்மனை முத்திரை இருந்தது. அந்த இடத்திலேயே பாத்திமா கைது செய்யப்பட்டாள்.

அவளை அடித்து உதைத்துக் கேட்டார்கள். அவள் உண்மையைக் கூறிவிட்டாள். அரண்மனையில் வேலைபார்க்கும் ஹாஸன்தான் இதற்குக் காரணம் என்பது தெரிந்தது. உடனே ஹாஸனையும் கைது செய்தார்கள். அவர்களுடைய வீட்டைச் சோதனை செய்தார்கள். அரண்மனைச் சாமான்கள் அங்கே ஏராளமாக இருந்தன!

உடனே, அங்கிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் சேவகர்கள் எடுத்துக்கொண்டார்கள்.ஹாஸனையும், பாத்திமாவையும் அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

இதற்குள், இந்தச் செய்தி ஊரெங்கும் பரவி விட்டது. கடைக்காரர்களும், பாத்திமாவின் உறவினர்களும் ஆத்திரப்பட்டார்கள். எல்லோரும் உடனே அரண்மனைக்கு ஓடிவந்து நடப்பதைக் கவனித்தார்கள்.

ஹாஸனும், பாத்திமாவும் செய்த குற்றத்தை அரசன் தீர விசாரித்தான். முடிவில் தீர்ப்புக் கூற ஆரம்பித்தான்.

“நீங்கள் கடைக்காரர்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்தீர்கள்.இது முதல் குற்றம். இதற் காக உங்களுக்கு அதிகமான அபராதம் விதிப்பதோடு,பல ஆண்டுகள் சிறையில் போட வேண்டும். உங்கள்

panam2

உறவினரிடம் பொய் கூறி, பண உதவி பெற்றீர்கள். இது இரண்டாவது குற்றம். இதற்காக உங்களை நன்றாக அடி அடி என்று தோல் உரியும் வரை அடிக்க வேண்டும். அரண்மனைப் பொருள்களைக் கொள்ளை அடித்தீர்கள். இது மூன்றாவது குற்றம். இதற்காக உங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!”.

இதை அரசன் கூறியதுமே ஹாஸனும், பாத்திமாவும் நடுநடுங்கினர்; கண்ணிர் விட்டனர்; அரசன் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.

அப்போது அரசன் அவர்களைப் பார்த்து, “ஆணால், ஒரே ஒரு நிபந்தனை. அதன்படி செய்தால், உங்களுக்கு இந்தத் தண்டனைகள் கொடுக்கமாட்டேன். அது என்ன நிபந்தனை தெரியுமா? நீங்கள் மோசம் செய்து சம்பாதித்த இவ்வளவு பொருள்களையும் நீங்களே எடுத்துக் கொண்டு வீடு செல்ல வேண்டும். ஆமாம், இப்போதே உங்கள் இருவர் கழுத்திலும் கட்டி விடச் சொல்கிறேன்” என்றான்.

இதை அரசன் கூறியதும் ஹாஸனுக்கும், பாத்திமாவுக்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் தங்களுடைய காதுகளை நம்பவில்லை. நிஜமாகவா!” என்று அவர்கள் மனத்திற்குள்ளே கேட்டுக்கொண்டனர்.

அப்போது, அரசன் மேலும் கூற ஆரம்பித்தான். “இந்த ராஜ்யத்தில் ஆணோ, பெண்ணோ, குழந்தையோ – யாராக இருந்தாலும் சரி; அவர்கள் இந்த இருவரிடமிருந்தும் ஒரு காசு கூட வாங்கக்கூடாது. அப்படி யாராவது வாங்கினால், அவர்களுக்கு நிச்சயம் தூக்குத் தண்டனைதான் கிடைக்கும். இது நம் உத்தரவு” என்றான்.

ஹாஸனுக்கும், பாத்திமாவுக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. “அரசர் நமக்கு எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். அத்துடன் நம்மிடமிருந்து எவரும் ஒரு காசுகூட வாங்கக் கூடாது என்றும் கடுமையான உத்தரவு போட்டிருக்கிருர். அடடா, அவர் எவ்வளவு நல்ல அரசர்! நம்முடைய பணத்திற்கு இனி எவனும் ஆசைப்படமாட்டான். கொள்ளைக்காரர்களைப் பற்றிய கவலையே இல்லை!” என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தனர்.

அன்று முதல், அவர்கள் வீட்டு வாசலில் அரண்மனைச் சேவகர்கள் காவல் புரிந்தனர். அவர்கள் போகும் இடத்திற்கெல்லாம் சேவகர்களும் கூடவே சென்றனர்.

இதனால் அவர்களை நெருங்குவதற்குக்கூடப் பொதுமக்கள் அஞ்சினர், கடையில் சென்று அவர்கள் விலைக்கு ஏதாவது சாமான் கேட்டால், கடைக்காரர்கள், “அடேயப்பா ! நாங்கள் தர மாட்டோம். உங்கள் பணத்தை வாங்கினால் எங்கள் உயிருக்கு ஆபத்து போய்வாருங்கள்” என்று கூறினர்.

இப்படியே அவர்கள் எதை வாங்கப்போனலும் கிடைப்பதில்லை. நாள் ஆக ஆக அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பணத்தைக் கொடுக்கத் தயாராயிருந்தும் சாப்பிட ஆகாரம் கிடைக்கவில்லை; உடுக்க உடை கிடைக்கவில்லை: எப்படி வாழ்க்கை நடத்துவது? சிறிது காலம் பச்சைக் காய்களையும் கிழங்குகளையும் சாப்பிட்டு வந்தார்கள். எவ்வளவு காட்கள்தான் இப்படியே காலம் தள்ள முடியும் ? பணமிருந்தும், பரதேசியைக் காட்டிலும் கேடு கெட்ட நிலையில் வாழ வேண்டியிருக்கிறதே!” என்ற உணர்ச்சி அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றியது. இப்படியே இருந்தால், சீக்கிரம் செத்துச் சுடுகாடு சேர வேண்டியதுதான் என்பதை அறிந்தார்கள்.

கடைசியாக அவர்கள் தங்களிடமிருந்த பொருள்களையெல்லாம் இரண்டு மூட்டைகளாகக் கட்டினார்கள். ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தார்கள். அரசனின் காலடியில் போய் விழுந்தார்கள்.

“அரசே! இந்தப் பொருள்களையெல்லாம் யாராவது எடுத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு இந்தப் பொருள்களில் எதுவுமே வேண்டாம். எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள். நியாயமாக உழைத்து, நியாயமாகச் சம்பாதித்து எல்லோரையும் போல் உண்டு, உடுத்து அமைதியாக வாழ்கின்றோம்” என்று கெஞ்சிக் கேட்டனர்.

அரசன் உடனே சேவகர்களை அழைத்தான். “இந்த இரண்டு மூட்டைகளையும் எடுத்துச் செல்லுங்கள். இவர்களிடம் ஏமாந்த கடைக்காரர்களிடம் ஒரு மூட்டையையும், உறவினர்களிடம் மற்றொரு மூட்டையையும் கொடுத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டான்.

பிறகு ஹாஸனையும் பாத்திமாவையும் பார்த்து, இப்பொழுதாவது பணத்தின் மகிமை தெரிகி றதா? பணம் என்பது ஒரு சின்னம்தான், அதை எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல வழிகளில் உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதற்கு மகிமை உண்டு; நமக்கும் மகிழ்ச்சி உண்டு. பெட்டியிலோ, அல்லது பையிலோ உண்ணாமல், உடுத்தாமல் சேர்த்து வைத்திருந்தால் அதற்கும் மகிமை கிடையாது; நமக்கும் மகிழ்ச்சி கிடையாது. இப்போதாவது இதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றான்.

“ஆம் அரசே, ஆம். இப்பொழுது நன்றாகத் தெரிந்து கொண்டோம்” என்றனர் ஒரே குரலில் ஹாஸனும் பாத்திமாவும்.

– அரேபியக் கதை – வேட்டை நாய், முதற்பதிப்பு: ஜனவரி 1987, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *