கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 20,523 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-16

‘ஊருக்குப் புதிது, அதனால் தான் தூக்கம் வரவில்லை; மனம் இவ்வாறு அலைகிறது’ என்று எனக்கு நானே ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, முரட்டுக் கம்பளியில் என் முகத்தை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். பயணக் களைப்பு என் உணர்வை அசத்தியது. அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டேன். 

நான் எழுந்தபோது, காலை மணி ஒன்பது ஆகியிருந்தது. ராமனாதன் சூடான காப்பி சாப்பிட்டபடி உட்கார்ந்திருந்தான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி இருந்தான். அவன் அப்படிச் சிரித்ததற்குக் காரணம் என்ன என்று எனக்குப் புரியவில்லை. ராமனாதன் விளையாட்டா, “என்ன திலீபா, ஏதாவது கனவு கண்டாயா? ‘அப்பா, அப்பா’ என்று வீரிட்டலறியபடி எழுந்திருந்தாயே! ‘புதைமன’ ஆராய்ச்சியில் நீ வல்லவனாயிற்றே. கனவுகள் தோன்றவே புதை மனம் தான் காரணம் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அந்தப் புதை மனத்தை உன்னால் அடக்கி வைக்க முடியாதா?” என்று கேட்டான். 

அதற்கு நான், “அண்ணா! அப்பா இறந்ததிலிருந்து அவரைப் பற்றி நான் நினைத்ததே கிடையாது. துக்கம் நிறைந்த அந்த வாழ்வுப் பகுதியை நான் நினைக்கவும் விரும்பவில்லை. அவர் இந்த எஸ்டேட் பங்களாவில் நுழைந்து, என்னையும் உன்னையும் பிரம்பால் அடித்து, இருவரையும் இழுத்துப் போகிறார். நான் அவருடன் வர மறுக்கிறேன். அவர் என்னைச் சவுக்கால் அடித்து, அதோ கீழே பள்ளத்தாக்கில் தெரிகிறதே ஒரு சிறு பங்களா, அதற்கு வரும்படி என்னை அழைக்கிறார். அந்தப் பங்களாவில் நுழையவே நான் மறுக்கிறேன். 

எனக்கு அங்கு நுழையவே பயமாயிருக்கிறது. அந்தப் பங்களாவின் கதவு பூராவும் மல்லிகைப் பூச்சரங்களாகத் தொங்குகிறது. எனக்கு நுழையவே பயமாயிருக்கிறது. நான் பிடிவாதம் செய்வதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார். நான் வலி பொறுக்க முடியாமல் தவிக்கிறேன். உடனே அவரது கையில் இருந்த சவுக்கைப் பிடுங்கி, நான் அவரை அடிக்க ஆரம்பிக்கிறேன். அவர் ஓடுகிறார். நான் துரத்துகிறேன். முடிவில் அவர் அரச மரத்தடியில் நிற்கிறார். என்ன ஆச்சரியம்! அது திருச்சி காவிரிக்கரை தில்லைநாயகம் படித்துறையை அடுத்த அரசமரமாகத் தெரிகிறது!” என்றேன். 

ராமனாதன் உடனே ஆச்சரியத்தோடு, ”என்ன? தில்லைநாயகம் படித்துறை அரச மரமா? அந்த அரச மரத்துக்கடுத்து இருக்கும் சுடுகாட்டுப் படித்துறையில்தான், நான் அப்பாவின் அஸ்தியைக் கரைத்தேன். அவருக்குச் செய்யவேண்டிய பத்து நாள் சடங்குகளையும் அங்கு தான் செய்தேன். உனக்கு எப்படி அந்த அரசமரம் இருப்பது தெரியும்? நீதான் திருச்சிக்கே புதியவனாயிற்றே! அப்பாவுக்கு இறுதிச் சடங்குகள் திருச்சியில் செய்யும்போது கூட, நீ திருச்சியில் இல்லையே!” என்றான். 

சித்ரா பௌர்ணமியன்று முன்பு யதேச்சையாக அங்கு சென்றது, அங்கு எனக்கு நிகழ்ந்த அனுபவம், பிறகு வீடு வந்ததும் சீதாவிடம் நான் நடந்து கொண்ட விதம் – எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால் எல்லாவற்றையும் கூற மனம் வரவில்லை. ”அண்ணா! ஒருநாள் இரவு நான் உலாவப் போகும்போது, அது சுடுகாட்டுப் பகுதி என்று தெரியாமல் அந்த அரசமரத்தடிவரை சென்றேன். கனவில், அப்பா போய் அதே அரச மரத்தடியில் நின்றதும் அடையாளம் கண்டுகொண்டேன். ஊட்டிப் பங்களாவில் என்னைச் சவுக்கால் அடிக்கத் தொடங்கியவர், திருச்சிக் காவேரிக் கரைக்கு இரண்டு ஓட்டத்தில் ஓடுவது விசித்திரமாக இல்லை? கனவுக் காட்சிகளுக்கு, இடம் காலம். என்ற கட்டுப்பாடே இல்லை”, என்று சொன்னேன். 

நான் சொல்வதை ராமனாதன் கவனித்ததாகவே தெரியவில்லை. சிந்தனையில் ஆழ்ந்தபடி இருந்தான். திடீரென்று, “திலீபா! நீ கண்ட அந்தப் பள்ளத்தாக்குப் பங்களாவில் உள்ள கதவில், மல்லிகைப் பூ சரம் சரமாகத் தொங்கிற்று என்றா சொன்னாய்?” என்று கேட்டான். 

“ஆமாம். கனவுக் காட்சியில் தோன்றுவதற்கு ஓர் அர்த்தம் இருக்க முடியுமா அண்ணா? ஒரு வேளை நான் தூங்கப் போகுமுன், மல்லிகைப் பூவை நினைத்துத் தூங்கியிருக்கலாம். மல்லிகைப் பூவை யாராவது கதவு முன்பு சரம் சரமாகத் தொங்க விடுவார்களா?” என்றேன். 

ராமனாதன் ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. “இல்லை திலீபா. நீ இந்த ஊருக்கு முற்றிலும் புதியவன். நேற்று இரவுதான் வந்திருக்கிறாய். அந்த வீட்டு வாசலைக் கூட நீ பார்த்திருக்க முடியாது. அப்படியிருக்கும் போது நீ கண்ட கனவு ஓரளவு பொருத்தமாக இருக்கிறதே! அதுதான் எனக்குத் திகைப்பூட்டுகிறது”, என்றான். 

“என்ன பொருத்தம் அண்ணா?” என்று கேட்டேன். 

“அந்தப் பள்ளத்தாக்கு வீட்டுக்கு என்ன பெயர் தெரியுமா? ‘மல்லிகைத் தோட்டம்’ முப்பது வருஷத்துக்கு முன்னால் அந்த வீட்டைக் கட்டியவள், கோயம்புத்தூர் நாயுடு வகுப்பைச் சேர்ந்த ஒரு மாது. அவள் பெயரும் மல்லிகையம்மா! ‘மல்லிகையம்மாள் வீடு’ என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்”, என்றான் ராமனாதன். 

இந்தச் செய்தி எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே நான் ராமனாதனிடம், “இப்போது யார் அந்த வீட்டில் குடியிருக்கிறார்கள்?” என்று கேட்டேன். 

ராமனாதன், “இப்போது அந்த வீட்டில் குடியிருப்பவருக்கும் மல்லிகையம்மாளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. இவர் மூன்று வருஷத்துக்கு முன்னாலேதான் ‘ரிடையர்’ ஆகிவந்த ஒரு மேஜர். பெயர் மாயநாதன். பர்மாவிலே வேலை பார்த்தவர். இந்த வீடு யாருமே வாங்காமல் விலை போகாமல் இருந்தது. இந்த மேஜர் அந்த வீட்டை மிக மலிவான விலைக்கு வாங்கி விட்டார்” என்று கூறினான். 

நான், “மேஜரைத் தவிர அந்த வீட்டில் வேறு யாருமே இல்லையா?” என்று கேட்டேன். 

“எனக்குத் தெரியாது. நான் அங்கு போனதே கிடையாது. மாமாவுக்கு அந்த மேஜரைப் பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால், அடிக்கடி அவர் கடன் கேட்க வந்துவிடுவார். பாவம், மனிதருக்குப் பென்ஷன் பணம் போதுவதில்லை. ஆனால் சுவாரஸியமான ஆள். திபேத், மலேயா, பர்மா பூராவும் சுற்றியவர். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், ஆவி ஆராய்ச்சி எல்லாம் படித்து வைத்திருக்கிறார். இந்தப் பக்கத்தில் யாருமே அவரோடு நெருங்கிப் பழகுவது இல்லை. 

ராமனாதன் சொல்லி முடிப்பதற்குள், “ஹலோ மிஸ்டர் ராமனாதன்! எப்படி இருக்கிறீர்கள்? எப்போது வந்தீர்கள்?” என்று தமிழ் மொழியை ஆங்கில உச்சரிப்போடு பேசியபடி ஒருவர் அறையினுள் நுழைந்தார். 

அவர் கையில் பைப், தலை மயிரில் லேசாக நரை இருந்தது. சூட் கோட். வெய்ஸ்ட் கோட் அணிந்திருந்தார். வெய்யிலே தெரியாத அந்தக் குளிர்ப் பிரதேசத்திலும் கூடக் கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தார். எதற்கோ தெரியவில்லை. அவர் உள்ளே நுழைந்ததும், ராமனாதனைக் கைகுலுக்கினார். என்னைப் பார்த்துவிட்டுச் சற்றுத் திகைப்போடு நின்றார். 

உடனே ராமனாதன், “இவன் தான் என் தம்பி திலீபன்,” என்று அறிமுகப்படுத்தினான். 

உடனே மேஜர் ஆச்சரியத்தோடு, “போன தரம் சீசனுக்கு வந்தபோதுகூட நீங்கள் உங்களுக்கொரு தம்பி இருப்பதாகச் சொல்லவில்லையே?” என்றார். 

“போன வருஷம் எனக்கே திலீபனைத் தெரியாது. என்னுடைய ஸ்டெப் பிரதர் இவன். பட்டணத்திலே அப்பாவோடு இருந்தான். நான் மாமாவுடனேயே இருந்து விட்டேன்”. 

அதற்கு அவர், “உங்கப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன்! ஐ ஸீ!” என்று சொல்லி விட்டு, கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு என்னைப் பார்த்தார்.

அவருடைய கண்கள், அடர்ந்த புருவத்தின் அடியில், எங்கோ பள்ளத்திலிருந்து சிறு விளக்குகள் மின்னுவது போல் மின்னின. அந்தக் கண்களிலும் உதட்டிலும் மிருகத் தன்மை தான் தெளிவாகத் தெரிந்தது. கண்கள் சதா இடமும் வலமும் சுழன்று கொண்டே இருந்தன. ஓரிடத்தில் நில்லாமல், கண்கள் அறை பூராவும் ஓடியபடியே இருந்தன. 

ராமனாதன் என்னைப் பற்றி அவரிடத்தில், “மானருவி எஸ்டேட்டின் முதலாளி ராமலிங்கத்தின் வருங்கால மருமகன்,” என்று அறிமுகப் படுத்தியவுடன், மேஜர் முகத்தில் ஏற்பட்ட புன்னகையில் உதடுகள் விரிந்து பல்வரிசைகள் எல்லாம் வெளிப்பட்டன. 

அப்போது பார்ப்பதற்கு அவருடைய வாய், இறைச்சியைக் கடித்த நிலையில் இருக்கும் வேங்கையின் வாய்போல் இருந்தது. தன் பற்களைக் காட்டியபடி எழுந்து என்னிடத்தில், “கங்கிராஜுலேஷன்ஸ் மை பாய்,” என்று கூறி, என்னைக் கை குலுக்கினார். அவர் கை என் கையில் பட்டதும் அந்த மேஜர் என்ற வேங்கையின் வாயில் சிக்கிய இறைச்சித்துண்டு ஆகிவிட்டாற் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. மேஜர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, “உங்கள் கண்கள் அழகான கண்கள் மிஸ்டர் திலீபன். பார்த்த பொருள் பரவசமாய் விடும்.” என்றார் 

அவரது இந்தத் திடீர்ப் புகழ்ச்சி எனக்கு வேதனையைத் தந்தது. ராமனாதனுக்கும் என்னை விட அதிக வேதனைதான் கொடுத்தது என்று அவன் முகமே காட்டியது. என்னதான் தியாகப் பண்புள்ளவனாக ராமனாதன் இருந்த போதிலும், என் கண்களின் வசியத்தினால்தான் சீதாவின் வாழ்வுப் பாதை ஓரளவு மாறியது என்பதை அறியாதவனல்லவே ராமனாதன். அவன் மறக்க நினைத்த விஷயத்தை, மேஜரின் வார்த்தை மறுபடி ஞாபகப்படுத்தியதை அவன் விரும்பவில்லை. ஆகையால் ராமனாதன் மேஜரிடம் சம்பந்தமில்லாத எஸ்டேட் விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினான். மேஜர் என்னையும் ராமனாதனையும் அவர் வீட்டுக்கு அன்று இரவு சாப்பாட்டுக்கு அழைத்தார். 

ராமனாதன், மானருவி எஸ்டேட்டை என் பேரில் மாற்ற வேண்டிய நிமித்தமாகப் பல வேலைகள் இருப்பதாகச் சொல்லி, அழைப்பைத் தட்டிக் கழித்துவிட்டான். மேஜரின் ஏமாற்றம், அவர் முகத்திலே பளிச்சென்று தெரிந்தது. இருந்த போதிலும், அவர் விஷயத்தை விடுவதாக இல்லை. அன்று மாலை நாலு மணிக்கு டீயும், டிபனும் சாப்பிடவாவது அவருடைய மல்லிகைத் தோட்டத்திற்கு வர வேண்டுமென்று வேண்டிக் கொண் டார். அந்த அழைப்பை எங்களால் மறுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் மல்லிகைத் தோட்டத்திற்கு வருவதாக ஒப்புக் கொண்டோம். 

எஸ்டேட் பங்களாவை அடுத்த ஓர் அவுட் ஹௌஸிலேயே எஸ்டேட் ஆபீஸ் இருந்தது. அங்கு ஆடிட்டரும் வக்கீலும் காத்திருந்தனர். நானும் ராமனாதனும் அங்கு சென்று, ராமலிங்கம் எழுதிக் கொடுத்திருந்த லெட்டரைக் காண்பித்தோம். வக்கீலும் ஆடிட்டரும் பத்துப்பதினைந்து லட்ச ரூபாய்ப் பெறுமானமுள்ள எஸ்டேட்டைத் திடீரென்று என் மீது மாற்றுவதில் உள்ள சில சிக்கல்களை எடுத்து விளக்கினார்கள். சிக்கல்களெல்லாம் வருமான வரி முதலிய அரசாங்கச் சார்புள்ள சிக்கல்களாக இருப்பதால், மாறுதலைச் சிறிது சிறிதாக ஒரு வருஷ காலத்தில் செய்வதுதான் சரியான வழி என்று சொன்னார்கள். ராமனாதனுக்கும் இது முதலில் ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. இருந்தாலும், முதியவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. 

கல்யாண ஏற்பாடுகள் விஷயமாக அன்றே ராமலிங்கம், என் தாய். சீதா மூவரும் திருச்சி வீட்டைக் காலி செய்து கொண்டு சென்னை புறப்படப் போவதால், என்னையும் ராமனாதனையும் சில நாட்கள் உதகமண்டலத்திலேயே தங்கியிருந்து விட்டுப் புறப்படும்படி உத்தரவிட்டார். உதகமண்டலத்தில் தங்குவது குறித்து, ராமனாதனுக்கு வெகு சந்தோஷம். எனக்கு அங்குள்ள காட்சிகளையெல்லாம் சுற்றிக் காட்டுவதாகப் பெருமையோடு சொன்னான். வேலை நிமித்தமாக வந்த பயணம், உல்லாசப் பயணமாக மாறியது. எஸ்டேட் தொழிலாளிகள் எல்லாம் என்னை வருங்கால முதலாளி என்ற ஹோதாவில் மிகவும் மரியாதையோடு நடத்தினர். 

எனக்கு இதைப் பார்க்கப் பெருமிதமாகத்தான் இருந்தது. எல்லாம் சீதாவின் அன்பினாலும், அந்த அன்பை வெளிப்படுத்த அவள் கொண்ட துணிவினாலும்தான் என்று நினைக்க நினைக்க, எனக்குச் சீதாவிடத்தில் அன்பும், மரியாதையும். நன்றி உணர்ச்சியும் புது வெள்ளம் போல் பொங்கி எழுந்தன. துன்பத்தையும் ஏழ்மையையும் மட்டுமே வாழ்வின் இயற்கை என்று எண்ணிய என்னை. வாழ்விக்க வந்த பெண் தெய்வம் சீதா என்ற எண்ணம் என் மனத்தின் கண் எழுந்தது. அவள டைய வாழ்வை இன்பமயமாக ஆக்க வேண்டும் என்று என் மனத்துக்குள் ஒரு திட சங்கல்பத்தை நானே ஏற்படுத்திக் கொண்டேன். 

நான் ராமநாதனிடம் கல்யாணத்தைப் பற்றியோ அல்லது சீதாவைப் பற்றியோ பேசுவது கூடக் கிடையாது. 

ஆபீஸ் மானேஜர் சித்தய்யன் என்பவர் அந்த எஸ்டேட்டில் முப்பது வருஷங்களாக வேலை செய்பவராம். எப்போதும் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பவராம். அத்தகைய சித்தய்யன், சில நாட்களாக நோயில் விழுந்தவர் போல் எந்த விஷயத்திலும் பற்றில்லாமல் காணப்பட்டார். க்ஷவரம் செய்யாத முகம், தள்ளாடும் நடை. பஞ்சடைந்த கண்களோடு அவர் ஒரு யந்திரம்போல் தன் கடமைகளைக் கவனித்து வந்தார். 

அவரிடம், “என்ன சித்தய்யன்? ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? வயசு ஐம்பதானாலும் இருபது வயசு போலத்துள்ளு நடையோடு சந்தோஷமாக இருப்பீர்கள். இப்போது ஏன் இப்படி ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான் ராமனாதான். 

அதற்குச் சித்தய்யன் சற்று நிதானித்துவிட்டு,”ஒன்றுமில்லை சார். வயதாகிவிட்டதல்லவா! அதோடு ஒரு மாதமாக ஜுரத்தில் விழுந்து இப்போதுதான் எழுந்தேன்,” என்று சொல்லிவிட்டு, உடனே அந்த அறையை விட்டுச் சென்று விட்டார்.

அத்தியாயம்-17 

சித்தய்யன் சென்ற பின்பு  ஆபீஸ் பியூன் வேலைய்யா, ராமனாதனை நெருங்கி வந்து, “உங்களுக்குத் தெரியாதா எஜமான்? சித்தய்யனுக்கு ஒரே மகள். பெயர் லட்சுமி. அவள் மீது உயிரையே வைத்திருந்தார். அவள் ஆறு மாதத்துக்கு முன்பு, யாரோ ஒரு லாரி டிரைவர் மேல் ஆசை வைத்து விட்டாள். இவர் அந்த டிரைவருக்குத் தன் பெண்ணைக் கட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார். அந்தப் பெண் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் டிரைவரோடு ஓடிப்போய்விட்டாள். எங்கே போனாள், என்ன ஆனாள் என்று இன்னமும் தெரியவில்லை. அதிலிருந்துதான் இவர் இடிந்துபோய்விட்டார். இதைப் பற்றி யாராவது பேசினால்கூட இவருக்குப் பிடிக்காதுங்க”, என்றான். 

ராமனாதன் முகம் ஆத்திரத்தால் துடித்தது. “எவ்வளவு நல்லவர்! அவருக்கு இப்படியா நேர வேண்டும்?” என்றான். 

உடனே வேலய்யா, “என்னங்க செய்றது? இந்தக் காலத்து இளவட்டங்களே இப்படித்தாங்க. எல்லாம் அந்தக் காதல் செய்யற வேலைங்க.” என்றான். 

”காதல்! காதல்! இந்த உலகத்தை விட்டே அந்தக் காதல் ஒழியவேண்டும்”, என்று சொல்லி, மேஜையை ஓங்கி அறைந்தான் ராமனாதன். அவன் மனத்தில் அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் அப்போது வெளியாகியது. 

நானும் அதே அறையில் இருக்கிறேன் என்பதை மறந்த நிலையில், ராமனாதன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். என்னைப் பார்த்ததும் அவனுக்கு வெட்கமாகிவிட்டது. அங்கு நிற்கவே அவனுக்குக் கூச்சமாக இருந்ததோ என்னவோ, ராமனாதன் உடனே வேலய்யாவை அழைத்துக் கொண்டு, தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றுவிட்டான். எனக்கு ராமனாதன் மீது கொஞ்சம் கூட வருத்தம் ஏற்படவில்லை. ஏன்? என் நிலையும் சித்தய்யாவின் மகளைக் காதலித்த அந்த டிரைவரின் நிலையும் ஒன்றுதானே! 

அன்று மாலை நான் அந்த மேஜர் வீட்டுக்குப் போகும்போது, இரவு நினைவுகள் தலைகாட்டின. என் வாழ்வின் விதி, என்னை எதிர்கொண்டு அழைப்பதுபோல் தெரிந்தது. மிருகங்களுக்கு மனிதர்களை வாடை பிடிக்கும் சக்தி இருப்பது போல், மனிதர்களில் சிலருக்குத் தன்னுடைய எதிர்காலத்தை வாடை பிடிக்கும் சக்தி இருக்கும் போலும். அந்த வீட்டை நெருங்க நெருங்க என் இதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அந்தப் பங்களாவின் எதிர்ப்புறம் நான் கனவில் கண்ட மாதிரியே அமைந்திருந்தது. ஆனால் அந்தப் பங்களாக் கதவில் மல்லிகைப் பூவின் சரங்கள் தொங்கவில்லை. சாதாரண மலைப் பிரதேசத்துப் பங்களாபோல்தான் தோன்றியது. அதுவும் பராமரிப்புப் போதாத ஒரு பங்களா என்பதும் தெரிந்தது, சுற்றியிருந்த வெடிப்புக்களிலிருந்து. காம்பவுண்டு சுவரின் ஒரு பகுதியில், ‘மல்லிகைத் தோட்டம்’ என்ற போர்டு ஏறுமாறாகத் தொங்கியது. மல்லிகையின் மணம் வருகிறதா என்று மூச்சை இழுத்துப் பார்த்தேன். வெறும் யூகலிப்டஸ் மணத்தைத் தவிர, வேறு எந்தவித மணமும் இல்லை. நாங்கள் பங்களாவின் வராந்தாவில் நுழையுமுன்பே, மேஜர் மாயநாதன் எங்களைப் புன் முறுவலுடன் வரவேற்றார். எனக்கு, அவர் இப்படிப் பற்களை வெளிக்காட்டாமல் சிரிக்கக் கூடாதா என்று தோன்றியது. இருவரும் உள்ளே வராந்தாவை அடுத்த ஹாலில் நுழைந்தோம். மர சோபாக்கள் போடப்பட்டிருந்தன. சோபாக்கள் எல்லாம் பழைய காலத்துச் சோபாக்கள். சிறு சிறு திண்டுகள் பல நாட்கள் உறை மாற்றப்படவில்லை என்பதன் அடையாளத்தைத் தம்மீது தாங்கியபடி, சோபாக்களில் தாறுமாறாகக் கிடந்தன. 

மேஜர் அதிக மரியாதையுடன், “தயவுசெய்து உட்காருங்கள்,” என்றார். நானும்,ராமனாதனும் சோபாவில் உட்கார்ந்ததும் அந்த ஹாலில் மாட்டப்பட்டிருந்த ஒரு பெரிய உருவப்படம் என் கண்களில் பட்டது. அது சுமார் முப்பது முப்பத்தைந்து வயது மதிப்பிடத்தக்க ஒரு மாதின் படம். உடை, நகையெல்லாம் சற்றுப் பழங்காலமாகத் தெரிந்தது. நான் அந்தப் படத்தைக் கவனிப்பதை மேஜர் மாயநாதன் பார்த்ததும், அவர் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஒருவேளை அந்தப் படத்தில் இருக்கும் மாது அவர் மனைவியாக இருக்குமோ? அதை அப்படி உற்றுப் பார்த்தது தவறல்லவா என்று நினைத்து வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். 

என் மனத்தில் ஓடிய சிந்தனையைப் புரிந்து கொண்டவர் போல் மேஜர் மாயநாதன், “அது என் மனைவி அல்ல. இந்தப் பங்களாவைக் கட்டிய சொந்தக்காரி. மல்லிகையம்மா என்று பெயர். அவளுடைய வாரிசுகளிடமிருந்துதான் நான் இந்தப் பங்களாவை வாங்கினேன்” என்றார். 

அப்போதுதான் அந்தப் படத்திலுள்ள அம்மாள் தலை நிறைய மல்லிகைப்பூ அணிந்திருப்பதும், கழுத்தில் மல்லிகை மாலை அணிந்திருப்பதும் என் கவனத்துக்கு வந்தன.”அப்படியா?” என்று சொல்லி விட்டு, மறுமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். 

இம்முறை அந்தப் படத்தைப் பார்த்தபோது. அப்படம் அப்படியே உயிர்க்களையோடு என்னை உற்று நோக்குவதுபோல் தோன்றியது. உடனே சட்டென்று என் கண்களை விடுவித்துக் கொண்டேன். அந்த அறையிலுள்ள பீரோக்களைப் பார்த்தேன். அங்கு பலவித புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. புத்தகங்கள் எல்லாம். ஹிப்நாடிஸம், ‘மரணத்தின் பின் ஆவியின் நிலை’, ‘ஆவி உலகம்’, ‘ஆப்பிரிக்கர்கள் சூனியக் கலை’, ‘திபேத்திய மந்திரவாதி’, ‘காபாலிகர்களின் ரத்தச் சடங்குகள்’ – இம்மாதிரி பயங்கரத் தலைப்புக்கொண்ட புத்தகங்களாய் இருந்தன. நான் பேசுவதற்கு முன்பே ராமனாதன் மேஜரிடம், ‘‘என் சகோதரன் உங்களைப் போலத்தான். இந்தப் ‘புதைமனம்’, ‘ஹிப்நாடிஸம்’ போன்ற புரியாத தத்துவங்களைப் பற்றிப் படிப்பதில் ஆர்வம் உள்ளவன்,” என்று சொன்னான். 

மேஜர் மாயநாதன் இதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ”அப்படியா! ரொம்ப நல்லதாய்ப் போய்விட்டது.” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, என்னை ஒருமுறை ஊடுருவிப் பார்த்தார். 

பிறகு எழுந்து போய் பீரோவைத் திறந்து சில புத்தகங்களை எடுத்து வந்து என் முன்னால் வைத்தார். புத்தகங்களைப் பார்த்ததும் எனக்கு அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இத்தனை வருஷங்களாக இந்த விஷயத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்று துடியாகத் துடித்துக் கொண்டிருந்தவன் அல்லவா? எனக்கு மேஜர் மீதிருந்த வெறுப்புக்கூட மறைந்தது. மதிப்புக் கூட ஏற்பட்டது. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தபடி இருந்தேன். 

மேஜர் மாயநாதன்,”எனக்கு வெறும் புத்தகப்படிப்பு மட்டும் இல்லை. படித்தவற்றை எல்லாம் ஓரளவு பழக்கத்திலும் கொண்டு வந்து வெற்றி கண்டிருக்கிறேன். ஹிப்நாடிஸம் பொறுத்தவரையில் நான் மட்டுமல்ல, என் மகள் ஆனந்தியும் கைதேர்ந்தவள்”, என்று கூறி நிறுத்தினார். 

ஆனந்தி என்று அவர் சொன்னதும் எனக்கு இரவில் வீணையின் நாதத்தோடு, ஆலாபனை செய்த பெண் அவள்தானோ என்ற எண்ணம் தோன்றியது. உடனே யோசிக்காமல் ஒரு கேள்வியைக் கேட்டேன் “நேற்று இரவு இரண்டு மணி சுமாருக்கு மாயாமளாவ கௌள ராகத்தில் பாடியது உங்கள் மகள்தானா?” 

உடனே மேஜரின் முகம் மாறியது. அவர் என்னை வெறுப்போடு பார்த்தபடி, “இல்லை, இல்லை. எங்கள் வீட்டில் யாரும் பாடவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல், இந்த வீட்டில் விளக்குக் கூட எரிவது இல்லையே.” என்று பட படப்புடன் கூறினார். 

அவர் கூறியது அவ்வளவும் அப்பட்டமான பொய்யென்று நன்கு தெரிந்தது. அப்போதுதான் மேஜர் மாயநாதனிடம் இரவு நிகழ்ச்சியைப் பற்றியே பேச்செடுக்கக் கூடாது என்பதைப புரிந்துகொண்டேன். 

மேஜர் எங்கள் கவனத்தை மாற்ற உடனே எழுந்து, ”ஆனந்தி, ஆனந்தி,” என்று குரல் கொடுத்தார். பிறகு “எல்லாரும் வந்துவிட்டார்கள் அம்மா, டீயும், பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு வா,” என்றார். 

அடுத்த வினாடி, மல்லிகையம்மாள் படம் மாட்டியிருந்த இடத்துக்கு அடியில் உள்ள கதவை நோக்கி என் பார்வை சென்றது. அந்தக் கதவுக்கப்புறம், வளையல் வினால் ஏற்படும் ஒலி காதில் விழுந்தது. என் மனம் ஆவலோடு அதையே எதிர்பார்த்து நின்றது. அறையில் இதுவரை இல்லாத ஒருவித மாறுதல் ஏற்பட்டது. மல்லிகை மணம் வீசியது. நான் பார்த்துக் கொண்டிருந்த கதவை மறைத்துக் கொண்டிருந்த திரையை, வெள்ளை வெளேரென்று பிரகாசித்த கருவளையல் அணிந்த கை அன்று விலக்கியது. கையில் டீ தட்டுடன் ஒரு பெண் ஹாலுக்குள் நுழைந்தாள். அவ்வளவு வெளுப்பான முகத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. சாவின் வெளுப்பென்றே சொல்லலாம். முகத்தில் வெளுப்புக்கு நேர்மாறாக, அவள் கண்கள் கறுத்து அகலமாக இருந்தன. உதடுகள் பவளம்போல் ரத்தச் சிவப்பாக இருந்தன. டீ தட்டை ஏந்தி வந்தவள், என்னைப் பார்த்தபடி நடந்து வந்தாள். அவனை இதற்குமுன் எங்கோ சந்தித்திருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. 

பளிச்சென்று ஞாபகம் வந்தது. சித்ரா பௌர்ணமி இரவன்று, காவிரிக் கரையில், அரச மரத்தடியில், எனக்கு ஏற்பட்ட பிரமையில் நான் நதியாகப் படுத்திருந்தபோது. வானத்திலிருந்து என்னை நோக்கி இறங்கிவந்த பெண் தோற்றத்தின் சாயல் இந்தப் பெண்ணின் உடலில் தெரிந்தது. ஆம். அதே மஞ்சள் புடவை, அதே சிவப்பு ரவிக்கை. சித்ரா பௌர்ணமி இரவன்று அத்தோற்றத்தின் முகத்தை மேகம் மறைத்திருந்தது. அதனால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. இன்று முகம் தெளிவாகத் தெரிந்தது. அப்பப்பா! அவள் என்னைப் பார்த்த பார்வை! என்னால் அந்தக் கண்களை எதிர்நோக்க முடியவில்லை. 

தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். அதே சமயத்தில் வெற்றிப் புன்னகையோடு மேஜர் மாயநாதன் என்னை நோக்குவதையும் அறிந்தேன். 

மேஜர் மாயநாதன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர் கண் பார்வைக்கு, ஒரு மனிதனின் நினைவுகளை – ஆசாபாசங்களை – களைந்து ஊடுருவிப் பார்க்கும் சக்தி இருந்தது. அவர் பார்வையின் வேகத்தில், ‘நீ யாரென்று எனக்குத் தெரியும். உன் புதை மனத்தின் தோற்றமும் எனக்குத் தெரியும். உன் எதிர்காலமும் எனக்குத் தெரியும்,’ என்று கூறுவது போல் இருந்தது. 

நான் தலை குனிந்து கொண் டேன். ஆனந்தி பிஸ்கட்டுகளை ஒவ்வொரு தட்டிலும் வைத்து. முதலில் அண்ணா ராமநாதனிடம் தட்டை நீட்டினாள். பிறகு பிஸ்கட் தட்டுடன் என்னை நோக்கி வந்தாள். நான் அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். ஆனால் அவள் பார்வை தரையிலே படிந்திருந்தது. பிஸ்கட் தட்டை எனக்கு நீட்டினாள். 

அப்போதுதான் அவள் கண்கள் திறந்து என்னை நோக்கின. நான் அப்படியே அவளை விறைத்துப் பார்த்தபடி தட்டை வாங்கினேன். அப்போது என்னுடைய கை விரல்கள் அவள் விரல்களை ஸ்பரிசித்தன. ஆனந்தியின் உதடுகள் ஒரு பக்கமாக விலகி, கோணலான புன்முறுவல் செய்தன. உதடுகள் விலகி, அவளுடைய கூர்மையான கடைவாய்ப் பற்களை வெளிப்படுத்தின. வெள்ளி போல் பளீர் என்று மின்னிய பற்கள் தான்! மிகவும் அழகான பற்கள்தான்! ஆனால் மனிதப் பற்கள் அல்ல அவை என்ற எண்ணமும் என் மனத்தில் உடனே எழுந்தது. அந்தக் கடைவாய்ப் பல்லின் கூர்மை, இறைச்சியைக் கிழிக்க உதவும் ஓநாய்ப் பற்கள் போல் தான் எனக்குத் தெரிந்தன! 

‘என்ன பைத்தியக்கார எண்ணம் திலீபா! நல்ல நாகரிகமான பெண் ஆனந்தி. அவள் புன்முறுவலும் பற்களும் உனக்கு ஓநாயை ஏன் ஞாபகப்படுத்துகின்றன?’ என்று என்னையே நான் கண்டித்துக் கொண்டேன்: அவள் சிரித்தபடி தட்டை என்னிடம் கொடுத்துவிட்டு நடந்தாள். அவள் நடையானது எனக்கு நடையாகத் தெரியவில்லை. அவள் பாதங்களைத் தரையிலே ஊன்றாமலே தென்றல் தவழ்வதுபோல் நகர்ந்தாள். அவளது மெல்லிய இடை. அவளுடைய நடைக்கு மேலும் அழகு கொடுத்தது. 

அந்த மஞ்சள் நிற நைலக்ஸ் – புடவை அவள் மேல் பட்டும் படாமலும் அமைந்து ஆனந்தியின் இயற்கை அழகைப் பன்மடங்கு.. அதிகப்படுத்திற்று. அப்போது என் மனம் என்னையும் அறியாமலே ஆனந்தியையும், சீதாவையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியது. சீதாவின் அழகு இயற்கையின் வளம் நிறைந்தது. சீதாவுக்கு ஆனந்திபோல் அழகாக உடை அணியத் தெரியாது. ஏன், தன்னுடைய அழகைப் பற்றிய நினைப்பே சீதாவுக்குக் கிடையாதே! ஆனால் இந்த ஆனந்தி சிரிக்கும் விதம், நடக்கும் ஓயில், அவள் திட்டமிட்டுத் தன்னுடைய அழகையே ஓர் அஸ்திரமாகப் பிரயோகிக்கத் தயங்கமாட்டாள், என்று தெரிவித்தன. நான் மணக்கப் போகும் சீதாவையும், யாரோ ஒரு பெண் ஆனந்தியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே சீதாவுக்குத் துரோகம் என்று நினைத்து – வலுக்கட்டாயப் படுத்தி, என் சிந்தனையைத் திருப்பினேன். அந்தச் சமயத்தில், மேஜர் மாயநாதன் ஆனந்தியைப் பற்றிப் பேசியபடி இருந்தார். “என்ன மிஸ்டர். ராமநாதன், என் மகள் எம்.ஏ. பாஸ் செய்திருக்கிறாள். சங்கீதம். டென்னிஸ், ஹிப்நாடிஸம், சமையல் எல்லாம் தெரியும். அவளுக்குத் தெரியாத. கலையே இல்லை என்று சொல்லலாம்”, என்று கூறினார்:

ஆனந்தியோ.மேஜர் தன்னைப் புகழ்ந்ததை விரும்பாதவள் போல், “என்னைச் சும்மாப் புகழாதீங்கப்பா. எவ்வளவுதான் ஒரு பெண்ணுக்குத் தெரிந்திருந்தாலும், அவளுக்கு முக்கியமாத் தெரிய வேண்டியது அடக்கம் தானப்பா” என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தாள். என்னிடம் அவள், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே சொன்ன வார்த்தைகள் போல் அவை அமைந்தன. 

உடனே மேஜர். “ஆனந்தி! மிஸ்டர் திலீபன்தான், இந்த மானருவி எஸ்டேட்டின் வருங்கால முதலாளி. அவர் ராமலிங்கத்தின் மகள் சீதாவை மணக்கப் போகிறார்.” என்று கூறிவிட்டு; ராமனாதனைப் பார்த்து. ”எப்போது ராமனாதன் கல்யாணம்?” என்று கேட்டார். 

ராமனாதன் உடனே, “கூடிய சீக்கிரமே சென்னையில் திருமணம் நடக்கப் போகிறது,” என்றான். 

அதற்கு ஆனந்தி, “அப்படியா! சந்தோஷம்” என்று சொல்லி விட்டு என்னை ஒருவிதமாகப் பார்த்தாள். 

மேஜர் மாயநாதன் மேலும் தொடர்ந்து, “திலீபன் மனோதத்துவ ஆராய்ச்சியில் உள்ளவர். அவர் கண்களைப் பார்த்த உடனே எனக்குத் தெரிந்துவிட்டது. அவர் ஒரு பிறவி ஹிப்நாடிஸ்ட்!” என்று கூறினார். 

அத்தியாயம்-18

பிறகு என்னைப் பார்த்து, “மிஸ்டர் திலீபன், மனோவசிய நிபுணர்களும் கவிகளைப் போல்தான். பிறவியிலேயே அந்தக் காந்த சக்தி இருந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் ஒருவன் ஓரளவுக்குத்தான் வெற்றியடைய முடியும்”, என்றார் 

இப்படியே பேச்சு தொடர்ந்து ஹிப்நாடிஸத்திலிருந்து, ரஷ்ய சந்நியாசி ரஸ்புடீன் வரையில் சென்றது. அப்போது ராமனாதன், ”மேஜர்! என்னதான் நீங்கள் கூறினாலும் எனக்கு ரஸ்புடீன் விஷயமெல்லாம் பாதிக் கட்டுக்கதை என்று தான் தோன்றுகிறது. ஒன்றைப் பத்தாகப் புனைகிறார்கள், இந்தச் சரித்திராசிரியர்கள்!” என்றான். 

உடனே ஆனந்தி ஆத்திரத்துடன், “நாம் நம்பாத விஷயத்தை. நமக்குப் புரியாத விஷயத்தை, நாம் பொய் என்றோ, புனைந்துரை என்றோ தள்ளிவிட முயல்கிறோம். கிராமத்திலே வாழ்ந்த அந்தச் சாதாரண சந்நியாசி ரஸ்புடீன், அதிகப் படிப்பில்லாதவன், சில வருஷங்கள் ரஷ்ய சாம்ராஜ்யத்தையே ஆட்டி வைத்தான். ரஷ்யாவின் ஜார் மன்னன் குழந்தையின் தீராத நோயைப் போக்கினான். ஜார் மன்னனின் ராணியையே தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தான். மாஸ்கோ நகரமே அவனை நிமிர்ந்து பார்க்க நடுங்கிற்று; இதெல்லாம் பொய் யென்று சொல்ல முடியுமா? மனோதத்துவத்தையோ, ஹிப்நாடிஸத்தையோ முறையாக உணராத நிலையிலேயே ரஸ்புடீன், இயற்கையினால் அளிக்கப்பட்ட வசிய சக்தியால் இவ்வளவு சாதிக்க முடிந்ததென்றால். மனோசக்தியின் பலத்தை உணர்ந்த சித்தர்களால் எவ்வளவு சாதிக்க முடியும்”, என்று கேட்டாள். 

உடனே நான், “இந்த ஹிப்நாடிஸத்தைப் பற்றிப் புத்தகங்கள் பல வருகின்றன. ஆனால் நடைமுறையில், யாராவது இதை நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டேன். நான் இந்தக் கேள்வியை கேட்டதும் அறையில் அமைதி நிலவியது. ஆனந்தி, மேஜர் மாயநாதனை ஒருமுறை பார்த்தாள். மேஜரும் அவளைப் பார்த்தார்.
இருவரும் வார்த்தைகள் உபயோகியாத நயன பாஷையிலேயே ஏதோ பேசிக் கொண்டார்கள் என்பது தெரிந்தது. 

பிறகு மேஜர், ”உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், மனோ சக்தியின் மகிமையை இங்கேயே, இப்போதே நான் நிரூபிக்க முடியும்,” என்று கூறினார். 

என் மனத்தில் இதைப் பற்றிய ஒரு முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. 

உடனே நான், “சரி மிஸ்டர் மேஜர். நிரூபித்துக் காட்டுங்கள்,” என்றேன். ராமனாதன் குறுக்கிட்டு, “திலீபா! நாம் இங்கு டீ சாப்பிட வந்தோமா, இல்லை, மேஜரைப் பரிசோதிக்க வந்தோமா? டீ சாப்பிட்டு விட்டுப் போவோம்,” என்றான். 

அப்போது எனக்கு, ஒருவேளை மேஜரிடம் ‘நிரூபித்துக் காட்டுங்கள்.’ என்று சொல்லி, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டோமா என்ற எண்ணம் எழுந்தது. “மேஜர் சார்! என்னை மன்னித்துவிடுங்கள் புதிய விஷயங்களைப் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தில் படபடப்பாகப் பேசிவிட்டேன்”, என்று அவரிடம் கூறினேன். 

அதற்கு அவர், ”அதில் தவறு ஒன்றுமில்லை. விஷயங்களைப் பற்றி ஆராய்வது போற்றப்பட வேண்டிய விஷயம். உங்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் முதலில் டீ சாப்பிடுங்கள். அப்புறம் நிகழ்ச்சியைத் தொடங்குவோம்,” என்றார். பிறகு மௌனமாகப் பிஸ்கட்டுகளைத் தின்று, டீயைக் குடித்தோம். 

ஆனந்தி எழுந்து உட்புறத்துக்குச் சென்றுவிட்டாள். நாங்கள் தேயிலை பானம் அருந்தி முடிக்கவும், சூரியன் மலைவாயில் மறையவும் சரியாக இருந்தது. அறை முழுவதும் மங்கலான வெளிச்சம் பரவியது. உடனே மேஜர் எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். விளக்கின் ஒளி பிரகாசமாக இல்லை. விடி விளக்கு போன்ற மங்கலான விளக்கத்தைத்தான் போட்டார். அந்த அறையில் இருந்த பிரகாசமான மற்ற விளக்குகளை அவர் போடவில்லை. 

அவர் போட்ட விளக்கின் ஒளி, அறை முழுவதையும் ரத்தச் சிவப்பாகக் காட்டியது. மற்றப் பிரகாசமான விளக்குகளை எரிக்காமல், இந்தப் பயங்கரமான, மங்கலான, சிவப்பு விளக்கை மட்டும் ஏன் ஏற்றினார் என்று நான் சிந்தித்தேன். என் சிந்தனையைப் புரிந்து கொண்டவர் போல் என்னைப் பார்த்து, “என் சாதனைக்குச் சிறந்த நிறம் சிவப்பு! செவ்வொளிதான் வாழ்வுத் துடிப்பை அதிகப்படுத்தும். ஆசைகளின் நிறமே சிவப்புதான்!” என்று விளக்கிவிட்டு, மீண்டும். “மிஸ்டர் திலீபன், நாற்காலியை இப்படி நகர்த்திப் போட்டுக் கொள்ளுங்கள்”, என்றார். 

நாற்காலியை நகர்த்திப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன். என் பார்வை தற்செயலாக அந்த மல்லிகை அம்மாவின் படத்தின் மீது விழுந்தது. சிவப்பு ஒளியில் அந்தப் படம். விசேஷமான உயிர்க் களையோடு விளங்கியது. அந்தப் படத்திலுள்ள முகத்தின் கடைவாய்ப் பகுதியில் ரத்தம் வழிவது போன்ற லேசான சிவப்புக் கறை தெரிந்தது. அது என் மனத்தை என்னவோ செய்தது. 

நான் என் பார்வையை அந்தப் படத்திலிருந்து அப்புறப்படுத்தினேன். அதே நிமிஷத்தில் ஆனந்தி அறையில் நுழைந்தாள். அப்போது இருந்த மாறுப்பட்ட ஒளியில், ஆனந்தியின் உருவத்தின் அழகில், புரியாத ஒரு பயங்கரம் தோன்றியது. அவள் என் எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அழகு என்று எழுதுகிறோம். அழகு என்று போற்றுகிறோம். ஆனால் அது பார்ப்பவன் மனநிலையைப் பொறுத்ததா, இல்லை, சுற்றியுள்ள ஒளியைப் பொறுத்ததா அல்லது உண்மையில் வர்ணிக்கப்படும் பொருளின் வடிவத்தைப் பொறுத்ததா? ‘பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் மூன்றுக்கு மிடையே உள்ள முக்கூடல் தொடர்பு தான் அழகு என்பது,’ என்று பகவத் கீதா வாக்கியத்தின் அடிப்படை உண்மையை அன்றுதான் உணர்ந்தேன். 

இப்போது என் முன்னால் உட்கார்ந்திருக்கும் ஆனந்தியின் உடலில், சாவின் வெளுப்பு இல்லை. அவள் முகத்தின் வெண்மையும் குறைந்திருந்தது. அவள் இப்போதும் அழகாகத்தான் இருந்தாள். ஆனால் சிவப்பொளியின் சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் காணப்பட்டாள். இப்போது அவள் அழகு அச்சத்தைத் தந்தது. மேஜர், ராமனாதனைப் பார்த்து. “மிஸ்டர் ராமனாதன்! உங்கள் சகோதரன் மிஸ்டர் திலீபனோ அல்லது நீங்களோ எங்கள் வீடடு உட்புற அறையைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு ராமநாதன், “இல்லை. திலீபன் இந்த ஊருக்கே புதியவன். நானும் உங்கள் வீட்டுக்கு இன்றுதான் வந்திருக்கிறேன்”, என்றான். 

மேஜர் எதிரே இருந்த பூட்டப்பட்ட அறையைக் காட்டி, “ஆகையால் உங்களுக்கு, அந்த அறையில் இருக்கும் பொருள்களைப் பற்றித் தெரிய நியாயம் இல்லை அல்லவா?” என்று கேட்டார். 

அதற்கு ராமநாதன், “உண்மை. எங்களுக்கு எப்படித் தெரியும்? நாங்கள்தான் அந்த அறைக்குள்ளேயே செல்லாதவர்களாயிற்றே?” என்றான். அதற்கு மேஜர். “இப்போது உங்கள் சகோதரர் இந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே, அந்த அறையில் உள்ள பொருட்களைப் பற்றிச் சொன்னால், என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார். 

“அதெப்படி முடியும்?” என்று நான் கேட்டேன். 

உடனே மேஜர், “நீங்கள் மட்டும் ஆனந்தியின் கண்களையே உற்றுப் பார்த்தபடி இருங்கள் போதும்,” என்றார். நான் ஒரு முறை ஆனந்தியைக் கூச்சத்தோடு உற்றுப் பார்த்து விட்டு தயக்கத்தோடு மேஜர் பக்கம் திரும்பினேன். உடனே மேஜர், “என்ன மிஸ்டர் திலீபன் யோசிக்கிறீர்கள்? நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இது ஒரு பரிசோதனை. இதில் பண்புக்குக் குறைபாடோ அல்லது தவறோ இல்லை,” என்றார். தன் மகளை உற்றுப் பார்க்கும்படி ஒரு தந்தை வெட்கம் இல்லாமல் சொல்கிறாரே என்று என் மனம் திணறியது. ஆனால் அம்மாதிரித் தயக்கம் ஆனந்திக்கு இருந்ததாகவே தெரியவில்லை. நாற்காலியில் இருந்த படியே. இந்த ஏற்பாட்டைச் சற்றும் விரும்பவில்லை என்பதைப் பார்வையால் சொல்லாமல் சொன்னான். என் எதிரே உட்காந்திருந்த ஆனந்தி, என் குழப்பத்தை உணர்ந்து கொண்டாளோ என்னமோ, “பரிசோதனையை நீங்களே செய்யுங்கள் அப்பா,” என்று மேஜரிடம் கூறினாள். 

இதைக் கேட்டதும் மேஜரின் முகம் கோபத்தால் சிவந்தது. ஆனந்தியைப் பார்த்து மேஜர், “ஆனந்தி! இந்தப் பரிசோதனையில் நீதான் முக்கியம்,” என்று சொல்லிவிட்டு அவளை மிரட்டுவது போல் பார்த்தார். ஆனந்தி அப்படியே மருண்டு போய் நின்றாள். அவர்கள் இருவரிடையே தந்தை-மகள் என்ற பரிவு இருப்பதாகத் தெரியவில்லை. எஜமான்-பணியாள் என்ற கண்டிப்பு தான் தொனித்தது. ஆனந்தி என்னை நோக்கித் திரும்பினாள். என்னிடம், “என் கண்ணைப் பாருங்கள்”, என்றாள். 

நான் அவள் கண்களையே பார்த்தேன். எண்ணெயைக் கண்ணில் விட்டது போல், எரிந்தன என் கண்கள். அப்படியே கண்களை மூடினேன். 

ஆனந்தி, “இப்போது கண்களை மூடாதீர்கள். அப்படியே விறைத்துப் பாருங்கள்,” என்றாள். என் கண்களை மறுபடி திறந்து பார்த்தேன். அறையின் சிவப்பொளி, ஆனந்தியின் முகம் இவையெல்லாம் மறைய ஆரம்பித்தன. நான் பார்த்த ஆனந்தியின் கண்கள், மெள்ள மெள்ளப் பெரிதாவதுபோல் தோன்றியது. பெரிதாகிப் பெரிதாகி அந்தக் கண்கள், ராட்சத பரிமாணத்துக்கும் பெரிதாக, அந்த அறை பூராவும் நிறைவது போல் உணர்ந்தேன். என் பாதத்திலிருந்து உடல் உணர்ச்சிகள் குறைய ஆரம்பித்தன. பிறகு முழங்கால், உணர்ச்சியை இழந்தது. பிறகு, கை உணர்ச்சியை இழந்தது. இதயத் துடிப்போடு வீடு முழுதும் நிறைந்த கண்களைப் பார்த்தபடியே இருந்தேன். அடுத்தபடி, உடல் உணர்வும் போய்விட்டது. உடல் உணர்வு போன பின்னும், ‘நான்.’ என்ற உணர்வு மட்டும் மிஞ்சி நான் காற்றில் மிதப்பது போல் எனக்குத் தோன்றியது. அந்த ‘நான்’ என்ற உணர்வு, மிதந்து மிதந்து கண்களை நோக்கி நகர்வது போல் தோன்றியது. ‘நான்’ என்ற உணர்வோடு நான் ஏதோ ஒன்றை அடைந்தேன். 

அடுத்த வினாடி, இதுவரை என் முன் நின்ற அந்த விசாலமான கருவிழிகள் மறைந்தன. என் முன்னால் அந்தப் பூட்டப்பட்ட அறையில் உட்புறம்தான் இருந்தது. உடலுணர்ச்சி இழந்துவிட்ட நான், பார்வை உணர்ச்சியோடு மட்டும் இருந்தேன். அது மட்டுமல்ல. நான் பார்த்த பொருள்களை அட்டவணை எடுப்பவன் போல் ஒவ்வொன்றாக என் பார்வை குறித்தது. என் பார்வை பொருள்களைக் குறித்தது மட்டுமல்ல; ஒவ்வொரு பொருளையும் பெயர் சொல்லி, ‘நான்’ என்ற உணர்ச்சி உச்சரித்தது. என் குரல் எங்கோ கிணற்றின் அடியிலிருந்து என்னை நோக்கி வருவது போல் எனக்குத் தோன்றியது. என் பார்வை உணர்ச்சியில் பட்டது. ஒரு சிவப்புக் கூடை. அதன் பெயரைச் சொல்லிக் கொண்டேன். பிறகு அந்த அறையில் மரக்கட்டில் இருந்தது. அதில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் பெயரை என் குரல் உச்சரித்தது. அந்த அறையில் அடுத்தபடி ஒரு வீணை இருந்தது. அந்த வீணையின் தந்திகள், மனித நரம்புகள்போல் தெரிந்தன. அவை சாதாரண தந்தியல்ல. மனித நரம்பு என்று எனக்கு எப்படித் தெரிந்தது என்று புரியவில்லை. ‘நான்’ என்ற உணர்ச்சி, தானாகவே பார்த்த பொருள்களைப் புரிந்து கொண்டது போலும். வீணையின் அடிப்பாகத்தில் ஒரு மண்டை ஓடு தெரிந்தது. அதை நோக்கி நான் நகர்ந்தேன். 

அந்த விசித்திர வீணையின் தந்தியை ‘நான்’ என்ற உணர்ச்சி மீட்டியது. உடனே மாயா மாளவ கெளளத்தின் இசை கேட்டது. எங்கிருந்தோ என் குரல், ”மாயாமாளவ கௌளம்,” என்று உச்சரித்தது. மின் வெட்டும் நேரத்தில் அந்த அறையில் ஒரு மாது நுழைந்தாள். அவள் ஆனந்தி அல்ல. இறந்துபோன மல்லிகையம்மா! 

என் குரல், “மல்லிகை யம்மா!” என்ற பெயரை உச்சரிக்கிறது. அதே நேரத்தில், “போதும் மிஸ்டர் திலீபன், போதும், வெளியே வாருங்கள்,” என்று ஆனந்தியின் குரல், இடிபோல் உடல் அற்ற ‘நான்’ என்ற உணர்ச்சியில் ஒலிக்கிறது. எல்லாத் தோற்றமும் மறைகிறது. ஒரே இருள்! எங்கும் ஒரே இருள்! 

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. திடீரென்று எனக்குக் கால்கள் இருப்பதை உணர்கிறேன். படிப்படியாக என்னுடைய அங்கங்களின் உணர்வை உணர்கிறேன். மறுபடியும் நான் என் உடலை அடைந்து கண் விழிக்கிறேன் உடல் வியர்த்திருப்பதை, என் எதிரே ராமனாதன், மேஜர், ஆனந்தி மூவரும் மெளனமாக உட்கார்ந்திருப்பதை உணர்கிறேன். மேஜர் ஆத்திரத்துடன் ஆனந்தியிடம், 

“அந்தப் பாழும் வீணையை அந்த அறையிலா நீ போய் வைக்க வேண்டும்?” என்று கண்டித்தபடி இருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

நான் மேஜரைப் பார்த்து, “ஏன் ஹிப்நாடிக் பரிசோதனையில் ஏதாவது தவறு நேர்ந்து விட்டதா?” என்று கேட்டேன். உடனே மேஜர் மாயநாதன், ”ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.” என்று மழுப்பினார். அப்போது ராமநாதன், “திலீப சொன்ன பொருள்கள் அந்த அறையி இருக்கிறதா என்று பார்ப்போமா?” என்று கேட்டான். மேஜர் மாயநாதனும் வேண்டா வெறுப்போடு ஒப்பு கொண்டார். அறையின் கதவை திறந்தார். அங்கு நான் காட்டி சிவப்புக்குடை, மரக்கட்டில், அந்த வீணை எல்லாம் இருந்தன. 

அத்தியாயம்-19

ராமனாதன், “ஆச்சரியம்! திலீபன் சொன்ன பொருள்கள் எல்லாம் இருக்கின்றன! இந்த வீணையின் தந்திகள் நரம்பால் ஆகியவையா? இறந்த மல்லிகையம்மா இருந்ததாகச் சொன்னானே, அவர்களைக் காணோமே?” என்று கேலியாகக் கேட்டான். மேஜரின் முகம் குழப்பத்தால் நடுங்கியது. அவர் ஏதோ சமாளிக்க முயன்றார். 

உடனே ஆனந்தி, தன் தந்தையின் சிக்கலைத் தீர்க்கும் எண்ணத்தோடு, “என்ன மிஸ்டர் திலீபன்! நீங்கள் ஹிப்நாடிக் தூக்கத்தில் இருக்கும்போது, பார்க்காத பொருட்களையும் பார்த்ததாகக் கூறிவிட்டீர்கள்!” என்றாள். உடனே நான், “இல்லை ஆனந்தி, வெளியே படத்தில் இருக்கும் மல்லிகையம்மாளை இங்கே பார்த்தேன்”, என்று திட்டமாக அடித்துக் கூறினேன். தந்தையும் மகளும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றனர். 

மேஜர் என்னைப் பார்த்து, “மிஸ்டர் திலீபன்! நீங்கள் ஒரு ஸ்பெஷல் கேஸ். பொதுவாக ஹிப்நாடிக் தூக்கத்தில் பார்த்து விழித்தவுடன் யாருக்குமே பார்த்த விஷயங்கள் நினைவிராது. ஆனால் உங்களுக்குப் பார்த்தவையெல்லாம் நினைவிருக்கிறது என்று சொல்கிறீர்கள். இறந்த மல்லிகையம்மாளை இந்த அறையில் பார்த்ததாகவும் சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை”, என்றார். 

நான் உடனே மேஜரிடம், “ஒரு வேளை ஹிப்நாடிக் தூக்கத்தில் நான் பார்த்ததை மறக்கு முன்பு ஆனந்தி எனக்கு விழிப்புக் கொடுத்துவிட்டாளோ?” என்று கேட்டேன். 

மேஜர், “ஒருவேளை அப்படியும் இருக்கலாம்!” என்று வேதனையோடு தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இந்தப் பரிசோதனையில், அவர் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்துவிட்டது. அதைக் குறித்து அவர் கலங்கியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது. ‘ஏன் இந்தப் பரிசோதனையை வைத்தோம்,’ என்ற நிலைக்கு வந்துவிட்டார் என்றும் தெரிந்தது. ஒருவேளை அந்த அறையில் அந்த வீணை இருந்ததை மேஜர் எதிர்பார்க்கவில்லையோ? அந்த வீணையின் மர்மம் தான் என்ன? 


அன்றிரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்ததும் எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. பாதி தூக்கத்தில் அந்த வீணையின் நாதம் கேட்டு விழித்துக் கொண்டேன். 

தண்ணீரில் குழாய் வைத்துக் காற்றை ஊதினால் ‘சொள பள சொள பள’ என்று நீர்க் குமிழிகள் தோன்றுவது போன்ற சப்தம் கேட்டது. சுற்று முற்றும் பார்த்தேன். சப்தம் படுக்கை அடியிலிருந்து வந்தது. ‘சொளபள சொளபள’ சப்தத்தில் யாரோ பேச முயல்வது போல் தெரிந்தது. படுக்கை அடியில் யாரும் இல்லை. வெறும் தரையிலிருந்து சப்தம் வந்தது. அதே சொளபள குரலில் ஒரு கிழவியோ, கிழவனோ பேசுவதுபோல், ”என்னைக் காவேரிக் கரைக்கு அழைச்சிட்டுப் போடா கண்ணு’, என்று அர்த்தம் தொனிக்கும்படியாக சொளபள என்று பேச்சு கேட்டது. உடனே படுக்கை அடியே ‘டார்ச்’ அடித்தேன். 

வெண்மையான நூல்போல் ஒன்று கிடந்தது. சப்தமும் நின்றுவிட்டது. தரையில் கிடந்த நூலை எடுத்துப் பார்த்தேன். அது நூல் இல்லை. நரம்பு! அந்த விசித்திர வீணையின் தந்தி நரம்பு! 

தேளைத் தொட்ட பீதியோடு அதை வீசி எறிந்தபடி நான் வீறிட்டலறினேன். எனது கூச்சலில் ராமநாதன் விழித்தெழுந்தான். 

அவன் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தபடி, “என்ன திலீபா! என்ன நடந்தது?” என்று கேட்டான். என் நாக்கு பீதியில் குழறியது. ‘நரம்பு’, ‘நரம்பு,’ என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். 

ராமநாதன் தூக்கம் கலைந்ததால் ஏற்பட்ட கடுப்புடன், ”என்ன உளறுகிறாய்? நரம்பா? என்ன நரம்பு?” என்று சலித்துக் கொண்டான். 

“மேஜர் மாயநாதன் வீட்டில் பூட்டப்பட்ட அறையில் பார்த்தோமே, அந்த விசித்திர வீணையில் நரம்பு? அந்த நரம்பு பேசுகிறது அண்ணா! ‘சளபள’ ‘சளபள’ என்று பேசுகிறது அண்ணா! என்னைக் காவேரிக்கு அழைச்சுக்கிட்டுப் போடா கண்ணு என்று சொல்லுகிறது”, என்று உளறியபடி சொன்னேன். 

ராமநாதன் என்னை ஒரு வினாடி விறைத்துப் பார்த்தான். “எங்கேடா அந்தப் பேசும் நரம்பு? எடுத்துக் காட்டு,” என்றான். 

நான் உடனே தரையைப் பார்த்தேன். நான் பயத்தில் வீசி எறிந்த இடத்தில் அந்த நரம்பு இல்லை. வெறும் தரைதான் இருந்தது. 

“திலீபா, உன் கற்பனா சக்தி அசாத்தியம். ஏதோ கனவு கண்டிருக்கிறாய். படுத்துக்கொள். சிறு குழந்தை போல் வீண் புரளி செய்யாதே”, என்று சொல்லிவிட்டு அவன் கம்பளியை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்து விட்டான். 

எனக்கே என் செய்கை அவமானமாக இருந்தது. ஒருவேளை ராமநாதன் சொல்வதுபோல் என் கற்பனா சக்தியே என்னோடு விளையாடுகிறதோ? தத்ரூபமாக நாம் காணும் காட்சிகளெல்லாம் ஒருவித மாயைதானோ! 

பக்தர்கள், சித்தர்கள் எல்லாம் ஆண்டவனைக் கண்டதாக நெக்கு நெக்காக உருகிய காட்சிகளெல்லாம் இம்மாதிரியான தோற்றம்தானோ என்றெல்லாம் எண்ணினேன். 

ஒருமுறை கடவுளை நினைத்து விட்டுப் படுக்கையில் படுத்தேன். படுத்தவுடன் ஓரளவு அமைதி ஏற்பட்டது. அப்படியே கண்களை மூடித் தூங்க முயற்சி செய்தேன். ஒரு நிமிடம் தூங்கியிருப்பேனோ என்னவோ? விழித்துக் கொண்டேன். 

விழித்ததும் அறையில் இகையின் ஒலி கேட்டது. அதே மாயா மாளவ கெளள ராகத்தின் ஒலி! உடனே ராமநாதனை எழுப்பி அவனையும் இந்த இசையைக் கேட்கச் செய்யலாமா என்று எழுந்தேன். ராமநாதன் எழுந்ததும் இசை நின்று விட்டால்! 

ராமநாதன் என்னைப் பைத்தியம் என்று தீர்மானித்தால்? இந்தக் காட்சிகள், சப்தங்கள் எல்லாம் எனக்காகவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளோ என்ற சந்தேகம் எழுந்தது. 

ஆனால் இம்முறை பயம் இல்லை மனத்தில். ஒருவிதத் தைரியம் எழுந்தது. 

இருண்ட ஆப்பிரிக்காவில் நுழைந்த ஆங்கில ஆராய்ச்சியாளர்களின் தைரியம்போல் ஒரு தைரியம் எழுந்தது. இந்த விபரீத நிகழ்ச்சிகளின் தாத்பர்யம்தான் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. 

மெல்ல எழுந்து வராந்தாவின் கதவைத் திறந்து வெளிவந்தேன். பள்ளத்தாக்கில் மேஜர் மாயநாதனின் வீடு தெரிந்தது. அந்த வீட்டின் ஒவ்வோர் ஜன்னலிலும் விளக்குகள் மின்னின. 

பக்கத்து வீடுகள் எல்லாம் மூடு பனியில் இருண்டு கிடக்கும் போது, இந்த வீடு மட்டும் ஜாஜ் வல்லியமாய் நீலங்களுக்கு நடுவே வைரம் மின்னுவது போல் மின்னிக் கொண்டிருந்தது. 

ஒரே நோக்கத்தோடு நான் அந்த வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மாயா மாளவ கௌள ராகத்தின் ஒலி இன்னும் கம்பீரமாக ஒலித்தது. 

என் நடையில் ஒருவிதப் புதுமையைக் கவனித்தேன். என் கால்கள்தான் நடந்தன; நான்தான் நடந்தேன்; இருந்தாலும் ஏதோ கயிறு ஒன்றால் கட்டப்பட்டு இழுப்பது போல் என் மனத்துக்குப் பட்டது. 

நடந்து கொண்டிருந்தவன் திடீரென்று நின்றேன். ஒரு வினாடிக்குத்தான் நின்றிருப்பேன். உடனே குனிந்து என் கால்களைப் பார்த்தேன். அவைகள், தானே நடக்க முயலுவது போல் துடித்தன. அதே வினாடி, அந்த வீட்டிலிருந்து வாய்ப் பாட்டில் ஒலி கேட்டது. 

“தேனில் தித்திக்கும் சர்க்கரை போல். வானில் மறைந்த மழைத்துளி போல், உனக்குள்ளே நான்… உனக்குள்ளே நான்.” என்ற பெண் குரல் பாட்டு கேட்டது. 

அது ஆனந்தியின் குரலாய்த் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். மறுபடியும் மல்லிகைத் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மல்லிகைத் தோட்டத்தின் காம்பவுண்டு சுவர் அடுத்த வாசலுக்கு வந்ததும் நின்றேன். நான் வந்து நிற்கவும் அந்த வீட்டு விளக்குகள் எல்லாம் அணையவும் சரியாக இருந்தது. விளக்குகள் அணைந்தனவே அல்லாமல் இசை நிற்கவில்லை. இசை மட்டும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அத்தோடு மல்லிகை மணமும் வீசிக் கொண்டே இருந்தது. நான் மெல்ல அடிமேல் அடி வைத்து அந்த வீட்டு முன்வாசல் கதவு நோக்கி நடந்தேன். 

கதவருகில் வந்ததும் கதவை இருமுறை தட்டினேன். பதில் இல்லை. ஆனால் வீட்டினுள்ளிருந்து வந்த இசை மட்டும் நின்றுவிட்டது. மறுபடியும் ‘டக்’ ‘டக்’ ‘டக்’ என்று கதவைத் தட்டினேன். பதில் இல்லை. நிசப்தம்தான் நிலவியது. 

உடனே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “மேஜர் மாயநாதன்!” ”மேஜர் மாயநாதன்!” என்று இரு முறை கூப்பிட்டேன். அப்போதும் பதில் இல்லை. 

தற்செயலாக என் பார்வை கதவின் மேல் விழுந்தது. என்ன ஆச்சரியம்! கதவு பூட்டியிருந்தது. இது நேரம் வரை பூட்டிய வீட்டைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். 

ஒருவேளை வீடு மாறி வந்து விட்டோமோ என்று சுற்றிப் பார்த்தேன். மேஜர் மாயநாதன் வீட்டு வராந்தாவிலேதான் நான் நின்று கொண்டிருந்தேன். 

வெளிப்புறம் பூட்டப்பட்ட வீட்டினுள்ளிருந்து யார் பாடியிருக்க முடியும்? 

என்னுடைய அசட்டுத் தைரியம் குறைந்து என் மனத்தில் கிலி பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. 

நான் அந்த இடத்தை விட்டு, நான் தங்கியிருக்கும் பங்களா நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடிக் கொண்டேயிருந்தும் பங்களா வரவில்லை. 

சுற்றிலும் ஓங்கி வளர்ந்த ‘யூகலிப்டஸ்’ மரங்கள்தான் வந்தன. மூச்சு இரைக்க நின்றேன். 

என்னைச் சுற்றிலும் திருடர் கூட்டம் போல் கறுத்த யூகலிப்டஸ் மரங்கள்தான் நின்றன! மறுபடியும் ஓடினேன். 

எங்கு ஓடினேன். எதைத் தேடி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. என் மனத்தைவிட்டே என்னை விட்டே ஓடிக் கொண்டிருந்தேனா? அதுவும் எனக்குத் தெரியாது. ஓடிக்கொண்டே இருந்த என் எதிரே ஒரு பிரம்மாண்டமான பள்ளம். ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளம் என்னை விழுங்கக் காத்திருந்தது. ஓட்டத்தின் வேகத்தில் என் கால்களை நிறுத்த முடியவில்லை. அடுத்த வினாடியில் நான் தலைகுப்புற மலைச் சிகரத்திலிருந்து விழுந்திருப்பேன். 

என் உடல் ஆயிரம் முண்டமாகப் போயிருக்கும். இரண்டு அங்குலம்தான் எனக்கும் அந்தப் பயங்கரப்பள்ளத்துக்கும் இடையே உள்ள தூரம். இரண்டங்குலம்தான் எனக்கும் மரணத்திற்கும் உள்ள இடைவெளி. 

ஓடிவந்த வேகத்தில் நான் எவ்வளவோ தடுக்க முயன்றும் என் உடல் கிடுகிடு பாதாளத்தில் விழப் பள்ளத்தை நோக்கிச் சாய்ந்தது. ஆனால் ஒரு வலுவான பிடிப்பு என் சட்டையின் முதுகுப்புறக் காலரைப் பற்றித் தரைப் பக்கம் இழுத்தது. 

ஒருவேளை மரத்தின் கொம்போ, கிளையோ என் சட்டையில் முதுகுப் புறமாக மாட்டிக் கொண்டு என்னுடைய வீழ்ச்சியைத் தடுத்து விட்டதோ என்று நினைத்து நன்றி யோடும் மகிழ்ச்சியோடும் என் முகத்தைப் பின்புறம் திருப்பினேன். 

அங்கு மரமில்லை. சட்டைக் காலரை பற்றியபடி ஆனந்தி நின்றாள்! நிலவொளியில் புன்முறுவல் செய்தபடி ஆனந்தி நின்றாள் ஆனந்தி! ஆனந்தி! திடீரென்று இங்கு எப்படி வந்து முளைத்தாள்? திடீரென்று காற்றிலிருந்து உருவெடுத்தாளா? வீட்டுக் கதவைத் தட்டிய போது குரல் கொடுக்காதவள் இங்கு எப்படி வந்தாள்? பூட்டிய கதவைத் திறந்து கொண்டு இங்கு எப்படி வந்தாள்? என்னை ஏன் காப்பாற்றினாள்? “ஆனந்தி! நீயா? நீயா?” என்றேன். 

“ஆமாம். நான்தான். ஏன் இப்படித் தலைதெறிக்க ஓடினீர்கள்? நான் மட்டும் பின்னால் ஓடிவந்து உங்கள் சட்டையைப் பற்றி இழுக்கா விட்டால் நீங்கள் பள்ளத்தில் விழுந்திருப்பீர்களே மிஸ்டர் திலீபன்?” என்றாள். 

“உங்கள் வீட்டுக் கதவைத் தட்டினேன். ‘மேஜர் மாயநாதன்! மாயநாதன்!’ என்று இருமுறை கூப்பிட்டேன். அப்புறம் உங்கள் வீட் டுக் கதவு வெளிப்புறம் பூட்டியிருப்பதை உணர்ந்தேன்,” என்றேன். 

ஆனந்தி ஆச்சரியம் அடைந்தவளாக “எங்கள் வீட்டுக் கதவு  பூட்டியிருந்ததா? இல்லையே. நான் என் வீட்டில் இருந்துதானே வருகிறேன். நீங்கள் அப்பாவின் பெயரைக் கூப்பிடுவதைக் கேட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தேன். நீங்கள் வராந்தாவிலிருந்து ஓடுவதைப் பார்த்தேன். உடனே உங்களைப் பின் தொடர்ந்தேன். நல்லவேளை. நீங்கள் விழுவதற்கு முன்னால் உங்களை வந்து பிடித்து நிறுத்தினேன்”, என்றாள். 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “பூட்டை என் கண்ணால் பார்த்தேனே?” என்றேன். 

ஆனந்தி உடனே கடகடவென்று சிரித்தாள். “ஆம் மிஸ்டர் திலீபன்! அந்தப் பூட்டு எப்போதும் பாட்லாக்கில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் சரியாகப் பார்த்திருந்தால் வீடு பூட்டப்படவில்லை. தாழ்ப்பாள் கொக்கியில் பூட்டுத் தொங்குகிறது என்பது தெரிந்திருக்கும்,” என்றாள். 

”உங்க அப்பா வீட்டிலே இல்லையா?” என்று கேட்டேன். 

“அப்பா குன்னூர் போயிருக்கிறார். காலையில்தான் வருவார்”, என்றாள். 

“அப்போது உங்கள் வீட்டிலிருந்து கேட்ட மாயா மாளவ கெளள ராகப் பாட்டு?” 

இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆனந்தியின் முகம் மாறியது. ஒருவிதக் கலக்கம் ஏற்பட்டது. 

அத்தியாயம்-20

திலீபன் அவள் வீட்டிலிருந்து வந்த பாட்டைப் பற்றிக் கேட்டதும் ஆனந்தியின் முகம் மாறியது. சிறிது நேரம் தயங்கி விட்டு, ”நான்தான் பாடினேன். தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் வீணை வைத்துப் பாடினேன். பிறகு படுத்துக் கொண்டேன். நான் படுத்துக் கொண்டதும் நீங்கள் வந்து கதவைத் தட்டினீர்கள். நான் கதவைத் திறப்பதற்குள் நீங்கள் ஓடி விட்டீர்கள்”, என்று ஆனந்தி சொன்னதெல்லாம் ஓரளவுக்குப் பொருத்தமாகவே இருந்தன 

ஒருவேளை மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயங்கரமாகத் தெரிவது போல இருக்குமோ என்று நினைத்தேன்.

இருவரும் மெள்ள நடக்க ஆரம்பித்தோம். முதல் நாள் இரவு உதகமண்டலத்துக்கு வந்த போது அவள் வீட்டில் கேட்ட கீதம். அதைத் தொடர்ந்து அவள் அலறல், விசித்திர வீணையின் தந்தி இன்றிரவு என் அறையில் தோன்றியது – இவை பற்றியெல்லாம் அவளைக் கேட்போமா என்று நினைத்தேன். எனக்கே எது மாயை, எது உண்மைத் தோற்றம் என்று புரியாத நிலையில் நான் இருந்தமையால் அவளும் ராமநாதன் நினைத்ததுபோல என்னைப் பைத்தியம் என்று நினைத்துவிட்டால் என்ன செய்வது என்ற வெட்கம் என்னைப் பற்றிக் கொள்ளவே நான் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் பேசாமலே நடந்தேன். 

மல்லிகைத் தோட்டம் வந்ததும் ஆனந்தி என்னை வீட்டிற்குள் வந்துவிட்டுப் போகும்படி அழைத்தாள். 

எனக்கு அந்தப் பூடடைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனந்தி சொன்னபடி தாழ்ப்பாள் கொக்கியில் அந்தப் பூட்டு தொங்கியபடி இருந்தால் உண்மையிலேயே நான் என் கற்பனா சக்தியின் விளைவால் பிரமை தோற்றங்களை உண்டு பண்ணிக் கொள்கிறேன் என்று நினைக்கலாம். 

நான் முன் வாசல் கதவை நெருங்கியதும் கவனித்தேன். நான் பார்த்த அதே பூட்டு கொக்கியில் தொங்கியது. கதவு திறந்திருந்தது. 

‘அப்பாடி!’ என்று பெருமூச்சு விட்டேன். நானாகவே அர்த்தமில்லாமல் ஏதேதோ கற்பனை செய்து கொண்டு பயப்படுகிறேன் என்ற முடிவுக்கு வந்தேன். 

உள்ளே நுழைந்ததும் எனக்கு அந்த விசித்திர வீணையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதன் கம்பிகள் அறாமல் அப்படியே இருந்தால், என் அறையில் நடந்தது அவ்வளவும் கனவு என்று நினைக்கலாம் அல்லவா? 

“ஆனந்தி, தயவு செய்து அந்த அறைக்குள் போகலாமா?” என்று கேட்டேன். 

ஆனந்தி என்னைக் கலவரத்தோடு பார்த்தாள். “எதற்கு?” என்று கேட்டாள். 

”சும்மாத்தான்” என்று மழுப்பினேன். 

சிறிது யோசித்துவிட்டு ஆனந்தி என்னை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். 

அந்த வீணை அதே இடத்தில் இருந்தது. அதன் தந்திகளைக் கவனித்தேன். ஒன்றுகூட அறுந்து போகாமல் அப்படியே இருந்தன. 

என் மனத்தில் அமைதி ஏற்பட்டது. 

ஆனந்தி என்னையே கவனித்த படி இருந்தாள். “ஏன் அந்த வீணையை அப்படிக் கவனிக்கிறீர்கள்?” என்றாள். 

“அதன் அமைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது.” என்றேன். 

ஆனந்தியின் கண்கள் என்னை வெற்றிப் புன்னகையோடு பார்த்தன. “அந்த வீணையை எடுத்து வாசிக்கவா?” என்று கேட்டாள். 

“வேண்டாம். வேண்டாம்.” என்றேன் பதறியபடி. “சரி. நான் வருகிறேன் ஆனந்தி,” என்றேன். 

ஆனந்தி, “எப்போது ஊருக்குப் போகப் போகிறீர்கள்?” என்றாள் 

“இன்னும் ஒரு வாரமாவது தங்குவேன்”, என்று துணிந்து பொய் கூறினேன். 

எனக்கு உள்ளூர, அந்த இடத்தை விட்டு மறுநாளே சென்று விட வேண்டும், சீக்கிரமே போய்ச் சீதாவின் முகத்தைப் பார்த்தால் ஆறுதல் ஏற்படும் என்று தான் தோன்றியது. 

ஆனால் எதற்காக ஆனந்தியிடம் பொய் கூறினேன் என்று தெரியவில்லை. நான் அறையை விட்டு வெளியேறு முன்பு அந்த வீணையைப் பார்த்தேன். அந்த வீணையில் ஒரு தந்தி அறுந்திருப்பது தெரிந்தது. அதை உற்றுப் பார்க்க நினைத்து அதை நோக்குவதற்குள் ஆனந்தி அந்த அறையின் கதவை மூடிவிட்டாள். 

அறையின் கதவை மூடி விட்ட ஆனந்தி என் முகத்தைப் பதட்டத்துடன் பார்த்தாள். நான் பார்க்கக்கூடாத ஏதோ ஒன்றைப் பார்த்து விட்டதைப் போல் அவள் முகம் கலவரமடைந்து காணப்பட்டது. 

நான் உள்ளே செல்லும்போது அறாத தந்திகளுடன் பூரணமாக இருந்த வீணை, நான் அறையை விட்டு வெளியேறுவதற்குள் எப்படி அறுக்கப்பட்டிருக்கும்? ஆனந்தியோ என் அருகில் இருந்தாள். அவள் அந்த வீணையைத் தொடக்கூட இல்லை. அந்த அறையில் வேறு யாரும் நுழையவுமில்லை. வீணை தானாகவே தந்திகளை அறுத்துக் கொள்ள முடியுமா? ஒன்றுமே புரியவில்லை. 

“என்ன சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறீர்கள் திலீபன்?” என்று கேட்டாள் ஆனந்தி. 

“ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை”,  என்றேன். 

“ஏதாவது சூடாகச் சாப்பிடுகிறீர்களா? பிளாஸ்க்கில் சூடான டீ இருக்கிறது.” 

“வேண்டாம். நான் வீட்டிற்குப் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டும்,” என்று சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது, 

அங்கே வைத்திருக்கும் அந்த மல்லிகை யம்மாள் படத்தை ஒருமுறை பார்த்தேன். 

அந்தப் படத்திலுள்ள அந்த மாதின் முகத்தில் ஓர் அசுர திருப்தி காணப்பட்டது. அது என்னையே கூர்ந்து நோக்குவது போல் பட்டது. விடுவிடு என்று என் வீட்டிற்கு வந்தேன். 

ராமநாதன் நிம்மதியாகத் தூங்கியபடி இருந்தான். அவனுடைய நிம்மதியைப் பார்த்து எனக்கு அவன் மீது பொறாமை ஏற்பட்டது. ஏனென்றால் என் மனம் இன்னும் கொந்தளித்தபடியே இருந்தது. ஆனந்தி, அந்த விசித்திர வீணை, அந்த வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் மல்லிகை யம்மாள் படம் எல்லாவற்றுக்கும் ஏதோ ஓர் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று என் மனம் எனக்குக் கூறியது. நான் வீணையைப் பார்க்கும் போது அதன் தந்திகள் அறாமலேயே இருந்தன. ஆனால் அறையை விட்டு வெளியேறும்போதோ அதன் தந்திகள் அறுந்து காணப்பட்டன. ஒரு வேளை ஆனந்தி, நான் அந்த வீணையைப் பார்க்கும்போது, அதைத் தந்தி அறாத வீணையாக நான் பார்க்க வேண்டும் என்று விரும்பி, அந்த விருப்பத்தின்படி என் மனத்தை, அவள் மனத்தால் கட்டுப்படுத்தி என்னைப் பார்க்க வைத்தாளோ? அந்த அறையை விட்டு நான் வெளியேறும் பொழுது அவளுடைய மனத்தின் ஆதிக்கம் என் மனத்தின் மீதிருந்து நீங்கிவிட்ட தால் நான் வீணையை உண்மையான நிலையில் – அறுந்த தந்திகளோடு – பார்த்தேனா! அப்படியென்றால்? ஆனந்தி என் மனத்தை ஒரு கணத்தில் ஹிப்நாடிக் சக்தியால் அவள் நினைத்ததைப் பார்க்க வைக்க முடிந்திருக்கிறது. என் மனத்தில் நிகழும் சிந்தனைகளை அவளால் கண்டு கொள்ள முடிகிறது. அது மட்டுமல்ல. அவளுக்கு அறுந்த தந்தியுடைய வீணையை அறாத தந்தியுள்ள ஒரு வீணையாகத் தோற்றமளிக்கச் செய்ய முடிந்திருக்கிறது! 

என் மனம் அவள் மனத்திற்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்? அந்தச் சக்தி அவளுக்கு எப்படி உண்டாகியது என்று நினக்கவும் எனக்கு உடல் நடுங்கியது. மாலையில் நான் அந்த ஹிப்நாடிக் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டு அவள் கண்களை உற்றுப் பார்த்தபோது என் பார்வை மூலமாக நான் அவளிடம் என் மனத்தின் சக்திகளை இழந்துவிட்டேனா? என் உள்ளத்தின் சுதந்திரத்தை இழந்து விட்டேனா? அந்தப் பரிசோதனைக்கு நான் சம்மதித்திருக்கக் கூடாது என்ற எண்ணம் காலம் தாழ்ந்து ஏற்பட் டது. சீக்கிரமே இந்த உதகமண்ட லத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற ஆசையும் எனக்கு ஏற்பட்டது. 

விடிந்தவுடன் நான் ராமநாதனிடம் உடனே சென்னை செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன் ராமநாதன் ஆச்சரியப்பட்டான். “என்ன திலீபா. ஊட்டியை விட்டுச் சென்னைக்குச் செல்ல உனக்கு என்ன பைத்தியமா? இது உன் எஸ்டேட். நீ இனிமேல் இங்கு தான் இருக்கப் போகிறாய். உன் தோட்டம், உன்னுடைய சொத்து இவையெல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க உனக்கு ஆசையில்லையா?” என்றான் 

என் மனத்தில் தோன்றிய விவரிக்க முடியாத பயத்தை அவனிடம் கூற எனக்கு விருப்பமில்லை. “இல்லை ராமநாதா! எனக்கு என்னமோ இந்த இடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இந்த எஸ்டேட்டை என் பெயரில் மாற்ற வேண்டாம். பெரியவர் ராமலிங்கத்தின் பெயரிலேயே இருக்கட்டுமே!” என்று கூறினேன். 

ராமநாதன் கலக்கத்தோடு என்னைப் பார்த்தான். “காரில் சில ரிப்பேர்கள் செய்ய வேண்டியிருப்பதால் இரண்டு நாட்கள் கழித்துத்தான் சென்னை போக முடியும்.”

எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ‘இன்னும் இரண்டு நாட்களா? இன்னும் இரண்டு இரவுகள் இந்த ஊரிலா தங்குவது?’ என்ற கலக்கம் ஏற்பட்டது. சீதாவின் அருகில்தான் அமைதி காண முடியும்! ஆனால் சீதாவைப் பற்றி ராமநாதனிடம் பேசவே எனக்கு ஒருவிதக் கூச்சம் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே உலாவிவிட்டு வருவோம் என்று புறப்பட்டேன். 

காலை வெய்யிலில் உதகமண்டலம் ஆனந்தமாகக் காட்சியளித்தது. இரவு எனக்கேற்பட்ட பயங்கர அனுபவங்களெல்லாம் அர்த்தமற்றவையாகப் பட்டன உண்மையில் உதகமண்டலம் ஓர் இயற்கை அழகு நிறைந்த ஊர். இதை விட்டுச் செல்வதா என்ற எண்ணம் எனக்கும் ராமநாதனைப் போல் தோன்றியது. வெய்யில் முகத்தில் அடிக்க அடிக்க, அது இன்பம் தரும் அனுபவமாய் இருந்தது. என்னெதிரே உள்ள பங்களா, பக்கத்துத் தோட்டங்கள் எல்லாமே என்னுடைய சொத்து என்று நினைக்க நினைக்க எனக்குப் பெருமையாக இருந்தது. நேற்று இரவு என்னுடைய மனமே என்னுடையதாக இல்லை என்பதை மறந்து விட்டுத்தான் என் சொத்துரிமையைப் பற்றி நினைத்து மகிழ்ந்தேன். மனிதனின் மனமே விசித்திரமானது. நிமிஷத்துக்கு நிமிஷம் எப்படி மாறுகிறது! பீதியிலிருந்து எக்களிப்புக்கும், துன்பத்திலிருந்து சந்தோஷத்துக்கும் எவ்வளவு சீக்கிரம் மாறுகிறது! இரவு பயங்கரமாகத் தோன்றிய அதே யூகலிப்டஸ் மரங்கள் பகலில் எப்படி நிர்மலமாகக் காட்சி அளிக்கின்றன! பாரதியாரின் பாடலின் அழகான அடிகள் தான் என் மனத்தின் மேல் தளத்திற்கு வந்தன. ‘காடும் மலையும் எங்கள் கூட்டம்! எங்கும் நோக்க நோக்கக் களியாட்டம்!’ ஆம், நோக்க நோக்கக் களியாட்டமாகத்தான் தோன்றின, எதிரே நின்ற மலைகளும் காடுகளும்! 

ஆனால் அந்தக் காடுகளின் நடுவிலிருந்து எந்தவிதக் களியாட்டமோ சந்தோஷமோ இருந்ததாகத் தெரியவில்லை. தள்ளு நடையுடன் குல்லாய் அணிந்தபடி மெள்ள மெள்ள நகர்வது எஸ்டேட் குமாஸ்தா சித்தய்யன்தான். உதகையிலேயே முப்பது வருஷத்திற்கு மேல் வாழ்ந்து, மலையோடு ஒரு சிலையாய்ப் போனவர் அவர். அவருக்கு அவருடைய உடலும் வாழ்வுமே ஒரு பாரமாய்த் தோன்றியது போலும். மகள் அவரை விட்டு ஒரு டிரைவருடன் ஓடிச் சென்றதிலிருந்து பாவம், அவருக்கு உலகமே கசந்து போனதில் ஆச்சரியமென்ன! துக்கம் – அதுவும் முதுமையில் துக்கம் – தாங்க முடியுமா? வெறும் பழக்கத்தினால் யந்திரம் போல் வாழ்க்கை நடத்துகிறாரே அல்லாமல், இஷ்டத்தினால் அவர் வாழ்கிறார் என்று சொல்ல முடியவில்லை. அவருடைய தள்ளு நடையைப் பார்க்கவே எனக்குப் பரிதாபமாயிருந்தது. 

ஆனால் அவரைப் பார்த்துப் பரிதாபப்பட எனக்கு என்ன யோக்கியதை? மனிதன் தான் பெற்ற செல்வங்களுக்காக எவ்வளவோ பாடுபட்டுச் சம்பாதிக்கிறான். தன் தூக்கத்தை இழக்கிறான். தன் பண்பை இழக்கிறான். அமைதியை, இன்பத்தை, இளமையைப் பணயம் வைத்துப் பணம் சேர்க்கிறான். தன்னுடைய வாரிசுகள் சௌகரியத்திற்காக! முதுமையில் அந்தச் செல்வங்களே அவனுக்கு எதிராக, அவன் வாழ்விற்குத் தண்டனையாக அமைகின்றன. அவன் உழைப்பெல்லாம் வீணாகிப் போனதாக நினைக்கிறான். வீட்டிற்கு உழைப்பவனைப் போல்தான் நாட்டிற்கு உழைப்பவன் நிலையும். நாற்பது வருஷங்கள் நாட்டிற்குத் தியாகம் செய்தவனின் தியாகத்தை அரை நொடியில் மக்கள் மறந்துவிடுகிறார்கள். புதிய தலைவர்களை நாடிச் செல்கின்றனர். புது லட்சியங்களைத் தேடிச் செல்கின்றனர். பழைய தலைவர்கள் மூலையில் வைத்து மறக்கப்படுகின்றனர். அரசனாயினும் சரி, ஆண்டியாயி னும் சரி; தலைவனாயினும் சரி, தொண்டனாயினும் சரி; மனிதனுக்கு முதுமையில் மிஞ்சுவது எல்லாம் வெறும் நினைவுகள்தான். வெறும் ஞாபகங்கள்தான்! பிறப்பு என்ற வாசலுக்கும், மரணம் என்ற கொல்லைப்புறத்திற்கும் இடையே இருப்பதெல்லாம் வெறும் ஞாபகங்களே. உலகமே ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம்தான். அந்த ஊர்வலம் ஒரு பலிபீடத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. எல்லாம் ஒரு நாள் பலியாகப் போகிறது அந்தப் பலிபீடத்தில். யாருக்காக, எதற்காக இந்தப் பலி தொடர்ந்து நடக்கிறது என்ற கேள்விக்கு விடையே கிடையாது! ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கியத்தைப் பின்பற்றி வாழ்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *