அந்த இரண்டு லெட்டர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 22,320 
 

அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு அழைப்பது உயரதிகாரிகள் இல்லையென உணர்ந்து நிம்மதியாகி பட்டனை அழுத்தினார்.

மறுமுனையில் சிறு அமைதி. பிறகு “ஐயா இன்ஸ்பெக்டருங்களா…?’
உயிர்ப்பின்றி, தயக்கமாய் ஆண் குரல்.

“ஆமாம்… நீங்க…?’

“என் பேரு மாடசாமிங்க… கோயம்பேடு ஒளவை திருநகர் மூணாவது குறுக்குத் தெருவுல இருக்கேங்க…’

“சொல்லுங்க மாடசாமி.. என்ன விஷயம்…?’

“ஐயா… உங்க போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள்ள குடியிருக்கற கூலிக்காரன் ஒருத்தனோட அழைப்புங்க… நேர்ல வந்தா உங்களுக்குப் புரியுங்க… ஃபோன்ல விளக்க முடியாதுங்க…?’

ராஜபாண்டி ஏதோ விபரீதம், யோசிக்க அவகாசம் இல்லையென்பதைப் புரிந்து “ம்… வர்றேன்’ என்றார்.

கோயம்பேடு காவல் நிலையத்திற்கு ராஜபாண்டி ஆய்வாளராக வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. காவல்துறை பணி ராஜபாண்டிக்கு ரத்தத்தில் ஊறிய. வெள்ளச்சாமி மகன் என்றால் திருப்பனந்தாள் பகுதியில் பிரபலம். வெள்ளச்சாமி நேர்மையான போலீஸ்கார அப்பா.

“தம்பி, முடிஞ்ச வரைக்கும் நேர்மையா உத்யோகம் பார்ப்பேன். முடியலேன்னா உத்யோகத்த கைகழுவிட்டு வீட்டுக்கு வந்திடுவேன், காக்கிச் சட்டையில கறை படிய விடமாட்டேன்’.
– இந்த எட்டு வருட போலீஸ் உத்யோகத்தில் ராஜபாண்டி காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும் மந்திரம்.

அவர் பதவியேற்ற அடுத்த நிமிடமே கோயம்பேடு கதிகலங்கியது.
முதலில் கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு எச்சரிக்கை. பிறகு ரவுடிகளுக்கு இவர்கள் மாறிய சூட்டோடு அரசியல்வாதிகள் அடங்கிப் போனார்கள். காவல்துறை நண்பர்களுக்கு லகான் போட்டார்.

காவல்துறைக்கு “உதவுவது மட்டுமே உங்கள் பணி. தன்னிச்சையாக செயல்படக்கூடாது’ என்று கட்டளையிட்டார். அதற்கு அடிபணியாதவர்களை பணியிலிருந்து விடுவித்தார். பேருந்து நிலையம், மார்க்கெட் என பரபரப்பான இரண்டு பிரம்மாண்ட பகுதிகளைக் கொண்ட கோயம்பேடு ஏரியாவை தனது முழுமையான பார்வைக்குள் கொண்டு வந்தார்.

பொறுப்பேற்ற இரண்டே வாரங்களில் குற்ற எண்ணிக்கை சரசரவென குறைந்தது. கமிஷனர் கவனத்தை ஈர்த்தார். பழக்கமான தெருக்களில் ஜீப்பில் செல்லும்போது பெண்கள் “விஷ்’ செய்தார்கள். ஆண்கள் மரியாதையாய் சிரித்தார்கள். குழந்தைகள் கையாட்டின. இப்போது வந்த அந்த அழைப்புக்குக்கூட அவரது எளிமையான அணுகுமுறையும் நேர்மையுமே காரணம்.

தெருவில் நடமாட்டம் இல்லை. மாடசாமியின் வீட்டை நெருங்கியதும், இவரைப் பார்த்து கையெடுத்து வணங்கினார் மாடசாமி.

வீட்டுக்குள் நுழைந்தார் ராஜபாண்டி. யோசனையாக மாடசாமியைப் பின்தொடர்ந்தார். சிறிய வீடு. நுழைந்ததுமே ஹால். பக்கவாட்டில் ஸ்கிரீன் மறைத்த படுக்கை அறை. நேர்கோட்டில் கிச்சன். அந்தப் பெண்மணி. மாடசாமியின் மனைவியாக இருக்க வேண்டும்.

ராஜபாண்டியை கும்பிட்டாள். கண்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. இரண்டு இளம்பெண்கள் சுவரோரமாக நின்றிருந்தார்கள். அவர்களும் கும்பிட்டார்கள். பதிலுக்கு ராஜபாண்டி கும்பிட்டுவிட்டு, மாடசாமியைப் பார்த்தார். நான்கு பேரும் இரவு முழுக்கத் தூங்கவில்லை என்பது புரிந்தது.

மாடசாமி மெல்ல நடந்து படுக்கை அறை ஸ்க்ரீனை விலக்கினார்.

“உள்ளே பாருங்க…’ அறைக்குள்ளே பார்த்தார். அதிர்ந்தார் ராஜபாண்டி. அந்த இளம்பெண் ஃபேனில் தொங்கிக் கொண்டிருந்தாள். சுடிதார் துப்பட்டாவோ அல்லது புடவையோ அவள் கழுத்துக்கும் ஃபேனுக்கும் பாலம் அமைத்திருந்தது.

ராஜபாண்டி அதிர்ந்து திரும்பிய விநாடி நான்கு பேரும் ஓவென அழுதார்கள். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி கதறினார்கள். தலையிலடித்துக் கொண்டார்கள். ராஜபாண்டி திகைத்தார்.

“மன்னிக்கணும் சார்.. அடக்க முடியல… ராத்திரியே தொங்கிட்டா… ரெண்டு மணிக்கு இவ பாத்ரூம் போறப்பவே பார்த்துட்டா… என்ன பண்ணலாம்னு யோசிச்சோம்… எல்லாரும் பேசினோம்.. பிறகுதான் உங்களுக்கு போன் பண்ணினேன்..’

“ஐயா நேரடியா விஷயத்துக்கு வந்துடறேன்… நான் கோயம்பேடு மார்க்கெட்ல மூட்டை தூக்கறேன்… தினம் ஐநூறு ரூவா சம்பாதிப்பேன். அது மட்டும்தான் வருமானம். ரூம்ல தூக்குல தொங்கறாளே… அவ பேர் ராணி… மூத்த மக… மகாராணி மாதிரி இருக்கணும்னு அந்த பேர வச்சோம்…ப்ளஸ் டூவுல மாநிலத்துலேயே மூணாவது மாணவி. மெரிட்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சீட் கிடைச்சது. ரெண்டாவது வருஷம் படிக்கறா… கூடப் படிக்கற ஒருத்தன் கூட சிநேகமோ லவ்வோ என்ன ஏழவோ வந்திருக்கும்போல இருக்குது… போன மாசம் மகாபாலிபுரத்துக்கு டூர் போன இடத்துல நெருக்கமா இருந்திருக்காங்க… அது அவனோ இல்ல வேற யாரோவோ செல்போன்ல படமா எடுத்திருக்காங்க… ராத்திரி பனிரெண்டு மணிக்கு அந்தப் படத்த இவ செல்போனுக்கு அனுப்பியிருக்காங்க… மிரட்டினாங்களோ என்னவோ… மானஸ்தி எம் பொண்ணு… தொங்கிட்டாய்யா..’ செல்போனை நீட்டினார்.

ராஜபாண்டி வாங்கினார். எம்.எம்.எஸ்.ஸைப் பிரித்தார். காட்சி விரிந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில. அவற்றோடு ஒரு வீடியோ பதிவு…

“தொங்கறதுக்கு முந்தி ரெண்டு லெட்டர் எழுதி வச்சிருக்கா.. படிங்க..’ என்றபடி அந்த பேப்பரை நீட்டினார்.

ராஜபாண்டி வாங்கினார்.

“இந்த வீடியோ படம் இன்னும் யார் யாருக்கெல்லாம் போயிருக்கோ… எல்லாம் வெளிய வரும். குடும்ப மானம் கப்பலேறிடும்… இன்னும் ரெண்டு பொண்ணுங்கள நான் கரையேத்தணும்… இவ கார்ப்பரேஷன் ஸ்கூல்ல ப்ளஸ் டூ படிக்கறா… டென்த்ல ஸ்டேட் செகன்ட். இவ ஒன்பதாம் கிளாஸ். இந்த விஷயம் வெளில போனா நாங்கள் நிம்மதியா நடமாட முடியாதுங்க…’

முகத்தை கைகளால் துடைத்துக் கொண்டு பேசினார்.

“ராத்திரி முழுக்க அழுது தீர்த்துட்டோம். எனக்கு கோயம்பேட்டுல செல்வாக்கு அதிகம். தகவல் சொன்னா அடுத்த பத்தாவது நிமிஷம் ஆளுங்க வந்து குவிஞ்சிடுவாங்க… ரெண்டே மணி நேரத்துல இவள சுடுகாட்டுல எரிச்சுட முடியும்… ரகசியமா இத செய்ய முடியாது. எப்படியும் உங்களுக்குத் தகவல் வந்திடும்.’

ராஜபாண்டி மாடசாமியைப் பார்த்தபடி இருந்தார்.

“இப்ப நீங்க அனுமதி கொடுத்தா பாடிய தகனம் செஞ்சிடுவேன்.. உங்களுக்கு வேற எதுவும் சந்தேகம் வந்துடக் கூடாதுங்கறதுக்காக் தான் இறக்காம வச்சிருக்கேன்…’

ராஜபாண்டி மாடசாமியையே பார்த்தபடி இருந்தார்.

அவர் விரக்தியாகப் பேசினார்.

“சட்டம் தன் கடமையச் செய்யும்.. இது கிரிமினல் குற்றம்… பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணணும்… அந்த பையன தண்டிக்கணும்’

அப்படியெல்லாம் நீங்க ரூல்ஸ் பேசினா… ஐயா சத்தியமா உங்கள மிரட்டறதுக்கு சொல்லல… மொத்தம் அஞ்சு பொணம் சுடுகாட்டுக்குப் போகும். இது சவடால் வார்த்தை இல்லை. மூட்ட தூக்கி பொழக்கிற அன்னாடங்காச்சி ஒருத்தனோட ரோஷ வாக்குமூலம். வேற ஒரு ஆளு இன்ஸ்பெக்டரா இருந்தா நாங்க போலீஸுக்குப் போயிருக்கவே மாட்டோம். அத்தினி பேரும் விஷத்த குடிச்சிருப்போம்… உங்கள எனக்குத் தெரியும். அதனாலதான் கூப்பிட்டேன்…

ராஜபாண்டி சிறிது திடுக்கிட்டு மாடசாமியைப் பார்த்தார். அவர் பேசியதில் யதார்த்தம் இருந்தது. செய்தி பரவினால் ஒட்டு மொத்த குடும்பத்தையே மீடியா கிழித்துப் போடும். படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் எதிர்காலம் பாதிக்கும். அமைதி பறிபோகும்.

இப்போது பொறுப்பும் சமுதாய அக்கறையும் மனிதாபிமானமும் உடைய ஒரு காவல் துறை அதிகாரியாக, நேர்மையான ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக நான் என்ன செய்ய வேண்டும்?

யோசித்தார். அவர் மனதிற்குள் பரபரவென எண்ணங்கள் ஓடின.

மாடசாமி கொடுத்த கடிதங்களைப் படித்தார். ஒரு கடிதத்தில் அவள் ஏமாந்த விதத்தை விவரமாக குறிப்பிட்டு தங்கைகளை சிறப்பாக படிக்க வைக்க வேண்டும், படிப்பைத் தவிர வேறு கவனம் கூடாது, என்னைப்போல ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரித்திருந்தாள்.

இன்னொரு கடிதத்தில் நான்கே வரிகள் “தாங்க முடியாத மன உளைச்சல். என் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல…’ என்று காவல்துறை ஆய்வாளருக்கு நேர்த்தியாக விலாசமிட்டிருந்தாள்.
இந்தத் தற்கொலை விவகாரமே தனது கவனத்திற்கு வரவில்லை. அப்போது தனது நிலை என்ன என்பதை ராஜபாண்டி நினைத்துப் பார்த்தார். சாதகபாதகங்களை மனது சில விநாடிகள் அசை போட்டது. மாடசாமியைப் பார்த்தார். ராஜபாண்டி கேட்டார்.

“எத்தனை மணிக்கு பாடிய எரிப்பீங்க…?’

“இப்ப மணி ஆறரைங்க… சரியா ஒன்பது மணிக்கு களியக்காவிளையிலேந்து பொழைக்க வந்தவங்க நாங்க… தகவல் சொல்றதுக்கு சென்னைல சொந்தம்னு யாரும் கிடையாது. மார்க்கெட்ல என்னை மாதிரி மூட்ட தூக்கற இருநூறு பேர்தான் எங்களுக்கு எல்லாம்.’

அந்த கடிதங்களை ஒரு புத்தகத்திற்குள் வைத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். அனைவரையும் பார்த்து தலையாட்டிவிட்டு வேகமாக வெளியேறினார் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி.

யாராவது பார்த்திருப்பார்களா… ஏதும் பிரச்னை வருமா? வீட்டிற்கு வந்தவர் லேசாக கண் அயர்ந்தார்.

கண் விழித்தபோது மணி பத்து. அலைபேசியில் இரண்டு மிஸ்ட் கால் இருந்தது. ஒரே எண். அழைத்தார். “ஐயா மாடசாமிங்க. எல்லாம் நல்ல படியா முடிஞ்சதுங்க… எரிச்சு சாம்பலாக்கிட்டேங்க… என் குடும்ப மானத்த காப்பாத்தினதுக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களுக்கு கடன் பட்டிருக்கேங்க….’

ராஜபாண்டியிடம் மாடசாமி பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது செல்பேசிக்கு அந்த எம்.எம்.எஸ். வந்தது… முதலில் நம்பரைப் பார்த்து சலனமானார் அவரது மேல் அதிகாரி. தயக்கமாக எம்.எம்.எஸ்.ஸைப் பிரித்தவர், சர்வாங்கமும் அதிர்ந்தார். உடம்பு நடுங்கியது. செல்போனில் படம்பிடிக்கப்பட்டிருந்த காட்சி வீடியோ பதிவாக விரிந்தது.

அந்த அதிகாலை நேரத்தில் அவர் மாடசாமி வீட்டுக்குப் போனது… வீட்டுக்குள் இருந்தது. திரும்பி வந்தது. பிணம் எடுக்கப்பட்டது. எரிக்கப்பட்டது எல்லாம் வரிசையாக தெளிவாக அணிவகுத்தது. ஓரிரு நிமிடங்கள் அவருக்கு ஏதும் தோன்றவில்லை. தனக்கு தெரியாமல் தன்னை பின்தொடர்ந்து வந்து எடுத்து மேலதிகாரிக்கு அனுப்பியது யார்? அவரால் பாதிக்கப்பட்ட லோக்கல் அரசியல் பிரமுகர்களா… லஞ்சம் வாங்க முடியாத விரக்தியில் இருந்த சக போலீஸ்காரர்களா…? அல்லத தட்டி வைக்கப்பட்ட போலீஸ் நண்பர்களா?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே உயரதிகாரி லைனில் வந்தார்.

“சட்டத்த காப்பாத்த பிறவி எடுத்து வந்த நேர்மையாளன்னு நெனப்போ… காலேஜ் படிக்கற பொண்ணு தூக்குல தொங்கியிருக்கா.. எவ்வளவு சென்சேஷனான சம்பவம்…? அந்த காலேஜ் எதிர்க்கட்சிக் காரனோடது… பொண்ணோட அப்பாகிட்ட ஒரு வாக்குமூலம் வாங்கினா காலேஜ் முதலாளிய கஸ்டடிக்குக் கொண்டு வரலாம். ஏன் உள்ளகூடத் தள்ளலாம். மேலிடத்த கூல் பண்ணலாம். எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டியே… இடுப்புல சொருகியிருக்கியே… எவ்வளவு? பணமா இல்ல நகையா? எதுவா இருந்தாலும் என் டேபிளுக்கு வரணும். நேர்மையா நடிச்சுகிட்டு ஒரே சுருட்டல்ல செட்டில் ஆகப் பார்க்கறியா? இந்த எம்.எம்.எஸ். இப்ப கமிஷனருக்குப் போகப்போவுது… ஒரு வாரத்துக்கு நீதான்யா ஸ்டேட்டோட ஹாட் டாபிக்…’

ராஜபாண்டி பதில் பேச முடியாமல் திகைத்தார்.

“உன்னோட மேலதிகாரியா உத்தரவு போடறேன்… அந்த குடும்பத்தயும் கூடமாட ஒத்தாச பண்ணினவன் அத்தனை பேரையும் அப்படியே தூக்கி வந்து ஸ்டேஷன்ல உக்கார வை… நீ செய்யறீயா… இல்ல நான் செய்யட்டுமா?’

பதினோரு மணிக்கு ரோந்து போன போலீஸ் வாகனத்தின் டிரைவர் இன்னும் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு வராதது உணர்ந்து, இருந்தால் அழைத்துப் போகலாமே என்றெண்ணி ஜீப்பை கீழே நிறுத்திவிட்டு மாடிப்படி ஏறினார். கதவைத் தட்டி… திறக்கப்படாமல் போகவே.. ஜன்னல் வழியாக அழைத்து.. ரெஸ்பான்ஸ் இல்லாமல் போகவே கதவு இடுக்கு வழியே உள்ளே பார்த்து…

ஹாலில் உள்ள ஃபேனில் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி தொங்கிக் கொண்டிருந்தார்.

டீபாயில் இரண்டு கடிதங்கள் காற்றில் படபடத்தன. ஒன்று மனைவிக்கு… இன்னொன்று காவல்துறைக்கு…

– பிப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

1 thought on “அந்த இரண்டு லெட்டர்

  1. கதை நன்றாக இருந்தது ஆனால் அதிகாரி கொஞ்சம் அவசர பட்டு விட்டார். நேர்மைக்கு கிடைத்த பரிசு ஒரு அதிகாரியின் உயிர். தொடரட்டும் உங்கள் மேன்மையான பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *