யாரென்று மட்டும் சொல்லாதே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 12,358 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13 

‘நான் இப்ப நாகமாணிக்கத்தை பரிசோதனை பண்ணிகிட்டு இருக்கேன். இந்தப் பரிசோதனையை எல்லா கோணத்துலேயும் பண்ணிப் பார்த்துட வேண்டியதுதான். நீ வண்டியை எடு. அந்த பாம்பு பின்தொடருதான்னு பார்ப்போம்!’

புற்றுக்கு வெளியே அதன் துவாரங்களில் ஒன்றில் பாம்பின் தலை தெரிந்தது. அங்குலம், அங்குலமாக உயர்ந்த அதன் உடம்பு, கேள்விக்குறி போல வளைவாகவும் நின்றது. 

அந்த படம் விரித்த பாம்பின் கண்ணிரண்டும் சிறு, கருகமணிகளைப் போல இருந்தன. அவற்றின் வழியாக அது பிரியாவையும் அர்ஜுனையும் பார்த்தது. 

பிரியாவுக்கு பாதங்களுக்கு கீழே வண்டல் மணல் அரிபடுவது போல தோன்றியது. அர்ஜுனும் சர்ப்பத்தின் அந்த தோற்றத்தில் சற்று பயப்பள்ளத்தில் விழுந்திருந்தான். எப்போதும் பாம்பென்றாலே ஒரு பயம்தான். ஒண்ணரை மீட்டர் நீள ரப்பர் குழாய்க்கும், பாம்புக்கும் அதிக வித்தியாசமில்லை. அந்த குழாய் தானாய் அசையாது. இது அசைகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். 

பாம்புக்கு கோரமான முகமோ, கைகளோ, காலோ எதுவுமில்லை. பறந்து வந்து தாக்க சிறகுகளும் இல்லை. சொல்லப் போனால் உலகிலேயே மிக ஊனமான ஓர் ஜந்து அதுவாகத்தான் இருக்க முடியும். 

ஆனால், அதைப் பார்த்து விட்டால் இரத்தத்தில் பயம் கரையத் தொடங்கிவிடுகிறது. நிதானமின்றி வேகமாக ஆட்டிவிட்ட ஊஞ்சல் போல இதயத்திலும் ஒரு துடிப்பு. 

“அர்ஜுன்… அந்த நாகமாணிக்கம் நிஜம்தா போல இருக்கு. நம்மகிட்ட அது இருக்கிறது, இந்த பாம்புக்கு எந்தவிதத்துல தெரிஞ்சிருக்கும்? பாரு… எப்படி எழுந்திருச்சி நிக்குது?” 

“பிரியா… உண்மையிலே நான் இப்ப பெரிய ஆச்சரியத்தில் இருக்கேன். என்னால இதை நம்பவே முடியலை”. 

“நம்பித்தான் ஆகணும், அர்ஜுன். அதேநேரம் இந்த மாதிரி விஷயங்களைப் புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யணும்.” 

“சரி பிரியா… நாம கிளம்புவோம். இந்த பாம்பு நம்ம கூடவே வருதான்னு பார்ப்போம்.” 

“வரும்னுதான் என் மனசுக்கு தோணுது. ஐய்யோ… அது பார்க்கிறதைப் பாரு… மிளகு மாதிரி இரண்டு கண்ணுங்க. அந்த இரண்டு கறுப்புப் புள்ளிங்க அதோட மனசை அப்படியே காட்டுது பாரு…” 

“நிஜமா சொல்றேன்… கடவுள் ரொம்பவே பெரியவர். அவரைவிட ஒரு பெரியவர் இருக்கவே முடியாது . நாமெல்லாம் தூசு. இரண்டு கறுப்புப் புள்ளிகளை கண்ணாக்கி, அதனால் உலகத்தையே பார்க்க வைக்க அவரால் முடியுதுன்னா அவர் எவ்வளவு பெரியவரா இருக்கணும்?” 

“நீ நாகமாணிக்கத்தை விட்டுட்டு கடவுள்கிட்ட போயிட்டியா?” 

பிரியா கேட்டுக்கொண்டே அவனது ‘பைக்’ மேல் ஏறி அமர்ந்தாள். 

“என்ன பிரியா… கிளம்பலாம்னு சொல்றியா?” 

“ஆமாம்… நான் இப்ப நாகமாணிக்கத்தை பரிசோதனை பண்ணிகிட்டு இருக்கேன். இந்தப் பரிசோதனையை எல்லா கோணத்துலேயும் பண்ணி பார்த்துட வேண்டியதுதான். நீ வண்டியை எடு. அந்தப் பாம்பு பின்தொடர்ந்து வருதான்னு பார்ப்போம்.”

ஆனால், அவள் அப்படி சொல்லும்போதே அந்த பாம்பு ‘டபக்’ கென்று புற்றுக்குள் உள்ளடங்கிக் கொண்டது. 

அது அவர்கள் இருவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. “என்னடா… தூக்கம் வருது, நான் படுத்துக்க போறேன்னு சொல்ற மாதிரி உள்ளே போயிடிச்சு.” 

”அதானே?” 

“சரிடா… நீ கிளம்பு. எனக்கு லேசா தலைவலிக்குது. ஒரு காப்பி குடிக்கிற வழியைப் பார்ப்போம்.”

அர்ஜுனும் அதன்பின் எதுவும் பேசாமல் ‘பைக்’கை உதைத்துக் கிளப்பினான். அது சீறத் தொடங்கியது. அந்த சத்தம் கேட்டு அவர்கள் போய்விட்டார்களா? என்பது போல ‘ திரும்பவும் அந்தப் பாம்பு எட்டிப் பார்த்தது! 


காப்பி ஷாப்! 

மெல்லிய வெளிச்சமுள்ள ஒரு மூலையாக பார்த்து உட்கார்ந்து கொண்டாள்; பிரியா. தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாதே என்று ஒரு குறுகுறுப்பு அவளிடம் தெரிந்தது. துப்பட்டாவை தலைக்கு முக்காடு போல போட்டுக்கொண்டு கூலிங்கிளாசையும் முகத்துக்கு மாட்டிக்கொண்டாள். 

அவளை இன்னார் என்று கண்டுபிடிப்பது சற்று கஷ்டம்தான். இருந்தும் ஒரு ‘டை’ கட்டிய மனிதர் அவள் எதிரில் வந்து “அலோ… அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்கவும் சற்று தூக்கிவாரிப்போட்டது. 

“நீங்க…?” 

“என்னம்மா… என்னைத் தெரியலியா? உங்க பங்களாவோட ‘ஆர்க்கிடெக்ட்’ நான்.” 

“ஓ… எனக்கு சட்டுன்னு அடையாளம் தெரியலை. அம்மா நல்லா இருக்காங்க.” 

“பத்திரிகையில் எல்லாம்கூட பார்த்தேன். பத்மஸ்ரீ ஆகப்போறாங்களாமே?”

“ஆ..மா…” – பிரியா சன்னமான உணர்வுப் பின்னலுக்குள் தர்மசங்கடமாய் உணர்ந்தாள். 

அப்போது அர்ஜுன் கையில் காப்பியுடன் வந்து சேர்ந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ், காப்பி கிளப்! 

“நீங்க இந்த காப்பி ஷாப்புக்கு வந்திருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இதோட உரிமையாளர் எனக்கு நல்ல நண்பர். அவருக்கு நீங்க யாருங்கிறது தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷப்படுவாரு!”

பேச்சோடு பேச்சாக அந்த கட்டட கலைஞன், நண்பரையே அறிமுகம் செய்து வைத்துவிடுவது என்பது போல அவரது ‘கேபின்’ நோக்கி சென்றார். 

அதை பிரியாவும் உணர்ந்து கொண்டவள் போல “அர்ஜுன்… காப்பியும் வேண்டாம்… ஒண்ணும் வேண்டாம்… கிளம்பு” என்று அவனைத் தள்ளிக்கொண்டு அங்கிருந்து பாயத் தொடங்கினாள். அவள் எதிர்பார்த்தது போலவே நண்பருடன் வந்த கட்டட கலைஞனுக்கு ஏமாற்றம். 

“இங்கதான் இருந்தாங்க… அதுக்குள்ள கிளம்பிட்டாங்க. அட… காப்பியைக்கூட குடிக்காம போயிட்டாங்களே பாருங்க…”

அவர் காப்பி கோப்பைகளைக் காண்பித்தார். அதில் நுரைத்து வழிந்த நிலையில் காப்பி! 


ஒருவருக்கு பத்து பேர்! 

அவ்வளவு பேரும் மதுரையின் தனியார் துப்பறியும் நிபுணர்கள். சிலர் ‘கோட் சூட்’ போட்டு, ‘டை’ கட்டி இருந்தார்கள். ஒருவர் தோட்டக்காரன் மாதிரி வேட்டி சட்டை, தோளில் துண்டுடன் வந்திருந்தார். அவ்வளவு பேரும் ‘லயன்’ லட்சுமிக்காக அம்பாரி மாளிகையின் ஒரு தனி குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அவ்வளவு பேருக்கும் கேட்டுக் கேட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டுகொண்டிருந்தன. 

சிறிது நேரத்திலேயே ‘லயன்’ லட்சுமி அந்த அறைக்குள் நுழைந்தாள். கூடவே, நிழல் போல சிட்டிபாபு. எல்லோரும் மரியாதையாக எழுந்து நின்றனர். 

அனைவரையும் உட்காரச் சொன்ன லட்சுமி, பார்க்க மிகவும் சோகமாக தெரிந்தாள். எப்போதும் அவள் காதிலும் கழுத்திலும் ‘ஜிகுஜிகு’ வென மின்னும் வைர நகைகளைக் காணவில்லை. 

துப்பறியும் நிபுணர்கள் புத்திசாலிகள். அவளது முகத்தை வைத்தே அவள் பெரிய அளவில் துக்கத்தில் இருப்பதை யூகித்துக் கொண்டனர். சிட்டிபாபுதான் அந்த சந்திப்பில் பேசத் தொடங்கினான். 

“உங்க அவ்வளவு பேருக்கும் மேடம் சார்பா என் வணக்கங்கள். மேடத்தோட ஒரே மகளான பிரியதர்ஷினிங்கிற பிரியா காணாம போய் இந்த நொடியோடு ஒருநாள், மூணு மணி நேராகுது… அதாவது, 27 மணி நேரம். அவங்க மட்டும் காணாம போகலை… அவங்களோடு சேர்ந்து விலைமதிப்பு மிக்க ஒரு மாணிக்கக் கல்லும் காணாம போயிருக்கு. 

இந்த விஷயங்களை மேடம், போலீஸ்ல பேச விரும்பலை போலீசுக்கு போனா ஏதோ ஒரு விதத்துல பத்திரிகைகளுக்கு தகவல் போயிடும். அது ஒருவகையில காணாம போன பிரியாவுக்கு கெடுதலாகக்கூட முடியலாம். அதனாலதான் தனியார் துப்பறியும் நிபுணர்களான உங்களைக் கூப்பிட்டு இங்கே ரகசியமான முறையில பேசிகிட்டிருக்கோம். 

சின்னமேடம் பிரியதர்ஷினிங்கிற பிரியா பற்றிய தகவல்கள் ஓர் உறையில் உங்களுக்கு தரப்படும். உங்கள்ல யார் சீக்கிரமா அவங்களைக் கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு நீங்க கேக்கற ஊதியம் தரப்படும். 

உங்களுக்கு எந்த சந்தேகம்னாலும் என்கிட்ட கேட்கலாம். நான் அதுக்கு பதில் சொல்ல தயாரா இருக்கேன். அதே நேரம், இப்படி ஒரு தேடல் நடப்பது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். இதை ஒரு சின்ன எச்சரிக்கையா சொல்லிக்க விரும்புறேன்” 

சிட்டிபாபு, ‘லயன்’ லட்சுமி பேச நினைத்ததை எல்லாம் கிட்டத்தட்ட சொல்லி முடித்துவிட்டான். அவன் பேசியதை தொடர்ந்து அம்பாரி மாளிகையின் கணக்காளர் அந்தோணிமுத்து என்பவர் ஆளுக்கோர் ‘உறை’யைக் கொடுத்தார். அதில் பிரியாவின் புகைப்படம் மற்றும் அவளைப் பற்றிய அங்க அடையாள குறிப்புகள். கூடவே ஐந்தாயிரம் ரூபாய்! 

ஒவ்வொருவருக்குள்ளும் அந்த தொகை ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. முகத்தில் ‘சுவிட்ச்’ போட்ட உடன் விளக்கு எரிகிற மாதிரி பணத்தைப் பார்த்த உடன் சிரிப்பு தொற்றிக் கொண்டது. 

‘உறை’ விநியோகம் முடியவும் ஒரு துப்பறிவாளர் எழுந்து நின்றனர். 

“என்ன… எதாவது கேள்வியா?”

“ஆமாம் சார்…” 

“கேளுங்க…” 

“சின்னமேடம் யாரையாவது காதலிச்சாங்களா?”

“இது ஒரு வழக்கமான கேள்வி. அப்படி எல்லாம் கிடையாது. ஆனா, அர்ஜுன் என்கிற சக மாணவனோடு அவங்களுக்கு நெருக்கம் அதிகம்கிறது உங்களுக்கு நான் சொல்லவேண்டிய விஷயம். அந்த அர்ஜுன் பத்தியும் இந்த உறையில் தகவல் இருக்கு…”

“உங்ககிட்ட பணம் பிடுங்கிறதுக்காக யாராவது பிளாக்மெயில்…” 

“அப்படி எல்லாம் பண்ண வாய்ப்பு இல்லை. ஆனா, மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை, மேடம் மேல ரொம்ப கோபமா இருக்கிறதால அவரை நீங்க கட்டாயம் மோப்பம் பிடிக்கலாம்…”

“ராஜதுரை மாதிரியே வேறு யாருக்காவது பகையோ, பொறாமையோ உண்டா?” 

“நிச்சயமா இருக்க வாய்ப்பு இல்லை.” 

“கொஞ்சம் நல்லா யோசிச்சுச் சொல்லுங்க… “

“நல்லா மட்டுமில்ல… எப்படி யோசிச்சாலும் இல்லைங்கிறதுதான் பதில்…” 

“அவங்களோட ஒருமாணிக்கக்கல் காணாம போனதா சொன்னீங்களே.. அதோட மதிப்பு…?”

“பல கோடி… அதுக்காக அவங்களை கடத்த வாய்ப்பு இருக்கு… அதேவேளை, மாணிக்கம் இருக்கிறது ராஜதுரை தவிர வேற யாருக்கும் தெரியாதுங்கிறது எங்க அபிப்ராயம்…”

“அப்ப ராஜதுரைதான் முக்கிய வில்லனா?” 

“இருக்கலாம்… ஆனா அந்த ஆள்கிட்ட மேடம் பேசிட்டாங்க. அவனுக்கு சின்னமேடம் காணாம போனதே தெரியலை. மேடம் பேசப்போய்தான் தெரிய வந்தது… அதே நேரம், அவன் தெரியாத மாதிரி நடிக்கவும் வாய்ப்பு இருக்கு…” 

”அந்த மாணிக்கம் வெளியே கிடைக்காத ஒரு அதிசயம் கொண்டதா?”

“கிட்டதட்ட அப்படித்தான்…” 

“செத்துப்போன நரிக்குடி ஜமீன்தார் வெச்சிருந்த நாகமாணிக்கம் மாதிரின்னு அதை எடுத்துக்கலாமா?”

ஓர் ஏஜெண்டு நெட்டு குத்தலாக விஷயத்தைத் தொட்டு விட ‘லயன்’ லட்சுமி ஒரு விநாடி ஆடிப்போனாள். பின் மவுனமாக ஆமோதித்தாள். 

‘அதேதான்’ என்று கூறிட நாக்கு துடித்தாலும், வேண்டாம் என்று ஏதோ ஓர் உள்ளுணர்வு தடுத்தது. 

சிட்டிபாபுவுக்கு தெரியாத அந்த உண்மையை போட்டு உடைக்கத் தயக்கமாகவும் இருந்தது. 

அவர்களும் அதற்குமேல் பிரதான கேள்விகள் அப்போதைக்கு இல்லாததால் எழுந்துவிட்டனர். பின்னர் தனித்தனியே கும்பிட்டுவிட்டு புறப்படவும் செய்தார்கள். 

அவர்கள் செல்லவும் சிட்டிபாபு பக்கம் லட்சுமி திரும்பினாள். 

“மேடம்…”
“‘அந்த சாமியாரைச் சந்திக்கணும்னு சொன்னேனே… “

“கோம்பை மலைக்கு நம்ம ஆட்கள்ல ஒருத்தருக்கு ரெண்டு பேரை அனுப்பி இருக்கேன் மேடம்…” 

“அவங்ககிட்ட இருந்து தகவல் ஏதாவது…”

“எதிர்பார்த்துகிட்டே இருக்கேன். தைரியமா இருங்க மேடம். நம்ப வரையில் நாம் என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் செய்தாச்சு. பிரியா மேடத்துக்கு எதுவும் ஆகி இருக்காது…” 

சிட்டிபாபு என்னதான் ஆறுதல் கூறினாலும், அழுகை என்றால் என்னவென்றே தெரியாத அவள் கண்களிலும் கண்ணீர்! 


அழகர் மலை அடிவாரம். 

டவுன் பஸ்சில் இருந்து உதிர்ந்த சிட்டிபாபு அனுப்பிய அந்த இரண்டு பேரும் பழக்கடைகளில் கண்ணில் பட்ட கொய்யா, மாம்பழம் மற்றும் சப்போட்டா என்று எல்லாவித பழங்களையும் ஓர் ஐம்பது ரூபாய்க்கு வாங்கி, தோளில் தொங்கியபடி இருந்த பையில் போட்டுக் கொண்டனர். 

அங்கிருந்த பழமுதிர்சோலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.சிறிது தூரத்திலேயே இரு இளைஞர்கள் கையில் வெள்ளரிப் பிஞ்சுகளுடன் ஒரு போட்டிக்கு தயாராக இருந்தனர். 

அழகர்கோயில் அடிவாரத்தில் இருந்து பழமுதிர் சோலை முருகன் கோயில் வரை வெள்ளரிப்பிஞ்சை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டால் அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசாம்! 

இருவரையும் அந்தப் போட்டி தூண்டிவிட்டது.

”வெள்ளரிப்பிஞ்சுகளை மேல கொண்டு போறது அவ்வளவு பெரிய விஷயமாக்கும்?” 

“கொண்டுகிட்டு போயிடுங்க பார்ப்போம். கையில கம்பு எல்லாம் வெச்சுக்கக்கூடாது.” 

“சரி… அப்படி கொண்டுகிட்டு போக முடியாதபடி என்னதான் நடக்கும்?” 

“பழமுதிர்சோலை வரை மந்திங்களால பிரச்சினை… அதுக்கு மேல மூலிகைத் தோட்டம் வழியா நடக்கையில் தேனீக்களால பிரச்சினை… அதுக்கும் மேல கோம்பை மலையை நோக்கி போகும்போது கரடிங்க கண்ணுல பட்டா அம்புட்டுதான்.” 

அந்த இருவருக்கும் அடிவாரத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதேபோல வெள்ளரிப்பிஞ்சுடன் நடந்த இளைஞர்களில் ஒருவன், ஒரு மந்தியால் துரத்தப்பட – பிஞ்சுகளை தூக்கி எறிந்து விட்டு, விட்டால் போதும் என்று ஓடிக்கொண்டிருந்தான். 

இருவரும் பழப் பையை பயத்தோடு தொட்டுப் பார்த்துக்கொண்டனர். அவர்களை ஒரு மூலையில் இருந்து கஞ்சா சாமி ஒன்றும் பார்த்துக்கொண்டே இருந்தது! 

அதன் கண்களில் அப்படி ஒரு போதை. ஆனால், தள்ளாட்டமின்றி நடந்து வந்தது. 

இருவரையும் பார்த்துவிட்டு, 

“நீங்க உங்க மாளிகையில் பாம்பு பிடிச்ச சங்கரானந்தசாமியைத் தேடி வந்தவங்கதானே?” என்று கேட்டது. 

இருவருக்குமே ஒருவித இன்ப அதிர்ச்சி! 

அத்தியாயம்-14

‘சில அடி தூரத்தில் ஒரு பாறை மேல் சடை பிடித்த தலைமுடி, இடுப்பை கடந்து தொங்க – நிர்வாணமாக ஒரு சாமியார்!’

அந்த ‘கஞ்சா’ சாமிக்கு கண் இரண்டும் செருகிக் கிடந்தாலும், பேச்சு சரளமாக வந்தது. உடம்பு லேசாக தள்ளாடினாலும், கீழே விழுந்து விடவில்லை. லட்சுமிக்காக சிட்டிபாபுவால் அனுப்பப்பட்ட அந்த இருவருக்கும் ‘கஞ்சா’ சாமியை எந்த அளவுக்கு நம்புவது என்பதில் பெரிய அளவில் குழப்பம். 

அது அவர்கள் முகத்தில் எதிரொலித்தது! “என்னய்யா யோசிக்கிறீங்க… நீங்க தேடி வருவீங்கன்னு தெரிஞ்சுதான் சாமி என்னை அனுப்பி, உங்களைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார். புறப்படுவோமா?” 

என்று ‘கஞ்சா’ சாமி திரும்ப கேட்கவும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

”என்ன, திரும்பவும் யோசனை…? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” 

“இல்ல… தேடி வந்தது நாங்கதான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” 

“தெரிஞ்சிகிட்டாதான் நான் சாமி… இல்லாட்டி உங்க மாதிரி ஆசாமியால்ல ஆயிடுவேன்?” 

“இப்படி பொதுவா சொன்னா எப்படி?” 

“விளக்கமா சொன்னா உங்களுக்கு புரியாதுய்யா. சித்தயோகம் பத்தி உனக்கு எதாவது தெரியுமா?” 

“அப்படின்னா?” 

”பாரு… சித்தயோகம்னாலே உனக்கு தெரியலை. நீ எல்லாம் கேள்வி கேக்கறே… சரி என் பின்னால் வா!” 

“அட இருங்க சாமி… ஒரு ‘புல்’ அடிச்ச மாதிரி மப்போடு இருக்கிற உங்க பின்னால நாங்க வர்றதுக்கு, நீங்க போய் அந்த் சாமியைக் கூட்டிக்கிட்டு வந்துடலாம்ல?” 

“அப்ப உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையாக்கும்?” 

“அட என்ன சாமி நீ… இந்த ஆட்டம் ஆடுறே… கண்ணெல்லாம் வேற செருகிக்கிடக்குது. உன்கூட வந்து காட்டுக்குள்ள நாங்களும் ஏதாவது பள்ளத்துக்குள் விழவா?”

“எந்த நிலையிலும் நான் விழமாட்டேன்… நீங்கதான் கவனமா வரணும். சரி, வந்தா வாங்க… வராட்டி போங்க. நான் போய் சாமிகிட்ட சொல்றேன்…” 

அந்த ‘கஞ்சா’ சாமிக்கு கொஞ்சம் கோபமும் வந்தது. உடனேயே திரும்பியும் நடந்தது. எல்லோரும் செல்லும் வழித்தடத்தில் செல்லாமல், அதுவாக ஒரு பக்கம் சென்றது. 

இருவரும் அதற்கே தெரியாமல் அதைப் பின்தொடர முடிவு செய்தபோது, அவர்களில் ஒருவனின் ‘செல்போன்’ ஒலித்தது. சிட்டிபாபுதான் பேசினான். 

“வணக்கம் சார்… நாங்க இப்ப அழகர் கோயில் அடிவாரத்துலதான் இருக்கோம்… யாருன்னு தெரியலை. ஒரு கஞ்சா சாமியார், நம்ப பங்களாவுக்கு வந்த சாமியார் கூட்டிகிட்டு வரச்சொன்னதா சொல்லி கூப்பிட்டாரு… எங்களுக்கு சந்தேகமா இருக்கவும், தயங்கி நின்னோம். ஆனா, அவரோ கோவிச்சிகிட்டு திரும்பிப் போயிட்டார்.” 

“அட கூறுகெட்டவனுங்களா… அவருக்கு தெரியாம அவர் பின்னாடியே போங்க. எப்படியாவது நம்ம வீட்டுக்கு வந்த சாமியைப் பார்த்து, கையோடு கூட்டிகிட்டு வாங்க…” 

“சரிங்க…” 

அடுத்த நொடியே இருவரும் ‘கஞ்சா’ சாமி போன பாதையில் பின்தொடர்ந்தனர்… 

குட்டையான மரங்கள், சரளை சரளையாக கற்கள், ஊட்டமாய் வளர்ந்திருக்கும் கோரைப் புற்கள் – அவற்றுக்கு நடுவில் பிணைந்து கிடக்கும் பிரண்டைக் கொடிகள் என்று அந்த பாதை முழுக்க ஒரு தினுசாக இருந்தது. 

ஒருசில இடங்களில் முதுகில் ‘பளிச்’சென்ற கறுப்பு – சிவப்பு கோட்டோடு மரவட்டைகள் வேறு… ‘விசுக்’கென்று குறுக்கில் கீரி ஒன்று இருவர் முன்னால் கடந்து போகவும், அவர்களுக்கு சற்று மனப்பிராந்தி ஏற்பட்டது. 

அந்த ‘கஞ்சா’ சாமியோ விழுவது போன்ற பாவனையுடன் – ஆனால், விழுந்துவிடாதபடி மரக்கூட்டங்களுக்குள் புகுந்து புகுந்து போய்க்கொண்டே இருந்தது. 

”டேய்… இப்படியே எவ்வளவு தூரம்டா போக…?”

“தூரமா கணக்கு… போறோம், பார்க்கிறோம். அந்த சாமியையும் பிடிச்சு இழுத்துகிட்டு வர்றோம்.” 

அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டே நடையைத் தொடர்ந்தனர். 

“நான் இதே மதுரையில் பொறந்து வளர்ந்தவன்… ஆனா, எனக்கே இப்படி ஒரு மலைப்பகுதி இருக்கிறது தெரியலை பார்த்தியா?” 

“தெரிஞ்சாதான் நாம என்ன பண்ணப்போறோம்? இங்கே நாமெல்லாம் இருக்க முடியுமா?” 

“ஏன் முடியாது… ஊருக்குள்ளே போக்குவரத்து தொல்லையிலேயும், வெயில் புழுக்கத்துலேயும் தவிக்கிறதுக்கு இங்கே வந்து நிம்மதியா இருந்துடலாம்…” 

அவர்கள், அவர்களுக்குள் பேச்சு கொடுத்துக் கொண்டேதான் நடந்தனர். இடையில் சாலையை நனைத்துக் கொண்டு ஓடியது ஒரு சிறு ஓடை! அதன் நீரில் அப்படியொரு சிலுசிலுப்பு. அள்ளிப்பருகவும், உச்சி முதல் பாதம் வரை ஒரு பரவசம் மின்னலைப் போல ஓடியது. 

“ஆத்தி… இந்த தண்ணி எவ்வளவு தித்திக்குது…?”

“மலைத் தண்ணின்னா சும்மாவா?” – அந்தத் தண்ணீரால் முகம், கழுத்து என்று நனைத்துக் கொண்டு நிமிர்ந்தவர்களுக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது. 

சில அடி தூரத்தில் ஒரு பாறை மேல் சடை பிடித்த தலை முடி, இடுப்பை கடந்து தொங்க நிர்வாணமாக ஒரு சாமியார்! 

ஏனோ அவர் கண் இரண்டும் இரத்தத்தில் ஊறியவை போல அவ்வளவு சிவப்பாக இருந்தன. அவர் எடையைவிட அவரது சடா முடியின் எடை அதிகம் இருக்கும் போல தோன்றியது. 

அவர் பார்வையிலும் ஒரு துளையிடுகிற தன்மை… அந்த நேரம் பார்த்து படபடவென்று இரு பறவைகள் மோதிக்கொள்வது போல ஓர் சப்தம். இருவர் கவனமும் திசை திரும்பியது. 

இன்னொரு பாறை மேல் ‘உள்ளான்’ பறவை ஒன்றும், வெண் தோகை ‘கிடாரி’ ஒன்றும்தான் முட்டி மோதிக் கொண்டிருந்தன. அது ஓர் அதிசயக் காட்சிதான். கிடாரியை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். அவை இரண்டும்கூட சரேலென்று வானில் ஏறி, மலையின் மறுபக்கத்துக்கு சென்றுவிட்டன! அந்த இரண்டு பேரும் திரும்பவும் சடாமுடி சாமியாரைப் பார்க்க திரும்பினர். ஆனால், அவரைத்தான் காணவில்லை. அய்யோ அவர் ஒளிய பெரிதாக பொந்தோ… புதரோகூட இல்லை. 

இருவருக்கும் லேசாக வெலவெலப்பு தட்டத் தொடங்கியது. 


அம்பாரி மாளிகையில் ‘கிரீச்’சிட்டு நின்றது. நரிக்குடி ஜமீனுக்கு சொந்தமான அந்த கார். உள்ளே நல்லமணி ஐயாவின் பேரன் ரமேஷ் என்கிற மணிகண்ட பிரபு. 

செத்துப்போனதாத்தாவுக்காக அவன் கர்ம காரியங்கள் செய்திருக்கிறான் என்பது அவனது வழவழப்பான மீசை இல்லாத முகத்தை வைத்தே தெரிந்துகொள்ள முடிந்தது. 

‘தொளதொள’ வென்று மேல்நாட்டு சட்டை ஒன்றையும், கீழே ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தான். காரைவிட்டு இறங்கும் போதே மாப்பிள்ளை தோரணை வந்துவிட்டது, அவனுக்கு… மாளிகை செழிப்பை நாலாபுறமும் பார்த்தபடி, அப்படியே செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு பங்களாவினுள் நுழைந்தான். 

உள்ளே அவனை பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வில்லை. சிட்டிபாபு, எல்லோருக்கும் வாய்ப்பூட்டு போட்டிருந்தான். அவனே எதிரில் வந்தவனாக ரமேஷிடம், “யார் சார் நீங்க… மேடம் ‘அப்பாய்ண்ட்மென்ட்’ இருக்கா?” – என்று கையை ஆட்டியபடியே கேட்டான். 

ரமேசுக்கு சிரிப்பு வந்தது. 

“அம்மாகிட்ட போய் சொல்லு… நல்லமணி ஐயா பேரன் ரமேஷ் வந்திருக்கேன்னு…”

அந்த பதில் சிட்டிபாபுவை சற்று வெலவெலக்க வைத்தது. 

“சார் நீங்க… நீங்கதான் எங்க மேடத்தோட மாப்பிள்ளையா? வாங்க சார்… வாங்க…” என்று உள்ளே அழைத்துச் சென்று, ஒரு பெரிய சோபாவில் உட்காரச் சொன்னான். அதே வேகத்தில் உள்ளே ஓடினான். 

‘லயன்’ லட்சுமி தனியறை ஒன்றில்,மூங்கில் மோடோ மேல் – காலை தூக்கிப் போட்டுக்கொண்டு – தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள். 

“மேடம், மாப்பிள்ளை சார் வந்துருக்கார்…” – என்ற குரலோடு உள்ளே நழைந்தவன், அவளை ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் அழைத்து வந்தான். வரும் வழியிலேயே “பிரியா காணாம போன விஷயம் பத்தி மாப்பிள்ளைகிட்ட மூச்சு விடக்கூடாது…” என்று வாய்ப் பூட்டும் போட்டுவிட்டாள், லட்சுமி. அவள் வரையில் ரமேஷ் வருவதை அப்போது துளிகூட எதிர்பார்க்கவில்லை… 

“வாங்க மாப்பிள்ளை” என்றபடியே சரிகை முந்தானையை இழுத்து போர்த்திக்கொண்டு, அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தாள். அமர்ந்த வேகத்தில் “என்ன மாப்பிள்ளை இது… வரப்போறதா போன் பண்ணி இருந்தா நான் வண்டி அனுப்பி இருப்பேனே?” என்று ஆரம்பித்தாள். 

“என்னவோ தோணிச்சு… அதான் வந்துட்டேன். நேத்து ராத்திரி கனவுல தாத்தா வேற வந்துட்டார்…”-அவன் பதிலில் சில அதிர்வூட்டும் செய்திகள். 

”அப்படியா?” 

“ஆமாம் அத்தை… தாத்தா என்னை தூங்கவே விடலை. ‘போடா போ.. போ… பிரியா கழுத்துல சீக்கிரமா தாலியைக் கட்டு. இல்லேன்னா அவளுக்கு ஆபத்து’ன்னு அவர் திரும்பத் திரும்ப சொல்றாரு…!”

ரமேஷ் சாதாரணமாக சொல்கிறானா… இல்லை கதை அடிக்கிறானா என்பதை லட்சுமியால் கூட அனுமானிக்க முடியவில்லை. அவன் முகத்தையே வெறித்துப் பார்த்தாள். 

“கனவு விஷயத்தை எங்கம்மாகிட்ட கூட சொன்னேன், அவங்க பயந்துட்டாங்க… என் வரையில அவர் நினைப்பாவே இருந்ததால, அது தூங்கும்போது கனவா வந்துருக்குன்னுதான் நினைக்கிறேன்… ஆமா, எங்கே பிரியா?” 

ரமேஷ் கச்சிதமாக செய்தியைப் பிடித்தான். 

“பிரியா… பிரியா… இப்பதான் சென்னை புறப்பட்டுப் போறா!” – லட்சுமியிடம் இருந்து வேகமாக ஒரு பொய் தெறித்து விழுந்தது. 

“சென்னைக்கா…?” 

“அ…ஆமாம் மாப்பிள்ளை. காலேஜ் ஆஸ்டலில் அவ பொருள்கள் எல்லாம் அப்படியே இருக்கு. இதை எடுத்துக் கிட்டு, எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு வந்துடுறேன்னு கிளம்பிப் போனா…” 

“அப்படியா… ஆமா எப்ப வருவா?”

“ரெண்டு நாள்தான்… போன வேகத்துல வந்துருவா.”

“அடடா… முதல் முதலா வரும்போதே எனக்கு ஏமாற்றமா இருக்குதே…?”

“அட… நீங்க ஒண்ணு! அப்படி ஏன் நினைக்கிறீங்க… ஒரு நல்ல விஷயம் கொஞ்சம் தள்ளிப்போய் நடக்குதுன்னு நினைச்சுக்குங்க…” 

“ஆமாம் அத்தை… நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் பள்ளிக்கூட படிப்பைக் கூட சரியா முடிக்கலை. ஆனா, பிரியா ஒரு பி.இ பட்டதாரி. உண்மையில் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு…ஆமா, பிரியாவுக்கு நான் படிக்கலேன்னு ஒண்ணும் வருத்தம் இல்லையே…?” 

”சேச்சே… நமக்கெல்லாம் படிப்பு இதோ இந்த சேலையில் உள்ள சரிகை மாதிரிதான்… இருக்கிற ஆஸ்தி பாஸ்தியை ஒழுங்கா காப்பாத்தினா போதாது?”

“சரி அத்தை… நான் கிளம்புறேன்…”

“அட என்ன இது… இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.”

“இல்லை…சாப்பிடுற மனநிலையில் இப்ப நான் இல்லை. இந்த சம்பிரதாயமெல்லாம் எதுக்கு?”

”அப்படி இல்லை… முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கீங்க… அதான் சொன்னேன். ஒரு காப்பியாவது…” பேச்சோடு இன்டர்காமில் ஆணை பறந்தது. 

அங்கு நின்றுகொண்டிருந்த சிட்டிபாபுவுக்கு அப்போது பார்த்து ‘செல்போன்’ அழைப்பு. சற்று தள்ளிச் சென்று, காதைக் கொடுத்தான். மறுபக்கமாய் கோம்பை மலையில் இருந்து சாமியார்தான் பேசினார். 

“தம்பி … நான் சங்கரானந்தம் பேசுறேன். உங்க ஆட்கள் என்னை தேடி வந்துகிட்டு இருக்காங்க போல தெரியுது. நான் அவங்களோடு வந்துடுறேன். அதை சொல்லத்தான் ‘போன்’ பண்ணினேன்.” 

“சாமி நீங்களா…? உடனே வாங்க… இங்கே ஒரே குழப்பமான சூழ்நிலை…” 

”சரி… நான் ஒரு அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்…” 

“என்ன சாமி சொல்றீங்க? அரை மணி நேரத்துல எப்படி வரமுடியும்?” 

“அது என் கவலை தம்பி… உங்களுக்கு எதுக்கு? வெச்சிடட்டுமா?” 

சங்கரானந்த சாமியார் அழைத்த எண்ணை அப்படியே தன் செல்போனில் பதிவு செய்துவிட்டு திரும்பினான். 

ரமேஷ், பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் பார்ப்பதை வைத்து சந்தேகப்படுகிறானா…? இல்லை சாதாரணமாக பார்க்கிறானா? என்று கண்டறிய முடியாத நிலை. சிட்டிபாபுவுக்குள் சட்டென்று ஒரு யுக்தி. 

லட்சுமியைப் பார்த்து, “மேடம்… நம்ம சங்கரானந்த சாமி உங்களைப் பார்க்க நேரம் ஒதுக்கிக் கேட்டாரு. அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்னேன்… அரை மணி நேரத்துல வந்துடுவேன். அவசியம் பார்க்கணும்கறாரு…” என்றாள். 

லட்சுமிக்கு புரிந்துவிட்டது. அதற்குள் காப்பியும் வந்தது. அழகான வெள்ளி தம்ளரில்… கிருஷ்ணய்யர் எனும் சமையல்காரர் அனுப்பியதை லட்சுமியும் ரசித்தாள். 

ரமேஷ் பாதி காப்பியை மட்டும் குடித்தான். மீதியை வைத்துவிட்டு, “அப்ப நான் வர்றேன்” என்று கும்பிட்டபடி கிளம்பினான். 

லட்சுமிக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது! 


அர்ஜுனின் வீடு. 

அழைப்பு மணி ஒலிக்கவும், கதவைத் திறந்தான். வெளியே – பூச்சிமருந்து அடிக்கும் ஒருவர். 

”சார்… எல்லா வீடுகளிலும் பூச்சிமருந்து அடிக்கிறோம்.” 

“பூச்சிமருந்துக்கு இப்ப என்ன அவசரம்? அதுலேயும் நாங்க வீட்டை சுத்தமா வச்சிருக்கிறோம்…” 

“அப்படி இல்ல சார்… சிக்குன் குனியா வந்துட்டா என்ன பண்ணுறதுன்னுதான் இந்த ஏற்பாடு… கொஞ்சம்கூட வாடை இருக்காது சார்… எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்.” 

“சரி சரி, வாங்க… “

“நீங்களும் கூடவே இருந்து எல்லா இடத்தையும் காட்டினா, நல்லா அடிச்சு தந்துடுறேன்.” 

அந்த ஆள் பேசிக்கொண்டே உள்ளே போய் அர்ஜுன் சொன்ன எல்லா இடங்களிலும் மருந்து அடித்து முடித்துவிட்டு – படுக்கை அறை பக்கமும் பார்வையை விட்டான். படுக்கையில் யாரோ ஒருவர் சுருண்டு படுத்திருந்தார். 

“யார் சார் அது?” 

“எங்க அப்பாய்யா…” 

பதில், முகத்தில் அறைந்தது. 

எல்லாம் முடிந்து வெளியே வந்த அந்த ஆள், முதல் காரியமாக செல்போனில் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரைத்தான் அழைத்தான். 

”சார்… வீட்டுக்குள்ள பூச்சிமருந்து அடிக்கிற சாக்குல முழுவதுமாக பார்த்துட்டேன். அந்தப் பொண்ணு இங்கே இல்லை!” 

“அந்த அர்ஜுன் எப்படி இருக்கான்?” 

“ரொம்ப இயல்பா இருக்கான் சார். நல்லா ஓவியம் வரைவான் போல இருக்கு… அவன் அறை பூரா ஓரே ‘சீனரிஸ்’தான்…” 

”சரி… நீ ‘மேக்கப்’பை மாத்திகிட்டு அவனை இன்னிக்கு பூரா கண்காணிச்சுக்க…” 

“சரி சார்…” – பேச்சு முடிந்தது. 

அடுத்து…? 

அர்ஜுனுக்கு தொலைபேசி செய்தி, வெற்றிதகவலை சொல்ல ஆரம்பித்தது. 

“மிஸ்டர் அர்ஜுன்… நீங்க தாக்கல் செய்த ‘புராஜக்ட் ஒர்க்’ ஒப்புதல் ஆகி இருக்கு… அதுக்கு தங்கப்பதக்கம் தரவும் கவுன்சில்ல முடிவு செய்து இருக்காங்க…” 

”வாவ்!” – அர்ஜுன் துள்ளிக் குதித்தான். 

நாகமாணிக்கம் வேலை செய்கிறதா? மகிழ்ச்சியான அந்த செய்தியைச் சொல்வதற்காக பிரியாவை தொடர்புகொண்டான். புதிய செல்போன், புதிய எண். 

“பிரியா… நாகமாணிக்கம் நல்லா வேலை செய்யுதுடா. என்னோட ‘புராஜக்ட்’டுக்கு தங்கப் பதக்கம் கிடைச்சிருக்கு. அதுக்கு 5 லட்ச ரூபாயை நம்ப காலேஜ் கவுன்சிலே அனுமதிக்க முடியும்.” 

“என்ன ‘புராஜக்ட்’ அர்ஜுன்?” 

“சூரிய சக்தியை பயன்படுத்தி, போக்குவரத்து ‘சிக்னல்’களை எப்படி இயக்க முடியும்கிறதுதான், என் ‘புராஜக்ட்’! இது ‘ஓ.கே.’ ஆயிட்டா போக்குவரத்து போலீசார் தேவையில்லை. அதே நேரம். ஆள் இல்லையேன்னு யாராவது விதியை மீற நினைச்சா, அவங்களை படம் எடுத்து பக்கத்து போலீஸ் நிலையத்துக்கும், ‘ஆர்.டி.ஓ.’ ஆபீசுக்கும் தகவல் தந்துடும். அடுத்த நிமிடமே அவங்க வாகன பதிவு எண், அடுத்த சிக்னலில் எச்சரிக்கையோடு ‘டிஸ்பிளே’ ஆகும்.” 

”ஓ… சபாஷ்…” 

பிரியாவும் அவனைப் பாராட்டினாள். “உன் புராஜக்டுக்கு நாகமாணிக்கம் இல்லாமலேகூட தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா நான் நினைக்கிறேன்” என்றாள். 

“அப்படின்னா?” 

“இன்னொரு நல்ல சம்பவத்துக்கு காத்திருப்போம். நடக்குதா பார்ப்போம்.” 

“அதுவும் சரிதான். ஆனா, உங்க அம்மாவோட ஏவுகணையில் ஒண்ணு, கொஞ்சம் முந்தி பூச்சிமருந்து அடிக்கிறேன்னு சொல்லிகிட்டு என் வீட்டுக்கு வந்து நோட்டம் போட்டுட்டுப் போயிருக்கு. நீ ஜாக்கிரதையா இரு.” 

“அப்படியா… சரிடா. நீ கொஞ்சம் வேகமா கிளம்பி வா.நான் ‘பர்தா’வோடு தயாரா இருக்கேன். நாம ரெண்டு பேரும் திருப்பதி வரை போயிட்டு வருவோம்.” 

பிரியா சாதாரணமாக பேசினாள். அவனிடமும் மறுப்பில்லை! 


சொன்னது போலவே அரைமணி நேரத்தில் சங்கரானந்த சாமியார், அம்பாரி மாளிகையில் ‘லயன்’ லட்சுமி முன் பிரசன்னமாகிவிட்டார். கூடவே, அந்த இருவரும்! அவர்கள் சங்கரானந்த சாமிக்கு சீடர்களாகவே ஆகிவிட்டிருந்தனர். 

”என்னம்மா… மகள் காணாம போயிட்டாளா?” லட்சுமி எதுவும் கூறாமலே சங்கரானந்தம் கேள்வியைக் கேட்டார். 

லட்சுமிக்கு ‘திக்’ கென்றது! 

அத்தியாயம்-15

‘அதெல்லாம் சித்த ரகசியம். நாக வசிய பூஜை வெற்றி அடைஞ்சா, மாணிக்கக்கல்லை தேடி நாகங்கள் நிறையவே வரும். அப்படி வர்ற நாகங்களுக்கு பால் வார்த்து, அவற்றோட பசியைப் போக்கினா அது ஒரு தோஷ நிவர்த்தி!’

அம்பாரி மாளிகைக்குள் நுழைந்த ஜோரில் சங்கரானந்த சாமிகள் கேட்ட கேள்வி ‘லயன்’ லட்சுமியை அதிர வைத்தது. 

”சாமி… என்மகள் காணோம்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களைக் கூட்டிகிட்டு வந்த இவங்க சொன்னாங்களா?” 

“இவங்க எதுக்கு சொல்லணும்? நான் திருஷ்டாந்தம் உள்ளவன். ஒருத்தர் முகத்தை பார்த்தே மனசுல ஓடுறதை சொல்லிவிடுவேனே?” 

“அப்ப சரி சாமி” என்றவள், அனைவரையும் தவிர்த்து விட்டு, தனி அறைக்குள் அவரை அழைத்துச் சென்றாள். 

”சாமி… என் மகள் இப்படி செய்வாள்ன்னு நான் எதிர்பார்க்கலை” என்று ஆரம்பித்தாள். 

“இப்ப உன் மகள் திரும்பி வரணும். அவ்வளவு தானே?” 

“ஆமாம் சாமி… உங்களால் அதாவது உங்க திருஷ்டியால அவ எங்க இருக்காள்ன்னு கண்டுபிடிச்சு சொல்ல முடியுமா?”

“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அதே நேரத்தில், ஒரு பாதியைத்தான் நீ சொல்றே. இன்னொரு பாதியை மறைக்கிறியேம்மா..”

சாமிகள் சரியாக விஷயத்தைப் பிடித்தார். 

“அது… அது…”

“என்ன தயக்கம்? என் வரையில் முழுமையா நம்பினாதான் நான் உதவி செய்வேன். நான் கூலிக்கு மாரடிக்கிற ஆள் இல்லை. எனக்கு பணம் காசு தேவையும் இல்லை.” 

“அது… அது… சரி சாமி … நான் நேராவே விஷயத்துக்கு வந்துடுறேன். என் மகள் ஒரு விலை உயர்ந்த நாகமாணிக்கக் கல்லையும் எடுத்துக்கிட்டு போய் விட்டதாதான் எனக்கு தோணுது.” 

“அப்படிச் சொல்லு.” 

”இதுல எனக்குள்ளே ஒரு குழப்பமும் இருக்கு. மாணிக்கக் கல்லை அவதான் எடுத்துக்கிட்டு போனாளா? இல்லை, அவளையும் மாணிக்கக் கல்லையும் ஒரு சேர யாராவது கடத்திட்டாங்களான்னும் எனக்கு சந்தேகமா இருக்கு.” 

“அப்படி நீ யாரையாவது சந்தேகப்படுறியா?”

“மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை…” 

”சரி… விஷயத்தை என்கிட்ட விட்டுடு. நான் உன் மகளை கண்டுபிடிக்கிறேன். உனக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்யுறேன். பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வியா?”

“சொல்லுங்க சாமி… நான் என்ன செய்யணும்?”

“அந்த நாகமாணிக்கத்தை ஒரு மண்டலம் நான் வைச்சிருக்க அனுமதி தரணும். தருவியா?”

“சாமி…ஈ…” 

“ஏன் பதறுகிறே? ஒரு மண்டலம்தான்! அதாவது 48 நாள். அதன்பிறகு நான் அதை திருப்பிக் கொடுத்திடுவேன்.”

“உங்களுக்கு அது எதுக்கு சாமி?”

“நான் ஒரு பூஜையை செய்ய விரும்புறேன். அதுல நாக வசிய பூஜைன்னு ஒண்ணு உண்டு. அந்த பூஜைக்கு நாகமாணிக்கம் அவசியம் தேவை.”

”நான் கேள்விப்பட்டதே இல்லையே?”

“அதெல்லாம் சித்த ரகசியம்… நாக வசிய பூஜை வெற்றி அடைஞ்சா மாணிக்கக்கல்லை தேடி நாகங்கள் நிறையவே வரும். அப்படி வர்ற நாகங்களுக்கு பால் வார்த்து, அவற்றோட பசியை ஆத்தினா அது ஒரு தோஷ நிவர்த்தி. அதோடு, அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இச்சாதாரி நாகங்களை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைக்கும்.”

“இச்சாதாரி நாகங்களா…? நான் கதையிலதான் படிச்சிருக்கேன்.”

“வாழ்க்கைதானே கதையாகுது…” 

“அப்ப இச்சாதாரி நாகமெல்லாம் உண்மையா?” 

“உனக்கு எதுக்கு சந்தேகம்? அந்த பூஜையை நான் செய்யும்போது நீ கூடவே இருக்கலாம். கண்ணால பார்த்து தெரிஞ்சுக்கோ.”

”சாமி. நீங்க சொல்லுற விஷயங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். என் மகளை கொஞ்சம் கண்டுபிடியுங்களேன். அவ நல்லா இருக்காளான்னு தெரிஞ்சாகூட போதும்… அவளுக்கு என்னவோ ஏதோன்னு என் மனசு கிடந்து துடிக்குது…”

லட்சுமி, சாமியாரிடம் கெஞ்சிய போது அவளது செல்போனில் அழைப்பொலி! 

“ஒரு நிமிடம் சாமி…” என்றபடி சற்று ஒதுங்கியவள் காதில் துப்பறியும் நிபுணர் ஒருவர் நுழைந்தார். 

“மேடம்… உங்க மகளை கண்டுபிடிச்சிட்டேன்!”

“அப்படியா… இப்ப எங்க அவ?” 

லட்சுமியிடம் துடிதுடிப்பு. 

“அவங்களும், அவங்க காதலனுமா திருப்பதிக்கு காரில் போய்க்கிட்டு இருக்காங்க.” 

“என்னது…திருப்பதிக்கா?” 

“ஆமாம் மேடம்… அந்த கார் டிரைவரே எங்க ஆள்தான்!” 

“அப்ப அவரை இங்கே கூட்டிட்டு வரச்சொல்.”

“அது எப்படி மேடம் முடியும்? நீங்கதான் வழியில அவங்களைப் போய் சந்திக்கணும்.” 

”நான் சொல்ற மாதிரி செய்யுய்யா. காரை எங்கேயும் நிறுத்தாம அம்பாரி மாளிகைக்கு விடச்சொல். உன் டிரைவர்கிட்ட நான் உடனடியாக பேசியாகணும்.”

“மேடம்…” 

“நான் சொன்னதைச் செய்.” 

“சரிங்க மேடம்… ஒரு அஞ்சு நிமிடத்துல உங்களைக் கூப்பிடுறேன். என் டிரைவரை நான் காரை திருப்பிகிட்டு வரச்சொல்லிடுவேன். ஆனா, உங்க மகளும், அவங்க! காதலனும் ஓடுற கார்ல இருந்து குதிச்சுட்டா அப்புறம் என்னை நீங்க எதுவும் சொல்லக்கூடாது.” 

“சரி… நான் இப்ப உன்கூட வர்றேன். நாம இப்ப அவங்களைப் போய் மடக்கிறோம். சரியா?”

“இது ஒருவிதத்துல சரியான முடிவு மேடம்.” 

“சரி… உடனே வா… நாம கிளம்புவோம்.” செல்போனை முடக்கிவிட்டு, திரும்பி வந்தாள். லட்சுமியைப் பொறுத்தவரை சாமியார் இப்போது வேண்டாத ஒருவராகத் தெரிந்தார். 

“சாமி…” 

“என்னம்மா… மக கிடைச்சிட்டாளா?”

“ஆமாம்… நான் துப்பறியும் நிபுணர்களிடமும் சொல்லி இருந்தேன். அவங்களே கண்டுபிடிச்சிட்டாங்க.”

“அப்ப நான் கிளம்புறேன்.” 

“நல்லது சாமி உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்…” 

“பரவாயில்ல… அதே நேரம் இன்னொரு முறை என் உதவி தேவைப்பட்டா என் கோரிக்கைக்கு சம்மதிக்கிறதா இருந்தா மட்டும் என்னைக் கூப்பிடும்மா.”

“அதைபத்தி அப்புறம் பார்த்துக்காலம் சாமி. இத்தத் தடவை நான் என் மகளை கட்டுப்பாடு இல்லாமல் விட்டாத்தானே?”

லட்சுமி குரலில் ஒரு தனி தெம்பு தெரிந்தது. சாமியார் எதுவும் கூறாமல் மர்மமாய் புன்னகைத்தபடியே திரும்பத் தொடங்கினார். 

லட்சுமியையும் அது உறுத்தத்தான் செய்தது! 


கம்பக்குடி ஜமீன் கைலாசநாதன் ரமேஷை போட்டு கலக்கிக்கொண்டு இருந்தார். 

”என்ன ரமேஷ் நீ… எப்படி அந்த லட்சுமி பேச்சுல உனக்கு சந்தேகம்னு ஒண்ணு வந்துடிச்சோ அப்பவே அதை முழுமையா தீர்த்துக்கிற வழியைப் பாரு.” 

“அதான் எப்படின்னு யோசிக்கிறேன்”. 

“என்னத்த யோசிக்க… இப்பவே கிளம்பிப் போ. நான் கொஞ்சம் பிரியா கூட பேசணும்னு சொல்லி போன் நம்பர் கேளு. அப்படியே இன்னும் இரண்டு நாள்ல நல்ல முகூர்த்தம் வருது. அன்னிக்கு நம்ம கல்யாணம்னு அவகிட்டே சொல்லு. அவ முகபாவனையைக் கூர்ந்து கவனி”. 

“கல்யாணம் பத்தி எல்லாம் நான் பேசுறது நல்லா இருக்காது. என்னோட அம்மச்சி, அத்தைன்னு உரியவங்க போய் பேசட்டும்.” 

“சரி… அப்படிதான் செய். எனக்கென்னவோ அந்தப் பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டுவேன்னு தோணலை…”

”ஏன்மாமா உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கை?”

“நீ சொன்னது… நான் கேள்விப்பட்டதுன்னு எல்லாவற்றையும் கூட்டிக்கழிச்சு பார்த்தா அப்படித்தான் நினைக்க வேண்டி இருக்கு.” 

“அப்படி என்ன கேள்விப்பட்டீங்க?” 

“அந்தப் பொண்ணு ஒருத்தனை காதலிக்கிறா, ரமேஷ்…” 

“உங்களுக்கு யார் சொன்னது?” 

“இதெல்லாம் வேண்டாத கேள்வி? நான் சொல்றதைக் கேள். உன் தாத்தா, மாணிக்கத்தை வைச்சி லட்சுமியை 
மடக்கி இருக்கார். அதுக்கு அந்த மாணிக்கக்கல்லை தூண்டிலா போட்டுருக்காரு…” 

“அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே மாமா… இப்ப அதை எதுக்கு சொல்லிக்கிட்டு?” 

“எதுக்கு சொல்லிக்கிட்டா… அந்தப் பெண்ணை நீ கட்டியே தீரணும். லட்சுமியோட அவ்வளவு சொத்தும் உனக்கு வந்தாகணும்.” 

“நான் அவங்க மாப்பிள்ளையானா அப்படித்தானே நடக்கும்?” 

“ஆனாதானே?’ 

“திரும்பவும் சந்தேகமா?” 

“சந்தேகம் இல்லை… நான் அடிச்சு சொல்றேன். அந்தப் பொண்ணு மனசுல நீ இல்லை.” 

“சரி… இப்ப என்னதான் பண்ணச் சொல்றீங்க?”

“மாணிக்கக்கல்லை திரும்ப கேளு, ரமேஷ். அது என்ன நாலாணா எட்டணா சமாசாரமா… விட்டுக் கொடுக்க?”

“என்ன மாமா நீங்க… நான் அதை விடுவேனா?”

“விட்டுக்கிட்டே இருக்கே… ஆனா, உனக்கு தெரியலை”

“சரி… நீங்களும் என்கூட வாங்க. ரெண்டுல ஒண்ணு பார்த்துடுவோம்.”

“நான் வர்றது இருக்கட்டும். எனக்கு நீ ஒரு காரியம் பண்ணியே தீரணும்.”

“தெரியும். அந்த கல் உங்களுக்கு விலைக்கு வேணும் அவ்வளவுதானே?”

“விலைக்கு தந்தாலும் சரி… எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு. அதை கட்டிகிட்டாலும் சரி…”

கைலாசநாதன் அப்படிச் சொன்ன நொடி, ரமேஷிடம் ஒரு குபீர் திகைப்பு! 

“மாமா..”

“இதோ பாரு… நான் மனசாரத்தான் சொல்றேன். உங்க தாத்தாவுக்குத்தான் எங்க ஜமீன் மேல எப்பவும் நல்ல அபிப்ராயம் இல்லை. அதான் என் தங்கச்சி இருக்கும்போதே லட்சுமி மகளுக்கு உன்னை பேசினார். நானும், அவர் உயிரோடு இருந்தவரை இந்த விஷயத்துல எதுவும் பேச முடியலை.. “

“மாமா… அந்த கல்லுமேல உங்களுக்கு அப்படி ஒரு மதிப்பா?”

“கல்லோடு எங்க வீட்டு மாப்பிள்ளையா நீ வந்துடு. அப்புறம் தெரியும் அதோட சக்தி.”

”அப்ப சரி… எனக்கும் லட்சுமியோட பொண்ணு மேல பெரிய ஈர்ப்பு கிடையாது. அதுவும் ஒரு படிச்சகுதிரை. அதனால கல்லை திருப்பிக் கொடுத்துடு ஆத்தா…. கல்யாணமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்னே சொல்லிடுறேன்.” 

“ஆகா… அற்புதமான முடிவு. ஆனா, இதுல நீ உறுதியா இருக்கணும்… இருப்பியா?” 

“எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா, தாத்தாவோட கடைசி ஆசையை நான் நிறைவேத்தாம போயிட்டதா கெட்ட பேர் வருமேன்னு பார்க்கிறேன்.”

“நீ எங்க நிறைவேத்தாம போனே? அந்த பொண்ணு தான் கூட படிச்சவனை காதலிச்சு, உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா. பழி அந்தப் பொண்ணு மேலதான் விழும். நீ கவலையேப்படாதே ரமேஷ். “

”என்னமோ… அந்தப் பொண்ணு கூடவே இருந்து பார்த்த மாதிரி பேசுறீங்க மாமா?”

“அப்படித்தான் வைச்சுக்கோயேன்…”- பேச்சோடு கண்சிமிட்டினார், கைலாசநாதன். 

“சரிங்க மாமா… கிளம்புங்க. உண்மை – பொய்யை ஒரு கை பார்த்துடுவோம்”- ரமேஷ் அப்போதே அவரோடு லட்சுமியை சந்திக்க கிளம்பிவிட்டான். 

அவனுக்கு மிகப் பிடித்த இரும்புக் குதிரை போன்ற காரில் கைலாசநாதனுடன் அம்பாரி மாளிகைக்கு வந்தபோது- அப்போதுதான் லட்சுமி, பிரியாவை மடக்குவதற்காக துப்பறியும் நிபுணருடன் வெளியேறி இருந்தாள். 

சிட்டிபாபு, ரமேஷை உட்கார வைத்து தாங்கு தாங்கு என்று தாங்கத் தொடங்கிவிட்டான். 

“மாப்பிள்ளை சார்… இப்பதான் அம்மா ஒரு அவசர வேலையா வெளியே போனாங்க. ஏதாவது முக்கிய விஷயமா?” 

“ஆமா… அவங்களை பார்க்கத்தான் வந்தேன்.”

“போன் போட்டு தரேன்… பேசுறீங்களா?”

“இல்ல… வேண்டாம். நான் நேரிலேயே பேசிக்கிறேன். ஆமா,எப்ப வருவாங்க?”

“அது தெரியாது.” 

“உதவியாளர் நீ கூட போகலையா?”

“நான்தானே உங்களை மாதிரி வர்றவங்க போறவங்களைப் பார்த்துக்கணும்.”

“சரி… அவங்க வந்த மறுநிமிடம் எனக்கு போன் பண்ணு. நான் வந்து பார்க்கிறேன்.”

ரமேசும், கைலாசநாதனும் ஏமாற்றத்துடன் காரில் ஏறிக் கிளம்பினர். 

அம்பாரி மாளிகைக்கு வெளியே சாலை ஓரமாக தள்ளுவண்டிக் கடை போட்ட ஒருவன் – கார் அவனைக் கடக்கவும் தன்வசம் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டவனாக “அண்ணே… எல்லா ஏற்பாடும் தடபுடலா நடக்கிற மாதிரிதான் தெரியுது. நல்லமணி அய்யா பேரன்கூட வந்துட்டு இப்பதான் போறான்” என்றான். 

“அவன் முழுசா வீட்டுக்கு போய் சேரக்கூடாதுடா… தூக்கிடுங்க…” – கட்டளையிட்ட குரல், மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரையுடையது! 

“அண்ணே..” 

“பொண்ணு காணோம்னு படம் காட்டிகிட்டு கல்யாண ஏற்பாட்டை ஒரு பக்கம் பண்ணிகிட்டு இருக்கா, அந்த லட்சுமி. அந்தப் பையனை இப்ப விட்டா அப்புறம் போட முடியாது… என் மேல லாரியை ஏத்தப் பார்த்த மாதிரியே அவன் மேலேயும்…”

“சரிங்கண்ணே… அரை மணி நேரத்துல அவன் காலின்னு தகவல் வரும்ணே…” 

அவன் போனை முடக்கிவிட்டு, சொன்னபடி செய்ய தயாரானான். 

– தொடரும்…

– யாரென்று மட்டும் சொல்லாதே…  (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *