பரவாயில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 1,327 
 
 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“மன்னிக்க வேண்டும். தலைவரை அழைக்கப் போகிற அவசரத்தில் தவறிவிட்டேன் ; பார்க்கவில்லை” என்று கூறி நிற்கிற ராமசாமியிடம்,”பரவாயில்லை” என்று போய்விட்டாள் காமாட்சி. 

அன்றிரவு ராமுவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. என்ன என்னவோ கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டான். ‘ஆம், நான் அன்று மகளிருக்குப் பட்டக் கல்வி வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்துப் பேசிக் கொண்டிருக்கையில் அவள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க வில்லையா? மற்றொரு நாள், நான் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும்போது நானும் சிரித்தேன்; அவளும் சிரிக்கவில்லையா? ஆம், இதில் ஏதோ தெய்வச்செயல் இருக்கிறது’ என்று நினைத்து அல்லல் உறுவான் ஆனான். 

மறுநாள், காமாட்சி வரும் வழியை நோக்கி நின்றுகொண்டு இருந்தான். “உங்கள் மனோன்மணியம் வேண்டும். நாளையே திருப்பித் தருவேன் ” என்றான்; பெற்றான். 

அடுத்த வருஷம் ராமுவும் காமுவும் பேசிக்கொண்டு நிற்கிறார்கள். 

“ஏன் என்னை இப்படி வஞ்சித்தாய்?”

“எப்படி?” என்கிறாள். 

“என்மேல் அன்புள்ளவள்போல், காதல் உள்ளவள்போல், இவ்வளவு காலம் நடித்துவிட்டு இப்போது ஏமாற்றுவது நியாயமா?” 

“எப்பொழுதாவது காதலிப்பதாக நான் சொன்னது உண்டா?”

“சொல்ல வேண்டுமா? சொல்லுவாயா? நீ நடந்து வந்த விதத்தில் நான் அறியவில்லையா? இப்பொழுது திடீரென்று-” 

“நீங்களாகக் கோட்டை கட்டியிருந்தால் நான் என்ன செய்வது?” என முகத்தைச் சுளிக்கிறாள். 

“என்ன செய்வது? என்னை மணந்தால் வாழ்வேன்; அன்றேல் சாவேன். உறுதி” என்கிறான் ராமு. 

“இது என்ன சங்கடம்? என்றும் நான் உங்களைத் தமையன் என்ற நிலையில் எண்ணி வந்தேனே தவிர வேறு இல்லை. உங்கள் அத்தை மகள் கமலாவைப்பற்றிக் கூறுவீர்களே; அவளை மணந்து கொள்ளுங்கள். ஒரு பெண்ணுக்காக உயிர் விடுவதெல்லாம்-” 

“உயிர்விடவே துணிந்தேன். சந்தேகம் இல்லை. பயமுறுத்தவில்லை”. 

“உங்கள் படிப்பு இவ்வளவுதான் பயன்படுகிறதோ?” 

“படித்த பெண் ஆனதால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய். என் உயிர் உன் கையில் இருப்பது மாத்திரம் உண்மை. எந்த வாக்குக் கொடுக்கவேண்டும் எனினும் தயார்” என்கிறான் ராமு. 

காமுவுக்கு உண்டான கலக்கத்திற்கோ எல்லையில்லை. “அம்மாடியோ’ என்று ஓடிவிடலாமா எனப் பார்க்கிறாள். ஆயினும், உயிர்விடுவேன் எனக் கதறும் ராமுவுக்குத் தேறுதல் சொல்லாமற் போவதற்கும் விருப்பம் இல்லை. 

“ராமு, வருந்தாதீர்கள். நான் இல்லாவிட்டால், எத்தனையோ பெண்கள் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். உங்கள் அறிவுக்குப் பொருத்தம் அன்று,நீங்கள் நினைக்கிறபடி எல்லாம் நடப்பது என்பது. வீட்டிற்குப் போய் நன்றாக யோசியுங்கள்”. 

“நீ வேண்டுமானால் போய் யோசித்துச் சொல். ஆனால், ஒன்று: நாளைக்குக் கண்டிப்பாக இதே இடத்திற் காண வேண்டும். பத்து மணிக்கு வந்து காத்திருப்பேன். இரவு தூங்கவே முடியாது. இல்லை என்று சொல்லாதே, காமு!” எனக் கெஞ்சுகிறான். 

இசைந்து சென்ற காமுவுக்கு இரவெல்லாம் சிந்தனை. தகப்பனாரிடம் இவ்விஷயத்தைச் சொல்ல இஷ்டமே இல்லை. “காலேஜு பிரின்சிபாலிடம்” என ஒரு கணம் நினைத்தாள். ஆனால் உடனே விடுத்தாள். 

மறுநாள் 9-மணியில் இருந்தே அவன் காத்திருக்கிறான். 10- 25-க்குத் தலையை வகிராமல், பொட்டு வைக்காமல், காலிற் செருப்புப் போடாமல் பையப் பைய அந்தப் பக்கம் வருகிறாள், காமாட்சி. 

“என்ன முடிவு செய்தாய்? இல்லையென்று சொல்லவும் துணிவாயா?” என ஏங்குகிறான் ராமு. 

“என்னை மறந்துவிடுங்கள்” என்று அவள் ஓடப் பார்க்கிறாள்.

“பின் ஏன் நாளை ஆகட்டும் என்றாய்? 

“நீங்கள் தாம் நாளைச் சொல்லு என்று கூறினவர்”. 

“என்னை  ஏமாற்றிவிட்டாயே! இதுதான் பெண்டிர்க்கு அழகோ?” எனக் கோபிக்கிறான் ராமு. 

“பிதற்றாதீர்கள். என்றைக்கு நான் நம்பிக்கை கொடுத்தேன், இன்று ஏமாற்ற?” 

“என்றா? என்றும்”. 

“எப்படி? பைத்தியமா என்ன?” 

“டென்னிசில் நான் சோழப்பனை வென்ற அன்று வாழ்த்தினாய் ; இல்லையா?” 

“காங்கிரேட்ஸ் (congrats) என்பதன் அர்த்தம் காதல் ஆகுமா?” 

“ஆலிவர் அன்று பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது என்னைப் பார்த்துப் பார்த்துக் கூட்டத்திற் சிரித்தாய்; இல்லையா?”

“அது தப்பா? அட தெய்வமே!” 

“என்னைக் கொல்வதுபோற் சிரித்தாயே! அதற்கு அர்த்தம் என்ன?”

“அர்த்தம்! உங்களை மணந்துகொள்வது போலும்! என்ன கேவலம்! அவர் கூறிய கருத்துக்கள் உங்கள் கருத்துக்களை ஒட்டி இருந்ததால் சிரிக்கப் போக, இப்படி வம்பாக விளைகிறதே!” என்று சொல்லி வருந்துகிறாள் காமு. 

“முன், விடுமுறைக்குப் பிறகு நாம் சென்னை வந்துகொண்டிருந்தபொழுது-” 

“அப்பொழுது என்ன?” 

“செங்கற்பட்டு ஸ்டேஷனில் நான் பூவும் காபியும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேனே”. 

“ஆமாம், அதனால் நான் உங்கள் காதலை ஒப்புக்கொண்டேன் ஆக்கும்!” 

“கொடுத்த பூவை வாங்கி அணிந்தால் உடம்பாடு என்று புஸ்தகம் சொல்கிறதே!”

“அந்தப் புஸ்தகத்தைக் கொண்டுபோய் உடைப்பிலே போடுங்கள். நான்தான் அதற்கு உரிய சில்லறையை அப்பொழுதே கொடுத்தேனே. நீங்களே பெறவில்லை. அதனால் இப்படியெல்லாம் அர்த்தம் பண்ணிக் கொள்வதா? ரொம்ப நன்றாக இருக்கிறது!” 

“விடுமுறை நாட்களில் ஊரிலே நீ வீட்டுத் திண்ணையிலும் வாசலிலுமாக நின்றுகொண்டு இருந்ததில்லையா?” 

“நாயகர் ஆகிய தாங்கள் வருவீர்கள், காணலாம் என்ற ஆசையினாலே நின்றுகொண்டு இருந்தேன் ஆக்கும்! உள்ளே காற்றோட்டம் இல்லையே என்று நினைத்து வாசலண்டை வந்தேன். நாங்கள் வரவே கூடாது போலும்! என்ன அநியாயம்?” 

“அநியாயமா? நியாயமே நான் சொல்வது. வாசற் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற பெண் பிறரால் வசப்படுத்தத் தக்கவள் என்று காம சூத்திரம் சொல்லுகிறதே!” 

“ரொம்ப பேஷ். அந்தச் சூத்திரத்தைக் கட்டிக்கொண்டு அழுங்கள். இன்னும் யாராவது அப்படிப்பட்ட பெண் இருக்கிறாளா என்று பாருங்கள்” 

“அன்று என் முன்னிலையில் உன் அக்காள் குழந்தைக்கு நீ முத்தம் கொடுக்கவில்லையா?”

“குழந்தையை முத்துவதும் தப்பா?”

“ஆடவர் மத்தியில் குழந்தைக்கு முத்தம் இடுவது மாதர் காதலைக் காட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறதே!” 

“அந்தச் சாஸ்திரம் எனக்குத் தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேனோ என்னவோ! ஆனால், இந்தப் புஸ்தகங்களைப் படித்துத் தப்பாக என்னைப்பற்றி நினைத்துவிட்டீர்களே என்று தான் என் மனம் புண்ணாகிறது. இந்தப் புஸ்தகங்கள் -” 

“அது கிடக்கட்டும். அன்று நான் உன்மீது இடித்துவிட்ட போது ‘பரவாயில்லை’ என்று சொன்னாயா இல்லையா?” 

“அங்கேயா வந்தது தப்பு? நீங்களே இடித்துவிட்டீர்கள். பார்க்கவில்லை. கூட்டத்திற்குத் தலைவரை அழைக்கப் போகிற அவசரம், மன்னிக்கவேண்டும் என்று எல்லாம் சொன்னீர்கள். ‘பரவாயில்லை’ என்று போனேன். அதைப் போய்ப் பிரின்சிபாலிடம் சொல்லி வீணாகக் காரியதரிசிக்குத் தண்டனை வாங்கித் தர இஷ்டம் இல்லாததால், நீங்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் விட்டுப்போனேன். அது இவ்வளவு தூரத்துக்கு கொண்டுவந்துவிடும் என்று தெரியாது போயிற்று. இப்பொழுது வேண்டுமானால் -” என்று சொல்லிக்கொண்டே இரண்டு அடி எடுத்து வைத்தாள் காமாட்சி. 

தெருவிலே மண்டியிட்டு, “வேண்டாம், வேண்டாம்.உன்னை அடியோடு மறந்துவிட்டேன். மன்னித்துவிடு. ஒன்றுஞ் சொல்லி விடாதே. மானம் போய்விடும்” என மன்றாடுகிற ராமுவைப் பார்த்து ஓர் இரக்கச் சிரிப்புச் சிரித்துவிட்டு, “என்றும் உங்கள் தங்கை” என்று கூறி நழுவுகிறாள் காமு. 

“பரவாயில்லை!”

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *