கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 43,739 
 

“செந்தில்… நான் ஒண்ணு கேட்கட்டுமா…? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி.

” தேன்மொழி என்ன விளையாட்டு இது..? கணக்கு பாடத்தில சந்தேகம்னுதானே கூப்பிட்டுஅனுப்பினே..? ”

” போ.. செந்திலு… எப்பவும் உர்ருணுதான் இருப்பியா.. ? நான் சொன்னதை எல்லாம் விளையாட்டா எடுத்துக்கிறியா…? என் மனசுல உன்னை தவிர யாருக்கும் இடம் கிடையாது… என்னை புரிஞ்சிக்கமாட்டியா…?

” இதப்பாரு தேனு… பாட சம்மந்தமா பேசறதா இருந்தா.. நான் இருக்கேன்.. இல்லே ..இப்பவே எந்திரிச்சு கிளம்பறேன்…என் மனசுல வாழ்க்கையில முன்னேறனும்னு ஒரேஎண்ணம்தான் இருக்கு.. உங்க நிலத்தில கூலி வேலை செய்யற எங்கப்பா என்னை இந்தளவுக்கு படிக்க வைக்கிறார்னா… நான் நல்ல நிலைமைக்கு வந்து அவங்களை சுகமாவச்சிருக்கணும்… அது மட்டும்தான் என் கனவு…ஆசை எல்லாம்… உங்க அந்தஸ்துக்குதேவையில்லாம என்னை நினைக்காதே….”

” ஆமா.. என்ன பெரிய அந்தஸ்து…உங்களை மாதிரி நல்லவர் முன்னாடி அதெல்லாம்பெரிசில்ல…அடுத்த மாதம் உங்க படிப்பு முடிஞ்சிட்டா.. இரண்டே வருஷத்தில நல்லநிலமைக்கு வந்துடுவிங்க…அதுவரை காத்திருக்கேன்.. அப்ப என்னை ஏத்துக்குவிங்க இல்லே…?”

“தேன் நீ பேசறதை எல்லாம் உங்க அப்பா கேட்டார்னா.. அவ்வளவுதான்…..”

சந்தேகப்பட்டு வந்த பண்ணையார் பெரியசாமிக்கு , செந்திலின் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் காதில் விழ.. கதவோரம் நின்று கொண்டார்.

” நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.. நம்ம காதலை… யாராலும் பிரிக்க முடியாது….!

சொன்ன தேன்மொழியை முறைத்துவிட்டு.. விறு விறு என்று வெளியேறினான்.

பெரியசாமிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.

பண்ணையார் பெரியசாமி முன்னாடி நின்று பேசவே அந்த ஊரில் யாருக்கும் தைரியமில்லை…அவரை எதிர்த்தால் அவ்வளவுதான்.. பண்ணையாரிடம் நெருக்கமாக பழகுவது கணக்கு பிள்ளை மட்டும்தான்.. பண்ணையாரின் ரகசிய வேலைகளுக்கும் இதே கணக்கு பிள்ளைதான்.

” ஐயா.. சொன்னா கோவிச்சுக்க கூடாது… நம்ம சின்னம்மா… செந்திலுகிட்ட அடிக்கடி பேசறது சரியாப் படலை… பார்த்து சரி பண்ணுங்கய்யா…”

” யோவ் கணக்கு .. பெரியவ வள்ளி மாதிரி இல்ல தேனு… படிப்புல ரொம்ப பிரியம் அதான் காலேசு வரை அனுப்பிட்டேன்.. நம்ம ஊர்லயே செந்திலு ஒருத்தந்தான் பெரிய படிப்பு படிக்கற பய.. ஏதோ பாடத்தில சந்தேகம் கேட்டுக்கறேன்னா.. அதான் வீட்டுக்கு வரசொல்றேன்… நீ உன் வேலையை பாரு….”

கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டாலும்.. ராத்திரி பண்ணையாருக்கு தூக்கம் வரவில்லை.மூத்த மகள் வள்ளியும் இதே மாதிரி வெளியூர்க்காரன் சந்திரனின் காதலில்விழுந்தாள்.அவனுக்கே அவளை கல்யாணம் செய்துவைப்பதாக நாடகமாடி காதலனை எமலோகம் அனுப்பியதை நினைத்தார்.இப்போது அதே காதல் ரூட்டில் இளையவள்தேன்மொழியும் வந்து நிற்கிறாள்.மூத்தவள் வள்ளி இன்று அவர் பார்த்த மாப்பிள்ளையுடன் பக்கத்து கிராமத்தில் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்….” வள்ளி உன்னை விரும்பினவனுக்கே நிச்சயம் பண்சம்மதிச்சேன்ல.. அவனுக்கு உன்னோட வாழ குடுத்து வைக்கலை.. போய்ட்டான்…அதுக்காக காலம்பூரா நீ இப்படியே இருந்தா என் மனசு தாங்குமா…? கேவிக்கேவி அழுது..என்னமாய் நடித்து.. மகளை நம்ப வைத்தார்… அவளும் மனசை கல்லாக்கி கொண்டு அப்பாபார்த்த வரனுக்கு சம்மதித்தாள்.

தேன்மொழிக்கு தூக்கம் வரவில்லை.. கொஞ்ச நேரம் காற்றாட மாடியில் நடந்தால் தூக்கம் கண்களை தழுவும் என எண்ணினாள். ரூம் லைட்டை ஆப் செய்து வெளியில் வந்துபால்கனியில் எட்டி பார்த்தாள்… மங்கிய வெளிச்சத்தில்..அப்பா கணக்கு பிள்ளையிடம் தனியாகபேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.. சத்தம் போடாமல் இறங்கி வந்து கவனித்தாள். ”

யோவ் கணக்கு நீ சொன்னது சரியா போச்சு… அந்த செந்திலு உண்ட வீட்டுக்கே துரோகம் பண்றான்.. நாளைக்கு அவனெல்லாம் உத்தியோகம் போய்ட்டா…அவன் அப்பன் இடுப்பில் இருக்கிற துண்டை தோள்ல போட்டுகிட்டு பொண்ணு கேட்க வந்துடுவான்.வள்ளியை விரும்பின அந்த பயலை முடிச்ச மாதிரி இவனையும் எதாவது பண்ணி தொலை…”

” ஐயா.. அவனை ஆக்சிடெண்ட் மாதிரி சந்தேகம் வராம லாரி ஏத்தி முடிச்சதே பெரிய பாடாயிடுச்சி… மறுபடியுமா..?”

“ஏய்.. அவன் அசலூர்காரண்டா… இவன் நம்மாளு.. நம்ம மேல சந்தேகம் வராது. ரெண்டு நாள்ல தீபாவளி … ராவோடு.. ராவா. அவனுங்க அசந்து தூங்கறப்ப அவன் வீட்டு குடிசை கதவை வெளிபக்கமா பூட்டி பத்த வைச்சிடு… பட்டாசு விபத்துன்னு ஊர்க்காரன்ங்க நம்பிடுவானுங்க… ”

செந்தில் குடிசை பற்றியது… விடிந்ததும் தகவல் பரவியது.

” ஐயா… ஐயா.. என பதறிய படி ஓடிவந்த சுப்பையாவும்… பார்த்து பண்ணையார் அதிர்ந்து விட்டார். ‘

” என்னாச்சு… உங்களுக்கு ஒண்ணும் ஆகலே இல்ல…?

” எவனோ குடிசை பக்கத்திலே பட்டாசு கொளுத்தி போட்டிருக்கான்யா.. நல்ல வேளை உங்களால தப்பிச்சோம்.. நேத்து தேன்மோழியம்மா வந்து தோப்பு வீட்டு காவக்காரன் லீவு.. அதனால உங்க மூணுபேரையும் ஐயா அங்க இன்னிக்கு ஒரு நாள்போகச்சொன்னாருன்னு சாவி குடுத்திட்டு போனாங்க ஐயா….”

சுப்பையா சொல்லி கொண்டிருந்தபோதே கோபத்தை மறைத்தபடி பெரியசாமி நேரே தேன்மொழியின் அறைக்கு போனார். ரூமில் ஆளில்லாமல் டேபிளில் இருந்த அந்த காகிதம் மட்டும் படபடத்தது..

” பெத்த பொண்ணுகிட்டயே நாடகமாடி சந்திரன் மாதிரி நல்லவரை
கொன்னுட்டிங்களேப்பா.. நீங்க கணக்கு பிள்ளை கிட்ட பேசிகிட்டு இருந்ததை கேட்டுட்டேன்… செந்தில் ஒரு அப்பாவி.. அவனை நானாத்தான் விரும்பினேன்.. அவன் பலியாக கூடாது.. நீங்க பண்ண தப்புக்கு காலம்பூரா வருந்தனும்..எரிஞ்சு போன செந்திலு வீட்டில நீங்க பார்க்க போறது கரிக்கட்டையாயிட்ட என்னைதான்….மேற்கொண்டு படிக்க முடியாமல் நடுங்கிய பெரியசாமி .. குடிசையை நோக்கிஅலறியடித்து ஓடிய போது.. செந்திலும், சுப்பையாவும் காரணம் தெரியாமல் பின்தொடந்தனர்.

( இச் சிறுகதை 23-10-2011 தினத்தந்தி – குடும்ப மலரில் வெளியானது.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *