வாணியைச் சரணடைந்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 3,959 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

தன்னையறியாது குதூகலித்த மதுரவாணி, உடனேயே தன்னுணர்வு வரத் திகைத்தாள்! 

வித்யாசாகரனிடமிருந்து அடியோடு ஒதுங்கியிருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டு, அவனது வரவுக்காக மகிழ்வதா? 

அவள் எண்ணியதை விடவும் ஆபத்து போலிருக்கிறதே! 

அந்த நீதாவின் நினைவு வந்தது! அவன் கண்டு கொள்ளாமல் செல்லும்போதும் எப்படிக் கொஞ்சினாள். தொடர்ந்து நீதாவைப் பற்றி, அந்த வீட்டினரின் அபிப்ராயமும் வாணிக்கு நினைவு வந்தது.

வித்யா அழகனாய் இருக்கலாம். பணக்காரனாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்காக அவனது காலடியில் அந்த நீதாவைப் போல, வாணி ஒரு நாளும் விழுந்து கிடக்க மாட்டாள். 

மறுநாள் வாணி கவனமாக ஒன்று செய்தாள். 

மறுநாள் வித்யாசாகரன் வருவதை முன்னதாகவே கவனித்திருந்து. அவன் காரைக்கொணர்ந்து வாசகசாலை முன் நிறுத்துமுன் சரியாக அந்த நேரத்தில் ஏதோ வேலை போல, பின்புறமாய் நகர்ந்து வீட்டுக்குச் சென்றுவிட்டாள். குளியலறைக்குள்ளும். 

அவனது குரல் கேட்பது நின்று. கார் கிளம்பிச் செல்லும் வரையும், வாசகசாலைப் பக்கம் அவள் தலையே காட்டவில்லை. 

பிறகும், உடனே சென்றால் தாத்தா ஏதும் கூறக் கூடுமோ என்று, சற்றுப் பொறுத்து ஷாம்பூ போட்டக் கூந்தலைத் துவட்டியபடியே சென்று “சென்னை ஒரே தூசி தாத்தா! ஒரே கசகசவென்று இருந்தது! இப்படி நன்றாகக் குளித்த பிறகு இப்போதுதான் நன்றாக இருக்கிறது” என்று தன் நிதானக் குளியலை நியாயப்படுத்திவிட்டு. “அட புத்தகங்கள் வந்தாயிற்றா? சுந்தரீ. இந்தப் புத்தகங்களில் பலது புதுப் பதிப்புகள். விலையை ஏற்றி யிருக்கிறார்கள். அதனால், நாமும் கட்டணம் கூடுதலாக வசூலிக்க வேண்டும், நம் புத்தகப் பட்டியல் புத்தகத்தை எடுத்துவா. கூடுதல் விலையை குறித்துக் கொள்ள வேண்டும்” என்று சுந்தரியிடம் பேசியவாறே அவளோடு சென்றுவிட்டாள். 

மணிவாசகத்துக்கு இளகிய மனமே தவிர, அவர் ஒன்றும் மறதிநாயகம் அல்ல. எனவே நினைவு வை, வாணியிடம் வித்யாசாகரன் வந்து போனது பற்றிக் கூறினார். 

“பாவம்மா அவர். நம்மைக் கூட்டிப்போய், புத்தகங்களை வாங்கி, மறுபடியும் வீட்டிற்கே கூட்டிவந்து விட்டிருக்கிறார். புத்தகங்களைத் தர, மறுபடியும் வந்திருக்கிறார், நீயும் இருந்து நன்றி சொல்லிவிட்டு, அப்புறமாக குளிக்கப் போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்” என்று வருத்தமாக இயம்பியவர், ஏதோ நினைவு வந்தவர் போல “ஆனால் நீ காலையில் நடந்து முடிந்ததும் குளிக்கவில்லை? உன் வழக்கம் அதுதானே?” என்று வினவினார். 

இந்தக் கேள்வி சற்று எதிர்பாராத ஒன்றுதான்! 

ஆனால், மணிவாசகம் அதை ஒரு குறுக்கு விசாரணையாகக் கேளாமல் கையில் இருந்த பட்டியலைச் சரி பார்த்த வண்ணம் அரைக் கவனத்துடனேயே பேச்சுப் போக்கில் கேட்கவும் “நேற்று அலைந்தது அசதியாக இருந்ததால், காலையில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்தது தாத்தா” என்று ஒரு பதிலை அவசரமாக யோசித்து கூற, அவளுக்கு அவகாசம் இருந்தது. 

அதேபோல, வித்யாசாகரன் அலுவலகம் சென்று போன் செய்து விசாரித்தபோதும், இயல்பாக, சற்று அமர்த்தலான குரலில் சுருக்கமாகப் பதிலிறுத்துப் பேச்சை முடிக்கவும் அவளால் முடிந்தது. 

விஷயம் இத்தோடு முடியாது.. சுபாவுடைய குழந்தைக்கு தொட்டில் போடும் விழாவுக்குப் போவது, நிலாவின் கதைப்போட்டி என்று அந்த வீட்டுத் தொடர்பு தொடர்வதைத் தவிர்க்க முடியாது! ஆனாலும் முடிந்த வரையில் வித்யாவிட…. வித்யாசாகரிமிடருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும். 

அது ஒன்றும் கடினமும் அல்ல! முதல் இரு சந்திப்புகளின் போது அவன் பேசியதை நினைவுபடுத்திக் கொண்டாலே ஒதுக்கம் தானாக வந்துவிடும்.! ஆனால், அதுதான் பிரச்சினை! நினைவுபடுத்திக் கொள்வது, அடியோடு மறப்பதை, எப்படி நினைவுக்குக் கொண்டு வருவது? 

அது முடியாத பட்சத்தில், அவன் முகம் பாராமல் ஒதுங்கிவிட வேண்டும். 

வாணி நினைத்தது அப்படித்தான். ஆனால் மறுநாள் காலையில் வழக்கமான நடைப்பயிற்சி முடிந்து பூங்காவிலிருந்து திரும்பும்போது “ஹல்லோ” என்ற வித்யாசாகர் எதிரே வந்து நிற்கவும், அவளுக்குத் திகைப்பாகி போயிற்று. 

வினாடிக்குள் அதைச் சமாளித்து, “இந்தப் பூங்காவின் பாதையில் நடக்க வந்திருப்பீர்கள். நான் முடித்து விட்டேன் வருகிறேன்” என்று ஸ்கூட்டியில் சாவியை சொருகினாள் அவள். 

“நான் நடக்க வரவில்லை” என்றான் வித்யா. “உன்னுடன் சற்று பேச விரும்பி வந்தேன், அதற்காகவே நீ நடந்து முடிக்கும் வரை காத்திருந்தேன்” 

இவனுடன் பேசுவதா? ஆபத்தாயிற்றே? இவனது தவறுகளின் ஞாபகமே வராது! 

ஸ்கூட்டியில் மெதுவே ஏறி அமர்ந்தவள் “சாரி மிஸ்டர் வித்யா எனக்கு நிறைய வேலை இருக்கிறது! பிறகு பார்க்கலாம்!” என்றவள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள். 

வேறு யாரிடமும், இப்படி மரியாதைக் குறைவாக அவள் நடந்தது இல்லை. ஆனால் வித்யாசாகர் வித்தியாசமான ஆள் அல்லவா? அவனிடம் இப்படித்தான் நடந்தாக வேண்டும். 

அவனுக்கும் புரிந்திருக்கும், அவள் வேண்டும் என்று ஒதுங்குவது புரியாத அளவு அவன் முட்டாளில்லை. 

அவளைப் புரிந்துகொண்டு, அவனாகவே விலகிக் கொண்டால் நன்றாக இருக்கும்! விலகி விடுவான் என்று எண்ணமிடும்போது, ஏனோ, அதுவும் அவளுக்கு உவப்பாக இருக்கவில்லை. 

அவன் நியாயமற்றுப் பேசிய பேச்சுக்களை நினைவு படுத்திக் கொள்ள முயன்றால், அவனது கேலிப் பேச்சும், குறுநகையும், நிலாவிடம் காட்டும் அக்கறையும் என்று நல்லது மட்டுமே நினைவுக்கு வந்தன. 

வித்யாசாகரும் விலகிக் கொள்ள மறுத்தான். 

அன்று மதியம் மணிவாசகம் ஓய்வெடுக்கச் சென்று சிறிது, நேரத்துக்கெல்லாம், வாணியின் முன்னிருந்த போன் கருவி, கிணுகிணுவென்று ஒலியெழுப்பி அவளை அழைத்தது. 

அவனேதான்! காரணமில்லாமல் அவளது நெஞ்சு படபடத்தது. 

அதை அடக்கிக் கொண்டு அவள் “எனக்கு வேலை இருக்கிறது. அதனால்…” என்றபோது அவன் குறுக்கிட்டான். 

“என்ன வேலை இருந்தாலும், இப்போது நீ என்னோடு பேசுகிறாய் வாணி அல்லது உன் தாத்தா மற்ற பணியாட்கள் இருக்கும்போது நேரில் வந்து, அவர்கள் முன்னிலையிலேயே நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன். உனக்கு எது உசிதம் என்று தோன்றுகிறது?” 

சிறு மௌனத்தின் பின் “என்ன சொல்ல வேண்டும்?’ என்று மனமற்றுக் கேட்டாள் அவள். 

ஒன்றுமே நடவாதது போல, அவனது வழக்கம் போல வாசாலகமாகப் பேசப் போகிறான் என்று வாணி சலிப்புடன் காத்திருக்கையில் “உன்னிடம் மன்னிப்புக்கோர வேண்டும்?” என்றுரைத்து, அவளை தூக்கி வாரிப் போட வைத்தான் அவன். 

வித்யாசாகரனாவது, மன்னிப்புக் கேட்பதாவது? அவனது நிமிர்வும் அடுத்தவரை அலட்சியமாக தூக்கி எறிந்து பேசும் தன்மையும். 

“எ.. எ… என்னது?” என்றாள் அவள் அதிர்ந்து. 

“ஆமாம் வாணி. முதலில் இரண்டு தரம். உன்னிடம் மிகவும் கடுமையாக பேசிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை அதற்கு காரணம் இருந்தாலும், உன்னை, உன்னைப் போல ஒரு நல்ல பெண்ணை நோகடித்தது பெரிய தப்பு தான்!” என்றான் அவன் இறங்கிய குரலில். 

“நல்ல.., ஓ.. அன்றைக்கு தாத்தா என்னைப் பற்றி உங்களிடம் நிறைய புகழ்ந்தாராக்கும். அப்படி ஒருவர் புகழ்ந்தால் நம்பிவிடுவீர்களா?” 

“என்னிடம் நேரடியாக உன்னை உயர்த்திப் பேசியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். ஆனால், நிலா அறையில் உன்னிடம் கண்டபடி உளறிவிட்டு கீழே போனால், அம்மாவிடம் அவர் உன்னைப் பற்றி அவர் பேசியது காதில் விழுந்தது!” 

“ஆன்ட்டியிடம் மட்டும் அவர் சும்மாச் சொல்லியிருக்க மாட்டாரா? நான் அவருடைய அருமை பேத்தியாயிற்றே!’ 

“சொல்லியிருக்கலாம்! மணிவாசகம் சாருக்கு அவருடைய பேத்தி என்ன செய்தாலும் உயர்வுதான்” என்றவனின் குரலில் புன்னகை இருந்தது. தொடர்ந்து “அவர் அத்தோடு நிற்கவில்லை. ஒரு நல்ல வேலைக்கு படித்து விட்டு, அதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை விட்டுவிட்டு பெற்றோர், குடும்பத்தை விட்டு விட்டு நீ எதற்காக இந்தக் குடியிருப்புக்கு வந்து வசிக்கிறாய் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியை இழந்த தாத்தா, தனிமையில் தவிக்கக் கூடாது என்று பல வாய்ப்புகளைத் தியாகம் செய்கிற புத்தி எத்தனை பேருக்கு வரும்?” 

“தியாகம் என்கிற பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம். தாத்தாவின் புத்தகங்களும், இந்த ஊர்ச்சூழலும் கூட எனக்குப் பிடித்தம்தான்” என்றாள் வாணி. 

“இருக்கலாம். பணம் பணம் என்று அலைகிற இந்தக் காலத்தில் நீ சொல்லுகிற மற்ற விஷயங்களுக்கு யார் மதிப்பு கொடுப்பார்கள் சொல்லு. ஒன்றிலிருந்து ஒன்று! வயதான தாத்தாவுக்காக இவ்வளவு பார்க்கிற பெண், கெட்டவளாக இருக்க முடியாது என்று யோசித்தபோது சிறப்புகள் நிறைய தெரிய வந்தன. நிலாவிடம் உண்மையான அன்பை…” 

மேலே வரப்போவது புரிந்து, அவளுக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது.! 

கடுமையாக திட்டினான். கர்வம், திமிர் என்று கஷ்டப்பட்டு ஆத்திரத்தை வளர்த்து வைத்திருந்தது. இப்போது சலனமடைந்தது. 

திட்டியது கூட, அவனைப் பொறுத்தவரையில் சரிதான் என்று ஏதோ சொன்னானே…! 

“கடுமையாகப் பேச.. ஏதோ காரணம் இருப்பதாகச் சொன்னீர்கள்?” 

“இருக்கிறது.. நீ சற்று என் நிலையிலிருந்து யோசித்துப் பார். நிலாவிடம் எனக்கு இயல்பாக இருக்கும் அன்பும் அக்கறையும் மட்டுமின்றி, எந்நேரமும் அவள் பற்றி என் அண்ணனுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை என்னுடையது. அண்ணனையாவது சமாளித்துவிடலாம். அவனுக்கு வாய்த்திருக்கும் அந்த ராட்.. அவன் மனைவி எங்கே, எப்படிப் பாய்வாள் என்றே சொல்ல முடியாது. அவள் என்ன சொன்னாலும் நித்தி ஜால்ராப் போடுவான் என்பது மட்டும் சர்வ நிச்சயம். நிலாவுக்குச் சொத்து இருப்பது எல்லோருக்கும் அறிந்த விவரம். அவளது பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறதா? அதற்குக் குந்தகம் வந்துவிடக் கூடாது என்றுதான், அப்படிப் பேச வேண்டியதாயிற்று!” என்று அவன் சொன்ன விளக்கத்தை முழு நியாயம் என்று அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. 

“அதற்காக இவ்வளவு கடுமையாகப் பேசுவதா?”

“கடுமைதான். உடனடி பலனைத் தருகிறது” என்றான் அவன் பதிலாக. 

அது உண்மைதான்… அவனது கடுமைதானே மறுமுறை வந்தபோது, நிலாவை விரட்ட வைத்தது? ஆனால்… 

“ஆனால் உங்கள் தேவைக்காக அடுத்தவரிடம் கடுமை காட்டுவது நியாயமில்லையே!” என்றாள் அவள். 

“நியாயமா?” என்றவனின் குரலில் கசப்பு தெரிந்தது!

“அதைச் சொல்லு. இந்தக் காலத்தில் யார் நியாயம் பார்க்கிறார்கள். எங்கள்வீட்டு விஷயம் உனக்கு தெரியும் என்று சுபா சொன்னாள். அண்ணன் அடாவடியாகச் சொத்தை பிரித்துக் கொண்டு போனது எந்த நியாயத்தில் சேர்த்தி? மீண்டு வருமுன், என்ன பாடுபட்டேன் தெரியுமா? என்னை விடு! பிஞ்சு குழந்தை! அண்ணன் நிலாவை ஒதுக்கியது. எந்த விதத்தில் அவளுக்கு நியாயமாகுமா? பாவம்! இம்மெனுமுன் நத்தை போலச் சுருட்டிக் கொள்வாள். அவளை இயல்பாக பேச வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். கணமேனும் எண்ணிப் பார்த்தாரா? உடனடியாகக் கைக்கு வரும் பணம்தானே அவர் கண்ணுக்கு தெரிந்தது? நியாயம். அநியாயத்தை விடு! இயல்பான பாசத்தையே பணம் வென்றுவிட்டதே!” 

பணத்தேவையோடு நிலாவை இயல்புக்குக் கொண்டு வருவதும் சேர, ரொம்பவே சிரமப்பட்டிருப்பார்கள் போலும்.. ஆனால்… 

“ஒருவேளை…” என்று இழுத்தாள் வாணி.

“என்ன ஒருவேளை?” 

“ஒருவேளை மகளை உடன் கூட்டிப் போவதுதான் அவளுக்கு நல்லதில்லை, உங்களோடு இருந்தால் நல்லபடியாக வளருவாள் என்றும் உங்கள் அண்ணன் எண்ணியிருக்கலாமே. உங்கள் அண்ணிக்கு ஏதேதோ பேர் எல்லாம் சொன்னீர்களே. அங்கே அவர்கள் பொறுப்பில் வளர்வது நிலாவுக்கு நல்லதாக இராதென்று எண்ணியிருக்கலாம்” என்று கூறும்போதே. அவளுக்கு என்னவோ உள்ளூரப் பரபரத்தது. 

என்னவோ உரிமை உள்ளவள் போல, அவனுடைய குடும்ப விவகாரத்தை அலசுகிறாளே…! 

ஆனால், அவனும் வேறுபாடின்றி அதை ஏற்று “எனக்கு நம்பிக்கை இல்லை, வாணி! ஆனால், உனக்கு என் நிலைமை புரிகிறதுதானே? எனக்கு அதுபோதும், அப்புறம், அடுத்த மாதம் முதல் ஞாயிறன்று விழா வைத்திருக்கிறார்கள். எல்லோரும் வந்து கலந்துகொள்ள வேண்டும்” என்று அவன் அழைக்க, விழா பற்றி அவனோடு சிறிது நேரம்பேசிவிட்டு போனைக் கீழே வைத்தவளுக்குப் பல தினங்களுக்குப் பிறகு மனம் காற்றில் பறக்கிற மாதிரி லேசாக இருந்தது. 

வித்யாசாகரை முதல் நாள் சந்தித்ததில் இருந்து அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த சுமை கிட்டத்தட்ட முழுமையாக மறைந்து அவளது இயல்பான உற்சாகம் இரு மடங்காக வெளிப்படலாயிற்று! 

அடியோடு மறைந்தது என்று சொல்ல முடியாமல், எப்படியும் அந்தப் பேச்சு அதிகக் கடுமைதானே என்று ஓரிருமுறை தோன்றினாலும்.. அப்படி ஏன் பேசினான் என்பது பற்றிக் கூட அவளிடம் மனம் விட்டு வெளிப்படையாக பேசினான் என்பது அவளைக் குளிர வைத்தது! 

அதன்பின், நிலாவின் கதைகளைப் படிக்க, திருத்த என்று, அந்த வீட்டுக்கு வாணி தினமும் செல்ல வேண்டியிருந்தது. 

கதைகளைப் போட்டிக்கு அனுப்பிய பிறகோ, பயமும் பரபரப்புமாகத் தவித்த நிலாவின் மனநிலையைச் சமனப்படுத்துவதற்காக அழைத்தார்கள்.

கூடவே, சுபாவுடைய குழந்தைக்கு நல்ல பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அதற்காக சில புத்தகங்களோடு போனாள். 

பல பெயர்களை பற்றி, அவளையும் கலந்துகொண்டே குடும்பத்தினர் விவாதித்தார்கள். 

கடைசியாக சுபாவுடைய கணவன் வழிப்பாட்டியின் பெயர்தான் ராசியானதாக முடிவு செய்யப்பட்டது. 

“அது ஒன்றும் சாதாரணப் பெயர் இல்லை. வாணி! சௌதாமினி என்று அழகான பெயர். தாமினி மின்னி. சௌமினி என்று அழகழகாகச் சுருக்கி செல்லமாகக் கூப்பிடலாம்” என்று பெருமைப்பட்டாள் சுபா. 

மதுரவாணி என்ற பெயரும் அப்போது அலசப்பட “வெறும் மதுவே வெகு அழகு, மயக்கமும் தருவதால் ரொம்பப் பொருத்தமும் கூட சரிதானே மது?” என்று அவள் காதருகே மெல்ல முணுமுணுத்துவிட்டுப் போனான் வித்யா. 

என்ன தைரியம் இருந்தால், குடும்பத்தினர் இருக்கும் போது அவள் அருகே வந்து இப்படி ரகசியம் பேசிவிட்டு போவான்?

சுபாவும் குறுகுறுப்பாக நோக்குவது போலத் தோன்றவும். கால் பெருவிரலை அழுத்தமாக ஊன்றி, முகம் சிவக்காமல் காக்க முயன்றாள் மதுரவாணி. 

அவன் அதையும் கண்டுகொண்டு குறும்பு நகை புரிய, அந்த முகம் அவள் மனதில் அப்படியே நின்று போனது. 

இரவின் தனிமையில் யோசிக்கையில் இப்படியொரு பாதிப்பு அடி மனதில் முதலிலேயே ஏற்பட்டுவிட்ட தால்தான்.. அவனது கடுமை அவளை அவ்வளவு வருத்தியதோ என்றோர் எண்ணம் தோன்றியது! அன்று நடந்ததைத் தாத்தாவிடம் சொல்லாதது கூட அவனைப் பற்றி குறைவாகப் பேச மனம் வராததாலேயே இருக்கலாமோ? 

மற்றபடி அவன், ஒரு நாள் சிரித்து பேசும்போதே அவனது தப்புகள்.. தப்பு என்று அவள் எண்ணியவை அடியோடு மறக்குமா என்ன? 

இனிய பரவசம் உடலெங்கும் பரவ தூக்கம் மறந்தது!

உதவிக்காக அழைக்கிறார்கள் என்பதால், மணிவாசகமும் பேத்தியை விருப்பமாகவே அனுப்பி வைத்தார். 

தொட்டில் போடச் சில தினங்களுக்கு முன்பாக, அவளது கதைகள் சிறப்பாக இருப்பதாகவும், நேர்முகப் பேட்டிக்குச் சென்னைக்கு வருமாறும், நிலாவுக்கு அழைப்பு வந்தது! 

“ஆன்ட்டி இல்லாமல் போக மாட்டேன்” என்று நிலா கூறிவிட சுபாவையும். குழந்தையையும் பார்த்துக் கொள்ள ஆள் வைத்துவிட்டு தேவகியும் உடன் சென்று, தாரிணியை விழாவுக்கு நேரில் அழைத்துவிட்டு வந்தார். 

வாணிக்காக ‘ஷட்டில்’ அடித்த காரை பல சமயங்களில் ஓட்டி வந்த வித்யாசாகர். அவளைக் கொணர்ந்து விட்டுவிட்டு, பெரும்பாலும் பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தவிட்டுப் போனது அவளுக்கு இன்னமும் அதிகமாகப் பிடித்தது. 

ஆனால், இதெல்லாம் பிடிக்காத ஒருத்தி நீதா! 

வெய்யில் அதிகமாக இருக்கிறது என்று இருபது நாட்கள் ஊட்டி, கொடைக்கானல் சுற்றிவிட்டு வருமுன், வித்யாசாகரின் வீட்டில் நேர்ந்திருந்த மாற்றங்கள், அவளுக்கு வெறுமனே பிடிக்கவில்லை என்பதை விட ஆத்திரம், கோபம், வெறுப்பு அத்தனையும் சேர்த்து ஏற்படுத்தினது என்றால் சரியாக இருக்கும்! 

எதற்கெடுத்தாலும் வாணி. வாணியா? 

பாம்பு போலச் சத்தமின்றி புகுந்துவிட்டாளே!

சாக்கலேட்டும், ஐஸ்கிரீமுமாகக் கொட்டி அழுதாலும் ஒதுங்கியே போகும் நிலா, ‘ஆன்ட்டீ’ என்று நொடிக் கொரு தரம் அவளைக் கொஞ்சுவதா? 

கிழவியானால் ‘உனக்கு பிடித்த முறுக்கு, கொஞ்ச மேனும் சாப்பிடு’ என்று கெஞ்சுகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வித்யா.. “மது”என்று தொடங்கிவிட்டு அவள் நீதா கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் ‘மதுரவாணி’ என்று முடிக்கிறான். 

இந்த நீதாவை என்ன, ஒன்றும் தெரியாத முட்டாள் என்று எண்ணினானா? 

அன்றிலிருந்து வித்யாசாகரின் வீட்டுக்கு நீதாவின் வருகை அதிகமாயிற்று. 

பார்லரில் மணிக்கணக்கான ஒப்பனை செய்துகொண்டு வந்து, அவனது வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாள். 

ஆனால், மற்றவர்கள் இயல்பாகப் பழகுவதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

பேச்சின்போது வாணியை மட்டம் தட்ட முயன்றாள். 

பணம் இல்லை.. புத்தகங்களை வாடகைக்கு விட்டு ஐந்தும் பத்துமாகப் பிச்சைக்காசில் பிழைக்கிறாள். நல்ல சாப்பாடு, ஏசி, கார் என்று பணக்கார வசதிகளை ஓசியில் அனுபவிப்பதற்காக இங்கே அடிக்கடி வருகிறாள் என்று பொருள்படும்படியாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். 

ஆனால், அது யார் மண்டைக்குள்ளும் புகுந்த மாதிரியே தெரியவில்லை! 

மாறாக, வாணியின் சென்னை வீட்டு அமைப்பும், காரும், அவளது படிப்புத் தகுதியும் எல்லோர் மனதிலும் நிலை கொண்டிருப்பதாகத் தெரிந்தது! 

அத்தோடு நிலாவுக்கும் அவளுக்கும் இடையே வளர்ந்துவரும் அன்பை, நீதாவால் தாங்க முடியாதிருந்தது. ஆனால், அதைப் பற்றி அவளால் ஒன்றும் செய்ய முடியாது போயிற்று. 

தான்தான் எப்படிப் பார்த்தாலும் ‘சித்தி’ என்று பல முறை சொல்லியும் மிரட்டியும்கூட அதனால் எந்தப் பயனும் விளைந்ததாக இல்லை! யாரும் அதைக் கண்டுகொள்வதாகவே இல்லையே! 

குறைந்தபட்சமாக வாணி அங்கிருக்கும் நேரத்தை யாவது குறைக்கலாம் என்று யோசித்து “நான் இப்போது அந்த வாசகசாலை வழியாகத்தான் போகிறேன். வாணியை நான் கூட்டிப்போய் விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் இங்கே யாரேனும் வேலையைக் கெடுத்துக் கொண்டு தான் அவளைக் கொண்டு விட வேண்டும்? வருகிறாயா வாணி? எனக்கு வேலை இருப்பதால், சீக்கிரமே கிளம்ப வேண்டும்!” என்று பெரிதாக உதவ முன்வந்தாள் நீதா.

ஆனால் பொதுவாக ஓர் ஓரக்கண் பார்வையை சுழற்றிவிட்டு “தேவையில்லை நீதா! நானும் நிலாவும் ஒரு வேலையாக வெளியே போக வேண்டியிருக்கிறது! அப்போது அப்படியே வாணியையும் வாசகசாலையில் விட்டுவிடுவதாக ஏற்கனவே ஏற்பாடு” என்றாள் சுபா. 

“அதனால் வாணிக்காக காத்திராமல் நீ உடனே கிளம்பும்மா… பாவம் அவளால் உன் வேலை கெடுவானேன்?” என்று பரிவு போலப் பேசி நீதாவை தனியே கிளம்பவும் வைத்தாள். 

கடுப்பை மறைக்க முயன்றபடி நீதா சென்றபிறகு, விழிகளை வட்டமாக விரித்து “நாம் வெளியே போகிறோமா? இது எப்போது போட்ட திட்டம்? எனக்குச் சொல்லவே இல்லையே!” என்று நிலா விசாரிக்க, வாணியிடம் கண் சிமிட்டிவிட்டு “இதோ இப்போதுதான்! உன் வாணி ஆன்ட்டியை அந்த நீதா கூப்பிட்டாளே அந்த வினாடி தான்” என்று சொல்லி சிரித்தாள் சுபா. 

அவளோடு கூடச் சேர்ந்து வாணியும் தேவகியும் சிரிக்கும்போது, விஷயம் புரிந்து நிலாவும், “ஓகோ” என்று அதிசயமும் ஆனந்தமுமாக சேர்ந்துகொள்ள, அலையலையாக நகையொலி அங்கே தொடர்ந்து கேட்டது. 

சிரிப்பொலியைக் கேட்டபடி உள்ளே வந்த வித்யா என்னவென்று விவரம் கேட்க, அவனிடம் நிலாவும் சுபாவும் போட்டி போட்டுக் கொண்டு விளக்க, மீண்டும் எல்லோரும் சேர்ந்து வாய்விட்டு நகைத்தனர். 

சற்று நேரம் பொறுத்து சிரிப்பினால் கண்ணில் பெருகிற நீரைத் துடைத்துக் கொண்டு, “இப்போது சிரிப்பது எல்லாம் சரிதான். ஆனால், அவள் சும்மாயிருக்க மாட்டாள். அதனால், எல்லோரும் எச்சரிக்கையோடேயே இருங்கள்” என்று தேவகி எச்சரித்தார். 

பொதுவாகச் சொன்னாரே தவிர, அந்த எச்சரிக்கை எவ்வளவு தேவையானது என்று அவரே அப்போது அறிந்திருக்கவில்லை எனலாம்! 

அனுபவிக்கும் போதுதான் எல்லோருக்குமே அது புரிந்தது! 

அத்தியாயம்-12

சுபாவின் குழந்தைக்கு தொட்டில் போடும் விழா மிகவும் சிறப்பாக நிறைவேறியது. 

சுபாவுடைய கணவனுக்கு, மனைவியும் குழந்தையும் தவிர வேறு யாரும் கண்ணில் படுவதாகவே இல்லை! 

வாணியை காட்டி, சுபா ஏதோ சொன்னபோதும், சுரேந்தரின் கவனம் அதில் இல்லை என்று, வாணியால் நன்றாகவே உணர முடிந்தது. 

முகம் பார்க்கத் தொடங்கியிருந்த மகளின் பொக்கை வாய்ச் சிரிப்பில் கிறங்கிப் போயிருந்தான் அவன். 

காலையிலேயே வந்து, பரிசைக் கொடுத்துவிட்டு சென்னையில் நெருங்கிய சினேகிதர் வீட்டு வரவேற்பில் கலந்துகொள் வேண்டியிருப்பதாக கதிரேசன் தம்பதி கிளம்பிப் போய் விட்டார்கள். 

ஆனால், நிலாவுக்கு அவளுடைய சித்தப்பா வாங்கியிருந்த காதணி, கழுத்தணியைப் பார்த்து வாணி பிரமித்துப் போனாள். 

நிலாவின் உடையில் கல் ஒட்டியிருந்த வடிவத்தை ஒட்டிய டிசைனில் காதுகளுக்கு, டிராப்சும் கழுத்துக்கு மெல்லிய சங்கிலியில் தொங்கும் பெண்டன்ட்டுமாக வாங்கியிருந்தான் அவன். நிலாவின் இளம் காதுகளுக்கு ஏற்றாற்போல மெல்லிய நகை. ஆனால் வைரம்! 

“நீ சொன்னது போல ஐம்பது லட்சம் செட் அல்ல தாயே! இப்போதைக்கு அது நமக்குக் கட்டுப்படியாகாது!” என்று விளையாட்டாக உதட்டைப் பிதுக்கிச் சொன்னான் வித்யாசாகர். 

நகையைக் கூர்ந்து பார்த்துவிட்டு “இதுவுமே. உங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சமேனும் ஆகியிருக்குமே? அதிகம் செலவு வைத்துவிட்டேனா?’ என்று உறுத்தலோடு கேட்டாள் வாணி. 

புன்னகையோடு தலையசைத்து “இயலாதது அல்ல! மதுரவாணி, அத்தோடு இன்று நிலாவுக்கு தனியாகப் பரிசு கொடுக்கும் அவசியமும் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு சுபா சுரேந்தரின் நாள். அதனால், விழா முடிந்த பிறகே சொல்லலாம் என்று இருக்கிறேன்! ஆனால் நீ எனக்குத் தனி அல்லவா? அதனால் உன் காதுக்கு மட்டும் இப்போதே! கேட்டுக்கொள்! கதைப் போட்டியின் இரண்டாம் பரிசு நிலாவுக்கு கிடைத்திருக்கிறது. பரிசை நேரிலே வந்து வாங்கிக் கொள்ளுமாறு லண்டனுக்கு அழைத்திருக்கிறார்கள்.” என்று மகிழ்ச்சியோடு கூறினான் வித்யாசாகரன்! 

ஆனந்தத்தை அடக்க முடியாமல், வித்யாவின் கைகளைப் பற்றி குலுக்கினாள் வாணி. “வித்தி எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?” 

குலுக்கிய கையை இதமாகப் பற்றி வருடியவாறு “இந்த வெண்டைப் பிஞ்சு விரலுக்கும் ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன் மது! ஆனால் அதை முழுக்க முழுக்க நமக்கான ஒரு தனி நிகழ்ச்சியில்தான் தரப்போகிறேன்! மறுக்காமல் ஏற்க வேண்டும்!” என்று உரிமைக் குரலில் கொஞ்சலாகக் கூறினான் அவன். 

அவன் சொன்ன ‘தனி நிகழ்ச்சி’ கற்பனையில் அழகாக விரிய கன்னம் சிவந்தபோதும், கையை உருவிக் கொண்டு “என்னது? மறுக்கக் கூடாதா? அந்த உரிமை கூட எனக்குக் கிடையாதா?” என்று சோகம் போல பாவனை காட்டிக் கேட்டாள் வாணி. 

”ஊகூம்! கிடையவே கிடையாது! அந்த உரிமை கேட்டால் உதைதான் கிடைக்கும்!” என்று மிரட்டலாகக் கூறிச் சிரித்தான் வித்யாசாகரன். 

“உதையா? வலிக்குமே! சரிதான் அந்த வலிக்கு பயந்தேனும், சம்மதம் சொல்லத்தான் வேண்டும் போல!’ என்று பயந்த குரலில் பேச முயன்று, அது முடியாமல் அவள் கலீரெனச் சிரிக்க, இருவர் நகையும் இணைந்து ஒலித்தன. 

சிரிக்கும்போதே சுற்றுப்புறம் நினைவு வர “ஷ், என்னப்பா நீங்கள்? சீக்கிரமே விருந்தினர் எல்லோரும் வரத் தொடங்கி விடுவார்கள். நிலாவுக்கு அலங்காரம் செய்து, இதை அணிவிக்க வேண்டும். நீங்கள்.. ஓகோ நீங்கள் தயார்தானா? அதுதான் இப்படி சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களாக்கும்! நான் சேலை வேறு கட்ட வேண்டும்.. நான் போகிறேன்” என நகையோடு வாணி உள்ளே ஓடினாள். 

நிலாவுக்கு அலங்காரம் செய்யும் பொறுப்பை சுபா வாணியிடம் ஒப்படைத்திருந்தாள். 

வாணியிடம் நிலாவுக்கு இருந்த ஒட்டுதலால், சிறுமி அவள் சொன்னபடி கேட்டு நடந்துகொள்வாள் என்ற நம்பிக்கை, குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தது. அப்படி நிலா நடந்து கொள்ளவும் செய்தாள். எனவே, சின்னச் சின்ன காரணங்களுக்காக கூட வாணியை வீட்டுக்கு அழைப்பது இப்போது வழக்கமாயிருந்தது! 

கிட்டத்தட்ட அந்தக் குடும்பத்தின் இன்னோர் அங்கத்தினள் போல உரிமையுடனேயே! 

வாணிக்கு நிலா மட்டுமின்றி வீட்டில் எல்லோரையும் பிடித்து போனதால் இரண்டாவது வீடு மாதிரி அங்கே போய் வந்து கொண்டிருந்தாள். 

மற்றவர்கள் நடந்து கொண்ட விதத்தோடு, மன்னிப்புக் கேட்ட பிறகு முதல் இரு சந்திப்புகளுக்கு நேர் மாறாக, வித்யாசாகரன் அவளுக்கு மதிப்புக் கொடுத்து பழகிய விதமும், அதற்குக் காரணம் என்று சொல்லலாம். 

இன்றைய விழாவுக்கு முன்னதாகவே வந்திருந்து, நிலாவுக்கு அலங்காரம் செய்வதோடு, அவளும் அங்கே உடை மாற்றிக் கொள்ளலாம் என்று சுபா சொன்ன யோசனை, வாணிக்கும் ஏற்புடையதாகவே இருந்து, தான் மாற்ற வேண்டிய ஆடை, அணிகலன்களோடுதான் வாணியும் வந்திருந்தாள். 

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக, இதை ஏற்றிருப்பாளா என்று எண்ணிப் பார்க்கையில் வாணிக்குமே மிகவும் ஆச்சரியம்தான்! 

விழா நேரத்துக்கு மணிவாசகத்துக்கு கார் அனுப்புவதாக ஏற்பாட்டின்படி கார் போய் அவரை அழைத்து வந்தது! 

அவரை வரவேற்று, உள்ளே அழைத்துப் போய் உட்கார வைத்துவிட்டு, வாணியை நிலா அழைத்து வர, இருவரையும் ஒன்றாகப் பார்த்த மணிவாசகத்தின் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. மகிழ்ச்சியிலும்தான். 

அந்த அளவுக்கு , இருவரின் ஆடை அணிகள், ஒத்துப்போய், ஒருவரை ஒருவர் உயர்த்திக் காட்டின.

தாய் மகள் என்று சொல்ல இயலாது. அந்த அளவுக்கு வயது வேறுபாடு இல்லை. ஆனால், மிக அழகான பெரிய அக்காவும், கடைசித் தங்கையும் போல இருவரும் சேர்ந்தே சுற்றியது பலரையும் கவர்ந்தது. 

வழக்கம்போல, நீதாவுக்கு வயிறு காந்திப் போயிற்று.

அதிலும், நிலா பரிசு பெற்றது பற்றிக் கடைசியில் வித்யாசாகரன் அறிவித்தபோது மற்ற அனைவரையும் விட்டுவிட்டு, நிலா வாணியிடம் ஓடிப்போய், அவளைக் குனிய வைத்து அவளது கன்னத்தில் முத்தமிட்டதை நீதா வால் தாங்கவே முடியவில்லை. 

இனி சும்மா இருப்பது சரி வராது என்று எண்ணிய அவள், மறுநாள் வாசகசாலைக்கே சென்று வாணியைச் சந்தித்தாள். 

அவளுக்கும், அவளுடைய விது அத்தானுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு விட்டது என்றாள், அவள் எடுத்த எடுப்பிலேயே! 

இந்த அறிவிப்பில் தோன்றிய ஒரு சிறு திகைப்பு உடனே மறைந்துவிட, உதட்டிலிருந்த முறுவல் மாறாமல் வாணி வேலையில் ஈடுபடவும் நீதா கொதித்தாள். 

அடக்கிக்கொண்டு… நீதா வேகமாக யோசித்தாள். 

ஏதோ அடிப்படை இல்லாமல் இந்த அழுத்தம் இவளுக்கு வராது. அது என்னவாக இருக்கும் என்று யோசித்தவள். தன் இயல்புக்கு ஏற்ப. வித்யாசாகரன் வாணியிடம் ஏதாவது சிலுமிஷம் செய்திருப்பான். அதைக் கொண்டு அவள் கற்பனையில் பறக்கிறாள் என்று முடிவுக்கு வந்தாள்! 

கொண்ட முடிவுக்கு ஏற்ப “கையில் பணமும், கண்டிப்பதற்கு மாமா இல்லாத நிலையுமாக, வித்யா சற்று ஆட்டம் போடத்தான் செய்கிறார். என்னிடமே திருமணம் ஆகும்வரை சுதந்திரமாக இருக்கிறேன், தயவு பண்ணிக் கண்டு கொள்ளாதே என்கிறார். அவரது இளமைக் கவர்ச்சி. பணத்தைப் பார்த்தும், இவனைப் பிடித்து விட்டால் வசதியாக வாழ்க்கை கிடைக்குமே என்று பல பெண்கள் மேலே விழுந்து முயற்சிப்பதும், அதற்கு வசதியாகப் போகிறது. இப்படி கொஞ்ச நாள் ஜாலியாக பழகிவிட்டு, வித்… விது அலுத்துப் போய் கைவிட்டு, அதனால் உள்ளம் உடைந்து போன சில பெண்களை எனக்குக் கூடத் தெரியும்! 

“என்ன செய்வது? எங்கள் திருமணம் நடக்கும் வரை நானும் பொறுத்துதான் போக வேண்டும்! 

“வடக்கே தொழில் தொடங்கி நடத்தும், நித்தியானந்தனும், வெளிநாட்டில் இருக்கும் என் தந்தையும் வந்ததும், எங்கள் திருமணம் நடக்கும். அதற்குள் எங்கெங்கே அலைந்தாலும், இந்த விதுக் காற்றாடியின் நூல் என் கையில் இருப்பது தெரியாமல், இன்னும் எத்தனை பெண்கள் அவரது வலையில் மாட்டி அழப் போகிறார்களோ பாவம்! நல்ல குடும்பத்துப் பெண்ணாகத் தோன்றும் நீயும், அப்படி நாசமாக வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் எச்சரிக்க வந்தேன்! புரிந்து கொண்டு, அத்தானை விட்டு விலகி, நீயேனும் நல்லபடியாகப் பிழைத்துப் போ!” என்று கோவையாக இயம்பினாள் நீதா. 

மெய்யாகவே, அடிப்படையாகவே ஒன்றுமே இல்லாமல், இவள் இவ்வளவு பேச முடியுமா? என்று நீதாவைப் போலவே, வாணியும் ஒரு கணம் அயர்ந்துதான் போய் விட்டாள். 

ஆனால் உடனேயே, முதல் முறையாக நீதாவைப் பார்த்தபோது அவள் நடந்து கொண்ட விதமும், தொடர்ந்து சுபா அவளைப் பற்றிச் சொன்னதும் நினைவு வந்துவிட, இவள் பேச்சை நம்பக்கூடாது என்று எண்ணினாள். 

ஆனால் வித்யா… அவன் நீதாவை ஒரு பொருட்டாக மதிப்பது போல இல்லாதபோதும், நேரடியாக அவளை அலட்சியமும் செய்ததில்லையே! 

இப்படி நினைக்க அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லைதான். ஆனால், ஒரு வேளை இவள் சொல்வது நிஜமாக இருக்கக் கூடுமோ? 

வாணி தவிப்புடன் யோசிக்கும்போதே, நீதாவின் பொறுமை வேகமாக ஆவியாகிக் கொண்டிருந்தது! 

இவளைச் சீக்கிரமாக இங்கிருந்து விரட்ட வேண்டுமே! 

இந்த வாணியின் வீடு இருக்கும் சென்னையும், அப்படி ஒன்றும் சென்றடைய முடியாத தூரமில்லை. அதுவும் இங்கிருந்து காரில் சென்றால் சென்னையின் போக்குவரத்து நெரிசலோடு சேர்ந்தே இரண்டு மணி நேரம் தான் ஆகக்கூடும்! 

ஆனாலும், அவளுள் இருந்த அடுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவளுக்குச் சிறு அவகாசம் வேண்டும். 

திட்டத்தை தொடங்கி விட்டால், அதற்குப் பிறகான வெற்றியைப் பற்றி, நீதாவுக்குச் சந்தேகமே கிடையாது. 

ஆனால், அதுவரை வேறு எதுவும் வலுப்பெற்று விடாமல் காப்பதற்கும், இப்போது கொஞ்ச நஞ்சமாக ஏதேனும் இருந்தால், அப்படி இருப்பது அழிந்தே போவதற்காகவும், இவளை இங்கிருந்து அகற்றி விடுவது தான் நல்லது என்று நீதாவுக்கு நிச்சயமாகத் தோன்றியது. 

கண்ணில் படாதது, கருத்திலும் நிலைப்பதில்லை என்பார்கள். 

எனவே, குறைந்த பட்சமாக சில தினங்கள், இந்த வாணி, இங்கே இருக்கக் கூடாதுதான். 

இந்த வாசகசாலைப் பெண் யோசிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறிதான். ஆனால், யோசனையின் முடிவு. நீதாவுக்கே பாதகமாகிப் போகாது என்று என்ன நிச்சயம்? 

இந்த எண்ணம் தோன்றவும், வாணியை மேலே யோசிக்க விடாமல், நீதா அவசரமாகப் பேசினாள். “நேற்று உன்னைப் பார்த்து ஊரெல்லாம் சிரித்து விட்டது வாணி. ஆமாம், நீ எதற்காக, நிலாவின் உடைக்குப் பொருத்த மானதாகப் பார்த்து வாங்கி அணிந்தாய்? அவளை வைத்து, நீ விதுவை மயக்கிப் பிடிக்க முயற்சிப்பதாக என்னிடமே நிறைய்ய பேர் மிகவும் இகழ்ச்சியாகப் பேசினார்கள். இன்னும் சில நாட்களுக்கு, இந்த பக்கம் எல்லோரும் அதைப் பற்றித்தான் பேசிச் சிரிப்பார்கள் என்று நினைக்கிறேன். கே..வலம்! எதற்கும் நீ கொஞ்ச நாள் இந்த ஊரை விட்டு எங்கேனும்… உன் வீடுதான் சென்னையில் இருக்கிறதாமே, அங்கே போய் விடேன், அங்கேயே நிரந்தரமாக இருக்க முடிந்தால் நல்லதுதான். ஆனால், குறைந்த பட்சம் ஒரு பத்து நாள் போனால் கூட இந்தக் கேலிப் பேச்சு குறைந்து விடும்! போகிறாயா? உடனே போவதானால், நான் வேண்டுமானால் என் காரைத் தருகிறேன்! அதிலேயே போயேன். உடனேயே போயேன்! சீக்கிரமாகக் கிளம்பு. கிளம்பு!” என்று அவசரப்படுத்தினாள். 

மற்ற எதையும் விட நீதாவின் இந்த அவசரமே, மதுர வாணியை நிதானப்படுத்தி, ஆழ்ந்து சிந்திக்க வைத்தது எனலாம்! 

இவள் எதற்காகத் தன்னை இங்கிருந்து அகற்ற முயற்சிக்கிறாள் என்று வாணியின் யோசனை ஓடியது! 

இந்த ஊரிலிருந்து போகச் சொல்லுகிறாளே, அப்படியானால் வித்யாவைப் பற்றிய அவளது விருப்பம் நிறைவேற, வாணி தடையாக இருக்கிறாள் என்றுதானே அர்த்தம்? 

தடையை அகற்றுவதாக எண்ணிப் போகச் சொல்லுகிறாள்? 

அப்படி, தன்னைத் துரத்திவிட்டு, என்ன செய்யத் திட்டம் போடுகிறாள் இந்த நீதா? 

தான் இல்லாத சமயத்தில் தன்னைப் பற்றி வித்யா குடும்பத்தில் ஏதாவது புரளி கிளப்பி விடுவதாகவா? 

அல்லது, மேனகையாக வந்து, வித்யாவை மயக்குவதாகவா? 

அல்லது, அப்படி வாணி அந்தப் பக்கம் போனதுமே, வித்யாசாகர் அவளை மறந்து, நீதாவின் கழுத்தில் தாலி கட்டி விடுவான் என்று எண்ணினாளா? 

எதுவாயினும், இப்படியே இன்னும் ஆயிரம் திட்டங்கள் நீதா தீட்டினாலும், அவளுக்கு வசதியாக வாணி ஏன் வழி விலகிப் போக வேண்டும்? 

நாலு நாள் கண்ணில் படாமல் இருப்பதாலேயே, வித்தி தன்னை மறந்து விடப் போவதில்லை என்பது வாணிக்கு இப்போது நிச்சயம்! 

அப்படி மறந்தால், அது உண்மை நேசமாக இருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு புறமிருக்க, வித்யாசாகருக்கும் அவளுக்கும் இடையே மலர்ந்திருப்பது உண்மை அன்பே என்பதிலும் அவளுக்கு மிகுந்த உறுதி ஏற்பட்டு விட்டது. 

மற்றபடி, அவளை விரட்ட, நீதா இப்படித் துடித்துக் கொண்டு வந்திருக்க மாட்டாள். 

ஆனால், வித்தியின் அன்பை நிரூபிப்பதற்கான சோதனையாக, நீதாவின் சதிக்கு வாய்ப்புக் கொடுக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை. 

பொதுவாக யாரோ எதுவோ சொன்னார்கள் என்பதற்காக தன் மனம் ஒப்பாத எதையும் வாணி செய்தது இல்லை! 

பெற்ற தாய் அன்பாகவும், அதட்டியும், எப்படியெப்படியோ அழைத்தும் கூட தாத்தாவைத் தனியே விட்டுப் போக மனமின்றி, இங்கேயே தங்கி விட்டவள், இந்த நீதாவின் பேச்சுக்காகவா திடுமெனக் கிளம்பி விடுவாள்? 

என்ன ஒரு மடத்தனமான எண்ணம்! 

நீதாவை நேராகப் பார்த்து “நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்டீர்கள் என்றால் கிளம்புங்கள்? தயவு பண்ணி, அவமதிப்பாக எண்ண வேண்டாம், எனக்கு நிறைய வேலை இருக்கிறது நீதா ப்ளீஸ்…!” என்ற அமைதியான குரலில் கூறினாள் மதுரவாணி..! 

மற்ற எதையும் விட, வாணியின் அமைதியான குரலே நீதாவுக்கு முகத்திலேயே அறைந்தது போல, அடுத்தவளுக்கு ஆத்திரமூட்டியது எனலாம். 

எனவே, தன் நகாசுப் பேச்சை கை விட்டு “உன்னை பார்த்து ஊர் சிரிக்கிறது. ஓடிவிடு என்றால், உன் மர மண்டைக்குள் ஒன்றுமே ஏறவில்லையா? அல்லது வெட்கம், மானம் பற்றி அக்கறையே இல்லாத ஜாதியா நீ?” என்று சீறினாள் நீதா! 

அப்போதும் அமைதியாகவே, “பாருங்கள் நீதா, இது வாசகசாலை! இங்கே சத்தம் போடக்கூடாது என்பது எழுதாத விதி…!” என்றவளைக் குறுக்கிட்டு, “பொல்லாத விதி! மீறி சத்தம் போட்டால் என்னடி செய்வாய்?” என்று மீண்டும் சீறினாள் நீதா. 

அவளுக்குத்தான் எண்ணி வந்த காரியம் நடக்கவில்லையே என்ற ஆத்திரம். 

அதற்கும் மேலாக, அவள் அவ்வளவு சொல்லியும், சற்றும் கலங்காமல், கதறாமல், கண்ணீர் சொரியாமல், குறைந்த பட்சம் கூனிக் குறுகக் கூட இல்லாமல், வாணி கல்லைப் போல அசையாமல் நிற்கிறாளே என்ற பயங்கர ஏமாற்றம். 

இந்தக் கொதிப்பில் அவள் டீ போட்டு பேசவும் வாணி நிமிர்ந்தாள். 

“இது என் இடம் நீதா! குறைந்த பட்சம் இங்கே என்னிடம் மரியாதையாகப் பேச வேண்டும்! அல்லது ஆளைக் கூப்பிட்டு உங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும்!” என்றாள் அந்த நிமிர்வுக்குப் பொருத்தமான குரலில். 

பிரமித்து ஒன்றும் பேச்சு வராமல், பேத்த விழித்தாள் நீதா! 

விரட்ட வந்தவளே விரட்டப்படுவதா? 

ஏதேனும் சொல்லி, வாணியைக் கலங்கடித்து ‘சொர்க்க புரி’யிலிருந்து ஓட வைக்கப் போவதாக எண்ணி வந்தவள் நீதா! 

ஒரு நல்ல பெண்ணின் மனம் எதற்காகவெல்லாம் வேதனைப்படுமோ கூசுமோ, அதையெல்லாம் சொல்லி வருந்திக் கண்ணீர் வடித்தபடி கிளம்புவதைக் கண்ணாரக் கண்டு ரசிக்கும் ஆவலில் காத்திருந்தால், அந்தத் திமிர்ப் பிடித்தவள், இவளையல்லவா வெளியே போகச் சொல்லுகிறாள்! 

அவள் சொல்லி இந்த நீதா போவதா?

முடியாது, போடீ என்று கத்திவிட்டு, அசையாமல் நிற்க, அவளுக்கு ஆசைதான் என்றாலும், நீதாவுக்குப் பயமாகவும் இருந்தது! 

வாசகசாலையில் ஒரு தடியன் வேலை செய்வதாக, அவள் கேள்விப்பட்டதுண்டு. 

இந்தத் திமிர் பிடித்தவள் மெய்யாகவே அவ்னைக் கூப்பிட்டு நீதாவைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளச் சொல்லி விட்டால்? அது, எவ்வளவு கேவலமாக இருக்கும்! இவள் செய்தாலும் செய்வாள்! 

அதைவிட சுலேகா மூலம் தன் திட்டத்தை நிறை வேற்றிக் கொண்டு, வித்யாசாகருடைய மனைவியாக் இங்கே வந்து நிற்பதுதான் அந்த அகம்பாவக்காரிக்கு சரியான தண்டனை. 

அந்தத் தண்டனையை வாணி அனுபவிக்கும்போது, இன்னும் வலிக்க, இரண்டு குத்து குத்தி, அதையும் பார்த்து ரசித்தால் போகிறது. 

புலி பதுங்குவது, பாய்வதற்காகவே என்பது போல, இப்போது நீதா பின் வாங்குவதில் அவமானமே கிடையாது. 

இப்படியெல்லாம் காரண காரியங்களோடு தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்ட பின் ‘ஹூம்’ என்று தலையை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு வாசகசாலையை விட்டு வெற்றிகரமாகப் பின்னடைவதில் நீதாவுக்கு எந்தவிதமான தயக்கமும் ஏற்படவில்லை. 

நீதா சென்ற பிறகு, இறுகக் கோர்த்து மடிமீது கிடந்த கைகளை வெறித்தவாறு சற்று நேரம் வாணி ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்தாள். 

வித்யாசாகரைப் பற்றி, அந்த நீதா எவ்வளவு கேவலமாகப் பேசி விட்டாள்! ஆனால் இன்னும் என்னென்ன சொன்னாலும், இவள் சொல்லுவதை அப்படியே நம்பி அவனை வாணி ஒதுக்கி விடுவாளா என்ன? 

என்ன இப்படிப் பேசுகிறாளே என்று ஒரு கணம் திகைத்தாலும், உடனே யோசிக்க மாட்டாளா? யோசியாமலா முடிவெடுப்பாள்? 

பொதுவாக வித்யாசாகருக்குத் தாய், தங்கை, நிலா, தவிர பெண்களைப் பிடிக்காது என்று அந்த வீட்டுப் பெண்களின் பேச்சுக்களின் மூலமாக வாணி ஊகித்திருந்தாள். 

அது வீட்டார் முன் போடும் வெறும் வேஷம் அல்ல என்பதற்கு, வாணியிடம் முதலில் அவன் நடந்து கொண்ட முறையே சான்றாயிற்று. என்ன மாதிரி காய்ந்தான்! 

ஒரு அவனைப் போய் ஒரு பொம்பளைப் பொறுக்கியாகச் சித்தரிப்பதா? 

அப்படிச் சொன்ன அதே மூச்சில் அவனை மணக்கப் போவதாக கூற, நீதாவுக்குக் கொஞ்சமும் கூசவில்லையே! 

இவளுடைய ஒன்றுவிட்ட சகோதரியும் இப்படித்தான் இருப்பாள் போல! 

இந்த மாதிரி பெண்களால்தான், பெண்களிடம் அவனுக்கு இந்த நல்ல அபிப்ராயமே கெட்டிருக்க வேண்டும். 

அதனால்தானே முதலில் அவளிடமே அந்த மாதிரி…

“ஹல்லோ… ஹல்லோ மேடம் விழித்துக் கொள்ளுங்கள் மேடம், இங்கே பத்து ரூபாய்க்கு ஒரு பென்ஸ் கார் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள் என்று வாங்கிப் போக வந்தால், கண்ணை விழித்துக் கொண்டே தூங்கி புது வித்தை காட்டுகிறீர்களே” என்று குதூகலக் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தால், எதிரே உற்சாகமே உருவாக, வித்யாசாகரன் நின்று கொண்டிருந்தான். 

பரபரப்புடன் எழுந்தவளின் கண்களில் காரணமே புரியாமல் நீர் கோர்த்துக்கொள்ள, “என்னடா?” என்று கனிவுடன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் அவன்! 

இந்தப் பார்வையும் செயலும் எப்படிப் பொய்யாகும் எப்படி வீணாகும்? 

‘செம்புலப் பெயல் நீர் போலப்’ பார்த்ததுமே அவர்கள் இருவரின் நெஞ்சங்களும் ஒன்று கலவாது இருந்திருக்கலாம் சண்டை கூடப் போட்டார்கள்தான்! 

ஆனால் இன்றைக்கு அவர்களது அன்பு அந்த ராமன் சீதையின் நேசத்துக்குச் சற்றும் குறைந்தது அல்ல…! அவர்களைப் பிரிக்கவும் யாராலும் ஒரு போதும் முடியாது என்று சர்வ நிச்சயமாக எண்ணினாள். மதுரவாணி. 

ஆனால்… 

– தொடரும்…

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *