கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 1,860 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாந்தாவின் முகம் கூம்பியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. அப்பாவின் அறையினுள் நுழைந்தாள்.

சிந்தனையிலிருந்து கலைந்த அவர், “என்னம்மா சாந்தா, ஏன் இப்படியிருக்கிறாய்?” என்று பரிவோடு கேட்டார். அவரது அருமை மகளல்லவா, அவள்!

”நடந்ததைச் சொல்லம்மா. உடம்புக்கு என்ன….?”

அவள் விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். பெருகிய கண்ணீரைக் கண்ட அவர் பரபரப்படைந்தார்/

”சாந்தா, நீ ஏன் அழ வேண்டும்? விஷயத்தைச் சொல்லேன்!” என்று கேட்டுக்கொண்டே கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டார்.

”சந்திரன் என்னைக் கண்டபடியெல்லாம் பேசினான், அப்பா! அவன் ஒரு சித்திரம் வரைந்திருக்கிறான். அந்த அழகுச் சித்திரத்தை எனக்குக் கொடுக்கும்படி கேட்டேன். எவ்வளவு அருகையானது தெரியுமா? கேட்டவுடனேயே ஆத்திரத்தோடு, “தரமுடியாது போ’ என்று சொல்லி விட்டானப்பா.” நெஞ்சடைக்கப் பதில் சொன்னாள் சாந்தா;

”சே, இதுக்காகவா இப்படி வருத்தப்படறே! நாளைக்கு நான் தான் பட்டணம் போகப் போறேனே…. ஒரு படம் என்ன, டஜன் கணக்கில் வாங்கி வரேம்மா. கண்ணைக் கவரும் மாதிரிதானே வேணும்? நான் பார்த்துக்கறேன்.”

”எனக்கு அதெல்லாம் தேவையில்லை. அழகும் கருத்தும் நிறைந்த சந்திரனின் அந்த ஓவியந்தான் வேண்டும், அதை எதற்கோ போட்டிக்கு அனுப்பப் போகிறானாம்… எப்படியாவது எனக்கு வாங்கிக் கொடுத்து விடுங்கள். இதை உங்களால் செய்ய முடியாதா, அப்பா?”

“சாந்தா, நீ ஏன் இப்படி வம்பு பண்றே? அவன் வரைந்தான்; அதை என்ன வேண்டுமானாலும் செய்வான். உனக்கு அதில் என்ன இருக்கிறது? சந்திரன் கொடுக்க மறுத்தது நியாயந்தானே! நல்ல படங்களை உனக்கு நான் வாங்கி வருகிறேன்.”

“அது எனக்கும் தெரியும், அப்பா. இந்தப் பேச்சைக் கேட்கத்தான் உங்களிடம் வந்தேனா?நான்ஆசையாகக் அந்தப்படம் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா?” அவள் முகம் சிவந்தது.

அன்பு மகளின் ஆசையை, அருமை அப்பாவால் நிறைவேற்றக் கூடவா முடியாது! “சாந்தா, நீ போம்மா, நம்ம கணக்குப் பிள்ளை வந்தவுடன் சொல்லியனுப்பு கிறேன். அவர் சொன்னால் சந்திரம் படத்தைக் கொடுத்து விடுவான்.

சாயங்காலம் உனக்கு அது கிடைத்துவிடும். உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே!” என்று தேற்றினார் அப்பா வேதாசலம்.

***

கையில் தூரிகையோடு அமைதியாக வேலையில் ஈடுபட்டிருந்தான் சந்திரன். நல்ல அடக்கமும் அழகும் பொருந்திய அவனுக்குச் சின்ன வயதுதான். இளம் கலைஞன். அவன் சித்திரப் பழக்கத்தில் ஊக்கம் கொண்ட விதமே தனி. பள்ளிப் பொருள்காட்சியில் அவன் சித்திரம் இடம் பெற்றிருந்தது. நல்லகருத்தும் கலையழகும் பெற்றிருந்தது. அவன் ஓவியத்திற்கே முதல் பரிசு கிடைத்தது. அவன் திறமையைப் போற்றிப்பலர் புகழ்ந்தனர். அதிலிருந்து அவன் ஊக்கமும் வளர்ந்தது.

”சந்திரா!” என்று அழைத்த வண்ணம் உள்ளே அவன் அப்பா. அவர் தான் வேதாசலத்தின் கணக்குப்பிள்ளை.

“என்ன, அப்பா?” – சந்திரன் ஆவலோடு கேட்டான்.

“உனக்கு வேறு வேலையில்லையா? இப்படி ‘சித்திரம் சித்திரம்’ என்று உயிரை விட்டுக் கொண்டுருந்தால் எதற்காகும்? எனக்குக் கொஞ்சங்கூட இது பிடிக்கவில்லை. படிப்பு தான் முடிந்தது; ஏதாவது வேலை பார்க்கலாம் அல்லவா?”

“என்ன அப்பா, இப்படி…?”

“சரி போகட்டும். ஏதோ ஒரு படம் போட்டிருக் கிறாயாமே…அந்தப் படத்தை முதலாளி கேட்டார். அவர் பெண் சாந்தா அழுதுகொண்டு இருக்கிறாள். பாவம், சின்னப் பெந்தானே!”

“அதற்கு என்ன செய்யச் சொல்கிறீர்கள், அப்பா?”

“படத்தை வாங்கிக்கொண்டு வரரேன்னு சொல்லி வந்திருக்கிறேன். அவர் ரொம்பச் சொல்லியிருக்கிறார். கொடுத்துவிடலாம் அல்லவா?”

“முடியாது.”

“முடியாதா!

”அது என் உயிர்.”

“உயிராவது, மண்ணாவது; அவர் கேட்கிறார், கொடுக்க மறுப்பதா…?”

“யாராயிருந்தால் என்ன? அவர் உங்கள் முதலாளி; நீங்கள் நன்றி செய்ய வேண்டியவர். நான் என்ன செய்ய முடியும், அப்பா? அந்த ஓவியம் அவருக்குக் கிடையாது.”

”என்ன சந்திரா, இப்படிப் பேசுகிறாய்? அந்தப் படத்தினால் உனக்கு என்ன ஆகிவிடப்போகிறது.

“இந்த ஓவியம்தான் எனக்கு வழிகாட்டி.என்னை இதுதான் உயர்த்தப் போகிறது. இதை நான் சொல்ல வில்லை. ஆசிரியரே சொன்னார், அப்பா. கலை உலகம் என்னை ஏற்றுக்கொள்ளும். நாளைக்கு சித்திரத்தைப் போட்டிக்கு அனுப்பப் போகிறேன். என்னைத் தேடிவரும் வேலை. இதை இழந்துவிட்டால்…

“அப்பா உங்கள் முதலாளி தம் பெண்ணின் ஆசையை நிறைவேற்ற எவ்வளவு கஷ்டப்படுகிறார்…எனக்கு நீங்கள் இதையாவது செய்யக் கூடாதா…?

சந்திரனின் போக்கு அவருக்கு கொஞ்சம் புரிந்தது. அவன் சொன்னவை அனைத்தும் உண்மை. கலை கனவில் ஆழ்ந்து அந்த ஓவியத்தைக் கண்டெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டானோ! ‘மகன் கலைஞன்! யாருக்கு பெருமை?’ அவருக்கு உண்மை விளங்கியது.

***

“அப்பா, படம் வந்துவிட்டதா? சந்திரன் கொடுத் திருப்பானே! எங்கே அப்பா, அது?” ஆவலோடு கொண்டு வந்தாள் சாந்தா.

“கொடுக்க மறுத்துவிட்டான், கோவேறுக் கழுதை! ஆணவம் பிடித்துவிட்டது அற்பனுக்கு! என் சாந்தாவுக்கு அந்த  ஓவியம் இல்லை !என் கணக்குப்பிள்ளை மகன் என்னையே அவமதித்துவிட்டான். நன்றிகெட்டவன்; பித்தம் பிடித்துப் பேயன்!” வேதாலசம் ஏதேதோ பேசினார். ஆத்திரம் பொங்கி வழிந்தது.

“அப்படி என்றால், அது கிடைக்காதா அப்பா? என்ன செய்வது?” என்று தொண்டையடைக்கக் கேட்டாள் சாந்தா.

”நீ சும்மா இரும்மா. எல்லாம் எனக்குத் தெரியும். கணக்குப் பிள்ளைகூட இந்த வேலையைச் செய்ய வில்லை!”

“சாந்தா மனம் வாடுவதுபோல் சந்திரன் வருந்த வேண்டும். அவன் எண்ணம் அடியோடு கெட வேண்டும்” வேதாசலத்தின் மனம் கல்லாக மாறியிருந்தது. தீவிரமான யோசனையில் ஆழ்ந்தார்.

***

இரவு பன்னிரண்டு மணி இருக்கும். எங்கும் மையிருட்டு அமைதியைக் கலைக்க விரும்பி ஆந்தை அலறிக் கொண்டிருந்தது பயங்கரமாகத்தான் இருந்தது. எங்கோ ஒரு நாய் குரைத்துக் கொண்டிருந்த்தது. வெளவால்களின் ‘கீரிச்’ ஒலி இவற்றைத் தவிர வேறு எந்த சந்தடியும் இல்லை.

அந்த நேரத்தில் தெருவில் நடந்து கொண்டிருந்தது ஓர் உருவம். சந்திரனின் வீட்டை நெருங்கிவிட்டது அது. வீட்டினுள் நுழைந்தும்விட்டது. பூனைபோல் ஓசை செய்யாமல் எதையோ துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அருகேயிருந்த பெட்டி அதன் கண்களுக்குச் சட்டெனத் தெரிந்துவிட்டது. அவசரமாக அதைத் திறந்தது!

அடுத்த கணம் –

நாலைந்து ஓவியம் தீட்டப்பட்ட காகிதங்கள் அதன் கையில் சிக்கிக் கொண்டன! வெற்றிப் பெருமிதத்தால் அதன் முகத்தில் ஒரு களிப்பு ஏற்பட்டது.

ஆனால் –

மறு நிமிஷம் அதைப் பற்றின, இரும்புக் கரங்கள்! விழித்தது அது; பிடித்தவன் சிரித்தான்.

“தம்பி, சந்திரா, திருடன்…திருடன்…சீக்கிரம் விளக்கைக் கொண்டுவா” என்றான் பிடித்தவன்.

“இதோ வந்துவிட்டேன் மாமா” என்று சொல்லிக் கொண்டே வந்தான் சந்திரன். ஒரு விந்தை! திருடனைப் பிடித்திருப்பவன் யார்? எங்கே வந்தான்?

சந்திரன் மாமா என்று அழைத்தானே, அந்தப் போலிஸ் கான்ஸ்டபிள், அவன் மாமா கண்ணப்பா தான். ஹெட்கான்ஸ்டபிளாக அவனுக்கு வேலை மாற்றம் ஏற்பட் டிருக்கிறது.’டியுட்டி’ யை வேறு ஊருக்கு மாற்றி யிருப்பதால் சொல்லிக்கொண்டு போக அன்று மாலை தான் வந்திருந்தான். வந்த நேரம் பார்த்து இந்த வேலை நடந்துவிட்டது.

சந்திரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன்னுடைய சித்திரங்கள் திருடன் கையில்!… வேதாசலத்தின் ஆள் சோமு அல்லவா அவன்?

“யாராடா நீ? கொள்ளையடிக்கவா வந்தாய்?” என்று கத்தினான் கண்ணப்பா.

அந்தத் திருடன் – சோமு – பதறிப் போய்விட்டான். வேர்த்துக் கொட்டியது ஆள் ஆட்டங்கண்டுவிட்டான்.

அவன் திருட வந்த காரியம் கண்ணப்பாவுக்கும் தெரிந்தது.

“அப்படியா, செய்தி? எல்லாம் வேதாசலத்தின் வேலைதானா? பார்த்துக் கொள்கிறேன்” என்று சவால் விட்டான் கண்ணப்பா.

***

சோமு கையும் களவுமாக கான்ஸ்டபிளிடம் மாட்டிக் கொண்டதால் வேதாசலத்திற்குப் பயம் தாங்க முடியவில்லை. ‘தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்ன செய்வது? தன்னால் தானே சோமு திருடப் போனான்?” என்று தான் பயம்.

”என்ன மிஸ்டர், வேதாசலம். எப்படி வேலை நடந்திருக்கிறது பார்த்தீங்களா?” வெற்றிச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறு கேட்டான் கண்ணப்பா.

“இல்லை ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது. அறிவு கெட்டத்தனமா செய்திட்டோம்” என்று நாக்குழறப் பேசினார் வேதாசலம்.

“இதிலே என்ன மிஸ்டர் இருக்கு? முதல்லே சோமுவை ஸ்டேஷனுக்கு அனுப்புகிறேன். அப்புறம் நீங்கள்…”

வேதாசலத்தின் கண்கள் ஒளியிழந்தன. விழிக்கடை யில் கண்ணீர் அரும்பி நின்றது.பார்க்கப் பரிதாபமாக இருந்தது அவர் நிலை.

சந்திரனின் மனம் நெகிழ்ந்தது. அவன் பிஞ்சு உள்ளம் அவரைப் பார்க்கப் பொறுக்கவில்லை. பகைவனுக்கு அருளுவதுதானே பண்பு?

“மாமா, போது! அவரை ஒன்றும் செய்யாதீங்க. அவர் மனமறிந்து செய்யவில்லை. சாந்தாவின் மேல் அவருக்கு அவ்வளவு அன்பு. பாசம் தான் அவரை…” சந்திரன் விளக்கினான்.

”என்ன சந்திரா, ஒன்றும் அறியாதவன் போல் சொல்கிறாயே! என் கடமையை நான் செய்ய வேண்டாமா?”

“மன்னிக்கும் மனப்பான்மை வேண்டாமா, மாமா? அவர் தவற்றைத் திருத்திக்கொண்டுவிட்டார்; அதற்கு மேல் என்ன செய்யவிருக்கிறது?”

கண்ணப்பா சிந்தித்தான். சந்திரன் சொல்லியது நியாயமாகவே பட்டது. கடமையென்றாலும் நேர்மையை யும் நியாயத்தையும் பார்க்கத்தானே வேண்டியிருக்கிறது?

”சந்திரா, நான் ஒன்றும் செய்யத் துணியவில்லை” நிதானமாகக் கூறினான் கண்ணப்பா.

“சந்தர், உனக்கு நான் பாதகம் செய்துவிட்டேன். உன் வெள்ளை மனம் என்னை மாற்றிவிட்டது. உன்னிடம் மன்னிப்புத்தான் கோர வேண்டும்.” மனமாற்ற மடைந்த வேதாசலம் பேசினார்.

“ஆமாம் சந்தர்; என்னால்தான் இவ்வளவும் நடந்து விட்டது அந்த உயிரோவியத்தை நான் இனிக் கேட்கவே மாட்டேன், சந்தர்” என்று குழைவோடு சொன்னாள் சாந்தா.

அமைதி நிலவியது. அந்த உயிரோவியம் எவ்வளவு பெரிய வேலையைச் செய்துவிட்டது. நீண்ட பெரு மூச்சொன்றை விட்டவாறு நடந்தான் சந்திரன்.

– 1957 – கண்ணன் இதழில் பிரசுமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *