காவல் அதிகாரியின் ஆதங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 27,994 
 

சே ! இந்த திருட்டு வேலை செய்வது என்றாலே நமக்கு குலை நடுக்கம்தான்,

மனதுக்குள் புலம்பிக்கொண்டவன் சட்டென தலையில் தட்டிக்கொண்டான். திருட வந்த இடத்தில் இப்படி நினைத்து மண்டையை உடைத்துக்கொண்டால் வந்த காரியம் என்னவாகும்.

அந்த ஐந்து மாடி கொண்ட பிளாட் அமைப்பு. ஒவ்வொரு தளத்திலும் நான்கு நான்கு வீடுகள் உள்ளது. இப்பொழுது செல்லபோகும் வீடு பூட்டி இருக்கும். அங்குள்ளவர்கள் வெளியூர் போயிருக்கிறார்கள். கணவன்,மனைவி, அல்லது நண்பர்களாக இருக்கலாம். அந்த பூட்டு “நவ்தால்” வகையை சேர்ந்த்து, அதற்கு சாவி பக்காவாக தயார் செய்யப்பட்டு இவன் கையில் கொடுக்கப்பட்டு விட்டது. ஆபத்து என்றால் ஒரு சின்ன ரக கை துப்பாக்கியும் கொடுத்துள்ளார்கள். துப்பாக்கி உருவத்தில் தான் சிறியது, சுட ஆரம்பித்தால் நான்கைந்து பேரை சுட்டு தப்பி விடலாம், அவ்வளவு சக்தி வாய்ந்த்து. அது. இடுப்பில் பத்திரமாக இருக்கிறதா என்ற் தொட்டு பார்த்துக்கொண்டான். பத்திரமாக இருந்தது. இந்த தொழிலில் அவசியமில்லாமல் துப்பாக்கியை எடுக்க கூடாது என்பது படிப்பினை. கூடுமான வரையில் பிறரது கவனத்தை கவரவே கூடாது, இது மிகவும் முக்கியம்..

எல்லாம் பக்காவாகத்தான் தயார் செய்து கொடுத்துள்ளார்கள். இருந்தாலும் அந்த வீட்டுக்குள் சென்று யாருக்கும் சந்தேகம் வராதாவாறு சென்று பூட்டை திறந்து உள்ளே நுழைவதற்கு மட்டும் என்னை அனுப்பி விடுகிறார்கள். கேட்டால் இந்த வேலைக்கு உன்னை விட்டால் யாருமில்லை என்று பொய் சொல்கிறார்கள். மனதுக்குள் புலம்பியவன், மீண்டும் மண்டையில் தட்டிக்கொண்டான். அப்பா சாமி மனசே கொஞ்சம் அமைதியாய் இரு. போகிற காரியத்தில் இந்த மனசு வேறு இப்படி எல்லாம் நினைத்து சோர்வடைய செய்து விடுகிறது.

மூன்றாவது தளத்துக்கு யாரும் சந்தேகப்படாதாவாறு படியில் ஏறி வந்து விட்டான். நல்ல வேளை, கீழ் தளத்தில் காணப்படும் வாட்ச்மேன், பீடி குடிக்க மறைவான இடம் தேடிப்போக, எப்பொழுது இடம் மாறுவான் என காத்திருந்த இவன் சட்டென படியை அடைந்து வேகமாக முதல் மாடியை தாண்டினான், அடுத்த தளத்துக்கு மெதுவாக நகர்ந்தாலும் போதும்.இப்பொழுது மூன்றாவது மாடியை அடந்து விட்டான்.

நன்கு நின்று ‘வீடுகளின்’ அமைப்பை உறுதி செய்து கொண்டான். அவர்கள் சொல்லி இருந்தபடியே வீடுகளின் அமைப்பு இருந்தது. முதல் வீட்டுக்கு அடுத்து இரண்டாவது வீடுதான் இவனுக்கு இலக்கு. அடுத்து தெற்குப்புறம் பார்த்தாவாறு இரண்டு வீடுகள் இருந்தன. அந்த வீடுகளுக்கு இன்னும் இருபதடி நடக்க வேண்டும். இவன் மாட்டிக்கொண்டால் அந்த வீட்டிலிருந்து யாராவது வந்தால் எப்படி தப்பிப்பது என்பதையும் முடிவு செய்து கொண்டவன்

மெல்ல கால்களை உறுதியாக பதிய வைத்து அதே நேரத்தில் மற்றவர்கள் சந்தேகம் அடையாதவாறு நடந்தான்.

இவன் நுழைய வேண்டிய வீட்டின் முன் நின்று யதேச்சையாக பார்ப்பது போல சுற்றி பார்த்துவிட்டு தன் பாக்கெட்டிலிருந்து கொண்டு வந்த சாவியை எடுத்து மெல்ல பூட்டுக்குள்

நுழைத்தான். “கடவுளே உடனே திறந்து கொள்ள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்து கொண்டான். அதிகம் அவனை சிரமப்படுத்தாமல் ‘க்ளிக்” என்று பூட்டு திறந்து கொண்டது. சட்டென கதவை திறந்து தன்னை உள்ளே திணித்து கதவை மெல்ல சாத்தி உள்புறம் தாளிட்டுக்கொண்டான்.

இனி மள மளவென வந்த காரியத்தை பார்க்க வேண்டும், அவர்கள் என்னென்ன செய்ய சொல்லி இருந்தார்களோ அதை செயல்படுத்த தன் வேலைகளை வேகமாக ஆரம்பித்தான்.

“என்ன வாட்ச்மேன்” எப்படி இருக்கறீங்க கேட்டுக்கொண்டே காரில் வந்திறங்கிய அந்த ஜோடிக்கு ஒரு சல்யூட்டை வைத்த வாட்ச்மேன் சார் ஒரு வாரமாச்சு, நீங்க போய்.இப்பத்தான் வர்றீங்களா?

ஆமா, கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்களே,வெரி குட் அப்படித்தான் இருக்கணும், சொன்னவர்கள் மூன்றாவது தளத்திலுள்ள இவர்கள் வீட்டுக்கு செல்ல லிப்டை நோக்கி நடந்தார்கள்.சார்..என்று வாட்ச்மேன் ஓடி வந்து இரண்டு நாளா லிப்ட் ரிப்பேர், என்று தலையை சொறிந்தான்.

இவர்கள் சலித்துக்கொண்டே ஏற்கனவே ரொம்ப தூரத்துல இருந்து வர்றோம், இப்ப மூணு மாடி ஏற சொல்றீங்க, முணங்கிக்கொண்டே படிகளில் ஏற ஆரம்பித்தார்கள்.

மூன்றாவது மாடி ஏறி வந்தவர்கள் அவர்கள் வீட்டு கதவு அருகில் வந்து பூட்டை பார்த்து விட்டு மெல்ல திகைத்து ஒரு அடி தள்ளி நின்று கொண்டார்கள். அந்த ஆண் தனது காதை அந்த கதவின் மேல் வைத்து சில நிமிடங்கள் உற்று கேட்டவன், அந்த பெண்ணையும் கையை பிடித்து அழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு கதவை தட்டினான்.ஐந்து நிமிடங்களில் ஜன்னல் திறக்கப்பட்டு, ஒரு பெண் ஜன்னல் திரைச்சீலையை இழுத்து பார்த்தாள். இவர்கள் இருவரையும் பார்த்து மெல்ல கதவை திறந்த வாங்க என்று அழைத்த பெண்ணை “உஷ்” என்று சைகை காண்பித்து விட்டு “எங்க வீட்டுல திருடன் புகுந்துட்டான்னு நினைக்கிறேன். இவள் உங்க வீட்டுல இருக்கட்டும், நான் கீழே போய் நாலைஞ்சு ஆளுங்களை கூட்டிட்டு வந்துடறேன். சொல்லிவிட்டு சட்டென கீழிறங்கி ஓடினான்.

கீழ் தளத்துக்கு வந்தவன் வெளியே பார்க்க இவர்கள் பிளாட்டு கேட்டுக்கு வெளியே இரு போலீஸ் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள், அவர்களிடன் ஓடி விவரத்தை சொன்னான். அவர்கள் உடனே பேச்சை நிறுத்தி விட்டு, இவன் கூடவே ஓடி வர, வாட்ச்மேன், இதை பார்த்துக்கொண்டிருந்தவன் என்ன ஏது என்று தெரியாமல் அவனும் கூடவே மூன்றாவது தளத்துக்கு விரைந்தார்கள்.

அதற்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இவர் வீட்டில் திருடன் புகுந்து கொண்டான், போலீஸ் செல்கிறது என்ற தைரியத்தில் பக்கத்து பக்கத்து வீட்டு ஆண்கள், பெண்கள் அனைவரும் கூடவே வர நெரிசல் மிகுந்த இடமாகி விட்டது அந்த மூன்றாவது தளம்.

இப்பொழுது அந்த கதவின் அருகில் இரு போலீஸ் நின்று கொண்டனர்.. நாம எல்லாம் உள்ளே போலாம் சார், என்று உணர்ச்சி வசப்பட்டு கத்தினார் ஒருவர். போலீஸ் அவரை பார்த்து உஷ், முதல்ல சத்தம் போடறதை நிறுத்துங்க என்றவர்கள், மெல்ல கதவை தட்டினர்.

உள்ளே பர பரவென வேலைகள் செய்துகொண்டிருந்த இவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு “விலுக்கென’ தலையை நிமிர்த்தினான். முகத்தில் பய ரேகைகள். போச்சு, எல்லாம் போச்சு, சட்டென எழுந்தவன் அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா, என்று சுற்று முற்றும் தேடினான். ஹூ,ம் எங்கும் வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை. அதற்குள் கதவு தட்டல்கள் அதிகமாக ஆரம்பித்து விட்ட்து. இவனுக்கு முகம் கை கால்கள் வேர்க்க ஆரம்பித்து விட்டது. மெல்ல கதவின் அருகில் வந்தவன் வெளியே கேட்கும் சத்தத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

வெளியே கச கச முச என்னும் சத்தம் கேட்டவன் கண்டிப்பாக பத்திருபது பேராவது இருக்க வேண்டும். ஒன்று இரண்டு என்றாலும், துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிக்க முயற்சி செய்யலாம், ஆனால் வெளியிலிருக்கும் சத்த்த்தை கேட்டால் அது முடியாது போலிருக்கிறது.

என்ன செய்வது? பார்த்து விடுவோம், மனதில் தைரியம் தோன்ற சட்டென கதவை திறந்தான், கையில் துப்பாக்கியுடன்.

பயந்து கொண்டு வேர்த்து விறு விறுத்து வெளியே திருடன் வருவான், ஆளுக்கு நாலு சாத்து சாத்துவோம் என்று காத்திருந்த பொது மக்கள், திடீரென கதவு திறக்கப்பட்டு கையில் துப்பாக்கியுடன் ஒருவன் வெளியே வந்த்தை கண்டவுடன் அவ்வளவுதான், அங்கிருந்த அனைவரும் தட தட வென கீழிறங்கி ஓட ஆரம்பித்தனர். அந்த இரண்டு போலீசும் திகைத்து நின்றவர்கள், “யேய் முட்டாள், உன்னை ஒண்ணும் செய்ய மாட்டோம்’ பேசாம எங்களோட வந்துடு” கத்தினார்கள்.

துப்பாக்கி உடன் வந்தவனும் கத்தினான், ஒருத்தனும் அசையக்கூடாது, நான் உங்களோட வர்றேன்,என்னைய யாராவது தொட முயற்சி பண்ணுனாங்க, இந்த துப்பாக்கிதான் பேசும் கர்ஜித்துக்கொண்டே வெளியே வந்தான்.

இதற்குள் போலீஸ் அவனை நெருங்க, அவனும் அவர்களுடன் நடக்க, ஆரம்பித்தான்

அங்கிருந்த ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தாள் “என்ன நெஞ்சழுத்தம் பாரு திருட வந்ததுமில்லாம, துப்பாக்கிய காட்டி மாப்பிள்ளை மாதிரி போலீஸ் கூட போறான் பாரு இவனையெல்லாம்”

அதற்குள் போலீஸ் அவனை வேகமாக அழைத்துக்கொண்டு கீழ் தளத்துக்கு வர, அதற்குள் போலீசால் தகவல் தரப்பட்டு கொண்டு வரப்பட்ட ஜீப்பில் அவன் ஏற்றப்பட்டு போலீஸ் ஸ்டேசன் கொண்டு செல்லப்பட்டான்.

போலீஸ் ஸ்டேசன் பெஞ்சில் ஐந்து நிமிடம் அவன் உட்கார வைக்கப்பட்டான்.

அப்பொழுது வேகமாக வந்த விலையுயர்ந்த கார் ஒன்று போலீஸ் ஸ்டேசன் வாசலில் வந்து நிற்க அதிலிருந்து ஆஜாபகுவனாய் இறங்கிய ஒருவர் கம்பீரமாய் போலீஸ் ஸ்டேசன் உள்ளே வந்தார். அவரை பார்த்தவுடன் சட்டென அங்கிருந்த எல்லோரும் எழுந்து சல்யூட் வைத்தனர்.

நேராக உடகார்ந்திருந்தவனிடம் சென்றவர் எழுந்திரு என்று கட்டளையிட்டார். நிதானமாக எழுந்தவனை இவர் என்னுடன் வா என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டரிடம் ஏதோ சொன்னார்.”யெஸ் சார்” என்று அவர்களை கார் வரை வந்து வழி அனுப்பினார்.

கார் மெல்ல சென்று கொண்டிருந்த்து.அதுவரை மெளனமாக இருந்தவர் என் மீது கோபமா? கேட்டவரை உற்றுப்பார்த்த இவன், சார் இன்னைக்கு அவங்க வந்துருவாங்க அப்படீங்க்கற இன்பர்மேசனை எனக்கு சொல்லாம விட்டீங்க, ஆதங்கத்துடன் கேட்டான்.

“சாரி” அது அன் எக்ஸ்பெக்டா ’நடந்திருச்சு, எதுக்கும் ஜாக்கிரதையா முன்னாடி இரண்டு போலீசை நிறுத்தி வச்சிருந்தேனே.அதனால பிரச்சினை இல்லாம வர முடிஞ்சதில்லை.சரி போன காரியம் என்ன ஆச்சு? இன்னைக்குள்ள மாட்டிடனும் இல்லையின்னா பட்சி பறந்துடும். சொன்னவனை உற்று பார்த்தவர், ”கோ ஏக்சன் ‘” என்று சொல்லி விட்டு, அவனை மத்திய பாதுகாப்பு அலுவலக வாசலில் இறக்கிவிட்டு விட்டு சென்று விட்டார்.

அன்று இரவு அதே வீட்டு வாசலில் முழு சீருடையில் கதவை தட்டினான்,உடன் நான்கு போலீசாருடன்.. மதியம் திருடனாய் போலீசிடமும்,அந்த பிளாட் மக்களிடமும் மாட்டிக்கொண்டவன். உள்ளே ஐந்து நிமிடங்கள் எந்த சத்தம் வராமல் இருக்கவே சட்டென தன் துப்பாக்கியால் தாழ்ப்பாளை சுட்டு உள்ளே நுழைந்தான்.

மதியம் நடந்து முடிந்த கலவரத்திலேயே உஷாரான அந்த ஜோடி இரவே அந்த வீட்டை காலி செய்ய ஏற்பாடுகள் செய்து வைத்து கவலையுடன் சோபாவில் உட்கார்ந்திருந்த்தது அந்த இண்டர்நேசனல் கடத்தல் ஜோடி. இவன் கையில் விலங்குடன் அவர்களை கைது செய்து காத்திருந்தான்.

மறு நாள் சக அதிகாரியிடம் சொல்லிக்கொண்டிருந்தான், எப்ப பார்த்தாலும், கடத்தல்காரங்களை கண்டுபிடிக்கறதுன்னா என்னையே திருடன மாதிரி அனுப்பறாங்க, மாட்டிகிட்டா உசிரு போய் உசிரு வருது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *