நினைவில் நின்ற நோன்பு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 8,057 
 

“பதினைந்து நிமிஷம் ஆயிடுத்து. நன்னா வெந்திருக்கும்”, தனக்குள் சொல்லிக் கொண்டே ஹேமா இட்லி குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிக்கீழே வைத்தாள். “இன்னிக்கு லீவு போட்டுடறேன்னு பெருமையடிச்சுட்டு, இந்த மனுஷர் முக்கியமான வேலையா, நானும் பாஸும் பெங்களூர் வரை போகணும். காலம்பற சீக்கிரமே கிளம்பிடுவேன்னு அஞ்சு மணிக்கே போய்ட்டார். சாயந்திரம் ஏழு மணிக்குள் வந்துடுவேன்னு எனக்கு ஆறுதல் வார்த்தையை தூவிட்டுப் போய்ட்டார்”. ஹேமா முணு முணுத்துக்கொண்டே உப்புக் குழக்கட்டைக்கு தயார் செய்யும் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

திருச்சியில் பிறந்து வளர்ந்த ஹேமா, சங்கரனுக்கும் செண்பகத்திற்கும் பிறந்த செல்லப்பெண். சிறு வயதிலிருந்தே, புத்திசாலி மட்டுமல்லாமல், தைரியமானவளும் கூட. ஹேமாவும் தன் கல்லூரிப்படிப்பிற்குப்பின், தொலைதூரக்கல்வி மூலம் எம்பிஏ படித்து முடித்து விட்டு, அப்பாவின் ஸ்டோர் நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தாள் திருமணம் ஆகும் வரை.

பிரசன்னா, ஹேமாவின் கணவன், சொந்த ஊர் கும்பகோணமாக இருந்தாலும், கல்லூரிப்படிப்பிலிருந்தே சென்னையில் வசிப்பவன். பள்ளி படிப்பு முடிந்தவுடன், பெற்றோர்களின், அகால மரணத்தால், பிரசன்னாவின் அண்ணா, சென்னையில் நல்ல வேலை, வசதிகளுடனிருந்த,பிரசாத் தன்னுடன் தம்பியை அழைத்துக்கொண்டு போய்விட்டான். பிரசன்னா, கட்டுமானத் துறை படிப்பை முடித்து, மிக நல்ல பதவியில் வேலையில் அமரும் வரை, பிரசாத்துடன் இருந்தான். அந்த பெரிய கட்டுமான நிறுவனத்தின் உயர் பதவியில் கடந்த நான்கு வருடங்களாக பெரம்பூரில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய ஃபிளாட்டில் இருக்கிறான்.

ஆறு வருடங்களுக்கு முன் பிரசன்னாவிற்கும் ஹேமாவிற்கும் திருமணம் ஆகி, நான்கரை வயதில் சபரீஷ் என்ற பையன் இருக்கிறான்.

“வெல்லக்குழக்கட்டை ரெடி,உப்பும் இதோ ஆகிவிட்டது.” தனக்குள் கூறிக்கொண்டே, ஹேமா மணியைப்பார்த்தாள். எட்டரை ஆக இரண்டு நிமிடங்கள். காமாட்சி விளக்கை ஏற்றி விட்டு, பூஜை,நோன்பிற்கு வேண்டிய அனைத்தையும் அம்பாள்,படத்தின்முன் பலகையில் வைத்தாள்.

தட்டில் பிரசாத காரடையான் நோன்படைகள்,வெண்ணெய் இத்யாதிகளை வைக்கும் முன் மடிசார் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொண்டாள்.

“நீயே மடிசார் கட்டிக்கப் பழகிட்டியோனோ, விசாலம் உன்னை மாம்பலம் கோவில்ல பார்த்தாளாம். உங்க பொண்ணு என்னமா, மடிசார் கட்டிண்டு அழகா வந்தாள்னு ஒரே புகழ்ச்சிதான் உன்னைப் பத்தி”

“ஆமாம், நாங்க போனவாரம் அயோத்யா மண்டபத்தில் ஒரு ஃபங்ஷன்னு போனோம்.ஆசார்யாளௌ்ளாம் வரான்னு சொன்னதால மடிசார்லதான் போனேன்.இவரும் அங்க வந்து கச்சம் கட்டிண்டார். அதுக்கு முன்னாடி சிவா விஷ்ணு கோவிலுக்கு போனப்ப விசாலம் மாமியப்பாத்தோம்.”

நேற்று இரவில் ஹேமாவிற்கும் அவள் அம்மாவுக்கும் இடையில் நடந்த வாட்ஸப் உரையாடலை நினைவு கூர்ந்தாள்.

லேசான புன்னகையுடன், ஹேமா நோன்பை ஆரம்பிக்க முனைந்தாள்.

அம்பாள் மற்றும் தான் எப்போதும் மனதில் வேண்டிவரும் மஹாலட்சுமியின் பாதங்களில் பூவைப் போட்டு, முன்னமே வைத்திருந்த மஞ்சள் சரடு எடுத்துச் சரியாகக் கட்டிக்கொண்டு,

“உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருநாளும் என் கணவர் என்னைவிட்டு பிரியாதிருத்தல் வேண்டும்.”

ஹேமா நோன்பை முடித்து, ஹாலுக்குள் வந்தபோது மணி ஒன்பதரை. “அப்பாடா, எல்லாம் சரியாக நடந்தன. 12 மணிக்குப் போய் சபரீஷை அழைத்துக்கொண்டு வந்துவிட்டால், வேலை முடிந்தது.கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டுப்பிறகு ஆன்லைன் வேலையைத் தொடங்கலாம்” என்று அன்றைய, மாலை வரையில் திட்டம் வகுத்துக் கொண்டே சோபாவில் உட்கார்ந்தாள்.

அம்மாவிடம் வாட்ஸப்பில் செய்தி சொல்ல மொபைல் போனை எடுத்த போது, போன் ஒலித்தது. “ஹலோ, ஹேமா ஹியர், யார் பேசறீங்க?”

“மேடம், பிரஷாந்த், ஆஃபீஸ்லேர்ந்து பேசறேன். பிரசன்னா சாரும், எம்.டியும் பெங்களூருக்கு ரயில்ல போனாங்க இந்த தடவை. ஆனால் அந்த ரயில் விபத்துக்குள்ளாயிடுச்சு. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. நானும் சுபாஷும் போகப்போறோம். அதுக்கு முன்னால் உங்களுக்கு சொல்லணும்னு நினைச்சோம். ஆனால் நீங்க கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும்.” அவன் அதற்கப்புறம் பேசியது எதுவுமே ஹேமாவின் காதை எட்டவில்லை. கண்ணை மூடிக்கொண்டாள். மஞ்சள் சரடைக்கையால், தொட்டுக் கொண்டே, அரை நிமிடம் அம்பாளை மனதில் ஏற்றி தியானித்தாள். கண்ணில் நீர் தளும்ப,ஒரு பெருமூச்சுடன் போனைப்பார்த்தாள். கட் ஆகி மீண்டும், பிரஷாந்த் அழைப்பு வந்தது. “மேடம், திடீரென்று பதிலே இல்லாமல் போன் கட் செஞ்சுட்டீங்க. பயப்படவேண்டாம். நிச்சயம் சாருக்கு ஏதும் நடந்திருக்காது”

ஹேமா மிகவும் திடமான குரலில், “பிரஷாந்த், நான் தைரியமாக இருக்கேன். நீங்க எனக்காக ஒரு உதவி செய்யணும். நானும் உங்களோடு வர்றேன். நீங்க கிளம்பி என் வீட்டுக்கு வர முடியுமா?” என்றாள். “ஓ.கே. மேடம். இன்னும் அரை மணி நேரத்தில அங்க வர்றோம். ஆனால்,உங்களுக்கு ஏன் சிரமம்” அதற்குள் ஹேமா போனை கட் செய்து விட்டாள்.

ஹேமா வேகமாக தயாராகி, பக்கத்து பிளாட்டில் இருக்கும் சங்கீதாவிடம் விஷயத்தை சொல்ல, அவள் பையன் ஷ்யாமை அழைத்துக்கொண்டு வரும்போது சபரீஷையும் கூட்டி வந்து அவள் வீட்டில் தங்க வைத்துக் கவனித்து கொள்கிறேன். “நீ கவலைப்படாம போ, நல்லது நடக்கும்.நானும் கடவுளை வேண்டிக்கறேன்” என உறுதியளித்தாள். ஹேமா நோன்பு குழக்கட்டைகள் நிரப்பிய டப்பாவை சங்கீதாவிடம் கொடுத்துவிட்டு, வெளியே வந்து பிரஷாந்த்தின் காரை எதிர்நோக்கி காத்திருந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில், கார் வந்து, பெங்களூரு நோக்கி விரைந்தது.

போகும் வழியிலேயே பிரஷாந்த்தும், சுபாஷும் மாற்றி மாற்றி ரயில்வே தகவல்மையத்திற்குப் போன் செய்து கொண்டே வந்தனர். “ஆமாம், பிரசன்னா ராமச்சந்திரன். கரெக்ட். எங்கே? அப்படியா? ஹாஸ்பிடல் அட்ரஸ்? எப்போது?” என்று கேட்க, கேட்க, பரபரப்புடன் ஹேமா, “என்னாச்சு சுபாஷ், எதா இருந்தாலும் மறைக்காமல் சொல்லு” என்று கேட்டாள்.

“பிரசன்னா சாருக்கு ஆபத்து ஒண்ணும் இல்லை. ஆனால்,பலத்த காயங்கள். ஸாய் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. நியர் முகுந்தராயபுரம் அப்டீங்கறாங்க. ஆனால் எம்.டி. பற்றி ஏதும் தகவல் இல்லை” எனச்சொல்லிவிட்டு “நாம இன்னும் ரெண்டு மணி நேரத்தில் அங்க இருப்போம். கவலைப்படாதீங்க மேடம். பிரசன்னா சாருக்கு நல்லபடியா ஆகும்.” என்று ஹேமாவுக்கு ஆறுதல் சொன்னான்.

டிரைவர் ஐயாசாமி மிகவும் அனுபவசாலி. மற்றும் இதே சாலையில் பிரசன்னா, சுபாஷுடனும் அவர்களின் சீனியர் அஷோக்குடனும் நிறைய முறை அலுவலக வேலைக்காக ஓட்டி வந்திருக்கிறார் என்பதால், உள் வழியாக போய் ரெண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே மருத்துவமனை வந்து சேர்ந்து விட்டார்.

மருத்துவமனையில் சரியான கூட்டம். அந்த இடமே போர்க்களம் போல் அல்லோலகல்லோலப்பட்டு, அழுகையும், கூக்குரல்களுமாக இருந்ததைப் பார்த்து ஹேமாவின் பதட்டம் இன்னும் அதிகமாகியது.

வண்டி நின்றவுடன், சுபாஷ் வேகமாக ஓடிச்சென்று, எப்படியோ உள்ளே புகுந்து ரிசப்ஷனில் விசாரணை செய்து பதினைந்து நிமிடங்களில் தகவல் அறிந்தான். அவன் வரவை எதிர்பார்த்து வெளியே நின்றிருந்த பிரஷாந்தையும் ஹேமாவையும் உள்ளே வரச்சொல்லி கைகளால் சைகை செய்தான். அவர்கள் வந்ததும் “சீக்கிரம் வாங்க, வார்டு நம்பர் 110, பர்ஸ்ட் ப்ளோர் ஸ்பெஷல் வார்டு, லிஃப்ட் அங்கே” என்று கையைக் காட்டி முன்னால் ஓடினான்.

மூவரும் வார்டு 110 அருகில் சென்றனர். அப்போது உள்ளே இருந்து வந்த நர்ஸ் இவர்களைப்பார்த்து, “நீங்க பிரசன்னா ரிலேடிவா? அவரு மஞ்சுளாவைப் பாக்கணும்னு சொல்றாரு. நீங்க மஞ்சுளாவா?” என்று கேட்டாள்.

ஹேமா சொன்னாள். “நான் ஹேமா, அவரோட ஃவைப். இவங்க ரெண்டு பேரும் அவரோட கலீக்ஸ். அவரு அண்ணி பேரு மஞ்சுளா. நாங்க அவரைப் பார்க்க முடியுமா?”

“எஸ். ஆனால் அவரு வைஃப் பேரு வேற ஏதோ சொன்னாரு. சரியா பேச முடியாததால எங்களால மஞ்சுளா வார்த்தை தவிர வேற ஒண்ணும் புரிஞ்சுக்க முடியல. நீங்க போய் பாருங்க” என்று சொல்லி இவர்களை உள்ளே அனுமதித்தாள்.

கட்டிலில் ஆஸ்பத்திரி உடையில் கண்ணை மூடிப்படுத்துக்கொண்டிருந்த பிரசன்னாவை நெருங்கினர் மூவரும்.

ஹேமா தன் மஞ்சள் சரடை கையால் அழுத்திப்பிடித்துக்கொண்டு காமாட்சி அம்மன் ஸ்லோகம் மனதிற்குள் ஜபித்தாள்.

பிரசன்னாவின் கட்டில் அருகே வந்ததும் சுபாஷ், “சார், பிரசன்னா சார், நானும் பிரஷாந்த், ஹேமா மேடம் வந்திருக்கோம் பாருங்க” என்று சொல்லி முகத்தை அருகில் பார்த்தவன் “என்னவோ கன்ஃப்யூஷன், ஏய் பிரஷாந்த், மேடம் நீங்க பாருங்க, இவரு யாரு?” என்றான். பிரஷாந்த் உடனே “எஸ்” என்று கத்தினான்.

ஹேமா பக்கத்தில் போய் பார்த்துவிட்டு “இது என் பிரசன்னா இல்லே, என்ன நடக்குது இங்கே?” என்று சத்தமாகக் கேட்டாள். இவர்கள் பதற்றத்தைக்கண்டு அறை வாசலில் இருந்த நர்ஸ் விரைந்து வந்தாள்.”சத்தம் போடாதீங்க மேடம், என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“அது என் கணவர் பிரசன்னா இல்லை” ஹேமா பட்டென்று சொன்னாள். நர்ஸ் உடனே அருகில் இருந்த பர்ஸிலிருந்து ஒரு அடையாள அட்டை எடுத்து காட்டினாள்.. R.Prasanna, Purchase Manager, Ten Mountain P.Ltd, Pimpri, Pune. என்று காட்டியது.

“இதெல்லாம் சரி. ஆனால் என்,ஹஸ்பண்ட் பெயரும் ஆர் பிரசன்னா, அவரில்லை இது. மேலும் இந்த,கார்டில் இருக்கும் கம்பெனியில் அவர் வேலை பாக்கலே அப்படின்னா அதே ரயிலில பயணம் செஞ்ச அவர் எங்கே? இன்னமும் வேறு ஏதாவது வார்டுல யாராவது விபத்தில் காயமடைஞ்சவங்க இருக்காங்களா ?” ஹேமா படபடவென்று கொட்டித்தீர்த்தாள்.

இதற்கிடையில் சுபாஷ் வெளியே சென்று விசாரித்துவிட்டு பெயர்ப் பட்டியல் முழுவதையும் பார்த்துவிட்டு வந்து கூறினான். “இதுல ஒரே ஒரு பிரசன்னாதான் இருக்கு. மீண்டும் விபத்து நடந்த ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் போய் பாக்கலாம். விசாரிக்கலாம்” என்றான். ஹேமாவும் பிரஷாந்தும் ‘அதுவே நல்லது’ என்றெண்ணி அங்கிருந்து நகர,ஆரம்பித்தனர்.

அப்போது கட்டிலில் அரை மயக்கத்தில் இருந்த பிரசன்னா, “சகோதரி, எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? நான் அந்த புனே கம்பெனியின் மதுரை கிளையில் வேலை பார்க்கிறேன். இங்க வேலை நிமித்தமா வந்தபோது இப்படி ஆகிடுச்சு. அந்த பர்ஸில் இன்னொரு விசிட்டிங் கார்டு இருக்கும். அதில் மஞ்சுளா என்ற என் அக்காவோட சென்னை அட்ரஸ், நம்பர் எல்லாம் இருக்கும். போன்செய்து தகவல் தெரிவித்து இங்கு வரச்சொல்லுங்கள். ப்ளீஸ்,” என்று திக்கித்திணறி ஈனசுரத்தில் சொன்னான். ஹேமா இதை பிரஷாந்த், சுபாஷிடம் கூறி, நர்ஸ் பெண் அங்கே இல்லாததால் கூப்பிட்டு வரச்சொன்னாள். “மேடம், நமக்கு நேரம் இல்லை. போகும்போது ரிசப்ஷன்ல சொல்லிவிட்டு போகலாம்” என்றான் சுபாஷ். ஆனால் ஹேமா அதை மறுத்து, அவளுடைய போனை எடுத்து மஞ்சுளா என்ற பெண்ணிடம் விவரம் கூறி மருத்துவமனை முகவரியை அனுப்பினாள்.

அதற்குள் நர்ஸ் அங்கு வரவே, அவளிடம் இதைச்சொல்லி, மற்றவைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு நகரும்போது, “நன்றி, சகோதரி” என்று கைகூப்பி எழுந்திருக்க முயற்சி செய்த பிரசன்னாவை “படுத்துக்கங்க, ரெஸ்ட் எடுங்க, உங்க அக்கா இன்னும் மூணு மணி நேரத்தில வந்துடுவாங்க.” என்று கூறி, ‘என் பிரசன்னா எப்படி இருக்காரோ’ எனும் மனக்கவலையுடன் கண்களில் கண்ணீர் முட்ட, வேகமாக நடந்தாள். ‘இப்போதுதான் அறிமுகமான ஒரு நபருக்கு, தன் கஷ்டமான நிலைமையிலும் உதவி செய்யும் இந்த பெண்மணியை மனைவியாக பெற்ற பிரசன்னா அதிர்ஷ்டசாலி’ என்று நினைத்து சுபாஷும் நடந்தான்.

அவர்கள் மூவரும் மருத்துவமனை விட்டு, ரயில் நிலையம் திசையில் செல்லும் போது மணி 2.30ஆகிவிட்டது. “அவர் ஏன்,இன்னும் போன் செய்யவில்லை?அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், இத்தனை நேரம் சும்மா இருக்கமாட்டாரே, என்ன பிரஷாந்த், சுபாஷ், நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு ஏதாவது போன் வந்ததா பிரசன்னாகிட்டேருந்து ?” என்று அவர்களிடம் கேட்டாள். “இல்லே மேடம்,பிரசன்னா சார் அப்படி இருக்கவே மாட்டார்.ஏதாவது மிக முக்கியமான மீட்டிங் இருந்தாலொழிய, அவர் எங்கிருந்தாலும் டிபார்ட்மெண்டை வாட்ஸப் மூலம் அருமையா நிர்வாகம் செய்வார். இன்னிக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” பிரஷாந்த் சொன்னான்.

ரயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள கூட்டத்தில் நுழைந்து வெகு விரைவாக சுபாஷ் தகவல்,அறிந்து வந்தான்.அதற்கு முன்னரே மற்ற இருவரிடமும் சொல்லிவிட்டான், ‘கூட்டத்திற்குள் வரவேண்டாம்.ஸ்டேஷன் வாசலில் நின்றால் போதும்’ என்று. ஹேமா கவலை தோய்ந்த, சோர்ந்த முகத்தோடு,காயம்பட்டவர்களை ஸ்ட்ரெச்சரில் எடுத்துச்செல்வதையும்,லேசாக அடிபட்டவர்களை கைத்தாங்கலாக ஆம்புலன்ஸ் அருகே அழைத்துச்செல்வதையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சுமார் இருபது நிமிடங்கள் கழிந்தன. ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல் இருந்தது ஹேமாவுக்கு. அதன் பின்னர் வெளியே ஓடி வந்த சுபாஷ் ” லிஸ்ட்டை ஒரு முறை இல்லே மூணு முறை செக் பண்ணிட்டேன். ஒரு ஆர்.பிரசன்னாதான் இருக்கு. என்னவோ குழப்பம் நடந்திருக்கு.சார் இதுல ட்ராவல் பண்ணலயோ ஒரு வேளை?” என்று சொல்ல, பிரஷாந்த் உடனே”நான் ஆஃபீஸ்க்கு போன்செஞ்சு ஆஷாவைக் கேக்கறேன்.” என்று ஆயத்தமாக, ” நானும் அவரைக்கூப்பிடறேன்” என்ற ஹேமாவும் போனைப்பார்த்தபோது பாட்டரி தீர்ந்து விட்டிருந்தது.மூவரும் செல்போனை சார்ஜ் செய்யக்காருக்குள் நுழைந்தனர்.”சார்ஜர் இன்னிக்கு காலைலேர்ந்து வேலை செய்யலீங்க.” என்றார் ஐயாசாமி.

ஹேமாவுக்கு மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை தோன்றியது. ‘ஒருவேளை அவரும், எம்.டி.யும் இந்த ரயிலில் பயணம் செய்யாம இருந்திருந்தா’ என எண்ணி “பிரஷாந்த் நாம் சென்னை திரும்பப் போகலாம், எதுவா இருந்தாலும், நாம் ஆஃபீஸ் போய் தெரிஞ்சுக்கலாம். சீக்கிரம் கிளம்புங்க” என்றாள் உறுதியுடன்.

எல்லோரும் சம்மதித்து, கார் திரும்ப சென்னை நோக்கி விரைந்தது. ஐயாசாமி எவ்வளவுதான் சாமர்த்தியமாக காரை ஓட்டினாலும், வரும்போது இருந்த வேகத்தில் போகமுடியவில்லை. வழியில் வாகனங்கள் வரிசைகளின் நெரிசல். வெய்யில் தகித்தது. ஐம்பது கிலோமீட்டர் தாண்டி வெளியே சுமாரான கூட்டம் இருக்கும் பகுதியில் வரும்போது, வண்டியை ஒரு கடையில் நிறுத்தி ஐயாசாமி சொன்னார் ஹேமாவிடம். “ரொம்ப தாகமாக இருக்கும்மா. ஒரு சோடா குடிச்சிட்டு வர்றேன்.” ஹேமா சரி என்று தலையசைத்தாள்.

பிரஷாந்த்,சுபாஷும் சரியென்று காரைவிட்டு இறங்கி கடைக்காரரிடம் பேசிக்கொண்டே சோடா அருந்தும் வரையில் போனை சார்ஜ் செய்ய அனுமதி கேட்டு பிரஷாந்த் செய்தான். சுபாஷ் வெளியே நின்றிருந்த ஹேமாவுக்கு சோடா வாங்கி கொடுத்து வந்தான்.

யாரும் எதுவுமே பேசாமல் இருக்க, திரும்பவும் பயணம் தொடர்ந்தது. வரும் வழியில் பிரஷாந்த் மீண்டும் ஆஷாவைத்தொடர்பு கொண்டான்.சார்ஜ் ஆன பதினைந்து விழுக்காடுக்குள் பேச முயற்சி செய்து,ஒருவழியாக ஆஷா தொடர்பில் வந்தாள். “பிரஷாந்த், எங்கடா இருக்கே, எம்.டி கூப்பிட்டு சீக்கிரம் வாங்கன்னாரு. பிரசன்னா சார் விஷயமா பேசணும்னு சொன்னாரு” என்றாள். “அப்படியா, அவங்க ரெண்டு பேரும் எங்கே இருக்காங்க?” என்று கேட்க, தொடர்பு இல்லாமல் போய் விட்டது. கைபேசியும் உயிரற்றுப்போனது.

பிரஷாந்த் ஹேமாவை,நோக்கிப்புன்னகையுடன் “எம்.டி போன் செய்தார்” என்று ஆஷா சொன்னாள். அவங்க எங்கே என்று ஆஷா சொல்வதற்குள் லைன் கட் ஆகிவிட்டது.” என்றான்.

ஹேமா, “நல்லதே நடக்கவேண்டும்.நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்” என்றாள் மனதில் இன்னமும் இருக்கும் சஞ்சலத்தை மறைத்துக்கொண்டே.

சென்னை வந்து அலுவலக வாசலை அடையும்போது மணி எட்டு. இவர்களைக் கண்டவுடன், ஆஷா ஓடி வந்தாள். அதே சமயத்தில்,மிகவும் வேகமாக நடந்து வந்த, நரேஷ், நிர்வாக இயக்குனர், “ஹலோ, ஹேமா, ஒரு பதட்டமும் வேண்டாம். நீ முதலில் வீட்டுக்கு போ. பிரசன்னா உனக்காக வெயிட் பண்றான். அவன் எல்லாம் சொல்வான். பிரஷாந்த், சுபாஷ் “யூ டூ கோ வித் ஹர் டு ட்ராப் ஹர். ஹேமா, ப்ளான்ல திடீர்னு க்விக் சேஞ்ச் ஆனதால, எனி வே ஐ வில் ஸீ யூ டுமாரோ” என்று கூறினார்.

ஹேமா அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷம் கலந்த உணர்ச்சிகளுடன் ஏதோ பதில் சொல்வதற்குள், நரேஷ் வேகமாய்த் திரும்பப்போய்விட்டார்.

“நான் சொல்ல வந்ததை எம்.டி சொல்லிட்டாரு. நீங்க கிளம்புங்க மேடம்” என்றாள் ஆஷா.

பிரஷாந்தும், சுபாஷும், ஹேமாவின் வீட்டை அடைந்தபோது, கீழேயே காத்துக்கொண்டிருந்தான் பிரசன்னா, சபரீஷுடன். பிரஷாந்தும், சுபாஷும் மகிழ்ச்சி பொங்க பிரசன்னாவைக் கட்டியணைத்துக் கைகுலுக்கல்களுடன் அவசரமாக நடந்தைக் கூற, ஐயாசாமியும் அந்த சந்தோஷத்தில் பங்கேற்றார். ஹேமாவிற்கு அழுவதா, சிரிப்பதா என்ன்றறியாமல் சபரீஷை கட்டிப்பிடித்துக் கொண்டு பிரசன்னாவை கண்ணீர் மல்க பார்த்தாள். “மேடம், உங்க பிரார்த்தனை வீண் போகலே. நாங்க கிளம்பறோம். முதல்லே சாரும் நீங்களும் ஒரு நல்ல காபியை சாப்பிடுங்க. எல்லாத்தையும் சொல்லுங்க. பை சபரீஷ்” என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினார்கள்.

பின்னர் சபரீஷ் ,ஹேமாவுடன் பிரசன்னா, வீட்டுக்குள் நுழையும்போது, சங்கீதா வேகமாக வந்து சிரித்துக் கொண்டே, பிரசன்னாவிடம் “அண்ணா, உங்க ஹேமா பெரிய சத்யவான் சாவித்ரி போராட்டமே நடத்திருக்காங்க போல இருக்கு. கண்ணு பட்டுடப் போகுது. யாரையாவது பெரியவங்களை சுத்திப்போடச் சொல்லுங்க ” என்றாள்.

வீட்டினுள் நுழைந்தவுடன், ஹாலில் பிரசன்னாவை நிற்க வைத்து, ஹேமா அவனை நமஸ்காரம் செய்தாள். அவனைக் கட்டிக்கொண்டாள். அந்தத் தழுவலுடன் சபரீஷையும் சேர்த்துக்கொண்டு, இரண்டு நிமிடங்கள் விம்மினாள்.

“ஏய், ஹேமா, சீச்சீ, அழாதே. அதான் எனக்கு ஒண்ணும் ஆகாமல், உங்கிட்ட நல்லபடியா வந்துட்டேனே, கவலைய விடு. அப்புறம் சபரீஷும் அழ ஆரம்பிச்சுடுவான். போய் முகம் எல்லாம் கழுவிட்டு சீக்கிரமா ரெடியாகி வா, சாப்பிடலாம். எனக்கு நல்ல பசி” என்று அவள் கண்களை துடைத்தபடி சொன்னான் பிரசன்னா. “இதோ ஒரு ஐந்து நிமிஷத்தில, வந்துடறேன்” என்று ஹேமா உள்ளே அதிவேகமான துள்ளலுடன் சென்றதை, சபரீஷ் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில்,தட்டில் இருந்த குழக்கட்டைகளை வெண்ணெய் தடவி ஆர்வத்துடன் பிரசன்னா சாப்பிடுவதைப்பார்த்துக்கொண்டே, ஹேமா சபரீஷுக்கும் கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டாள். காலையில் இருந்ததை விட அதிக ருசியாக இருந்தது குழக்கட்டை என்பதை ஹேமா உணர்ந்தாள்.மஞ்சள் சரடு மிகவும் பளீரெனத்தெரிந்தது அவளுக்கு. சபரீஷ் இனிப்பு அடைகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“ஹேமா டியர், நான் ஐந்தரை மணிக்கே கிளம்பிட்டேன் இல்லையா, ஸ்டேஷன் போறதுக்கு முன்னாடியே, நரேஷ் அவரு வீட்டுக்கு நேரா வரச்சொல்லிட்டாரு. போய்ப் பாத்தா, பெங்களூருக்கு எந்த கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட் தொடர்பா போறதா இருந்தோமோ, அதன் ஓனர் மேத்தாவும், பார்ட்னர்ஸ் எல்லாரும் அங்கே எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நேத்து மிட்நைட்ல அவங்க வந்துட்டாங்கன்னும், மேத்தாவோட கெஸ்ட் ஹவுஸ் பாண்டிச்சேரில இருக்கு, அங்கே போறோம் நாம் டிஸ்கஷனுக்கு, அப்புறம் எஸ்டிமேஷன் எல்லாம் போட்டு, அக்ரிமெண்ட் காப்பி ரெடி பண்ணிடலாம் இன்னிக்கே அப்படீன்னாரு. மிட்நைட்ல உனக்கு தொல்லை கொடுக்க விரும்பலை.அதான் உன்னை காலைல இங்கே வரச்சொன்னேன். ஏஜண்ட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன் டிக்கெட் கேன்சல் செய்யறதுக்குன்னு அவர் சொன்னதுக்கப்புறம் எல்லோரும் உடனேயே கிளம்பிட்டோம். அங்கே போய் உனக்கு சொல்ல நினைச்சேன். ஆனால், புது ப்ராஜெக்ட் விஷயமா, அதுவும் ரொம்ப பெருசா, அதைப்பத்தின விவரங்கள், இடைஞ்சல்கள் இதையெல்லாம் பேசப்பேச, மறந்தே போச்சு. ஈவினிங் நாலரை மணிக்குதான் ஃப்ரீ ஆனோம். உனக்கு போன் செஞ்சேன். லைன் போகல. ஆஷாவை கான்டாக்ட் பண்ணேன். அவ எல்லாத்தையும் சொன்னா. உடனே எம்.டியிடம் சொன்னேன். அவரும் என்னோட கிளம்பி வந்துட்டாரு. ஆஃபீஸ்ல போய் நீங்க வந்துண்டிருக்கீங்கன்னு தெரிஞ்சவுடனே, நரேஷ் என்னை நீ போய் பையனை பாத்துக்கோ, ஹேமா வந்தவடனே கொண்டு விடச்சொல்றேன்னார். நேரா ஆத்துக்கு வந்துட்டேன்.எல்லாம் உன்னோட பூஜை பலன்தான், செல்லம் ” என்று சொல்லி அவள் கன்னத்தில் லேசாக தட்டினான்.

ஒரே மூச்சில் அவன் சாப்பிட்டுக்கொண்டே இதைச்சொல்லி முடித்தவுடன் “நல்ல கூத்து தான் போங்கோ. நீங்காத நினைவு நாளா ஆயிடுத்து இது எனக்கு” என்று சிரித்தபடியே ஹேமா சொல்லிவிட்டு, தட்டுகளை எடுத்து போகும்போது, “இருங்கோ, பால் கொண்டு வரேன். சபரீஷ் கண்ணா, உனக்கும் பால் எடுத்துண்டு வரேன், இங்கயே இரு” என்று சொல்லி சமயலறை பக்கம் சென்றாள்.

மூவருக்கும் பாலை தம்ளரில் ஊற்றி, சர்க்கரை போட்டு கலக்கும்போது, அவள் காலையில் இட்ட மல்லிகை, செவ்வரளி, துளசி மாலைகளுடன் இருக்கும் அம்பாள் படத்தை கண்டாள். அவளைப் பார்த்து அம்பாள் புன்னகைப்பது போல் இருந்தது. அவளையறியாமல் இரு கைகளும் கூப்பியது. தாலிச்சரடை கண்ணில் ஏற்றிக்கொண்டு,

“உருகாத வெண்ணெயும்……..”

மனதிலே இன்னோர்முறை சொல்லிக்கொண்டாள் ஹேமா. அவளுக்கு இன்றைய தினம் நினைவில் நின்ற நோன்பு நாளாக ஆனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *