வாணியைச் சரணடைந்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 4,189 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

புதிதாக பிழிந்தெடுத்து மாதுளம்பழச் சாறைக் கொண்டு வந்து வைத்த பணிப்பெண், “கணக்கையா கிட்டே ஒரு சின்ன வேலையை முடித்துக் கொண்டு, அம்மா இதோ வந்திடறதாச் சொல்லச் சொன்னாங்கம்மா” என்றாள். 

“ஓ.. கணக்கர் வந்து விட்டாரா? சரி நீ போ?” என்று அவளை அனுப்பினாள் சுபா. 

பணியாள் செல்லும் வரை காத்திருந்து “என்ன ஆபத்து சுபா? உன் சின்ன அண்ணன் விரும்பியது போல, எல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிட்டது. நிலா இங்கேயே வளர்கிறாள். தொழிலும் பழைய நிலையை அடைந்து விட்டது. திறமையும், கடும் உழைப்புமாகத் தான் நினைத்ததைச் சாதித்த உன் சின்ன அண்ணன், சாதித்ததைக் காப்பாற்றுவதிலும் கவனமாகத்தானே இருப்பார்? அப்படியிருக்க.. அவராலேயே சமாளிக்க முடியாமல்… அது என்ன ஆபத்து?” என்று கேட்ட வாணியின் குரலில் தொனித்த கவலை, அவளுக்கே வியப்பளித்தது. 

ஆனால் முகத்தில் ஒரு திருப்தி பரவ “வாணி முன்பே தெரிந்தவர்கள் என்றாலும் நாம் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கி இரண்டே நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாக இப்படி அவசர அவசரமாக உன்னிடம் ஒப்பிக்கிறேனே என்று உனக்குத் தோன்றும் தானே? காரணம் இருக்கிறது, வாணி! எனக்கு… இப்போது எங்கள் நிலாவுக்கு ஒரு நல்ல துணை வேண்டும் வாணி. இன்னும் ஒரு மாதம் கழித்து போடுவதாக இருந்த தொட்டில் போடும் விழாவைச் சீக்கிரமாகச் செய்யும்படி எங்கள் வீட்டில் அவசரப்படுத்துவதைப் பார்த்தால் என்னையும் குழந்தையையும் சீக்கிரமே வரச் சொல்லப் போகிறார்கள் என்று தெரிகிறது. அங்கேயும் முதல் பேரக் குழந்தை. அதிகநாள் தள்ளிப் போட முடியாது. நான் கிளம்பிப் போய்விட்டால், அப்புறம் நிலாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்காகத்தான். ஏனெனில் இப்போது முதல் ஆபத்து அவளுக்குத்தான்… அப்புறம் எல்லோருக்குமே!” என்றாள் சுபா. 

வாணி பேசாமல் பார்க்கவும், “புரியவில்லை அல்லவா? முதலில் இதைக் குடி, சொல்லுகிறேன்” என்று பழச்சாறு தம்ளரை எடுத்து வாணியின் கையில் கொடுத்துவிட்டு, தொண்டை காய்ந்தவள் போலத் தானும் எடுத்து இரு மிடறு அருந்திவிட்டு, சுபா மீண்டும் தொடங்கினாள். 

“பார் வாணி. இங்கே பணத்துக்காக பிரச்சினை இருந்த வரையில் நிலாவை நினைத்துப் பார்க்கவும் அங்கே யாரும் தயாரில்லை! நெருங்கினால் தலையில் ஏற்றி விடுவார்களோ என்ற பயத்தில் தூரவே இருந்தார்கள். இப்போது வித்தியண்ணன் செல்வம், செல்வாக்கில் வேகமாக உயர்ந்து விட்டாரில்லையா? அவருக்குத் தூண்டில் போட, நீதா வந்து நிற்கிறாள். அந்தத் தூண்டிலுக்குப் புழுவாக, நிலாவைப் பயன்படுத்த முயற்சிக்கிறாள். தூண்டில் புழுக்களின் முடிவு என்ன ஆகும்? அந்தக் குடும்பத்தோடு நமக்கு முன் அனுபவமும் இருக்கிறது. 

“இரு… இரு.. இதில் நான் முக்கியமான எதையோ சொல்லவில்லையே… ம்ம்ம்.. நீதா! அவளைப் பற்றித் தான். அதைச் சொன்னால்தான் பிரச்சினை உனக்கு முழுதாகப் புரியும்? 

“இந்த நீதா இருக்கிறாளே. அவள் சுலேகாவுடைய உறவுக்காரப் பெண். சித்தியோ, பெரியம்மாவோ யாரோ ஒருவருடைய மகளாம். முதலில், அரசல் புரசலாகக் கேள்விப்பட்டபடி இங்கே நிலைமை நிஜமாகவே நன்றாகி விட்டதா என்று அறிவதற்காக, வேவு பார்க்க அனுப்பப் பட்டவள்தான். ரொம்பவே… முன்னைக் காட்டிலும் மேலாகி விட்டது என்று தெரிந்ததும், இன்னொரு சதித் திட்டம் உருவாகி விட்டது. நிலாவிடம் தானே சித்தி என்பதும், குழந்தை மாதிரி அவளைக் கொஞ்சுவதும்… பார்க்கப் பார்க்க முன்பு சுலேகா செய்தது இதைத்தானோ என்றே எனக்குத் தோன்றுகிறது. அவ்வப்போது நிலாவுடைய அப்பாவான பெரியண்ணனிடம் ஏதோ புகார் சொல்லப் போவது போல, ஒரு மிரட்டும் தொனி வேறு. நிலாவோ இந்த நீதாவைப் பார்த்தாலே ஒரே டல்லாகி விடுவாள். இவளும் சுலேகா மாதிரி சாதித்து விடுவாளோ என்று எனக்கே உள்ளூர நடுக்கமாகி விடுகிறது. அப்படி மட்டும் ஆகி விட்டால் அப்புறம் நிலாவின் கதி, அதோ கதி ஆகிவிடாதா? அதிலிருந்து தான் நிலாவைக் காப்பாற்ற வேண்டும்” என்று சுபா கேட்டபோது வாணியின் நெஞ்சுக்குள்ளும் குளிர் பரவியிருந்தது. 

முன் தினம் அந்த நீதா நடந்து கொண்ட முறையைப் பார்க்கும்போது முசுப்பாவின் பயம் முழுக்க முழுக்க நியாயமானதே! 

அவளைப் பார்த்ததும் நிலா பாதிப் படியிலேயே நின்று வாணியை ஒட்டிக் கொண்டு நின்றதும், சாக்கலேட்டைக் கூட மறுத்ததும், இப்போது நினைத்துப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது. சின்ன வயதே என்றாலும் சூடு பட்ட பூனை மறக்காததுதானே? 

கூடவே வீட்டை விட்டுக் கிளம்புகிற நேரம், வித்யாசாகரன் தாயைப் பார்த்து நினைவு வந்தது. அதற்கு என்ன பொருள்? 

அவன் நீதாவை ரொம்பப் பொருட்படுத்துவது போலத் தெரியவில்லைதான். ஆனால் சுபா, நிலா போல அவன் நீதாவை வெறுப்பதாகவும் தோன்றவில்லை. 

ஒருவேளை நீதாவின் ‘விது அத்தான்’ அவன் காதுக்கு இனிமையாகத்தான் இருந்ததோ? 

ஓர் அழகான… அவள் ஓரளவு அழகிதான். கூடவே நன்கு அழகு படுத்திக் கொள்ளவும் தெரிந்தவளான இளம் பெண் ஒருத்தி அப்படி, அத்தான், மச்சான் என்று கொஞ்சிக் கூப்பிடும்போது… ஆண்களுக்குத் தலைச் சுற்றிப் போவது இயற்கைதானோ? 

போனால் போகட்டும். ஆனால் அதற்காக அவளோடு போட்டி போட்டுக் கொண்டு அவள் ஒன்றும், யாரையும் இப்படியெல்லாம் கண்ராவியாகக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கப் போவது இல்லை என்று சட்டென மூண்ட ஆத்திரத்துடன் எண்ணினாள் வாணி. 

அதே சினத்துடனேயே தோளைக் குலுக்கி “இது, உன் வித்யா அண்ணனின் சொந்த விஷயம் சுபா. அதில் நான் எப்படித் தலையிட முடியும்? உன் சின்ன அண்ணன் அவளை விரும்பினால் அது யாரை, எப்படிப் பாதிக்கும் என்று யோசித்து, அவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அதற்கும், எனக்கும் ஒன்றுமே கிடையாது. எந்தக் காரணத்துக்காகவும் இந்தக் கச்சடாவுக்குள் நான் போய் போட்டிக்கு நிற்க மாட்டேன்” என்று சினத்தை அடக்க முயன்ற குரலில் கூறினாள் அவள். 

ஒரு கணம் சுபா திகைத்துப் போனாள். 

ஆனால், அந்தக் கண நேரத்துக்குள் அந்தத் திகைப்பை அடக்கி “ஹையோ..! நான்… நான் என்ன நீதாவோடு அண்ணனுக்காக போட்டி போடு என்றா, சொன்னேன்? அப்படியில்லை வாணி. அவ்வப்போது வந்து நிலாவிடம் அன்பாகப் பேசி, உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டு அது போதும், இப்போது இந்தக் கதை எழுதுவதில் செய்ய வில்லையா? அதுபோல, ஏதோ சில உதவிகள் அவளது மனத்திடத்துக்காக. ப்ளீஸ்” என்றாள் அவள் நயந்த குரலில். 

நிலாவைப் பற்றி மட்டுமல்ல… அவளது நன்மைக்காக ஏங்கும் இந்த அத்தையை நினைத்தும் வாணிக்கு பரிதாபமாக இருந்தது. 

சுபா கேட்டதில் அர்த்தம் இல்லாமலும் இல்லை! 

நீதாவைப் பார்த்ததும், நிலா தன்னோடு எப்படி ஒட்டிக் கொண்டு நின்றாள் என்று. இப்போதும் வாணியால் உணர முடிந்தது. படபடவென்று அடித்துக் கொண்ட நெஞ்சத் துடிப்பையும் கூட..! 

ஆனால் வித்யாசாகரன் பேசிய பேச்சுக்கள்? 

அதை மீறி அவன் வீட்டுக்கு எப்படி? வருவது அவனுடைய அண்ணன் மகளுடன் எப்படிப் பழகுவது? 

இவ்வளவு தூரம் மறையாது பேசியவளிடம் தானும் வெளிப்படையாகக் கூறுவதுதான் நியாயம் என்று தோன்ற “உன் அண்ணனுக்கு என்னைப் பிடிக்காது சுபா. நிலாவிடம் வேண்டுமானால் கேட்டுப் பார். ஒரு தரம்…” என்று தொடங்கியவளை இடைமறித்து “தெரியும். நிலா சொன்னாள். ஆனால் சின்ன அண்ணன் பேசுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது வாணி. அவருக்குப் பலவிதமான அழுத்தங்கள். இறுக்கங்கள். தொழிலைப் பற்றிச் சொன்னேனே, இன்னும். நிலா பற்றி நீதா மிரட்டுவதை நீயே கேட்டாயல்லவோ? அண்ணன் விரும்பியது போலப் பெரியண்ணன் எழுதி கொடுத்திருந்ததால், அவர்கள் தலையிட வழியே இருந்திராது. ஆனால் அப்பாவின் பிள்ளைப் பாசம் அதைச் செய்ய விட வில்லை. இப்போது பெரியண்ணனுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை. அதனால், நிலாவுக்காக மிகவும் பயப்படுவார். அந்த வேகத்தில்… அதற்காக, உன்னிடம் அண்ணன் கத்தியதும் நியாயம் என்று நான் சொல்ல வரவில்லை, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் கேட்கிறேன்” என்றாள், சுபா மீண்டும் அந்த நயந்த குரலில். 

அவளது குரலும், கெஞ்சலும் எல்லாம் நிலாவுக்காக! 

ஆனால், எல்லாம் அவளுடைய அண்ணன் மகளுக்காகத்தானே. அவளைப் பற்றி எனக்கென்ன என்று ஒதுக்க முடியாமல் நிலாவைப் பற்றிய கவலை வாணியையும் பாதித்தது. 

ஆனால் சுபா என்னதான் சொன்னாலும் வித்யாசாகரனின் பேச்சை ஒன்றுமில்லை என்று அவளால் ஒதுக்க முடியவில்லை. 

எனவே “அடிக்கடி இங்கே வருவேன் என்று சொல்ல ஆ முடியாது சுபா. ஆனால் நிலாவுக்கு என்னாலான உதவியைக் கட்டாயம் செய்வேன்” என்று முடித்தாள். 

இதற்கு மேல் பேசி உள்ளதையும் கெடுத்து கொள்ளக் கூடாது என்று எண்ணினாளோ என்னவோ, சுபாவும் அத்தோடு அந்தப் பேச்சை விடுத்து, மகளின் விழா, உடை பற்றிப் பேசலானாள். 

அவள் மகளின் தோள் அகலம், கழுத்து, கை எல்லாம் அளவெடுத்து வைத்திருக்க, கணக்கரை அனுப்பிவிட்டு வந்த தேவகி, அந்த அளவுகள் தேவையே இல்லை என்றார். 

“நான் அந்தத் துணிக்கடையின் விலாசம் தருகிறேன். அவர்கள் ஒரு மாதக் குழந்தைக்கு என்றால். சரியாகத் தைத்துத் தருவார்கள். துணியின் நிறம். அமைப்பு மட்டும் தான் நாம் சொல்ல வேண்டும். வெறும் ‘யோக்’ வைத்து, அதிலிருந்து காலை மறைத்து தொங்கும் அளவுக்கு, நிறையச் சுருக்கு வைத்துத் தாராளமாகத் துணி கொடுத்து தைக்க வேண்டும். துணி என்ன என்றால்… ஆனால் அதற்கு முன்… வாணிம்மா… உன்னை ரொம்ப காக்க வைத்து விட்டேன் சாரிம்மா. கணக்கரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தேன்தான். ஆனால், நிலா பற்றி தீவிரமாப் பேசிக் கொண்டிருந்தீர்கள், குறுக்கிட மனமில் லாமல் போய்க் கணக்கர் கொணர்ந்ததைப் பார்க்கத் தொடங்கி விட்டேன். என்னவோம்மா, எனக்கும் இந்த நிலாச் செல்லத்தின் கவலைதான் நெஞ்சை அரித்துக் கொண்டு இருக்கிறது! இதே கவலையில் அவள் தாத்தா மாதிரி அவளை விட்டு விட்டுப் போய் விடக் கூடாது என்று பயமாகக் கூட இருக்கிறது” என்று அவர் பெருமூச்சு விட “என்னம்மா பேச்சு இது?” என்று சுபா பதற, வாணிக்கும் மனம் உருகிப் போனது. 

“கவலைப்படாதீர்கள், ஆன்ட்டி! உங்கள் சின்ன பையன், அவ்வளவு எளிதாக நிலா கஷ்டப்படும்படி விட்டுவிட மாட்டார். அவர் சாதிக்கிறவர் ஆன்ட்டி!” என்று அவளே வித்யாசாகரனுக்கு நற்சான்று கொடுத்து, அவரைத் தேற்றும்படி ஆயிற்று. 

வித்யாசாகரைப் பற்றி, அவளே உயர்வாகப் பேசியது ஒரு விசித்திரம் என்றால், அவள் சொன்ன வார்த்தைகளை அவள் முழு மனதாக நம்பியது, அதைவிட விசித்திரமாக அவளுக்குப் பட்டது. 

ஏன், எப்படி என்று யோசிக்க இடமின்றி “தாங்க்ஸ்மா. கடவுள் அருளால் உன் வார்த்தைகள் அப்படியே பலிக்கட்டும்” என்று தேவகி மேலே தொட்டில் போடுகிற விழா பற்றிப் பேசத் தொடங்கினார். 

“அது ஒரு நுண்ணிய வேலைப்பாடமைந்த லேஸ் துணி வாணி. வெள்ளி, தங்க நிறத்தில், நல்ல ஜரிகை இழைகளைச் சேர்த்துப் பின்னப்பட்டிருக்கும். கடை உரிமையாளரிடம் ‘கண்டிலேஸ்’ என்று கேட்டால் எடுத்துக் காட்டுவார். மற்ற நிறங்களை விட இந்தச் சின்னப் பேத்திக்கு வெண்மை அழகாகப் பொருந்தும். விலை பற்றி யோசிக்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லும்மா. கடையிலேயே பொறுக்கினாற் போல ஐந்தாறு டிசைன்தான் வைத்திருப்பார்கள். இவ்வளவு சின்னக் குழந்தைக்கு ஏற்றாற்போலப் பொடிப் பொடியாகப் பூப்போட்ட ஏதாவது ஒன்றை எடுத்துத் தைக்கக் கொடுக்கச் சொல்லம்மா… கொஞ்சம் தொந்திரவுதான் இல்லையா? தொல்லைக்கு சாரி சொன்னேன் என்றும் அம்மாவிடம் சொல்லிவிடு வாணி! நானும் அப்புறமாக உன் அம்மாவுக்குப் போன் செய்து பேசுகிறேன்” என்றார் தேவகி. 

முறுவலித்து “இப்படி ஒரு புது வகை லேஸ் துணியைக் காட்டியதற்காக என் அம்மா உங்களுக்கு நன்றி சொல்வார்கள். பாருங்கள்” என்றபடி வாணி எழுந்தாள். “இனி நான கிளம்பட்டுமா? ஆன்ட்டி? நீங்கள் சொன்னதெல்லாம் நான் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன் வரட்டுமா” என்று விடைபெற முனைந்தாள். 

கூடவே எழுந்து “இன்னும் ஒன்று விழாவுக்கு நீ, அம்மா, அப்பா, தாத்தா எல்லோரும் வர வேண்டும். அதற்கு சரியாக, இங்கே உடை ஏதாவது வைத்திருக்கிறாயா வாணி? இல்லையென்றால் சென்னையிலிருந்து எடுத்து வந்து விடு?” என்றாள் சுபா. 

அத்தோடு விடை பெற்றுப் போயிருக்கலாம். மற்றபடி, ஒரு சின்னக் குழந்தையின் உடை பற்றி இவ்வளவு யோசிக்கிறவர்கள் வீட்டின் மற்ற அங்கத்தினர் என்ன அணிவது என்றும் திட்டமிட்டுத்தானே இருப்பார்கள்? 

ஆனால், உள்ளூர ஏதோ உந்த “நிலாவுக்கு என்ன மாதிரி உடை ஆன்ட்டி?” என்று தேவகியிடம் வினவினாள் வாணி. 

சற்றே முகம் வாட. “புதிதாக வாங்கவில்லை வாணி. அவளுக்கு அணிந்து பாராமல் வாங்க முடியாது. இங்கே ஒரு நாள் தேடிப் பார்த்தேன் ஒரு மாதிரி இரண்டும் கெட்டான் வயதா? ஒன்றும் கிடைக்கவில்லை. பொங்கலுக்குத் தைத்ததையே வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்?” என்றார் தேவகி. 

“நிலா வருத்தப்படுவாளோ என்று இருக்கிறது! முளைத்து ஒரு மாதம் ஆகவில்லை. இந்த வாண்டுக்கு இவ்வளவு பார்க்கும் போது, அவளுக்கு மட்டும் பழசா? எனக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை” என்றாள் சுபா குறையோடு. 

“வேறு வழியில்லையே” என்றுதான் தேவகி கூடச் சொன்னார். 

ஆனால், “இந்த வாரம் பள்ளியைத் தொடங்கியவர் தினம் என்று விடுமுறை வருகிறது என்று கேள்விப்பட்டேன். அன்று உங்கள் மகனோடு நிலாவையும் சென்னைக்கு அனுப்புங்களேன் ஆன்ட்டி. என் அம்மா, சந்தோஷமாகவே அவளுக்கும் பார்த்து வாங்கிக் கொடுப்பார்கள்” என்று யோசனை தெரிவித்தது வாணிதான். 

தாய், மகள் இருவர் முகமும் பளிச்சென்று மலர்ந்தன.

“ஹைய்யோ இந்த ஐடியா நமக்கு வரவே இல்லை பாரேன்” என்று ஆச்சரியப்பட்டனர். 

“உன் அம்மாவுக்கு அதிகத் தொந்திரவு” என்று கவலைப்பட்டனர். 

“அதெல்லாம் இல்லை” என்ற வாணியின் பேச்சில் ஆறுதல் அடைந்தனர். 

வித்யாசாகரன் மற்ற வேலை முடிக்கும்போது, நிலாவுக்கு போரடிக்குமே? என்று யோசித்துவிட்டு, “அவளது லேப்டாப்பைக் கொண்டு போனால் அதில் விளையாடிக் கொண்டு பேசாமல் இருந்து விடுவாள்” என்று நிம்மதி அடைந்தார்கள். 

வேலை முடிந்து வந்த வித்யாசாகரன் பள்ளியில் இருந்து வந்த நிலாவோடு பேசிவிட்டு, இன்னும் திட்டமிட்டு மணிவாசகத்தை வந்து பார்க்க, பள்ளி, வாசகசாலை விடுமுறைகள் ஒத்துப்போகவே வாணி, மணிவாசகம் இருவரும் நிலா வித்யாசாகரனோடு காரில் சென்னைக்குச் செல்வதாக முடிந்தது. 

இந்தப் பயணத்தைத் தவிர்ப்பதற்கு வாணியால் முடியவில்லை. 

என்ன சொல்லித் தவிர்ப்பது? 

எங்களால் எதற்குச் சிரமம் என்றால், அன்று போல, வண்டிதானே சுமக்கப் போகிறது என்பான். தாயின் தேர்வில் வாணிக்கு நம்பிக்கை இருந்தாலும், நிலாவின் தயக்கம், ஒதுக்கத்தைப் போக்கி, தாரிணிக்கு அறிமுகப் படுத்தி, சிறுமிக்குத் தேவையானதைச் சொல்லி ஒப்படைப்பதற்கு வாணியும் கூடச் சென்றால்தான் வசதியாக இருக்கும். 

நிலாவைக் கூட்டிச் செல்லும்படி ஏன் சொன்னோம் என்று தன்னைத்தானே ஒரு தரம் நொந்து கொண்ட போதும். அவள் விழாவில் புத்தாடையில் பளிச்சென்று நிற்கப் போகிறாள் என்பதில் வாணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! 

சும்மா கிடைப்பது எதுவுமில்லை. அந்த மகிழ்ச்சிக்கு இது விலை என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் அவள். 

ஆனால், யாரோ ஒரு நிலா புத்தாடையில் பளிச்சிடுவதற்கு அவள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி. ஏனோ அவளுக்குத் தோன்றவே இல்லை. 

அப்போதும் “பஸ்ஸில் செல்வது எங்களுக்கு இன்னமும் வசதிதான்” என்று மட்டும் மெல்ல முணுமுணுத்துப் பார்த்தாள் அவள். 

“அரசு போக்குவரத்துக் கழகம் நல்ல லாபத்தில் இயங்கி, இந்த ஆண்டு இரு மடங்கு போனஸ் கொடுத்திருக்கிறார்களாம். பொதுமக்கள் எல்லோரும் அதிலேயே பயணம் செய்து, அந்த டிக்கெட் பணத்தைக் கொண்டு, தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலையில் போக்குவரத்துத்துறை இல்லை என்பதால், காரிலேயே வரலாம்” என்று வித்யாசாகரன் கூற, அதற்கு மணிவாசகம் சிரித்ததும், அவளுக்கு ரோஷம் வந்தது! 

“இப்படி எல்லோரும் நினைத்துவிட்டால், அப்புறம் அந்தப் போக்குவரத்துக் கழகம் என்னாவதாம்?” என்ற கேள்வி சட்டென்று வாயில் வந்துவிட “அச்சோ, போச்சுடா” என்றான் அவன் இலகுவாக. 

“வாணியிடம் வாதாடி வெல்ல முடியுமா? தோல்வியை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இது எங்கள் குடும்பத்துக்குச் செய்யப்படும் மாபெரும் உதவி. அதற்கு ஒரு சிறு கைமாறாக, உங்கள் இருவரையும் காரில் அழைத்துப் போக என்னை அனுமதிக்க வேண்டும்” என்று பணிவான பாவனை காட்டிக் கை கூப்பிக் கேட்டுக் கொண்டான் வித்யா! 

அவனது பேச்சு, செய்கையில் மணிவாசகம் மேலும் உரக்கச் சிரிக்க, வாணியாலும் முறுவலை அடக்க முடியவில்லை. 

அத்தோடு எப்படியும் இது, வித்யாவுடைய குடும்பத்துக்கு உதவி செய்வதற்கான பயணம்! அவர்களது வற்புறுத்தலுக்காகக் காரில் ஏறுகிறாளே தவிர, அவளாக மூக்கை நீட்டினாள் என்று யாரும் சொல்ல முடியாது. 

முக்கியமாக இந்த வித்யாசாகரன். 

காரிலும், அவன் முன்னே இருந்து ஓட்டப் போகிறான். அவள் பின்னே அமர்ந்து, நிலாவுடன் கதை கிதை என்று அரட்டை அடிக்கப் போகிறாள் அவ்வளவுதான்? 

அவளது கதைகளைப் பற்றி நிலாவைப் பேச வைப்பதற்குப் பெரிய முயற்சிகள் தேவையிருக்காது! 

முடித்துக் கொடுக்கப்பட வேண்டிய இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருக்கவே, சிறுமியின் மனமும் பாதி அதிலேயேதான் இருந்தது போல, “உன் நாலாவது கதை எந்த மட்டில் இருக்கிறது?” என்று வாணி கேட்டதுமே, நிலாவும் அது பற்றி சீரியசாகப் பேசத் தொடங்கி விட்டாள்.

“ஆன்ட்டி, அந்தக் கதையிலே என்னமோ சரியாக வரலை ஆன்ட்டி! ஒரே ஒரு ஊர் ஆட்கள் அழுது, குளம் நிரம்பிக் கடல் ஆவது என்றால், அப்போ இந்த ஊரில் எல்லோரும் சும்மா… அழுதுகிட்டே இருப்பாங்களா? அதோட, சயன்ஸ் டீச்சர் வேறே, ஆறுகள்ளாம் அடித்து வர உப்பு, ஆற்றுத் தண்ணியோட கடலிலே சேரும். அப்புறம் கடல் தண்ணி வெய்யிலிலே நீராவியாகிறபோது உப்பு மட்டும் கடலிலே தங்கி உப்புத் தண்ணீர் ஆகி விடுகிறதுன்னு சொன்னாங்க! கதையில, இயற்கையாக நடக்கிற ஏதாவது விஷயத்தை வைத்துக் கொண்டு கதையை அமைக்க வேணும்னு எங்க டீச்சர் சொன்னாங்க! அதனாலதான், இந்தக் குளம், கடல் என்கிறது சரியா வரலை, ஆன்ட்டி” என்றாள் வருத்தத்துடன். 

“சரி, குளம் என்பதை ஆறு என்று வைத்துக் கொள்ளேன்” என்றாள் வாணி. 

“அதுதான் கரெக்ட் நிலா” என்றான் வித்யாசாகரன் குதுகட்டு, “ஆனால் வெறுமனே ராஜா என்று எழுதாமல் உலகத்துக்கே பெரிய சக்கரவர்த்தி என்று எழுது. உலகம் முழுவதும் அழுத கண்ணீரை, ஆற்றிலேதான் ஊற்ற வேண்டும் என்று சக்கரவர்த்தி சட்டம் போட்டு விட்டார். அதனாலே, அந்த ஆற்றுத் தண்ணீர் எல்லாம் கடலிலே சேர்ந்து, கடல்நீர் உப்புநீர் ஆகிவிட்டது என்று எழுதலாமில்லையா?” என்று அவன் தொடர்ந்து கூறவும் நிலாவுக்கு ஒரே சந்தோஷமாகி விட்டது. 

“நல்ல ஐடியா, சித்தப்பா! என்ன ஆன்ட்டி, எங்க சித்தப்பா சொன்னது சரிதானே?” என்று மகிழ்வோடு வாணியிடம் கேட்டாள் நிலா. 

அவன் புரிந்து சொன்ன விதம், அவளுக்குமே அதிசயமாகிவிட “ஆமாம்…! ஆமாம்…! ரொம்பவே சரிதான்!” என்ற பதில் தானாக வந்தது. 

இந்தப் போட்டியில் நிலாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது என்பது, அவள் அதைப் பற்றியே அடிக்கடி பேசியதில் தெரிந்தது. 

மற்ற மூன்று கதைகளையும் ஃபேர் காப்பி எடுத்து முடித்து விட்டதாகச் சொன்னாள் ஒரு தரம் பிரதிகளும் எடுத்து விட்டார்களாம். 

திடுமென வாணியின் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் குரலை கீழே இறக்கி, “ஆன்ட்டி, இதிலே என் கதை தேர்வு செய்யப்பட்டால், சென்னையில் என்னை நேர்முக பேட்டிக்கு கூப்பிடுவாங்களாம்!” என்று மெல்லிய குரலில் வாணியின் கழுத்தை வளைத்துத் தன் பக்கம் இழுத்து மிக மெதுவாகக் கூறினாள். “அதில் என்ன கேட்பார்கள் ஆன்ட்டி?” 

வெற்றி பற்றிய ஐயம் காரணமாகவே இந்தக் குரல் இறக்கம் என்று புரிந்து, வாணியும் தாழ்ந்த குரலிலேயே அவளிடம் பேசினாள். 

“நீ எழுதியிருக்கும் இயற்கை நிகழ்வுகள் பற்றி உனக்கு எவ்வளவு தெரியும் என்று பார்ப்பார்கள். இது நீயே எழுதியதுதானா, என்று அதையும் விசாரிப்பார்கள்.” 

“ஐயய்யோ… நீங்கள் ஐடியாக் கொடுத்தது கண்டு பிடித்துப் போகச் சொல்லி விடுவாங்களா? திட்டுவாங்களா?” என்று அச்சத்துடன் கேட்டாள் சிறுமி. 

அவளை லேசாக அணைத்து “அப்படியெல்லாம் இல்லைடா! முக்கியமான கதைக்கரு உன்னதுதானே? நான் செய்தது, சின்ன மெருகு ஏற்றியது மட்டும்தானே? அதற்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்” என்றாள் வாணி. 

“ஆமாம் நிலா, உன் கடல் அலைக் கதையில், கடல் அரசன் என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். உன் இயற்கைத் தத்துவத்தில் அது யார்?” என்று விசாரித்தான் வித்யாசாகரன். 

“அதுதான் காற்று சித்தப்பா! காற்று வீசுவதால்தான் கடலில் அலை ஏற்படுதுன்னு பாடத்தில் வருது. கடலிலே புயல், சூறாவளி எல்லாம் ஏற்படுவது அதனால் தானாம். அப்படியானால், காற்று தானே கடலையே ஆட்டி வைக்கும் சக்தி? அதனால் அதுதான் கடல் ராஜா என்று எழுதினேன்?” 

ஏற்கனவே கையணைப்பில் இருந்த நிலாவை ஒரு தரம் இறுக்கி அணைத்துத் தன் பாராட்டைச் சின்னவளுக்கு வாணி தெரிவிக்க “பிரமாதம்மா… மறுக்க முடியாத உருவகம்” என்று மணிவாசகம் வாயாரப் புகழ்ந்தார். 

“வெரிகுட்! வெரிவெரிகுட்!” என்று தன் பங்குக்கு உற்சாகமாகப் பாராட்டிய வித்யாசாகர் தொடர்ந்து “இதற்காக உனக்கு ஒரு சிறப்புப் பரிசு தரப் போகிறேன். நிலா என்ன வேண்டும் சொல்லு” என்று வினவினான். எதுவும் வேண்டாமா என்று கேட்டபோது அவன் தங்கை பத்திருபது ரூபாய்க்கு என்னவெல்லாம் கேட்டாள் என்பது நினைவுக்கு வர, வாணியின் முகத்தில் முறுவல் படர்ந்தது. 

“வாய்ப்பை விடாதே நிலா, அதிகம் வேண்டாம், ஒரே ஒரு வைர செட், இன்றைய பத்திரிகை விளம்பரத்தில் வந்தது போல வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள், விலை ஐம்பதே லட்ச ரூபாய்தானாம்” என்று புன்னகையோடு சின்னவளைக் கிளப்பி விட்டாள். 

ஏதோ ஜோக் என்று புரிந்து வாணியைப் பார்த்து தலையாட்டி “வாங்கித் தர்றீங்களா சித்தப்பா?” என்று கேட்டு நிலா சிரிக்க. “ஆஹா ஆபத்தான பெண் சார் உங்க பேத்தி! இடத்தைக் கொடுத்தால் மடத்தையே பிடுங்குவதற்கு எங்கள் நிலாவுக்கு கற்றுக் கொடுத்து விடுவாள் போல இருக்கிறதே. ஏன் சார்?” என்று மணிவாசகத்தைத் தன் பக்கம் பேச வைக்க முயன்றான் வித்யாசாகரன். 

“நிலாவுக்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டுமா? அவள் அத்தை போதாதா? வாசகசாலையில் புத்தகத்தை நினைத்து, நான் என்ன வேண்டும் என்று கேட்டால், ஒரு பென்ஸ் காரும், அண்ணாசாலையில் ஷாப்பிங் காம்ப்ளெக்சும், ஈசிஆர் ரோடில் ஒரு பங்களாவும் பத்திருபது ரூபாய்க்கு கிடைக்குமா என்று கேட்கிறாள். ஓஹோ இப்படியும் கேட்கலாம் போலிருக்கிறதே என்று நான் கற்றுக் கொண்டதே சுபாவிடம் இருந்துதானே!” என்று கேலிக்குரலில் வாணி கூற, எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. 

“கொஞ்சம் மாற்றிச் சொல்லி விட்டேன், மொத்தத்தில் பெண்களே ஆபத்தானவர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது தெரிகிறது” என்று வித்யா கூற மீண்டும் நகையொலி பரவியது. 

“ஆமாம்! ஏதோ இப்படிப் பழியைப் பெண்கள் தலையில் போட்டால்தானே, பர்சைத் திறக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும்? ஆனால், நீ விடாதே நிலா?” என்று நிலாவை உசுப்பி விட்டாள் வாணி. 

உடனே அவள் மேல் சலுகையாகச் சாய்ந்து கொண்டு “ஆமாம் சித்தப்பா, எனக்கு பத்து கார்னட்டோ, பத்து கசாட்டா ஐஸ் எல்லாம் வாங்கித் தராமல் நான் விடவே மாட்டேன்” என்று நிலா தனக்குப் பிடித்ததைச் சொல்ல, “அச்சோ கவிழ்ந்தாயே” என்று நகைத்தாள் வாணி. 

கார் திடுமென நிற்கவும், சிறு அதிர்ச்சியுடன் எல்லோரும் நிமிர்ந்து “என்ன? என்ன?” என்று கேட்க, “ஒன்றுமில்லை, ஏதோ ஓடியது! அடிபட்டு விடக் கூடாது என்பதற்காக நிறுத்தினேன்!” என்று மீண்டும் காரைக் கிளப்பினான் வித்யாசாகரன். 

கேலியும் கிண்டலும் மீண்டும் தொடர, சென்னைக்கு சீக்கிரமாக வந்து விட்டது போலத் தோன்றியது வாணிக்கு. 

அத்தியாயம்-10

சென்னையிலும், வாணி நினைத்தவாறு இல்லாமல் திட்டத்தில் மாறுதல் ஏற்படும்படி ஆயிற்று. 

நீதாவிடம் போல ஒதுங்கவில்லை என்றாலும், தாரிணியோடு தனித்துச் செல்வதற்கு நிலாவுக்கு மனமில்லை. 

“என்கூட நீங்களும் வாங்க ஆன்ட்டி” என்று ‘க்யூட்டி’யை கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருந்த வாணியின் சல்வாரின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு அவள் கண்களில் நீர் மல்கக் கெஞ்ச, செய்வது அறியாமல் வாணி திகைத்தாள். 

“வாசகசாலைக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கிறதே செல்லம்! தாத்தாவால் அலைய முடியாது பார்” என்று நிலாவிடம் அவள் சொல்லும்போதே, மணிவாசகம் வேறு சொன்னார். 

“வாணிம்மா. நாம் குறித்துக் கொண்டு வந்திருக்கும் புத்தகங்கள் கிட்டத்தட்ட எல்லாம் ‘ஆர்டர்’ பண்ணி எடுத்து வைக்கச் சொல்லி, வரிசையாகப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பார்சலை எடுத்து வருகிற மாதிரிதான். இப்போது போனில் கூப்பிட்டு, பதிப்பகங்களில் ஆர்டரை கொடுத்து விடுகிறேன். அப்புறம், ஓர் ஆட்டோ பிடித்துப் போய், எல்லாவற்றையும் சேர்த்து எடுத்து வந்து விடுகிறேன். நீ நிலாவைக் கூட்டிக்கொண்டு உன் அம்மாவோடு போ” என்றார். 

செய்யலாம்தான். ஆனால், மாம்பலம், தியாகராயநகர், மயிலாப்பூர், அண்ணாசாலை எல்லாம் சுற்ற வேண்டும்… தாத்தா உடம்பு தாங்காது! 

“நீங்கள் புத்தகங்களைச் சொல்லிக் கட்டி வைக்கச் சொல்லுங்கள் தாத்தா. அப்புறம், தம்பியோடு பேச வேண்டும் என்கிறீர்களே… அவன் கோச்சிங் முடிந்து வந்ததும் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஓய்வெடுங்கள். நான் ‘ஷாப்பிங்’கை முடித்துக் கொண்டு வந்து புத்தகங்களை வாங்கி வந்துவிடுகிறேன்” என்றாள் அவள். 

கதிரேசனுடனான உரையாடலை நிறுத்திக்கொண்டு, இந்தப் பேச்சை கவனித்த வித்யாசாகர் அதில் குறுக்கிட்டு “நீங்கள் யாரும் போக வேண்டாம். என் வேலை சுமார் இரண்டு மணி நேரம்தான். அப்புறம் நான் போய் புத்தகப் பார்சல்களை எடுத்து வருகிறேன்” என்றான். 

புத்தகங்கள் தொடர்பாக அவன் முதலில் சொன்னது, சட்டென நினைவு வந்தது! எரிப்பேன்… கொளுத்துவேன் என்றுவிட்டு, அதற்குப் புத்தகம் வாங்கி வருகிறானாமா? 

மனநிலை மாறிவிட “தேவையில்லை. உங்களுக்கு வீண் சிரமம்? நானே பார்த்துக் கொள்வேன்” என்றாள் அவள் மறுப்பாக. 

“இந்த உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். தொடருக்கு ஒரு தடா போட வேண்டும்” என்றவன் சட்டென குரல் மாறி “அது போகட்டும். இந்த புத்தகங்களை நாளைக்கு எடுத்தால் போதுமா?” என்று சாதுவாகக் கேட்டான் வித்யா. 

என்ன உளறல்? 

“திரும்பிப் போவது இன்றைக்கு நாளை எப்படி புத்தகங்களை வாங்குவது?” என்றாள் குரலில் சிறு ஏளனத்துடன் வாணி, 

“அதில்லை… நீங்கள் ஷாப்பிங் முடிக்கவே எவ்வளவு நேரமாகுமோ? இரவு எந்நேரமானாலும் ‘சொர்க்கபுரி’க்கு காரில் போய்விடலாம். பரவாயில்லாமல் நான் ஓட்டி விடுவேன். ஆனால் பதிப்பகங்களை இரவில் திறந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று எனக்கு ஞாபகம்” என்று சிரியாமல் சொல்லி முறுவலித்தான். மற்றவர்கள் சிரிக்கவே தாரிணியைப் பார்த்து “சாரிம்மா.. உங்களைக் குறையாகச் சொல்லவில்லை. சும்மா ஒரு கேலி! உங்கள் மகளை எங்களுக்கு இவ்வளவு உதவி நீங்கள் எல்லோருமாக செய்துவிட்டு ஒரு சின்ன வேலையை நான் செய்ய முன் வந்தால் மறுப்பதற்காக” என்றான் நறுவிசாக. 

“வாணி எப்போதும் ‘தன் கையே தனக்குதவி’ ரகம். சின்ன வயதில் இருந்தே, கெஞ்சிக் கொஞ்சிதான் உதவி யையே ஏற்க வைக்க முடியும்?” என்றாள் தாரிணி அவனிடம். 

இந்த அம்மா வேறு! அன்னியர்கள் முன்னிலையில் கொஞ்சி கிஞ்சி என்று கொண்டு என்று வாணி மனதுள் எண்ணமிடும்போதே “ஓஹோஹா… அப்படியா? இனி மேல் நினைவு வைத்துக் கொள்கிறேன்” என்று அவளை ஒருதரம் குறுகுறுப்பாய் நோக்கினான் வித்யாசாகரன். 

நினைவு வைத்து என்ன பயனாம் என்று எண்ணினாலும், முகம் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. 

காரை மகள், மனைவிக்குக் கொடுத்துவிட்டு, கதிரேசன் மனைவியின் ஸ்கூட்டரில் போனார். 

வாணி எதிர்பார்த்தது போலவே, தேவகி குறிப்பிட்டிருந்த கடையில் அந்த லேஸ் துணியைப் பார்த்ததும் தாரிணி அகமகிழ்ந்து போனாள். 

விலையைக் கேட்டு சற்று அதிர்ச்சிதான் என்றாலும், “டாப்களில் கைக்கு, கழுத்துக்கு, அலங்காரமாக வைத்தாலே ஆளைத் தூக்கும்” என்று தன் பொட்டிக் உடைகளுக்காகச் சிலது வாங்கிக் கொண்டாள். 

சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள் மின்ன, சுபாவுடைய மகளுக்காகத் தாரிணி தேர்ந்தெடுத்ததும் மிக அருமையாக இருந்தது. 

அதே போல, இளமஞ்சளும், பச்சையுமாக பிங்க்குமாக அலையலையாகச் செல்வது போல ஷிஃபான் துணியில், அங்கங்கே கல் பதித்து, கணுக்காலுக்குச் சற்றே உயரத்தில் வந்து சுழன்ற உடை, நிலாவைத் தேவதை போலவே காட்டியது. 

நிலாவின் அளவுக்கு உடையின் உடம்பளவைக் கொஞ்சம் சின்னதாக்கி அங்கேயே தைத்து தருவதாகக் கூறவும் அதற்காகக் காத்திருந்தார்கள். 

“உடை ரொம்பப் பிடித்திருக்கிறது. ரொம்பத் தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று நிலா நன்றி கூறத் தாரிணியின் முகம் மலர்ந்தது. 

நிலாவின் கன்னத்தை வருடி “உனக்கு எதுவும் நன்றாக இருக்கும் கண்ணு” என்றாள் அவள். 

வாணியும் “சுபாவும். தேவகி ஆன்ட்டியும் வந்திருந் தால் கூட இதைவிட சிறப்பாக வாங்கியிருக்க முடியாதும்மா.. உங்கள் தேர்வு எப்போதும் ரொம்பப் பிரமாதம்” என்று மனதை மறையாமல் பாராட்டினாள். 

“பார்த்துப் பார்த்து யோசித்துச் செய்வதால். நன்றாகத் தான் அமையும்! ஆனால், உனக்குத்தான் அதை எப்போதும் ஒத்துக்கொள்ள முடிவதில்லை” என்று வாய்ப்பை விடாமல் தாயார் வாழைப்பழத்தில் ஊசி நுழைக்க, மகளின் முகம் கடுத்தது! 

“பல்லவியைத் தொடங்கி விட்டீர்களா? இதற்காகத்தான் வாசகசாலை வேலையோடு ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன்!” என்றாள் அவள். எங்கோ பார்த்தபடி. 

“ஆமாம் அப்படியே அந்தப் பட்டிக்காட்டு வாசகசாலையிலேயே புதைந்து போய்விடு. இதெல்லாம் உனக்கு இப்போது புரியாது. இன்னும் பத்து ஆண்டு களுக்குப் பிறகு, சொட்டைத் தனி மரமாகக் கையில் சொல்லிக் கொள்கிற மாதிரி பணமும் இல்லாமல் நிற்பாய் பார்! அப்போதுதான் அம்மா எதற்காக அடித்துக் கொண் டாள் என்று உனக்குப் புரியும்!” என்ற தாரிணியின் குரல் ஆத்திரத்தில் உயர நிலா திகைத்து விழித்தாள். 

“ஆ… ஆன்ட்டி?” 

சட்டென எழுந்து “இந்தப் பாட்டின் அனுபல்லவி, சரணம் எல்லாம் வீட்டில் போய் வைத்துக் கொள்ளலாம்! சின்னப் பிள்ளைகள் முன்னிலையில் வேண்டாம்” என்று தாயிடம் கூறிவிட்டு, “வா நிலா… இன்னும் இங்கே ஷோ கேசில் இருப்பதையெல்லாம் பார்த்துவிட்டு வரலாம்’ என்று நிலாவை அழைத்தாள். 

என்ன என்று தெரியாவிட்டாலும், ஏதோ என்று புரிந்ததால், தாரிணியின் கையைத் தொட்டு “என்னாலே ஏதுமின்னால் சாரி ஆன்ட்டி” என்று நிலா வருத்தம் தெரிவிக்க அவள் மனமும் உருகிவிட்டது. 

“உன்னாலே ஒன்றும் இல்லைடாம்மா… இப்போது உனக்கு வாங்கியது போல, உன் வாணி ஆன்ட்டிக்கும் வாங்கலாம் என்று பார்த்தேன். ஆனால் நான் தேர்ந்தெடுத்தால் அவளுக்கு வேண்டாமாம்” என்று அப்போதும் அவள் பூடகமாகச் சொல்லத் தோளைக் குலுக்கினாள் மகள். 

உடனேயே குறும்பாக முறுவலித்து “தாராளமாக வாங்குங்களேன் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. துணிமணிகள்! அதில் நீங்கள் என்ன வாங்கித் தந்தாலும் தாராளமாக அணிந்து கொள்வேன். ஆனால் தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது! அவ்வளவுதான்! அதோ நிலாவின் உடை தைத்து வந்துவிட்டதே. வாங்கிக் கொண்டு போகலாமா?” என்று அவள் கிளம்ப. மனமற்ற முறுவலுடன் தாயும் எழுந்தாள். 

ஆயினும் மகள் சொன்னதற்காகவோ என்னவோ அவளுக்கும் ஒரு சேலையைத் தாரிணி தேர்ந்தெடுத்து வாங்கிய பிறகுதான் வீடு திரும்பினார்கள். 

ஆனால், எப்படியோ நிலாவின் உடையில் இருந்த அதே இளம் பச்சை நிறத்தில் கிட்டத்தட்ட அதேபோல கல் ஒட்டியதாக அந்தச் சேலை அமைந்துவிட, ஒன்றிற்கு ஒன்று பொருத்தமாக வாங்கியது போலத் தோன்றி, எல்லோரையும் வியக்க வைத்தது. 

தாயைப் பற்றி அறிந்திருந்ததால், புத்தகங்களை எடுத்துக் கொண்டு அப்படியே நிலாவையும், வாணி யுடைய தம்பி வாகீசனையும் ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்துப்போய் வருவதாக வித்யாசாகர் கிளம்பிச் சென்றதுமே மறுபடியும் ‘சென்னைக்கு வந்துவிடு’ பேச்சைத் தாரிணி எடுத்தது வாணிக்கு அதிசயமாக இருக்கவில்லை. 

ஆனால், அதற்கு இப்போது தந்தையும் ஆதர வளிப்பது போலத் தோன்றவும் ஆச்சரியமாகப் பார்த்தாள். 

தந்தையிடமும் கதிரேசன் பேசியிருந்தது. “ஒரு நல்ல இடம்…” என்று மணிவாசகமே தொடங்கியதிலிருந்து தெரிந்தது. 

அமெரிக்காவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை. நிறையச் சம்பளம், தாரிணியுடைய சினேகிதிக்குப் பல ஆண்டுகள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்து பழகிய வர்கள். வாணியின் படத்தைப் பார்த்ததும் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டதாம். அடுத்த மாதம் பையன் வரும்போது. திருமணத்தையே வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்! 

பெரியவர்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தாயிடம் திரும்பினாள். “துணிக்கடையில் என் தோழி ஒருத்தியோடு பேசிக் கொண்டிருந்தேன். பார்த்தீர்கள் அல்லவா? சந்தியா. உங்களுக்கும் அவளைத் தெரியும். இன்னொரு சினேகிதியைப் பற்றி சொன்னாள். இப்படி முன்பே குடும்பம் தெரியும் என்று யுஎஸ்சில் ஒருவருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்களாம். மூன்று மாதத்தில் அவனோடு வாழ முடியாது என்று விவாகரத் துக்கு மனு கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டாளாம். தேவைதானா?” என்று கேட்டாள். 

“அவசரக்குடுக்கை! அத்தோடு யார் மேல் தப்போ?” என்றாள் தாரிணி ஆத்திரத்தோடு. 

“யார் மேல் வேண்டுமானாலும் தப்பு இருந்துவிட்டுப் போகட்டும். அவசரக்குடுக்கை என்று யாரைச் சொல்வது? அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, நமக்கு என்ன அவசரம்? அங்கே ஒரு வருத்தம், வேதனை, கஷ்டம் என்றால் உடனே நீங்கள் வந்து பார்க்க முடியுமா? அல்லது, நான்தான் ஓடி வந்து ஆலோசனை கேட்க முடியுமா? அப்படித் தூரமாய் ஓர் இடத்துக்கு என்னை விரட்ட, நீங்கள் ஏன் அவசரப்பட வேண்டும்? எனக்கு அதுதான் புரியவில்லை! பிடிக்கவும் இல்லை!” என்றாள் வாணி தெளிவான குரலில். 

மகளுக்கு நேரே பதில் சொல்ல முடியாமல் “உலகம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று சொல்லுகிற நாளில். உங்கள் பெண் பேத்துவதைப் பாருங்கள்” என்று கணவரிடம் சீறினாள் தாரிணி. 

“சுருங்கியிருக்கலாம் அம்மா! ஆனால் அதற்காக, நினைத்தால் உங்களால் உடனே அங்கே போக முடியுமா? பாஸ்போர்ட், விசா என்று பலநாள் இழுக்காதா? அதற்குள் என்னென்ன ஆகும்? எதற்கு இந்த விஷப்பரிட்சை?” என்று தந்தையைப் பார்த்தாள் மகள். 

இது வெறும் வாதம் என்று புரிந்து, கதிரேசன் அதை முடிவுக்கு. கொண்டு வந்தார். “வாணி பேச்சிலும் ஓர் உண்மை இருக்கிறது, தருண்! நம் பெண்ணுக்கு ஒன்றும் அதிகம் வயதாகிவிடவில்லை. கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்.அப்பாவுக்கும், வாணிக்கும் இரவு உணவுக்கு ஏதோ செய்து கொடுக்கப் போவதாக சொன்னாயே! பொட்டிக்கில் உன் உதவியாள் கணக்கு முடித்து வந்துவிடுவாள் தானே? அல்லது நீதான் போக வேண்டும் என்றால் ஹோட்டலில் பார்த்து கொள்ளலாம்” என்று பேச்சை மாற்றினார். 

“ஐயய்யோ. அப்பா, நான் அம்மாவின் சப்பாத்தி குருமாவுக்கு நாக்கை தீட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் ஏதோ சொல்லி அதைக் கெடுத்து விடாதீர்கள்!” என்று வாணியும் சுற்றி வளைத்து ஐஸ் வைக்க, ஒருவாறு அமைதியடைந்து தாரிணி சமையலைப் பார்க்க போனாள். 

மணிவாசகம் கண்களை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்க, மகளை தனியே அழைத்துப் பேசினார் கதிரேசன். “என்னம்மா என்ன விஷயம்?” என்று கேட்டார். 

“அப்பா, இப்போதுதான் தாத்தா ஓரளவு இயல்புக்குத் திரும்பியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் மனம் தேற வேண்டும். அத்தோடு வாசகசாலையை முழுவதுமாகப் பார்த்துக் கொள்வது இனிமேல் அவரால் முடியாது. அதற்கு இன்னோர் ஆளையும் தயார் செய்ய வேண்டும். அதுவரை இந்தக் கல்யாணம், வேலை பேச்செல்லாம் வேண்டாம்ப்பா…! ப்ளீஸ்” என்றாள் மகள். 

“ச்சு! அப்பாவும் இங்கேயே வந்து இருக்கலாம்” என்று பெருமூச்சுவிட்டார் கதிரேசன். 

“அம்மாவின் நாக்கை மறந்து சொல்கிறீர்களே!” என்றவள் தலை சரித்து குறும்பாக நோக்கி “உங்களுக் கானால் வேறே வழி கிடையாது பா…வம்!” என்று போலி யாகப் பரிதாபப்பட்டு சிரித்தாள். 

“வால்… வால்.. அது ஒன்று முளைக்காத குறைதான். உனக்கும் உன் தம்பிக்கும்” என்று அவர் கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு தந்தையிடம் சென்றார் கதிரேசன். 

அவர் மனைவியிடம் என்ன சொன்னாரோ, தாரிணியும் “சென்னைக்கு கொஞ்சம் அடிக்கடி வரவேனும் முயற்சி செய்” என்றதற்கு மேல் எதுவும் குறைப்படாமல் இருந்து விட்டாள். 

வித்யாசாகரன் புத்தகங்களோடு திரும்பி வந்துவிட்டதால், விருந்தாளி முன் ரசாபாசம் வேண்டாம் என்றும் எண்ணியிருக்கலாம். 

தங்கை மகளுக்குத் தொட்டில் போடும் நாள் முடிவானதும் தெரிவிப்பதாகவும், அதற்கு எல்லோரும் கட்டாயமாக வர வேண்டும் என்றும் தாரிணி, கதிரேசனிடம் வற்புறுத்திக் கூறி, விடை பெற்று வந்து வித்யாசாகரன் காரை எடுத்தான். 

பயணம் தொடங்கியதுமே நிலா தூங்கி வழியத் தொடங்கிவிட, காரை நிறுத்தி டிக்கியிலிருந்து ஒரு குஷனை எடுத்துக் கொடுத்தான் அவன். 

மணிவாசகத்துக்கு முன்பே ஒன்றை சாய்வதற்கு வாகாக வைத்துக் கொடுத்ததை, வாணி ஏற்கனவே கண்டிருந்தாள். 

அவளது பார்வையை உணர்ந்து “சின்னப் பாப்பா பிறக்குமுன் அம்மா, சுபாவோடு செல்லும்போது தேவைப்படும் என்று வாங்கி வைத்தது. பிறகு எப்போதுமே யாருக்கேனும் தேவைப்படும் என்று பத்திரமாய் பாக் செய்து காரிலேயே வைத்துவிட்டேன். உனக்கும் வேண்டுமா?” என்று கேட்டான். 

“இல்லை. இப்படிச் சாய்ந்து அமர்ந்திருப்பதே நன்றாக இருக்கிறது”என்று அவனுக்கு வாயால் பதில் சொன்ன போதும், மறுபடியும் சற்றுமுன் தோன்றிய அதே எண்ணம்தான் ஓடியது. 

வித்யா ஓட்டுகிறவன். இந்தக் குஷன்களால், அவனுக்கு எந்த பயனும் கிடையாது. வண்டியில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு மட்டும்தான் சுகம். அப்படியிருந்தும், காரில் அந்த குஷன்களைப் பத்திரமாகப் பாதுகாத்து எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறான். 

மற்றவர் சுகத்துக்காக இவ்வளவு பார்க்கிறான், இவன் எப்படி அன்று அப்படி நோகக் கத்தினான். மனதைத் துன்புறுத்திவிட்டு உடல் சுகத்துக்குப் பார்த்து என்ன பயன்? 

என்னதான் நிலாவுக்காக அதிகம் கவலைப்பட்டு பேசியதாக வைத்துக் கொண்டாலும் அந்தப் பேச்சு ரொம்பவும் அதிகப்படியேதான்… இவன் வீட்டிலும் முதலில் அப்படித்தான்! 

ஆனால் பிறகு வித்யாசாகரனின் மாற்றமும் அவளுக்கு புதிராகத்தான் இருந்தது. 

ஒருவேளை, அப்போதைக்கு தேவைப்படுகிற உதவிக்காக அடக்கிக் கொள்கிறானா? 

என்னவோ, அதுவும் சரியாகப் படவில்லை அவளுக்கு. 

ஆனால் ஒன்று! சட்டென எதிர்ரெதிர் துருவமாகவே மாறிக் காட்சியளிக்கும் இவனிடம் இருந்து தூர விலகி இருப்பதே அவளுக்கு நல்லது. ஏனெனில், அவன் கலகலப்பாகப் பேசும்போது, அவன் முன்னே சொன்ன அநியாயமான குற்றச்சாட்டுக்களும், கடுமையான பேச்சும், துணி கொண்டு துடைத்த மாதிரியல்லவா, அவளுக்கு மறந்து போயிருந்தது. 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒருவரது தப்பை நினைத்து கொண்டே இருப்பது கூடாதுதான்… ஆனால் அடியோடு மறப்பதும் மறந்து பழகுவதும் முன்னதை விடவும் ஆபத்தே. 

குளிர்காய நன்றாய் இருக்கிறதே என்று தீயின் சுட் டெரிக்கும் தன்மையை மறந்து தொட்டால். என்ன ஆகும்? 

இந்த எண்ணம் தோன்றவே மீதிப் பயணம் முழுவதும், அவளும் அயர்வு போலக் கண்ணை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்து கொண்டாள். 

ஆனால், இது இன்னொரு வகையில் திருப்பியடித்தது. முதலில் மணிவாசகத்தையும், வாணியையும் அவர்கள் இடத்தில் இறக்கிவிட்ட வித்யா, “இரண்டு பேரும் அசந்து போயிருக்கிறீர்கள், சார். இப்போது புத்தகங்களை இறக்கினால், அது தொடர்பான ஏதாவது வேலை செய்யத் தோன்றும். அதனால் புத்தகங்களை காலையில் கொண்டு வந்து தருகிறேன். இப்போது இருவரும் ஓய்வெடுங்கள்?” என்று அக்கறையோடு கூறியபோது, அவளால் அழுத்தமாக மறுத்து ஒன்றும் கூற முடியவில்லை. 

அப்போதும் “உங்களுக்கு எதற்காக வீணான இன்னொரு அலைச்சல்?” என்று மெல்லச் சொல்லிப்பார்த்தாள் தான். 

ஆனால், மணிவாசகம் அவன் பேச்சை ஏற்று “வித்யாத் தம்பி சொல்வது சரிதான் மதும்மா. காலையில் என்றால் முத்தையா இருப்பான். புத்தகங்களை இறக்கவும், தேவையான இடத்தில் எடுத்து வைக்கவும் வசதியாக இருக்கும்! நீங்கள் நாளைக்கு வாருங்கள் தம்பி. இன்று நீங்கள் செய்த உதவிகளுக்கு மிக்க நன்றி!” என்று முடித்துவிட, அவளும் கூடச் சேர்ந்து தலையாட்டும்படி ஆயிற்று. 

விசித்திரம் என்னவென்றால் தன் தீர்மானத்துக்கு மாறாக தாத்தாவுக்கு ஒத்துப் பாடுகிறோம் என்பதே மறந்து, மறுநாளும் அவனை சந்திக்கலாமே என்று உள்ளூர அவள் குதூகலமாக உணர்ந்ததுகான். 

– தொடரும்…

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *