யாரென்று மட்டும் சொல்லாதே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 12,702 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10 

‘இந்த வீட்ல இருக்கவே பயமா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க… திரும்பின பக்கமெல்லாம் பாம்பு… அம்மா வேற கல்யாணப் பேச்சை அப்பப்ப எடுக்கிறாங்க… எனக்கு சுத்தமா இங்கே இருக்க பிடிக்கலைன்னு யார்கிட்டையோ சொல்லிகிட்டு இருந்தாங்க…’ 

லட்சுமியின் கார் கடந்து முடிந்துவிட்டது. கம்பிக்குடி ஜமீன்வம்சத்தைச் சேர்ந்த கைலாசநாதன் ஒருவித பெருமூச்சுடன் திரும்பினார். நல்லமணி ஐயாவை பூப்பல்லக்கில் சுமந்து, உடல் சரிந்து விழுந்துவிடாதபடி கட்டிக்கொண்டிருந்தனர். 

ஜமீன் சம்பிரதாயப்படி ஒன்பது பேர் படிக்காசுகளோடு வரிசையாக நின்றிருந்தனர். உடல் புறப்படவும் காசுகளை வீசி எறிய வேண்டும். கூடை கூடையாக பூக்களோடும் சிலர் நின்றுகொண்டிருந்தனர். பூவும், காசுகளும் மண்ணில் மழைத்துளி விழுவது போல விழ, ஜமீன் தோட்டம் நோக்கி உடல் புறப்பட்டது. 

தோட்டத்தில்தான் நல்லடக்கம்! பெருவாரியான கூட்டம் பின் தொடர நான்கைந்து பண்டாரங்கள் தேவார திருவாசகத்தை பாடியபடி அந்த கூட்டத்தில் நடந்தனர். டையே சேகண்டி சப்தமும், சங்கின் ஒலியும் கலந்துவந்து காதைக் குடைந்தது. 

கைலாசநாதனும் தன் ஜரிகை வேட்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு லகுவாக நடந்தார். அவர் வரையில் இனி நரிக்குடி ஜமீன் தன் மொத்த செல்வாக்கையும் முற்றாக இழந்துவிட்டது போலத்தான் உணர்ந்தார். 

இனி அந்த பிராந்தியத்திலேயே பழைய மவுசு குறையாத ஒரே ஆள் தான்தான் என்கிற எண்ணமும் அவருக்குள் ஒரு செருக்காக பரவிக்கொண்டிருந்தது. 

நாகமாணிக்கம் மட்டும் வந்துவிட்டால் மொத்த தென்மாவட்டமும் தனக்கு கட்டுப்பட்டு, தமிழ்நாடு அமைச்சரவையில் அசைக்க முடியாதபடி ஓர் அமைச்சராகக் கூட ஆகிவிடலாம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டேதான் நடந்தபடி இருந்தார். 

இடையில் சங்கு சப்தமும், அந்த சேகண்டி சப்தமும் மட்டும்தான்! 


அம்பாரி மாளிகைக்குள் நுழைந்தது, ‘லயன்’ லட்சுமியின் கார்! காரைவிட்டு இறங்கி லட்சுமி, சாவு வீட்டுக்கு போய்விட்டுவந்த திகட்டலோடு தோட்டத்து ‘பைப்’பை நோக்கி நடந்து காலை கழுவிக்கொண்டாள். விலை மதிப்புமிக்க மும்பையில் வாங்கிய செருப்பையும் அங்கேயே ஓர் ஓரமாக விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். மாடி அறையில் பிரியா இருப்பதை டி.வி. ஓடும் சப்தம் காட்டிக் கொடுத்தது. 

நேராக குளியலறையை நோக்கித்தான் நடந்தாள். ஹாலில் நிறைய பேர்காத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் கேமராவும் கையுமாக பத்திரிகையாளர்களும் இருந்தனர். 

லட்சுமிக்கு புரிந்துவிட்டது. ‘பத்மஸ்ரீ ‘விருது விஷயம் தெரிந்துதான் அவ்வளவு பேரும் வந்திருப்பதாக நினைத்துக் கொண்டே தன் உதவியாளன் சிட்டிபாபுவை கூப்பிட்டாள். 

அவன் வந்தான். 

“மேடம்…” 

“எல்லாரும் வந்து ரொம்ப நேரமாச்சா?” 

”ஆமாம் மேடம்… நாளைக்கு வாங்கன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்காம உக்காந்துகிட்டு இருக்காங்க…” 

”சரி… எல்லாருக்கும் காப்பி கொடுத்து உபசரி. நான் குளிச்சிட்டு வந்துடுறேன்…” 

சிட்டிபாபு, லட்சுமியின் அந்த பதிலால் ஆச்சரியப் பட்டு போனான். அவளே அப்படி சொல்கிறாள் என்றால் முக்கியமாக ஏதோ ஒன்று இருப்பதாகவும் கருதிக் கொண்டான். 

அதேபோல் வேகவேகமாக குளித்துவிட்டு, நெற்றியில் கொஞ்சம் விபூதியை ஓர் ஒழுங்கில்லாதபடி பூசிக்கொண்டு பரபரப்போடு வந்து சேர்ந்தாள். 

எல்லோரும் கையெடுத்து கும்பிட்டனர். ஒரு பெண் நிருபர் மட்டும் முதலாக’ வாழ்த்துகள் மேடம்’ என்று வாழ்த்தைத் தொடங்கி வைத்தார். 

“ரொம்ப நன்றி…” 

“மேடம், நீங்க இந்த விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?” 

“இல்ல…எப்பவும் நான் பட்டம், பதவின்னு எதையும் எதிர்பார்த்து செயல்படுறவ இல்லையே…” 

“உங்களை ஒரு ‘டைனமிக்’ பெண்ணாக உணர்ந்து தான் இந்த விருதை மத்திய அரசு தந்திருக்கு. இதைப்பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க?” 

“இது என்ன ரொம்பவே ஊக்கப்படுத்தி இருக்கு. இப்போதைக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மெட்ரி குலேஷன் பள்ளி, ஒரு பாலிடெக்னிக், ஒரு கலைக்கல்லூரி இருக்கிற என் கல்வி நிறுவனங்களை நான் வேகமாக இரட்டிப்பாக்கி அதுல எல்லாருக்கும் இலவசக் கல்வி கொடுத்து பெரிய அளவுல கல்விச் சேவை செய்ய திட்டம் போட்டிருக்கேன்”. 

“ஒரு மாதர் சங்க கூட்டத்துல அபலைப் பெண்களுக்கு பாதுகாப்பான மறுவாழ்வு இல்லம் அமைக்கப் போறதா சொல்லி இருந்தீங்க…” 

ஒரு நிருபர், அவளே மறந்துவிட்ட விஷயத்தை நாபகப்படுத்தி கேள்வி கேட்கவும், அவளுக்கே என்னவோ போலாகிவிட்டது. 

“நிச்சயம் அது கூடிய சீக்கிரத்துல நிறைவேறும்…” என்றாள்… அடுத்த நபர் கேட்டதுதான் ஆச்சரியமான கேள்வி. 

“மேடம்… உங்க மகளுக்கும், நல்லமணி பேரனுக்கும் விரைவில் திருமணம்னு கேள்விபட்டோம். உண்மையா?”

அந்த நிருபரை கொஞ்சம் துளையிடுவது போல பார்த்த லட்சுமி, “ஆமாம்…” என்றாள், மெலிதாக. 

”சாகும்போதுகூட அதுபற்றிதான் உங்ககிட்ட அவர் பேசினாராமே…?’ 

“ஆமாம்…” 

“இந்த கல்யாணத்துல உங்க மகளுக்கு சம்மதமா?” அந்த நிருபர் விடாமல் கல்யாண கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தார். 

”சம்மதமில்லாமலா நான் சம்மதிச்சேன்…?” 

“நீங்க சம்மதிக்கலாம். ஆனா, அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னு கேள்விப்பட்டோம்…” 

“போதும்…இப்படி ஆதாரமில்லாத கேள்வியை என்கிட்ட கேட்கவேண்டாம். கல்யாணம் நடக்கும்போது அழைப்புவரும். அப்ப பார்த்து தெரிஞ்சிக்கலாம்.” 

“ஆதாரமில்லாம ஒண்ணும் நான் இந்தக் கேள்வியைக் கேட்கலை. எங்க பத்திரிகை ஆபீசுக்கு வந்த ஒரு போன், உங்க மகளுக்கு விருப்பம் இல்லைங்கிறதை சொல்லுச்சு, அதான்…”

அந்த நிருபரின் விடாக்கண்டத்தனமாக பதில், லட்சுமியின் முகத்தை சிவக்க வைத்தது. 

”போதும்…இனி இந்த விஷயம் பத்தி நான் ஒரு வார்த்தை பேசுறதா இல்லை. ஒண்ணுமட்டும் நிச்சயம், நல்லமணி ஐயா எனக்கு கடவுள் மாதிரி. அவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து ஒரு நாளும் பின்வாங்க மாட்டான். இது சத்தியம்!” 


லட்சுமி ஆவேசமான பதிலோடு எழுந்து நின்றாள். பத்திரிகையாளர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள – லட்சுமி வேகமாக அங்கிருந்து நழுவினாள். 

சிட்டிபாபுவுக்கு மட்டும் அடிவயிறுக்குள் ஒரு சிறு பூகம்பப் பிரளல்! 

லட்சுமி அடுத்து ஆவேசமாக நுழைந்தது, பிரியாவின் அறைக்குள்தான்… அவள் அறையில் டி.வி. மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. பிரியாவைக் காணவில்லை! 

“பிரியா… பிரியா…” லட்சுமியின் குரல் அந்த அறை முழுக்க எதிரொலித்தும், மறு பதில் இல்லை. குளியலறை திறந்திருந்தது. எட்டிப் பார்த்தாள், உள்ளேயும் பிரியா இல்லை. ‘எங்கே போயிருப்பாள்?’ 

பின்னாலேயே நடுங்கியபடி வந்து நின்றான், சிட்டிபாபு. 

“ஏய் சிட்டி… எங்கேய்யா பிரியா?” 

”மேடம்… சின்ன மேடம் கொஞ்சம் முந்திதான் வெளியில போனாங்க?” 

“வெளியவா… எங்கே?” 

“சொல்லலை மேடம்.” 

சிட்டிபாபுவின் கெஞ்சலான குரலைத் தொடர்ந்து, சட்டென்று தன் செல்போனை தேடி எடுத்த லட்சுமி -அதில் பிரியாவுடன் தொடர்புகொள்ளப் பார்த்தாள். 

ஆனால், அவளது செல்போன் இயக்கத்தில் இல்லை என்கிற பதிலே அவளுக்குக் கிடைத்தது, எரிச்சலாக வந்தது. “சேச்சே… செல்போனை ‘ஆஃப்’ பண்ணி வைச்சிருக்கா. ஆமா… அது யாருய்யா அந்த பத்திரிகைக்காரன்? விடாம பிரியா கல்யாணம் பத்தியே கேக்கிறான்?” 

“எனக்கே அது ஆச்சரியம்தான் மேடம்.” 

”யாரோ போன் பண்ணி பிரியாவுக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னாங்களாமே… அவன் என்ன என்கிட்ட போட்டு வாங்கறானா?” 

“தெரியலை மேடம்.” 

“அப்புறமா அவனோட பத்திரிகை ஆசிரியரை என்கூட பேசச்சொல்” 

“சொல்றேன் மேடம்… அதேநேரம் ஒரு முக்கியமான விஷயம்…” 

“என்னய்யா?” 

“சின்ன மேடம் அறையில் செல்போன்ல பேசிக்கிட்டிருந்த சில விஷயங்கள் என் காதுலேயும் விழுந்துச்சு…’ 

“ஒட்டுக் கேட்டேன்னு சொல்லாம சொல்றியா?” 

“சத்தியமா இல்ல மேடம்… என்னை தேடினதா தெரிஞ்சு என்னன்னு கேட்க இந்த அறைக்கு வந்தேன். அப்பதான்…”

”சரி… என்ன பேசிகிட்டிருந்தா அப்படி?” 

“இந்த வீட்ல இருக்கவே பயமா இருக்குன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க… திரும்பின பக்கமெல்லாம் பாம்பு… அம்மா வேற கல்யாணப்பேச்சை அப்பப்ப எடுக்கிறாங்க. எனக்கு சுத்தமா இங்க இருக்க பிடிக்கலை’ன்னு யார்கிட்டையோ சொல்லி கிட்டிருந்தாங்க” – சிட்டிபாபு மென்று துப்பினான். 

லட்சுமிக்குள் முதல்முறையாக ஒரு நடுக்கம் பரவ ஆரம்பித்தது. மவுனமாக பக்கத்து கம்ப்யூட்டர் இருக்கையில் அமர்ந்தாள். அது சுழலும் ரகம்! அவள் அமர்ந்த வேகத்தில் சுழன்றது. அப்படி சுழன்றபோதுதான், கம்ப்யூட்டர் மேசை மேல் ஒரு சிறு துண்டுக் கடிதமும் கண்ணில் பட்டது. 

நடுங்கும் கை கொண்டு அதை எடுத்து விரித்தாள். அது பிரியாவுக்கு வந்திருந்த கடிதம். அவள் கல்லூரித் தோழி எழுதியது. அதைப் படித்து முடிக்கவும் ஒரு பெருமூச்சு விட்டாள். 

பிரியாதான் கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்காவது போய்விட்டாளோ என்று ஒரு குட்டிக் கற்பனை அவளுக்குள். 

பின்னர் திரும்பவும் ஒருமுறை பிரியாவின் செல்பேசிக்கு தொடர்புகொண்டாள். இந்த முறை அது வேலை செய்தது. மணி ஒலி கேட்டது. ஆனால், அது முறிந்து, குரல் மட்டும் கேட்கவில்லை. நெடுநேரத்திற்கு பிறகு திரையில் ‘பதிலில்லை’ என்று வந்தது. 

சிட்டிபாபு கவனித்துக் கொண்டே இருந்தான்.

“மேடம்… ஏதாவது ‘சீரியஸ்’ பிரச்சினையா?”

“என்னன்னு சொல்வேன்? ‘ரிங்’ போகுது. செல்போனை எடுக்கமாட்டேங்கறாளே?” 

‘ஒருவேளை செல்போனை காரில் போட்டுட்டு வெளியில் இருக்காங்களோ என்னவோ?” 

சிட்டிபாபுவின் அந்த பதில் அவளுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது. 

“அப்படித்தான் இருக்கணும். நீயும் விடாம முயற்சி பண்ணு. பிரியா எங்கே இருந்தாலும் சரி, அவள்கூட நான் பேசணும். எனக்கு இப்ப மனசே சரியில்லை” என்று கழுத்து வியர்வையை சேலை முந்தியால் ஒத்தி துடைத்துக் கொண்டாள். 

சிட்டிபாபுவும் பணிவாக ஒதுங்கிக்கொண்டு, பிரியாவை பிடிக்க – போன் செய்ய ஆரம்பித்தான். ஊகூம்… ‘ரிங்’ போய்க்கொண்டே இருந்தது. 

லட்சுமி சலனத்தோடு அமர்ந்திருந்தவள், ஒரு முடிவுக்கு வந்தது போல எழுந்தாள். அந்த நாகமாணிக்கத்தை வெளியே எடுத்து அதற்கொரு கற்பூர ஆரத்தி காட்டி, கண்ணில் ஒற்றிக்கொண்டால் அப்போதைய கசகசப்புக்கு ஒரு தீர்வு ஏற்படும் போல் தோன்றியது. அதற்காக தயாரானாள்! 

“சிட்டி… கொஞ்ச நேரம் வீட்டுக்குள் யாரையும் விடாதே…நீயும் வெளியில் போய் நில்லு” என்றவள், நாகமாணிக்கத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ரகசிய ‘லாக்கர்’ உள்ள அறை நோக்கி நடந்தாள். 

இடையிடையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டவள், அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டுக் கொண்டாள். பின்னர், ரகசிய லாக்கரை அதற்குரிய எண்களை உபயோகித்து திறந்தவள் – நாகமாணிக்கம் உள்ள மரப்பெட்டி எங்கே என்று பார்த்தாள். 

அதைக் காணவில்லை! 

பகீரென்றது… 

அத்தியாயம்-11

‘என்னடா முழிக்கிறே? நான் அந்த ஜமீன்தார் பேரனை கல்யாணம் பண்ணிக்கட்டுமா? தமிழ் சினிமாவில் வர்ற மாதிரியே ஜரிகை ‘பார்டர்’ போட்ட பைஜாமா – ஜிப்பா போட்டுகிட்டு, கட்டையா மீசை வைச்சுகிட்டு, ஒரு ‘கட் ஷூ’ போட்டுக்கிட்டு, சாரட்ல இருந்து இறங்கி திமிரா நடந்து வர்ற ஜமீன் வாரிசைப் பார்த்து நானும் மயங்கட்டுமா?’

லட்சுமிக்கு இதய பாகத்தில் ஒரு பிரளயமே நிகழ்வது போல இருந்தது. உள்ளே இருந்த நாகமாணிக்கக் கல்லைக் காணவில்லை என்கிற அந்த உண்மை அவளை சுருட்டித் தள்ளியது. பலமாக கத்தி புலம்பக்கூட முடியவில்லை! அது ஒரு ரகசியமான விஷயம் என்கிற காரணம் தடுத்தது. 

அடுத்து என்ன செய்வது… எதைச் செய்வது? என்பதிலும் ஒரு குழப்பம். மூச்சை அடைத்தது. தான் கன்னாபின்னாவென்று கிழித்துப் போட்ட காகிதத் துண்டுகள் போல ஆகிவிட்ட மாதிரி எல்லாம் உணர்ந்தாள். 

அதை ஆமோதிக்கிற மாதிரி அந்த ‘லாக்கர்’ அறையின் ஆளுயர சீன நாட்டு கடிகாரமும் அப்போது மணி நான்கு என்பதற்கு அடையாளமாக நான்குமுறை சப்தமிட்டது. அந்த சப்தம் லட்சுமிக்கு நாராசமாக இருந்தது. சமாளித்து லாக்கரை பூட்டிவிட்டு, வெளியே வந்தாள். 

முதலில் பிரியாவை காணவில்லை. 

அடுத்து – நாகமாணிக்கம்! 

அந்த நொடி -ஆஸ்பத்திரியில் படுத்தபடுக்கையாக இருக்கும் ராஜதுரைதான் அவள் நினைவில் முரண்டினான். அவன்தான் எதாவது விளையாட்டு காட்டுகிறானா? 

மூளைக்குள் மின்மினிப் பூச்சிகள் ஒரு கைகொள்ளும் அளவுக்கு கூட்டமாக எழும்பிப் பறக்க ஆரம்பித்தன. கக்கத்தில் டைரியோடு “மேடம்…” என்றபடி சிட்டிபாபுவும் வந்தான். லட்சுமியை அவன் அப்படி யெல்லாம் ஒரு பதற்றத்தோடு பார்த்ததேயில்லை. 

“என்ன மேடம்… உடம்புக்கு எதாவது முடியலையா?” 

“உடம்புக்கு மட்டுமில்லையா… மனசுக்கும் தான்…”

“பிரியா மேடத்துக்கு ‘டிரை’ பண்ணிகிட்டே இருக்கேன். ‘ரிங்’ போகுது. ஆனா, எடுக்க மாட்டேங்கிறாங்க.” 

“சிட்டிபாபு… சம்திங் ராங்… ” 

“என்ன மேடம் சொல்றீங்க?” 

“அந்த மாஜி எம்.எல்.ஏ. ஏதோ கண்ணாமூச்சி காட்டுறான்னு நினைக்கிறேன்.”

“மேடம் …நம்ம சின்ன மேடத்தை அவர் பிடிச்சு வைச்சிருப்பாருன்னு சொல்றீங்களா?”

“மெள்ளப் பேசு. ஆமா, அந்த ராஜதுரை இப்ப ஆஸ்பத்திரியில்தானே இருக்கான்?”

“அப்படித்தான் நினைக்கிறேன்.” 

“அவன் இருக்கிற இடம் எனக்கு இப்ப தெரியணும். அவன்கூடவும் நான் பேசணும். சீக்கிரம்…”

லட்சுமி கொந்தளித்தாள்! சிட்டிபாபுவும் ஆஸ்பத்திரி எண்ணைப் பிடிக்க தயாரானான். 


வாயைப் பிளந்துவிட்டிருந்தான், அர்ஜுன்! அவன் உள்ளங்கையில் அந்த நாகமாணிக்கம். அருகில் பிரியா! 

“என்ன அர்ஜுன்… நம்பமுடியலையா? இதுதான் அந்த நாகமாணிக்கம். இதோட மதிப்பு அதிகம். அதாவது, இப்ப உன் உள்ளங்கையில் நூறு கோடிக்கு மேலான ரூபாய் இருக்கு.” 

பிரியா சொல்லச் சொல்ல அர்ஜுனுக்கு கூடவே சிரிப்பும் வந்தது. 

இருவரும் தெப்பக்குளத்துக்கு நடுவில் உள்ள கல்மண்டபத்தினுள், காற்று அலைகள் தேகங்களை வருடிவிட்டு செல்லும் இடத்தில் நின்று கொண்டு இருந்தனர். 

“நீ சிரிப்பேன்னு நல்லா தெரியும். ஆனா, நான் சொல்றது சத்தியம். இது வந்தபிறகு என் பங்களாவே மாறிடிச்சு. அவ்வளவு ஏன், எங்க பங்களாவுக்கு உள்ளேயே எவ்வளவு பாம்புங்க வந்துச்சு தெரியுமா?” 

”பிரியா… நான் எந்த அளவு மூடநம்பிக்கை உள்ளவன்னு ஆழம் பார்க்கிறியா?”

“முட்டாள் மாதிரி பேசாதே… என்ன நடந்ததோ நான் அதைச் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த நாகமாணிக்கம் தான் என்னை அந்த ஜமீன்தாரின் பேரனோடு சேர்த்து வைக்கப் போகுது.” 

“பிரியா…” 

“என்ன அர்ஜுன்? இது ஒண்ணும் உன்னை நான் சங்கடப்படுத்த சொல்ற விஷயம் இல்லை. எல்லாமே நூறு சத ‘அக்மார்க்’ உண்மைகள்!”

“சரி… இவ்வளவு மதிப்பான ஒரு விஷயத்தை எதுக்கு இப்படி, வெளியே எடுத்துகிட்டு வந்தே? என்னை வரச்சொல்லி எதுக்கு காட்டிகிட்டு இருக்கே?”

தெப்பக்குளக் காற்று தலையை கோதிச்செல்ல – நாகமாணிக்கத்தை உள்ளங்கையில் மூடியபடியே திரும்பி நடந்தவனாக கேட்டான். 

இரண்டு எருதுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு நிற்கிற மாதிரி வெகுதூரத்தில் இருவரின்கார்களும் முட்டிக்கொண்டு நின்றிருந்தன! 

“இப்பதான் அர்ஜுன் நீ சரியான கேள்வியே கேட்டிருக்கே.”

“என் கேள்விக்கு சரியான பதிலை முதல்ல சொல்லு, பிரியா…” 

“அர்ஜுன்… இந்த நாகமாணிக்கக் கல்லை நான் நவரத்தினங்கள்ல ஒண்ணாதான் நினைக்கிறேன். ஏதோ ஒரு விதத்துல இது ஒருவிலை உயர்ந்த கல்லாக இருக்கலாம். அவ்வளவுதான் அதுக்குமேல இதுல எதுவுமில்லை.”

“நீ சொல்றதைப் பார்த்தா விலைமதிப்பை தாண்டி இதுக்குப் பின்னால் பல விஷயங்கள் இருக்கிற மாதிரியும் தெரியுதே?” 

“ஆமாம் அர்ஜுன்! இது ஒரு தூண்டில்… இதைக் கொண்டு என்னைப் பிடிக்க நரிக்குடி ஜமீன் திட்டமிடுறதா நான் நினைக்கிறேன்.” 

“இது 2007 பிரியா. இந்த காலத்துல போய் ஜமீன்தாரா?”

“இப்ப ஜமீன்தார் பட்டம் நடைமுறையில் இல்லாம் இருக்கலாம். ஆனா, அவங்க செல்வாக்கு, அவங்களோட அதிகார பலம் இதெல்லாம் வேறு வடிவத்துல தொடர்ந்து கிட்டுதான் இருக்கு.”

“சரி… இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே?” 

“இந்த நாகமாணிக்கத்துக்கு விசேஷ சக்தி இருக்கிறது உண்மையா… பொய்யாங்கிற ஒரு பரிசோதனை முயற்சியில் இப்ப இறங்கி இருக்கேன். இதை நான் எடுத்துட்டு வந்தது, என் அம்மாவுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும். அவங்க கிட்டதட்ட அணுகுண்டு வெடிச்ச இடமான பொக்ரான் மாதிரி இப்ப நொறுங்கிப் போயிருப்பாங்க.” 

”ஓ… அப்படி ஒரு கோணம் இருக்கிறதை நான் மறந்தே போனேன் பாரு. வா… முதல்ல இதை எடுத்து கிட்டு கிளம்பு. நானும் வரேன். பாவம், உங்கம்மா. அவங்களை ‘டென்ஷன்’ல தவிக்கவிடாதே. ” 

“அவங்கதான் கல்யாண பேச்சை எடுத்து என்னை ‘டென்ஷன்’ படுத்திக்கிட்டு இருக்காங்க. இந்த நாகமாணிக்கத்தை அம்மாவும் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இது வந்த நேரம்தான் ‘பத்மஸ்ரீ’ விருது கிடைச்சதா ரொம்ப ஆழமா நம்புறாங்க. அமெரிக்காவுல நாங்க வாங்கி இருக்கிற ஒரு வீட்ல பெட்ரோல் ஊற்று இருக்கிறது தெரியவந்திருக்கு. எல்லாம் இதனாலையாம்!” 

“எல்லாமே ரொம்ப தற்செயல் சம்பவங்களாதான் எனக்குப்படுது. அதேநேரம், வீட்டுக்குள்ள பாம்புங்க வந்தது எப்படிங்கிறதுல எனக்கும் கொஞ்சம் குழப்பம்.” 

”சரி… என்னதான் பண்ணப் போறே?” 

“அர்ஜுன்… இந்த நேரத்துல நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்…” 

“என்ன செய்யணும் சொல்லு.” 

“இது கொஞ்ச நாள் உன்கிட்ட இருக்கட்டும். உனக்கு என்னவெல்லாம் நல்லது நடக்குதுன்னு நான் பார்க்கிறேன்.” 

“என்ன பிரியா… உங்கம்மா கேட்டா என்ன சொல்லுவே?” 

“அம்மாவை நான் இப்ப பார்த்தாத்தானே?”

“அப்படின்னா?” 

“இந்தப் பக்கமா ஒரு ஓட்டல்ல அறை எடுத்து நான் தங்கப் போறேன்.” 

“அதுக்கு நீ என் வீட்ல என்கூட தங்கலாமே? எங்க வீட்ல எதுவும் சொல்லமாட்டாங்க, பிரியா.” 

“உங்க வீட்ல எதுவும் சொல்லமாட்டாங்க. ஆனா, என் அம்மாவைப் பத்தி உனக்கு தெரியாது. அவங்க இந்த நிமிடம் என்னைத் தேட எத்தனை வழிகள் உண்டோ அவ்வளவையும் யோசிச்சு வைச்சிருப்பாங்க. அதுல உன் வீடுதான் முதல்ல இருக்கும்.”

”பிரியா…. அப்ப நீ வீட்டைவிட்டு வந்தது உன் அம்மாவுக்கு தெரியுமா?”

அவன் கேட்கவும், இருவரும் கார் அருகே நெருங்கவும் சரியாக இருந்தது. 

கார் முகப்பில் செல்போன். அதை வெளியே எடுத்து திரையைப் பார்த்தாள். அதில் சிட்டிபாபுவும், லட்சுமியும் மாறி மாறி அழைத்ததற்கான பதிவுகள். 

”பார்த்தியா…இருபத்தியொரு ‘மிஸ்டுகால்’கள்!. எங்கம்மா இப்ப குதிச்சுகிட்டு இருப்பாங்க.” 

”பாவம் பிரியா, உங்க அம்மா. அவங்களுக்கு உடனே போன் பண்ணிப் பேசு.”

“இல்ல… இப்ப நான் எதுவும் பேசுறதா இல்லை. இந்த நாகமாணிக்கம் எந்த அளவுக்கு உண்மை… பொய்யின்னு பார்க்கிறதுதான் என்னோட திட்டம்.”

“எதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்? இதனால் யாருக்கு என்ன லாபம்?” 

“என்ன அர்ஜுன்? இதுதான் என் கல்யாணத்துக்கே காரணம். பிளஸ் – 2கூட படிக்காத ஒருத்தனை என்தலையில் கட்டப் போறாங்க. அம்மாவும் இதுக்காகவே அவனை ஏத்துக்கப்போறாங்க. உனக்கு ‘ஓ.கே.’ வா?” 

பிரியா, அர்ஜுனை இடுக்கியில் கவ்விப் பிடித்தது போல பிடித்தாள். அவனும் பதில் கூற முடியாமல் திணறினான். 

“என்னடா முழிக்கிறே? நான் அந்த ஜமீன்தார் பேரனை கல்யாணம் பண்ணிக்கட்டுமா? தமிழ்சினிமாவில் வர்ற மாதிரியே ஜரிகை, ‘பார்டர்’ போட்ட பைஜாமா- ஜிப்பா போட்டுகிட்டு, கட்டையா மீசை வைச்சுகிட்டு, ஒரு ‘கட் ஷு’ போட்டுகிட்டு, சாரட்ல இருந்து இறங்கி திமிரா நடந்து வர்ற ஜமீன் வாரிசைப் பார்த்து நானும் மயங்கட்டுமா? உனக்கு அதனால ஒரு பாதிப்பும் இல்லையா?”

“போதும் பிரியா… நான் ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு தடவை சொன்னப்போ, ‘சிரிச்சு பேசினாலே ‘ஐ லவ் யூ’ சொல்லிடுறதா? ஒரு ஆணும், பெண்ணும் நட்பாவே பழகக் கூடாதா? இல்ல… பழக முடியாதா?’ன்னு நீ கேட்டது இப்பவும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு.”

“போடா முட்டாள். காலேஜில் படிக்க வந்திருக்கிற இடத்துல முதல் வாரத்துலேயே ‘ஐ லவ் யூ’ ன்னு சொன்னா என்னடா அர்த்தம்? அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்.”

“அப்ப நீ என்னை ‘லவ்’ பண்ணுறியா பிரியா?”

“கடவுளே… நீ என்ன ‘டியூப் லைட்’ டாடா? இவ்வளவு தாமதமா புரிஞ்சிக்கிறே?”

“சாரி பிரியா… நல்ல நட்போடு இருந்துடுவோம்கிற எண்ணத்துல என் காதலை அடக்கியே வைச்சுட்டேன்.”

“இருந்தாலும் அப்பப்ப நீ விட்ட பெருமூச்சை நான் கவனிச்சேன். இனியாவது ஒரு நல்ல ‘ஹீரோ’வா எனக்கு ஓத்துழைப்பு கொடு.” 

“சரிப்பா… நான் இப்ப என்ன பண்ணணும்?”

“முதல்ல எதாவது பாடாவதி லாட்ஜ் ஒண்ணுல அறை எடு.அப்புறமா, இந்த நாகமாணிக்கத்தை பத்திரமா வைக்க ஒரு யோசனை சொல்லு.” 

“ஆமா, நல்ல ஸ்டார் ஓட்டல்ல தங்காம எதுக்கு பாடாவதி லாட்ஜில் அறை எடுக்க சொல்றே? 

“என்ன அர்ஜுன் நீ? எந்த ஒரு பெரிய ஓட்டல்ல நான் தங்கினாலும் எங்க அம்மாவுக்கு தகவல் போயிடும்கிறதை நீ தெரிஞ்சுக்கோ. நான் யார்? ‘லயன்’ லட்சுமியோட மகள்.” 

“ஓ… நீ அப்படி வர்றியா? சரி, எவ்வளவு நாளைக்கு. இந்தக் கண்ணாமூச்சி?” 

“அது எனக்கு தெரியாது. ஒண்ணு மட்டும் நிச்சயம். நான் காணாம போனது தெரிஞ்சு அந்த நரிக்குடி ஜமீன் பேரன் என்ன செய்யப்போறான் என்கிறது முக்கியம். எனக்கு அவனை கட்டிக்கிறதுல இஷ்டம் இல்லேங்கிறதை நானே ஒரு பத்திரிகைக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவனுக்கும் இந்த விஷயம் போகும். 

கல்யாணத்துல விருப்பம் இல்லாம நான் வீட்டைவிட்டு ஓடிட்டதா, முக்கியமா உன்கூட ஓடிட்டதா அம்மாவும் நினைக்கலாம், அவனும் நினைக்கலாம். அப்ப அம்மா எப்படி நடந்துக்கபோறாங்க, அவன் எப்படி நடந்துக்கப் போறன்கிறதும் எனக்கு ரொம்பவே முக்கியம்.”

“எனக்கு என்னவோ நீ சுத்திவளைச்சு மூக்கை தொடுற மாதிரி தெரியுது.” 

“இப்ப அப்படிதான் தெரியும். ஆனா, போகப் போக பாரு ” பிரியா ஒரு தீர்மானமுடன் பேசினாள். அப்படியே தன் சிவந்த பழரச உதடுகளை நாவாலே நக்கி ஈரப்படுத்திக் கொண்டாள். அதைப் பார்த்த அர்ஜுன் முகத்தில் ஒரு சின்ன ஏக்கம். 

“என்னடா… எதுக்கு என்னைப் பார்த்து ஏங்கறே?”

“ஏங்காம… இரண்டு சந்நியாசிகள் காதலிக்கிற மாதிரி ஒரு சைவக் காதலாவே நம்ம காதல் இருக்கே?” 

”சரிடா… இந்த நொடியில் இருந்து நான் அசைவம். நீயும் மாறிடு.” – அவள் சொன்னது அவனுக்கும் புரிந்து, அடுத்த நொடியே கார் கதவைத் திறந்து கொண்டு அவளை உள்ளே தள்ளினான். அவனும் பாய்ந்து, கதவை அடைத்துக் கொண்டான். 

கார் குலுங்கத் தொடங்கி விட்டது! 


ஆஸ்பத்திரியில் – அமர்ந்து எழுந்து, அமர்ந்து எழுந்து ஒருவித பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார், ராஜதுரை! அப்படிச் செய்யும் போது வலிக்கிறதா என்பது முக்கியம். நல்லவேளையாக வலியெல்லாம் இல்லை! 

அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டிருந்தார், அந்த சாமியார். 

“என்ன… வலி இருக்கா?” 

“இல்ல சாமி…. சுத்தமா வலி இல்லை!”. 

“அப்ப எலும்புக்கு நடுவுல ‘மஜ்ஜை’ நல்லா வளர்ந்திருச்சின்னு அர்த்தம். இனி கவலைப்பட எதுவுமில்லை. ” 

“ஆமாம் சாமி… எல்லாம் உங்களால்தான். நான் இவ்வளவு சீக்கிரமா குணமாவேன்னு கனவுலகூட நினைக்கலை”. 

ராஜதுரை, சாமியாரை புகழ்ந்ததோடு அப்படியே அவர் காலிலும் விழுந்தார். 

“நல்லா இருப்பே நீ” என்று அவரும் ஆசீர்வதிக்க செல்போனில் அழைப்பொலி. 

எடுத்து, காதைக் கொடுக்கவும் – கணீரென்று ஒலிக்க தொடங்கியது – லட்சுமியின் குரல். 

“என்ன ராஜதுரை… உடம்பு எப்படி இருக்கு?” கேள்வி நலம் விசாரிக்கிற மாதிரியே இல்லை. அதில் எச்சரிக்கையும், கடுமையும் ஒளிந்து கொண்டிருந்தன! 

அத்தியாயம்-12

‘என்னதான் சாட்டிலைட், செல்போன், டி.வி.ன்னு விஞ்ஞானம் வளர்ந்தாலும், அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்கும்கிறது எப்பவும் மர்மமாகத்தானே இருக்கு?’ 

லட்சுமியின் கேள்வி ராஜதுரையை நிமிர்த்தியது.

“யாருங்க, அது ?” தெரியாதது போலவே எதிர் கேள்வி கேட்டார். லட்சுமிக்கு பற்றிக்கொண்டு வந்தது. 

“ராஜதுரை விளையாடாதே… நிஜமா உனக்கு என்னை தெரியலியா?”

“ஓ… ‘லயன்’ லட்சுமியா?” 

“என்னய்யா… பேர் சொல்ற அளவுக்கு தைரியம் வந்துடுச்சாக்கும்?”

”நிச்சயமா… அதுல என்ன சந்தேகம்? நான் விசுவாசமான பழைய இளிச்சவாய் ராஜதுரை இல்லை, லட்சுமி. மறுஜென்மம் எடுத்திருக்கிற புது ராஜதுரை. ஆமா, எதுக்கு என்னை மிரட்டுறே? வாஸ்தவமா நான்ல உன்னை மிரட்டணும்…” 

“இப்ப மட்டும் என்ன? என் மகளை கடத்தி வெச்சிக்கிட்டு மிரட்டுகிட்டுத்தானே இருக்கே… எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?” 

“என்ன? உன் மகளை நான் கடத்திட்டேனா… நல்ல கதையா இருக்கே… நீ பேசுறதை பார்த்தா உன் மக இப்ப உன்கூட இல்லைன்னு சொல்லு…”

“ராஜதுரை, இப்படி நீ சாமர்த்தியமா பேசுறதாலே என் மகளை பிடிச்ச வெச்சுக்கிட்டு என்னை பழிவாங்க நினைக்கிறது. இல்லேன்னு ஆயிடாது. அவளுக்கும், நல்லமணி ஐயா பேரனுக்கும் கல்யாணம் நடக்கக் கூடாதுங்கிறதுதான் உன் திட்டம்.நீ கூட போன்ல இந்த கல்யாணம் எப்படி நடக்குது பார்க்கலாம்னு சொல்லி இருந்தே… இப்ப அதுக்கு என்ன செய்யணுமோ செய்துட்டே…” – லட்சுமி ஒரு முடிவோடு பேசியதைக் கேட்ட ராஜதுரை, சட்டென்று செல்போனை கையால் மூடிக்கொண்டு சாமியார் பக்கம் திரும்பினார். 

“சாமி…” 

“என்னப்பா?” 

“லயன் லட்சுமி மகளை காணோமாம். அவ என்மேல சந்தேகப்படுறா…” 

“அப்படியா…?” 

“ஆமாம் சாமி… நான்தான் அவளுக்கு எதிரின்னு நினைச்சேன். எனக்கு மேல எவனோ ஒருத்தன் இருக்கான்னு இப்ப தெரியுது.” 

“நான் இல்லைன்னு மட்டும் சொல்லி போனை வெச்சிடு. மற்ற விஷயங்களை அப்புறம் பேசலாம்.” 

சாமியார் சொன்னபடியே செல்போனில் இருந்து கையை எடுத்த ராஜதுரை, “லட்சுமி… நான் இப்பவும் சொல்றேன். உன் மகளுக்கும், அந்த நல்லமணி பேரனுக்கும் கல்யாணம் நடந்தா அதை தடுக்க என்ன வேணா செய்வேன். ஏன்னா நான் உங்களால அநியாயமா பாதிக்கப்பட்டவன். ஆனா, அதுக்காக உன் மகளை கடத்தி வெச்சுதான் அதை சாதிக்கணும்கிறது கிடையாது. 

உன் மகளை நான் கடத்தலை. எனக்கும் மேல் ஒரு எதிரி உனக்கு இருக்கான்னு இப்ப நல்லா தெரிஞ்சுபோச்சு… ஆகையால் அது யார்னு கண்டுபிடிச்சு உன் மகளை வசப்படுத்துற வழியைப் பாரு. என்கிட்ட அநாவசியமா வார்த்தைகளை விடாதே. வெச்சுடட்டுமா?” – ராஜதுரை குரலில் ஒரு அநாயசம். போனை முடக்கிவிட்டு நிமிர்ந்தார். எதிரில் சாமியார் தாடியை நீவிக்கொண்டு சிந்தனையில்… 

“என்ன சாமி யோசனை?” 

“ஒண்ணுமில்ல அப்பனே… காணாம போயிருக்கிறது மகள் மட்டுமில்லன்னும் மனசுக்கு படுது.” 

“அப்படின்னா?” 

“அந்த நாகமாணிக்க கல்லும்தான்…” 

“அப்படியா?” 

“ஆமாம் அப்பனே… அது அந்த மாளிகையில் இருந்தா அதோட அதிபதிக்கு பெரிய அளவுல மனவருத்தமே ஏற்படாது. இப்ப லட்சுமிக்கு ஏற்பட்டிருக்கிறதை வெச்சி பார்க்கும் போது நாகமாணிக்கக் கல்லும் அங்கு இல்லைன்னு தான் தோணுது” 

“சாமி… இது ரொம்ப பெரிய விஷயம். கல்லும் இல்ல மகளும் இல்லைன்னா… நல்ல மணி ஐயா பேரன் பின்னி பெடலெடுத்துடுவானே?” 

“நிச்சயம்…இதோட அடுத்தகட்டம் அந்த லட்சுமி என்னைத் தேடுறதாத்தான் இருக்கும்…” 

”உங்களையா?” 

“ஆமாம்ப்பா… அவளுக்கு இப்ப என்னை நல்லா தெரியும். அவ வீட்டுக்கு போய் பாம்புகளை பிடிச்சு, அங்கே நாகமணிக்கம் இருக்கிறதை உறுதி செய்தது நான்தானே?”

“சாமி… நீங்க இதை சொல்லவே இல்லையே?”

“இப்ப நான் சொல்லி விட்டேனேப்பா…”

“அங்க எப்படி சாமி நீங்க நுழைஞ்சீங்க…?” 

“அதுவா இப்ப முக்கியம்… என் கணிப்பு சரியா… தப்பான்னு முதல்ல தெரியட்டும்…”

“அப்ப அந்த நாகமாணிக்கக் கல்லுக்கு அவ்வளவு சக்திங்களா?” 

“அது ஒரு குட்டி கிரகம்ப்பா… ஒரு கிரகமே நம்ம கையில இருந்தா நாமளும் ஒரு கிரகமாயிடுறோம் இல்லையா?” 

“சாமி இந்த மாதிரி விஷயங்கள் நம்ப நாட்டுல எவ்வளவோ இருக்குது. இருந்து இதை எல்லாம் பொய்யின்னு சொல்ற ஒரு கூட்டத்தினர் இருக்காங்களே… அது ஏன் சாமி?”

”உண்மைன்னு நம்புறது ஒருவிதின்னா, பொய்னு பேசுறதும் ஒரு விதிதான்! நம்புறவங்களுக்கு ஒரு பாதை… நம்பாதவங்களுக்கு வேறு பாதை… “

“கொஞ்சம் புரிகிற மாதிரிதான் சொல்லுங்களேன்…”

”நான் புரிகிற மாதிரிதான் சொன்னேன். ஆனா, உனக்கு எப்ப புரியணுமோ அப்பதான் புரியும். சரி நான் கிளம்புறேன்.” 

“சாமி…” 

“என்னப்பா?”

“அந்த லட்சுமியை ஒரு ஆட்டு ஆட்டினாத்தான் எனக்கும் அடங்கும்.” 

”இப்போதைக்கு ஆஸ்பத்திரியைவிட்டு கிளம்பற வழியைப் பாரு… நாகமாணிக்கம் அவளைவிட்டு விலகிட்டாலே போதும். யார் வேணுமானாலும் அவளை எது வேணுமானாலும் பண்ணலாம். ” 

சாமியார் வேகமாக அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். 

“சாமி சீக்கிரமா அந்த கல்லு அவகிட்ட இல்லைங்கிற நல்ல விசயத்தை சொல்லுங்க. அவளையும், அந்த நல்லமணி பேரனையும் கசக்கி ஜூஸ் பிழிஞ்சிட்டு மறுவேலை பார்க்கிறேன்…”

சாமியார் சிரித்துக்கொண்டே படிகளில் இறங்கினார். ராஜதுரையும் திரும்பி வந்து ஜன்னல் அருகே நின்றுகொண்டு வெளியே பார்த்தபோது, ஜன்னல் வழியாக ஆறு களங்களுக்கு கீழே பரபரப்பான சந்தடி மிகுந்த சாலை கண்ணில் பட்டது. அந்த சாலையின் கடைசியில் சாமியாரும் தெரிந்தார். ராஜதுரைக்கு ஒரு கணம் நெஞ்சடையடைத்தது. 

அதிகபட்சம் ஐந்தாவது தளத்துக்குத்தான் போயிருக்க வேண்டும்.ஆனால், கீழே முற்றாக இறங்க சாலையின் ஈடைகோடிக்கும் அவர் போய் சேர்ந்தது எப்படி என்கிற கேள்வி ராஜதுரையின் கண்களில் வியப்பாக வழியத் தொடங்கிவிட்டது. 


அம்பாரி மாளிகை… லட்சுமி குட்டிபோட்ட பூனைபோல நடந்தபடியே இருந்தாள். பிரியாவுடனான செல்போன் முயற்சிக்கு, ‘சுவிட்ச் ஆப்’ என்கிற பதிலே வந்தது. 

அதுவே லட்சுமியைப் போட்டு புரட்டி எடுக்கத் தொடங்கிவிட்டது. போலீஸ் கமிஷனருக்கு போன் போட்டு பேசலாமா என்கிற கேள்வி ஒருபக்கம்… தன் சகாக்களை விட்டே தேடினால் என்ன, என்ற எண்ணம் மறுபக்கம்… மொத்தத்தில் அவள் அவளாகவே இல்லை. 

எப்போதும் போல ராமலிங்க அய்யாவுக்கு போன் போட்டு அவரை வரச் சொன்னதில்… அவரும், அவள் அனுப்பிய காரிலேயே வந்து சேர்ந்தார். 

“என்ன லட்சுமி ரொம்பவும் பதற்றமா தெரியறியே?” 

“ஆமாம் சாமி. என் மகளையும் காணலை, அந்த நாகமாணிக்கமும் இப்ப வீட்ல இல்லை.” 

“அடடா… எப்படி இப்படி நடந்துச்சு?” 

“எனக்கு எதுவுமே புரியலை… இது அந்த ராஜதுரை வேலையா இருக்கும்னு அவனுக்கு போன் பண்ணி கேட்டேன். அவன் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சாதிக்கிறான்.” 

“அடடா… அவசரப்பட்டுட்டியே லட்சுமி. பொதுவா இந்த மாதிரி இக்கட்டான தருணங்களில் தியானத்துல உக்காரணும்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லி இருப்பேன்…” 

“முடியலை சாமி… மனசு சுடுதண்ணியா கொதிக்கும் போது அதை எப்படி ஒருநிலைப்படுத்த முடியும்?” 

“அப்பதான் படுத்தணும். அப்படி செய்தாதான் நல்ல பலன்கள் ஏற்படும்.” 

“விடுங்க சாமி… இப்ப நான் என்ன செய்யட்டும்?”

“மகளை காணோம்னு சொல்றியே… அவ உனக்கு தெரியாம அவளோட நண்பர்கள் யாரோடையாவது…?” 

“இந்த ஊரில் அப்படி எல்லாம் யாரும் இல்லை… அர்ஜுன்னு ஒருத்தன் இருக்கான். அவன் வீட்டுக்கு போன் போட்டு பேசிட்டேன். பிரியா அங்கே இல்லை.” 

“எதுக்கும் கொஞ்சம் பொறுமையா இரு. ஆமா, அப்புறமா பாம்புகளை எப்படி பிடிச்சே?” 

”அதை ஏன் கேக்கிறீங்க… யாரோ ஒரு சாமியார் அழகர் கோயில் மலைக்கு மேல கோம்பை மலைப் பக்கம் இருக்கறவராம். அவரா வந்தாரு… ஒரு பாம்புக்கு நாலு பாம்பு வீட்டுல இருந்துருக்கு… மந்திரம் போட்டே அவற்றை பிடிச்சிகிட்டு போயிட்டாருன்னா பார்த்துக்குங்களேன்….” 

“ஓ… நாகபந்தனம் தெரிஞ்சவரோ?” 

“ஆமாம் சாமி… அவரும் அப்படித்தான் சொன்னார். “

“நாகபந்தனம் தெரிஞ்சிருக்குன்னா அவங்களுக்கு திருஷ்டாந்தம், அஷ்டாங்கம், வாஸ்துன்னு பல ரகசியங்களும் தெரிஞ்சிருக்கும்.”

“ஆமா… அவர்கூட இந்த அம்பாரி மாளிகையை பார்த்துட்டு சில வாஸ்து கோளாறுகளை சொன்னாரு.”

“அப்ப அவரைக் கூப்பிடு… பிரியா இப்ப எங்க இருக்கா… எப்படி இருக்காங்கிறதை எல்லாம் திருஷ்டாந்தம் பார்த்தே சொல்லிடுவாரு…” 

“திருஷ்டாந்தம்னா…?” 

“அது ஒரு கலை, லட்சுமி. நம்ம பெரியவங்க ஏராளமான விஷயங்களை விட்டுட்டு போயிருக்காங்க. உலகத்துல எங்கேயும் அப்படி எல்லாம் பார்க்க முடியாது. என்னதான் சாட்டிலைட், செல்போன், டி.வி.ன்னு விஞ்ஞானம் வளர்ந்தாலும், அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்கும்கிறது எப்பவும் மர்மமாத்தானே இருக்கு?”

“ஆமாம் சாமி… அதுல என்ன சந்தேகம்?” 

“அந்த மர்மங்களை உடைச்சு, உண்மையைக் கண்டுபிடிக்கிறதுல நம்ம முன்னோர்கள் பலே ஆட்கள். அவங்க அதர்வணக் கலைகள்ல ஒண்ணா சொல்லிட்டு போயிருக்கிறதுதான் திருஷ்டாந்தம். அந்தம்னா முடிவு… அஷ்டாந்தம்னா எட்டுவித முடிவு… திருஷ்டாந்தம்னா எண்சாண் உடம்போட முடிவுன்னு அர்த்தம். 

ஒருத்தர் உடம்பு, அவர் கையால் எட்டு சாண்தான் இருக்கும். ஒருத்தர் உயரம் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்க நிக்கவைச்சு அளக்கணும்கிற அவசியமே இல்லை…அவங்க கையால ஒரு சாண்ங்கிறது எவ்வளவு நீளம் இருக்குதுன்னு பார்த்து அதை எட்டால் பெருக்கினா என்ன வருதோ அதுதான் அவங்க உயரம். அந்த உயரம்தான் முழு உருவம். அந்த உருவம்தான் பார்க்கும் போது தெரியுது. அப்படி பார்க்கிற நேரத்தை வைச்சே அவங்க மனநிலை, உடல்நிலைன்னு எல்லாத்தையும் சொல்லிடலாம்.” 

”சாமி… இப்படி எவ்வளவு விஷயங்கள் சாமி இருக்கு?”

“அது கிடக்கும்மா ஒரு கடல் அளவுக்கு… நீ அவரை கூப்பிடுற வழியைப் பாரு. எனக்கும் அவரை பார்க்க ஆசையா இருக்கு…” 

“இப்பவே சாமி…”-லட்சுமி அடுத்த நொடியே சிட்டிபாபுவை கூப்பிட்டு பேசினாள். 

”சிட்டி… நேத்து பாம்பு பிடிக்க வந்தாரே ஒரு சாமியார்…” 

“ஆமாங்க மேடம்.” 

“அவர்கூட அழகர் மலைக்கு மேல கோம்பை மலைங்கிற இடத்துல இருக்கிறதா சொன்னாருல்ல?” 

“ஆமாம் மேடம்… இப்ப அவரை நான் கூட்டிக்கிட்டு வரணுமா?”

“ஆமாம்…ஓடிப்போய் முதல்ல கூட்டிக்கிட்டு வா.”

சிட்டிபாபுவை விரட்டிவிட்டு திரும்பியவள், சோர்ந்துபோய் சோபாவில் அமர்ந்தாள். முதல்முறையாக அவள் கண்களில் கண்ணீரின் திரட்சி. 

“அழாதே லட்சுமி… உன் மாதிரி பெண்கள் அழக்கூடாது.” 

“முடியலை சாமி… என் பிரியா இப்ப எங்கே இருக்காளோ… எப்படி இருக்காளோ?” 

“நிச்சயம் நல்லபடியா இருப்பா. ஒருவேளை அவகிட்டதான் அந்த நாகமாணிக்கம் இருக்குன்னா, நீ கவலைப்படும்படியா அவளுக்கு எதுவும் நடக்காது. தைரியமா இரு.” 

ராமலிங்க அய்யா சொன்னது லட்சுமிக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது! 


அது ஒரு சுமாரான லாட்ஜ்! வரவேற்பில் மேலும் கீழுமாக பார்த்துவிட்டுதான் அறை தந்தார்கள். ஆனாலும், ஏதோ ஒன்று பிரியாவை கேள்வியே கேட்கவிடாமல் தடுத்தது. 

அவர்கள் வரையில் பிரியா ஒரு வருமானவரி அதிகாரி போல உணரப்பட்டாள். 

“மேடம் ஒரு ஆபீசருன்னு நினைக்கிறேன். திடீர் சோதனைக்கு வந்துருக்காங்க போல இருக்கு… பெரிய ஓட்டல்ல தங்குனா பார்ட்டிங்களுக்கு தகவல் போயிடும்ல…”

அவர்கள் அப்படி நினைக்க, உண்மையில் நாகமாணிக்கம்தான் காரணம் என்பது புரியாத புதிர். 

பிரியா தங்கிய அறை அவளை மூக்கை சிணுப்ப வைத்தது. இருந்தும் சகித்துக் கொண்டவள், “அர்ஜுன்… இப்பவே நாம ஒரு பாம்பு புத்து இருக்கிற இடத்துக்கு போறோம்” என்றாள். 

“எதுக்கு பிரியா?” 

“நாக மாணிக்கக் கல்லோடு போவோம். இதோட ஈக்திக்கு பாம்புங்க இருந்தாதான் தேடிவருமே?”

”ஓ… இப்படி ஒரு ‘டெஸ்ட்’ சங்கதி இருக்குதா?”

“ஆமாம்… என் வீட்டுக்குள்ள பாம்புங்க எதனால் வந்ததுன்னும் தெரிஞ்சிடும்தானே?”

“அதுசரி… வெளியில போயிட்டு வரும்போது உங்க ஆட்கள் யாராவது பார்த்துட்டா?”

“தலைக்கு தொப்பி, கண்ணுக்கு கண்ணாடி, இதுபோக கழுத்துவரை துப்பட்டாவால் மூடிக்கப் போறேன். அப்படி எல்லாம் பார்க்க முடியாது. மீறி பார்த்தாலும் பாதகமில்லை. நீ கிளம்பு…” 

அவள் அவனை பிடித்து இழுத்துக்கொண்டு புறப்பட்டாள். அவளது ஜீன்ஸ் பேண்டு பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது. அந்த நாகமாணிக்கம்! 

‘பைக்’கில்தான் அவளை அழைத்துக்கொண்டு போனான், அர்ஜுன். போகும் வழியில் ஒரு மரத்தடியில் எட்டடி உயரத்துக்கு பாம்புப் புற்று. அதை பார்க்கவும், வண்டியை ஓரம்கட்டிவிட்டு இருவரும் இறங்கினர். 

புற்றுக்கு சற்று அருகில் போய் அமர்ந்துகொண்டனர். நேரமும் உருள ஆரம்பித்தது. 

“பிரியா… இங்கே பாம்பு வரலைன்னா, இந்த நாகமாணிக்கம் போலின்னு நினைப்பியா?”

“அப்படி இல்லை… இதுக்கு தனியா எந்த சக்தியும் இல்லேன்னு சொல்வேன்.” 

“இதுக்கு பாம்பு வந்துட்டா?”

அவன் கேட்ட அதே நொடி – ஒரு துவாரத்தில் பாம்பு ஒன்று தலையை உயர்த்தியது! 

– தொடரும்…

– யாரென்று மட்டும் சொல்லாதே…  (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *