கலைஞன் தியாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 1,575 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாராயண பிள்ளைக்கு வயது எழுபது. அவனுடைய முகத்தில் காலத்தின் கோடுகள் கீறப் பட்டிருந்தன. இளமையின் மேடு கரைந்து போய்ப் புஷ்டியின் சின்னம் தகர்ந்து கன்னங்கள் குழிந் திருந்தன. ஆனாலும் அவனுடைய கைக்கு மட்டும் பழைய சக்தி முற்றும் போய்விடவில்லை. மண்ணைக் கொண்டு அபூர்வ ரூபங்களைச் சிருஷ்டிக்கும் கலைத்திறன் அழிந்துவிடவில்லை. அது அவன் கைவிரல் களோடு பிறந்தது போலும்.

வெறும் மண்ணை உருட்டித் திரட்டிக் காய வைத்து வர்ணந் தீற்றிவிட்டால் அதற்கு ஒரு களை – ஒரு பொலிவு – ஏற்படும் மாயத்தை அவனிடம் காணலாம். பண்ணுருட்டியில் அவனுடைய பொம் மைகளுக்குக் கிராக்கி அதிகம்.

ஒரு மண் அகலில் வர்ணத்தைக் கரைத்து வைத்துக்கொண்டு ஒரு பொம்மைக்கு அழகு செய்து கொண்டிருந்தான் கிழவன். சில மாதங்கள் க்ஷவரம் பண்ணிக்கொள்ளாமையால் வளர்ந்திருந்த தாடியும் மீசையும் அவனுடைய முகத்தில் பழமையின் தோற் றத்தை மிகைப்படுத்தின. மங்கிக் குழிந்த கண்களுக் கும் கைவிரல்களுக்கும் இடையே ஏதோ மின்சாரந் தான் வேலை செய்ய வேண்டும்.

“அப்பா” என்று கூப்பிட்டுக்கொண்டே அங்கே ஓர் இளைஞன் தோன்றினான்.

“முருகா, அதை முடித்துவிட்டாயா?” என்று அன்பொழுகிய குரலிலே கேட்டான் கிழவன்.

“காய வைத்திருக்கிறேன். இதற்குள் காய்ந் திருக்கும். இதோ எடுத்து வருகிறேன்” என்று ஓடிப்போய் ஒரு பொம்மையைக் கொண்டுவந்து கிழவன் முன் வைத்தான் இளைஞன்.

அதைக் கிழவன் பார்த்தான்; கண்ணை மலர்த்தி நன்றாகப் பார்த்தான். ஓர் அழகிய இளநங்கையின் உருவம் அது. அவளது ஒய்யாரச் சிரிப்பின் சோபையை அது நன்றாக எடுத்துக் காட்டியது. கிழக் கலைஞன் அந்த வர்ண விசித்திரத்திலே புதைந்திருந்த ஆற்றலை அளவிட்டுப் பார்த்தான். அவனுடைய உள்ளத்திலே பலபல உணர்ச்சிகள் உண்டாயின. ஒரு பெருமூச்சு விட்டான். அதில் எத்தனை உஷ்ணம்!

“நீ நன்றாக இருக்கவேண்டும்! உனக்கு எல்லாவித வாழ்வும் கிடைக்கவேண்டும்!” என்று கிழவன் வாழ்த்தத் தொடங்கினான்.

“போதும் அப்பா; எனக்கு வேலை இருக்கிறது. நான் போகிறேன். அண்ணன் ஒரு வேலை சொன்னான்; செய்ய வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே முருகன் வீட்டின் முற்றத்திற்குப் போய்விட்டான்.

பொம்மைக்காரக் கிழவனுக்கு முருகன் பிள்ளை யல்ல. அவன் ஒரு வளர்ப்புப் பிள்ளை. கிழவனுக்குப் பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். முருகனுக்கு வேலையிடும் ‘அண்ணன்’ அவன் தான்.

கிருஷ்ணன் நல்ல குணமுடையவனாகத்தான் இருந்தான். தன்னுடைய கிழத்தந்தையின் மதிப்பையும் கலைத் திறமையையும் அவன் நன்றாக உணர்ந் திருந்தான். அந்தக் கலையையே – தொழிலையே – அவனும் கற்றுக்கொண்டான். உண்மையில் கிருஷ்ண னுக்குக் கலைத்திறமை வரவில்லை ; கைத்தொழில் தான் வந்தது. அவனும் பொம்மை பண்ணினான் ; விற்றான்; பணம் ஸம்பாதித்தான். ஆனாலும் அவன் உண்டாக்கின பொம்மைகளில் ஜீவ ஒளி ததும்ப வில்லை. இயந்திரத்தினால் ஒரே அச்சாக வார்க்கப் பட்டவை போல் அவை தோற்றின. ஒரே மண்தான்; ஒரே வர்ணந்தான். ஆனாலும் அவனுடைய கையில் வெறும் மனிதநாடி ஓடிற்றே யொழிய, ஒரு கலைஞனது நாடி ஓடவில்லை.

கிழவன் சில சமயங்களில் தன் குமாரனுடைய பலஹீனத்தை – கலைத் திறமையில்லாத பல ஹீனத்தை – நினைத்து வருந்துவான். ‘ஜீவனத்துக்கு ஏதாவது வழியிருந்தால் போதுமா? மண்ணைப் பொம் மையாக்கி வெறும் பணத்துக்கு விற்றுவிடும் தொழி லோடு நின்று விடவா இவன் பிறந்தான்? பொம்மை களுக்கு விலை, வாங்குபவர்களுடைய உள்ளமல்லவா? அதைப் பறிகொடுத்துவிட்டுப் பொம்மைகளை வாங்கும்படி செய்வதல்லவா கலைஞனுடைய கடமை!” என்று அவன் எண்ணி எண்ணி உள்ளம் குலைந்தான். கிருஷ்ணனுக்கோ வயது முப்பது. இனிமேல் அவன் ஒரு கலைஞனாக மாறுவதென்பது சொப்பனத்திலும் இல்லை. நம்முடைய பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது’ என்ற கவலையில் கிழக்கலைஞன் மூழ்கியிருந்தான்.

இந்தக் கவலைக்கடலிலிருந்து அந்தக் கிழ உள்ளத்தை மீட்டு நம்பிக்கை மூட்டினான் முருகன். காளைக்கன்றைப் போல அவன் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தான். அவனுடைய கைவிரல்கள், வஸந்தகாலத்தில் தென்றற் காற்றில் ஸதா அசைந்து கொண்டிருக்கும் இளந்தளிர்களைப் போலத் துரு துரு வென்று துடித்துக்கொண்டிருந்தன. அவன் கிழவ னிடம் சிஷ்யப் பிள்ளையாகச் சேர்ந்தான். “கூலி வேண்டாம்; சோறு போட்டுத் தொழில் சொல்லிக் கொடுத்தால் போதும்” என்று அவன் அடைக்கலம் புகுந்தான். அவன் முகத்தில் சுறுசுறுப்பின் ஒளி தவழ்ந்தது. நாராயண்பிள்ளை அவனை ஏற்றுக் கொண்டான். அன்று முதல் இந்தப் பத்து வருஷ காலமாக முருகன் கிழக்கலைஞனுடன் இருந்து வருகிறான். நாளுக்கு நாள் இருவரிடையே உள்ள அன்பும் முதிர்ந்து வந்தது. கிழவன் தன் கலைத் திறமையை உலகில் நிலைநிறுத்துவதற்கு ஏற்ற கருவி யொன்று அகஸ்மாத்தாகக் கடவுள் கிடைக்கச் செய்தார் என்ற நம்பிகையைக் கொண்டான். முருகன் கிழவனுடைய பிள்ளையைப் போலவே இருந்து வந்தான். “அப்பா” என்றே அழைத்து வந்தான். அவன் இப்பொழுது அக்குடும்பத்தில் ஒருவனாகி விட்டான்.

மாசுமறுவற்ற கிருஷ்ணனது உள்ளத்திலே ஒரு சிறு கறுப்புத் தோன்றலாயிற்று. ‘எங்கிருந்தோ வந்தான்; கூலிகூட வேண்டாம், சோற்றுக்கு வேலை செய்வேனென்றான். இப்பொழுது நம்முடைய அப்பனைத் தன்னுடைய அப்பனாக்கிக்கொண்டான். இந்தக் கிழவனும் அவனை ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பேசுகிறான். நம்மைக் காட்டிலும் அந்தப் பயலிடத்திலே அபாரமான வாஞ்சை! இதெல்லாம் எப்படியாகுமோ, எங்கே கொண்டுபோய்விடுமோ!’ என்று அவன் யோசனை செய்யத் தொடங்கினான். பொறாமைத் தீயின் ஒரு பொறி அவன் உள்ளத்தில் தோன்றியது. கலைவன்மையில்லாத அந்த உள்ளத்தின் பலஹீனம் – தாழ்வுணர்ச்சி – அந்தப் பொறியைச் சுலபத்தில் மூட்டிவிட்டது.

முருகன், தொழில் பழகவந்தவன் கலையையே ஸ்வீகரணம் செய்து கொண்டான். அவனுடைய கை கிழவன் கையை விட அதிவேகமாக ஓடியது. கிழக்கலைஞனுக்குக் கற்பனை அதிகம்; ஆனால் அந்தக் கற்பனை முழுவதையும் உருவாக்குவதற்கு அவனுடைய கைவிரல்கள் ஓடவில்லை ; வயதின் கனம் பழைய முறுக்கைத் தளர்த்திவிட்டது; ஆனாலும் மனத்துக்கு வயசு ஏது? அதன் கற்பனை மாத்திரம் உச்சஸ்தாயியிலேதான் சென்றது. இப்பொழுது அந்தக் கற்பனை வெறுங்கனவாகவே இருந்து மங்கி விடாதபடி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இளங்குமரனாகிய முருகன், கிழவனது உள்ளத்தோடு தன் உள்ளத்தை வைத்து உணர்ந்தான். அந்த உள்ளத்தில் உண்டாகிய கற்பனைகளை அவன் கைகள் உருவாக்கிக் கண்ணுக்குக் காட்டின. கிழவனுடைய கற்பனை உருவங்கள் முருகனது கையிலிருந்து உண்மையான உருவங்களாக வெளிப்பட்டன: கிழவன் நினைத்தான்; அதை முருகன் செய்தான். இத்தகையவனைக் கிழவன் தன் உயிரைப் போலப் பாவித்து அன்பு செய்தானென்றால் அது யாருடைய குற்றம்? இதெல்லாம் பொறாமைத் தீயின் புகையினால் மங்கியிருந்த கிருஷ்ணபிள்ளையவர்களுடைய கண் களுக்குப் புலனாகவில்லை.

2

நவராத்திரி நெருங்கிக் கொண்டிருந்தது. நாராயண பிள்ளையின் வீட்டுப் பொம்மைகள் அதிக மாகச் செலவாயின. முருகன் செய்த பொம்மை களுக்கு அதிக விலை கிடைத்தது. சென்னப்பட்ட ணத்திலிருந்து மொத்தமாக ஐந்நூறு ரூபாய்க்கு ‘ஆர்டர்’ வந்தது. அந்த வீட்டில் உள்ள யாவரும் முயன்று வேலை செய்து வேண்டிய பொம்மைகளைச் செய்தார்கள். கிழவன்கூட இருமிக்கொண்டே தன்னால் இயன்றதைச் செய்தான். முருகனும் செய்தானென்று சொல்வது மிகை. கிருஷ்ணபிள்ளை அதிகமாக வேலை செய்தானென்று சொல்வதற்கில்லை; வேலை வாங்கினானென்றுதான் சொல்ல வேண்டும். கிழவனைக்கூட முடுக்கினான். ”பணம் வரும்போது வேலை செய்தால் அப்புறம் ஓய்வு கிடைக்கும்” என்று சொல்லிச் சொல்லி வேலை வாங்கினான்.

பொம்மைகளையெல்லாம் பெட்டிகளில் நன்றாக அடக்கம் செய்து ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ப் பட்டணத்துக்கு அனுப்பினான். அவனோடு முருகனும் சென்றிருந்தான். முருகனால் தனக்குப் பணலாப மென்பதை அன்று நன்றாக உணர்ந்த கிருஷ்ணனுக்குச் சிறிது உள்ளம் குளிர்ந்தது.

“தம்பி, உனக்குக் கல்யாணம் செய்ய வேண்டாமா?” என்று அவன் முருகனைக் கேட்டான்.

இந்தமாதிரியான இனிய மொழிகளை அவனிட மிருந்து முருகன் என்றும் எதிர்பார்த்ததே இல்லை. இவ்வார்த்தைகள் காதில் விழுந்தபோது ஏதோ அமுத மழை பொழிந்தது போல இருந்தது முருகனுக்கு. கல்யாணப் பேச்சுக்காக அவன் சந்தோஷிக்கவில்லை; தன் அண்ணன்’ என்றும் இல்லாதபடி அன்போடு பேசியதுதான் அவன் மகிழ்ச்சிக்குக் காரணம்.

“அப்பன்கூட அடிக்கடி சொல்வதுண்டு, எங்கே யாவது நல்ல பெண்ணாகப் பார்த்துக் கட்ட வேண்டுமென்று” என்று கிருஷ்ணன் சொன்னான்.

முருகன் புன்னகையிலே நாணத்தைக் கலந்து காட்டினான்.

ஸ்டேஷனிலிருந்து இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். மாலை வேளை. கடைவீதி வழியே வந்தார்கள். அப்பொழுது திடீரென்று, “முருகா! முருகா! இவ்வளவு காலமாக உன்னை எங்கெங் கெல்லாம் தேடினேன் ” என்று ஒரு குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கறுத்துப் போய் வற்றலாகியிருந்த தேகமும், சில செருப்புகளை வைத்திருந்த கைகளும், நீர்தோன்றித் ததும்பிக் கொண்டிருந்த கண்களும் உடைய உருவத்தோடு ஒருவன் நின்றான். அவன் ஒரு சக்கிலியன் ; செருப்புத் தைத்து ஜீவனம் செய்கிறவன். பண்ணுருட்டிச் சேரியிலே ஒரு வருஷமாக வாழ்கிறவன். கிருஷ்ண னுக்கு அவன் – சக்கிலியன் என்பது தெரியும். முருகனுக்குத் தெரியாது.

தெரியாதென்று சொல்வதற்கில்லை. கிருஷ்ண பிள்ளையின் தம்பியாக வாழ்ந்த முருகனுக்குத் தெரியாதே யொழிய, அதற்கு முன் இருந்த முருகனுக்கு நன்றாகத் தெரியும். இவன் திருநெல் வேலிக்காரனென்பதை அவன் நெஞ்சு உணரும்.

இருவரும் நின்றுவிட்டார்கள். சக்கிலியன் ஓடிவந்தான். முருகனுக்கு உடம்பில் நடுக்கம் உண்டாயிற்று. கிருஷ்ணனுக்கு ஒன்றுமே தோன்ற வில்லை .

“ஐயோ! உன்னைப் பிரிந்த பிறகு உன் அம்மா உன்னை நினைந்து ஏங்கி உயிரை விட்டுவிட்டாளே! நீ என்னோடு இருந்தால் இந்த வயஸு காலத்தில் நான் இப்படிக் கஷ்டப்படுவேனா!” என்று அவன் தெலுங்கிலே கதறினான். அவன் வீட்டுப் பாஷை அது.

இந்த நாடகக்காட்சியின் பொருள் கிருஷ்ணனுக்குப் புரியவேயில்லை; புரிந்தாலுங்கூட அதை அவனால் நம்ப முடியவில்லை. முருகன் அந்தச் சக்கிலியன் மகனா-?

“என்னடா உளறுகிறாய்?” என்று கிருஷ்ணன் அவனைக் கேட்டான்.

“ஐயோ சாமி; இவன் என் பிள்ளை. இவனுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன்! இங்கே இவன் இருக்கிறது முந்தியே தெரியாமற் போச்சே!” என்று அவன் புலம்பினான். அவனுடைய வாத்ஸல்யம் தடையில்லாமல் வழிந்தோடியது. ஸந்தோஷமும் அன்பும் கலந்து தோன்றின. ஆனால் அவற்றின் விளைவாக ஒரு பெரிய விபத்து நேரப் போகிற தென்பதை அவன் உணரவில்லை.

கிருஷ்ணன் பேய்பிடித்தவன் போலானான். கையிலே வைத்திருந்த குடையே அவனுக்கு ஆயுத மாயிற்று; “அட படுபாவி சண்டாளா! சக்கிலிய நாயே என் குடித்தனத்துக்கு உலை வைக்க வந்த பாதகா! என் வீட்டிலே நல்ல சாதிபோல வந்து வளர்ந்து எங்களை ஏமாற்றிய துரோகீ…” அவ னுடைய பொறாமை, சாதியிறுமாப்பு, அவமானம் முதலிய பல உணர்ச்சிகளும் சேர்ந்து கொண்டன. வாயிலிருந்து வந்த வசைவெள்ளத்துக்குக் கரை போடுவார் இல்லை. முருகனை அடித்தடித்துக் குடை பிய்ந்துவிட்டது. முருகன் மேனி முழுதும் ரத்தமயம். ஒரே கூட்டம் கூடிவிட்டது.

“ஐயோ பாவம்! எத்தனை நல்ல பிள்ளை! இவனைச் சக்கிலியன் என்று சொல்வது பொய். இதைத் தீர விசாரிக்க வேண்டும்” என்று சிலர் சொன்னார்கள்.

“காலம் கலிகாலம். இந்தப் பாவம் ஏழேழு ஜன்மத்துக்குந் தீராது. எவ்வளவு துணிச்சலப்பா இந்தப் பயலுக்கு ! சக்கிலியப் பயல் ! சாதியை மறைத்து மேல்சாதியாரோடே உண்டு உடுத்து வாழ்வதென்றால்? இதைவிடக் கொலை செய்து விடலாமோ!”

“இந்தக் கிழட்டு மனிசன் இப்போதுதான் பிள்ளை யுறவு கொண்டாட வேணுமா? எங்கேயோ சௌக் கியமாக இருந்தால் சரியென்று கண்காணாமல் தொலை கிறதுதானே. இப்போது இந்தப் பிள்ளையினுடைய சுகவாழ்வுக்கே விஷம் வைத்துவிட்டானே.”

“இந்தப் பயலை இதோடு விடப்படாது. கணுவுக்குக் கணு கழிக்கவேண்டும்!”

இப்படி மகாஜனங்கள் இந்தப் பரிதாப நாடகத் தைப்பற்றி விமரிசனம் வெளியிட்டுக் கொண்டிருந் தார்கள்.

கிருஷ்ணன், மூர்ச்சை போகும் வரையில் முருகனை அடித்துவிட்டு வெறி பிடித்தவன் போல வீட்டிற்கு ஓடினான். ஒரே அடியாக அந்தக் கிழவனை – தன் தகப்பனை – அடித்துக் கொன்றுவிடு வதுபோன்ற ஆத்திரம் வந்தது. அவன் தானே அந்தப் பயலை வீட்டிலே சேர்த்து வளர்த்தான்? பிள்ளையைப் போலக் கொண்டாடினான்? பிள்ளையைக் காட்டிலும் அதிகமாக வாஞ்சை வைத்தான்? தன்னைக்கூட அலக்ஷியம் செய்தான்? வேண்டும்! நன்றாக வேண்டும் ! – பொறாமைத்தீயின் கொழுந்தி லிருந்து எழுந்த எண்ணங்கள் இவை. அவன் முருகனது கலைத்திறமையை மறந்தான். அவனால் தனக்கு உண்டான லாபத்தை மறந்தான். முருகன் பண்ணிய பெரிய பாதகத்துக்குக் கிழவன் கூட உடந்தை யென்றே கிருஷ்ணன் எண்ணினான். “இனிமேல் கிழவன் முருகனைப் பாராட்டமாட்டான்’ என்று எண்ணியபோது கிருஷ்ணனுக்கு ஒரு வகையான ஆறுதல் உண்டாயிற்று. நெடு நாளாக இருந்த ஒரு பகைவனை வெற்றி கொண்டாற் போன்ற ஆறுதல் அது.

சக்கிலியக் கிழவன், மூர்ச்சை போட்டு விழுந்த தன் மகனை – இனிமேல் முருகன் அந்தச் சக்கிலிய னுக்கு மகன்தானே? – மெதுவாக எடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்து மெல்ல மெல்லக் குடிசைக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்கு விஷயம் விளங்கியது; “ஐயோ! நான் மகா பாவி! என் அருமை மகனுக்கு வந்த வாழ்வையெல்லாம் போக்கி விட்டேனே!” என்று அழுதான். இனிமேல் அழுவ தால் ஆவதென்ன?

கிருஷ்ணன் தலைவிரி கோலமாக ஓடிவந்தான். கிழவன், முருகனையும் கிருஷ்ணனையும் எதிர்பார்த்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தான். “நீ நாசமாய்ப் போக! உன்னால் அல்லவா இந்தக் குடித்தனத்துக்கே பழி வந்தது? அந்தப் பயலுக்கு எத்தனை இடங்கொடுத்தாய்?” என்று உறுமினான் கிருஷ்ணன். இடி இடித்தது போல் இருந்தது கிழவனுக்கு. இவ்வளவு தூரம் மரியாதை தப்பிக் கிருஷ்ணன் பேசியதேயில்லை.

“என்னப்பா சங்கதி?” என்று மெதுவாகக் கேட்டான் கிழவன்.

“என்னவா? நீயும் நானும் என் குழந்தைகளும் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து செத்துப் போக வேண்டியது தான். அந்தச் சக்கிலியப் பயல் சாதியைக் கெடுத்துவிட்டான். படுபாவி! எங்கேயோ சனியன் மாதிரி வந்து சேர்ந்தான்.”

கிழவனுக்குக் கலக்கமாக இருந்தது; ஒன்றும் தெளிவாகவில்லை.

“சக்கிலியப்பயலை இத்தனை வருஷங்களாக வீட்டிலே வைத்துச் சோறு போட்ட பாவத்தை இனி எப்படித் தொலைப்பேன் !” என்று தலையிலே அடித்துக்கொண்டு அழுதான் கிருஷ்ணன்.

கிழவன் தன்னை மறந்தான். மயக்கம் போட்டு விழும் நிலையில் இருந்தான். வீட்டுக்குள்ளிருந்து எல்லோரும் வந்து விட்டார்கள். மாமன், மச்சான் முதலிய உறவின் முறையினர் வந்தார்கள்.

கிழவன் கண்ணை மூடிக்கொண்டான். அவனுடைய நெஞ்சு அடைத்துக்கொண்டது. எந்த உலகத்திலே இருக்கிறோமென்ற நினைவையே இழந்தான். பேயறைந்தாற் போன்ற மதிமயக்கம் அவனுக்கு உண்டாயிற்று.

3

கிருஷ்ணபிள்ளை பணக்காரனாகி விட்டான் ; ஆகையால் அவன் சாமிக்குப் பூசை போட்டும் வேறு பல சாங்கியங்கள் செய்தும் மறுபடியும் சாதியிலே சேர்ந்துகொண்டான். அவனுடைய உள்ளத்திலே பொறாமைப் பேயின் கடைசி விருப்பம் ஒன்று இருந்தது. இந்தப் பயல் நம் வீட்டிலே கற்றுக் கொண்ட தொழிலினால் லாபம் சம்பாதிப்பான். அப்படிச் செய்யும்படி விடக்கூடாது. இவன் கையை முறித்துப் போட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தொழிலையே விட்டுவிடும்படி செய்ய வேண்டும்’ என்ற சிந்தனை அவனுக்கு எழுந்தது. அதற்குரிய வழி தேடலானான்.

பாவம்! கிழவன் உயிரற்ற பிணமாகிவிட்டான். தன் ஆருயிர் முருகனை இழந்தான். அவன் செய்தது மகாபாதகமென்பதில் கிழவனுக்குச் சிறிதேனும் ஸந்தேகமேயில்லை. அந்த விஷயத்தில் அவனுக்கு எந்தமாதிரி தண்டனை விதித்தாலும் விதிக்கலாம். இப்படி அவனுடைய சாதாரண உள்ளம் எண்ணியது. அவனுக்கு மற்றோர் உள்ளமும் உண்டு. அது கலைஞனது உள்ளம். ‘ஐயோ ! எத்தனை அருமையான திறமையுடையவன்! அவனை இழப் பதைவிட இந்த உலகத்தையே இழந்துவிடலாமே. என்னுடைய வித்தைக்கு – கைத்திறமைக்கு – அவன் தானே வாரிசு? அவன் இல்லாவிட்டால் நான் எப்படி வாழ்வேன் ! நான் எதற்காகத்தான் உயிரோடு இருக்க வேண்டும்? என் கற்பனை அவன் கையிலேயல்லவா உருவெடுக்கும்? இனி அவனைப்போல் யாரைப் பார்க்கப் போகிறேன்” என்ற எண்ணம் அதில் எழுந்தது. முதல் எண்ணத்திலே சாதியும் ஸம்பிர தாயங்களும் அவனைப் பயமுறுத்தின. இரண்டாவது எண்ணத்தில் உண்மையன்பும்,கலைப்பித்தும் அவனைச் சோகக்கடலில் அழுத்தின.

கிருஷ்ணன் தனக்கு வேண்டிய சக்கிலியன் ஒருவனோடு சேரிக்குள் புகுந்தான். முருகன் இருக்கும் குடிசைக்கு அருகில் சென்று எட்ட நின்றான். கூட வந்தவன் முருகனை அழைத்து வந்தான். அவன் வெளியே வந்தவுடன் கிருஷ்ணனைக் கண்டான்; திடுக்கிட்டான்; “அண்ணே, அப்பன் சௌக்கியமா?” என்று கேட்டான் .

“சீ! கழுதை! அண்ண னாவது அப்பனாவது! சக்கிலிய நாய்க்கு என்ன துணிச்சல்! என்னை இனிமேல் அப்படிக் கூப்பிடாதே!” என்று சீறிவிழுந் தான் கிருஷ்ணன்.

தன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாக அடித்துப் போட்டதோடு கிருஷ்ணனது கோபம் நிற்கவில்லை யென்பதை அந்தப் பேச்சிலிருந்து முருகன் உணர்ந்து கொண்டான். “அண்ணே” என்று கூப்பிடாமல் பின் எப்படிக் கூப்பிடுவதென்று அவன் மனத்தில் தோன்றவில்லை. தட்டுத் தடுமாறினான்.

“உங்கள் தகப்பனார் சௌக்கியமாக இருக்கிறார்களா?” என்று மரியாதைப் பாஷையிலே கேட்டான். கேட்கும்போது துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

“நாயே! அதெல்லாம் உனக்கு எதற்கு? போதும் க்ஷேம் விசாரணை / இங்கே உனக்கு ஓர் எச்சரிக்கை செய்வதற்காக வந்தேன். கேள்.”

“சொல்லுங்கள்” என்று நடுங்கிக்கொண்டு பேசினான் முருகன்.

“எங்கள் அப்பன் மேல் ஆணை. இனிமேல் நீ மண்பொம்மை செய்யக்கூடாது. செய்தால் உன் கையை ஓடித்துச் சரியான தண்டனை விதிப்பேன். எங்கள் வீட்டுச் சொத்து அது. அது உனக்குப் பாத்தியம் இல்லை. நீ பொம்மை பண்ணி லாபம் ஸம்பாதிக்கக்கூடாது; தெரிகிறதா?” என்று அதிகார தோரணையில் கிருஷ்ணன் கூறினான்.

முருகன் மரியாதைக்குப் பயந்தவன். ஏதோ சிறுபிள்ளைத்தனத்தால் தன் சாதியை மறைத்து அவர்கள் வீட்டிலே சேர்ந்துகொண்டான். அதைத் தவிர அவனிடத்தில் வேறு குற்றம் ஒன்றும் இல்லை. தான் பட்ட அடிகளெல்லாம் தான் செய்த குற்றத் திற்கு வேண்டிய தண்டனையே என்பதே அவனுடைய தீர்மானம். ஆனாலும் அந்தக் கிழவனை – “அப்பனை – அவன் எப்படிப் பிரிந்திருப்பான்? இதுதான் பெரிய விஷயம். கிழவனுக்கு எப்படி முருகனைப் பிரிந்திருக்க முடியவில்லையோ அப்படியே முருகனுக்கும் தன் ‘அப்பனைப் பிரிந்திருக்க முடிய வில்லை. தெய்வமும் குருவும் தந்தையும் தாயும் எல்லாம் அந்தக் கிழவனே என்று அவன் நம்பி யிருந்தான். இப்பொழுதோ கிழவன் உயர்ந்த சாதியான்; தான் தீண்டாச்சாதி. இனிமேல் எப்படி அப்பனைப் பிரிந்து வாழ்வது!

பொழுது போகவேண்டுமே. அதற்காகத் தன் சொந்தத் தகப்பனைக்கொண்டு வர்ணம் வாங்கிவரச் சொல்லிச் சில பொம்மைகளைச் செய்தான். அவை களைச் செய்தபோதெல்லாம் தன் கலைத்திறமை யையும் அந்தப் பொம்மைகளின் அழகையும் பார்த்து வியந்து பாராட்டி அன்போடு தடவிக்கொடுக்கும் கிழவனை நினைந்து உருகுவான் ; ‘ஐயோ! அந்த வாழ்க்கை சொப்பனம் போல் அல்லவோ போய் விட்டது! தெய்வமே!’ என்று தனியே இருந்து நெக்குருகிக் கரைந்து புலம்புவான்.

அவனுடைய சொந்த அப்பன் அவனுக்குச் செருப்புத் தைக்கக் கற்றுக் கொடுத்தான். அதையும் முருகன் சுலபமாகக் கற்றுக்கொண்டான். அதிலும் ஓரளவு அவனுக்குத் திறமை உண்டாயிற்று.

பொம்மை பண்ணுவான்; மிகவும் சிரமப்பட்டுப் பண்ணுவான். அவன் தகப்பன் அவைகளை விற்கலாமென்று சொல்வான். முருகனுக்கு விற்க மனம் வருவதில்லை. “எங்கள் அப்பனுக்குக் காட்டாத பொம்மை மனிதர் கைக்குப் போகக்கூடாது” என்று சொல்வான்.

“அப்படியானால் நீ எதற்காகக் காசைச் செல வழித்து வர்ணம் வாங்கி இதெல்லாம் செய்கிறாய்? அந்த நேரத்தில் நாலு செருப்புத் தைத்தாலும் லாபம் கிடைக்குமே” என்பான் பெற்ற தகப்பன்.

“அதிலே எனக்குப் பொழுது போக்கும் ஆனந்தமும் உண்டு” என்று சொல்லிப் பலபல வென்று கண்ணீர் உதிர்ப்பான் முருகன்.

தகப்பனுக்கு அவனுடைய கலைப்பித்து விளங்க வில்லை.

இந்த நிலையில் பொழுது போக்குக்காகவும் ஆறு தலுக்காகவும் செய்து வந்த கலைவிளையாட்டின் வாயில் கூட மண்விழும் காலம் வந்துவிட்டது. கிருஷ்ணன் ஆணையிட்டுத் தடுக்கிறான்.

“அண்ணே , நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தண்டனை மட்டும் வேண்டாம். நான் வியாபாரத்திற்காகப் பொம்மைகள் செய்வதேயில்லை. ஏதோ பொழுது போக்குக்காகச் செய்கிறேன்.”

“சீ படவா! மறுபடியும் அண்ண ன் முறையா? பொழுது போக்குக்குப் பொம்மை செய்ய வேணுமோ? செருப்புத் தைக்கிறதுதானே?”

“அதுவுந்தான் செய்கிறேன். ஆனாலும் பொம்மை செய்யாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்.”

“பைத்தியம் பிடித்து ஊரூராய் அடிபட்டு உதை பட்டுத் திரியேன்! அப்படித் திரிந்தால் கூட உன் பாவத்துக்குத் தண்டனை ஆகாது.”

“நான் பொம்மைகளைப் பண்ணுவதில் உங்களுக்கு என்ன தடை? அதனால் உங்களுக்கு நஷ்டமில்லையே. நான் பண்ணுகிற பொம்மைகளை விற்று விடுவேனென்ற பயம் உங்களுக்கு இருந்தால் அவைகளை நீங்களே எடுத்துக்கொண்டு போய் விடுங்கள்.”

முருகன் இதை முழுமனத்தோடே சொன்னான். அப்படியாவது தன் அருமை ‘அப்பன்’ கண்ணில் அந்தப் பொம்மைகள் படட்டுமே என்பது அவன் கருத்து.

கிருஷ்ணன் பல்லைக் கடித்துக்கொண்டான்; ‘என்ன திமிர் பார் இந்த அல்பப் பயலுக்கு!” என்று எண்ணினான். “உன் பொம்மைகளை – இன்று வரையில் செய்தவைகளை – எடுத்து வெளியே வை. இனிமேல் நீ செய்கிற பொம்மைகளெல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துவிடவேண்டும். அப்படிச் செய்வதாகச் சத்தியம் செய்” என்று கடுகடுப்போடு கூறினான்.

“எங்கள் அப்பன் ஆணை ; நான் பண்ணுகிற பொம்மைகளை உங்களிடமே கொடுத்துவிடுகிறேன்” என்று அழுது கொண்டே சத்தியம் செய்தான் முருகன். தூக்கு மேடையில் குற்றவாளி தன் வாழ்வின் நம்பிக்கையை யெல்லாம் இழந்துவிட்டு நிற்பது போல அவன் நின்றான்.

“சரி, உள்ளே இருப்பவைகளை வெளியிலே எடுத்து வை” என்று உத்தரவு பிறந்தது.

அந்த ஏழைச் சக்கிலியப் பையன் தன் இருதய உணர்ச்சியையும் வர்ணங்களையும் கலந்து அமைத்த அந்த அழகிய பொம்மைகளைக் கண்ணீர் விட்டுக் கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைத்தான்.

“ஜாக்கிரதை; உன் சத்தியத்தைக் காப்பாற்றுவதிலாவது நீ யோக்கியனாக இரு. இல்லாவிட்டால் நீ நாசமாய்ப் போவாய்” என்று எச்சரித்துவிட்டுக் கிருஷ்ணன் அந்தப் பொம்மைகளைத் தன்னுடன் வந்த ஆளை எடுத்துக் கொள்ளச் செய்து நடந்தான்.

முருகன் தன் இருதயத்தையே பறிகொடுத்தது போலக் குடிசைக்குள் போய் விழுந்துவிட்டான். அவன் முழுத் தைரியத்தையும் இழக்கவில்லை. தன் அப்பன்’ அவைகளைப் பார்த்ததும் தனக்காக இரங்கு வானென்று எண்ணினான்; அவனுக்கு ஊக்கம் உண்டாயிற்று. நான் பண்ணும் பொம்மைகள் எல்லாவற்றையும் எடுத்துப் போகட்டுமே. அதனால் எனக்கு என்ன நஷ்டம்? நான் தான் வியாபாரம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குப் பணம் வரட்டுமே. நான் செய்த குற்றத்துக்கு அபராதம் செலுத்தியதாக இருக்கட்டுமே. அப்பன் சந்தோஷப் படுவது ஒன்றே எனக்குப் போதுமே’ என்றெல்லாம் அவன் யோசனை விரிந்து சென்றது. ஆதலால் மீட்டும் அவன் பொம்மை பண்ணுவதில் ஊக்கம் உடையவ னானான்.

அட படுபாவி ! பொறாமைப் பேயே ! இப்படியா செய்ய வேண்டும்? கிருஷ்ணன் – பொறாமையின் அவதார புருஷன் – தான் கொண்டு போன பொம்மை களைப் போகும் வழியிலே ஒரு பாறையிலே போட்டு உடைத்துவிட்டான். தன் கைகளை உயர்த்திப் பல்லைக் கடித்துக்கொண்டு அவைகளைப் பாறையிலே உடைத்தபோது பழிக்குப் பழி வாங்கியவனைப் போலத் திருப்தியொன்று அவன் மனத்தில் உண்டாயிற்று.

இப்படியே அவன் வாரம் ஒருமுறை செய்து வந்தான். ஓர் ஆளைக் கூட்டிக்கொண்டு போவது, அவனை உள்ளே போய்ப் பொம்மைகளை எடுத்து வரச் செய்வது, போகும் வழியிலே அவைகளை உடைத்து விடுவது: இந்தமாதிரியே அவன் செய்தான்.

முருகன் தன் கலைத்திறமையினால் உண்டாக்கின சிருஷ்டிகள் யாவும் பொறாமைப் பூதத்துக்குப் பலி யாவதை அறியவேயில்லை. அறிந்தால் என்ன பாடு படுவான்!

அப்பனைக் காணாமல் அவன் கண்கள் பூத்துப் போயின. அவன் குரலைக் கேளாமல் காது மரத்து விட்டது. ஒருவருக்கும் தெரியாமல் மாலையில் கையெழுத்து மறையும் நேரத்தில் அவர்கள் வீட்டு வழியே செல்வான். சில நாள் கிழவன் திண்ணையில் உட்கார்ந்திருப்பான். சிலநாள் இருக்கமாட்டான். இருந்தால் ஏதோ தெய்வதரிசனம் ஆனது போல முருகன் விம்மிதமடைந்து போவான். அவனைப் பார்க்காவிட்டாலும் அவனுடைய இருமல் சப்தத்தை யாவது கேட்கக் காத்திருப்பான். அதுவும் கிடைக்கா விட்டால் சோர்ந்து தன் விதியை நொந்து கொண்டே போய்விடுவான்.

முருகனோடு போன ஜீவன் மீண்டும் கிழவனுக்கு வரவேயில்லை. அந்த ஏக்கமே அவனுக்கு யமராஜனது ஸேவை சீக்கிரத்தில் கிடைக்கச் செய்தது. சில மாதங்களில் கிழவன் இறந்துவிட்டான். இறக்கும் போது கூட அவன் முருகனையே நினைத்திருந்தான். மரணப் படுக்கையிலே அவன் உளறின கடைசி வார்த்தை ‘முருகா’ என்பதுதான்.

கிழவன் உலகைப் பிரிந்த செய்தி முருகனுக்குத் தெரிந்தது. இனி மறைவாகக்கூடத் தன் அப்பனைப் பார்க்க இயலாதென்பதை அவன் உணர்ந்தபோது துடியாய்த் துடித்தான். தாயை இழந்த பிள்ளையைப் போல அவனுக்கு ஏக்கம் பெரிதாயிற்று. இனி அந்தக் கண்கண்ட தெய்வத்தைக் காண்பதற்கு வழியேயில்லை என்று விம்மினான்.

4

நமக்கும் கலைஞனுக்கும் அதுதான் வித்தியாசம். அவனுடைய ‘அப்பன்’ உலகிலிருந்து போய்விட்டா னென்பது உண்மை. ஆயினும் அவனுடைய உள்ளத் திலே அக் கிழவுருவம் நிலைத்து நின்றது. அவன் தன் நெஞ்சிலிருந்த அந்த உருவத்தை ஏன் புற உலகத்திலே தன் கைத்திறனால் வனையக் கூடாது? இந்த எண்ணம் உதித்ததோ இல்லையோ அவனுக்கு உள்ளங் கால் முதல் உச்சந்தலைவரையில் ஓர் அமிர்த தாரை பாய்ந்தது. சிலீரென்று மெய்ம்மயிர் பொடித்தது; முகத்தில் ஒளி பொங்கியது; “இது என் கடமை; என் வாழ்க்கை முழுவதும் உழைக்க வேண்டுமானாலும் உழைத்து என் ‘அப்பனை’ என் கண்ணுக்கு முன் நிறுத்திவைப்பேன். என் அண்ண னுக்கு இனிமேல் அப்பன் இல்லை. எனக்கு இருக்கிறான். அவன் உருவம் என் உள்ளத்தில் பச்சையாயிருக்கும் போதே நான் உருவம் அமைத்து விடுவேன். அதை நானே வைத் திருப்பேன். கொடுக்கவே மாட்டேன்.”- அவனுடைய சித்தக்கடலில் இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அலைகள் மோதின. ‘ஐயோ! அவன் கொண்டு போய் விட்டால்?’ – அப்போது ஒரு பெரும் புயல் . பின்னால் பார்த்துக் கொள்ளலாம்; இப்போது பண்ண ஆரம் பிக்கலாம்.’- இவ்வாறு ஓர் அசட்டு ஆறுதல்.

அன்று இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. தன் அப்பன்’ உருவத்தை நினைத்து நினைத்துப் பார்த் தான். அன்று கனவிற்கூடக் கண்டான். மறுநாள் ஆரம்பித்துவிட்டான். யாகமாம் , யக்ஞமாம், பூஜை யாம், புனஸ்காரமாம் ; இவைகளிலே சிரத்தை அதிகம் வேண்டுமாம். முருகன் பண்ணத் தொடங்கிய காரி யத்திலே அதைக் காட்டிலும் ஆயிரமடங்கு சிரத்தை அவனுக்கு இருந்தது.

ஒவ்வொரு கடுகளவு மண்ணையும் நிதானமாக யோசனையோடு அவன் கையில் எடுத்தான். எத் தனையோ தடவை மீண்டும் கலைத்துக் கலைத்துச் செய்தான். அந்த உருவத்தை நான்கு நாளில் மண்ணால் செய்து விட்டான். வர்ணம் பூசத் தொடங்கினான். தான் செருப்புத் தைத்த பணத்தோடு தன் தகப்பனைக் கெஞ்சிக் கேட்டு வாங்கின பணத் தையும் கொண்டு உயர்ந்த வர்ணமாக வாங்கினான். அணு அணுவாக வர்ணம் தீற்ற ஆரம்பித்தான்.

முடிந்துவிட்டது. தன் கண்ணை நன்றாகத் திறந்து பார்த்தான். “ஆஹா! எல்லாம் ‘அப்பா’ உன் அனுக்கிரகம்!” என்று கூவினான். ஆனந்த வெறியில் மூழ்கினான்; “நான் ஜயித்தேன். எங்கள் அப்பனை என் அப்பனாக்கிக் கொண்டேன். சபாஷ்! நல்ல கை.” பைத்தியம் பிடித்தவனைப்போல் அவன் பல பல வார்த்தைகளை உளறிக் கொட்டினான்.

அந்த உருவம், அந்தக் கிழவனே சிறிய ரூபத்தில் உயிரோடு வந்து நிற்பது போல இருந்தது. முகவெட்டு, மெலிந்த உடல், ஒட்டிப்போன கன்னம், நெற்றிக்கோடு எல்லாம் அதே அச்சு; நிறம் சாக்ஷாத் அவனுடைய நிறமே.

களிமயக்கத்தின் உச்சியிலே நின்ற முருகன் திடீ ரென்று பாதாளத்திலே விழுந்தான்; “ஐயோ, அண்ணன் பிடுங்கிக்கொண்டு சென்றால் –?” என்று அலறினான். தேவகி கிருஷ்ணன் பிறந்தவுடன் அவனது திவ்ய ரூபலாவண்யத்திலே ஈடுபட்டு மயங்கி இன்பசாகரத்தில் கிடந்தாளாம். கம்ஸன் வந்து குழந்தையைக் கொன்றுவிடுவானே என்ற பயம் திடீரென்று வந்ததாம்; அவள் வீரிட்டுக் கத்தினாளாம். அவள் நிலையிலே இருந்தான் முருகன்.

“ஏதாவது தந்திரம் செய்யத்தான் வேண்டும். இதை எங்கேயாவது மறைத்து வைத்துவிடுகிறேன். பேருக்கு வேறு இரண்டு பொம்மைகள் செய்து வைக்கிறேன், அவன் வந்தால் கொடுக்க” என்று நிச்சயித்து அந்த அழகிய உருவத்தைக் காகிதத்தில் கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டான்.

ஞாயிற்றுக்கிழமை ; வழக்கம்போல் கிருஷ்ணன் சக்கிலிய ஆள் ஒருவனோடு வந்து நின்றான். ”ஐயோ” என்று முருகன் தேகம் பதறியது. ஆள் உள்ளே சென்று இரண்டு பொம்மைகளை வெளியே எடுத்து வைத்தான்.

“டே, இவ்வளவுதானா? இவை அவசரத்திலே செய்தவைபோல அல்லவோ இருக்கின்றன !”

“ஆமாம்; செருப்புத் தைக்கிறவேலை அதிகமாகப் போய்விட்டது.”

“இந்த வேலையை விட்டுவிடுவதுதானே?”

“யோசித்துப் பார்க்கிறேன்.”

முருகன் முழுஞாபகத்தோடு பதில் சொல்லவில்லை. அவன் ஹிருதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது. பேந்தப் பேந்த விழித்துக் கொண்டும் நடுங்கிக்கொண்டும் பேசினான்.

‘என்னடா, திருடன் மாதிரி விழிக்கிறாய்? திருட்டுப்பயல், உள்ளே வேறு பொம்மைகள் வைத்திருப்பான். பாரடா” என்று ஆளுக்கு உத்தர விட்டான் கிருஷ்ணன்.

உள்ளே சென்ற ஆளுக்குக் காகிதக் கட்டுக் கண்ணில் விழுந்தது. “அது என்ன மூட்டை ?” என்று கேட்டான். நடுங்கிக்கொண்டே இருந்த முருகன் பயத்தினால் நிதானபுத்தியை இழந்தான். “ஐயா, சாமீ , அதை மட்டும் எடுக்க வேண்டாம்” என்று அழுதுகொண்டே சொன்னான்.

அப்பா குதிருக்குள் இல்லை’ என்ற கதையாய் முடிந்தது இது. “அதில் ஏதாவது இருக்கும்; அப்படியே எடுத்துக் கொண்டு வா” என்று கிருஷ்ணன் சொன்னான்.

“உனக்குப் புண்ணியமாகப் போகிறது. அதில் ஒன்றுமில்லை. அதைத் தொடாதே” என்று மன்றாடி னான் முருகன்; அந்த ஆளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். அவன் திமிரிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் புலி கவ்வுவதைப் போல் அந்தக் காகித மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். கிருஷ்ணன் அதை மாத்திரம் உடனே வாங்கிக்கொண்டு பேசாமல் சென்றான்.

“ஐயோ!” என்ற சப்தத்துடன் முருகன் கீழே விழுந்து மூர்ச்சையானான். அவன் தகப்பன் – அந்த அப்பாவிச் சக்கிலியன் – அவனுக்குச் சுருஷை செய்யலானான்.

பலியிடு பாறை வந்தது. கிருஷ்ணன் கையிலிருந்த மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினான். ‘திருட்டுப் பயல் நம்மிடம் மறைக்கப் பார்க்கிறான்’ என்ற எண்ணத்தினால் அன்று அவனுக்கு அதிகக் கோபமாக இருந்தது. ஒரேயடியில் அந்த உருவத்தை ஆயிரம் சுக்கலாகச் செய்ய எண்ணியிருந்தான்.

மூட்டையை அவிழ்த்தான். அவன் கண்கள் அதனுள் மறைந்திருந்த உருவத்தின் மேல் விழுந்தன. “ஆஹாஹா!” என்று ஸ்தம்பித்துவிட்டான். அவன்

கைகளை ஓங்கவும் இல்லை; அதை உடைக்கவும் இல்லை. அப்படியே திக்பிரமை பிடித்தவன் போல் நின்று விட்டான். அந்த உருவத்தில் தன்னுடைய அப்பனைத் தத்ரூபமாகக் கண்டான். அவனுக்குப் பழைய கால நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந் தன. அந்த உருவத்தை உடைக்க அவனுக்கு எப்படி மனம் வரும்? அதைப் பார்த்து உருகி நின்றான். அது காறும் எவ்வளவோ அரிய பொம்மைகளை அவன் ராக்ஷஸ குணத்தோடு அந்தப் பாறையில் உடைத்திருக் கிறான்; அந்தப் பொம்மைகளிலும் அபூர்வமான கலைத் திறமை இருந்தது. ஆனாலும் அவை கிருஷ்ணனின் ஹிருதயத்தை உருக்கவில்லை; பொறாமைத் தீயை மூட்டின ; கோபத்துக்கே பலியாயின.

இதுவோ? இதைச் செய்த கலைஞன் தன் ஜீவனை வர்ணமாகப் பிழிந்து கோலஞ் செய்திருக்கிறான்; தன் கற்பனையைப் பிண்டமாகத் திரட்டியிருக்கிறான்; தன் அன்பைக் கரைத்து மெருகிட்டிருக்கிறான். அதனால் இது இணையற்ற சித்திரம். இந்தப் பொம்மை எந்த ஜீவனுள்ள உடம்பை நினைத்துச் செய்யப்பட்டதோ அந்த உடம்பு அழிந்துவிட்டது; இது அழியாது.

அது மட்டுமா? கிருஷ்ணனுக்கோ இது தன் தகப்பனின் உயிரோவியம். இதன் மூலமாக அவன் தகப்பனைக் கண்டான். அன்பு எல்லாவிதமான தடைகளையும் பொத்துக் கொண்டு வெளிவந்தது. “என்ன அழகு என்ன அன்பு! இதை நான் உடைத் திருந்தால் என்ன பாதகம் செய்தவனாவேன்!” என்று நைந்தான். அவன் கண்களில் நீர்த்துளிகள் தோன்றின. அவனிடம் இருந்த பொறாமையும் கோபமும் விடை பெற்றுக்கொண்டன.

அரைமணிநேரம் கண்கொட்டாமல் அந்த உரு வத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய உள்ளத்திலே பல நினைவுகள் எழுந்து மோதின. ஏதோ துணிந்தவனைப்போல் அந்த உருவத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு திரும்பிச் சேரியை நோக்கி வந்தான். தனியாக வந்தான்; ஆளுடன் அல்ல.

“தம்பீ, முருகா” என்று தழுதழுத்த குரல் ஒன்று வெளியே கேட்டது.

முருகன் ஆச்சரியத்தோடு வெளியே வந்தான். கிருஷ்ணனாவது! தம்பியென்று கூப்பிடுவதாவது! ஒருகாலும் நம்பமுடியாத காரியம்’ என்று நினைத் தான். “தம்பீ” என்று இரண்டாந்தரம் கூப்பிட்ட பிறகு தான் உண்மை என்று தோற்றியது.

“தம்பீ, நீ என்னை மன்னிப்பாயா?”

‘இது என்ன? கனவு காண்கிறோமா? கிருஷ்ணனா இப்படிப் பேசுவது?’ – கண்ணைத் தேய்த்துப் பார்த்தான்.

கண்ணில் நீர்கசியக் குரல் தடுமாறக் கையிலே அந்த அழகிய உருவத்தைப் பிடித்தபடியே கிருஷ்ணன், “தம்பீ, நான் பாதகன்; உன்னைப் பாதக னென்றது பெரிய பிழை” என்றான்.

“என்ன அண்ணே! சொல்வது விளங்கவில்லையே! ஏன் இதைத் திரும்பக் கொண்டுவந்தீர்கள்?”

“இந்தா அப்பா! உன் அப்பனை நீயே எடுத்துக் கொள். உன் அப்பனுக்கு நீதான் பிள்ளை. நான் பிள்ளையல்ல. உன் அப்பன் உயிருடன் இருக்கையில் உன்னைப் படாத பாடு படுத்தினேன். உன் அப்பனிட மிருந்து உன்னை வேண்டுமென்றே பிரித்துவைத் தேன். அப்பன் சாகும்போதுகூட உன்னைத்தான் நினைத்தான். செத்த பிறகாவது அவன் உன்னோடு இருப்பதை நான் ஏன் பிரிக்க வேண்டும்? உன் பழைய பொம்மைகளையெல்லாம், அருமை அறியாத பாவி நான் உடைத்துவிட்டேன். இந்தா, இதை எடுத்துக் கொள். உன் அப்பனை நீ இருதயத்தில் வைத்துப் பூஜித்து வருவது எனக்கு இப்போது நன்றாகத் தெரிகிறது. அந்த அப்பனுடைய விக்கிரகத்தை இப்படி அமைத்த உன் கையை நான் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இந்தா , எடுத்துக்கொள். என்னை மன்னித்து விடு. சாதியாவது குலமாவது! அன்புக்கு மிஞ்சித் தெய்வங்கூட இல்லை. இதெல்லாம் இந்தப் பாவிக்கு இப்போதுதான் தெரிகிறது.”

“அண்ணே , இப்படி ஏன் பேசுகிறீர்கள்? என் அப்பன் என்கிறீர்களே; உங்களுக்கு அப்பனல்லவா?”

“முதலில் உனக்குத்தான் அப்பன். அப்புறம் அவனுடைய ஆத்மாவுக்கு ஸம்மதமானால் எனக்கு அப்பன். இந்தா வாங்கிக்கொள்.”

கண்ணீரொழுக முருகன் அதைக் கைநீட்டி வாங்கிக்கொண்டான்.

“அண்ணே, இதுதான் நான் மனம் வைத்து என் உயிரைப் போல எண்ணிச் செய்தது. என்னுடைய மனத்தில் இருந்த ஆசை இப்போது நிறைவேறி விட்டது. இனிமேல் சத்தியமாக இந்தத் தொழிலை விட்டு விட்டேன். செருப்புத் தைப்பதே எனக்குப் போதுமானது.”

கலைஞன் தன் கலையைத் தியாகம் செய்துவிட்டான்.

இருவருடைய கண்களிலும் நீர் ஊற்றுக்கள் எழுந்தன. அவ்வூற்றுக்களில் எந்த எந்தக் குணங்கள் கரைந்து வெளிவந்தனவென்பதைத் தனியே பிரித் தறிவது சாத்தியமானதா?

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *