கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 4,943 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அணுஅணுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் உயிரைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட கருணையுடன் கொலை செய்துவிடுவதே சரி என்ற நல்ல எண்ணத்துடன், டாக்டர் ரிக்கார்டோ கொடுத்த விஷ ஊசியைப் போட்டு எனது நாய் சீசரைக் கொன்று, தோட்டத்தில் புதைத்தேன்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னுடன் வளர்ந்த நாய். சீசர் என்னிடம் இருந்து அன்பையும், சீசரிடமிருந்து நான் துணிவையும் ஒருவருக்கொருவர் பெற்றுக்கொண்டோம். ஒரு ரோஜாப்பூச்செடியை புதைத்த இடத்தில் நட்டுவிட்டு, டாக்டர் ரிக்கார்டோவைப் பார்க்க கிளம்பினேன். தூரத்தில் தெரியும் அந்த மலைப்பிரதேசத்தில்தான் வசிக்கின்றார்.

ஸ்விட்சர்லாந்தில் டாக்டராக இருந்தவர், அங்கு சந்தித்த இத்தாலியப் பெண்ணைக் காதலித்ததால் அவளைப் பின் தொடர்ந்து, ரோமிற்கு வந்து அவளையேத் திருமணம் செய்து கொண்டு இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்.

ஆனால் அந்த மனைவியை அவரின் வீட்டில் பார்த்ததே இல்லை. நான் போகும் சிலசமயங்களில் முப்பது வயது மதிக்கத் தக்கப்பெண் அடுப்படியிலோ தாழ்வாரத்திலோ வேலைசெய்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். அறுபது வயது ரிக்கார்டோவிற்கு முப்பது வயது பெண் தோழி என நானே நினைத்துக் கொண்டேன்.

வேறு சில சமயங்களில் ஸ்விஸ் ஜெர்மன் பேசும் சில நடுத்தர வயதினர் எண்பதுகளில் இருக்கும் நடை உடை பாவனையுடன் ரிக்கார்டோவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வந்தவுடன் ரிக்கார்டோ அவர்களை தோட்டத்திற்கோ அல்லது வெளியேவோ அனுப்பிவிடுவார். சில நாட்களில் யாருமே வீட்டில் இருக்க மாட்டார்கள்.

ரிக்கார்டோவின் வீட்டிற்கு போகும்பொழுதெல்லாம், அக்கம்பக்கத்தினர், ஏதோ பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த வீட்டிற்கு செல்லுபவரைப் பார்ப்பதைப்போல விசித்திரமாகப் பார்ப்பார்கள். ஒருவேளை டாக்டர் சமூகவிரோத செயல்கள் ஏதேனும் செய்கின்றாரா என ஒரு சந்தேகம் கூட எனக்குண்டு.

“டாக்டர், இவ்வளவு நட்பான நீங்கள், ஏன் அண்டை அயலார்களுடன் பழகுவதில்லை?”

“மனிதர்களைக் காட்டிலும் ஆன்மாக்கள், உனக்குப் புரியும்படி சொல்லவேண்டுமானால் பேய்களையே எனக்குப் பிடித்திருக்கின்றது” அவருடன் ஆன முன்றாவதோ நான்காவதோ சந்திப்பில் இதைச் சொன்னார்.

“என்னைக் கவனித்துக் கொள்வதில் இருந்து, இந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் பரிமாரிப்பவர்கள் அனைவரும் பேய்களே… இதோ நீ குடித்துக் கொண்டிருக்கும் சிவப்பு வைனைக் கூட தயார் செய்ததும் ஓர் ஆன்மாவே”

அதன் பின்னர் அவரின் வீட்டில் எதுவும் சாப்பிடுவதோ குடிப்பதோ கூட கிடையாது. மருத்துவம், தத்துவம், அரசியல், ஆன்மிகம் என அனைத்தையும் கரைத்துக் குடித்த மக்களின் தத்துவார்த்தப் பேச்சு, சில சமயங்களில் திகிலூட்டுவதாகக் கூட இருக்கும். விளங்கமுடியாத தத்துவங்களே திகிலைக் கொடுக்கின்றன.

மெத்தப் படித்ததால், மூளைக் குழம்பிப் போய் இல்லாத விசயங்களை தன்னுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். ஒரு வேளை என்னைப் பயமுறுத்துவதற்காக கதை கட்டுகின்றார் அல்லது நிஜமாகவே அவர் பேய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவர் அவர் வீட்டின் வெளிச்சம், ஒழுங்கமைப்பு, வாசனை எதுவுமே பேய்வீட்டிற்கான அடையாளங்களையோ அல்லது பைத்தியக்கார பிரசன்னத்தையோ தராது.

ரோமில் இருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் இந்த ரிக்கார்டோவின் மலைக்குக்கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன்.

அன்றைய ஸ்விட்சர்லாந்து ஜெர்மனிய தினசரிகள் அவரின் மேசையின் மேல் தென்பட்டன. என் பார்வையின் கேள்வியைப் புரிந்து கொண்டவற்போல

“இவை எல்லாம் என்னால் விடுதலை செய்யப்பட்டவர்கள் கொண்டு வந்து தருவது…” என்றார்.

“ஸ்விட்சர்லாந்தில் எல்லாம் சட்டப்பிரச்சினைகள் கிடையாது, விடுதலை வேண்டும் என விரும்பியவர்களை எல்லாம் எளிதாக விடுவித்து விடுவேன், அவர்கள் காலம் கடந்தும் விசுவாசமாக இருப்பார்கள்”

ஏற்கனவே குடித்து இருப்பார் போல, தொடர்ந்து போதையில் பேசினார்.

“உனக்குத் தெரியுமா, ஒரு நாள், என் மனைவிக்கு விடுதலை கொடுத்தபொழுது, இந்தத் தெரு மக்கள் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துவிட்டனர்”

நான் முகத்தில் காட்டிய அதிர்ச்சியைப் பார்த்தபடி,

“கொஞ்ச நாள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தேன், பின்னர் என் மனைவியே நீதிமன்றம் முன் வந்து, தனது விருப்பத்தின் பேரில்தான் விலகிப்போனேன் என சொன்ன பிறகுதான் விடுதலை செய்யப்பட்டேன்”

“இது எப்பொழுது நடந்தது டாக்டர், உங்கள் மனைவி இப்பொழுது எங்கிருக்கிறார்”

“என்னுடன் தான் இருக்கிறாள், நீ கூட பார்த்திருப்பாய்…. அவள் திரும்ப வந்த பிறகே விடுதலைப் பெற்றவர்களின் விசுவாசத்தை உணர ஆரம்பித்தேன்… இன்றுடன் முப்பதுவருடங்கள் ஆகின்றன, அது சரி சீசருக்கு விடுதலைக் கொடுத்துவிட்டாயா”

விடுதலை என்ற வார்த்தையின் நெருடலை உணர்ந்தபடி “ம்ம்ம்” என்றேன்.

“சரி, எனக்கும் விடுதலைக் கொடுத்துவிடு” என ஊசியுடன் கூடிய மருந்தை என்னிடம் நீட்டினார். மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த, அந்த முப்பது வயது பெண்மணியும் ரிக்கார்டோவிற்கு விடுதலைத் தரச்சொன்னார். தோட்டத்தின் பக்கம் இருந்து வந்த ஸ்விஸ் நபர்களும் அதையேச் சொன்னார்கள். வாசலில் வந்து நின்ற காலையில் மண்ணோடு மண்ணாகப் புதைத்த சீசர் நாயும் ஆமோதிப்பதைப்போல குரைத்துக் காட்டியது.

“விடுதலைப் பெற்றுத்தருபவர்களிடம் காலம் கடந்தும் விசுவாசம் காட்டப்படும்” என ரிக்கார்டோ திரும்பத் திரும்பச் சொல்ல, எல்லாம் புரிந்தபடி விச ஊசியை அவரின் மேல் செலுத்தினேன்.

ஸ்விட்சர்லாந்தில் பிரபலமான கருணைக் கொலை டாக்டர் ரிக்கார்டோ, ரோமில் அவரது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் மறுநாளைய தலைப்புச் செய்திகள்.

எனது வீட்டுத்தோட்டத்தில் சீசருடன் ரிக்கார்டோவும் அவரின் மனைவியும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ரிக்கார்டோவின் ஸ்விஸ் நண்பர்கள் வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

நான் கருணைக்கொலைகள் ஏற்புடையதா என்பதைப் பற்றியக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *