ஹியூமன் பாம் அப்புசாமி

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,571 
 

அப்புசாமியைப் பெருமூச்சுகளே பெட்ரோலாகி இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது நடக்க வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு.

அப்புசாமி ஓர் ஐந்து நிமிஷம் தெரு முனை வரை நடந்து திரும்பிப் பக்கத்திலுள்ள பார்க் பெஞ்சில் ரிலாக்ஸாக உட்கார்ந்து, அங்கே காலையில் சின்னப்பயல்கள் விளையாடும் ·புட்பால் மாட்ச்சையோ, கிரிக்கெட்டையோ, அபூர்வமாக ஜாக்கிங் ரவுண்டு சுற்றும் சில யுவதி, யுவர்களையோ வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

வாலிப வயதில் அவர் ஓடாத ஓட்டமா? ஆனால், அழகான ஒரு பெண் அவருடன் ஓடிவந்து அவர் நெஞ்சத்தைக் கிள்ளியதில்லை.

காலையில் எழுந்ததும், அல்வா சாப்பிடுகிற பெங்களூர்க்காரர்கள் மாதிரி, ஓர் இளம் காதல் ஜோடி பார்க் பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பஞ்சத்தால் வழுக்கை விழுந்து கிடக்கும் இந்த வறட்டுப் பார்க்கில் ஒரு முன்னாள் பிரமுகர் பெயரைக் கொண்ட பார்க்கில், கான்க்ரீட் சதை பிய்ந்து கம்பி எலும்பு தெரியும் பரிதாபமான பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அவன் ஏதோ சொல்ல, அவள் நாணத்துடன் குனிந்து கொண்டு பல் தெரியாத ஒரு புன்னகையுடன் ஏதோ சொல்ல, அவன் அழகான பல் தெரியும்படிச் சிரித்தான்.

இருவருக்குமிடையே பதினைந்து சென்டி மீட்டர் தூரம் இடைவெளி இருந்தது.

தொட்டுக் கொள்ளாமல், இடித்துக் கொள்ளாமல் மிக நாசூக்காக அவர்கள் காதலித்துக் கொண்டிருந்ததை, பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது அப்புசாமிக்கு.

“சார்! பெரியவர் சார்!” என்று அவர் முதுகுக்குப் பின்னாலிருந்து குரல் கேட்காதிருந்தால், தூய காதலை மேலும் ரசித்திருப்பார்.

திரும்பினார்.

பொன்விலங்கு அண்ணன்காரன் மாதிரி மகா மோட்டாவாக ஆறடிக்கு மூணடி தேகப் பரப்பிலிருந்த அந்த ஆசாமியின் முகத்தில் கொஞ்சம் தாடி, அதிக சோகம்.

“சார்… அந்தக் காதல் சிட்டுக்களைப் பார்த்தீங்களா?”

அப்புசாமிக்கு ‘கபீர்’ என்றது, பயம் கவ்வியது. “எந்த சிட்டுக்கள்?”

“பெரியவரே… என்னை உங்கள் பேரன் மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். அதோ, அந்தக் காதலர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“நல்லா இருக்கட்டும்னு நினைக்கிறேன்.”

“இருக்க முடியாது பெரியவரே! இந்தக் காதலர்களை வரதட்சணை என்ற பேய் பிரிக்கப் பார்க்கிறது. எவ்வளவு டீசன்ட்டாகக் காதலிக்கிறார்கள். பார்த்தீர்களா? இதே மாதிரி இரண்டு வருஷமாக. இதே பார்க்கில், இதே பெஞ்ச்சில் உட்கார்ந்து காதலிக்கிறார்கள். இன்னும் கல்யாணத்துக்கு வழியில்லை. வரதட்சணை விவகாரம். வரதட்சணை கேட்கிற ஆணிடம் கேட்கிறேன் நான், சிரதட்சணை. ” பொன்விலங்கு அண்ணனுக்குச் சூடேறிக் கொண்டிருந்தது.

அப்புசாமி, “பேஷ்! பேஷ்!” என்றார். “கவிதை மாதிரி சொல்லிட்டியே. வரதட்சணை கேட்கிற ஆணிடம் கேட்கிறேன் நான் சிரதட்சணை… பேஷ்! பேஷ்!”

திடீரென்று அந்தப் பொன்விலங்கு அண்ணன் அப்புசாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு, “சார், பெரியவர் சார்! அந்தப் பொண்ணு என் சொந்தத் தங்கச்சி சார்! நீங்கள் மனசு வைத்தால், என் தங்கையின் கல்யாணம் நிறைவேறும்.”

“உன் தங்கச்சியா? வரதட்சணைக் கொடுமையால் நிற்குதா கல்யாணம்? நான் ஏதாவது தூது மாதிரிப் போக வேண்டுமா? போகிறேன். காதலர்கள் ஒன்று சேர்வதற்காக, என் கால்கள் தேய்வதில் பெருமை அடைகிறேன். வாழ்க காதல்! வீழ்க வரதட்சணை!”

“பெரியவரே! என் குடிசைக்கு வந்து ‘ஜில்’லென்று ஒரு ஐஸ் மோர் சாப்பிட்டீர்களானால், என் மனசு குளிரும்.”

“குடிசையென்றால் நிஜமாகவே குடிசை, ஓ! இவன் சத்தியம் பேசுகிறவன். இவனை நம்பலாம்” என்று அப்புசாமி அவனை மனசுக்குள் பாராட்டிய அடுத்த நிமிஷம், குடிசைக்குள்ளிலிருந்து இன்னும் இரண்டு பேர் தோன்றினர்.

“சபாஷ்! உருப்படியை வளைச்சிக்கிட்டு வந்திட்டியா? யோவ் கெயவா… ஜிப்பாவைக் கழட்டுய்யா சீக்கிரம். பாங்க் திறந்திடும். நிறைய வேலை இருக்கு. சீக்கிரம் கழற்றுடா… உன்னோட பேஜாரு…”

அப்புசாமிக்கு வயிற்றைக் கலக்கியது. மரியாதையில் திடுமென்று நிறையக் கலப்படம். பெட்ரோலில் கெரோஸின், மிளகாய்ப் பொடியில் செங்கல் பொடி மாதிரி, இவ்வளவு நேரமிருந்த மரியாதையில், இந்த அவமரியாதைக் கலப்படம் ஏன்.?

“நான் ஜிப்பாவைக் கழற்றுவதற்கும், பாங்க் திறப்பதற்கும் என்ன சம்பந்தமுங்கோ” என்று தயக்கத்துடன், பயத்துடன் கேட்டவாறே ஜிப்பாவைக் கழற்றினார்.

அப்புசாமியின் வயிறு மகாபலிபுரம் குகைச் கோயில் மாதிரி, உள்ளே குழி விழுந்து கிடந்தது.

“வெச்சுக் கட்டறதுக்குத் தோதான இடமா வயிறு இருக்குதே! சபாஷ்!” என்றான் ஒரு கிருதாப் பேர்வழி.  

“எதை வெச்சு எங்கே கட்டறது?” என்றார் அப்புசாமி.

“ஏண்டா மாயாண்டி, கெழவன்கிட்ட சமாச்சாரத்தை இன்னும் சொல்லலியா? சொல்லுடா சீக்கிரம். பாங்க் திறந்திருக்கும் இந்நேரம்.”

அப்புசாமியை அன்போடு பேசி அழைத்து வந்த ஆசாமி, அவரது தோளைத் தட்டிக் கொடுத்தான். “பயப்படாதே பெரீவரு! அந்தப் பார்க்குக் கசுமாலம் என் தங்கச்சியும் இல்லே, கொட்டாங்கச்சியுமில்லே. உன்னைத் தள்ளிக்கிட்டு வர அப்படி எடுத்துவுட்டேன் ரீலு. இப்போ உன் வயித்துலே குண்டைக் கட்டி ஒரு பாங்குக்கு அனுப்பப் போறோம். புரியுதா?”

“ஐயோ!” அலறினார் அப்புசாமி. “என் வயிற்றிலே குண்டு கட்டப் போறீங்களா?”

“பாங்குக்கு நீ நேராப் போறே! ஜிப்பாவைத் தூக்கிக் காஷியர்கிட்டே காட்டறே. பாங்கிலேயிருக்கிற பணம் பூராப் பெட்டியிலே போட்டு, பாங்கி பின்னாலே நிக்கிற ஆட்டோவுக்கு வந்தாகணும். எதுனா வேலை காட்டினீங்கன்னா, டமால்னு சுவிச்சியை அழுத்திடுவேன். பாங்கிக் கட்டடம், நீ, நானு, வேலை செய்யறவங்க, இருக்கிற பணம் எல்லாம் சிதறிக் கருகிச் சாம்பலாப் போயிடும்னு சொல்லு. மிரட்டு. இருபது லட்சம் வந்தால் எதுனாத் தருவோம்.”

“அடே பாவி!” என்றார் அப்புசாமி. பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவனா நீ?”

அவருக்குப் பதில் சொல்லாமல் காரியம் வேகமாக நடந்தது.

அப்புசாமியின் வயிற்றில் டால்டா டப்பா சைஸில் கறுப்பான ஒரு வஸ்துவை இறுகக் கட்டினார்கள. அதில் ஒரு பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அப்புசாமிக்கோ தன் வாழ்க்கை விளக்கே அணைந்துவிட்ட மாதிரி இருந்தது.

“சார்! சாரி! தம்பி! தம்பி! அண்ணே! அண்ணே! யப்போவ்! யப்போவ்! நைனா! நைனா! நான் பிள்ளை குட்டிக்காரன். ரெண்டு மூணு பொண்டாட்டி. நான் புட்டி விற்றுத்தான் குடும்பம் பிழைக்கணும்” என்று பல பொய்களை சொல்லி கையெடுத்துக் கும்பிட்டார்.

“யோவ்! அளக்காதீருய்யா. மொகரை கிகரையெல்லாம் பேத்துடுவோம். உனக்கு அந்தப் பச்சைக் கேட் ஊடு தானேய்யா? உன் சம்சாரம் கூட ஒரு கிழவியம்மா தானே! தோளிலே பையும், கையிலே ஒரு பைலும் தூக்கிக்கிட்டு, காரிலே ‘சர்புர்’னு வெளியே போயிட்டு போயிட்டு வந்துக்கினு இருக்குமே. நாங்க ஸ்டடி பண்ணித்தான்ய்யா வேலையிலே இறங்குவோம். இங்கே பாரு! பதினொண்ணு இருபத்தஞ்சுக்குள்ளாற பணப் பெட்டிகளை பாங்கிக்காரங்க ஆட்டோவில கொண்டு வெச்சுடணும். இல்லாட்டி இங்கிருந்து ரிமோட் கண்ட்ரோலை ஓர் அழுத்து அழுத்தினால் எல்லாரும் காலி. போலீஸ் கீலீஸ் வந்து உன்னைப் புடிக்கப் பார்த்தா சுவிச்சியை நீயே அழுத்தி எல்லாரையும் தூள் பண்ணி, நீயும் செத்துடு…

“ஐயோ! இந்த அநியாயம் அடுக்குமா?” கதறினார் அப்புசாமி. “நான் சாகிறதா?”

“யோவ்! நீ எப்படி மிரட்டுவியோ, நடிப்பியோ, காரியத்தை வெற்றியா முடிச்சிட்டு வரலைன்னா சாக வேண்டியதுதான்.”

அப்புசாமியின் வயிற்றில் பலவந்தமாகக் கறுப்பான வஸ்து கட்டப்பட்டது. உள்ளிருந்து வந்த “டிக் டிக்” ஓசை குண்டிலிருந்து வந்ததா? இதயத்திலிருந்து வந்ததா? என்று அவருக்கே சந்தேகமாக இருந்தது.

பாங்க்கில் – அன்று திங்கட் கிழமையாதலால் – காஷ் கெளண்ட்டரில் சினிமாத் தியேட்டர் கும்பல்.

“யோவ்! நகருய்யா!” என்றார் கரகரத்த குரலில் அப்புசாமி.

காஷ் கெளண்ட்டரில் காஷியரின் முன்னால் போய் நின்றார்.

“போய் உட்காருங்க சார்! டோக்கன் நம்பர் வந்தால் கூப்பிடறேன்.”

“நீ என்னய்யா கூப்பிடறது?” என்றார் அப்புசாமி அலட்சியமாக.

காஷியர் இளவட்டம். அதுவும் திருநெல்வேலி. “பின்னே உங்க பாட்டனாய்யா கூப்பிடுவான்? போய் உட்காருய்யா பெஞ்சிலே…”

அப்புசாமி மனசுக்குள் அழுது கொண்டே சிரித்தார். “டேய் பொடிக் காராபூந்தி! நான் யார் தெரியுமா? இங்கே பாத்தியா. குண்டு மனுஷன்!”

காஷியர் வாலிபன் குனிந்து நோட்டுக்களை எண்ணியவாறு, “பார்த்தா ஒல்லியாத்தானே இருக்கிறே….” என்றான்.

“கண்ணை நல்லா தொறந்து பாருய்யா. வெடிகுண்டு மனுஷன்” அப்புசாமி கெளண்ட்டரில் அலட்சியமாகத் தாளம் போட்டார். “இருக்கிற பணமெல்லாம் பதினொண்ணு இருபத்தஞ்சுக்குள்ளே பாங்கின் பின்னால் இருக்கிற ஆட்டோவுக்குப் போயாகணும்.”

காஷியர் வாலிபன் நிமிர்ந்து பார்த்தான். “ஹை! ஆசை! ஆசை! அம்மாவூட்டுத் தோசை! இதோ பார் மீசை! உம்ம குண்டு மிரட்டலுக்கெல்லாம் அசையறவன் நானில்லே. மானேஜர்கிட்டே கேட்காமல் எதுவும் செய்ய முடியாது.

அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார். “அடே முட்டாளே குண்டை பதினொண்ணு இருவத்தஞ்சுக்கெல்லாம் அமுக்கிடுவாங்க. எல்லாரும் செத்துப் போடுவோம்டா. உனக்கு பொண்டாட்டி புள்ளை கிடையாதா?”

“ரெண்டு பொண்டாட்டி இருக்காங்க. ஒருத்தி வெண்ணெய் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கிறாள். முறுக்கிலே போட்டு பிசைந்தால் வாயிலே போட்டால் கரையுமாம்.”

அப்புசாமி : வாயே கரைஞ்சுடற நிலையடா தம்பி. சட்டுபுட்டுனு ஓடு. ரூபாயைக் கொடு. மணி இப்பவே பதினொண்ணு.

காஷியர் : கொஞ்சம் ·பாஸ்ட்டா அப்பப்ப வெச்சுக்குவோம். (சிரிப்பு)

அப்புசாமி : இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுவாங்க. வயிற்றிலே குண்டைக் கட்டிக்கிட்டிருக்கேன். இந்தா கோணிப்பை ரூபாயைப் போடு.

காஷியர் : ஏய்யா, மிளகாய் வெச்ச கோணியா? இந்த நெடி அடிக்குது.

அப்புசாமி : இளங்கண்ணா, முட்டாள்தனமாய் நேரத்தைக் கடத்தாதே. என் மார்பைப் பார். குண்டில் சிவப்பு விளக்கு எரிகிறதல்லவா? நான் சுவிச்சை அழுத்தினால் அது அடுத்த வினாடி பச்சையா மாறும். அடுத்த விநாடி நீ வெண்ணெயாப் போயிடுவே. உன் பெண் சாதி உன்னைத்தான் வழித்து முறுக்கிலே போட்டுப் பிசைவாள். ஒரு குண்டு மனுஷன் வந்து நிற்கிறேன். பயமே இல்லையே.

காஷியர் : பெரியவரே, பயந்து என்ன ஆகப்போவுது. சொல்லு. நான் காந்தி கட்சி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மாதிரி, என் பேரு கூட காந்திதான். காந்திமதி நாதன். திருநெல்வேலிக்காரன்.

அப்புசாமி : ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல. பணமே சதம். சீக்கிரம் மூட்டை கட்டு. நீ சின்னப் பையன். ரெண்டு பொண்டாட்டிக்காரன். உலகத்திலே வாழ ஆசைப்படலை. நான் வயசானவன். நிறைய நாள் வாழ ஆசை. சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசி, அல்பாயுசிலே சாக விரும்பலை.

காஷியர் : அவசரப்படுத்திறியே பெரியவரே! குண்டைக் கட்டிக்கிட்டு வந்து நின்னா, உடனே பணத்தைக் கொடுத்திடணுமா? இதெல்லாம் பப்ளிக் மணி.

அப்புசாமி : பப்ளிக் மணியோ, பள்ளிக்கூட மணியோ சரியாப் பதினொண்ணு இருபத்தஞ்சுக்குப் பட்டனை அழுத்திடுவாங்க ரிமோட் கண்ட்ரோல்காரங்க.

காஷியர் : என்னய்யா தொந்தரவு பண்றே. மானேஜரைக் கேட்காமல் ஒண்ணும் பண்ணறதுக்கில்லே.

(அப்புசாமியின் பின்னாலிருந்து அவர் தோளைத் தட்டுகிறார் ஒரு டோக்கன்காரர்.)

டோக்கன் ஆசாமி : எக்ஸ்க்யூஸ் மி சார்! நாங்களும் பணம் வாங்கணும்.

அப்புசாமி : யோவ்! யோவ்! என்னை அலக் பண்ணாதேய்யா! குண்டு கட்டி அனுப்பிச்சிருக்காங்க. (அப்புசாமி திரும்பி நின்று சேவை சாதிக்கிற பெருமாள் மாதிரி குண்டு திருக்கோலம் காட்டி அருளுகிறார். டோக்கன் ஆசாமி அரண்டு மிரண்டு வெளியே ஓடுகிறார்.)

அப்புசாமி : ஓய் காஷியர் பையா! அந்த டோக்கன் ஆசாமி எப்படி ஓடறான் பார்த்தியா? குண்டுன்னா இப்படித்தான் பயப்படணும்.

காஷியர் : என்னய்யா பிரமாத பயம்? உயிருக்குப் பயந்தால் காஷியராக இருக்க முடியுமா?

அப்புசாமி : நீ போய் மானேஜர்கிட்டே பேசிட்டு வாப்பா. இந்த மாதிரி குண்டு மனிதன் வந்து பணம் கேட்கிறான். தரலைன்னா இங்கே இன்னொரு பம்பாய் நடக்கும்னு சொல்றான்னு சொல்லு. குண்டு டிக்டிக்டிக்னு சத்தம் போடுதே… ஓடு…  

காஷியர் : சரியான சாவுகிராக்கியா இருக்கியே பெரியவரே… சரி, சரி, நான் போய் மானேஜர்கிட்டே பேசிட்டுவரேன். அந்த ஆள் ஒரு சரியான சிடுமூஞ்சி. மூடு எப்படி இருக்குதோ?

(காஷியர் காந்தி, மானேஜர் அறையில் நுழைகிறான். மானேஜர் வஜ்ரநாத் சிகரெட் பிடித்தவாறு ஏதோ யோசனையில் இருக்கிறார்.)

காஷியர் : மானேஜர் சார்! முதலிலே சிகரெட்டை அணையுங்க.

மானேஜர் : இடியட்! அதைச் சொல்ல நீ யார்?

காஷியர் : குண்டைக் கட்டிக்கிட்டு ஓர் ஆள் கெளண்ட்டர்லே நிற்கிறான்.

மானேஜர் : நிற்கட்டும். ஆமாம், செக்யூரிட்டி நின்னுக்கிட்டிருப்பானே? அவன் ஒண்ணும் பண்ணலையா?

காஷியர் : நாஷ்டா பண்ணப் போயிருப்பான். டயாபடிக் பேஷண்ட் ஆச்சே. மணிக்கு ஒரு தரம் ஏதாவது போண்டா கீண்டா வயித்துக்குப் போட்டுக்கிட்டே இருக்கணும்.

மானேஜர் : சரி, குண்டுக்காரன் எப்படி இருக்கான்?

காஷியர் : செளக்யமா இருக்கான். பதினொண்ணு இருபத்தஞ்சு வரை எல்லாருமே நல்லா இருப்போம். அப்புறம்தான் சுவிட்சை அழுத்தி எல்லாத்தையும் தூள் பண்ணிடுவாங்களாம்.

மானேஜர் : என்ன விஷயமாம்? ஹாவ்…. (கொட்டாவி விடுகிறார்.)

காஷியர் : ஆவியை விடுகிற நேரம் சார்! நீங்க கொட்டாவி விடறீங்க.

மானேஜர் : இந்த டி.வி.யில பன்னெண்டு மணி வரை எதையாவது (ஹி!ஹி!) பார்த்துட்டு தூங்கறேனா?தூக்கம் தூக்கமா வருது. சரி, அந்தக் குண்டுக்காரனை இப்படி அனுப்பு.

காஷியர் : டைம் இல்ல சார். பதினொண்ணு இருபத்தஞ்சுக்குஅழுத்திடுவானாம்.

மானேஜர் : அப்போ கேஷையெல்லாம் கொடுத்திடு. வேறென்ன பண்றது?

காஷியர் : அதெப்படி தந்துடறது. நான் என்ன இளிச்சவாயனா? இந்த மாதிரி குண்டு கட்டிக்கிட்டு ஓர் ஆசாமி மிரட்டினான். ஆகவே கேஷையெல்லாம் அந்த ஆளிடம் ஒப்படைச்சிடுன்னு நீங்க ஆர்டர் டைப் பண்ணிக் கையெழுத்துப் போட்டுத் தாங்க. உங்க வாய் வார்த்தையை நம்பியெல்லாம் லட்சக்கணக்கான பணத்தை எவனுக்கோ தந்துவிட முடியாது. (அப்புசாமி உள்ளே நுழைகிறார்.)

மானேஜர் : யாருய்யாது? இப்படி இஷ்டத்துக்கு உள்ளே நுழையறது.

அப்புசாமி : இஷ்டத்துக்கு இல்லய்யா, கஷ்டத்துக்கு நுழையறேன். நான்தான் குண்டு மனுஷன்.

காஷியர் : காட்டேன்யா உன் குண்டை. நல்லாப் பார்க்கட்டும்.

மானேஜர் : (ஹாவ்வென்று கொட்டாவிவிட்டுக் கொண்டு) அட மண்டு! நான் பார்த்திருக்கேண்டா குண்டு. இதுக்கு முன்னாடி ஸ்ரீநகர்லேதான் மானேஜரா இருந்தேன். நான் பார்க்காத குண்டா. குண்டர்களா? தேச சேவைன்னு வந்துட்டால்…. ஆமாம் எத்தனை மணிக்கு குண்டை வெடிக்கப் போறே?

அப்புசாமி : என்னய்யா அக்கிரமம்? எல்லாரும் சாவகாசமா கதை கேட்கிறீங்க? இன்னும் நாலு நிமிஷம்தான் இருக்கும். அப்புறம் நான், நீ, காஷியர், கட்டடம், பாங்குக்கு வந்திருக்கிற பப்ளிக், நீ, உன் மூக்குக் கண்ணாடி எல்லாம்தூள்.

மானேஜர் : ஐயையோ! மூக்குக் கண்ணாடி தூளாயிடுமா? ·பிரேம் மட்டும் மூவாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய். ஸ்ரீ நகர்லே ஒரு கடத்தல்காரன்கிட்டே வாங்கினது. சரி, சரி, உமக்கு வேண்டியதென்ன? நீரே பயங்கரவாதியா? அல்லது பயங்கரவாதிகளின் ஏஜண்டா?

அப்புசாமி : இன்னும் நாலு நிமிஷம்தான் இருக்கு. குண்டு டிக்கு டிக்குங்குது.

மானேஜர் : ஹஹஹ! சும்மா குண்டு விடாதேயும். நான் எதையும் நம்பமாட்டேன். கொஞ்சம் இரும். காதை வைத்துக் கேட்கிறேன்.

(குண்டு மீது காதை வைத்துச் கேட்கிறார் மானேஜர்.)

அப்புசாமி : ஆகா! நீரல்லவா வீர புருஷன். உமக்கு பரம வீர சக்ரா பட்டம் கொடுக்க வேண்டும். அதோ ஆட்டோ கூட பிய்யாங்பிய்யாங்குனு ஹார்ன் அடிக்குது. வண்டி வந்துட்டுது. ரூபாய் நோட்டுக்களை பெட்டியிலே போட்டு சீக்கிரம் கொண்டு போய் ஆட்டோவில வையுங்க. ஆட்டோ நம்பர் 0034zy.

மானேஜர் : ஆகா! இத்தனை வயசிலும் என்ன ஒரு ஞாபக சக்தி. யோவ் காஷியர் சீக்கிரம் பணத்தைக் கட்டச் சொல்லுய்யா.  

காஷியர் : லாக்கர் ரூமிலே முப்பது லட்சம் இருக்கே. அதையும் குடுத்துடறதா?

மானேஜர் : அதையெல்லாம் ஏய்யா இந்த ஆளு எதிரிலே கேட்கறே?

காஷியர் : சத்தியமே வெல்லும் சார். ஸத்யமேவ ஜெயதே என்கிறதை மறந்துட்டீங்களா?

அப்புசாமி : ஐய்யோ! சீக்கிரம், சீக்கிரம். இன்னும் மூணு நிமிஷம் கூட இல்லே. இருக்கிற காஷைக் கொண்டு போங்கய்யா ஆட்டோவுக்கு. இல்லாட்டி ரிமோட்லே சுவிட்சை அமுக்கிடுவாங்க.

மானேஜர் : காஷியர், நீ போய் பணத்தைத் தயார் பண்ணி ஆட்டோவில் ஏற்று.

காஷியர் : ரைட்டிங்கிலே வரணும் சார் உத்தரவு.

மானேஜர் : சரி போய் ஸ்டெனோ மாலதியை உடனே அனுப்பு.

காஷியர் : மாலதி லீவாச்சே இன்னிக்கும் நாளைக்கும்.

மானேஜர் : அது எப்படி உமக்குத் தெரியும்?

காஷியர் : என் பொண்டாட்டி சார்.

மானேஜர் : உம்ம பொண்டாட்டி பேர் மல்லிகா இல்லையோ?

காஷியர் : ஹஹஹ! எனக்கு ரெண்டு சம்சாரமாச்சே! இங்கே வேலை செய்றவ மாலதி. கஸ்டம்ஸிலே வேலை செய்யறவ மல்லிகா.

அப்புசாமி : யோவ்! என்னங்கடா நினைச்சுக்கிட்டு நீங்க கவுண்டமணி – செந்தில் மாதிரி பேசிக்கிட்டிருக்கீங்க… நான் வயிற்றிலே குண்டைக் கட்டிக்கிட்டிருக்கேன். இன்னும் ரெண்டு நிமிஷம்தான் இருக்கு.

அப்புசாமியின் வயிற்றுக் குண்டிலிருந்து “கிர்ரிக்” என்ற ஒலி கேட்கிறது.

அப்புசாமி : ஐயோ! லாஸ்ட் சிக்னல் கொடுத்திட்டாங்க. இன்னும் ஒரே ஒரு நிமிஷம் தான் இருக்கு.

மானேஜரின் அறைக்கதவு “டொக் டொக்” என்று நாசூக்காகத் தட்டப்படுகிறது. சீதாப்பாட்டி!

சீதாப்பாட்டி : மே ஐ கமின் சார்.

மானேஜர் : ஐயோ! வராதீங்க! வராதீங்க!

காஷியர் : மேடம்! ஓடிடுங்க… ஓடிடுங்க…

அப்புசாமி : அடியே கியவி! எங்கேடி இப்போ வந்து சேர்ந்தே? ஓடிடு! ஓடிடு! பீஸ் பீஸாப் போயிடுவே. நீ பொல்லாத பிசாசுதான்னாலும் என் பொண்டாட்டி! நீண்டகாலம் இந்த மண்ணுலகில் விதவையாக இருந்து விட்டு பிறகு என்னை வந்து சேர்வாயாக….

சீதாப்பாட்டி : “என்ன பேத்தறீங்க? வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?”

அப்புசாமி : “பண்றேண்டி பானையும் சட்டியும். வயிற்றிலே குண்டைக் கட்டிவுட்டுட்டாங்க. இந்த ஆளுங்களோ ரூபா கட்டுகளை இப்பத்தான் எண்ணிக்கிட்டிருக்காங்க. சீதே! இன்னும் ஒரு நிமிஷத்திலே நாமெல்லாம் தூள் தூளாயிடுவோம்.

“சீதாப்பாட்டி : “மை காட்! உங்களை ஹ்யூமன் பாம் பண்ணிட்டாங்களா? அவங்க எங்கே சொல்லுங்க உடனே. உங்க உயிர் முக்கியமில்லை. அந்தத் தேச விரோத சக்திகளை உடனே கண்டுபிடிக்கப் போலீஸ¤க்கு உதவணும்.” சபா நாயகர் பி.டி.ஆர்:-

“காலையில் இரண்டு ரொட்டித் துண்டு இடையில் தேவைப்பட்டால் டீ. மதியம் வழக்கம்போல் சாம்பார்ச் சாதம், ரசம் சாதம். அவருக்குக் காய்கறி, பொரியல் என்றால் அலர்ஜி. அதனால மாலை 7 மணிக்கு ஏதாவது வெஜிடபிள் ‘சூப்’ செய்து கொடுத்து விடுவேன். இரவு சாதாரண எண்ணெய் இல்லாத சப்பாத்தி மூன்று. அதற்குத் தொட்டுக்க பச்சை மிளகாய், வெங்காயச் சட்னி.
 

காஷியர் : “தாயே! நீங்கதான் பாரத மாதா என்ன தேசப்பற்று! வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு! வந்தே மாதரம்! வந்தே…ய்… மாதரம்!

அப்புசாமி : “அடே காஷியர் பையா! குண்டு விழுந்துக்கிட்டிருக்கிற நேரத்திலே குளுகுளு ஐஸ்கிரீமா? நோட்டைத் தூக்கிக்கிட்டு ஓடுங்கடா? இதோ குண்டுகிட்டேருந்து இன்னொரு ஸிக்னல் டிர்ரிங்னு அடிக்குது பாரு. சீதே! சீதே! ஓடிடு! ஓடிடு! இரண்டாம் பெல்லும் அடுச்சிட்டுது. வீரத் தியாகியா நான் செத்துடறேன்.

சீதாப்பாட்டி : (அமைதியாக) “இப்படி கொஞ்சம் தனியா வாரீங்களா? உங்களோட கொஞ்சம் அந்தரங்கமாப் பேசணும்.”

அப்புசாமி: சீதே! வெடிச்சுச் சாகப்போறவன் மேலே இப்பத்தான் உனக்கு அன்பு ஏற்பட்டிருக்கு. அன்புன்னு நான் சொல்றது ஹிஹி! காதல்! லவ்! ஈரமான ரோஜாவே! து…து காரமான ரோஜாவே.”

சீதாப்பாட்டி : “மிஸ்டர் மானேஜர், காஷியர், நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் அறையைவிட்டு வெளியே போகிறீர்களா?”

அப்புசாமி : “சீதே! முதல் முத்தம் மாதிரி கடைசி முத்தம் கொடுத்து, என்னை அனுப்பி வைக்கப் போறியா? மனசுக்குள்ளே என் மேலே இத்தனை ஆசையா உனக்கு? உன் கர்வத்தைத் தவறா எடைபோட்டு, காலமெல்லாம் உன்னை எதிரியா நினைக்சுக் கசப்பாக்கிக் கொண்டுவிட்டேனே. என் கண்ணாட்டி… பாகற்காயென எண்ணிவிட்டேன். பாகுடி நீ கண்ணம்மா…”

சீதாப்பாட்டி : “மண்ணாங்கட்டி! நான் கேட்கப் போகிற கேள்விக்கு உண்மையை மறைக்காமல் பதில் சொல்லுங்க.”

மானேஜர், காஷியர் : “பொட்டிங்க தயார் ஆட்டோ நம்பர் என்னவோ சொன்னீங்களே…”

சீதாப்பாட்டி : “மிஸ்டர் மானேஜர்! ப்ளீஸ் வெயிட்!”

அப்புசாமி : “ஏண்டி வெயிட்டணும்? இன்னும் அரை நிமிஷம்கூட இல்லை.

காஷியர் : “நம்ம கடிகாரம் ·பாஸ்ட் சார். இன்னும் ஒன்றரை நிமிஷம் இருக்கு.”

சீதாப்பாட்டி : “தாங்க்யூ” ஒன்றரை நிமிஷம்… நைன்ட்டி செகண்ட்ஸ்… அதற்குள் எத்தனையோ சாதிக்க முடியும்!”

அப்புசாமி, மானேஜர், காஷியர் : “எப்படி?”

சீதாப்பாட்டி அப்புசாமியை, பிளாக்மார்க் டிக்கெட்காரனை ம·ப்டி போலீஸ் ஓரம் தள்ளிக்கொண்டு போவதுபோல ஒரு பக்கமாக அழைத்துச் சென்றாள். அதற்குள் அப்புசாமியின் வயிற்றிலிருந்த குண்டு, ‘கிர்ரிக் கிர்ரிக்கி கிர்க், என்று ஒலித்து தனது எச்சரிக்கையை மீண்டும் தெரிவித்தது.

“ஐயோ! சீதே!! அலறினார் அப்புசாமி. “இறுதி எச்சரிக்கை! இன்னும் அரை நிமிஷத்தில் நாம் தூள் பக்கோடாவா ஆகிவிடப்போறோம். மரணத்திலாவது ரெண்டு பேரும் இணைவோம். என்னைக் கட்டிப்பிடிச்சுக்கோ. ‘இன்னும் எத்தனை ஜென்மமெடுத்தாலும் நீ எனக்குப் பெண்டாட்டியாக வரக்கூடாது’ என்று சொல்லிக் கொண்டே பீஸ் பீஸாகப் போறேன். சீதே! சீதே! இன்னும் கால் நிமிஷம்தான் இருக்கிறது.”

சீதாப்பாட்டி பதற்றமில்லாமல், அப்ஸல்யூட் மெஜாரிட்டி கிடைத்த ஆட்சிபோல, அலட்டிக் கொள்ளாமல் இருந்தாள். “மரியாதையாக உண்மையைச் சொல்லி விடுங்கள். ஆர் யு நாட் அஷேம்ட் ஆ·ப் திஸ் கைன்ட் ஆ·ப் சீட்டிங்? இது ரொம்ப ஸீரியஸ் அ·பென்ஸ். திஸ் மச் ஆ·ப் துணிச்சலும் ஐடியாவும் உங்களுக்கு எப்படி வந்தது?”

“சீதே! நீ என்ன சொல்றே?”

“என்ன சொல்கிறேனா? இது போலி குண்டுதானே? ஹியூமன் பாமாக்கும், அதாக்கும், இதாக்கும் என்று மிரட்டி பேங்க்கையே கொள்ளை அடிக்கப் பார்க்கிறீர்களா?”

“சீதா! என்னடி சொல்றே? இன்னும் அரைக்கால் நிமிஷத்திலே தூள் தூளாகப் போகிறேன். இப்பக் கூடத் திட்டறியே. இப்படிப்பட்ட தேச விரோத காரியமெல்லாம் நான் செய்வேனாடி? உனக்குக் கண்ணு பொட்டையில்லேன்னா, ஜன்னல் வழியா எட்டிப் பார். பாங்க் வாசலின் பின்னாலே 0034ZY நம்பருள்ள ஓர் ஆட்டோவும், ரெண்டு பயங்கரவாதிகளும் காத்திருக்கிறது தெரியும். எனக்குக் குண்டைக் கட்டி அனுப்பியது அவர்கள்தான். ரிமோட் கண்ட்ரோலரை அழுத்திட்டாஙகன்னா நான் பலூன் மாதிரி வெடிச்சுப் போயிடுவேன் சீதே. பிராணனை விடறதுக்கு முன்னே அவசரமாகக் கேட்கிறேன். ‘பிராண நாதா’ன்னு பிரியமா ஒரே ஒரு தரம் என்னைக் கூப்பிடு. மூணுதரம் கூப்பிட டயம் இருக்குமோ, இருக்காதோ?” -அப்புசாமி தன் கண்ணைத் துடைத்துக் கொள்வதற்குப் பதில் மறந்து போய் சீதாப்பாட்டியின் கண்ணைத் துடைத்தார். பாட்டி சரேலென விலகிக்கொண்டாள்.

நான் உங்களை நாதான்’னு கூப்பிடத் தயாரில்லை. நீங்க பலூன் மாதிரி வெடித்தாலும் சரி, பம்ப்கின் மாதிரி ப்ர்ஸ்ட் ஆனாலும் சரி. தீவிரவாதக் கும்பலோடு சேர்ந்ததற்கு வெடித்தே சாவுங்கள். நீங்கள் வெடித்துச் செத்த பிறகும் கூட, உங்களைக் கணவர் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஒரு சொட்டுக் கண்ணீர் விடமாட்டேன். நோ ரிக்ரெட்ஸ், இன்னும் பெரிசா குங்குமம் வைத்துக் கொள்வேன். பூச்சூடி மகிழ்வேன். புதிதாக வைரத்தோடு போட்டுக் கொள்வேன். நானே இந்தக் குண்டின் பட்டனை அழுத்தப் போறேன்.”

“அடியே பாவி! தொடாதே! தொடாதே! புருஷனையே கொலை பண்ணினாள் என்கிற கெட்ட பெயர் வேண்டாம்டி. எப்படியும் இன்னும் அரைக்கால் செகண்டில் தானாக வெடிக்கப்போகிறது. அந்த அரைக்கால் வினாடிக்குள் ஒரு சொட்டுக் கண்ணீரை எப்படியாவது சிந்தி, இத்தனை யுகமாக என்னை அடிமைப்படுத்தி, கேவலப்படுத்திக் கொண்டிருந்த பாவத்திலிருந்து உன்னை விடுவித்துக்கொள். இல்லாவிட்டால் இரண்டு பேரும் ஆவியான பின்னும் இதே மாதிரி சண்டை போட்டுக்கொண்டிருப்போம்.”

அப்புசாமி பேசிக்கொண்டிருக்கும் போதே சீதாப்பாட்டி அவசரமாக மானேஜரிடம் சென்றாள். அவர் தலைமையில் ஜரூராக ரூபாய் நோட்டுக் கற்றைகள் பெட்டியில் அடுக்கப்பட்டு, பாங்கின் பின்புறமுள்ள வாசலுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.

சீதாப்பாட்டி, “மிஸ்டர் மானேஜர்! ப்ளீஸ் கரென்ஸிக் கற்றைகளை பழையபடி லாக்கரில் வைக்கச் சொல்லுங்கள். த பாங்க் இஸ் நாட் பார்ட்டிங் வித் இட்ஸ் மணி” என்றாள். சுப்பு ஆறுமுகம்:-
“இறைவனிடம் கேட்டுப் பெறுவதற்குக் கூட்டுப்பிராத்தனையே சிறந்தது. கோரஸாகப் பாடும் சேர்ந்திசையில் சுருதி பேதங்கள் தெரிவதில்லை. அது போல, கூட்டுப் பிரார்த்தனையில் பங்கு பெறுபவர்களின் மன நிலைகள் சற்று வேறுபட்டாலும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்யும்போது பேதங்கள் தெரிவதில்லை.”
 

மானேஜருக்குக் கை உதறிக்கொண்டிருந்ததது. “மேடம் எட்டிப் பாருங்கள். பயங்கரவாதிகளின் ஆட்டோ தெரிவதை. ரிமோட் கண்ட்ரோலைக் கையில் வைத்துக் கொண்டு, இரண்டுபேர் இருப்பதைப் பார்க்கிறேன். ஒருத்தன் சிவப்புச் சட்டை. இன்னொருத்தன் ப்ளூ கோடு போட்ட…”

“மிஸ்டர் மானேஜர், தாங்க்யூ ·பார் யுவர் ரன்னிங் கமென்ட்ரி. எது எப்படி ஆனாலும், இந்தத் தெருவே பொடிப் பொடியாக ப்ளாஸ்ட் ஆனாலும், அவர்களுக்கு நாம் பணம் தரப்போவதில்லை” என்றவள், பொறுமையாக அவரை அழைத்துக் காதோடு ஏதோ சென்னாள்.

அப்புசாமி சிறிது தூரத்திலிருந்து, “அடியே கியவி! அவன் காதை ஏண்டி கடிக்கிறே? என் குண்டு பட்டனை அவனைவிட்டு அழுத்தச் சொல்லப் போறியா? துரோகி… அப்படிப் பண்ணினால் மட்டும் கணவனைக் கொலை பண்ணின பாவத்திலிருந்து டபாய்ச்சுடலாம் என்று நினைத்து விடாதே. நீயும் வெடிச்சு ஆவியாயிடுவே. நானும் வெடிச்சு ஆவியாயிடுவேன். ஆவிக்கும் ஆவிக்கும் போர்! போர்! போர்! புனிதன் காந்தி வந்ததிசையிலே போர்! போர்! போர்!”

மானேஜர், “மேடம்! இவ்வளவு ரிஸ்க் எடுத்துக் கொள்ளலாமா?” என்றார் நடுக்கத்துடன்.

“டோன்ட் ஒர்ரி மை டியர் ஜென்டில்மேன். யாரோ டாமில் ஸ்காலர் சொன்ன மாதிரி, கோழைகள் கோடிதரம் சாகிறார்கள். நான் சொன்ன மாதிரி செய்யுங்கள். க்விக்!”

அடுத்த கணம் பெட்டிகளிலிருந்த ரூபாய் கட்டுகள் அவசர அவசரமாக நீக்கப்பட்டு, அதற்குப் பதில் பாங்கின் கனத்த கணக்குப் பேரேடுகள் பெட்டியில் வைத்து மூடப்பட்டன. அவசரப் போலீஸ¤க்குப் ·போன் செய்யப்பட்டது.

“எஸ் ஜென்டில்மேன்” என்றாள் சீதாப்பாட்டி. அப்புசாமியிடம் “வி கேன் ப்ரொஸீட்… எல்லாம் ரெடி.”

அதற்குள் குண்டுக்குள்ளிருந்து இறுதி எச்சரிக்கை மணியாக, ‘கிர்ர்ர்ரிங்!’ என்ற நீண்ட ஒலி எழும்பியது.

“ஐயோ! நான் செத்தேன்!” என்று அப்புசாமி சீதாப்பாட்டியைக் கபாலென்று கட்டிக்கொண்டார்.

“ஸ்டுப்பிட்!” என்று கரப்பான் பூச்சியை உதறுவது போல உதறினாள். “கொஞ்சம் டீசன்ட்டாகப் பழகுங்க.”

“சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம். கட்டினவள் கணுக்கால் ஆழம். ஆமாம்…இன்னும் ஏன் நான் வெடிச்சுச் சாகலை?”

“இந்த ஆபரேசன் ஹ்யூமன் பாம் முயற்சி முறியடிக்கப்பட்டதும், எவ்ரி திங் வில் பி எக்ஸ்ப்ளெயிண்ட்,”

பத்திரிகைகளில் மறுநாள் பரபரப்பாகக் கீழ்வரும் செய்தி வெளியாகியிருந்தது.

‘வீரப் பெண்மணி சீதாவின் சாகஸம்! மனித குண்டுக் கும்பலைக் கூண்டோடு பிடிக்க உதவினார்! பதினைந்து லட்ச ரூபாய் காப்பாற்றப்பட்டது!,

…நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு முக்கிய வங்கியில் பட்டப்பகலில் பயங்கரவாதக் கும்பல் ஒன்று ஓர் ஆசாமியின் வயிற்றில் போலியான வெடிகுண்டைக் கட்டி வங்கியை நடுக்கவைத்தனர்.

அப்பாவி!

Print Friendly, PDF & Email

1 thought on “ஹியூமன் பாம் அப்புசாமி

  1. ஹாஹாஹாஹா
    அருமையாக இருந்தது bom வெடித்து விடும் என்று நான் என்னையது தவறு .. அது போலி ஹஹஹஹ ஆனால் கதை பிரமாதம் … வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *