விளாத்தி நிலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,227 
 

இரவு முழுக்;க சந்நதமாடிய உணர்ச்சித் தெறிப்புகளில் அலுத்துக் கிடந்த உடம்பைத் திருகி வளைத்து முறிவெடுத்தபடி நித்திரை கலைந்து பாயிலிருந்து எழுந்து குடிசையைவிட்டு வெளியே வந்தாள் வண்ணக்கிளி. நெடுங் கல் தெருவிலிருந்து கிளை பிரியும் அந்தச் சந்தியில் முதல்நாள் முன்னிரவில் பறை முழக்கியது கேட்டிருந்தது. அன்றைய வெள்ளிக்கிழமை மாலையில் ஏதோ கோவிலின் கழிப்பு நடந்திருக்கவேண்டும் என்ற நிச்சயத்தோடு திரும்பியவளின் பார்வையில் பாதியாய் வெட்டப்பட்ட நீர்பூசணியின் வெண்சுதையில் அப்பியிருந்த குங்குமத்தின் செம்மை பட்டது.

அவள் திரும்பி ஒத்தாப்பில் அடுப்பை மூட்டி தேத்தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து வழக்கம்போல் வாசலில் குந்தினாள்.

அந்த இடத்திலிருந்து தேத்தண்ணீர் குடித்தபடி மனத்திலெழக்கூடிய நினைவுகளை மீட்டுக்கொண்டு, நாளின் கிரியைகளைத் துவங்குவது அவளின் நித்திய கருமம்.

குடிசைக்குப் பின்னால் கட்டிநின்ற மறிஆடு செத்தையில் உராய்ந்து தினவெடுத்தது கேட்டது. ஒரு மாதமாகக் கத்தித் தொலைத்துக்கொண்டிருந்த ஆடு இப்போதெல்லாம் கத்துவதில்லை. போன கிழமைதான் ‘கிடாய்க்கு விட’ கொண்டுபோய் வந்திருந்தாள். ஆடு அமைதியாகியது என்னவோ நடந்தது. அவளுடம்புதான் அமரெடுத்து ஆடத் துவங்கியிருந்தது. அடுத்தடுத்த வெள்ளியில் அவளது கணவன் வீட்டுக்கு வரப்போகிறான்தானேயென உணர்ச்சிகளை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு மாலையில் சங்கக் கடைக்குப் போன இடத்தில்தான் யாரினதோ பேச்சில் மாசக் கடைசியென்ற சொல் அடிபட்டு, வரப்போவதுதான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதை அவளுக்கு ஞாபகமாக்கியது. அப்படியானால் அந்த வெள்ளிக் கிழமைதான் அவளது கணவன் இரண்டு மாதங்களின் பின் வீடு வரப்போகிற நாள்.

உடம்பு சுமக்கும் உணர்ச்சிகளையும், மனம் சுமக்கும் ஏக்கங்களையும் எண்ண அவளுக்கே வியப்பாக இருந்தது.

காதுக்கு எட்டாமல் அவள்மீது வசை சொல்லித் திரிகிறாளாம் அவளுக்குப் பெரியம்மா முறைக்காரி ஒருத்தி. ‘அவளுக்கு அரிப்படி, அதுதான் ஒருத்தரையும் அசண்டை பண்ணாமல் திரியிறாள்’ என பெரியம்மா வசவு சொல்வதை யாரோ சொல்லி அறிந்ததிலிருந்து, ‘எனக்கு அரிப்புத்தானே’ என மனத்துக்குள் எண்ணி, மனத்துக்குள்ளாகவே சிரித்துக்கொள்கிறாள் வண்ணக்கிளி.

நேற்றைய வெள்ளிக்கிழமை மாலையிலேயே அவளது கணவன் வீடு வந்திருக்கவேண்டும். இருட்டி வெகுநேரம்வரை காத்திருந்தாள். காற்றின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் முற்றத்தை எட்டிஎட்டிப் பார்த்து ஏமாந்துகொண்டிருந்தாள்.

எப்படியும் அன்றைக்கு வந்துவிடுவானென அந்த அதிகாலையில் அவளால் நம்ப முடிந்தது. ‘இண்டைக்கு எப்பிடியும் அமர் அடங்கியிடும்’.

அவள் எழுந்துபோய் தேநீரும் பனங்கட்டியுமாய் மறுபடி வந்து பழைய இடத்தில் அமர்ந்தாள்.
இரவு ஒரு பேயைப்போலத்தான் காமம் அவளை உருட்டி எடுத்திருந்தது. அதிகாலையில் சந்தைக்குச் செல்லும் வத்தாளங்கிழங்கு ஏற்றிய வண்டிகளின் சத்தம் கேட்ட பின்னர்தானே தூக்கமே சற்றுப் பிடித்திருந்தது.

விளாத்தி மரங்களுக்கூடாக வழக்கம்போல் வெளித்துக்கிடந்த எதிர்ப்புறத்தில் சூரியனின் ஊமை வெளிச்சம் வண்ணக்கிளியின் கண்களில் தெறித்தது. குழிக்கல் சிவன் கோவிலின் கோபுர மணி டாணென ஓசை எழுப்பியது. பண்டிதர் வீட்டில் வார விடுமுறைக் காலைகளில் தமிழ் படிக்க வரும் மாணவர்களின் மனன அப்பியாசக் குரல் காற்று வழியில் தீர்க்கமாய் எழுந்தது: ‘நிலத்தியல்பால்… நீர் திரிந்து… அற்றாகும்..’

பார்வை நீண்டு கிடந்த நெடும் கல் தெருவில் படிகிறது. பார்த்துப் பார்த்து நேற்று அவளது பார்வையைப் பூர்க்கவைத்த தெரு அது. வெறுப்பாக இருக்கிறது அவளுக்கு. அதன் மறுமுனையிலேதான் குழிக்கல் இருந்தது. அதற்குமப்பால் ஜாவகர் சேரியாயிருந்த நகரம். அந்த நெடும் கல் தெருவின் தொங்கலில் குறுக்காகக் கிடந்தது, மக்கி போட்டு உயர்த்திய சாலை. அண்மையில்தான் அந்தச் சாலையிலே ஓடத் தொடங்கியிருந்தது இ.போ.ச. என்ற எழுத்துக்கள் பளுவில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பஸ். அதையும், ஊரே திரண்டு போய் புழுதிப்படலம் கிளர்த்தி வந்த வாகனத்தைக் கண்டுவந்தபோது, இருந்த இடத்திலிருந்தே கண்டு அடங்கியிருந்தாள் அவள். அந்த இரண்டு ஊர்களையும் சுற்றிச் சென்றுவந்தது பஸ். நெடும் கல் தெருவில் வண்டிகளும் சைக்கிள்களும் போய்வந்தன. வயல்கல் பள்ளிக்கூடத்திற்கு தலைமையாசிரியராக இருந்த பொன்னையா வாத்தியாரின் மோட்டார்ச் சைக்கிளும் போய்வந்தது.

வயல்கல், குழிக்கல் என்ற அந்த இரு கிராமங்களையும் இணைத்துக் கிடந்தவை வெறுமனே இடையிட்டோடிய கல் ரோடுகளும், பூமியின் மேனி பரவிக் கிடந்த கற்பாறைகளும், அவை குளங்களாய்க் கோலியிருந்த மழைநீர்த் தேக்கங்களும் மட்டுமில்லை, தொட்டம் தொட்டமாய்க் கிடந்த பசிய தோட்டங்களும்கூடவாகும். காலம் அந்தக் கிராமங்களின் வயதை, தேய்ந்தும் அரித்தெடுத்து அப்புறப்படுத்தப் பட்டதிலும் கல் அரிதாகி பயிர் விளைந்துகொண்டிருந்த நிலத்தில் எழுதியிருந்தது.
பூமியில் விளைந்திருந்த கல்லுகளைக் கிண்டி, அரித்தெடுத்தல் ஒரு காலத்தில் வீட்டுத் தொழிலாக இருந்தது அந்தக் கிராமங்களில். புதர் அடர்ந்த வெளிகளில் கரும்பையும், சூரையும், கொழுக்கியும், ஈஞ்சும் முள் எறிந்து காற்றைக் கிழித்து நின்றிருந்தன. அம் முட்களின் கொடுமுனைகளுக்குப் பயந்துபோல்தான் தென்றல் பெரும்பாலும் அந் நிலங்களில் உலா மறுத்திருந்தது. எப்பவாவது ஒருமுறை மேல் காற்றாய் ஒரு ஓட்டம், அவ்வளவுதான். மற்றப்படி வெறிகொண்டு புயலாய் வீசினால்தான் நிலம் தழுவும் காற்று அங்கே இருப்புக் காட்டும்.

அந்தக் கிராமங்களிலிருந்துதான் ஈச்சம் பழம் விற்பனைக்காக நகரத்துச் சந்தைக்குச் செல்கிறது. வெளிகளிலும், வளவுகளிலும் இன்னும் அடர்த்தியாக வளர்ந்தன பனையும், விளாத்தியும். பனைகள் நெடுவாக வளர்ந்து வானமளாவி அங்கு வளர்வதில்லை. வறட்சியின் திமிறலாய் வடலிகளாகவே மண்டி நிறைந்திருந்தன. இலங்கையின் வடமாகாணத்தில் அதிகமாகவும் விளாம்பழங்கள் அப்பகுதி மரங்களிலிருந்தே பெறப்பட்டன. பனைகளைவிடவும் அந்தப் பகுதிகளின் அடையாள விருட்சம் விளாத்தி மரமே. நல்லூர் ராஜதானியாகவிருந்த முடியரசுக் காலத்தில் அப் பகுதிகளில்தான் அரச யானைக் கொட்டடிகள் இருந்தன என்ற பேச்சுக்களை, அப் பகுதி விளாத்திகளின் விருத்தியிலிருந்தும் வரலாறாய் விளங்கிக்கொள்ள முடியும்.

கோடையில் வெயில் கனக்கத் தொடங்கும். பங்குனியில் கூரை தீப்பிடிக்கிற அளவுக்கு உக்கிரமாயிருக்கும். கரும்பையும், கொளுக்கியும், சூரையும், ஈஞ்சும், விளாத்தியும் வறண்டு தண்டுகளாய் தடிகளாய் நீண்டு பிராண யுத்தம் புரிந்துகொண்டிருக்கும்.

மற்றைய அயற்கிராமங்களிலிருந்து வளப்பமும், வாழ்முறையும் வித்தியாசப்படும் இந்த விளாத்தி நிலக் கிராமங்கள் ஓலைக் குடிசைகளும், சில மண் சுவர் வீடுகளும், சில சுண்ணாம்புக் கல் வீடுகளுமாய் இருந்தன. நீண்ட இடைவெளிகள் நிறைந்திருந்தன வீடுகளுக்கிடையில். ஒரு வயல்வெளியின் இக்கரையிலிருந்து பார்த்தால் மறுகரையில் நகரத்துக்கோ வேறெங்கோ சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு மனிதவுருவின் விறுவிறு நடை தெரியும். இன்னொரு புறத்தில் தரைவை நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனதோ சிறுமியினதோ உருவம் கண்ணில்படும். மதியத்தில் அடங்கிவிடுகிற இக் கிராமங்கள் காலையும் மாலையும்தான் உயிர்த்திருப்பன. இரவில் இது உறங்கிவிடும். மொத்தத்தில் அசலனமும், நிசப்தமும் இக் கிராமங்களில் மனித இருப்பைச் சந்தேகமாக்குபவை.

இவற்றுக்கு ஒரு விசேடமுண்டு. சனிக்கிழமைப் பெருஞ் சந்தைக்கும், செவ்வாய் வியாழன்களின் சிறு சந்தைகளுக்கும் அந்தக் கிராமங்களுக்கிடையே கிடந்த நெடும் கல் தெருவால் போய்வரும் அயல் கிராமத்துப் பாதசாரிகளாலும் வண்டிகளாலும் அவை கொள்ளும் சலனமும், சத்தமும்தான் அது. சலங்கைகள் குலுங்கக் குலுங்கச் செல்லும் வண்டிகளுக்குப் பின்னால் சத்தமிட்டோடும் சிறுவர்கள்போல நாய்களும் குரைத்துச் செல்லும்.

காக்கி நிற கழிசானும், வெள்ளைச் சட்டையும் இல்லாததாலேயே பள்ளிக்குச் செல்லாதிருக்கும் சிறுவர்களின் தொகை ஏனைய கிராமங்களைவிட அந்த இரண்டு கிராமங்களிலும் அதிகம். ஒரு தலைமையாசிரியருக்கும், மூன்று உபாத்திகளுக்கும் ஐம்பது மாணவர்களைக்கூட கொண்டிராத மூன்று பள்ளிக்கூடங்கள் அந்தக் கிராமங்களில் இருந்தன. அவற்றைவிட இரண்டு சங்கக் கடைகளும். மக்கள் கூடியதும் பேசியதும் பெரும்பாலும் சங்கக்கடைகளிலேதான். இவற்றைவிட அங்கே இருந்த இன்னொரு விசே~ம் எந்தக் கிராமங்களிலும் இல்லாத அளவுக்கு அந்த வயல்கல், குழிக்கல் கிராமங்களில் இருந்த கோயில்களின் எண்ணிக்கைதான். காலை மாலைகளில் பெருங்கோவில்களில் கோபுர மணிகள் இசைவெள்ளம் கிளர்த்தின. சிறுதெய்வங்களான அம்மன், காளி, வைரவர், ஐயனார் கோவில்களில் பூசாரிகளால் கிணுகிணுவென கை மணியொலித்து தீபாராதனை காட்டி சேவித்தல்கள் நடந்தன.

வண்ணக்கிளியின் வளவிலேயே வேப்பமரத்தின் கீழ் எப்போதோ பிரதி~;டை செய்யப்பட்டு, மாதக் கணக்கில் பூஜை செய்யப்படாத ஒரு செம்பட்டுத் துணி கட்டிய ஒரு அம்மன் குடியிருக்கிறாள். அவள் திருமணம் முடித்த அந்த மூன்று வருட காலத்திலேதான் மெல்லமெல்லவாய் அம்மன் பூஜை அரிதாகிக்கொண்டே வந்திருக்கிறது.

திருநீறு சந்தனப் பூச்சுக்களும், மரக்கறி உணவுமாய் ஆசாரம் காத்த ஒரு கூட்டம் ஒருபுறமெனில், சைவ சமயிகளாயிருந்தும் மாமிச போ~கர்களாயும் கள் அருந்துபவர்களாயும் மறுபுறத்தில் ஒரு கூட்டமிருந்தது. அவளது கணவன் சாம்பசிவத்துக்கு இந்த இரண்டு பழக்கங்களும் இருந்ததை அறிந்த தருணத்திலிருந்துதான் அவளுடன் கண்ட இடங்களில் நின்று கதைத்தாவது வந்த அவளது உறவுகள் கதை முறித்தன என்பதை அவள் மறக்கவில்லை. வீட்டிலே மீன் கறி சமைத்த நாட்களில் வழமையைவிட அந்த ஊர் அமைதிப்பட்டு மூச்சை மெல்லியதாக்கி அடக்கம் கொண்டுவிடுதாய்த் தனக்குத் தோன்றியிருந்ததையும் வண்ணக்கிளி நினைத்துப் பார்த்தாள்.

நெடும் கல் தெருவில், கல் அம்மனில் பார்வை பதித்து நினைவுகளில் மீண்டெழுந்தவள் சூரியன் அன்று மேகங்களில் மறைந்து நின்று உதிக்கத் தாமதமாவதைக் கண்டுகொண்டு எழுந்து தன் சிறுதோட்டத்துக்கு வந்தாள். முதல் நாள் பாத்தி கட்டி குறையாக விட்டிருந்த மிளகாய், கத்தரி, தக்காளிக் கன்றுகளுக்கு பாத்திகட்ட தொடங்கினாள்.

பெரிய தோட்டமில்லை. ஆனாலும் உழைத்துப் பிழைக்கிற அவசியம் இருக்கிறவர்களுக்கும், வேறு வேலை இல்லாதவர்களுக்கும், வேறு வேலை முடியாதவர்களுக்கும் அந்தநேரத்தில் எழும்பி தோட்டத்துள் இறங்குவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை. வண்ணக்கிளி ஒன்பது பத்து வயதிலிருந்து அவ்வாறுதான் இயங்கிக்கொண்டிருக்கிறாள்.

மேனி அன்றைக்கு அந்த அதிகாலையிலேயே வியர்க்கத் தொடங்கியிருந்தது. கோடை ஆரம்பித்திருந்தாலும் அது அதுவரை காலத்தில் இயல்பில்லாத வெம்மையென்பதை வண்ணக்கிளி உணர்ந்தாள்.

திடீரென போன வாரம்போல அந்த வாரமும் வராது போய்விடுவானோ தன் கணவன் என்ற நினைப்போடியது அவளிடத்தில். அல்லது முந்திய காலங்களில்போல் சரசு வீடு போய் நின்று, தின்று குடித்து, கூத்தாடிவிட்டுத்தான் வருவானோ? அவளது நெஞ்சுக்குள் நெருஞ்சிகள் முறிந்தன.
அதுவரை வருவானென்று கொண்டிருந்த நம்பிக்கை அவநம்பிக்கையாய் இழுபட ஆரம்பித்தது. அவள் தன்னை ஆசுவாசப்படுத்த முனைந்தாள். ஆனாலும் மனம் அடங்க மறுத்து அடம்பிடித்தது.
அவ்வளவு எதிர்பார்ப்பை திருமணமான அந்த மூன்று ஆண்டுக் காலத்தில் அவள் கொண்டிருந்ததில்லை. போன வாரத்தில் அடங்கி சாந்தம் கொண்டிருந்திருக்க வேண்டிய உடம்பு அது.

அடங்குமென்றிருந்ததனாலேயே அன்றைக்கு அதீத வெறிகொண்டு அலையாடி நின்றிருந்தது.
அவளுடைய வீட்டுக்கு முன்னும் பின்னுமாயுள்ள முக்கால்வாசி வீடுகளும் அவளது உறவினர்களதே. அவர்களும் உறவினளாய் அவளை அணைத்துக்கொள்ளப் போவதில்லை. அவளும் ஆறுதல் வார்த்தைக்கேனும் அவர்களை அணுகப் போவதில்லை. ஆனாலும் அவள் கண்டுகொண்டிருக்கிறாள், அந்த வீட்டுப் பெண்களெல்லாம் எப்படி விரதம், கோயில், குளமென வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என.

அவர்கள்போல் அவள் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. அவள் அம்மாகூட அவ்வாறு வாழ்ந்து அவள் கண்டதில்லை. கோயில் கோயில் எனச் சொல்லிக்கொண்டு சந்நிதியும், நல்லூரும், வல்லிபுரமுமாய் அவள் அலைந்துகொண்டிருந்தாள்தான். அந்த வளவுக்குள்ளேயே ஒரு குடிசைக் கோயில் அமைத்து அவள் தெய்வ ஆராதனை செய்துவந்தாள்கூட. நெற்றி நிறைந்த குங்குமம், சந்தனப் பொட்டுகளாய் நாளெல்லாம் அவள் பூசனைக் கோலத்தில் திரிந்தாள்தான். ஊரிலும், அயலூர்களிலும் அவளைக் கோயிலம்மாவென்று அழைக்கவும் செய்தார்கள்தான். ஆனாலும் அவளை யாரும் உள்ளுக்குள்ளாய் மதித்திருக்கவில்லை என்பதை வண்ணக்கிளி அறிவாள்.

சின்ன வயதில் அது ஏனென அவள் எண்ணியதில்லை. எண்ணுகிற வயது வந்து எண்ணியதில் அவளுக்கு அந்தக் காரணம் புரிந்தது.

பிறந்ததிலிருந்து அப்பாவென யாரையும் வண்ணக்கிளி அறிந்ததில்லை. எப்போதாவது இருந்துவிட்டு ஒருமுறை ஒரு மாமா வந்து வீட்டிலே சிலநாட்கள் தங்கிப்போவதை அவள் விளங்கிக்கொண்டாள். அந்த மாமாக்களும் அதே திருநீறு, குங்கும சந்தன பூச்சுக்களுடனேயே இருந்தார்கள். சுவாமியென்று யாரும் அவர்களுடன் முகங்கொடுத்துப் பேசியதில்லை. அந்த அகௌரவ நிலையே அன்றுவரை தொடர்வதை வண்ணக்கிளி அறியவே செய்கிறாள்.

என்றுமே அவள் கண்டிராத தந்தை, ஒரு காலத்தில் ஒரு சின்னப் பள்ளியிலே உபாத்தியாயராய் இருந்ததாய் பாட்டி சொல்லி அவள் அறிந்திருக்கிறாள். பின்னாலேதான் வேலை பறிபோய் அவர் முழுநேரக் கமக்காரனாய் ஆனாராம். அந்த நிகழ்வுகூட அவள் மனத்தில் அழியாமலேதான் இருக்கிறது.
ஒருநாள் அவளது தந்தை வகுப்பிலே பாடம் எடுத்துக்கொண்டிருந்த நேரம், அந்தப் பாடசாலைக்கு கல்விப் பரிசோதகர் வருகிறார். அவரே மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். காலையிலெழுந்து கால் முகம் கழுவி கடவுளைக் கும்பிடவேண்டும், பின் பாடம் படிக்கவேண்டும் எனப் போதிக்கிறார். வாத்தியார் சிரிக்கிறார். இடுப்பில் நாலு முழத் துண்டும் தோளில் ஒரு துவாயமாய் நின்றிருக்கும் ஒரு வாத்தி தான் பாடம் நடத்தும் வேளையில் அனுசிதமாய்ச் சிரிப்பது கண்டு, பரிசோதகர் காரணம் கேட்கிறார். அதற்கு அந்த வாத்தியார் தன் சிரிப்பு மாறாமலே, ‘காலையிலெழுந்து கால் முகம் கழுவி கடவுளைக் கும்பிட்டு பாடம் படிக்கத் துவங்கவேணுமெண்டு சொல்லுறியளே, மிச்சமான முக்கால் முகத்தை என்ன ஐயா செய்யிறது?’ என்று கேட்கிறார். பரிசோதகருடன் அவரது பை, கோப்புகளை எடுத்துவந்து அங்கே நின்றிருந்த கார்ச் சாரதி அது கேட்டு கொல்லெனச் சிரிக்கிறார். மாணவர்களும் ஒரு விகடம் நடந்தது உணர்ந்து சிரிக்கிறார்கள். நெருப்பாக எரிகிறார் பரிசோதகர். அவ்வளவுதான். மாதம் மூன்று பவுண் ஊதியம் தந்துகொண்டிருந்த வாத்தியார் வேலை பறிபோய்விடுகிறது வண்ணக்கிளியின் தந்தைக்கு.

அவர் மிகவும் குள்ளமாக இருந்ததாக ஊரிலே பலரதும் பேச்சுகளுக்கிடையில் அவள் கிரகித்திருக்கிறாள். அம்மாவின் வளர்ச்சிக்கு அவர் ஆட்டுக்கல்லுக்கு குழவிபோல இருந்திருப்பாரென நினைத்து அவள் ரகசியத்தில் சிரிக்கவும் செய்திருக்கிறாள். அம்மா சாப்பாடு கொடுக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினாளென தெரிந்த பாட்டி ஒருத்தி கூறியதை அவரின் உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கையில் வண்ணக்கிளிக்கு நம்பக்கூடியதாகவே இருந்தது.

அப்பா கூறாமலும், கூசாமலும் சந்நியாசம் கொண்டாராம். அம்மா அதன் பிறகு வாழ்ந்தலைந்தாளாம். அவளும் திடீரென ஒருநாள் காணாமல்தான் போனாள்.

நார் உரிக்காத பனை மட்டைபோல நெடிய, தாயாரைவிடவும் வெள்ளிய உடம்பு அவளுக்கு. கறுகறுத்து நீண்ட கூந்தல். கவனிப்பற்று வெயிலிலும் தூசியிலுமாய் புலுண்டத் தொடங்கியிருந்தும் அழகானதாகவே இருந்தது அவள் எண்ணெய் பூசி வாரியிழுத்திருக்கும் பொழுதிலும், முழுகிவிட்டு அலைபாய அதை விரித்திருக்கும் பொழுதிலும். வெற்றிலை போட்டுச் சிவந்த அதரங்கள். பற்களின் ஈறுகள் காவிக்கறை படிந்திருந்தன. அவள் சிரிக்க நிறைய அவள் வாழ்வில் நிகழ்ந்திருக்கவில்லையெனினும், ஏதாவது ஒருபொழுதில் அவள் சிரிக்க நேர்ந்த சமயங்களில் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாக இருந்தன. இருந்தும் அவள் பெரும்பாலும் தனியேதான் இரவில் படுத்தெழும்புகிறாள். தனிமை துயரமாகியிருக்கிறதே தவிர அவளின் தனிமை எப்போதும் பயங்கொண்டிருந்ததில்லை.

கல்யாணமான அடுத்த மாதம் அவளைத் தனியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவதை நினைத்து அவளது கணவன் தயங்கியபோது, அவள்தான் அவனை ஆசுவாசம் செய்து பேசினாள்: ‘என்ர அம்மாவும் நான் பிறக்கிறவரைக்கும் தனியனாய்த்தான் இந்த வீட்டிலை படுத்தெழும்பிக்கொண்டு இருந்தாவாம். ஒருநாள் எங்கயோ அவ காணாமல்போன பிறகு நானும் இத்தனை காலமாய்த் தனியனாய்த்தான். தெரிஞ்ச பாட்டி ஒராள் ராவில கொஞ்சக் காலம் வந்து படுத்துது. அது செத்துப்போன பிறகு ஆருமில்லை. நீங்கள் யோசிக்காமல் போட்டு வாருங்கோ.’

அவளுடைய கணவன் சாம்பசிவத்துக்கு ஓமந்தை அரசினர் பாடசாலையில் வேலை. அங்கேயே ஒரு வீட்டில் தங்கிநின்று வேலைக்குப் போய்வந்துகொண்டிருந்தான். ஓமந்தையிலிருந்தும் கிழமைக்கொரு தடவை வந்துபோவது பெரிய காரியமில்லை. அப்படித்தான் திருமணமான புதிதில் செய்துகொண்டுமிருந்தான். இந்த மூன்றாண்டுக் காலத்தில் அது மாதமொன்றாய் இரண்டு மாதமொன்றாய்ச் சுருங்கிப்போனது. ஓமந்தையிலிருந்து வந்துபோவது க~;டமென்று, வரும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மாதமொன்றாகவோ இரண்டு மாதமொன்றாகவோ வந்து நிற்கும் வேளைகளிலும் இரண்டு மூன்று நாட்களென லீவு எடுத்துக்கொண்டு தங்கிப் போவதுதான் அவனது வழக்கமாக இருந்தது. அவ்வாறு தங்கிநிற்கும் நாட்களில் அவன் நிறையப் குடித்தான். சூழலில் அந்த வீடு காரணமாகவே பொரிச்ச மீன் வாடையும், இறைச்சிக் கறி வாசமும் எந்நேரமும் பரவியிருந்தன. பல தடவைகளில் அந்தக் கல் ரோடில் விழுந்தெழும்பி காயங்கள் பட்டான். ‘வாத்தியார்’ என்று முன்னால் முகமன் சொல்லி பிடரியில் சிரித்தது ஊர்.

ஓமந்தையில் நிற்கும்போதும் அவன் அப்படித்தான் நடந்துகொள்கிறானென வண்ணக்கிளிக்கு ஊகமுண்டு. அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சந்தையில் வியாபாரம் செய்யும் கடலைக்காரி பொன்னம்மாவின் கணவனையிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சரசுவோடு ஏற்பட்டிருக்கும் தொடர்புபற்றிய செய்திகள். அவன் வயல்கல் வராத வார இறுதி நாட்களில் அங்கே வந்துபோவது கண்டதாக தெரிந்தவர்களே சொல்லியிருக்கிறார்கள். அவனது குணநலன்களை விட்டுப் பார்த்தால் ஆசிரியனாக இருக்கும் அவனைக் கல்யாணம் செய்ய தனக்கு வசதியோ தகுதியோ இல்லையென்பதை எண்ணி அவள் அடங்கியே போயிருக்கிறாள். அண்மைக்காலத்தில் அந்தத் தொடர்பு அறுந்து போயிருப்பதாக நம்ப பல காரணங்கள் அவளிடம் இருந்தன.

இன்றைக்கும் அவன் வரமாட்டானென திண்ணப்பட இன்னும் நேரமிருந்தது.

சூரியன், மங்கிய வானத்தில் புள்ளி காட்டியது.

பத்து, பதினொரு மணி இருக்கலாம்.

அவள் வேலையை நிறுத்திக்கொண்டு குடிசைக்கு நடந்தாள்.

மதியத்தின் பின் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு பாயிலிருந்து எழுந்து முகத்தில் தண்ணீரை விசிறி, தலையை பல்லுதிர்ந்த பழைய சீப்பினால்; இலேசாக வாரிக்கொண்டு வண்ணக்கிளி குடிசையைவிட்டு வெளியே வந்தபோது சூரியன் தென்படவேயில்லை. நேரம் சுமாராக நான்கு மணியிருக்கலாம் அப்போது. வண்ணக்கிளி பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு மதியத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையை ஆரம்பித்தாள்.

இருள் நேரத்துக்கு முன்னரேயே படிய ஆரம்பித்திருந்தது.

வலிந்து புகுத்திய வேலை மும்முரத்தில் நேரம் கடந்தவிதம் அவள் காணவில்லை. இருள் கிழக்கில் எழுந்து விரிந்து படர, ஒளி மேற்கே மேற்கேயாய்ச் சென்று கடல் கடக்க விரைந்துகொண்டிருந்தது.
கறுப்பு மேகங்கள் கவிந்தும் பணிந்தும் சென்றுகொண்டிருக்கும் வானத்தின் கீழ் வேலையை நிறுத்திவிட்டு அந்த இருளையும், நெடுங்கிடையாய்க் கிடந்த கல் தெருவையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தாள் வண்ணக்கிளி.

அப்போது இனியும் அவன் வருவானென்ற நம்பிக்கை அற்றிருந்தது அவளிடத்தில். நெஞ்சுழைந்தது. அந்தமாதிரி ஒரு நெஞ்சை முறுக்கி எடுக்கும் வலியை அவள் என்றைக்குமே அனுபவித்ததில்லை. கோவிலம்மா என அந்த வட்டாரத்தில் அறியப்பட்டிருந்த அவளது அம்மா, என்ன ஆனானென்றே அறிய முடியாதபடி ஒரு கோடையின் உக்கிர நாளில் மறைந்துவிட்டபோது, யாருமற்ற அநாதையாய் அந்தப் பெருஞ்சுவர் மண்வீட்டில் நின்றிருந்தவேளையில்கூட அப்படியொரு துடிப்பையும் அவலத்தையும் அவள் கொண்டிருக்கவில்லை.

வண்ணக்கிளி நெடுமூச்சொன்று எறிந்தாள். வாழ்க்கையே பெரு அவலங்களால் ஆகிநிற்கிறபோது எந்த அவலத்துக்கென்றுதான் அலுத்துக்கொள்வது?

உடல் நசநசவென்றிருந்தது. அன்றைக்கு கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டு படுத்துவிட முடியாது. குளித்தேயாக வேண்டும். அவன் வந்திருப்பானானால் அவள் மகிழ்ச்சியாக அந்தக் காரியத்தை நிறைவேற்றியிருப்பாள். ஆனால் அவன் வராத அந்த மாலையிலும் அவளுக்குக் குளித்தேயாகவேண்டியதாக இருந்தது. நினைவுகளை மறப்பதற்காகவே அன்று அதிகமாக வேலைசெய்திருந்ததினால் மட்டுமில்லை. மழை பெய்யப்போவதற்கான அறிகுறிகளாய் காற்றடங்கி மேகக் கவிவு கிளர்த்தியிருந்த புழுக்கத்தாலும் மேனி குளித்ததுபோல் வேர்வை வழிந்துகொண்டிருந்தது.
இருள் விழ ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் அவள் குளித்துவிட்டு சேலை கட்டிக்கொண்டு வந்து மறுபடி முற்றத்தில் நின்று பாதையில் வெளுப்பாய் ஏதேனும் தெரிகிறதா என்று மீண்டும் நப்பாசையோடு பார்வையை எறிந்து நின்றாள்.

அப்போதுதான் அவளது கண்ணில் நெடும் கல் தெருவிலிருந்து கிளை பிரிந்து குறுக்காய் ஓடிய பாதையில் மணியம் குந்தியிருப்பது பட்டது. மணியம் என்றால் ஊரில் யாருக்கும் தெரிந்துவிடாது. நாய்க்குட்டி மணியம் என்று சேர்த்துச் சொல்லவேண்டும்.

முப்பத்தைந்து நாற்பது வயதளவான நாய்க்குட்டி மணியத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு மட்டுமில்லை, அவனைத் தெரிந்த எவரிடத்திலும் இருக்கவில்லை. அது அவனுக்குப்போலவே எவருக்கும்தான் கவலையுமில்லை.

அவனை மந்தபுத்திக்காரன் என்று சொல்கிறார்கள். புத்தி மந்தமாயிருந்தாலும் உடம்பு என்னவோ நோய்நொடி காணாமல் விளைந்துதான் இருக்கிறது. அந்த உடம்பில் தோன்றும் இச்சைகளை வீட்டில் அமானியாய் வந்துசேர்ந்த முலைதொங்கும் நாயை கொஞ்சியும் தடவியும் தீர்க்க முயன்ற கதை கண்கண்ட சாட்சியத்தின் வழி வெளிவந்த நாளிலிருந்துதான் கோனார் மகன் மணியம் நாய்க்குட்டி மணியமானது.

அவனைக் கண்டால் பெண்களுக்குப் பயம். அவர்கள் பயப்படும்படியாக அவன் என்ன செய்தானென்பதுபற்றிய எவ்வித கதையும் உலா வந்ததில்லை. இருந்தும் அந்தப் பயம் அவர்களிடத்தில் இருந்துகொண்டிருக்கத்தான் செய்தது. அவன் கல்யாணம் செய்யாமல் இருப்பதனால்மட்டுமே ஒரு பயம் ஏற்பட்டுவிட முடியுமா? அடங்காக் காமத்தின் தவிப்புகளால் அவன் நடந்திருக்கக்கூடிய விதம்தானே ஒரு பயத்தைக் கிளர்த்தியிருக்கமுடியும்? பெண்கள் குளிக்கும்போதோ, வெளிக்குச் செல்கையிலோ மறைந்திருந்து பார்த்தானா? அல்லது அவைகளையும் மீறி சரீரார்த்தமான தாக்குதல்களைச் செய்தானா? அப்படியான ஏதாவது ஒரு கதை அரசல் புரசலாகவேனும் பெண்களின் பேச்சுகளில் எப்போதாவது அடிபட்டிருக்கிறதாவென்று யோசித்துப்பார்த்து ஏமாறினாள் வண்ணக்கிளி.

அப்போது சந்தியில் குந்தியிருக்கும் அவனது பார்வை தன்னிலேதான் படிந்திருக்கிறதாவென்றும், சற்றுநேரத்துக்கு முன்னர் தான் குளித்ததை அவன் மறைவில் நின்று கண்டிருப்பானாவென்றும் ஒரு யோசனை எழுந்தது அவளிடத்தில்.

மறுபடி நினைவு மீண்டபோது இன்னும் நிறைய இருள் விழுந்திருந்தது. சந்தியில் குந்தியிருந்த நாய்க்குட்டி மணியம் எழுந்து போய்விட்டிருந்தான். எப்படிப் போனானென்றே அனுமானிக்கவும் முடியாதிருந்தது. மேலைக் கரையில் மின்னல் அடிக்கத் தொடங்கியது. மழைத் தூறல்கள் விழ ஆரம்பித்தன.

அப்போது தெருவில் ஒரு வெண்மையின் அசைவு சமீபத்திலாய்த் தெரிந்தது.

சாம்பசிவம்தான்.

தோளில் ஒரு ட்ரவலிங் பாய்க் தொங்கிக்கிடக்க நான்கு கால்களில்போல் தட்டித் தடவி வந்து குடிசைக்குள் நுழைந்தான்.

நிறைபோதையிலிருக்கிறான் என்பது வண்ணக்கிளிக்குத் தெரிந்தது,
பாய்க்கை கழற்றி ஒரு மூலையில் வீசியவன் ஓரமாயிருந்த பாயை இழுத்துப் போட்டுக்கொண்டு பொத்தென விழுந்து படுத்தான்.

முழங்கைப் பக்கமாய் சிவப்பு அப்பியிருந்தது. விழுந்தெழும்பியிருக்கிறான் என நினைத்துக்கொண்டாள். சேர்ட் கையை மேலே இழுத்துப் பார்த்தாள். இரண்டு இடங்களில் கல் பொத்திருந்தது. அருகே சிராய்ப்புக் காயங்கள்.

இந்த நிலையில் அவன் வந்ததைவிட வராமலே இருந்திருக்கலாமேயென்று தோன்றியது அவளுக்கு.
இந்தமாதிரி நிலைமையில் சாப்பிடமட்டான் சாம்பசிவம். குடிக்கும்போதே பாபத்தும், பொரித்த மீன் அல்லது ஈரல் கறியெனவும் காசைப் பார்க்காமல் வாங்கிச் சாப்பிடுகிற பேர்வழி அவன்.
வண்ணக்கிளி பெயருக்கு கொஞ்சம் போட்டு சாப்பிட்டுவிட்டு வந்து தள்ளி சுவரோடு போய் சாய்ந்தமர்ந்தாள்.

அவனைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இரண்டு மாதங்களாய்க் காத்திருந்தவனின் கோலம் அவளது மனமெல்லாம் எரியச் செய்தது.

வெளியே அவ்வப்போது இடி முழங்கியது. மின்னல் வெட்டியது தாழ்வாரப் பக்கமாய் தெறித்து வந்தது. காற்றின் தாண்டவம் கூரையின் கிடுகு வரிகளை புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. மழை சடசடத்தது இழுத்து வந்து போட்ட காவோலைகளில்.

உழற்றத் தொடங்கியிருந்தான் சாம்பசிவம். வார்த்தை தெளிவற்ற சப்தங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன.

வேட்டி அவிழ்ந்து ஒருபக்கமாய் ஒதுங்கி அவன் கட்டியிருந்த சீத்தைத் துணி சஸ்பென்ரர் தெரிந்தது. எழுந்து வேட்டியை ஒதுக்கிவிட நினைத்தாள். பிறகு வெறுப்போடு பேசாமலிருந்துவிட்டாள்.
அப்போது ‘எடியே சரசு..’ என்ற தெளிவான வார்த்தைகள் அவனித்தில் பிறந்தன.
வண்ணக்கிளி சிதறிப்போனாள்.

தான் காத்திருந்து ஏமாறிய ஒவ்வொரு கணத்திலும் அவன் எவளோ ஒருத்தியோடு அனுபவித்துத் தீர்த்துவிட்டு வந்திருக்கிறானென்ற நினைப்பு அவளைத் தன்னிலை இழக்கச் செய்துவிட்டது.
முதல்நாளே வந்து சரசு வீடு போய் அவன் கும்மாளம் போட்டுவிட்டு வந்திருக்கிறான் என்பதை நினைக்க அவள் சுபாவமே மாறினாள்.

அவள் எழுந்தாள்.

ஒரு எலிபோல அவனது குறி அந்த நீல நிற சீத்தைத் துணி சஸ்பென்ரருக்குள் கிடந்தது அவளது கண்ணில் விழுந்தது. செத்த எலியொன்றின் அருவருப்போடு பார்வை விலகாமல் நின்றிருந்தாள். அவனது உழற்றலில் அது உயிர்பெற்றதுபோல் அசைய அப்படியே அதை காலால் மிதித்து கொல்லவேண்டுமென்ற உக்கிரம் பிறந்தது அவளில்.

வெளியே ஊழி பொங்கியதுபோல் மழை கொட்டியது. காற்று பேயாட்டம் ஆடியது. எங்கோ மரமொன்று முறிந்து விழுந்தது, மழை இரைச்சலில் லேசாகக் கேட்டது. மின்னல் பளீரென்னும்போது தவிர பிரபஞ்சம் இருண்டு கிடந்தது. இடி அந்த இரவில் இரண்டு தடவைகள் பூமியைப் பிளந்திருந்தது. விடியும் உலகத்தில் அந்தப் பகுதி மக்கள் காணப்போவது அவரவர்களது ஊர்களாக இருக்காதெனத் தெரிந்தது.

சில மணி நேரங்களாயிற்று விடிய. சூரியன் மிகத் தாமதமாக மங்கிய பிரசன்னம் காட்டியது. மெல்லிய பேச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்கின. அந்த இரவின் அழிச்சாட்டியத்தில் பாதிக்கப்படாதவர்கள் மெதுமெதுவாய் வெளியே வந்து திகைத்தவர்களாய் முற்றங்களிலும், படலையடிகளிலும் நிலைகுத்தி நின்றுகொண்டிருந்தனர்.

மரங்கள் போக்குவரத்துக்களை தடுத்து வழியெங்கும் குறுக்காய் விழுந்திருந்தன. நெடுமரங்களின் கதை இதுவென்றால், சிறுமரங்களின் கொப்புகளெல்லாம் முறித்து வீசப்பட்டும், இலைகள் காற்றில் பறித்துச் செல்லப்பட்டும் இருந்தன. பல வீடுகளின் கூரைகளை பேய்க்காற்று பறக்கச் செய்திருந்தது. மண் சுவர்கள் பாறி விழுந்திருந்தன. பல வீடுகள் கப்புகளோடு சரிந்து கிடந்தன.

வயல்கல்லில் ஒரு சாவு நிகழ்ந்திருந்தது. வண்ணக்கிளியை நெடுநேரமாகியும் கண்ணில் காணாதவர்கள் அவளது பாறிய வீட்டைப் பிரித்தகற்றி சாம்பசிவம் இறந்து போயிருக்கக் கண்டார்கள்.
வண்ணக்கிளி எங்கேயென்று அக்கம்பக்கத்தார் ஒவ்வொருவரின் மனத்திலும் கேள்வியெழுந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

மதியத்தில் நெடும் கல் தெருப் பிள்ளையார் கோவிலடியில் நான்கு பேர் தற்செயலாய்க் கூடி நின்றிருந்து ஊர் அழிவுகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நாய்க்குட்டி மணியம் விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒருவர் அந்தப் பேச்சை முடிப்பதுபோல் சொன்னார்: ‘எல்லா அழிவையும் பார்க்க வயிறெரியுதுதான். ஆனாலுவள் வண்ணக்கிளிக்கு ஆனதை நினைச்சாத்தான் நெஞ்சு பதறுது.’

அவர்களுக்கல்லப்போன்ற விதமாய், ‘ அவளுக்கென்ன ஆயிருக்கும்? தாய்க்காறிமாதிரி அவளும் அம்மனாய்த்தான் போயிருப்பாள்’ என்றுவிட்டு இழித்தபடி போய்க்கொண்டிருந்தான் நாய்க்குட்டி மணியம்.

அங்கு நின்றிருந்த சரவணை எந்தக் காலத்திலும் இல்லாதவாறு அப்போது – அப்போது மட்டும்தான் – அவன் அர்த்தமான எதுவோ ஒன்றைச் சொல்லிச் செல்வதுபோல் அவனது பின்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த ஊழி இரவில் அம்மனிட்ட கூத்திலா சாம்பசிவத்தின் மரணம் சம்பவித்தது?

– Kuverniga malar 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *