கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 2,638 
 

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

தைலா மனசு விட்ட இடத்திலிருந்து பழைய நினைவுகளை மறுபடியும் அசை போட்டது. இது மாதிரி சமயங்களில் அக்கம் பக்கத்தில் புழக்கடையில் இவளை மாதிரி ஒதுங்கி இருப்பவர்களிடம் பேசுவது தான் பொழுதுபோக்கு. அன்று தோழியிடம் பேசிய பிறகு சுவற்றில் பெயர்ந்து போயிருந்த காரையை பொழுது போக்காக சுரண்டிக் கொண்டிருந்தாள்.  ஏதோ தங்கம் மாதிரி மின்னுவது தெரிந்தது. மேலும் சுரண்டினால் பாதி அறுந்த சங்கிலியுடன்  கல் பதித்த பதக்கம் தென்பட்டது.. யாரோ வீட்டிற்கு தெரியாமலோ அல்லது திருடர்களுக்குப் பயந்தோ அதை சுவற்றுக்குள் மறைத்து வைத்திருக்கிறார்கள். தைலாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. பின்னாளில் தேவைப்படும் என்று பத்திரப் படுத்தி வைத்தாள்.

மறுநாள் தோழியோடு சென்ற தைலா விடிகாலையில் யாரும் வருவதற்கு முன் ஆற்றில் (ஆற்றையே விழுங்கும் மனிதர்களால், இந்தக் காலத்தில்  ஆற்றில் பொட்டுத் தண்ணீர் கூட இல்லை) குளித்து ஈரத்தோடு கிணற்றடியில் வந்து உட்கார, அவளது மூத்த ஓரகத்தி ஏற்கனவே பேசியபடி எழுந்து வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து தலையில் கொட்டி அவளுக்கு கொஞ்சம் உப்பும் அரிசியும் வாயில் போட்டுக் கொள்ளச் சொல்லிய பின்னரே  தைலா வீட்டிற்குள் வந்தாள். இது அப்போதையை வழக்கம்.  மேலும், 5வது நாள் தலைக்கு  ஜலம் விட்டுக் கொண்ட பிறகு தான் சுத்தம் என்பது அக்கால வழக்கு. இதில், மாமியார் உட்கார்ந்து விட்டால், மருமகள்கள் மூவரும் வீட்டை சமாளிக்க வேண்டும்.

ரொம்ப நேரமாகப் பாட்டி கண்ணை மூடிக் கொண்டிருப்பதைப் பார்த்து கொள்ளுப் பேத்தி நிம்மி, ”கொள்ளுப்பாட்டி, என்ன இன்னும் தூக்கம் போகலயா? நான் கூட ஸ்கூல் விட்டு வந்துட்டேன்,” எனக் கேட்க, ”இல்லடி, பொண்ணே, தூங்கல, பழசெல்லாம் கண்ணுக்குள்ள சினிமா மாதிரி ஓடிண்டிருந்தது, அத ரசிச்சிண்டிருந்தேன்” என்றால் தைலா. ”பாட்டி, எனக்கும் கொஞ்சம் அந்தக் கதையெல்லாம் சொல்லுங்கோ,” என்று நிம்மி கேட்க, ”என்னத்தடி சொல்லறது?’ என்று தைலா பதிலளிக்க, ”அதான் பாட்டி, நீங்கள்ளாம் அப்பளக் கச்சேரி வெப்பேள்னு அம்மா சொல்லியிருக்கா, அது என்னன்னு விவரமா அம்மா சொல்லலை பாட்டுப் பாடிண்டே, அப்பளம் சுடறது, பொரிக்கிறது எல்லாம் செய்வேளா?” என்றாள் நிம்மி. “உங்கம்மா எங்க அதெல்லாம் பாத்தா? என் பொண்ணு தான் உங்கம்மாகிட்டே சொல்லியிருப்பா,” எனத் தைலா கூறவும், ”சரி ஏதோ ஒண்ணு. எனக்கு அதப் பத்தி சொல்லுங்கோ,” என்று நிம்மி சொல்ல, தைலா தொடர்ந்தாள். ”அது வேற ஒண்ணும் இல்லடி. அந்தக் காலத்துல கிராமத்தில அக்கம் பக்கத்துக்காராளோட சேர்ந்து அப்பளம் வீட்டிலேயே இட்டு வருஷாந்திரத்துக்கு வெச்சுக்குவோம். இந்தக் காலத்துலே எல்லாமே கடைல கிடைக்கிறது, ஒங்களுக்கெல்லாம் சிரமமே இல்ல. அப்ப எல்லாத்துக்கும் மெனக்கெடணும். ஒருத்தி உளுந்து மாவைப் பெசஞ்சு இடிப்பா, இன்னொருத்தி அத இழுத்துப் பிசைவா, வேறொருத்தி மாவை சின்னச் சின்ன உருண்டையா கிள்ளிப் போடுவா. ரெண்டு மூணு பேர், ஒண்ணொண்ணையும் சின்ன வட்டமா இடுவா. அதுக்குப் பேர் வட்டு இடறது. மத்தவா அந்த வட்டையெல்லாம் பெரிசா இட்டு நெழல்ல உலர்த்துவா. அவாளுக்கு நம்ம வீட்டுல தான் சாப்பாடு, காஃபி எல்லாம். ஊர்க் கதையெல்லாம் பேசிண்டு வேலை பண்ணுவா. எனக்கு வம்பு பேசறது பிடிக்காது ஏன்னா இன்னிக்கி மத்தவாளப் பத்தி நம்மகிட்டே சொல்றவா நம்மளைப் பத்தி அடுத்தவாகிட்ட சொல்ல மாட்டாள்னு என்ன நிச்சயம்? அவா வீட்டில அப்பளம் இடற போது நம்மளை கூப்பிடுவா. நாமும் போய் இட்டுக் குடுத்துட்டு வரணும். வடாம், வற்றல் எல்லாமே அப்படித்தான். இப்படிக் கூடி, அரட்டைக் கச்சேரி பண்றதால அதுக்கு அந்தப் பேர். புரிஞ்சுதா,” என்று பாட்டி கேட்க நிம்மியும் தலை ஆட்டினாள்.

(தொடரும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *