நண்டு மம்மிக்கு ஜே !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,663 
 

முன்னொரு காலத்தில் ஜப்பான் கடற்கரையோரத்தில் ஒரு நண்டு வசித்து வந்தது. பாவம் சில நாட்களாக அதற்கு சரியான ஆகாரம் ஏதும் கிடைக்கவே இல்லை. “நிறைமாத கர்ப்பிணி நான் இப்படி பட்டினிக்கிடந்தால் என் வயிற்றிலுள்ள என் குழந்தைகள் என்ன ஆவது? நானும் இறந்தால் என் அருமை குழந்தைகளும் இறந்து விடுமே!’ என்று கவலையில் மூழ்கியது.

அப்போது கீழ்த்தரமான புத்தியுள்ள குரங்கு ஒன்று கையில் செக்கச் செவேல் என்ற ஒரு பழத்தை வைத்து மிகவும் ருசித்து தின்று கொண்டிருந்தது.
பாவம் நண்டிற்கு நப்பாசை. மிகவும் ஏக்கத்துடன் அக்குரங்கையே பார்த்தது. அப்போது தான் அந்த நண்டை பார்த்ததுபோல், “”அட, அட வாங்கம்மா. இந்த பழம் எத்தனை ருசியாக இருக்கிறது தெரியுமா? உனக்கும் ஒன்று வேண்டுமா?” என்றது.

NanduMommy

“”ஓ! நான் கடும்பசியால் துடித்துக் கொண்டிருக்கிறேன். நீ பெரிய மனது வைத்து ஒரே ஒரு பழம் கொடுத்தால் போதும்!” என்றது நண்டு.

“”நோ பிராப்ளம்… பழத்தைவிட இதன் கொட்டைதான் மிகவும் ருசியாக இருக்கும். இந்தா இதனை தின்று உன் பசியை அடக்கிக் கொள்!” என்று சொல்லி வாயிலிருந்த கொட்டைகளை கீழே துப்பிற்று. என்ன ஒரு திமிர்.

அது இருக்கும் நிலையில் வீணாக இந்த அல்பதனமான குரங்கினிடம் சண்டை போடவோ? நியாயம் கேட்கவோ வா முடியும்? மிகவும் நொந்த மனதுடன் வேறு இடம் நோக்கி சென்றது. சிறிது தூரம் சென்றதும் அங்கே கடற்பாசியின் மேல் ஒரு பெரிய அரிசிப் பணியாரம் இருப்பதை பார்த்தது. யார் விட்டுச் சென்றனரோ? நண்டின் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்? உடனே தாவிச் சென்று அதனை எடுக்க முயற்சிக்கும் தருணத்தில், இத்தனை நேரமும் அதனை தொடர்ந்து வந்த அந்தக் குரங்குப்பயல், “”ஏய்! அதனைத் தொடாதே! அது என்னுடையது” என்றது.
“”நீ விதண்டாவாதம் பேசுவது உனக்கே நன்றாக இருக்கா… என்ன ஆனாலும் இதனை உனக்குக் கொடுக்க முடியாது!” என்றது நண்டு.

“”சரி… நான் சொல்வதைக் கேள். இந்த பணியாரத்திற்கு பதிலாக இந்தா இந்த பழக்கொட்டைகளை நீ எடுத்துக்கொள்” என்றது.

“”நீ என்ன என்னை அத்தனை முட்டாள் என்று எடைபோட்டு விட்டாயா? ச்சே… இவன் பழத்தைத் சாப்பிட்டுவிட்டு, இவன் துப்பும் கொட்டைகளை நான் தின்ன வேண்டுமாம். போடா போ… உன் கைவரிசையை வேறு யாரிடமாவது காண்பி,” என்றது.

“”ஓ! இப்போது நீ அவ்வளவு கெட்டிக்காரியாகி விட்டாயா? உன்னை மடக்கவா எனக்குத் தெரியாது? தங்கச்சி! வாயில் வந்தபடி உளராதே. இதோ பார் இந்த விதைகளை நட்டு, கண்களை மூடி தியானித்தால் உடனே இது மரமாகி அதீத ருசியுள்ள பழங்களை சொறியும். உன் ஆயுள்முழுக்க துளி பசியின்றி இப்பழங்களை தின்றே நீ உயிர் வாழலாம். மேலும் உன்னைப் பார்க்க வருபவர்களுக்கும் கூடை, கூடையாக வாரிவழங்கலாம்.

“”இந்த பணியாரத்தைத் திண்றால் ஒரு மணி நேரத்திற்கு உன் பசியைத் தாக்குப் பிடிக்கலாம். அப்புறம், நீ ஆகாரத்திற்கு எங்கு போவாய்? ஒரு சில மணி நேரத்திற்குள் வண்டி வண்டியாக பழங்களை அள்ளித்தரும் இப்பழக் கொட்டைகள் தேவையா அல்லது ஒரே மணிநேரம் உன் பசிக்கு ஈடுகொடுக்கும் இந்த பணியாரம் தேவையா? நன்றாக யோசி. நான் காத்திருக்கிறேன் என்றது. நான் உன்மேல் இரக்கப்பட்டுதான் இந்த யோசனையை கூறுகிறேன்!” என்றது.
சற்றே குழம்பிய நண்டு, “சரி!’ என்று சொல்லுமுன் தன் கையில் இருக்கிற விதைகளை அங்கிருந்த குழியில் போட்டுவிட்டு, நண்டின் கையிலிருக்கிற பணியாரத்தை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டது.

பாவம் அந்த கர்ப்பிணி நண்டால் என்ன செய்ய முடியும்? சிறிது நேரம் கண்ணீர் விட்டு கதறிவிட்டு, விதைகள் நிரம்பிய அந்தக் குழியை மூடிவிட்டது. அதன் உடம்பில் இருந்த கொஞ்ச நஞ்ச பலமும் போய் மிகவும் ஆயாசமாகிவிட்டது. அப்போதுதான் அதன் அம்மா சொன்ன வார்த்தைகள் அதன் நினைவிற்கு வந்தன.
“”பப்பாளி விதையே! பப்பாளி விதையே! உடனே நீ முளைவிட்டு வெளியே வா. இல்லையேல் அப்படியே உன்னை கடித்துப் துப்புவேன்!” என்றது.

அட என்ன ஆச்சரியம். உடனே விதைகள் முளைவிட்டு பூமிக்கு மேல் எழும்பின.
“”பப்பாளி விதையே! சீக்கிரமாக நீ பெரிய மரமாக வளர்ந்து விடு. இல்லையென்றால் உன்னை கடித்து குதறுவேன்!” என்றதும் உடனே அங்கே பெரிய பப்பாளி மரம் ஒன்று வளர்ந்தது. “”பப்பாளி மரமே! எனக்கு பசி மிகவும் கோரமாக வயிற்றை கிள்ளுகிறது. என் வயிற்றிலுள்ள பாப்பாக்களுக்கும் பசிக்குதாம். உடனே நிறைய பழுத்த பழங்களைக் கொடு!” என்றதும் அடுத்த கணமே தங்கநிரத்தில் மரம் முழுதும் ஒரே பப்பாளி பழங்கள்.

நண்டுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பழங்கள் மேலே இருப்பதால் எப்படியாவது முயற்சி செய்து மேலே ஏறி அவைகளை பறித்துத் தின்று பசி ஆற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி மெதுவாக மரத்தின் மீது ஏற முயற்சிக்கையில் அங்கே தோன்றிது யார்?

வேறு யாராக இருக்கும், அந்த கேடு கெட்ட குரங்குதான். அதனைக் கண்டதும் பதறியது நண்டு.

“”ஏய்! இது என் மரம். இதன் அருகே வரதே!” என்றது.

“”டேய்! மூளைக்கெட்ட நண்டுப்பயலே! நண்டுகளால் மரம் ஏற முடியாது என்பது உன் மரமண்டைக்குத் தெரியாதா? அதனால், நீ எத்தனை ஆசைப்பட்டாலும் உன்னால் இந்த மரத்திலிருந்து ஒரு பழத்தைக்கூட பறித்து ருசி பார்க்க முடியாது. அதனாலே பேசாமல் இரு. நான் பார்த்து நல்ல பழமாக பறித்து உனக்குத் தருகிறேன்” என்று சொல்லி ஒரு டைவ் அடித்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது.

“”சரி! உன்னை நம்புகிறேன். சீக்கிரமாக எனக்கு ஒரு பழம் பறித்துப் போடேன்!” என்று கெஞ்சிற்று.

“”இரு இரு. இப்படி அவசரப்பட்டால் எப்படி? நான் தின்று ருசிபார்த்து நல்லதாக உனக்கும் பறித்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு நல்ல பெரிய கனிந்த பழத்தைப் பறித்து தின்று கொண்டே, “”அப்பப்பா என்ன ருசி என்ன ருசி!” என்றது. “”சரி சரி சீக்கிரம் எனக்கும் ஒன்று கொடு” என்றது நண்டு.

பாவம் அதன் பசி அதற்கல்லவா தெரியும். “”ஒன் மினிட்” என்று சொல்லிக் கொண்டே வேண்டுமென்றே மிகவும் காயான, கெட்டியான பச்சைக் காயைப் பறித்து நண்டின் மீது தூக்கி எறிய, அது எறிந்த வேகத்தில் நண்டின் மேல் ஓடு உடைந்து வலியால் துடிதுடிக்க, சட்டென்று அதன் வயிற்றிலிருந்த மூன்று குட்டி நண்டு பாப்பாக்களும் வெளியே வந்தன.

தங்கள் அம்மாவின் நிலையைக் கண்டு மனம் வருந்தி, “”மம்மி. மம்மி…” என்று அலறத் தொடங்கின. “”மம்மி, மம்மி… எங்களை விட்டு விட்டுப் போகாதே!” என்று அவைகளின் அலறல் காதில் வாங்கிக் கொள்ளாமல், நடந்த விஷயத்தை கூறிவிட்டு, உயிர் நீத்தது அம்மா நண்டு.

ஆனால், இதை ஒன்றையும் சிறிதும் அலட்சியம் செய்யாமல் வயிறு முட்ட முட்ட பப்பாளிப் பழங்களை ஒரு பிடி பிடித்துவிட்டு, “”ச்சே என்னடா அழுகை? வாயை மூடுங்கடா!” என்று சொல்லிவிட்டு தாவி ஓடிவிட்டது அந்த அயோக்கியக் குரங்கு.

“”இருடா இரு… எங்களின் அம்மாவை கொன்றதற்கு உன்னை சும்மாவிடமாட்டோம். உன்னை துடிக்கத் துவிக்கவே சாக அடிப்போம். இது எங்கள் அம்மாவின் மேல் ஆணை!” என்று சபதம் இட்டன அந்த குட்டிப் பாப்பாக்கள்.

நாட்கள் ஓடின. மூன்று குட்டிகளும் மிக நன்றாக வளர்ந்து விட்டன. எப்படியும் அந்த குரங்கை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் அதனை நோக்கி புறப்பட்டன.

சிறிது தூரம் சென்றவுடன் அவைகள் ஒரு சிறிய செஷ்நட் கொட்டையை சந்தித்தன. “”ஹேய்! நண்டு குட்டிகளா நீங்கள் மூவரும் எங்கே செல்கிறீர்கள்?” என்றது. தங்களின் அம்மாவிற்கு அந்த அயோக்கிய குரங்கு இழைத்த அநீதியை கூறி, அவனை பழி வாங்கவே செல்கிறோம்!” என்றன.

“”ஓ! அப்படியா? நானும் அவனை பழிவாங்கும் எண்ணத்தில்தான் இருக்கிறேன்.. நானும் உங்கள் கூட வருகிறேன்” என்று அவர்களுடன் புறப்பட்டது.

போகும் வழியில் பெரிய வண்டு. மிக ஓங்காரமாக ரீங்கரித்துக் கொண்டே பறந்து கொண்டிருந்தது. இவர்ளைக் கண்டதும் இவர்களின் அருகே வந்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்றது. விபரத்தைச் சொன்னதும், “”ஓ! அவனைத் தேடித்தான் நானும் போய்க் கொண்டிருக்கிறேன். அவனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பட்டாளம் எப்படியெல்லாம் அவன் எங்கள் கூட்டத்தை, உற்றார், உறவினரை துன்புறுத்தியிருக்கிறான் தெரியுமா? நானும் உங்களுடன் வருகிறேன்” என்றது.

வழியில் ஒரு பெரிய மர உலக்கை, இவர்களிடமிருந்து விபரம் அறிந்து கொண்டதும், “”ஐய்யய்யோ! அந்த அயோக்கியன் என்னை வைத்து மிக அநியாயமாக எத்தனைபேரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறான் தெரியுமா. தனி ஒருவனாக அவனை எப்படி பழிவாங்குவது என்று தெரியாமல் இத்தனை காலமும் தயங்கிக் கொண்டிருந்தேன். நல்ல காலம் உங்களை சந்தித்தேன். நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி அவர்களுடன் சேர்ந்துக் கொண்டது.

அதன் வீட்டை நெருங்கியதும் மூத்த நண்டு அண்ணாதான் சொன்னான், “”அந்த அயோக்யன் வீட்டில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டுதான் நாம் உள்ளே நுழைய வேண்டும். வண்டு தம்பி! நீ மெதுவாக உள்ளே போய் அவன் இருக்கிறானா என்பதை தெரிந்து கொண்டு வா!” என்றது.

உள்ளே போன வண்டு வீடு முழுதும் தேட்டை போட்டது. அந்த குள்ளநரித்தன அயோக்யன் எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கலாம் அல்லவா? நன்றாக ஒருமுறைக்கு இருமுறை வீட்டைச் சுற்றிப் பார்த்தது. அவன் இல்லை.
வெளியில் வந்து தன் நண்பர்களிடம் கூறியதும், எல்லாரும் ஒன்றுகூடி திட்டம் வகுத்தனர்.

“”அவன் வீட்டினுள் நுழைந்ததும் குளிராக இருக்கிறது என்று சொல்லி கணப்பின் அருகில்தான் போய் உட்கார்ந்து கணப்பை குச்சியால் கிளருவான். உடனே கணப்பினுள் ஒளிந்து கொண்டிருக்கும் நான் பட்டென்று அவன் முகம் கைகால் என்று உடல்முழுதும் வெடித்து அவனை ரணமாகக்குவேன்!” என்றது செஷ்நட்.

“”உடனே தண்ணீர் தண்ணீர் என்று அலறிக் கொண்டு தண்ணீர் ஜாடியை தேடி எடுத்து தண்ணீரை ஊற்றிக் கொள்ள முயல்வான். அப்போது அந்த தண்ணீர் ஜாடியின் வாயில் ஒளிந்து கொண்டிருக்கும் நான் வெளிப்பட்டு, ரணமாகிப் போயிருக்கும் அவன் முகம், கைகால் என்று உடல்முழுதும் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்ப்பேன்!” என்றது வண்டு.

“”உடனே வாயிலை நோக்கி, “தண்ணீர்! உடல் எல்லாம் எரிகிறதே!’ என்று அலறிக் கொண்டே வெளியே ஓடிவருவான். வாயிற்படியில் படுத்திருக்கும் நான் அவன் கால் என் மேல் பட்டதும், அப்படியே உருட்டித்தள்ளி வெகுதூரம் உருட்டிவிடுவேன். அங்கே இவனுக்காக காத்திருக்கும் நண்டுகள் இவன் மேல் பாய்ந்து ஆத்திரம் தீர இவனை தங்களின் கூரிய கொடுக்களால் கீற அவனின் கதை முடிந்து விடும் என்று முடிவெடுத்தன. இவர்களின் திட்டம் ஜெயித்தது என்று கூறவும் வேண்டுமா என்ன?

நண்டு பாப்பாக்களின் மம்மியின் பிரார்த்தனையின் பலனாக பழுத்துக் குலுங்கும் பப்பாளி பழத்தை இக்கூட்டம் உண்டு ரசித்து, மேலும், நண்பர்கள் அனைவருக்கும் தாராளமாக கொடுத்து மகிழ்ந்தன. “”எங்கள் மம்மியின் பெயரால் சாப்பிடுங்கள்!” என்று சொல்லி உபசரித்தன.

– செப்டம்பர் 03,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *