கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,582 
 

முன்னொரு காலத்தில் சிற்றரசர்களில் ஒருவரான தனுஷ்ரதன் என்பவன் பஞ்சபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான்.

அவனுக்கு தன்நாட்டில் மிகப்பெரிய கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை. புகழ்பெற்ற சிற்பியான மயூரனை அழைத்து, அவனிடம் கோவிலை உருவாக்கும் முழுப் பொறுப்பினை அளித்தான். மன்னன் சொற்படியே, மயூரன் கோவிலைத் தனது முழு முயற்சியுடன் மிக அழகாக உருவாக்கினான். ஆனால், இந்த கோவில் கட்டும் பணியில் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக செலவு செய்ய நேரிட்டதால், அரசனின் கஜானா காலியாகி விட்டது. தனுஷ்ரதனால் சக்கரவர்த்திக்கு முறையாகக் கப்பம் செலுத்த இயலாமல் போய்விட்டது.

Sirpangalஇதற்குள் புவனகிரி சக்கரவர்த்தி இறந்து விட்டதால், அவரது மகன் தீரசேனன், சக்கரவர்த்தி ஆனான். தீரசேனன் உடனே பஞ்சபுரியை நோக்கி படையெடுத்தான். சக்கரவர்த்தியின் படை பஞ்சபுரியை அடையும் வழியில், புதிதாகக் கட்டப்பட்ட கோவில் அருகே வந்தது. கொடியவனான தீரசேனனின் படைத் தலைவன், “இந்தக் கோவிலின் பொருட்டன்றோ கப்பம் செலுத்த இயலவில்லை’ என்று நினைத்து, அந்தக் கோவிலை இடித்துத் தள்ள உத்தரவிட்டான்.

படைவீரர்கள் மலைமீதேறி ராஜ கோபுரத்தின் வழியே, கோவிலுக்குள் சென்றனர். கோவிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டு பிரமித்துப் போய் நின்ற வீரர்கள், கருவறையின் முன்னே உள்ள வாயிற்காப்போர்களின் உருவச்சிலையை கூர்ந்து கவனித்ததும் திடுக்கிட்டனர். அந்த உருவச்சிலைகளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
அதைக்கண்டு பயந்து போன சக்கரவர்த்தியின் வீரர்கள், கோவிலை சேதப்படுத்தத் துணியாமல் படைத் தலைவரிடம் தகவல் கூறினர். அதைக் கேட்ட படைத்தலைவனும் முன்னேறி போர் தொடுக்கும் எண்ணத்தை கைவிட்டு, படைகளுடன் நாட்டுக்குத் திரும்பி விட்டான்.

தனுஷ்ரதனுக்கு இந்தச் செய்தியை கேட்டவுடன் கோபம் மூண்டது. அவன் உடனே சிற்பி மயூரனை அழைத்து, “”இப்படிப்பட்ட சிற்பங்களா செய்வது? கையில் வாளுடன் போர்க் கோலத்தில் சிற்பங்கள் வடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எதிரிகளின் முன் கண்ணீர் வீட்டு அழுது அடைக்கலம் கேட்டு, இந்த சிற்பங்கள் எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டன…” என்று சுடு சொற்களால் மயூரனின் நெஞ்சில் வேல் பாய்ச்சினான்.

மயூரன் பதிலேதும் சொல்லாமல் மவுனமாக திரும்பிச் சென்று விட்டான். மலையடிவாரத்தில் கோவிலின் தொடர்ச்சியாக ஒரு பத்தாயிரங்கால் மண்டபம் நிறுவப்பட இருந்தது. மறுநாளிலிருந்து மயூரன் அந்த மண்டபத்தில் உள்ள பத்தாயிரம் தூண்களில், ஒவ்வொரு தூணிலும் ஒரு படை வீரன் வாளுடன் போர்க்கோலம் பூண்டிருப்பது போல் சிற்பம் வடிக்க ஆரம்பித்தான்.
மன்னனிடமிருந்து பண உதவி எதுவும் பெறாமல், தனது கூலியாகப் பெற்ற பணத்தையும், மற்றவர்களிடமிருந்து பெற்ற நன்கொடையையும் திரட்டி மண்டப வேலையை நிறைவு செய்தான். கோவில் முழுவதும் கட்டி முடித்ததும், தனுஷ்ரதன் தன்னுடைய நாட்டை ஒரு சுதந்திர நாடாகப் பறைசாற்றினான். மீண்டும் சினமுற்ற சக்கரவர்த்தி, இம்முறை பஞ்சபுரியின் மீது ஒரு பெரும் படையை அனுப்பினான்.

செய்தியறிந்த மயூரன் மண்டபத்திற்குச் சென்று தான் செதுக்கிய போர் வீரர்களின் சிற்பங்களை நோக்கி, “”வீரர்களே! வெளியே வாருங்கள். தங்கள் வாளையுருவிக் கொண்டு எதிரிகளுடன் போரிடுங்கள், நமது நாட்டிற்கு வெற்றியைத் தாருங்கள்!” என்று பணிந்தான்.

அவ்வளவுதான், உடனே அந்த சிற்பங்கள் அனைத்தும் உயிர் பெற்று பாய்ந்தோடிச் சென்றன. சக்கரவர்த்தியின் படைவீரர்களால் தங்களை எதிர்த்து வந்த சிற்ப வீரர்களை எதிர்த்துப் போரிடமுடியாமல், புறமுதுகிட்டு, ஓடினர். தனுஷ்ரதன் வெற்றி வாகை சூடினான்.

மகிழ்ச்சி கடலில் மிதந்த தனுஷ்ரதன், சிற்பி மயூரனுக்குப் பரிசு கொடுக்க, அவனை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். ஆனால், மயூரனை நாட்டில் எந்த இடத்திலும் காணவில்லை.

அவன் எங்கு போனான் என்று சொல்ல முடியுதா குட்டீஸ்…

சிற்பி மயூரன் அறிவற்றவனோ, அகந்தையுள்ளவனோ இல்லை. பதிலாக மனசாட்சியுள்ள ஒரு கை தேர்ந்த சிற்பி. மயூரன் வடித்த வாயிற்காப்போர் சிலைகள், அவனது அபூர்வமான கலைத்திறமையைக் கண்டு பிரமித்துப் போய் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருந்தன. ஆனால், அவனது கலைத்திறமையை புரிந்து கொள்ளத் தெரியாமல், அரசன் அவனைக் கடிந்து கொண்டான்.
இது மயூரனுடைய கலை உள்ளத்தை மிகவும் புண்படுத்தியது. ஆனால், தன் மனக்குமுறலைப் பொருட்படுத்தாது அரச கட்டளைக்குப் பணிந்து, அரசன் சொற்படி போர் வீரர்கள் சிலைகளை வடித்தான். இதனால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை ஏற்படும் எனக் கருதியே, தன் பணியைத் தொடர்ந்தான்.
தான் நினைத்தபடியெல்லாம் சிலைகள் மூலம் நடத்திக் காட்ட மயூரனால் முடியும் என்று அறிந்தால், அதே மன்னன் பிற்காலத்தில் சுயநலத்திற்காக தான் விரும்பும் பொருட்களை பெற நினைக்கலாம். இப்படியெல்லாம் சிற்பம் வடிக்க அவன் விரும்பவில்லை. இதற்கெல்லாம் தீர்வு காண விரும்பியே, மயூரன் நாட்டை விட்டுச் சென்றுவிட்டான்.

– அக்டோபர் 22,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *