கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 1,800 
 
 

(1967ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொறி ஒன்பதுபொறி பத்து | பொறி பதினொன்று

என் நம்பிக்கைக்கு உயிர் 

மலை உச்சியை நோக்கிச் செல்லுகையில் ஏற ஏறத் தான் கையில் இருக்கும் சுமையின்- கனத்தை உண்மையான கனத்தை நன்கு உணர்கிறோம். கதை முடிவு என்ற உச்சி சமீபிக்கிறது. எனது பாரத்தின் பளுவும் அதிகமாகியிருக்கிறது. திரு.வாசவன் முதல் திரு.செல்லப்பா வரை நெய் விளக்கைப் பிரகாசமாக்கிவிட்டார்கள். பூவை என்னை விளக்கருகே நிறுத்திவிடத் தைரியமாகத் தீர்மானித்தார். அந்தத்தைரியமே என் நம்பிக்கைக்கு. உயிராக விளங்குகிறது. 

இத்தனை நாட்கள் நரகப்படுகளத்திலும் வெறி பிடித்த கொலைக் களத்திலும் அவதிப்பட்ட அல்லிக்கு எப்போதுதான் மன நிம்மதி கிடைக்கும்? 

இப்போது கிடைக்க வழிவகுத்து விட்டேன் நான். எப்படி? 

அதை ‘பூவை’ அடுத்தாற்போல் சொல்லுவார்! 

பி.வி.ஆர். 

பொறி பத்து

சிநேகிதி செந்தாமரை 

மாங்குடியில் வயலில் இரு நாய்கள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டு பாய்ந்தது அல்லியின் மனத்தில் பதிந்த சம்பவம். அதனுடைய தொடராக – அத்துடன் இணைத்துவிட்ட, அல்லது தாமாகவே இணைந்து கொண்ட சம்பவம் அவள் கண் முன்னேயே நடந்து விட்டது. இத்தனை நாள் கண்டறியாத வெறியையும் உயிர்த் துடிப்பையும் கண்டபோது, அவளுக்கு வாழ்வில் எது நிஜம் எது பொய் என்பதைக் கூடநிர்ணயிக்க முடியவில்லை. பிணத்தை நடுவே வைத்துக் கொண்டு அவளும் இன்னாசியும் என்னென்னவோ பேசினார்கள். ஒருவரை ஒருவர் கூர்ந்து பார்த்தனர். அப்போது அவள் பேசின வார்த்தைகளின் அர்த்தத்தைக்கூட அல்லியால் இப்போது அறியமுடியவில்லை. என்னதான் உயிர் போனாலும் போகட்டும் என்று, ‘வேறு கதியில்லையே?’ என்ற நிலையால் ஏற்பட்ட மனநிலையில் வெறுப்புடன் உணர்ச்சி மேலெழுந்து நின்றாலும், உயிரின் துடிப்பு ஒன்று அவளுள் தவித்துத் துடிக்கத்தான் துடித்தது. அவளுடைய உயிர் அவளுக்குக் கூட சொந்தமில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது போல, அவளுடைய உயிரே அவளுள் இருந்து அவளை விட்டுப் பிரிய மறுத்தது. 

”எந்தப் பிணத்துக்கடா வழி செய்யப் போகிறாய்?”

கேள்வியில் தோய்ந்த உறுமல், பிணத்தைக் கூட அசைத்ததோ, என்னவோ? நிமிர்ந்து பார்த்த அல்லி யால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. 

ராஜநாயகம் நின்று கொண்டிருந்தார். ‘நல்ல வேளை போலீசு இல்லே’ என்ற நிம்மதி இன்னாசி முகத்தில் ஒருகணம் பிரதிபலித்தாலும், அருணாசலம் கேட்ட கேள்வி அவனைத் தூக்கி வாரிப் போட்டது. 

தன்னை சமாளித்துக்கொண்டு பேச அவனுக்கு ஒரு நிமிடமாயிற்று. அந்த ஒரு நிமிஷத்தில் அறையே ஒரு அந்தர பலத்தில் தொங்குவதாகப் பிரமை. 

“ஆமாம். அருணாசலம். நானேதான்!………… இன்னாசியேதான்! நீயே என்னை போலீஸில் கொண்டு போய் காட்டிக்கொடேன்!…”

இன்னாசிக்குக் கொலை புதியதல்ல என்பதை அவன் குரலே உணர்த்தியது. 

“அவன் எதற்கு? நான் வருகிறேன். வா” ராஜநாயகம் தன் முன் கிடந்த பிணத்தைக் கண்டு ஒருகணம் பதைத்தாலும் பழைய தைரியம் மீண்டு விட்டது. ஆனால் இன்னும் பிணத்தின் சொந்தக்காரர் யார் என்று தான் தெரியவில்லை. 

“நீங்களா? தேவையில்லை. எங்கள் மூவரில் ஒருவனை நான் தீர்த்துவிட்டேன். அவன் என்னையும் தீர்க்கப் போகிறான்; எஞ்சி நிற்பது யார்? அவன்! அவன் மட்டும ஏன் இந்த உலகில் நல்லவர்களைப்போல் நடித்து வாழ வேண்டும்?”

அல்லியும் ராஜநாயகமும் வாய் அடைத்து நின்றார்கள். 

அருணாசலம் திறந்த கதவுகளை ஓரக்கண்ணால் பார்த்தவாறு இருந்தான்.

“என்ன அருணாசலம், ஓடப் பார்க்கிறாயா? காரியம் மிஞ்சிவிட்டது?”

“நீ என்ன சொல்கிறாம். இன்னாசி?” 

அல்லி பதை பதைத்தாள். 

அருணாசலம் இவர்களுடைய நண்பன் என்று தெரியும். ஆனால் பழங்கணக்கு ஒன்றை இன்னாசி வீசுகிறானே? இல்லை, அதுவும் ‘சுகுணா’ போன்ற கதைதானா? அப்படி யானால் அருணாசலம் ஏன் இப்படி வாயடைத்து ஓடத் தயாராக இருக்கிறவனைப் போல நிற்க வேண்டும்? 

அவளுடைய எண்ணச் சங்கிலி திடீரென அறுந்தது. 

அவள் கண் முன் நின்ற அருணாசலம் மின்னலாகப் பாய்ந்து வெளியே ஓட, பின்னால் இன்னாசி விரைந்து தொடர்ந்தான். 

ராஜநாயகமும் ஓடினார்…! 

அவர்கள் எந்த ‘டாக்ஸி’யில் வந்து இறங்கினார்களோ, அதில் அருணாசலமும் ஏறியது அவர் கண்ணுக்குத் தெரிந்தது. காரியம் எல்லோர் கையையும் விட்டு அகன்றதாகவே எண்ணினார். 

அவர் மீண்டும் அறைக்குள் நுழைந்தபோது, அல்லி அழுது கொண்டிருந்தாள். உண்மை புரிந்த போது உணர்ச்சிக்கட்டு தானே அவிழ்ந்து கொணடது. மனக் கோயிலில் அவளே ஆவாகனம் பண்ணி வைத்த உருவம் கண்முன் இப்படியா சரிய வேண்டும்? 

மறுநாளே இன்னாசியும் அருணாசலமும் பிடிபட்டார்கள் ஒருவன் மீது கொலைக் குற்றம் ஒன்று. இன்னொருவன் மீது இரண்டு. போட்ட பழைய கணக்கை இப்போது எதிர்பாராத விதத்தில் அருணாசலம் ஒப்பிக்கும்படியாயிற்று. 

ராஜநாயகம் வீட்டில் ஆடல் இல்லை; பாடல் இல்லை. குட்டையருகே வானத்தைப் பார்த்துப் பாடும் தவளை போன்ற நாச்சியாரம்மாவின் பொக்கை வாய் மௌனமாகப் புகையிலையை மென்று கொண்டிருந்தது. பட முதலாளி பலராமனும் இன்னும் இரண்டு மூன்று நாட்டியச் சங்கக் காரியதரிசிகளும் அல்லி இல்லை என்ற செய்தி கேட்டுத் திரும்பிப் போனார்கள். 

ராஜநாயகம் மற்றவர்களை ஆட வைப்பார். ஆனால் இப்போது அவரே ஆடலானார். அவர் ஆட்டம் அவருக்கே பயமாக இருந்தது. 

ஆனால் பயத்தையும் மீறிய நிலையில் அல்லி இரண்டு. நாட்களாக படுக்கையோடு படுக்கையாக ஒட்டித்துவண்டு கிடந்தாள். சமையற்காரம்மாள் கெஞ்சியும் கூத்தாடியும் அவளைச் சாப்பிடச் செய்யும்படியாக நேர்ந்தது.

மூன்றாம் நாள். 

இரண்டு இரவுகளாக அவள் கண்முன் சாத்தையாவின் பிணமும், இன்னாசி கையில் பிடித்த இரும்புக் கம்பியும், திடீரெனப் பாய்ந்து வெளியேறிய அருணாசலமும் வட்டமிட்டார்கள். 

மூன்றாம் நாள் காலையில் மயக்கம் தெளிந்தது. அவள் யாரை விட்டு ஓடிப்பட்டணம் செல்ல வேண்டும் என்று ஓடி வந்தாளோ, அவர்கள் அவர்களுக்கென வகுக்கப் பட்ட பாதையில் சென்று விட்டார்கள். அந்தப்பாதையை அவள் அறியாமல் அவளே வகுத்துவிட்டாள். அவளுடைய ‘மொந்தைக்கள்’ அழகு விதியின் இரும்புக் கம்பியாக நீண்டது. அவள் சமயத்தில் ரெயிலில் செய்த உபகாரம் அவளுடைய காதல் பிரமையை எழுப்பிய உருவத்தைக் கடைசியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. இவர்களுடைய முடிவுகளுக்கெல்லாம்தான் அவள் பிறந்தாளா? வளர்ந்தாளா? அவளுடைய அழகுக் காரணம் அரக்கர்களுடைய அழிவுக்குத் தானா? 

இப்படியே அவள் இன்னும் எத்தனை பேரை அழிக்க வேண்டும்? விதி எப்படியெல்லாம் இரும்புக் கம்பியை நீட்டியும் வளைத்தும் தீட்டியும் வைத்திருக்கிறதோ? 

ஒருவேளை அவள் கிராமத்தைவிட்டு ஓடிவந்ததே பிசகோ? பிறந்த மண்ணை உதறினால் இத்தகைய சாபக்கேடுகள் வருமோ? மாங்குடியின் கட்டுக் கோப்பான வாழ்க்கையையும், மரகதக் கம்பனமாக விரிந்திருக்கும் நெல் வயல்களையும் விட்டு எப்படி அன்று ஓடிவந்தாள்? உண்மையில் அன்று பயந்தாளா? அல்லது, பயம் எனும்மாயை சூழ்ந்து கொண்டதா? சமூகத்தின் நயவஞ்சகர்களைக் கண்டு அஞ்சாத அவள் சமூகத்தின் பார்க்காத நாக்கு களிலிருந்து ஒலிக்கும் கேட்காத ஒலிச்சிதர்களைக் கேட்டு ஏன் அப்படி அஞ்சினாள்? பெண்மையோடு பிறந்த மானம்தானே அதற்குக் காரணம்? அந்த மானத்தைக் காத்துக்கொள்ள, ஓடிச்செல்லுவது தானா காரணம்? 

தகப்பன் வைத்து விட்டுப்போன இரண்டு ஏக்கரா நிலமும் வீடும் கண்முன் நின்றன. அவள் உழைத்துப் பிழைக்கம் பிறந்த மண்ணில் வழி இருக்கையில்,மழைக்கும் வெய்யிலுக்கும் மானத்துக்கும் ஒதுங்கிவாழ வீடு இருக்கையில், ஊரார் பேச்சுக்குத் தன் காதைச் செவிடாக்கிக் கொண்டு வாழமாட்டாமல் அவள் இருந்தால் அவள் எதனோடு சேர்த்தி? காலம் என்னும் குப்பைகொட்டக் கொட்ட, அந்தக் குப்பையில் சமூக நண்டுகளின் – புழுக்களின் பேச்சு மறைந்துதானே ஆகவேண்டும்? 

பட்டணம் நெருப்பில் வீழ்ந்த அவள் வெளியேறுகையில் புடமிட்ட தங்கமாகத்தான் மாறினாள். 

மாங்குடி அவளை அழைத்தது. கலயமும் கஞ்சியுமாக ஒரு நாள் தாயார் நின்ற காட்சி கண்முன் நிழலாடியது. ‘என் பிணத்தைக்கண்டு அன்று சிரித்தாயே அல்லி, இன்று உன்னைக்கண்டு சமூகம் சிரிக்கும்படி விடலாமா?’ என்று அவள் நினைவில் அடங்காத தகப்பனார் கேட்பது போலத் தோன்றியது. ‘அல்லி ஓடி விட்டாள்!’ என்று மாங்குடி ஓலமிட்டால், அந்த ஓலம் அவளுடைய தாய் தகப்பன் இருவருடைய ஆவிகளுக்குக் கூடக் கேட்குமே? 

அவள் திரும்பவேண்டும்; மாங்குடிதான் இனிமேல் அவளுக்குத் தாயும் தந்தையும் – நிலம் தான் குழந்தை – வீடுதான் கணவன். 

சமையற்காரியம்மாள் அழைக்கவராமலே அல்லி போய்ச் சாப்பிட்டாள். இது ராஜநாயகத்துக்குக் கூட வியப்பைத் தந்தது. 

“அல்லி..!”

அவருடைய அன்புக் குரலில் ஒரு நெகிழ்ச்சி 

“இதோ…!” 

“நான் ஒன்று தீர்மானித்திருக்கிறேன்!” 

“என்ன?”

“நாம் இரண்டு பேருமாக, சென்னையை விட்டு நாலு இடங்களுக்குப் பிரயாணம் செய்யலாம் என்று..” 

“நானும் தீர்மானித்து விட்டேன், பட்டணத்தை விட்டு ஓடி விடலாம் என்று!”

“எங்கே…?”

“எங்கிருந்து வந்தேனோ அங்கே! பிறந்த மண் என்னை ‘வா’ என்கிறது!”

“என்னை விட்டுப் போகப்போகிறாயா?'”

“ஆமாம்…வேறு வழியில்லை…நான் அபலையாக இங்கு வந்தேன். நீங்கள் ஆதரித்தீர்கள். இப்போது உங்கள் ஆசியுடன் நான் திரும்புகிறேன்; வீடும் வாசலும் இருக்கிறது. அன்றாடத் தேவைக்குக் கஷ்டமில்லை.” 

“நீ சினிமாவிலும் நாட்டியத்திலும் சம்பாதித்த பணம்…” 

“அது உங்களுக்கு!… எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். இப்போது வேண்டியது ரெயில் சிலவுக்கு ஏழு ரூபாய்…!” 

அவளது குரலில் வைரம் ஏறியிருந்தது. 

“நான் வருகிறேன்!”

“வேண்டாம். இனி என் வழி தனி வழி. உங்களுடைய உதவிக்கு என்னால் கைம்மாறு செய்ய முடியாதது பற்றித்தான் எனக்கு வருத்தம். இன்று சாயங்காலம் நான் ரெயில் ஏறுகிறேன். நீங்கள் உங்கள் பெண்ணை வழி அனுப்புவதுபோல அனுப்பவேண்டும்.” 

“உன் கதை. அப்பப்பா!” ராஜநாயகம் பெருமூச்செறிந்தார். 

“என் கதையின் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது. இனிமேல்தான் இது நிதானமாகச் செல்லும் பிரளயத்திற்குப் பின் உண்டாகும் அமைதி..!”

அவள் மனத்தை மாற்ற முடியாது என்று ராஜநாயகம் உணர்ந்துவிட்டார். மனத்தில் பிடிவாதம் வஜ்ரமாக ஏறி விட்டால் என்ன செய்வது? 

வரும்போது எப்படி ஒரு பையுடன் வந்தாளோ, அப்படித்தான் அவள் அன்று ரெயிலடிக்கு வந்தாள். ரெயிலடியில் –

“அல்லி!” என்ற குரல், அடிநாளிலிருந்து பழக்கப்பட்ட சிநேகிதி செந்தாமரையின் குரல் – கேட்டது. 

அவள் திடுக்கிட்டு நின்றாள்.

– தொடரும்…

– ஆடும் தீபம் (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1967, செல்வி பதிப்பகம், காரைக்குடி.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆடும் தீபம்

  1. ‘ஆடும் தீபம்’ நாவல் தனியொருவர் எழுதியதல்லவே…
    11 எழுத்தாளர்களால் ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பெற்று கடைசி அத்தியாயம் பதிப்பாசிரியர் பூவை எஸ்.ஆறுமுகம் அவர்களால் முடித்து வைக்கப்பட்டது. இது சற்றே புதுமையான முயற்சி.
    எழுதியவர்கள் : வாசவன், வல்லிக்கண்ணன், சரோஜா ராமமூர்த்தி, கிருஷ்ணா, சி.ஆர்.ராஜம்மா, நெடுமாறன், எல்லார்வி, ஏ.எம்.மீரான், சி.சு.செல்லப்பா, பி.வி‌.ஆர், பூவை எஸ்.ஆறுமுகம்.
    இதே ரீதியில் கலைஞர், கண்ணதாசன், சுஜாதா என ஆறு எழுத்தாளர்கள் எழுதிய ஒரு தொடர்கதை படித்ததாக நினைவு. நாவல் பெயர் நினைவில்லை.

    1. மிக்க நன்றி. அனைத்து அத்தியாயங்களும் சிறுகதைகள் தளத்தில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *