ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 3,083 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

அத்தியாயம்-6 

அந்தக் காட்டின் பகுதியில் தமிழ்ச்செல்வம் எப்படித் தினமும் நடந்துபோயிருப்பார் என்று சங்கர்லாலுக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பக்கம் சென்ற ஒற்றையடிப் பாதையில் சங்கர்லால் நடந்தார்! வழியில் இரண்டு பக்கங் களிலும் இருந்த மூங்கில் புதர்களைப் பார்த்தபடி சென்றார். வழியில் எங்கேயும் தமிழ்ச்செல்வம் தேடிய மூங்கில் துளிர் கிடைக்கவில்லை. பாதித் தொலைவுக்கு மேல் நடந்து, மலைச்சரிவில் ஒரு பக்கம் நின்று பார்த்தார். அவருடைய கார், அவர் குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்றிருந்தது காரிலிருந்து காரோட்டி இறங்கி, காரின் மீது சாய்ந்து நின்றபடி சங்கர்லால் வருகிறாரா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருந்தான். 

சங்கர்லாவ் நடந்தார். இன்னும் சற்றுத் தொலைவு நடந்ததும், ஒரு மூங்கில் புதரின் பக்கத்தில் காலி சீசா ஒன்று விழுந்து கிடந்தது. 

அந்தச் சீசாவை எடுத்துப் பார்த்தார் சங்கர்லால், அதில் ஏதோ ஒரு விஷ மருந்து இருந்திருக்க வேண்டும். அந்த மருந்து, சீசாவில் கொஞ்சம் ஒட்டியிருந்தது. சீசாவின்மீது அந்த மருந்தின் பெயரோ, சீசாவின் வாயில் அடைப்போ இல்லை. 

சங்கர்லால், சீசாவைக் கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு தரையை இங்கும் அங்கும் பார்த்தார்.

சற்றுத் தொலைவில் ஒரு கார்க் விழுந்து கிடந்தது. அந்தக் கார்க்கை எடுத்துச் சீசாவில் போட்டார். அதன் மூடிதான் அது. அது மிகச் சரியாக இருந்தது! 

சங்காலால், சீசாவை எடுத்துக் கால்சட்டை பைக்குள் போட்டுக்கொண்டு நடந்தார். அவர் நடக்க நடக்கத் தொலைவு நீண்டுகொண்டே சென்றது. ஒரு வழியாகக் கார் நின்ற இடத்தை அடைந்தார். காரில் ஏறி உட்கார்ந்ததும், காரோட்டி காரைக் கிளப்பினான். 

கார், டார்ஜிலிங்கில் சங்கர்வால் தங்கியிருந்த பங்களாவின் முன் வந்து நின்றது. 

இந்திரா, சங்கர்லால் வருமுன் வெளியே ஒடிவந்தாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி. “வழக்கை முடித்துவிட்டீர்களா? இனி எங்கேயும் போகவேண்டியதில்லையா?” என்றாள்.

சங்கர்வால், காரோட்டியைப் பார்த்தார். மெல்லச் சிரித்தபடி அவன், காரின் பின்னால் இருந்த டிக்கைத் திறந்து கருகிப்போயிருந்த தமிழ்ச்செல்வத்தின் பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான். 

“என்ன இது?” என்றாள் இந்திரா.

”இன்னும் வழக்கு முடியவில்லை”

இந்திரா அசைவற்று நின்றாள் 

அப்போது மின்செய்தி ஒன்று சங்கர்லாலின் பெயருக்கு வந்தது. மின்செய்தியைக் கொண்டு வந்தவன், சங்கர்லாலிடம் மின்செய்தியைக் கொடுத்துவிட்டுக் கையெழுத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டான். 

சங்கர்லால் மின்செய்தியை உடைத்தார். அந்த மின் செய்தியை நல்லநாயகம் கொடுத்திருந்தார். அதில் இருந்த செய்தி சங்கர்லாலை விரைக்கவைத்தது! 

‘தமிழ்ச்செல்வம் உயிருடன் இருக்கிறார்!’ என் கண்களால் தானே அவரைப் பார்த்தேன்!” என்று அந்த மின் செய்தியில் இருந்தது! 

“என்ன மின் செய்தி அது?” என்று சங்கர்வாலிடமிருந்து மின் செய்தியைப் பிடுங்கிப் பார்த்தாள் இந்திரா. அதை அவள் படித்து முடித்ததும் விழிப்புடன் நின்றாள்.

“இது என்ன நம்ப முடியலில்லையே!” என்றாள் இந்திரா. 

சங்கர்லால், சிரித்தார். அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“நீங்கள் இதை நம்புகிறீர்களா அத்தான்?” என்று கேட்டாள் அவள். 

சங்கர்லாஜ் மெல்ல நடந்து தனது அறைக்குச் சென்று சுழல் நாற்காலியில் உட்கார்ந்தார். வழக்கப்படி இரண்டு கால்களையும் மேசையின் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சிந்தனையுள் ஆழ்ந்தார். இந்திரா அவர் பக்கத்தில் வந்து நின்று கொண்டு சங்கர்லாளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

சங்கர்லால் இந்திராவிடமிருந்து மின்செய்தியை வாங்கி மீண்டும் ஒரு தடவை கூர்ந்து படித்துப் பார்த்தார். அந்த மின்செய்தி, சம்பி என்ற இடத்திலிருந்து வந்திருந்தது. 

சங்கர்லால் இருந்த அந்த அறையில், சுவரில் இந்தியாவின் படம் ஒன்று பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது. அவர் எழுந்து சென்று சம்பி என்ற இடம் எங்கே இருக்கிறது என்று பார்த்தார். டார்ஜிலிங்குக்கு வடகிழக்கே சற்றுத் தொலைவில் இருந்தது இந்த சம்பி. அவர் மேசை மீதிருந்த சிவப்புப்பென்சிலை எடுத்துச் சம்பி என்றுஇருந்த அந்த இடத்தின் மீது ஒரு பெரிய வட்டம் போட்டார்.

“இதோ பார் இந்திரா. நல்லநாயகம் சம்பி என்னும் இடத்தில் இருந்து இந்த மின்செய்தியைக் கொடுத்திருக்கிறார். நல்லநாயகம் இப்போது சம்பியில் இருப்பார் என்பது என் எண்ணம். அவர் இந்த மின்செய்தியைக் கொடுத்துச் சரியாக இரண்டு மணி நேரம்தான் ஆகிறது”

இந்திரா, சங்கர்லாலையும், இந்தியாவின் படத்தில் சம்பி அமைந்திருந்த இடத்தையும் பார்த்தாள். 

சங்கர்லால் தொடர்ந்தார். “நல்லநாயகம் தமிழ்ச்செல்வத்தை உண்மையில்  பார்த்ததாகவே வைத்துக் கொள்ளலாம். அப்படியானால், அவர்மின்செய்தி கொடுப்பதற்குச் சற்று முன்புதான் தமிழ்ச்செல்வத்தை அவர் பார்த்திருக்க வேண்டும். தமிழ்ச் செல்வத்தைப் பார்த்து விட்டு, நீண்டநேரம் பொறுத்து அவர் மின்செய்தி கொடுத்திருக்க முடியாது. அதுவரை அவரால் பொறுக்கவே முடியாது!” 

“உண்மை, ஆனால் அவர் தமிழ்ச்செல்வத்தைக் கண்ட பின் மின்செய்தி கொடுக்கும் அலுவலகத்தை அடைவதற்கு நேரமாகியிருந்தால்?” என்றாள் இந்திரா. 

”அதைப் பற்றி நான் சிந்திக்காமல் இல்லை. இந்தப் பகுதியில் மிகுந்த எஸ்டேட்டுக்கள் இருப்பதால், காடுகளில் கூட அங்கங்கே ஒரு மின்செய்தி அலுவலகம் இருக்கிறது. எப்படியிருந்தாலும், அரைமணி நேரத்திற்குள் அவர் மின்செய்தி கொடுக்கும் இடத்திற்கு வந்திருப்பார்.” 

”உண்மை அப்படியானால், தமிழ்ச்செல்வத்தை அவர் சம்பியிலோ, சம்பியை அடுத்த இடத்திலோ பார்த்திருப்பார் என்று நீங்கள் கூறுகிறீர்களா?” 

“ஆமாம்” என்றார் சங்கர்லால் சிரித்துக்கொண்டே! பிறகு அவர் சொன்னார், “தமிழ்ச்செல்வம் உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம், அவர் சம்பிக்கு ஏன் சென்றார்? எப்படிச் சென்றார்?” 

“நீங்கள் நல்லநாயகம் சொல்லுவதை நம்பவில்லையா?” என்று கேட்டாள் இந்திரா. 

“அப்படி நான் சொல்லவில்லை. எதையும் ஆராய்ந்த பின்புதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். தமிழ்ச் செல்வம் இறந்துவிட்டாரா உயிரோடு இன்னும் இருக்கிறாரா என்பதை இங்கிருந்தபடியே என்னால் கண்டுபிடிக்க முடியும்” எனறார் சங்கர்லால், 

இந்த நேரத்தில் மாது இரண்டு இரண்டு கோப்பைகளில் தேநீரைக் கொண்டு வந்து இந்திராவிடம் ஒருகோப்பையும் சங்கர்வாவிடம் ஒரு கோப்பையையும் கொடுத்துவிட்டுச் சங்கர்லாலைப் பார்த்து, “தம்பீ, நீ போனது முதல் இந்திரா குட்டிப் போட்ட பூனையைப்போல இப்படியும் அப்படியும் சுற்றிக் கொண்டிருந்தது. இந்தத் தமிழ்ச் செல்வம் வழக்கு முடிந்ததா இல்லையா?” என்று கேட்டான். 

சங்கர்லால் இதைக் கேட்டதும் சிரித்துவிட்டு, ‘இந்திராவுக்கு நான் எவ்வளவு சொல்லியும் தெரியவில்லை. இப்போது அவளுக்கு இரண்டு பேர்களைக் கவனிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. கண்ணனை மட்டும் கவனித்துக்கொண்டு என்னைப் பற்றித் துன்பப்படாமல் இருந்தால் போதும் என்றால் அவள் கேட்கவில்லை. இந்த தமிழ்ச்செல்வம் வழக்கில் சிக்கல் நிறைந்துகொண்டு வருகிறது!” என்றார். 

உடனே இந்திரா சொன்னாள், “இதில் ஒன்றும் சிக்கலே இல்லை. நல்லநாயகம் வந்து உங்களிடம் தமிழ்ச் செல்வம் இயற்கையாக இறக்கவில்லை என்று ஐயப்படுவதாகவும் அவர் எப்படி இறந்திருப்பார் என்று கண்டு பிடிக்கும்படியும் கூறினார். அதே நல்லநாயகம் இப்போது தமிழ்ச்செல்வம் உயிருடன் வேதொரு ஊரிலிருந்து இருப்பதாக மின்செய்தி கொடுத்திருக்கிறார். இறந்து போன மனிதர் எப்படியோ உயிருடன் வந்துவிட்டார். அப்படியென்றால் வழக்கு முடிந்துவிட்டது என்றுதானே பொருள்”. 

சங்கர்லால் இதைக் கேட்டுவிட்டுச் சிரித்தார். 

மாது உடனே. ”இந்திரா சொல்லுவது சரிதானே தம்பி. இதில் என்ன சிக்கல் இருக்கிறது?” என்றான்.

“அவ்வளவு எளிதாக இந்த வழக்கு முடிந்துவிடாது மாது. தமிழ்ச்செல்வம் ஒரு பிணப்பெட்டியில் மூடப்பட்டு புதைக்கப்பட்டார். புதைக்கப்பட்ட அவர் எப்படி வெளியே வரமுடியும்? புதைக்கப்படு முன் உயிர் வந்திருந்தால், நவ்லநாயகம் என்னிடம் வந்திருக்கவே மாட்டார். ஏதோ ஓர் ஊரில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட மனிதன் ஒருவன், புதைக்கப்படும் நேரத்தில் பிணப்பெட்டிக்குள்ளிருந்து குதித்து ஓடினானாம்! இந்தக் கதையாகி விட்டிருக்கும் தமிழ்ச் செல்வத்தின் கதை” என்றார். சங்கர்லால்! 

“எப்படியோ தமிழ்ச்செல்வம் உயிர்பெற்று இந்த உலகில் உலாவத் தொடங்கியிட்டார். இப்போது அதைப் பற்றி எனன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் இந்திரா. 

“உயிருடன் இருப்பவர் தமிழ்ச் செல்வம்தானா என்று கண்டுபிடிக்க வேண்டும். இறந்தவர். எப்படி உயிர் பெற்றார் என்று கண்டுபிடிக்க வேண்டும். டாக்டர் எப்படி அவர் இறந்துவிட்டதாகக் கூறினார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்” என்றார் சங்கர்லால்.

அத்தியாயம்-7 

அன்று இரவு சங்கர்லால் நீண்டநேரம் தூங்கவில்லை. எல்லாரும் தூங்கிவிட்ட பிறகும், அவர் தூங்காமல் தனியாகத் தமது ஆராய்ச்சிச் சாலையில் உட்கார்ந்து கருகிப் போயிருந்த தமிழ்ச்செல்வத்தின் பெட்டியைச் சோதித்துப் பார்த்தார். பிறகு காட்டில் கண்டெடுத்த காலிச் சீசாவை சோதித்துக்கொண்டிருந்தார்! அதன் உள்ளே இருந்தது என்ன மருந்து என்பதை நீண்டநேரம் வரையில் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை! 

பருத்த சில புத்தகங்களை எடுத்து அடிக்கடி புரட்டினார். அந்தப் பழைய புத்தகங்களில், அஸ்ஸாம் காடுகளில் உள்ள மனிதர்களைப் பற்றிய பழக்க வழக்கங்களும் காட்டின் மருமங்களும், காட்டுச் சாதியினரிடையே நடைமுறையில் உள்ள சில செயல்களும் எழுதப்பட்டிருந்தன. சங்கர்லால் டார்ஜிலிங்குக்கு வந்தபோது, அவர் அமைதியுடன் படிக்கப் பல புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தார். அவைகளில் பெரும்பாலானவை இயைமலையைப் பற்றியதாகவும், அஸ்ஸாம் காடுகளைப் பற்றியதாகவும் இருந்தன. அமைதியுடன் படிக்கவேண்டிய அந்தப் புத்தகங்களையெல்லாம் இப்போது விரைவாகப் படிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது! 

சங்கர்வால் தொலைபேசியில் நல்லநாயகத்துடன் தொடர்பு கொண்டு பேச எண்ணினார். ஆனால், அவர் எங்கே இருப்பார் என்று தெரியவில்லை. ஆகையால், நல்லநாயகத்தின் எஸ்டேட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்த இரவு வேளையில், தொலைபேசியின மறுபக்கத்தில் நல்லநாயகத்தின் மகன் நெடியோன் பேசினான். 

“நான் சங்கர்லால் பேசுகிறேன். உன் அப்பா நல்லநாயகம் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார் சங்கர்லால். 

“தெரியாது” என்று சொன்னான் நெடியோன். 

“நல்லநாயகம் இப்போது சம்பி என்ற இடத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் சம்பியில் இருப்பதாக வைத்துக்கொண்டால், சம்பியில் எங்கே அவர் தங்கியிருப்பார்? தொலைபேசியில் அவரோடு தொடர்பு கொள்ள முடியுமா?” 

”பொறுத்துக்கொள்ளவேண்டும். அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்குந் தெரியாது”. 

“அவர் ஒருவேளை தொலைபேசியில் உன்னுடன் தொடர்பு கொண்டால், உடனே நான் அவருடன் பேச விரும்பியதைச் சொல்லு” 

“அப்படியே ஆகட்டும்”. 

‘”நன்றி” என்று கூறிவிட்டுச் சங்கர்லால் தொலைபேசியை வைத்துவிட்டார். அப்போது மணி சரியாகப் கூடத்திலிருந்த கடிகாரம் பன்னிரண்டு தடவைகள் அடித்துவிட்டு ஓய்ந்தது. 

சங்கர்லால் மாடி மீதிருந்த அந்த அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தார். கொட்டும் பனியிலும் கான்ஸ்டபிள் பங்களாவின் வெளியே பருத்த காலணிகளுடன் இப்படியும் அப்படியுமாக நடந்து காவல் காத்து கொண்டிருந்தான். 

சங்கர்லால் அந்த வேளையில் வெளியே போக வேண்டியதிருந்தது. அவர் எவருக்கும். தெரியாமல் வெளியே போக எண்ணினார். அவர், குளிருக்குப் பருத்த கம்பளிக் கோட்டை அணிந்துகொண்டு, வெளியே வந்து நின்று பார்த்தார். 

கான்ஸ்டபிள் சல்யூட் அடித்து நின்றான். 

சங்கர்லால் காரோட்டியை எழுப்பிக் காரைக் கொண்டு வரும்படி சாடை காட்டினார். 

கான்ஸ்டபிள் பங்களாவின் பக்கவாட்டில் இருந்த பணியாட்கள் விடுதிக்குச் சென்று காரோட்டியை எழுப்பிக் காரைக் கொண்டுவரும்படி சொன்னான். சிறிது, நேரத்தில் கார் வந்தது. புறப்பட்டது. சென்றது. 

சங்கர்லால் காரில் ஏறி உட்கார்ந்ததும், டிரைவரிடம் “இரவில் போக உனக்கு அச்சமில்லையே?” என்று கேட்டார். 

“நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன ஐயா அச்சம்!” என்றான் காரோட்டி. 

“சரி மண்வெட்டி ஒன்றை எடுத்துக் காரின் பின்னால் உள்ள பெட்டியில் வை” என்றார் சங்கர்லால் காரோட்டியைப் பார்த்து. 

காரோட்டி, மண்வெட்டி எதற்கு என்று சிந்தனை செய்தபடியே, அந்த இருள் வேளையில் ஒரு மண்வெட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு வந்தான். அதை அவன் காரின் பின்னால் வைத்தான். 

கார் புறப்பட்ட போது, சங்கர்லால் கான்ஸ்டபிளிடம் சொன்னார்: “விடிவதற்குள் நான் திரும்பி வந்துவிடுவேன் எவரும் என்னைத்தேடவேண்டாம்”. 

கான்ஸ்டபிள் சல்யூட் ஒன்று அடித்து நின்றான்.

கார் நகர்ந்தது. அதன் சிவப்பு விளக்குகள் மட்டும் கொஞ்சம் தெரிந்து அப்புறம் அவையும் மெல்ல மறைந்தன. 

நல்ல நாயகத்தின் எஸ்டேட்டை அடைந்ததும். சங்கர்லால் காரோட்டியிடம், “தமிழ்ச்செல்வத்தை எங்கே புதைத்தார்கள் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

காரோட்டி சொன்னான்: “தெரியும். எஸ்டேட்டின் கிழக்கு எல்லையில் ஒரு சுடுகாடு இருக்கிறது. அங்கேதான் புதைத்தார்கள்”. 

”அங்கே காரை விடு!” 

இதைக் கேட்டதும் காரோட்டியின் உடல் வேர்த்தது! காரின் விளக்கு வெளிச்சத்தில், காட்டில் இங்கும் அங்கும் ஓடிய மான்களையும், முள்ளம் பன்றிகளையும், சிறுத்தைகளையும் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தார் சங்கர்லால். 

சுடுகாட்டை அடைந்தது கார். அங்கே அச்சம் தரும் அமைதி இருந்தது. சங்கர்லால் காரைவிட்டு இறங்குவதற்குள் காரோட்டி கீழே இறங்கினான். அவனிடம் மண்வெட்டியை எடுத்துக்கொள்ளச் சொன்னார். காரோட்டி காரின் பின்பக்கத்தைத் திறந்து மண்வெட்டியை எடுத்துக் கொண்டான். 

சங்கர்லால் மின்பொறி விளக்கை அடித்துப் பிணங்கள் புதைக்கப்பட்ட இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தார். தமிழ்ச்செல்லத்தின் பெயர் எழுதப்பட்டிருந்து பலகை ஒன்று புதிதாக மூடப்பட்ட மண்ணின்மீது செருகி வைக்கப் பட்டிருந்தது. 

சங்கர்லால், பின்பக்கம் திரும்பிக் காரோட்டியிடம் மண்வெட்டியால் அந்த இடத்தைத் தோண்டும்படி சொன்னார். 

காரோட்டிக்குக் கைகால்கள் நடுங்கின என்றாலும், தாம் இந்தச் செயலைச் செய்யாவிட்டால், சங்கர்லாலே இந்தச் செயலைச் செய்துவிடுவார் என்று, மண்வெட்டியால் தமிழ்ச்செல்வம் புதைக்கப்பட்ட அந்த இடத்தைத் தோண்டினான். ஐந்தடி ஆழத்திற்குள் – 

சவப்பெட்டி இருந்தது. 

சங்கர்லாலும் காரோட்டியுமாகச் சேர்ந்து அந்தச் சவப்பெட்டியைத் திறந்தார்கள். 

சங்கர்லால், திறக்கப்பட்ட அந்தச் சவப்பெட்டியை மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தார். சவப்பெட்டி – காலியாக இருந்தது! 

அப்போது, சற்றுப் பக்கத்திலிருந்த மரத்தின் மீதிருந்து ஓர் ஆந்தை அலறியது. சங்கர்லால் நிமிர்ந்து பார்த்தார். மீண்டும் அதே ஆந்தை விழிகள்! அச்சம் தரும் ஆந்தை விழிகள் சங்கர்வாலை உற்றுப் பார்த்தன! சங்கர்லாலுக்கும் தெரியாத ஏதோ ஓர் இரகசியம் அந்த ஆந்தைக்குத் தெரியும் போலிருந்தது அது பார்த்த பார்வையிலிருந்து! 

சங்கர்லால் அதை விரட்டினார். அது மீண்டும் சுத்தி விட்டுப் பறந்தது! குடிசை தீப்பற்றி எரிந்து சாம்பலான பிறகு, பக்கத்து மரத்தில் உட்கார்ந்திருந்த அதே ஆந்தையா இது? 

ஏன் இருக்கக்கூடாது? 

அதே ஆந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியது சங்கர்வால் மனம்! 

காரோட்டியின் உடல் அச்சத்தால் நடுங்கியது! காலியாகக் கிடந்த சவப்பெட்டியைக் கண்டதும் காரோட்டி வெலவெலத்துப்போனான்! சவப்பெட்டிக்குள் கிடந்த தமிழ்ச்செல்லத்தின் சவம் எப்படி மறைந்தது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. அவனுக்கு அச்சம் ஒரு பக்கம். விழிப்பு ஒரு பக்கம். அவன் நிமிர்ந்து சங்கர்லாலைப் பார்த்தான். 

சங்கர்லால் மிக அமைதியுடன் மெல்லச் சிரித்தபடி நின்றார். “அப்படியே சவப்பெட்டியை மூடு” என்றார் அவர். 

காரோட்டி சவப்பெட்டியை மூடினான். 

“பழையபடியே சவப்பெட்டியின் மீது மண்ணைப் போட்டு மூடு” என்றார் சங்கர்லால், 

காரோட்டி. மண்வெட்டியால் மண்ணைத் தள்ளிப் பள்ளத்தை முடினான் 

“என்னால் நம்ப முடியவில்லை” என்றான் காரோட்டி. அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. 

சங்கர்லால் சொன்னார்: “என்னால் நம்பமுடிகிறது. நல்லநாயகம் தமிழ்ச்செல்வத்தை உயிருடன் சம்பி என்ற இடத்தில் கண்டதாகத் தந்தி கொடுத்திருந்தார். அவர் தந்தியை நான் நம்பியதால்தான் தமிழ்ச்செல்வத்தின் பிணம் சவப்பெட்டியில் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வந்தேன்! நான் வந்தது எவருக்கும் தெரியாது! இதைப்பற்றி எவரிடமும் நீ பேசாதே!”

“ஆகட்டும் ஐயா” என்றான் காரோட்டி. 

“நாம் புறப்படலாம். இனி நாம் இங்கே இருப்பது தவறு” என்றார் சங்கர்லால். இதைச் சொன்னதும் காரோட்டிக்கு முன் விரைந்து வந்து காரில் ஏறிக்கொண்டு விட்டார். 

காரோட்டி காரைக் கிளப்பினான். 

கார், போய்க்கொண்டிருந்தது. அத்துடன் போட்டியிட்டுக் கொண்டு நேரமும் போய்க்கொண்டிருந்தது. 

கார், டார்ஜிலிங்கில் சங்கர்லால் தங்கியிருந்த பங்களாவை நெருங்கியபோது, மெல்லப் பொழுது விடிந்து கொண்டிருந்தது. 

அத்தியாயம்-8 

சங்கர்லால் பங்களாவை அடைந்தபோது, மாது விழித்துக்கொண்டு அவரை எதிர்நோக்கிவெளியே வந்தான். 

சங்கர்லால் தாழ்வாரத்தை அடைந்ததும் “தம்பி, நடு இரவில் நீ எங்கே போய்விட்டாய்?” என்றான் 

‘சங்கர்லால் மெல்லச் சிரித்தபடி, “நான் போனது இப்போதுதானே தெரியும்!” என்றார். 

“ஆமாம்!” 

“இந்திரா விழித்துக் கொண்டாளா?” 

“விடியற்காலையில் கண்ணன் அழுதான். அப்போது விழித்துக் கொண்டாள். அவள் விழித்துக் கொண்டதும், இரவு நீ தூங்கவில்லை என்பதையும், சொல்லாமலே நீ வெளியே போய் விட்டதையும் தெரிந்து கொண்டாள்?” 

“பிறகு?” 

“இந்திரா குரல் கொடுத்து என்னை எழுப்பினாள். நீ எங்கே சென்றாய் என்று எனக்கு எப்படித் தெரியும்? கான்ஸ்டபிளைக் கேட்டபோது, காரில் நீ சென்றதாகச் சொன்னான்”

சங்கர்லால் மாடிப்படிகளில் ஏறியபோது, மாது தேநீர் கொண்டுவரச் சென்றான். சங்கர்லால் மாடியை அடைந்த போது, கண்ணன் அழும் குரல் கேட்டது. அவர் விரைந்து சென்று கண்ணன் இருந்த அறைக்குள் நுழைந்தார். அழுது கொண்டிருந்த கண்ணனைத் தூக்கி வைத்துக் கொண்டு அவனை அழாமல் இருக்கச் செய்ய முயன்று கொண்டிருந்தாள் இந்திரா. 

“ஏன் இப்படி அழுகிறான்?” என்றார் சங்கர்லால், 

“நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே நடு இரவில் போய் விட்டீர்களாம்! அதனால்தான் அவன் இப்படி அழுகிறான்!” என்றான் இந்திரா. 

“நான் சொல்லிவிட்டுப் போயிருந்தால் அவனும் என் கூட வருவேன் என்று அழுதிருப்பானே!” என்றார் சங்கர்லால். 

கண்ணன் சங்காலாலின் குரலைக் கேட்டதும் அழுவதை நிறுத்திவிட்டுச் சங்கர்லாலைப் பார்த்தான். சங்கர்லால் மிகச் செல்லமாக அவன் கன்னத்தில் ஒரு தட்டுக் தட்டி விட்டு இந்திராவைப் பார்த்தார். 

“நான் எங்கே போய் வந்தேன் என்பது உனக்குச் தெரியுமா?” என்றார் சங்கர்லால்.

“கான்ஸ்டபிளை மாது கேட்டபோது, மண்வெட்டியுடன் காரில் சென்றதாகச் சொன்னான். தமிழ்ச்செல்வத்தின் பிணம் சலப்பெட்டியில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்கச் சென்றிருப்பீர்கள் என்று நான் எண்ணிக்கொண்டேன். இது சரிதானே?”

“மிகச்சரி! முடிவு என்ன தெரியுமா?”

“சொல்லுங்கள்!” 

“சவப் பெட்டியில் தமிழ்ச் செல்வத்தின் பிணம் இல்லை!” 

இதைக் கேட்டதும் மிக விழிப்புடன் பார்த்தான் இந்திரா. 

அதே நேரத்தில் தேநீர்க் கோப்பைகளுடன் உள்ளே நுழைந்த மாது. சங்கர்லாலிடமும் இந்திராவிடமும் தேநீரைக்கொடுத்துவிட்டு, “என்ன தம்பி, சவப்பெட்டியில் தமிழ்ச்செல்வத்தின் பிணம் இல்லையா?” என்றான்.

”ஆமாம்!” 

“புதைக்கப்பட்ட ஒருபிணம் எப்படி உயிருடன்எழுந்து போயிருக்க முடியும்?” என்று கேட்டாள் இந்திரா.

“தமிழ்ச்செல்வம் இறக்கவில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது” என்றார் சங்கர்லால். 

“தமிழ்ச் செல்வம் இறக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம் அவர் எப்படி சவப்பெட்டிக்குள்ளிருந்து வெளியே வர முடியும்?” என்று கேட்டான் மாது. 

“தமிழ்ச் செல்வம் தானாக வெளியே வந்திருக்க முடியாது! அவரை எவரோ வெளியே எடுத்து விட்டிருக்க வேண்டும்” என்றார் சங்கர்லால், 

“எதையும் நம்பமுடியவில்லை! இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் இந்திரா. அவர் தேநீரைப் பருகியபடி சிந்தனை செய்து கொண்டிருந்த போதே, கூடத்தில் இருந்த தொலைபேசியின் மணி அடித்தது. 

மாது உடனே ஓடிப்போய் தொலைபேசியை எடுத்துப் பேசினான். பிறகு அவன் திரும்பி வந்து. “தம்பி, நல்லநாயகம் பேசுகிறார். உன்னிடம் அவர் பேச வேண்டுமாம்” என்றான். 

சங்கர்லால் மெல்ல நடந்து சென்று தொலைபேசியை எடுத்தார். “அலோ. நான் சங்கர்லால் பேசுகிறேன்” என்றார். 

“சம்பியிலிருந்து என்னுடைய எஸ்டேட்டுக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது. நீங்கள் என்னுடன் பேசவிரும்பியதாக, என் மகன் நெடியோன் சொன்னான்.”

“ஆமாம், தமிழ்ச்செல்லத்தை நீங்கள் எங்கே பார்த்தீர்கள்?”

“சம்பிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில்,”

“இப்போது அவர் இருக்கும் இடத்தை நீங்கள் எனக்குக் காட்ட முடியுமா?” 

”அவரை நாள் கண்ட இடத்தைக் காட்ட முடியும். ஆனால் தமிழ்ச்செல்வம் இப்போது அங்கே இருப்பாரா என்பது தெரியவில்லை!” 

“நான் இப்போது உடனே புறப்பட்டு அங்கே வருகிறேன். நான் வரும்வரையில் நீங்கள் அங்கே எனக்காகச் காத்திருக்க முடியுமா?” 

”காத்திருக்கிறேன் சங்கர்லால்,” 

“நீங்கள் இப்போது எங்கே தங்கியிருக்கிறீர்கள்?”

“மல்லிகைப் பந்தல் ஓட்டலில் தங்கியிருக்கிறேன். நீங்கள் நேராக இந்த மல்லிகைப் பந்தல் ஓட்டலுக்கு வாருங்கள்” என்றார் நல்லநாயகம். 

சங்கர்லால் தொலைபேசியை வைத்துவிட்டு, இந்திரா இருந்த அறைக்கு வந்தார். 

“இந்திரா, நான் இப்போதே சம்பிக்குப் புறப்படுகிறேன். காரோட்டியைத் தவிர என்னுடன் எவரும் வர வேண்டாம்” என்றார். 

அத்தியாயம்-9 

சங்கர்வால் சம்பிக்குப் புறப்பட்ட போது இந்திராவிடம் சொன்னார். “சம்பி இங்கிருந்து 120 கல் தொலைவில் இருக்கிறது. எப்படியிருந்தாலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நான் அங்கே இருக்கமாட்டேன்” என்றார். 

கார் புறப்பட்டபோது கான்ஸ்டபிள் சல்யூட் அடித்து மரியாதையுடன் நின்றான். 

கார் மலைப்பாதையில் வளைந்து சென்று மறையும் வரையில் எல்லாரும் வெளியே நின்றார்கள். 

சங்கர்லால். காட்டின் வழிகளைப் பார்த்துகொண்டே, காரில் இருந்தார். கார் போய்க்கொண்டே இருந்தது. 

“சம்பியை அடைய எவ்வளவு நேரம் பிடிக்கும்?” என்று கேட்டார் சங்கர்லால் காரோட்டியைப் பார்த்து. காரோட்டி சொன்னான்: “வழியில் நிறைய மலைகளும், காடுகளும் இருக்கின்றன. இந்த வழியில் கார் விரைவாகச் செல்லுவது மிக ஆபத்தானது. மெல்லத்தான் செல்ல வேண்டும். நாம் போய்ச்சேர எப்படியும் பிற்பகல் மூன்று மணிக்குமேல் ஆகிவிடும்!” 

சங்கர்லால், வழியில் காரை நிறுத்தும்படி சொன்னார். 

புதர்களுக்கு மறைவில் ஒரு மனிதன் நின்றிருந்தான். அந்த மனிதனைச் சங்கர்லாவ் பார்த்தார். அவனுடைய முகத்தில் வியப்போ மகிழ்ச்சியோ மாற்றமோ எதுவும் ஏற்படவில்லை! அவன் பேசாமல் திரும்பி நடக்கத் தொடங்கினான்! 

சங்கர்லால் அந்த மனிதனுடன் பேச எண்ணினார். ஆகையால் அவர் விரைந்தார். ஆனால் அந்த மனிதன் சங்காவாலுக்காக நிற்கவில்லை! 

சங்காலால் செடி கொடிகளை விவக்கிக்கொண்டு ஓடினார். 

அந்த மனிதன், தன்னந் தனியனாக, ஒரே மாதிரியான விரைவுடன் நடந்தான். அவனைப் பிடிக்கச் சங்கர்லால் சற்று விரைவாக நடந்தார். 

கைதட்டி அவர் அவனை அழைத்துப் பார்த்தார் அவன் திரும்பிப் பார்க்கவில்வை! 

சங்கர்லால் ஓடிச்சென்று அந்த மனிதனின் பக்கத்தில் சென்றார். அப்போதும். அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டேயிருந்தான். 

சங்கர்லால் ஆவலுடன் நடந்துகொண்டே மெல்ல அவன் முதுகில் தட்டினார். அவன் திரும்பிச் சங்கர்லாலைப் பார்த்து உயிரில்லாத ஒரு பொருளைப் பார்ப்பதைப்போல் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்து நடந்தான்!

சங்கர்லால் நின்றுவிட்டார்! 

அந்த மனிதன் வெறிபிடித்தவனா? அவனுடைய பார்வையில் உயிர் இல்லையே, ஊக்கம் இல்லையே. வெறி தானே இருக்கிறது! 

சங்கர்லால் பேசாமல் திரும்பினார். தன்னந்தனியனாக இந்த மனிதன இந்தக் காட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பது புரியவில்லை அவருக்கு! 

அவர் திரும்பியபோது, அச்சத்துடன் நின்றிருந்த காரோட்டி, “எங்கே போய்விட்டீர்கள்; உங்களை நான் தேடிக்கொண்டிருந்தேன்!” என்றான். 

“எவனோ ஒரு மனிதன் வந்தான். அவனிடம் பேசலாம் என்று சென்றேன். அவன் பேசாமல் போகிறான். அவனுடைய பார்வையில் வெறிமட்டும் இருக்கிறது. வேறு எதுவும் இல்லை!” 

காரோட்டி பேசவில்லை. 

“இந்தக் காடு எவருடையது?” என்றார் சங்கர்லால். 

“மெய்நம்பி என்பவருக்கு உரிமையுள்ள காடு இது. அவருடைய எஸ்டேட்டுக்குப் பொதுவாகப் புதியவர்கள் எவரும் போவதில்லை. நாங்களும் போவதில்லை. உங்களுக்காக இந்த வழியாக வந்தேன். நீங்கள் வருவதால் எனக்கு அச்சமில்லை!” 

“மற்றவர்கள் எப்படிப் போகிறார்கள்!” என்று அவனிடம் கேட்டார் சங்கர்லால்.

“இந்த எஸ்டேட்டைச் சுற்றிக்கொண்டுதான் போகிறார்கள்! இப்படிச் சுற்றிக்கொண்டு போவதால் நாம் வந்த வழியைப்போல் இரண்டு மடங்கு தொலைவு ஆகிவிடுகிறது!” 

“சரி, புறப்படு” என்று சொன்னார் சங்கர்லால், 

சங்கர்லாலின் மனம் மெய்நம்பியைக் காணவேண்டும் என்று துடித்தது. ஆனால், அப்போது அவருக்கு அதற்கு நேரம் இல்லை! 

சங்கர்லால் சென்ற கார் சம்பியைத் தொட்டபோது காரின்மீது புழுதி மிகப் படிந்திருந்தது. 

மல்லிகைப் பந்தல் ஓட்டலைத் தேடிச்சென்ற கார் நின்ற போது, நல்லநாயகம் ஓட்டலுக்குள்ளிருந்து ஓடி. வந்து அவரை வரவேற்றார். பிறகு, அவரை ஓட்டலுக்குள் அமைத்துச் சென்று சங்கர்லாலுக்கு என்று தனியாக ஏற்பாடு செய்து வைத்திருந்த தனி அறைக்கு அழைத்துச் சென்றார். 

சங்கர்லாலின் அறை மிக அழகாக இருந்தது சன்னல்களின் ஓரங்களில் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மெல்லிய அழகிய திரைகள் சன்னலை மறைத்து ஆடிக் கொண்டிருந்தன. 

“உங்களுக்காக இந்த அறையை ஏற்பாடு செய்தேன். பக்கத்து அறையில் நான் தங்கியிருக்கிறேன்” என்றார் நல்லநாயகம் 

“நன்றி” என்றார் சங்கர்லால்.

காரோட்டி சங்கர்வாலின் பெட்டியைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான். 

நல்லநாயகம், ஓட்டல் பையனை அழைத்து தேநீர் கொண்டுவரும்படி சொன்னார். தேநீர்வந்ததும், இருவரும் தேநீரைப் பருகிக்கொண்டு பேசினார்கள். 

சங்கர்வால் உடனே கேட்டார்: “நீங்கள் தமிழ்ச்செல்வத்தை எங்கே பார்த்தீர்கள்?” 

“பக்கத்துக் காட்டில் பார்த்த உடனேயே உங்களுக்குக் தந்தி கொடுத்தேன்!” 

“அவர் என்ன சொன்னார்?”

“என்ன சொன்னாரா: என்னைப் பார்த்ததும் பார்க்காத வரைப்போலப் போய்விட்டார்! அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. வெறிமட்டும் இருந்தது. நான் காரை நிறுத்தினேன். ஆனால் அவர் விரைந்து சென்று மறைந்து லிட்டார். காரை விட்டு இறங்கிச் சென்றேன். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! அவர் பார்வை வெறிபிடித்தவர் பார்வையைப் போலிருந்தது!” என்றார் நல்லநாயகம். 

சங்கர்லால் சிறிதுநேரம் பேசவில்லை. அவர் தேநீரைப் பருகி விட்டு மெல்ல எழுந்து சென்று சன்னல் பக்கமாகப் பார்த்தார்.

“என்னை நீங்கள் நம்பவில்லையா?” என்று கேட்டார் நல்லநாயகம். 

“உங்களை நான் நம்பாவிட்டால். இங்கே ஏன் வரப் போகிறேன்?” என்றார் சங்கர்லால். பிறகு, சிறிது நேரம் சிந்துத்துவிட்டு, அவர் சொன்னார். ”நான் உங்களை நம்ப மற்றொரு காரணமும் இருக்கிறது!” 

“என்ன காரணம் அது, சொல்லுங்கள் சங்கர்லால்” என்றார் நல்லநாயகம். 

“உங்கள் தந்தியைக் கண்டதும் தமிழ்ச்செல்வம் உயிருடன் இருப்பாரா என்ற ஐயம் வந்தது. அதை உறுதிப் படுத்திக்கொள்ள, அவர் புதைக்கப்பட்டிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன். நானும் காரோட்டியும் மட்டுமே போயிருந்தோம். தமிழ்ச்செல்வம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, சவப் பெட்டியில் அவர் உடல் இல்லை” 

உடனே நல்வநாயகத்தின் முகம் பலர்ந்தது “பார்த்தீர்களா? நான் கூறியது உண்மையாகிவிட்டது தமிழ்ச்செல்வம் உயிருடன் இருக்கிறார். அவரை எப்படியும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்ச்செல்வம் எப்படி உயிர் பெற்றார் என்று கண்டுபிடிக்க வேண்டும்!” 

“தமிழ்ச்செல்வத்தை நாம் உடனே தேடவேண்டும். ஏனென்றால், அவர் இனி நம்மைத் தேடி வரமாட்டார். ஆகையால், நாம்தான் அவரைத் தேடிச் செல்லவேண்டும்” என்றார் சங்கர்லால், 

“தமிழ்ச்செல்வம் நம்மைத் தேடி வர வரமாட்டாரா? ஏன்?” என்றார் நல்லநாயகம். 

“தமிழ்ச்செல்வத்துக்குத் தான் யார் என்பதும், தனக்கு என்ன நடந்தது என்பதும், ஒன்றுமே நினைவு இருக்காது என்பது என் கருத்து” 

“அப்படியானால் அவருக்கு வெறிபிடித்து விட்டிருக்கும் என்கிறீர்களா?”

“வெறி பிடித்திருக்காது”. 

“வேறு என்னவாக இருக்கும்?”

“தெரியவில்லை. அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்” 

“மந்திரம், மாயம் என்கிறார்களே, அலைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” 

“நான் நம்பும்படி அப்படிப்பட்ட சக்திகளை இதுவரையில் நான் நேரில் கண்டதில்லை” என்றார் சங்கர்லால்.

“நான் நம்புகிறேன் சங்கர்லால்” என்றார் நல்ல நாயகம். .

சங்கர்லால் சொன்னார்: “நானும் வரும்போது வழியில் மனிதனைக் கண்டேன், அவனும் என்னைக் ஒரு கண்டு என்னைப் பார்க்காதவனைப்போல் போய்விட்டான் அவன் பார்வையில் உயிர் இல்லை. அவன் பேசவில்லை, அவன் பக் கத்தில் மற்ற மனிதர்கள் நடமாடுவதை அவன் உணருவதா கத் தெரியலில்லை. இப்போதுதான் தமிழ்ச் செல்வத்தைப் போலவே பக்கத்துக் காட்டில் இன்னொரு மனிதனும் இதைப் போலவே இருப்பதை உணரமுடிகிறது!” 

“நீங்கள் கண்ட மனிதனும் இறந்து பிழைத்தவனாக இருப்பானோ?” என்று கேட்டார் நல்லநாயகம்! 

“இருக்கலாம். ஆனால் உண்மை தெரியவில்லை. இறந்தவர்கள் பிழைத்து நினைவு இல்லாமல் உலாவுகிறவர்கள். இரண்டுபேர்கள்தான் இருக்கிறார்களா, ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்!”

“ஏன் இப்படி உங்களுக்கு ஓர் ஐயம் வந்துவிட்டது?” என்றார் நல்லநாயகம். 

“என்னுடைய ஐயத்திற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது நான் சொல்லப்போவதில்லை” என்றார் சங்கர்லால். 

இந்தப் பதில் நல்லநாயகத்துக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

சங்கர்லால் அடுத்தபடியாகச் சொன்னார்: “தமிழ்ச் செல்வம் தங்கியிருக்க நீங்கள் ஒதுக்கியிருந்த குடிசை தீப்பற்றிக்கொண்டதே. அது உங்களுக்குத் தெரியுமா?” 

“தெரியும் தொலைபேசியில் நான் என் மகன் நெடியோனுடன் பேசியபோது இதைப்பற்றிச் சொன்னான். குடிசை தீப்பற்றியபோது நீங்களும் இருந்தீர்களாமே!” 

”ஆமாம்” 

“குடிசை தீப்பற்றிக் கொண்டது. இயற்கையாக ஏற்பட்ட ஒரு விபத்து என்று நெடியோன் கூறினான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” 

”அது இயற்கையாக ஏற்பட்ட விபத்து என்று எனக்குத் தோன்றவில்லை!” என்றார் சங்கர்லால். 

“ஏன் அப்படி எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார் நல்லநாயகம். 

“குடிசையில் இருந்த தமிழ்ச்செல்வத்தின் பெட்டி முழுதாக என்னிடம் கிடைக்கக்கூடாது என்று எண்ணிய எவரோ குடிசைக்குத் தீ வைத்திருக்கிறார்கள் என்பது என் எண்ணம்”. 

“குடிசைக்குத் தீ வைத்தது யாராக இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?” 

“அதைப்பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு நான் வரவில்லை” என்றார் சங்கர்லால் சிரித்துக்கொண்டே! 

“பணிப்பெண் வேண்மகளைப் பற்றி உங்களிடம் சில உண்மைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் சங்கர்லால். 

”கேளுங்கள்!”

“வேண்மகளை நான் கண்டேன். அவள் அந்த குடிசைக்குள் சென்று விளக்குக்கு எண்ணெய் ஊற்றிவிட்டு வந்தாள். அவள் வெளியே வந்துவிட்ட பின்புதான் தீ. குடிசையைப் பற்றிக்கொண்டது. அவள் மிக அழகியவள். தமிழ்ச்செல்வம் அந்தப் பெண்ணின் மீது அன்பு மிகக் கொண்டிருந்தாரா?” 

இதைக் கேட்டதும் நல்லநாயகத்துக்குச் சற்று விழிப்பு. ஏற்பட்டது. “ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? வேண்மகளை நாங்கள் பணிப்பெண்ணாகக் கருதுவதில்லை. அவள் என் வளர்ப்புப் பெண்ணைப் போன்றவள். எல்லாருமே அவள் மீது அன்பு மிகக் கொண்டிருக்கிறோம். அதைப் போலத்தான் தமிழ்ச்செல்வமும் அவள் மீது அன்பு செலுத்தினார். 

“தமிழ்ச்செல்வம் வேண்மகமை மணந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருப்பாரா? அவளைப் பற்றி அடிக்கடி ஏதாவது அவர் உங்களிடம் பேசுவது உண்டா?” 

இதைக் கேட்டதும் நல்லநாயகம் அதிர்ச்சியடைந்தவரைப் போல் காணப்பட்டார். சிறிது நேரம் சிந்தித்து விட்டுச் சொன்னார்: “தமிழ்ச்செல்வம் அடிக்கடி வேண்மகளைப் பற்றிப் பேசுவார். ஆனால் அவளை மணந்து கொள்ளும் அளவுக்கு அவர் அவள்மேல் அன்பு கொண்டிருப்பார் என்று நான் நம்பவில்லை! இப்போது நீங்கள் கூறியதும் எனக்கு ஐயம் வந்துவிட்டது!”

“வேண்மகளுக்குத் தூரத்து உறவினர் எவராவது உண்டா?”

“எவரும் இலர்”

“வேண்மகளை மணந்துகொள்ள வேண்டும் என்று உங்கள் எஸ்டேட்டில் உள்ள வேறு எவராவது முயற்சி செய்தது உண்டா?” 

“இல்லை” என்றார் நல்லநாயகம். பிறகு சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, ”வேறு எஸ்டேட்டில் உள்ள ஒருவர் வேண்மகளை மணந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டார். அவரை நான் விரட்டி அடித்து விட்டேன்!”. 

“யார் அந்த மனிதா?” 

“மெய்தம்பியின் எஸ்டேட்டில் பொறுப்பாளர் பதவியில் இருப்பவர். அவரைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை!”

“அவன் பெயர் என்ன?” 

“வேலப்பன்” என்றார் நல்லநாயகம். 

“இந்த வேலப்பனை விரைவில் நான் காணவேண்டும். அதற்குமுன் நாம் இருவரும் இன்றிரவே புறப்பட்டுத் தமிழ்ச் செல்வத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பார்ப்போம்!” 

“தமிழ்ச் செல்வத்தை நான் கண்ட காட்டின் பக்கம் இரவில் யாரும் போவதில்லை?” 

“நாம் போகப் போகிறோம். உணவு உண்டபின் சற்று உறங்கியதும் புறப்படுவோம். நாம் இருவரும் மட்டும் புறப்படலாம்?” என்றார் சங்கர்லால். பிறகு, “உங்களிடம் ஜீப் இருக்கிறது அல்லவா?” என்று கேட்டார். 

“நான் ஜீப்பின்தான் வந்தேன்”. 

”ஜீப்பில் புறப்படுவோம், நாம் புறப்படப்போவதைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்!”

“ஆகட்டும்” என்றார் நல்லநாயகம். 

அத்தியாயம்-10 

சங்கர்லாலும் நல்லநாயகமும் ஜீப்பில் புறப்பட்ட போது. மணி பதினொன்றாகி விட்டது. சம்பியில் அமைதி நிலயிருந்தது அப்போது. 

ஜீப்பை நல்லநாயகம் செலுத்தினார். நீண்ட நேர பயணத்துக்குப்பின், அடர்ந்த காட்டுக்குள் ஜீப் விரைந்தது.

வழியில் மலைகள் நிறைந்திருந்ததால், சங்கர்லால் ஜீப்பை ஓர் இடத்தில் நிறுத்தும்படிச் சொல்லிவிட்டு, இறங்கி நடக்கத் தொடங்கினார். 

மின்பொறி விளக்கை அடித்தபடி சங்கர்லாலுக்கு முன் நல்லநாயகம் நடந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், “இதோ, இந்த இடத்தில்தான் நான் தமிழ்ச்செல்வத்தைக் கண்டேன்” என்று சொன்னார் நல்லநாயகம். 

“தமிழ்ச்செல்வம் போன் வழியில் செல்லுங்கள்” என்றார் சங்சுர்லால், 

இருவரும் மலைகளைக் கடந்து ஒரு மணி நேரம் நடந்தார்கள் 

வழியில் காட்டு மிருகங்கள்தான் ஓடின. மனிதர்கள் எவரையும் காணவில்லை! 

நடந்து கொண்டேயிருந்த நல்லநாயகம் சட்டென்று நின்றார். அவர் அச்சத்துடன் சங்கர்லாவின் கையைப் பிடித்து “நில்லுங்கள்! இனி நாம் ஓர் அடிகூட முன்னால் போகக் கூடாது!” என்றார். 

“ஏன்?” என்றார் சங்கர்லால், 

“அதோ அந்த ஓசையைக் கேளுங்கள்” 

சங்கர்லால் உற்றுக் கேட்டார். நல்லநாயகத்துக்கு முன்பே அவர் அந்த ஓசையை உணர்ந்து கொண்டிருந்தார் “ஏதோ மேளம் அடிக்கும் ஓசை கேட்கிறது” என்றார் சங்கர்லால், 

”அந்த இடத்துக்கு நாம் போகக்கூடாது. அங்கே சென்றால், நாம் உயிருடன் திரும்ப முடியாது”, என்றார் நல்லநாயகம். 

”மேள ஓசையைக் கேட்டால், ஏதோ பூசை நடப்பதைப் போல் இருக்கிறது. அங்கே செல்லுவதால் பிழை என்ன?” என்று கேட்டார் சங்கர்லால் 

“இந்தக் காட்டில் உள்ளவர்கள் பூசை செய்யும் போது, வேறு மனிதர்கள் யாரும் பூசை உய்யும் இடத்திற்கு வரக் கூடாது. அவர்கள் குலதெய்வத்திற்குப் பூசை போடும் போது, அங்கே புதிதாக எவராவது போனால் போகிறவர்களுக்கு ஆபத்து ஏற்படும்.” என்றார் நல்லநாயகம். 

“என்ன பூசை நடக்கிறது என்பதை கொஞ்சம் தொலைவிலிருந்து பார்ப்போம். தொலைவிலிருந்து பார்த்தால் கூடவா ஆபத்து?” என்று சொல்லிக்கொண்டே சங்கர்லால் விரைவாக முன்னால் நடந்தார். 

மேள ஓசை மிகப் பக்கத்தில் கேட்பதைப் போலிருந்தாலும் அவர்கள் இருவரும் நடக்க நடக்க அந்த ஓசை விலகிக்கொண்டே போவதைப் போலிருந்தது! 

இறுதியாக இருவரும் வெளிச்சம் வந்த ஓர் இடத்தை அடைந்தார்கள். செடி கொடிகளின் இடுக்கிலிருந்து தீப்பந்தங்களின் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. 

சங்கர்லால் செடிகளின் மறைவில் ஒளிந்து ஒளிந்து சென்றார். நல்ல நாயகம் அவர் பின்னாலேயே மறைந்து சென்றார். 

நல்லநாயகத்தினால் சங்கர்லாலுடன் விரைவாக நடக்க முடியவில்லை. அவருக்கு வயதாகி விட்டதால் கொஞ்சம் மூச்சுவாங்கியது, உடல் வோத்துக் கொட்டியது. இருவரும் இன்னும் கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தார்கள். 

சற்றுத் தொலைவிலே. கூட்டமாகச் சிலர் ஒரே பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கன். அவர்களெல்லாம் ஒரே திக்கில் பார்த்தபடி நின்றார்கள். அவர்களுடைய பார்லையில் உயிர் இல்லை. மரங்களைப் போல் அவர்கள் அசைவற்று நின்றிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் பூசாரி ஒருவர் ஏதோ மந்திரங்களைச் சொல்லி, பூசை போட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பூசாரி உடுக்கையை அடித்து மந்திரங்களைச் சொல்லும்போது எல்லாரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் 

பூசாரிக்குப் பின்னால், நான்கு பேர்கள் உட்கார்ந்து மேளங்களை விட்டுவிட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே நின்ற கூட்டத்தைச் சுற்றி மரங்களில் பல தீவட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அந்தத் தீவட்டிகள் எரிந்ததால், அவைகளுக்கு மேல் இருந்த சில கிளைகளிலுள்ள பச்சை இலைகள் கருகிக் கொண்டிருந்தன! 

சங்கர்லால் அங்கே நின்றிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். நல்லநாயகம் சங்கர்லாலுக்குப் பக்கத்தில் நின்று பார்த்தார். ஒவ்வொரு முகமாகப் பார்த்துக் கொண்டே வந்த நல்லநாயகம், “அதோ நிற்கிறார் தமிழ்ச் செல்வம்” என்றார். 

சங்கர்வால். நல்லநாயகம் கையைக் காட்டிய இடத்தைப் பார்த்தார். எல்லாருக்கும் பின்னால் தமிழ்ச்செல்வம் இந்த உலகத்தையே மறந்து நின்றவரைப் போல் நின்று கொண்டிருந்தார்! 

நல்லநாயகம், தமிழ்ச்செல்வத்தைக் கண்டதும் சற்று உரக்கவே கத்திவிட்டார்! அப்போது அவர் பேசியது கூட்டத்திலிருந்த யார் காதிலோ விழுந்து விட்டதைப் போலிருந்தது. 

பூசாரி அவர்கள் இருந்த திககில் திரும்பினார். கொஞ்சம் நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, “நம்முடைய பூசை நடக்கும்போது புதியவர்கள் இங்கே எவரும் வரக் கூடாது. ஆனால் எவரோ வழிதெரியாமல் இங்கே வந்து விட்டார்கள். அவர்களை நாம் விடக்கூடாது! கிளம்புங்கள்!” என்றார். 

பூசாரி கைகளைக்காட்டிய பக்கம் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். உடனே அவர்கள் ஏதோ வெறிகொண்டவர்களைப்போல், கீழே குனிந்து கையில் இடைத்த கட்டைகளை எடுத்துக் கொண்டு, சங்கர்லாலையும் நல்லநாயகத்தையும் தாக்கப் புறப்பட்டு ஓடிவந்தார்கள். 

சங்கர்லால், நல்லநாயகத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பக்கவாட்டில் பதுங்கிப் பதுங்கி ஓடினார் 

“அவர்கள் நேராகப் போவார்கள் நாம் பக்கவாட்டின் நண்டைப்போல் போகலாம் இப்படி நாம் போனால், நாம் போவது அவர்களுக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டு நண்டைப்போலவே பக்கவாட்டில் நகர்ந்தார். நல்ல நாயகமும் குனிந்து சங்கர்லாலுக்குப் பின்னாலேயே  நகர்ந்தார். 

ஏதோ ஓர் ஆற்றலில் கட்டுண்டவர்களைப்போல எல்லாரும் சங்காலாலையும் நல்லநாயகத்தையும் தேடிச் செடிகொடிகளை விலக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கண்களுக்குச் சங்கர்லாலும் நல்லநாயகமும் தென்பட வில்லை. சங்கர்லாலும் நல்ல நாயசுமும் ஒரு பாறையின் மறைவில் பதுங்கியிருந்துவிட்டு, பிறகு மெல்ல ஜீப்பை நோக்கி நடந்தார்கள். 

இருளில் அவர்கள் முடிந்தவரையில் மின்பொறி விளக்கைப் பயன்படுத்தாமலே நடந்தார்கள். மிகவும் நெருக்கடியான வழிகளில் நடந்தபோது மட்டும்தான் மின்பொறி விளக்கை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள், 

“அவர்களில் பாரும் சுயநினைவுடன் இல்லை ஏதோ மந்திரசக்தியால் கட்டுண்டவர்களைப்போல் இருக்கிறார்கள்” என்றார் நல்லநாயகம். 

“எல்லாரும் அப்படியில்லை! பூசாரி மட்டும் சுயநினைவுடன்தான் இருக்கிறார்” என்றார் சங்கர்லால். 

“அங்கே நிற்பவர்கள் எல்லாரும் ஏன் அப்படி நிற்கிறார்கள். அவர்கள் பார்வை ஏன் அப்படி இருக்கிறது? அவர்களில் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்று புரிந்து கொள்ளாமல், பூசாரியின் கட்டளைப்படி மற்றவர்களைத் தாக்குகிறார்கள்? ஒன்றும் புரியவில்லையே!” 

”அங்கே நின்றிருந்தவர்களை யெல்லாம் அடிமைகளைப் போல் வேலை வாங்குகிறார் பூசாரி எஸ்டேட்டில் அந்தக் காலத்தில் அடிமைகளை விலைக்கு வாங்கினார்கள் இன்று இந்தக் காலத்தில் இறந்தவர்களை எழுப்பி அவர்களை அடிமைகளைப்போல் நடத்தி வேலை வாங்குகிறார்கள்!”

“என்னால் தம்ப முடியவில்லையே! இப்படியும் நடக்குமா? இறந்தவர்களை எப்படி எழுப்ப முடியும்?” 

“இறந்தவர்கள் உண்மையில் இறக்கவில்லை என்பது என் கருத்து! தமிழ்ச்செல்வம் கூட உண்மையில் இறக்க வில்லை! அவர் எப்படி இவர்களுக்கு அடிமையானார் என்று கண்டுபிடிக்கப் போகிறேன். அதற்குமுன் இந்த எஸ்டேட்டின் உரிமையாளர் மெய்தம்பியை நான் கணடு பேச வேண்டும்”. 

“மெய்நம்பியை எனக்குப் பிடிப்பதில்லை அதற்குக் காரணம் அவர் பக்கத்திலுள்ள எல்லா எஸ்டேட்டுக்களையும் வாங்க முயற்சி செய்வதுதான், அவர் தனக்குப் பக்கத்தில் உள்ள சிறிய சிறிய எஸ்டேட்டுக்களையெல்லாம் வாங்கிவிட்டார். என்னுடைய எஸ்டேட்டை மட்டும் அவரால் வாங்க முடியவில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும், எவ்வளவு அச்சறுத்தினாலும் என்நிலையை அவரால் மாற்றமுடியாது!” 

சங்கர்லால் ஒன்றும் பேசவில்லை. இருவரும் ஜீப் இருந்த இடத்தை அடைந்தார்கள். ஜீப், சம்பியை நோக்கிப் பறந்தது. 

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *