கெம்ப ராஜ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,220 
 

கடிதத்தைப் படித்ததும் அந்தப் பிரபல வங்கியின் மேனேஜருக்கு பயத்தில் வியர்த்தது. உடனே போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போன் செய்து விவரம் சொன்னார்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனே கமிஷனர் ஆபீஸுக்கு வரச் சொன்னார்கள்.

கடிதத்துடன் பெங்களூர் எம்.ஜி ரோடிலிருந்த வங்கியிலிருந்து, இன்பான்ட்ரி ரோடின் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு விரைந்து சென்றார்.

கடிதத்தைப் படித்த கமிஷனர், “கவலையே படாதீங்க.. இது சும்மா மிரட்டல்தான்.. எதுக்கும் க்ரைம் டி.எஸ்.பி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிரலாம்” என்று இண்டர்காமில் அவரை அழைத்தார்.

க்ரைம் டி.எஸ்.பி உடனே வந்தார். அவர் கடிதத்தை படிக்கும்போதே நாமும் படித்துவிடலாம். இப்ப விட்டோம்னா அப்புறம் அது கான்பிடன்ஷியல் கடிதம் ஆகிவிடும்.

“யோவ் மானேஜர், வருகிற முப்பதாம் தேதி உன்னோட பாங்கில் குறைந்த பட்சம் ஒரு பத்து லட்சம் கொள்ளையடிக்க முடிவு பண்ணிட்டேன். உன்னால முடிஞ்சா தடுத்துக்கோ… வர்றட்டா, கெம்ப ராஜ்”

கடிதத்தை படித்த டி.எஸ்.பி சிரித்துக் கொண்டே கமிஷனிரிடம், “சார் இத நீங்க எங்கிட்ட விட்ருங்க… நான் ஹாண்டில் பண்றேன்” என்றார்.

கமிஷனர், “கெம்ப ராஜைப் பற்றி நமக்குத் தெரியும். கொள்ளையர்களைப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, அலட்சியமாக பணத்தை கோட்டை விட்டுடாதீங்க… அப்புறமா பொதுமக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கும்படி வெச்சிடாதீங்க… இன்னிக்கு தேதி இருபத்தியேழு, இன்னும் மூணு நாள்தான் இருக்கு. தேவையான போர்ஸ் எடுத்துக்குங்க.. யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.” என்றார்.

பாங்க் மானேஜர், “ஆமா சார் பாங்க் கஸ்டமர் யாருக்கும் தெரிய வேண்டாம்…. முப்பதாம் தேதி டிரான்ஸாக்ஷன் அதிகமா இருக்கும், எதையாவது சொல்லி காப்ரா பண்ண வேண்டாம்” என்றார்.

டி.எஸ்.பி., “உங்க ஸ்டாப்புக்கும் எதுவும் தெரிய வேண்டாம்” என்றார்.

“நீங்க வேற இது தெரிஞ்சா பயத்துல எல்லாரும் லீவு போட்டுருவாங்க.”

எழுந்து நின்று அனைவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். கமிஷனர் ரகசியமாக கடிதத்தை பத்திரப் படுத்திக் கொண்டார்.

கர்நாடகத்தில் நூதன மோசடிகள் செய்வதில் கெம்ப ராஜ் பிரபலமானவன்.
எவரையும் அடித்து உதைத்து கொள்ளையடிப்பதில் நம்பிக்கையில்லாதவன். கத்தியின்றி, ரத்தமின்றி புத்திசாலித்தனமாக கொள்ளையடிப்பவன். தன்னுடைய பெரும்பாலான கொள்ளைகளை ஒரு முன்னறிவிப்புடன் செய்வதில் ஒரு அலாதியான இன்பம் கெம்ப ராஜுக்கு.
இதனாலேயே பொதுமக்களில் பலர் அவன் ரசிகர்களாகவே மாறி விட்டனர்.

முப்பதாம் தேதி…

டி.எஸ்.பி மப்டியில் வந்திருந்தார். கைத் துப்பாக்கியை லோடு செய்து தன்னுடன் பத்திரமாக கொண்டு வந்திருந்தார். வங்கியின் கதவை ஒரு ஆள் நுழையும்படி மட்டும் திறந்து வைக்கச் சொன்னார். பொது மக்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து வருவோர் போவோரை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். வங்கிக்கு வெளியே துப்பாக்கியுடன் நான்கு காவலர்கள் மிகுந்த கவனத்துடன் நின்றிருந்தனர்.

மணி பன்னிரண்டு. வங்கி இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 101, 102, 103, 104 என வரிசையாக, கேஷியரின் மேல் அமைந்திருக்கும் எலக்ட்ரானிக் ஒளிபரப்பியில் எண்கள் தெரிய, டோக்கன்கள் கொடுக்கப்பட்டு பணப்பட்டுவாடா அமைதியாக நடந்தது. மாதக் கடைசி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. டி.எஸ்.பி தன் மீசையை பெருமையுடன் நீவி விட்டுக்கொண்டே, கண்ணாடிக் காபினில் அமர்ந்திருந்த பாங்க் மானேஜரைப் பார்த்து சிரித்தார்.

மணி ஒன்று. டி.எஸ்.பி தெம்பாக இருந்தார். மனேஜர் முகத்திலும் சற்று சிரிப்பு வந்திருந்தது.

மணி ஒன்று முப்பது.

கோகுல் இண்டஸ்ட்ரீஸ் எம்.டி தீனதயாளன் அவசரமாக காரை விட்டிறங்கி வங்கிக்குள் வந்தார். பன்னிரண்டு லட்சத்திற்கான டோக்கன் 103 ஐ கேஷியரிடம் நீட்ட, கேஷியர் சுத்தமாக அதிர்ந்தார்.

உடனே தன் இருக்கையிலிருந்து பதறி எழுந்து குரலை உயர்த்தி, “என்ன சார் டோக்கன் 103 க்குத்தான் அப்பவே பன்னிரண்டு லட்சம் கொடுத்தேனே” என்றார்.

தீனதயாளன், “இப்பதான டோக்கன நான் உங்களுக்குத் தரேன்…வாட் இஸ் ஹாப்பனிங் ஹியர்?” என்று குரலை உயர்த்தி சத்தம்போட –

டி.எஸ்.பி யும், வங்கி மானேஜரும் “என்ன, என்ன நடந்தது?” என்று பதட்டத்துடன் காஷியரிடம் ஓட –

தீனதயாளன் வங்கி மானேஜரிடம், “சார் உங்களுக்கே நல்லாத் தெரியும்… நான் பத்தரை மணிக்கு பாங்கில் இருந்தபோது, உங்களோட காபின் லான்ட் லைனுக்குத்தானே எனக்கு போன் வந்தது… பிராங்க் ஆன்டனி ஸ்கூலில் படிக்கும் என் பையனுக்கு ஆக்சிடென்ட்ன்னு… நான் பயந்து போய் உடனே ஸ்கூலுக்கு ஓடினேன், அங்க போனாக்க கடவுள் செயல்ல அப்படி எதுவும் நடக்கல, யாரோ என்ன அலைக்கடிச்சிருக்காங்க. இப்ப திரும்பி வந்து டோக்கன கொடுத்தா, பன்னிரண்டு லட்சம் அப்பவே கொடுத்தாச்சுன்னா என்ன அர்த்தம்? அது என் கம்பெனி சம்பள பட்டுவாடா பணம் சார்.”

“மை காட்” க்ரைம் டி.எஸ்.பி ஏராளமாக வியர்த்தார். பாங்க் மானேஜர் முகம் பேஸ்த்தடித்து சுருங்கியது.

கள்ள நோட்டு என்பது மாதிரி, கள்ள டோக்கன் கொடுத்துவிட்டு பன்னிரண்டு லட்சத்தை சுளையாக அனாயாசமாக கிளப்பிச் சென்று விட்டான் கெம்ப ராஜ்.

103 என்ற எண்ணுடைய இரண்டு டோக்கன்களை ஒப்பிடுகையில் எது அசல் எது போலி என்பது புரியாமல் வங்கியில் அனைவரும் விழி பிதுங்கிக் கொண்டிருந்தபோது, அதே எம்.ஜி ரோட்டின் ஓபராய் ஹோட்டலின் ஏ.ஸி அறையில் கெம்ப ராஜ் கண்களில் ஆர்வம் மின்ன, சூட்கேஸிலிருந்த பன்னிரண்டு லட்சத்தை பெருமிதத்துடன் தடவிப் பார்த்தான்.

அவன் படுக்கையின் மீது பல எண்களில் போலி டோக்கன்கள் சிதறியிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *