மாதுளம் பழம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 1,730 
 

(2009 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமீர் வெளியே எட்டிப் பார்த்தான். அனாரும் அவள் அம்மாவும் தெருவில் போவது தெரிந்தது. அவன் உள்ளம் துள்ளி விளையாடத் தொடங்கியது. இருவரும் அடுத்த தெருவிற்குப்போய்க் கொண்டிருந்தார்கள் எப்பொழுது வெளியே கிளம்புவார்கள் என்றுதானே அவன் இதயம் இத்தனை நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது! அமீரின் ஆசை தழைத்தது.

அந்த வீட்டில் இப்பொழுது அமீரைத் தவிர வேறு யாருமில்லை. அவன் அம்மாவும் வெளியேதான் போயிருந் தாள். வீட்டிலே இரண்டு குடி. தெருப் பக்கம் அமீர் வீடு; பின்புறம் அனார் வீடு. என்றாலும் இருவருக்கும் பிடிக்காது. இரண்டு பேரும் இரண்டு துருவங்கள் மாதிரி. அனார் மீது அமீர் எரிந்து விழுவான். அனார் அடக்கமாக இருப்பாள். மிஞ்சிப் போனால் ஏதேனும் பேச்சுக் கொடுப்பாள். கொஞ்சங்கூட அவனை அனாருக்குப் பிடிக்காது.

அனார் எப்பொழுதும் சுறுசுறுப்போடு இருப்பாள். காலையில் எழுந்து படித்துறைக்குப் போவாள். அப்புறம் அரபி மதரஸாவுக்குப் போவாள். பிறகு பூச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவாள். பின்னர் பள்ளிக்கூடம். அம்மாவுக்கு உதவி, தோழிகளுடன் பேச்சு, விளையாட்டு! பொழுதை இன்பமாகக் கழிப்பாள் அனார். அமீருக்கு இப்படி எந்தப் பழக்கமும் கிடையாது. அவன் முழுச் சோம்பேறி. அம்மா சொல்லைக் கூடக் கேட்க மாட்டான்!

அமீரின் மனம் ஆனந்தத்தால் விம்மியது. இப்பொழுது அவன் தனிக்காட்டு ராஜா. விரும்பியபடி வீட்டில் எதையும் செய்யலாம். ஒரு நிமிஷ சிந்தனைக்குப் பிறகு அவன் நடந்தான். முற்றத்தைத் தாண்டி கொல்லைப் பக்கம் சென்றான். அனாரின் சின்னஞ்சிறு தோட்டம் அங்கேதானே இருக்கிறது. மல்லிகை பூத்திருந்தது; ரோஜாக்கிளை துளிர் விட்டிருந்தது. சாமந்தி மொட்டுக்கட்டியிருந்தது. அவைக ளெல்லாம் அமீரின் கண்ணிலே ஏனோ படவில்லை. அவற்றைப் பார்க்க அவன் வரவில்லையே!

அவன் தேடுவது அந்தச் சிறு மரம்! மாதுளை மரம்! அமீரின் கண்களிலே ஒளி பாய்ந்தது. உயரமாக வளராத மாதுளை மரம் அது. இரண்டு மூன்று சிறு கிளைகள். சிறு சிறு இலைகள். அழகோடு நின்றிருந்தது மாதுளை மரம். மரத்திலே ஒரே ஒரு மாதுளம் பழம். இமைக்காமல் பழத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அமீர். சின்னக் கிளையிலே எவ்வளவு பெரிய பழம்!

பழத்தின் பாரம் பொறுக்காத கொம்பு வளைந்து நின்றது. பச்சையும் சிவப்புமாக அந்த ஒரே பழம் மினு மினுப்போடு தொங்கிக் கொண்டிருந்தது. புதிதாகக் காய்த்த முதல் பழம்!

மாதுளை மரத்தைப் பயிராக்க அனார் எத்தனை பாடுபட்டிருக்கிறாள்! ஒரு நாளைக்குப் பத்துமுறை பார்த்துப் பார்த்துப் பராமரித்து வளர்த்த மரம் அது. அனாருக்கு அப்பொழுது எட்டு வயது இருக்கும். ஒரு நாள் காலையில் படித்துறைக்குப் போன அனார் குளத்து மேட்டில் சிறு செடி முளைத்திருப்பதைப் பார்த்தாள். ஆசையோடு அதனைப் பிடுங்கி வந்தாள். அம்மாவிடம் காட்டியபோதுதான் அது மாதுளங்கன்று என்று அவளுக்குத் தெரிந்தது. அப்புறம் கொல்லையிலே குழி பறித்து நட்டாள்; நாளுக்கு நாள் தண்ணீர் விட்டாள்; தினந்தினம் வளர்ந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆடு மாடு கடிக்காமல் காத்து வந்தாள். அந்தச் செடி செழித்து வளர்ந்தது. செடி மரமாகியது. இலைகள் நிறைந்தன. பூ பூத்தது. பிஞ்சு வைத்தது. காயாகி இப்பொழுது ஒரு மாதுளம் பழமும் பழுத்து நிற்கிறது. முதல் பழம் பழுத்தால், அல்லா பெயரில் ‘பாத்திஹா’ ஓதுவதாக அனார் எண்ணியிருந்தாள். அம்மாவும் அப்படியே நினைத் திருந்தாள். பழுத்து நிற்கும் அந்தப் பழத்தை அடுத்தடுத்த நாளில் பறித்து விடுவதாக எண்ணியிருந்தனர் அனாரும் அவள் அம்மாவும்.

மெல்ல மரத்தருகே நெருங்கினான் அமீர். ‘மாதுளம் பழத்தைப் பறிக்க வேண்டும். அனாரை ஏமாற்றிவிட வேண்டும்’ என்ற எண்ணந்தான் அவனுள்ளே வியாபித் திருந்தது. கண்ணாடியிலே முத்து முத்தாகப் படிந்த நீராவித் துளிகளைப்போல அவன் இதயத்திலே மாசெனும் வித்துக்கள் நிறைந்தன. அனாரின் உயிருக்குயிரான மாதுளம் பழம் அது என்பது அமீருக்குத் தெரியும். ஆனாலும் அந்தக் குஞ்சு நெஞ்சம் குமையும்படி அமீர் நடந்து கொள்ளத்தான் வேண்டுமா?

அமீரின் நெஞ்சிலே அசுரவிசை எழுந்தது. ‘பழத்தைப் பறிக்கலாமா, வேண்டாமா?’

‘பாவம், அனார் மனம் வாடிப் போவாள். அவள் ஆசை அழிந்து விடக்கூடாது. பழத்தை அவளே பறித்துக் கொள்ளட்டும்!- உள்ளத்தின் ஒருபுறம்!

‘அனாரைச் சும்மா விடக்கூடாது. அவள் மகிழ்ச்சி மறைந்து போகட்டும். மாதுளம் பழம் என் கையில் இருக்க வேண்டும்!’- இதயத்திலே இன்பப் புன்னகை நெளிந்தது.

அந்த அழகான பழத்திலே எத்தனைக் கவர்ச்சி! எத்தனை முத்துகள் அதனுள்ளே இருக்கும்! பளபளப்பான அந்தச் சிவப்பு முத்துகளிலே இனிப்பான ரசம் இருக்குமே!

அமீருக்குப் பிடிபடாத பெரு மகிழ்ச்சி! நாவிலே நீர் சுரந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் நிற்பதாகத் தெரிய வில்லை. அடுத்த கணம் அந்த மாதுளம் பழத்தைப் பற்றியது அமீரின் கை. திருகினான். கையில் பழம் வந்தது. கனத்தது. கையில் கூட அடங்கவில்லை. வீட்டிற்குப் பாய்ந்து வந்தான். தொட்டுத் தொட்டுப் பார்த்தான் மாதுளம் பழத்தை. உடனே உடைத்துத் தின்று விட வேண்டும் என்ற ஆசை. யாரேனும் பார்த்து விட்டால். . .? தின்ன மனம் வரவில்லை. பெட்டியில் பழத்தை வைத்தான். பிறகு உடைத்துக் கொள்ளலாம் என்ற நினைவோடு எழுந்தான். வீட்டிலேயே உட்கார்ந் திருந்தால் ஒரு வேளை குற்றம் அவன் மீது வந்தாலும் வரலாமே! எனவே- கதவைச் சாத்தினான். கால்கள் விரைந்தன வீட்டிற்கு வெளியே!

மாலையில் அனாரும் அம்மாவும் வீடு திரும்பினர். வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததுதான் தாமதம்! அதற்குள் அனாரின் ஆசை பறந்தது. அருமையாகப் பேணும் அந்த மாதுளம் பழம் எப்படியிருக்கிறதோ என்ற துடி துடிப்பு. கொல்லைப் பக்கம் பாய்ந்தோடினாள்; மரத்தருகே போனாள்; கண்கள் ஏறிட்டுப் பார்த்தன.

மரம்; மரத்துக் கிளைகள். இலை; இலைகளின் பசுமை. பூ: பூக்களின் செம்மை! எல்லாம் அப்படி யப்படியே இருந்தன. ஆனால்…?ஆனால். . .? மாதுளம் பழம் எங்கே?

அனாரின் விழிகள் வெறுமையைக் கண்டன; கலங்கித் தவித்தன. அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டாற்போல் ஒருகணம் நின்றாள்; நிலை குன்றினாள்; நெஞ்சம் தவித்தது. மின்னலிலே கண்ணைப் பறி கொடுத்து விட்டாற் போன்ற ஏக்கம்; கலக்கம்! ஆசையின் உருவாக அவள் நீர் வார்த்துப் போற்றிய மரம்! அது இருக்கிறது. அதன் பலன் மட்டும் எங்கே மறைந்து விட்டது? காலையிலே அதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாள். இன்ப நினைவுகளெல்லாம் அவள் நெஞ்சிலே நிலவாகி அமுதைப் பொழிந்தனவே! எல்லாம் மாயந்தானா?

அனாரின் ஆசைக் கனவு கருகி விட்டது; கானலாகி விட்டது. மங்கி மறைந்து விட்டது. அது ஏன். .? அந்தத் தீமையை யார் செய்தார்கள்? ஓலமிடும் அவள் உள்ளத்திற்கு அமைதி இல்லையா? அந்த அன்பு நெஞ்சத்திற்கு ஆறுதல் கூற யாரால் முடியும். .. விம்மி விம்மி அழுதாள் அனார். குஞ்சை இழந்த கோழியாக அவள் நெஞ்சு வெந்தது.

அலறிக் கொண்டு ஓடினாள் அன்னையிடம். செய்தி யறிந்தாள் தாய். விழிகள் விரிய மரத்தைப் பார்த்தாள்.

மரம் மரமாக நின்றது. வாய் திறந்து பேசும் சக்தி அதற்கிருந்தால் அனாரின் நிலையைப் பார்த்துக் கொண்டு நிற்குமா அது ? அன்பெனும் நீர் ஊற்றி அதனை மரமாக்கி விட்டவள் அனார்தானே! நன்றிமறவாமல் நடந்ததைச் சொல்லியிருக்கும். ஆனால்…? பழத்தைத் தாங்கி நின்ற அந்தக் கொம்பு. . . அதுவும் மோனம் சாதித்தது. பதறினாள் தாய்..

கண் குளிரக் காலையில் அவளும் பார்த்தாளே! இப்பொழுது மறைந்த விதம் என்ன? எப்படி? யார் பறித்திருப்பார்கள்?

‘அமீர் பறித்திருப்பானோ?’

நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? அவனைக் கேட்டால் அவன் தாய் சும்மா விடுவாளா? சண்டைக்கு வந்து விடுவாள். மின்னல் மின்ன ஆரம்பித்துவிடும். இடி இடிக்கலாகும். வசை மழையாகக் கொட்டும். . . தாயுள்ளம் புகைந்தது. மகளுக்கு ஆறுதல் கூறினாள். பிஞ்சு நெஞ்சின் ஏக்கம், பிழை செய்தவர்களை சும்மா விடாது.

‘எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கிறவர்கள், அவர்கள் தங்கள் செய்வினைக்குத் தக்கபலனை அடைந்தே தீருவார்கள்’ இதைத்தானே திருக் குர்ஆன் கூறுகிறது!

‘யா ரப்பே! என் கண்மணி கதறுகிறாளே! எந்த ‘இப்லீஸோ’ பழத்தைத் திருடி விட்டதே! அவள் ஆசை இப்படியா போகணும்! என் ஹுதாகே, அநியாயம் செய்தவர்களுக்கு நீதான் கூலி கொடுக்கணும்…’

ஆண்டவனை வேண்டினாள் பெற்றவள். அனைத் தையும் அல்லாவின் பேரில் போட்டுவிட்டாள். அனாரின் ஏக்கம் தணியவில்லை. அவள் கண்ணில், நீர் ஆறாகப் பெருகியது!

மஞ்சள் வெயில் மறையும் நேரம். பகல் பொழுது ஓடி ஒளியும் வேளை. அனாரின் சோகம் அடங்கவில்லை. கதறியழுததால் கன்னங்கள் கூட வீங்கிவிட்டன. துயரத்தோடு உட்கார்ந்திருந்தாள். அம்மா ஏதோ வேலையாக இருந்தாள்.

அப்போது-

முன் வீட்டுக் கதவு திறந்தது. அமீர்தான் உள்ளே நுழைந்தான். பழத்தை எடுத்துக் கொண்டு வெளியே போக நினைத்தான் போலும். பெட்டியருகே விரைந்து போனான். ஓலைப் பெட்டியில்தானே காலையில் பழத்தை வைத்தான்! களிப்போடு பெட்டியினுள் கையை விட்டான்.

அடுத்த நொடி!

“அம்மா…அம்மா!” அலறினான், கதறினான். அனார் திடுக்கிட்டெழுந்தாள். அமீர் ஏன் இப்படி அலறுகிறான்? அனாரும் அம்மாவும் ஓடி வந்தனர் அங்கே! துடித்தான் அமீர்.

“அமீர்…! ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது…?” பரபரப்போடு அனாரின் அம்மா கேட்டாள். அமீரால் பேச முடியவில்லை. கண்ணிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது. வலது கையை ஆட்டிக் கொண்டு அழுதான். அருகேயிருந்த ஓலைப் பெட்டியைப் பார்த்தாள் அனார். அதனுள்ளே அந்தப் பழம்- அனாரின் ஆசைக்குரிய மாதுளம்பழம் – இருந்தது!

அந்தப் பெட்டியின் விளிம்பிலே…! தேள்! பெரிய தேள் ஒன்று கொடுக்கை மடக்கிக் கொண்டு இருந்தது. அதுதான் அவனைக் கொட்டி விட்டதா? அதனால்தான் அமீர் இப்படிக் கதறுகிறானோ.. .! அனாருக்கு எல்லாம் விளங்கிவிட்டது.

“திருடன்… திருடன்…!” என்று எதிரொலித்தது அவள் உள்ளம். பெட்டியைத் தள்ளினாள். மாதுளம் பழம் உருண்டது. ஓடிய தேளைப் பார்த்தாள் அம்மா; உருண்ட பழத்தைப் பார்த்தாள்! ஒரேயடியில் மாண்டது தேள்! மகிழ்ச்சி மின்னல் அனாரின் முகத்திலே மின்னியது. எல்லாம் அல்லாவின் அருள்தான்!

பாவத்தைச் செய்தவனுக்குப் பலன் கிடைத்துவிட்டது. திருடினவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அமீருக்கு வேண்டிய பரிசு கிடைத்துவிட்டது. மாதுளம் பழம் அமீருக்குப் பாடம் கற்பித்துக் கொடுத்துவிட்டது. இனிமேல் அவன் திருந்திவிடுவான்.

அனார் கையிலிருந்த மாதுளையை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நினைவு நெருங்கி விட்டது. அல்லாவுக்கு நன்றியைச் செலுத்த அனாரால் முடியும்.மகளையும் மாதுளம் பழத்தையும் மாறி மாறிப் பார்த்தாள் தாய். தாயுள்ளம் மகிழ்ந்தது.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *