மாங்காய்….மாங்காய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 4,645 
 

தலையை விரித்து ஒரு சாதாரண ரப்பர் வளையத்தால் சுற்றி இருந்தது கூட, அழகாகத்தான் இருந்தது,அவளது மெல்லிய மெரூன் கலர் ஜீன்ஸ் பேண்டும் அதற்கு
இணையாக அவள் போட்டிருந்த வெளிர் நீலம் கலந்த பனியனும், அவளிடம் இருந்து வந்த மென்மையான நறுமணமும் இவனை அப்படியே வேறொரு உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது.அவளின் துறு துறு நடையும், செல் போனில் யாரிடமோ சிரித்து சிரித்து பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்றிருந்த்து இவனுக்கு.

ராம், ஜில் என்ற கை பட்டவுடன் தன் நினைவுக்கு வந்தவன், என்ன என்ன? என்று திடுக்கிட்டு கேட்டான். நீ எங்கி¢ருக்கறே? இந்த உலகத்துலதான?

ஆமா, ஆமா, சாரி… அப்படியே உன்னை பார்த்து மறந்துட்டேன் ரேகா.

சும்மா கதை விடாதே,நம்ம புரோகிராம் என்னாச்சு? இன்னும் கண்ணனை காணோம். ஷர்மிளாவை காணோம்?ரகு, ராஜேஸ்,நித்தி, ஒருத்தரையும் காணோம்.

வருவாங்க ! ஒன்பது மணிக்கு இங்கிருந்து கிளம்பலாம்னு சொன்னோம், நீ எட்டு மணிக்கு வந்துட்டு ஒருத்தரையும் காணோம்னு சொன்னா எப்படி, கொஞ்சம் பொறு வந்துடுவாங்க,

சரி அது வரைக்கும் என்ன பண்றது? ஒண்ணு பண்ணுவமா, எதிர்ல உள்ள பேக்கரியில டிரிங்க்ஸ் குடிக்கலாமா?

உன் கூட தனியா வர்றதை விட எனக்கு என்ன வேலை? கொஞ்சம் முகத்தில் அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.

சும்மா வழியாதே, வா போலாம், அவன் கை பிடித்து பாதையை கடந்து எதிரில் உள்ள் கடைக்கு கூட்டிச்சென்றாள்.அவள் கை பற்றியிருந்த சந்தோசத்தில் பலி ஆடு வெட்டுபவனை நம்பி போவது போல அவள் கூடவே நடந்தான்.

ஹாய் ரேகா ! குரல் கேட்க, திரும்பி பார்த்தாள். கண்ணன், ஷர்மிளா, ரகு, நின்று கை ஆட்டிக்கொண்டிருந்தனர்.ஹாய் !, வாங்க, வாங்க, ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடலாம்.

ராம் மனசு மெல்ல துவண்டு விட்டது, சே அவளோட தனியா ஒரு பத்து நிமிசம் பேசலாம்னா, கரடி மாதிரி வந்து தொலைச்சுட்டாங்க, மனதுக்குள் கறுவியவன், வெளிகாட்டாதவாறு அவர்களை பார்த்து இவனும் கை அசைத்தான்.

கண்ணன் வந்தவுடன் இவனை வம்புக்கு இழுத்தான், ஏன் மாப்பிள்ளை, அருமையான சான்ஸை கெடுத்துட்டமா? சே சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, வழிந்தான்.
இவர்கள் அனைவருமே பொறியியல் மாணவர்கள், மூன்றாம் வருடம் படிப்பவர்கள், எங்காவது டூர் போகலாம் என்று முடிவு செய்து ஆழியாறு போகலாம் எனவும் முடிவு செய்திருந்தார்கள்.இந்த கூட்டத்தில் ரேகா கொஞ்சம் வசதி படைத்தவள், மற்றவர்கள் ஓரளவு வசதியுடன் இருந்தார்கள். ராமின் நிலைமை தான் கொஞ்சம் சிரமம், ஆனால் அதை வெளிக்காட்டாமல் சமாளித்துக்கொண்டிருக்கிறான்.அதுவும் ரேகாவின் நட்பு கிடைத்தவுடன் அவனுக்கு அவளுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் மேம்போக்காகவாது வசதியை காட்ட துடித்துக்கொண்டிருக்கிறான்.

வாய்ப்பு கிடைத்தால் ரேகாவை கல்யாணம் கூட செய்து கொள்ளலாம் என்ற கனவில் இருக்கிறான், ரேகாவுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா என்று தெரியவில்லை, அவள் எல்லாரிடமும் சகஜமாகத்தான் இருக்கிறாள்.ஆனாலும் அவள் அருகில் இருந்தால் மனசை இறக்கை கட்டி பறக்க விடும் நிலையிலேதான் ராம் இருக்கிறான்.

ரேகாவின் புத்தம் புதிய கார் பொள்ளாச்சி தாண்டி ஆழியாறை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அருகில் ராம், அவனுக்கு அருகில் ராஜேஸ் உட்கார்ந்திருக்க, பின்னால் ஷர்மிளா, ரகு, கண்ணன்,நித்தி என நால்வர் உட்கார்ந்திருந்தனர்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த ரேகா அவளுக்கு தள்ளி ராமும், ராஜேஸ¤ம் கொஞ்சம் இட நெருக்கடியில் தவிக்க, ரேகா ராம் கொஞ்சம் என் பக்கத்துல நகர்ந்து உடகாரு என்று சொன்னாள். ராம் கூச்சத்துடன் மெல்ல அருகில் தள்ளி உட்கார்ந்தவன் அவள் உடலில் தெளித்திருந்த நறுமணத்தை மெல்ல நுகர்ந்து கொண்டே வந்தான்.

ரேகா பாத்து! உன் பக்கத்துல உட்கார்ந்த மயக்கத்திலேயே ராம் இன்னைக்கு பூரா துங்க மாட்டான்.

கண்ணனின் குரல் பின்னலிருந்து வர, ராம் கொஞ்சம் ரோசம் வந்தவனாக அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை,என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். இவர்களில் பேச்சுக்களில் கலக்காமல் ரேகா சாலையை கவனித்து காரை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

ஆழியாறு வந்தவுடன் காரை ஓரம் கட்டி நிறுத்தியவள், பூங்காவுக்குள் நுழையும் முன் ஒரு அம்மாள் கூடையில் மாங்காய்களை அழகாக நறுக்கி விற்றுக்கொண்டு வருவதை பார்த்து ராம் மாங்காய் சாப்பிடலாமா? என்று கேட்க அதுக்கென்ன வாங்கலாமே என்று திரும்பி அந்த கூடைக்கார அம்மாளை பார்த்தவன் தயங்கினான்.அதற்குள் ரேகா இங்க வாங்கம்மா மாங்காய் என்ன விலை என்று கேட்க அந்த அம்மாள் ராமை பார்த்துக்கொண்டே ஒரு மாங்காய் ஐந்து ரூபாய் என்றாள். ஆறு பேரும் அந்த அம்மாளை சுற்றிக்கொண்டு ஆளுக்கொரு மாங்காய் எடுத்தனர். ராம் கொஞ்சம் தள்ளி நின்றாள்.உடனே அந்தம்மாள் இந்தா தம்பி நீ ஒண்ணு எடுத்துக்க என்று அவன் கையில் ஒன்று கொடுக்க ராம் முகத்தில் கலவரத்துடன்
வாங்கிக்கொண்டான்.

எவ்வளவு ஆச்சு? என்று ரேகா கையில் நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு கேட்டாள், இல்லே கண்ணு பார்த்தா படிக்கற புள்ளைகளாட்டம் தெரியுது, காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம், என்று சொல்லி அந்தப்பெண் நகர்ந்து கொண்டாள்.

அவர்கள் அனைவருமே ஆச்சர்யத்துடன், கிட்டத்தட்ட நாற்பது ரூபாய் ஆயிருக்கும்மா,வேண்டாங்கறீங்க, என்று சொல்ல,

வேண்டாம் சாமி, எனக்கு இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள, மத்ததெல்லாம் வித்துப்போகும்,நீங்க எல்லாம் போய் சந்தோசமா இருங்க, சொல்லிவிட்டு விரு விருவென, மாங்காய்…மாங்காய்..என்று கூவிக்கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டாள்

பூங்காவுக்குள் ஒரே குதூகலத்துடன் ரேகாவும் உடன் வந்தவர்களும் ஓடி ஆடிக்கொண்டிருந்தனர். ராம் மட்டும் ஏதோ யோசனையுடனே இருந்தான். வாட் ராம்? ஏன் டல்லா இருக்கே? ஏதாவது பிரச்சினையா? என்று ரேகா கேட்க, நத்திங், நான் நல்லாத்தான் இருக்கேன், சமாளித்தவன் கொஞ்சம் ஹெட் ஏக் ! அவ்வளவுதான். அவனுக்கு பிராப்ளமே நீதான் ரேகா என்று மற்றவர்கள் கோரசாக சொல்லி பெரும் சிரிப்பு சிரித்தனர்.

சூரியன் நடு வானத்தில் நிற்கும் வரை விளையாண்டு கழித்தவர்கள் மனமில்லாமல் பூங்காவை விட்டு வெளியே வர, மாங்காய் விற்றுக்கொண்டிருந்த அம்மாள் இப்பொழுது மோர் விற்றுக்கொண்டிருந்தாள்.ரேகா அவளை பார்த்தவுடன் நேராக வளிடம் சென்று அம்மா! எல்லாத்துக்கும் மோர் கொடுங்க, ஆனா கண்டிப்பா காசு வாங்கிக்கனும், சொன்னவள் இவளே டம்ளரை நீட்டி மோர் வாங்கி எல்லோருக்கும் வினியோகம் செய்தாள்.அந்த அம்மாள் எவ்வளவு வேணும்னாலும் குடிங்க சாமி, வெயிலுக்கு நல்லது என்று சொல்லி குடிக்க வைத்தாள்.

இந்த முறையும் எவ்வள்வோ சொல்லியும் காசு வாங்க மறுத்து விட்டவள், நீங்க எல்லாம் படிக்கற புள்ளைங்க, நாளைக்கு படிச்சு எங்களை மாதிரி ஏழை பாளைங்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்க அது போதும் என்றவள அவர்களை அனுப்பி வைத்தாள்.

அனைவரும் காரில் ஏற ராம் பின் புறம் ஏறிக்கொள்வதாகவும் பின்னால் உட்கார்ந்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர் முன்னல் போய் உட்கார சொல்லி விட்டான். ஏன் ராம்? கேட்ட ரேகாவிடம், ஒண்ணுமில்லை, கொஞ்சம் சாஞ்சுகிட்டே வரணும்னு தோணுது என்று சமாளித்தான்.அடுத்து எங்கே? என்று ரேகா கேட்க,”மங்கி பால்ஸ்” என்று சொல்லவும் கார் அதை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

இந்தா பொன்னம்மா ! உன் மாங்காய் கூடை என்று பெரியவர் ஒருவர் பொன்னம்மாளிடம் மாங்காய் கூடையை கொடுத்துவிட்டு,ஏன் திடீருன்னு என் கடைக்கு வந்து, கொஞ்ச நேரம் நான் மோர் விக்கிறேன்னு சொல்லி எங்கிட்ட இருந்து மோர் டம்ளரை வாங்கிட்ட? அந்த குழந்தைங்க எல்லாம் எப்படியும் வெயில்ல விளையாண்டிட்டு வெளியே வருவாங்கன்னு தெரியும், அவங்களுக்கு மோர் கொடுக்கணும்னு நினைச்சேன், சரி அவங்க குடிச்ச மோருக்கு எவ்வளவு ஆச்சு? என்று சுருக்கு பையை அவிழ்த்தாள் பொன்னம்மா.

அப்படியென்ன அவங்க மேல உனக்கு பாசம் பொத்துகிட்டு வந்துடுச்சு, கேட்ட பெரிசுவிடம்,அவங்க ராமு,ராமு ன்னு கூப்பிட்டுட்டு இருந்தாங்களே, அந்த பையன் என்னோட பையன், பாவம் அவங்களோட இருக்கும்போது நான் போய் அவனுக்கு அம்மான்னு சொன்னா அவனுக்கு மனசு கஷ்டமாயிடும்,அதான் என்னால முடிஞ்ச செலவை அவன் கூட்டாளிகளுக்கு செஞ்சுட்டேன்.சொல்லியவாறு மோருக்கு உண்டான,காசை எண்ணிக்கொடுத்துவிட்டு மாங்காய்…மாங்காய் என்று கூவி நடந்தாள் பொன்னம்மள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *