கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 4,449 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

அத்தியாயம்-1 

தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி அமைந்துக் கொண்டு, குளுகுளுவென்ற சுற்றுப்புறத்தில் மலைச்சரிவில் அழகுடன் அமைந்திருந்த டார்ஜிலிங் நகரத்தில், மிக விலை உயர்ந்த மிகப்பெரிய பங்களாவின் முன், டார்ஜிலிங்கைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவன் கையில் துப்பாக்கியைத் தூக்கமுடியாமல் தூக்கிப் பிடித்தபடி காவல் காத்து நின்றான். 

பங்களாவின் உள்ளே இருந்த காற்றோட்டமான ஓர் அறையில் சங்கர்லால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் மேசையின்மேல் போட்டுக்கொண்டு பருத்த புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். 

அடுத்த அறையில் இருந்து இந்திராவின் குரல் சற்றும் எதிர்பாராதவிதமாக உரக்கக் கேட்டது 

“அத்தான்! ஓடி வாருங்கள்! விரைந்து வாருங்கள்!”

என்னவோ ஏதோ என்று சங்கர்லால் ஓடவில்லை. அவர் மெல்லப் புத்தகத்தைப் போட்டுவிட்டுப் பக்கத்து அறைக்குச் செல்லுவதற்குள் மீண்டும் இந்திரா, “ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள் அத்தான்” என்று கத்தினாள்.

பக்கத்து அறையில் ஒரு தொட்டிலில் சங்கர்லாலின் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. இந்திரா குனிந்து குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது. மூன்று மாதம் நிரம்பிய அந்த ஆண் குழந்தை, உலகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து உறங்கிக்கொண்டிருந்தது. 

“எதற்காக இப்படிக் கத்தினாய், இந்திரா?” என்றார் சங்கர்வால். 

“சற்றுமுன் வரக்கூடாதா? எத்தனை தடவை கூப்பிட்டேன்? உங்கள் காதில் விழலில்லையா?” 

”விழுந்தது. இப்போது என்ன நடந்துவிட்டது?”


“கண்ணன் தூக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் சிரித்தபோது நீங்கள். பார்க்கவில்லையே! உங்களைப் போலவே அவன் சிரிக்கிறான்!” 

“என்னைப்போல் சிரிக்காமல், பின்னே உன்னைப் போலவா அவன் சிரிப்பான்?” என்றார் சங்கர்வால், 

இந்திரா, சங்கர்லாலைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தாள்.  

அதற்குள் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்த வயதான வேலைக்காரன் மாது, “என்ன தம்பி இங்கே ஓசை?” என்று கேட்டான்.

”ஒன்றுமில்லை, மாது. இந்தக் கண்ணன் தூக்கத்தில் சிரித்தபோது நான் பார்க்கவில்லையாம்! இவன் பிறந்ததிலிருந்து ஓசை மிகுதியாக இருக்கிறது!” என்றார் சங்கர்லால். பிறகு, “தேநீர் கொண்டுவா” என்றார். 

மாது தேநீர் கொண்டுவந்தான். 

சங்கர்லால், காலிக் கோப்பையை மாதுவிடம் கொடுத்துவிட்டு, “பக்கத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் இன்று மாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப்பாடகர் தமிழ்ச்செல்வம் மேடையில் தோன்றித் திரைப்படப் பாட்டுகள் பாடப்போகிறாராம். அதற்கு எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. மாலையில் போக வேண்டும். காரோட்டியிடம் சொல்லிவை” என்றார்.

“ஆகட்டும், நம்பி!” என்று சொன்னான் மாது.

சங்காலால் இந்திராவைப் பார்த்து, “நீயும் வருகிறாயா?” என்றார். 

”இல்லை. கண்ணனைத் தூக்கிச் சென்றால், மாலையின் குளிர்ந்த காற்று அவனுக்கு ஆகாது. இங்கே விட்டு விட்டுச் சென்றால் விழித்துக்கொண்டதும் விடாமல் அழத் தொடங்கிவிடுவான். அதுவும் மாதுவைக் கண்டால் மிகுதியாக அழுவான்!” 

“ஆமாம். தம்பி, கண்ணனுக்கு ஏனோ என்னைக் கண்டால் பிடிக்கவில்லை!” என்றான் மாது. 

சங்கர்லால் மெல்லச் சிரித்தார். மாதுவைப் பிடிக்காதவனும் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறானே என்ற எண்ணத்தினால் அது எழுந்தது! 

பிள்ளைகளுக்குத் தோற்றந்தான் தெரியுமே தவிர, மனம். தெரியாது. வளர்ந்தால்தான் அவர்களுக்குத் தோற்றம் வேறு, மனம் வேறு என்பது புரியும். கண்ணனுக்கு மாதுவின் மனம் எப்படிப்பட்டது என்று தெரிந்து விட்டால், பிறகு அவனை அவன் விடவே மாட்டான்! 

அத்தியாயம்-2 

மாலையின் ஒளி குறைத்துகொண்டிருந்தது. கதிரவன் மலைகளுக்கு அப்பால் எங்கேயோ மறைந்துகொண்டிருக்கும் காட்சி, கண்களுக்கு இனிமையாக இருந்தது. 

சங்கர்வால், காரில் புறப்பட்டபோது, இந்திரா வெளியே வந்து வழியனுப்பினாள். மாது தாழ்வாரத்தில் நின்றுகொண்டிருந்தான். கான்ஸ்டபிள், சல்யூட் அடித்து மரியாதையுடன் நின்றான். 

அஸ்ஸாம் அரசாங்கத்தார் சங்கர்லாலின் காரை ஓட்ட அனுப்பிய காரோட்டி காரைச் செலுத்தினான். மலைப் பாதைகளிலும், காட்டு வழிகளிலும் கார் ஓட்டத் தெரிந்தவன் அவன். சங்காலால் எங்கே போகிறார் என்பதை மாது அவனிடம் ஏற்கெனவே விளக்கமாகச் சொல்லியிருந்ததால் அவன் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான். 

மலைகளைக்கடந்து, காட்டுவழியில் சென்றது கார். இறுதியில் கார், தமிழ்ச்செல்வம் வந்து தங்கியிருந்த எஸ்டேட்டை அடைந்தது. அங்கே- 

மக்கள், கூட்டம் கூட்டமாகச் கூடியிருந்தார்கள். ஆனால் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

அஸ்ஸாம் மாகாணத்தைச் சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அங்கேயே குடியேறி எஸ்டேட்டில் வேலை பார்த்துப் பிழைத்து வந்த தொழிலாளர்களும் முகங்களைத் துன்பத்துடன் வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். 

சங்காலால், காரை ஒரு பக்கமாக நிறுத்தும்படி. சொல்லிலிட்டு, மெல்லக் கீழே இறங்கிப் பக்கத்திலே இருந்த ஒருவனிடம், “என்ன நடந்தது?” என்று கேட்டார். 

“தமிழ்ச்செல்வம் சற்றும் எதிர்பாராத வகையில் இறந்து விட்டார்!” என்றான் அந்த மனிதன்! 

பதில் கூறியவன் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு மனிதன்.

“என்ன! உண்மையாகவா?” 

”ஆமாம். நீங்கள் அன்புமிகக் கொண்டு அந்த வீட்டிற்குள் போய்ப் பாருங்கள். இனி அவருடைய இனிய குரலை ரேடியோவிலும் கிராமபோனிலும் கேட்கலாமே தவிர நேரில் கேட்கமுடியாது!” 

“எப்படி இறந்தார்?” 

“ஏதோ இருதயக் கோளாறு. உடலுக்கு ஒன்றுமே இல்லை. ஒரு மணி நேரத்திற்கு முன்புவரை நன்றாகவே இருந்தார்!” 

இருதயக் கோளாறால் மனிதன் இறப்பது என்பது புதிதல்ல. திரை உலகமும் இசை உலகமும் ஒரு சிறந்த பின்னணிப் பாடகரை இழந்துவிட்டதே என எண்ணிய சங்கர்லால், காரோட்டியை அழைத்து, ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து ஒரு மலர் மாலை வாங்கி வரும்படி சொன்னார்- அவன் ஓடிப் போய்ச் சிறிது நேரத்தில் ஒரு மலர் மாலை வாங்கி வந்தான். 

சங்கர்லால், மலர் மாலையுடன் தமிழ்ச்செல்லம் கிடந்த வீட்டிற்குச் சென்று, அவருடைய உடலின்மீது மாலையைப் போட்டுவிட்டு வெளியே வந்தார். அவர் திரும்பி வெளியே வரும்போது தமிழ்ச்செல்வத்தின் முகத்தைப் பார்த்தார். அவர் தூங்குவதைப் போலிருந்தது! மீண்டும் எழுந்திருக்க முடியாத இறுதித் தூக்கம்! 

சங்கர்லால் வெளியே வரும்போது, காட்டிலேயே வாழும் மந்திரவாதி ஒருவன் உள்ளே நுழைந்தான். எல்லாரும் அவனுக்கு ஒதுங்கி வழிவிட்டார்கள். 

சங்கர்லால் திரும்பிச் சென்று எட்டிப் பார்த்தார். மந்திரவாதியின் கையில் கைப்பிடி கொண்ட உருண்டையான மரக்கட்டை ஒன்று இருந்தது. அந்த மரக்கட்டையில் மணி பல கோக்கப்பட்டிருந்தன. தொலைலிலிருந்து பார்ப்பதற்கு அது ஒரு மகுடியைப்போல் இருந்தது! 

அந்த மந்திரவாதி, தமிழ்ச்செல்வத்தின் உடலின்மீது அந்தக் கட்டையால் வருடி, ஏதோ மந்திரத்தைச் சொன்னான். பிறகு, கண்களை மூடிக்கொண்டு வானத்தைப் பார்ப்பதைப்போல் சிறிது நேரம் நின்றுவிட்டுப் பிறகு போய்விட்டான், 

பக்கத்தில் நின்ற ஒரு மனிதனிடம் சங்கர்லால் கேட் டார்: “அவன் என்ன செய்தான்?” 

“இறந்த மனிதர்களைக் கண்டால் இந்தக் காட்டில் உள்ளவர்களுக்கு மிகுந்த அச்சம். பிணம் இருக்குமிடத்தில் அதன் ஆவி இருக்கும் என்றும், அதுதான் பேய் என்றும் நம்புகிறார்கள். தமிழ்ச்செல்வத்தின் ஆவி அமைதிபெறவும் இந்த ஓலை வீட்டிற்குத் திரும்ப அவர் ஆவி வராமல் இருப்பதற்கும் அந்த மந்திரவாதி மந்திரம் போட்டார்”. 

”அப்படியா? அடுத்தபடியாக என்ன?”

“இந்த ஊரின் வழக்கப்படி தமிழ்ச்செல்வத்தின் பிணத்தை ஒரு மரப்பெட்டியில் வைத்துச் சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லுவார்கள். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் பிணம் புறப்பட்டுவிடும்”

சங்கர்லால் வெளியே நின்றபடி பார்த்தார். தமிழ்ச் செல்வத்தின் பிணப்பெட்டியைச் சிலர் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். பிணப்பெட்டியின் முன்னால், தீவட்டிகளுடன் பல எஸ்டேட் தொழிவாளர்கள் புறப்பட்டார் 

சங்கர்லால், மலைச்சரிவு ஒன்றில் நின்றபடி பார்த்தார். காட்டில் சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் ஒரே நேராகப் போகாமல், இப்படியும் அப்படியும் வளைந்து நெளிந்து வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தது. 

சங்கர்லால், காரோட்டியைப் பார்த்து, “நேரான பாதை இருக்கும்போது, அவர்கள் ஏன் இப்படியும் அப்படியும் வளைந்து போகிறார்கள்?” என்றார். 

சங்கர்லாலுக்கு ஏன் என்று தெரியும். எங்கேயோ ஒரு புத்தகத்தில் இதைப்பற்றி அவர் படித்திருக்கிறார். ஆனாலும் கேட்டார். 

காரோட்டி சொன்னான்: ”இந்தப் பக்கங்களில் இப்படித்தான் வழக்கம். பிணத்துடன் அதன் ஆவியும் செல்லுகிறது, அந்த ஆவி மீண்டும் இதே இடத்திற்கு வழி தெரிந்து வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இப்படி அதற்கு வழி தெரியாதபடி செய்துகொண்டு போகிறார்கள்!” 

அத்தியாயம்-3 

சங்கர்லால் பங்களாவை அடைந்ததும் தமிழ்ச் செல்வம் இறந்துவிட்டார் என்று அவர் சொன்ன செய்தி இந்திராவுக்கும் மாதுவுக்கும், அடிக்கடி இரவு சினிமாக் காட்சிக்குப் போய்க்கொண்டிருந்த மலையாளச் சமையல்காரனுக்கும் அச்சத்தைத் தந்துகொண்டிருந்தது! 

சங்கர்லாலும் இந்திராவும் உட்கார்ந்து நீண்டநேரம் தமிழ்ச்செல்வத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் சங்கர்லால், தமிழ்ச்செல்வத்தை அடக்கம் செய்ய அந்த ஊர்க்காரர்கள் பிணத்தை எப்படி எடுத்துச் சென்றார்கள் என்பதைச் சொன்னபோது, இந்திரா சிரிக்கவில்லை. 

”ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு வழக்கம். இதைப் பற்றி நமக்கு என்ன!” என்றாள். 

மாது சங்கர்லாலுக்கும் இந்திராவுக்கும் தேநீரைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “தம்பி, தமிழ்ச்செல்வம் பாடிய சில தத்துவப் பாடல்களை ரேடியோகிராமி வைக்கட்டுமா?” என்றார். 

“வை, மாது” என்றார் சங்கர்லால்.

மாது, ரேடியோகிராமில் தமிழ்ச்செல்வம் பாடியிருந்த சில துன்பமான இசைத்தட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் போட்டான். 

தமிழ்ச்செல்லத்தின் குரல் மிக இனிமையாகவும் உள்ளத்தை உருக்கும் வகையிலும் இருந்தது. எல்லாரும் சாப்பாட்டையும் மறந்து பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது –

வெளியே எவரோ வந்து மணியடிக்கும் ஓசை கேட்டது. 

கான்ஸ்டபிள ஏதோ கத்துக்கொண்டிருந்தான்!

“யாரது?” என்று ஐயத்துடன் கேட்டாள் இந்திரா.

“தமிழ்ச்செல்வத்தின் ஆவிதான் வந்துவிட்டதோ என்னவோ!” என்றார் சங்கர்லால்! 

அதற்குள் மாது வெளியே ஓடினான். 

சிறிது நேரத்திற்கெல்லாம் மாது திரும்பி வந்தான். “தம்பி, நீ இப்போது போய்விட்டு வந்தாயே, அந்த எஸ்டேட்டின் முதலாளி வந்திருக்கிறார்”. 

“இந்தா வந்துவிட்டேன்” என்றார், சங்கர்லால், 

பிறகு அவர் தேநீரைப் பருசிவிட்டு, மெல்ல எழுந்து கீழே இறங்கிச் சென்றார். 

கூடத்தில் உட்கார்ந்திருந்த எஸ்டேட் முதலாளி நல்லநாயகம் எழுந்து நின்றார். அவர் முகத்தில் முத்து முத்தாக வேர்வை அரும்பியிருந்தது.. 

“நீங்கள் வந்துவிட்டுத் திரும்பிவிட்டீர்களாம், பிறகு தான் தெரிந்தது. நான் தமிழ்ச்செல்வத்தின் பிணம் அடக்கத் துக்கு ஏற்பாடு செய்ய முன்பே போய்விட்டேன்!” 

சங்கர்லால் ஒன்றும் பேசவில்லை 

“தமிழ்ச்செல்வம் எப்படி இறந்திருப்பார்? நம்பவே முடியவில்லை! என்னுடைய விருந்தினராக அவர் வந்திருந்தார். பங்களாவைவிட, அந்த ஓலை வீடு குளுகுளுவென்று இருப்பதாகச் சொல்லி, அவரே அங்கு தங்கியிருந்தார்.” 

“எதிர்பாராத முடிவு” 

“ஆனால் தமிழ்ச்செல்வம் இருதயக் கோளாறினால் இறக்கவில்லை என்பது என் எண்ணம்.’ 

”ஏன் நீங்கள் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” 

“சென்ற மாதந்தான் தமிழ்ச்செல்வம் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தார். அப்போது அவரைச் சோதித்த டாக்டர் இருதயம் மிக நன்றாக இருப்பதாதக் கூறியிருக்கிறார். உண்மையில் அவர் எப்படி இறந்தார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்!” என்றார் நல்லநாயகம்.

சங்கர்லால் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். 

”ஏன்? எவராவது தமிழ்ச்செல்வத்தைக் கொன்றுவிட்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். 

“எனக்கு அப்படி ஓர் ஐயம் வந்துவிட்டது. அதனால் தான் உங்களிடம் நான் வந்தேன். தமிழ்ச்செல்லும் எப்படி இறந்திருப்பார் என்று நீங்கள் தவறாது கண்டுபிடிக்கவேண்டும்” என்றார் எஸ்டேட் முதலாளி நல்லநாயகம். 

சங்கர்லால் உடனே கேட்டார்:”உங்கள் எஸ்டேட்டில் டாக்டர் எவரும் இல்லையா?”

“இருக்கிறார்.” 

“அந்த டாக்டர் தமிழ்ச்செல்வத்தைப் பார்க்கவில்லையா?”

“இறந்தபிறகுதான் பார்த்தார். இருதயக் கோளாறால் இறந்துவிட்டார் என்று அவர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். இதனால்தான் தமிழ்ச்செல்வத்தின் உடலைப் பிணச் சோதனைக்கு அனுப்பவில்லை. அப்படியே கொண்டு போய்ப் புதைத்துவிட்டோம்.” 

“டாக்டர், எம்.பி.,பி.எஸ். படித்தவர் தானே?”

“ஆமாம். ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து நான் எஸ்டேட்டில் வேலைக்கு வைத்திருக்கிறேன்.” 

“அப்படியானால் அவர் சொல்லுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?” 

“அதனால்தான் அவர் சொல்லுவதை நான் ஏற்று கொண்டேன் என்றாலும், என் மனத்திற்குள் ஏதோ தமிழ்ச்செல்வம் இயற்கையாக இறக்கவில்லை என்று உறுத்திக்கொண்டே இருக்கிறது அதனால் தான் உங்களிடம் வந்தேன். நீங்கள் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு, துப்பறிந்து என்ன முடிவு சொல்லுகிறீர்களோ. அதுதான் உண்மையாக இருக்கவேண்டும் என்பதுஎன் கருத்து. ஆகையால், நீங்கள் இதை வழக்காக ஏற்றுக்கொள்ளவேண்டும்”. 

சங்கர்லால் எஸ்டேட் முதலாளியைப் பார்த்தார். அவரைப் பார்க்கச் சங்கர்வாலுக்கு இரக்கமாக இருந்தது. அவர் கெஞ்சிக் கேட்டதைப் பார்த்ததும், ‘இந்த ஓர் உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னால் என்ன?’ என்று சங்கர்லாலுக்கு தோன்றியது. ஆகையால், அவர் தமிழ்ச்செல்வத்தின் வழக்கை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். 

நல்லநாயகம் புறப்படுமுன் சொன்னார்: “செலவைப் பற்றித் துன்பம் கொள்ளாதீர்கள். எவ்வளவு பணம் ஆனாலும் குற்றமில்லை. உங்களுக்கு எது, எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்” 

“எனக்கு எல்லா வசதிகளையும் அரசினர் செய்து” கொடுத்திருக்கிறார்கள். எனவே, உங்களிடம் எனக்கு ஒன்றும் இப்போது தேவைப்படாது. நீங்கள் அமைதியுடன் செல்லுங்கள். நாளை நான் உங்களைக் காண்கிறேன்” என்றார் சங்கர்லால். நல்லநாயகம் நம்பிக்கையுடன் வெளியே நடந்தார். வெளியே வந்த நல்லநாயகம் காரில் ஏறி உட்கார்ந்து, சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். சிகரெட்டைப் பற்ற வைத்தபோது தீக்குச்சியின் வெளிச்சத்தில் அவர் முகம் பளிச்சென்று தெரிந்தது. அவர் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டதும் காரை விரைவாகச் செலுத்தினார். 

சங்கர்லால், மாடிக்குச் சென்றபோது, இந்திரா முகத்தை மிகத்துன்பத்துடன் வைத்துக்கொண்டிருந்தாள். 

“ஏன், என்ன வந்துவிட்டது, இந்திரா?” 

“இந்த வழக்கை நீங்கள் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்? வழக்கு எதுவும் வேண்டா. கமிஷனர் வகாபின் தொல்லை இருக்கக்கூடாது என்றுதானே இங்கே நாம் வந்தோம். இங்கேயும் நம்மைச் சும்மா விடமாட்டேன் என்கிறார்களே!” என்றாள் இந்திரா.

“இந்த வீட்டில் ஒட்டுக் கேட்கும் பழக்கம் மிக மிகுதியாகிவிட்டது. மாது ஒட்டுக் கேட்டு வந்து உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா? எங்கே அந்த மாது?’

“அவன்மீது ஒன்றும் குற்றமில்லை. நான்தான் அவனை அனுப்பினேன்!” 

இதைக் கேட்டதும் சங்கர்லால் மெல்லச் சிரித்தார். அவர், குரலை மாற்றிக்கொண்டு மெல்லச் சொன்னார்; “இந்திரா, நான் சொல்லுவதை மிக்க கவனமாகக் கேள். தமிழ்ச்செல்வம் இறந்துவிட்டார். அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக எம்.பி.பி.எஸ்.படித்த டாக்டர் ஒருவர் சர்டிபிகேட் கொடுத்துவிட்டார். ஆனாலும், நல்லநாயகம் அவர் இயற்கையாக இறக்கவில்லை என்று ஐயப்படுகிறார். அவர் ஐயத்திற்குச்சான்று எதுவும் இல்லை. நான் ஆராய்ந்து பார்த்துத் தமிழ்ச்செல்வத்தை எவரும் கொல்லவில்லை என்று சொன்னால் போதும், நல்லநாயகம் அமைதியுடன் தம்முடைய வேலைகளைக் கவனிப்பார். நான் ஆராய்ந்து பார்த்து நாளையே முடிவைச் சொல்லப்போகிறேன். அத்துடன் வழக்கு முடிந்தது!” 

“அத்துடன் வழக்கு முடிந்துவிடுமா? நான் நம்பவில்லை.” 

“ஏன் நீ நம்பவில்லை?” 

“நீங்கள் கையை வைத்ததும் இல்லாத உண்மைகள் எல்லாம் வெளியே வரும்! உங்கள் கைராசி அப்படி பிறகு, தமிழ்ச்செல்வம் கொலை செய்யப்பட்டார் என்று கண்டு பிடிப்பீர்கள்! அதன் பிறகு, கொலையாளியைக் கண்டு பிடிக்க இறங்கிவிடுவீர்கள்! அப்புறம் என்ன? பழைய கதைதான்!”

“இப்படியெல்லாம் எண்ணாதே இது புதுக்கதை. நாளையுடன் இந்தக்கதை முடிந்துவிடும். பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டு, தொட்டிலில் அமைதியுடன் தூங்கிக் கொண்டிருந்த அவர் அருமை மகன் கண்ணனைப் பார்த்தார். அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான், சங்கர்லாலின் மனம், ‘இவன் வளர்ந்ததும், நாம் பிறந்த ஓர் ஆண்டுவரையில் அப்பா எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஓய்வு பெற்றுவந்தார்’ என்று நினைத்து சொல்லி கேலி செய்யமாட்டானா என்று எண்ணியது! 

சங்கர்லால் மனத்தில் என்ன எண்ணம் நிற்கிறது என்பதை இந்திராலால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவள் மனம் அந்த வழக்கு நாளையுடன் முடிந்து விட வேண்டுமே என்று மட்டும் கவலை மிகக்கொண்டது! 

அத்தியாயம்-4

மறுநாள், காலை. சங்கர்லால் நல்லநாயகத்தின் எஸ்டேட்டை நோக்கிக் காரில் புறப்பட்டபோது, இந்திரா வெளியே வந்து கையை அசைத்து, முன்பு போலவே வழி அனுப்பினாள். 

சங்கர்லால், காரின் பின்னால் உட்கார்ந்திருந்தார். அவருடைய டை தளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது அடர்ந்த கருமையான அவருடைய கிராப்புக்கூட கொஞ்சம் கலைந்திருந்தது. அவர் மலைச்சரிவில் இரு பக்கங்களிலும் கண்களை நிரப்பி இயற்கைக் கோலங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

காக்கி உடையும். ஸ்டேஷன் மாஸ்டர் தொப்பியும் அணிந்திருந்த காரோட்டி, இப்படி அப்படித் திரும்பாமல் நேராகப் பார்த்தபடி ஒட்டிக் கொண்டிருந்தான். 

கார், கொஞ்சம் நீண்ட பயணத்துக்குப்பின் நல்ல நாயகத்தின் எஸ்டேட்டுக்குச் சென்றது. சங்கர் வரவேற்க நல்லநாயகம் அப்போது அங்கே இல்லை. நல்லநாயகத்தின் மகன் நெடியோன் அவரை வரவேற்றுப் பணிவிடை செய்தான். 

சங்கர்லால், மெல்ல சிரித்தபடி அவனைப் பார்த்தார். நெடியோன் ஆறடி உயரம் இருந்தான். ஓர் அங்குலம் மிகுதியாகவே இருந்தானே தவிர, குறைவாக இல்லை. சிரித்த முகம், கல்லூரியில் படித்துப் பண்புடன் வளர்ந்தவன் என்பது அவனைப் பார்க்கும் போது தெரிந்தது. 

“என்னுடைய பெயர் நெடியோன். அப்பா காரில் கிழக்குப்பக்கம் முந்நூறு கல் தொலைவு போயிருக்கிறார். அவர் திரும்பிவர இரண்டு நாட்கள் ஆகும். எதிர்பாராமல் அவர் புறப்படும்படி ஆகிவிட்டது”. 

“அப்படியா?” என்றார் சங்கர்லால். 

“ஏதோ ஓர் எஸ்டேட் விலைக்கு வருகிறதாம். அதை உடனே போய் முடிக்கா விட்டால், வேறு கை மாறிவிடும். என்று புறப்பட்டுப் போயிருக்கார். நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.” 

”அதனால் என்ன, நீ இருக்கிறாயே, போதும்!” 

“நான் இன்று காலையில்தான் வந்தேன். நான் வந்த போது அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.உடனே அவர் நடந்ததைக் கூறிவிட்டு, உங்களை வரவேற்று எஸ்டேட்டை சுற்றிக் காட்டும்படி சொல்லிவிட்டுப் போனார்!” 

“நீ எங்கே இருந்தாய் இத்தனை நாட்களும்?” 

“கல்கத்தாவில் படித்துக்கொண்டிருந்தேன். படிப்பு இப்போதுதான் முடிந்தது”. 

இப்படி அவன் கூறிவிட்டுச் சங்கர்லாலைப் பங்களாவுக்குள் அழைத்துச் சென்றான். அவன் தன் அன்னை கோதைநாயகியை அழைத்துவந்து, அவளைச் சங்கர்லாலுக்கு அவன் அறிமுகப்படுத்தி வைத்தான். 

கோதைநாயகி, சங்கர்லாலைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சொன்னாள். “உங்களைப் பார்த்து வந்த பிறகு தான் அவர் அமைதியுடன் தூங்கினார். அதுவரை அவர் வெறிபிடித்தவரைப் போல் நடந்து கொண்டார். டாக்டர் கூறியதை நீங்களும் கூறிவிட்டால், எங்களுக்கு மீண்டும் அமைதி ஏற்படும். ஒரு மனிதர் இயற்கையாக இறந்து விட்டால் நாம் என்ன செய்ய முடியும்? ஆனால் அவர் கொலையுண்டு இறந்திருந்தால் அதன் பொறுப்பு வருங்காலத்தில் எங்கள் தலையில் வந்துவிழும். நாங்கள் தமிழ்ச்செலவத்துக்குப் போதுமான பாதுகாப்புத் தரவில்லை என்று மற்றவர்கள் எண்ணுவார்கள்.” 

”மெய்” என்றார் சங்கர்லால், 

கோதைநாயகி சங்கர்லாலுக்கு தேநீர் கொண்டு வர உள்ளே போய்விட்டாள். 

சங்கர்லால், சன்னல் பக்கமாக வெளியே பார்த்தார். சற்றுத் தொலைவில், தமிழ்ச்செல்வத்தின் பிணம் கிடந்த, அந்த அழகிய குடிசை தெரிந்தது. இப்போது அங்கே அச்சம் தரும் அமைதி நிலலியது. குடிசைக்குள் ஒரு விளக்கு மெல்ல எரிந்து கொண்டிருந்தது. 

சங்கர்லால், உற்றுப் பார்த்தார். அது ஒரு குத்து. விளக்கு. அது காற்றில் அலைபாய்ந்தது. 

சங்கர்லாலுக்கு எதிரே உட்கார்ந்திருந்த நெடியோனும் சன்னல பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்போது, பெரிய பெரிய பூக்கள் போட்ட சேலையை மடித்து மார்பில் கட்டிப்பிருந்த ஒரு பெண் குடிசைக்குள் 
நுழைந்தாள்; அவள் தலையை வாரிப் பின்னாமல் தலைமயிரை அப்படியே விட்டு வைத்திருந்தாள். 

அவளுடைய தலைமயிர் அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுத்தது. அந்தக் கூந்தலில், தலைமயிரின் ஒரு பக்கத்தில் சிவப்பு நிற ரோஜா மலர் ஒன்றை அவள் செருகிக்கொண்டிருந்தாள். அவள் தன் சேலையை உயரத் தூக்கி வேட்டிக் கட்டுவதைப் போல் கட்டியிருந்ததைக் கண்டதும், ஏதோ தீவுகளில் வாழும் பெண்கள் நினைவு வந்தது சங்கர்லாலுக்கு. அந்தப் பெண் குடிசைக்குள் சென்று விளக்கில் எண்ணெய் ஊற்றிவிட்டுத் திரியைத் தூண்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். வெளியேபோன அவள், தோட்டத்திற்குள்ளே எங்கேயோ மறைந்துவிட்டாள். 

சங்கர்வால் திரும்பி, “யார் அந்தப் பெண்?” என்று நெடியோனிடம் கேட்டார். 

“அவள் இங்கே எஸ்டேட்டில் வேலை செய்பவள். என்னுடைய அப்பா, முதல் முதலில் இந்த எஸ்டேட்டுக்கு வந்த போது அவள் இங்கே சிறிய குழந்தையாக இருந்தாளாம். தோட்டக்காரனின் மகள் அவள். அவளைப் பெற்றவர்கள் இறந்ததும், மூன்று வயதிலேயே அவள் அனாதையாகி விட்டான். அதன் பிறகு இந்த எஸ்டேட்டிலேயே அவள் வளர்ந்து வருகிறாள். அந்தக் குடிசை அவளுடையது தான். தமிழ்ச்செல்வம் அந்தக் குடிசையைக் கேட்டபோது, அவள் அதை அவருக்குக் கொடுத்துவிட்டுப் பங்களாலின் பின்னா இருந்த ஓர் அறையில் தங்கியிருந்தாள்”. 

“அவள் பெயர் என்ன?” 

“அவளுக்கு வேண்மகள் என்று தமிழ்ப்பெயராக அவள் அப்பா வைத்திருக்கிறார். ஆனால், அவள் தமிழ்ப் பெண் அல்லள்.” 

கோதைநாயகி, தேநீர் கொண்டு வந்தாள். சங்கர்லாலிடம் ஒரு கோப்பையையும் கொடுத்தாள். 

சங்கர்லால், தேநீரைப் பருகினார், அவர் கண்கள் அடிக்கடி. சன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. அவர் அந்தக் குடிசைக்குள் சென்று ஒருதடவை பார்க்கவேண்டும். என்றும், பிறகு இந்த வேண்மகளிடம் கேள்விகள் சில கேட்க வேண்டும் என்றும் எண்ணினார். 

அவர் தேநீரைப் பருகி முடிப்பதற்குள் வெளியே ஏதோ ஓசை கேட்டது. ஓசை கேட்கும் முன்பே. சங்கர்லாலின் கண்கள் அதன் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டன!

அந்த அழகிய குடிசை தீப்பிடித்து கொண்டது! அங்கே இருந்தவர்கள் எல்லாரும் அதை அணைக்க ஓடினார்கள். அதற்குள் அது மிக விரைவாகப் பற்றிக்கொண்டு எரிந்தது. தீயின் சுடர்கள் நான்கு பக்கங்களிலும் சூழ்ந்தன! பற்றிக் கொண்டன! எரிந்தன! 

சங்கர்லால் எழுந்து வெளியே ஓடினார்! 

குத்து விளக்கில் இருந்த திரி, காற்றில் பறந்து சென்று குடிசையைக் கொளுத்திவிட்டதா? 

சங்கர்லால், இதை நம்பவில்லை. 

குடிசை, வானை அளாவி உயர எழும்பி எரிந்து சாம்பலாகியது! குடிசையைச் சுற்றியிருந்த மரங்களில் சில, இந்தத் தீயினால் கருகிச் சாம்பலாகி நின்றன! 

குடிசைக்கு பக்கத்திலிருந்த ஒரு மரத்திலிருந்து, அச்சம் தரும் விழிகள் இரண்டு சங்கர்வாவை உற்றுப் பார்த்தன. அந்த விழிகள் அவரையே உற்றுப் பார்த்தன. அச்சத்தை மிகுதியாக்கிய அந்த இருவிழிகளும் ஓர் ஆந்தையின்விழிகள். சங்கர்லால் அதை விரட்டினார். அது சங்சர்லாலை உற்று முறைத்துப் பார்த்துவிட்டு விருட்டென்றுகத்திக்கொண்டே பறந்து சென்றது! 

சங்கர்வாலுக்குத் தெரியாத இரகசியம் அந்த ஆந்தைக்குத் தெரியும்போல் இருந்தது! 

அத்தியாயம்-5

குடிசை எரிந்து கருகிச் சாம்பலாகி விட்டது! எவராலும் அதை அணைக்க முடியவில்லை! 

சங்கர்லால், கருகிக் கிடந்த குடிசையைப் பார்த்தார். பின்னணிப் பாடகர் தமிழ்ச்செல்வம் இறந்துவிட்ட பின் அக்குடிசையும் தன்னைத்தானே அழித்துக்கொண்டதைப் போல் அவர் மனத்திற்குத் தோன்றியது. 

குடிசையில் எரிந்து கொண்டிருந்த குந்து விளக்கு உருண்டு கிடந்தது. அதிலிருந்து திரி ஒரு பக்கம் கருகிப் போய் விழுந்திருந்தது. 

நேற்று மாலை வந்தபோது, அந்தக் குடிசையின் உள்ளே ஒரு தடவை பார்த்தது சங்காவாலின் நினைவுக்கு வந்தது. அந்தக் குடிசையில் அப்போது ஒரு முலையில் தோல் பெட்டி இருந்தது. குடிசையின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டிருந்த கொடியில் ஈரத்தணிகள் காய்ந்து கொண்டிருந்தன. இப்போது அந்தக்கொடி அறுந்து விழுந்திருந்தது. அதிலிருந்த துணிகள் எரிந்து கருகிச் சாம்பலாகிப் போயிருந்தன. முலையில் கிடந்த பெட்டியும் அப்படியே கருகிச் சாம்பலாகிப் போயிருந்தது. 

சங்கர்லால், தன்னுடைய கிரேப் பூட்சுகளுடன் கருகி விழுந்து கிடந்த குடிசையை மிதித்துக்கொண்டு, மெல்ல அந்தப் பெட்டியைத் தூக்கினார். அந்தப்பெட்டியின் கைப்பிடி தனியாக வந்தது. மூடியைத் திறந்தார். மூடியும். அப்படியே தனியாக வந்தது! 

நெடியோன் அதற்குள் ஓடி வந்து, “இந்தப் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கப் போகிறீர்களா? நான இந்தப் பெட்டியை வெளியே தூக்கிக் கொண்டு வந்து வைக்கிறேன். நன்றாகப் பாருங்கள்” என்று சொல்லி அப்படியே தூக்கிக் கொண்டு வந்து வெளியே வைத்தான்.

சங்கர்லால் வெளியே வந்து குனிந்து, அந்தப் பெட்டிக்குள் பார்த்தார். அதில் இருந்த உடைகளும் ஒரு சில புத்தகங்களும் கருகிப் போயிருந்தன. சங்கர்லால் அவைகளை விரலால் கிளறியபோது கருகிப்போன சாம்பல் தான் அதில் இருந்தது! எல்லாம் அப்படியே கருகிப் போயிருந்தன! உடனே அவர் தனது காரோட்டியைப் பார்த்து அந்தப் பெட்டியை அப்படியே எடுத்துத் தன்னுடைய காரில் வைக்கும்படி சொன்னார். 

எல்லாரும் குடிசை எப்படித் தீப்பிடித்துக் கொண்டது என்பதைப் பற்றியே பேசிக் கொண்டு நின்றபடி சங்கர்லாலைப் பார்த்தார்கள் 

சங்கர்லால், சற்று முன் குடிசைக்கு வந்து விட்டுப் போன வேண்மகள் சற்றுத் தொலைவில் நின்றிருப்பதைக் கண்டார். நெடியோனை அழைத்து அந்தப் பெண்ணைப் பங்களாவுக்கு அழைத்து வரும்படி சொல்லி விட்டுச் சங்கர்லால், முன்னால் நடந்தார். 

அவர், பங்களாவுக்குள் சென்று கூடத்தில் உட்கார்ந்ததும், நெடியோன் வேண்மானை அழைத்துக் கொண்டு வந்தான். 

சங்கர்வால் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார். ஓரமாகச்சற்று அஞ்சியபடி நின்ற அந்தப்பெண்ணின் முகத்தில் அழகும், அவள் குற்றமற்றவள் என்ற பார்வையும் இருந்தன. 

“என்னைக் கண்டு நீ அஞ்ச வேண்டியதில்லை. நான் கேட்கும் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் நீ பதில் சொன்னால் போதும்!” என்றார் சங்கர்லால், 

அந்தப் பெண் பேசவில்லை. 

”தமிழ்ச்செல்வம் இறந்து விட்டார். இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வருவதிலலை, என்றாலும் ஒருவர் இறந்தால், அவர் ஏன் இறந்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தமிழ்ச்செல்வம் ஏன் இறந்தார் என்பது உனக்குத் தெரியுமா?” 

வேண்மகள் தனக்குத் தெரியாது என்று சொல்லுவதைப் போல் தலையை ஆட்டினாள். 

“தெரியாதா? எல்லாரும் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அதுகூட உனக்குத் தெரியாதா?”. 

வேண்மகள் பேசினாள்: “தமிழ்ச்செல்வம் திடீரென்று இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும், அவர் எதனால் இறந்தார் என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் கூட மற்றவர்கள் சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது!” 

“ஏன்?” என்றார் சங்கர்லால், 

“இந்தப் பகுதியில் ஒரு மனிதர் திடீரென்று இறந்து விட்டால், அதற்குப்பல காரணங்கள் இருக்கின்றன அவைகளையெல்லாம் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள்!” 

“நான் சிரிக்கமாட்டேன். உனக்குத் தோன்றுவதைச் சொல்லு!” 

“எவராவது மந்திரத்தால் தமிழ்ச்செல்வத்தைக் கொன்று விட்டிருக்கலாம். பேயோ அல்லது பிசாசோ அவரை அறைந்து கொன்றிருக்கலாம். ஏதாவது கொடிய பாம்போ பூச்சியோ அவரைக் கடித்து விட்டிருக்கலாம். எனவே, எப்படி அவர் இறந்தார் என்பதை எப்படி என்னால் சொல்ல முடியும்?” 

இதைக் கேட்டுச் சங்கர்லாய் சிரிக்கவில்வை. அவர் அமைதியுடன் பேசினார். “நீ சொல்லும் காரணங்கள் உண்மையானவை என்றே வைத்துக்கொள், டாக்டர் ஒருவர் சோதித்துவிட்டு தமிழ்ச்செல்வம் இறந்தது இருதயக் கோளாறினால்தான் என்று சொன்னதை நாம் எப்படி மறக்க முடியும்?” 

“எங்களுக்கெல்லாம் டாக்டர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை. உடலில் ஏற்படும் எந்த நோயையும் மந்திரத்தால் குணமாக்க முடியும் என்று எண்ணுகிறவர்கள் நாங்கள்” என்று சொன்னாள் வேண்மகள். 

“உன்னுடன் நான் இப்போது மருத்துவத்தைப் பற்றியோ, மந்திரத்தைப் பற்றியோ வாதாட விரும்பவில்லை. தமிழ்ச்செல்வத்துக்கு உதவியாக நீ தானே பணிப் பெண்ணாக இருந்தாய்?” என்று கேட்டார் சங்கர்லால்.

“ஆமாம்.” 

”தமிழ்ச்செல்வத்திடம் புதிய பழக்கம் ஏதாவது இருந்ததை நீ கண்டாயா” 

சங்கர்வால் இந்தக் கேள்வியைக் கேட்டதும் வேண்மகள் சிந்தனையுள் ஆழ்ந்தாள். கூடத்தில் சங்கர்லாலுக்கு எதிரே உட்கார்ந்திருந்த நெடியோனும் அவன் அன்னையும் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. 

வேண்மகன் சொன்னாள்: “அவர் தினமும் காலையில் எழுந்ததும் காப்பி குடித்துவிட்டு, அதோ அந்தப் பக்கமாக நடந்து செல்லுவார். அந்தப் பக்கத்தில் முங்கில் காடு இருக்கிறது. மூங்கில் காட்டில் ஒவ்வொரு முங்கில் செடிப் புதரையும் பார்த்துக் கொண்டே போவார். இதைத் தவிர அவரிடம் வேறு எந்தப் புதுப் பழக்கமும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை” 

இப்படி அவள் சொல்லிவிட்டு, மலைச்சரிவில் சற்றுத் தொலையில் இருந்த பெரிய மூங்கில் காட்டைக் காட்டினாள்  

சங்கர்வால் சற்று வியப்புடன் நிமிர்ந்து உட்கார்த்தார் “எதற்காக அவர் அப்படி மூங்கில் புதர்களைப் பார்த்துக் கொண்டு சென்றார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

“எனக்குத் தெரியாது, ஆனால், அவரைக் கேட்ட போது, அவர் சொன்ன பதில் இதுதான்: ‘முங்கில் துளிர் கிடைக்குமா என்று பார்க்கிறேன். மூங்கில் துளிரைச் சாப்பிட்டால் அது உடலுக்குக் குளிர்ச்சி’ என்று சொல்லுகிறார்கள், மூங்கில் துளிரைச் சாப்பிட்டால் குரலில் ஏற்படும் கரகரப்பு மறைந்து, குரல் இன்னும் இனிமையாகும் என்று சொல்லுகிறார்கள்’. இப்படி அவர் சொன்ன போது எனக்குச் சிரிப்பு வந்தது” 

“ஏன் சிரிப்பு வந்தது?” 

“துளிராக இருக்கும் மூங்கில் செடியைத் தின்றால் அதனால் உடலுக்குக் குளுமை என்பது எனக்குத் தெரியும்- ஆனால் அது குரலுக்கு நல்லது என்பது எனக்கு வேடிக்கையாகப் பட்டது”. 

“உனக்குத் தெரியாது என்றால், அதற்காக நீ சிரிக்கலாமா?” 

“குளுமை மிகுதியினால் நீர்க்கோவை பிடிக்கலாம். அல்லவா? நீர்க்கோவை பிடித்தால் குரல் கெட்டுப் போகும் அல்லவா? பாட்டுப் பாடுகிறவர்கள் நீர்க்கோவை பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? இதனால் தான் எனக்குச் சிரிப்பு வந்தது!” என்று சொன்னாள் வேண்மகள். 

“சரி போகட்டும், மூங்கில் துளிர் குரலுக்கு நல்லதா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். தமிழ்ச்செல்வத்தாய் எவராவது வெளியிலிருந்து தேடிவந்தார்களா?” என்று கேட்டார் சங்கர்லால். 

அவருடைய கேள்வி ஒங்வொன்றும் ஒவ்வாரு கொக்கியைப்போல் இருந்தது. சங்கர்லாலின் கேள்வி என்றால் அது கொக்கிதான் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே! மற்றவர்கள் எதைப்பற்றி நினைக்கவே இல்லையோ, அதைப் பற்றித்தான் சங்கர்லால் கேட்டார். 

வேண்மகன் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “நேற்றுக் காலையில் ஒரு கார் வந்தது. அந்தக் கார் பக்கத்து எஸ்டேட்டைச் சேர்ந்தது. அதில் யார் வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழ்ச்செல்வம் காலையில் நடந்து சென்று விட்டு வரும்போது, அவர் பக்கத்தில் அந்தக் கார் தமிழ்ச்செல்வத்திடம் வந்தது. அதிலிருந்து எவரோ சிறிது நேரம் பேசினார்கள். பிறகு கார் போய்விட்டது. தமிழ்ச்செல்வம் குடிசைக்குத் திரும்பி வந்துவிட்டார்!” 

சங்கர்லால், நெடியோனைப் பார்த்தார். பார்த்து “பக்கத்து எஸ்டேட்டில் இருப்பவர்கள் யார்” என்று கேட்டார். 

“பக்கத்து எஸ்டேட்டில் இருப்பவர் மெய்நம்பி. அவர் எப்படியாவது எங்கள் எஸ்டேட்டை விலைக்கு வாங்கிவிட வேண்டும். என்று முயற்சி செய்துவருகிறார். தந்தைக்கு இந்த மெய்நம்பியைக் கண்டால் பிடிக்காது. ஆகையால் எங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு கிடையாது” என்றான் நெடியோன். 

சங்கர்லால் வேண்மகளை அனுப்பிவிட்டு, நெடியோனிடமும் அவனுடைய அன்னையிடமும் விடைபெற்று. “நான் மீண்டும் வருகிறேன். இந்த வழக்கைப்பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்ததும் சொல்லுகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். 

அவர் வெளியே வந்ததும் கார் ஓட்டியிடம், மலையின் சரி-யில் வளைந்து வளைந்து சென்ற பாதை ஒன்றைச் சுட்டிக் காட்டி, “அதோ அந்தவளைவில் உயர்ந்து நிற்கும் இரண்டு மரங்களுக்குப் பக்கத்தில் காரைக் கொண்டுவந்து நிறுத்தி விட்டு எனக்காகக் காத்திரு. நான் இப்படியே மூங்கில் காட்டிற்குள் புகுந்து குறுக்கு வழியில் வருகிறேன். இங்கிருந்து அது குறுக்கு வழியில் ஒரு கல் தொலைவு இருக்கும்” என்றார். 

காரோட்டி, சற்று விழிப்புடன் பார்த்தான். 

“நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?” என்றான் காரோட்டி 

“ஆமாம். என்னைப்பற்றித் துன்பம் கொள்ளாதே” என்றார் சங்கர்லால்.

“நான் துணையாக வருகிறேன்” என்றான் நெடியோன். 

“தேவை இல்லை. நான் தனியாக நடக்க விரும்புகிறேன்” என்று  சொல்லிவிட்டு சங்கர்வால், மெல்ல நடந்தார். 

கார், புறப்பட்டுச் சாலையின் வழியாக ஓடி மறைந்தது. 

நெடியோனும் மற்றவர்களும் சங்கர்லாலைச் சிறிது நேரம் பார்த்தபடி நின்றார்கள். சங்கர்லால் அந்த முங்கில் காட்டிற்குள் நுழைந்து, தமிழ்ச்செல்வத்தைப் போலவே ஒவ்வொரு புதரிலும் எட்டிப் பார்த்தபடி சென்றார்.

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *