மரம் வளர்த்த குரங்கு!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,717 
 

குரங்கு ஒன்று காட்டிலிருந்த மாமரம் ஒன்றின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் தாவித் தாவி தனது குரங்குச் சேட்டைகளை ஒன்றுவிடாமல் செய்து கொண்டிருந்தது.

வெகுநேரம் விளையாடியதில் அதற்குக் களைப்பு ஏற்பட்டது. பசியும் எடுத்தது.

மரம் வளர்த்த குரங்குஅப்போது தற்செயலாகத் தானிருந்த மரத்தைக் கவனித்த குரங்கு அதில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டது. ஒரு பழத்தைப் பறித்துச் சுவைத்துப் பார்த்தது. மிகவும் இனிப்பாக இருந்தது. இன்னொன்றைச் சுவைத்தது. அது அதற்குமேல் இனிப்பாக இருந்தது.

இப்படியே ஒவ்வொன்றாகப் பல பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தது.

இப்படியே சாப்பிட்டுக் கொண்டே போனதில் மரத்திலிருந்த பழங்கள் எல்லாம் காலியாகிப் போயின.

குரங்குக்கு அந்தப் பழங்களின் சுவை நாக்கை விட்டு அகலவில்லை. அதற்கு ஆசை அடங்கவில்லை. மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. பச்சை நிறத்தில் காய்கள் மட்டுமே இருந்தன. பழங்களே இல்லை!

மாங்கனியின் ருசி பற்றியே நினைத்துக் கொண்டிருந்த குரங்குக்கு ஒரு யோசனை வந்தது. அது நல்ல யோசனைதான்.

தான் சாப்பிட்டுப் போட்ட பழங்களின் கொட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு போய் தனது இருப்பிடத்துக்கு அருகிலே புதைத்து வைத்தால் என்ன? மரம் வளர்ந்து நிறையக் கனிகளைத் தருமே? தான் மட்டும் அக் கனிகளை உண்டு மகிழுவது மட்டுமல்லாமல் தனது கூட்டத்தாருக்கும் கொடுத்து மகிழலாமே. மாம்பழத்துக்காக இவ்வளவு தூரம் வரவேண்டிய தேவையும் நமக்கு இருக்காது.. இப்படியே அந்தக் குரங்கின் சிந்தனை நீண்டு கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் தனது நீண்ட யோசனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உடனே செயலில் இறங்க வேண்டும் என்று தீர்மானித்தது.

விழுந்ததிலேயே நல்லதாக ஒரு மாங்கொட்டையைத் தேர்வு செய்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பியது குரங்கு.

நீண்டதூரம் தாவித் தாவி வந்து இறுதியில் தனது இருப்பிடத்தை அடைந்தது. அந்தக் குரங்கும் அதன் கூட்டத்தாரும் வசித்த இடம் ஓர் அருவிக் கரை. அங்கு நிறைய மரங்கள் இருந்தாலும் மாமரங்கள் இல்லை.

இருப்பிடம் திரும்பிய குரங்கு, அங்கே ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்தது.

ஒரு தேர்ந்த விவசாயியைப் போல, அழகாக ஒரு குழிதோண்டி அதில் அந்த மாங்கொட்டையைப் புதைத்தது. பின்னர் அந்த இடத்தில் அடையாளம் வைத்துவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்று நன்றாக உறங்கியது.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், மாங்கொட்டையைப் புதைத்த இடத்துக்கு வேக வேகமாக வந்தது.

அங்கே மரம் ஒன்றும் வளராததைக் கண்டு மனம் பதைத்தது. உடனே புதைத்த இடத்தைத் தோண்டிப் பார்த்தது. அந்த மாங்கொட்டை அப்படியே இருந்தது. மாங்கொட்டையில் துளிர்கூட விடவில்லை.

குரங்கு ஏமாற்றத்துடன், மீண்டும் அதே இடத்திலேயே அந்தக் கொட்டையைப் புதைத்து வைத்தது. பிறகு தனது இருப்பிடம் திரும்பியது.

மறுநாளும் விடிந்தும் விடியாமலும் இருக்கும்போதே அந்த இடத்துக்கு ஓடோடி வந்தது.

மண்ணிலிருந்து மாங்கொட்டையை எடுத்துப் பார்த்தது. செடி முளைக்காததைக் கண்டு வருத்தத்துடன் மீண்டும் புதைத்து வைத்துவிட்டுச் சென்றது.

இப்படியே பல நாட்கள் சென்றன. அந்த மாங்கொட்டைக்கு முளைப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் தினமும் தோண்டியெடுத்து மீண்டும் புதைத்து வைத்ததில் அந்தக் கொட்டை அழுகிப் போய் மக்கத் தொடங்கியது.

சிலநாட்கள் இப்படியே சென்றன. கடைசியாக ஒருநாள் மனம் வெறுத்துப் போய் குரங்கு அந்த மாங்கொட்டையை மண்ணிலிருந்து பிடுங்கியெடுத்துத் தூர வீசியெறிந்தது.

மண்ணில் புதைந்து இயல்பான வளர்ச்சியைப் பெற்று பெரிய மரமாகிக் கனி தரவேண்டிய அந்த மாங்கொட்டை, பொறுமையும் தெளிவான அறிவுமில்லாத குரங்குப் புத்தியால், வீணாக வாடி வதங்கிப் போனது!

– மதுரை க. பரமசிவன் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *