வெங்காயத் தொக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 17,832 
 

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் மனைவி “ஏங்க வெங்காயத் தொக்கு செய்யலாம்னு இருக்கேன்” என்று சொன்னாள்.

என்ன பீடிகை பலமாக இருக்கேன்னு நினைத்துக் கொண்டே, நல்லது தான், வீட்டில முறுக்கு, தட்டை எல்லாம் இருக்கு, மாங்காய் தொக்குக்கு ஜோடியா வெங்காயத் தொக்கு இருந்தால் எனக்கு நல்லது தான் என்றேன்.

வாயளவில் ஆமோதித்தாலும், ஞாயிற்றுக்கிழமை பேப்பர், டீவி, சோம்பேறித் தூக்கம் இப்படி எதற்காவது வேட்டு வைத்து விடுவாளோ என்கிற பயம் போகவில்லை. நான் பயந்தது போல நடந்து விட்டது.

சின்ன வெங்காயம் வாங்கிட்டு வாங்களேன், பெருசா வாங்கிட்டு வாங்க என்றாள்.

நான் பேப்பரிலிருந்து விலகாமல், பெரிய வெங்காயமா, சின்ன வெங்காயமா புரியுற மாதிரி சொல்லு என்றேன்.

உங்களுக்கு என்னைக்கு தான் புரிந்து இருக்குது, எப்படி தான் படிச்சு முடிச்சீங்களோ என ஆரம்பித்தாள்.

நான் நன்றாக யோசித்துப் பார்த்து விட்டேன், நான் படித்த படிப்பில் வெங்காயத் தொக்கிற்கு எப்படிபட்ட வெங்காயம் வாங்குவது என யாரும் சொல்லி கொடுத்ததில்லை, நானும் முன்ன பின்ன வெங்காயத் தொக்கு செய்ததில்லை, செஞ்சு கொடுத்தா சாப்பிட்டு மட்டும் பழக்கப்பட்டவன். சரி சொல்லு இப்ப என்றாள்.

அவள் பேப்பரை கடுமையாக பார்த்தாள், அடுத்த கணம் பேப்பர் என் கையிலிருந்து காணாமல் போய்விட்டது. பேப்பர் எரிஞ்சு போயிடுச்சோன்னு நினைச்சுட்டேன், அப்புறம் தான் புரிஞ்சது, நான் தான் பதட்டத்தில், பேப்பரை கீழே கடாசிவிட்டேன் போல. உடனே டீச்சருக்கு முன் கீழ்படிந்து இருக்கும் மாணவனைப் போல மரியாதையாக அவள் சொல்லும் வார்த்தையை கேட்க இருக்கும் உடல்மொழிக்கு என்னை மாற்றிக் கொண்டேன்.

அவளுக்கு புரிந்து விட்டது, இனி இவர் நான் சொல்வதை கேட்பார் என்று.

போய் பெரிய சின்ன வெங்காயம் வாங்கிட்டு வாங்க என்றாள். அவ்வளவு கவனத்தோடு இருந்தும், பெரிதாக இருக்கும் சின்ன வெங்காயமா அல்லது சின்னதாக இருக்கும் பெரிய வெங்காயமான்னு விளங்கவில்லை, இன்னைக்கு விளங்கிடும்னு நினைத்துக் கொண்டேன்.

இன்னைக்கு தொக்கு நிச்சயம் ஆனா எந்த தொக்குன்னு தெரியல வெங்காயமா இல்ல நானான்னு.

சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சாம்பிள் இருந்தா காட்டு, நான் அதே மாதிரி வாங்கிட்டு வந்துடறேன் என்றேன்.

ஓ, சின்ன வெங்காயத்தையே நீங்க இது வரை பார்த்ததில்லையோ, ஆனா பெரிய வெங்காயத்த விட சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்லதுன்னு சொல்றீங்க, சாம்பாருக்கு ருசியே சின்ன வெங்காயம் தான்னு சொல்றீங்க என 1, 2, 3 என ஒளவையார் முருகனைப் பாடியது போல் அடுக்கினாள்.

அம்மாடி, நான் எந்த சைசில வாங்கி வர வேணும்னு தான் சாம்பிள் கேட்டேன் என ஒரு வழியாக வழிந்து சமாளித்தேன்.

அவள் மின்னலைப் போல ஹாலில் மறைந்து அடுப்பங்கறைக்குச் சென்று மீண்டும் ஹாலில் தோண்றினாள், கையில் ஒரு சின்ன வெங்காயம். மனதிற்குள் ஒரு சந்தோஷம், அப்பாடா சின்ன வெங்காயம் கன்ஃபார்ம் ஆகி விட்டது. அடுத்த சோதனை அதன் பின் தான் ஆரம்பமாயிற்று.

இது ரொம்ப சின்னதா இருக்கு, உரிக்கிறது கஷ்டம், இத விட ஒரு சுற்று கூடுதலா இருக்கிற மாதிரி பொறுக்கி வாங்கிட்டு வாங்க என்றாள்.

ம்.. என தலையாட்டினேன்.

அவளுக்கு என்னமோ திருப்தியில்லை போல.

அலுவலகத்தில் மில்லியன் டாலர் ப்ராஜெக்ட் எல்லாம் என்ன நம்பி கொடுக்குறானுவ, ஆனா ஒரு வெங்காயம், அதுவும் சின்ன வெங்காயம் என்னால் வாங்கி வர முடியும்னு எனதருமை மனைவிக்கு நம்பிக்கையில்லை, என்ன சோதனைடா சாமீ என்று வேதனைப்பட்டேன். ஒகே இந்த ப்ராஜெக்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் உஷாரானேன்.

காய்கறிகளை சரியான விலை கொடுத்து வாங்குவதில் நான் தோற்றுப் போகாமல் இருந்தது இல்லை. ஆகையால், இந்த முறை தோற்கக் கூடாது என்று, கிலோ எவ்வளவு என்றேன்.

ஆயிரம் கிராம் என்றாள் என் மகள்.

அவள் பாடத்தில் கிலோகிராம், பவுண்டு, கிராம் கன்வெர்ஷன் படித்துக் கொண்டிருந்தாள். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு உன்ன கேக்கல, உங்கம்மாவை என்றேன்.

என் மனைவி என்னை ஒரு முறை எகத்தாளமாகப் பார்த்து விட்டு, அதான் சொன்னாளே, ஆயிரம் கிராம்னு, சரி தானே என்றாள். எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது.

அது இல்லம்மா, ஒரு கிலோ எவ்வளவு ரூவான்னு கேட்டேன் என்றேன்.

அப்படி விளக்கமா கேளுங்க என்றாள்.

அவள் கூறிய பெரிய சின்ன வெங்காயத்திற்கு நான் விளங்காமல் தவித்ததை சுட்டிக் காட்ட திராணியில்லை. சொல்லேன் என்றேன்.

நான் நேத்து வாங்கும் போது 20 ரூவா, இன்னைக்கு காலைல கூட பக்கத்து கடைல 20 ரூவா தானாம், என்னோட ஃப்ரெண்டு வாட்ஸப்பில போட்டிருந்தா, அவ கூட தொக்கு செய்றதா இருக்கிறாளாம்.

அப்ப தான் எனக்கு மூடு பனி விலகியது போல தெளிவானது, என் மனைவி எதுக்கு திடீர்னு தொக்கு செய்றான்னு. டெக்னாலஜியை எப்படியெல்லாம் யூஸ் பண்றாங்கப்பா.

விலை தெரிந்து விட்டது, அடுத்து சைஸ்.

என் மகளிடம், சின்ன ஸ்கேல் கொடு என்றேன்,

என்னோட ரூமில உள்ள டேபிள்ல எதோ ஒரு டிராயர்ல இருக்கும் நீயே எடுத்துக்கோ என்றாள் விட்டேத்தியாக.

அப்படியே அவள் அம்மா மாதிரி.

ஒரு வழியாக ஸ்கேலை கண்டுபிடித்து எடுத்து வந்து எனது மனைவியிடமிருந்த சின்ன சின்ன வெங்காயத்தை அளவெடுத்தேன், 3 செ.மீ இருந்தது. என் மனைவி என்னை ஏனோ வித்தியாசமாகப் பார்த்தாள்.

எப்படியோ போய் வாங்கிட்டு வாங்க என்றாள், அவள் வார்த்தைகளில் நம்பிக்கையை விட சோர்வும், எகத்தாளமும், நக்கலும் தான் தொனித்தது. ஒரு வழியாக, என்ன வாங்க வேண்டும், என்ன சைஸில் வாங்க வேண்டும், தோராயமாக எவ்வளவு விலை என்ற விவரத்துடன் வீட்டை விட்டு பெருமிதத்தோடு கிளம்பினேன். இன்றைக்கு எப்படியும் வெற்றி தான் என என்னையே வாழ்த்திக் கொண்டே நடந்தேன்.

எந்த ஜென்மத்துல நான் செய்த புண்ணியமோ, தெரு முனையிலேயே தள்ளு வண்டியில் வயதான ஒருவர் காய்கறி விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் சின்ன வெங்காயம் இருந்தது. 4 அல்லது 5 செ.மீ அளவில் உள்ள சின்ன வெங்காயம் வேனும் என்றேன், அவரிடம் நான் திட்டு வாங்கியதை இங்கு சொல்லப் போவதில்லை.

திட்டிவிட்டு அவரே என்னை பொறுக்கிக் கொள்ளச் சொன்னார், ஸ்கேல் எடுத்து வந்திருக்கலாமோன்னு தோணுச்சு. முடிவாக உத்தேசமாக பொறுக்கி எடுத்து கொடுத்தவுடன் அவர் கேட்டார், எவ்வளவு போடட்டும்னு, முதல் தோல்வி மணி மனதில் ஒலித்தது. வருகிற அவசரத்தில் எவ்வளவு வாங்கி வரனும்னு கேட்க மறந்தது உறைத்தது.

தொக்கு செய்றதுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு என்றேன், அவரின் முகம் மாறியது, அடுத்த ரவுண்டு திட்டுவார் போல தெரிந்து விட்டது, சுதாரித்து ஒரு கிலோ என்றேன்.

நல்ல வேலை யாரோ ஒரு புண்ணியவான் காய்கறி வாங்க வந்ததால் என்னை திட்டவில்லை. வாங்கிவிட்டேன்.

எவ்வளவு என்றேன், 15 ரூவா என்றார். வெற்றி மணி மனதில் ஒலித்தது. 5 ரூவா கம்மியாக வாங்கிவிட்டேன் என மனம் எகத்தாளமிட்டது. பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை, திட்டிய திட்டுக்கு வேற எவனாவது இருந்தால் வாங்கி முடிக்கும் வரை முகத்தை உர்ரென வைத்துக் கொண்டிருப்பான், இவன் வித்தியாசமாக சந்தோஷமாக இருக்கிறானே என்று.

பணத்தை கொடுத்து விட்டு, மனதில் வெற்றியின் சந்தோஷம் ததும்ப ஓடி வீட்டிற்கு வந்தேன்.

மனைவியிடம் சின்ன வெங்காயத்தை எடுத்துக் காட்டினேன், அவளும் பரவாயில்லையே பெரிய சின்ன வெங்காயமாக வாங்கி வந்து விட்டீர்கள் என்றாள். குறை சொல்லாமல் இருந்தாலே வெற்றி தான், இன்று பாராட்டியே விட்டாள் (இது தாங்க பாராட்டு, நிசமா…), ஆகையால் மனம் கூத்தாடியது. சந்தோஷத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் சொல்லிவிட்டேன், நீ நேற்று 20ரூபாய் கொடுத்து வாங்கியதை விட கம்மியா 15 ரூபாய்க்கு நான் வாங்கி வந்து விட்டேன் என்றேன்.

அங்க தாங்க நான் பெரிய தப்பு செய்து விட்டேன்.

உடனே அவள் வெங்காயத்தை கையிலெடுத்துப் பார்த்து என்ன இவ்வளவு ஈரமா இருக்கு, அதனால தான் கம்மியா கொடுத்திருக்காரு, ஈரம் இல்லன்னா இது முக்கால் கிலோவிற்கு கம்மியா தான் இருக்கும், 15 ரூவா அதிகம் தான் என்றாள்.

ஒளியை விட வேகமாக எனது மனதிலிருந்த வெற்றியை துடைத்தெறிந்து வெற்றிடமாக்கி விட்டாள். தெரிந்து விட்டது, புரிந்து விட்டது, எந்த காலத்திலும் மனைவியை வெல்ல முடியாது என்று.

பின்குறிப்பு: ஞாயிறு மாலை மழை பெய்துக் கொண்டிருந்தது. பால்கனியில் அமர்ந்து முறுக்கையும், தட்டையையும் வெங்காயத் தொக்கோடு ரசித்து ருசித்து சாப்பிட்டேன். காலையில் பட்ட அவஸ்தைக்கு பலன் கிடைத்ததைப் போல உணர்ந்தேன். மனைவியிடம் தோற்பதும் ஒரு வெற்றி தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *