நடுவுல ஒரு பீரோவைக் காணோம்!

 

அந்த அலுவலகத்தின் ரிக்கார்டு பிரிவில், உளுத்து, பழுப்பேறிய கோப்புகள் வைக்கப்பட்ட மர ஷெல்ஃபு வரிசையை ஒட்டி நின்றிருந்த ஐந்து இரும்பு பீரோக்களில், நடுவில் இருந்த ஒரு பீரோ மட்டும் வல்லிசாய் காணாமல் போயிருந்தது…

ஒரு மாத லீவு முடிந்து ஹெட்கிளார்க் அன்று காலை பணிக்குத் திரும்பியிருந்தார். இடைவேளை உணவுக்குப் பிறகு வழக்கம் போல் ரிக்கார்டு அறையில் மறைவாக ஒரு குட்டித் தூக்கம் போடப் போனபோது, அங்கு ஏதோ ஒன்று குறைவது புலப்பட்டாலும் என்னவென்று அவருக்கு அப்போது தெரியவில்லை.
அரை மணி நேரக் கண் அயர்வுக்குப் பிறகு பியூன் அஷ்டாவதானம் அன்னபூர்ணா ஓட்டல் காபியும் கையுமாக அவரை எழுப்பினான்.

“அடடே சித்த சாஞ்சேன், கண்ணை இழுத்துண்டு போயிடுத்து!” என்ற வழக்கமான டயலாக்குடன் எழுந்து காபி பருகினார். சூடான காபி உள்ளே போகவும், அவர் மூளையில் ஆயிரம் வாட் பல்பு ஒன்று பளீரென்று எரிந்தது!

“இந்தாப்பா அஷ்டாவதானம், கொஞ்சம் நில்லு!”

“இன்னா ஸார்?”

“இந்த ரிக்கார்டு ரூமில் மொத்தம் எத்தினி காட்ரெஜ் பீரோ?

அஷ்டாவதானம் நிதானமாக எண்ணிப் பார்த்தான். “நாலு ஸார்!”

“நாலு இப்ப இருக்கு. ஆனா எத்தினி இருக்கணும்? அஞ்சு இல்லையா..?”

பியூன் தலையைச் சொரிந்தான்.

“கூப்பிடுய்யா ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்டை! வரும்போது ஃபர்னிச்சர் ஸ்டாக் ரிஜிஸ்டரைக் கையோடு கொண்டு வரச் சொல்லு! ஒரு மாசம் லீவுல போனாலும் போனேன். இந்த ஆபீசே காணாமல் போயிடும் போலிருக்கே..?”

“வாய்யா ராவ்! நம்ம ஆபீசில் மொத்தம் எத்தனை காட்ரெஜ் பீரோ?”

“பார்த்துச் சொல்றேன் ஸார்…” சாமாராவ் ஸ்டாக் ரிஜிஸ்டரைப் புரட்டினார். “மொத்தம் பத்து ஸார்!”

“பத்து பீரோவையும் இப்ப எனக்குக் காட்டுய்யா! இந்த ரூம்ல எத்தினி இருக்கு?”

“நாலு இருக்கு ஸார்!”

“சரி, வா. ஹாலுக்குப் போகலாம்”

“ஹால்ல ரெண்டு பீரோ ஸார்..”

“மாடியில் எத்தனை இருக்குன்னு செக்கப் பண்ணிட்டு வாரும்!”

மாடிப்படி ஏறிப் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பினார் சாமாராவ். “மேலே மூணு ஸார்..”

“ஆக மொத்தம் ஒன்பது இருக்கு. இன்னும் ஒண்ணு என்ன ஆச்சு?”

சாமாராவ் திரு திருவென்று விழித்தார்.

“இந்தாப்பா அஷ்டாவதானம், மொத்த ஆபீஸ் ஸ்டாஃபையும் கூப்பிடுய்யா..!”

அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அத்தனை பேரும் ஹெட்கிளார்க் ராமாமிர்தம் முன் வந்து கூடினர்.

எல்லோரையும் உற்றுப் பார்த்தார் அவர். “நான் ஒரு மாதம் லீவில் போய்த் திரும்பினால் இங்கே ஒரு முழுப் பீரோவைக் காணலை. இன்னும் என்னென்ன காணாமப் போயிருக்கோ..? சரி, பீரோவைப் பற்றி யாருக்காவது தெரியுமா..?”

“பீரோவைக் காணோமா, என்ன ஸார் இது அநியாயம்?” டெஸ்பாட்ச் ஆபத்பாந்தவன் வியப்பையும் கவலையையும் காட்டினான். “ஐயோ, பீரோவைக் காணோமா, எப்படி?” ஆளுக்கு ஆள் முணு முணுத்தனர்.

“ஸோ, உங்க யாருக்கும் ரிக்கார்டு ரூமில், நடுவில இருந்த பீரோவைப் பத்தித் தெரியாது, இல்லையா? ஆல்ரைட். நான் ஆபீஸர் நாலெட்ஜுக்குக் கொண்டு போய் போலீஸ் நடவடிக்கை எடுக்கறதைத் தவிர வேறு வழியில்லை. நீங்க போகலாம்..!”

கொஞ்ச நேரத்தில் அக்கவுண்டண்ட் சிங்காரம் வந்து ஹெட்கிளார்க்கின் காதைக் கடித்தான். “ஸார், அம்பேத்கர் நகர்கிட்டே டிங்கர் ஒருத்தன் இருக்கான். அங்கே போய் விசாரிச்சால் எல்லாம் புரிஞ்சுடும்.. இந்த மாதிரி திருட்டுப் பொருட்களைத் திருடினவன் அங்கேதான் கொண்டு போய் விக்கிறது வழக்கம். அந்த டிங்கர்கிட்டே சமீபத்துல ஏதாவது பழைய பீரோ விலைக்கு வந்துச்சான்னு விசாரிக்கலாம் ஸார்..”

“நம்ம ஆபீஸ் வேனை எடுத்துண்டு போய் நீங்களே விசாரிச்சுட்டு வந்துடுங்க மிஸ்டர் சிங்காரம்..”

“இதோ போறேன் ஸார். ஒரு விஷயம். இதை நான் சொன்னதா நீங்க வெளியில் சொல்லப்படாது. நம்ம வாட்ச்மேன் மேகராஜ் மேல் எனக்கு ஒரு சந்தேகம். ஒரு ஸ்டீல் பீரோ என்ன விலையாகும்னு போன மாசம் என்கிட்டே அவன் விசாரிச்சான் ஸார்..”

“ஈஸ் இட்..?”

“ஆமா ஸார். ரொம்பத் திமிர் பிடிச்சவன். ஒருநாள் அக்கவுண்ட்ஸ் டாலி ஆகலைன்னு ஈவினிங் கொஞ்ச நேரம் அதிகமா இருக்க்கும்படி ஆயிடுச்சு..ஒரு காபி வாங்கிட்டு வாடான்னு சொன்னால், “அது என் வேலை இல்லைன்னு” சட்டம் பேசறான் ஸார்… சர்வீசுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகலை. என்ன கொழுப்பு பார்த்தீங்களா..? அவன் பீரோ விலையை விசாரிச்சப்பவே எனக்கு சந்தேகம்..”

“ஓஹோ, வாட்ச்மேன் மேகராஜ் பீரோவைப் பத்தி விசாரிச்சானா? நான் பார்த்துக்கறேன்…நீங்க கிளம்புங்க!”

“எஸ் ஸார்!”

சிங்காரம் கிளம்பிப் போனதும் ஹெட்கிளார்க் ராமாமிர்தம், எஸ்டாப்ளிஷ்மெண்ட் ரங்காச்சாரியைக் கூப்பிட்டார். “ஏன் மிஸ்டர் ரங்காச்சாரி, “ஆபீஸர் கேம்ப் முடிஞ்சு எப்போ திரும்பறார்..?”

“நாளைக்கு ஈவினிங் வர்றதாச் சொல்லிட்டுப் போனார் ஸார். கூட காம்ப் கிளார்க் சுபிரமணியமும், டபேதார் ஆறுமுகமும் போயிருக்காங்க..”

“ஆபீஸர் வர்றதுக்குள்ள இந்த பீரோ சமாச்சாரத்தைக் கண்டுபிடிச்சாகணும். இல்லேன்னா நமக்கெல்லாம் கெட்ட பெயர். நைட் வாட்ச்மேன் மேகராஜுக்கு ஒரு மெமோ எழுத வையுங்க. பீரோ அவனுக்குத் தெரியாம வெளியே போயிருக்க வழியில்லை என்றும், உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் போலீளில் புகார் செய்ய வேண்டி வரும் என்றும் மெமோ கொஞ்சம் கடுமையாகவே இருக்கட்டும்..”

“ஒரு விஷயமில்லே, நைட் வாட்ச்மேனுக்கு நீங்க சொன்ன மாதிரியே மெமோ புட்டப் பண்ணிடறேன். அதோடு நம்ம ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்டுக்கும் ஒரு மெமோ கொடுக்கணும் ஸார். வருடா வருடம் ஃபர்னிச்சர் ஸ்டாக்கை ஃபிஸிகல் வெரிஃபிகேஷன் பண்ணணும்னு ரூல் இருக்கா இல்லியா? அவர் ஃபிஸிகல் வெரிஃபிகேஷன் பண்ணி மூணு வருஷமாச்சு!..”

“அப்பிடியா? சரி, பீரோவின் விலையை ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்டின் சம்பளத்திலிருந்து ஏன் பிடித்தம் செய்யக் கூடாதுன்னு ஒரு மெமோ எழுதி வையுங்க..!”

ரங்காச்சாரி மனசுக்குள் மகிழ்ச்சியோடு திரும்பிப் போனார். “படவா சாமாராவ், அவசரத்துக்கு ஐநூறு ரூபாய் கடன் கேட்டால் கொடுக்க மாட்டேன்னு சொன்னியே, இப்பப் பாரு என் பவரை! எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷன் அசிஸ்டெண்ட்கிட்டேயா உன் வாலை ஆட்டுறே? என் பேனாவின் விளையாட்டை இனிமே நீ பாரு!”

பியூன் அஷ்டாவதானம் ஹெட்கிளார்க் முன் சென்று தலையைச் சொறிந்தான்.

“என்னய்யா விஷயம்?”

“ஒண்ணுமில்ல ஸார், நம்ம ஆபீஸில இருக்கற ஒற்றை ஆள் தனியா திருடிகிட்டுப் போற சமாச்சாரமில்லை இது! ரெண்டு பேர் கூட்டு இருக்கணும். நைட்டுலயோ, இல்லை, பகலில் லீவு நாளிலோ டர்ன் டியூட்டியில் ஒருத்தர், ரெண்டு பேர் வர்ற அன்னிக்குத்தான் இந்தத் திருட்டு நடந்திருக்கணும். நம்ம
அக்கவுணண்ட் சிங்காரம் ஸாரும் டெஸ்பாட்ச் ஆபத்பாந்தவனும் போன ஞாயிற்றுக்கிழமை டர்ன் டியூட்டிக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு பியூன் நான்தான். ஆனா என்னை சிங்காரம் ஸார் சூளைமேட்டுல இருக்கிற அவருடைய மாமியார் வீட்டுக்கு அவரோட சொந்த ஜோலியா அனுப்பி வெச்சாரு. போயிட்டுத்
திரும்பிவர ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. அந்த ரெண்டு மணி நேரத்துல என்னவெல்லாம் நடந்திருக்கலாமே!”

ஹெட்கிளார்க், ரங்காச்சாரியை அழைத்துச் சொன்னார்: “மிஸ்டர் ரங்காச்சாரி! அக்கவுண்டண்ட், டெஸ்பாட்ச் கிளார்க் ரெண்டு பேருக்கும் அவங்க மேல் சந்தேகம் வந்திருப்பதாகவும், உண்மையை ஒத்துக் கொள்ளாவிட்டால் போலீசில் புகார் செய்யப் போவதாகவும் மெமோ எழுதி வையுங்க. அதோடு,
பியூன் அஷ்டாவதானத்துக்கும் ஒரு மெமோ புட்டப் பண்ணுங்க. லாஸ்ட் சண்டேயன்னிக்கு டியூட்டி நேரத்தில் அக்கவுண்டண்டின் மாமியார் வீட்டுக்குப் போய் ரெண்டு மணி நேரம் கழித்து வந்ததற்காக அவன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு கேளுங்க…”

“ஸார், ஸார்!” அஷ்டாவதானம் அலறினான்.

“ஷட அப் அண்ட் கெட் அவுட்! ஆபீஸர் வந்ததும் எல்லாம் சொல்லிக்கோ, போய்யா!”

அலுவலகத்தில் மெமோ எழுதப் படாத ஆசாமிகள் மிகவும் சிலரே மிஞ்சியிருந்தார்கள்.

காம்ப் முடிந்து ஆபீஸர் வந்தார்.

எஸ்டாப்ளிஷ்மெண்ட் ராங்காச்சாரி மெமோக்கள் எழுதி வைக்கப்பட்ட ஃபைலைத் தூக்கிக் கொண்டு பின்னே வர, பய பக்தியோடு ஆபீசரின் அறைக்குள் நுழைந்தார் ஹெட்கிளார்க்.

ஆபீசில் அனைவருக்கும் பீதியால் அடிவயிறு கலங்கியது. கண்டிப்புக்கும் கடுமைக்கும் பெயர் பெற்ற ஆபீசர், அலுவலகத்தில் ஒரு பீரோ திருட்டுப் போன செய்தி அறிந்தால் என்ன செய்வாரோ?.. திருடியவன் எவனோ, அவனோடு சேர்ந்து அப்பாவிகளும் அல்லவா மாட்டிக் கொள்ளும்படி ஆகிவிட்டது…

“என்னய்யா ஹெட்கிளார்க், லீவு முடிஞ்சு வந்துட்டீரா..? வந்ததும் வராததுமா இது என்னய்யா அவசர ஃபைல்?”

“ஐயா கோபிச்சுக்கக்கூடாது.. நம்ம ஆபீஸ் ரிக்கார்டு ரூமில் இருந்த ஒரு காட்ரெஜ் பீரோ திருட்டுப் போயிடுத்து. அதைக் கண்டுபிடிக்க நானும் படாதபாடு பட்டேன். ஆபீசில் ரொம்பப் பேர் மேல சந்தேகம் வந்திருக்கு. அது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைக் கோப்பு இது. இந்த ஆபீசில் நல்லவங்களே இல்லையோன்னு நினைக்கத் தோண்றது ஸார்…”

“வாட், பீரோவைக் காணோமா? நல்லாத் தேடிப் பார்த்தீங்களா..?” சத்தமாகக் கேட்டார் ஆபீசர்.

“எஸ் ஸார், மொத்தம் பத்து பீரோக்கள். ரிக்கார்டு அறையில் அஞ்சு பீரோ இருந்ததில் இப்போ ஒண்ணைக் காணோம்!”

திடுமென ஆபீசர் சிரிக்க ஆரம்பித்தார். “ஹா..ஹா..ஹா!” அருகிலிருந்த காம்ப் கிளார்க்கும், டபேதாரும் கூட சிரிக்கத் தொடங்கினார்கள்.

ஹெட்கிளார்க் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

“ஹெட்கிளார்க், இதோ இந்தப் பீரோவைப் பார்த்தீராய்யா..? ஆபீசரின் அறையில் ஒரு மூலையில் திரு திருவென்று விழித்து, சாதுப் பூனையாய் நின்றது, ஆளுயரப் பீரோ ஒன்று.

“இது.. ஸார்.. வந்து…”

ஆபீசர் விளக்கினார்: “இது, ரிக்கார்டு ரூமில் இருந்த அதே பீரோதான்! காம்ப் கிளம்பின அன்னிக்கு அதிகாலையில் இங்கு ஆபீஸ் வந்துட்டுத்தான் போனோம். காலி பீரோவை இங்கே என் அறையில் கொண்டு வந்து வையுங்க, அதில் என் ஃபைல்களை எல்லாம் வெச்சுக்கலாம்னு நான் சொன்னதன் பேரில் நம்ப காம்ப்
கிளார்க்கும் டபேதாரும் சேர்ந்து பீரோவை இங்கே கொண்டுவந்து வெச்சாங்க. அன்னிக்குக் காலையில் டியூட்டியில் இருந்த வாட்ச்மேன் குப்புசாமி ஒருவார லீவில் போய்விட்டதால் உங்களுக்கெல்லாம் விஷயம் தெரியாமல் போயிடுச்சு போலிருக்கு..!”

ரங்காச்சாரி ஆபீசில் பெரும்பாலோர் மீது எழுதி வைத்த மெமோக்களைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எரிச்சலோடு வீசினார்.

(அலிபாபா வார இதழ்) 

தொடர்புடைய சிறுகதைகள்
பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு மனம் தாளவில்லை; பதைத்துப் போனாள். ``என்னம்மா நளினா, தலை வலிக்குதா? தைலம் வேணாத் தடவி விடட்டுமா?'' என்று அருகில் சென்றாள். நளினாவின் ...
மேலும் கதையை படிக்க...
கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு வரும் ``ஆதி டீலக்ஸ் பஸ்சில் நம்ம ஆபீசுக்கு புது ஹெட்கிளார்க் பஞ்சநாதம் வர்றார்.அவரை ரிஸீவ் பண்ணி நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸில் சேர்க்க வேண்டியது உம்ம பொறுப்புய்யா!'' என்று எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷன் ரங்காச்சாரி, ஸ்டோர்ஸ் தங்கப்பனிடம் முந்தின ...
மேலும் கதையை படிக்க...
வடபழனி முருகன் கோயிலுக்குப் போகிற வழியில் இடதுபுறம் திரும்புகிற குறுக்குத்தெரு திருப்பத்தில் விவேகானந்தர் பழைய புத்தகக் கடை, புத்தக விரும்பிகளுக்குப் பிடித்தமான ஒரு சரணாலயம். எழுத்தாளர் மாடலனை அக்கடையில் அடிக்கடி காண முடியும். அங்குதான் புதையல் எனத்தக்க பல அரிய புத்தகங்களை ...
மேலும் கதையை படிக்க...
அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு. ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன் வீட்டு வாசலில். சில பெண்கள் புர்கா அணிந்திருந்தார்கள். குல்லாவும் தாடியுமாக வயது முதிர்ந்த முஸ்லீம் பெரியவர்கள் கூட்டத்தின் பின்னால் நிற்க, முன்னால் நின்ற ...
மேலும் கதையை படிக்க...
'ஹா' என்று இதயம் அதிர்ந்தது - கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து. ''மீனா!'' என்றபடி அருகில் வந்தவனை வியப்புடன் பார்த்தாள் அவள். ''நான் மீனா இல்ல அங்கிள். என் பேரு ராதா. மீனா என் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர் பார்க்கிறார்கள். நீங்கள் வேலைபார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் கிராமத்துக்கு வர விரும்புகிறேன். உங்கள் காலடியில் விழுந்து கதற வேண்டும்போல் ...
மேலும் கதையை படிக்க...
பாவத்துக்கு ஒரு பரிகாரம்
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலட்சியமாகப் பத்து ரூபாய் நோட்டைச் சரளா நீட்டியபோது, ''முப்பது பைசாவா இருந்தால் கொடும்மா - இல்லாட்டி இறங்கிடு!" என்று கறாராகச் சொன்னான் கண்டக்டர். அவன் எழுப்பிய விசில் ஒலியில் ...
மேலும் கதையை படிக்க...
வெயிலில் சுற்றி அலுத்து வீடு திரும்பினான் விசுவம். அம்மாவை அடுப்படியில் பார்த்ததில் சந்தோஷம் கொண்டான். அடுப்பில், பாத்திரத்தில் அரிசி கொதித்துத் துளும்பிக் கொண்டி ருக்கும் காட்சியை நின்று பார்த்தபடி மெல்லக் கேட்டான்: ``அப்பா வந்துட்டாராம்மா?'' ``இல்லைடா விசு, பத்தர் வீட்டுப் பொம்பிளைகிட்ட ஒரு படி ...
மேலும் கதையை படிக்க...
‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்... ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரியதொரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் சந்தித்திருந்த தருணம் அது. மேலும் ஒரு வாரமாக ...
மேலும் கதையை படிக்க...
பர்ஸன்டேஜ்!
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்மா கடத்த அரை மணி நேரமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தார். மானேஜர் நல்ல மூடில் இருப்பதாக அவர் அறையிலிருந்து வந்த 'ஓஹோ ...ஹோ.." என்ற சிரிப்பொலி தெரிவித்தது. உள்ளே பேசிக் ...
மேலும் கதையை படிக்க...
வீரன் மகள்
சிக்கன் 88
பழைய புத்தகக் கடையும் ஓர் எழுத்தாளரும்!
நியாயம்
காத்திருந்து… காத்திருந்து…
நான் இன்னும் குழந்தையாம்…
பாவத்துக்கு ஒரு பரிகாரம்
வயிறு
உறவு சொல்ல ஒரு கடிதம்!
பர்ஸன்டேஜ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)