வாலிப விருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 1, 2020
பார்வையிட்டோர்: 20,129 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வண்டிக்கார வரதன் வேலையினின்று நீக்கப்பட்டான். கணக்குப் பிள்ளை கந்தசாமி வீடுபோய்ச் சேர்ந்தான். தோட்டக்காரனின் குடும்பம் கலைந்தது. அவன் மாலை வரை வேலை செய்துவிட்டு, வீடு சென்று விடவேண்டும். சந்தான கிருஷ்ண ஐயர் இவ்வளவு ‘டிஸ்மிஸ்’ ஆர்டர் போட்டதற்குக் காரணம், பெயருக்கேற்றபடி அன்றி, அவருக்குக் குழந்தையே பிறவாததால், முதல் மனைவியை தாய் வீட்டிற்குத் துரத்திவிட்டு மோகனா எனும் இளைய மனைவியைத் தேடிக் கொண்டதுதான். அந்தச் சிங்காரி பங்களா-வுக்குள் நுழைந்ததும் வீட்டிலே வேலைக்கிருந்தவர்களிலே, வாலிபப் பருவ மானவர் நீக்கப்பட்டனர். தடிதடியாக ஆண்களை நட மாட விட்டுவிட்டு, பிறகு பெண் கெட்டுவிட்டால் தலைமீது கைவைத்துக் கொள்ளும் சில பைத்தியங்கள் ! பாம்பு புற்றிலே கைவிட்டால் ‘புஸ்’ என்று வெளிவந்து கடிக்கத்தான் செய்யும். மோகனாவோ அழகும் இளமையும் தழுவிக் கொண்டிருந்த தங்கக்கொடி! அவள் உலவும் இடமே, சுகந்தம் வீசும். அந்த வாடையைப் பெற்றுப் பெற்று, பித்தம் தலைக் கேறினால் தடிப்பயல்கள் எஜமானரின் மனைவியாச்சே என்று யோசிக்கவுமாட்டார்கள். எவனாவது இளிப்பான். ஏதேனும் ஒன்று நேரிட்டுவிட்டால், பிறகு காலத்துக்கும் தலைகுனிந்து வாழவேண்டும். கிளி வளரப்போகும் இடத்திலே பூனைகளை உலவவிடுவதா? மோகனாவின் உரிமை யாளர், உல்லாச புரியாக்கினார் வீட்டை. ரேடியோ ஒரு புறம்; மற்றோர் புறத்திலே அந்த வாரம் வெளியான கிராம போன் பிளேட்டுகள், நிலைக்கண்ணாடிகள், நேர்த்தியான நாற்காலிகள், சோபாக்கள், மேஜை முதலியன . அழகிய படங்கள் சுவரை அலங்கரித்தன. ஹாலிலே கீழே விரிக்கப் பட்டிருந்த ஜமக்காளமே, ஸ்பெஷலாக, காஷ்மீரிலிருந்து வரவழைக்கப்பட்டது!

இந்தச் சிங்கார ஜோடனையிலே, அந்த சொகுசுக்காரி சிற்பிகள் சிந்தனையையும் கவிகளின் கருத்தையும் கிளறிவிடும் அழகுடன் உலவினாள். ஐயரின் ஆனந்தத்திற்கு அளவில்லை. ‘மோகனா!’ என்று மும்முறை கூப்பிடுவார், மூன்று ஸ்தாயியில் ! அவள் ஒரு முறை புன்முறுவல் பூத்ததும் பூரித்துச் சோபாவில் சாய்வார். இரு வரின் இன்ப வாழ்வு இரண்டாண்டுகள் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது. ஆனால் இளமை மெருகும் எழில் மணமும் வீசிட அவள் உலவினாள். இவர் காலத்தால் கசக்கப்பட்டு, முதுமை என்னும் முற்றத்திலே கிடந்தார். ஐயருக்கு மட்டும் அறுபது வேலி நிலமும், அரை இலட்சம் ரொக்க லேவாதேவியும் இல்லாவிட்டால், இந்தப் பேத்தி, பெண்டாகியிருக்க முடியாது. மோகனாவுக்குத் தன் புருஷனின் முதுமை, தன் இளமை இவைகள் தோன்றவில்லை. அவள் உண்டு, ஆனந்தம் உண்டு. அவ்வளவுதான்! வேறு அறியாள் அந்த வனிதை. வாழ்க்கை என்றால் இதுதான் என்று எண்ணினாள். மனதிலே அலை மோதாத நிலை! கருத்தும் கண்ணும் கட்டுக்கடங்கிய காலம் ! அதைக் கொடுத்த ஐயருக்கு வந்தது ஜுரம். ஜுரம் கண்டவுடனே. நல்ல டாக்டராக வரவழைக்கவில்லை. எவன் வருவானோ என்ற சந்தேகத்தால் ஜுர வேகத்தால் கண் திறக்க முடி யாத நிலையிலும், கஷ்டப்பட்டு விழித்துக் கொண்டிருப்பார், மோகனாவைத் தூங்கச் செய்யும்வரை.

பிறகு ஒரு முறை அவளழகைப் பார்த்து, பெருமூச்சுவிட்டு விட்டு, ‘கொடி ரம்மியமாக வளர்கிறது. மரம் வளைகிறது, வயோ திகத்தால்’ என்ற நினைப்பு நெஞ்சை உறுத்த, கவலை கொண்டு கண்ணை மூடுவார்; தூக்கம் வராது. இதனால் சாகாரண ஜுரம் டைபாயிட் ஜுரமாகி, டாக்டர் ரகுராமன், சிகரெட்டும் சிரிப்பும் உடனிருக்க, உள்ளே நுழைந்து ஐயரின் நோயைத் தீர்க்க மருந்தும், அவளுக்கு நோயூட்ட பார்வைப் பாகும் தரும் நிலை வந்துவிட்டது. டாக்டர் ரகுராமன் வைத்தியக் கல்லூரியிலே கற்ற எத்தனையோ பாடங்களை மறந்துவிட்டான். ஒன்று மட்டும் மறக்கவில்லை. அதுதான் நாசுக்காக இருப்பது, பேசுவது. அதை மோகனா அதுவரை கண்டதில்லை! அதுவரையிலே ஐயர் வாயால் பேசினதைக் கண்டாளே தவிர கண் பேசுவதைக் கண்ட தில்லை. டாக்டர் ரகுராமனின் கண்கள் ஏதேதோ பேசலாயின!

“ஐயர்வாள் ! ஒரு ஆறுமாதம் ஓய்வாக இருக்க வேண்டும். வயதாகிவிட்டது பாருங்கள்” என்றான்.

வயதாகிவிட்டது! மோகனாவின் சிந்தனைக்குப் புது வேலை கிடைத்துவிட்டது. கிழவர், நம் கணவர் என்ற செய்தி அவளைச் சோகத்திலாழ்த்தத் தொடங்கிற்று.

“ஓய்வாகத்தானே இருக்கிறார், அவருக்கென்ன குறை? ஆள் அம்பு இல்லையா, வேலை என்ன இருக்கு?” என்று பதிலுரைத்தாள் மோகனா.

டாக்டர் ரகுராமன் சிரித்துவிட்டு, “விளையாட்டுப் பருவம். ஒன்றும் புரியவில்லையம்மா உங்களுக்கு” என்றான். விளையாட்டுப் பருவம் ! ஒன்றும் புரியவில்லை! மோகனாவின் சிந்தனைக்கு வேலை அதிகரித்துவிட்டது. வயதாகிவிட் டது, விளையாட்டுப் பருவம் என்ற இருவாசகங்களும் மாறி மாறி மனதிலே தாண்டவமாடின.

டாக்டர் “வயதுக்கேற்ற வேலை செய்யவேண்டும். இரத்த ஓட்டத்திற்கு ஏற்றவிதமாக வாழ்க்கை இருக்க வேண்டும். ஐயர் தமது உடம்பை ரொம்ப அலட்டிக் கொண்டு விட்டார். காய்ச்சலுக்குக் காரணமே அதுதான். குடும்ப பாரத்தைத் தாங்கும் சக்தி வேண்டுமே” என்றான்.

மோகனா ஓரளவு புரிந்து கொண்டாள். நோயின்றி இருந்தால் பிரதிதினம் முகச் க்ஷவரம் நடக்கும்; நரை முகத்தை நாசமாக்காது; முடுக்காகவே நடப்பார்; முதியவர் என்பதை சிதைக்க, ஒழுங்காக உடுத்திக் கொள்வார். வாலிப வாடை வீசட்டும் என்று. படுத்த படுக்கையாக இருக்கவே, இந்த ‘மேக்கப்’ செய்து கொள்ள முடியவில்லை. வயோதிகம் மோகனாவின் கண்களுக்கு நன்கு தெரிந்தது. ஐயரும் அதை எண்ணி நொந்தார். வயதாகிவிட்டது பாருங்கள்! என்ற அந்த இன்ஜெக்ஷன், மோகனாவுக்கு டாக்டர் ரகுராமனால் தரப்பட்டது அல்லவா! அதி வேலை செய்யத் தொடங்கிற்று. “இதெல்லாம் ஏனடி! மோகனா! இந்தக் கிழங்கள் இப்படித்தான் சொல்லும். விளக்கேற்ற வேணும், விரதம் இருக்க வேணும் என்று. கோயிலோ அருகில் இல்லை. மூன்று தெரு தாண்டிப் போகவேண்டும். நாற்பது நாள் நீ போய் விளக்கேற்ற வேண்டுமென்றால் சிரமம். யாராவது வேலைக்காரரிடம் சொல்லலாம்” என்று புருஷனின் ஆயுள் விருத்திக்காக தேவி கோவிலுக்கு நாற்பது நாள் திருவிளக்கு ஏற்ற வேண்டுமென்று யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு, அதுபோலவே செய்ய வேண்டுமென்று கூறிய மோகனாவை வேண்டாம் என்று தடுத்துவிட ஐயர் பேசினார்; முடியவில்லை. மோகனா கையிலே, பூக்கூடையுடன் தேவி பூஜைக்குப் போய்வரத் தொடங்கினாள். மோகனா தரிசனத்துக்குப் போய்வரத் தொடங்கினாள். மோகனா தரிசனத்துக்கு, மூன்று தெருக்களிலும், கோயிலிலும் பக்தர்கள் கூடிவிட்டனர். தேவியின் திருவருள் கிடைக்குமுன்னம், மோகனாவுக்கு பக்தர்கள், பார்வைப் பிரசாதம், அர்ச்சனை கண்கனிவு ஆகிய பலவகைகளைத் தரலாயினர். நாற்பது நாட்களுக்கும் இந்த ‘ரசம்’ மோகனாவுக்கு ஒருவிதமான புது இன்பத்தைக் கொடுத்துவிட்டது. மோகனா என்ன, தேவியைப் போல் கல்லுருவா ! காந்தியுடன் கூடிய மாது!

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, சந்தான விருந்திக்குச் சூரணம் தந்தார் சித்த வைத்தியர் . மோகனா வேண்டாமென மறுத்தாள். அவர் வற்புறுத்திச் சாப்பிட வைத்தார். பசித்த உள்ளம், பயம் நிறைந்த கண்கள், பருவ கெருவமுள்ள அங்காதிகள் ! அப் பாவைக்கு சூரணம், சந்தானத்துக்கு உதவி செய்யவில்லை. ஆனால் ஆளை உருக்க ஆரம்பித்தது. மேனியின் மெருகு மங்கத் தொடங்கிற்று. எலும்பும் தோலுமானாள் மோகனா. மோகனாவுக்குச் சந்தேகம் வலுத்துவிட்டது. ஐயர் இல்லாத நேரத்திலே, ஒரு பொட்டலம் சூரணத்துடன் டாக்டரிடம் சென்று தன் பயத்தைக் கூறினாள். டாக்டர் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தார். கண்களை திறந்து, இரத்தம் சரியாக ஓடுகிறதா என்று கவனித்தார். ஆசை ததும்பிக் கிடந்த அளவு, அந்தக் கண்களிலே இரத்த ஓட்டம் இல்லை! கன்னத்தைத் தடவினார். பெருமூச்செறிந்தார். தனி அறை! அவளது நோய் டாக்டருக்குத் தெரிந்துவிட்டது. மருந்து அபூர்வமானது. அவரிடம் இருந்தது. ஒரு ‘டோஸ்’ கொடுத்தார். கட்டி அணைத்து ஓர் முத்தம் ! விரிந்த இதழுடன், ஆச்சரியப் பார்வையுடன். மோகனா டாக்டரைப் பார்த்து, “இதென்ன அக்ரமம்” என்று கேட்டாள். ஆனால் அவள் முகத்திலோ தொனியிலோ கோபம் இல்லை. ‘உன் நோய் போக இனி இதுதான் மோகனா மருந்து’ என்று கொஞ்சினார் டாக்டர். சூரணத்தைக் காட்டி, இது ஊமத்தை கலந்தது, மெள்ள மெள்ளச் சாகடிக்கும். உனக்கிருக்கும் வாலிய உணர்ச்சியைப் போக்க எவனோ ஒரு நாட்டு வைத்தியனிடமிருந்து இதைப் பெற்றார், உன் கணவர். உன்னைக் கொல்ல மருந்திட்டதாகக் கேஸ்தொடுத்தால் பத்தாண்டுகள் ஜெயில் கிடைக்கும்” என்றுரைத்தார். அவள் பயந்தே போனாள். “விஷமா ! கிழட்டுப் பாவி என்னைக் கொல்லவா துணிந்தான். டாக்டரே! என்னை நீர்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சினாள். “உன்னை இனி நான் கைவிடப் போவதில்லையே” என்று டாக்டர் கொஞ்சினார். கம்பவுண்டருக்கு அன்று லீவ் தரப்பட்டது. டாக்டர் வெளியே போயிருக்கிறார் என்ற போர்டு தொங்கவிடப்பட்டது.

ஐயர், அலுத்து வீடுவந்தார் ! மோகனா காணப்பட வில்லை. தோட்டம் சென்று பார்த்தார். அண்டை அயல் வீடுகளில் விசாரித்தார். கிடைக்கவில்லை. அச்சம் பிறந்து விட்டது. டாக்டர் மீது தான் கவனம் சென்றது. அவசர அவசரமாக அங்கு சென்றார் . வாயிற்படியிலே கால் வைக்கும் போதே உள்ளே இருந்து ஒரே சிரிப்பு, சரசப்பேச்சு, காதிலே நாராசம் போல விழுந்தது. ஆத்திரம் உள்ளே போகத் தூண்டிற்று. வெட்கமும், என்ன நேருமோ என்ற பயமும், வெளியே போய்விடு! இனி நீ மோகனாவை மீட்க முடியாது’ என்று கூறிற்று. கொஞ்ச நேரம் ஸ்தம்பித்து மோகனாவின் குரல்! ஐயர் ஓடிவிட்டார் வீட்டுக்கு – வெட்கி, வியர்த்து, மருண்டு!

அவள் நெடுநேரம் கழித்து வந்தாள். “எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்?” என்று அதிகாரத்துடன் அவர் கேட்டார். “டாக்டர் வீட்டுக்கு” என்று அவள் துணிவாகப் பதில் கூறினாள். ‘ஏன்?’ என்று கேட்க அவருக்குத் தைரியம் பிறக்கவில்லை.

இந்தச் சம்பாஷணை பிறகு பிரதி தினமும் நடக்க ஆரம்பித்தது. வாலிப விருந்தை அவள் ரசித்துக் கொண்டிருந்தாள்! வயோதிகர் என்ன செய்வார் ?

– கோமளத்தின் கோபம் (சிறுகதைகள்), பூம்புகார் பிரசுரம், முதற் பதிப்பு : ஆகஸ்ட், 1982, நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *