வருவாள், காதல் தேவதை…

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 5,616 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-16 

நல்ல சிகரெட் குடிப்பது ஆணுக்கு ஆறுதல். நன்கு அழுவது பெண்ணுக்கு ஆறுதல். -விட்டன். 

“இஸ் இட்…! என்னால நம்பவே முடியல ஆகாஷ்! உங்கம்மா இப்டி சட்டுனு ஒத்துப்பாங்கன்னு நா நினைக்கவேல்ல.” 

”நானும்தான் நினைக்கல. அம்மாக்கு என்னவோ நல்ல மூட்! அவங்க போட்ருக்கற கண்டிஷனை மட்டும் நாம எந்த நிலையிலும் மறந்துடக்கூடாது.” 

“தப்பு.. அப்பப்பொ மறந்துடணும்.” 

”உதைப்பாங்க. உன்னை அனுப்பிட்டுதான் மறுகாரியம் பார்ப்பாங்க. அப்பறம் முதலுக்கே மோசம் வந்துடும்.” 

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். பயப்படாதீங்க.”

”அதிருக்கட்டும் சுஜி. என் வீட்டுக்கு வந்தப்பறம் உன்னை அவங்க சும்மா விட்ருவாங்களா? காலேஜுக்கு வந்து இழுத்துக்கிட்டு போனா என்ன செய்வ?” 

“உங்க வீட்ல ஒரு இடமும், உங்க சப்போர்ட்டும் இருந்தா போதும். அவங்களை எதிர்க்கறதும், அவங்க கூட போக மறுக்கறதும் எனக்கு சுலபமாய்டும். சட்டமும் எனக்கு துணை செய்யும். பாதுகாப்புக்கு இடமில்லாத வரைதான் பயமெல்லாம். இப்பொ எனக்கு அசுர பலம் வந்துடுச்சு. யாருக்கும் பயப்படப் போறதில்ல.” 

“அப்பொ வியாழக்கிழமை நல்ல நேரம் பார்த்து கிளம்பிடு. ” 

“நீங்க வீட்ல இருப்பீங்க இல்ல.” 

“நா இல்லாட்டி என்ன? உன் மாமனார், மாமியார், நாத்தனார் எல்லாரும் இருப்பாங்க.” 

“பயம்மார்க்கு ஆகாஷ்.” 

”பயம்னு நீ சொல்றது எனக்கு ஆச்சர்யமார்க்கு. உனக்குக் கூட பயம் வருமான்ன?” 

“பயமா… பரபரப்பான்னு எனக்கே தெரியல. உங்க வீட்ல எல்லாரும் எப்டி ஆகாஷ்? நல்லா பழகுவாங்களா?” 

“நீதான் பார்க்கப் போறயே!” 

“எனக்கு த்ரில்லிங்கார்க்கு.” 

”எனக்கு த்ரில்லிங் போய்டுமோன்னு பயம்மார்க்கு.”

“ஏன் அப்படி சொல்றீங்க? நா வரது உங்களுக்கு பிடிக்கலையா?” 

“அப்டியில்ல. நீ தள்ளியிருக்கணும். நா உன்னையே நினைச்சுட்ருக்கணும். உன்னை எப்பொ பார்க்கப் போறோம்னு நாளை எண்ணனும். உன்னோட இருக்கற நேரம் குறைஞ்சுக்கிட்டே வருதேன்னு உன்னை சந்திக்கறப்ப எல்லாம் கவலைப்படணும். இப்டியே ரெண்டு மூணு வருஷம் காதலிச்சு அப்பறம் உன் கழுத்துல தாலி கட்டி உன்னை என் மனைவியா என் வீட்டுக்குக் கூட்டிட்டு போற த்ரில் இப்பொ இருக்காது இல்ல. கல்யாணமாகி மனைவியா வரது எப்டி அதுக்கு முன்னாடி காதலியா வரது எப்டி? ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கில்ல?” 

“அடப் போங்க ஆகாஷ். நீங்க சொல்ற த்ரில் வழக்கமா எல்லா ஆம்பளைக்கும் இருக்கற த்ரில்தான். அதுல ஒரு சுவாரசியமும் இருக்காது. கல்யாணத்துக்கு முன்னால் புருஷன் வீட்டுல வந்து இருக்கற த்ரில் எத்தனை பேருக்கு கிடைச்சுடும்? எனக்கு கிடைக்கப் போறதுன்னு நினைச்சு நா எவ்ளோ சந்தோஷமார்க்கேன் தெரியுமா?” 

ஆகாஷ் சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கறீங்க…?” 

”கல்யாணத்துக்கு முந்தி என் வீட்டுக்கு வரது த்ரில்லான விஷயம்தான். அதே நேரம் கல்யாணத்துக்கு முந்தியே மாமியார் மாட்டுப்பெண் சண்டை, நாத்தனார் அண்ணி சண்டைன்னு வந்துடாம இருந்தா சரி, அதை நினைச்சுதான் சிரிச்சேன்.”

“அதென்ன சிரிக்கற விஷயமா?” 

“எனக்கு சிரிப்பான விஷயம்தான். நீயே பாரேன். காலம் காலமா இந்த மாமியார் மருமக, நாத்தனார் அண்ணி, ஓரகத்திகள், இவங்களுக்குள்ளதான் அல்ப விஷயத்துக்கெல்லாம் சண்டை வரும். எந்த வீட்லயாவது மாமனார் மருமகன், மைத்துனன் மாமன், சகலைகள் சண்டை போட்டதா கேள்விப்பட்ருப்பயா…?” 

“ஏன் போடாம் …?” 

“சும்மா பேச்சு. ஆம்பளைங்க அல்ப விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக்க மாட்டாங்க. அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்!” 

“எங்க ஜாதியைக் கிண்டலடிக்கலன்னா உங்களுக் கெல்லாம் தூக்கம் வராதே… நிறுத்துங்க ஹாஸ்டல் வந்துடுச்சு.” 

அவள் இறங்கிக் கொண்டாள். முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உள்ளே போனாள். 

‘தொட்டாச்சிணுங்கி!’ அவன் மனசுக்குள் சொல்லியபடி புன்னகையோடு காரைக் கிளப்பினான்.” 

“ள்ளாச்சியில் ஒரு ஷூட்டிங் என்று கிளம்பிக் கொண்டிருந்தார் கோபாலன். இரண்டு நாள் ஷூட்டிங்தான். இந்த படத்தில் ஏழெட்டு சீன்களில் வந்து ஓரளவுக்கு வசனமும் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது. கமிஷன் போக ஓரளவுக்கு காசும் கிடைக்கும். அதெல்லாம் விட நல்லா நடிக்கறீங்க சார் என்று அந்த இளம் புது டைரக்டர் சொன்னது அவர் மகிழ்ச்சியைக் கிளறி விட்டிருந்தது. அந்த வார்த்தைக்கே உள்ளுக்குள் கனவு விரிந்தது. வயதான பிறகும் சாருஹாசன் ஒரு படத்தில் நேஷனல் அவார்டு வாங்கினாற்போல் ஒரே ஒரு படம் நன்கு செய்து தனக்கும் அவார்டு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவருக்கு உடம்பு புல்லரித்தது. டைரக்டர் பாராட்டியதை சரண்யாவிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்.

“நீ தப்பு பண்ணிட்டப்பா! லேட்டா நடிக்க வந்துட்ட. வாலிப வயசுலயே நடிக்க ஆரம்பிச்சிருந்தா அன்னிக்கு நடிச்சுட்ருந்த அத்தனை பேருக்கும் அஸ்தில புளி கரைச்சிருக்கும். இந்நேரம் நாம பங்களால இருந்திருப்போம். வீடு முழுக்க அவார்டும் கேடயமுமா இருந்திருக்கும்!” 

”இது கிண்டலா, ஆதங்கமா?” 

“உனக்கு எப்படி தோண்றது?'” 

”பொதுவா நீ படோடோபத்துக்கு ஆசைப்படற டைப் இல்ல. அதனால கிண்டல்னு தான் தோண்றது.” 

”பேராசைப்படலன்னு வேணா சொல்லலாம். ஆனா நியாயமா சம்பாதிச்சு நமக்கு வேணுங்கற அடிப்படை வசதிகளோட நாமளும் இருக்கணும்ங்கற ஆசை எனக்கும் இருக்கு. கார் பங்களான்னெல்லாம் வேண்டாம். ப்ரிஜ்ஜும், வாஷிங் மெஷினும் ஒரு கம்ப்யூட்டரும் வேணும்னு எனக்கும் ஆசை உண்டு.” 

”கவலையே படாதே ஆகாஷ் வீட்ல நீ நினைக்கறதுக்கு மேலயே வசதியோட இருக்கலாம்.” 

“அப்பா ப்ளீஸ்..” 

”சரண்யா குறுக்கிட்டு நிறுத்தினாள்.” 

“என்னம்மா…. ?” 

“நடக்காத விஷயத்துக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டாமே!” 

”ஏம்மா அப்டி சொல்ற… சம்பத் இந்தப் பக்கம் வரதே இல்லன்னா…?” 

“அதெல்லாம் இல்லப்பா, அங்கிள் ஒரு தரம் வந்தார். நீங்க இல்ல அப்பொ…?” 

“என்ன சொன்னார்?” 

“மனுஷா நினைக்கறதெல்லாம் நடந்துடறதில்ல. தெய்வம் நினைச்சபடிதான் இங்க எல்லாமே நடக்கறது. அதனால் உனக்கும் ஆகாஷுக்கும் தெய்வம் முடிச்சு போட்டு வெச்சிருந்தா உங்க கல்யாணம் நடக்கும். இல்லாட்டி நடக்காது. அதனால நம்பிக்கையிழக்கவும் வேண்டாம். அதீத கற்பனையும் வளர்த்துக்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போனார்.” 

”அப்டியா சொன்னார்? ஏன் அப்டி சொன்னார் ரெண்டுங் கெட்டானா? வேற ஏதாவது காரணமிருக்குமோ?” 

“இருக்குமோ என்ன? இருக்கு!”

“என்னம்மா சொல்ற?” 

”ஆமாம்ப்பா. ஒரு பொண்ணு இருக்கா” 

அப்பா திகைப்போடு அவளைப் பார்த்தார்.

”உனக்கெப்படிம்மா தெரியும்?” 

“நா பார்த்தேம்ப்பா. இந்த விஷயம் மாமாக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். அதனாலதான் அந்த வேதாந்தம். இனிமே மாமாகிட்ட இந்த விஷயத்தைப் பத்தி கேட்டு அவரை தர்மசங்கடப்படுத்தக் கூடாதுன்னு தான் நா இதை உங்கிட்ட சொல்றேன்.” 

அப்பா ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.

”ஏம்ப்பா.. டல்லாய்ட்ட? பரவால்ல விடுப்பா. மாமா சொல்றா மாதிரி எது நடக்கணுமோ அது நன்றாகவே நடக்கட்டும். எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல.” 

“அப்டின்னா..நாஉனக்கு வேற ஒரு வரன் பார்த்தா மறுப்பு சொல்லாம கட்டிக்குவயா…?” 

சரண்யா ஒரு நிமிடம் மௌனமாய் எங்கோ வெறித்துப் பார்த்தாள். 

”பண்ணிக்கறேம்ப்பா. உன் சந்தோஷத்துக்காக கண்ணை மூடிக்கிட்டு யாருக்கு வேணா கழுத்தை நீட்டறேன். ஆனா இப்ப வேண்டாம். என் படிப்பு முடியட்டும். ஒரு வேலை கிடைச்சு என் கால்ல நா நிக்கணும்னு ஆசைப்படறேன். அதுக்கப்பறம் கண்டிப்பா நீ பார்க்கற மாப்பிள்ளையை நா கட்டிக்கறேன்.” 

“யார் உன்னை இப்பொ கல்யாணம் பண்ணிக்க சொன்னா? பயப்படாதே. நீ படிச்சு வேலைக்குப் போகணும்ங்கற ஆசை எனக்கும் இருக்கு. இன்னும் ஒரு நாலு வருஷம் கழிச்சுதான் கல்யாணமெல்லாம். கவலைப்படாம நல்லா படி. மாப்பிள்ளை ஆகாஷ்னா காத்திருக்க வேண்டாம். உடனே கட்டிக் கொடுத்துடலாம். மாமா உன் படிப்பை நிறுத்தாம அவரே கூட படிக்க வெச்சு உத்யோகத்துக்கும் அனுப்பிடுவார்னு நினைச்சேன். எப்பொ அந்த கனவு கலஞ்சு போச்சோ இனிமே நம்ம பிழைப்பைப் பார்த்துக்கறதுதான் புத்திசாலித்தனம். என்ன சொல்ற?” 

‘சரண்யா பதில் சொல்லாமல் புன்னகைத்தபடி அப்பாவின் இரவு சாப்பாட்டிற்கு நாலு சப்பாத்தியை வாழையிலையில் கட்டி எடுத்து வைத்தாள்.

”எதுக்கும்மா? அவங்க சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பாங்க.” 

”ராத்திரி வேளைல எண்ணையும் மசாலாவுமா அவங்க ஏதாவது தருவாங்க. உன் உடம்புக்கு ஆகாது. நீ இந்த சப்பாத்தி சாப்ட்டா போதும். மத்த நேரத்துல கூட கூடிய வரை கண்டதையும் சாப்டாம லைட்டா உடம்பு ஒத்துக்கறதாசாப்டு. உனக்கு மசாலா வாசனைன்னா அல்ப ஆசை வந்துடும். அதான் சொல்றேன்.” 

“இல்ல சாப்ட மாட்டேன். இப்பல்லாம் ஒரு பயம் வந்துடுச்சு சரண்யா. உனக்குஒரு வாழ்க்கை தேடிக் கொடுக்கற கடமை முடியற வரை என்னை நானே பத்திரமா பாத்துக்கணும்னு தோணுது. உன்கழுத்துலயும் மூணு முடிச்சு விழுந்து நல்ல வீட்ல நீ வாழ்க்கைப் பட்டுட்டன்னா, அடுத்த நிமிஷம் சாவு வந்தா கூட சிரிச்சுக்கிட்டே சாகத் தயாராய்டுவேன்.” 

”போறுமே..ஊருக்கு புறப்படும்போது நல்ல வார்த்தை பேசிட்டு போப்பா…” 

”அதுசரி நெருப்புன்னா வாய் வெந்துடுமா?” 

“அதுக்காக நெருப்பு நெருப்புன்னே சொல்லிட்ருக்கணுமா? வேற நல்ல வார்த்தை சொல்லக்கூடாதா”. 

“சரி அப்பொ நா புறப்படறேன். நீ ஜாக்ரதையாரு. பாட்டி வந்து துணைக்கு படுப்பாங்க இல்ல?” 

“வருவாங்க” 

சரண்யா வாசல் வரை வந்து அவரை வழி அனுப்பி விட்டு கதவை சார்த்திக் கொண்டு உள்ளே போனாள். 

எந்த ஏமாற்றமும் இல்லை. எல்லாம் நடக்கிறபடி நடக்கும் என்று அப்பாவிடம் சொல்லி விட்டாளே தவிர உள்ளூர ஏற்பட்டிருந்த ஏமாற்றமும் வேதனையும் வார்த்தைகளில் அடக்க முடியாமலிருந்தது அப்பாவுக்கு எதிரில் அழ முடியாத நிலையில் அழுவதற்குதனிமை தேடி காத்திருந்தாள். அந்த தனிமை இப்போது கிடைத்திருந்தது. அப்பா போனதும் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தவள் சாமிக்கு முன்னால் சம்மணம் கட்டிக் கொண்டு அமர்ந்து எல்லா படங்களையும் வெறித்துப் பார்த்தவள், ஏன்? ஏன்? என்ற ஆயிரம் கேள்விகளோடு சத்தமின்றி குலுங்கியழ ஆரம்பித்தாள். தடுக்க ஆளின்றி ஏன் அழுகிறாய் என்று கேட்கவோ, பரிதாபப்படவோ ஆளில்லாமல் தனிமையில் அழும்போது அழுகை கூட இதமாகவே இருந்தது. அழுது அழுது தனக்குள் தானே சமாதானமாகி ஓய்ந்து போகலாம். அப்படித்தான் அழுது ஓய்ந்தாள் அவளும். 

தன் துணிமணிகள் அனைத்தையும் இரண்டு சூட்கேஸ்களில் அடைத்து அழுத்தி மூடி பூட்டினாள்.

“ஏய் சுஜி எங்கடி…? ஊருக்கா? எதுக்குடி.. லீவு கூட இல்ல. திடீர்னு புறப்படற!” தோழி வியப்போடு கேட்டாள். 

“யெஸ் போறேன். படிப்பை நிறுத்திட்டு பாதில போலாம்னுதான் பார்த்தேன். ஆனா மனசு வரல. அதனால் ஹாஸ்டலை விட்டு மட்டும் போறேன். ஒரு பத்து நாள் கழிச்சு வரேன்.” 

”என்னடி சொல்ற நீ… ஒண்ணும் புரியலயே.” 

“புரிய வேண்டாம். இப்போதைக்கு எதுவும் புரியாம இருக்கறதுதான் நல்லது. ஸீ யூ..”. 

அவள் கிளம்பினாள். ஒரு ஆட்டோவில் பெட்டிகளை ஏற்றி விட்டு தானும் ஏறினாள். ஆட்டோக்காரரிடம் ஆகாஷ் வீட்டு விலாசத்தைக் கூறிவிட்டு சாய்ந்து அமர்ந்தாள். மனசு படபடப்பாக இருந்தது. எல்லோரும் நல்லபடி பழகுவார்களா? மரியாதை எப்படியிருக்கும்? மருமகளாகப் போவது வேறு இப்படிப் போவது வேறு. இதற்கு மரியாதை கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் அவர்கள் சம்மதத்தோடுதான் ஆகாஷ் தன்னை அழைத்திருக்கிறான் என்பதால் மரியாதை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

ஆட்டோ அவன் பங்களாவினுள் நுழைந்து நின்றது. போர்டிகோவில் பெரிசாய் கோலம் போட்டிருந்தது. ஆட்டோ சத்தம் கேட்டதும் உள்ளிருந்து ஆகாஷும் அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியில் வந்தனர். 

”வாம்மா..” அவன் அம்மா இறங்கி வந்து அவள் தோளோடு அணைத்து வரவேற்றாள். 

“வாங்க” சங்கீதா புன்சிரிப்போடு அழைத்தாள். 

சம்பத் மட்டும் பிள்ளையின் மனது நோகக்கூடாது என்பதற்காக ஒப்புக்கு அழைத்து விட்டு உள்ளே போனார். 

”சாரி.. நா உங்களுக்கெல்லாம் திடீர்னு தொந்தர வாய்ட்டேனா…? வரதுக்கு முந்தி நிறைய யோசிச்சேன். இதைவிட நல்ல இடமா எனக்கு வேற எதுவும் தோணல்.”

“எங்களுக்கு ஒரு தொந்தரவு இல்ல. நீ இதை உன் வீடா நினைச்சுக்கலாம்.” 

அம்மா வேலைக்காரனை அழைத்து பெட்டிகளை உள்ளே கொண்டு போய் வைக்கச் சொன்னாள். 

“உனக்கு மாடில ஒரு ரூம் கிளின் பண்ணி வெச்சிருக்கும்மா. உனக்கு வேணுங்கற வசதியெல்லாம் இருக்கும். இன்னும் ஏதாவது வேணும்னாலும் சொல்லு பண்ணிடுவோம்.” 

“தேங்க்ஸ்மா. நீங்கள்ளாம் இவ்ளோ நல்லவங்களா இருக்கறது நா பண்ணின புண்ணியம்”. 

“பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். கேஷுவலா இரு. உங்கம்மா மாதிரி என்னை நினைச்சுக்க.” 

“மை காட். அது மட்டும் முடியாதே” 

”ஏம்மா?” 

“உங்களை அம்மா மாதிரி நினைச்சா ஆகாஷ் எனக்கு அண்ணனாய்டுவாரே. அதனால் அத்தையாவே நினைச்சுக்கறேன்.” 

சுஜிதா சொல்ல சாரதா பெரிய ஜோக் கேட்டு விட்டாற்போல் சிரித்தாள். அப்பாவும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

”என் ரூம் எது அத்தை?” சுஜிதா கேட்டபடி குதிரை மாதிரி அலட்சியமாக நடக்க, சம்பத் முகம் சுளித்தபடி மாடிக்குப் போனார். 

அத்தியாயம்-17 

தங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி ஆண்கள் பசுகிறார்கள். தங்களுக்குத் திருப்தி தருவதைப் பற்றி மட்டுமே பெண்கள் பசுகிறார்கள். -ரூலோ. 

“குட்மார்னிங்” 

”வெரிகுட்மார்னிங். என்ன இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட?” சாரதா காபி மேக்கரில் பொடி போட்டு நீர் விட்டபடி அருகில் வந்து நின்ற சுஜிதாவைப் பார்த்து சிரித்தாள். 

”உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான் எழுந்து வந்தேன்.”

சாரதா உச்சி குளிர்ந்து போனாள்.

“அப்படி ஒண்ணும் பெரிய வேலை எதுவுமில்ல நீ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கும்மா.” 

“போச்சுடா எங்க வீட்லதான் பூமில கூட கால் படாம என்னைத் தாங்கறாங்கன்னா நீங்களுமா? போரடிச்சு போச்சு அத்தை. எனக்கும் இந்த கிச்சன் வேலையெல்லாம் சொல்லித் தாங்களேன்.” 

“நீ எதுக்கும்மா செய்யணும்?” 

“அது சரி. எங்கம்மாவாட்டமே சொல்றீங்க! ஒண்ணு தெரியுமா. இப்பதான் நான் கிச்சனே பாக்கறேன் தெரியுமோ?” 

“நிஜமாவா…?” 

“சத்தியமா ஆண்ட்டி. எங்க வீட்டு கிச்சன் பக்கம் நா இன்னும் போனதே இல்ல. பங்களாக்கு பின்னால கிச்சனே இன்னொரு பங்களா மாதிரி இருக்கும். டே அண்ட் நைட் வேலை செய்ய மொத்தம் பதினஞ்சு பேர் அங்க வேலைக்கு இருக்காங்க. ஹோட்டல் மாதிரிதான். எங்க ரூம்ல இருந்து என்னென்ன வேணும்னு மெனு சொல்லிட்டா போதும். ரூமூக்கே வந்துடும். அல்லது டைனிங் ஹால்க்கு போயும் சாப்ட்டுக்கலாம். ஜெனரலா எல்லாரும் அவங்கவங்க ரூம்லதான் சாப்ட்டுப்போம். ஏதாவது பார்ட்டி, பண்டிகை, விசேஷம்னா கண்டிப்பா டைனிங் ஹால்லதான் சாப்பாடு. டைனிங் ஹால்னா சாதாரணமானது இல்ல. பெரிய டேபிள் இந்த கோடிலேர்ந்து அந்த கோடி வரை நீள் வட்டமா இருக்கும். நூறு பேர் வரை ஒரே சமயம் உட்கார்ந்து சாப்டலாம். பயங்கர ஜாலியா இருக்கும்.” 

சுஜிதா சொல்லச் சொல்ல சாரதாவின் விழிகள் விரிந்தது. மருமகளாய் வரப் போகிறவளின் செல்வமும் அந்தஸ்தும் பெருமையாயிருந்த அதே நேரம் அவளிடம் ஒருவித பயத்தையும் ஏற்படுத்தியது. இப்பேர்ப்பட்ட கோடீஸ்வரப் பெண் காதலிக்கும் அளவுக்கு ஒரு கம்பீரமான ஆண் மகனைப் பெற்றதற்காக உள்ளூர பெருமிதமும் கர்வமும் ஏற்பட்டது. அவள் இந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே எந்த குறையும் இல்லாது அவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. 

“என்ன ஆண்ட்டி.. திடீர்னு சைலன்ட்டாய்ட்டிங்க? நா பொய் சொல்றேன்னு தோணுதா..?” 

“ச்சேச்சே… அதெல்லாம் இல்ல. ஆமா சுஜிதா உனக்கு இந்த வீடு வசதியார்க்கா? இது உங்க வீடு அளவுக்கு மாளிகை இல்ல. இருந்தாலும் உனக்கு என்ன வசதி வேணும்னாலும் தயங்காம சொல்லு. உடனே பண்ணிக் குடுத்துடச் சொல்றேன்.” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ஆண்ட்டி. இருக்கற வசதி போதும். இங்கயாவது சாதாரணமா இருக்கேனே…” 

சாரதா வியப்போடு அவளைப் பார்த்தாள். நல்ல பொண்ணு என்று பாராட்டினாள். 

“சரி கார்த்தால என்ன குடிப்ப சொல்லு பாலா, போர்ன்விடவா, காபியா” 

“ஜஸ்ட் காபி போதும்” 

“ஆச்சர்யமார்க்கு!” 

“நீங்க வேற. எங்க வீட்ல கார்த்தால எட்டுவித டிரிங்க்ஸ் வரும். எதுவேணா குடிச்சுக்க வசதியார்க்கும்னு. அதெல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போச்சு. அந்த பக்கிங்ஹாம் பேலஸ் வாழ்க்கைலேர்ந்து ஒரு சேஞ்ச் வேணும்னுதானே படிப்பை சாக்கா வெச்சு நானே இந்த ஊருக்கு வந்தேன்!” சுஜிதா சொல்லிக் கொண்டிருக்கும்போது சங்கீதா பல் தேய்த்து விட்டு உள்ளே வந்தாள். 

”குட்மார்னிங் சங்கீதா” என்றபடி சுஜிதா காபி டம்ளரோடு ஹாலுக்குப் போனாள். 

”அம்மா போர்ன்விடாதரயா?” 

“போர்ன்விடாவா… அதோ பார் கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணு, சிம்பிளா காபி போதும்னு குடிக்கறா! உனக்கு போர்ன்விட்டா கேக்குதா? இனிமே காப்பிதாண்டி உனக்கும்!” 

“அதுசரி!” சங்கீதா அயர்ந்து போய் அம்மாவைப் பார்த்தாள். 

“நல்லார்க்கும்மா. நா காப்பி வேணும்னு கேட்டப்பொல்லாம் நம்ம அந்தஸ்துக்கு இதாண்டி குடிக்கணும்னு நீதானே போர்ன்விட்டாவைப் பழக்கின.” 

“இப்பதானே தெரியுது காபி கூட அந்தஸ்துள்ள பானம்தான்னு.”

“ம்ம்…!” சங்கீதா ஒரு மாதிரி தலையாட்டியபடி அம்மா கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். 

“உனக்கு என்ன டிபன் பிடிக்கும். சுஜிதா?’ சாரதா வெளியில் வந்து கேட்டாள். 

“இங்க என்ன டிபன் செய்வீங்க.” 

“இன்னிக்கு பூரி சென்னா செய்யலாம்னு இருக்கேன்.”

“ஒரு நாளைக்கு ஒரு டிபன்தான் செய்வீங்களா?”

“நாலே நாலு பேருக்கு எத்தனை வெரைட்டி செய்யறது? பொதுவா ஏதாவது ஒரு டிபன்தான். உங்க வீட்ல எப்டி…?”

“அதை ஏன் கேக்கறீங்க அத்தை? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கெட்டுது. அவ்ளோ வெரைட்டி! இட்லி தோசைலேர்ந்து தந்தூரி ஐட்டம்ஸ் வரை அம்பது ஐட்டம் இருக்கும்.எது வேணும்னாலும் கிடைக்கும்.” 

”உனக்கு எது வேணும்னு சொல்லேன் செஞ்சுட்டா போச்சு.” 

”நீங்க வேற! எனக்கு ஒரு டம்ளர் கஞ்சி இருந்தா கூட போதும் திவ்யமா குடிச்சுட்டு போய்டுவேன். என்னைப் பத்தி கவலையே படாதீங்க. நீங்க எது செய்தாலும் சாப்டுவேன். நா போய் குளிச்சுட்டு வரேன். ஆண்ட்டி” சுஜிதா மாடிக்கு துள்ளி ஏறினாள்.

“ஏய் சங்கீதா கொஞ்சம் வந்து அந்த பூரியை இட்டுத்தாயேன். அவ கிளம்பறதுக்குள்ள டிபன் ரெடியா” 

“நானா.. பூரியா… என்னாச்சும்மா உனக்கு?” 

“ஏண்டி…?” 

”இதுவரை ஒரு கருவேப்பிலைக் கொத்தைக் கூட உருவித்தரச் சொன்னதில்ல எங்கிட்ட இப்ப திடீர்னு பூரி இட்டுத் தரச் சொல்ற…! எவ்ளோ நாள் நா ஆசையா பூரிக்குழவியக் குடு, நா வட்ட வட்டமா இட்டுத் தரேன்னு ஆசையா கேட்ருப்பேன். கொடுத்திருப்பயா நீ? உனக்கெதுக்குடி சமையக்காரி வேலைன்னு விரட்டியடிப்ப…” 

“ஆமா அடிச்சேன். அப்பொ கூட மாட ஒத்தாசைக்கு ஒரு வேலைக்காரி இருந்தா. அதனால் உன்னை செய்ய வேணாம்னேன். இப்ப தனியா இல்ல செய்யறேன்! கொஞ்சம் உதவினா என்ன?” 

“எனக்கும் மணியாய்டுச்சும்மா. சாரி நீயாச்சு உன் வருங்கால மருமகளாச்சு. என்னை ஆளை விடு. எனக்கு டிபனே வேணாம். வேணும்னா ஒண்ணு செய். அப்பாவோ அண்ணனோ ஃப்ரீயார்ந்தா வந்து பூரி இட்டுத் தரச் சொல்லுலு சரியா…” 

“அடி…” அம்மா கத்துவதற்குள் சங்கீதா சிரித்தபடி மறைந்து விட்டாள். 

சாரதா வியர்க்க விறுவிறுக்க எல்லோருக்கும் பூரியும் சென்னாவும் செய்ய ஆரம்பித்தாள்.

”என்னம்மா அடுக்களைல என்ன மாநாடு?” காலேஜூக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கேட்டார் சம்பத். 

”உங்க தர்ம பத்தினிக்கு தலைகால் புரியலப்பா”

”என்னம்மா சொல்ற?” 

“கோடீஸ்வர மருமகள் வந்து வீட்ல தங் கியிருக்காளாம். ஊர்ல இருக்கற எல்லாரும் வந்து அவளுக்கு சேவகம் பண்ணணுங்கறா” 

“செய்ய வேண்டியதுதானே?” 

“கொழுப்புப்பா உனக்கு! சொல்ல மாட்டே! சாரதாம்பாள் புருஷன்தானே நீ? இப்டிதான் பேசுவ.” 

“விளையாட்டுக்கு சொன்னேன் தாயி. ஆமா உன் வருங்கால அண்ணி எப்டி பழகறாங்க?” 

“இதுவரை பிரச்சனையில்ல, இனிமே எப்டியோ.போகப் போகத்தானே தெரியும்!” 

“அதுசரி ஒரு நாள்ள என்ன தெரிஞ்சுடும். இருந்தாலும் அண்ணியாச்சேன்னு நேத்து ரொம்ப சந்தோஷமா கூப்ட்ட போல்ருக்கு உள்ள!” 

”பின்ன… விரட்டவாப்பா முடியும்? நமக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் அண்ணனுக்கு பிடிச்சிருக்கே. அவனோட மனசுக்கு நாம மரியாதை கொடுக்க வேண்டாமா? இது அவன் வாழ்க்கை. அவனோட சந்தோஷம் தானேப்பா நமக்கு முக்கியம்? அதான் அவங்களை வாய் நிறையக் கூப்ட்டேன்!” 

அப்பா அவளை புன்னகையோடு பார்த்தார்.

“என்னப்பா சிரிக்கற?” 

“‘பெருமையார்க்கும்மா. என் குழந்தைக்கு எவ்ளோ பக்குவம்னு நினைச்சு சந்தோஷமார்க்கு.” 

“ஏம்பா அவங்களை உனக்கு பிடிக்கலையா?” 

“இந்த கேள்விக்கு உனக்கே பதில் தெரியுமே தாயி!” 

“புரியுதுப்பா.சரண்யா வரணும்னு நாம விரும்பினோம். ஆனா அண்ணன் மனசு இவங்ககிட்டல்ல சரணடைஞ்சிருக்கு! போகட்டும் விடுங்க. சரண்யாவோட குணத்துக்கு இன்னும் நல்ல இடம் கிடைக்கட்டும். ஒருமுறை அவங்க வீட்டுக்கு போய்ட்டு வரலாமாப்பா. அவளைப் பார்த்தும் ரொம்ப நாளாச்சு.” 

”போலாமே. அதுக்கென்ன? ஆனா உள்ளுக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும்மா. சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டுட்டோமேன்னு இந்த ஏமாற்றத்தை அந்த பொண்ணு தாங்குவாளான்னு தெரியல.” 

“ஒரு நிமிஷம்ப்பா போன் அடிக்குது யாருன்னு பார்த்துட்டு வரேன்” சங்கீதா விரைந்து சென்று போனை எடுத்தாள். 

”சம்பத் மாமா இருக்காரா?” 

“நீங்க…?” 

”சரண்யா..”

“மை குட் நெஸ். நூறு ஆயுசு உனக்கு இப்பதான் பேசிட்ருந்தோம்.” 

“என்னைப் பத்தியா ஆச்சர்யமார்க்கு!” 

“என்ன சரண்யா.. நாங்க என்ன உன்னை மறந்துட்டமான்ன? என்ன விஷயம் சொல்லு.” 

”அப்பா இல்லையா?” 

“இருக்கார். கூப்டவா?” 

சங்கீதா அப்பாவை அழைத்து போனைக் கொடுத்தாள். ”சரண்யாப்பா!” 

“என்னம்மா என்ன விஷயம்?” 

”அப்பா ஊர்ல இல்ல மாமா. சத்யாக்கா இங்க ரெஸ்ட்டுக்காக வந்திருக்கா. வந்து ரெண்டு நாளாச்சு. இன்னிக்கு திடீர்னு வயத்த வலிக்குதுன்னா. டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தேன். அபார்ஷன் ஆய்டுச்சுங்கறாங்க. உடனே டி.என்.சி. பண்ணனும்ங்கறாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. பாங்க்ல கொஞ்சம் பணமிருக்கு. ஆனா அப்பா இல்லாம எடுக்க முடியாது. ப்ளிஸ் மாமா நீங்க கொஞ்சம் பணத்தோட வந்தா நல்லார்க்கும். ” 

”ஓ காட்! நா உடனே வரேம்மா… நீ கவலைப்படாதே. தைரியமாயிரு. எந்த ஹாஸ்பிடல்… ? ஒகே சரி நா இன்னும் அரை மணில வந்துடறேன்.” 

“என்னப்பா ஆச்சு?” 

சம்பத் அவளிடம் விவரம் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினார். “நானும் வரேம்ப்பா” சங்கீதாவும் அவரோடு புறப்பட்டாள்.

“ஏங்க டிபன் கூட சாப்டாம அப்பாவும் பொண்ணும் எங்க புறப்பட்டுட்டீங்க?” 

”அவசர வேலை போற வழில பார்த்துக்கறேன்.” 

சம்பத் ப்ரிஃப்கேஸை காரில் போட்டு விட்டு கார் ஏறியமர்ந்தார். சங்கீதா அவரருகில் ஏறியதும் கிளம்பியது.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற பத்து நிமிடத்தில் ஆகாஷ் டிபன் சாப்பிடக் கீழே வந்தான்.

“நல்ல காலம் நீயாவது டிபன் சாப்ட வந்தயே.” 

”என்னம்மா அலுத்துக்கற?” 

”பாரேன். நா கூப்டக் கூப்ட அப்பாவும் பொண்ணும் துளிக்கூட சட்டை பண்ணாம போய்ட்டாங்க.” 

“டிபன் கூட சாப்டாமயா?” 

“பின்னே?” 

”சரி விடு. என்ன டிபன் இன்னிக்கு? சுஜிதா சாய்ட்டாச்சா?”

“இன்னும் இல்ல. குளிக்கப் போயிருக்கா.” 

“ஆமா… என் ஆளு எப்டி பழகறா?” 

”அதை ஏன் கேக்கற? கோடீஸ்வரன் வீட்டு பொண்ணு மாதிரியேல்ல. ரொம்ப சிம்ப்பிள். ஆண்ட்டி ஆண்ட்டின்னு உசிரை விடறா!” 

“அப்பொ மருமகளை ரொம்ப பிடிச்சிடுச்சுன்னு சொல்லு!”

“ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமான்னு வந்து கேட்டா காலேல”. 

“என்ன ஹெல்ப் பண்ணினா?” 

“நீ வேற, அவ வீட்டைப் பத்தி அவ சொல்லச் சொல்ல பிரம்மிச்சுப் போய்ட்டேன். தரைல கால் படாம வளர்ந்த பொண்ணை நா என்னத்த வேலை வாங்கறது!தோ பாருடா ஆகாஷ். அந்த பொண்ணு எதுவும் கேக்க மாட்டா. அவளுக்கு வேணுங்கற வசதியெல்லாம் நாமதான் செஞ்சு குடுக்கணும். என்ன வேணுமோ செய்து குடுத்துடு.” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அவ இதுவரை இருந்த வீடு அரண்மனையாவே இருக்கட்டுமே. இனிமே இருக்கப் போற இடம் இதுதான். இதுக்கேத்தா மாதிரி அவதான் தன்னை மாத்திக்கணுமே தவிர அவளுக்காக இந்த வீடு மாறணும்னு அவசியமில்ல. அவ அளவுக்கு இல்லாட்டாலும் நம்ம வசதிக்கொண்ணும் குறைச்சலில்ல. இது போதும்.” 

ஆகாஷ் கை கழுவி விட்டு கிளம்பினான். சுஜிதா மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

”நீ ரெடியா சுஜி? உன்னை டிராப் பண்ணிட்டு போட்டுமா?” 

“இல்ல நா ஒரு வாரம் லீவுதான். நீங்க கிளம்புங்க. எனக்கு வெளில போற வேலை கொஞ்சம் இருக்கு. நாஒரு அரை மணி கழிச்சி போய்க்கறன்.” 

“ஓகே அப்ப நா கிளம்பறேன்.” 

ஆகாஷ் தன் காரில் ஏறிப் போன பிறகு சுஜி டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்தாள்.

”அங்கிள் சாப்ட்டாரா ஆண்ட்டி?” 

”எங்க…? அப்பாவும் பொண்ணும் சாப்டாமயே போயாச்சு. நீ உக்காரு நாம சாப்டுவோம். பசிக்குது.” 

“அடடா நாக்குல எச்சில் ஊறுது! அங்கிள் இப்டி சாப்டாம போய்ட்டாரே, ஆமா யாரு ஆண்ட்டி சரண்யா?” 

சுஜிதா கேட்க சாரதா சட்டென்று நிமிர்ந்து புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

“எதுக்கு கேக்கற?” 

“இல்ல சரண்யான்னு யாரோ போன் பண்ணவும்தான் அங்கிளும் சங்கீதாவும் பரபரப்பா புறப்பட்டு போய்ட்டாங்க என்ன விஷயம்? உங்களுக்குத் தெரியுமா?” 

”சரண்யா போன் பண்ணினான்னு உனக்கு யாரும்மா சொன்னா?” 

”சங்கீதா, அங்கிள்கிட்ட சரண்யா பேசறதா சொன்னது காதுல விழுந்துச்சு. ஏன் ஆண்ட்டி ஏதாவது பிரச்சனையா? யாரது சரண்யா? டிபன் கூட சாப்டாம ரெண்டு பேரும் போய்ட்டாங்க! அதுவும் உங்ககிட்ட கூட என்ன விஷயம்னு சொல்லாம!”

‘சுஜிதா கேட்க, சாரதாவின் முகம் சுருங்கியது. உள்ளுக்குள் எரிமலை ஒன்று வெடிக்கத் தயாராயிற்று.

அத்தியாயம்-18 

கோபமுள்ள மனைவி அடுப்பிலிருந்து எடுக்க மறந்து விட்ட கிடுக்கி போன்றவள். அந்த கிடுக்கி தானாகவேதான் ஆற வேண்டும். -பாபுரால் 

சம்பத்தும், சங்கீதாவும் வரும்போது சரண்யா மட்டும் தனியாக தலைகுனிந்து மௌனமாக அமர்ந்திருந்தாள். 

“என்ன பண்ணின சரண்யா? டாக்டர் என்ன சொல்றாங்க?” சம்பத் மாமாவின் குரல் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தாள். தனிமையும் சங்கடமும் துக்கமும் கொஞ்சம் மறைந்து உதவிக்கு ஒரு ஆள் வந்துவிட்ட நிம்மதி தெரிந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த சங்கடமும் பயமும் உருமாறி கண்ணீர்ப் படலமாய் பளபளத்தது. 

உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க. மூவாயிரம் ரூபா உடனே கட்டச் சொல்லியிருக்காங்க. ஒரு மணி நேரத்துல கட்டிடறேன்னு பிராமிஸ் பணணினப்பறம்தான் தியேட்டருக்கு கூட்டிட்டு போனாங்க. 

”சத்யா புருஷனுக்கு தகவல் சொல்லிட்டயா?” 

“இன்னும் இல்ல. அவங்க வீட்ல போன் இல்ல. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அவர் ஆபீஸுக்கு வந்துர்ப்பாரான்னு தெரியல. அக்காவைத் தனியா விட்டுட்டு போகவும் முடியல.” 

“சரி நா பார்த்துக்கறேன் விடு. நீ ஏதாவது சாப்ட்டயா…?” ‘பசியில்ல மாமா 

சம்பத் ஒரு சேரில் உட்கார்ந்து தன் ப்ரிப்கேஸ் திறந்து உள்ளிருந்த பணத்திலிருந்து மூவாயிரம் ரூபாயை எடுத்து சங்கீதாவிடம் கொடுத்தார். “நீ இவளைக் கூட்டிட்டு போய் பணத்தைக் கட்டிட்டு வா சங்கீதா” என்றவர் அவர்கள் சென்றதும் தன் செல்போன் எடுத்து ஆகாஷின் செல் நம்பரை அழுத்தினார். 

“யெஸ்…” 

“ஆகாஷ் நாந்தான் பேசறேன்.” 

”என்னப்பா..டிபன் கூட சாப்டாம அப்டி எங்க அவசரமா கிளம்பிட்டீங்க..” 

“முக்கியமான விஷயம்தான். கோபாலனோட பொண்ணு சத்யா இல்ல…” 

“ஆமா சொல்லு..” 

“அவளுக்கு அபார்ஷன் ஆய்டுச்சு. தீபா நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணிட்டு எனக்கு போன் பண்ணினா சரண்யா, நா அங்கேர்ந்துதான் பேசறேன். நீ ஒரு காரியம் செய். உடனே சத்யா வீட்டுக்குப் போய் விஷயத்தை சொல்லி அவ புருஷனை உன் கார்லயே கூட்டிட்டு இங்க வந்துடு சரியா?” 

“போறேன். அட்ரஸ்…?” 

“ஓ… அட்ரஸ் வேணுமில்ல.. ஒரு நிமிஷம் லைன்லயே இரு” 

சம்பத் ரிஸப்ஷன் நோக்கி வேகமாகச் சென்றார். சரண்யாவை அழைத்து செல்லை அவள் கையில் கொடுத்தார். 

”ஆகாஷ் லைன்ல இருக்கான். சத்யாவோட அட்ரஸை அவன்கிட்ட சொல்லு.” 

சரண்யா மெல்லிய குரலில் ஆகாஷிடம் விலாசம் சொன்னாள். 

“டோண்ட் ஓர்ரி சரண்யா. தைரியமா இரு நா இன்னும் ஒரு மணில சத்யா புருஷனோட வரேன்” ஆகாஷ் அவளுக்கு தைரியம் சொல்லி விட்டு செல்லை அணைத்து கீழே வைத்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனது கார் சத்யாவின் வீடு நோக்கிச் சென்றது. 

”பேஷண்ட் நல்லார்க்காங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சுடும். சாயங்காலம் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடறேன்.” 

டாக்டர் சில மருந்துகளை வாங்கி வரச் சொன்னார். சங்கீதா அருகிலிருந்த பார்மஸியிலிருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்து நர்ஸிடம் கொடுத்தாள்.

”சரி வா சரண்யா.இனிமே பயப்பட ஒண்ணுமில்ல. நாம ஏதாவது சாப்ட்டுட்டு வரலாம் வா.” 

சம்பத் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த ரெஸ்ட்டாரண்ட்டுக்குச் சென்றார்.

அவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்போது ஆகாஷூம், சத்யாவின் கணவரும் வந்திருந்தனர். சத்யா புருஷனின் முகம் வாடியிருந்தது.சம்பத் அவனுக்கு ஆறுதல் சொன்னார்

சத்யாவுக்கு மயக்கம் தெளிந்திருந்தாலும் பலவீனமாக இருந்தாள். 

”போறும் ரொம்ப தொந்தரவு கொடுக்க வேண்டாம். நாம வெளில போய்டுவோம்” ஆகாஷ் வெளியில் வந்தான். அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியில் வந்தனர். 

“எவ்ளோ சார் பணம் கட்டினீங்க நா குடுத்துடறேன்.” 

“அட வைப்பா…” சம்பத் அவன் கையைப் பிடித்து பர்ஸை வாங்கி அவன் பாக்கெட்டிலேயே வைத்தார். 

“பரவால்ல சார். நா கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்?” 

”ஒரு சிரமமுமில்ல. நீ இப்டி பிரிச்சு பேசறதுதான் சிரமமார்க்கு. சத்யா என் பொண்ணு மாதிரி. அவளுக்கு செலவு பண்ணினதுக்கு யாராவது கணக்கு சொல்லுவாங்களா?” 

”மனசுக்கு ரொம்ப கஷ்டமார்க்கு சார். அம்மாகிட்ட இன்னும் சொல்லல. ரொம்ப அப்செட் ஆய்டுவாங்க..”

“விடுங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லார்க்கிங்க இல்ல. எவ்ளோ வேணா குழந்தை பெத்துக்கலாம். போனதை நினைச்சு வருத்தப்பட வேணாம். அது அரை குறையா பிறந்திருந்தா இன்னும் கஷ்டம்தானே? ஏன் சரண்யா டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய் தனியா உன்னால் பார்த்துக்க முடியுமா?” 

“இனிமே என்ன மாமா? பார்த்துக்கறேன். பயம் ஒண்ணும் இல்ல”. 

“சரி அப்பொ நா மறுபடியும் சாயங்காலம் வரேன். உனக்குத் துணையா சங்கீதா வேணா இருப்பா. நா வந்ததும் வீட்ல கொண்டு விட்டுடறேன் சரியா”. 

“சாரி மாமா உங்க வேலையெல்லாம் கெட்டுப் போச்சு இல்ல”. 

“ஒரு வேலையும் கெட்டுப் போகல நா வரட்டுமா?” 

“நானும் கிளம்பவா சரண்யா.. ஏதாவது வேணும்னா என் செல் நம்பருக்கு போன் பண்ணு சரியா?” ஆகாஷூம் கிலாம்பிச் சென்றான். 

“நீங்க கூட கிளம்புங்க. இங்க இருந்து என்ன செய்யப் போறீங்க. நாலு மணிக்கு வந்தா போறும்” சங்கீதா சத்யாவின் கணவனையும் அனுப்பி வைத்தாள். 

”அப்புறம் மாமி எப்டியிருக்காங்க சங்கீதா?” 

”யாரு எங்கம்மாவா… அவங்களுக்கென்ன ஜாம் ஜாம்னு இருக்காங்க. ஒருமுறை வீட்டுக்கு வாயேன் சரண்யா?” 

”வரேன்” 

“எப்பொ?” 

“அப்பா வரட்டும். ஒருநாள் வரேன். நீ வரலாம் இல்ல?”

“சாயங்காலம்தான் வரப் போறேனே. வரது மட்டும் இல்ல. இன்னிக்கு முழுக்க உங்களோடதான் இருக்கப் போறேன்.” 

“நிஜமா…?” சரண்யா வியப்போடு கேட்டாள். “ரொம்ப தேங்க்ஸ் சங்கீதா. ரொம்ப ஆறுதலா இருக்கு. ஆனா.. எங்க வீட்ல தங்க அம்மா விடுவாங்களா…? ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா…?” 

“நா போனாத்தானே? அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு வந்துடப் போறேன். அப்பா சமாளிச்சுப்பார்”. 

சரண்யா நெகிழ்வோடு அவளைப் பார்த்தாள்.

‘அன்று மாலை சத்யாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். சம்பத் சரியாக ஐந்து மணிக்கு வந்து அவர்களை அழைத்துச் சென்று வீட்டில் விட்டார்.

“நா இங்கேயே இருந்துட்டு நாளைக்கு வரேம்ப்பா..”

“டிரெஸ் எல்லாம் வேண்டாமா?” 

“சரண்யா இருக்க பயமேன்? அவ டிரெஸ் எனக்கு சரியார்க்கும். நீங்க கவலைப்படாம கிளம்புங்க அப்புறம் மிஸஸ் சம்பத்கிட்ட நா ரொம்ப கேட்டதா சொல்லுங்க.” 

“உதைச்சேன்னா…” 

‘சம்பத் சிரித்தபடி கிளம்பினார். ஹோட்டலிலிருந்து அவர்கள் மூவருக்கும் இரவுக்கான டிபன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார். டிராபிக் நெரிசலில் சிக்கி அவர் வீட்டை அடையும்போது மணி எட்டை நெருங்கியிருந்தது. போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். வீடு அமைதியா யிருந்தது. 

விடிவிளக்கை மட்டும் எரியவிட்டு ஹால் சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள் சாரதா. 

ப்ரிஃப்கேஸை வைத்துவிட்டு அவளருகில் வந்தார். 

”உடம்புக்கென்ன சாரு?” அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, சாரதா வெடுக்கென்று தட்டி விட்டபடி எழுந்து உட்கார்ந்தாள். 

“காலேலேர்ந்து எங்க போயிருந்தீங்க?” 

“தினம் எங்க போவேன் நான்? இதென்ன புதுக்கேள்வி?” 

”பொய் சொல்லாம சொல்லுங்க. உங்க வேலையா மட்டும்தான் போனிங்களா?” 

“ஆமா…” 

“எம்மேல சத்தியமா?” 

“என்ன சாரதா.. என்னாச்சு உனக்கு இன்னிக்கு?” 

“ஆக… உண்மையைச் சொல்ல மாட்டீங்க!” 

“என்ன உண்மை… எனக்கொண்ணும் புரில?” 

“சரி நா கேக்கற பதில் சொல்லுங்க போதும். சரண்யா போன் பண்ணினாளா?” 

”ஓ.. அதைக் கேக்கறயா… ஆமா பண்ணினா.. ஏன் கேக்கற?”

“எதுக்கு பண்ணினா?” 

“அவங்கக்காக்கு அபார்ஷன் ஆய்டுச்சு சாரதா. கோபாலன் ஊர்ல இல்ல. சின்ன பொண்ணு தனியா என்ன செய்வா. என்னை விட்டா அவங்களுக்கு யார் இருக்காங்க?” 

“பணம் கொடுத்தீங்களா ஏதாவது?” 

“அதெல்லாம் இல்ல. அந்த பொண்ணு பணமெல்லாம் வெச்சிருந்தா. ஒரு மனுஷ சகாயத்துக்குதான் போனேன்.” 

“கார்த்தால உங்க கூடயே புறப்பட்டு வந்தாளே உங்க செல்லப் பொண்ணு. அவ எங்கே?” 

“அவங்களுக்கு துணையா இருக்கட்டும்னு நாந்தான் அவளை அங்க விட்டுட்டு வந்தேன்”. 

”ரொம்ப நல்லார்க்கு. துணைக்கு இருக்க இவ என்ன நூத்துக் கிழவியோ? உடனே போய் அவளை அழச்சுக்கிட்டு வாங்க.” 

”என்ன சாரு. மணி என்னாச்சு பாரு. காலம்பற அவளே வந்துடுவா. எனக்கு சாப்பாடு எடுத்து வை…” 

”முடியாது. விட்டுத் தொலைங்க அந்த உறவைன்னா ஏன் கேக்க மாட்டேன்றீங்க. ஒட்டிப் பிறந்த தங்கையான்ன.. உறவு கொண்டாட? ஒண்ணுவிட்ட தங்கைதானே? எதுக்கு இப்டி அவங்களுக்கு கொட்டிக் கொடுத்துட்ருக்கீங்கன்னு எனக்கு புரியவேல்ல. அல்லது அடிமனசுல இன்னும் ஏதாவது திட்டம் மிச்சம் இருக்கா? இருந்தா இப்பவே அந்த நப்பாசைக்கெல்லாம் சமாதி கட்டிருங்க சொல்லிட்டேன்.” 

சம்பத் அமைதியாக தன் அறைக்குச் சென்றார். பதில் பேசுவதால் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை என்று அவருக்குத் தெரியும். விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவும் விரும்பவில்லை. எனவே மெளனம் சாதிப்பதே உத்தமம் நினைத்தார். அந்த மௌனம் சாரதாவின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாகக் கிளறிவிட்டது. விறுவிறுவென்று அவளும் அவர் பின்னால் அவர் அறைக்குள் நுழைந்தாள். 

“எனக்குத் தெரியாது. நீங்க எக்கேடோ கெட்டொழிங்க. ஆனா ஏன் எம் பசங்களையும் கெடுக்கறீங்க…? அவங்களுக்கு அந்த உறவுதேவையில்ல. மரியாதையா போய் சங்கீதாவை அழைச்சுக்கிட்டு வரப்போறீங்களா இல்லையா?” 

சம்பத் ஒரு வினாடி அவளை வெறித்துப் பார்த்தார். “முடியாது என்ன செய்வ?” என்று அழுத்தமாகக் கேட்டார். 

“போறேன் நானே போய், தரதரன்னு தலமுடியப் பிடிச்சு இழுத்துக்கிட்டு வரேன். மாட்டேன்னா நினைச்சிங்க.” 

விறுவிறுவென்று வெளியில் வந்து புறப்படத் தயாரானாள். அவள் புடவை மாற்றி வெளியில் வருவதற்குள் சம்பத் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்து பத்திரப்படுத்தி வைத்தார். கார் பூட்டியிருப்பது கண்டு எரிச்சலோடு திரும்பி வந்தாள். 

”சாவி எங்கே… கொடுங்க?” 

”நீ போக வேண்டாம்.” 

“அவ அங்க இருக்கக் கூடாது.’ 

“அது ஒண்ணும் தங்கக் கூடாத இடமில்ல. என் தங்கை வீடுதான். இவ இருந்தா ஒண்ணும் தப்பில்ல.”

“எனக்கு பிடிக்கல” 

”எனக்கும் தாண்டி சில விஷயங்கள் பிடிக்கல. இருந்தாலும் சகிச்சுட்ருக்கல…?” 

”எதைச் சொல்றீங்க? உங்களுக்கு பிடிக்காததை அப்டி என்ன செஞ்சுட்டேன் நான்..” 

“முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை இந்த வீட்ல தங்க வெச்சிருக்கயே. அது நல்ல விஷயம்னு நினைக்கறயா நீ? ஒரு உறவும் இல்லாத ஒரு பொண்ணு வந்து இந்த வீட்ல தங்கலாமனா, என் பொண்ணு தன் அத்தை வீட்ல தங்கறதுல ஒரு தப்பும் இல்ல.” 

“நிறுத்துங்க.எதை எதோட முடிச்சு போடறீங்க நீங்க? சுஜிதா ஒண்ணும் யாரோ இல்ல… நாளைக்கு இந்த வீட்டுக்கு மருமகளாகப் போறவ.” 

”நாளைக்குத்தானே… இன்னிக்கில்லையே! அதுக்குள்ள எதுக்கு உள்ள வரணும்?” 

”அதை உங்க பிள்ளைகிட்ட கேக்க வேண்டியதுதானே? அவன் தானே கூட்டிட்டு வந்தான்!” 

“அவன் அனுமதிதான் கேட்டான். இது சரிப்படாதுடான்னு நீ மறுத்திருக்கலாமே! அதை விட்டுட்டு அனுமதி. கொடுத்தயே என்னைக் கேட்டுக்கிட்டா கொடுத்த?” 

“இப்ப புரியுதுங்க அந்த பொண்ணு இங்க இருக்கறதுல உங்களுக்கு இஷ்டமில்ல. உங்க தங்கை பெண்ணை ஆகாஷ் காதலிக்கலங்கற ஆத்திரம் உங்களுக்கு! அவனுக்கு இவதான்னு ஆண்டவன் முடிச்சுபோட்டு வெச்சிருக்கான்னு இப்ப புரிஞ்சிருக்குமே!” 

“புரிஞ்சுக்க வேண்டியது நா இல்ல. நீதான், இன்னும் காலமிருக்கு. யார் கழுத்துல அவன் தாலி கட்டணும்னு விதியிருக்கோ அவதான் உன்மருமகளாக முடியும். காதலிங்கற உரிமை கிடைச்சுட்டதாலயே கற்பனையை அதிகம் வளர்த்துக்க வேணாம்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லி வை.” 

“இப்ப புரியுதுங்க! உங்க மனசுல என்ன இருக்குன்னு. நீங்க என்ன சதித்திட்டம் போடறிங்கன்னும் புரியுது. வரட்டும் ஆகாஷ். அவன் வந்ததும் இதையெல்லாம் பத்தி பேசிடறேன். உங்கப்பா தாண்டா உன் காதலுக்கு வில்லன்னு கிளியர் கட்டா சொல்லிடறேன். தைரியமிருந்தா எங்கிட்ட சொன்னதை அவங்கிட்ட சொல்லுங்க. அவன் என்ன சொல்றான்னு பார்த்துடுவோம்.” 

சாரதா வெளியில் வந்து ஆகாஷ் எப்போது வருவான் என்று உறுமலோடு காத்திருந்தாள்.

சம்பத் கவலைப்படவில்லை. இருந்தாலும் பிள்ளை தன்னை தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற குறுகுறுப்பு அவரையும் மீறி உள்ளே ஏற்படத்தான் செய்தது.

அத்தியாயம்-19 

காதலிப்பவனாலும் கரும்புக் கண்ணாடி அணிபவனாலும் எதையும் தெளிவாகப் பார்க்க இயலாது. துன்பத்தில்தான் உண்மைகள் தெளிவாகத் தெரியும். -ஒரு அனுபவஸ்தர் 

சம்பத்தின் நல்ல நேரமோ, சாரதாவின் கெட்ட நேரமோ ஆகாஷ் நள்ளிரவுக்கு மேல்தான் வீடு திரும்பினான். வந்தவன் சோர்வோடு சாப்பாடு கூட வேண்டாமென்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிக்குச் சென்றுவிட அந்த நள்ளிரவில் பிரச்சனையை ஆரம்பிக்க வேண்டாமெனக் கருதி பேசாமலிருந்து விட்டாள் சாரதா.

மறுநாள் காலையிலும் அவன் சீக்கிரம் எழுந்து வரவில்லை.

எட்டு மணிக்கு சங்கீதா ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

“எங்கடி வந்த?” வாசல் தாண்டி உள்ளே வந்தவளை சாரதாவின் குரல் தடுத்து நிறுத்தியது. அம்மாவுக்கு கோபம் என்பது புரிய சங்கீதா மௌனமாக நின்றாள். 

“இதென்ன வீடா சத்திரமாடி? இஷ்டத்துக்கு போகவும் கண்ட இடத்துல தங்கிட்டு வரவும்!” 

“கோபால் மாமா வீடு ஒண்ணும் கண்ட இடமில்ல” சங்கீதா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். 

“பேசாதடி நாயே! எதிர்த்து பேசின நாக்கை அறுப்பேன். இனி அந்த வீட்டுப் பக்கம் போன… காலை ஓடிப்பேன். சொல்லிட்டேன்”. 

“அவங்க மேல அவ்ளோ என்னம்மா துவேஷம்?” 

“துவேஷமில்லடி, பயம்! நல்ல மரத்தைச்சுத்தி ஒட்டுண்ணிகள் படர்ந்து மரத்தோட சத்துக்களை உறிஞ்சி அது கொழுத்துடும்னு படிச்சதில்ல நீ? அந்த மாதிரிதான் இந்த பிச்சைக்காரக் கூட்டமும், எதையாவது சொல்லி சொல்லி உங்க இரக்கத்தைக் கிளறிவிட்டு இருக்கறதையெல்லாம் பிடுங்கிட்டு போய் கடசில நம்மளையே நடுத்தெருவுல நிறுத்திடும். அந்த பயம்தான்.” 

“நீ நினைக்கறா மாதிரி இல்ல இவங்க. அனாவசியமா நல்ல மனுஷங்களை சந்தேகப்படாதே. பணத்தை நஷ்டப்பட்டா மறுபடியும் சம்பாதிக்கலாம் மனுஷங்களை இழந்துட்டா சம்பாதிக்கறது ரொம்ப கஷ்டம்.” 

“போறும்டி பாட்டி…! உன் திருவாயை மூடிக்கிட்டு உள்ள போ. உபதேசம் பண்ண வந்துட்டாளாம். உபதேசம்! எல்லாம் அந்த மனுஷன் குடுக்கற இடம். பாத்துக்கறேன். உங்க எல்லாரையும் அடக்கிக் காட்டறேன்!” 

சாரதா யாருமற்ற ஹாலில் நின்று தன்னந்தனியே பொருமினாள்

“யாரை ஆண்ட்டி திட்டறிங்க?” பின்னால் சுஜிதாவின் குரல் கேட்டது. 

“வரவர இந்த வீட்டுல யாருமே என் பேச்சைக் கேக்கறதில்லம்மா சுஜி. அதான் புலம்பிட்ருக்கேன்.” 

“என்ன ஆண்ட்டி விஷயம்? யார் உங்க பேச்சைக் கேக்கல?”

“எம் பொண்ணுதான்.வேற யாரு? நேத்து காலேல போன கழுதை இப்பதான் திரும்பி வருது.”

“மை காட் நைட் ஸ்டேயா. வெளிலயா. எப்டி விட்டீங்க? எங்க வீட்லல்லாம் வெட்டிடுவாங்க. ஹாஸ்டல்ல விடறதுக்கே அவ்ளோ யோசிச்சாங்க. எல்லாரும் தைரியம் சொல்லிதான் என்னை அனுப்ப அப்பா சம்மதிச்சார்.” 

“ஹூம்! இங்கல்லாம் யார் பெரியவங்க பேச்சைக் கேக்கறாங்க!’ 

“எங்க தங்கியிருந்தாங்களாம் ?” 

“நேத்து போன் பண்ல சரண்யான்னு அவ வீட்லதான்.” 

”யாரு ஆண்ட்டி அந்த சரண்யா..? இப்டி எல்லாரையும் கைல போட்டு வெச்சிருக்கா!”

”அதை ஏன் கேக்கற சுஜி? எல்லாம் இந்த மனுஷனோட உறவுக் கூட்டம்தான். பாதிநாள் பருப்பில்லாத ரசமும் சுட்ட அப்பளமும் சாப்டும் போதே இந்த கொழுப்புன்னா, இன்னும் நல்ல சாப்பாடு சாப்ட்டா என்ன பாடு படுத்தும்னு யோசி! இந்த லட்சணத்துல இந்த மனுஷனுக்கு அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும்னு வேற திட்டம்! ஆனா அந்த திட்டம் ஆண்டவனுக்கே பொறுக்கல. ஆகாஷ் உன்னை விரும்பினானோ நா பிழைச்சேனோ..? இல்லாட்டி எல்லாம் ஒண்ணு சேர்ந்து எனக்கெதிரா சதி செய்யக் கூடத் தயங்காது. அதனாலதான் நா அந்த கூட்டத்துகிட்ட முகம் கொடுத்து கூட பேசறது கிடையாது. நீயே சொல்லு சுஜி. இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெக்கவும் ஒரு அந்தஸ்து வேணாம்? மகாராணி மாதிரி நீ எங்கே.. பிளாட்பாரமாட்டம் அவ எங்கே…? இது இந்த ஜென்மங்களுக்கு எங்கே புரியுது?” 

“ஓஹோ… உங்க கோவத்துக்குப் பின்னால இவ்ளோ விஷயமிருக்கா..?” சுஜிதா வியந்தாள். இதனால்தான், ஆகாஷின் அப்பாவும் தங்கையும் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லையா? அதற்குக் காரணம் அந்த சரண்யாவா..? இனி ஆகாஷை இழுத்துப் பிடிக்க வேண்டியதுதான். யார் கண்டார்கள் நாளைக்கு அந்த பசப்புக்காரி இவனையும் வளைத்துப் போட முயற்சிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சுஜிதாவிற்கு முகம் தெரியாத அந்த சரண்யாவின் மீது சொல்லத் தெரியாத வெறுப்பேற்பட்டது. நல்ல காலம் அந்த வீட்டின் சர்வ அதிகாரமும் படைத்த ஆகாஷின் அம்மாவுக்கும் சரண்யாவைப் பிடிக்காது என்பதும், ஆகாஷும் அவளை விரும்பவில்லை என்பதும் அவளுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. ஆனாலும் கூட அடி மனசுக்குள் ஒரு விழிப்புணர்வும் எச்சரிக்கையும் ஏற்பட்டது. உள்ளூர ஒருவித பயம் அவளுக்கு இருந்து கொண்டிருந்தது. அப்பா ஒரு வேளை இங்கு வந்து கலாட்டா செய்தால் இங்கிருப்பவர்கள் வளை ஆதரித்தால்தான் இவளால் அவரை எதிர்க்க முடியும். அவர் ஆத்திரப்படுவார். தொடர்ந்து ஏதாவது தொந்தரவு கொடுப்பார். அதையெல்லாம் சமாளிக்க இவர்களது அன்பும் ஆதரவும் அவளுக்கு நிச்சயம் தேவை. இந்நிலையில் இந்த வீட்டில் தனக்கு இன்னும் முக்கியத்துவம் கிடைத்தால்தான் நல்லது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தாள். இங்கு சாரதா வைத்ததுதான் சட்டம் என்பதை அவள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். 

ஆனால் அந்த சரண்யாவுக்காக சம்பத்தும், சங்கீதாவும், சாரதாவை அலட்சியப்படுத்தி யிருப்பதைக் காணும்போது எதிர்காலத்தில் சாரதாவின் சொல்லுக்கு மரியாதை இருக்குமா இருக்காதா என்ற கேள்வி எழும்பியது. அதே நேரம் ஆகாஷிடம் சம்பத்தும், சங்கீதாவும் பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். எனவே ஆகாஷை இன்னும் இறுக்கி பிடித்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால்தான் அவன் மூலம் மற்ற இருவரையும் இழுத்துப் பிடிக்க முடியும் என்று புரிந்தது. சாரதா, ஆகாஷ் இருவரும்தான் இப்போதைக்கு தன்னுடைய பிடிமானம். இவர்கள் இருவர் மூலமும் இந்த வீட்டை ஆட்டி வைக்க ஆரம்பித்து மெல்ல மெல்ல இதன் அதிகாரங்களைக் கைப்பற்றிவிட்டால், அப்பாவை எதிர்த்துக் கொண்டாலும் தன்னுடைய வசதிக்கோ, செல்வாக்கிற்கோ ஒரு பங்கமும் வராமல் பார்த்துக் கொள்ளலாம். இங்கும் இவள்தான் மகாராணி என்றாகி விடுவாள். இப்படியெல்லாம் கணக்கு போட்டு சிந்தித்தது அவள் மனம் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் வழிகளை யோசிக்க ஆரம்பித்தாள் அவள். 

“ஹலோ..காலங்கார்த்தால என்ன பலமான யோசனை?” பின்னால் ஆகாஷின் குரல் கேட்க சட்டென்று திரும்பினாள். 

“நூறு ஆயுசுதான். உங்களைப் பத்திதான் யோசிச்சுட்ருந்தேன்.” 

“தாயே நூறு வயசெல்லாம் வேணாம் ஆளை விடு. அவ்ளோ வயசிருந்து உங்கிட்ட யார் அவதிப்படறது?” 

“உதைப்பேன்.. என்னைப் பார்த்தா ராட்சஸியாட்டமா தெரியுது?” 

“அதை விடு.. என்னைப் பத்தி என்ன யோசனை?” 

“ஹாஸ்டல் வாழ்க்கையே தேவலைன்னு தோணுது. அப்பக்கூட நாம அடிக்கடி சந்திச்சோம்னு பேரு.இப்பொ உங்க வீட்லயே உங்க பக்கத்து ரூம்லயே இருந்து என்ன பிரயோஜனம். உங்களைப் பார்க்க முடியுதா, பேச முடியுதா..? என் ஞாபகமாவது உங்களுக்கு இருக்கான்னு சந்தேகமார்க்கு”. 

“அசடு! முந்தியாவது கொஞ்ச நேரம்தான் உன் நினைப்பு வரும். இப்ப நாள் முழுக்கவே உன் நினைப்புதான் தெரியுமா? ஆனாலும் அதுக்காக உன்னையே சுத்தி சுத்தி வரமுடியுமா? வீட்ல இருக்கற பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? கல்யாணமாகற வரை கட்டுப்பாட்டோட இருந்தாதான் மத்தவங்க நம்மை மதிப்பாங்க. அதனாலதான் கிட்டயே வரதில்ல. எவ்ளோ பெருந்தன்மையோட உன்னை இங்க தங்க வெச்சிருக்காங்க. அதுக்கு நாம மரியாதை கொடுக்க வேணாமா சொல்லு.” 

“கரெக்ட்தான். பாவம் உங்கம்மா தனியா வேலை செய்யறதைப் பார்த்தா கஷ்டமார்க்கு. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு ஆசையாதான் இருக்கு. ஆனா என் ஸ்டடீசும், புராஜக்ட் ஒர்க்ஸும், அலைச்சலும்… எங்க முடியுது.. ஆனா இந்த கஷ்டமெல்லாம் கொஞ்சநாள்தான்.” 

“ஏன்?” 

”அப்பாவைப் பகைச்சுக்கிட்டு நா எங்கேர்ந்து படிக்க முடியும். எனக்கு அனுப்பற பணத்தை முதல்ல கட் பண்ணிடுவார். அப்பறம் காலேஜுக்கு பணம் கட்டமாட்டார்”. 

”பணத்தால எனக்கு கஷ்டம் கொடுத்து, காய வெச்சு போதும்டா சாமின்னு நானா ஓடிப்போய் அவர் கால்ல விழற வரை ஓயமாட்டார். இந்த நிலை ஏற்பட்டா படிப்பு நின்னுடும். அதுக்கப்பறம் உங்கம்மா ஏன் காலேஜுக்கு போகலன்னு கேட்டா நா என்ன சொல்லப் போறேனோ தெரியல. பட் நா தயாராய்ட்டேன். இந்த வீட்ல ஒரு சர்வன்ட்டா இருந்தாலும் இருப்பேனே தவிர என் வீட்ல ராணியா இருக்க மாட்டேன். யாருக்கு வேணும் அந்த கிரீடமும் வசதிகளும்?” 

ஆகாஷ் அவளையே பார்த்தான். காதலால் ஏற்கனவே குழைந்திருந்த மனம், அவளுடைய வார்த்தைகளில் மேலும் நெகிழ்ந்து குழைந்தது. அவளை பரிவோடு பார்த்தான்.

”என்னை நம்பி வந்த உன்னை நா அம்போன்னு விட்ருவேனா? உங்கப்பாவோட பணம் யாருக்கு வேணும்? அவரே வெச்சுக்கட்டும். அவர் அனுப்பாட்டி இங்க குடி முழுகிடுமோ? நா இல்ல உனக்கு? எந்த ஆம்பளைக்கு காதலியைப் படிக்க வெச்சு கல்யாணம் பண்ணிக்கற சான்ஸ் கிடைக்கும்? அப்டி ஒரு சான்ஸ் எனக்கு கிடைக்கட்டுமே.நா இருக்கற வரை நீ யாருக்கும் பயப்பட வேணாம். எதுக்கும் கவலைப்படத் தேவையில்லை புரிஞ்சுதா?” 

சுஜிதா சற்று நேரம் எதுவும் பேசவில்லை. 

“என்னப்பா ஸைலன்ட் டாய்ட்ட…?” 

“இல்ல ஆகாஷ், நீங்க எனக்காக உயிரையும் கொடுப்பீங்க. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. நா கவலைப்படறது உங்கம்மாவை நினைச்சுதான்.” 

”ஏன் அவங்க உன்னை நல்லா தானே நடத்தறாங்க?”

“இப்ப நல்லாதான் நடத்தறாங்க. இந்த அன்பு கடசீ வரை இருக்கணுமே. ஒருவேளை என் வீடு என்னை தலைமுழுகிடுச்சுன்னா கட்டின துணியோடதான் நா உங்களுக்கு கழுத்தை நீட்ட வேண்டி வரும். உங்கம்மா ஒத்துக்குவாங்களா? உங்களை விட எங்க வீடு இன்னும் வசதியானதுன்றதாலதான் உங்கம்மா நம்ப காதலை அக்ஸெப்ட் பண்ணியிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. அந்த மாதிரி இருக்கறவங்க நா ஒண்ணுமில்லாம வந்தா சும்மார்ப்பாங்களா? ஏன் கேக்கறேன்னா.. என்னால கண்டிப்பா சொத்தும் சீரும் கிடைக்கும்னு சொல்ல முடியாது. அவங்க மனசு மாறலாம். மாறாம போகலாம். அது நம்ப அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. பணம் இருந்தாலும் இல்லாட்டியும் என்னை ஏத்துக்கற மனசு இங்க எல்லார்க்கும் இருக்குமாங்கறதுதான் என் சந்தேகம். அப்டி இவங்களும் ஒத்துக்காட்டி நீங்க என்ன செய்வீங்க ஆகாஷ்? என்னை விட்ருவீங்களா? வெளியே போன்னு விரட்டிடுவீங்களா?” 

சுஜிதா மிகப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ஆகாஷ் உருகிப் போய்விட்டான். அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டான். 

“மாட்டவே மாட்டேன் சுஜி. அம்மா அப்பா மேல எனக்கு மரியாதை உண்டு. ஆனா பணம்தான் பெரிசுன்னு அவங்க நிறம் மாறினாங்கன்னா. நானும் மாறுவேன். அவங்களை உதறிட்டு உன்னைக் கூட்டிட்டு இங்கேர்ந்து வெளியேறிடுவேன். அந்தஸ்து பார்க்கறவங்க யாரும் நமக்கு வேண்டாம். என்ன நடந்தாலும் நா உன் பக்கம்தான் சரியா? நீ அனாவசியமா பயப்பட வேண்டாம். தேவையில்லாம எதையாவது நினைச்சு குழப்பிக்கவும் வேணாம். ப்ரியா இரு. உனக்கு பணம் வேணும்னா எங்கிட்ட கூச்சப்படாம கேளு புரிஞ்சுதா?” 

சுஜிதா எழுந்தாள். அவனை அணைத்துக் கொள்ள கிட்டே வந்தாள்.

”நோ சுஜி.. கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம் எதுவும் வேணாம். அம்மாகிட்ட நா பிராமிஸ் பண்ணியிருக்கேன். ஓ கே யா..” 

ஆகாஷ் அவன் அறையிலிருந்து வெளியில் வந்தான்.

“ஆகாஷ் டிபன் ரெடி, சுஜியையும் வரச்சொல்லு” அம்மா கீழிருந்து குரல் கொடுத்தாள். 

”அப்பாவும், சங்கீதாவும் கீழ வந்தாச்சா?” 

“அவங்க வந்தா வரட்டும். பாக்கு வெத்தலை வெச்சு அழைக்க வேண்டாம். நீ வா.” 

ஆகாஷ் கீழே இறங்கி வந்தான்.

”என்னம்மா இன்னும் நேற்றைய கோவம் போகலையா உனக்கு?’ 

”உனக்குத் தெரியாதுடா ஆகாஷ் உங்கப்பாவும் உன் தங்கையும் என்னல்லாம் செய்யறாங்கன்னு.” 

“என்ன செய்யறாங்க அப்டி?” 

”நா சொல்லுவேன். நீயும் தலையை ஆட்டிக்கிட்டு கேப்ப. எல்லாத்தையும் கேட்டுட்டு கடசில உங்கப்பா பக்கம்தான் சாய்வ. தேவையில்லாம உங்கிட்ட சொல்லி என் தொண்டைத் தண்ணிய வத்த விடணுமா?” 

“பாத்தயா அலுத்துக்கறயே.” 

“நீயே சொல்லுடா ஆகாஷ், இனிப்பைச் சுத்தித்தான் ஈயும் எறும்பும் மொய்க்கும்னு சொன்னா அது தப்பா?”

“எதுக்கு சுத்திவளைக்கற? என்ன விஷயம்னு பளிச்சுனு சொல்லேன்.”

“பளிச்சுனு சொல்லணும்னா உங்கப்பாக்கு நீ  காதலிக்கறதும், சுஜிதாவை இங்க கூட்டிட்டு வந்து வெச்சிருக்கறதும் சுத்தமா பிடிக்கல” 

“அப்டின்னு உங்கிட்ட சொன்னாரா? 

”நேரடியா சொல்வாரா? சுத்தி வளச்சுதான் சொல்லுவார். அவர் கனவெல்லாத்தையும் நீ கலைச்சுட்டயே அந்த எரிச்சல் அவருக்கு. அந்த கோபாலன் பொண்ணை உன் தலைல கட்டணும்னு பார்த்தார். நீ சுஜிதாவைக் கூட்டிட்டு வந்துட்ட. அதோட விட்ருவார்னு பார்த்தேன். ஆனா மனுஷன் விட்ருவாரா? சதி பண்றாராம் சதி. உன் காதலியை வெளியேத்திட்டுதான் மறுவேலைன்னு சவால் விட்டுட்டு போறார். அது மட்டுமில்லையாம். அந்த கோபாலன் பொண்ணுக்குதான் எல்லாத்தையும் கொட்டிக் கொடுப்பாராம். அப்டி என்ன அவ உசத்தியாப் போய்ட்டான்னு தெரியல. இல்ல இந்த சுஜிதாதான் பாவம் என்ன குத்தம் பண்ணிட்டாளாம்? உன்னைக் காதலிக்கறது அவ்ளோ பெரிய தப்பா? நா இவகிட்ட அன்பா நடந்துக்கறது உங்கப்பாக்கும் இந்த சங்கீதா கழுதைக்கும் கூட சுத்தமா பிடிக்கல. எனக்கும்தான் அவங்க செய்யற காரியங்கள் பிடிக்கல. சரண்யா சரண்யான்னு உருகறது பிடிக்கல. நிறுத்திடுவாரா அவர்? இதைச் சொன்னா உங்கப்பா என்ன சொல்றார் தெரியுமா? முன்ன பின்ன தெரியாத ஏதோ ஒரு கழுதை கிட்ட நீ கொஞ்சலாம், என் ஒண்ணுவிட்ட தங்கை பொண்ணை நா சீராட்டக் கூடாதாங்கறார். சுஜிதா கழுதையாம்! அந்த பொண்ணு காதுல விழுந்தா எவ்ளோ வருத்தப்படும் சொல்லு.” 

அம்மா நீளமாய் குறை சொல்லி நிறுத்த, ஆகாஷ் குழம்பினான். அப்பா அப்படியெல்லாம் பேசியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. 

”என்னடா நா சொல்றத நம்ப முடியலையா? எனக்கு தெரியும் நீ நம்பமாட்டன்னு. உனக்கு உங்கப்பாதான் உசத்தி. ஆனா பார்த்துக்கிட்டே இரு. அவர் உனக்கு வேட்டு வெக்கும்போதுதான் அவரைப் பத்தி நீ புரிஞ்சுக்கப் போற!” 

அம்மா மிரட்டலாய் நிறுத்த, ஆகாஷ் இன்னும் குழம்பினான். எந்த முடிவுக்கும் அவனால் வர முடியவில்லை. கவலையோடு எழுந்தான் அவன்.” 

மாடியிலிருந்து அப்பா பரபரப்பாக கீழே வந்தார். ”ஆகாஷ்… கிளம்பு உடனே என்னோட வா”. 

“எங்கப்பா?” 

“கோபாலன் வீட்டுக்குத்தான்.” 

“எதுக்குப்பா?” 

“சொல்றேன் வா” 

“இல்லப்பா எனக்கு வேலையிருக்கு. நீங்க போய்ட்டு வாங்க.” 

”ஆகாஷ்!” சம்பத் அவனை திகைப்போடு பார்த்தார். அவருக்கு புரிந்துவிட்டது. சாரதா ஏதோ சொல்லியிருக்கிறாள். அதான் அவன் இப்படி விட்டேற்றியாக மறுக்கிறான். அவர் வேதனையோடு பார்த்தார். “ஓ.கே. ஆகாஷ், நீ வரவேண்டாம். நா போறேன். சங்கீதாவைக் கூட்டிட்டு போறேன். நாங்க திரும்பி வர பத்து நாளாகும்.” 

ஆகாஷ் புருவம் சுருக்கி அவரைப் பார்த்தான்.

“தாராளமா… இதுக்கு எதுக்கு எங்கிட்ட அனுமதி கேக்கணும்? உங்க தங்கை வீடு. பத்து நாளென்ன.. பத்து மாசம் தங்கினாலும் ஏன்னு கேக்க முடியுமா?” 

அப்பா பரிதாபமாக அவனைப் பார்த்தார். “உனக்கென்ன ஆச்சு ஆகாஷ் ? ஓ.கே..நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ வந்தாலும் வராட்டாலும் உனக்கு இன்ஃபார்ம் பண்ண வேண்டியது என் கடமை”. 

அப்பா எடுத்து சொன்ன வார்த்தைகளில் ஆகாஷ் அதிர்ந்து போனான். சாரதா கூட ஒரு வினாடி அதிர்ச்சியோடு நின்று விட்டாள். சம்பத் வேகமாக வெளியேறினார், சங்கீதாவையும் அழைத்துக் கொண்டு.

அத்தியாயம்-20 

பிறந்தன இறுக்கும், இறந்தன பிறக்கும். தோன்றின மறையும் மறைந்தன தோன்றும். பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும். உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும். -பட்டிணத்தார். 

படாரென்று அந்த கயிறு அறுந்தது. பலமாயிருந்த கயிறு எப்படி அறுந்ததென்று தெரியவில்லை. பட்டென்று இப்படி அறுந்து போகுமென்றும் நினைக்கவில்லை. இருந்த ஒரே ஒரு பிடிமானமும் நழுவி கீழே.. கீழே அதல பாதாளம் நோக்கி செல்லும் நிலை. பயத்தில் கண்கள் பிதுங்க முகம் வெளிற.. இதயம் உறைந்து போக… 

சரண்யா முகத்தைப் பொத்திக் கொண்டு தலையை முழங்காலில் புதைத்துக் கொண்டாள். மற்றவர்கள் அவளது துக்கம் கண்டு, அழ அந்த இடமே அழுகையில் நிறைந்தது.

சம்பத்தும் சங்கீதாவும் வந்ததும் கூட்டம் விலகி வழிவிட்டது. அவர்களைத் தொடர்ந்து ஆகாஷும் வந்தான். சத்யாவின் புருஷனிடம் சம்பத் நெருங்கி நின்று தணிந்த குரலில் ஏதோ கேட்டார். ஆகாஷும் அவர்களருகில் வந்தான். அப்பா அவனை சட்டை செய்யவில்லை. வாசல் பக்கம் போனார்.

”சாரிப்பா”அவர் பின்னால் வந்தவன் குறுகுறுத்த குரலில் சொன்னான்.

“இட்ஸ் ஓகே..” சுரத்தில்லாத குரலில் அவர் சொன்னார். “இப்ப நாம என்ன செய்யணும்ப்பா? பாடி எங்கருக்காம்?” 

”பாடி…!” அவர் ஒரு வினாடி ஆடிப் போனார். எல்லாம் அடங்கிப் போனதும் மனிதனுக்கு பெயர் வெறும் உடல்…! ஊர், பெயர் எல்லாம் உயிரோடு மறைந்து விடுமோ? அது இப்போது கோபாலனல்ல. வெறும் உடல்! சம்பத்தின் கண்கள் கலங்கியது.

“போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு புரொடியூசரே உடம்பை வாங்கி தனி வேன் மூலம் அனுப்பி வெச்சுட்டாராம். இன்னும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துல வந்துடும்.” 

”எப்டியாம்மா?” 

”ரோடு ஆக்ஸிடென்ட். துணை நடிகர்கள் எல்லாரும் வந்த மினி வேனும், டூரிஸ்ட் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதினதுல நாலஞ்சு பேர் ஸ்பாட்லயே.. ஒண்ணும் புரியலடா ஆகாஷ் இந்த குடும்பத்துக்கு மட்டும் ஏன் ஏதாவது சோதனை மேல சோதனை வரணும்? நல்லவங்களா இருக்கறது அவ்ளோ பெரிய தப்பா? இப்டி கஷ்டம் குடுக்கறான் கடவுளே!” 

ஆகாஷ் வேதனையோடு மௌனம் சாதித்தான். துணியாய் துவண்டு சுவற்றில் தலைசாய்த்து கண் மூடி, முழங்கால் பிடித்தபடி அமர்ந்திருந்த சரண்யாவைப் பார்க்க கண்றாவியாக இருந்தது. இருந்த ஒரே துணையையும் இவளிடமிருந்து எதற்கு அவ்வளவு அவசரமாக பிரித்து அழைத்துக் கொண்டது அந்த தெய்வம்? தெய்வங்களுக்கு கண்ணில்லை என்று சிலர் சொல்வது சரிதானா? இனி இந்த சின்னப் பெண் என்ன செய்வாள், இவளுடைய எதிர்காலம் பற்றி யார் கவலைப்படுவார்கள்? யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? அக்கா என்ற ஸ்தானத்தில் சத்யா இருக்கிறாள் என்றாலும் அவளால் முழுப் பொறுப்பும் ஏற்க முடியுமா? அவள் வீடு அதற்கு சம்மதிக்குமா..? ஆகாஷ் கவலையோடு யோசித்தான்.

வீட்டுக்கு முன் ஆட்கள் கூடிக் கொண்டிருந்தார்கள். கோபாலனின் எதிர்பாராத மரணம் எல்லோரது முகத்திலுமே அதிர்ச்சியைப் படரவிட்டிருந்தது. நல்ல மனிதன். யாருக்குமே தொந்தரவில்லாமல் வாழ்ந்தவர் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு மனிதன் இறந்த பின் அவன் தனக்கு மிகவும் நெருங்கியவன் என்று காட்டிக் கொள்ளும் ஆர்வம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. 

அம்பாஸடர் கார் ஒன்று வந்து நின்றது. இரண்டு மூன்று பேர் அதிலிருந்து இறங்கினார்கள். காருக்குள் ரோஜா மாலைகள் தயாராக இருந்தன. 

“வேன் வந்துட்ருக்கு. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல வந்துடும்” செல் போன் வைத்திருந்த ஒருவர் சொன்னார். 

“அடுத்த படத்துல வெயிட்டான ரோல் குடுக்கறதா இருந்தோம். அந்த அளவுக்கு இயல்பா நடிக்கற நடிகர். பாவம் இப்டி அநியாயமா போய்ட்டார்.” 

“யூனிட்ல எல்லார்கிட்டயும் பணிவா பேசுவார். யாரையும் நோகடிக்க மாட்டார். நல்ல மனுஷன் எல்லாருக்கும் பிடிச்சு போய்டுச்சு. லேட்டா என்ட்ரி ஆயிருக்கிங்களேன்னு எல்லாருமே வருத்தப்பட்டு கேட்டுட்டோம். இன்னும் ஏழெட்டு வருஷம் முந்தி வந்திருந்தாரு… நிச்சயம் நல்ல குணச்சித்திர நடிகராகி நிறைய அவார்ட்ஸ் வாங்கியிருப்பார்.” 

வந்திருந்தவர்களின் வார்த்தைகளில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

வேன் தெரு முனை திரும்ப,திடீரென்று அங்கு பரபரப்பு சூழ்ந்தது.

“சரண்யா எழுந்திரும்மா வேன் வருது பாடி கொண்ட வராங்க” யாரோ சொல்ல சரண்யா காதைப் பொத்திக் கொண்டாள். 

“ப்ளிஸ்… அப்பான்னு சொல்லுங்க. எங்கப்பாவை வெறும் உடம்பாக்கிடாதிங்களேன்.”

தீனமாய் அழுதவளை நாலைந்து பேர் சமாதானப்படுத்தி அணைத்துக் கொண்டனர்.

கோபாலனின் உடல் இறக்கப் பட்டு கூடத்தில் கிடத்தப்பட்டது. முகம் சலனமற்று இருந்தது. உடல் முழுக்க வெள்ளைத் துணியால் சுற்றியிருந்தது. 

“அதிக நேரம் வெச்சுக்கறது நல்லதில்ல. ஆக்ஸிடென்ட் கேஸ்’ யாரோ சம்பத்திடம் சொல்ல. அவர் தலையாட்டினார். ஏற்பாடுகள் ரெடியாய்ட்ருக்கு போயிருக்காங்க” என்றவர் சரண்யாவிடம் வந்தார். 

“அப்பாவைப் பாரு சரண்” 

“என்னால முடியல அங்கிள்… என்னை விட்ருங்க. எங்கப்பாவை நா இப்டி பார்க்க மாட்டேன்”. 

“இப்டி பிடிவாதம் பிடிச்சா எப்டி? போனவர் இனி னி வரப்போறதில்ல. ஆகற காரியத்தை கவனிக்கத் தானே வேணும். கிட்டப் போய் உக்காந்து வாய்விட்டு அழுவயா?”

தூரத்து உறவு ஒன்று அவளைப் பிடித்திழுக்க முயல, சம்பத் அந்த பெண்மணியை கண்களால் விரட்டினார். சரண்யாவைப் பரிவோடு உள்ளறைக்கு அழைத்துச் சென்றார்.

“சரி.. பார்க்க வேண்டாம்.நீ இப்டி உட்கார்.” 

அவளை அழுத்தி உட்கார்த்தி விட்டு தானும் அருகில் அமர்ந்தார். சில நிமிடங்கள் மௌனமாய் நகர்ந்தது. கூடத்திலிருந்து அழுகை ஒலிகள் காதைக் கிழித்தன. அழ வேண்டியவள் அதீத துக்கத்தில் இறுகிப் போய் ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தாள். அத்தனை துக்கமும் உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருக்க, அவற்றை வெளிப்படுத்தாது அவள் இறுகிப் போயிருந்தது சம்பத்திற்கு கவலையாக இருந்தது. உள்ளே உறையும் துக்கம் ஆபத்து. பல தொந்தரவுகளை உடம்பிற்குக் கொடுக்கும். துக்கமோ சந்தோஷமோ வெளிப்படுத்தப்பட்டு விட வேண்டும். மரண வீட்டில் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் பழக்கத்திற்குப் பின்னால் இதயத்திற்கு கேடு வருவதைத் தடுக்கும் மருத்துவ உண்மையும் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. 

“நீ அழ வேண்டாம் சரண். ஜஸ்ட் அப்பாவை வந்து ஒரு பார்வை பார்த்துடு. இதுக்கப்பறம் நீ ஏங்கினாலும் தவிச்சாலும் இந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது. இது கடைசி முக தரிசனம். வேற வழியில்ல. துக்கத்தைத் தாங்கிண்டாவது நீ அவரைப் பார்த்துதான் ஆகணும்”. 

மெல்லிய குரலில் அவர் சொல்ல, சரண்யா அசைவின்றி அமர்ந்திருந்தாள்

“இங்க பாரு சரண், பிறக்கும்போதே மனுஷனோட மரணமும் தீர்மானிக்கப்பட்டுடறது. எங்கோ எப்பொ, எப்டிங்கறது மனுஷ அறிவுக்கு எட்டாத விஷயம். சுகம் துக்கம், வலி வேதனை எல்லாம் உடம்புக்குதான். ஆத்மாவுக்கு இல்ல. அதுக்கு அழிவும் கிடையாதுன்னு படிச்சதில்லையா நீ. நீ யாரை உன் அப்பான்னு நினைச்சுட்ருந்த? இந்த உடம்பையா இதுக்குள்ள இருந்த உசிரையா..? இது வெறும் சட்டை சரண்யா. உன் அப்பா சிரஞ்சீவி. அவருக்கு மரணமே கிடையாது. இருந்தாலும் எந்த கை உன்னை தடவிக் கொடுத்து வளர்த்துதோ, எந்த நெஞ்சு உன்னை பாசத்தோட அணைச்சு அன்பைப் பொழிஞ்சுதோ, எந்த முகம் உன்னை புன்னகையோடயும் கருணையோடயும் உங்கிட்ட பேசித்தோ, எந்த விரல்கள் உனக்கு அட்சரம் எழுதக் கற்றுக் கொடுத்ததோ அதையெல்லாம் நீ கடைசியா ஒருமுறை பார்க்க வேண்டாமா? உங்களுக்காக ஓடி ஓடி உழைச்ச சரீரமில்லையா அங்க கிடக்கிறது! எழுந்திரு தாயி…வந்து ஒரு முறை பாரு. எனக்காக இல்ல. உனக்காக இல்ல. யாருக்காகவும் இல்ல அவருக்காக, உங்கப்பாக்காக வந்து பாரு …” 

சரண்யா அவர் தோளில் சரிந்தாள். அவர் அவளை எழுப்பி நிறுத்தி மெல்ல அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்து கோபாலனின் சடலத்திற்கு முன் நிறுத்தினார். சலனமற்றிருந்த அப்பாவின் முகத்தை அவள் கண்கள் வெறித்து நோக்கியது. யார் யாரோ வந்து போட்டிருந்த மாலைகள் அவர் உடம்பை மறைத்திருந்தது. முகம் நிர்மலமாயிருந்தது. தூக்கம் மாதிரிதான் தெரிந்தது. 

“கடைசி நேரத்தில் என்ன நினைத்தாய் அப்பா? முடிக்க வேண்டிய வேலைகளும் கடமைகளும் ஏராளமாய் இருக்க இப்படி எல்லாவற்றையும் பாதியில் விட்டு விட்டுச் செல்கின்றோமே என்று வேதனைப்பட்டாயா…? சரண்யாவுக்கு இனியார்துணை என்று கண்கலங்கினாயா? என் பெண்ணுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே இனி அவள் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று உருகினாயா…? எவ்வளவு கனவு கண்டாய் அப்பா? எனக்காக உன் சுகங்களைக் கூட சுருக்கிக் கொண்டாயே…! ‘இப்பல்லாம் ஒரு பயம் வந்துடுச்சு சரண்யா, உனக்கு ஒரு வாழ்க்கை தேடிக் கொடுக்கற கடமை முடியற வரை என்னை நானே பத்திரமா பாத்துக்கணும்னு தோணுது. உன் கழுத்துல மூணு முடிச்சு விழுந்து நல்ல வீட்ல நீ வாழ்க்கைப் பட்டுட்டன்னா, அதுக்கடுத்த நிமிஷமே சாவு வந்தா கூட சிரிச்சுக்கிட்டே சாவத் தயாராய்டுவேன். புறப்படறதுக்கு முந்தி நீ சொன்ன வார்த்தைகள்தான் நினைவிருக்காப்பா.’நீ உன்னை ரொம்ப பத்திரமாதான் பாத்துட்ருப்ப. ஆனாலும் எப்படிப்பா இதெல்லாம்? ஏன் இவ்ளோ அவசரமா? யார் செய்த சதி.. கடவுளா? அக்கிரமம் பண்றவங்களும், அடுத்தவங்களை வாழ விடாம பண்றவங்களும், நாட்டைச் சுரண்டற நாய்ங்களும் கைல வெடிகுண்டு வெச்சுக்கிட்டு திரியங்கா எவ்ளோ பேர் இருக்காங்க! அவங்களையெல்லாம் விட்டுட்டு ஒரு ஈ எறும்பைக் கூட நசுக்க மனசு வராத, அன்பே மூச்சா வாழ்ந்த உன்னைப் போய் இப்டி பாதி வாழ்வுல பலி வாங்க அந்த தெய்வத்துக்கு மனசு வந்துது? என்ன கணக்குல அது மனுஷங்களைக் கொண்டு போவுது…?” 

”சரண்… துக்கத்தை அடக்காதே… வாய் விட்டு அழுதுடு..” சம்பத் மெல்லிய குரலில் சொல்ல, சரண்யா கொஞ்சம் கூட அசையாது அதே வெறித்த பார்வையில் நின்றிருந்தாள். 

“ஓ.. கே… நீ வா.. சரண்… நாழியாறது. மத்த காரியங்களை கவனிக்கணும். போய் தலைக்கு தண்ணி விட்டுக்கிட்டு ஈரத்துணியோட வா. அய்யர் வந்துட்டாரு சத்யா இவளைக் கூட்டிட்டு போய் தண்ணி விட்டு கூட்டிட்டு வா” 

சரண்யா அவர்களோடு மரம் மாதிரி சென்றாள். ஏன் எதற்கு என்ற கேள்வியின்றி பொம்மை மாதிரி அவர்கள் சொன்னதைச் செய்தாள். அப்பாவின் உடல் அலங்கரிக்கப் பட்ட பாடையில் ஏற்றப்பட்டதும் யாரோ அவளை பாடைக்கு முன் அழைத்துச் சென்று கையில் தீச்சட்டி கயிறை திணித்து விட்டு போக சம்பத் மாமாவின் அரவணைப்பில் அணிச்சையாய் நடந்தாள். மூளை எதனையும் உணரவில்லை. விழிகள் எதையும், யாரையும் கவனிக்கவில்லை, சுடுகாடு வந்தது கூடத் தெரியவில்லை. கட்டைகளும், வரட்டிகளும் அடுக்கி, பேருக்கு கொஞ்சம் நெய்யும், கெரஸினும் ஊற்றியதும், “வா சரண், அப்பாக்கு கொள்ளி வை,” மாமாவின் குரல் காதருகில் கேட்டதும் திடீரென்று உடம்பு தூக்கிப் போட்டது, தூங்கி விழித்தாற்போல் மலங்க மலங்கச் சுற்றிலும் பார்த்தாள். தான் நிற்குமிடம் எதுவென்று அப்போதுதான் உணர்ந்தாற்போல் மாமாவையும் கட்டை அடுக்கியிருந்த அப்பாவின் உடலையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“நெருப்பு வைம்மா..” யாருடைய குரலோ கேட்க மீண்டும் அவள் தேகம் துடித்து ஆடியது. 

“முடியாது மாமா..நா எப்டி.. அப்பாக்கு… எப்டி மாமா… என்னை விட்ருங்க… என்னால முடியாது”. 

“நீ தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்! இது ஒரு உரிமை சரண்யா. யாருக்கும் விட்டுக் கொடுத்துடாதே. எழுந்து வா. நா கூட இருக்கேன் இல்ல? வா வந்து வை.” 

மாமா அவளை இழுத்துச் சென்று கொள்ளி பிடித்திருந்த அவள் கரத்தை தூக்கிப் பிடித்தார். “வை சரண்யா” 

ஜடம் மாதிரி அப்பாவுக்கு நெருப்பு வைத்தாள். 

”திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னுவாங்க. அங்க கிணறு இருக்கு மறுபடியும் ஒருமுறை தண்ணி ஊத்திக்கிட்டு கிளம்புங்க.” 

‘உறவுக்காரர் ஒருவர் சொல்ல அனைவரும் கிளம்பினார்கள்.

தண்ணீர் ஊற்றிக் கொள்ளும்போது கட்டுப்பாடு மிறி கண்கள் அப்பாவின் சிதைப்பக்கம் சென்றது. திகுதிகுவென்று செந்நிறத் தீ சிதை முழுக்கப் பரவி சிவதாண்டவமாய் காற்றில் ஆடி எரிந்து கொண்டிருந்தது. அப்பாவா… அப்பாவையா அந்த நெருப்பு…? படாரென்று உள்ளே ஏதோ வெடித்தது..அடைந்து கிடந்த அழுத்தம் அமானுஷ்ய அலறலாய் பிரசவமாயிற்று. உச்சஸ்தாயியில் அவளுடைய அழுகையொலி கேட்டு மயானமே ஸ்தம்பித்தது. சம்பத்தும், ஆகாஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். உடன் வந்த பெண்மணிகள் அவளை சமாதானப்படுத்தச் செல்ல, சம்பத் அவர்களைத் தடுத்தார்.

“அவ அழட்டும் விட்ருங்க… நீங்கள்ளாம் போங்க. நாங்க கூட்டிட்டு வரோம்.” 

அவர் அனைவரையம் அனுப்பி வைத்தார். ஆகாஷும் அவரும் மட்டும் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அழுகை அடங்கி, மனமும் உடலும் பதட்டம் குறைந்து அமைதியானதும் ஒரு பெருமூச்சோடு கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் சுற்று முற்றும் பார்த்தாள்.

“போலாமா?” ஆகாஷின் குரல் கேட்க மெல்லிய ய கூச்சத்தோடு நடந்தாள். கார் அமைதியாக வீடு நோக்கி விரைந்தது. 

ஆகாஷை அனுப்பிவிட்டு அன்றிரவு சம்பத்தும் சங்கீதாவும் அங்கேயே தங்கினார்கள்.

”மரணம் இவ்ளோ சீக்கிரம் கோபாலனுக்கு வந்திருக்க வேண்டாம்தான். ஆனா வந்துடுச்சே! இந்த உலகத்தின் இயக்கங்களும், ஜனன மரணங்களும் நம்ம கைல இல்லையே. என்ன செய்ய? தாங்கித்தான் ஆகணும். பட்டிணத்தார் மாதிரி பட்டுனு அறுத்துட்டு போய்ட முடியாதுதான். அவரே கூட அம்மா செத்தப்பொ அழுது துடிச்சவர்தான். அந்த மரணத்தின் துக்கத்தில் எத்தனையோ பாட்டெழுதிதான் தன் துக்கம் தீர்த்துக்கிட்டார். ஆக துக்கம்ங்கறது மனுஷ இயல்பு. ஆனா அதுலயே துவண்டு போய் நின்னுடக் கூடாது சரண்யா. பூமியின் சுழற்சி எதனாலயும் நிக்காது. அதே மாதிரிதான் நம்ம கடமைகளும். தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கணும். அப்பா என்னென்னல்லாம் ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் நிறைவேற்றி அவர் ஆத்மாவை சந்தோஷப்படுத்த வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு. உனக்கு பக்க பலமா நாங்கள்ளாம் இருக்கோம். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம். சரியா…?” 

சரண்யா அப்பாவின் படத்தைப் பார்த்தபடி தலையசைத்தாள். 

”நீ என்ன செய்யப்போறே சத்யா? இனி இவ இந்த வீட்ல தனியார்க்க முடியாது. இதுக்கு ஒரு வழி பண்ண வேணாமா?” 

“எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன் மாமா. நாங்க இருக்கும்போது இவ ஏன் இங்க தனியார்க்க முடியும். அப்டி இருக்க விட்ரதான் முடியுமா?” 

”குட்.. பத்து நாள் காரியம் முடியறதுக்குள்ள சாமான்களையும் வேண்டாததை வித்துட்டு வேணுங்கறதை கட்டி எடுத்து வெச்சுக்குங்க. நானும் முடிஞ்சப்பொ எல்லாம் வந்து பார்த்துக்கறேன். உங்களுக்கும் எப்பொ என்ன வேணும்னாலும் எனக்கு போன் பண்ணி தயங்காம கேக்கலாம்”. 

”நீங்க மட்டும் ஆதரவா இல்லன்னா நாங்க ரொம்பவே கஷ்டப்பட்ருப்போம்.” 

“அதிருக்கட்டும் உன் உடம்பு எப்டி இருக்கு இப்பொ?”

“பரவால்ல.அப்ப வந்தா அபார்ஷன் ஆய்ட்ட விஷயத்தை எப்டி சொல்றது, அவர் துடிச்சுடுவாரேன்னு சரண்யாதான் ரொம்ப தவிச்சுப் போய்ட்டா. அதைக் கேக்கறதுக்கு முந்தியே அவர் போய்ச் சேர்ந்துடுவார்னு நினைச்சுக் கூடப் பார்க்கல”. 

சம்பத் பெருமூச்சு விட்டார். பத்து நாள் சமைப்பதற்கு ஒரு மூதாட்டியை ஏற்பாடு செய்திருந்தார். சாப்பாடு தயார் என்று அவள் வந்து சொல்ல ஆளுக்கு ஒரு பிடி சாப்பிட்டு விட்டு படுத்தார்கள். விடி விளக்கும் அகல் விளக்கும் மட்டும் எரிய அலுப்பில் சம்பத் படுத்ததும் தூங்கிப் போனார். சற்று நேரத்தில் சங்கீதாவும் சத்யாவும் பேசியபடி உறங்கிப் போக சரண்யாவுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் அப்பாவின் முகம் வந்து நின்றது. அடிபட்டு அவர் மரண அவஸ்தையில் துடிக்கும் காட்சி கண்ணில் விரிந்து இதயத்தில் வலியை ஏற்படுத்தி கண்களைப் பொங்க வைத்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். தூக்கத்தில் சத்யா ஏதோ குழறலாய் உளறினாள். 

“அக்காவும் அத்தானும், அவர்கள் வீட்டினரும் நல்ல மாதிரிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அங்கே போய் தங்குவதென்பது சரிப்படுமா? முழுக்க முழுக்க ஒருவரை வீட்டில் வைத்து பராமரிப்பதென்பது இன்றைய சூழலில் யாருக்காயிருந்தாலும் கஷ்டம்தான். அப்படி ஒரு கஷ்டம் தன்னால் ஏற்பட்டு, அது அக்காவுக்கு சிரமத்தைக் கொடுத்து விட்டால்…?” 

சரண்யா கவலையோடு யோசித்தாள்.

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வருவாள், காதல் தேவதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *