கொல்லத்தான் நினைக்கிறேன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 8,809 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மவுன்ட் ரோடில், துப்பறியும் நிறுவனமொன்று திறந்து மூணு மாசமாகியும் விசேஷமாய் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று யோசனையாய் இருந்தது. கமிஷனரிலிருந்து கான்ஸ்ட்டபிள் வரைக்கும் அனைத்துப் போலீஸ்காரர்களுக்கும் சலாம் அடித்து வசியப்படுத்தி வைத்திருக்கிறதில் ஒரு பிரயோஜனமுமில்லை. அப்பப்ப டீச் செலவு, சிகரெட் செலவு, பிரியாணிச் செலவு என்றுதான் போய்க் கொண்டிருக்கிறதேயழிய என்னுடைய துப்பறியும் மூளையைச் செலவு செய்யக் காவல்துறையிலிருந்து அழைப்பே இல்லை.

காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?

அட்லீஸ்ட் கல்யாணப் பெண்களை, மாப்பிள்ளைகளை மோப்பம் பிடிக்கக்கூட என்னைக் கூப்பிடுகிறார்களில்லை.

மதுபாலா என்கிற அழகான அம்சமான அசத்தலான துப்பறியும் நிபுணியை அஸிஸ்ட்டன்ட்டாய் அமர்த்திக் கொண்டதுதான் நான் கண்ட லாபம். அவளும் இல்லையென்றால் வாழ்க்கை ரொம்ப நொந்து போகும்.

மது கூட இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலையாயிருந்தபோது கதவு தட்டப்பட்டது. மதுபாலா தானோ? நோ நோ, அவளுக்குக் கதவைத் தட்டி விட்டு நுழைகிற மானர்ஸெல்லாம் கிடையாதே என்று யோசித்தவாறே “ப்ளீஸ் கம் இன்” என்றேன்.

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் ஒருவன் வந்தான். எந்த அழகான பெண்ணையும் கட்சி மாறிவிடச் செய்யக்கூடிய விசேஷமான உருவம். கடவுளே, இவன் இங்கேயிருந்து கிளம்புகிற வரை மது வந்துவிடக் கூடாது.

“மிஸ்டர் பொற்கைப் பாண்டியன்?”

“நாந்தான். வாங்க சார், ஒக்காருங்க.”

“சார், ஒங்ககிட்ட ஒரு உதவிக்கு வந்திருக்கேன்.’

“அட் யுவர் ஸர்வீஸ்.”

“சார், என் பேர் விக்ரம், என் ஒய்ஃப் பேர் சாதனா. “அழகான பேர். ஐ மீன், ஒங்க பேர்.”

“சட்டுபுட்டுன்னு விஷயத்துக்கு வர்றேன்.”

“வாங்க.”

“சாதனாவுக்கு ஒரு காதலன்.”

“நெனச்சேன்.’

“இப்ப நா எதுக்காக ஒங்ககிட்ட வந்திருக்கேன்னா…”

“தெரியும். அந்தக் காதலன் யார், அவன் எங்க இருக்கான், என்ன செய்யறான், எப்படி ஒங்க கண்ல மண்ணத் தூவிட்டு ரெண்டு பேரும் மீட் பண்றாங்க, மீட் பண்ணி என்ன என்ன பண்றாங்கங்கற வெவரமெல்லாம் நா சேகரிச்சு ஒங்களுக்கு ரிப்போட் தரணும்.”

“ஷிட். இந்த வெவரமெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும்.”

“அப்ப எனக்கு வேலையே கெடையாதா?”

“இருக்கு. அத விடப் பெரிய வேல.”

“சாதனாவ க்ளோஸ் பண்ணணும்.”

குபுக்கென்று நாற்காலியிலிருந்து எம்பினேன்.

“சாதனாவ?”

“க்ளோஸ். அதாவது கொலை.”

‘அடக் கொலைகாரப்பாவி! என்னைத் துப்பறியும் நிபுணன் என்று நினைத்தாயா, இல்லை தாவூத் இப்ராஹீமோட அடியாள் என்று நினைத்தாயா? ஆள் பஞ்சமா பாதகத்துக்கு அஞ்சாதவனாய் இருப்பான் போல. கவனமாய்க் கையாள வேண்டும்.’

“சார், அவ்வளவு பெரிய வேலயெல்லாம் செஞ்சு எனக்கு அனுபவம் இல்ல. நீங்க வேற பெரிய ஏஜன்ஸியாப் பாருங்க. இப்ப நான் வேறொரு வேலயா வெளியக் கெளம்ப வேண்டியிருக்கு. நீங்க கெளம்புனீங்கன்னா நானும் கெளம்பலாம்.”

சர்வ இளக்காரமாய் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, விக்ரம் வெளியேறினான்.

‘வந்த ஒரு கிராக்கியும் கொலைகாரக் கிராக்கியாகவா வர வேண்டும்!’ வெறுப்பாயிருந்து.

மதுபாலாவுக்கு உடம்பு சவுகரியமில்லை, இன்றைக்கு வரமாட்டாள் என்று ஃபோன் வந்தது. என்ன என்ன இழவுக்கு ஆஃபீஸைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். வீட்டில் போய் மிர்ச்சியோ சூரியனோ கேட்டுக் கொண்டு ஜாலியாய்ப் படுத்துக்கிடக்கலாம் என்று பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

அடுத்த நாள் காலையில் மது வந்தாள். “ஸாரி பாஸ். நேத்து கௌம்புற நேரத்துல எனக்கு ச்சம் வந்துருச்சு, அதான் வரமுடியல” என்றாள்.

அடிப்பாவி, அச்சம் மடம் நாணம் ஏதுமில்லாமல் பச்சையாய்ச் சொல்கிறாளே என்றிருந்தது. இருந்தாலும், என்னிடத்தில் ஓர் அந்நியோன்னியம் இருக்கப்போய்த்தானே ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறாள் என்று ஆறுதலாயுமிருந்தது. போடி, உன் அந்நியோன்னியமெல்லாம் வெறும் வாய்ப்பேச்சோடு சரி.

இவளோடு பேசிக் கொண்டாவது இருக்கலாம். நேற்று Radio on demand டில் பங்கு கொண்டதை இவளோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, கதவில் நாக்கிங்.

‘இன்றைக்கு என்ன கிராக்கியோ’ என்று யோசித்தவாறே கம் இன் என்றேன். வந்தவன், ஷேவ் செய்யாத முகத்தோடும் சோகத்தோடும் வந்தான்.

“சார், எம்பேர் கிஷோர்.”

“கிஷோர் குமார்?”

“நோ. வெறும் கிஷோர். நீங்கதான மிஸ்டர் பொற்கைப் பாண்டியன்?”

“ஆமா. சொல்லுங்க.”

“என்னோட காதலிய ஒரு அயோக்கியன் நேத்து கொல பண்ணிட்டான் சார்.”

‘கொலை! காதல் கொலை!’ எனக்கு வேலை வந்து விட்டது.

எழுந்து, அவனுடைய கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டேன்.

“கவலப்படாதீங்க கிஷோர். அந்த அயோக்கியன் யார்னு தூக்குல ஏத்திருவோம்.”

கண்டுபிடிச்சு

“நீங்க கண்டு பிடிக்க வேண்டாம் சார். யார்னு எனக்கேத் தெரியும்.”

சப்பென்று ஆகிவிட்டது.

சோர்ந்து உட்கார்ந்தேன்.

“என் வேலய நீங்களே செஞ்சுட்டீங்க. யார்ங்க அந்தக் கொலகாரன்?”

“என் காதலியோட ஹஸ்பண்ட்”.

நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

மூளையில் ஒரு பல்ப் மினுக்கென்றது.

“விக்ரம்?”

“யெஸ், யெஸ்” ஸென்று ஆச்சர்யப்பட்டான்.

“எப்படி சார் தெரியும் ஓங்களுக்கு? இந்தக் கேஸ் கேஸ் இன்னும் பேப்பர்ல வரலியே?”

பேப்பர் பாத்தா ஒரு டிடக்ட்டிவ் கேஸப்பத்தித் தெரிஞ்சுக்குவான்? பாவி விக்ரம் சாதனாவைக் கொலையே பண்ணிட்டானா!

“சாதனா” என்கிற பெயரை நான் உச்சரித்ததும் கிஷோர் நொறுங்கிப் போனான்.

“சாதனா, என் சாதனா” என்று அரற்றினான்.

“சாதானாவோட இனிஷியல் வி னா மிஸ்டர் கிஷோர்?”

“அதில்ல மிஸ்டர் பொற்கை. அவ என்னோட சாதனா. எனக்கே எனக்கான சாதனா. காலேஜ் டேய்ஸ்லயிருந்தே காதலிச்சோம் சார். உயிருக்குயிராக் காதலிச்சோம்.”

ஒரு இன்ட்டர்வெல் விட்டான். கல்லூரிக் காதல் நாட்களை அசை போட்டிருந்திருப்பான்.

ஆச்சர்யமாயிருந்தது – பயல் மதுபாலாவின் பக்கம் பார்வையைத் திருப்பவேயில்லை.

உண்மையிலேயே சாதனாவை விசேஷமாய்க் காதலித்திருக்கிறான். விஸ்வாசமான காதல். பாசமுள்ள காதல்.

“அப்பறம்?” என்று நான் உசுப்பிவிட்டேன்.

“அப்பறம், இந்த வில்லன் விக்ரம் நடுவுல புகுந்தான். சாதனாவோட அப்பா மனசக் கெடுத்து, என்னோட சாதனாவக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா, கல்யாணத்துக்கப்பறமும் சாதனாவும் நானும் ரகஸ்யமா மீட் பண்ணிட்டுதானிருந்தோம். விக்ரமுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. இதனால் சாதனாவுக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்ட. சாதனாவுக்கு ஒரு பெண் கொழந்த பொறந்தது. அனுராதா.”

“அனுராதா தனக்குப் பொறந்த கொழந்தயில்ல, அது கிஷோருக்கு, அதாவது ஒங்களுக்குப் பொறந்த கொழந்தன்னு விக்ரம் அபாண்டமாப் பழி சொமத்தினான்.”

“அபாண்டமொண்ணுமில்ல பொற்கை, உண்மை அதுதான் (அடப்பாவி!). அனுராதாவுக்கு இப்ப நாலு வயசு. சரி, விஷயத்துக்கு வர்றேன். போன வாரம் ஒரு நாள் நான் சாதனாவோட ஒரு விவகாரமான வேலையில் ஈடுபட்டிருந்தப்ப..”

“விகாரமான?”

“இல்ல. விவகாரமான.”

“விவரமாச் சொல்லுங்க அந்த விவகாரத்த”.

கிஷோர் தயங்கினான்.

“டாக்டர்ட்யும் டிடக்ட்டிவ்ட்டயும் எதயும் மறக்யக் கூடாது கிஷோர்” என்று கீ கொடுத்தேன்.

முதன் முறையாய்க் கிஷோர் மதுபாலாவைப் பார்த்தான், சங்கடத்துடன்.

“மதும்மா, கீழ போய் டீ சொல்லிவிட்டு வாயேன்.” என்று அவளை அப்புறப்படுத்திவிட்டு, ஆவலோடு கிஷோரைப் பார்த்தேன்.

“பொற்கை, அந்த விவகாரத்த இங்கிலீஷ்ல சொன்னாத்தான் ரசிக்கும்” என்றான்.

“எனக்கு இங்கிலீஷ் தெரியும், சொல்லு” என்றேன். ஏகவசனம் இயல்பாய் வந்துவிட்டது.”

‘அதாவது, சாதனாக்கிட்ட when I was negotiating a a curve, விக்ரம் பாத்துட்டான்” என்று கிஷோர் அனுபவித்துச் சொன்னான்.

காதலியை இழந்த சோகத்துக்கு மத்தியிலும் ரசனையோடு அவன் சொன்ன ஆங்கில வாக்கியத்தை நானும் ரசித்தேன்.

“அப்புறம்?”

“அப்புறமென்ன, அப்பவே ப்ளான் பண்ணிட்டான் சாதனாவ க்ளோஸ் பண்ணிர்றதுன்னு. ஆள வச்சு வேலய முடிக்க ட்ரை பண்ணியிருக்கான். அது சரியா வராமப் போகவும் அவனே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்டான்.”

“அதாவது?”

“கொழந்த அனுராதா கைக்கு எட்டற மாதிரி துப்பாக்கிய லோடு பண்ணி வச்சிருக்கான், கொழந்த விளையாட்டுப் போல துப்பாக்கிய எடுத்து சாதனாவப் பாத்து ட்ரிகர அழுக்கிருச்சு. நெத்தியில புல்லட் பாஞ்சு ஸ்பாட்லயே சாதனா க்ளோஸ்.”

நான் சுறுசுறுப்பானேன். மது ஆர்டர் செய்த டீ சுறுசுறுப்பை மேலும் கூட்டியது.

“இதப் பாத்தது யார்” என்றேன்.

“கொழந்தயே சொல்லுது” என்றவன், திரும்பவும் புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

“பொற்கை, அனுராதாவ என்ன பண்ணுவாங்க? ஜுவனைல் ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருவாங்களா பொற்கை? ஐயோ, என்னோட கொழந்த எனக்கு வேணும் பொற்கை, சாதனா தான் சாதனா போய்ட்டா, கொழந்தயவாவது எனக்கு மீட்டுக் குடு பொற்கை.”

நான் அவனைத் தேற்றினேன்.

“அதெல்லாம் அனுராதாவுக்கு ஒண்ணும் ஆகாது கிஷோர். எனக்கு ஒரு க்ளூ கெடச்சிருக்கு, அது சரியா ஒர்க் அவுட் ஆகும்னு நம்பிக்கை இருக்கு. பயப்படாத, நா பாத்துக்கறேன். நீ எனக்கு ஒரேயொரு உதவி மட்டும் செய்.”

“செய்றேன் பொற்கை, சொல்லு.”

“வாக்கியத்துக்கு வாக்கியம் பொற்கை பொற்கைன்னு கூப்புடாத. ஒண்ணு, முழுப்பேரச் சொல்லிக் கூப்புடு, இல்ல, பாண்டியன்னு கூப்புடு.”

“சரி, இனிமே பாண்டியன்னே கூப்புடுறேன் பொற்கை” என்று முதன் முறையாய் சிரித்தான்.

அவனை ஸ்பாட்டுப் போய்க் காத்திருக்க அனுப்பி விட்டு, மதுபாலாவோடு பைக்கில் கிளம்பினேன்.

மதுவின் நெருக்கம் ஒரு மயக்கத்தைத் தந்தது. மதுபாலாவோடு பைக்கில் போவது வாழ்க்கையின் மிகச் சொற்பமான அற்ப சந்தோஷங்களில் ஒன்று. சாதனாவின் வீட்டு ஹாலில் அஸிஸ்ட்டன்ட் கமிஷனர் ஹில்பர்ட், இன்ஸ்பெக்டர் பாஷா மற்றும் காவலர்கள் ஆஜராயிருந்தனர். எல்லாம் தோஸ்துகள் தான். டீ தோஸ்த், சிகரெட் தோஸ்த், பிரியாணி தோஸ்த்.

குழந்தை அனுராதா கலவரம் தோய்ந்த முகத்துடன் ஒரு மூலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. விக்ரமும் கிஷோரும் போலீஸோடு தனித்தனியாய் சம்பாஷணையில் இருந்தார்கள்.

மதுவும் நானும் உள்ளே நுழைந்ததும் விக்ரம் என்னைப் புதிராயும் எதிரியாயும் பார்த்தான்.

குழந்தையை நான் விசாரிக்க ஏஸியிடம் அனுமதி கோரினேன்.

“எத்தனையோ தடவ விசாரிச்சாச்சு” என்று பாஷா ஒப்புக்கு ஆட்சேபித்தார். அவரை மீறி எனக்கு அனுமதி கொடுத்து ஏஸி தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டினார்.

பீதியிலிருந்த குழந்தை தயங்கித் தயங்கிப் பேசியது.

“டாடி எனக்கு ஒரு ட்டாய் கன் வாங்கிக் குடுத்தாங்க அங்க்கிள். என்னோட டெடிபேரும் நானும் அந்த கன்ன வச்சு வெளயாடிட்டிருந்தோம். மம்மி அந்த ஸோஃபால ஒக்காந்து புக் படிச்சிட்டிருந்தாங்க. மம்மி, டெடி பேருக்கும் எனக்கும் பசிக்குது மம்மின்னு நா சொன்னேன். மம்மி சொன்னாங்க, ஒன் டெடிபேரும் நீயும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, நா இந்த புக்க முடிச்சிட்டு வர்றேன். அப்டின்னு சொன்னாங்க. இப்ப ஒடனே நீங்க தரலன்னா நாங்க ஒங்கள ஷூட் பண்ணிருவோம்னு நா சொன்னேன். சீ போடின்னு சிரிச்சிட்டு மம்மி புக் படிச்சிட்டிருந்தாங்க. நா ஷூட் பண்ணேன். மம்மி நெத்தில புல்லட் பட்டுச்சு. மம்மி அப்படியே ஸோஃபால பின்னால் சாஞ்சுட்டாங்க. எனக்கு பயம்மாயிருந்தது அங்க்கிள். அங்க்கிள். அப்பறந்தான் டாடி வந்தாங்க. போலீஸ்காரங்க வந்தாங்க. அது ட்டாய் கன் இல்லியாம். டாடியோட நிஜத் துப்பாக்கியாம். எங்கையில ரேகை எடுத்தாங்க. மம்மிய ஹாஸ்பிடலுக்குக் கொண்டுபோயிருக்காங்க. மம்மி எப்ப வருவாங்க அங்க்கிள்?”

அந்தத் தாயில்லாக் குழந்தையைப் பார்க்கப் பாவமாயிருந்தது.

இது தனக்குப் பிறந்த குழந்தையில்லையென்று விக்ரம், இதையும் ஒரு வழி பண்ணிவிட சதித்திட்டம் தீட்டியிருக்கிறான். கிஷோர் சொன்ன மாதிரி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். ஆனால், கிஷோருக்குப் புலப்படாத ஒரு விஷயம் என்னுடைய துப்பறியும் மூளைக்கு எட்டியது.

குழந்தை அனுராதாவின் கையில் விளையாட்டுத் துப்பாக்கியைக் கொடுத்தேன்.

“பாப்பா, மம்மிய நீ ஷூட் பண்ணப்ப நீ எங்கயிருந்த?’

“நானும் என்னோட டெடிபேரும்.”

“அதான். நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்தீங்க?”

அனுராதா பொஸிஷனுக்கு வந்தாள்.

“இந்த டீப்பாய் பக்கத்துலதான் ரெண்டு பேரும் ஒக்காந்து வௌயாண்டுட்டிருந்தோம் அங்கிள். டீப்பாய் மேல கன் இருந்தது. நா அத எடுத்து, நின்னுக்கிட்டு மம்மிய ஷூட் பண்ணேன். மம்மி அந்த ஸோஃபால இருந்தாங்க.”

மதுபாலாவின் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்து புஸ்தகம் வாசிக்கிற மாதிரி ஸோஃபாவில் அமரச் செய்தேன்.

“இப்டித்தான் மம்மி ஒக்காந்திருந்தாங்க” என்று உறுதி செய்தது குழந்தை.

இன்ஸ்பெக்டர் பாஷா முணுமுணுத்தார். “நீங்க ஏன் நடுவுல புகுந்து குட்டயக் கொழப்பறீங்க பாண்டியன். கொழந்தயோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் மாட்ச் ஆகுது, புல்லட் மாட்ச் ஆகுது. விக்ரம் அஜாக்கிரதையா விட்டுப்போன துப்பாக்கி கொழந்த கையில மாட்டிக்கிச்ச, அம்மா கத முடிஞ்சி போச்சு, அவ்ளோ தான் மேட்டர்.”

நான் பாஷாவிடம் என் கேள்வியை வைத்தேன். “அது எப்படி சார் இந்தக் கொழந்த குறிபாத்து நடு நெத்தியில சுட முடியும்?”

பாஷா சர்வ அலட்சியமாய் பதில் சொன்னார். “நடு நெத்தி இல்ல பாண்டியன். இடது பக்க நெத்தி.”

“அப்படி வாங்க வழிக்கி” என்று நான் பாய்ன்ட்டைப் பிடித்தேன்.

“கொழந்த ஸோஃபாவுக்கு வலது பக்கம் நிக்கிது. இந்த பொஸிஷன்லயிருந்து ஷூட் பண்ணா, புல்லட் நெத்தியில வலது பக்கம்தான் பாயும். இடது பக்க நெத்தியில புல்லட் பாயச் சான்ஸே இல்ல.”

ஏஸி சுவாரஸ்யமானார். “பாண்டியன், நீங்க என்ன சொல்றீங்க?”

“விளையாட்டுத் துப்பாக்கி இருந்த எடத்துல நெஜத் துப்பாக்கி வந்தது. தற்செயலோ, அஜாக்கிரதையாலேயோ இல்ல, அது திட்டமிட்டுச் செய்யப்பட்டது.’

“இருக்கலாம், ஆனா தான் தான் சுட்டதாக் கொழந்த சொல்லுதே பாண்டியன்?”

“கொழந்த ட்ரிகர அழுத்தியிருக்கலாம். புல்லட் எங்கேயாவது சுவர்ல பட்டுத் தெறிச்சிருக்கலாம், இல்லாட்டி ஸோஃபாக்குள்ள போயிருக்கலாம்.”

“அப்ப விக்ட்டிம்மோட நெத்தியில இருந்த புல்லட்?”

“வேற ஒரு இதே மாடல் துப்பாக்கியால இடது பக்கம் மறைவா இருந்து வேற ஒருத்தர் ஷூட் பண்ணியிருக்கார்.”

“வேற ஒருத்தர்ன்னா?”

“இந்தத் துப்பாக்கியோட சொந்தக்காரர்தான். இதே மாடல் துப்பாக்கி அவர் ரெண்டு வாங்கியிருக்கார்.”

“இல்லியே ரிஸீப்ட்டக் காட்டினாரே விக்ரம், ஒண்ணுதான வாங்கியிருக்கார்!”

“ரெண்டு துப்பாக்கிக்கி ரெண்டு ரிஸீட் வாங்கியிருக்கலாம். இல்லாட்டி, வேற வேற சந்தர்ப்பத்துல வாங்கியிருக்கலாம்.”

ஏ.ஸி. யோசனையிலாழ்ந்தார்.

நான் தொடர்ந்தேன்.

“கொழந்தயோட விளையாட்டுத் துப்பாக்கி இருந்த எடத்துல, கொழந்தயோட கண்ணுல படற மாதிரி, கைக்கு எட்ற மாதிரி ஒரு நிஜத்துப்பாக்கிய ரெடி பண்ணி வச்சிட்டான் விக்ரம். கொழந்த ட்ரிகர அமுக்கினா அம்மா க்ளோஸ். இருந்தாலும் அது மிஸ்ஃ பயர் ஆயிருச்சின்னா என்ன பண்றதுன்னு எச்சரிக்கையா தானும் இன்னொரு துப்பாக்கியோட மறஞ்சிருந்திருக்கான். அவன் பயந்த மாதிரியே கொழந்த சுட்டது மிஸ்ஃபயர் ஆயிருச்சு. இவன் வேலய முடிச்சிட்டான். கொழந்த தான் தான் சுட்டேன்னு கன்ஃபஸ் பண்ணும்னு விக்ரமுக்குத் தெரியும்.”

“யூ ஆர் ரைட் பாண்டியன்!”

அங்கேயிருந்து மெல்ல நழுவ யத்தனித்த விக்ரமை பாஷாவும், ரெண்டு காவலர்களும் ஒரே அமுக்காய் அமுக்கிப் பிடித்தார்கள்.

குழந்தையை நோக்கிக் கிஷோர் ஓடினான்.

“அனு, என் அனு. என்னோட கொழந்த!” என்று அதை வாரியெடுத்துக் கொண்டு முத்த மழை பொழிந்தான்.

இன்னும் ஸோஃபாவில் ஜம்மென்று உட்கார்ந்திருந்த மதுபாலாவைப் பார்த்து நான் கண்ணடித்ததை ஆமோதித்து அவள் அழகாய்ச் சிரித்தாள்.

அந்தக் கோணத்தில் அவளுடைய அங்க லட்சணங்களை அவதானித்தபோது, வளைவுகளைப் பற்றிக் கிஷோர் சொன்ன ஆங்கில வாக்கியம் நினைவுக்கு வந்தது.

– 14.11.2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *