கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,058 
 

அவன் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத பாதையில் நடந்துகொண்டிருந்தான். இந்தப் பாதை முன்பு சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்த சாலையாக இருந்திருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. செடி கொடிகள் முழங்காலுக்குக் கொஞ்சம் கீழான உயரத்தில் நெருக்கமாக வளர்ந்து நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேறு ஏதேனும் நல்ல சாலை தென்படுகிறதாவெனக் கண்களைக் கூர்மையாக்கிச் சாத்தியப்பட்ட தூரம்வரை பார்த்தான்.

நாலாப் பக்கமும் செடிகொடிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் சூழ்ந்து அந்தப் பிரதேசமே அதுவரை அவன் அறிந்திராத நிசப்தத்தை உணர்த்திக்கொண்டிருந்தது. தான் எங்கிருந்து நடக்கத் தொடங்கினோம் என்னும் சிந்தனை அவனை வாட்டிக்கொண்டிருந்தது. எப்பொழுது இந்த வனத்திற்குள் நுழைந்தோம் என்று தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். தான் என்ன நோக்கத்தில் இங்கே நடந்துகொண்டிருக்கிறோம், எதை நோக்கிப் பயணப்பட்டிருக்கிறோம் எனத் தனக்குத் தானே பலமுறை கேட்டு எதற்கும் விடையறியாது தடுமாறினான். நடக்கத் தொடங்கியதிலிருந்து கடந்துவந்த காலம் நாட்களிலா வாரங்களிலா மாதங்களிலா அல்லது வருடங்களிலா என யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தான். வனம் என்றால் ஒரு பறவையாவது இருக்க வேண்டுமே? வனத்தில் புகும் காற்று ஏற்படுத்தும் ஓசை, மிருகங்களின் ஒலி என்று ஏதாவது கேட்டிருக்க வேண்டுமல்லவா? இவ்வளவு நேரம் அப்படி எந்தச் சப்தமும் ஏன் கேட்கவில்லை? ஒருவேளை தான் கேட்கும் சக்தியை இழந்துவிட்டோமோ எனக் குழப்பமாயிருந்தது. மெதுவாகக் கைதட்டிப் பார்த்தான். ஓசை கேட்டது. பலமாக . . . இன்னும் வேகமாகக் கைவலிக்கத் தட்டியபோது ஓசை நன்றாகக் கேட்டது. இவனுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது. கொஞ்சம் தூரம் தொடர்ந்த நடையில் அதிர்ந்தான். சற்று முன் கூர்ந்து பார்த்தபோதுகூடக் கண்ணுக்கெட்டிய தூரம்வரையில் செடிகளும் ஒரு பாகம் மரங்களுமாய் இருந்த பிரதேசம் இப்போது வெட்ட வெளியாய் மண்மேடு போலத் தென்பட்டது. எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தனக்கு என்ன நேர்ந்தது என்று மறுபடியும் யோசனையில் மூழ்கினான். முன்பே இது போன்ற மண்மேடுகளையும் வனங்களையும் கடந்து வந்ததுபோல நினை விருந்தது. அல்லது இதெல்லாம் கற்பனையாக இருக்குமோ எனக்கூடத் தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தபடியே நடந்தான். கற்பனைக்கான சாத்தியம் அதிகமிருப்பதாக யூகித்தான். தனிமையின் ஒவ்வொரு நொடியையும் அதன் பேரானந்தத்தையும் அனு பவிக்கச் சொல்லித் தான் எழுதிய கவிதைகள் முழுக்கவும் அபத்தமாகவும் பொய்யாகவும் இருப்பதாக இப்போது நம்பத் தொடங்கினான். ஓரிடத்தில் நின்று ஆசுவாசமாக மூச்சிரைத்தபோது தான் மற்றொன்றைக் கவனித்தான். நடக்கத் தொடங்கியதிலிருந்து இப்போதுவரை எந்தவொரு மணத்தையும் நுகரவேயில்லை. வனமென்றால் ஏதாவது மரத்தின், செடிகொடிகளின் வாசம் நிச்சயம் இருக்கும்தானே? மூச்சிரைக்கச் சுற்றுமுற்றும் பார்த்தபடி குழம்பிய மனநிலையில் நடையில் வேகம் கூட்டியபோது மண்ணில் கால்கள் நடுங்கிக் குறுக்கே கிடந்த ஏதோ ஒன்றில் மோதித் தடுமாறி விழுந்தான்.

அவன் எழுந்தபோது அதுவரை கண்டிருந்த காட்சிகள் எல்லாம் மாறியிருந்தன. திரும்பிப் பார்த்தபோது வனம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்கிக்கொண்டதான எண்ணத்தில் எதுவும் செய்யாமல் அப்படியே சில நிமிடங்கள் உறைந்து காலத்தைப் பின்னோக்கித் தொடர முயன்றான். வெகுநேர முயற்சிக்குப் பிறகு புகைமூட்டமாய் இருந்த நினைவுகள் துல்லியம் நோக்கி நகர்ந்தன. மெல்ல மெல்லத் தன்னுடைய அறை நினைவுக்கு வந்தது. அதற்குள் அவன் நண்பன் தொடர்ந்து பேசியபடியே இருந்தான். தன் கனவுகள் பற்றியும் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகள் குறித்தும் விளக்கிக்கொண்டிருந்தான். வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. ஆழ்மனத்தில் எங்கோ ஒரு புள்ளியில் உருமாறிப் பதிந்திருக்கும் படிமமொன்று அதன் உண்மையான உருவிலும் வெவ் வேறு வடிவங்களிலும் மாறி மாறிச் சபிக்கப்பட்ட நொடியொன்றில் சட்டென்று நூலறுந்துவிட்டது. அறுபட்ட நூல் மேகத்தில் பறப்பது போல் அந்த நண்பன் மறைந்துகொண்டிருந்தான்.

அப்போது அவன் ஏதோ சொன்னான். அவன் என்ன சொன்னான் என்பது இப்போது துல்லியமாக நினைவில் இல்லாதது நடுக்கத்தை வரவழைத்தது. இந்த நிமிடம் நிச்சயமற்று அலைந்துகொண்டிருக்கும் தான், அந்த அறை நண்பன் தொடர்ந்து சொன்ன வார்த்தைகளைச் சரியாகக் கண்டடைந்தால் தன் குழப்பங்கள் எல்லாம் தெளிவாகும் என்னும் நம்பிக்கை தீவிரமடைந்தது.

இப்போது அவனது வார்த்தைகளைத் துரத்துவதா அல்லது மேற்கொண்டு நடப்பதா எனத் தெரியாமல் தான் இடறி விழுந்த பொருளைப் பார்த்தான். மரக்கட்டைபோல் எதுவோ கொஞ்சம் வெளியே துருத்தி மீதி மண்ணில் புதைந்திருந்தது. மெல்ல மெல்ல மண்ணைக் கிளறி அதை வெளியே எடுத்துப் பார்த்தபோது மூச்சு நின்றுவிட்டது. சில நொடிகள்தாம். மறந்துபோன திசைகளைத் தேடுபவன்போல எல்லாத் திசைகளையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். முழுக்கவும் அதை வெளியே எடுத்த போதுதான் தெரிந்தது அது பாதம் சிதைந்து தீய்ந்துபோன மனிதனின் கால் என்பது. ஆனால் வலது காலா இடது காலா எனப் புரிய வில்லை. அது இப்போது முக்கியமாகவும் தோன்றவில்லை. நிச்சயம் இங்கே யாரோ இருக்கிறார்கள். அல்லது ஒரு மனிதக் கூட்டம் இருக்கிறது. இதுவரை பயம் மட்டுமே ஆக்கிரமித்திருந்த இடத்தில் கொஞ்சம் ஆசுவாசமும் சேர்ந்துகொண்டது. எங்கென்று தீர்மானமாகக் கணிக்காமல் உடலைத் தேடி வெகுதூரம் மண்ணைக் கிளறியபடியே நகர்ந்துகொண்டிருந்தான். உடல் கிடைத்துவிட்டால் தன் எல்லாக் குழப்பத்திற்கும் விடை கிடைத்துவிடுமென நம்பினான். நம்ப முடியாத தூரம் கடந்துவந்திருந்ததை மறுபடியும் உணரத் தொடங்கினான்.

இனி எதையும் யோசித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென முடிவு செய்து, என்ன நடந்தாலும் ஒரு கைபார்க்கலாமெனத் தீர்மானித்து எழுந்து மீண்டும் விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான். அந்த இடம் வெட்டவெளியாக இருந்தது. தொண்டை வறண்டு மெல்ல மெல்லக் கண்கள் இருண்டு வரக் கால்கள் நிலைகொள்ளாது அந்த இடத்திலேயே விழுந்தான்.

அவன் விழித்தபோது மிகவும் தாகமாக இருந்தது. அங்கே தண்ணீர் கிடைக்குமென அவனுக்குத் தோன்றவில்லை. மண்ணைத் தொட்டுப்பார்த்தபோது ஈரத் தன்மையோடு இருந்தது. கவிழ்ந்து படுத்திருந்த நிலையில் கைகளாலேயே தோண்ட ஆரம்பித்தான். வலுவற்ற கைகளின் இயக்கம் மிக நிதானகதியில் இருந்தது. கொஞ்சம் ஆழம் தோண்டியதும் விரல்களில் பிசுபிசுப்பான திரவம் தட்டுப்பட்டது. மூன்று விரலளவு எடுத்துக் குடித்தான். பின் எச்சிலைச் சேர்த்து விழுங்கினான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சுவாசம் சீராயிற்று. வாய் திறந்து காற்றை உள்வாங்கிய படி படுத்திருந்தான். வாய் முழுக்கக் கரித்தது. இன்னும் கொஞ்சம் எடுத்துக் குடித்தான். மேலும் மேலும் எடுத்துக் குடித்தான். குடித்துக்கொண்டிருந்த போதே ஏதோ பொறிதட்டக் காறித்துப்பி விட்டு வெறித்தனமாகத் தோண்டினான். கைகள் இயந்திரத்தின் வேகத்தோடு செயல்பட்டன. நேரம் கூடக்கூட அவன் தோண்டிக்கொண்டிருந்த குழியிலிருந்து சட்டெனச் செந்நிற ஊற்று அவன் முகத்தில் பீய்ச்சியடித்தது.

மனம் கொஞ்சம் கொஞ்சமாகக் கோளாறாகிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. இந்த மண்வெளியில் எங்கே போய் நண்பனைத் தேடுவது? அவனால் மட்டுமே தனக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைச் சரிசெய்ய முடியுமென்றே மீண்டும் மீண்டும் உணர்ந்தான். அவன் வெறுமனே அறை நண்பனாக மட்டுமே இருந்திருக்கக் கூடாதா? ஏன் தன்னிடம் நெருங்கிப் பழக வேண்டும்?

கானல் நீர் பளபளத்த நெடுஞ் சாலையோரம் இருந்த ஓட்டலில் உணவருந்திக்கொண்டிருக்கையில் அறிமுகமானான் அவன். முழுப் பெயர் சரவண சாந்தன் என்றும் எல்லோரும் கூப்பிடுவதுபோல ‘சரவணன்’ என்றே தன்னைக் கூப்பிடுமாறு சொன்னான். ஒரு வருடம் மட்டும் தங்குவதற்குத் தனக்கு உடனடியாக அறை வேண்டுமெனக் கேட்டான். தான் தேடி வந்ததே இவனைத்தான் என்றான். தான் பிஹெச்டி செய்துகொண்டிருப்பதாகவும் அதை வெறுமனே பட்டத்திற்காக மட்டுமல்லாது பெரிய ஆய்வாகவும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னான். இருவருக்கும் பொதுவான வேறொரு நண்பனின் பெயரைச் சொல்லி அவன் ஆலோசனையைத் தொடர்ந்தே இவனைத் தேடி வந்ததாகச் சொன்னதும் மிகுந்த யோசனைக்குப் பின் அந்தப் பொதுநண்பனோடு மொபைலில் பேசிய பிறகு அவன் தன்னோடு தங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டான்.

“உங்களப் பேரச் சொல்லிக் கூப்பிடலாமா இல்லை சார்ங்கிற மாதிரி எதாவது எதிர்பாக்கறீங்களா?”

பெயர் சொல்லி அழைக்க அனுமதித்தான். முன்பு யாரோ உபயோகித்து இப்போது சும்மா கிடந்த கட்டிலைச் சரவணனுக்குப் படுக்கக்கொடுத்தான். ஒவ்வொரு நாளும் இரவு தூங்கப்போகும் முன்பு நேரம்போவது தெரியாமல் விவாதிப்பார்கள். சில நாட்கள் நள்ளிரவு தாண்டியும், சில நாட்கள் விடிய விடியவும் பேச்சு நீண்டுகொண்டே இருக்கும். சரவணன் பெரும்பாலும் தன் ஆய்வுகள் குறித்துப் பேசிக்கொண்டிருப்பான். கேட்கக் கேட்க இவனுக்குப் பிரமிப்பாக இருக்கும். சரவணன் பரிந்துரைத்த, படிக்கக்கொடுத்த அனைத்தும் உளவியல் சார்ந்தவையாகவே இருந்தன. மிகக் கவனமாக சரவணனின் பேச்சை இவன் உள்வாங்கிக்கொள்வான். பிறகு அதே விதமான சிந்தனையைத் தன்னுடைய அனுபவத்தில், தன்னைப் பாதித்த விஷயங்களில் பொருத்தி அவற்றின் தொடர்ச்சியான நிலைகள், மன நெருக்கடிகள், அவசங்கள் என எல்லாவற்றையும் கவிதைகளாக எழுதிப் பார்த்தான். சமீபத்தில் வெளியான இவனுடைய பெரும்பாலான கவிதைகள் இப்படிச் சரவணனோடு விவாதித்ததன் தொடர்ச்சியாக உருவானவைதாம்.

பின்னிரவுவரை நீண்ட ஒரு விவாதத்தின்போது சகபடைப்பாளிகளின் விமர்சனமாக எதிர்கொண்ட அதே கேள்வியையே சரவணனும் கேட்டான்.

“இப்ப நீங்க சமீபத்துல எழுதுன கவிதைகள்ல பாத்தீங்கன்னா மறைமுகமாவோ நேரடியாவோ காடுங்கற விஷயம் திரும்பத் திரும்ப வந்துட்டே இருக்கு. ஏன் எழுத வேற ஒன்னும் கெடக்கமாட்டேங்குதா?”

எல்லோருக்கும் சொன்ன அதே பதிலைத்தான் சரவணனுக்கும் சொன்னான்.

“தெரியல . . .”

புறவுலகுக்கும் கனவுகளுக்குமான தொடர்பைப் பற்றி நிறைய எழுதி வைத்திருந்தான் சரவணன். அவற்றையெல்லாம் ஒரு நாள் இவனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். வாசித்தபோது வழக்கம்போல் இவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சில பக்கங்களைப் பலமுறை வாசித்துப் பார்த்தான். அதன் பிறகு உறக்கமற்ற, உரையாடலற்ற சில இரவுகளை இவன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

o

இனி எதுவும் யோசிப்பதாக இல்லை. “நான் ஏன் எதையாவது யோசிக்க வேண்டும் . . . நடக்கின்ற விசித்திரங்களுக்கு சாட்சியாக மட்டுமே பங்கெடுக்கப் போகிறேன்” எனத் தீர்மானித்து நடந்துகொண்டிருந்தான் அவன். மண்மேடுகளை மட்டுமே கொண்டிருந்த பகுதி அது. கடந்துவந்த வனம் நினைவுக்கு அவனுக்கு வந்தது. வனமற்ற பகுதியைச் சுற்றுமுற்றும் பார்த்தபோது உடலும் மனமும் ஒரு சேர வலித்தன. ஒரு மேட்டில் ஏற ஏற ஏதோ புதுவித நெடி நாசியைத் தொட்டது. மேட்டின் உச்சியை நெருங்கியபோது வந்த நாற்றத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏறி நின்று பார்த்தபோது கண்ணுக் கெட்டிய தூரம்வரை சவங்களின் குவியல் கருகியும் கருகாமலும் இறைந்துகிடந்ததைக் கண்டபோது தொடர்ந்த நிமிடங்களில் தன்வசமிழந்துகொண்டிருந்தான். மொத்த உடலும் அதிர்ந்துகொண்டேயிருந்தது. மூத்திரம் முட்டிக் குறி வெடித்துவிடுவது போன்றிருந்தது. அடிவயிற்றில் சுரந்த திரவம் அதுவரை அவன் உண்ட அனைத்தையும் ஒன்றாக்கி வேகமாய் வெளித்தள்ளியபோது குடலும் தொண்டையும் கிழிக்கப்பட்டதைப் போலிருந்தது. ஆங்காங்கே எடுத்த மொத்த வாந்தியும் மஞ்சள் ஆறாய் உருமாறிக்கொண்டிருந்ததைக் கண்டதும் தன்னுடலின் எடை குறைந்துகொண்டே வந்ததை உணர்ந்தான். மொத்தக் காட்சியும் சுழன்றபடியிருந்தது. சவங்களும் உடல் பாகங்களும் மண் புழுதியும் மிதந்தும் பறந்தும் சுற்றிக்கொண்டிருந்தன. தளர்ந்து நடுங்கிய கால்கள் மடங்கிச் சவங்களின் மேல் உருண்டு விழுந்தான்.

விகாரத்தின் இறுதி எல்லையில் தான் நடந்துகொண்டிருந்ததாகத் தோன்றியது. இது மரணத்திற்கு முந்தைய புள்ளி. மிச்சமிருக்கும் ஒரேயொரு உண்மை அடுத்த மேடு ஏறினால் தானும் மரணத்தைத் தரிசிக்கப் போகிறோம் என்பதாக இருந்தது அவன் நம்பிக்கை. கண்களை இடுக்கி ஒவ்வொரு உடலையும் கூர்மையாகக் கவனித்தபடியே இருந்தான். தலை வெடித்து மூளை உடலுக்கு அருகிலேயே சிதறிக்கிடந்தது. கூழான தலையில் மண்டை ஓடும் சதையும் நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை நினைவுபடுத்தின. அடுத்து வயிற்றுக்கு மேல் உடலே இல்லை. ஒன்றில் மார்புக்கு மேல் பிய்த்தெடுத்ததுபோல் கொஞ்சம் சதை மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. கழுத்தும் தலையுமற்றுக் கிடந்தது. அடுத்துச் சில உடல்களில் யானைக்கால் போன்று கருகி வீங்கிய கைகால்களில் அரை அடிக்கும் கொஞ்சம் குறைவான ஆழத்துக்குத் துளை விழுந்திருந்தது. கால்களைச் சுற்றியும் கருஞ்சிவப்பில் ரத்தம் உறைந்திருந்தது. வேறொன்றில் குடல் கருகி வெளியே சரிந்திருந்தது. பல உடல்கள் முழுக்கவும் எரிந்து சிதைந்து கரிக்கட்டைகளாக இருந்தன. கருகிய பஞ்சு போன்று சிதைந்திருந்த பல உடல்களில் ஒரு பெண்ணுடலில் இடுப்புப் பாகம் கிழிந்து ஒரு சிசுவின் உடல் மார்புவரை எரிந்த நிலையில் பாதி உள்ளேயும் மீதி வெளியிலும் நீண்டிருந்தது. அவள் நிறைமாதமாய் இருந்திருக்க வேண்டும். நிறைய உடல்கள் நிர்வாணமாக இருந்தன. குழந்தைகளின் உடல்கள் பொரிக்கப்பட்ட கருவாடுபோலவும் தோலுரிக்கப்பட்ட கோழிகள்போலவும் கிடந்தன. பெரும்பாலான உடல்களின் முகங்கள் வேட்டை மிருகங்களால் அரைகுறையாகக் கடித்துக் குதறப்பட்டவைபோலிருந்தன. பெண்ணுடல்களின் குறிகள் குறுக்கு நெடுக்காக அறுபட்டதுபோலக் கிழிக்கப்பட்டிருந்தன. பல உடல்களில் கண்கள் கொத்தப்பட்டிருந்தன. பல உடல்கள் நெடுக்கே பிளந்திருந்தன. அவற்றில் உள்ளுறுப்புகள் எல்லாம் தீய்ந்து வெளியே தெரிந்தன.

தொடர்ந்து பார்த்துக்கொண்டே நடந்து சென்றான். சற்று முன்பு கண்டதைவிடச் சவங்கள் பெருகிக் கொண்டிருந்ததாக உணர்ந்தான். கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒன்று இவன் கால்களை இவனையும் மீறி முன்னோக்கி இழுத்தது. மெல்ல மெல்லக் கடும் பிரயத்தனத்தில் மண்மேட்டின் அருகில் நகர்த்தப்பட்டிருந்தான். தன்னிச்சையாய்க் கால்கள் மேல் நோக்கி நீண்டதைப் பார்த்தபடியேயிருந்தான். காலம் அசுரப்பசியோடு அவனுக்காக மண்மேட்டின் அந்தப் பக்கம் நெடுங்காலமாகக் காத்துக்கொண்டிருப்பதை அவன் உள்மனம் எச்சரித்துக்கொண்டேயிருந்தது. ஒரு மரத்தை வேரோடு பிடுங்கும் முயற்சியில் கால்களை இழுத்து எதிர்த் திசையில் புழுதி பறக்கக் குதித்தோடியபோது சவங்கள் மிதிபட்டதாவென உணரும் நிலையில் அவன் இல்லை. இவ்வளவு தூரம் ஓடிவந்தபோதும் அந்தக் குவியல் முடிந்தபாடில்லை. நின்று நிதானித்தபோது அங்கே ஓரமாய்க் கிடந்த சவத்தில் பார்வை நிலைகுத்தி நின்றது. எல்லாச் சவங்களையும் போல மிச்ச பாகங்கள் அழுகிய நிலையிலிருந்த அதன் முகத்தைக் கூர்ந்து நோக்கியபோது அது சரவணன்தான் என்பதை நம்பும் திராணியற்றிருந்தான்.

பைத்தியம் பிடித்தது போன்று அந்தத் தலையை உலுக்கிப் பேசச் சொன்னான். அதன் உதடு ஏதோ முணுமுணுத்ததைப் போன்றிருந்தது. இல்லை. அந்தத் தலை எந்த அசைவுமற்று அப்படியேதான் இருந்தது. தனக்குள்ளிருந்து மற்றொரு குரல் பேசியதைக் கேட்டான். குரல் மட்டும் தொடர்ந்து கேட்டதால் கண்மூடித் தனக்குள்ளேயே கவனிக்கத் தொடங்கினான்.

“இங்கொரு பெரும் வனம் இருந்தது. குளிர்ச்சியூட்டும் மரங்கள் எங்கும் பரவியிருந்தன. இங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆடு மாடு குதிரை என சகல உயிரினங்களும் இருந்தன. பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் இருந்தன. வேண்டியபோது மழை பொழிந்த வனம் இது. ஒரு விலங்கின் தலையைக் கிரீடமாகத் தரித்திருந்தவர் அவர்களுக்குக் குருவாக இருந்தார். அவர் சொல்படியே வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அம்மனிதர்கள். ஆதி மனிதனின் சுதந்திரத்தோடு சுற்றித் திரிந்தவர்கள் இங்கிருந்தவர்கள். பிறை தேய்ந்துகொண்டிருந்த ஒரு நாளில் இங்கே மற்றொரு மனிதக் கூட்டம் வந்திறங்கியது. அவர்களின் குருவானவரும் ஒரு விலங்கின் தலையைக் கிரீடமாகத் தரித்திருந்தார். நம்மைப் போலன்றி அவர்கள் எல்லோர் முகங்களிலும் சிங்கப்பல் வாய்க்கு வெளியே துருத்தித் தெரிந்தது. இந்த வனத்தையொட்டி ஓடும் பெரும் நதியைக் கடந்தால் அடுத்து மற்றொரு வனம் இருப்பதாகவும் அதற்குப் போகும்வழி தவறி இங்கே நுழைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். தேய்ந்த பிறை பிறகு வளரவே . . .”

அறுபட்ட குரலை வெறித்தனமாகத் துரத்தினான். முன்பு நிகழ்ந்ததைப் போன்றே திசைகள் மறந்துபோயின. காற்றோடு கலக்கும் வேகத்தோடு ஓடியவன் ஆடைகள் கிழிந்து நிர்வாணமானான். அதே வேகத்தில் ஓடிக்கொண்டே மெல்ல மெல்லச் செவி, நாக்கு, இடதுகை என ஒவ்வொரு உறுப்பாகப் பிய்தெறிந்தவன் மல்லாந்துகிடந்த ஒரு சவத்தின் முகத்தில் தன்னைக் கண்டதும் தன் கண்களைப் பிடுங்கி மூர்ச்சையுற்று உருண்டான்.

அவன் எழுந்தபோது பழக்கப்பட்ட தன் அறையின் மணத்தை உணர்ந்தான். ஜன்னல் திறந்ததும் வந்த காற்றில் உடலின் வியர்வைத் துளிகள் கரைந்துகொண்டிருந்தன. அதே அறையில் பக்கத்துக் கட்டில் வெறுமையாக இருந்தது.

– சசி, மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *