கொடிய பெண்ணினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 410 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(எல்லோரும் வாழை மரத்தடியில் வட்டமாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள், நுளம்பு ஒன்று அன்பரசனின் கையைக் கடிக்கிறது)

அன்பரசன் சீ… :சனி நுளம்பு ! (மறுகையால் அடிக்கிறான்) பெண்களுக்கு எப்போதும் மற்றவனை உறிஞ்சும் வேலைதான்.

அறிவண்ணன்: (வந்து கொண்டே) யாரை இவன் திட்டுகிறான்?

தேன்மொழி : பெண்களைத் திட்டுகிறான். ஏன் என்று கேளுங்கள் அண்ணா.

அன்பரசன் : பெண்கள் நல்லவர்கள் (கொடுப்பில் சிரித்தபடி) நான் பெண் நுளம்புகளைத் தான் திட்டினேன்.

அறிவண்ணன்: ஆண் நுளம்புகள் பொதுவாக அப்பா விகள். தாவரச் சாற்றைக் குடித்து உயிர் வாழும். அவற்றின் வாழ்வுக் காலமும் குறைவு. பெண் நுளம்புகள் தான் குருதி குடிக்க அலைந்து, மலேரியாவையும் ஆனைக்கால் நோயையும் காவிக் கொண்டு திரியும். அவன் பெண் நுளம்புக ளைத் திட்டுவதில் நியாயம் உண்டு.

இளவழகன் : நுளம்புகளில் மாத்திரமா? எல்லா உயிரினங்களிலும் இதே நிலைதான்…

தமிழ்நிலா: காலங்காலமாக எங்களை அடிமையாய் வைத்துக் கொண்டு, பெண்கள் கொடிய வர்கள் என்று சொல்லிக் கொண்டும் இருக்க வேண்டும்.

(இளவழகனை குட்டப்போகிறாள்.)

அறிவண்ணன்: சண்டை வேண்டாம். இளவழகன் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தேனீ, கறையான், எறும்பு, குளவி, போன்ற கூட்டு வாழ்க்கை நடத்தும் விலங்குகளில் எப்போதும் அல்லி இராச்சியந்தான்.

தேன்மொழி : கூட்டு வாழ்க்கை நடத்தும் விலங்குகளில் வேலைப்பங்கீடு இருக்கும் இல்லையா? அண்ணா?

அறிவண்ணன்: வேலைப்பங்கீடு இருக்கும். ஆனால் பொதுவாக இராணி முட்டையிடுவது தவிர வேறு வேலை எதுவும் செய்யாது.

தமிழ்நிலா : இராசாக்களும் இராணிக்குப் பின்னால் பறப்பது தவிர வேறு உருப்படியான வேலை எதுவும் செய்வதில்லைதானே? வேலை செய்யா விட்டாற் காரியமில்லை.

அன்பரசன் : பிடித்து விழுங்காமல் இருந்தால் போதாதா?

அறிவண்ணன்: (சிரித்து) கொடுக்கன், சிலந்தி போன்ற வற்றில் கருக்கட்டலின் பின் பெண் உருவத்தில் சிறிய ஆண் விலங்கை விழுங்கி விடுவதை நினைத்துக் கொண்டு சொல்கிறான்.

தேன்மொழி : உங்களையும் அப்படித்தான் செய்ய வேண்டும்.

அன்பரசன் : (பயந்தவன் போல் நடித்து) செய்தாலும் செய்வீர்கள்.

இளவழகன் : இந்தக் காலத்துப் பெண்கள் சிலர் பிள்ளைகளைப் பெற்று வீட்டில் விட்டுவிட்டு அதைப் பற்றி எந்தவித அக்கறையுமின்றி ஊர் சுற்றுவது போல சில விலங்கு களும் இருக்கின்றனவாம்.”

அறிவண்ணன்: உண்மைதான். “ஏறியஸ்” என்ற மீன் இனத்தில் பெண் முட்டையிடுவது மட்டும் தான். ஆண் மீன்கள் இந்த முட்டைகளைத் தமது கையில் வைத்துப் பாதுகாத்துப் பொரிக்கச் செய்யுமாம். கடற் குதிரை என்ற மீன் இனத்திலும் முட்டைகளைப் பாதுகாப்பது ஆண்கள் தான்.

தமிழ்நிலா: ஆண் கடற் குதிரைகள் எப்போதும் பெண் கடற்குதிரையுடன் ஒட்டிக் கொண்டே திரியுமாம். அதை மட்டும் சொல்லாமல் மறைத்து விடுவீர்கள்!

அன்பரசன்: “பைப்பா அமெரிக்கானா என்ற தேரை இனத்திலும் ஆண்தான் முட்டைகளைக் காவிச் செல்லுமாம்.

தேன்மொழி : பெரும்பாலும் காணப்படுகின்ற உதாரணங் களை எடுத்துக்கொள்ளமாட்டீர்கள். பசு ஒன்று எவ்வளவு அன்புடன் நக்கி நக்கித்தன் கன்றுக்குப் பால் கொடுக்கிறது என்பதை நீங்கள் ஒரு போதும் காணவில்லை. எங்கேயும் அரிதாக இருக்கிற ஒன்று இரண்டு விலங்குகளைத் தேடிப்பிடித்துவிடுவீர்கள்.

அறிவண்ணன்: நாங்கள் போர் நிறுத்தம் செய்து கொள்கி றோம். தேன்மொழி சொல்வது சரி. பெரும்பாலும் பெண் விலங்குகள்தான் தமது குட்டிகளில் அன்பாக இருக்கின்றன.

இளவழகன் : மண்புழு மாதிரி ஆணும் பெண்ணும் ஒரே விலங்காக இருந்துவிட்டால் இந்தத் தொல்லை இல்லை.

அறிவண்ணன்: கூர்ப்பின் ஆரம்பத்தில் தோன்றிய விலங்குகள் ஆண் பெண் வேறுபாடு அற்றுத்தான் இருந்தன. தாவரங்களில் பெரும்பாலானவை இன்னும் அப்படித்தான் இருக்கின்றன.

தமிழ்நிலா : ஆண் பெண் வேறுபாட்டிற்கான அடிப்படை கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களால் தீர்மானிக்கப்படும் இல்லையா அண்ணா?

அறிவண்ணன்: ஆம். மனிதரில் இலிங்க நிறமூர்த்தம் XX ஆக இருக்கும் போது பெண்ணும் XY ஆக இருக்கும் போது ஆணும் தோன்றுகிறார்கள்.

அன்பரசன் : ஒரு ஆண் குழந்தையை அல்லது பெண் குழந்தையை எமது விருப்பப்படி பெறக் கூடிய காலம் வருமா அண்ணா?

அறிவண்ணன்: இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞான வளர்ச்சி அத்தகைய செயல் ஒன்றைச் செய்யக்கூடும் என்று விஞ்ஞானிகள் எதிர் பார்க்கிறார்கள்.

தேன்மொழி : ஆண்கள் பெண்களை விட வலிமை மிக்கவர்களாக இருப்பது ஏன்?

அறிவண்ணன்: பெண்கள் ஆண்களைவிட ஒரு வகையில் வலிமை மிக்கவர்கள் என்பது விஞ்ஞானிக ளின் கருத்து. பொதுவாக நோய்களை எதிர்க்கும் ஆற்றல் பெண்களுக்கே அதிகம்.

அன்பரசன் : பெண்களுக்கு வழுக்கை வருவதில்லை. எங்களுக்கு வருகிறது!

இளவழகன் : இவனுக்கு அது ஒரு கவலை!

அறிவண்ணன்: பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் நோய்கள் பல பெண்கள் ஊடாகக் கடத்தப்பட்டாலும் ஆண்களிலேதான் வெளித்தோற்றம் பெறுகின்றன.

அன்பரசன்: பெண் நுளம்பு தமது திறமையை அதிகமாய்க் காட்டத் தொடங்குகின்றன. எழுந்து உள்ளே போவோம்.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *